Friday, May 19, 2017

கடல் கொள்ளும் கோவில் – பாவண்ணனின் ‘வெளியேற்றப்பட்ட சிறுகதை’ தொகுப்பை முன்வைத்து


பாவண்ணன் தமிழில் பல ஆண்டுகளாக இயங்கி வரும் முக்கிய இலக்கிய ஆளுமைகவிதையில் துவங்கிசிறுகதைநாவல்குறுநாவல்மொழியாக்கம்விமர்சனம்அனுபவ கட்டுரை என எழுத்தின் எல்லா வகைப்பாடுகளிலும் கணிசமாக எழுதியவர்பாவண்ணன் சிறுகதைகள் வாழ்வின் பல்வேறு தளங்களில் எழுகின்றனஅவருடைய ஏழு லட்சம் வரிகள் தொகுப்பை ஒரு உதாரணமாக கொள்ளலாம்நாமறிந்த பாவண்ணன் அல்ல அவர் என தோன்ற செய்யும் அளவுக்கு தொன்மங்களையும் நாட்டார் கதைகளையும் கையாண்டிருப்பார்மனம் பற்றிய கூர்மையான அவதானங்களை சொல்லும் உளவியல் கதைகளையும் எழுதி இருக்கிறார்அவருடைய சிறுகதையுலகம் மிகவும் பரந்ததாகவே இருக்கிறது.
அகரம் வெளியிட்ட வெளியேற்றப்பட்ட குதிரை தொகுப்பில் உள்ள ஒன்பது

Wednesday, May 17, 2017

நாஞ்சிலின் நறும்புனல்

(பதாகை நாஞ்சில் நாடன் சிறப்பிதழுக்காக எழுதிய கட்டுரை. இதன் பிறகு மேலும் சில முறை சந்தித்து மேலும் நெருக்கமாகவே உணர்கிறேன்)

மூன்று அல்லது நான்காண்டுகளுக்கு முன், முதன்முறையாக விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் நடத்திய ஊட்டி முகாமில்தான் திரு நாஞ்சில் நாடன் அவர்களைச் சந்தித்தேன். தமிழினி ‘வெளியிட்ட நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை’ எனும் ஒரேயொரு கட்டுரை தொகுப்பு மட்டுமே அப்போது வாசித்திருந்தேன். பள்ளியில் தமிழ் பயிலாதவன். ஆகவே மரபிலக்கியம் வாசிக்கும் அடிப்படை பயிற்சியற்றவன். எனவே, அவருடைய கம்ப ராமாயான உரையை முழுவதுமாக உள்வாங்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை. 
 

Friday, May 12, 2017

கொலை இயந்திரம்

பதாகையில் வெளிவந்த கவிதை 

போட்டிருக்கும் சட்டையை முதலில் கழட்ட வேண்டும்
கசங்கி இருந்தாலும் பரவாயில்லை,
ஈரத்தில் ஒட்டியிருந்தாலும் கூட,
காயும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
கிழித்தாவது எறியத்தான் வேண்டும்.
ஆனால் வேறு சட்டை வேண்டுமே என கேட்பது காதில் விழுகிறது
அதற்குதான் சித்தாந்த பயிற்சி இருக்கிறதே.
தனக்கான சட்டையை தானே நெய்து கொள்பவன் மனிதன்.
முடியவில்லை என்றாலும் பாதகமில்லை.
எப்படியும் வேறொருவன் கழட்டிப் போட்டது கிடக்கும்.
கிடைக்கவில்லை என்றால்தான் என்ன?
சட்டை இருப்பது போல்
ஒரு பாவனை செய்துகொள்ளக்கூட
திராணியற்றவனா என்ன?
காலரை இழுத்துவிட்டுக் கொள்ளவும்
பித்தான்களைக் கழட்டி மாட்டவும்
வயிற்றை எக்கி உள்ளிழுத்தால்
நம்பகத்தன்மை கூடும்.
விளையாட்டாகவே செய்யலாம்
கடமையுணர்ச்சி கொஞ்சம் இருந்தால் இன்னும் உசிதம்
ஆகச்சிறந்த கொலை இயந்திரம்
இப்படித்தான் தயாராகிறது.

