Friday, January 3, 2020

நீலகண்டம் நாவல் பகுதி- குழந்தைகள் உற்பத்தி முனையம்

(தொலைக்காட்சியில் நாளெல்லாம் குழந்தைபேறு மையம் விளம்பரத்தை பார்த்தபோது எனக்கு நீலகண்டம் நாவலின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. ஆகவே இந்நாளில் இது. ஒரு சிறுகதையை போல் தன்னளவில் தனித்த பகுதியும் கூட) 

மிக நீண்ட வரிசை அது. விடிவதற்கு முன் அவன் எழுந்து அங்கு வந்திருந்தான். அச்சமயத்திற்கு அங்கே அவன் வந்தடைய நள்ளிரவே எழுந்து கிளம்ப வேண்டியிருந்தது. அவனைக் கடந்த முதல் பேருந்தில் ஏறுவதற்கு முன்னரே அப்பேருந்து முழுமையாக நிரம்பியிருந்தது. அடுத்த பேருந்திற்காக காத்திருந்தான். இருள் கரிய சுவர்களாக அவனை சூழ்ந்திருந்தது. அடுத்து வந்த பேருந்தும் நிரம்பி வழிந்தது. அவனுக்கு வேறு மார்க்கமில்லை என்பதால் தொற்றி ஏறி படியில் தொங்கியபடி புறநகர் பகுதியிலிருந்து நகரத்தின் மத்தியில் உள்ள பிரம்மாண்டமான பேருந்து நிலையத்திற்குச் சென்றான். அங்கே வயலில் பறக்கும் கொக்குகள் எனப் பேருந்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிளம்பிக் கொண்டிருந்தன. அவன் அங்கிருந்து வேறு வழித்தடத்திற்கு செல்லும் பேருந்திற்கு மாற வேண்டும். ஏழாம் எண் நடைமேடையில் அங்கு செல்வதற்கான பேருந்து வரும் எனச் சொன்னார்கள். 

அவன் ஏழாம் எண் நடைமேடையைத் தேடி அலைந்தான். ஆறுக்கு பின் எட்டு வந்தது. மொத்த பேருந்து நிலையத்தையும் சுற்றி அலைந்தான். எவரும் அவனை கண்டு கொள்ளவில்லை. பச்சை சட்டை அணிந்த ஒரு மனிதன் அவனை நோக்கி வந்தான். “என்ன தேடுகிறாய்?” “ஏழாம் நடைமேடையை”. “நான் உனக்கு காட்டுகிறேன். ஆனால் இரண்டாயிரம் ரூபாய் செலவாகும்” என்றான். நடைமேடையை காண்பிக்க இரண்டாயிரமா எனத் திகைத்து மறுத்தான். விநோதமாக விந்தி விந்தி நடந்து அவனைக் கடந்தான். சற்று தொலைவில் அவனை நோக்கி பதறியடித்து ஓடிவருபவனை கண்டான். அவனிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தன் கையிலிருக்கும் சாக்கட்டியால் நடைமேடை 14 என்றிருந்த இடத்தில் ஏழு என எழுதினான். அப்போது அங்கொரு பேருந்து வந்து நின்று அவனை ஏற்றிக்கொண்டு உடனே புறப்பட்டதை கண்டான். விந்தி நடக்கும் பச்சை சட்டைக்காரனை நோக்கி ஓடினான். அவன் பேருந்து நிலையத்தின் கடைசி எல்லைச் சுவரருகே நின்றபோது அவனை அடைந்தான். ஏளனப் புன்னகை ஒன்று எழுந்தது. இப்போது மூவாயிரம் ஆகும் என்றான். பணத்தை வாங்கிக்கொண்டு, ‘இங்கு சிறுநீர் கழிப்பவன் நாய்’ என்று எழுதியிருந்ததற்கு அருகே சாக்கட்டியால் ஏழு என எழுதினான். அப்போது அவனை ஏற்றிக்கொள்ள அந்த பேருந்து அங்கே வந்தது. அந்த பேருந்தில் 

