Monday, May 29, 2017

நான் மலாலா - மலாலா யூசுப்சாயின் வாழ்க்கை சரித்திரம்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளிவந்த கட்டுரை)

மேற்கத்திய ஊடகங்களின் செல்லப்பிள்ளையாக உலகெங்கும் அவர் கொண்டாடப்பட்ட காலத்தில், என் முன் நிறுத்தப்பட்ட பிம்பம் ஒன்றும் அத்தனை உவப்பானதாக இல்லை. குழந்தைகளின் இளமையையும் துடுக்குத்தனத்தையும் களவாடி வாழ்க்கை வணிகத்திற்கு தேவையான சரக்கு மூட்டைகளை முதுகில் ஏற்றி முதிரா இளம் பருவத்திலேயே போட்டிக் களத்தில் இறக்கி ஓடவிட்டு ஆராதிக்கும் அன்னையர்களும் தந்தையர்களும் நிறைந்த சமூகத்தில் பலிகடா ஆவதென்னவோ குழந்தைகள்தான். தம் பிள்ளைகள் பிறவி மேதைகள் என்று நம்பும் உரிமை ஒவ்வொரு பெற்றோருக்கும் உண்டுதான் எனினும், பெரும்பாலும் அவர்களுடைய நியாயமற்ற எதிர்பார்ப்புகளின், கனவுகளின் சுமையில் மழலை மேதைகள் தங்கள் சுயத்தை கண்டறிவதற்கு முன்னரே போலியான பாவனைகளில் தங்களை இழந்து சுவடின்றி மறையும் நிகழ்வுகள்தான் இங்கு மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன. மலாலாவும் அரசியல் காரணங்களுக்காக அப்படி ஊதிப்பெருக்கபட்ட பிம்பம் என்றொரு மனப்பதிவு எனக்கிருந்தது. அவர் பங்குகொண்ட ஒரு உரையாடல் நிகழ்ச்சி அந்த மனப்பதிவை மறுபரிசீலனை செய்ய வைத்தது. அதன் பின்னர்தான் சென்றாண்டு வெளியான அவருடைய சுயசரிதையை வாசிக்கத் தொடங்கினேன். 





மலாலாவின் நூல் அவருடைய வாழ்க்கை கதை என்பதை தாண்டி இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் கோரமுகத்தினுடைய ஆவணமும்கூட. புறத்தோற்றம் வெவ்வேறாக இருப்பினும், உலகெங்கும் அடிப்படைவாதத்தின் குரல்கள் ஒன்றுபோலத்தான் ஒலிக்கின்றன. அவைகளுக்கு வருங்காலத்தின் மீது நம்பிக்கை இல்லை, அது கட்டமைக்க விரும்பும் பொன்னுலகம் என்பது நூற்றாண்டிற்கு முன்னால் என்றோ எங்கோ உயிர்த்திருந்ததாக நம்பப்படும் ஒரு கடந்தகாலம் மட்டுமே. அந்த பொற்காலத்தை நோக்கி திரும்புங்கள் எனும் குரல்கள் உச்ச விசையில் ஒலித்துக்கொண்டே இருக்கும். முதலில் பிறரைக் கட்டமைக்கும், பின்னர் தன்னுள் துரோகிகளை அடையாளம் காணும், அதிகாரம் கைவரும்வரை ஒரு குரல் ஒலிக்கும், அது கைவந்தவுடன் வேறொரு தொனிக்கு மாறும். தன்னைத் தவிர பிற அனைத்தையும் நிராகரிக்கும். தனது நம்பிக்கைகளைக் கேள்விக்குட்படுத்தும் தரப்புகளை, ஆதாரங்களை திரிபுகள் என்று நிராகரிக்கும். எவருக்கோ தங்கள் விசுவாசத்தை நிருபித்துகொண்டே இருக்க வேண்டும். எதிர்தரப்புகளுடன் ஆக்கபூர்வமாக உரையாடுவதற்கு அது தயாராக இருப்பதில்லை. எதிர்தரப்பை அடக்கி ஒடுக்கியும், அச்சத்தின் வழியாகவும் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திகொள்ளும்.    

