Sunday, May 21, 2017

கடவுளின் வெண்கல கரமும், நீல நிற ஜீன்ஸ்களும் - ஸ்வெட்லான அலேக்சிவிச்சின் செகண்ட் ஹான்ட் டைம் நூலை முன்வைத்து

(சொல்வனத்தில் வெளியான கட்டுரை)

'இரும்புக் கரம் கொண்டு மனித இனத்தை மகிழ்ச்சியை நோக்கி விரட்டுவோம்’ – பிரபலமான கம்யுனிச கோஷம்

1937 ல் இரண்டு முதிய போல்ஷெவிக்குகள் ஒரு சிறைக்குள் அமர்ந்தபடி பேசிக் கொள்கிறார்கள். ஒருவர் மற்றொருவரிடம் “கம்யுனிசத்தை காண்பதற்கு நாம் உயிர் வாழ்ந்திருக்க மாட்டோம் என எண்ணுகிறேன், ஆனால் நிச்சயம் நம் பிள்ளைகள் காண்பார்கள்”. மற்றொருவர், “ஆம்… நம் பாவப்பட்ட பிள்ளைகள்” –  ஒரு சோவியத் துணுக்கு 

நிகழ்வு – 1 : 
இடம் – சோவியத் ரஷ்யாவின் இடுங்கிய கம்யூன்களில் ஒன்று. ஐந்து குடும்பங்களின் 27 நபர்கள் வாழும் நெரிசலான கட்டிடம்.


காலம் – ஸ்டாலினின் சோவியத்

நள்ளிரவில் வரும் ஒரு கருப்பு வண்டி அந்த கம்யூன் வாயிலில் நிற்கிறது. ஐந்து வயது குழந்தையுடன் அந்த கம்யூனில் வசித்திருக்கும் ஒரு பெண்ணை துரோக குற்றச்சாட்டின் பேரில் அழைத்துச் செல்ல வந்திருக்கிறார்கள். கதறி அழுகிறாள். தனியாக பக்கத்து அறையில் வசித்திருக்கும் தனது தோழியிடத்தில் குழந்தையை ஒப்படைத்துவிட்டு சிறை செல்கிறாள். பதினேழு ஆண்டுகள் கடக்கின்றன. குருஷேவ் காலகட்டத்தில் விடுதலையாகி வெளியே வருகிறாள். தன் தோழியைக் காணச் செல்கிறாள். அங்கே அவளுடைய மகள் நல்லபடியாக வளர்ந்து நிற்கிறாள். ஆனந்தக் கண்ணீர் வழிகிறது.

இந்தக் கதை இத்துடன் முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். குருஷேவ் ஸ்டாலின் காலத்து கைதிகளின் கோப்புகளை பொதுவில் வைக்கிறார். கைதானவர்கள் தங்களது கோப்புகளை விரும்பினால் காண முடியும். அவளும் சென்று காண்கிறாள். அதில் அவளைப் பற்றி உளவு சொன்னவரின் பெயரைக் கண்டு அதிர்கிறாள். ஆம், அது அவள் சிறை சென்றபின் அவளது குழந்தையை பதினேழு ஆண்டுகள் வளர்த்திருந்த தோழிதான். வீடு திரும்பாமல் தற்கொலை செய்து மரிக்கிறாள்.

நிகழ்வு – 2
இடம் – மாஸ்கோவின் பளபளப்புகள் ஏதுமற்ற ருஷ்ய நாட்டுப்புற கிராமங்களில் ஒன்று.

