Sunday, June 18, 2017

குமாயுன் புலிகள்- ஜிம் கார்பெட்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

நிசப்தமான நள்ளிரவின் இருளில், கானக மரக்கிளையொன்றில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள். காலைமுதல் காட்டில் நடந்து களைத்துப்போன உடல், கண்கள் சொருகி உறக்கத்தில் தன்னையிழக்கக் காத்திருக்கும்பொழுது மென்பாதமொன்று அடியெடுத்து நடந்து வரும் சலனங்களும் உறுமலும் கேட்கின்றன - நீங்கள் அமர்ந்திருக்கும்  மரக்கிளையை  எம்பிக்குதித்தால்  அது தொட்டுவிட முடியும். அருகாமையில் நெருங்கி வந்துவிட்ட பத்தடி நீள ஆட்கொல்லி புலி ஒன்றிடமிருந்து அந்த உறுமல் எழுந்தால் எப்படி இருக்கும்? நாம் வியர்த்தெழும் கனவில் மட்டுமே நமக்கு அது சாத்தியமாகக்கூடும். அத்தகைய அனுபவங்கள் உண்மையில் வாய்க்கப்பெற்று அதை தரமான மொழியில் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு கிட்டுவது வெகு சிலருக்கு மட்டுமே சாத்தியம். அவ்வகையில் ஜிம் கார்பெட்டின் குமாயுன் புலிகள் ஒரு அற்புதமான வாசிப்பனுபவத்தை நமக்களிக்கிறது.



ஆம்னிபஸ் இந்த வாரத்தை கானுயிர் வாரமாக கொண்டாடுகிறது. பறவைகள், குதிரைகள், வரிசையில் இன்று நம் தேசிய விலங்காக இருப்பினும், அழிவின் விளிம்பில் நிற்கும் புலியின் வாழ்க்கையைச்சொல்லும் நூல் அறிமுகம்தான் இன்றைய பதிவு. 


கானுயிர்கள் என் வாழ்வில் முதன்முதலாக எப்போது பரிச்சயமாயின என்று நினைவுக்கூர முயல்கிறேன். அநேகமாக சிறு வயதில் படித்த டிங்கில் காமிக்சும், சந்தாமாமா கதைபுத்தகமும் ஒரு தொடக்கமாக இருக்கலாம். இப்போது யோசிக்கையில் ஷிகாரி ஷாம்பு எனும் பாத்திரம்கூட ஒரு வகையில் கார்பெட்டின் பகடியோ என்று தோன்றுகிறது. நம்மைப் போன்றே சிந்திக்கும், நம்மைப் போன்ற உணர்வுகள் கொண்ட பறவைகளும் மிருகங்களும் வாழும் ஒரு அற்புத உலகம் காமிக்சின் உலகம். பஞ்சதந்திர கதையில் வரும் பிங்கலன் எனும் சிங்கமும், இரட்டைத் தலையும் ஒற்றை வயிறும் கொண்ட பாருண்ட பக்ஷியும், காலியா எனும் காகமும், கபீஷ் குரங்கும் ஜங்கிள் புக்கின் ஷேர்கானும், பாலுவும், பகீராவும் மனதை விட்டு  நீங்காதவை. 

கார்பெட் தன்னுடைய வேட்டை அனுபவங்களை பற்றி எழுதிய முதல் நூல்தான் குமாயுன் புலிகள். 1944ல் வெளியான ஆங்கில புத்தகமான man eaters of kumaon வணிக ரீதியாக மாபெரும் வெற்றியடைந்தது மட்டுமின்றி அக்கால விமர்சகர்களாலும் கவனிக்கப்பட்டுள்ளது. தமிழில் இதை மொழிபெயர்த்துள்ளார் தி.ஜ.ர. தமிழகத்தின் முக்கிய கானுயிர் ஆய்வாளர், தியோடர் பாஸ்கரன் அவர்களால் மேம்படுத்தப்பட்டு இப்போது காலச்சுவடு வெளியீடாக இந்த நூல் வந்துள்ளது.