ஸ்வாத் சமவெளியில் யூசுப்சாய் குழுவைச் சேர்ந்த ஜியாவுதீனுக்கும் டோர் பீகாய்க்கும் அக்டோபர் 12, 1997 அன்று பிறந்த முதல் குழந்தைதான் மலாலா. பெண் குழந்தைகளைச் சுமையாக பார்க்கும் சமூகத்தில், ஆண் வாரிசுகளை மட்டும் வம்ச விருட்சத்தில் இணைக்கும் போக்கிற்கு மாறாக ஜியாவுதீன் மலாலா பெயரையும் சேர்க்கிறார். ஜியாவுதீன் முற்போக்கு சிந்தனைகள் கொண்ட கவிஞர், கள செயற்பாட்டாளர், கல்வியாளர். 1880களில் வெடித்த இரண்டாம் ஆங்கிலேய – ஆப்கானிய போரில் மேவாந்த் (meiwand) மாகாணத்து மலாலாய் எனும் பெண், ஆப்கானிய பஷ்தூன்களுக்கு பெரும் ஊக்கமாக திகழ்ந்தார், இன்றளவும் பெரும் நாயகியாக போற்றப்படுகிறார். அவருடைய பெயரைத்தான் ஜியாவுதீன் தன் மகளுக்கு சூட்டினார். மின்கோரா எனும் நகரத்தில் பிறந்து வளர்ந்து, தந்தை உருவாக்கிய பள்ளியிலேயே கல்விகற்றார். 



தாலிபான்கள் செல்வாக்கடையத் தொடங்கியதும், பல கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கினர். மீறுபவர்களுக்கு தண்டனைகள் வழங்கப்பட்டன. அப்படி அவர்கள் முன்வைத்த ஒரு விதிமுறைதான் பெண்கள் கல்வி கற்கக் கூடாதென்பது. பல பள்ளிகள் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன. குல்மகாய் எனும் புனைபெயரில் தாலிபான் ஆளுகைக்கு வாழ்வதை பற்றி பி.பி.சியின் துணையுடன் பனிரெண்டாவது வயதில் வலைபக்கத்தில் எழுதினார். அதற்கு உலகெங்கிலும் நல்ல வரவேற்பு இருந்தது.

இதற்கிடையில், பெண் கல்வியின் அடையாளமாக உலகெங்கும் மலாலா அறியப்படுகிறார். பாகிஸ்தானின் பல பகுதிகளுக்கு பயணம் செய்கிறார். தாலிபான் அவருடைய உயிருக்கு குறிவைக்கிறது. அக்டோபர் 9, 2012 அன்று பள்ளி முடித்து இல்லம் திரும்பும் வழியில் பள்ளி பேருந்தில் முகம் மூடிய ஒரு தாலிபானால் சுடப்படுகிறார். குண்டு மண்டைஒட்டுச் சில்லை உடைத்துக்கொண்டு தோள்பட்டைக்குள் புகுந்துவிடுகிறது. மலாலாவிற்கு அருகிலமர்ந்த இரு சிறுமிகளும் குண்டடிபடுகின்றனர்.

கவலைக்கிடமான நிலையில் உயிர்காக்கும் சிகிச்சைக்காக பிரித்தானியாவில் உள்ள பிர்மிங்காம் நகரத்து ராணி எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகிறார். உயிர் பிழைத்து ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார். நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்படுகிறார். இன்றும் உலகெங்கிலும் பல்வேறு அமைப்புகள் அவரை கவுரவித்த வண்ணம் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் கல்வி உரிமைக்காக “நான் மலாலா” என்றொரு திட்டம் அறிவித்தது. அதன்படி உலகெங்கிலும் வெவ்வேறு காரணங்களால் பள்ளி கல்வியை தொடர முடியாமல் போன 61 மில்லியன் குந்தைகளுக்கு 2015 ஆம் ஆண்டுக்குள் கல்வியளிக்கபட வேண்டும் என அறிவுறுத்தியது. சுருக்கமாக இதுதான் மலாலாவின் கதை.      

பூவுலகத்து விண்ணகரம் போல் அழகும், அமைதியும் ததும்பும் ஸ்வாத் சமவெளியில் இன்று மக்கள் புழங்குவதற்கே அஞ்சுவது ஏன்? தாலிபான்களும், பாகிஸ்தானிய உளவமைப்பும், பாகிஸ்தானிய ராணுவமும், அமெரிக்க ராணுவமும் அவரவர் வழியில் தங்கள் இருப்பையும் பாதுகாப்பையும் உறுதி செய்ய விளையாடும் போர்க்களமாக ஸ்வாத் மாறிப்போனது துரதிருஷ்டம்தான்.

