Tuesday, June 13, 2017

சகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

சுவாமி விவேகானந்தர் குறித்து ஆழமாக இதற்கு முன்னர் நான் எதையும் வாசித்ததில்லை. ராமகிருஷ்ண மடத்தை சார்ந்த நடமாடும் புத்தக விற்பனை நிலையம் அவ்வப்போது எங்கள் பகுதியை கடந்து செல்லும். நானும் அது வரும்போதெல்லாம் சென்று புத்தகங்களை நோட்டமிட்டு வருவேன். அப்படி அண்மையில் அந்த வண்டி வந்திருந்த சமயத்தில், 11 பகுதிகள் கொண்ட விவேகானந்தரின் மொத்த எழுத்துக்கள் அடங்கிய ஞான தீபம் தொகுப்பு கண்ணில் பட்டது. மிக குறைந்த  விலையில் அவை கிட்டியது எனினும் முழுமையாக வாசிக்க நேரம் கிடைக்குமா என்றொரு ஐயம் எனக்கு. ‘சகோதர சகோதரிகளே’ எனும் இந்த 642 பக்க நூல் எழுபத்தைந்து ரூபாய்க்கு கிடைத்தது. ஒட்டுமொத்த தொகுப்பில் இருந்து முக்கியமான தேர்ந்தெடுத்த பகுதிகளை கொண்ட நூல். விவேகானந்தர் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட உரையாடல்கள், கவிதைகள் என பல வகையான எழுத்துக்களை இத்தொகுப்பு தாங்கி வெளிவந்துள்ளது.  





எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு விவாதத்தின் போது சொன்னார், உலக மக்களை நோக்கி ஓங்கி ஒலித்த எத்தனையோ இந்திய குரல்களில் இருவரின் குரல்கள் மட்டுமே உலக மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது, இன்றும் மதிக்கப்படுகிறது. அவ்விரண்டு குரல்களும் சத்தியத்தை தாங்கி சென்றன. உலகெங்கும் அமைதியையும் அன்பையும் நிலைநாட்ட விரும்பின. இன்றும் அவ்விரு குரல்களின் முக்கியத்துவம் காலப்போக்கில் கூடிக்கொண்டிருக்கிறதே அன்றி குறைந்தபாடில்லை.  ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். இந்த பின்புலத்தில் இருவரின் சிந்தனைகளும் பலவகையில் பின்னி பினைவதை காண முடிகிறது. 

காந்தி நேரடியாக விவேகானந்தர் குறித்து எழுதியதும் பேசியதும் மிகக்குறைவு தான். ஆனால் ஒரே சிந்தனை அலையின் வெவ்வேறு புள்ளிகள் அவர்கள் எனும் எண்ணம் இந்த புத்தகத்தை வாசிக்கையில் ஏற்பட்டது. உதாரணமாக காந்தி ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்த மதம் உண்டு என்கிறார். விவேகானந்தர் மத உட்பிரிவுகள் மற்றும் அவைகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகள் குறித்து ஏறத்தாழ இதே கருத்தை முன்வைக்கிறார். இந்தியாவின் அரசியல் கூட மதத்தின் வாயிலாகவே பேசப்பட முடியும் என்கிறார் சுவாமிஜி, காந்தியும் இதே கருத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். மதவாதத்தையும், அதி தீவிர மத பற்றையும், அதை கொண்டு மக்களிடம் பிளவேற்படுத்துவதையும் விவேகானந்தர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து எழுதுகிறார். கர்ம யோகத்தை பற்றி எழுதும் போது – ‘பலன் அளவிற்கே பாதையும் முக்கியம்’ என்கிறார். காந்தியின் வாழ்க்கை செய்தி என இதை சொல்லலாம்.  இவர்கள் இருவருக்கும் இருக்கும் கருத்தொற்றுமை பற்றி விரிவாக வேறோர் கட்டுரை எழுதப்பட வேண்டும். 

