Sunday, January 19, 2020

அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை - அருண்மொழி நங்கை - நீலகண்டம்

(அருண்மொழி நங்கை அவர்கள் நீலகண்டம் குறித்து எழுதியிருக்கும் விமர்சன கட்டுரை. ஒருவகையில் இவ்வகையான வாசிப்புகள் ஒரு சிலருக்கேனும் நாவல் சென்று சேர்ந்திருக்கிறது என்பதை எனக்கு உணர்த்துவதாக இருக்கிறது. பெரும் ஆசுவாசத்தை அளிக்கிறது.  ஏனெனில் எழுத்தாளராக தன் படைப்பை எத்தருணத்திலும் காபந்து செய்யக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். நாம் பலவற்றை உத்தேசித்திருக்கலாம், இவற்றை எல்லாம் செய்திருக்கிறேன் என சொல்லலாம் ஆனால் அதெல்லாம் வாசகருக்கு சென்று சேர்ந்தால் தானே உண்டு. பிரதிக்கு வலுவிருந்தால் அது தன் காலில் நிற்கட்டும். இனி அடுத்த வேலையை பார்க்க போவேன். கதையின் பல சரடுகளை இணைத்து வாசிக்கும் சாத்தியத்தை அருண்மொழி அக்காவின் விமர்சனம் சுட்டிக் காட்டுகிறது. நன்றி)  
        

அமுதம் திரிந்து நஞ்சாவதும்,  நஞ்சு அமுதமாவதும் ஒரு கணத்தில் நிகழக்கூடுவதல்ல.  அதற்கு முன்பே கடையப்படுதல் உள்ளத்தில் நிகழத்தொடங்கி விடுகிறது. அது நுரைத்து ப் பொங்கும் தருணத்தையே நம் போத மனம் (conscious mind) உணர்கிறது. இந்த நஞ்சு திரள்வது பெற்றோர் குழந்தை உறவில் மட்டுமல்ல, ஒரு தனிமனிதனுக்கும் இன்னொருவனுக்குமான உறவிலும், நட்பு, காதல், பாசம், குரு பக்தி என்று விரித்து விரித்து ”நீல கண்டம் ” நாவலை  மேலே  எடுத்து செல்லலாம்.
     சுனில் கிருஷ்ணனின் முதல் நாவலான “நீல கண்டம்”, கிட்டத்தட்ட  நிகழ் காலத்திலிருந்து அடுத்து வரும் தசாப்தங்களுக்குள் பூதாகரமாக உருவெடுக்கப் போகும் குழந்தைப் பேறின்மையையும், அதன் அடுத்தகட்ட தீர்வான தத்தெடுப்பினையும்  எல்லா கோணங்களிலும், பல வகையான கதை சொல்லல் முறையில் முன்னெடுக்கிறது.

