Sunday, November 3, 2019

இந்திர மதம்
1

மூடிய கண்ணாடி சாளரத்திற்குள் மழை ஓசையாக மட்டும் விரவிக் கிடந்தது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு நண்பகல் மழையிருளில் மூழ்கியது. மின்விசிறி எங்கிருந்தோ வந்து காற்றுக்கு கட்டுப்பட்டு சுழன்றுக் கொண்டிருந்தது. சேஷாத்ரி சூழ இருந்த மாணவர்களை விலக்கிக் கொண்டு விடுவிடுவென சென்று வகுப்பறையின் கதவை இழுத்து தாழிட்டு வந்தார். கதவை அடைக்கும் சில நொடிகளுக்குள் சாரல் அவருடைய வேஷ்டிக்கு சில ஈர வட்டங்களை தெளித்திருந்தது. ஆனாலும் வெளியே ஒலிக்கும் மழையின் சந்தடியை நிறுத்திவிட்டதாக நிம்மதி அடைந்தார். இனி அவருடைய குரல் எல்லோருக்கும் கேட்கும் எனும் ஆசுவாசமும்கூட.

 சேஷாத்ரி கண்களுக்கு மையிட்டிருந்தார். அது அவரே தயாரித்ததும் கூட. தினமும் முகத்தை மழித்துக்கொண்டு வருவார். தலைமுடி வளர்த்து குடுமியிட்டுக் கொண்டிருப்பார். பிரம்மச்சாரி. அவருடைய தசைத் திரட்சியை அவர் அணியும் கதர் ஜிப்பாவை மீறி சாதாரணமாக எவரும் பார்த்துவிட முடியும். எந்த நவீன கல்வி கூடத்திலும் இப்படியான ஒரு மனிதர் கேலிப் பொருளாக ஆகியிருப்பார் ஆனால் அந்த ஆயுர்வேத கல்லூரியில் அவர் ஒரு மாபெரும் நாயகனாகவே பார்க்கப்பட்டார். செத்துக் கொண்டிருக்கும் மருத்துவமுறையை மீட்க தன்னையே அளித்தவர். ஆயுர்வேதத்தின் வாழும் அடையாளம்.  

நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் அவர் கண்ணாடி அணிவதில்லை, ஒரு முடி கூட நரைக்கவில்லை. கல்லூரியில் அவரைப் பற்றிய தொன்மங்களுக்கு அளவே இல்லை. பல கதைகளும் அமானுடத் தன்மை கொண்டவை. மூத்த வைத்தியர் பத்ம விபூஷன் சங்கரன் வாரியார் ஒருமுறை ஒரு நோயாளியின் குன்மத்திற்கு செய்து வந்த சிகிச்சை பலனளிக்காமல் இருந்தபோது அவருக்கு மிகுந்த மனக் குழப்பம் உண்டாகி தன்னுடைய மாணவனான சேஷாத்ரியிடம் புலம்பியிருக்கிறார். சேஷாத்ரி பொறுமையாக புலம்பல்களைக் கேட்டுக்கொண்டப் பிறகு, வைத்தியனுக்கும் மகா வைத்தியனுக்கும் உள்ள இடைவெளி இதுதான். மகா வைத்தியன் ஒவ்வொரு, சிறுசிறு தோல்வியையும் தனிப்பட்ட தோல்வியாக உணர்ந்து மனதை உழப்பிக் கொள்வான் என்று சொல்லிவிட்டு, முதலில் அது ஏன் குன்மம் இல்லை என தன் ஆசிரியரிடம் நிறுவினார் என்பது அப்படி உலவும் ஒரு கதை. அதன்  பின் தான் சங்கரன் வாரியார் “சுசுருதர் சொல்றது இருக்கட்டும், சேஷாத்ரி என்ன சொல்றான்?” என கேட்டதாகச் சொல்வார்கள். மற்றொருமுறை ஒரு  ஆய்வரங்கில் மஞ்சளில் இருந்து எடுக்கப்பப்டும் குர்குமின் எப்படி புற்று நோயைக் கட்டுபடுத்துகிறது, இது ஆயுர்வேதத்தின் வெற்றி என ஒரு அறிஞர் ஆய்வுக் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்து குறுக்கிட்டு “இதனால் ஆயுர்வேதத்திற்கு என்ன லாபம்? இதிலிருந்து உங்களுக்கு தேவையான நவீன அறிவியலை நீங்கள் வெட்டி எடுத்துக் கொள்கிறீர்கள். அறிவுச் சுரண்டல். போகட்டும். ஆனால் அதற்கும் ஆயுர்வேதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை”  என ஆவேசமாக கத்தி ஆய்வறிக்கையை கிழித்து எறிந்த நிகழ்வு ஏறத்தாழ ஒவ்வொரு கருத்தரங்கின்போதும் ஒரு சடங்கைப்போல் உணவு இடைவேளையின் போது அதிருப்தியில் உழலும் மாணவர்களால் தீர்க்கத்தரிசனமாக உணரப்பட்டு உணர்ச்சிபூர்வமாக நினைவுக்கூரப்படும். நவீன மருத்துவத்தின் எந்தக் கூறுகளையும் நோயறிதலுக்கோ சிகிச்சைக்கோ பயன்படுத்த மாட்டார். சக பேராசிரியரான நசிகேத ராவ் எத்தனையோ முறை கிண்டல் செய்வார். “இப்படி இருக்காதய்யா..நீ ஒரு ஹிப்போக்ரைட்யா ..  புல்லட் ஓட்டுற, லேப்டாப் செல்போன் எல்லாம் வெச்சிருக்க, வீட்ல கரண்ட் கனெக்ஷன் இருக்கா?  இல்ல வேணாம்னு இருட்டுல உக்காந்திருக்கியா? இதெல்லாம் டெக்னாலஜிதான, அதையும் பயன்படுத்து நம்ம மருந்தையும் கொடு, முடியலையா நல்ல டாக்டர்கிட்ட அனுப்பிவிடு” என கிண்டலுக்கு அப்பால் அவ்வப்போது நட்பாக எச்சரிப்பார். சிரித்துக்கொண்டே “போதும் அய்யா. இதெல்லாம் வித்தையில் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசும் பேச்சு இந்த டாக்டருக்கு தரகராக இருக்கும்  வேலையைச் செய்வதற்குத்தான் இத்தனைப் பேர் உள்ளீர்களே. நான் வேற எதுக்கு?” என்பார். இந்தமாதிரியான பதில்களை பல நேரங்களில் கோர்வையான சமஸ்கிருதத்தில் அளிப்பார் என்பதால் எதிராளிகள் கூர்ந்து பொருள் உணர்ந்து பின்னர் சொற்களைத திரட்டி பதில் சொல்வதற்கு சும்மா இருந்துவிடலாம் என விட்டுவிடுவார்கள். 

