Monday, June 5, 2017

இந்திய இலக்கிய சிற்பிகள்- ந.பிச்சமூர்த்தி- அசோகமித்திரன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

வாசித்து விமர்சனங்கள் எழுதுவது ஒருவகை எனில் விமர்சனம் மூலம் படைப்பை அணுகுவது மற்றொரு வகை. தேர்ந்த விமர்சகன் முதலில்  சிறந்த வாசகன். சாளரத்து துளைகள் வழியாக வழிந்தோடும் ஒளி கீற்றுகளை கண்டுணர்ந்து அதன் பல்வேறு சாத்தியக் கூறுகளை விளக்குகிறான்.  விமர்சகன் தான் பயணித்த வழிதடத்தையும் அங்கு தான் கண்டு ரசித்து அனுபவித்த இடங்களையும் வாசகனுக்காக அடையாளக் குறி இட்டு விட்டுச் செல்கிறான். வாசகன் அவ்வழித்தடத்தில் பயணித்து விமர்சகன் ரசித்ததை ரசிக்கிறான், ஒரு தேர்ந்த வாசகன் அத்துடன் நின்றுவிடுவதில்லை, எவர் கண்ணுக்கும் புலப்படாத ஏதோ ஒன்றை தேடியே வாசகன் பயணிக்கிறான். எவர் காலும் மண்ணில் பதிந்திடாத கண்ணி நிலம் தேடியலைந்த மனிதனைப்போல் பேர் உவகை கொள்கிறான். அப்படி அவன் கண்டடைவதை அடையாளப் படுத்துகிறான், விமர்சன மரபை உயிர்ப்புடன் நீட்டித்து வைக்கிறான்.  





நான் ந.பிச்சமூர்த்தியின் படைப்புகளை இதுவரை வாசித்ததில்லை (இன்னும் சொல்வதானால் வாசிக்க முயன்றதில்லை) ஆனால் அசோகமித்திரனின் எழுத்தில் சாகித்திய அக்காதமி வெளியீடாக இந்திய இலக்கிய சிற்பிகளின் வரிசையில் வந்துள்ள ந.பிச்சமூர்த்தி பற்றிய நூலை வாசித்த பிறகு அதை தள்ளிப் போடுவது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. சாகித்திய அகாதமி அவருடைய தேர்ந்தெடுத்த சிறுகதைகள் முப்பதை தொகுத்து நூலாக கொணர்ந்து இருக்கிறது. அடுத்து அதையும் வாசிக்க வேண்டும். ந.பிச்சமூர்த்தி பற்றி செவிவழியாக மட்டுமே கேட்டறிந்த என்னை  இந்த எழுபது பக்க சிறிய நூல் ஏன் தேர்ந்தெடுத்தது என்று சொல்லத் தெரியவில்லை, பசுந்தழைகள் மூடிய வன இருட்டுக்குள் சுடரும் இரு தழல் விழிகள் போல் அலட்சிய கேசமும், அடர் தாடியும் மூடிய முகத்திற்குள் ஒளிமிகுந்த கூரிய கண்கள் கொண்ட அந்த உருவம் என்னை ஈர்த்ததாலே கூட இருக்கலாம். ஹாரி பாட்டரின் டம்பில்டோர், தாகூர், முதல் லார்ட் ஆஃப் ரிங்க்ஸ் கேண்டால்ஃப் வரை இப்படி நீள்தாடியும், கூர்மையான கண்களும், கலைந்த கேசமும், சற்று முகத்தில் வாழ்ந்து முதிர்ந்த அனுபவ ஞானக் களையும் கூடிய பல முகங்களின் கலவையில் ஒன்றாகத்தான் என்னுடைய முகம் வாழ்வின் இறுதிநாளில் இருக்க வேண்டும் என்று கற்பனை செய்துகொள்வேன்.