அருண்மொழி நங்கை; நன்றி: ஜெயமோகன் வலைப்பதிவு (புகைப்படம்)
     நகரத்தார் சமூகத்தை சார்ந்த செந்திலும், பிராமண வகுப்பை சார்ந்த ரம்யாவும் காதலித்து பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக மணம் முடிக்கின்றனர். மேல்நடுத்தர தட்டு வாழ்க்கையை வாழ நிர்ப்பந்திக்கும் ஐ.டி .துறையில் பணியாற்றும் அவர்கள் பெருநகர் சார்ந்த புற நகர்பகுதியில் ஒரு  அபார்ட்மெண்ட்டில் வசிக்கின்றனர். அவர்களின் குழந்தைப் பேறின்மையும் அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்களும்,  முடிச்சுகளும் நாவலாக விரிகிறது.      சமூகம் உருவாக்கிய கட்டுமானங்களில் குழந்தைப் பேறு என்பது என்றிலிருந்து இத்தனை ஆதார உணர்வாக , ஒரு மனிதனின் நான்கு வித புருஷார்த்ததிற்கும் அடுத்ததாக கருதும் அளவு தோற்றம் கொள்கிறது.? இந்திய தொல் மரபிலிருந்து இதன் முக்கியத்துவத்தை பார்க்க நேர்ந்தால் ஒரு நவீன மனம் அதன் பன்முக வளர்ச்சி நிலைகளை கண்டு கொள்ளலாம். அது வளத்தின் குறியீடாக தோற்றம் கொள்கிறது. பிறவிக் கண்ணியை நீடிக்கச் செய்யும் ஒரு காரணியாகவும் கருதப் படுகிறது.  அந்தக் கண்ணி அறுபட நேர்கையில் பதற்றம் கொள்ள வைக்கிறது. நம் புராண காலங்களிலிருந்தே அரசர்கள் குழந்தை வரம் வேண்டி யாகம் செய்கிறார்கள்.தெய்வங்கள் கனியும் வரை தவமிருக்கிறார்கள்.தங்கள் குருதியின் துளியே மைந்தனாகி அதிகார பீடத்தில் அமர விழைகிறார்கள். தங்கள் இறப்புக்குப் பின்னும் பித்ரு லோகத்தில் தன்னை கரையேற்ற மைந்தன் இடும் பலியை எண்ணி ஏங்குகிறார்கள்.
   குருதி மைந்தன் அருளப்பெறாதவர்கள் தன் மனைவி வேறோரு குருதியிலாவது மக்களைப் பெற அனுமதிக்கிறார்கள். உ-ம் பாண்டு.
அதற்கும் நற்பேறற்றவர்கள் சுவீகாரம் செய்கிறார்கள். சுவீகாரம் செய்வதற்கான நெறிகளை மனு தர்மம் வகுத்துள்ளது. குலத்தூய்மை, இன்னபிற பேணப்படுகின்றன.
     இதிகாசங்கள் , புராணங்கள் மட்டுமல்ல, நீதி நூலான திருக்குறளிலும் மக்கட்பேறு பற்றிய அதிகாரங்கள் உள்ளன. ”குழலினிது யாழினிது” ”தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்”” ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தாய் ”என எத்தனைவகை  சித்திரங்கள். பக்தி இலக்கியத்திலும் “பின்னிருந்து புல்கினான்” என பெரியாழ்வாரும், நம்மாழ்வாரும் கண்ணனை குழவியாக்கி புனைந்த பாசுரங்கள், சிற்றிலக்கிய பிரபந்தங்கள், பிள்ளைத் தமிழ் என்று குழந்தைப் பேறு தெய்வத்திற்கு நிகர் வைக்கப் படுகிறது. “இத்தினியே , சித்தினியே இத்தனை நாள் எங்கிருந்தாய்” என நாட்டார் பாடலும் குழந்தைப் பிறப்பின் மர்மத்தை கவித்துவமாக்குகிறது.

       தன்னை இக உலகில் எவ்வகையிலாவது சாஸ்வதப்படுத்திக் கொள்ளும் விழைவில்லாத மனிதனை கண்டிருக்கிறோமா? அவன் தன் ஆன்மாவின் ஒரு துளியேனும் மிஞ்சி இம்முடிவற்ற காலச்சுழலில் எண்ணிறந்த ஆடிகளில் பிரதிபலிக்க விரும்புகிறான். உத்தாலகன் தன் மைந்தன் ஸ்வேதகேதுவை மடியில் இருத்தி “ நான் நீயே தான்”என்றுரைத்தது தந்தையர் ஒவ்வொருவரும் கூற விரும்பும் ஆப்த வரி அல்லவா?

      கூட்டு நனவிலி மனத்தினால் கட்டியமைக்கப் பட்ட இந்த கருதுகோளின் கண்ணியை தனி மனிதனால் எப்படி தகர்க்க முடியும்? ஆகவே தான் ரம்யாவும் செந்திலும் முதலில் மருத்துவம், கோயில் வழிபாடுகள், பரிகாரங்கள், ஜோதிடம் என அனைத்தும் கைவிட்ட  கையறு நிலையில் கடைசிப் புகலிடமாக தத்து குழந்தைக்கு செல்கிறார்கள்.   தத்துக் குழந்தையான வரூ என்று செல்லமாக அழைக்கப்படும் வர்ஷிணியோ வளர, வளர ஆட்டிசம் எனும் குறைபாடுள்ள குழந்தையாகிறாள். அவளால் ஏற்படும் மன அழுத்தம், வலி, வேதனை இருவரையும் சுழற்ற ஒரு கட்டத்தில் அவள் காணாமலாகிறாள்.