மலாலாவின் குரல் தேசப்பற்று கொண்டுள்ள பாகிஸ்தானியின் குரல்தான் அதேவேளை, பஷ்தூன்களின் தேசிய அடையாளத்தை பெரிதாக நிராகரித்து இவர்  எழுதவும் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. இந்திய – பாகிஸ்தான் உறவை, காஷ்மீர் பிரச்சனையை, அங்கு பெரும்பான்மை மக்களுக்கு என்ன புகட்டப்படுகிறதோ அப்படித்தான் அவரும் புரிந்துகொண்டுள்ளார். ஆனால் அவற்றை எல்லாம் கடந்து “ஒருவேளை நாம் இந்தியாவைவிட்டு பிரியாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமோ? என்று தந்தையிடம் வினவினேன். பாகிஸ்தான் உருவாவதற்கு முன்னர் இந்துக்களும் இஸ்லாமியர்களும் எப்போதுமே சண்டையிட்டுகொண்டிருந்தனர் என்ற எண்ணமே எனக்கிருந்தது.  ஆனால் எங்களுக்கான தேசம் கிடைத்த பின்னரும் சண்டை தொடர்ந்துகொண்டுதானிருக்கிறது, இம்முறை மொஹாஜீர்களுக்கும் பஷ்தூன்களுக்கும் இடையிலும், சுன்னிக்களுக்கும் ஷியாக்களுக்கும் இடையிலும்...சிந்திக்கள் அடிக்கடி பிரிவினை பற்றி பேசுகிறார்கள், பலூசிஸ்தானில் போர் நடந்துகொண்டுதானிருக்கிறது, தொலைவில் விலகி இருப்பதால் அவ்வளவாக வெளியில் தெரிவதில்லை. இத்தனை போர்களின் காரணமாக எமது தேசத்தை மீண்டும் துண்டாக்க வேண்டியிருக்குமோ?” எனும் கேள்வியை எழுப்ப அவரால் முடிகிறது. 

சர்வதேச அரசியல் பின்னல்களுக்கு அப்பால், மலாலாவின் சரிதை என்பது ஒரு சிறுமி தனக்கான, தன்னையொத்த சிறுமிகளுக்கான ஒரு வெளியை, உலகத்தை தக்கவைத்துக்கொள்ள நடத்தும் போராட்டம் எனும் சித்திரமே மேலெழுகிறது. தோழிகளும், சின்னச் சின்ன ஊடல்களும், விளையாட்டுகளும், தொலைக்காட்சியும், அழகுசாதனங்களும், பள்ளியும், புத்தகங்களும், கணினியும் – ஸ்வாத் சமவெளியின் இஸ்லாமிய சிறுமி மலாலா என்றில்லை உலகெங்கிலும் பதின்ம வயதை எட்டும் சிறுமிகளின் உலகம் இப்படிதான் இருக்கிறது. நியாயமான இந்த வாழ்க்கைக்குதான் அவர் ஏங்குகிறார். “பாகிஸ்தானில் பெண்கள் சுதந்திரம் வேண்டும் எனக் கூறினால், நாங்கள் எங்கள் தந்தையர், சகோதரர், அல்லது கணவர் சொல்பேச்சை கேட்க விரும்பவில்லை என்று மக்கள் எண்ணிக் கொள்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. எங்கள் வாழ்க்கை முடிவுகளை நாங்களே எடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் பள்ளிக்குச் செல்லவோ அல்லது பணிக்குச் செல்லவோ சுதந்திரம் வேண்டும் என்கிறோம். குர்ரானில் எங்குமே பெண்கள் ஆண்களை நம்பித்தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படவில்லை”.

ஸ்வாத் பகுதியில் தாலிபான் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய காலகட்டத்தின் சித்திரத்தை அளிக்கிறார். முதலில் எளிய நியாயமான போதனைகளாக, இலவச வானொலி வழியாகத்தான் தொடங்கியது. உண்மை இஸ்லாமுக்கான தேடல் என பறைசாற்றிக் கொண்டது. மக்கள் பரவலாக கவனிக்கத் தொடங்கினர். மது, மாது, பீடி, புகையிலை, போதை போன்ற பொது எதிரிகளை அடையாளம் காட்டி, அவைகளைக் கைவிட்டு தூயவனாக வாருங்கள் என்று அழைப்பு விடுக்கப்பட்டது.

