Tuesday, June 6, 2017

ஸ்கூப் - குல்தீப் நய்யார்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

வாழ வழியின்றி உடமைகளை துறந்து மன கசப்புடன் பிரிவினையின் காலகட்டத்தில் லாகூரிலிருந்து டெல்லிக்கு இடம்பெயர்வதில் தொடங்கும்  குல்தீப் நய்யாரின் இந்நூல், இறுதியில் அதிகம் மாற்றமடைந்திடாத அதே வழியில் இந்தியா - பாகிஸ்தான் நல்லிணக்க பேருந்து பயணத்தில் முடிகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் முதல் இன்றைய மன்மோகன் சிங் வரை அனைத்து பிரதமர்களையும் பேட்டி கண்டவர். உள்துறை அமைச்சராக இருந்த கோவிந்த் வல்லப் பந்த், மற்றும் லால் பகதூர் சாஸ்திரிக்கு செயலராக பணிபுரிந்தவர். சிறிதுகாலம் லண்டனில் இந்திய தூதராகவும் பணியாற்றியிருக்கிறார். UNI, PTI போன்ற செய்தி அமைப்புகளின் தலைமை பொறுப்புகளிலும் பங்கு வகித்திருக்கிறார்.  





நினைவலைகளும் சுயசரிதைகளும் ஒன்று போல தோன்றினாலும், இரண்டும் ஒன்றல்ல, அவைகளுக்கு இடையே நுட்பமான வேறுபாடுகள் உண்டு. துண்டுபட்ட நினைவலைகளைத் தொகுத்து நூல் எழுதுவது முழுமையான சுயசரிதையை எழுதுவதைக் காட்டிலும் சுலபமானது. அசௌகரியமான நினைவுகளை எழுதாமல் விடுவதற்கான வசதி அதிலுண்டு. எழுதிய வரை நேர்மையாக எழுதியதாக நமக்கும் திருப்தி ஏற்படும். தன்னைப் பற்றிய சுய மதிப்பீடுகள் இல்லாமல் புறவயமான நிகழ்வுகளை மட்டும் சொல்லிச் செல்லலாம். ‘அஸ்வத்தாமன் என்கிற யானை’ போன்ற குறை உண்மைகளை மட்டும் சொல்லலாம். தன்னைத் தவிர பிறர் அனைவரையும் அயோக்கியர்களாகக் கட்டமைக்கும் சுதந்திரமும் உண்டு. சுவாரசியமான வாழ்க்கை நிகழ்வுகளை எளிமையான நடையில் எழுதத் தெரிந்திருந்தால் போதும். சுயசரிதையிலும் இதையெல்லாம் செய்யலாம்தான், ஆனால் என்றேனும் ஒருநாள் முழு உண்மை வெளிப்பட்டு, நம்பகத்தன்மையற்றதென உதாசீனப்படுத்தப்படும். சுயசரிதையோ நினைவலைகளோ, எதுவாக இருந்தாலும் அதை எழுதும் ஆளுமையின் நேர்மையைப் பொருத்தே அது வாசித்து உள்வாங்கிக் கொள்ளப்படும். 

குல்தீப் நய்யாரின் ஸ்கூப் சுயசரிதை அளவுக்கே நேர்மையாக எழுதப்பட்ட நினைவலைகள் எனக் கூறலாம். சொல்வனம் இதழில் வெ. சுரேஷ் எழுதிய குல்தீப் நய்யாரின் சுயசரிதை என்று அறியப்படும் புத்தகமான beyond the lines’ பற்றிய விமர்சனம் வாசித்தபோது ஸ்கூப்பில் உள்ள அதே பகுதிகள்தான் அதிலும் நிறைந்துள்ளன என்று தோன்றியது. நேரிடையாக சொல்லப்படவில்லை என்றாலும்  “ஊடக அறம்” பற்றிய ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை தூண்டுவதாகவே இந்நூல் அமைந்திருக்கிறது. தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு செய்தியையும் அவர் உறுதிப்படுத்தக்கொள்ள எடுத்துக்கொண்ட பெருமுயற்சி கவனிக்கத்தக்கது. ஊடகங்களின்  இன்றைய பாதை பிறழ்வுகளுக்கான காரணம் என்ன? எந்த எல்லைவரை சென்று ஒருவர் செய்தியை சேகரிக்கலாம்? எந்த எல்லைவரை அவைகளை வெளியிடலாம்? பத்திரிக்கையாளர்கள் யாருக்கு உண்மையாக இருக்க வேண்டும் - அரசிற்கா/ மக்களுக்கா/ பத்திரிக்கை அதிபருக்கா?   