மழை இரைச்சலும் காற்றும் தொலைவில் எங்கோ என நிகழ்ந்தது போல் அவர்கள் அந்த மூடிய சிறிய அறைக்குள் மேஜையைச் சுற்றி குழுமி இருந்தார்கள். மேஜையின் முன் வந்து, அதன் மையத்தில் நின்று நாற்காலியில் அமர்ந்திருந்த சிவானந்தனை நோக்கினார். ஆவலும் குறுகுறுப்பும் மின்னும் விழிகள் அவர்களை சூழ்ந்திருந்தன. அவனிடம் “வலிக்கிறதா?” என வினவியதும் இல்லை என்பதாக தலையசைத்தான். வகுப்பில் அன்று அட்டை விடுதல் செய்முறை பயிற்சிக்கு எவரேனும் சுய விருப்புடன் பங்குகொள்ள சம்மதமா என சென்ற வார வகுப்பிலேயே அவர் கேட்டிருந்தார். அவர் எதிர்பார்த்த மாதிரியே அதிகமும் பெண்கள் உள்ள அவ்வகுப்பில் எவரும் முன்வராதபோது அவருடைய பார்வை இயல்பாக சிவானந்தனை சென்று முட்டியது. அவன் ஏன் தன்னிச்சையாக முன்வரவில்லை எனும் கேள்வியை அப்பார்வை சுமந்து நின்றது. மற்றுமொருமுறை தன் முதன்மைச் சீடன் என்றும் தன் வாரிசு என்றும் எண்ணியவன் தன் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை எனும் மெல்லிய அதிருப்தி அவர் முகத்தில் படர்ந்தது. சிவானந்தன் தயங்கித் தயங்கி எழுந்து நின்று சம்மதம் தெரிவித்தான். 
ஒருநாள் காலை சரியாக ஐந்து மணிக்கு புழுதிவாக்கம் பாலாஜி நகர் விரிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு தன்னுடைய சைக்கிளில் சென்று சேர்ந்தான் சிவானந்தன். இரவெல்லாம் மழை பெய்து ஈரம் இருளை கனக்கச் செய்தது. வெற்றுடலுடன் வாயிலில் அமர்ந்து வெண்கலப் பானையை விறகடுப்பில் வைத்து அதன் முன் குந்தி அமர்ந்து ஊதிக் கொண்டிருந்தார். உலை கொதித்துக் கொண்டிருந்தது. சிவானந்தனைப் பார்த்ததும் ஊதுகுழாயை அவன் கையில்கொடுத்துவிட்டு “பத்து நிமிஷம்” என உள்ளே சென்றார். முந்தைய இரவு மழையில் கறி நமுத்துப் போயிருந்தது. இருந்தாலும் விடாமல் ஊதிக் கொண்டிருந்தான். சிவந்த நெற்றியில் திருமண் துலங்க வெளியே வந்தார். கையில் ஒரு இறுக சுற்றிய பிளாஸ்டிக் பை இருந்தது.  இன்னொரு துணிப் பையை அவனிடம் கொடுத்தார். அவருடைய நீலநிற என்பீல்டை துடைத்துவிட்டு இருவருமாக புறப்பட்டார்கள்.  