காலம் – புதினின் ருஷ்யா

லேனா பதின்ம வயதில் ஒரு கனவு காண்கிறாள். கனவில் ஓர் அழகிய, கம்பீரமான ராஜகுமாரன் அவளைத் திருமணம் செய்துகொள்ள வருகிறான். அவன் முகம் அவளுக்கு நன்றாக நினைவில் நிற்கிறது. அவனுக்காகக் காத்திருக்கிறாள். அவள் ஊரிலேயே வசிக்கும் ல்யோஷா அவளை நேசிக்கிறான். கனவுக் காதலனுக்காக தான் காத்திருப்பதாகச் சொல்கிறாள். இரண்டு வருட காத்திருப்புக்குப் பின்னர் அவனுடைய காதலை ஏற்று மணக்கிறாள். ஒரு குழந்தையும் பிறக்கிறது. ல்யோஷா முரடனாகிறான். பெரும்பாலான ருஷ்ய ஆண்களை போல் வோட்காவிலும் வன்முறையிலும் தன்னை இழக்கிறான். லேனா விவாகரத்து பெறுகிறாள். அவளுடைய பால்ய காலத்து சிநேகிதனும், அவள் மீது மாறாக் காதல் கொண்டவனுமான யூரியை தேடிச் செல்கிறாள். யூரியிடம் தனது கனவுக் காதலனை பற்றி சொல்கிறாள். அவனுக்காக காத்திருக்க விரும்புவதால் உன்னை மணக்க மாட்டேன் என்கிறாள். அவனும் பிற அனைவரையும் போல் சிரிக்கிறான். யூரியின் பெருங்காதல் அவளை ஆட்கொள்கிறது. இருவரும் மணந்து கொள்கிறார்கள். ஆதர்ச தம்பதிகளாக வாழ்கிறார்கள். மேலும் இரண்டு குழந்தைகள் பிறக்கின்றன.

பதினைந்து வருடங்கள் கழிகின்றன. அன்பும் காதலும் ததும்பி நிறையும் வாழ்க்கை. ருஷ்ய கிராமப்புற ஆண்கள் பெரும்பாலானவர்கள் சிறை தண்டனையை அனுபவித்தவர்கள் அல்லது அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள். அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக முகமறியா மனிதர்களைத் தேற்றி ருஷ்ய பெண்கள் கடிதம் எழுதுவார்கள். அவர்களும் பதில் எழுதுவதுண்டு. அப்படி ஒருநாள் வோல்டோயாவின் கடிதம் அவளை அடைகிறது. ஏதோ ஒன்று அவளை பீடிக்க, அவனுடைய புகைப்படத்தை அனுப்புமாறு எழுதுகிறாள். தான் நேசித்த ஒரு பெண், தன் மீதுள்ள காதல் மெய்யென்றால் எதிர்வரும் முதல் மனிதனை கொல், எனக் கூறியதை ஏற்று கொலை செய்த குற்றத்திற்காக குளிர் நிறைந்த வடக்குப் பகுதிச் சிறையொன்றில் ஆயுள்தண்டனை அனுபவிக்கும் வோல்டோயாதான் அவளின் கனவுக் காதலன். மூன்று பிள்ளைகளையும் விட்டுவிட்டு, யூரியிடம் விவாகரத்து பெற்றுக்கொண்டு அவனைத் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறாள். யூரி இன்னமும் அவள் மீதான பெருங்காதலுடன் நாட்டுப்புறங்களில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு அவளுக்காக காத்திருக்கிறான். லேனா வோல்டோயாவை வருடம் இருமுறை மட்டுமே காண முடியும்.

லேனாவின் விந்தையான காதல் கதை ருஷ்யா முழுவதும் பேசப்பட்டது. தொலைகாட்சியில் ஆவணப்படம் ஒலிபரப்பானது. வோல்டோயா அவளின் விளக்கிக்கொள்ள முடியாத இந்த பெரும்காதலை உணர்ந்துகொள்ள இயலாமல் தடுமாறுகிறான். அவள் மீது ஐயம் கொள்கிறான். சிறை இருக்கும் அதே ஊருக்கு அவளும் குடி பெயர்கிறாள். அங்கொரு தேவாலயத்தில் தஞ்சம் புகுகிறாள். அவன் அவளது அன்பை மேலும் மேலும் சந்தேகிக்கிறான். ஸ்வெட்லான அவளை மீண்டும் சந்திக்க முயன்றபோது அவள் எங்கோ சென்று விட்டிருந்தாள். எல்லாமும் அவளுக்கு கசந்திருந்தது. அவள் காணாமல் போனாள்.


