Wednesday, November 13, 2019

களி- சிவமணியன் கடிதம்

அன்புள்ள சுனீலுக்கு,


நலம். மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 



ஒரு இலக்கிய படைப்பினை முதன் முறையாக வாசிப்பது என்பதை ஒரு புதிய ஊருக்கு செல்லும் களிப்பூட்டும் பயணம் எனக் கொண்டால், அந்தப் பயணத்தின் சரியான வழிகாட்டும் பதாகைகளாக அந்தக் கதையின் போக்கில் பொருத்தமான தருணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிமங்களையும் உவமைகளையும் சொல்லலாம். நல்ல படைப்புகளில் மட்டுமே அந்த மைல்கல்களும் பாதைகாட்டிகளும் அந்தக் கதைக்கான நோக்கத்தோடு ஒத்திசையும் வகையில் அமைந்திருக்கும். அப்படிப்பட்ட கதைகளில் களியும்  ஒன்று. 



‘நாள்முழுக்க புது கத்தியைப் போல் எவரையேனும் பதம் பார்க்கத் துடிக்கும்’


‘கோட்ட நாச்சி சல்லட சதங்கையோட இறங்கி ஆடுற மாதிர’


‘மெல்ல மெல்ல இரையைச் சுற்றி வரும் புலியைப் போல’


போன்ற உவமைகள் கதைத்தருணங்களை மேலும் சில முறை ஆழ்ந்து வாசிக்க வைத்தன. 



‘சுவர்க்கோழிகள் சென்றுகொண்டிருக்கும் இரவை கத்தி பிடித்து இழுத்து வைத்திருந்தன’


‘விளையாட்டு வீரனால் எந்த விளையாட்டையும் விளையாட முடியும்’



போன்ற அவதானிப்புகளும் கதைக்கு மேலும் வலு சேர்த்தது. 



விளையாட்டின் பின்புலம் படைப்புகளுக்கு எப்போதுமே புதிய வாசல்களை திறக்கும். இறகுப் பந்து விளையாட்டின் பின்புலத்தில் தமிழில் நான் வாசித்த முதல் சிறுகதை இதுதான்.   விளையாட்டு எந்த அளவிற்கு களிப்பினை தருமோ, அந்த அளவிற்கு கடுமையான தோல்வி கசப்பினையும், மீளமுடியாத மனக்காயத்தையும் ஏற்படுத்தும். விளையாட்டு வாழ்க்கையின் மாதிரிதான்,  ஆட்டத்தினை வெல்வதற்கு கேம், செட்களின் இறுதிப்புள்ளியை சீராக வென்றால் போதும், எல்லாப் புள்ளிகளையும் வெல்ல வேண்டியதில்லை.   சில தேவையில்லாத புள்ளிகளை விட்டுக்கொடுத்து கடந்து செல்லலாம்.  



கணேசன், சுந்தர் உறவு ஊடுபாயும் பல பாத்திரங்களின் நிழல் மோதல்களுக்கு அடியில் ஒரு மர்மமாக புனையப்பட்டிருக்கிறது .  கதையில் வாசக கற்பனைக்கு வாயப்பிருக்கும்  இடைவெளிகள் விடப்பட்டிருக்கிறது, சுந்தருக்கும் கணேசனுக்குமான மனவிலக்கத்தின் காரணம் என்ன? சந்திரனின் மீது சுந்தருக்கு  கசப்பு ஏன்?  பூரணிக்கும் கணேசனுக்குமான உறவு என்ன?நிதானமான பாத்திரமாக புனையப்பட்டிருக்கும் சந்திரனின் மரணம் ஏன் நிகழ்ந்து?



இதில் சந்திரனின் மரணம் பற்றிய இடைவிடலில்தான் என் கவனம் சென்றது.  சந்திரன் விளையாடும்போது இறந்திருக்கிறார். அதுநாள் வரை இணைஜோடியாக விளையாடிய கணேசனும், சந்திரனும், ஏதேச்சையான ஒரு நாளில் எதிராளிகளாக விளையாட தூண்டப்பட்டிருக்கலாம். ‘தேவையற்ற அசைவு என எதுவுமே இரல்லாமல்  எப்போதும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில்’ வைத்திருக்கும் சந்திரனுக்கு , ஆட்ட உச்ச தருணத்தில் பழகியிராத கணேசனின் எதிர் மூர்க்கத் தாக்குதல் ஒரு உச்ச தருணத்தில் மனக்காயத்தை (mental injury) ஏற்படுத்தி  எங்கோ முட்டி மோத மீளவழியில்லாமல் மார் உறைந்து இறந்திருக்கலாம். எப்போதுமே கட்டற்று ஆடினாலும், இறுதிப் புள்ளியை தன் வசப்படுத்தும் கணேசனுக்கு,  முன்னர் சந்திரனால், இப்போது சுந்தரினால் மனக்காயம் பெற்றாலும், வேறு விளையாட்டிற்கு தன்னை மாற்றிக்கொண்டு மீள்வார் எனத் தோன்றுகிறது. 


அன்புடன்,

சிவமணியன்

அன்புள்ள சிவமணியன்,

நலம். கடிதத்திற்கு நன்றி. சந்திரனின் மரணம் குறித்து சுவாரசியமான அவதானிப்பு. இதை இன்னொரு கதையாக எழுதிப்பார்க்கலாம். ஆனால் இந்தக்கதைக்குள் அவர் எதிரே விளையாடியதற்காக தடம் ஏதுமில்லை என்றே எண்ணுகிறேன். 

அன்புடன் 
சுனில் 

Sunday, November 10, 2019

களி - பிரபு முருகானந்தம் வாசிப்பு

(பிரபு முருகானந்தம் எழுதிய கடிதம்)

களி சிறுகதை வாசித்தேன்.  காரைக்குடியில் நீங்கள் கூறக் கேட்கையில் பிடிபடாத தளங்கள் கதையை வாசிக்கையில் திறந்து கொண்டது.  நந்தவனத்தில் தந்தையின் உயிர் பிரியும் கணம் சுந்தர் கண்டங்கள் தாண்டி வசிக்கின்றான். அவரது மரணம் அவனை ஊர் திரும்ப வைக்கின்றது. வந்ததும் தந்தையின் தொழிலைச் தொடரச் செய்கிறது. தொழிலில் தந்தையை விடவும் சாமர்த்தியக்காரன் சுந்தர். வசந்த மாளிகையை கிட்டத்தட்ட முற்றிலுமாக புதுப்பின்கின்றான். வருமானம் பெருகுகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக அவன் தந்தையின் தடையங்கள் வசந்த மாளிகையில் இருந்து மறைந்து விடுகின்றது. ஆனால் அவன் மனம் தந்தையை தேடும் களம் வசந்தை மாளிகை அல்ல. நந்தவனம். அதுதான் சந்திரனின் இயல்பான களம். அவரது இறுதிச் சாயலாக அங்கு எஞ்சியிருப்பது கணேசன் மட்டும் தான்.  அவன் தந்தையின் மரணம் மனதில் ஏற்படுத்தியிருக்கும் வெறுமையை கணேசன் ஒரு கணமேனும் நிரப்ப மாட்டாறா என சுந்தரின் மனம் தவிக்கின்றது. அவன் கணேசனை சந்திரனாக கற்பனை செய்ய முயற்சிகின்றான். அது கணேசனுக்கும் அது தெரியும்.  இளமையிலியே மைந்தனை இழந்த கணேசனின் மனமும் சுந்தரை மகனாகச் சென்று அறவனைக்கத் துடிக்கின்றது.  ஏனோ சுந்தர் வாங்கித் தந்த ‘ஆஷ்பி’ ராக்கெட்டை மடியில் அமர்த்தி குழந்தையாக பாவிக்க முடிந்த கணேசனால் சுந்தரைச் மைந்தனாகக் தழுவிக்கொள்ள இயலவில்லை.  இவ்விரு மனங்களின் அன்பும், அகங்காரமும் ஆடும் ஆட்டம் களி.   

Wednesday, November 6, 2019

களி – சுசித்ரா, கார்த்திக்- எதிர்வினைகள்


அன்புள்ள சுனீல்,

கதையை இன்று தான் வாசிக்க நேரம் அமைந்தது, தாமதத்துக்கு மன்னிக்கவும். 

கதை மிகச்சிறப்பாக இருந்தது. உங்கள் கதைகளிலேயே மிகவும் நுண்ணுய தளங்களை தொட்டவற்றில் ஒன்று என சொல்லலாம். அவை எல்லாம் பின்னியிருந்த விதம், பல அடுக்குகளை கோத்து வைக்கும்போது உருவாகும் மயக்கம், எல்லாம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. 

ஒரு பக்கம் கணேசன் - சந்திரனுக்கு இடையேயான முந்தைய தலைமுறைபாணி உறவு. ஒரு வழியில் அந்தஸ்து பார்க்காத நட்பு. அதன் அடியில் அவர்களுடைய வெவ்வேறு ஆளுமைகள், அதன் வெளிப்பாடு. 

இருவருக்கும் அடிப்படையாக வாய்த்த அதிர்ஷ்டத்தில் ஒரு சமமின்மை உள்ளது - வாழ்க்கையில் பொதிந்துள்ள ஆதார அநீதி என்று அதனை சொல்லலாம். பிறப்பில் ஆரம்பித்து தொடர்கிறது. ஆனால் அவர்களுடைய ஆளுமைப்பண்புகளே விதி போட்ட புள்ளிகளை கோலமாக்கி அவ்வாழ்க்கைகளை தீர்மானிக்கிறது. உதாரணம் கணேசன் படிக்காமல் போவது, அவன் தென்காசிக்கு போய் மாட்டிக்கொள்ளும் இக்கட்டு இத்யாதி. 

இவர்கள் இருவருக்கிடையேயான முரண் கதைக்குள் தெளிவாக இருந்தாலும் அவர்களது உறவும் நெருக்கமும் சற்று பூடகமாக சொல்லப்படுகிறது. என்னை மிகக்கவர்ந்த பகுதி இது. குறிப்பாக கணேசன் குடித்து விட்டு படுத்திருக்கையில் சந்திரன் அவன் முன்னால் தோன்றும் இடம். இறுதிக்களத்தில் கணேசன் கிட்டத்தட்ட சந்திரனாகவே மாறுவது.  கணேசன், சந்திரன், இருவரும் அவரவர்கள் விதத்தில் அகங்காரிகள். அவர்களுக்கிடையேயான உறவில் சமநிலை என்பது என்பது எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று யோசிக்க வைத்தது.

இன்னொரு திரி இறந்துபோன சந்திரனுக்கும் அவன் மகன் சுந்தருக்குமான உறவு. ஒரு விதத்தில் மொத்தக்கதையையும் இந்த ஒரு உறவுச்சிக்கலின் விரிவாக்கம் என்று படிப்பதற்க்கான இடம் கதைக்குள் இருக்கிறது.

மூன்றாவது கணேசனுக்கும் சுந்தருக்குமான உறவு. சமூகப்படிநிலை, அந்தஸ்து, என்பதைத்தாண்டி அப்பாவின் நண்பர் என்ற அகங்காரமோதலையும் தாண்டி ஒரு மாற்று அப்பா உறு என்ற இடம் வரை வாசிக்க வைத்தது.

சாதி, கல்வி, அந்தஸ்து, உறவுகள், அன்பு, என்று மனிதர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகளையும் அதில் விளையும் அகங்காரத்தையும் கதை பல தளங்களில் தொட்டு விரிக்கிறது. இந்தகக்தையை ஷட்டில் விளையாட்டு போன்ற வித்தியாசமான கதைகளத்தின் பின்னணியில் அமைத்தது இன்னும் வலு சேர்க்கிறது. இறகுப்பந்து மென்மையானது, ஆனால் அதை அடித்து அடித்து மட்டையாடுகிறார்கள். அகங்காரத்தை எவோக் பண்ண நல்ல குறியீடு. 

தமிழகத்துச் சிற்றூர்களில் வெவ்வேறு விளையாட்டுகளுக்கு இப்படி குழு உருவாக்கி கேம் ஆடி ஊருஊராகச்சென்று கப் அடித்து வரும் ஒரு subculture உள்ளது. எங்கள் ஊர் பக்கம் ஹாக்கி அப்படியான ஒரு விளையாட்டு. என் நண்பன் ஒருவன் கல்லூரி படிக்கையில் யோகா சேம்பியன்ஷிப் என்று சொல்லி இந்தியா முழுவதும் சுற்றியிருக்கிறான் - பெரும்பாலும் சிற்றூர்கள், கிராமங்கள். இலக்கியத்தில் இதெல்லம் அதிகம் எழுதப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. உங்கள் கதையில் அந்த பின்னணி மிக இயல்பாக வந்திருக்கிறது.

மிகச்சிறப்பான கதை சுனீல். வாசித்து உடனே எழுதுகிறேன். கொஞ்சம் அசைபோட்டால் வேறு வகைகளிலும் கதை திறந்துகொள்ளும் என்று நினைக்கிறேன்.

வாழ்த்துக்கள்.

சுசித்ரா

----

மூன்று ஆண்கள் தனிப்பட்ட முறையில் வெவ்வேறு ஆளுமைகள் , வெவ்வேறு காலகட்டங்கள் அவர்களிடையேயான தனிப்பட்ட உறவுகள்.அந்தரங்கமான உறவுகள் - பள்ளி கால நண்பன் , பாட்மிண்டன் சொல்லி தரும்
ஆசிரியன் ,அப்பாவின் நண்பர் .

குடும்ப அமைப்பில் ஒரு லேயர் , குடும்பத்தில் அவர்களின்  பங்களிப்பு , அவர்களின் மேல் குடும்பத்தின் பாதிப்பு (சுந்தர் படிப்பு குறித்து அப்பா தக்க இடத்தில் மடை மாற்றி விடுதல் ) குடும்பத்தில் அவர்களின் இடம் , அணுகுமுறை அதில் காணக்கிடைக்கும் பேதங்கள்.
குடும்ப ரீதியான உறவு முறைகள் ( மாமா , தாத்தா , தங்கச்சி ) 

சமூக அமைப்பில் அவரவர்களின் இடம் , அது சார்ந்த privilege , அது அளிக்கும் பாதுகாப்பு ( சுமூகமான காதல் திருமணம் vs கைகலப்பில் முடியும் காதல் ) அதன் அடுக்குமுறை ( முதலாளி /தொழிலாளி , நட்பு vs மரியாதை)

இதையெல்லாம் இணைத்து லாவகமாக ,உறுத்தாமல மிக அழகாக பின்னப்பட்டதும் தான் கதையின் ஹைலைட்டே.

Badminton game என்பது ஒரு proxy, அகத்தில் அந்தரங்கமாக நடக்கும் விஷயம் புறத்தில் ஒரு ஆட்டமாக உருக்கொள்கிறது .

இதிலிருந்தும் முளைத்துச்  செல்லும்
பல்வேறு கிளைகள் , சுந்தரின் அப்பா மீதான கோபம் , சுந்தரோடு இணைந்து ஆட என்னும்
கணேசனின் விழைவு ...அதை மூர்க்கமாக மறுக்கும் சுந்தர் மனநிலை ..மற்றவர்களிடம் தோற்றாலும் சுந்தரிடம் தோற்றுவிட முடியாத / கூடாத ஒரு மனநிலை ..

தன்னாலும் சங்கரனைப்போல ஆட முடியும் என்று அறிவிக்கும் புள்ளி இன்னும் நுட்பமா இருக்கு ..
i can be him , i could have been him , நண்பனை அந்தரங்கமாகவும் , புறவயமாகவும் internalise செய்ய முடிகின்ற ஒரு புள்ளி .

இந்த ஊடுபாவுகளை subtle ஆக சொல்லியிருந்தது சிறப்பு.- 

கார்த்திக் 

Sunday, November 3, 2019

களி


(2019 ஆண்டு தினகரன் தீபாவளி மலரில் வெளியான கதை. சற்றே தணிக்கை செய்யப்பட்டு இந்தக்கதை மலரில் வெளியானது. இங்கே தணிக்கை எய்யாமல் அளிக்கிறேன்) 

விசையுடன் சுந்தரின் அடிவயிற்றை நோக்கி சீறி வந்த இறகுப் பந்தை தடுப்பதற்கு முடியவில்லை. அடிவயிறு சுரீர் என எரிந்தது. கணேசன் எகிறிக் குதித்து ஸ்மாஷ் அடித்து முடித்ததும் முதுகை வளைத்து ஷட்டில் ராக்கெட்டை அவருடைய ஆண்குறிக்கு நேராக ஆட்டி “ஒம்மால..” என்றார். ஒவ்வொருமுறை புள்ளி எடுக்கும்போதும் இப்படிச் சரளமாக ஏதோ ஒரு ஆபாச வசை வந்து விழும்.  வியர்த்து சோர்ந்து தலைக் கவிழ்ந்து நடந்தான். நெஞ்சுக்கூட்டில் இதயம் அதிவேகமாக அதிர்ந்தபடி இருந்தது. உடல்முழுவதும் அதன் துடிப்பை உணர்ந்து கொண்டிருந்தான். ஆழ்ந்து மூச்சிழுத்து ஆசுவாசிக்க முயன்றான். இப்போதெல்லாம் வழமைக்கு மீறி இதயம் துடிக்கும்போது அச்சத்தால் உடல் மேலும் வியர்த்து ஒழுகுகிறது. அண்மைய சில மாதங்களாக ஆடுகளத்தில் மட்டுமே அவன் இந்த பதட்டத்தை உணர்கிறான். ஏழு மாதங்களுக்கு முன் ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனுடைய தந்தை சந்திரன் இதே ‘நந்தவனம்’ இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கில் ஆட்டத்தின் உச்சக் கணத்தில்  மயங்கிச் சரிந்தார். மருத்துவமனைக்குள் நுழைந்தபோதே சடலம் என அறிவித்தார்கள் மாரடைப்பு உயிரை நிறுத்தியிருந்தது. அதன்  பின் ஒவ்வொருமுறை ஆடுகளத்தில் இதயம் கட்டு மீறும் தோறும் சுந்தர் அச்சத்தால் பீடிக்கப்பட்டான். ஆவேசமும் ஆற்றாமையும் சேர்ந்துக்கொள்ளும். நெற்றிப்பொட்டில் நாளத் துடிப்பை உணர்வான். அப்போது அவனுடைய முகமும் கரங்களும் சில்லிட்டு உணர்வற்று போகும்.  

