Wednesday, June 7, 2017

உலகம் குழந்தையாக இருந்த போது - வெரியர் எல்வின்


(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

உலகம்எப்படி உருவானது? ஏன் உருவானது? அதன் அன்றாட இயக்கத்தை தீர்மானிப்பது யார்? இத்தனை நிறங்களில் பூக்கள் ஏன் பூக்க வேண்டும்? புலிகளின் உடலில் உள்ள வரிகள் வந்ததெப்படி? பறவைகளுக்கு சிறகு முளைத்தது எப்படி? இத்தனை விதமான பறவைகளின் குரல்கள் ஏன் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்? மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்? மனிதர்கள் எங்கு செல்கிறார்கள்? வாழ்வின் நோக்கம் என்ன? மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பின் என்ன? மனிதன் பெருவியப்புடன் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறான். காலந்தோறும் கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. விடைகளை நெருங்க நெருங்க மேலும் கேள்விகள் எழுந்து கெக்கலித்து சிரிக்கின்றன. தன்னை மூடியிருக்கும் அஞ்ஞான பிசினை கேள்விகுறி கோடரியை கொண்டு கிழித்து பிளந்து தன்னை புதிதாக கண்டடைய முயன்றுக்கொண்டே இருக்கிறான். கேள்விகளே செயலின்மையில் இருந்து அவனை மீட்கும் மீட்பர். கேள்விகளே அவனை அலைக்கழித்து நொடிந்து உதிர செய்கின்றன.       
இயற்கையை உன்னிப்பாக கவனிக்கும் மனிதனுக்கு வாழ்க்கை மாபெரும் வியப்பு வெளி. அவன் கண்டு, கேட்டு, உணரும் ஒவ்வொன்றும் அவனை மாளாத வியப்பில் ஆழ்த்துகிறது. அழுக்குருண்டையை உருட்டி செல்லும் சின்னஞ்சிறிய பூச்சி முதல் அண்டவெளியின் காரிருளில் அனைத்தையும் தம்முள் ஈர்க்கும் கருந்துளை வரை மனிதன் இயற்கையை வியக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. மனித அகத்திற்குள் கண்மூடி உறங்கும் குழந்தை கண்விழிக்கும் போது மட்டுமே நம்மால் வாழ்வின் ஆச்சரியங்களை ரசிக்க முடிகிறது. இந்த கேள்விகள் நம்முள் உறங்கும் குழந்தைகள் எழுப்பியவை அக்கேள்விகளுக்கான விடை தேடும் முயற்சியில் பரிணமித்து உருவானவை தான் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம் போன்றவை என கூறலாம். குழந்தைமையை மேதமையாக மாற்ற முடிந்தவர்களால் தான் உலக வரலாறு நிரம்பியிருக்கிறது போலும்.


 குழந்தையின் மனம் கற்பனைகளால் நிரம்பியது, தொடர்பற்ற, தர்க்கமற்ற நிகழ்வுகளையும் அதனால் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். தனக்குள் விழித்திருக்கும் குழந்தையின் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்க முயல்பவன் தான் கவிஞன். எல்வின் தொகுத்த இந்த பழங்குடி கதைகளை வாசிக்கும் போது ஆதி மனிதன் ஒரு மகத்தான கவி எனும் உணர்வு மேலிட்டது. ஒரு கவி மனம் மட்டுமே அடைய கூடிய புரிதல்களை, கவித்துவ தர்க்கம் மட்டுமே கொண்டு அணுகப்பட வேண்டிய உண்மைகளை முன்வைத்தவர்கள் பழங்குடிகள். வானமும் பூமியும் ஒன்றையொன்று நேசித்த காலத்தில் அவைகளுக்கு இடையே இடைவெளியே இல்லை. மனிதர்கள் எல்லாம் எலிகளை கொண்டு நிலத்தை உழுதனர். இந்த இட நெருக்கடியால் கோபமடைந்த ஒரு கிழவி தன் துடைப்ப கட்டையை ஒங்க முயல, அதை கண்டு மிரண்ட வான் தொலைதூரத்திற்கு சென்றது என்கிறது ஒரு கதை. வான் பாதையில் சங்கிலியில் பிணைக்கபட்ட காட்டுபன்றிகளின் ரோமம் உரசும் போது ஏற்படும் தீப்பொறி மின்னலாகிறது, அவை ஒன்றையொன்று பார்த்து உறுமுவது இடியாகிறது- இது ஒரு பழங்குடி இனத்தின் நம்பிக்கை. மற்றொரு கதையும் உண்டு. மண்ணில் கொட்டுமேளங்களுக்கு அற்புதமாக நடனமாடிய நங்கைகள் மீது மையல் கொண்டு இறைவன் ஒவ்வொரு முறை மழையை பூமிக்கு அனுப்பும் போதும் அவர்களை மேலிருந்து கீழே வர செய்கிறான். பெண்களின் நடனம் மின்னலாகவும் இளைஞர்களின் கொட்டுமேளம் இடியாகவும் ஒலிக்கிறது. வாழ்வு பெரும் கொண்டாட்டங்களால் நிறைந்தது. இடியும் மின்னலும் இறைவனின் ஆசிகள்.     