ஸ்வெட்லான அலேக்சிவிச் சென்ற காலத்து சோவியத்தில் வளர்ந்தவர். தன்னை ஒரு ‘சோவோக்’ என்றே கருதுகிறார்.  ”அவருடைய பல்குரல் எழுத்துக்கு, நம் காலத்து வேதனைகளுக்கும் துணிவுக்குமான சின்னமாக”  2015 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் அவருடைய ‘Second Hand Time – Last of the Soviets’ எனும் நூலுக்காக கிடைத்திருக்கிறது. 1991- 2013 வரையிலான காலகட்டங்களில் ஸ்வெட்லானா பல்வேறு சோவியத் மனிதர்களை சந்தித்தபடி இருக்கிறார். இந்நூல் அவர்களுடனான உரையாடல்களின் தொகுப்பு. போல்ஷெவிக் புரட்சியாளர்கள், உலகப்போர், ஸ்டாலின், குருஷேவ், கோர்பசேவ், ஆப்கான் போர், எல்ட்சின், புதின் என ஏறத்தாழ நூற்றாண்டு ரஷ்யாவின் வரலாற்று பரிமாணங்களை பேசுகிறது. சோவியத் மனிதர்களின் தனிப்பட்ட கதை, அவர்களின் காதலை பற்றியும் நேசத்தை பற்றியுமான தனித்தனி கதைகள் ஒரு தேசத்தின் கதையாக உருவெடுக்கிறது.

ஸ்வெட்லான நோபல் பெற்ற முதல் பெலாரஸ் நாட்டு எழுத்தாளர், இலக்கிய நோபல் பெற்ற முதல் பத்திரிக்கையாளர் என அடையாளப்படுத்தப்பட்டாலும் அவர் தன்னை அபுனைவு எழுத்தாளராக கருதவில்லை என்பது முக்கியமான விஷயம்.

”மனிதக் குரல்கள் தங்களுக்காக ஒலிக்கும் ஒரு இலக்கிய வகைப்பாட்டை நான் தேர்வு செய்தேன். உண்மை மனிதர்கள் எனது நூல்களில் அவர்கள் காலத்து நிகழ்வுகளைப் பற்றி, போர், செர்னோபில் பேரழிவு, மகத்தான பேரரசின் வீழ்ச்சி என எல்லாவற்றையும் பற்றி பேசுகிறார்கள். தங்களது சொந்த வாழ்வின் கதைகளைப் பதிவதன் வழியாக, அவர்கள் மொத்தமாக இணைந்து தேசத்தின் வாய்மொழி வரலாற்றை, அவர்களின் பொது வரலாற்றைப் பதிகிறார்கள்.“ஆனால் நான் நிகழ்வுகளின், உண்மைகளின் வறட்டு வரலாற்றைப் பதிவதில்லை, நான் மானுட உணர்வுகளின் வரலாற்றை எழுதுகிறேன். ஒரு நிகழ்வின்போது மனிதர்கள் என்ன எண்ணினார்கள்? என்ன புரிந்து கொண்டார்கள்? எதை நினைவில் கொள்கிறார்கள்? அவர்களின் நம்பிக்கைகளும், அவநம்பிக்கைகளும் எவை? அவர்கள் அனுபவித்த கற்பிதங்கள்,  நம்பிக்கைகள், அச்சங்கள் எவை? இத்தனை பரந்த, உண்மையான தகவல்களைக் கற்பனை செய்வதும் உருவாக்குவதும் எந்நிலையிலும் சாத்தியமில்லை. நாம் பத்து-  இருபது வருடங்களுக்கு முன் எப்படி இருந்தோம் என்பதை விரைவில் மறந்துவிடுகிறோம். சில நேரங்களில் நாம் நமது கடந்த காலத்தை எண்ணுவதற்கு வெட்கப்படுகிறோம் என்பதால் நாம் நமக்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பதை நம்ப மறுக்கிறோம். கலை பொய்யுரைக்கக்கூடும், ஆனால் ஆவணம் அப்படியல்ல. நான் எனது நூல்களை ஆயிரக்கணக்கான குரல்களின்,  விதிகளின்,  வாழ்க்கை மற்றும் இருப்பின் துண்டுகளின் ஊடாக உருவாக்குகிறேன். ஒவ்வொரு நூலையும் எழுத மூன்று – நான்கு ஆண்டுகள் பிடிக்கும். ஒவ்வொரு நூலுக்கும் சுமார் 500- 700 மனிதர்களை சந்தித்து உரையாடுகிறேன். எனது தொகுப்புகள் பல்வேறு தலைமுறைகளை உள்ளடக்கியது.   