தனித்து தளும்பிக் கொண்டிருக்கும் கீழ் ரப்பைகளும் ரத்தச் சிவப்பு சிடுக்குவரிகள் பாயும் கண்களும் கணேசனை பெரும் குடியன் என நிறுவும். பனியனைக் கழட்டி வியர்வையைப் பிழிந்தார். “என்ன சார் நைட்டு குடிச்ச பீரெல்லாம் வேர்வையா ஊத்துதா” சிரித்துக்கொண்டே கேட்டான் ராஜேஷ், விளையாட்டில் சில மாதங்களாக அவருடைய இணை. மெலிந்த தேகம். அவர் உடல் சற்றே கூடுகட்டி விலா எலும்புகள் ஆர்மோனியக் கட்டைகள் போல் மேலும் கீழுமாக துருத்திக்கொண்டிருந்தன. குடியர்களுக்கே உரிய பானை வயிறு. “ராஜேஷு அதெல்லாம் ஒன்னுக்கு வரதாவைங்க குடிக்கிறது. நமக்கு எதுக்கு அந்த கருமம். எப்பவுமே ஹாட் தான்”. சுந்தர் நிலைக்காற்றாடிக்கு முன் தன்னை உலர்த்திக் கொண்டிருந்தான். இதயத் துடிப்பு இன்னும் சமனடையவில்லை. விளையாட்டு அரங்கத்தின் கூரைத் தகரத்தில் விழுந்த தூறல் பேரோசையாக உள்ளே எதிரொலித்துக் கொண்டிருந்தது. ஷட்டில் ராக்கெட்டை எரிச்சலில் அசட்டையாக நாற்காலியின் மீது வீசினான். கணேசன் நமுட்டுச் சிரிப்புடன் அவனைக் கடந்தார். 

ஒரேயொருமுறை ஒருமுறை இந்தக் கிறுக்குக் கிழவனை வென்றாக வேண்டும். இத்தனை மாதங்களில் ஒருமுறை கூட அது இயலவில்லை எனும் எண்ணம் ஆற்றமையாக அவனுள்ளிருந்து குமைந்தது. முன்பைப்போல் அவர் இப்போது ஒன்றும் வெல்ல முடியாதவர் அல்ல. மற்ற இரண்டு இணையர்களிடம் அவ்வப்போது தோற்றிருக்கிறார். அவரை வென்றவர்களை சுந்தர் பலமுறை வென்றிருக்கிறான். இன்று என்றும் இல்லாத அளவிற்கு வெற்றிக்கு வெகு அண்மையில் இருந்தான். எப்போதும் வலையை சீய்த்துக்கொண்டு வரும் கணேசனின் ஸ்மாஷ்கள் வலையைக் கடக்க முடியாமல் திணறின. வெகு அரிதாகவே அவர் அடிப்பது களத்திற்கு வெளியே விழும். அன்று ஏதோ லயப் பிசகு போல் நான்கைந்து முறை இறகுப்பந்து வெளியே சென்று விழுந்தது. ஆட்டம் தொடங்கியதில் இருந்தே சுந்தரும் சந்தானமும் முன்னிலையில் இருந்தார்கள். ஒருகட்டத்தில் 19-13 என்ற புள்ளிக் கணக்கில் ஏறத்தாழ வென்றுவிட்ட மதர்ப்புடன் இருந்தபோது கணேசன் தொடர்ச்சியாக எட்டுப்புள்ளிகள் எடுத்து ஒற்றை ஆளாக அவர்களை மூச்சிறைக்கச் செய்து வென்றார். அவர் வயதிற்கு சந்நதம் கொண்டவர் போல் ஆடினார். ஆடுகளத்தின் எல்லா மூலைகளுக்கும் முழு விசையுடன் ஓடினார். டிராப்பும் ஸ்மாஷும் மாறி மாறி விழுந்தன. இறுதி புள்ளிக்காக மட்டும் இரண்டு நிமிடம் போராடினார்கள். ஆனால் எல்லாம் வீண். 

கணேசன் அணிந்திருந்த விளையாட்டு சப்பாத்துக்களில் இருந்து இரண்டு கால்களின் கட்டைவிரல்களும் கிழிசலை மீறி எட்டிப்பார்த்தன. அவர் காலுறை அணிவதில்லை. அவை சந்திரனுடைய பழைய சப்பாத்துக்கள்.   ‘நந்தவனத்தில்’ கணேசன் விளையாடுவதற்கான வருடச் சந்தாவை சந்திரன் தான் அளிப்பார். ‘வசந்த மாளிகை’ அணியின் வரவு செலவுகளை அவரே பார்ப்பார் என்பதால் கணேசனிடம் அவர் எந்தத் தொகையும் கேட்டதில்லை. 
முப்பது வருடங்களுக்கு முன் முதன்முறையாக பச்சைநிற அம்பாசிடர் கார் வாங்கியது முதல் கணேசன்தான் சந்திரனுடைய காரோட்டி. அதற்கும் முன்பு அவர்கள் பத்தாம்  வகுப்புவரை வகுப்புத் தோழர்கள். அப்போது அவர்கள் வேலங்குடி ‘போல் ஸ்டார்’ கால்பந்து அணியின் நட்சத்திரங்களாக ஊர் ஊராக பயணித்தார்கள். சுற்றித்திரிந்த சந்திரனை பொடனியில் போட்டு அவருடைய தந்தை ராமநாதன் கல்லூரிக்கு அனுப்பினார். கல்லூரி முடித்து வந்ததும் சந்திரன் அவருடைய அப்பாவின் நகைக்கடையை நிர்வகிக்கத் தொடங்கினார். கணேசன் அப்போது கால்பந்து வட்டாரத்தில் பிரபலமான கோலி. பத்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு ஊர் ஊராக விளையாடச் சென்றார். தென்காசிக்கு விளையாடச் சென்ற இடத்தில் ஒரு கள்ளவீட்டுப் பெண்ணை காதலித்து, அவளை தனித்து சந்திக்க முயன்று வகையாக சிக்கினார். “பறப் பயலுக்கு எங்கூட்டு பொண்ணு கேக்குதோ” என மூன்று நாட்கள் அன்ன ஆகாரம் இன்றி கட்டிவைத்து அடித்தார்கள். செய்தியறிந்து ராமநாதன் தான் மெய்யப்பன் அம்பலத்தையும் கூட்டிக்கொண்டு நேரில் பேசி அழைத்து வந்தார்.  மொட்டைத்தலையுடன் ஊருக்கு வந்த கணேசன் மனம் கசந்து விளையாட்டை நிறுத்திவிட்டு, சிங்கப்பூருக்கு பிழைக்கச் சென்றார். சந்திரனுக்கும் பூரணிக்கும் திருமணம் ஆகி மூன்றாண்டுகளுக்கு பின்னர் கணேசனுக்கு மணமானது. அதுவும் ஒரு துரதிஷ்ட நிகழ்வுதான். ஊருக்கு வந்திருந்த கொஞ்ச காலத்தில் சித்தாள் ஒருத்தி அவரால் கர்ப்பமானதாக பஞ்சாயத்து கூடியது. ஒரேசாதி என்பதால் பெரியவர்கள் பேசி முடித்து வைத்தார்கள். திருமணம் முடித்த கையோடு சிங்கப்பூருக்குத் திரும்பினார். அவருடைய ஒரே மகன் ஒன்றரை வயது கடந்தும் தவழவில்லை என்பதால் ஊர்த் திரும்பியவர் பின்னர் சிங்கப்பூர் செல்லவில்லை. ஆறேழு வருடங்கள் அவனைச் சுமந்துகொண்டு ஆசுபத்திரி ஆசுபத்திரியாகத் திரிந்தார். வலிப்பும் சேர்ந்துகொண்டது. ஒரு மழைநாள் இரவில் அவன் மூச்சுத் திணறி இறந்தும் போனான். கட்டற்று குடித்தார். வைத்தியச் செலவிற்கு வாங்கிய கடன் வேறு அவர்களை நெருக்கியது. ஆறேழு மாதங்கள் பொறுத்துப்பார்த்த அவருடைய மனைவி “உன் சங்காத்தமே வேணாம்... அத்துவிடுங்க” என்று பிறந்த வீட்டிற்கே போய்விட்டார். எலி மருந்து குடித்து ஆசுபத்திரியில் கிடந்தவரை  சந்திரன்தான் மெதுவாக மீட்டு கூடவே வைத்துக்கொண்டார். மண் தரையின் மீது உயரமான ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள் போட்டு, மூலைக்கு ஒரு குழல் விளக்கை நட்டு ‘நந்தவனத்தை’ உருவாக்கிய  தொண்ணூறுகளின் மத்தியில் இருந்தே இணைந்து இறகுப்பந்து விளையாடத் தொடங்கினார்கள். இருவருமே இறகுப்பந்திற்கு புதியவர்கள். ஆனால் குறுகிய காலத்தில் அதன் நுண்மைகளை பழகினார்கள். விளையாட்டு வீரனால் எந்த விளையாட்டையும் விளையாட முடியும், ஏனெனில் எல்லா விளையாட்டின் அடிப்படைகளும் ஒன்றே என்று உணர்ந்தார்கள். ‘வசந்த மாளிகை’ எனும் பெயரில் எட்டு பேர் கொண்ட அணியை உருவாக்கினார்கள். ‘நந்தவனத்தின்’ சிறந்த ஆட்டக்காரர்கள் மட்டுமே அவ்வணியில் விளையாட முடியும். ஒவ்வொரு வருடமும் மாவட்டத்தில் நடக்கும் மூன்று டோர்னமென்ட்களில் பங்கேற்றார்கள். எப்போதுமே வெற்றியாளர்கள் அல்லது இரண்டாம் இடம். 

நாளடைவில் அவர்களுக்கு காலை ஒருமணிநேர விளையாட்டு பெரும் போதையென ஆனது. ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உடற்பயிற்சி செய்து ஐந்தரைக்கு எல்லாம் ‘நந்தவனத்தில்’ விளையாடத் தொடங்கினார்கள். ஒருநாள் விளையாடவில்லை என்றால் கூட சோர்வு தொற்றிக்கொள்ளும். நாள்முழுக்க புது கத்தியைப் போல் எவரையேனும் பதம் பார்க்கத் துடிக்கும். சந்திரனின் ஆட்டத்தில் தேவையற்ற அசைவு என எதுவுமே இருக்காது. எப்போதும் ஆட்டத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். வயதிற்கும் உடல்வாகிற்கும் சம்பந்தமில்லாமல் உடல் வளையும். பரபரப்பு ஏதுமின்றி நிதானமாக ஆடுவார். எதிராளியின் ஆற்றலை வற்றச் செய்வதே அவர் வழிமுறை. முழுவதும் சோர்ந்ததும் எளிதாக கவனத்தை குலைத்து, போக்கு காட்டி வெல்வார். மெல்ல மெல்ல இரையைச் சுற்றி வரும் புலியைப் போல. கணேசன் நேரெதிராக மின்னலைப் போல் விளையாடுவார். அவருடைய ஆட்டம் ஆக்ரோஷமும் அளப்பறியா வேகமும் கொண்டது. கட்டற்றவர். பல நேரங்களில் அவர் எப்படி இப்படி அடித்தார், எப்படி இந்தப் பந்தை எடுத்தார் என தர்க்கப்பூர்வமாக விளக்கிக்கொள்ள முடியாது. சந்திரனின் மொழியில் சொல்வதானால் “கோட்ட நாச்சி சல்லட சதங்கையோட இறங்கி ஆடுற மாதிரி”. ஒருவரையொருவர் நிரப்பினார்கள். விளையாட்டின் இந்த இயல்புகள் அவர்களுடைய தனிவாழ்விலும் தொடர்ந்தன. செருப்பை வாயிலில் கழட்டி வைக்கும் முறையிலிருந்து, மது அருந்துவது வரை எல்லாவற்றிலும் சந்திரன் நிதானம் கடைப்பிடித்தார். கணேசனுக்கு எல்லாமும் மீறல்தான். கணேசன் நாள் முழுக்க சந்திரனுடனேயே திரிவார். 

வெளியே தூறல் வலுக்கத் தொடங்கியது. அவர்களுடைய களத்தில் அடுத்து ஆட வேண்டிய இஞ்சினியர்கள் அணி சரியாக காலை 6.30 க்கு வந்து ‘டச்சு’ ஆடத் தொடங்கியிருந்தார்கள். கணேசன் மழைக்கு ஒதுங்கி புகையிழுத்துக்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். இரவெல்லாம் தூறி பாதையில் சிறு சிறு செம்மண் குட்டைகள் தோன்றின. இரவுக்கு முந்தைய கணம் போல் அந்தக் காலையில் வானம் கறுத்திருந்தது. சுவர்க்கோழிகள் சென்றுகொண்டிருக்கும் இரவை கத்தி பிடித்து இழுத்து வைத்திருந்தன. கணேசன் புகைத்து முடிக்கும் வரை சுந்தர் காத்திருந்தான். சிகரெட்டின் இறுதி கனல்துண்டு தேங்கிய நீரில் சீறி அணைந்தது. கணேசன் ஓடிச்சென்று சற்று தொலைவில் இருந்த சாம்பல்நிற ஸ்கோடா காரை எடுத்துக்கொண்டு வந்தார். கறுப்புச் சக்கரங்களில் செம்மண் சேறு படிந்திருந்தது. சுந்தர் ஏறிக்கொண்டான். அவர்கள் இருவருக்கும் இடையே உறைந்த மௌனம் அவர்களை வெகுதொலைவில் நிறுத்தியது. மகரநோன்பு பொட்டலைக் கடந்து செல்லும்போது சுந்தரை இளம் வயது நினைவுகள் சூழ்ந்தன. சிறுவனாக இருக்கும்போது கணேசன் அவனை சைக்கிளில் அமர்த்தி இந்தப் பொட்டலைக் கடந்ததும் உள்ள ஆனந்த் டாக்கீஸில் “ராஜா சின்ன ரோஜா” பார்க்க அழைத்து வந்தார். ஏற்காட்டு உண்டு உறைவிட பள்ளியில்  படித்துக்கொண்டிருந்தபோது விடுமுறை காலங்களில் அவனுக்கு இறகுப் பந்தை பழக்கியவர் அவர்தான். பிலானியிலிருந்து கல்லூரி விடுமுறைகளில் ஊருக்கு வரும்போது அவருடன்தான் விளையாடுவான். சந்திரன் எப்போதும் அவனுடன் சேர்ந்து விளையாட மாட்டார். “ஒரு குடும்பத்துக்காரங்க ஒண்ணா வெளாடக் கூடாது” என்பார். கணேசனின் இணையாக சுந்தர் எத்தனையோ முறை விளையாடி வென்றிருக்கிறார்கள். “தம்பி நம்மள விடவும் நல்ல ஆட்டக்காரன்” என்று சந்திரனிடமே கணேசன் சொன்னதுண்டு.  

வீட்டிற்கு வந்து வண்டியை நிறுத்திவிட்டு இறங்கியதும். “இந்தாங்க அண்ணே காபி” என்று பூரணி கணேசனிடம் லோட்டாவை நீட்டினார். சுவரில் சாய்ந்து மடிப்பு குலையாத நாளிதழை விரித்துக்கொண்டு ஆற அமர குடித்தார். சுந்தரின் குழந்தைகள் அஜயும் ஆராதனாவும் இரவுடைகளோடு வெளியே வந்து உற்சாகமாக தாத்தாவின் அருகே அமர்ந்தார்கள். தாளை மடித்துவிட்டு அவரும் வாயால் பீப்பி ஊதுவது, வாத்து போல் ஓசை எழுப்பது, காசை காணாமல் ஆக்கும் வித்தையை செய்வது என உற்சாகமாக விளையாட ஆரம்பித்தார். சுந்தர் சிறுவயதில் இருந்தபோது அவனுக்கு செய்து காட்டிய அதே வித்தைகள்தான். கடுப்புடன் “ஸ்கூலுக்கு கெளம்பனும்” என்று சொல்லி அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றான். ராஜியிடம் எரிச்சலுடன் “அந்தக் கிழவரிடம் குழந்தைகளை அனுப்பாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கிறேன்” என ஆங்கிலத்தில் கடிந்தான். ஒன்றும் சொல்லாமல் பிள்ளைகளை முறைத்தபடி அவர்களை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். இரவாடையில் இருந்தாள். கோபித்து கடந்து சென்றபோது உள்ளுக்குள் கிளர்ந்தான். திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகளில் அவள் மேலும் மேலும் என அழகாகிக் கொண்டிருப்பதாக எண்ணினான். அவர்களுடையது காதல் திருமணம் இருவீட்டு சம்மதத்துடன் நிகழ்ந்தது.    