ஜிம் கார்பெட்டின் வாழ்க்கை அசாதாரணமானது, ஒரு தேர்ந்த வேட்டையாடியாக தொடக்கத்தில் அறியப்பட்ட அவர் மெல்ல கானுயிர் புகைப்படக் கலைஞராக பரிணமிக்கத் தொடங்குகிறார், பின்னர் எந்த ‘பெரும் பூனை குடும்பத்து’ விலங்குகளை வேட்டையாடினாரோ அவைகளின் பாதுகாவலனாக உருமாறுகிறார். இன்றும் அவர் பெயரில் உத்தரகண்டில் உள்ள தேசிய புலிகள் சரணாலயமும் பூங்காவும் அவரது பெருமையை நமக்கு பறைசாற்றுகின்றன.

நூலை வாசிக்கையில் கார்பெட் ஒரு தேர்ந்த வேட்டையாடி மட்டுமின்றி நல்ல கதைசொல்லியும் கூட  எனும் உணர்வு மேலிடுகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் சிறுகதைக்குரிய நேர்த்தியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வேட்டையின்போதும் அவர் அசாத்திய துணிவுடனும் நிதானத்துடனும் அதைக் காட்டிலும் சமயோசித அறிவுடனும்,  பல உயிருக்கே ஆபத்தான நெருக்கடிகளையும் கடந்து வருகிறார். இந்த நூலில் கார்பெட் தன்னுடைய பலவீனங்களை நம்மிடமிருந்து மறைக்க முயற்சிக்கவில்லை. வீடு திரும்பவும் போதிய துணிவின்றி ஏன்தான் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமோ? என்று வேட்டையின்போது அங்கலாய்த்ததையும் அவர் பதிவு செய்கிறார். புலியைச் சந்திக்க வேண்டும் எனும் ஆவலும் அதே நேரம் சந்தித்து விடுவோமோ எனும் பயமும் அவரை அலைக்கழித்தன என்றும் எழுதுகிறார்.    



புத்தகம் முழுவதும் புலி, காடு, இந்திய மக்கள் என பலவற்றை பற்றிய மிக நுண்ணிய அவதானிப்புகளால் நிறைந்திருக்கிறது. புலியின் கால்தடத்தைக் கொண்டு அதன் நீளம் என்ன? அது எந்த வேகத்தில் செல்கிறது? ஏதேனும் இரையைக் கொண்டு சென்றதா என்று பல தகவல்களை அறிய முடியும் என்கிறார் கார்பெட். மரத்தில் பதிந்திருக்கும் நகப்பிராண்டல்களைக் கொண்டு பல தகவல்களை அறிய முடியும் என்கிறார் அவர். அதேபோல், சூழல் விவரணைகளுக்காகவே இந்த நூலை மற்றுமொரு முறை வாசிக்கலாம். புலன்களைத் தீட்டி வனங்களில் திரியும் வேட்டையாடியின் பார்வையில் விரியும் உலகம் என்பதாலோ என்னவோ கார்பெட்டின் வர்ணனைகளைக் கொண்டு நம்மால் துல்லியமான காட்சிகளும் சப்தங்களும் இணைந்த மெய் நிகர் அனுபவமாக ஒவ்வோர் அத்தியாயத்தையும் உள்வாங்கிக்கொள்ள முடிகிறது. இமயமலைப் பகுதிகளில் உள்ள பள்ளத்தாக்குகளும், அடர்ந்த காடுகளும், மலை முகடுகளும் நம் கண்முன் விரிகின்றன.  