முன்னுரையில் ஒரு பத்திரிக்கையாளரின் பங்களிப்பு என்ன என்று நய்யார் விளக்குகிறார். வானொலி, தொலைகாட்சி, இணையம் போன்ற ஊடகங்கள் புழக்கத்தில் இல்லாத காலத்தில் இயங்கிய பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரித்து அதை வெளியிடுவது என்பதைத்தாண்டி அரசின் கொள்கைகளைப் பெருந்திரள் மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியையும் மக்களின் எதிர்வினையை அரசில் பங்கு வகிக்கும் தலைவர்களுக்கு கொண்டு செல்லும் பணியையும் பத்திரிக்கையாளர்களே செய்தனர். அதன் வழியாக அரசாங்க செயல்பாடுகளிலும், கொள்கை உருவாக்கத்திலும், தேச வளர்ச்சியிலும் அவர்கள் இன்றியமையாத பங்கு வகித்தார்கள். இன்று ஊடகவியலாளர்களின் முக்கியத்துவம் சரிந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார் நய்யார். இணையம் வழியாகவும் இன்னபிற ஊடகங்கள் வழியாகவும்  நேரடியாக அரசு மக்களைத் தொடர்பு கொள்வது இன்றைய சூழலில் சாத்தியப்படுகிறது காரணம்.

நாமறிந்த நாளேட்டு வரலாறுகள் நான்கு சுவர்களுக்குள் வெகு சில மனிதர்களால் உருவாக்கப்படுபவை. இவற்றை அந்த அறைக்குள் நின்று வேடிக்கை பார்க்கும் நபராக பதிவு செய்கிறார் குல்தீப். கிசுகிசு பாணியிலான எழுத்தின் ஊடாக வரலாற்றை எழுதிச் செல்கிறார். பள்ளிக்கால வரலாறு நமக்கு இப்படி அறிமுகமாகி இருந்தால் வாசிக்க சுவாரசியமாக இருந்திருக்கும். பிரிவினை காலகட்டம், நேருவின் காலம், சாஸ்திரியின் காலம், பின்னர் இந்திராவின் காலம் இறுதியாக வாஜ்பாயின் காலகட்டம் வரை நீள்கிறது அவருடைய நினைவு தொடர். நேரு, சாஸ்திரி, இந்திரா, காமராஜர், மொரார்ஜி தேசாய், மவுண்ட்பேட்டன், ராட்கிளிஃப், ஜூஃபிகார் அலி புட்டோ, அயூப் கான், ஏ.கியூ. கான், ஜியா உல் ஹக் என பல தலைவர்களையும் நேரடியாக அறிந்து பழகியவர் நய்யார். இவர்களுடனான உரையாடல்களின் வழியாக பல வரலாற்று நிகழ்வுகளின் பின்புலத்தை அறிந்து கொள்ள முடிகிறது.

நய்யாரின் எழுத்தில் நையாண்டிகள்  மிளிர்கின்றன. இந்திய பாகிஸ்தான் பிரிவினையின்போது எல்லையை வகுக்கும் பொறுப்பை வகித்த ராட்கிளிஃப் சொல்லும் தகவல் ஒரு உதாரணம். எல்லைகளை நிர்ணயிக்கும் கமிஷனில் இடம்பெற்ற பாகிஸ்தான் தரப்பு அதிகாரி ஒருவர் ராட்க்ளிஃப்பிடம் விடுத்த கோரிக்கையை இவ்வாறு பதிவு செய்கிறார் – “நாங்கள் குடும்பத்துடன் வருடாவருடம் டார்ஜிலிங் செல்வோம், இந்தியாவில் டார்ஜிலிங் இருந்தால் சென்றுவருவது கடினம், ஆகவே டார்ஜிலிங்கை பாகிஸ்தானுக்கு கொடுங்கள்”. 

இந்தியா பாகிஸ்தான் போரின்போது, அமேரிக்கா வழங்கிய நவீன ரக பீரங்கிகளை பாகிஸ்தான் பயன்படுத்திய விதம் குறித்து இப்படி எழுதுகிறார் –

“US – supplied  Patton tanks were too sophisticated for the average Pakistani soldier to handle. computers often went wrong; the tank crew fed incorrect information in to the electronic brain and the gunner usually got so involved that he rarely had the chance to fire before the rough and ready gunnery of India’s older, simpler and less complicated armour would knock this tank off.”