குளித்து தந்தநிற சட்டை கால்சட்டையை அணிந்து வந்தான். அது சந்திரனின் பாணி. பூரணியின் கால்தொட்டு வணங்கினான் “இன்னிக்கு ரெஜிஸ்ட்ரேஷன்” என்றான். “ஒன்னும் ஓராயிரமா இருப்ப... அப்பாட்ட ஆசிர்வாதம் வாங்கிக்கப்பா” என்றார். படமாகத் தொங்கிக்கொண்டிருந்த தந்தையை கண்மூடி வணங்கும்போது ஏனோ உள்ளே ஒரு கடும் கசப்பை உணர்ந்தான். உணவு மேஜையில் உண்டுகொண்டிருக்கும்போது பூரணி அவனருகே அமர்ந்து 

“தம்பி..கணேசண்ணன் பணம் கேட்டிருந்துச்சே” என்றார்.
“எதுக்கு?”
“ஓடு மாத்தணும்னு சொன்னாருன்னு அன்னிக்கே சொன்னேனப்பா”
“ம்”
“ஐப்பசிக்கு இன்னும் ஒருவாரம் தான இருக்கு..இப்பவே ஒழுகுதாம்”
“ம்.. பாப்போம். காசு கொடுத்தா குடிச்சு அழிக்கிறது. அந்தாளு குடிச்சது பத்தாதுன்னு உம்புருசனயும் குடிக்க வெச்சு கொண்ணேப்புட்டாரு”
“விடுப்பா, அதெல்லாம் பழய கத, உங்கப்பாரு எப்பவுமே அளவு தாண்ட மாட்டாரு. எல்லாம் விதி!” 

“சரி. ஏன் இத அவரு வாயத்தொறந்து கேக்க மாட்டாராமா?”
“என்கிட்டே கேட்டா என்ன.. உன்கிட்ட கேட்டா என்ன.. எல்லாம் ஒண்ணுதானே”

“நிச்சயம் ஒண்ணு இல்ல. மொதலாளி விசுவாசம் கூட கெடயாது அந்த ஆளுக்கு. காலேல ஆட்டத்துல ஜெயிச்சுட்டு எவ்வளோ அசிங்கமா செஞ்சாரு தெரியுமா? நிதம் இதேமாதிரி தான். வாயதொறந்தாலே நாராசம். அந்த ஆளால நமக்கு சல்லிக்காசு பிரயோஜனம் இல்ல.” இதயத் துடிப்பு தாறுமாறாக எகிறியதை உணர்ந்தான். 

பூரணி மெளனமாக அகன்றாள். சுந்தர் தயாராகி வரும்போது பூரணி கணேசனிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருந்தாள். சுந்தர் அவர்களைக் கடந்து காருக்குச் சென்றான். உரையாடலை விட்டுவிட்டு வேகவேகமாக அவனுக்கு முன் காருக்குள் ஏறினார் கணேசன். ‘வசந்த மாளிகையை’ நிர்வகிக்க சுந்தர் அவனுடைய லண்டன் வேலையை விட்டுவிட்டு வர வேண்டி இருந்தது. வந்த சில மாதங்களில் கடையின் அமைப்பை மாற்றினான். சென்னையிலிருந்து விளம்பர நடிகர்களை அழைத்து புதிய விளம்பரப்படம் ஒன்றை படமாக்கினான். முழுவதும் குளிர்சாதன வசதி செய்து, சீருடை அணிந்த இளம் பெண்களை வேலைக்கு அமர்த்தினான். சந்திரன் செய்துகொண்டிருந்ததைக் காட்டிலும் இருமடங்கு அதிக வியாபாரத்தை ஆடி சீசனில் செய்து காட்டினான். அப்பாவின் ஆட்கள் எவரையும் அவனாக வேலையை விட்டு நீக்கவில்லை என்றாலும் மாறிவரும் சூழலை உணர்ந்தவர்கள் இனியும் தங்கள் அழுக்கு வேட்டியுடன் சைக்கிளில் கடைக்கு வரமுடியாது என்பதை புரிந்துகொண்டார்கள். தங்களைப் பொருத்திக்கொள்ள முடியாத திகைப்பில் ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டு வெளியேறினார்கள்.  

கடையில் நாள் முழுக்க சுந்தரின் கண் பார்வை படும் இடத்திலேயே கணேசன் நின்றிருந்தார். வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் இல்லாத வகையில் நாற்காலிகளை இழுத்துப் போட்டார். கண்காணிப்பு கேமரா அறையில் அமர்ந்து கடையின் நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டிருந்தபோது கதவைத்தட்டி காபி கொண்டு வந்து கொடுத்தார். முகம் பார்த்து சிரிக்கக் கூட செய்தார். சுந்தர் அவற்றை கவனித்தாலும் ஒருவித அசட்டையுடன் அவரைக் கடந்தான். இரவு கணக்குப் பார்த்து முடித்ததும் சுந்தர் கிளம்பியபோது மழை தூறிக்கொண்டே இருந்தது.
“தம்பி..” கணேசனின் தயக்கமான குரல் ஒலித்தது. கண்ணாடி வழி அவனைப் பார்த்தார். என்ன என்பது போல் தலையுயர்த்தினான். 

“வீட்டுல ஒழுகுதுப்பா, ஓடு மாத்தோனும், தங்கச்சிக்கிட்ட காசு கேட்டிருந்தேன்” என்றார் தயங்கித்தயங்கி. கணங்கள் நீடித்த மௌனம் கணேசனுக்கு பெரும் வாதையாக இருந்தது. சிலைந்து அமர்ந்திருந்தவன் சில கணங்களுக்கு பிறகு   
“மாமா வண்டிய உங்க வீட்டுக்கு விடுங்க” என்றான்.
நான்கைந்து மாதங்களாக அவன் கணேசனை மாமா என்று அழைப்பதில்லை. அவர்களுக்குள் மிகத் தேவையான ஓரிரு சொற்களுக்கு அப்பால் எதுவுமே இந்த மாதங்களில் பரிமாறிக்கொள்ளப்படவில்லை எனும் சூழலில் சுந்தர் அப்படி அழைத்தது அவரை நெகிழச் செய்தது. “இருக்கட்டும் தம்பி, இருட்டிருச்சு, இப்ப வேணாம் இன்னொருநாள் போவோம்”       
  
“உங்க வீட்டுக்கு ஓட்டுங்க” என்றான் தீர்மானமாக. 

வண்டி ஒரு குறுகிய சந்தின் முனையில் நின்றது. வண்டியைவிட்டு இறங்கி இருவரும் நடந்தார்கள். சற்றே பெரிய நீர் மொட்டுக்கள் மண்ணில் தெறித்துக்கொண்டிருந்தன. கீழே ஓடிக்கொண்டிருந்த கால்வாயில் இருந்து அழுகிய நாற்றம் வீசியது. சிறிய பாலத்தைக் கடந்ததும் இறங்கிய சரிவில் மூன்றாவது வீட்டிற்குள் நுழைந்தார்கள். உள்ளே போய் விளக்கைப் போட்டார். மது புட்டிகளும், புகையிலை பாக்கெட்டுகளும், சிகரெட் துண்டுகளும் இறைந்து கிடந்தன. நிறம் உதிர்ந்த பச்சைச் சுவரில் அவருடைய ‘ஆஷ்பி’ ஷட்டில் ராக்கெட்டை ஒரு ஆணியில் மாட்டியிருந்தார். அதையே சில நொடிகள் பார்த்துக் கொண்டிருந்தான். சுந்தர்தான் அவருக்காக ஒருமுறை லண்டனில் இருந்து அதை வாங்கிக்கொண்டு வந்திருந்தான். கணேசனும் சந்திரனும் அரைக்கால் சட்டையில் தங்கள் ராக்கெட்டுகளுடன் ஒரு கோப்பையை கையில் ஏந்தி வாய்கொள்ளா சிரிப்புடன் நின்றிருக்கும் புகைப்படம் ஒன்று சட்டமடிக்கப்பட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது. தரையில் ஐந்தாறு பாத்திரங்களை வைத்திருந்தார். அவற்றில் நீர் சொட்டிக்கொண்டிருந்தது. அதைத்தவிர இன்னும் மூன்று நான்கு இடங்களில் தரையில் நீர் வினோத உருவங்களில் பரவியிருந்தது. வீட்டில் இருந்த ஒரே பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்துவந்து “உக்காருங்க தம்பி” என்றார். “இருக்கட்டும் மாமா. உள்ளார ரொம்ப வாடகாத்து வருதே.” என்றான். பிறகு சுற்றிமுற்றிப் பார்த்துவிட்டு “ஓடு மாத்த வேணாம், நம்ம கண்ணன் கிட்ட சொல்றேன், குரோமியம் தகடு போடச் சொல்லுவோம், வெய்யக் காலத்துலயும் நல்லா குளுகுளுன்னு இருக்குமாம். நாளைக்கே ஆள வரச்சொல்றேன்” என்று சொல்லியபடியே புதர் மண்டிய வெளிப்புறத்தை கடந்து வண்டிக்கு நடந்தான். கணேசன் வீட்டைப் பூட்டிக்கொண்டு பின்னாடியே வந்தார். வண்டியைக் கிளப்பிக்கொண்டு சுந்தரின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார்கள். கணேசனுக்குள் உணர்வுகள் தளும்பிக் கொண்டிருந்தன. அவர் முகத்தில் குடிகொண்ட நிலையின்மையை பார்த்தபோது சுந்தருக்கு உள்ளுக்குள் நிறைவாக இருந்தது. சொற்களை பற்களுக்கு நடுவே இறுக்கி கிட்டித்து வைத்திருந்தார். சுந்தர் வீட்டிற்குள் நுழையும் முன் “தம்பி ராஜேஷ வேணாம் சந்தானத்தோட ஆடச்சொல்லுவோமா? நா உன் கூட வாரேன்” என்றார். சொல்லி முடித்ததும், அன்றைய நாள் முழுவதும் இருந்த இறுக்கம் அகன்று முகம் தளர்வதைக் கண்டான். பொங்கிய எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டு, வேண்டியதில்லை என்பதுபோல சைகை செய்தபடி “காலேல பாப்போம்” என்று சொல்லிவிட்டு  வீட்டிற்குள் சென்றான். சந்திரன் இறந்தபிறகு சுந்தர் விளையாட வந்தபோது, சுந்தர்தான் தன்னுடைய இணையாக விளையாட வருவான் என அவர் எதிர்பார்த்தார்.  ஆனால் அவன் ஏன் எதிரணிக்குச் சென்றான் என்பதை இப்போதுவரை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை. வீட்டிற்கு செல்லும்போதே வி.எஸ்.ஒ.பி இரண்டு புட்டிகளை வாங்கிக்கொண்டுதான் போனார். இரவெல்லாம் குடித்தார். மழை புதிய பொத்தல்கள் வழியாக தரையை நிறைத்தது. கண்ணீர் பெருகியது. எதற்கென்று இல்லாமல் எல்லாவற்றுக்காகவும் அழுதார். அவருடைய ‘ஆஷ்பி’ ராக்கெட்டை எடுத்து மடியில் ஒரு குழந்தையைப் போல் கிடத்தி அரற்றினார். இறுதித் துளி மது உள்ளே சென்றபோது உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையிலான நிலையில் அவருடைய உருவம் உடலுக்கு வெளியே நீர்பிம்பம் போல் தளும்பிக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அப்போது சந்திரனின் குரலை அவரால் வெகு அணுக்கமாக கேட்க முடிந்தது.   
காலை ஐந்தேகால் ஆகியும் கணேசன் வரவில்லை என்பதால் சுந்தர் தொலைபேசியில் அவரை அழைத்தான். “நீங்க போங்க தம்பி, நா நேரா வந்துர்றேன்” என்று சொன்னபோது அவருடைய நா குழறியது. சுந்தர் விளையாடத் தொடங்கினான். ஆனால் அவனுடைய மனதில் கணேசன் வராதது உறுத்திக்கொண்டே இருந்தது. ஆறு மணிக்கு மேல் கணேசன் வந்தபோது முந்தைய இரவின் மது நெடி காற்றில் பரவியது. வழமைக்கு மாறாக, ‘வார்ம் அப்’ செய்யாமல், டச்சு போடாமல் வெறுமே அமர்ந்துவிட்டு நேரடியாக களத்திற்கு விளையாட வந்தார். முதல் மூன்று புள்ளிகள் சுந்தர் அணியினர் எடுத்தார்கள். அவருடைய ஆட்டத்தில் தடுமாற்றம் தெரிந்தது. ஆட்டத்தை நிறுத்தி கழிவறைக்கு சென்றுவிட்டு வந்தார். இடது மூலைக்கும் வலது மூலைக்கும் வலையை ஒட்டியும் என மாறி மாறி ஆடினார். சுந்தருக்கு இது அவருடைய வழமையான ஆட்டம் இல்லை என்பது நன்றாக புரிந்தது. ஒருவகையில் அது சந்திரனின் ஆட்டப் பாணியை ஒத்திருந்தது. சலிக்காமல் மாறி மாறி ஆடிக்கொண்டே இருந்தார். வேகத்தைக் கட்டுபடுத்தி, கவனத்தை திசைத்திருப்பி  புள்ளிகளை வென்றார். ஒருகணம் சுந்தர் தான் யாருடன் விளையாடுகிறோம் என குழம்பினான். போட்டி கடுமையானது. சுந்தர் அடித்த இரண்டு ஸ்மாஷ்கள் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றன. முதன்முறையாக அவனுக்குள் ஒருவித சிலிர்ப்பு நேர்ந்தது. வியர்வையை வழித்துக்கொண்டு நீர் அருந்திவிட்டு வந்தார். எப்போதும் இருக்கும் அதிரடித்தன்மை இல்லை. புள்ளிகளுக்கு இடையே வந்து விழும் வசை சொற்களும் இல்லை. அவருடைய பதட்டமின்மை சுந்தருக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியது. கால்கள் எப்போதையும் போல் வேகம் கொள்ளவில்லை. சற்றே பின்னித் தடுமாறியது. இரண்டு அணிகளும் 17 புள்ளிகள் எடுத்து சமமாக ஆடிக்கொண்டிருந்தார்கள். சுந்தர் சளைக்காமல் ஆடினான். கணேசன் ஆடிய அதே முறையை அவனும் கைக்கொண்டான். சந்தானமும் ஈடுகொடுத்தான். 6.30 தாண்டியும் ஆட்டம் நீண்டு கொண்டிருந்தது. அடுத்த செட் ஆட்டக்காரர்கள் களத்திற்கு வெளியே இவர்களின் உக்கிரமான ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள். சுந்தர் சட்டென பொறுமை இழந்து ஸ்மாஷ் அடித்து புள்ளிகளில் முந்தினான். அதற்கு அடுத்து தூக்கி போட்ட சர்வீசை ராஜேஷ் ஸ்மாஷால் எதிர்கொண்டு புள்ளிகளை சமமாக்கினான். இழுத்துக்கொண்டே போனது. ஒரு சமயத்தில் கணேசன் எகிறிக் குதித்து அடித்த அடி சுந்தரின் காது நுனியில் உரசிச் சென்றது. தீக்காயம் போல் கனன்றது. நிமிர்ந்து அவர் முகம் நோக்க முயன்றபோது அவர் தலைக்கவிழ்ந்து அவன் பார்வையைத் தவிர்த்தார். சந்தானம் அடித்தது வலைக்குள்ளேயே விழுந்தது. ஒரேயொரு புள்ளி. கணேசனின் சர்வீசை எதிர்கொண்டு சுந்தர் அவர் தலைக்கு மேலே தூக்கி போட்டான். களத்தின் முற்பகுதியிலிருந்து அவர் கால்கள் பரபரத்து பின்னால் ஓடியது. எகிறி அடித்தபோது சுந்தர் வெறும் பார்வையாளனாக ஆற்றாமையுடன் அதன் விசையை வேடிக்கைப் பார்த்தபடி நின்றான். ராஜேஷ் உற்சாகமாக கூவிய அதே கணத்தில் கணேசன் தனது ராக்கெட்டை ஆவேசமாக பக்கச் சுவரில் வீசி எறிந்தார். தலை நசுங்கி அகோரமாக கிடந்தது. தன் வலக்கையை சுவரில் ஓங்கி குத்திவிட்டு கையை உதறியபடி விழுந்துக் கிடக்கும் ராக்கெட்டின் அருகே குந்தியமர்ந்து தலையில் கைவைத்தப்படி விசும்பினார். 
  