கார்பெட்டுக்கு சில தனிப்பட்ட பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதனும் பிறருடைய நம்பிக்கைகளை மூட நம்பிக்கை என்று எள்ளி நகையாடுகிறான், ஆனால் அந்தரங்கத்தில் அவனுக்குள்ளும் ஏதோ ஒரு மூடநம்பிக்கை இருக்கவே செய்யும். ஆட்கொல்லி மிருகங்களைக் கொல்வதற்கு முன்னர் ஒரு பாம்பையாவது கொன்றால் தான் அந்த காரியம் சித்தியாகும் என்பது கார்பெட்டின் நம்பிக்கை. பெரும்பாலும் அவர் வேட்டைக்கு தனியாக செல்வதையே விரும்புகிறார், சிலகாலம், அவருடைய செல்ல வளர்ப்பு பிராணி ராபின் எனும் நாய் அவரோடு வேட்டைக்கு வந்தது. ஆயுதம் இல்லாத நபரை வேட்டைக்கு உடன் அழைத்து செல்வது மிகவும் ஆபத்தானது. அதேசமயம் ஆயுதத்தை சரிவர பிரயோகிக்க தெரியாதவருடன் வேட்டைக்குச் செல்வது அதைவிட ஆபத்து என்பதாலேயே அவர் தனியாகக் காட்டுக்குள் செல்கிறார். 

ஆரம்ப காலத்தில் எந்த கட்டுப்பாடும் இன்றி வேட்டையாடிய கார்பெட், பிற்காலங்களில் மனிதர்களைத் துன்புறுத்தும் ஆட்கொல்லி விலங்குகளை மட்டுமே வேட்டையாடுவது என்று தீர்மானம் செய்துகொண்டு அதையே இறுதிவரை பின்பற்றினார். உறங்கிக்கொண்டிருந்த புலியைச் சுட்டுக் கொன்றதும், அதுவரை ஆட்கொல்லியாக மாறாத அதே சமயம் எப்போது வேண்டுமானாலும் மாறிவிடும் நிலையில் அடிபட்டு அவதிப்பட்டுக் கொண்டிருந்த பீப்பல் பாநீ புலியை கொன்றதும் அவரை வெகுவாக வாட்டும் நினைவுகளாக மாறின.

புத்தகத்தின் தொடக்கத்தில் புலி ஒன்றும் நாம் கற்பனை செய்வதுபோல் கொடூரமான விலங்கல்ல என்று எழுதுகிறார். அத்தனை புலிகளும் ஆட்கொல்லிகள் அல்ல, மாறாக பல்லோ அல்லது உடலில் வேறு ஏதேனும் உறுப்பு பாதிக்கப்பட்டாலோ அல்லது முள்ளம்பன்றியின் முட்கள் குத்தி கிழித்து அடிபட்டிருந்தாலோ மட்டுமே ஒரு புலி ஆட்கொல்லியாக மாறுகிறது, மனிதன் ஒருபோதும் அதன் விருப்பத்தேர்வு இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறார். 

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுத்தையும் புலியும் ஒத்த குணம் கொண்டவையல்ல. ஆட்கொல்லியாக மாறிய பின்னர் வேங்கைக்கு மனிதர்கள் மீது எந்த பயமும் இருப்பதில்லை, ஆகவே பட்டப்பகலில் நடக்கும் அனைத்து கொலைகளுமே வேங்கையின் கைவண்ணம்தான். சிறுத்தை ஆட்கொல்லியாக மாறினாலும் கூட மனிதர்களை நேருக்கு நேராகச் சந்திக்கத் துணியாது என்பதால் பெரும்பாலும் இரவில் பதுங்கி பாய்ந்து கொல்கிறது. இதன் காரணமாகவே ஆட்கொல்லி புலியை வேட்டையாடுவது சிறுத்தையைக் காட்டிலும் சுலபமானது. சிறுத்தை. புலி என இரண்டு விலங்கினங்களுக்கும் முள்ளம்பன்றி மிகவும் பிடிக்கும் ஆனால் சிறுத்தை லாவகமாக நேரடியாக அதன் தலையை தாக்கி வேட்டையாடும், புலியோ முள்ளம்பன்றியை சரிவர எதிர்கொள்ளாமல் அதன் முட்களை தோலில் வாங்கி அவதியுறும். தானாகவே ரத்த வெறிக்கொண்டு மக்களை வேட்டையாடிய ஒரு வேங்கையைக்கூட தான் அறிந்ததில்லை என்கிறார் கார்பெட். மனிதர்கள் அதைச் சீண்டினால் ஒழிய அத்தனை சீக்கிரம் அது மனிதனைத் தாக்க முயற்சிக்காது.

