Monday, November 25, 2019

நீலகண்டம்- கார்த்திக் பாலசுப்பிரமணியன்

(நண்பரும் எழுத்தாளருமான கார்த்திக் பாலசுப்பிரமணியன் நீலகண்டம் குறித்து எழுதிய குறிப்பு. நேற்றிரவு தொலைபேசியிலும் பேசினார். நன்றி கார்த்திக். அவருடைய நாவலும் இந்த ஆண்டு வெளியாக இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள். )


இது நாவல்களுக்கான ஆண்டு போலும். இச்சா, ஹிப்பி, பாரிஸ், கடலும் வண்ணத்துப்பூச்சியும், ரூஹ், பிரபஞ்சன் நினைவுப் போட்டியில் வெற்றிபெற்றவை என்று வெளிவந்துவிட்ட நாவல்கள், அறிவிக்கக் காத்திருக்கும் நாவல்கள் என்று கொண்டாட்டமாய்த் தொடங்கவிருக்கிறது இப்புத்தாண்டு. இவ்வரிசையில் நீலகண்டத்தின் வழியே சுனிலும் தன்னை இணைத்துக்கொண்டுள்ளார்.

அன்பின் வழியதைப் பேசும் அதே நேரத்தில் இலக்கியம் மனித மனதின் சிடுக்குகளையும், ஆதி விலங்கொன்றின் எச்சமாய் ஊறித் திளைத்திருக்கும் கசப்பையும் பேசத் தலைப்படுகிறது. அன்பிற்கும் வெறுப்புக்குமான ஊசலாட்டத்தின் நடுவே இடைப்பட்டு தவிக்கும் மனிதர்களின் கதையே நீலகண்டம்.

நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக உருவெடுத்து நிற்கும் குழந்தையின்மை, அதன் பொருட்டு ஆண்-பெண் இருவரிடத்தும் ஏற்படும் மனம் மற்றும் உடல் சார்ந்த அலைக்கழிப்புகள் என்று முக்கியமான இழையைத் தொட்டுத் தொடங்குகிறது நாவல். ஆட்டிஸம் பாதித்தக் குழந்தையினைத் தத்தெடுத்தல், வளர்த்தல் என்று முந்தைய இழையிலிருந்து நகர்ந்து இன்னும் சிக்கலான களத்தினுள் நுழைகிறது. மேலும், ரம்யாவுக்கும் அவள் அம்மாவுக்கும் இடையிலிருக்கும் உறவுச்சிடுக்கு, நாகம்மை வரும் அத்தியாயங்கள், சாயக்காட்டாரின் மகன், முரளி மீரா தம்பதிகள் என்று ஒரு பிரச்சினையின் பல்வேறு கோணங்களை அலசுகிறது இந்நாவல். அதன் பொருட்டு பல்வேறு நிலப்பரப்புகள், காலங்கள், மனிதர்கள், தொன்மம், நம்பிக்கை என்று விரிகிறது.

இத்தனை அடர்த்தியான கதையை சிறிதும் தொய்வின்றி வாசிக்க சுனிலின் மொழியும், அவரின் கதைசொல்லும் முறையும் துணை நிற்கிறது. இது நாவலின் ஆகப்பெரிய பலம். நெகிழ்வும், மிகையுணர்வும் பொங்கிப் பெருகச் சாத்தியமிருந்தும் அவ்விடங்களையெல்லாம் இயல்பாய் அதன் போக்கில் விட்டிருப்பது சிறப்பு.

அன்பின் ஒளியாய், அறத்தின் சுடராய் தன்னை வெளிப்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வுலகம் துரதிர்ஷ்டவசமாய் எல்லோருக்கும் அப்படியிருப்பதில்லை. அதிலும் குறிப்பாக அகத்திலோ புறத்திலோ மெல்லிய பிறழ்வையோ, ஒரு சிறு கோணலையோ கொண்டவர்களிடத்தே இதே உலகம் தன்னுள் திரண்டு நிற்கும் அழுக்கை, இருளை பச்சாதாபமின்றி பாய்ச்சுகிறது. நாவலின் மொத்த சாரமென்று இதில் வரும் கீழ்கண்ட வரிகளைக் கொள்ள முடியும்.

“இவ்வுலகம் நீலகண்டர்களால் ஆனது. அவர்கள் தங்கள் பிரியம் திரிந்து நஞ்சாவதை எப்போதும் காண்பவர்கள். தங்கள் பிரியத்தின், அதன் திரிபின் விளைவுகளை ஏற்பவர்கள். அதன் பொருட்டு பிரியத்தின் முள்ளை எப்போதும் தொண்டையில் பொதித்தவர்கள்”

தான் கொண்ட விலக்கத்தை மீறி வருவின் மேல் செந்திலுக்கு அன்பு முகிழ்க்கும் தருணமும் அதை நோக்கிய பயணமும் நுட்பமாய் வெளிப்பட்ட அளவுக்கு, ரம்யாவுக்கு எற்படும் அன்பின் திரிபுநிலை இங்கு வெளிப்படுவதில்லை. சட்டென்று ஒரு புள்ளியில் நிகழும் அம்மாற்றத்தை வாசகனாய் உள்வாங்கிக்கொள்வதில் பெரும் தயக்கம் மேலிடுகிறது. நாவலின் உச்சமாய் நிகழ வேண்டிய திறப்பு அவ்வாறு நிகழாமல் போவதே இந்நாவலின் மிகப்பெரிய குறை. அதே போல வேதாளம் விக்ரமாதித்தியன் வரும் அத்தியாயங்களும் அதில் சொல்லப்படும் கதைகளின் பரிச்சயத்தால் கதைப் போக்கில் தொய்வை ஏற்படுத்துவதைத் தவிர மேலதிகமாய் எதையும் செய்யாமல் நின்றுவிடுகின்றன. கடைசிப் பக்கத்தில் வந்து சுபம் போட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதில்லாமல் திறந்த முடிவே இன்னும் பொருத்தமாய் இருந்திருக்கும்.

இதுபோன்ற குறைகளையெல்லாம் தாண்டியும் வாசிப்பின் வழியே கண்டடைவதற்கு தன்னகத்தே செறிவான கதையையும், களத்தையும் கொண்டுவந்திருக்கும் நீலகண்டம் தமிழ் நாவல் பரப்பில் ஒரு முக்கிய வரவு.

No comments:

Post a Comment