மக்கள், குறிப்பாக மலாலாவின் அன்னை உட்பட பெண்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்ததாக சொல்கிறார் மலாலா. பணமும் ஆதரவும் குவிந்தது. தொலைகாட்சிகள் சாத்தானின் கருவிகள் என சபிக்கபட்டன. தானாக முன்வந்து தொலைகாட்சிபெட்டிகளை எரித்தவர்களின் பெயர்கள் வானொலியில் பாராட்டப்பட்டன. சி.டி கடைகள் உடைக்கப்பட்டன. இஸ்லாமாபாதில் உள்ள மிகப்பெரிய பெண்கள் மதரசாவை சேர்ந்த புர்கா அணிந்த பெண்கள் சி.டி கடைகளையும் தொலைக்காட்சிகளையும் ஊர்வலமாக சென்று அடித்து நொறுக்கினர். சந்தையில் நடனமாடிவந்த ஷப்னா எனும் நாட்டியக்காரியை நடனமாட வற்புறுத்தி, அவள் அதற்குரிய உடையில் வந்தவுடன் தோட்டாக்கள் அவளைத் துளைத்தன. இனி நடனமாட மாட்டேன் என அவள் கெஞ்சியும் எவரும் அவளுடைய குரலுக்கு செவி சாய்க்கவில்லை. நகர் மத்தியில் உள்ள சதுக்கத்தில் பிறரை எச்சரிக்கும் வண்ணம் அவளுடைய சவத்தை இழுத்துப்போட்டு விட்டுச் சென்றனர். ஒலிகுறைத்து திருட்டுத்தனமாகத்தான் தொலைகாட்சி கண்டனர் மக்கள். வீட்டுக் கதவுகளில் ஒட்டுக்கேட்டு சடாரென்று உள்நுழைந்து தொலைக்காட்சி பெட்டிகளை உடைக்கும் சம்பவங்கள் எல்லாம் அடிக்கடி நடந்ததாக மலாலா எழுதுகிறார். 

பாகிஸ்தான் தனித்து பிரிந்து சென்றதுமுதல் பல்வேறு இக்கட்டுகளை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானின் தந்தை ஜின்னா 1948ஆம் ஆண்டிலே மறைந்தார். அதன் பின்னர் லியாகத் அலிகானின் மரணம். பின்னர் ஜியா உல் ஹக்கின் ராணுவ ஆட்சி. ஜுல்பிகார் அலி புட்டோவின் மரணம். முஷரப்பின் ராணுவ ஆட்சி என நிலையற்ற பாகிஸ்தான் அரசுதான் பல நிர்வாக சிக்கல்களுக்கு காரணம், தாலிபான்கள் எல்லாவற்றையும் மாற்றி புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுவர் என பலரும் நம்பியதாக சொல்கிறார் மலாலா.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், ராணுவமும், உளவு அமைப்பும் ஆளுக்கொரு பக்கம் தேசத்தை இழுத்துச் சென்றனர். தாலிபான்கள் ஸ்வாத் சமவெளியில் சோதனைச் சாவடிகள் அமைத்திருந்தனர். அருகில் கூப்பிடு தூரத்தில் ராணுவமும் சோதனைச் சாவடி அமைத்திருக்கிறது. ஆனால் வெளியுலகிற்கும் அமெரிக்காவிற்கும் தாலிபான்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாகச் சொல்லப்பட்டது.