    




இந்திர மதம்




1

மூடிய கண்ணாடி சாளரத்திற்குள் மழை ஓசையாக மட்டும் விரவிக் கிடந்தது. மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு நண்பகல் மழையிருளில் மூழ்கியது. மின்விசிறி எங்கிருந்தோ வந்து காற்றுக்கு கட்டுப்பட்டு சுழன்றுக் கொண்டிருந்தது. சேஷாத்ரி சூழ இருந்த மாணவர்களை விலக்கிக் கொண்டு விடுவிடுவென சென்று வகுப்பறையின் கதவை இழுத்து தாழிட்டு வந்தார். கதவை அடைக்கும் சில நொடிகளுக்குள் சாரல் அவருடைய வேஷ்டிக்கு சில ஈர வட்டங்களை தெளித்திருந்தது. ஆனாலும் வெளியே ஒலிக்கும் மழையின் சந்தடியை நிறுத்திவிட்டதாக நிம்மதி அடைந்தார். இனி அவருடைய குரல் எல்லோருக்கும் கேட்கும் எனும் ஆசுவாசமும்கூட.

 சேஷாத்ரி கண்களுக்கு மையிட்டிருந்தார். அது அவரே தயாரித்ததும் கூட. தினமும் முகத்தை மழித்துக்கொண்டு வருவார். தலைமுடி வளர்த்து குடுமியிட்டுக் கொண்டிருப்பார். பிரம்மச்சாரி. அவருடைய தசைத் திரட்சியை அவர் அணியும் கதர் ஜிப்பாவை மீறி சாதாரணமாக எவரும் பார்த்துவிட முடியும். எந்த நவீன கல்வி கூடத்திலும் இப்படியான ஒரு மனிதர் கேலிப் பொருளாக ஆகியிருப்பார் ஆனால் அந்த ஆயுர்வேத கல்லூரியில் அவர் ஒரு மாபெரும் நாயகனாகவே பார்க்கப்பட்டார். செத்துக் கொண்டிருக்கும் மருத்துவமுறையை மீட்க தன்னையே அளித்தவர். ஆயுர்வேதத்தின் வாழும் அடையாளம்.  

நாற்பதுகளின் மத்தியில் இருக்கும் அவர் கண்ணாடி அணிவதில்லை, ஒரு முடி கூட நரைக்கவில்லை. கல்லூரியில் அவரைப் பற்றிய தொன்மங்களுக்கு அளவே இல்லை. பல கதைகளும் அமானுடத் தன்மை கொண்டவை. மூத்த வைத்தியர் பத்ம விபூஷன் சங்கரன் வாரியார் ஒருமுறை ஒரு நோயாளியின் குன்மத்திற்கு செய்து வந்த சிகிச்சை பலனளிக்காமல் இருந்தபோது அவருக்கு மிகுந்த மனக் குழப்பம் உண்டாகி தன்னுடைய மாணவனான சேஷாத்ரியிடம் புலம்பியிருக்கிறார். சேஷாத்ரி பொறுமையாக புலம்பல்களைக் கேட்டுக்கொண்டப் பிறகு, வைத்தியனுக்கும் மகா வைத்தியனுக்கும் உள்ள இடைவெளி இதுதான். மகா வைத்தியன் ஒவ்வொரு, சிறுசிறு தோல்வியையும் தனிப்பட்ட தோல்வியாக உணர்ந்து மனதை உழப்பிக் கொள்வான் என்று சொல்லிவிட்டு, முதலில் அது ஏன் குன்மம் இல்லை என தன் ஆசிரியரிடம் நிறுவினார் என்பது அப்படி உலவும் ஒரு கதை. அதன்  பின் தான் சங்கரன் வாரியார் “சுசுருதர் சொல்றது இருக்கட்டும், சேஷாத்ரி என்ன சொல்றான்?” என கேட்டதாகச் சொல்வார்கள். மற்றொருமுறை ஒரு  ஆய்வரங்கில் மஞ்சளில் இருந்து எடுக்கப்பப்டும் குர்குமின் எப்படி புற்று நோயைக் கட்டுபடுத்துகிறது, இது ஆயுர்வேதத்தின் வெற்றி என ஒரு அறிஞர் ஆய்வுக் கட்டுரை வாசித்துக்கொண்டிருந்தபோது எழுந்து குறுக்கிட்டு “இதனால் ஆயுர்வேதத்திற்கு என்ன லாபம்? இதிலிருந்து உங்களுக்கு தேவையான நவீன அறிவியலை நீங்கள் வெட்டி எடுத்துக் கொள்கிறீர்கள். அறிவுச் சுரண்டல். போகட்டும். ஆனால் அதற்கும் ஆயுர்வேதத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை”  என ஆவேசமாக கத்தி ஆய்வறிக்கையை கிழித்து எறிந்த நிகழ்வு ஏறத்தாழ ஒவ்வொரு கருத்தரங்கின்போதும் ஒரு சடங்கைப்போல் உணவு இடைவேளையின் போது அதிருப்தியில் உழலும் மாணவர்களால் தீர்க்கத்தரிசனமாக உணரப்பட்டு உணர்ச்சிபூர்வமாக நினைவுக்கூரப்படும். நவீன மருத்துவத்தின் எந்தக் கூறுகளையும் நோயறிதலுக்கோ சிகிச்சைக்கோ பயன்படுத்த மாட்டார். சக பேராசிரியரான நசிகேத ராவ் எத்தனையோ முறை கிண்டல் செய்வார். “இப்படி இருக்காதய்யா..நீ ஒரு ஹிப்போக்ரைட்யா ..  புல்லட் ஓட்டுற, லேப்டாப் செல்போன் எல்லாம் வெச்சிருக்க, வீட்ல கரண்ட் கனெக்ஷன் இருக்கா?  இல்ல வேணாம்னு இருட்டுல உக்காந்திருக்கியா? இதெல்லாம் டெக்னாலஜிதான, அதையும் பயன்படுத்து நம்ம மருந்தையும் கொடு, முடியலையா நல்ல டாக்டர்கிட்ட அனுப்பிவிடு” என கிண்டலுக்கு அப்பால் அவ்வப்போது நட்பாக எச்சரிப்பார். சிரித்துக்கொண்டே “போதும் அய்யா. இதெல்லாம் வித்தையில் நம்பிக்கை இல்லாதவர்கள் பேசும் பேச்சு இந்த டாக்டருக்கு தரகராக இருக்கும்  வேலையைச் செய்வதற்குத்தான் இத்தனைப் பேர் உள்ளீர்களே. நான் வேற எதுக்கு?” என்பார். இந்தமாதிரியான பதில்களை பல நேரங்களில் கோர்வையான சமஸ்கிருதத்தில் அளிப்பார் என்பதால் எதிராளிகள் கூர்ந்து பொருள் உணர்ந்து பின்னர் சொற்களைத திரட்டி பதில் சொல்வதற்கு சும்மா இருந்துவிடலாம் என விட்டுவிடுவார்கள். 

மழை இரைச்சலும் காற்றும் தொலைவில் எங்கோ என நிகழ்ந்தது போல் அவர்கள் அந்த மூடிய சிறிய அறைக்குள் மேஜையைச் சுற்றி குழுமி இருந்தார்கள். மேஜையின் முன் வந்து, அதன் மையத்தில் நின்று நாற்காலியில் அமர்ந்திருந்த சிவானந்தனை நோக்கினார். ஆவலும் குறுகுறுப்பும் மின்னும் விழிகள் அவர்களை சூழ்ந்திருந்தன. அவனிடம் “வலிக்கிறதா?” என வினவியதும் இல்லை என்பதாக தலையசைத்தான். வகுப்பில் அன்று அட்டை விடுதல் செய்முறை பயிற்சிக்கு எவரேனும் சுய விருப்புடன் பங்குகொள்ள சம்மதமா என சென்ற வார வகுப்பிலேயே அவர் கேட்டிருந்தார். அவர் எதிர்பார்த்த மாதிரியே அதிகமும் பெண்கள் உள்ள அவ்வகுப்பில் எவரும் முன்வராதபோது அவருடைய பார்வை இயல்பாக சிவானந்தனை சென்று முட்டியது. அவன் ஏன் தன்னிச்சையாக முன்வரவில்லை எனும் கேள்வியை அப்பார்வை சுமந்து நின்றது. மற்றுமொருமுறை தன் முதன்மைச் சீடன் என்றும் தன் வாரிசு என்றும் எண்ணியவன் தன் எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை எனும் மெல்லிய அதிருப்தி அவர் முகத்தில் படர்ந்தது. சிவானந்தன் தயங்கித் தயங்கி எழுந்து நின்று சம்மதம் தெரிவித்தான். 
ஒருநாள் காலை சரியாக ஐந்து மணிக்கு புழுதிவாக்கம் பாலாஜி நகர் விரிவாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு தன்னுடைய சைக்கிளில் சென்று சேர்ந்தான் சிவானந்தன். இரவெல்லாம் மழை பெய்து ஈரம் இருளை கனக்கச் செய்தது. வெற்றுடலுடன் வாயிலில் அமர்ந்து வெண்கலப் பானையை விறகடுப்பில் வைத்து அதன் முன் குந்தி அமர்ந்து ஊதிக் கொண்டிருந்தார். உலை கொதித்துக் கொண்டிருந்தது. சிவானந்தனைப் பார்த்ததும் ஊதுகுழாயை அவன் கையில்கொடுத்துவிட்டு “பத்து நிமிஷம்” என உள்ளே சென்றார். முந்தைய இரவு மழையில் கறி நமுத்துப் போயிருந்தது. இருந்தாலும் விடாமல் ஊதிக் கொண்டிருந்தான். சிவந்த நெற்றியில் திருமண் துலங்க வெளியே வந்தார். கையில் ஒரு இறுக சுற்றிய பிளாஸ்டிக் பை இருந்தது.  இன்னொரு துணிப் பையை அவனிடம் கொடுத்தார். அவருடைய நீலநிற என்பீல்டை துடைத்துவிட்டு இருவருமாக புறப்பட்டார்கள்.  

சிவானந்தனின் முகத்தில் குளிர்ந்த காற்று அம்மியது. தும்மலை அடக்கிக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் சேஷாத்ரிக்கு வெவ்வேறு அணுக்க சீடர்கள் இருப்பார்கள். நவீனக் கல்விக் கூடங்களில் குரு சீட உறவு முறைக்கு கிட்டத்தட்ட எந்த பொருளுமில்லை தான் ஆனால் இதற்கும் ஆயுர்வேத கல்லூரி ஒரு விதிவிலக்கு. அங்கே பெரும்பாலும் எல்லா ஆளுமைமிக்க ஆசிரியர்களுக்கும் தனித்த சீடர் நிரை உண்டு. கல்லூரிக்கு உள்ளேயும், வெளியேயும் கூட அது நீளும். சேஷாத்ரியிடம் சீடனாக கடும் போட்டி நிலவும். அவரே தனது சீடனைத் தேர்வு செய்வார். கல்லூரி முடித்து வெளியேறிய  பின்னரும் அவர்கள் உறவு நீடிக்கும். சேஷாத்ரியின் சீடர்களுக்கும் நசிகேத ராவின் மாணவர்களுக்கும் எப்போதும் உரசல் உண்டு. இருவருக்கும் தங்கள் தரப்பை தர்க்க நியாயத்துடன் நிறுவியாக வேண்டும் எனும் துடிப்பு தத்தமது ஆசிரியர்களைக் காட்டிலும் அதிகம். கருத்தரங்கங்களில், விவாத மேடைகளில் பொறி பறக்கும். இரு பக்கமும் கைத்தட்டும் ஆதரவாளர்கள் தங்கள் முழு ஆற்றலைக் காட்டுவார்கள். எப்போதும் கல்லூரி முடித்து வெளியேறிச் செல்லும் ராவின் மாணவர்கள் சேஷாத்ரியின் சீடர்களைக் காட்டிலும் நன்றாக பொருளீட்டுபவர்களாகவே இருப்பார்கள். ஆனால் சேஷாத்ரி தெளிவாக தன் சீடர்களிடம் கூறிவிடுவார். “நான் உங்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை அறிமுகம் செய்கிறேன். அதற்கு உண்மையாக இருப்பதற்கு பொருளாதார பலன் கிட்டுமா என சொல்ல முடியாது. ஆனால் நீங்கள் கற்றவர்கள் எனும் பெருமிதத்தையும், உங்கள் அறிவு முழுமையானது எனும் நம்பிக்கையையும் என்னால் கொடுக்கமுடியும்.”.

பள்ளிக்கரணை ஏரிக்கு சென்றார்கள். தெருவிளக்குகள் மெளனமாக தலைகவிழ்ந்து தன் சிறு ஒளிப் பரப்பை நோக்கிக் கொண்டிருந்தன. அங்கே சதுப்பின் கரையோரம் வெளிச்சமற்ற ஓரிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு பிளாஸ்டிக் பையில் இருந்த ஆட்டுக் குடலை கையில் எடுத்து வேட்டியை மடித்து தன் இரு கால்களிலும் அரக்கித் தேய்த்தார். சிவானந்தனுக்கு வயிறு குமைந்தது. “இன்னும் உன் வயித்துப் புண் ஆறலையா? கஷாயம் குடிக்கிறியா?” என்று கேட்டபடி அவனிடம் வேண்டுமா என்பதுபோல் நீட்டியபோது அவன் தயங்கியதைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தார். சதுப்பில் வேட்டியை மடித்துக்கொண்டு இறங்கி நடந்தார்.  சிவானந்தனும் கால்சட்டையை மடித்துக்கொண்டு தொடர்ந்தான். குளிரில் மயிர்கால்கள் நட்டுக்கொண்டு உடல் சிலிர்த்தது. நீர் தாவரங்கள் மண்டிய ஏரியில் ஒருவித அழுகல் நாற்றம் மூக்கை நிரடியது. கருக்கிருட்டில் சாம்பல் நிற கலங்கல் நீரில் ஏதேதோ அவன் காலில் ஊறிச் சென்றன. ஒரு தவளை அவன் காலிலிருந்து தத்தியது. பாம்பா அல்லது ஏதேனும் தாவரக் கொடியா என்றறிய முடியாத வழவழப்பு ஒன்று அவன் காலைத் தீண்டியதும் சற்றே அதிர்ந்து பின்னகர்ந்தான். “தன்வந்தரி கையில என்ன இருக்குன்னு பாத்திருக்கியா?” மெல்ல அவனிடம் கேட்டபடி நீரை அளைந்து நடந்தார். “அமுத கலயம்” என்றான். “ம்..இன்னொரு கையில?” பதில் ஏதும் சொல்லாமல் யோசித்தான். பின்னர் அவரே “ஜலூகம்..அதாவது அட்டை. ஏன் தெரியுமா?” மெளனமாக பின் தொடர்ந்தான். “அவன் உன் ரத்தத்த உறிஞ்சு உன்னை சுத்தப் படுத்துறான், அதுக்கப்புறம் தான் உனக்கு இன்னொரு கையில இருக்குற அமுதம் கிடைக்கும். கலசம் தான் நம்ம உடம்பு. உன் அசுத்தம் வெளியேறிட்டா மிச்சமிருக்கிறது என்ன? அமுதம் தான. சுத்தமான ரத்தம் தான் அமுதம். புரியுதா?” என்றார்.  அவன் பத்தாம் வகுப்பு படிக்கும்போது பவித்ராவிற்கு ரத்தத்தில் காதல் கடிதம் எழுதிக் கொடுத்தது நினைவுக்கு வந்தது. நீர் தாவரங்கள் மண்டியிராத ஒரு பகுதிக்கு வந்ததும் சற்று நேரம் அங்கேயே நின்றார். வான இருள் மெல்ல விலகி பூக்கத் துலங்கியது. நீர்காகங்கள் தலையை சிலுப்பிப் பறந்தன. வர்ண வேறுபாடுகள் கண்ணுக்குத் துலங்கத் துவங்கின. பின்னர் மெல்ல சிவானந்தனின் தோளைப் பிடித்துக்கொண்டு ஒரு காலைத் தூக்கினார். அவர் காலில் கத்தை கத்தையாக அட்டைகள் ஒட்டியிருந்தன. சிவானந்தன் துணிப்பையில் இருந்த மூன்று ஹார்லிக்ஸ் கண்ணாடி பாட்டில்களில் பாதி பங்கு நீர் நிரப்பினான். இப்போது மறு காலையும் தூக்கினார் அதிலும் அட்டைகள் மொய்த்தன. குருதிப் பசிகொண்ட அட்டைகள் இறைச்சியின் வாடையால் ஈர்க்கப்பட்டு அம்மின. சில மீன்களும் இப்போது காலைச் சுற்றி கடிக்கத் துவங்கின. இருவருமாக வேகமாக கடந்து கரையேறினர். கரையோரப் புதரில் இருந்து ஒரு பாம்பு நீரில் பாய்ந்து நீந்திச் சென்றது. “விரியன்” என்றார் சேஷாத்ரி. சிவானந்தனின் காலையும் சில அட்டைகள் கவ்வியிருந்தன. அவற்றை உதறித் தள்ளினான். அப்போதும் அவை உதிரவில்லை. துணிப்பைக்குள் கிடந்த பொட்டலத்தில் இருந்த மஞ்சள் பொடியை எடுத்து அட்டைகள் கவ்வியிருந்த வாய்ப்பகுதியில் லேசாக தூவினார். அவை சுருண்டு விழந்தன. பின்னர் விழுந்தவற்றை வால் பகுதியில் வைத்து தூக்கி ஹார்லிக்ஸ் பாட்டிலில் போட்டார். சற்று நேரம் வெறுமே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த சிவானந்தன் சேஷாத்ரி அவனைத் திரும்பி நோக்கியதை பார்த்ததும் அவனும் உதவினான். வீட்டிற்கு திரும்பியதும் ஹார்லிக்ஸ் பாட்டிலின் மூடிகளில் பழுக்க காய்ச்சிய கம்பியைக் கொண்டு சிறு சிறு துளைகளை இட்டான் சிவானந்தன். மூன்று பாட்டில்களிலும் உள்ள அட்டைகளை எண்ணிப் பார்த்தான் மொத்தம் முப்பத்தியாறு. எனினும் அவனுக்கு குழப்பமாக இருந்தது. அட்டைகள் அனைத்தும் ஒரே மாதிரி இருந்தன. அவை நீந்திக்கொண்டே இருந்தன. ஒரே அட்டையைத் தான் திரும்ப திரும்ப எண்ணுகிறோமோ என குழம்பினான். சேஷாத்ரி பக்கவாட்டில் இருந்த கிணற்றில் நீர் வாரி இறைத்து கால்களைக் கழுவிக்கொண்டார். மயிர் மழிக்கப்பட்ட வழவழப்பான கெண்டை கால்களில் ஆங்காங்கு உதிரத் திட்டுக்கள் இருந்தன. குப்பைமேனி இலையை கசக்கி கடித் தடங்களில் தேய்த்துக்கொண்டார். “சார் இதுல விஷமுள்ளது விஷம் இல்லாததுன்னு எப்புடி பிரிச்சு பாக்குறது? சுசுருதர் விஷமுள்ள ஆறு வகைகளைச் சொல்றாரே” என கேட்டதும். “நானும் நீயும் இன்னும் உயிரோடத்தான இருக்கோம். எதுக்கும் விஷமில்லதான. அதிருக்கட்டும். முதல்ல இதுக்கு வாய் எது ஆசனவாய் எதுன்னு கண்டுபிடி. அதுதான் முக்கியம்” எனச் சொல்லி புன்னகைத்தார்.    