அவருடைய வேட்டை பிரதாபங்கள் என்ற அளவில் மட்டும் இந்த நூல் நின்றிடாமல், அவர் பயணிக்கும் பகுதிவாழ் மக்களின் வீரத்தையும் தியாகத்தையும் பதிவு செய்கிறார் கார்பெட். அக்காவை புலியடித்துக் கொன்றதை அடுத்து அதை நேரில் கண்ட அதிர்ச்சியில் வாய்ப்பேசும் திறனை இழந்த தங்கை, அந்த புலியின் மரணம் குறித்தான செய்தியை கேட்டு மீண்டும் பேசத்தொடங்குவது ஒரு நெகிழ்ச்சியான நிகழ்வு. அதேபோல் ராணுவத்திற்கு தேர்வாகிய மகன் காட்டுக்குச் சென்று திரும்பாததால் ஆட்கொல்லி நடமாடும் காட்டிற்குள் தன்னந்தனியாக இரவு முழுவதும் எவ்வித ஆயுதமும் இன்றி உலவிய முதியவரின் வீரச்செயல், அதுவும் அது ஒரு வீரச்செயல் எனும் பிரக்ஞை ஏதுமின்றி புலியால் கொல்லப்பட்ட மகனின் எலும்புகளைக் கொண்டு வரும் நிகழ்ச்சி மனதை பிசைகிறது. அதற்கு முன்பு வரை இருந்த பயம் என்ற ஒன்று என்ன? அதை அவரால் எப்படி கடந்து செல்ல முடிந்தது? மனித உணர்வுகள் சார்புத்தன்மை கொண்டவைதானா? 

சம்பாவதி, போவல்காட் பிரம்மச்சாரி, கண்டா, பீப்பல் பாநீ என நான்கு ஆட்கொல்லிகளை அவர் எதிர்கொன்ட கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. எனக்கு இந்நூலில் தனிப்பட்ட முறையில் மிகவும் பிடித்த பகுதி என்பது அவருடைய செல்லப்பிராணி ராபின் எனும் நாய் பற்றிய அத்தியாயம் தான். அவருடைய வேட்டைக்கு உதவிய, அவருடைய நெருங்கிய நண்பன் ராபின் ஒரேயொரு முறை நெருக்கடியான சூழலில் அவரை தனியே விட்டுவிட்டு ஓடிவிட்ட நிகழ்வை பகிர்கிறார். கார்பெட் அந்த நாயை பழி சொல்லவில்லை, வருத்தப்படவுமில்லை, மாறாக ஒரு நெருக்கடியை மனிதனும் நாயும் எப்படி வெவ்வேறு முறையில் எதிர்கொள்கின்றார்கள் என்பதை காட்டும் நிகழ்வாக அதை வேறோர் தளத்தில் அணுகுகிறார். 

வேட்டையாடியாக சுட்டுக்கொண்டிருந்த காலத்தில் கார்பெட் 33 பெரும் பூனை குடும்பத்து விலங்குகளைக் கொன்றிருக்கிறார். ஆனால் பின்னர் அப்புலிகளைக் காக்க குரல்கொடுக்கும் செயற்ப்பாட்டாளராக அவர் மாறிய இடம் மிக முக்கியம் என்றே கருதுகிறேன். புலியை துப்பாக்கியால் சுடுவதைக் காட்டிலும் மிகக் கடினமானது காமிராவில் சுடுவது என்று அவரே ஒப்புக்கொள்கிறார். வேட்டை மூலம் கிடைக்கும் சின்னஞ்சிறிய திருப்தி மற்றும் விருதுகளைக் காட்டிலும் வரலாற்று ஆவணமாக காலந்தோறும் தன்னுடைய பெயரைச் சொல்லும் புகைப்படங்கள் மற்றும் சலனப் படங்கள் எடுப்பது மிக முக்கியமானது எனக் கருதினார். எனினும் கார்பெட் போன்ற எத்தனையோ வேட்டையாடிகள் இந்திய மண்ணில் உலவிய கானுயிர்களை இரக்கமின்றி வெறும் வேடிக்கைக்காகவும் அன்னிய சந்தைக்காகவும்  அன்றும் இன்றும் வேட்டையாடி வருகிறார்கள் என்பது மறுக்க முடியாத வருந்தத்தக்க நிகழ்வு. அவர்கள் அனைவருக்கும் கார்பெட் போன்று மனமாற்றம் ஏற்படவில்லை, அதன் காரணமாகவே அவர் தனித்து தெரிகிறார். இன்றும்கூட வங்காளத்து புலிகளின் உடல் பாகங்கள்  சீன மருத்துவத்தில் பயன்படுவதால் அவை கண்காணிப்புகளை மீறி வேட்டையாடப்படுகின்றன. ஒற்றை கொம்பு காண்டா மிருகமும் அப்படியே.  