  

“சில நேரங்களில் 100 பக்க பிரதியிலிருந்து 10 வரிகள் மட்டுமே எடுத்து கொள்வேன்,  சில வேளைகளில் ஒரு பக்கம். இந்த துண்டுகள் எல்லாம் இணைந்து ‘குரல்களின் நாவலை’ (novel of voices) படைத்து நம் காலத்தில் நமக்கு என்ன நிகழ்கிறது என்பதை உருவாக்கி காட்டுகிறது…”

ஸ்வெட்லானவின் எழுத்துமுறையை அவதானிக்கும்போது அவரை புனைவு எழுத்தாளராக கருதுவதற்கு இடமுண்டு என்றே எண்ணுகிறேன். இந்த குரல்களின் தேர்வும், அதன் வைப்பு முறையும் புனைவு எழுத்துக்கு உரியது. இந்நூல் சார்ந்து அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு, இதில் அவரே எழுதியது மிக குறைவு என்பதே. ஆம் ஸ்வெட்லான நூல் முழுக்க தனது குரலை வெகு அரிதாகவே பதிவு செய்கிறார். பிறரைத்தான் பேச விடுகிறார். எனினும் இதை நாம் ஒரு எழுத்து முறையாகவே கொள்ளவேண்டும். ‘இருபது ஆண்டுகளாக ஆவணங்களுடன் பணி செய்த வகையிலும், ஆவணங்களின் அடிப்படையில் ஐந்து புத்தகங்கள் எழுதிய அனுபவத்திலும் மனிதர்களை பலவகைகளில் புரிந்துகொள்வதில் கலை தோற்றுவிட்டது என்பதை உறுதியாக சொல்கிறேன்’ என மிக காத்திரமாக தனது விமர்சனத்தை வைக்கிறார்.

ஒருவகையில் ஸ்வெட்லானவின் இவ்விமர்சனத்தின் வேரை இந்நூலைக் கொண்டே புரிந்துகொள்ள முடிகிறது. ‘Gulag Archipegalo’ வும் பாஸ்டர்நாக்கும், தாஸ்தாயேவ்ஸ்கியும், தால்ஸ்தாயும் மீண்டும் மீண்டும் வருகிறார்கள். புத்தகங்களைப் படிக்கிறார்கள், அவற்றைப் பற்றி விவாதிக்கிறார்கள். மார்க்சியம் ஐரோப்பாவின் ‘அறிவு ஜீவிகளின் போதையாக’ திகழ்ந்தது. நாடகங்களும் புத்தகங்களுமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தன.