       பெற்றோரின் அன்பு எக்கணத்தில் திரிந்து நஞ்சாகிறது,  நஞ்சு அமுதமாகிறது. இந்த சிடுக்கான மையத்தையே நாவல் பேசுகிறது. மையத்தை நாவல் கட்டமைக்கவில்லை. மைய முடிச்சை பல விதமான கதை சொல்லல் முறையில் அவிழ்த்துப் பார்க்கிறது. அதற்கு யதார்த்த கதை சொல்லல் முறை போதவில்லை. நேர்கோடற்ற சொல்முறையில்[non linear  ] அமைந்த பின்நவீனத்துவ கூறுகள் கொண்ட உத்தி தேவையாகிறது.

      இந்த சொல்முறை தானாகவே அதற்கான வடிவத்தை தேர்கிறது. அதனால் அது நாட்டார்  கதைகள், தொன்மக் கதைகள், புராணக் கதைகள், குழந்தைக் கதைகள் என்று எல்லா வழிகளிலும் நாவலின் மையத்தை அணுகி உடைத்துப் பார்க்கிறது.

         குழந்தைக் கதைகளில் பலவாறாக வரூவின்  உலகம் காட்டப்படுகிறது. அக்‌ஷரா தேசத்தின் குட்டி இளவரசியாக வரும் வரூவின் உலகில் நவீன டிஜிட்டல் யுக தொன்மங்களான கடலாமை, பேக் மேன், நிமோ, டோரா, மிஸ்டர் இசட், நிஞ்சாஸ், சோட்டா பீம் என அனைவரும் உலவுகிறார்கள். யதார்த்த உலகத்தின் அளவுக்கே அவ்வுலகம் விரிவாக காட்டப்பட்டு அந்த மாற்று யதார்த்தம் ஒரு நிகர் உலகை கட்டமைக்கிறது. வரூ புற உலகின் எந்த கரங்களாலும்  தீண்டப்படாமல் குட்டி தேவதையாக வலம் வருகிறாள்.  வரூவின் கதைகள் வாசகனை கடும் உள நெருக்கடியிலிருந்து மீட்டெடுக்கின்றன.

      குழந்தைக் கதையின் ஒரு இடம் மிக இயல்பாக யதார்த்த தளத்துடன் வந்து பொருந்திக்கொள்வது போகிறபோக்கில் சொல்லப்படுகிறது. உ-ம்  மருத்துவ மனையில் வரூ தனக்குத் தானே முணுமுணுத்துக் கொண்டு  ரொட்டித் துண்டை எறும்புகளுக்கு நுணுக்கிப் போடுவதை செந்தில் எரிச்சலுடன் பார்க்கிறான். ஆனால் வரூவின் அந்த  செய்கை ,குட்டி மீன் நீமோவைக் கொண்டு கடலில் விட்டு விட்டு, தான் பத்திரமாக எறும்புத்தலைவனான மிஸ்டர் இசட்டுடன் வீடு வந்து சேர்வதை வரூவின் கோணத்தில் சொல்கிறது. மிஸ்டர் இசட் தனக்கு தாமதமாகக் கிடைத்த  உளவுச் செய்தியால் கறுப்பு எறும்புகளிடம் உணவை கோட்டை விடுகிறது. மிஸ்டர் இசட் வரூவிடம் உணவு கேட்க அதற்கு அவள் ரொட்டியை போடுகிறாள்.

      இனி துணைக் கதைகளை பார்ப்போம்.  ஒரு நவீன மனம் புராணத்தை எவ்வாறு தலை கீழாக்கம் செய்கிறது என்பதற்கு உதாரணமாக சிறு தொண்ட நாயனாரின் புராணக் கதை வருகிறது . இதுவரை பக்தியின் உச்சம் என்று மெய்சிலிர்ப்போடு வாசிக்கப் பட்ட திருவிளையாடற் புராணக் கதை,  நாயனாரின் மகனான சீராளனால் அவனுடைய தரப்பாக வைக்கப் படும்போது ஒரு நவீன வாசிப்புக்கான கோணம் திறக்கிறது.பக்திக்கு நிகர் வைக்க  என் உயிர்தானா என்று சீராளன் கேட்கிறான்.  தான் சிரஞ்சீவியாகும் சாபத்தை  பெற்றதாக கண்ணீர் விடுகிறான்.அவன் தந்தையின் அன்பில் உள்ள நஞ்சு முடிவற்ற காலத்தில் அவனை உழற்றும் பிணியாக மாறுகிறது.