வெரியர் எல்வின் மிக முக்கியமான பழங்குடி ஆய்வாளர், காந்தியர், மத்திய இந்தியாவின் வெவ்வேறு பழங்குடி இன மக்களுடன் நெருக்கமாக நேரடி தொடர்பு கொண்டவர், பழங்குடி வாழ்வு தொடர்பாக அரசாங்க கொள்கையை உருவாக்கியவர் என இப்படி எல்வினை பற்றி ஆங்காங்கு வாசித்திருக்கிறேன் ஆனால் அவருடைய எழுத்துக்கள் எதையும் வாசித்ததில்லை. இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த சமயம் அவருடைய ‘ உலகம் குழந்தையாக இருந்தபோது’ எனும் இந்த நூல் கண்ணில்பட்டது.

ராமச்சந்திர குகா முன்னுரையுடன் என்.சி.பி.எச் வெளியீடாக வந்திருக்கும் இந்த 90 பக்க சிறிய நூல் இந்திய பழங்குடி மக்களிடையே புழங்கும் சில கதைகளின் தொகுப்பாகும். எல்வினின் ஆளுமை பற்றிய குகாவின் விவரனையுடன் தொடங்குகிறது இந்நூல். இந்திய பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதில் எல்வின் எவ்வகையில் பங்காற்றினார் என சொல்லிசெல்லும் குகா அதன் வழியாக நவீன இந்தியாவின் கட்டமைப்பில் அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திசெல்கிறார்.

துவக்க காலம், ஆதி மனிதர்கள், கண்டுபிடிப்புகள், பேசும் மிருகங்கள், மாய உலகின் அனுபவங்கள் , உலகின் முடிவு என ஆறு தலைப்புகளில் மொத்தம் முப்பத்தெட்டு கதைகள் கொண்ட தொகுப்பிது. சிறகு முளைத்த யானைகள் முட்டை உடைத்து வெளிவரும் பனி எருமை (yak) என ஆங்காங்கு அமினாஜெயல் பென்சிலில்  தீட்டிய ஓவியங்கள் கதைகளுக்கு உயிரூட்டுகின்றன.நாம் காணும் இயற்கை நிகழ்வுகளின் காரணம் என்னவாக இருக்கும்? ஏழெட்டு வயதுவரை கூட சிவ பெருமானின் ‘உச்சா’ தான் பூவுலகில் மழையாக பொழிகிறது என நம்பிக்கொண்டிருந்தேன். நிலநடுக்கம் ஏன் வருகிறது தெரியுமா? பூமிக்கடியில் சிறைப்பட்டுள்ள இளவரசர்கள் அறைகதவை ஆட்டிப்பார்க்கும் போதெல்லாம் பூமி ஆடுகிறது. பனிப்பாறைகள் உருவானது எப்படி என்பதாவது தெரியுமா? பாழ் வெளியில் பசித்தழுத குழந்தைகளுக்கு இறைவன் மேலிருந்து போட்ட சோற்று உருண்டைகள் உறைந்து பனிப்பாறைகள் ஆகின. நீரில் மிதந்த உலகை இரும்பு தூண்கள் கொண்டு நான்கு மூலைகளிலும் அடித்து நிறுத்திய நங்கா பைக்காவை பற்றியாவது தெரியுமா? 