சிவானந்தனின் முகத்தில் குளிர்ந்த காற்று அம்மியது. தும்மலை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் சேஷாத்ரிக்கு வெவ்வேறு அணுக்க சீடர்கள் இருப்பார்கள். நவீனக் கல்விக் கூடங்களில் குரு சீட உறவு முறைக்கு கிட்டத்தட்ட எந்த பொருளுமில்லை தான் ஆனால் இதற்கும் ஆயுர்வேத கல்லூரி ஒரு விதிவிலக்கு. அங்கே பெரும்பாலும் எல்லா ஆளுமைமிக்க ஆசிரியர்களுக்கும் தனித்த சீடர் நிரை உண்டு. கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் கூட அது நீளும். சேஷாத்ரியிடம் சீடனாக கடும் போட்டி நிலவும். அவரே தனது சீடனைத் தேர்வு செய்வார். கல்லூரி முடித்து வெளியேறிய  பின்னரும் அவர்கள் உறவு நீடிக்கும். சேஷாத்ரியின் சீடர்களுக்கும் நசிகேத ராவின் மாணவர்களுக்கும் எப்போதும் உரசல் உண்டு. இருவருக்கும் தங்கள் தரப்பை தர்க்க நியாயத்துடன் நிறுவியாக வேண்டும் எனும் துடிப்பு தத்தமது ஆசிரியர்களைக் காட்டிலும் அதிகம். கருத்தரங்கங்களில், விவாத மேடைகளில் பொறி பறக்கும். இரு பக்கமும் கைத்தட்டும் ஆதரவாளர்கள் தங்கள் முழு ஆற்றலைக் காட்டுவார்கள். எப்போதும் கல்லூரி முடித்து வெளியேறிச் செல்லும் ராவின் மாணவர்கள் சேஷாத்ரியின் சீடர்களைக் காட்டிலும் நன்றாக பொருளீட்டுபவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சேஷாத்ரி தெளிவாக தன் சீடர்களிடம் கூறிவிடுவார். “நான் உங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை அறிமுகம் செய்கிறேன். அதற்கு உண்மையாக இருப்பதற்கு பொருளாதார பலன் கிட்டுமா என சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் கற்றவர்கள் எனும் பெருமிதத்தையும், உங்கள் அறிவு முழுமையானது எனும் நம்பிக்கையையும் என்னால் கொடுக்கமுடியும்.”.

பள்ளிக்கரணை ஏரிக்கு சென்றார்கள். தெருவிளக்குகள் மெளனமாக தலைகவிழ்ந்து தன் சிறு ஒளிப் பரப்பை நோக்கிக் கொண்டிருந்தன. அங்கே சதுப்பின் கரையோரம் வெளிச்சமற்ற ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பையில் இருந்த ஆட்டுக் குடலை கையில் எடுத்து வேட்டியை மடித்து தன் இரு கால்களிலும் அரக்கித் தேய்த்தார். சிவானந்தனுக்கு வயிறு குமைந்தது. “இன்னும் உன் வயித்துப் புண் ஆறலையா? கஷாயம் குடிக்கிறியா?” என்று கேட்டபடி அவனிடம் வேண்டுமா என்பதுபோல் நீட்டியபோது அவன் தயங்கியதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். சதுப்பில் வேட்டியை மடித்துக்கொண்டு இறங்கி நடந்தார்.  சிவானந்தனும் கால்சட்டையை மடித்துக்கொண்டு தொடர்ந்தான். குளிரில் மயிர்கால்கள் நட்டுக்கொண்டு உடல் சிலிர்த்தது. நீர் தாவரங்கள் மண்டிய ஏரியில் ஒருவித அழுகல் நாற்றம் மூக்கை நிரடியது. கருக்கிருட்டில் சாம்பல் நிற கலங்கல் நீரில் ஏதேதோ அவன் காலில் ஊறிச் சென்றன. ஒரு தவளை அவன் காலிலிருந்து தத்தியது. பாம்பா அல்லது ஏதேனும் தாவரக் கொடியா என்றறிய முடியாத வழவழப்பு ஒன்று அவன் காலைத் தீண்டியதும் சற்றே அதிர்ந்து பின்னகர்ந்தான். “தன்வந்தரி கையில என்ன இருக்குன்னு பாத்திருக்கியா?” மெல்ல அவனிடம் கேட்டபடி நீரை அளைந்து நடந்தார். “அமுத கலயம்” என்றான். “ம்..இன்னொரு கையில?” பதில் ஏதும் சொல்லாமல் யோசித்தான். பின்னர் அவரே “ஜலூகம்..அதாவது அட்டை. ஏன் தெரியுமா?” மெளனமாக பின் தொடர்ந்தான். “அவன் உன் ரத்தத்த உறிஞ்சு உன்னை சுத்தப் படுத்துறான், அதுக்கப்புறம் தான் உனக்கு இன்னொரு கையில இருக்குற அமுதம் கிடைக்கும். கலசம் தான் நம்ம உடம்பு. உன் அசுத்தம் வெளியேறிட்டா மிச்சமிருக்கிறது என்ன? அமுதம் தான. சுத்தமான ரத்தம் தான் அமுதம். புரியுதா?” என்றார்.  அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பவித்ராவிற்கு ரத்தத்தில் காதல் கடிதம் எழுதிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. நீர் தாவரங்கள் மண்டியிராத ஒரு பகுதிக்கு வந்ததும் சற்று நேரம் அங்கேயே நின்றார். வான இருள் மெல்ல விலகி பூக்கத் துலங்கியது. நீர்காகங்கள் தலையை சிலுப்பிப் பறந்தன. வர்ண வேறுபாடுகள் கண்ணுக்குத் துலங்கத் துவங்கின. பின்னர் மெல்ல சிவானந்தனின் தோளைப் பிடித்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கினார். அவர் காலில் கத்தை கத்தையாக அட்டைகள் ஒட்டியிருந்தன. சிவானந்தன் துணிப்பையில் இருந்த மூன்று ஹார்லிக்ஸ் கண்ணாடி பாட்டில்களில் பாதி பங்கு நீர் நிரப்பினான். இப்போது மறு காலையும் தூக்கினார் அதிலும் அட்டைகள் மொய்த்தன. குருதிப் பசிகொண்ட அட்டைகள் இறைச்சியின் வாடையால் ஈர்க்கப்பட்டு அம்மின. சில மீன்களும் இப்போது காலைச் சுற்றி கடிக்கத் துவங்கின. இருவருமாக வேகமாக கடந்து கரையேறினர். கரையோரப் புதரில் இருந்து ஒரு பாம்பு நீரில் பாய்ந்து நீந்திச் சென்றது. “விரியன்” என்றார் சேஷாத்ரி. சிவானந்தனின் காலையும் சில அட்டைகள் கவ்வியிருந்தன. அவற்றை உதறித் தள்ளினான். அப்போதும் அவை உதிரவில்லை. துணிப்பைக்குள் கிடந்த பொட்டலத்தில் இருந்த மஞ்சள் பொடியை எடுத்து அட்டைகள் கவ்வியிருந்த வாய்ப்பகுதியில் லேசாக தூவினார். அவை சுருண்டு விழந்தன. பின்னர் விழுந்தவற்றை வால் பகுதியில் வைத்து தூக்கி ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டார். சற்று நேரம் வெறுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவானந்தன் சேஷாத்ரி அவனைத் திரும்பி நோக்கியதை பார்த்ததும் அவனும் உதவினான். வீட்டிற்கு திரும்பியதும் ஹார்லிக்ஸ் பாட்டிலின் மூடிகளில் பழுக்க காய்ச்சிய கம்பியைக் கொண்டு சிறு சிறு துளைகளை இட்டான் சிவானந்தன். மூன்று பாட்டில்களிலும் உள்ள அட்டைகளை எண்ணிப் பார்த்தான் மொத்தம் முப்பத்தியாறு. எனினும் அவனுக்கு குழப்பமாக இருந்தது. அட்டைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தன. அவை நீந்திக்கொண்டே இருந்தன. ஒரே அட்டையைத் தான் திரும்ப திரும்ப எண்ணுகிறோமோ என குழம்பினான். சேஷாத்ரி பக்கவாட்டில் இருந்த கிணற்றில் நீர் வாரி இறைத்து கால்களைக் கழுவிக்கொண்டார். மயிர் மழிக்கப்பட்ட வழவழப்பான கெண்டை கால்களில் ஆங்காங்கு உதிரத் திட்டுக்கள் இருந்தன. குப்பைமேனி இலையை கசக்கி கடித் தடங்களில் தேய்த்துக்கொண்டார். “சார் இதுல விஷமுள்ளது விஷம் இல்லாததுன்னு எப்புடி பிரிச்சு பாக்குறது? சுசுருதர் விஷமுள்ள ஆறு வகைகளைச் சொல்றாரே” என கேட்டதும். “நானும் நீயும் இன்னும் உயிரோடத்தான இருக்கோம். எதுக்கும் விஷமில்லதான. அதிருக்கட்டும். முதல்ல இதுக்கு வாய் எது ஆசனவாய் எதுன்னு கண்டுபிடி. அதுதான் முக்கியம்” எனச் சொல்லி புன்னகைத்தார்.    

சிவானந்தனின் தந்தை ஆறுமுகத்திற்கு சொரியாசிஸ். தோல் மருத்துவர்கள், ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் என எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்தார். தற்காலிக நிவாரணங்களை அளித்தனவே ஒழிய எதுவும் அவருடைய நோயை நிரந்தரமாக தீர்க்கவில்லை. தனது ஃபினான்ஸ் கடையில் வாடிக்கையாளருக்கு முன் அமர்ந்து காலை சொறிந்துக்கொள்ளும் வேட்கையை அடக்கிக்கொள்வது பெரும் சவாலாக ஆனது. முழுக்கைச் சட்டையைப் போட்டு கழுத்துப்பட்டை பட்டனையும் போட்டுக்கொண்டு  