Sunday, June 25, 2017

கலங்கிய நதி - பி.ஏ.கிருஷ்ணன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

“பாராளுமன்றம் என்பது ஒரு தேசம் விளையாடும் விலை உயர்ந்த விளையாட்டு பொம்மை”. இங்கிலாந்தின் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கடுமையாக விமர்சித்து காந்தி 'இந்து ஸ்வராஜ்', நூலில் எழுதிய வாசகம்தான் இது. அரசு இதயமற்ற ஒரு யந்திரம், அதன் வன்முறை பன்மடங்கு வீரியமுள்ளதாக, கட்டுப்படுத்தப்பட முடியாததாக  இருக்கும் என்றார் காந்தி. பி.ஏ.கிருஷ்ணனின் 'கலங்கிய நதி' வாசித்து முடிக்கையில் காந்தியின் தீர்க்கதரிசனமே நினைவுக்கு வந்தது.  விரக்தியில் பெருமூச்சுத் விடுவதை  தவிர வேறெதுவும் செய்வதற்கில்லை.

 



பி.ஏ.கிருஷ்ணனின் இந்த நாவல் நதிக்கரையோரம் சஞ்சலத்தோடு காத்துக் கொண்டிருப்பவனின் கதை.  நதியின் ஆழமும் வேகமும் குளிரும் கலக்கமும் அவனை பயமுறுத்துகின்றன. பயமும் நிச்சயமின்மையும் மேலிட உரிய தருணத்திற்காகக் கரையில் அலுப்புடன் காத்துக்கொண்டே இருக்கிறான். மாற்றத்திற்காக ஏங்கி, செயல்படத் துடிக்கும் மனதிற்கும் அலுப்பூட்டும் அன்றாட நிதரிசன வாழ்விற்கும் இடையில் நடக்கும் போராட்டமே கலங்கிய நதி.


காந்தி கலங்கிய நதி நாவல் முழுவதும் ஏதோ ஒரு வகையில் தொடர்ந்து வருகிறார். நாவல் தொடங்குவதும் முடிவதும் காந்தியில்தான்.  கருவேலம் முட்களில் சிக்கிய நூலாடையை கவனமாக எடுப்பதுபோல்,  சந்தேக முட்களில் சிக்கித் தனக்குள் தவித்து கொண்டிருக்கும் காந்தியை மீட்கும் முயற்சியே இந்த நாவல் என்று தோன்றுகிறது. 

டெல்லியில் உயர்பதவியில் உள்ள நேர்மையான மத்திய அரசு ஊழியன் ரமேஷ் சந்திரன், மகள் ப்ரியாவின் மறைவிற்குப் பின்னர், அஸ்ஸாமுக்கு மாற்றலாகிப் போகிறான். அவனுடைய நிறுவனத்தில் முதுநிலை பொறியாளராக பணிபுரியும் கோஷ் அஸ்ஸாம் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டு அவர்களின் பிணைக் கைதியாகிறான். அவனை மீட்க தனியொருவனாக போராடுகிறான் ரமேஷ் சந்திரன். இதற்கிடையில் அங்கு நடந்த ஊழல் ஒன்றையும் அவன் தோண்டியெடுக்கிறான். விபத்தில் சிக்கிச் செயலிழந்து மீள்கிறான். தன் வாழ்க்கையைப் புனைவாக வடிக்கிறான். நாவலுக்குள் நாவல் என கதை சிலந்தி வலையாக விரிகிறது. 