ஒன்று மற்றொன்றாக உருமாற்றம் கொள்வது, இக்கதைகளில் உள்ள பொதுகூறுகளில் ஒன்று. அவைகளுக்குள் உள்ள தொடர்புகள் அபார கற்பனையால் மட்டுமே விளைந்திருக்க முடியும். கிட்டுங் எனும் கடவுள் தன் வாலை பிடுங்கி தூர வீசினார், அதுவே பனை மரமாக மாறியது. சாமானிய மனிதர்களுடைய வால்கள் எல்லாம் உதிர்ந்து புற்கள் ஆகின. கண்ணில்லாத மனிதனுக்கு காகத்தின் கண்களை பொருத்தினார் கடவுள், மயிலிறகை உருவி இமைகள் செய்தார். ஆமை யானையாக மாறுகிறது, பெண் மானாக மாறுகிறாள், புலி கருப்பு நாயாகவும் பின்னர் மனிதனாகவும் மாறுகிறது. பாம்பு மனிதனாக மாறுகிறது. 


இயற்கையின் இயல்பிற்கு ஏதேனும் ஒரு காரணத்தை கண்டடைவது மற்றொரு பொதுக்கூறு என கூறலாம். முன்பொரு காலத்தில் பெண்களிடமிருந்து தாடியை கடன்பெற்ற ஆடு திருப்பித்தரவில்லை, ஆகவே பெண்களுக்கு தாடி மறைந்தது. மனிதனை போல் பிடில் வாசித்து ஏமாற்றிய குரங்கு வழக்கமாக அமரும் கல்லை சுற்றி தீமூட்டி விட்டுவிட்டதால், அது அங்கு வந்து அமர்ந்த போது அதன் அடிப்பாகம் வெந்துவிட்டது. அது முதல் குரங்குகளின் அடிப்பாகம் வெந்தது போல் காட்சியளிக்க தொடங்கியது. நான்கு ரெக்கைகள் கொண்ட யானைகளால் தொந்திரவுக்கு உள்ளானார்கள் மனிதர்கள். கடவுள் அவைகளை வெட்டி இரண்டை மயிலுக்கு தந்தார், இன்னும் இரண்டை வாழை மரத்திற்கு தந்தார். நீளமான வாழை இலைகளுக்கு அதுவே காரணம். 

குரூபியான அரசகுமாரியை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை, அன்பிற்கு ஏங்கி மனம் வெதும்பி உயிர் துறக்கிறாள். கடவுளிடம் சென்ற அப்பெண் ஒரு வரம் கோருகிறாள் “மண்ணில் வாழ்ந்த சொற்ப காலத்தில் நான் சந்தோஷமாகவே இல்லை. யாரும் என்னை சீண்டவில்லை. இப்போதாவது என்னை யாவரும் விரும்பும் ஒரு பொருளாக மாற்றுங்கள்”. அனைவரும் சுவைத்து மகிழும் புகையிலையாக மாறினாள். மனிதனின் உளவியல் சிடுக்குகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சும் ஆழம் கொண்ட கதை. அபாரமான மனவெழுச்சியை தந்தது. ஜன்மாந்திரமாக அன்பிற்கு, ஒரு தொடுகைக்கு ஏங்கும் ஆன்மாக்கள் தான் நிலபரப்பெங்கும் மனம்வீசி கவர்ந்திழுக்கும் பலவண்ண மலர்களாக மலர்கிறதோ? 