இருக்கையில் அமர்ந்திருப்பார். மெல்லிய பச்சை ஊண் வாடை அவரிடமிருந்து எழும். செதில் செதிலாக தோல் பெயர்ந்து உதிரும். வெளியே செல்வது குறையத் துவங்கியதும் வசூலும் குறைந்தது. தொழிலே பாதித்தது. சேஷாத்ரியின் மருத்துவ அற்புதங்கள் பற்றிய தொன்மங்கள் கல்லூரிக்கு வெளியேயும் எப்படியோ கசிந்தது. மற்ற நாட்களில் மந்தமாக இருக்கும் கல்லூரி புற நோயாளிப் பிரிவு சேஷாத்ரி வரும் வியாழக் கிழமைகளில் கடும் நெரிசலைச் சந்திக்கும். சேஷாத்ரி கல்லூரியைத் தவிர்த்து வெளியே எங்கும் வைத்தியம் பார்ப்பதுமில்லை. அவரைச் சென்று பார்த்து அவருடைய ஆலோசனைப்படி  வாந்தி, பேதி, என குடலை சுத்தம் செய்து மருந்துகளையும் கடும் பத்தியங்களையும் பின்பற்றி முழுக்க குணமானார். ஏறத்தாழ அது மாயவித்தைப் போல இருந்தது. நன்றிக்கடனாக பெரும் பணத்தை செலவழித்து சிவானந்தனை ஆயுர்வேதம் படிக்க அனுப்பினார். அவனும் இயல்பாகவே சேஷாத்ரியின் பால் ஈர்க்கப்பட்டான். இவனை விடவும் தகுதியான இருவர் சேஷாத்ரியின் மீது இவன் அளவிற்கே அல்லது இவனை விடவும் பற்று கொண்டிருந்தார்கள். கேரளாவில் பேர்போன மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சேஷாத்ரியின் மீதிருக்கும் மரியாதையின் பொருட்டே இந்த கல்லூரிக்கு வந்தவர்கள். அவர் கேட்பதற்கு முன்பே பதில்களைத் தெரிந்து சொல்பவர்கள். மூலிகைகளை சரியாக அடையாளம் காண்பவர்கள். மருந்து செய்து பழகியவர்கள். ஆனால் சேஷாத்ரி ஏனோ சிவானந்தனையே தேர்ந்தெடுத்தார். பிறகுதான் அவருடைய முதன்மை சீடர் வரிசை எந்தவித மருத்துவ பின்புலமும் இல்லாதவர்களால் ஆனது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் அதீத அறிவாற்றல் உடையவர்கள் முன்பே தங்கள் கோப்பைகளை நிரப்பியவர்கள். இவனைப்போன்ற காலி கோப்பை தான் அவருக்கு தோதானது என அவன் புரிந்துகொள்ள மேலும் சில ஆண்டுகள் ஆயின. சேஷாத்ரியின் சீடர் நிரையில் ஒரு பெண் கூட இல்லை என்பது ஏன் என எண்ணிப் பார்த்திருக்கிறான். இத்தனைக்கும் அவர் மாணவர்களைக் காட்டிலும் அதிகம் மாணவிகள் மத்தியிலேயே பெரும் ஈர்ப்பைப் பெற்றவர். சேஷாத்ரியின் சீடன் என்பது பிற ஆசிரியர்களின் எரிச்சலை ஈட்டுவதும் தான். ஒவ்வொரு வகுப்பிலும் இதுகூட தெரியவில்லையா வகை கேள்விகளால் அவனை மீண்டும் மீண்டும் உடைக்கும் முயற்சிகளில் சளைக்காமல் ஈடுபட்டார்கள். குருட்டு பற்று அல்லது வீம்பு ஏதோ ஒன்று அவனை அதுவரை காப்பாற்றியது.                
சிவானந்தன் காலில் ஒட்டியிருந்த அட்டை சட்டென சுருண்டு கீழே விழுந்ததும் அருகிலிருந்த பெண்கள் வீரிட்டு விலகினார்கள். “பாத்து மிதிச்சுடாதீங்க” என்று சொல்லிக் கொண்டே நிதானமாக குருதி குடித்து கொழுத்த அட்டையை கையில் பிடித்து தூக்கினார். அதற்குள் வேடிக்கைப் பார்த்திருந்த கௌசல்யா மயக்கமுற்றாள். “இவ எப்படி பிசியாலஜி பாஸ் செஞ்சா?” என்று கிண்டல் செய்தார். அவளை இருவர் தூக்கி பெஞ்சில் படுக்க வைத்து நீர் தெளித்து அமைதிப் படுத்தினார்கள். “நாம எல்லாரும் அட்டையைப் பத்தி என்ன நெனைச்சோம்? ரத்தம் உறிஞ்சும் அட்டைன்னு எல்லாம் திட்டுவோம் இல்லியா, ஆனா அட்டை தன் பசிக்கு கொஞ்சூண்டு ரத்தத்தை உறிஞ்சதும், அதுவும் கெட்ட ரத்தத்த மட்டும்தான், அதுவே வாய எடுத்துரும்” சிவானந்தன் மெல்ல நெளிந்தான். “அரிக்குதா?” என்றதும் ஆம் என தலையசைத்தான். “அப்ப கெட்ட ரத்தம் ஸ்டாக் தீந்துடுச்சு. நீ சுத்தமாயிட்ட” எனச் சிரித்தபடி மீதமிருந்த ஐந்து அட்டைகளின் கவ்விய வாயின் மீது லேசாக மஞ்சள் பொடியை உதிர்த்தார். அவை சுருண்டு விழுந்தன.  