ஒரு அந்நிய தேசத்திற்கு சென்று அங்கு கூடியிருக்கும் மக்களை நோக்கி சகோதர சகோதரிகளே என்று அழைத்தார் விவேகானந்தர். இந்த சொற்கள் ஏன் அத்தனை மனிதர்களையும் அன்று நெகிழ செய்தது? இவை வெறும் சொற்கள், வெறும் சொற்களுக்கு வலிமை ஏதுமில்லை. அந்த சொல்லை உதிர்க்கும் ஆளுமையின் வீச்சு, அந்த சொல்லை தாங்கி செல்லும் சத்தியத்தின் வலிமையும் தான் அத்தனை உள்ளங்களையும் கொய்தது. ஆன்ம ஒளியால் சுடர்விட்டுக்கொண்டிருந்த ஒரு ஆளுமையின் இருப்பு, சொற்களை காட்டிலும், அவர் உதிர்க்கும் கருத்துக்களை காட்டிலும் அதிக விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. அன்புக்கும் தொடுகைக்கும் ஏங்கி நிற்கும் ஒரு மக்கள் திறளின் முன் நின்று அவர் உதிர்த்த அந்த சொற்கள்  அவர்களின் இதயத்தை தொட்டிருக்கும். 

நூறாண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர்  பேசியதும் எழுதியதும் இன்றும் பரவலாக வாசிக்க படுகிறது. இன்று அதன் முக்கியத்துவம் என்ன?. அவர் வாழ்வின் நிரந்தரமான, எக்காலத்திற்கும் உரிய, ஒட்டுமொத்த மானுட குலத்திற்கு உரிய சிக்கல்களை நோக்கி பேசுகிறார். காலமும் இயற்கையும் உந்தி தள்ளி விளையாடும் பந்து தானா மனிதனின் வாழ்க்கை? வாழ்வு இன்பமயமானதா? துன்பமயமானதா?     

விவேகானந்தர்  நம்மை நோக்கி சொல்கிறார்- இன்பமும் துன்பமும் மாறி மாறி ஓயாது அடிக்கும் பேரலைகள், அதில் உங்களை இழந்து விடாதீர்கள், நிமிர்ந்து நில்லுங்கள், துணிந்து செல்லுங்கள், நீங்கள் ‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகள்’, சிதிலமடையும் உடலில்லை, குழப்பியடிக்கும் எண்ணங்களும் இல்லை, மரணம் துளைக்காத ஆன்மா நீங்கள். தொடக்கமும் முடிவும் இல்லாத பரம்பொருளின் வார்ப்பு நீங்கள். ஆற்றலை உணருங்கள், ஆற்றலே வாழ்வு, அதுவே நம் பலம், பலவீனம் மரணம். செயலற்று முடங்குவதை காட்டிலும் உணர்ச்சி கொந்தளிப்புடன் இருப்பது மேல். இக்கணமே புறப்படுங்கள். 

இந்த வாழ்க்கை சுமை அல்ல, நாம் மானுடர்களாக பிறந்து வாழ்வது பாவக்கடன் தீர்ப்பதற்காக அல்ல. நாம் ‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகள், நமக்கு வாழ்வெனும் வரம் வாய்த்திருக்கிறது. எத்தனை மகத்தான செய்தி, இருண்ட மன குகைக்குள் சோர்ந்து சோம்பி கிடக்கும் நம்மை ஒளியை நோக்கி அழைத்து செல்லும் எழுச்சி மிகுந்த வாசகங்கள். விவேகானந்தர் இளைஞர்களுக்கு விட்டுசெல்லும் மிக முக்கியமான செய்தி என்று ஒன்றை சொல்லவேண்டும் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும், 'துணிவு கொள்'.
    