“அறிவுச் சமூகம் தங்களது நூலகங்களை பிரித்து விற்கத் துவங்கியது. மனிதர்கள் ஏழையானார்கள் என்பது உண்மைதான், ஆனால் வெறும் உதிரி நோட்டுக்களுக்காக அல்ல – ஒட்டுமொத்தமாக புத்தங்கள் அவர்களை ஏமாற்றியதாக உணர்ந்தார்கள். மக்கள் தெளிவடைந்தார்கள்.” (நூலிலிருந்து).

கோர்பசேவ்வுக்கும் எல்ட்சின்னுக்கு இடையிலான காலகட்ட மாறுதல் பற்றிய சித்திரம் நூலின் பல்வேறு இடங்களில் வருகிறது. முக்கியமாக புதுயுக ரஷ்யர்களின் பொருளீட்டும் திறன் பிற அனைத்தையும் பின்னுக்கு தள்ளுகிறது. நூலகங்களும் நாடக அரங்குகளும் பெரும் அங்காடிகளாக மாறுகின்றன. “பணம் என்ற ஒன்று கண்டடையப்பட்டது ஒரு அணுகுண்டைப் போல் எங்களைத் தாக்கியது” (நூலிலிருந்து). அதன் தாக்குதலில் நிலைகுலைந்து நசிந்தவர்களின் கதைதான் இந்நூல். சோவியத் யுகத்தவர்கள் எள்ளி நகையாடப்படுகிறார்கள். வெறுக்கப்படுகிறார்கள். முனைவர்களும், பொறியாளர்களும், மருத்துவர்களும் தெரு பெருக்குகிறார்கள், பாத்திரங்கள் விற்கிறார்கள். ஒரு நிகழ்வின் வழியாக ஒரு சமூகத்தின் மொத்த மதிப்பீடுகளும் தலைகீழாகின்றன. சட்டென அதுவரையிலான வாழ்வும், கனவுகளுக்காக எதிர்கொண்ட துயரங்களும் பொருளிழந்து போகின்றன. ஸ்வெட்லான இத்தகைய மனிதர்களையே நாடுகிறார். மனதளவில் இன்னமும் தானொரு ‘சோவோக்’ என நம்பும், இன்றைய வாழ்வில் பொருத்திக்கொள்ள முடியாமல் அவதியுறும் ஆன்மாக்களிடம் பேசுகிறார். ஒரு பொன்னுலகை, புதிய மானுட சமுதாயத்தை இரும்புக்கரம் கொண்டு கட்டி எழுப்புவோம் எனும் கனவை, அவர்களின் வாழ்வின் பொருளை, இழந்து சிக்குண்டு அல்லல்படுபவர்கள்.

நூலின் சில பகுதிகள் எனக்கு தற்கால இந்தியாவை நினைவுபடுத்தியது. சீன பொருட்கள் அங்காடிகளை நிறைப்பதைப் பற்றி கவலை கொள்கிறார்கள். அறிவார்ந்த கலாசாரம் அதன் பீடத்திலிருந்து நழுவி அவ்விடத்தில் பரப்பியல் பண்பாடு அமர்ந்திருப்பதை  அங்கலாய்க்கிறார்கள். மெக்டோனால்ட்சின் வாயிலில் நீண்டிருக்கும் வரிசை அவர்களை அச்சுறுத்துகிறது. மாஸ்கோவின் அடுக்குமாடி கட்டிடங்களுக்கு அடியில் வேறோர் உலகம் உயிர்ப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறது- தாஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் அகதிகளால் கட்டிடங்களின் அடித்தளம் நிறைந்திருக்கிறது. சோவியத் வீழ்ச்சியடைந்த அதே காலகட்டத்தில்தான் இந்தியா புதிய பொருளாதார கொள்கைக்குள் தன்னைப் புகுத்திக்கொண்டது. நான் வசிக்கும் இச்சிறிய தென்தமிழக ஊரில் வடகிழக்கிலிருந்து வந்து உணவகங்களில் பணிபுரிபவர்களை காண்கிறேன்.