சிவானந்தனின் தந்தை ஆறுமுகத்திற்கு சொரியாசிஸ். தோல் மருத்துவர்கள், ஹோமியோ, சித்தா, ஆயுர்வேதம், அக்குபஞ்சர் என எல்லாவற்றையும் முயற்சித்துப் பார்த்தார். தற்காலிக நிவாரணங்களை அளித்தனவே ஒழிய எதுவும் அவருடைய நோயை நிரந்தரமாக தீர்க்கவில்லை. தனது ஃபினான்ஸ் கடையில் வாடிக்கையாளருக்கு முன் அமர்ந்து காலை சொறிந்துக்கொள்ளும் வேட்கையை அடக்கிக்கொள்வது பெரும் சவாலாக ஆனது. முழுக்கைச் சட்டையைப் போட்டு கழுத்துப்பட்டை பட்டனையும் போட்டுக்கொண்டு  இருக்கையில் அமர்ந்திருப்பார். மெல்லிய பச்சை ஊண் வாடை அவரிடமிருந்து எழும். செதில் செதிலாக தோல் பெயர்ந்து உதிரும். வெளியே செல்வது குறையத் துவங்கியதும் வசூலும் குறைந்தது. தொழிலே பாதித்தது. சேஷாத்ரியின் மருத்துவ அற்புதங்கள் பற்றிய தொன்மங்கள் கல்லூரிக்கு வெளியேயும் எப்படியோ கசிந்தது. மற்ற நாட்களில் மந்தமாக இருக்கும் கல்லூரி புற நோயாளிப் பிரிவு சேஷாத்ரி வரும் வியாழக் கிழமைகளில் கடும் நெரிசலைச் சந்திக்கும். சேஷாத்ரி கல்லூரியைத் தவிர்த்து வெளியே எங்கும் வைத்தியம் பார்ப்பதுமில்லை. அவரைச் சென்று பார்த்து அவருடைய ஆலோசனைப்படி  வாந்தி, பேதி, என குடலை சுத்தம் செய்து மருந்துகளையும் கடும் பத்தியங்களையும் பின்பற்றி முழுக்க குணமானார். ஏறத்தாழ அது மாயவித்தைப் போல இருந்தது. நன்றிக்கடனாக பெரும் பணத்தை செலவழித்து சிவானந்தனை ஆயுர்வேதம் படிக்க அனுப்பினார். அவனும் இயல்பாகவே சேஷாத்ரியின் பால் ஈர்க்கப்பட்டான். இவனை விடவும் தகுதியான இருவர் சேஷாத்ரியின் மீது இவன் அளவிற்கே அல்லது இவனை விடவும் பற்று கொண்டிருந்தார்கள். கேரளாவில் பேர்போன மருத்துவ குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சேஷாத்ரியின் மீதிருக்கும் மரியாதையின் பொருட்டே இந்த கல்லூரிக்கு வந்தவர்கள். அவர் கேட்பதற்கு முன்பே பதில்களைத் தெரிந்து சொல்பவர்கள். மூலிகைகளை சரியாக அடையாளம் காண்பவர்கள். மருந்து செய்து பழகியவர்கள். ஆனால் சேஷாத்ரி ஏனோ சிவானந்தனையே தேர்ந்தெடுத்தார். பிறகுதான் அவருடைய முதன்மை சீடர் வரிசை எந்தவித மருத்துவ பின்புலமும் இல்லாதவர்களால் ஆனது என்பதைத் தெரிந்துகொண்டான். மேலும் அதீத அறிவாற்றல் உடையவர்கள் முன்பே தங்கள் கோப்பைகளை நிரப்பியவர்கள். இவனைப்போன்ற காலி கோப்பை தான் அவருக்கு தோதானது என அவன் புரிந்துகொள்ள மேலும் சில ஆண்டுகள் ஆயின. சேஷாத்ரியின் சீடர் நிரையில் ஒரு பெண் கூட இல்லை என்பது ஏன் என எண்ணிப் பார்த்திருக்கிறான். இத்தனைக்கும் அவர் மாணவர்களைக் காட்டிலும் அதிகம் மாணவிகள் மத்தியிலேயே பெரும் ஈர்ப்பைப் பெற்றவர். சேஷாத்ரியின் சீடன் என்பது பிற ஆசிரியர்களின் எரிச்சலை ஈட்டுவதும் தான். ஒவ்வொரு வகுப்பிலும் இதுகூட தெரியவில்லையா வகை கேள்விகளால் அவனை மீண்டும் மீண்டும் உடைக்கும் முயற்சிகளில் சளைக்காமல் ஈடுபட்டார்கள். குருட்டு பற்று அல்லது வீம்பு ஏதோ ஒன்று அவனை அதுவரை காப்பாற்றியது.                
சிவானந்தன் காலில் ஒட்டியிருந்த அட்டை சட்டென சுருண்டு கீழே விழுந்ததும் அருகிலிருந்த பெண்கள் வீரிட்டு விலகினார்கள். “பாத்து மிதிச்சுடாதீங்க” என்று சொல்லிக் கொண்டே நிதானமாக குருதி குடித்து கொழுத்த அட்டையை கையில் பிடித்து தூக்கினார். அதற்குள் வேடிக்கைப் பார்த்திருந்த கௌசல்யா மயக்கமுற்றாள். “இவ எப்படி பிசியாலஜி பாஸ் செஞ்சா?” என்று கிண்டல் செய்தார். அவளை இருவர் தூக்கி பெஞ்சில் படுக்க வைத்து நீர் தெளித்து அமைதிப் படுத்தினார்கள். “நாம எல்லாரும் அட்டையைப் பத்தி என்ன நெனைச்சோம்? ரத்தம் உறிஞ்சும் அட்டைன்னு எல்லாம் திட்டுவோம் இல்லியா, ஆனா அட்டை தன் பசிக்கு கொஞ்சூண்டு ரத்தத்தை உறிஞ்சதும், அதுவும் கெட்ட ரத்தத்த மட்டும்தான், அதுவே வாய எடுத்துரும்” சிவானந்தன் மெல்ல நெளிந்தான். “அரிக்குதா?” என்றதும் ஆம் என தலையசைத்தான். “அப்ப கெட்ட ரத்தம் ஸ்டாக் தீந்துடுச்சு. நீ சுத்தமாயிட்ட” எனச் சிரித்தபடி மீதமிருந்த ஐந்து அட்டைகளின் கவ்விய வாயின் மீது லேசாக மஞ்சள் பொடியை உதிர்த்தார். அவை சுருண்டு விழுந்தன.  

அவற்றை கையில் எடுத்து கவனமாக மேஜை மீதிருந்த நீர் நிறைந்த பீங்கான் பேசினுக்குள் போட்டார். அருகே மற்றொரு பேசினில் அட்டைகள் நீந்திக் கொண்டிருந்தன. ஒவ்வொரு அட்டையின் வாயருகேயும் மஞ்சள் பொடியை தூவியதும் அவை உறிஞ்சிய உதிரத்தை வாயுமிழ்ந்தன. நீர் முதலில் மஞ்சளாகவும் பின்னர் உதிரச் சிவப்பாகவும் மாறியது. குருதி நதியில் ஏறத்தாழ அதே நிறத்து அட்டைப் பூச்சிகள் நீந்தின. ஒரேயொரு அட்டை மட்டும் நீந்தாமல் பேசினின் அடியில் சுருண்டிருந்தது. மெல்ல அதை உசுப்பினார். ஆனால் அது நகரவில்லை. அதைத்தூக்கி இடக்கையில் பிடித்துக்கொண்டார். வால் நுனியிலிருந்து மெதுவாக வலக்கையின் கட்டைவிரல்-ஆள்காட்டி விரல் இடைவெளியில் அழுத்தி உருவிவிட்டார். அப்போதும் அது ரத்தத்தை உமிழவில்லை. வெறுமே முகம் பிதுங்கியது. துடிதுடித்து மீண்டும் சுருண்டுக் கொண்டது. அதன் வினோத நடத்தை எல்லோருக்கும் குறுகுறுப்பை ஏற்படுத்தியது. “ம்..இந்திர மதம்” என்றார். யாரோ ஒரு மாணவன் “அப்படின்னா?” என்று கேட்டதும் “யோசிங்க” என்றார். இளங்கோ “இந்திரனோட மதம்..அவர் இந்து தான சார்” என்றான். எல்லோரும் சிரித்தார்கள். மரியா “மதம் ன காம, குரோத, மத, மாச்சரியம்- அந்த மதம், ஒரு மாதிரி பித்து, யானைக்கு பிடிக்குமே அந்த மாதிரி மதம். சரிதானே சார்?” என்றாள். “நெருங்கிட்ட” என்றார். ஜிஷா “சார் இந்திரம்ன கடவுள் மட்டுமில்ல நம்ம புலன்களும் தான..இந்திரியங்கள்னு சொல்வோமே” என்றாள் குறுகுறுப்புடன். “நல்லது. நாளைக்கு வரும்போது முழுசா தேடிப் படிச்சிட்டு வாங்க. காலேல வந்ததும் ஏழாம் நம்பர் ஸ்ரீநிவாசனுக்கு இருக்குற நெஞ்சு கட்டிக்கு அட்டை விடுறோம். சிவானந்தன் அவரை ரெடி செஞ்சு கூட்டிட்டு வர வேண்டியது உன் பொறுப்பு. நீ தான் நாளைக்கு அவருக்கு செய்யப்போற” என்று கூறிவிட்டு சென்றார். காலைத் துடைத்துக்கொண்டு எழுந்த சிவா ஒன்றும் சொல்லாமல் நின்றான்.

2
சேஷாத்ரி வெளியே சென்றவுடன் சிவா மூடியிருந்த சாளரங்களைத் திறந்தான். மழை வலுக் குறைந்திருந்தது. எனினும் சீராக தூறிக் கொண்டிருந்தது. வகுப்பறையின் சாளரத்தில் இருந்து கல்லூரியின் மூலிகைத் தோட்டத்தை காண முடியும். ஒரு தொட்டியில் கரு ஊமத்தைப் பூத்திருந்தது. அதன் அடர் ஊதா நிறத்தைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் தோள்மீது கைபோட்டு இளங்கோ “ஊமத்தைக்கு பால் ஊத்தி வளக்குற மோத பேமிலி நம்ம பேமிலி தான் மாப்ள” என்றான். இருவருமாக சிரித்துக்கொண்டே கேண்டீனுக்கு நடந்தார்கள். “இன்னிக்கி வெயிட் காட்டுன மாப்ள..லிஜி வெச்சக் கண்ணு எடுக்காம உன்னையே பாத்தாடா..காதலுக்காக காலுல அட்டைப்பூச்சி விட்ட மொத ஆள் நீதாண்டா” என்றான். பிறகு அவர்கள் இருவருமாக மருத்துவமனைக்கு சென்றார்கள். ஏழாம் எண் படுக்கையில் இருக்கும் ஸ்ரீனிவாசனைப் போய் பார்த்தார்கள். இரண்டு வருடங்களுக்கு முன் சிகிச்சை அறையில் ஆசனவாயில் மருந்து செலுத்தத் துவங்கியபோது அங்கேயே மயங்கி திடிரென்று ஒருவர் இறந்ததில் இருந்து எந்த சிகிச்சை செய்வதற்கு முன்பும் நோயாளிகளிடம் முழு ஒப்புதல் என சாட்சிகளுடன் சான்று எழுதி வாங்கிக்கொள்வது வாடிக்கை. கைலி கட்டிக்கொண்டு கூடு கட்டிய வெற்று மார்புடன் ஸ்ரீனிவாசன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்திருந்தார். சரியாக நெஞ்சு மத்தியில் ஒரு சிறு புடைப்பு.  அன்று காலைதான் ஸ்ரீனிவாசன் மருத்துமனையின் உள்நோயாளி பிரிவில் சேர்க்கப்பட்டார். லேசாக தலை சுற்றல்,  தொண்டை கட்டிக்கொண்டது போல் குரலில் ஏதோ மாற்றம் இவையே அவருடைய அறிகுறிகள். நெஞ்சுகட்டியால் அவருக்கு ஒன்றும் பெரிய தொந்திரவு இல்லை என்றார். அவ்வப்போது முதுகு வலிக்கிறது என்றார். சேஷாத்ரியின் நோயாளிகளை வேறு எவரும் அணுகுவதில்லை. அவருடைய ஆணையும், அவருடைய மாணவர்களின் மேற்பார்வையும் மட்டுமே உண்டு. நாளை அவருக்கு அட்டை விடுதல் சிகிச்சை செய்ய இருப்பதாக தெரிவித்து அதன் முறைமைகளை விளக்கினான். தன் காலில் இன்று அட்டைக் கடித்த தடத்தைக் காண்பித்தான். “தம்பி என்ன சொல்றியோ செய்றேன். எங்க கையெழுத்து போடணுமோ போடறேன். எல்லாம் சார நம்பி வந்தாச்சு. ஆனா எனக்கு இந்த கட்டி ஒன்னும் தொந்தரவு இல்லப்பா. இருந்தாலும் சார் சொல்றாரு..நமக்கு ஒகே” என்று கையெழுத்துப் போட்டு கொடுத்தார். மார்மத்தியில் இருக்கும் புடைப்பை இளங்கோ வெறித்துக்கொண்டே இருந்தான். பின்னர் மெதுவாக அதைத் தொட்டுப் பார்த்தான். துடித்தது. சுதர்சனின் காதில் கிசுகிசுத்தான் “மாப்ள தொட்டுப் பாத்துரு” கயிறு கட்டி இழுபடும் பட்டாம்பூச்சியைப் போல் அந்த புடைப்பு துடித்தமைந்தது. அதன் துடிப்பை வெறும் கண்ணாலேயே பார்க்க முடிந்தது. அறையை விட்டு வெளியே வந்ததும் இளங்கோ “மாப்ள இது ஏதோ கட்டி மாறி தெரியல. ஒரு எக்ஸ்ரே பாப்போமாடா?” என்றான். “சாருக்குத் தெரிஞ்சா அவ்ளோதான். அவரு பாத்துப்பாருடா”. 
இளங்கோ வேகவேகமாக நூலகத்திற்குள் அவனை இழுத்துச் சென்று நவீன மருத்துவ பிரிவில் உள்ள தடித்த டோர்லாண்ட்ஸ் மருத்துவ அகராதியைப் புரட்டினான். அயோர்டிக் அன்யுரிசம் (aortic aneurysm) பக்கத்தை எடுத்துக் காண்பித்தான். பிறகு இருவருமாக அறுவை சிகிச்சை புத்தகத்தைப் புரட்டி அதைப் பற்றி வாசித்தார்கள். அக்குறிப்புகளை புகைப்படம் எடுத்துக்கொண்டான். அவனுக்கு சில்லென வியர்க்கத் துவங்கியது. இருதயத்தில் இருந்து வெளியே வரும் முக்கியமான தமனி வீங்கி இருக்கும் நிலையைத்தான் அயோர்டிக் அன்யுரிசம் என்பார்கள். ஒருவேளை அது வெடித்தால் பெரிய அளவில் ரத்தக் கசிவு ஏற்பட்டு நோயாளி மரணிக்கவும் கூடும். அதில் சின்னக் கீறல் விழுந்தால் கூட ரத்தம் பீய்ச்சி அடிக்கும் என குறிப்பிடப்பட்டிருந்தது. வேகவேகமாக பேராசிரியர் அறைக்கு ஓடினார்கள். அங்கே சேஷாத்ரியை காணவில்லை. மீண்டும் மருத்துவமனைக்கு வந்தார்கள். சேஷாத்ரி உள் நோயாளிகளை மேற்பார்வையிட வந்திருந்தார். அவரருகே சென்று தயங்கித் தயங்கி நின்றான். என்ன என்பது போல் நிமிர்ந்து நோக்கினார். “சார் ஸ்ரீனிவாசன் பேஷண்டுக்கு அயோர்டிக் அன்யுரிசமாக இருக்கும்னு இளங்கோ சொல்றான்”. அவன் கைப்பேசியில் எடுத்திருந்த புகைப்படங்களை அவருக்கு காண்பிக்க நீட்டினான். அதை அவர் வாங்காமலே “உனக்கு யாரு வாத்தியார்? நானா, இளங்கோவா?” எனக் கேட்டுவிட்டு அடுத்த நோயாளியை நோக்கி நகர்ந்தார். “சார் நீங்க இன்னொரு தடவ பாத்தீங்கன்னா பரவால்ல. ஒரு எக்ஸ்ரே..இல்லன்ன ஸ்கேன் எடுத்தா நம்ம சந்தேகம் எல்லாம் போய்டும். அதுல துடிப்பு இருக்கு” என்றான். தொங்கிக் கொண்டிருந்த உள்நோயாளி அட்டையை கீழே விட்டுவிட்டு நேராக அவனை நோக்கிச் சொன்னார். “ அது வித்ரதி. பழுக்குற நிலையில பித்தம் இருக்கும். அப்பா துடிப்பும் இருக்கும். சுசுருதர் சொல்லியிருக்கிறத பாரு. போய் முதல்ல அட்டைக்கு வாய் எங்க இருக்கு ஆசனவாய் எங்க இருக்குன்னு கண்டுபிடி..ஏன்னா அத உன்னோட சுசுருதரோ இல்ல டோர்லாண்டோ சொல்லிக்கொடுக்கமாட்டாங்க” என்றார் தீர்க்கமாக. 
“மாப்ள, சத்தம் போடாம அவர ரேடியாலஜி ரூமுக்குள்ள கூட்டிப் போயிடுவோம்.” என்றான் இளங்கோ. சிவா மெளனமாக அமர்ந்திருந்தான். “சொல்றத சொல்லிட்டேன் உன் இஷ்டம்” என அவனை விட்டுவிட்டு அகன்றான். சிவாவிற்கு தலையிலிருந்த நாளங்கள் வலியில் துடித்தன. வீட்டிற்கு சென்றதும் உண்ணாமல் அறைக்குள் உறங்கச் சென்றான். நெற்றியில் பற்றுப் போட்டுக்கொண்டு, வயிற்றுப் புண்ணுக்கு எப்போதும் குடிக்கும் இந்துகாந்தம் கஷாயத்தைக் குடித்துவிட்டு கண்மூடினான். மிகுந்த தாகமாக இருந்தது. அவன் அப்போது கவ்வி எதையோ குடித்துக் கொண்டிருந்தான். வயிறு நிறைந்து அவனுடைய ஆசனவாய் திறந்துக் கொண்டது. அவன் குடிக்கக் குடிக்க அவை ஆசனவாய் வழியாக அப்படியே வெளியேறியது. தலைத் தூக்கி விழித்தபோது அவன் வாய் மயிர் மழித்த கெண்டைக் காலை கவ்வியிருந்தது. தலை சுற்றி உதிர்ந்து கீழே விழுந்தான். படுக்கையை விட்டு எழுந்து கழுவு தொட்டிக்கு செல்லும் முன்னரே வாயுமிழ்ந்தான். விளக்கொளியில் வெள்ளை பளிங்குத் தரையில் அவனுடைய வாந்தி விரவிக் கிடந்தது. அதில் மையமாக இரண்டு சொட்டு புதுக்குருதி தென்பட்டது. வயிறு, தொண்டை, வாய் என எல்லாம் எரிந்தது. ஏதோ பித்துப் பிடித்தவனைப் போல் அந்த நள்ளிரவில் புத்தக அலமாரியில் இருந்து சுசுருத சம்ஹிதையை துழாவி எடுத்தான். பக்கங்களை தன்னிச்சையாக ஓட்டினான். இந்திரமதம் – அட்டைகளுக்கு வரும் நோய். குருதி குடித்துக் குடித்து, பின்னர் அதுவே போதையாக மாறி, குடித்த ரத்தம் செறிக்காமல், வெளியேறவும் செய்யாமல் உள்ளேயே இருக்கும். மெல்ல அட்டை உணவு உண்ணும் நாட்டத்தை இழந்து, உட்சுருங்கி, உணர்வு மரத்து உயிர்விடும். உடல் வியர்த்து குளிர்ந்தது. உறங்காமல் அறையின் நீலநிற இரவுவிளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தான்.     
3
      