அவன் ஏறியபோது அதுவும் நிரம்பி இருந்தது. பேருந்தைத் தயாரிக்கும் நிறுவனமே அதில் அமரும் ஆட்களையும் தயார் செய்து விடுகிறார்களோ என்றொரு ஐயம் அவனுக்கு எழுந்தது. இவர்கள் எல்லாம் எப்போது இந்த பேருந்தில் ஏறினார்கள் என தெரியாமல் குழம்பித் தவித்தான். நகரத்தின் மறுஎல்லையில் உள்ள ஒரு புறநகர் பகுதிக்கு அப்பேருந்து சென்றது. இடையிலிருந்த எந்த நிறுத்தத்திலும் எவரும் இறங்கவில்லை. ஆனால் ஏறிக்கொண்டே இருந்தார்கள். ஒருவர் அவன் காலில் ஏறி மிதித்தான். “காலை எடுங்கள்” எனக்கத்தினான். அருகிருந்தவன் “இத்தனை நேரமாக நீ என் காலில் நின்று வருகிறாய்.நான் கத்தினேனா? ஏனெனில் நான் வேறொருவரின் காலில் நிற்கிறேன்” என்றான். பேருந்தே சிரித்தது. ஓட்டுனர் சொன்னார் “நானே வேறொரு காலைத்தான் மிதித்து கொண்டிருக்கிறேன், அந்த கால்தான் வண்டியை மிதிக்கிறது”. 

அனைத்து சாளரங்களும் மூடியிருந்தன. நடுவில் யாரோ ஒருவர் மயக்கம் போட்டுச் சரிந்தார். உடனே அவருடைய மூக்கை மட்டும் கொடுத்தார்கள். பலபேருடைய கைபட்டு அவனிடம் அவருடைய மூக்கு வந்தது. நடத்துனர் அந்த மூக்கை படிக்கட்டிலிருந்து வெளியே நீட்டினார். மயங்கியவர் தெளிந்து எழுந்தார். “நடத்துனர் அய்யா எனக்கு   பீனசம். ஆகவே இத்தனை குளிரில் மூக்கை நீட்டாதீர்கள்” என்றார். நடத்துனர் ஒரு டிக்கெட் கிழித்து கொடுத்தார். மூக்குக்காரர் பத்து ரூபாய் அளித்தார். “மூக்கைத் திரும்பப் பெறும்போது இச்சீட்டைக் காட்டவும்” என அதில் அச்சிட்டிருந்தது. மேலும் அவருடைய மூக்கின் பிரத்தியேகமான அடையாளம் என நடுத்தண்டில் உள்ள வெள்ளை முடி என குறிக்கப்பட்டிருந்தது. பேருந்தில் உள்ள பலரும் தங்கள் மூக்குகளை நடத்துனரிடம் அளித்து டிக்கெட்டுகளை வாங்கிக் கொண்டார்கள். “நீங்கள் மூக்கை அளிக்கவில்லையா?” எனக் கேட்டான் காலை மிதித்தவன். “இல்லை, என் மூக்கிற்கு எந்த பிரத்தியேக அடையாளமும் இல்லை என்பதால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்” என்றான் அவன். புற்றிலிருந்து புறப்படும் எறும்புகள் என பேருந்து நின்றதும் அனைவரும் இறங்கினார்கள். 

அப்போதுதான் அந்த மிக நீண்ட வரிசையை பார்த்தான். அவனுக்கு முன் பல்லாயிரம் பேர் அந்த வரிசையில் நின்றிருந்தார்கள். வரிசையில் நிற்க சென்றவனை முன்னால் நிற்பவர் அழைத்தார். “வாயில் காப்பாளனிடம் பதிந்து நுழைவு சீட்டு வாங்க வேண்டும்” என்றார். அவன் வாயிலை நோக்கி நடந்தான். அரைமணி நேரம் நடந்தும் வாயிலை நெருங்க முடியவில்லை. மஞ்சள் சட்டையணிந்த ஒருவன் வரிசையிலிருந்து வெளிப்பட்டான். “உனக்கு என்ன குழந்தை வேண்டும்? ஆண் குழந்தை என்றால் ஐயாயிரம் பெண் குழந்தை என்றால் ஆறாயிரம், எதுவாக இருந்தாலும் சரி என்றால் ஏழாயிரம், டோக்கன் என்னிடம் உள்ளது” எனக் காட்டினான்.  “மூவாயிரம் என்றார்களே”. என இழுத்தான். “நீ அங்கு செல்வதற்கு இன்னும் ஒருநாள் ஆகும், உன் சாமர்த்தியம்” என்றான். அப்போது முன்வரிசையில் நின்றிருந்தவர் “யோசிக்காத தம்பி, இல்லையேல் வரிசையில் நின்றே வயதாகிவிடும்” என்றார்.