    மாறி மாறி குழந்தைகள் புறக்கணிக்கப்படுவதும், பலியிடப்படுவதும் துணைக் கதைகளின் சாரமாக இருக்கிறது. தத்தெடுக்கப்படும் குழந்தைகளான வரு, வருவின் பாட்டியான வரலக்‌ஷ்மி, செந்திலின் முன்னோரான நாகப்பன் என்று ஒரு வரிசை புறக்கணிப்புக்கு உள்ளாகிறது. பலியிடப்படும் சொந்தக் குழந்தைகளின் ஒரு வரிசை சீராளன், மெடியாவின் குழந்தைகள், நாகம்மை. 

      வாழ்க்கையின் சாரமாக பெற்றோரால் கருதப்படும் குழந்தைகள் எந்த கட்டத்தில் தேவையற்றவர்களாக, சுமையாக ஆகிறார்கள்? தன் தன்முனைப்பை, அகங்காரத்தை தொல்லை செய்யாதவரை அவர்களை பெற்றோர்கள் அனுமதிக்கிறார்கள். ஏதோ ஒரு தருணத்தில் கைவிடவும் துணிகிறார்கள். அப்படியானால் ஏன் இவ்வளவு வலியும், தவமும் குழந்தைக்காக.? பலவாறான  கேள்விகளை இப்பிரதி தனக்குள்ளும், வெளியிலுமாக எழுப்பியபடியே விடை காண முயல்கிறது.

      யூரிபிடஸின் இதிகாச பாத்திரமான மெடியா தன் கணவன் ஜேசனைப் பழி வாங்க, அவனை முடிவில்லா குற்ற உணர்ச்சியெனும் நரகத்தில் தள்ள தன் சொந்தக் குழந்தைகளை பலியிடுகிறாள். துன்பத்தில் இன்பம் காண்கிறாள். கிரேக்க துன்பியல் தொன்மமான அவள் இங்கு வந்து நம் நாட்டார் கடவுளான சுடலை மாடனிடம் முறையிடுகிறாள். ”பெத்த எனக்கு கொல்ல உரிமையில்லையா” என. சுடலைமாடனும் தன்னுடைய ஒன்பதுமாத சிசுவின் குருதி குடித்து அழித்த கதையை பாடுகிறான். இருவரும் சேர்ந்து  துயரச் சாயல் கொண்ட துன்பியல் நாடகத்தை அங்கத நாடகமாக்குகிறார்கள். கடைசியில் நாடக உச்சத்தில்  எப்போதும் தவறான மேற்கோளால் தவறாகவே சித்தரிக்கப்படும்  தீர்க்கதரிசி கலீல் கிப்ரான் கோமாளியாக்கப் படுகிறார்.

        துர்மரணம் நிகழ்ந்த நீத்தார் கதையான நாகம்மை கதை இரு  வேறுபட்ட பிரதி வடிவங்களில்  செந்திலுக்கு சொல்லப்படுகிறது.  நாகம்மை பச்சை பட்டுடுத்திய அன்று துர்மரணத்தில் இறக்கிறாள். பேசா பொற்சித்திரம் போல் கொலுசின் மெல்லோசையில் மட்டுமே தன் இருப்பை அறியத்தரும் நாகம்மை  பிறகு அக்குடும்பத்தின் கன்னித் தெய்வமாகிறாள்.  எப்போதும் அழுது அடம்பிடித்து கிளிப்பச்சை ஃப்ராக்கையே வரூ அணிகிறாள். பிறவிச் சங்கிலி, மறு பிறப்பு என்று நவீன மனம் நம்ப மறுக்கும் பல தற்செயல் ஒற்றுமைகள், சாத்தியங்கள்  நிகழ்கின்றன. அனைத்தையும் மீறி தர்க்கமனதை பேதலிக்க செய்யும் மீமெய்யியல் தருணம் அது.  