மாறும் சூழல்களுக்கேற்ப ஒவ்வொரு மனிதனும் கற்பனையில் தன் ‘லட்சிய நானை’ உருவாக்கிக் கொண்டேயிருக்கிறான். அவனது ‘யதார்த்த நான்’ எப்போதும் எட்டமுடியாத உயரத்தில் உள்ள தன்னுடைய ‘லட்சிய நானை’ நோக்கிய தொடரும் பயணத்தில்தான் இருக்கிறது. ரமேஷ் சந்திரன் தன் நாவலின் வழியாக அந்தத் தனது லட்சிய நானை அடைய முயல்கிறான். தான் எழுதும் நாவலில் தனக்குத் தானே ஒரு காவிய முடிவையும் எழுதிக் கொள்கிறான். சுவாரசியமற்ற அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் கற்பனை நிரப்பி அவற்றைப் புனைவாக்கி, தானறிந்த உண்மையைத் தனது அந்தப் படைப்பைக் கொண்டு உணர்த்துவதில் ஒரு எழுத்தாளன் வெற்றி பெறும் இத்தகைய தருணங்கள் அற்புதமானவை. 

அமைப்புக்கு உள்ளிருந்தெழும் கலகக் குரலாகவே நாவலில் பி.ஏ.கிருஷ்ணனின் குரல் ஒலிக்கிறது. நாவலின் முன்னுரையில் அவர் இவ்வாறு எழுதுகிறார்: “உலகத்தின் மிக மோசமான முட்டாள்களின் வரிசையில் நான் நிறுத்தப்படலாம். ஆனால் நான் சொல்ல விரும்புவதைச் சொல்லித்தான் ஆக வேண்டும்.” உயர்மட்ட அரசு அலுவலகங்களின் செயல்பாட்டில் உள்ள அபத்தங்களைத் தொடர்ந்து சுட்டிக்காட்டிய வண்ணமிருக்கிறார். இந்திய அதிகார வர்க்கம் உண்மையில் மக்களிடமிருந்தும் மக்கள் பிரச்சினைகளிடமிருந்தும் எத்தனை தூரம் அந்நியப்பட்டு கிடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. உதாரணமாக சந்திரன் தன் துறைச் செயலருக்கு தேநீர் சூடாகக் கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று எழுதும் குறிப்பு ஒரு அங்கத உச்சம். அதேபோல் எந்தெந்த கூட்டங்களுக்கு எந்தெந்த பருப்புகள் அவற்றில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்  என்பது குறித்தான விவாதம் மற்றொரு அபத்தத்தின் உச்சம்.

ரமேஷ் சுகன்யா உறவும், ப்ரியாவின் இழப்பு அவர்கள் உள்ளத்தில் ஏற்படுத்தும் மாற்றங்களும் நுட்பமாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ப்ரியாவின் மரணத்திற்கு ரமேஷ் மட்டுமே காரணம் எனும் நிலைப்பாட்டிலிருந்து மாறி  சுகன்யாவும் அதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்  தருணம் மிக முக்கியமானது. மரணமடைந்த ப்ரியா தவிர்க்க முடியாத நினைவுகளின் மெல்லிய புகைமூட்டமாக நாவல் முழுதும் மீண்டும் மீண்டும் வெவ்வேறு சூழலில் வந்துகொண்டே இருக்கிறாள். ரமேஷ் –சுகன்யாவின் வாழ்க்கையை இமை அணையாத, குத்திட்ட கண்களுடன் அவள் தொடர்ந்து வருகிறாள் என்ற உணர்வில் நாம் வாசித்துச் செல்கிறோம்.

தற்போதைய அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநில கலவரங்களின் பின்னணியில் இந்த நாவலை வாசிக்கும்போது பல புதிய திறப்புகள் தென்படுகின்றன. வங்கதேச அகதிகள், இடப்பெயர்வுகள், தனி நாடு கோரிக்கைகள் என அவர்களுக்கான நியாயங்களையும் அதை அரசு சரிவர எதிர்கொள்ள தவறுவதையும் கதைப்போக்கினூடே தொட்டுச் செல்கிறார் கிருஷ்ணன். அஸ்ஸாம் தீவிரவாதிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையுள்ள பரஸ்பர  புரிதல் மற்றும் எதிரெதிர் தரப்புகள் செய்து கொள்ளும் சமரசங்கள்,.. எந்த எதிர்வினையும் ஆற்றாமல் சிக்கல்களை ஆரப்போடுவதே எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்கும் என்று  குருட்டுத்தனமாக நம்பும் அதிகார வர்க்கம்... அரசாங்க யந்திரத்தின் சோர்வளிக்கும் இயங்கு முறையை நமக்குத் தெளிவாக காட்டுகிறார் பி.ஏ.கே.

