Sunday, May 21, 2017

ஒரு குடும்பம் சிதைகிறது - பைரப்பா

(சொல்வனம் இதழில் வெளியான கட்டுரை)

சாதி, மத, இன பகுப்புக்களுக்கு அப்பால் மானுட வரலாற்றில் பெரிதும் சுரண்டப்பட்ட ஓரினம் உண்டெனில் அது பெண்ணினமாகத்தான் இருக்கும். இனம் என்று வரையறுக்கலாமா என்று தெரியவில்லை! நானொரு பெண்ணியவாதி அல்லன். நவீன பெண்ணியத்தின் அடிப்படைகளை, இயங்குதளங்களை அறிந்தவனும் அல்லன். ஆனால் கன்னட நாவலாசிரியர் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலை வாசித்து முடிக்கையில் ஏற்பட்ட முதலுணர்வு என இதைத்தான் சொல்லவேண்டும். நஞ்சம்மாவின் கதை என் பாட்டியின், முப்பாட்டியின் சொல்லப்படாத துயரங்களின் கதை.


அதிக விவரணைகளற்ற, கவித்துவங்களற்ற கூர்மையான நேரடி எழுத்துமுறை பைரப்பாவினுடையது. மானுட இருப்பின் பெருந்துயரங்களை வெகுசில சொற்களில், எவ்வித சமரசமும் இன்றி அவரால் கடத்திவிட முடிகிறது. நாவலின் பெரும்பகுதி எளிய உரையாடல்களாலும், சிக்கலற்ற மன ஓட்டங்களாலும் ஆனது. யதார்த்தவாத எழுத்துக்களுக்குரிய எல்லைகளை மீறிச் செல்லவில்லை (அதற்கான அவசியமும் நாவலில் இல்லை), என்றாலும் அவரது கூறுமுறை ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

1920 களில் தொடங்கி நாற்பதுகள் வரையிலான காலகட்டத்தில் கர்நாடக மாநிலத்தின் தும்கூர் பகுதியில் அமைந்துள்ள ராமசஸ்திர கிராமத்து பிராமண குடும்பம்தான் நாவலின் களம்.

கணக்குப்பிள்ளை ராமன்னனின் மரணத்தை நினைவு கூர்ந்து அவருடைய குடும்பத்தின் அந்த தலைமுறை கதையை, அக்குடும்பத்தின் வீழ்ச்சியின் கதையை சொல்லி செல்கிறது. இந்தக் குடும்பத்தின் வீழ்ச்சியில் முட்டாள் மனிதர்களுக்கும் பெருவல்லமைகொண்ட காலத்திற்கும் சமபங்குண்டு. சுற்றியுள்ள மனிதர்களின் மூடத்தனத்தையும் இருளையும் மீறி வெளிச்சத்தின் முதற் திட்டுக்கள் தென்படும்தோறும் பெருவல்லமை காரிருளாகச் சூழ்ந்து, தென்பட்ட வெளிச்சத்தின் சாத்தியத்தை தனக்குள் அமிழ்த்திக் கொள்கிறது. இறுதியில் வாழ்க்கை எனும் முடிவில்லா அபத்த நாடகத்தின்மீது சலிப்பும் அச்சமும் மட்டுமே எஞ்சுகின்றன.