ஒற்றை புன்னகை வெளிச்சம்

(பதாகையில் வெளிவந்த ராண்டோ கவிதை)

வழக்கமாய் உணவு மேஜையில்
மாறா புன்னகையுடன் நின்றிருக்கும்
அவனுடைய முகத்தில் அன்று தோன்றிய
ஒற்றை புன்னகை  வெளிச்சம்
இல்லை, இல்லை. ஒளி வெள்ளம் –
புதிதாய் முளைவிட்டிருந்த
ஒரு தங்கப் பல் மின்ன,
“லீவுக்கு போறேன் சார்”

கல்நாகம்



தொல் நெடுங்காலத்தில்
டைனோசர்கள் ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்தபோது
பனிவெளியின் ஆப்பிள் மர நிழலில்
கண்மூடி உறைந்து தவம் செய்த முனிவனை
சூழ்ந்து இறுக்கியது குருதிப் பசியடங்கா மலைப்பாம்பு.
“எதையும் இறுக்கும் திண்மை கொண்ட நீ
என்றும் இறுகிய கல்லாய்க் கிடவாய்,”
அழியா சொல்லுடன் காற்றில் கரைந்தான் முனிவன்,
முறுகி முயங்கிச் சில்லுகளாய் வெடித்தது கல்பாம்பு.
பன்னெடுங்காலம் கடந்த ஒரு வேனிற்கால மாலைப் பொழுதில்
மலைவேடன் கையில் அகப்பட்டது
கூர் முக்கோணத் துண்டு.
கல்பாம்பு உள்ளுக்குள் நகைத்தது,
“மூடன்! என்றென்றைக்கும் குருதியை சுவைக்கும்
வரம் அளித்துவிட்டான்”
(மேலுள்ள புகைப்படத்தை வைத்து கவிதை எழுதும் முயற்சி- பதாகையில் வெளி வந்தது)


அறையின் நடுவில் ஒரு யானை

தொலைகாட்சியில் ஓடிகொண்டிருந்த கால்பந்தாட்டத்தை பார்த்து
காலுதைத்து கொண்டிருந்தான் அவன்
நாளிதழில் துர்மரனங்களுக்கு உச்சு கொட்டி கொண்டிருந்தார் அவர்
வினாவிற்கு விடைவேண்டி அழுதது ஒரு குழந்தை
குழந்தையின் வினா விளங்காமல் வழக்கம் போல்
பால் புகட்டி வாயடைக்க முயன்றாள் அதன் அன்னை
சலவை இயந்திரமும் அரைப்பானும் உரக்க ஒருவருக்கொருவர் பேசி கொண்டார்கள்
குளிர்சாதனபெட்டி இடைக்கிடை கட்டைகுரலில் அவ்வுரையாடலை மத்தியஸ்தம் செய்தது
விலா எலும்புகள் துருத்தித் தெரிய
முதிர்ந்து வெளுப்பேறி
நிலைகுத்திய விழிகளுடன் மூச்சுவாங்கியபடி
கயிற்று கட்டிலில் கிடந்தது
அறையின் நடுவில் ஒரு யானை
காலத்தை உண்டபடி
தனித்து காத்திருந்தது..

Sunday, April 30, 2017

தாத்தா - சில நினைவுகள்

(எனது தாத்தா அரிமளம் ராமகிருஷ்ண வைத்தியரின் நூற்றாண்டை முன்னிட்டு தொகுக்கப்படும் நூலுக்காக எழுதிய நினைவஞ்சலி கட்டுரை)

இப்போது கண்ணை மூடிக்கொண்டு தாத்தாவை நினைத்தால் என்னவெல்லாம் நினைவுக்கு வருகிறது?