அவற்றை கையில் எடுத்து கவனமாக மேஜை மீதிருந்த நீர் நிறைந்த பீங்கான் பேசினுக்குள் போட்டார். அருகே மற்றொரு பேசினில் அட்டைகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அட்டையின் வாயருகேயும் மஞ்சள் பொடியை தூவியதும் அவை உறிஞ்சிய உதிரத்தை வாயுமிழ்ந்தன. நீர் முதலில் மஞ்சளாகவும் பின்னர் உதிரச் சிவப்பாகவும் மாறியது. குருதி நதியில் ஏறத்தாழ அதே நிறத்து அட்டைப் பூச்சிகள் நீந்தின. ஒரேயொரு அட்டை மட்டும் நீந்தாமல் பேசினின் அடியில் சுருண்டிருந்தது. மெல்ல அதை உசுப்பினார். ஆனால் அது நகரவில்லை. அதைத்தூக்கி இடக்கையில் பிடித்துக்கொண்டார். வால் நுனியிலிருந்து மெதுவாக வலக்கையின் கட்டைவிரல்-ஆள்காட்டி விரல் இடைவெளியில் அழுத்தி உருவிவிட்டார். அப்போதும் அது ரத்தத்தை உமிழவில்லை. வெறுமே முகம் பிதுங்கியது. துடிதுடித்து மீண்டும் சுருண்டுக் கொண்டது. அதன் வினோத நடத்தை எல்லோருக்கும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. “ம்..இந்திர மதம்” என்றார். யாரோ ஒரு மாணவன் “அப்படின்னா?” என்று கேட்டதும் “யோசிங்க” என்றார். இளங்கோ “இந்திரனோட மதம்..அவர் இந்து தான சார்” என்றான். எல்லோரும் சிரித்தார்கள். மரியா “மதம் ன காம, குரோத, மத, மாச்சரியம்- அந்த மதம், ஒரு மாதிரி பித்து, யானைக்கு பிடிக்குமே அந்த மாதிரி மதம். சரிதானே சார்?” என்றாள். “நெருங்கிட்ட” என்றார். ஜிஷா “சார் இந்திரம்ன கடவுள் மட்டுமில்ல நம்ம புலன்களும் தான..இந்திரியங்கள்னு சொல்வோமே” என்றாள் குறுகுறுப்புடன். “நல்லது. நாளைக்கு வரும்போது முழுசா தேடிப் படிச்சிட்டு வாங்க. காலேல வந்ததும் ஏழாம் நம்பர் ஸ்ரீநிவாசனுக்கு இருக்குற நெஞ்சு கட்டிக்கு அட்டை விடுறோம். சிவானந்தன் அவரை ரெடி செஞ்சு கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு. நீ தான் நாளைக்கு அவருக்கு செய்யப்போற” என்று கூறிவிட்டு சென்றார். காலைத் துடைத்துக்கொண்டு எழுந்த சிவா ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

2
சேஷாத்ரி வெளியே சென்றவுடன் சிவா மூடியிருந்த சாளரங்களைத் திறந்தான். மழை வலுக் குறைந்திருந்தது. எனினும் சீராக தூறிக் கொண்டிருந்தது. வகுப்பறையின் சாளரத்தில் இருந்து கல்லூரியின் மூலிகைத் தோட்டத்தை காண முடியும். ஒரு தொட்டியில் கரு ஊமத்தைப் பூத்திருந்தது. அதன் அடர் ஊதா நிறத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தோள்மீது கைபோட்டு இளங்கோ “ஊமத்தைக்கு பால் ஊத்தி வளக்குற மோத பேமிலி நம்ம பேமிலி தான் மாப்ள” என்றான். இருவருமாக சிரித்துக்கொண்டே கேண்டீனுக்கு நடந்தார்கள். “இன்னிக்கி வெயிட் காட்டுன மாப்ள..லிஜி வெச்சக் கண்ணு எடுக்காம உன்னையே பாத்தாடா..காதலுக்காக காலுல அட்டைப்பூச்சி விட்ட மொத ஆள் நீதாண்டா” என்றான். பிறகு அவர்கள் இருவருமாக மருத்துவமனைக்கு சென்றார்கள். ஏழாம் எண் படுக்கையில் இருக்கும் ஸ்ரீனிவாசனைப் போய் பார்த்தார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் சிகிச்சை அறையில் ஆசனவாயில் மருந்து செலுத்தத் துவங்கியபோது அங்கேயே மயங்கி திடிரென்று ஒருவர் இறந்ததில் இருந்து எந்த சிகிச்சை செய்வதற்கு முன்பும் நோயாளிகளிடம் முழு ஒப்புதல் என சாட்சிகளுடன் சான்று எழுதி வாங்கிக்கொள்வது வாடிக்கை. கைலி கட்டிக்கொண்டு கூடு கட்டிய வெற்று மார்புடன் ஸ்ரீனிவாசன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். சரியாக நெஞ்சு மத்தியில் ஒரு சிறு புடைப்பு.  அன்று காலைதான் ஸ்ரீனிவாசன் மருத்துமனையின் உள்நோயாளி பிரிவில் சேர்க்கப்பட்டார். லேசாக தலை சுற்றல்,  தொண்டை கட்டிக்கொண்டது போல் குரலில் ஏதோ மாற்றம் இவையே அவருடைய அறிகுறிகள். நெஞ்சுகட்டியால் அவருக்கு ஒன்றும் பெரிய தொந்திரவு இல்லை என்றார். அவ்வப்போது முதுகு வலிக்கிறது என்றார். சேஷாத்ரியின் நோயாளிகளை வேறு எவரும் அணுகுவதில்லை. அவருடைய ஆணையும், அவருடைய மாணவர்களின் மேற்பார்வையும் மட்டுமே உண்டு. நாளை அவருக்கு அட்டை விடுதல் சிகிச்சை செய்ய இருப்பதாக தெரிவித்து அதன் முறைமைகளை விளக்கினான். தன் காலில் இன்று அட்டைக் கடித்த தடத்தைக் காண்பித்தான். “தம்பி என்ன சொல்றியோ செய்றேன். எங்க கையெழுத்து போடணுமோ போடறேன். எல்லாம் சார நம்பி வந்தாச்சு. ஆனா எனக்கு இந்த கட்டி ஒன்னும் தொந்தரவு இல்லப்பா. இருந்தாலும் சார் சொல்றாரு..நமக்கு ஒகே” என்று கையெழுத்துப் போட்டு கொடுத்தார். மார்மத்தியில் இருக்கும் புடைப்பை இளங்கோ வெறித்துக்கொண்டே இருந்தான். பின்னர் மெதுவாக அதைத் தொட்டுப் பார்த்தான். துடித்தது. சுதர்சனின் காதில் கிசுகிசுத்தான் “மாப்ள தொட்டுப் பாத்துரு” கயிறு கட்டி இழுபடும் பட்டாம்பூச்சியைப் போல் அந்த புடைப்பு துடித்தமைந்தது. அதன் துடிப்பை வெறும் கண்ணாலேயே பார்க்க முடிந்தது. அறையை விட்டு வெளியே வந்ததும் இளங்கோ “மாப்ள இது ஏதோ கட்டி மாறி தெரியல. ஒரு எக்ஸ்ரே பாப்போமாடா?” என்றான். “சாருக்குத் தெரிஞ்சா அவ்ளோதான். அவரு பாத்துப்பாருடா”. 