ராமன்னனின் இரண்டாம் தாரமாக வந்த கங்கம்மாவிற்கு இரண்டு பிள்ளைகள். மூத்தவன் சென்னிகராயன், இரண்டாமவன் அப்பன்னையா. சென்னிகராயனுக்கு மனைவியாக அந்த வீட்டிற்கு வருகிறாள் கம்பீரமும், பிடிவாதமும் நிறைந்த கண்டி ஜோசியரின் மகள் நஞ்சம்மா. முட்டாளும் கோழையுமான கணவனையும், எப்போதும் எரிந்துவிழும் முட்டாள் மாமியாரையும் மூர்க்கமான மைத்துனனையும் தன் புகுந்தவீட்டில் எதிர்கொள்கிறாள். சென்னிகராயனுக்கு கண்டி ஜோசியரின் தயவால் கணக்குப்பிள்ளை உத்தியோகம் கிடைத்துவிடுகிறது. ஆனால் அவனுக்கோ அப்பணியில் அனுபவமும் சாமர்த்தியமும் இல்லை. நஞ்சம்மாவின் அயராத முயற்சிகளால் அவர்களுடைய பிழைப்பு ஓடிக்கொண்டிருக்கிறது. உள்ளூர் புரோகிதர்களை விரோதித்துக் கொண்டதால் நஞ்சம்மாவின் குடும்பம் சாதிபிரஷ்டம் செய்யப்படுகிறது. கங்கம்மாவின் பிடிவாதத்தாலும் ரேவண்ண செட்டியின் வஞ்சகத்தாலும் வீடிழந்து தெருவிற்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுவிடுகிறது.

கங்கம்மாவும் இளையவன் அப்பன்னையாவும் கோவிலில் தங்கி யாசகம் பெற்று வாழ்கிறார்கள். நஞ்சம்மா தன் கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசிக்கிறாள். எப்போதும் எவரெவர் வீட்டுக்கோ சென்றுவரும் மரண தேவதையின் கடைக்கண் நஞ்சம்மாவின் வீட்டில் படுகிறது. திருமணமான மூத்த மகள் பார்வதியையும் மூத்த மகன் ராமன்னனையும் பிளேக் பலிகொள்கிறது. நிலைமை சீரடைந்து தெளிவடைவதற்குள் நஞ்சம்மாவும் கொள்ளை நோய்க்கு பலியாகிறாள். மாமன் வீட்டில் துன்பத்தில் உழலும் அக்குடும்பத்தின் கடைசி வாரிசான விசுவனை அழைத்துக் கொண்டு மாதேவையா தேசாந்திரம் செல்வதுடன் நாவல் முடிகிறது. இடையில் அப்பன்னையாவின் திருமண வாழ்க்கை, கல்லேசனின் திருமண வாழ்க்கை, நஞ்சம்மாவின் மூத்தமகள் பார்வதியின் திருமணம், கண்டி ஜோசியரின் தலைமறைவு, மாதேவையாவின் துறவு வாழ்வு, பஞ்சம், கொள்ளை நோய்கள் என பல உட்சரடுகளால் பின்னப்பட்டிருக்கிறது நாவல்.

அக்கிராமமே ஒருவரையொருவர் ஏய்த்துப் பிழைக்கும் கோட்டிகளால் நிரம்பியது. எப்போதும் சூதாடி, பிறரை ஏமாற்றி தானும் ஏமாறும் ரேவண்ண செட்டி அடைக்கமுடியாத கடனுக்கு தன்மகளையே இரையாக்குகிறான். கங்கம்மாவின் நிலத்தை ஏமாற்றிப் பறிக்கும் கிராம மணியக்காரன் சிவே கவுடன், கிராமத்து எளியமக்களை அண்டிச் சுரண்டிப் பிழைக்கும் சாத்திரம் அறியாத புரோகிதர்கள் அண்ணா ஜோசியரும் அய்யா சாஸ்திரிகளும், கணக்குப்பிள்ளை பணி தர மறுக்கும் சிவலிங்கே கவுடன், நகரத்திலிருந்து கிராமத்திற்கு வந்து அவ்வாழ்க்கையை ஏற்க மறுத்து தற்கொலைக்கு முயலும் நஞ்சம்மாவின் மதினி கமலா என மனிதர்களின் எதிர்மறை கூறுகள் துல்லியமாக பதிவாகியுள்ளன.

இதற்கு நேர்மாறாக ஊர்கோவிலில் பிச்சையெடுத்து வாழும் மாதேவையா, நஞ்சம்மாவின் குடும்பம் நிமிர்ந்து நிற்க உதவிய குருபரஹள்ளி மணியக்காரர் குண்டே கவுடன், கணக்கு எழுத வராத சென்னிகராயருக்கு பதிலாக கணக்கெழுதி உதவும் தியாவரசையா, நஞ்சம்மாவின் மாப்பிள்ளை சூரியநாராயணன், நஞ்சம்மாவின் பாட்டி அக்கம்மா- ஒருவகையில் நஞ்சம்மாவே கூட அவருடைய வார்ப்புதான்-, போன்ற அற்புதமான நேர்மறை பாத்திரங்களும் உயிர்பெற்று உலவுகின்றன.