நாம் வெற்றியை எப்படி புரிந்துகொண்டுள்ளோம்? எதை நாம் வெற்றி என கொண்டாடுகிறோம்? மீண்டும் மீண்டும் உலகியல் வெற்றியை மட்டுமே வெற்றியாக கருதும் மனபான்மைக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த தேசம் ஆன்மீகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அதுவே இந்த தேசத்தின் ஆன்மா என்கிறார். அது வீழும் போது இந்த தேசம் வீழ்ந்துவிடும் என்கிறார். இன்னும் சொல்வதானால் நம்மிடம் இருக்கும் உடைமைகளை கொண்டு நாம் வெற்றியாளரா என்பது தீர்மானிக்கப்படுகிறது. மிக நுட்பமாக நோக்கினால் இதன் பின்புள்ள அரசியல் நமக்கு புலப்படக்கூடும், ஒருவகை நுகர்வு பின்னல் நம்மை சுற்றி பின்னப்படுவதை நம்மால் உணரமுடியும். அஜய், ஜார்ஜ் சாண்டர்ஸ் பற்றி எழுதிய கட்டுரையில் இதை விரிவாக விளக்கி இருப்பார். எண்பதுகள் வரையிலும் கூட இந்தியாவில் உடமைபெருக்கம் மகிழ்ச்சியுடன் நேரடியாக தொடர்புகொண்டதாக இல்லை. மேற்கின் சமூக அமைப்பிற்கும் கிழக்கின் சமூக அமைப்பிற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடாக இதை கொள்ளலாம். மகிழ்ச்சியை கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை கணக்கிட வேண்டும் என காந்தி சொன்னார். பொருளியல் வல்லுநர் ஷுமாக்கர் அவருடைய பௌத்த பொருளியல் கட்டுரையில் விரிவாக இந்த புள்ளியை வளர்த்து எடுக்கிறார். துறவு மனப்பான்மை ஓங்கி இருந்த அன்றைய இந்தியாவை பற்றி சுவாமி விவேகானந்தர் விவரிக்கிறார். பொருள் குவிப்பு இல்லாதவரையும், உடமைகளை துறந்த தூய மனம் கொண்ட துறவியையும் இந்த சமூகம் வெற்றியாளராகவே காண்கிறது என்கிறார். அதைவிட மிக முக்கியமான விஷயத்தை சொல்கிறார், இந்த இருமையை மறுதலிக்கிறார் பொருளீட்டவும் முடிந்து ஆன்ம வேட்கையையும் பின்தொடர்ந்து வாழ முயல வேண்டும் என்கிறார். 

விவேகானந்தரை ஒரு சிந்தனையாளராகவும் நாம் அணுகலாம். சமநிலை – சீர்குலைவு பற்றி அவர் சொல்லும் கருத்துக்கள் எனக்கு மிக முக்கியமானதாக பட்டது. இரண்டு பிரி முறுக்கு கயிற்றை போல், ஒரு பக்கம் திரிகள் பிரிகின்றன, மறுபக்கம் அவை இறுகிக்கொண்டே இருக்கின்றன.  முற்றிலுமான சமநிலை என்பது அழிவில் மட்டுமே சாத்தியம் என்கிறார் அவர். பிரபஞ்ச இயக்கத்தின் பன்முக தன்மையை, நன்மை தீமை விதிகளுக்கு அப்பாற்பட்டு புரிந்துகொள்ள முடியும். நன்மையையும் தீமையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு அத்தியாவசியமானது எனும் புரிதல் மிக முக்கியமானது, மிகவும் அடிப்படையானதும் கூட. ஏனெனில், இந்த விளையாட்டை புரிந்து கொள்வதன் மூலமே நாம் வெறுப்பை விட்டு வெளிவர முடியும். எதிர்தரப்புகள் எதிரிகள் அல்ல, அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, மாறாக ஒரு விளையாட்டின் இன்றியமையாத எதிர் தரப்பு, அல்லது ஒரு செயலின் எதிர் செயல் என்று புரிந்துகொள்ள முடியும். 