இளங்கோ வேகவேகமாக நூலகத்திற்குள் அவனை இழுத்துச் சென்று நவீன மருத்துவ பிரிவில் உள்ள தடித்த டோர்லாண்ட்ஸ் மருத்துவ அகராதியைப் புரட்டினான். அயோர்டிக் அன்யுரிசம் (aortic aneurysm) பக்கத்தை எடுத்துக் காண்பித்தான். பிறகு இருவருமாக அறுவை சிகிச்சை புத்தகத்தைப் புரட்டி அதைப் பற்றி வாசித்தார்கள். அக்குறிப்புகளை புகைப்படம் எடுத்துக்கொண்டான். அவனுக்கு சில்லென வியர்க்கத் துவங்கியது. இருதயத்தில் இருந்து வெளியே வரும் முக்கியமான தமனி வீங்கி இருக்கும் நிலையைத்தான் அயோர்டிக் அன்யுரிசம் என்பார்கள். ஒருவேளை அது வெடித்தால் பெரிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நோயாளி மரணிக்கவும் கூடும். அதில் சின்னக் கீறல் விழுந்தால் கூட ரத்தம் பீய்ச்சி அடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. வேகவேகமாக பேராசிரியர் அறைக்கு ஓடினார்கள். அங்கே சேஷாத்ரியை காணவில்லை. மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்கள். சேஷாத்ரி உள் நோயாளிகளை மேற்பார்வையிட வந்திருந்தார். அவரருகே சென்று தயங்கித் தயங்கி நின்றான். என்ன என்பது போல் நிமிர்ந்து நோக்கினார். “சார் ஸ்ரீனிவாசன் பேஷண்டுக்கு அயோர்டிக் அன்யுரிசமாக இருக்கும்னு இளங்கோ சொல்றான்”. அவன் கைப்பேசியில் எடுத்திருந்த புகைப்படங்களை அவருக்கு காண்பிக்க நீட்டினான். அதை அவர் வாங்காமலே “உனக்கு யாரு வாத்தியார்? நானா, இளங்கோவா?” எனக் கேட்டுவிட்டு அடுத்த நோயாளியை நோக்கி நகர்ந்தார். “சார் நீங்க இன்னொரு தடவ பாத்தீங்கன்னா பரவால்ல. ஒரு எக்ஸ்ரே..இல்லன்ன ஸ்கேன் எடுத்தா நம்ம சந்தேகம் எல்லாம் போய்டும். அதுல துடிப்பு இருக்கு” என்றான். தொங்கிக் கொண்டிருந்த உள்நோயாளி அட்டையை கீழே விட்டுவிட்டு நேராக அவனை நோக்கிச் சொன்னார். “ அது வித்ரதி. பழுக்குற நிலையில பித்தம் இருக்கும். அப்பா துடிப்பும் இருக்கும். சுசுருதர் சொல்லியிருக்கிறத பாரு. போய் முதல்ல அட்டைக்கு வாய் எங்க இருக்கு ஆசனவாய் எங்க இருக்குன்னு கண்டுபிடி..ஏன்னா அத உன்னோட சுசுருதரோ இல்ல டோர்லாண்டோ சொல்லிக்கொடுக்கமாட்டாங்க” என்றார் தீர்க்கமாக. 
“மாப்ள, சத்தம் போடாம அவர ரேடியாலஜி ரூமுக்குள்ள கூட்டிப் போயிடுவோம்.” என்றான் இளங்கோ. சிவா மெளனமாக அமர்ந்திருந்தான். “சொல்றத சொல்லிட்டேன் உன் இஷ்டம்” என அவனை விட்டுவிட்டு அகன்றான். சிவாவிற்கு தலையிலிருந்த நாளங்கள் வலியில் துடித்தன. வீட்டிற்கு சென்றதும் உண்ணாமல் அறைக்குள் உறங்கச் சென்றான். நெற்றியில் பற்றுப் போட்டுக்கொண்டு, வயிற்றுப் புண்ணுக்கு எப்போதும் குடிக்கும் இந்துகாந்தம் கஷாயத்தைக் குடித்துவிட்டு கண்மூடினான். மிகுந்த தாகமாக இருந்தது. அவன் அப்போது கவ்வி எதையோ குடித்துக் கொண்டிருந்தான். வயிறு நிறைந்து அவனுடைய ஆசனவாய் திறந்துக் கொண்டது. அவன் குடிக்கக் குடிக்க அவை ஆசனவாய் வழியாக அப்படியே வெளியேறியது. தலைத் தூக்கி விழித்தபோது அவன் வாய் மயிர் மழித்த கெண்டைக் காலை கவ்வியிருந்தது. தலை சுற்றி உதிர்ந்து கீழே விழுந்தான். படுக்கையை விட்டு எழுந்து கழுவு தொட்டிக்கு செல்லும் முன்னரே வாயுமிழ்ந்தான். விளக்கொளியில் வெள்ளை பளிங்குத் தரையில் அவனுடைய வாந்தி விரவிக் கிடந்தது. அதில் மையமாக இரண்டு சொட்டு புதுக்குருதி தென்பட்டது. வயிறு, தொண்டை, வாய் என எல்லாம் எரிந்தது. ஏதோ பித்துப் பிடித்தவனைப் போல் அந்த நள்ளிரவில் புத்தக அலமாரியில் இருந்து சுசுருத சம்ஹிதையை துழாவி எடுத்தான். பக்கங்களை தன்னிச்சையாக ஓட்டினான். இந்திரமதம் – அட்டைகளுக்கு வரும் நோய். குருதி குடித்துக் குடித்து, பின்னர் அதுவே போதையாக மாறி, குடித்த ரத்தம் செறிக்காமல், வெளியேறவும் செய்யாமல் உள்ளேயே இருக்கும். மெல்ல அட்டை உணவு உண்ணும் நாட்டத்தை இழந்து, உட்சுருங்கி, உணர்வு மரத்து உயிர்விடும். உடல் வியர்த்து குளிர்ந்தது. உறங்காமல் அறையின் நீலநிற இரவுவிளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.     