நஞ்சம்மாவின் தந்தை கண்டி ஜோசியர், அவருடைய மகன் கல்லேசன், நஞ்சம்மாவின் ஓரகத்தி சாதம்மா, விலைமகள் என்று ஊரைவிட்டு ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தாலும் மனிதநேயத்துடன் நடந்துகொள்ளும் நரசி, நஞ்சம்மாவின் மைத்துனர் அப்பன்னையா போன்ற பாத்திரங்கள் இருளும் ஒளியும் முயங்கி மானுட முகங்களின் வெவ்வேறு சாத்தியங்களைக் காட்டும் அற்புத பாத்திரங்கள். நஞ்சம்மாவைத் தவிர்த்து அப்பன்னையா மற்றும் கண்டி ஜோசியரின் சித்தரிப்பில் பைரப்பாவின் எழுத்து நேர்த்தி அதன் உச்ச விசையில் வெளிப்படுகிறது என்றெண்ணுகிறேன்.

இரவுலாவியாக குதிரையில் எங்கெங்கோ திரியும் கண்டி ஜோசியர் துணிவும், கோபமும், முரட்டுத்தனமும், கொண்டவராகத் திகழ்ந்தாலும் நியாய உணர்வு உள்ளவராகவே இருக்கிறார். ஊர் கணக்குப்பிள்ளையை நீதிமன்ற வாசலில் அடித்து நொறுக்கும்போது பலரும் பார்த்துவிட, அவன் இறந்துவிட்டதாக அஞ்சி பல்லாண்டுகாலம் நாடோடியாக திரிந்துவிட்டு இறுதியில் ஊர் திரும்புகிறார். அச்சமற்ற ஆளுமை அப்படி அச்சம் கொண்டு ஊர் திரும்பாமல் போனது மானுட குணாதிசயத்தின் மர்மம் தான். கண்டி ஜோசியர் ஊரில் புழங்கிக்கொண்டிருந்ததே ஒருவகையில் நஞ்சம்மாவிற்கு பாதுகாப்பு அளித்து வந்தது. தன் மகனுக்கு இரண்டாம் தாரமாக நஞ்சம்மா அவளுடைய மகளை அளிக்க மறுத்ததால் கோபத்தில் சபித்துவிட்டு செல்கிறார். ஆனால் நஞ்சம்மாவின் மரணத்திற்கு பின்னர் மாமன் வீட்டில் அடிவாங்கிச் சீரழிந்து கொண்டிருந்த இளையவன் விசுவனை மாதேவைய்யா தன்னுடன் அழைத்து கொண்டு போனதும் அவருடைய தயவினால்தான். முன்கோப ஆக்ரோஷ உருவெளிக்கு அப்பால் அன்பும் நீதியுணர்வும் கொண்ட மனிதராகவே அவர் தென்படுகிறார்.