பதினோரு பகுதிகள் கொண்ட இந்த சிறுநூலில், முதல் அத்தியாயத்தில் அசோகமித்திரன் அவருக்கும் பிச்சமூர்த்திக்கும் இடையில் நடந்த சந்திப்புகளை பற்றியும் உறவை பற்றியும் பேசுகிறார், அதற்கும் நிச்சயம் ஏதோ ஒருவகையில் ஒரு இலக்கிய முக்கியத்துவம் உண்டு என்கிறார். அதிகம் பேசிக்கொண்டதில்லை என்றாலும், சகஜமாக பரஸ்பர இருப்பில் மௌனத்தை அனுபவிக்க முடிந்தது என்கிறார். அடுத்தடுத்த அத்தியாயங்களில் அவருடைய வாழ்க்கை குறிப்பு, இலக்கிய பயணம், அவருடைய படைப்புகளான சிறுகதைகள், கவிதைகள் மற்றும் அவர் எழுதிய குடும்ப ரகசியம் எனும் நாவல் (குறுநாவல் என்றும் சொல்கிறார்கள்) ஆகியவற்றின் மீதான விமர்சன கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சக எழுத்தாளர்கள் வெவ்வேறு தருணத்தில் அவரை பற்றி குறிப்பிட்ட கருத்துக்களின் தொகுப்பும், எழுத்து இதழில் வெளியான அவரது பேட்டியும், கலைமகள் இதழில் அவருடைய புனைகதைக்கு உந்துதலாக இருந்த உண்மை சம்பவம் பற்றி ‘என் கதைகள்’ எனும் பெயரில் அவரால் எழுதப்பட்ட கட்டுரையும் இணைக்கப்பட்டுள்ளன. இறுதியாக அவருடைய நூல்களும், அவரை பற்றி எழுதப்பட்ட நூல்களின் விவரணை பட்டியலும் இடம்பெற்றுள்ளன.

 வளமான தஞ்சை நிலத்தில் பிறந்து வளர்ந்த பிச்சமூர்த்தியின் தந்தை நடேச தீட்சிதர் பன்மொழிகளிலும், ஆயுர்வேதம், ஹரிகதை என பல்துறைகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்டவர். ஏழாவது வயதிலேயே அவருடைய தந்தையை இழக்க நேரிடுகிறது. தத்துவத்தில் இளநிலை பட்டம் பெற்ற பிச்சமூர்த்தி பின்னர் சட்டக்கல்வியும் பயின்று கொஞ்ச காலம் சட்ட ஆலோசகராகவும் பணிபுரிந்தார். தொடக்கத்தில் ஆங்கிலத்தில் எழுத முயன்ற அவர், நண்பர் ஒருவர் பாரதியின் பாடல் ஒன்றை முனுமுனுப்பதை கேட்டு ஆங்கிலத்தில் எழுதுவதற்கு ‘டிக்கெட்’ கொடுத்துவிட்டு தமிழில் எழுதத் தொடங்கினேன் என்கிறார். பாரதிக்கு பின் நவீன தமிழ் இலக்கியத்தில் கவிதையின் வடிவத்திலும் மொழியிலும் அடுத்தக்கட்ட பாய்ச்சல் நிகழ்த்தியவர் பிச்சமூர்த்தி என்று விமர்சகர்களால் சூட்டப்படுகிறார். அவருடைய கவிதைகளில் பாரதி மற்றும் வால்ட் விட்மனின் தாக்கம் தென்படுகிறது என்கிறார் அசோகமித்திரன். பாரதியின் வசன கவிதையின் நீட்சியாகவும், வேறோர் வடிவமாகவும் பிச்சமூர்த்தியின் கவிதைகளை அடையளாப்படுத்தலாம் என்கிறார் அவர். 

க.நா.சு எஸ்ரா பவுண்டின் பாணியில் மரபார்ந்த பாணியை உடைத்து புது கவிதை என்று பெயரிட்டு ஒரு கவிதையுகத்தை தொடங்கி வைக்கிறார், பிச்சமூர்த்தியின் கவனம் பெறாத தொடக்கக் கால கவிதைகள் பல ஆண்டுகளுக்கு பின்னர் செல்லப்பாவாலும் க.நா.சுவாலும் மீள் பிரசுரம் செய்யப்பட்டப் போது பெரிதாக விவாதிக்கப்பட்டது. ஞானக்கூத்தன் பிச்ச்சமூர்த்தியை புதுக்கவிதையின் பிதாமகர் என்கிறார், க.நா.சுவை பொருத்தவரை அவர் வரையறுத்த புதுக்கவிதை இலக்கனத்திற்குள் பிச்சமூர்த்தியின் கவிதைகள் வரவில்லை. அறிவார்ந்த தளத்திற்கு முக்கியத்துவம் அளித்து உணர்ச்சி பெருக்குகள் மட்டுப்படுத்துவது புதுக்கவிதையின் முக்கிய அம்சம் என அவர் கருதினார், பிச்சைமூர்த்தியின் கவிதைகள் பழைய பாணியில் ‘உணர்ச்சிகளையே’ கையாண்டது. மரபுக்கவிதையின் சாயலும் பாணியும் அவருடைய கவிதையில் தென்பட்டன. எனினும் அவருடைய கவித்துவத்தில் எவருக்கும் எந்த ஆட்சேபனையும் இருந்தது இல்லை. 