காந்தி பக்தரான ரமேஷின் தந்தை பக்ஷிராஜன் சுதந்திர போராட்ட களத்தில் தன் லட்சிய புருஷரான காந்தியுடன் கைகோர்த்துப் போராட வேண்டும் எனக் கனவு கண்டவர். ஆனால் இறுதிவரை முடிவெடுக்க தயங்கி எதிலும் பங்குபெறாமல் வாழ்ந்து அவர் காண விரும்பிய ராஜ் காட் காந்தி சமாதியை கூடக் காண முடியாமல் வயோதிகத்தால் விழுங்கப்பட்டு மறைகிறார், சாம்பலாகி ராஜ்காட்டின் பசும்புற்களுக்குதான் உரமாகிறார். 

ரமேஷ் தன் தந்தையைப் போல் தானும் ஆகிவிடுவோமோ என்று பயப்படுகிறார்.  செயலின்மை கரிய ஈரக் கம்பளமாய் இறுக்கி அச்சமும் தயக்கமுமாய் தன்னை நெருக்கிவிடுமோ என இறுதிவரை அஞ்சுகிறார். தனக்கு நேர்மாறான ஒருவராக அஸ்ஸாமின் முன்னாள் முதல்வராக இருந்த மூத்த காந்தியவாதி சரத் ராஜவம்ஷியைப் பார்க்கிறார் கரையான் புற்றை ஒத்த பழைய வீட்டில் வாழும் , பேருந்து நெரிசலில் பயணம் செய்யும் ஒரு முன்னாள் முதல்வர். மக்களுடன் வாழ்ந்து அவர்களுள் ஒருவனாக தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கும் பெரியவர். அவரை  இயக்கிக் கொண்டிருக்கும் விசையை கண்டுகொள்ள முயல்கிறார் ரமேஷ். 

நாவலில் வரக்கூடிய மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள், ரமேஷின் மனைவி சுகன்யா, அவனது உதவி செயலர் அனுபமா மற்றும் கடத்தப்பட்ட கோஷின் மனைவி நந்திதா கோஷ், மூவருமே வெவ்வேறு வார்ப்புகளில் உருவாகி கச்சிதமாக உருபெறும் பாத்திரங்கள். குறிப்பாக சுகன்யா. ரமேஷின் நாவலில் வரும் சுகன்யாவிற்கும் அந்த சித்தரிப்பின் மீது அதிருப்தி கொள்ளும் அசல் சுகன்யாவிற்கும் உள்ள வேறுபாடுகள் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
சுகன்யா, ரமேஷ் எழுதும் நாவலின் பகுதிகளை அவனுடைய நண்பர்களான சுபிருக்கும் ஹெர்பர்டுக்கும் அவ்வப்போது அனுப்பி வைக்கிறாள். அந்தந்த பகுதிகளைப் பற்றிய கடித பரிமாற்றங்கள் வழியாக நாவலின் மீதான மெல்லிய விமரிசனமும் நாவலுக்குள்ளே வந்து செல்வது ஒரு நல்ல யுத்தியாகவே தென்படுகிறது. 

நிதரிசனத்தில் கோஷ் விடுவிக்கப்பட்டதில் ரமேஷின் பங்கு, அவனுடைய மூர்க்கமான பிடிவாதம் என்பதைத் தாண்டி பெரிய அளவில் வேறு ஏதுமில்லை என இறுதியில் பூயான் சுகன்யாவிடம் சொல்லும் ரகசியம் மற்றுமொரு வேடிக்கையான தருணம். ரமேஷ் தன் செயல், தன் வெற்றியென நம்பிகொண்டிருப்பது உண்மையில் கணக்கற்ற கரங்களின் ஒத்திசைவில் அந்தரத்தில் இயங்கும்  பொம்மலாட்டத்தின் விளைவுதான்  என்பதை அறியாமலேயே பெருமிதம் கொண்டு இயங்கிக் கொண்டிருந்திருக்கிறான்.