கதைகள் மூலமாக நாம் என்ன அறிகிறோம்? நாம் அறிந்திடாத நமது முகங்களை அறிந்துகொள்ள கூட முடியும். இத்தகைய கதைகள் எந்த சூழலில் உருவாகின? அதன் கலாச்சார பின்புலம் என்ன? நாட்டுப்புற கதைகளுக்கும் பழங்குடி கதைகளுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. பழங்குடி கதைகள் பரிணாமம் கொண்டு நாட்டுப்புற கதைகளாகிறது, அவை மேலும் பரிணமித்து புரானங்களாகவும் செவ்வியல் கதைகளாகின்றன, உருமாறுகின்றன. இப்பரிமாணங்கள் வழியாக மனித அகத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். ஏன் சில கதைகள் மட்டும் பிரம்மாண்டமாக பேரூரு கொண்டன? அதன் மூலம் மனிதன் எதை உணர்த்த முயல்கிறான்? தொன்மங்கள் வழியாக தொல்படிமங்களாக மாற்றி மனிதன் ஏன் இவற்றை பேண வேண்டும்?


உதாரணமாக மாயஜால கதைகளில் மீண்டும் மீண்டும் மான், மாம்பழம் என்று ஏதோ ஒன்று பெண்ணாக மாற்றப்படும் உளவியலை கவனிக்கலாம். ஏதோ ஒரு சிக்கலில் இருந்து தம்மை மீட்கும் சாமானியர்களுக்கு அரசர்கள் தங்கள் மகள்களை திருமணம் செய்துக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். (இது இன்றைய தமிழ் சினிமா காதல் கதைகள் வரை கூட நீடிக்கிறது) இக்கதைகளுக்கான உளவியல் தேவை என்னவாக இருந்திருக்கும்? மனிதனின் கனவுகளும் நிராசைகளும் தான் இக்கதைகளை உருவாக்குகின்றனவோ?     


இக்கதைகள் அபார கற்பனைகளால் உயிர்பெறுகின்றன. அதேப்போல் தேர்ந்த புனைவாசிரியர் போல் எல்வின் இக்கதைகளை காட்சி படுத்துகிறார். மின்மினி பூச்சிகளிடமிருந்து தீயை பெற்றதாக சொல்லும் கதையில் உறைந்திருக்கும் கற்பனை சிலிர்க்க செய்கிறது. சலிப்பாக சென்ற வாழ்க்கையை உயிரூட்ட ஒரு தேவதை கூச்ச உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்த முனைகிறாள். உயிர்வண்டுகளை பிடித்து மனிதர்களுக்குள் செலுத்தினாள். அவ்வண்டு மோவாய்க்கு அடியிலும், விலா பக்கத்திலும் அக்குளிலும் வசிக்க தொடங்கியது. எவரேனும் அவ்விடங்களை தொட முயன்றால் அது அங்கிருந்து ஊர்ந்து ஓடும். கூச்சமும் சிரிப்பும் பிறக்கும். உடலுக்குள் ஊரும் பூச்சிகளால் கூச்சம் ஏற்படுகிறது என்பது அற்புதமான கற்பனை.