சக்கரத்தின் ஆரங்கள் அனைத்தும் விளிம்பில் இருந்து ஒற்றை மையத்தை நோக்கி நீள்கின்றன. அதை போல் உயர்கள் அனைத்துமே அதன் போக்கில் வெவ்வேறு ஆரங்கள் வழியாக ஊர்ந்தும் ஓடியும் உருண்டும் விடுதலை எனும் மையத்தை நோக்கியே நகர்கின்றன என்கிறார். விடுதலை அனைவருக்கும் உண்டு. ஒருமை நிலையை கண்டடைவதே அறிவியலின் நோக்கம் என்கிறார், காரண காரியங்களில் அந்த இறுதி காரணத்தை அறிவதை நோக்கியே அறிவியல் பயணப்படுகிறது. ஒருவகையில் ஆன்மீக சாதனைகளும் வேறு வகையாக இதே ஒருமை நிலையை நோக்கியே  பயணப்படுகிறது என்று தோன்றுகிறது. தூலத்தில் இருந்து நுண்மையை நோக்கிய நகர்வு முக்கியமானது, நுண்மையே ஆற்றலின் இருப்பிடம் என்கிறார். இயற்கையை கடந்து செல்லும் முயற்சியே மதம் என்கிறார். பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் எதிர் எதிர் சக்திகளின் முரணியக்கத்தால் உருவாபவை. மதமே மனிதனின் வாழ்வின் மிக உயர்ந்த தளம், ஆகவே அங்கும் இந்த முரணியக்கம் அதி உக்கிரமாக செயல்படும். மனிதன் அறிந்த அதிதூய அன்பு நிலை அங்கிருந்து தான் வந்தது, மிகக்கொடூரமான வெறுப்பும் அங்கிருந்து தான் வரும் என்கிறார். மத பூசல்களை புரிந்துகொள்ள  இது மிக முக்கியமான சிந்தனை சரடாக தென்படுகிறது. ஆங்காங்கு இப்படி பல சிந்தனை தெரிப்புக்களை காண முடிகிறது.   

அக்காலத்தில் பல மத சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவில் தலையெடுத்தன. சில சட்டகங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு ஏற்ப இந்து மதத்தை வெட்டி வடிவம் அளிக்கும் முயற்சிகள் நடந்தேறின. வெகு ஜன மக்களின் வழிபாடுகளை புறக்கணித்து உயர் தத்துவ தளத்தை மட்டுமே தூய்மையான இந்து மதம் என கொண்டாடும் ஒரு போக்கு இருந்த காலகட்டத்தில், விவேகானந்தர் கடுமையாகவே விமர்சிக்கிறார் “அறிஞர்கள் இழைக்கும் கொடுமை, பாமரர் செய்யும் அநீதியைவிடப் பயங்கரமானது” என்கிறார். உணவு கேட்டு வருபவனுக்கு கற்களை கொடுப்பதற்கு சமம், பசித்த மனிதனுக்கு தத்துவங்களை கொடுப்பது என்கிறார். நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் பலவற்றை மனிதன் சோதித்து பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆட்சி முறையில் இருந்து , ஆன்மிகம் வரை இங்கு பலவற்றை முட்டி முயன்று சோதித்து கொண்டிருக்கிறான். சிலவற்றை கண்டடைந்தும் இருக்கிறான். இங்கு ஒரு மரபு இருக்கிறது. ஒவ்வொரு தேசத்திற்கும் இருக்கிறது. உயர்வு தாழ்வு எனும் பேதங்கள் அங்கு முக்கியமல்ல. அந்த மரபை நெருங்கி அறிவதன் மூலமே நாம் கனவு காணும் எதிர்காலத்தை நோக்கி முன்நகர முடியும். நம் மரபை, நம் வரலாறை சரிவர அறியாமல் நம் மன்னுக்குகந்த எந்த விஷயத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. சுவாமி நம் மரபில் நின்றுகொண்டு எதிர்காலத்தை நோக்கி பேசுகிறார். 

 நூலின் இறுதி பகுதியில் விவேகானந்தர் எழுதிய கவிதைகளின் மொழியாக்கத்தை பதிப்பித்துள்ளனர். அக்கவிதைகள் நமக்கு முற்றிலும் வேறு ஓர் விவேகானந்தரை காட்டக்கூடும். தாயை காணாமல் பொறுமையிழந்து அரற்றி அழும் குழந்தையின் குரல் அதில் ஒலிக்கிறது. 