 அவனிடம் ஏழாயிரம் கொடுத்து தனக்கான டிக்கெட்டை வாங்கி அவன் வரிசையைத் துவங்கிய இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு ஆயிரம் பேர் அங்கே நின்றிருந்தார்கள். மீண்டும் முன்பு டிக்கெட் கொடுத்தவனிடம் சென்றான். வரிசையில் முன்னே வருவதற்கு எதுவும் வழியுண்டா என விசாரித்தான். அப்போது முன்பு இவனை ஊக்கப்படுத்திய நபர் பேசினார். “என் இடத்தை விட்டுத்தருகிறேன் ஐந்தாயிரம் ஆகும்” என்றான். ஐந்தாயிரத்தை அளித்ததும் டிக்கெட் விற்றவனும் இடம் கொடுத்தவனும் சேர்ந்து சிரித்தபடி சென்றார்கள். வரிசையில் நிற்பவர்கள் மலஜலம் கழிக்க வேண்டும் என்றால் ஐந்து நிமிடம்வரை அவருடைய இடத்தை காப்பாற்ற அங்கே ஓர் அமைப்பு இருந்தது. அவர்கள் இருநூறு மீட்டருக்கு ஒருமுறை  நீலநிற பிளாஸ்டிக் குடையை விரித்து அதன் கீழ் நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். அதற்காக இரண்டாயிரம் வசூலிக்கப்பட்டது. ஐந்து நிமிடத்திற்கு மேல் கழியும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் ஆயிரம் மேலதிகம் வசூலிக்கப்பட்டது. பத்து நிமிடங்கள் ஆகிவிட்டால் அவருடைய இடம் ஏலத்தில் விடப்படும். அவனுக்கு மூலக்கடுப்பு இருப்பதால் சாதாரணமாக கழிவறைக்கு சென்றால் கூட இருபது நிமிடங்கள் ஆகிவிடும் என்பதால் என்ன ஆனாலும் அடக்கிக்கொள்வது எனும் முடிவுக்கு வந்தான்.  

வரிசையில் நிற்பவர்களுக்கு உணவு விற்பவர்கள் பச்சை நிற ஆடை அணிந்திருந்தார்கள். இட்லி ஐநூறு ரூபாய். அவன் ஒரேயொரு இட்லி வாங்கிக் கொண்டான். சட்னி முன்னூறு என்றார்கள். இட்லியை பிய்த்து தின்றான். அவன் பின்னால் நின்றவன் கால்சராய் பாக்கெட்டுக்குள் துழாவும்போது ஏதோ நறநறக்கும் ஒலி கேட்டது. உடனே இருவர் அவனை இரு பக்கமுமாக வந்து தூக்கி சென்றார்கள். அவன் பாக்கெட்டில் வைத்திருந்த ரொட்டி பறிமுதல் செய்யப்பட்டது. அவன் மீண்டும் வரிசையின் கடைசிக்கு அனுப்பப்பட்டான். மூன்று பகல் நான்கிரவு கழிந்ததும் அவன் வாயிலை அடைந்தான். பெரிய தொங்கு மீசையும் நீலநிற தொப்பியும் அணிந்த வாயிற்காப்பாளன் நான்கு நான்கு நபர்களாக உள்ளே அனுமதித்தான். உள்ளே சென்ற யாரும் வெளியே வந்ததாக தெரியவில்லை. அத்தனை பேரை கொள்ளும் அளவிற்கு பிரம்மாண்டமானதா? 