மனிதன் இயற்கையை உற்று கவனித்து அதன் தொழில்நுட்பங்களை உள்வாங்கி தனக்கு தேவையானவற்றை உருவாக்குகிறான். சக்கரமும், தீயும் உருவாக்கிய அந்த அநாமதேய பழங்குடி மூதாதையர் என்றும் நம் வணக்கத்துக்குரியவர். யானையின் கால்கள் போல் வலுவான மரத்தூண்உருவாக்கி, பாம்பை போல நீளமான, வலுவான கழிகளை கொண்டு, எருமை எலும்பு கூட்டை போல் குறுக்கு கழிகளை கட்டி கூரையை உருவாக்கி, மீனின் செதில்களை போல் இலைகளை கொண்டு கூரையை மறைத்தால் ஒரு வீட்டை உருவாக்கலாம். சுத்தியலும் குறடும் உருவான கதையை சொல்லும் போது யானையின் கால்களில் மிதிபட்டு பொருட்கள் நசுங்குவதை கவனிக்கிறான். அதை கொண்டு கல்லில் சுத்தியலை செதுக்கி உருவாக்குகிறான். நீர்நிலையில் அவனை கவ்வும் நண்டின் கொடுக்கை நினைவில் கொண்டு குறடை உருவாக்குகிறான். பச்சை மாமிசம் தின்றுக்கொண்டிருந்த மனிதன் எப்படி தீயை கண்டுகொண்டு ருசியாக உண்ண தொடங்கினான் என்பதை பற்றி விளக்கும் கதை ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு தர்க்கப்பூர்வமானது, அறிவியல்பூர்வமானது. காட்டு தீயில் கருகி இறந்த ஓர் உயிரின் மீது விரல் பதிகிறான், வழுக்கிக்கொண்டு உள்ளே புதைகிறது. சூடு பொறுக்க முடியாமல் வாயில் வைத்து குளிர்விக்கிறான். அதன் ருசியை கண்டுகொள்கிறான். அடுத்து தோலுடன் ஒரு முயலை சுட்டு உண்கிறான் தோல் சுருங்கி தீயில் விழுந்து நெருப்பை அணைத்துவிடுகிறது. அதன்பின்னர் தோலை உரித்து உண்ண அறிகிறான். மழைகாலத்தில் சேற்று காலுடன் குளிர்காய வருகிறான். நெருப்பின் சூட்டில் மண் இறுகுகிறது. அதை கவனித்த அவன் மண்ணை கொண்டு மண்பாண்டங்கள் செய்கிறான், துல்லியமான அறிவியலின் வழி. இது ஒரு பழங்குடி கதை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஒருவேளை இது உண்மையாகவும் இருக்கக்கூடும். இப்படித்தான் மனிதன் ஒவ்வொன்றின் பயன்பாட்டையும் கண்டுகொண்டானோ?    

இறுதி அத்தியாயம் மரணம் எப்படி ஒரு வரமாக வந்து மூப்பின் அவஸ்தைகளை முற்றுக்கு கொண்டுவந்தது என்று சொல்கிறது. நூலை வாசித்து முடிக்கையில் மனமெங்கும் புதிய கேள்விகளால் திமிலோகப்படதுவங்கின. மனிதனுக்கு பணிக்கப்பட்ட கடமை என்பது கூட தனக்கான கேள்வியை மீட்டெடுத்து அதற்கான விடையை கண்டடைவது தான் போலும். பல நேரங்களில் இத்தகைய கண்டடைதல்கள்  அந்தரங்கமானது அது நமக்கான விடை, நமக்கான உண்மை. அது பிறர் புரிந்துகொள்ள முடியாத ஒரு கவித்துவ தரிசனமாக இருக்கலாம், பிறருக்கு உணர்த்த முடியாத ஆன்மீக அனுபவமாகவும் இருக்கலாம், நிரூபணம் கோரும் அறிவியல் கோட்பாடாகவும் இருக்கலாம்..   அடுத்தடுத்து வீழும் அடுக்கு சீட்டுகளின் சங்கிலி தொடர் நிகழ்வு போல் ஒவ்வொரு கேள்வியும் மற்றொன்றுக்கு இட்டுச்செல்கிறது. மண்ணில் தவழ்ந்த ஆதி மனிதனின் முதல் கேள்வி என்னவாக இருந்திருக்கும்? ‘நான் யார்’ என்று அவன் கேட்ட அந்த கேள்விக்கான விடையை கண்டடையும் வரை மனிதன் ஓயமாட்டான். ஒருவகையில் அந்த ஒற்றை கேள்வி விடையை கண்டுகொள்ள வழிதேடி பெற்றெடுத்த கணக்கற்ற பிள்ளைகள் தான் நாம். 


உலகம் குழந்தையாக இருந்த போது
வெரியர் எல்வின் 
நாட்டாரியல், மொழியாக்கம், தமிழ், 
NCBH வெளியீடு.

No comments:

Post a Comment