 சற்றே கூனிய மேல் முதுகும், சிவப்பு தோலில் படிந்த தேன் புள்ளிகளும், பளிங்கு நீல விழிகளும் தான் மனதை நிறைக்கின்றன. பின்னங்கழுத்துக்கு கீழே தோல் தடித்த அரக்கு நிற அடையை அவ்வப்போது சொறிந்துகொள்வார். கை எட்டாத போது சீப்பால் நாங்கள் யாராவது சொறிந்து விட்டதும் கூட உண்டு. சட்டையணியாத வெற்றுடலுடன் திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார். நாங்கள் யாராவது ஊரிலிருந்து வந்தால் தெலுங்கில் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு அவர் பாட்டுக்கும் வைத்தியத்தை தொடர்வார். அவரிடம் இரண்டே இரண்டு சட்டைகள் தான் இருந்ததாக நினைவு. வான் நீல நிற ஜிப்பா போன்ற அரைக்கை சட்டை ஒன்று, சந்தன நிறத்தில் மற்றொன்று. மூன்றோ, நான்கோ தங்க நிற பித்தான்கள் இருக்கும். வெளியூர்களுக்கு பேருந்தில் செல்வதாக இருந்தால் மட்டுமே அதை அணிவார். சிறிய எவர்சில்வர் செவ்வக பெட்டி ஒன்று அவரிடம் இருக்கும். அதில் மூக்குபொடியை போட்டு வைத்திருப்பார். அதன் துளைக்கும் நெடியை நாசி நுனி நன்றாக நினைவில் வைத்திருக்கிறது, பொடி உறிஞ்சிய பிறகு வீடதிற எழும் தொடர் தும்மல் ஒலிகளையும் கேட்க முடியும். முற்றத்தின் அலுமினிய கம்பிகளில் தொங்கும் பொடி கறை படிந்த வெள்ளை கைக்குட்டைகளையும், கெளபீனங்களையும், அழுக்கேறிய குத்தால சிவப்பு துண்டையும் நினைவில் கொள்கிறேன். ஒரு பெரிய அலுமினிய பெட்டி ஒன்றிருக்கும். அந்த காலத்தில் பள்ளிக்கு கொண்டு செல்வார்களே அந்த மாதிரி. வெளியே வைத்தியத்துக்கு செல்லும்போது அந்த பெட்டியை தூக்கிக்கொண்டு தான் போவார். மனமார சிரிக்கும் ஒலி, கீழே அமர்ந்து கல்வத்தில் அரைக்கும் போது எழும்’ டணங்’. கூடத்தில் சாய்வு நாற்காலியில் வாய் பிளந்து உறங்கும் போது அடித்தொண்டையிலிருந்து எழும் குறட்டை என அவருக்கே உரித்த ஒலிகளை செவி மீட்டு எடுக்கின்றன.

Friday, April 14, 2017

வெள்ளிகிழமை ராமசாமி வாராண்டி

திருவாளர் வெள்ளிக்கிழமை ராமசாமி திங்கள்கிழமையே வந்துவிட்டார்.
இப்பொழுது தான், இதோ இரண்டொரு நாட்களுக்கு முன் வந்திருந்தார். 
சனிக்கிழமை சந்திரசேகரன் வரும்வரை இரவெல்லாம் தங்கியிருந்தார். 
காலையிலேயே வந்திருந்தாலும் கூட அவர் பாட்டுக்கும் ஏதுமறியா சினைபூனை போல மூலையில் சுருண்டு படுத்திருப்பார். 
வியாழக்கிழமை வெங்கடாசலம் செல்வதற்கு முன்பா பின்பா? எப்போது வந்தார் என்று கூட தெரியாது. 
அரிதினும் அரிதாக சனிக்கிழமையும் தங்கி சந்திரசேகருடன் சண்டைபிடிப்பதும் கூட உண்டு. 
ஆனால் ஒருபோதும் ஞாயிற்றுக்கிழமை ஞானபிரகாசத்தை கண்டதே இல்லை.
கொஞ்சம் பொறுங்கள், நீங்கள் வர இன்னும் நாளிருக்கிறது
சொன்னாலும் கேட்காமல் நாற்காலியை இழுத்துபோட்டு 
நடுக்கூடத்தில் அமர்ந்திருக்கிறார்.
'வெள்ளிகிழம வர்ற வர இங்கயே இருக்குறேன்.'
என்றார் வெற்றிலை குதப்பியபடி
அப்போதாவது ஒருபோதும் இங்கிருந்து செல்லும் உத்தேசமில்லை
 என்பதை சொல்லி தொலைந்திருக்கலாம்.  