ஜனாதிபதியாக இருந்த ஜாகிர் ஹுசைன் மரணத்திற்கு பின்னர் அந்த பதவியை அடைய பல்வேறு தரப்புகள் முயன்று கொண்டிருந்தபோது, துணை ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி அவருடைய நான்கு மகன்கள் - மருமகள்கள், ஏழு மகள்கள் - மருமகன்கள் மற்றும் முப்பத்தி ஒன்பது பேரக் குழந்தைகளுடன் ராஷ்டிரபதி பவனுக்கு வந்து யாருக்கு எந்த அறை என்று பிரித்துக் கொடுப்பதில் முனைப்பாக இருந்தார் என்கிறார் நய்யார். ரகசியமாக நடைபெற்ற காபினெட் அமைச்சரவை கூட்டத்தின் அத்தனை முடிவுகளையும் நய்யார் மறுநாள் செய்தித்தாளில் வெளியிட்டபோது இந்திராகாந்தி சற்றே கடுப்புடன் சொன்னது – ‘நேற்றைய காபினெட் கூட்டத்தில் குல்தீப் நய்யாரே கலந்துகொண்டது போல் இருந்தது".

நூலிழையில் ஏற்படும் மாற்றங்கள் என பொதுவாக நாம் சொல்வோம். உண்மையில் அப்படி நேர்ந்த சில மாற்றங்களை நய்யார் கவனப்படுத்துகிறார். நேருவுக்குப் பின்னர் யார் அடுத்த பிரதமர் என்று குழப்பம் நீடித்தபோது மொரார்ஜியின் வாய்ப்பை தட்டிப் பறித்தது அன்று இவர் சாதாரணமாக எழுதிய செய்தி குறிப்பு ஒன்று. அதேபோல் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பஞ்சாப் மாநில முதல்வர் பிரதாப் சிங் கைரனின் பதவி பறிபோக இவர் எழுதிய செய்தி குறிப்பு ஒரு காரணமானதை சொல்கிறார். ஒரு யூகத்தில் எழுதிய குறிப்புதான் அது, பெரும்பாலான குற்றச்சாட்டுகள் போலியானவை என்று தள்ளுபடி செய்த கமிஷன் ஒரேயொரு மிக சாதாரணமான குற்றசாட்டை மட்டுமே முன்வைத்தது என்பது தான் இதில் வேடிக்கை.

நய்யார் செய்திகளைக் கறக்கும் வித்தைகளை அறிந்தவர். வியக்கத்தக்க வகையில் அவரால் தனக்கான செய்திகளை போட்டு வாங்க முடிந்திருக்கிறது. ஜெனரல் ஜியா உல் ஹக்கிடம் பேட்டி காணச் சென்ற இடத்தில், நைச்சியமாக ஜுல்பிகார் அலி பூட்டோவின் கருணை மனு நிராகரிக்கப்பட்டதை அறிந்துகொண்டு மரண தண்டனை உறுதியாகிவிட்டதை அவருக்குத் தெரியபடுத்துகிறார். பாகிஸ்தானின் அணு விஞ்ஞானி ஏ.கியூ கானை பேட்டி காணும்போது, அவரை மெலிதாகச் சீண்டி, பாகிஸ்தானிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்பதை அவரே ஒப்புக்கொள்ள செய்தார். ஒரிசாவின் முதல்வராக இருந்த பிஜு பட்நாயக்மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டை விசாரித்து ஜஸ்டிஸ் கண்ணா வழங்கிய அறிக்கையை அசோக் சென்னிடமிருந்து பெற்று வெளியிட்டு, பின்னர் அசோக் சென்னைக் காக்க டி.டி.கேவின் அறிக்கையையும் கசக்கி சந்தேகத்தை நீக்க முயன்றது பரபரப்பான நிகழ்வு.  

சர்ச்சைகளுக்கும் புதிய தகவல்களுக்கும் குறைவைக்கவில்லை நய்யார். பிரதமர் பதவி வாய்ப்பு காமராஜரைத் தேடிவந்தபோது அதை அவர் மறுக்க முக்கிய காரணமாக, ‘இந்திய பிரதமராக வர விரும்புபவருக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும். தனக்கு அம்மொழிகள் தெரியாததால் ஆள்வது கடினம்’ என்று அவர் நய்யாரிடம் சொன்னதாக பதிவு செய்கிறார். பிரிவினைக்கு முன்பான காலகட்டத்தில் லாகூரில் கல்லூரி ஒன்றிற்கு ஜின்னா பேச அழைக்கப்பட்டபோது ‘வெளியிலிருந்து இந்தியாவிற்கு ஏதேனும் ஆபத்து என்றால் பாகிஸ்தான் தன் ராணுவத்தை இந்தியாவின் உதவிக்கு உடனே அனுப்பும்” என்று சொன்னதைப் பதிவு செய்கிறார். பிரிவினையின்போது நடந்தேறிய வன்முறைகளை ஜின்னா எதிர்நோக்கியிருக்கவில்லை. ஒருவேளை அவர் முன்னமே அறிந்திருந்தால் பிரிவினையை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார். ‘துண்டு துண்டாக உள்ள உங்கள் பாகிஸ்தான் அதிக நாட்கள் நீடிக்காது’ என்று மவுன்ட்பேட்டன் அன்றே ராஜாஜியிடம் ஆருடம் கூறியதாக சொல்கிறார். ஆனால் மவுண்ட்பேட்டன் அப்படி சொன்னார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்கிறார் நய்யார்.   