ஐந்தரை ஆண்டு முடிந்து பிரிவுபச்சார விழா நிகழ்ந்தது. ஆடல் பாடல் என எல்லாமும் நடந்தது. ஒவ்வொருவராக மேடையில் சென்று நன்றி தெரிவித்தார்கள், நினைவுகளைப் பகிர்ந்தார்கள். சேஷாத்ரி நிமிர்ந்த முதுகுடன் முதல் வரிசையில் அமர்ந்து எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். இளங்கோ சிரிக்க சிரிக்க தான் இடைநீக்கம் செய்யப்பட நிகழ்வை நினைவுகூர்ந்துக் கொண்டிருந்தான். ஒன்றரை வருடங்களுக்கு முன் ஸ்ரீநிவாசனுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய நாளன்று சிவானந்தன் கல்லூரிக்கு வரவில்லை. ஏறத்தாழ ஒருவாரம் கடும் காய்ச்சல், வாந்தி. ஆகவே அன்றுகாலை இளங்கோ தனியாளாக ஸ்ரீனிவாசனை உசுப்பி ரேடியாலஜி அறைக்கு அழைத்துச் சென்றிருக்கிறான். ஆனால் அங்கே சேஷாத்ரி கையெழுத்து இல்லாமல் எதுவும் செய்யமுடியாது என கைவிரித்துவிட்டார்கள். கல்லூரி திறப்பதற்கு முன்பாகவே அவரை வண்டியில் அமர வைத்து தாம்பரத்தில் உள்ள தனியார் சோதனைக் கூடத்திற்கு அழைத்துச் செல்ல முனைந்திருக்கிறான். ஆனால் அதற்குள்ளாக சேஷாத்ரி அவர்களை கண்டுவிட்டார். வேறுவழியின்றி சிகிச்சை அறைக்கு வந்தார்கள். சிவானந்தன் இல்லாத சூழலில் வேறு எவரும் முன்வராத நிலையில் சேஷாத்ரியே சிகிச்சையை செய்தார். அட்டையை புடைப்பின் மீது விட்டபோது அது கவ்வ மறுத்ததும். சிறிய கீறலை புடைப்பின் மீது கிழிக்க முயன்றார். லேசாக கீறியதும் ரத்தம் பீரிட்டு சேஷாத்ரியின் முகத்தில் வழிந்தது. ரத்தத்தை நிறுத்துவதற்குள் ஸ்ரீனிவாசன் அங்கேயே மயங்கி விழுந்து உடனே இறந்து போனார். அனுமதியின்றி வெளியே அழைத்துச் செல்ல முயன்ற இளங்கோ தான் காரணம் என குற்றம் சுமத்தப்பட்டு ஒருவாரம் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டான். சிவானந்தன் நினைவுகளில் சுழன்றான். அவன் கல்லூரிக்கு திரும்பியபோதே எல்லாம் இயல்பாகி விட்டிருந்தது. அவனுடைய ஆசிரியனின் அணுக்கச் சீடனாக தொடர்ந்தான். இறுதி பரீட்சை முடிந்து பயிற்சி மருத்துவராக இருந்த காலத்தில் சேஷாத்ரியிடம் இருந்து பலவற்றைக் கற்றுக்கொண்டான். சேஷாத்ரி எந்த நோய்க்கு எந்த நிலையில் எந்த மருந்து அளிப்பார் என்பதை முன் ஊகிக்கும் அளவிற்கு நெருக்கமாக ஆனான். அவனுடைய ஊகம் பெரும்பாலும் தவறியதும் இல்லை. அப்போது சிவாவின் முறை. “சேஷாத்ரியின் சீடரே வருக, சிவகங்கைச் சிங்கமே வருக, சீக்கு சிவாவே வருக” என கைத்தட்டல்களின் ஊடே பேசத் தொங்கினான். நேராக சேஷாத்ரியை நோக்கி வணங்கினான். “உங்களிடம் ஒன்றே ஒன்று சொல்ல வேண்டும்” என்றான். சேஷாத்ரி புன்முறுவலுடன் சொல்க என்பது போல் கையசைத்தார். “சார், நான் அட்டையின் வாயையும் குதத்தையும் துல்லியமாக கண்டுபிடித்துவிட்டேன். நன்றி. வணக்கம்” என்று திருத்தமாக சொல்லிவிட்டு அரங்கை விட்டு வெளியேறினான். வெளியே பெய்துகொண்டிருந்த மென்மழையில் நடப்பது அவனுக்கு பெரும் ஆசுவாசமாய் இருந்தது. 
௯நந்ட்ரி- தமிழ் இந்து திசை தீபாவளி மலர் 2019. சிறந்த ஓவியங்கள் அளித்த ஓவியர் செல்வத்துக்கும் நன்றி) 

நீலகண்டம் நாவல் விற்பனை

நீலகண்டம் நாவல் அறிமுக சலுகையாக 15% தள்ளுபடியில் கிடைக்கிறது.

https://be4books.com/product/%e0%ae%a8%e0%af%80%e0%ae%b2%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d/

Friday, October 25, 2019

நீலகண்டம் முன்னுரை

(யாவரும் பதிப்பகம் வெளியீடாக இந்த ஆண்டு வெளிவந்துள்ள எனது முதல் /புதிய நாவல் 'நீலகண்டத்திற்கு' எழுதிய முன்னுரை. விலை ரூ. 270, பக்கங்கள்- 224. நாவல் அச்சாகிவிட்டது. விரைவில் இணைய புத்தக நிலையங்களில் விற்பனைக்கு வரும்)



கடைதல்


திருமணமாகி இரண்டு ஆண்டுகள் வரை குழந்தைப்பேறு இல்லை. அது ஒன்றும் அதிக காலம் என்று சொல்ல முடியாது. ஆனால் மாதச்சுழற்சியின் இறுதி நாட்களில் காலச்சக்கரம் அணுவணுவாய் நகரும். சக்கரம் சுழலப் போகிறதா அல்லது துவங்கிய இடத்திற்கு மீண்டும் வரப்போகிறதா எனும் பதட்டம் ஓர் எல்லையில் தாங்க முடியாத துன்பம். அப்படியான தத்தளிப்பான காலகட்டத்தில் ஒருவரிச் செய்தியாக கேள்வியுற்ற நிகழ்வு நாவலாக உருக்கொள்ளத் தொடங்கியது. நியாயப்படி இந்த நாவலே முதலில் வெளிவந்திருக்க வேண்டும். ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் இந்நாவல் சிறுகச்சிறுக வளர்ந்தது. 2015 ஆம் ஆண்டு ‘நீலகண்டத்தை’ எழுதத் துவங்கிய காலத்தில் மானசா கருத்தரித்தார். கருச்சிதைவு சார்ந்த அத்தியாயத்தை அப்போதுதான் எழுதிக் கொண்டிருந்தேன். தொடர் கனவுகள் என்னை அலைக்கழித்தன. பருண்மைக்கும் கனவிற்குமான கோடுகள் அழிந்தன. உன் நாவலா? உங்கள் குழந்தையா? எனும் கேள்வியை பேரிருப்பு எனக்கு எழுப்பியதாகத் தோன்றியது. வேறு வழியின்றி நூறுபக்கம் வரை வளர்ந்த நாவலைக் கைவிட்டு வெளியேறினேன். அந்த முடிவு அத்தனை எளிதானதாக இல்லை. சுதீர் பிறப்பதற்காக காத்திருந்தேன். 

பின்னர் ‘அம்புப் படுக்கை’ தொகுப்பு வெளிவந்தது. பயணங்களால் நிறைந்த ஆண்டு. இடைப்பட்ட காலங்களில் வாசிப்பும் விரிந்தது. ஆல்டஸ் ஹக்ஸ்லியும், மரியோ வர்கோஸ் லோசாவும், மிகைல் புல்ககோவும் புனைவு குறித்தும், வாழ்க்கை குறித்தும் என் பார்வையை அசைத்தார்கள். யதார்த்தத்திற்கும் கனவிற்கும் புனைவிற்கும் இடையிலான உறவு என்னை வசீகரித்தது. ஜஸ்டின் கார்டனரின் ‘சோஃபியின் உலகம்’ ஒரே நேரத்தில் மேற்கத்திய மெய்யியல் அறிமுக நூலாகவும் வளரிளம் பருவத்தினருக்கான மிகுபுனைவாகவும் அமைந்திருந்தது. யதார்த்த உலகமும் கற்பனையும் முயங்கும் புள்ளி அபாரமாக உருவாகி வந்த நாவல்.  இப்படியான ஓரிடத்தை படைப்பின் வழி அடைய வேண்டும் எனும் உந்துதல் எனக்கிருந்தது.  இது வடிவ ரீதியான மாற்றம் மற்றும் இல்லை, வாழ்க்கை குறித்த அடிப்படை பார்வையே மாறியது. வரலாறையும், வாழ்வையும் புனைவின் நெசவு என்றே பார்க்கத் தொடங்கியது. படைப்பாளி பிரம்மாண்ட நெசவின் மிகச்சிறிய பகுதியை பிரதி செய்து அளிக்கிறான். வாழ்வளித்த கொடைக்கு நன்றிக்கடன் அல்லது தன் பங்கிற்கு ஏதோ ஒன்றை நெய்வதன்றி படைப்பாளிக்கு படைப்பை உருவாக்க வேறு உந்துதல்கள் இருக்க முடியாது எனத் தோன்றியது. 

மீண்டும் நாவலைத் தொடரும் துணிவு வருவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருந்தேன். யதார்த்தத் தளத்தில் மட்டும் நிகழ்ந்த நாவல் இப்போது கனவுத் தளத்தில் விரிந்தது. ஒரு மெய்யியல் விசாரணையாக, அது தேர்ந்த வடிவத்திற்குரிய பன்முகத்தன்மை கொண்டதாக முகிழ்ந்தது. 2018ஆம் ஆண்டு மீண்டும் இந்த நாவலை எழுதத் துவங்கிய சமயத்தில் மீண்டும் மனைவிக்கு உடல்நிலைச் சிக்கல், மருத்துவமனை அலைச்சல். இப்போது இந்த நாவல் வெளியாகும் முன் இன்னொரு பெண் குழந்தை நல்லவிதமாக பிறந்து அவளுக்கு சபர்மதி எனப் பெயரிட்டுள்ளோம்.

ஒரு நாவல் எழுதுவதற்கும் இந்நிகழ்வுகளுக்கும் ஏதேனும் தொடர்புண்டா? பகுத்தறிவின் வழியில் எளிதாக இதைப் புறந்தள்ளிவிடலாம். ஆனால் முட்டாள் மனம் இவற்றை எல்லாம் சமிக்ஞைகளாக நோக்கத் தொடங்கியது. என்னிடமிருந்து ஏதோ ஒன்றை, ஒரு தயாரிப்பை, ஒரு உறுதிமொழியை இப்படைப்பு கோருகிறது எனத் தோன்றியது.   கடந்த ஜனவரி 2019 ஏதோ ஒரு புள்ளியில், நாவலுக்கு என்னை முழுதாக ஒப்புக்கொடுத்தேன். முன்னர் எழுதிய இடத்தை விட்டுவிட்டு முற்றிலும் புதிய புள்ளியில் நாவல் திறந்து கொண்டது. ஒரு மாதத்தில் ‘நீலகண்டத்தின்’ முதல் வடிவை எழுதி முடித்தேன். நான் என்னை சிறுகதையாளன் என்பதைவிட நாவலாசிரியர் என்றே உணர்கிறேன். சிறுகதைகளுமே கூட நாவல் தன்மை கொண்டவையே. ‘நீலகண்டம்’ எழுதிய காலகட்டம் எனக்கு அதை மேலும் அழுத்தமாக உணர்த்தியது. நானறியாத புதிர்களின் நரம்பு முடிச்சுகளை எனக்கே அவிழ்த்துக் காட்டியது. செல்லத் துணியாத இருளின் ஆழத்திற்கு என்னை இழுத்துச் சென்றது. முற்றிலும் எதிர்பாராதவை இந்நாவலில் வெளிப்பட்டு என்னை திகைக்கச் செய்தன. 