3
      
ஐந்தரை ஆண்டு முடிந்து பிரிவுபச்சார விழா நிகழ்ந்தது. ஆடல் பாடல் என எல்லாமும் நடந்தது. ஒவ்வொருவராக மேடையில் சென்று நன்றி தெரிவித்தார்கள், நினைவுகளைப் பகிர்ந்தார்கள். சேஷாத்ரி நிமிர்ந்த முதுகுடன் முதல் வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். இளங்கோ சிரிக்க சிரிக்க தான் இடைநீக்கம் செய்யப்பட நிகழ்வை நினைவுகூர்ந்துக் கொண்டிருந்தான். ஒன்றரை வருடங்களுக்கு முன் ஸ்ரீநிவாசனுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நாளன்று சிவானந்தன் கல்லூரிக்கு வரவில்லை. ஏறத்தாழ ஒருவாரம் கடும் காய்ச்சல், வாந்தி. ஆகவே அன்றுகாலை இளங்கோ தனியாளாக ஸ்ரீனிவாசனை உசுப்பி ரேடியாலஜி அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். ஆனால் அங்கே சேஷாத்ரி கையெழுத்து இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என கைவிரித்துவிட்டார்கள். கல்லூரி திறப்பதற்கு முன்பாகவே அவரை வண்டியில் அமர வைத்து தாம்பரத்தில் உள்ள தனியார் சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்ல முனைந்திருக்கிறான். ஆனால் அதற்குள்ளாக சேஷாத்ரி அவர்களை கண்டுவிட்டார். வேறுவழியின்றி சிகிச்சை அறைக்கு வந்தார்கள். சிவானந்தன் இல்லாத சூழலில் வேறு எவரும் முன்வராத நிலையில் சேஷாத்ரியே சிகிச்சையை செய்தார். அட்டையை புடைப்பின் மீது விட்டபோது அது கவ்வ மறுத்ததும். சிறிய கீறலை புடைப்பின் மீது கிழிக்க முயன்றார். லேசாக கீறியதும் ரத்தம் பீரிட்டு சேஷாத்ரியின் முகத்தில் வழிந்தது. ரத்தத்தை நிறுத்துவதற்குள் ஸ்ரீனிவாசன் அங்கேயே மயங்கி விழுந்து உடனே இறந்து போனார். அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்ல முயன்ற இளங்கோ தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு ஒருவாரம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டான். சிவானந்தன் நினைவுகளில் சுழன்றான். அவன் கல்லூரிக்கு திரும்பியபோதே எல்லாம் இயல்பாகி விட்டிருந்தது. அவனுடைய ஆசிரியனின் அணுக்கச் சீடனாக தொடர்ந்தான். இறுதி பரீட்சை முடிந்து பயிற்சி மருத்துவராக இருந்த காலத்தில் சேஷாத்ரியிடம் இருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டான். சேஷாத்ரி எந்த நோய்க்கு எந்த நிலையில் எந்த மருந்து அளிப்பார் என்பதை முன் ஊகிக்கும் அளவிற்கு நெருக்கமாக ஆனான். அவனுடைய ஊகம் பெரும்பாலும் தவறியதும் இல்லை. அப்போது சிவாவின் முறை. “சேஷாத்ரியின் சீடரே வருக, சிவகங்கைச் சிங்கமே வருக, சீக்கு சிவாவே வருக” என கைத்தட்டல்களின் ஊடே பேசத் தொங்கினான். நேராக சேஷாத்ரியை நோக்கி வணங்கினான். “உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும்” என்றான். சேஷாத்ரி புன்முறுவலுடன் சொல்க என்பது போல் கையசைத்தார். “சார், நான் அட்டையின் வாயையும் குதத்தையும் துல்லியமாக கண்டுபிடித்துவிட்டேன். நன்றி. வணக்கம்” என்று திருத்தமாக சொல்லிவிட்டு அரங்கை விட்டு வெளியேறினான். வெளியே பெய்துகொண்டிருந்த மென்மழையில் நடப்பது அவனுக்கு பெரும் ஆசுவாசமாய் இருந்தது. 
௯நந்ட்ரி- தமிழ் இந்து திசை தீபாவளி மலர் 2019. சிறந்த ஓவியங்கள் அளித்த ஓவியர் செல்வத்துக்கும் நன்றி) 

No comments:

Post a Comment