இந்திய சீன போர், இந்தி எதிர்ப்பு போராட்டம், விஷாகப்பட்டினம் இரும்பு ஆலை போராட்டம், இந்திய – பாகிஸ்தான் போர்கள், பங்களாதேஷ் சுதந்திர போராட்ட நிகழ்வுகள், தாஷ்கண்ட் ஒப்பந்தம், சிம்லா ஒப்பந்தம் என பல நிகழ்வுகளின் நினைவுகளை நம்முடன் பகிர்கிறார். குறிப்பாக போர்காலங்களில் நடந்த நிகழ்வுகளை பற்றிய விவரணைகளைக் கொண்டு சுவாரசியமான திரைப்படம் ஒன்றை எடுக்க முடியும். இந்த நினைவு குறிப்புகளில் என்னை பெரிதும் அசைத்து பார்க்கும் ஒரு நிகழ்வு என்பது பாகிஸ்தான் முன்னால் பிரதமர் ஜூல்ஃபிகார் அலி புட்டோவின் மரணம்தான். உண்மையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அநீதியான முறையில் ஆட்சியைக் கைப்பற்றிய சர்வாதிகாரியால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்படுவதை ஜீரணிக்க முடியவில்லை. பாகிஸ்தான் மக்கள் எந்த எதிர்வினையும் செய்யாமல் பயத்தில் மௌனித்து உறைந்து நின்றனர். இந்திய வெகுஜன மக்களிடமிருந்துதான் புட்டோவின் மறைவிற்கு கண்டன குரல் எழுந்தது. “புட்டோ, உம்மைக் கொன்றவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள் என்பதை எண்ணி நாங்கள் வெட்கப்படுகிறோம்”.  

காந்தியின் மரணத்தை பற்றி நய்யார் எழுதுகிறார், 'காந்தியைக் கொன்றவர் இஸ்லாமியராகவோ அல்லது பஞ்சாபியாகவோ இல்லை என்பது அன்று பெரும்பாலனவருக்கு ஆசுவாசத்தை அளித்திருக்கிறது. மீண்டும் மீண்டும் இச்செய்தி ஒலிபரப்பப்பட்டது', என்று. ‘இருளில் உறைந்த தேசம் அதுவரை ஒளியாக இருந்த காந்தியின் மரணத்திற்கு பின்னர், ஒளியை துழாவி தேடியது', வன்முறை முடிவுக்கு வந்தது. தேசமக்கள் அனைவரும் குற்ற உணர்வில் செயலற்று மௌனித்து நின்றனர். அவர்களின் வெறுப்புதான் காந்தியைக் கொன்றது. அவர்களைப் போன்ற ஒருவன்தான் மண்ணில் வாழ்ந்த மகத்தான மனிதரை கொன்றான். 

அன்றைய தினங்களில் சிலபகுதிகளில் வெடித்த மத கலவரங்களை நய்யார் அச்சில் ஏற்றவில்லை. காந்தி மத மோதல்களில்தான் உயிரை துறக்க நேரிட்டது. ஏன் அதை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணினார். ஒரு பத்திரிக்கையாளரின் மிக முக்கியமான குணம் என்பது அவன் நிகழ்வுகளை புறவயமாக நோக்க வேண்டும் என்பதே - என்று அவருக்கு அறிவுரை வழங்குகிறார் பத்திரிக்கை ஆசிரியர். அதுவரை வேண்டா வெறுப்பாக, பிழைப்புக்காக செய்து கொண்டிருந்த தொழிலை முழுமனதுடன் ஏற்றுக்கொள்கிறார் நய்யார். காந்திஜியின் வாழ்வு முன்வைத்த அறத்தைக் கொண்டு சேர்க்க இதைவிட சிறந்த வழி கிடையாது என்று நம்புகிறார். இந்துக்களும் இஸ்லாமியர்களும் என் இரு கண்கள் என்றார் காந்தி. அந்த இணக்கத்தை தன் கனவாக கொண்டு கடுமையாக உழைத்தவர்களில் ஒருவர் குல்தீப் நய்யார் என உறுதியாகச் சொல்லலாம். 


scoop

kuldeep nayyar

harper collins publications


No comments:

Post a Comment