வாசுதேவன் - சிறுகதை குறித்து

அண்மையில் நான் எழுதிய சிறுகதை ஜெயமோகன் தளத்தில் வெளியாகி உள்ளது. வாசுதேவன் நான்கைந்து ஆண்டுகளுக்கு மேலாக மனதின் மூலையில் உறங்கிக்கொண்டிருப்பவன். அவன் விழித்தெழும் போதெல்லாம் அவன் மவுனத்தின் வழியாக எனக்குள் கேள்விகளை எழுப்பியபடியே இருப்பான். யுகம் யுகமாக மனிதர்கள் விடை காண முயன்று அலுத்து சோர்ந்து விழும் கேள்விகள். எனக்கு மட்டும் அத்தனை எளிதில் விடைக் கிடைத்து விடுமா என்ன? 

எழுத தொடங்கிய காலகட்டத்தில், நான் வாசுதேவனை பற்றி எழுதி இருக்கிறேன். பின்னர் மீண்டும் கொஞ்ச காலத்திற்கு முன்னர் காப்காவின் உருமாற்றம் பற்றி ஆம்னியில் எழுதும் போது மீண்டும் வந்து சென்றான். ஆனால் முழுவதுமாக அவனை என் அகத்திலிருந்து இறக்கி வைக்க முடியவில்லை. இப்போது வாசுதேவனாக அவன் என்னைவிட்டு இறங்கி சென்றுவிட்டான். ஏதோ ஒருவகையில் அவனுடைய நினைவுகளுக்கு நான் நியாயம் செய்துவிட்டதாக ஒரு நிறைவு. அவனுக்கு நீதி கிடைத்துவிட்டதாக எனக்கொரு நிம்மதி. இனி அடுத்த வேலையை பார்க்க செல்லலாம். மீண்டும் அவன் என் அகத்தில் துயில் எழ மாட்டான் என்பது எனக்கு உறுதியாக தெரிகிறது. 

இது ஒரு அனுபவப் பகிர்வாக நின்றுவிடுகிறது, தரிசனம் என ஏதுமில்லை என பல நுண்மையான வாசகர்கள் சொன்னார்கள். வேறு பலர் தாங்கள் இக்கதையின் வழியாக உணர்ந்து கொண்டதையும் சொன்னார்கள். பல விஷயங்கள் தொக்கி நிற்பதாகவும், வலிய திணிக்கபட்டதாகவும், நெகிழ்வான தருணங்கள் இன்னும் இறுக்கமானதாகவும் இருக்க வேண்டும் என்று சில வாசக விமர்சகர்கள் சொன்னார்கள். இன்னும் கொஞ்சம் பூடகமாக சொல்லவேண்டும் என்றார்கள். இறுதி வரிகள் தெலுங்கில் இருப்பது வாசிப்பிற்கு தடையாக இருப்பதாக சொன்னார்கள். தெலுங்கில் அவ்வரிகள் வரவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து இடையில் உள்ள உரையாடல்கள் தெலுங்கில் அமைத்ததாக சொன்னார்கள்.ஜெ மொழி நடையை பின்பற்றுவதாக சொன்னார்கள். ஒவ்வொரு விமர்சினத்தையும் கவனித்து வருகிறேன். சரியாகவும் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். எனக்கும் இவைகளுக்கு விடையளிக்க இப்போது இயலவில்லை. ஒவ்வொன்றைப் பற்றியும் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன். நடையைப் பொருத்தவரை மீண்டும் மீண்டும் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் என்னை எச்சரித்த வண்ணமிருக்கிறார்கள்.முழுமையாக புரிந்துகொள்கிறேன். ஒவ்வொரு ஆரம்ப எழுத்தாளருமே அவருடைய ஆதர்ச எழுத்தாளர் நடையில் தான் எழுத துவங்குவார்கள். ஜெ மாதிரி எழுத வேண்டும் என வலிந்து இப்படி எழுதுவதில்லை எனும் நம்பிக்கையை மட்டுமாவது நான் கோருகிறேன். அதுவே என் அகமொழியாக இருக்கும் போது வேறு என்ன செய்ய இயலும்? காலபோக்கில் இது மாறிவிடும என நம்புவோமாக என்பதைத்தவிர வேறெதுவும் சொல்லுவதற்கில்லை.  