சென்னிகராயனின் இயல்புகளையும், அப்பன்னையா அவரிடமிருந்து வேறுபடும் புள்ளிகளையும் நாவலின் துவக்க பக்கங்களிலேயே அறிமுகம் செய்துவிடுகிறார் பைரப்பா. சிறுவர்களாக தங்கள் வீட்டின் ஓட்டை உடைத்துவிட்டு அடிக்கு பயந்து பதுங்கிக் கொண்டிருந்தபோது கரும்புத் தோட்டங்கள் எரிந்து நாசமாகின்றன, சென்னிகராயன் அதற்கான முழு பழியையும் அப்பன்னையா மீது சுமத்துகிறான். அப்பன்னையா மவுனமாக தலைகுனிந்து ஏற்கிறான். சென்னிகராயன் எதற்குமே பொறுப்பேற்றுக் கொள்வதில்லை. குழந்தைகள் ஒருவேளைக்கு மட்டும் ராகி ரொட்டிகளை தின்று சிரமப்பட்டுக் கொண்டிருந்த சூழலில் தன் சம்பள பணத்தைக் கொண்டு திப்டூர் உணவகங்களுக்குச் சென்று அது தீரும் வரை வாய்க்கு ருசியாக வாங்கித் தின்றுவிட்டு வருகிறார். மனைவியையும் தன் சிறு பிள்ளையையும் சிருங்கேரிக்கு நடக்க வைத்து, தான் மட்டும் மோட்டாரில் வந்து சேர்கிறார். கோழைத்தனம், மூடத்தனம், சோம்பேறித்தனம், அறியாமை, சுயநலம் என எல்லாவற்றினும் கலவைதான் சென்னிகராயன். நஞ்சம்மாவின் மரணத்திற்காக அதிகபட்சம் அவர் வருந்துவது என்னவோ உணவு சரிவர கிடைக்கவில்லையே என்பதற்காகதான். நஞ்சம்மாவின் மரணத்திற்கு பின்னர் திருமண முயற்சியில் மூக்கறுபட்டு திரும்புகிறார். தன் வயிற்றைத் தவிர வேறு எதைப்பற்றியும் சிந்திக்காத மனிதராகவே இருக்கிறார்.

அப்பன்னையா அப்படியில்லை, முரடனாகவும் மூடனாகவும் இருந்தாலும்கூட அவன் சுயநலமியோ, சுயபுத்தியற்றவனோ, கோழையோ அல்ல. தன் அண்ணி நஞ்சம்மாவை காலால் எட்டி உதைத்துவிட்டு சிலமாதகாலம் தலைமறைவாகிறான். அதன்பின்னர் சாதம்மாவை மணந்து கொள்கிறான். அம்மா கங்கம்மாவின் வசைகளைப் பொறுக்க முடியாமல் சாதம்மா தாய் வீட்டிற்கு திரும்பிவிடுகிறாள். இடைப்பட்ட காலத்தில் அப்பன்னையா அங்கு சென்று வந்ததன் விளைவாக ஆண் மகவு ஒன்றும் பிறக்கிறது. சாதம்மா குழந்தைகளை அழைத்துகொண்டு அப்பனையாவை தேடி வருகிறாள். கங்கம்மா அக்குழந்தையின் பிறப்பின் மீது கேள்வி எழுப்பி, ஏற்க மறுத்து அவமதிக்கிறாள்.. அம்மாவின் பேச்சைக்கேட்டுக் கொண்டு நஞ்சம்மாவின் வீட்டையும் எரிக்கிறான். அப்படிப்பட்டவன் மனமாற்றம் அடைந்து நஞ்சம்மா வீடு கட்டவும், குடிலமைக்கவும் உதவுகிறான். பார்வதியின் திருமணத்திற்கு உதவுகிறான், நஞ்சம்மா அறிவுறுத்தியதன் பேரில் நரசி வீட்டுக்குச் செல்வதை நிறுத்திகொள்கிறான், சிருங்கேரி பயணத்தில் அண்ணிக்கு துணையாக உடன்வருகிறான், பார்வதியின் மரணத்தின்போது அவளுக்காக அழுகிறான், நஞ்சம்மாவின் மரணத்தினால் நிலைகுலைகிறான். நாவலின் உணர்ச்சிபூர்வமான தருணங்களில் ஒன்று அவன் தன் மகளையும், குடும்பத்தையும் பல ஆண்டுகளுக்கு பின்னர் தேடிச் சந்திக்க செல்லும் பகுதி. பார்வதிக்கு திருமண வயது வரும்போதுதான் தன் மகள் ஜெயலட்சுமியின் நினைவு அவனுக்கு வருகிறது. குடும்பத்தை தேடிச் செல்கிறான். சிரமத்திற்கு பின்னர் அவர்கள் வசிக்கும் இல்லத்தைக் கண்டுபிடிக்கிறான். வாயிலில் ஒரு இளம்பெண் புத்தகங்களுடன் நிற்கிறாள். அவளை கண்டவுடன் அவள்தான் தன் மகள் என்பதை உணர்ந்து கொள்கிறான். அப்பெண் “யார் நீங்கள்?” என்கிறாள். “நான் உன் அப்பா” என்கிறான். பதிலுக்கு அப்பெண் “எந்த ஊர் அப்பா?” என்கிறாள். அரவம் கேட்டு வெற்றிலை குதப்பிகொண்டு எவனோ ஒரு செட்டி சாதம்மாவுடன் வெளியே வருகிறான! பெற்ற மகளின் அந்த கேள்வியில் தான் எத்தனை குரூரம்!