      நிஜ மாந்தர்கள் கதாபாத்திரங்களாகும் மெட்டா ஃபிக்‌ஷன் எனும் வகைமைக்கு  வான்மதி- அருள்மொழி சகோதரிகளின் கதை வருகிறது. தசையழிவு நோயினால் உருக்குலைந்து  கொண்டிருக்கும் அவர்கள் ஆயிரம் கரங்களும் , ஆயிரம் கால்களுடன் லட்சியவாதிகளாய் இருக்கிறார்கள்.  அறிவு பூர்வமாக  யோசிக்கக் கூடிய, பொதுப் புத்திக்கு நல்லவனாகவே வரும் செந்தில் அவர்களை எதிர்கொள்ள தயங்குவதும் ஓடி ஒளிவதும் ஏன்? அவர்களின் லட்சியவாதத்தின் முன் கூசி நிற்கவே அவனால் முடிகிறது. யாரையும் தன்னை தொட அனுமதிக்காத வரூ, வான்மதி தன்னை  தொட அனுமதிக்கிறாள். அவளுடன்  வரூ தன்  மொழியில் உரையாடுகிறாள். இருவரும் அவர்களின் உலகில் மகிழ்ந்திருப்பதை செந்தில்  ஒரு குற்ற உணர்வுடன் பார்த்து நிற்கிறான். அவன் மனதின் நஞ்சை வான்மதியின் உள்ளுணர்வு உணர்ந்தே இருக்கும். 

     திரிந்த ஆளுமையாக வரும் நந்தகோபால், ஃபிரீக் அவுட் ஆளுமையாக வரும் ஹரி இருவரும் நுட்பமாக காட்டப்பட்டுள்ளனர்.
நீலகண்டம்
      எல்லாப் பகுதிகளுக்கும் அவற்றுக்கான பிரத்யேக மொழிநடை ஆசிரியருக்கு கைகூடி வருகிறது. மொழி சரளமாகவும், நேர்த்தியாகவும்  இருப்பதால் நாவல் வாசிக்கும் அனுபவத்தை இனிமையாக்குகிறது. அங்கத மொழி, தொன்ம மொழி, நாட்டார் மொழி, குழந்தைக்கான தேவதைக் கதை மொழி, என பல வண்ண பேதங்கள். குழந்தை உற்பத்தி முனையம் என்ற அத்தியாயம் சர்ரியலிச பாணியில் சொல்லப்பட்டு ஒரு அறிவியல் புனைவு வாசிக்கும் சுவாரஸ்யத்தை தருகிறது. நவீனத்துவ நாவலில் வரும் இறுக்கமான மொழி, கச்சிதமான விவரணைகள், குறைந்த பட்ச கூறுமுறை[  minimalistic narration] என்று கட்டுப்பாடில்லாமல் மொழி பொங்கிப் பிரவாகிக்கிறது. இதுவும் இந்நாவலின் பின் நவீனத்துவ கூறுகளில் ஒன்றாகிறது.

        உப கதைகள் தன்னியல்பாக அல்ல ,திட்டமிட்டே தர்க்கத்திற்குள் அடங்காதவையாக, தொடர்பற்று  இருக்கும்படி காட்டப்படுவதும்  , கால ஒழுங்கு[chronological order ] மாறி மாறி வருவதும் கூட பின் நவீனத்துவ உத்திகளுள் ஒன்று. வேதாளம், விக்ரமாதித்யன் கதைகளில் வரும் வேதாளம் ஒரு நவீன கதைசொல்லியாக அவதாரம் எடுக்கிறது. ஒவ்வொரு உபகதைக்கும் ஒரு முன்வரைவை [ prelude ] அது கொடுக்கிறது.

     நாகம்மை, சீராளன், வரூ, வரலக்‌ஷ்மி, அனைவருமே பேசா குழந்தைகள் அல்லது தாமதமாக பேசத் தொடங்கும் குழந்தைகள். அவர்கள் தங்கள் பெற்றோரில் வெளிப்படும் நஞ்சின் முன் மூர்க்கமான ஒரு மௌனத்தை, எதிர்வினையை அளிப்பதே நாவலின் மையத்தை வலுப் படுத்துகிறது. ரம்யாவின் அம்மா வரலக்‌ஷ்மிக்கு வரு மேலுள்ள விலக்கம் எதனால்? தன்னைப்போலவே அவளும் ஒரு தத்துக் குழந்தை என்பதாலா?  ரம்யா தன் அன்னையிடம்  நெருங்கும் காலத்தில் தான் வரூவிடம் இருந்து விலகுகிறாள்.இது நாவலுக்கான வாசிப்பு சாத்தியங்களை செறிவு படுத்துகிறது.