அவனை விட மூன்று மடங்கு உயரமான சுற்றுச் சுவர். அதன் மீது இன்னொரு ஆள் உயரத்திற்கு மின் கம்பி சென்றது. ஒரேயொரு சிறிய சுழலும் கதவு பொருத்தப் பட்டிருந்தது. வாயிற் காப்பாளான் அவர்கள் நான்குபேரை கதவின் நான்கு இடை வெளிகளில் நிற்க வைத்தான். இரு ஆண்களும் இரு பெண்களும் இருந்தார்கள். இன்னொரு ஆண் வழுக்கைத் தலையர். வெள்ளை வேட்டி சட்டையணிந்து கையில் தங்கக் காப்பு போட்டிருந்தார். புலிநகச் சங்கிலி தொங்கியது. அவனைப் பார்த்து சிரித்தார். “கொஞ்சம் ப்ரோஸ்ட்ரெட் பிரச்சன தம்பி, மூத்திரத்துக்கு போயே கொள்ள காசு அழிஞ்சு போச்சு” என்றார். காட்டன் சுடிதார் அணிந்த பெண்ணின் தலை தும்பையாக வெளுத்திருந்தது. மற்றொரு பெண் நைட்டியும் துண்டும் போர்த்தி இருந்தாள். வாயிற் காவலன் நூதனமாக எதையோ கண்டுபிடித்தது போல் பெருமையாக சிரித்தான். பின்னர் நால்வரையும் சுழல் கதவில் கால் வைத்து நிற்கச் சொன்னான். அருகே வந்து குடை ராட்டினம் போல் அதை சுற்றி விட்டான். அப்போது “ராஜீவி ராஜீவி ராஜீவி” எனக் கத்திக்கொண்டே சிரித்தான். சுழல் வேகத்தில் காட்சிகள் நிறங்களாக, நிறங்கள் எல்லாம் வெறும் வெள்ளொளியாக மாறிக்கொண்டிருந்தன. வாயிற் காப்பாளனின் சிரிப்பொலி மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. கண்விழித்தபோது அவன் வரவேற்பு இருக்கையில் தனியாக அமர்ந்திருந்தான். எதிர் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் கணினியில் மும்முரமாக ஏதோ செய்து கொண்டிருந்தாள். 

அவள் ஐந்து நட்சத்திர விடுதிக்கு உரிய கோட்டு சூட்டு அணிந்திருந்தாள். அவனுடைய சீட்டைப் பரிசோதித்து. முன்பணமாக ஐந்து லட்சத்தை கட்டக் கோரினாள். அவன் முன் இருந்த தொடு திரை மின்னியது. அதில் பதினைந்து கேள்விகள் வரும் அதற்குரிய பதில்களை தேர்வு செய்யவும் என்றாள். எந்த நிறத்தில் குழந்தை வேண்டும்? என்றொரு கேள்விக்கு பதிமூன்று நிற அடர்வுகளில் குழந்தைகளை காட்டியது. மேலும் அவனுடைய மற்றும் அவனுடைய மனைவியின் நிறத்தை கணக்கிட்டு டஸ்கி பிரௌன் எனும் நிறத்தை தேர்வு செய்ய அறிவுறுத்தியது. அவனுக்கு பிஸ்கட் பிரவுன் தேர்வு செய்யவேண்டும் எனத் தோன்றியது. ஆகவே அதை தேர்ந்தான். அதற்கான தொகை ஒரு லட்சம் கட்ட சம்மதமா எனக் கேட்டது. ஒப்புக்கொண்டதும் அடுத்த கேள்வி திரையில் எழுந்தது. உடல் வாகு எத்தகையதாக இருக்க வேண்டும்? அதற்கு மூன்று தேர்வுகளை அளித்தது. ஒல்லி, மத்திமம், பூசினார்போல். அவன் மத்திமத்தை தேர்ந்தெடுத்தான். அதற்காக ஒரு லட்சம் தொகை செலுத்த முடியுமா என கேட்டது. ஒப்புக்கொண்டதும் அடுத்த கேள்வி திரையில் தோன்றியது. 

உங்கள் குழந்தையின் ஐ.கியூ எந்த அளவில் இருக்க வேண்டும்? பல்வேறு எண்கள் திரையில் தோன்றின. அடிக்குறிப்பில் – ஐ.கியூ அதிகமாக அதிகமாக சமூகத் தொடர்பு குறையும். அத்தகைய தேர்விற்கு நிர்வாகம் பொறுப்பல்ல என தெரிவிக்கப்பட்டிருந்தது. பெரும்பான்மை தேர்வு செய்யும் மத்திம அளவையே அவனும் தேர்ந்தான். பின்னர் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கேள்வி வந்தது. அப்போது திரையில் உங்கள் நேரம் முடிவடைய இன்னும் நாற்பது வினாடிகள் உள்ளன. அதற்குள் அனைத்து கேள்விகளுக்கும் உங்கள் தேர்வை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தேர்வுகள் முழுமையடையாத போது கணினி தன் போக்கில் தேர்வுகளை நிகழ்த்திக்கொள்ளும் என்றது. அவன் எல்லாவற்றிலும் மத்திமமாக உள்ளதை தேர்ந்தான். கேள்விகளை வாசித்து உள்வாங்கும் அளவிற்கு அவனுக்கு நேரமில்லை. உடற் திறன், நினைவாற்றல், உணர்வுகள், ஆயுள் என பல்வேறு கேள்விகள் தோன்றின. திரையில் இறுதி கேள்வி தோன்றும் முன்னரே அவனுடைய நேரம் முடிந்து விட்டிருந்தது. அது என்ன கேள்வி என்பது தெரியாமல் மனது குழம்பிக்கொண்டே இருந்தது. பின்னர் அவன் தேர்வு செய்த குழந்தைக்காக செலுத்த வேண்டிய தொகை என பன்னிரண்டு லட்சத்தை காட்டியது. 