இந்நாவல் ‘ஆட்டிசம்’ பற்றிய நாவல் அல்ல. ‘ஆட்டிச’ வாழ்வை ஆவணப்படுத்துவது இதன் முதன்மை நோக்கம் அல்ல. ‘ஆட்டிசம்’ ஒரு பின்புலம் மட்டுமே. அவ்வகையில் பாலபாரதியும் லக்ஷ்மி பாலகிருஷ்ணனும் எழுதியவை அனுபவப்பூர்வமானவை. நேரடியாக ஆட்டிச நிலையாளர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடன் தொழில் நிமித்தம் பழகியிருந்தாலும், சிகிச்சையில் பங்கு பெற்றிருந்தாலும், நவோகி ஹிகாஷிடா எனும் ஆட்டிச நிலையிலான சிறுவன் எழுதிய ‘நான் ஏன் குதிக்கிறேன்?(The reason i jump)’ எனக்கு ஆட்டிச உலகம் குறித்து பெரும் திறப்பை அளித்தது. டெம்பிள் கிராண்டின் எனும் ஆட்டிச நிலையாளரின் தன் வரலாறு மற்றும் அவருடைய நூல்களும் இதன் பல்வேறு சாத்தியங்களைக் காட்டின. இந்த பின்புலத்தைப் பயன்படுத்தி நவீன வாழ்வின் பிள்ளைப்பேறு சார்ந்த மெய்யியல் கேள்விகளை, அறக் குழப்பங்களை ‘நீலகண்டம்’ எதிர்கொள்கிறது, இன்னொரு தளத்தில் ‘வாசுதேவனில்’ எழுப்பிக்கொண்ட அதே கேள்விதான், மனித வாழ்க்கை எந்த எல்லையில் பயனற்றதாக ஆகிறது? நாவலின் முதல் சொல் உருக்கொள்வதற்கு முன்னரே அதன் பெயர் ‘நீலகண்டம்’ என மனதிற்குள் உறுதியாகிவிட்டது. கதையின் வடிவத்திற்கும் கருவிற்கும் ஓர்மையிருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பிற்கு நியாயம் செய்திருக்கிறது என்றே நம்புகிறேன். மற்றபடி இந்நாவல் அதன் விதியை தேறட்டும்.

நாவலைப் பற்றி ஜெயமோகனிடம் ஒருமுறை பேசினேன். அவர் நாவல் குறித்துப் பொதுவாகக் கூறியவையும், எனது குறிப்பிட்ட சில ஐயங்களை நோக்கி அவர் அளித்த பதில்களும் பெரும் உதவியாக இருந்தன.  நண்பர்கள் கிரிதரன், அஜய், சுந்தரவடிவேலன், காளிப்பிரசாத் ஆகியோர் இந்நாவலின் முதல் வாசகர்களாக இருந்துள்ளார்கள். ஒரு அத்தியாயம் எழுதி முடித்தவுடன் இவர்களுக்கு அனுப்புவதை வழக்கமாக வைத்திருந்தேன். நட்பாஸ், சுரேஷ் பிரதீப், அனோஜன், பெரு.விஷ்ணு குமார் ஆகியோர் நாவலின் முதல் முழுமையான வரைவு வடிவத்தை வாசித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள். நாவலின் இறுதி வடிவை முடிப்பதற்கு முன் எழுத்தாளர் குணா கந்தசாமி வாசித்து அளித்த ஆலோசனைகள் மிகுந்த பயனுள்ளவை. அதைவிடவும் சற்று மனம் குழம்பியிருந்த கணத்தில், இந்த நாவல் நன்றாக வந்துள்ளதாக அவர் சொன்னது நம்பிக்கையையும் ஆறுதலையும் அளித்தது.   எழுத்தாளர் எம். கோபாலகிருஷ்ணன் நாவலை வாசித்து சில முக்கியமான யோசனைகளை வழங்கினார். அவருக்கும் மனமார்ந்த நன்றி. மொத்த நாவலையும் மெய்ப்பு நோக்கி அளித்த வெண்பா கீதாயனுக்கு அன்பும் நன்றியும். மற்றுமொரு முறை நுணுக்கமாக பிழை திருத்தியளித்த வேதா நாயக் அவர்களுக்கும் நன்றி. ஜீவ கரிகாலன், விஷால் ராஜா, ஜா.ராஜகோபாலன் ஆகியோருடன் நாவல் குறித்த தொடர் உரையாடலில் இருந்தேன்.  நாவலை முடிக்க என்னைத் தொடர்ந்து உந்தி, என் தயக்கங்களைக் களைந்தவர் மனைவி மானசா, சுதீர் எனக்கு தினமும் புதியவற்றைக் கற்றுக் கொடுக்கிறான், எங்களோடு வந்து இணைந்திருக்கும் சபர்மதி, நெருக்கடிகளை எனக்கு கடத்தாமல் எப்போதும் என்னை இயங்கவிடும் அம்மா, அனைவருக்கும் நன்றிகள்.  இதை நூலாக வெளியிட்டிருக்கும் யாவரும் ஜீவ கரிகாலன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. 

இந்நாவலை வானவன் மாதேவி - இயலிசை வல்லபியைத் தவிர்த்து வேறு எவருக்கும் சமர்ப்பிக்க முடியாது. அவர்களுடனான நட்பும், அனுபவங்களும் என் வாழ்வில் மிக முக்கியமானது என நம்புகிறேன். வானதியின் மரணம் என்னைக் கடுமையாக பாதித்தது. ஒரு நண்பனாக, ஒரு எழுத்தாளனாக வானதிக்கும் அவருடைய நினைவுகளுக்கும் நான் செலுத்தும் எளிய அஞ்சலி என இந்நாவலைக் கொள்ளலாம். 
ஏதோ ஒருவகையில், ஏதோ ஒரு புள்ளியில் நாம் எல்லோரும் நீலகண்டர்களே. 
சுனில் கிருஷ்ணன் 

Thursday, October 24, 2019

அம்புப் படுக்கை - ஜி. வீர ராகவன் கடிதம்

(நண்பர் வீர ராகவன் அம்புப்படுக்கை குறித்து எழுதிய கடிதம்)

அன்பின் சுனீல்,

அம்புப்படுக்கை என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பீஷ்மரின் கதாபாத்திரமே. வயதில் மூத்தவரென்பதால் அவர்தான் முதலில் இறக்கவேண்டும்.. ஆனால், தன பேரன், கொள்ளுபேரன்களின் இறப்பைக்கண்டு பிறகு அம்புபடுக்கையில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அறிவுரைகளையும்  சஹஸ்ரநாமத்தையும் கூறிவிட்டு பிறகு தந்தையின் ஆசியின்படி தனக்கு உகந்த நேரத்தில் உயிரை விடுகிறார்.



இந்த தலைப்பில் சிறுகதை தொகுப்பு என்றதும் என்னுடைய மஹாபாரத ஆர்வம் காரணமாக அனைத்தும் பாரத கதைகளாக இருக்குமென நினைத்து ஒரு கடையில் புரட்ட  ஆர்வம் குறைந்து வாங்காமல் வைத்துவிட்டேன் (படிக்காமல் விட்டதற்கு எவ்வளவு  சொல்லவேண்டியிருக்கிறது).



பிறகு விஷ்ணுபுரம் குழுமம் நடத்திய ஈரோடு சிறுகதை முகாமில் நீங்கள் இரண்டு அமர்வுகளை நடத்துகிறீர்கள் என்றதும்கூட படிக்கவில்லை. அவர் சிபாரிசு செய்த கதைகளை படித்துவிட்டு ஈரோடு அரங்கில் கலந்துகொண்டேன். அங்கே வந்தபிறகுதான் நான் செய்த தவறு உறைத்தது. நான் என்னுடைய ஆசான் என கருதும் ஜெயமோகன் (நான்தான் சொல்லிக்கொள்கிறேன், அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை) ஒரு எழுத்தாளரை பார்க்குமுன் அவருடன் பேசும்முன் அவர் எழுதிய கதைகளை படித்திருக்கவேண்டும் இல்லையென்றால், அவரை நாம் அவமதிக்கிறோம் என்றே அர்த்தம் என பல இடங்களில் பலவாறு எழுதியிருக்கிறார். இதை மனதில் கொண்டு நான் உங்கள் அருகில் கூட வரவில்லை.



பிறகு, சென்னை திரும்பும் வழியிலேயே கிண்டிலில் அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பை தரவிறக்கம் செய்து வழியிலேயே படித்து முடித்தேன்.



அ) வாசுதேவன் : அப்போது நான் டெல்லியில் இருந்தேன், திடீரென என் ஒரு வயது மகளுக்கு தொடர்வயிற்றுப்போக்கு. பெரிய அனுபவமெதுவும் இல்லையென்பதால் நானும் மனைவியும் களேபரம் செய்துவிட்டோம். என் வீட்டிலும் மனைவி வீட்டிலும் மனைவியையும் குழந்தையையும் உடனடியாக ஊருக்கு அனுப்பச்சொல்லி கட்டாயம், தினமும் 8-10 தொலைபேசி அழைப்புகள். பணமில்லாததால் விமானத்தில் அனுப்ப முடியாது, தொடர்வண்டியில் அனுப்பினால் இரண்டு நாள் ஆகும். இன்னசெய்வது என யோசித்திக்கொண்டிருக்கும்போது கூட வேலைசெய்யும் வயதில் மூத்த நண்பரொருவர் சொன்னார், "அங்கெல்லாம் அனுப்பாதே, ஒரு குழந்தையை (எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றோருக்கு குழந்தைகளே) மனம் சலிக்காமல் பார்த்துக்கொள்ள பெற்றோரால் மட்டுமே முடியும், இவற்றை சொன்னால் மனம் சங்கடப்படும், ஆனால் உண்மை இதுதான். நீங்களே குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். நான் என் மகளை அனுப்பாமல், உடன்வைத்து நானும் மனைவியும் பார்த்துக்கொண்டோம். அதேநேரத்தில், இது நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்தபோது என் பெற்றோரும் மனைவிக்கு டெங்கு வந்தபோது அவருடைய தாயாரும் வந்து கவனித்துக்கொண்டபோது இதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் மகளுக்கு உடல் நலமில்லையெனில் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இந்த கதையை படித்தவுடன், எனக்கு என்னுடைய புரிதல்கள் மிகவும் சரியென தோன்றிய தருணங்கள்... என்னால் மறக்க முடியாது. வாசுதேவனை அவனுடைய பெற்றோர் அவன் அப்படியே இருக்கட்டும், நாங்கள் இருக்கும்வரை பார்த்துக்கொள்கிறோம் என சொல்வது, இதே உணர்வினால் மட்டுமே.



ஆ) பேசும்பூனை : இந்தக்கதையின் கரு ஒரு சமகால பிரச்னையை அலசுகிறது. Talking Tom என்னும் செயலி வந்தபுதிதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பைத்தியமாக அடித்தது. அதேபோல சிலபல செயலிகள் மூலம் விளையாட்டு என சொல்லி மூளைக்கு ஏற்றப்பட்டு கைபேசியின் பயன்பாட்டை அதீதமாக வளரச்செய்து மூளையின் செயல்பாட்டையும், சிந்திக்கும் திறனையும் குறைக்கச்செய்து தங்கள் இலாபத்தை அதிகப்படுத்திக்கொண்டன. இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சிறப்பாக சொல்கிறது. அந்த பிரச்சனை இப்போது ALEXA என்னும் புதிய செயலி மற்றும் மின்னணு இயந்திரம் மூலம் மேலும் வளரப்போகிறது. இப்போதே ALEXA-வும், SIRI-யும் அதுவாக பேசுவதையெல்லாம் பதிவுசெய்து இணையதளத்தில் ஏற்றம் செய்கின்றன என்னும் செய்திகள் பரவலாக வருகின்றன. நமக்கென எந்தவொரு அந்தரங்கத்தையும் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த சாதனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதையும் வைத்து பேசும் கைபேசி என்னும் பேசும்பூனை-2.0 வர வாய்ப்பு உள்ளது.



இ) கூண்டு : இதுவும் ஒரு சமகால பிரச்னையை அணுகி அலசும் கதை. ஒரு தவறு நிகழ்கிறது எனில், அதை தட்டிக்கேட்காத, அதை உணராத ஒவ்வொருவரும் அந்த தவறுக்கு பொறுப்பாகிறார்கள் என்பதே நான் புரிந்துகொண்ட தரிசனம். இந்தியன் திரைப்படத்தில், சேனாபதியின் வார்த்தைகளில், "பண்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு இலஞ்சம் பழகிப்போயிருக்கு" என்னும் வாக்கியம். நாம் ஒரு தவறு செய்தோமென்றால், உடனே பார்ப்பது வேறுயாராவது அதே தவறை செய்து தப்பித்திருக்கிறார்களா என்பதே. எவரும் நம்மை விலக்கவில்லையென்றால், அந்த தவறை நாம் செய்ய தயக்கமிருப்பதில்லை. யாரையும் எந்தத்தருணத்திலும் ஏமாற்றாத ஒருவன் இருப்பனெனில் அவனை கூண்டுக்கு வெளியே தனித்து இருக்கும் ஒருவன் என நாம் பரிதாபப்படுகிறோம், பிழைக்கத்தெரியாதவன் என்று சொல்லி எள்ளி நகையாடுகிறோம். ஆனால் கூண்டுக்குள் இருப்பது நாமே என நமக்கு உறைப்பதே இல்லை.



ஈ) பொன்முகத்தை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும் : கிராமத்திலிருந்து ஒரு சிறுவன் பொறியியல் படித்துவிட்டு சென்னையிலோ, பெங்களூரிலோ பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமணம், குழந்தைகள் என்பன தொடரும். குழந்தைகள் பிறந்தபிறகுதான் முக்கியமான பிரச்சனை தொடங்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்பட்சத்தில் தாத்தா-பாட்டி இருவரும் பேரன்-பேத்தியை பார்த்துக்கொள்ள கிராமத்திலிருந்து தங்களுக்கு சிறிதும் பழக்கமில்லாத அடுக்குமாடி கட்டடத்திற்கு வருவார்கள். அவர்களின் அவஸ்தையை சொல்வதே இந்த கதை. நேரடியாக இதிலும் எனக்கு அனுபவம் உண்டு. டெல்லியிலிருந்தபோது ஒவ்வொரு வருடமும் என் பெற்றோர் இரண்டு மாதங்கள் அங்கே வருவார்கள். புரியாத மொழி, அறியாத கலாச்சாரம் என அவர்களின் அவஸ்தையையும், நண்பர்கள் இல்லாமல் பேசவும் ஆளில்லாமல் அவர்களின் கஷ்டத்தையும் பார்த்து சென்னை வர கிடைத்த முதல் வாய்ப்பையே தவறவிடாமல் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கே ஒருமுறை டெல்லியில் இருந்தபோது என் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போய்விட நானும் வெளிநாட்டில் இருக்க என் பெற்றோருக்கு விமானத்தில் சென்னை திரும்பவேண்டிய சந்தர்ப்பம். மிகவும் கஷ்டப்பட்டதாக அம்மா சொல்ல நான் அங்கே வெளிநாட்டில் அழுதுகொண்டிருந்தேன். இவ்வாறு பேரப்பிள்ளைகளுடன் இருப்பதற்காக இவர்கள்படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமில்லை.



உ) அம்புப்படுக்கை : நாம் பலநேரங்களில் மருத்துவரிடமிருந்து மருந்தைத்தவிர நம்பிக்கையையும் ஆறுதலையும் கூடத்தான். மருத்துவரின் எல்லாம் நல்லபடியா ஆயிடும், ஒண்ணும் கவலைப்படாதீங்க என்னும் வாக்கியத்திற்கு நிகரான இன்னொரு ஊக்கமூட்டும் வாக்கியத்தை கண்டுபிடிப்பது கடினம். இந்த கதையில் ஆனாரூனா செட்டியாருக்கு அடுத்தவருக்கு சொல்ல பலவிபிஹமான சாகசங்கள் நிறைந்த கதைகள் உண்டு. அவற்றில் நேதாஜியும், வெள்ளையரும், ஜப்பானியரும் வருவார்கள். ஆனால் அவர் எதிர்பார்ப்பது அவர் பலகாலமாக நம்பும் ஒரு வைத்தியரின் வார்த்தைகளையே. ஆனால் அவர் இல்லாததால் அவருடைய வாரிசிடமிருந்து. அவனும் ஒருவரை நோயிலிருந்து விடுவிப்பதென்பது நோயை குணப்படுத்துவது மட்டுமில்லை என்று நன்றாக அறிந்திருக்கிறான். எங்களூரான தருமபுரியில் ஒரு மருத்துவர் ஊட்டும் நம்பிக்கையானது அதீதமானது. அவரால் இன்னும் வாழ்வோர் ஏராளம். அதேநேரத்தில், வயதானவர்கள் சென்றால், நம்பிக்கையூட்டுவதோடு இந்த வயது வந்தால், இந்தமாதிரி பிரச்சனையெல்லாம் வரும், அதற்காக மனதை தயார் செய்து அனுப்புவார். பீஷ்மர் அம்புபடுக்கையின் வலியை பொறுத்துக்கொண்டு வாழ்வதைப்போல வாழ வழிசொல்வார்.