அமேரிக்கா ஒசாமாவைப் பிடிக்க பாகிஸ்தானின் உதவியை நாடியது. தேடுதல் வேட்டைக்காக பில்லியன் டாலர்கள் நிதியளித்தது. ஸ்வாத் பகுதியில் எட்டாண்டுகள் பதுங்கி இருந்திருக்கிறார் ஒசாமா. அதைவிட, பாகிஸ்தான் ராணுவ தலைமையகத்திற்கு அருகிலேயே, தலைநகரமான இஸ்லாமாபாதில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள அபோட்டாபாதில்தான் அவர் கொல்லபட்டார். பாகிஸ்தான் உளவுப்பிரிவின்மீதும் ராணுவத்தின்மீதும் நம்பிக்கை இழந்து நேரடியாக அமேரிக்கா பாகிஸ்தான் நிலபரப்பிற்குள் இறங்கி ஒசாமாவை வீழ்த்தியது பாகிஸ்தான் அரசிற்கு பெரும் சங்கடமாக மாறியது. அதன்பின்னர் பின் லேடனுக்கு ஆதரவாக தொழுகைகளும், ஊர்வலங்களும், அஞ்சலி கூட்டங்களும் பாகிஸ்தானில் நடைபெற்றன. அவர் அங்கு ஒரு தியாகி அளவிற்கு ஜமாத் உல் தவா, லஸ்கர் ஈ தொய்பா போன்ற அமைப்புகளுக்கு இருக்கும் மக்கள் ஆதரவும் யோசிக்க வேண்டிய விஷயம்தான். அங்கு நிலநடுக்கம் நேர்ந்தபோது அரச இயந்திரம் ஸ்தம்பித்து சரிவர நிவாரண பணிகள் சென்று சேராதபோது ஜமாஅத் உல் தாவாதான் பெரும் பணிகளை செய்து மக்களை மீட்டு மக்கள் ஆதரவை பெற்றது என்கிறார் மலாலா.    

லால் மஸ்ஜித்மீது நடைபெற்ற தாக்குதல், இரண்டாம் ஸ்வாத் போர், அதையொட்டி நிகழ்ந்த  பெனாசிர் புட்டோவின் மரணம், ஒசாமா பின் லேடனின் மரணம் என அவர் வாழ்நாளில் கடந்துவந்த நிகழ்வுகளை பற்றிய பருந்து பார்வையை அளிக்கிறார். ஜெனரல் கியானி, ஆசிப் அலி சர்தாரி, என பலரையும் சந்திக்க நேர்ந்த நிகழ்வுகளைப் பகிர்கிறார். மருத்துவராக வேண்டும் என விரும்பிய ஏனைய நண்பர்களைப் போல் மலாலாவிற்கும் அதுதான் விருப்பமாக இருந்திருக்கிறது. பெனாசிர் புட்டோவின் வருகை அவரைப் போன்ற அரசியல்வாதியாக வேண்டும் என மலாலாவைக் கனவு காணச் செய்தது. பெருத்த நம்பிக்கையுடன் எதிர்நோக்கப்பட்ட அவருடைய வருகை மரணத்தில் முற்று பெற்றது அவரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.   

அடிப்படைவாதிகளுக்கும் சரி சுதந்திரச் சிந்தனை கொண்ட பகுத்தறிவுவாதிகளுக்கும் சரி சிந்தனைக் கொந்தளிப்புகள் பெரிதாக இருக்காது. எளிய கண்மூடித்தனமான நம்பிக்கையோ நேர்கொண்ட சிந்தனையோ, ஏதோ ஒன்று எல்லாவற்றையும் வழிநடத்தும். ஆனால் இதற்கிடையில் சிக்கும் சாமானியர்கள், தொன்மையான நம்பிக்கைகளையும் மீற முடியாமல், பகுத்தறிவின் கேள்விகளையும் எதிர்கொள்ள முடியாமல், ஒவ்வொரு நொடியும் சமரசம் செய்துகொண்டாக வேண்டும். மலாலாவிற்கும் அத்தகைய சில தத்தளிப்புகள் இருக்கத்தான் செய்கிறது. ஒருவகையில் இத்தகைய தத்தளிப்புகளே அவரை சாமானியராக, மனதிற்கு நெருக்கமாக ஆக்குகிறது. பிர்மிங்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டபோது பொழுது போக அவருக்கு ஒரு டி.வி.டி உபகரணி வழங்கப்பட்டது. அப்போது மலாலா Bend it Like Beckham எனும் திரைப்படத்தை காண நேர்ந்த அனுபவத்தை எழுதுகிறார். “கலாசார இறுக்கங்களை எதிர்த்து கால்பந்து விளையாட முயன்ற சீக்கிய பெண் பற்றிய கதை எனக்கு ஊக்கமளிக்கும் என்று எண்ணியிருக்கலாம். அதில்வரும் பெண்கள் தங்கள் மேலாடைகளை துறந்து, விளையாட்டுக்குரிய உள்ளாடைகளுடன் கால்பந்து பயிற்சியில் ஈடுபட்ட காட்சியைக் கண்டு அதிர்ந்துவிட்டேன். செவிலியர்களிடம் கூறி அதை அணைக்கச் சொன்னேன்.” என்று எழுதுகிறார்.      