ஜெயமோகன் இந்நாவலைப் பற்றிய தனது விமரிசனத்தில் நஞ்சம்மா எப்படி ராமாயண சீதையின் பிரதியாக வார்க்கப்பட்டிருக்கிறாள் என்பதை விளக்குகிறார். பொறுமையும், கருணையும், அன்பும் பொதிந்த பெண்ணுக்கான தேடல் எங்கோ நாம் அறிய முடியா ஆழத்தில் உயிர்த்திருக்கிறது. நஞ்சம்மாவைக் கடந்து செல்லும் வாசகர்கள் எவரும் அவருடைய மகத்தான சித்தரிப்பை மறக்க முடியாது. இந்நாவலின் பெண் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கங்கம்மாவிற்கு தன் பிள்ளைகள் மீது அளப்பரியா பிரியம் உண்டுதான் ஆனால் விளக்கவியலா மூடத்தனமும் மூர்க்கமும் கொண்டவள். ஒருவகையில் அவளுடைய அக்குணங்களே அவள் பிள்ளைகளின் வழி வெளிப்படுகின்றன. நஞ்சம்மா எல்லாவற்றையும் தன் ஆற்றல் கொண்டு ஈடு செய்து நிமிர்த்த முயல்கிறாள் ஆனால் வெல்வது என்னவோ கங்கம்மாவின் வசைகளும், தீஞ்சொற்களும்தான்.

எழுதப்பட்டு பலகாலத்திற்கு பின்னர் இன்று அது ஒரு பெண்ணிய பிரதியாக நிலைபெற்றிருக்கிறது என்கிறார் ஜெயமோகன். மனிதர்கள் மனிதர்களை கொன்றொழிப்பது எத்தனை விசித்திரமோ அப்படி பெண்ணின் இழிநிலைக்கு அவளே காரணமாவதும் பெரும் விசித்திரம்தான். அன்பும், தாய்மையும், கருணையும், புத்திசாலித்தனமும் ததும்பும் நஞ்சம்மா ஒரு முனை என்றால் மறுமுனையில் குரோதமும் முட்டாள்தனமும் நிரம்பிய கங்கம்மா. கங்கம்மா மீது எரிச்சலும் கோபமும் வந்தாலும் கூட, உண்மையில் கங்கம்மாவிற்காக பரிதாபப்படத்தான் தோன்றுகிறது. கங்கம்மா தன் பிள்ளைகளின் மீதான பேரன்பையும்கூட வன்மமாகத்தான் வெளிப்படுத்துகிறாள். சிக்கலான மானுட உறவுகளில் தூய அன்பு என்பது வெறும் கற்பிதம்தான், இங்கு அன்னையின் அன்பும்கூட அகங்காரத்துடன் பின்னிப்பிணைந்துதான் கிடைக்கிறது. அப்படிப்பட்ட தூய அன்பை உணரவும், அளிக்கவும்கூட சிறிய விலகல் தேவைப்படுகிறது. ஒருகால் விலைமகள் நரசியாலும் துறவி மாதேவையாவாலும் அப்படியிருக்க முடியுமோ என்னமோ. அவர்களிருவரும் விசுவனை வளர்க்க முன்வருவதும் கவனிக்கத்தக்கது.