இது வடிவ போதத்துடன், சிறுகதை பிரக்ஞையுடன் எழுதப்பட்ட கதையா எனும் கேள்வி எனக்கும் உண்டு. ஏனெனில் சேலம் வானவன் மாதேவி - வல்லபி சகோதரிகளையும் அங்கு வேறு பல தசை சிதைவு அன்பர்களையும் சந்தித்துவிட்டு வந்த பின்னர் ஒரே மூச்சில், மிக குறுகிய காலத்தில் ஒருவித உணர்வெழுச்சியில் எழுதப்பட்ட கதை.  ஆனால் இது அனுபவ பகிர்வாக நின்றுவிடுகிறதா? தரிசனம் என ஏதுமில்லையா? என்னளவில் இக்கதையில் தரிசனம் இருக்கிறது. ஒரு  கண்டடைதல் இருக்கிறது. வாழ்வைப் பற்றிய மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. அதற்கானவிடை காணும் திசையில் பயணிக்கிறது. ஒருகால் சரிவர உணர்த்தப்படாமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் இருக்கிறது. அதுவே இந்த அனுபவத்தை புனைவாக்கியது. ஏனெனில் இது எங்கோ நடந்ததை அப்படியே மீள் பதிவு செய்யவில்லை. வேறுவகையில் நிகழ்வுகளையும் நினைவுகளையும் மாற்றி களைத்து அடுக்கியிருக்கிறது. இம்முறை வாசுதேவன் அவனுடைய முழு உருவத்துடன் தன்னை வெளிக்காட்டி இருக்கிறான் என்றே எண்ணுகிறேன். ஒன்றிரண்டு கதைகளை எழுதிவிட்டு அவை சரியாக வாசிக்க படவில்லை என  எண்ணுவது முட்டாள் தனம் தான். அதுவும் ஆரம்ப நிலையில்.



-சுகி 

Monday, February 20, 2017

காரைக்குடி புத்தக கண்காட்சி அனுபவங்கள்


ஃபிப்ரவரி பத்தாம் தேதி துவங்கி பத்தொன்பதாம் தேதி வரை காரைக்குடி கம்பன் அரங்கில் வருடாந்திர புத்தககண்காட்சி நிகழ்ந்தது. இது பதினைந்தாவது ஆண்டு என நினைவு. முதல் சில ஆண்டுகள் மத்திய மின் வேதியல் ஆய்வகம் காரைக்குடி கண்காட்சியை எடுத்து நடத்தியது. இன்றும் கூட அது மிக நேர்த்தியாக நடத்தப்பட்டதை பதிப்பத்தார் நினைவு கூர்கிறார்கள். சென்றாண்டு முதன்முறையாக ஒரு அரங்கை எடுத்தேன். நவீன இலக்கிய பதிப்பகங்கள் பெரிதாக ஏதும் இங்கு வருவதில்லை. அவர்களுக்கு கட்டுபடி ஆவதில்லை என்பதே முக்கிய காரணம். எனினும் ஒரு ஆர்வத்தில் சென்ற ஆண்டு நண்பர்கள் துணையோடு ஈடுபட்டேன். லாபமில்லை என்றாலும் நட்டமில்லை எனும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டு கடிதம் அனுப்புவோம் என்றார்கள். ஆனால் எந்த தகவலும் வரவில்லை. ஃபிப்ரவரி மூன்றாம் தேதி வாக்கில் தமிழினி வசந்தகுமார் அழைத்து “உங்க ஊர்ல பத்தாம் தேதி லேந்து புத்தக கண்காட்சியாமே? கட போடலையா?” என்றார். நிர்வாகிகளிடம் கேட்டால் “லெட்டர் வரலையா?” என்கிறார்கள். ஸ்டால் மீதி இருந்ததால் ஒன்றை பதிந்து கொண்டேன். ஒரு புத்தக கண்காட்சியை ஜனநாயக நாட்டில் இத்தனை ரகசியமாக ஏன் நடத்த வேண்டும் என புரியவில்லை.