தன் பங்கிற்கு மலாலா பல விமர்சனங்களை சந்தித்து வந்திருக்கிறார். அமெரிக்க சி.ஐ.ஏ உளவாளி என்று வசைபாடப்பட்டார். பாகிஸ்தான் பற்றியும் இஸ்லாமிய அடிப்படைவாதம் பற்றியும், பெண்கல்வி பற்றியும் அவர் கூறிய கருத்துக்களுக்காக உள்ளூரில் கடுமையாக விமர்சிக்கபட்டார். பாகிஸ்தானிய தாலிபான் தலைவர் எழுதிய கடிதத்தில், பெண் கல்வியை ஆதரித்ததற்காக கொல்ல முயற்சிக்கவில்லை, அவர் மேற்கத்தியமயமாக்கலை ஆதரிக்கிறார் என்பதாலே கொலை ஆணை இடப்பட்டது என்கிறார். உள்ளூர் வலைத்தளங்களிலும், ஊடகங்களிலும் இதில் பெரும் சதி இருப்பதாக வசைபாடினர். சுடப்படவே இல்லை என்றும், அமெரிக்க டிரோன் தாக்குதல்களுக்கு சாக்காக நடத்தப்பட்ட நாடகம் என்று கூட பேசப்பட்டது. நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டபோதுகூட அங்கு ஒருவித மவுனமே நிலவியது.

மலாலா என்ன செய்துவிட்டார் எனும் கேள்வியுடன்தான் இந்த நூலை வாசிக்கத் தொடங்கினேன். பொதுவாக எவரும் வாய்திறக்க அஞ்சிய அசாதாரணமான சூழலில், மவுனதிரையை கிழித்துக்கொண்டு துணிவுடன் குரல் எழுப்பியதே ஒரு மிகப்பெரிய சாதனை எனும் உணர்வையே இறுதியில் அடைந்தேன். ஆகவே அவருக்கு கிடைத்த கவனமும் அங்கீகாரமும் நியாயமானதே என்று வாசிப்பின் இறுதியில் எண்ணுகிறேன்.      

மலாலாவின் ஆங்கில சரிதையின் தலைப்பு, I am Malala – The story of the girl who stood up for education and was shot by the taliban. அவருடைய முதன்மை அடையாளம் என்ன என்பதில் அவர் தெளிவாகவே இருக்கிறார். “நான் தாலிபானால் சுடப்பட்டவள் என அறியப்பட விரும்பவில்லை மாறாக பெண்கல்விக்காக போராடியவள் என்றே அறியப்பட விரும்புகிறேன்” என்கிறார்.  

மலாலாவிற்கு தன் தோற்றம் பற்றிய தாழ்வுணர்ச்சி இருக்கிறது. தான் சக பஷ்தூன் பெண்களை போல் உயரமில்லை, நிறமில்லை என வருந்துகிறார். மேடையில் ஏறி நின்று பேசும்போது மக்கள் தன்னைக் காண முடிவதில்லை என்பதும்கூட அவருக்கு வருத்தம்தான். தானொரு இரண்டங்குலம் உயரமாக வேண்டும் என அல்லாவிடம் வேண்டுகிறார். தாலிபான் தாக்குதலில் இருந்து உயிர்பெற்று மீண்டபிறகு “நான் இன்று ஆடியில் என்னையே நோக்கிக் கொண்டேன். ஒருகாலத்தில், நான் இறைவனிடம் ஓரிரு அங்குலங்கள் உயர வேண்டும் என வேண்டிக் கொண்டதுண்டு. ஆனால் இன்று என்னை வானளாவ உயர்த்திவிட்டான், அளக்கவியலா உயரம் அது” என்கிறார். 

அபூர்வமான உயரம், ஆனால் ஆபத்தான உயரமும்கூட. 
-சுகி 

No comments:

Post a Comment