கணவனைக் கண்கொண்டு கூட பார்க்காத சிறு பெண்ணாக நஞ்சம்மா அறிமுகம் ஆகிறாள். சொற்களால் கிழிபடுகிறாள். மைத்துனனிடம் மிதிபடுகிறாள். மெல்ல தன் குடும்பத்தின் நிலையை உணர்ந்து அதை மீட்க தனியொரு பெண்ணாக போராடுகிறாள். கைநோக இலை தைக்கிறாள், கணக்கெழுதுகிறாள், இரவு பள்ளிக்கூடத்தில் பெண்களுக்கு பாடம் எடுக்கிறாள், நிதிநிர்வாகம் செய்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறாள், தன் பெண் பார்வதிக்கு நல்லவிதமாக திருமணம் செய்விக்கிறாள், கையிருப்பைக் கொண்டு தனக்கென ஒரு வீட்டைக் கட்டிக்கொள்ள முயல்கிறாள். இறுதியில் பிளேக் பீடிக்கப்பட்டு இறக்கும் தருவாயில் தன் அண்ணன் வீட்டில் தங்கியிருக்கும் எஞ்சிய பிள்ளை விசுவன் பெயரை அரற்றுகிறாள். மாதேவையா அவனை அழைத்துவர யத்தனிக்கும்போது, வேண்டாம் என்று மறுக்கிறாள்.

எஸ்.எல்.பைரப்பா
எஸ்.எல்.பைரப்பா

நஞ்சம்மாவின் சித்திரம் இந்திய குடும்ப அமைப்பு சார்ந்து மிக முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. இயல்பிலேயே அதன் உள்ளீடாக வன்முறை உள்ளதா? பொதுவாக மேற்கிற்கும் கிழக்கிற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு சுயம் சார்ந்தது என்று எனக்குத் தோன்றும். நவீனத்துவம் தனிமனிதனை எல்லாவற்றிற்கும் மையமாக கொண்டு வைக்கிறது. அவனுடைய தேவைகள், கனவுகள், ஆசைகளையும் அதனால் விளையும் அக நெருக்கடிகளையும் விவாதிக்கிறது. குடும்ப அமைப்பும் அதன் நீட்சியாகவே இருக்கிறது. இந்தியாவில் சுய மறுப்பும், தியாகமும் முக்கியமாக கருதப்பட்டன. தனி மனிதனைக் காட்டிலும் குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் என்பது இந்திய மனதிற்கு இயல்பான ஒன்றாகவே இருந்து வருகிறது, ஆயினும் இங்கு யாவரும் கர்ம யோகிகள் அல்லவே! இவை எந்த புள்ளியில் உழைப்புச் சுரண்டலாக மாறுகிறது என்பதே கேள்வி. சில ஆதார நம்பிக்கைகள் மீது கேள்விகளை எழுப்புகிறது இந்நாவல்.