ஊ) ஆரோகணம் : போர் முடிந்துவிட்டது, அஸ்வமேதம் முடிந்துவிட்டது. பிள்ளைகளை இழந்து பேரனான பரிக்ஷித்திற்கு பட்டம் சூட்டிவிட்டு நாடுநீங்கி பாண்டவர்கள் மலையேறி செல்கிறார்கள். ஒவ்வொருவராக விழ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்த நாயுடன் யுதிஷ்டிரர் எனப்படும் தருமர் நடந்துகொண்டே இருக்கிறார். அந்த நாயின் பொருட்டு சொர்க்கத்தையே மறுக்கும்போது அந்த நாயானது தருமதேவதையாக மாறுகிறது. அதுதான் அவர் அதுநாள்வரை கட்டிக்காப்பாற்றிவந்த அறம், தருமம். அதேபோல காந்தியும் யாருமில்லாதபோதும் தனியாக பலமுறை நடந்தார், எதன்பொருட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளையோ கருத்துக்களையோ மாற்றிக்கொள்ளவில்லை. அதுவே அவருடைய அறம். இந்த புனைவில் இவ்விரண்டுபேரும் இணைகிறார்கள். கதையில் சேர்ந்து நடக்கிறார்கள். காந்தியும் மக்களுக்காக நிஜஉலகின் சுவர்க்கத்தை விட்டதுபோல மேலுலகின் சுவர்க்கத்தையும் விட்டிருப்பார் என்பது தெள்ளத்தெளிவு.



எ) குருதிச்சோறு : நாட்டார் தெய்வங்களை குறித்த பல படைப்புகள் உள்ளன. அந்த நாட்டார் தெய்வங்கள் எந்தப்புள்ளியில் எவ்வாறு வைதீக வழிபாட்டு முறைக்குள் சேர்ந்துகொள்கின்றன என்பதே இந்த கதையின் கதைக்களம். இதில் பாலாயியே மனதில் ஆறாவடுவென மனதில் நிற்கிறாள். சபரியும் சுடலையும் அவரவர் புரிதலுக்கு ஏற்றவாறு தெய்வங்களை அறிகின்றனர். அன்னரக்ஷாம்பிகையோ, பாற்கடலில் ஆதிசேஷனின் மீது துயிலும் நாராயணனோ, பாலாயியோ, அன்னபூரணியோ எவர்மூலமாகவும் என்னுடைய தரிசனம் என்பது இருப்பதை உடனுள்ளோருடன் பகிர்ந்துண் என்பதே.



ஏ) திமிங்கலம் : எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சாத்தியத்தை இந்த கதை கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகளை கொல்வதும், வயோதிகர்களை தற்கொலைக்கு தூண்டுவதும் முதியோர் இல்லங்கள் மலிந்துள்ள இந்தக்காலகட்டத்தில் நடக்க வாய்ப்புகள் இல்லையெனினும் எதிர்காலத்தில் நுகர்வுலகத்தில் நடக்க வாய்ப்புக்கள் அதிகமென தோன்றுகிறது.



மற்ற இரண்டுகதைகளான காளிங்க நர்த்தனமும் 2016ம் கதைகளாக சிறப்பாக இருந்தபோதிலும் எனக்கான புரிதல்களை தரவில்லை. ஜார்ஜ் ஆரவெல்லின் 1984 கதையை படித்தால் பிடிகிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஒருமுறை ஜெயமோகன் கூறியதுபோல காளிங்க நர்த்தனம் கதையை மீள்வாசிப்பு செய்தால் அதிலுள்ள படிமங்களெனும் கதவுகள் எனக்காக திறக்கலாம்.

Monday, September 9, 2019

மதிமுகம் நேர்காணல்

சென்ற மாதம் சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியே திருமதி. அபிநயா ஸ்ரீகாந்த் மதிமுகம் தொலைகாட்சிக்காக ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் என நேரம் கேட்டிருந்தார். நான் சென்னைக்கு வரும் வேளையில் நேர்காணல் எடுக்க அவருக்கு தோதாக இல்லை. அபிநயா ஸ்ரீகாந்த் அவர்களை 'யாவரும்' நிகழ்வு ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம். பயனன்றே மதிமுகம் தொலைகாட்சிக்காக அவர் 'ஒரு படைப்பாளரின் கதை' எனும் பெயரில் எழுத்தாளர்களை நேர்காணல் செய்கிறார் என அறிந்து கொண்டேன். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வாசித்து அவர்களை நேர்காணல் செய்கிறார். தமிழ் இலக்கிய சூழலில் இது ஒரு பெரிய விஷயம் என்றே எண்ணுகிறேன். நேர்காணல்கள் அபூர்வம் அல்ல ஆனால் பெரும்பாலும் பெரியதயாரிப்பு ஏதுமன்றி பொதுவான கேள்விகளே எழும். குறிப்பாக காட்சி ஊடகத்தில் இது அபூர்வம்.  அவ்வகையில் எனக்கும் மதிமுகம் நேர்காணல் நிறைவான அனுபவமாக இருந்தது.  சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான எனது நேர்காணல் இப்போது யூ டியுபில் வலையேற்றப் பட்டுள்ளது. மதிமுகம் தொலைக்காட்சிக்கும், அபிநயா ஸ்ரீகாந்திற்கும் எனது நன்றிகள். கண்ணாடி போடாமல் சுவிசேஷ ஜபக்கூட்ட போதகர் போல் உள்ளதாக நண்பர்கள் சொன்னார்கள். கண்ணாடியை கழட்டியவுடன் முகத்தில் இருப்பதாக நம்பப்படும் அறிவுஜீவி களையும் காணும். 



Tuesday, August 20, 2019

பெரும் படம் காணல்- நரோபா

சுழல மறுத்த நிலைக்காற்றாடியின் இரும்புச் சட்டத்தை கழற்றி விட்டு என்ன செய்தால் சுற்றும் என்று தெரியாமலேயே எதையாவது கழற்றி மாட்டினால் சுற்றிவிடும் எனும் ஐதீகத்திற்கு இணங்க பழுவேட்டையர் திருபுளியை வைத்துக்கொண்டு அமர்ந்திர்ந்தார். காலையிலிருந்து மனம் அமராமல் படபடத்துக்கொண்டிருந்தது. செவப்பட்டி சிங்காரம் செவப்பட்டி எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைக்காக வண்டை வண்டையாக திட்டியிருக்கிறான் என செய்தி வந்தது. நேற்றிரவு சினிமாவுக்கு வந்தபோது முட்ட பப்சும் போண்டாவும் வாங்கிக்கொடுத்தவன் காலையில் ஏன் இப்படிச் செய்தான் என புரியவில்லை. அறையின் ஒற்றைக் காற்றாடியும் ஓடவில்லை என்பதால் வெளியேயும் புழுங்கியது. அரவமற்ற தெருவில் கிடாரம் கொண்டானின் சைக்கிள் திணறும் ஒளியை துல்லியமாக கேட்க முடிந்தது. திருபுளியை போட்டுவிட்டு அவசர அவசரமாக கசன்சாகிசின் 'ஜோர்பா எனும் கிரேக்கன்' நாவலை எடுத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து ஜென் நிலைக்குச் சென்றார்.

கிடாரம் சைக்கிளைக் சுவரில் சாய்த்துவிட்டு அரக்கப்பரக்க ஓடிவந்தான். சுவரில் சாய்ந்து புத்தகத்தை திறந்து கண்மூடிக் கிடக்கும் பழுவேட்டையரைப் பார்த்ததும் சற்று அமைதியானான். ஓசையின்றி அதேநேரம் தான் வந்ததை அறிவிக்கும் அளவிற்கு சலனம் ஏற்படுத்தி அவர் முன் சப்பணமிட்டு அமர்ந்தான். மூன்று நிமிடம் ஆகியும் கண் திறக்கவில்லை என்றதும் கிடாரம் பொறுமையிழந்தான். அவனாக கூப்பிடும் வரை ஜென் நிலையைத் துறக்க முடியாத கடுப்பில் அவன் கூப்பிடுவதற்காக செவி கூர்ந்து காத்திருந்தார். கூப்பிட்டால் தவம் கலைந்துவிட்டது என திட்டுவாரோ என குழம்பி கிடாரம் காத்திருந்தான்.  பொறுமையிழந்து அரைக்கண்ணால் பழுவேட்டையர் பார்ப்பதற்கும் கிடாரம் "அண்ணே" என அழைபப்தற்கும் காலப்பொருத்தம் அபாரமாக இருந்தது.

"வா கிடாரம்..என்ன விஷயம்"

"அதானே இந்த செவப்பட்டி சிங்காரம் பிரச்சனையப் பத்தி ஒலகமே அல்லோலகலப்படுது..நீங்க என்னடான்னா இங்க இப்படி அமைதியா இருக்கீங்க"

"ஒலகமேன்ன? ஒலகமேவா"

"அட..ஒலகமேன்ன ஒலகம் இல்லைனே, நம்ம இலக்கிய உலகத்தச் சொன்னேன் "

"இலக்கிய உலகம் முழுக்கவா?"

"இலக்கிய உலகம்னா.. அப்படி  முழுக்க சொல்லிரமுடியாதுல. மரபு குருப்பு, ரமணிச்சந்திரன் குருப்பு.. இவங்கல்லாம் வேற இல்லியா...நாஞ்சொல்றது நம்ம நவீன இலக்கியப் பரப்புண்ணே"

கண்ணாடியை கழற்றி கைலியில் துடைத்துக்கொண்டே
"நவீன இலக்கியம் முழுக்கன்னு சொல்ற.."

தலையை சொறிந்துகொண்டான். "அப்படிச்சொல்ல முடியுமான்னு தெரிலண்ணே..எப்படியும் ஃ பேஸ்புக்ல இருக்குற முன்னூறு நானூறு பேராவது இருப்பாய்ங்க"

"அவ்ளோ பேரா இருக்காய்ங்க?"

"துல்லியமா சொல்ல முடியாது அண்ணே, ஃபேக் ஐடி, எல்லாம் கழிச்சா எப்படியும் முப்பது நாப்பது பேராவது இருப்பாய்ங்க"

பழுவேட்டையர் கண்ணாடியை அணிந்துக்கொண்டு துள்ளி எழுந்து அமர்ந்தார்.
"அப்புறம் என்ன மஸ்துகுடா ஒலகம் முழுக்கன்னு சொன்ன?"

"கோவிக்காத அண்ணே.. செவப்பட்டி சிங்காரம் இவ்வளவு சொல்லியிருக்கான். நீ எழுதுன செவப்பட்டி இலக்கிய வரலாறு ல முன்னூறு பேரச் சொல்லலைன்னு சொல்றான். மாலை மலர், சிறுவர் மலர், ஆண்டு மலர், அறுபதாம் கல்யாண மலர், காதுகுத்து போஸ்ட் கார்ட், நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே இரங்கல் அஞ்சலி போஸ்டர், பனமரத்துல வவ்வாலா தலைவனுக்கே சவாலா  பேனர் வாசகங்கள்ன்னு ஆதாரத்தோட அடுத்தடுத்து நீங்க புறக்கணிச்ச ஆளுமைகளை பத்தி வெளியிடுறான் அண்ணே, நீ அங்க வந்து எதாவது பதில் சொல்லலாம்ல"

பழுவேட்டையர் எழுந்து நின்றார். கைலியில் சுருட்டி வைத்திருந்த பீடியைப் பற்றவைத்துவிட்டு வானத்தைப் பார்த்தார். அங்கே பட்சிகள் பறந்து கொண்டிருந்தன. தொலைதூரத்தில் கூவும் குயிலின் ஓசை கேட்டது. சூரியன் அப்போதுதான் துலங்கத் தொடங்கியிருந்தான். ஆழ மூச்சிழுத்து விட்டார்.

"கிடாரம் நாம இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது. எழுத்தாளன் எப்போதும் ஒரு பெரியச் சித்திரத்த தான் பாக்கணும்"

"அவன் உங்க வாசிப்பு சரியில்லன்னு சொல்றான்"

இன்னும் நிதானமான குரலில் "நாம ஒட்டுமொத்த சித்திரத்தப் பாக்கணும்" என்றார்.

கிடாரம் குழம்பியது அவனுடைய முகத்தில் தெரிந்தது. "அண்ணே நீங்க வேணும்னே பலபேர விட்டுடீங்கன்னு சொல்றான்.."

தூரத்தில் ரயில் தடதடக்கும் ஓசை கேட்டது. நாசியில் பூத்த மல்லியின் வாசனை நுழைந்து கிறங்கடித்தது.

"கிடாரம்.. கொஞ்சம் நிதானமா யோசிக்கணும், சிங்காரம் நம்ம பய, ஏதோ பேசிட்டான், நமக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வை இருக்குல்ல" என்றான் நிதானமாக.

கிடாரம் எழுந்து கீழேக்கிடந்த சுழலாத நிலைகாற்றாடியை ஆவேசமாக உதைத்தான். "போடா லூசுக்கூதி அவன் நீ காசு வாங்கிட்டு எழுதுறன்னு சொல்றான், வாயத்தொறந்து எதாவது சொல்றான்ன ஒட்டுமொத்தப் பார்வை, பெரிய சித்திரம்னு, சொல்றா கண்டராவொளி ..என்னடா உன் ஒட்டுமொத்த பார்வை?"

கிடாரத்தின் ஆவேசம் பழுவேட்டையரை நிலைக்குலையச் செய்தது. அவன் எப்போதும் இந்தமாதிரி நடந்துகொண்டதில்லை. அவன் தோள் தொட சென்றபோது சிணுங்கி விலகினான்.

"கிடாரம்..இப்புடி உக்காரு..பேசுவோம்.. என்னடா பொசுக்குன்னு வார்த்தைய விட்ட.. அண்ணன் காசு வாங்கிருப்பேனாடா? இந்த ஓட்ட ஃபேனைப் பாத்தப்புரமும் எவனாவது சொல்வானாடா?"

கிடாரம் விசும்பி அழத் தொடங்கினான். "எனக்குத் தெரியும் அண்ணே..இருந்தாலும் ஊர் பெசுதுல"

தோளோடு அணைத்து அவனை ஆறுதல் படுத்தினார். "ஊர் ஆயிரம் பேசும் டா..போட்டும் விடு"

"அண்ணே இப்பயாச்சும் சொல்லு, அதென்ன பெரிய சித்திரம்?"

"அது வந்துடா..சொல்றேன்" என மெதுவாக ஆரம்பித்தார்.

"மொத்தம் நாலு யுகம் இருக்கு தெரியும்ல..சத்ய யுகம், கிருத யுகம், த்வாபர யுகம், கலியுகம்..அது அடுத்தடுத்து வரும். காலம் ஒரு சுழற்சி..பெரியச் சக்கரம்"

கிடாரம் ஆர்வமாகக் கேட்டான்.

கொஞ்சநேரம் யோசித்த பின் மீண்டும் தொடர்ந்தார் "சரி அதவிடு, இப்ப வேற சொல்றேன், இந்த பிரபஞ்சம் விரிவாகிட்டே இருக்கு, அது முன்ன குட்டியா ஒரு பந்தாட்டம் இருந்துதாம், வெடிச்சு விரிவாகிட்டே இருக்கு, திரும்ப அது சுருங்கி ஒண்ணுமில்லாம போயிரும்"

கிடாரம் குழப்பமாகப் பார்த்தான்.
அவனுடைய சங்கடத்தைப் புரிந்துகொண்ட பழுவேட்டையர்
"சரி இதையும் விடு இப்ப வேற சொல்றேன்..நம்ம பூமி முழுக்க ஒருகாலத்துல பனி உறைஞ்சு கிடந்துதாம்..அப்புறம் உருகிடுச்சாம்..இது திரும்பத் திரும்ப நடக்குமாம்..கண்டத் தட்டுகள் எல்லாம் நகந்துக்கிட்டே இருக்காம், இந்த உலகத்த காப்பாத்த, நாம வாழறதுக்கு எல்லாம் நாம எதுவுமே செய்ய முடியாது. நாம எதவாது செஞ்சாலும் இல்லைன்னாலும் உலகம் அழியத்தான் போகுது. புரியுதா? எல்லாம் சுழற்சிதான்"

கிடாரம் மேலும் குழம்பினான்.

பழுவேட்டையர் வானில் பறக்கும் பட்சிகளை நோக்கியபடி கிடாரத்தை நோக்கித் திரும்பிச் சொன்னார்

"இம்மாம்பெரிய பிரபஞ்சத்துள, சின்ன உலகத்துல, தக்குனூன்டு இலக்கிய உலகம் எம்மாத்திரம் சொல்லு?" என்றபோது அவருடைய முகத்தில் அபூர்வ ஒளி பரவியது.

கிடாரத்திற்கு புரிந்தமாதிரியும் இருந்தது, புரியாதமாதிரியும் இருந்தது.  உதைந்த நிலைக்காற்றாடியை நிமிர்த்தி வைத்துவிட்டு சிந்தனைவயப்பட்டவனாக "ஆகமொத்தம் அவனுக்கு நீ எந்த பதிலும் சொல்லப் போறது இல்ல..அதானே" என்றான். "அது அப்படி இல்லடா.." எனச் சொல்லத் தொடங்கியதும். கையை நீட்டி நிறுத்தச் சொன்னான். ஏதோ முனங்கியபடி அறையை விட்டு கிளம்பிச் சென்றான்.

நிலைக்காற்றாடி சட்டகத்தைப் பூட்டி ப்ளக்கில் செருகி சுவிட்சைப் போட்டுப்பார்த்தார். காற்றாடிச் சுழலத் துவங்கியது. 
"