.   

"இயற்கையும் மனிதனும் என்று," எவரேனும் பேசத் தொடங்கும்போதெல்லாம் உண்மையில் எனக்கு சிரிப்புதான் வரும். இயற்கை என்பது எத்தனை பிரம்மாண்டமான ஒரு பேரிருப்பு, பேரியக்கம் - அதன் ஒரு மிகச்சிறிய பகுதி மனித இனம். இயற்கையும் மனிதனும் எனும் இருமை எத்தனை அபத்தமானது! மனிதன் இந்தப் பேரியக்கத்தின் ஒரு பகுதி என்றுணராது இயற்கையை தனக்கு வெளியே நிறுத்தி சம எதிரியாக பாவிக்கிறான். இயற்கையின் பிரமாண்டத்தில் ஒரு நகக்கண் அளவிற்கே இருக்கும் மனித இனம் தன்னை அனைத்துலக ரட்சகராக சிந்திக்கத் துணிவது வேடிக்கைதான். மனிதனும் இன்ன உயிர்களும் இயற்கையின் சக்தி ஊற்றிலிருந்து  பெறுவதிலும் கொடுப்பதிலும் ஒரு வித சக்தி சுழற்சி சமநிலை எப்போதும் உண்டு. ஆனால் மனிதன் அவனுடைய அதீத வாழ்விச்சை மற்றும் நுகர்வு வெறியின் காரணமாக இந்த சமநிலையை குலைக்கிறான். அனைத்தையும் உண்டு செரிக்கும் பகாசுரன் ஆகிவிடுகிறான். பிரபஞ்சமும் அதன் அத்தனை படைப்புகளும் அவன் உண்டு செரிக்க உருவாக்கப்பட்ட உணவுப் பதார்த்தங்கள். அவனுடைய ஒரே கேள்வி எதையும்  அவன் எப்படி தனக்காக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதே. உடலின் ஒற்றை விரல்நுனி மட்டும் வீங்கி சிவப்பது போஷாக்கின் அறிகுறி அல்லவே.

மனிதன் காட்டை அஞ்சுகிறான், அவன் விரும்பாத ஏதோ ஒன்றை அவனுக்கு அது நினைவூட்டியப்படி இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் அவன் காட்டை அழித்துக்கொண்டே இருக்கிறான். புலியோ கரடியோ பூனையோ தாவரன்களோ அவனுக்கு ஒரு பொருட்டல்ல. காடழித்து அதன் சிதை மீது விண்ணை முட்டும் தன் கோபுரங்களை எழுப்புகிறான். மனிதன் காட்டை அழிப்பது என்பது உண்மையில் அவனுடைய வரலாற்றை அழித்துக் கொள்வது. ஒருவகையில் தற்கொலைக்கு சமானம். இந்த ஆறுகோள் சுரண்டல் நாகரீகம் முடிவுக்கு வரவில்லை எனில் நாம் சந்திக்கப்போகும் இழப்பை எதிர்கொள்ள நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். 

காந்தி சொல்கிறார்- nature has enough in it to satisfy everyone’s need, but not to anyone’s greed.




குமாயுன் புலிகள்

ஜிம் கார்பெட்

தமிழில்- தி.ஜ.ர

காலச்சுவடு வெளியீடு 

No comments:

Post a Comment