இந்நாவலின் முன்னுரையில் மாதவ குல்கர்னி, மரபிலிருந்து நவீனத்திற்கான தாவலில் உள்ள சிக்கல்களை பைரப்பாவின் பெரும்பாலான படைப்புகள் பேசுகின்றன, அதற்கொரு விதிவிலக்கு ’ஒரு குடும்பம் சிதைகிறது’ என்கிறார். நாவலில் கொள்ளை நோய் மருத்துவம் சார்ந்த இடங்களில் பிரதான பாத்திரமான நஞ்சம்மா நவீன மருத்துவத்தை, பிறர் ஏற்க தயங்கியபோதும் அவர் ஏற்கத் தயங்கவில்லை என்பதை தாண்டி நவீன – மரபு இருமைக்குள் செல்லவில்லை என்றே எண்ணுகிறேன். ஹேமாதி பானகம் எனும் மரபு மருந்து விசுவனுக்கு பிளேக் முற்றாமல் இருந்த போது கட்டுபடுத்தியதாக ஒரு தோற்றம் வருகிறது, ஆனால் அதே மருந்து நஞ்சம்மாவிற்கு எவ்வித பலனும் அளிக்கவில்லை. இதன் வழி ஒரு முக்கியமான ஐயத்தைம் எழுப்புகிறார். மரபுவழி மருத்துவம் இவ்வகை கொள்ளை நோய்களை எப்படி எதிர்கொண்டது? அதன் கைவசம் எவ்வித வழிமுறையும் இல்லையா அல்லது எளிய மக்களை சென்றடையாத அரசவை மருத்துவமாக இருந்திருக்கிறதா?
நாவலில் வரக்கூடிய பிளேக் சித்திரம் திகைக்க வைக்கிறது. மூன்று நான்கு வருடங்களுக்கொரு முறை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி ஊருக்கு வெளியே சென்று குடிசை போட்டுக்கொண்டு இயல்புநிலை திரும்ப காத்திருக்கிறார்கள். கொள்ளை நோயின் குரூர முகத்தை சமரசமின்றி, எவ்வித மிகையும் இன்றி சொல்லி செல்கிறார் பைரப்பா. நஞ்சம்மாவின் மகள் பார்வதியும், மகன் ராமன்ணனும் பிளேக் நோயால் பாதிக்கப்படுகிறார்கள். விசுவனுக்கு ஜுரம் கொதிக்கிறது. அடுத்தடுத்து பார்வதியும் ராமன்னண்ணும் மரணிக்கிறார்கள். விசுவத்தை தன் மகன் அல்ல என மாதேவையாவிடமும் நரசியிடமும் ஒப்படைத்துவிட்டு விலகி, இவனாவது பிழைக்க வேண்டுமே என வேண்டி நிற்கிறாள் நஞ்சம்மா. முதிர்ந்த அக்கம்மா பாட்டி நஞ்சம்மாவை இழந்த துக்கம் தாளாமல் ஆளில்லாத ஊருக்குள் தனியாக புகுந்து விளக்குமாற்றை கொண்டு அவர்கள் வீட்டு வாசலில் அரூபியான பிளேக் மாரியம்மனை விளாச முயல்வது நாவலின் உச்சகட்ட நாடகீய தருணங்களில் ஒன்று. அதிகபட்சம் மனிதன் இப்படி அரற்றுவதைத் தவிர என்ன செய்துவிடமுடியும்? அதன்பின்னர் அவளும் அந்நோய் பீடித்து மரிக்கிறாள்.

இப்பகுதிகள் என்னை சுயபரிசோதனைக்கு இட்டுச்சென்றன. நான் மரபு மருத்துவம் பயின்று பின்பற்றுபவனாக இருந்தாலும், கொள்ளை நோய்களுக்கு எதிராக அதன் கையறு நிலையையும், நவீனமருத்துவத்தின் மாபெரும் பங்களிப்பையும் முழுவதுமாக ஏற்கிறேன். அதற்காக நன்றியுடையவனாகிறேன்.

இந்நாவல் எழுப்பும் ஆதாரமான கேள்வி என்பதை நான் இப்படித்தான் வகுத்துகொள்வேன் ‘நல்லவர்களுக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது?’ நரசி நஞ்சம்மா குறித்து மாதேவையாவிடம் எழுப்பும் கேள்வி இது. வாழ்வின் வெவ்வேறு காலச்சுழலில் நம்மில் முளைத்தெழும் கேள்வியும்தான், நல்லவர் யார், அல்லாதவர் யார்? செயலின் நன்மை தீமைகளை வரையறை செய்வதும் அப்படியொன்றும் சுலபமல்ல. மறுபிறப்பும், ஆன்மாவும், கடவுளும், ஆதி பாவமும், கர்மச் சுழற்சியும், இன்னும் வெவ்வேறு மதங்களின் ஆதார மெய்யியல்கள் எல்லாமும் இக்கேள்வியின் மீது தங்கள் தர்க்க திரைகளை போர்த்தி, தற்காலிகமாகவேனும் மனிதனின் தன்னிருப்பை அர்த்தப்படுத்திக்கொள்ள முயல்கின்றன. ஆனால் எல்லாவற்றையும் மீறி அர்த்தமின்மையும் வாழ்வின் அபத்தமும் அப்பட்டமாக துருத்திக்கொண்டு வெட்டவெளியில் நிற்கத்தான் செய்கிறது.

No comments:

Post a Comment