         வரூ  கண்டிப்பாக ரம்யா, செந்தில் இருவரின் மனத்திலும் நஞ்சு முள்ளென முகிழ்க்கும் கணத்தை அறிந்திருப்பாள். அவளுக்கு தர்க்க மனத்தைவிட உள்ளுணர்வு மனம் கூரென திரண்டிருக்கும். சராசரி குழந்தைகளைவிட சிறப்பு குழந்தைகள் மற்றவர்களிடம் உள்ள பாவனை எனும் போர்வையை விலக்கிப்  பார்க்கமுடியும். அவள் தொலைந்து போனது கூட அவளாகவே நிகழ்த்திக் கொண்டது தானோ? நாவல் மேலும் மேலுமென வாசகன் மனதில் வளரத் தொடங்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

   மைய உருவகமான நீலகண்டம் தவிர சிதலால் உண்ணப்படும் வீடு, கடலாமை- பேக் மேன், மரணமில்லா பெருவாழ்வு விதிக்கப்பட்ட சீராளன் என அழகிய குறியீடுகள் நாவலெங்கும்  வருகின்றன.

       மீரா முரளி தம்பதியினரின் வளர்ப்பு குழந்தை இரண்டு  வயதில் தத்தெடுக்கப் படுகிறாள்.  அவள் பெற்றோரிடம் நன்றியோடு இருக்கிறாள் , விலகியே இருக்கிறாள் என்பது யதார்த்தத்துக்கு பொருந்தாமல் உள்ளது.

      ஒரு யதார்த்தவாத நாவலின் உணர்ச்சிக் குவியமோ, உச்சமோ அல்லது ஒரு கண்டடைதலோ யதார்த்தவாத சித்தரிப்பில்  கூர் கொள்ளும் அளவுக்கு மற்ற சித்தரிப்புகளில் நிகழாது போவதுபோல் தோன்றுகிறது.   அதாவது ரம்யா செந்தில்  இருவருக்குள்ளும் திரண்டிருக்கும் நஞ்சை அவர்களே உணரும் கணம்  என்பது வரூ தொலைந்து போகும் கணம். அந்த விஷத்தை அவர்கள் எப்படி எதிர் கொண்டார்கள்? பிறகு அதை அவர்கள் உட்செரிக்கலாம், உமிழலாம், கண்டத்தில் சுமந்தலையலாம். அச்செயல்பாட்டை விட தன் விஷத்தை தானே உணர நேரும் கணம் ஒரு மனிதனுக்கு முழு மானுடத்தையும் உணர நேரும் தருணம். அதை ஒரு வரியில் கடந்து செல்கிறார் நாவலாசிரியர்.உடனே இருவருக்குள்ளும்  வரும் குற்ற உணர்ச்சி அதை மேலோட்டமாகவே சமன் செய்கிறது. அது அவர்களாகவே தங்களுக்கு  போட்டுக் கொள்ளும் ஒரு திரை.  

       கடைசியில் வரும் தேவாசுரர் கடைதல் மிக விரிவாக விவரிக்கப் பட்டு புதிய விளக்கங்கள் தரப்படுகின்றன.  நீலகண்டம் எனும் மைய உருவகத்தை விளக்கவோ,அதன் மேல் புதிய அர்த்தங்கள் ஏற்றவோ தேவையில்லை. அந்த படிமமே அனைத்தையும் உணர்த்தும் வல்லமை கொண்டது. ஈராயிரம் ஆண்டு  களிம்பேறிய உருவகம்  அது . யதார்த்தவாத நாவலில் வரும் உச்சங்கள்  தொன்மக் கதையாடல்களிலோ, , குறியீட்டு கதையாடல்களிலோ நிகழ்வதற்கான சாத்தியங்கள்  குறைவு.   

அமுது நஞ்சாவதும், நஞ்சு அமுதாவதும் எந்தக் கணத்தில் நிகழ்வது என்றறிய முடியாததே மானுடகுலத்தின் மிகப்பெரிய கேள்வி. உமிழ்ந்து அழிப்பதற்கும் உட்செரித்து தான் அழிவதற்கும் இடையிலான விளையாட்டாக மாறிப் போனது இப்புடவி. தன் கண்டத்தில் விடத்தை நிறுத்த தெரிந்த நீலகண்டர்களால் ஆனது இவ்வுலகு.

No comments:

Post a Comment