நீரிற் குமிழி போல்மிதக்கும் 
                நிலத்தில் அமைதி எனக்கில்லை!
சீர்இல் வெறுமை உரு, நாமம்,
                         சென்மம், இறப்பொரு பொருட்டில்லை 

புறத்தே அமையும் உருவுக்கும் 
            பொலியும் பெயர்க்கும் அப்பாலே 
விரைந்து செல்ல உள்ளத்தில் 
                       விருப்பம் எத்தனை கொண்டிருந்தேன்

ஆஆ! வாசல் கதவங்கள் 
             அடைத்திராமல் திறந்துவிடு 
ஆமாம்! எனக்கு நிச்சயமாய் 
                      அவைகள் திறக்கப்பட வேண்டும் 


- என் நாடகம் முடிந்தது 


மலைமேலே, பள்ளத்தே, மாமலையின் தொடரினிலே,
கலைநிறையும் கோயிலிலே, கவின்பள்ளி வாசலிலே,
கிறிஸ்தவநற் சபையினிலே கீர்த்த்திமிகு மறைகளிலே,
சிறப்புயரும் பைபிளிலே, சீரார் குரான் அதிலே 

ஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன்
இருளடர்ந்த பெருங்காட்டில் இழந்தவொரு குழந்தையைப்போல் 
யார் துணையும் இல்லாமல் அலறித் துடித்திருந்தேன் !

-கடவுளைத் தேடி   

வாசித்து முடிக்கையில் அவை எனக்கான கவிதைகள் என்று தோன்றின. யுகம் யுகமாக கடந்து வந்து கடைசி வாயிற்கதவை தட்டிக்கொண்டு காத்துக்கொண்டிருப்பவனின் குரல். விரக்தியும் நம்பிக்கையும் முறையிடலும் பொறுமையின்மையும் மாறி மாறி ஒலிக்கும் குரல். அவ்வரிகள் என்னை அதிர செய்தன. விவேகானந்தர் பக்தி யோகத்தை பற்றி பேசும்போது ஒரு கதை சொல்கிறார், உண்மையான ஆன்ம வேட்கை கொண்டவன் எப்படி இருப்பான் எனில், ஒரு திருடனைப்போல், அவன் அடைந்து கிடக்கும் அறைக்கு அடுத்த அறையில் பொற்குவியல் குவிந்து கிடப்பதை அவன் அறிந்தான் என்றால் எத்தனை பதைபதைப்புடன் இருப்பானோ அப்படி இருப்பான். அவனுக்கும் அந்த புதையளுக்கும் இடையில் உள்ள அந்த ஒற்றை சுவரை கடக்க எப்பாடு பட்டாவது முயல்வான். விவேகானந்தரின் கவிதை வரிகளில் நான் அந்த பதபதைப்பை காண்கிறேன். அவருடைய கவிதைகளை பற்றி மேலும் விரிவாக எழுத வேண்டும். 

இந்த நூல் பல வகையிலும் மிக சிறந்த திறப்புகளை கொடுத்தது, ஏற்கனவே துளிர்ந்த சில நம்பிக்கைகள் திடப்பட்டது, மேலும் பல எண்ணங்களை கேள்விக்கு உள்ளாக்கியது, இன்னும் வேறு தளங்களில் மேலதிக வாசிப்பையும் சிந்தனையையும் கோருகிறது. இதற்கு மேல் நான் வேறென்ன ஒரு நூலில் எதிர்பார்க்க முடியும்? இந்த நூலை பற்றி மிகக்குறைவாக சொன்ன உணர்வே ஏற்படுகிறது. மிக விரிவாக இந்நூலை பற்றி எழுதவேண்டும். மொழிபெயர்ப்பாளர் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் மிக சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். முழு தொகுப்பையும் வாங்கி படிக்க வேண்டும் எனும் எண்ணம் மேலிடுகிறது. இணையத்தில் கொட்டி கிடக்கும் மேற்கோள்கள் மட்டுமல்ல சுவாமி விவேகானந்தர், அதையும் தாண்டி அவருடைய ஆளுமையின் வீச்சை புரிந்துகொள்ள இந்த நூல் நமக்கு உதவக்கூடும். 

சகோதர சகோதரிகளே 
சுவாமி விவேகானந்தர் 
ஆன்மிகம், தமிழ் 
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

No comments:

Post a Comment