சீன – இந்திய உறவைப் பற்றி புத்தகம் எழுதிய சுகன்யாவின் தந்தை, பெண் பித்தனாக வாழ்ந்து மடியும் ரமேஷின் நண்பன் ராமன், கருப்பு மசூதியின் வாயிலில் பழம் விற்று தெருமுனை கலவரத்தில் மரணிக்கும்  தள்ளுவண்டிக்காரன், ரூப்குன்ட் மலைக்கு அழைத்துச் செல்லும் வழிகாட்டி, முதலில் விருந்தினர் மாளிகையில் சந்தித்து பின்னர் கடத்தல் கும்பலிடம் தூது போக முன்வரும்  கடத்தப்பட்ட கோஷின் வயோதிக உறவினர், அஸ்ஸாம் காவல் துறை தலைவர் நிர்மல் பூயான், போலீசாரால் வேட்டையாடப்படும் அனுபமாவின் போராளி நண்பனான கலிதா, போராளி தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி பேரத்தைக் குறைக்க உதவும் ஊடக நண்பன் கஷ்னபீஸ் என ஒவ்வொரு பாத்திரமும் நேர்த்தியுடன் உருப்பெற்றிருப்பது இந்த நாவலின் மிகப்பெரிய பலம்.

இ.பா, ஆதவன் வழிவந்தவர் என்று  பி.ஏ.கிருஷ்ணனை விமர்சகர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். கிருஷ்ணனின் பாத்திரங்கள் சமூக விமரிசனங்களை பகிரங்கமாக வெளிப்படுத்துவதில்லை. சூழலில் கட்டுண்ட ஒருவித இயலாமையின் தொனியே இந்த நாவலில் அதிகம் ஒலிக்கிறது. ஆழ்ந்த கவித்துவமான சித்திரங்களும், ஆண் – பெண் அகவெளி பரிமாணங்களும் நாவல் காட்டும் புற நிகழ்வுகளுக்கு ஈடாகவே சித்தரிக்கப்பட்டுள்ளன.   

இந்திய சுதந்திரத்திற்குப் பின்னர் நடந்த இந்து – இஸ்லாமிய மத கலவரத்தினால் நாட்டில் உதிரம் தெறித்துக் கொண்டிருந்த வேளையில் காந்தி சொல்கிறார் “ஒரு நதியில் வெள்ளம் வரும்போது அது மண்ணடர்ந்து எப்போதையும்விடக் கலங்கலாக இருக்கும். ஆனால் வெள்ளம் வடிந்தபின்னர் அது தெளிவாகிவிடும். முன்னைவிடத் தெளிவாக.”

‘நாப்பத்து எட்டுல எழுதினார். ஐம்பது வருஷத்துக்கு மேல ஆயிடுத்து. இன்னும் நதி கலங்கலாகத்தான் இருக்கு. எப்போ வெள்ளம் வடியும்? நம்ம காலகட்டத்தில் நடக்கும்னு தோணல. நாம கலங்கள் நதியப் பாத்துண்டு இருக்கணும்னு விதி’

‘அதனால என்ன? உடனடியா மாற்றம் நடந்துடுமா? நாம் முயற்சி செய்யலாமே. நதியைத் தெளிவா ஆக்குறதுக்கு.வெள்ளத்த வடியவைக்கறதுக்கு.நம்மோட மத்தவாளும் சேந்துப்பா.நேரம் ஆகட்டுமே’

ஆம் நேரம் ஆகட்டுமே. 

நதி அதன் அத்தனை கலங்கள்களுடனும் நமக்காகக் காத்திருக்கிறது.



கலங்கிய நதி
பி.ஏ.கிருஷ்ணன்
நாவல் 
தமிழ், ஆங்கில மொழிபெயர்ப்பு
காலச்சுவடு வெளியீடு.

No comments:

Post a Comment