நூலில் அ.மி தேர்ந்தெடுத்த கவிதைகளில் இருளும் ஒளியும் எனும் இந்தக் கவிதை எனக்கு பிடித்திருந்தது.

ஒலியான பொன்பருந்து
விடுதலையாய் வட்டமிட்டான்
ஒளியான பொன்பசுக்கள்
குதித்து வந்து மூச்சுவிட்ட
கதிரான கன்றுகளும்
வால் தூக்கித் துள்ளிவந்த
போதையாம் ஒளி இன்னும்
பாரெங்கும் பொங்கியது
  

பிச்சமூர்த்தியின் முதல் படைப்பு அவருடைய 33 ஆவது வயதில் அச்சேறியது அன்றைய சூழலில் மிகவும் காலதாமதமானது என்கிறார் அசோகமித்திரன். சராசரியாக படைப்பாளியின் முதல் படைப்பு 25 வயதுக்குள் வெளிவருவதே அன்றைய மரபு போலும், ஓரளவிற்கு இன்று வரை அது நீடிக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். மொத்தம் 127 சிறுகதைகள், 83 கவிதைகள், 11 ஓரங்க நாடகங்கள் அவரால் எழுதப்பட்டன என்று ஓர் ஆய்வு தெரிவிக்கின்றது. பிச்சமூர்த்தியின் படைப்புகளின் மீதான விவாதத்தின் போது, பல கூரிய பார்வைகளை பதிவு செய்கிறார் அசோகமித்திரன், பிச்சமூர்த்தி என்றில்லாமல் பொதுவாகவே தஞ்சை வட்டார எழுத்தாளர்களின் படைப்புகளில் தேவதாசிகளுக்கு ஓர் இடமுண்டு என்கிறார். பாலியல் விழிப்புணர்வு அவருடைய கதைகளில் ஒரு இழையாக இருக்கிறது. மேலும் பின்நவீனத்துவ கூறாக சொல்லப்படும் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை  பதிவுகள் அவருடைய கதை மாந்தர்கள் வழியாக மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டு வருவதையும் சுட்டிக்காட்டுகிறார். 

எழுத்து இதழுக்கு  அவரளித்த பேட்டியில் குழந்தைகள், துறவிகள், பைத்தியம்- என்றால் தனக்கு மிகவும் விருப்பம் என்றும், அவர்களுடைய தொடர்பு இல்லாமல் இருந்தால் ஆற்றில் குறிப்பின்றி அடித்து செல்லப்படும்    மரக்கிளைப்போல் தன் வாழ்வும் புரண்டு போயிருக்கும் என்கிறார். பிச்சமூர்த்தி அவருடைய 25 ஆவது வயதில் ரமணரை சென்று சந்தித்திருக்கிறார், ‘பழம் கனிந்தால் தானாகவே உதிர்ந்துவிடும்’ என்று அவருக்கு உபதேசம் வழங்குகிறார். மணிக்கொடி காலகட்டத்து எழுத்தாளர்களிடையே ஆன்மீக தளத்தில் அதிகமும் எழுதி இயங்கியவர் பிச்சமூர்த்தி என்று க.நா.சு குறிப்பிடுகிறார். ஆன்மிகம், திகில், மாந்தரீகம் போன்ற தளங்களில் அவருடைய பல படைப்புகள் நிகழ்ந்துள்ளன. ஒன்றிரண்டு அறிவியல் புனைகதைகளும் அவர் முயன்றிருக்கிறார் என்று தெரிகிறது. விஞ்ஞானத்துக்கு பலி எனும் சிறுகதையில் ஆல்ஃபா எனும் ரோபோ மனிதனை பற்றி எழுதியிருக்கிறார், அவனுக்கு கத்தியே கண்ணாடிகளை உடைக்கும் திறன் உண்டு என்றும் விவரிக்கிறார். ஒருவகையில் அவருடைய கற்பனையின் வீச்சை காட்டுவதாக இருக்கிறது என்று விட்டல் ராவ் வியப்புடன் குறிப்பிடுகிறார். அதேப்போல் நனவோடை உத்தியில் அவர் எழுதிய ‘ஒருநாள்’ எனும் சிறுகதை மிக முக்கியமான பங்களிப்பு. நனவோடை அல்லாத பகுதிகள் தேர்ந்த உரையாடல்களாக அமைத்திருப்பது இக்கதையின் வடிவத்திற்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. அவருடைய படைப்புகளில் ஒரு சூழலியல் விழிப்புணர்வு சார்ந்த கோணமும் இருக்கிறது, ஜீவகாருன்யத்துடன் பறவைகள், பயிர்கள், மிருகங்கள் என பலவற்றையும் கூர்ந்து அவதானித்து அவற்றின் வாழ்வையும் வளர்ச்சியையும் படைப்புகளில் பதிவு செய்தது அவருடைய தனித்தன்மை என்று குறிப்பிடுகிறார் விமர்சகர் வெங்கட் சாமிநாதன். பிச்சமூர்த்தியின் ஆன்மீக சார்புகளை கொண்டு வாழ்வை மறுப்பவர் என்றும் வேதாந்தி என்றும் அவநம்பிக்கைவாதி என்றும் சொல்லப்படும் கருத்தை சுந்தர ராமசாமி கடுமையாக மறுக்கிறார். புதுமைபித்தனும், க.நா.சுவும் படைப்பாளிகளாக அவநம்பிக்கைவாதிகள் என்றால், பிச்சமூர்த்தி பாரதியை போல் ஒரு நம்பிக்கைவாதி’ என்கிறார்.