வரவேற்பு இருக்கையில் அமர்ந்த பெண்ணிடம் அதற்கான காசோலையை அளித்தான். உங்கள் பிராஜக்ட் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் தேர்வு செய்த இயல்புகளோடு ஒரு குழந்தை உங்களிடம் சரியாக அடுத்த வருடம் இதே தேதியில் கிடைக்கும். விரைந்து பெறுவதாக இருந்தால் கூடுதல் கட்டணம் செலுத்த எங்கள் மேலாளரை தொடர்புகொள்ளவும் என ஒரு இயந்திரப் பெண் குரல் ஒலித்தது. வரவேற்பு மேஜையில் அமர்ந்திருந்த பெண் மெனு கார்ட் போலொரு அட்டையை அவனிடம் நீட்டினாள். அதில் ஒரு நாள் துவங்கி, ஒரு வாரம், ஒரு மாதம், மூன்று மாதம், ஆறு மாதம் என பல்வேறு பேக்கேஜ்கான தொகைகள் குறிப்பிடப்பட்டிருந்தன. கட்டுபடியாகக் கூடிய தொகை என அவன் நம்பிய ஆறு மாதத்தை தேர்வு செய்தான். அதற்குரிய கட்டணத்தை செலுத்துவதற்கு தனக்கு காலவகாசம் வேண்டும் என கோரினான். இருபது சதவிகித வட்டியுடன் தவணை முறையில் செலுத்தலாம். இப்போது கால் பங்கு பணம் கொடுத்தால் போதும். எங்கள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ நிதி நிறுவனத்தின் பிரதிநிதிகள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்றாள். அதற்குரிய ஒரு பத்திரத்தை நீட்டினாள். உரிய தவணை செலுத்தப்படாதபோது உங்கள் குழந்தையை பறிமுதல் செய்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கையெழுத்திட்டு காசோலை அளித்தான். அப்பெண் எழுந்து நின்று அவனுக்கு ஒரு கைப்பையை கொடுத்தாள். 

கூப்பிய கரங்களுடன் நன்றி என அச்சாகியிருந்த தாம்பூலப் பை. மனனம் செய்தது போல் “எங்கள் நிறுவனத்தின் மீது நம்பிக்கை கொண்டு எங்களை தொடர்பு கொண்டதற்கு நன்றி. விரைவில் உங்களைத் தொடர்பு கொள்வோம்” என்று கூறிவிட்டு மீண்டும் கணினியில் அமிழ்ந்தாள். வெளியே செல்லும் வழி வேறொன்றாக இருந்தது. அங்கே நின்றிருந்த வாயிற்காப்பாளன் முன்பு கண்டவனின் இரட்டைச் சகோதரனைப் போலவே இருந்தான். வெளியேறி சென்ற அவனிடம் பணிவாக ஒரு படிவத்தை நீட்டினான். அதில் எங்கள் சேவையைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? சிறப்பு/ மிக நன்று / அற்புதம்/ அபாரம் எனும் நான்கு தேர்வுகள் குறிப்பிடப்பட்டிருந்தன. கீழேயே இதை ஏன் தேர்வு செய்தீர்கள் என்பதை முப்பது சொற்களுக்கு மிகாமல் எழுதவும்” என்றும் குறிப்பிட்டிருந்தது. “எழுதும் தெம்பு எனக்கில்லை” என்று அதை அவனிடமே திருப்பி கொடுத்தான். “எழுதாமல் வெளியேற முடியாது. ஆனால் மூவாயிரம் செலுத்தினால் செல்லலாம்” என்றான். அவனுக்கு தலை சுற்றியது. ‘மிக நன்று’ என்பதை தேர்வு செய்து ‘வாழ்க வளமுடன்’ என்று எழுதி அளித்துவிட்டு வெளியேறினான். 

No comments:

Post a Comment