டாக்டர்.ஐயப்ப பணிக்கர், பிச்சமூர்த்தியின் பங்களிப்பை பற்றி பேசும்போது அவருடைய படைப்புகளை மட்டும் கொண்டு அணுகாமல், அவர் பிறர் மீது செலுத்திய தாக்கத்தையும் கணக்கில் கொள்ளவேண்டும் என்கிறார். சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிக்கையின் உருவாக்கத்திலும், தரமாக வெளிவந்ததிலும் அவருக்கு முக்கிய பங்குண்டு. ஒரு மூத்த சகோதரராகவே அவர் அனைவருடன் பழகினார் என்று அசோகமித்திரன் குறிப்பிடுகிறார்.     .

குடும்ப ரகசியம் எனும் நாவலை (அல்லது குறுநாவலை) எழுதியிருக்கிறார், அதுவே அவர் முதலும் கடைசியுமாக எழுதிய நாவல். வ.ரா எடுத்த ராமானுஜ காவியம் எனும் திரைப்படத்திலும் திருக்கச்சி நம்பியாக திரையில் தோன்றியிருக்கிறார். எழுத்து இதழுக்கு அவரளித்த பேட்டி மிக முக்கியமானது. எந்த எழுத்தாளருக்கும் தான் ஒரு பட்டியில் அடைபடுவது விருப்பமான ஒன்றல்ல. அதையே பிச்சமூர்த்தியும் சொல்கிறார். பிச்சைமூர்த்தியை நான் மிகவும் நெருங்கி சென்ற தருணங்கள் இப்பேட்டியில் பல உள்ளன. குறிப்பாக வாழ்வை உந்தி தள்ளும் எத்தனையோ ஒன்றைப்போல் இதுவும் ஒன்று என இலக்கியத்தை பற்றி கொண்டிருக்கும் கருத்து. நாலு வரி எழுத வந்தவுடன் மனம் கொள்ளும் மிதப்பு தான் என்ன? வாழும் வாழ்வு போதாமல் இலக்கியம் தேடி நிற்கும் காலமும் கழிந்து இலக்கியம் போதாமல் வாழ்வு மீண்டும் ருசிக்கும் கனத்திர்காகவே இலக்கிய வாசகன் காத்துக்கொண்டிருக்கிறான்.  

‘வாழும் வகை காணும் முயற்சியை விட இலக்கிய முயற்சி சிறந்தது என்று ஒப்பமாட்டேன். சொல் ஓய்ந்து மௌனம் வருமானால் மகிழ்ச்சியுடன் ஏற்பேன்.’எனும் பிச்சமூர்த்தியின் கனவே எனது கனவும் கூட.

ந.பிச்சமூர்த்தி – இந்திய இலக்கிய சிற்பிகள்
அசோகமித்திரன்
தமிழ், விமர்சனம், ஆளுமை,
சாகித்ய அகாதமி வெளியீடு
விலை- ரூ-25/-

No comments:

Post a Comment