சந்தை நம் அறங்களை நிர்மாணிக்கிறது. இந்த இருபது ஆண்டுகளில் எத்தனை தொழில்கள் புதிதாக முளைத்து அடியோடு அழிந்திருக்கின்றன? ஸ்வெட்லானாவின் மாந்தர்கள் சென்ற சோவியத் யுகத்தின்போது பணம் எப்படியொரு முக்கிய விஷயமாக இருந்ததில்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். சிற்சில ரூபிள்கள் கொண்டு வாழ்கிறார்கள். “எழுபது வருடங்களுக்கு மேலாக, அவர்கள் எங்களிடம் பணம் மகிழ்ச்சியில்லை, வாழ்வின் மிகச் சிறந்த விஷயங்கள் இலவசமாகவே கிடைக்கும்  என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். உதாரணத்திற்கு அன்பைச் சொல்லலாம். ஆனால் மேடையில் இருந்து எவரோ ஒருவர் “விற்று வளம் பெறுக” எனக் கூவிய அந்நொடியில் எல்லாமும் சாளரத்தின் வழியே வெளியேறிவிட்டது” (நூலிலிருந்து). நம் தந்தையர் காலமும் இப்படித்தானே இருந்திருக்க வேண்டும்? பணத்திற்கும் மகிழ்ச்சிக்குமான உறவு மிகக் குறுகிய காலத்தில் வலுப்பெறுகிறது. பணம் எப்படி விடுதலைக்கு ஈடானது? அப்படியென்றால் இத்தனை ஆண்டு காலம் விளம்பித் திரிந்த லட்சியவாதம் எல்லாம் வெறும் வேடம்தானா?

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ருஷ்ய அரசைக் கவிழ்க்கும் முயற்சிகள் நிகழ்ந்தன. ராணுவ டாங்கிகள் நகருக்குள் நுழைகின்றன. செஞ்சதுக்கத்தில் மொத்த மாஸ்கோவும் கூடியிருக்கிறது. அங்கே கூடியிருந்த மக்கள் எல்லாரும் பிறருக்கு உண்ண ஏதோ ஒன்றைக் கொடுக்கிறார்கள். டாங்கிகளில் இருந்து எட்டிப் பார்க்கும் ராணுவ வீரர்களை மாஸ்கோவின் இளம் பெண்கள் கட்டியணைத்து முத்தமிடுகிறார்கள். வயதான தாய்மார்கள் உணவளிக்கிறார்கள். “மகனே எங்களைச் சுடப் போகிறாயா? எங்கள் பிள்ளைகள் சோவியத்துக்காக அந்நிய மண்ணில் மரித்தவர்கள்தான்… போதும், நீயும் மரிக்க வேண்டாம்” என மன்றாடுகிறார்கள். உணர்ச்சிவசப்படும் ஒரு ராணுவ மேஜர் “பாருங்கள் எனக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். நான் எவரையும் சுடப்போவதில்லை. எம்மக்களுக்கு எதிராக நான் எதையும் செய்யப்போவதில்லை” என கூவுகிறார். ஒரு முதியவர் “கம்யுனிஸ்ட்கள் எனது வாழ்வை என்னிடமிருந்து பறித்துவிட்டார்கள்! குறைந்தபட்சம் அழகான மரணமாவது எனக்கு வாய்க்கட்டும்” என்கிறார். சோவியத்துக்கும் ருஷ்யாவுக்குமான வேறுபாடு என்பது இதுதான். ருஷ்யாவில் ‘எவரும் அழகாக மரணிக்க விரும்பவில்லை. அனைவரும் அழகாக வாழ முற்பட்டார்கள்.’

ஸ்வெட்லான பல்வேறு குரல்களை சமரசமின்றி பிரதிநிதிப்படுத்துகிறார். ஜெர்மானிய ராணுவத்தின் வருகை எப்படி ரஷ்யாவின் சில பகுதிகளில் வரவேற்கப்பட்டது, அவர்கள் ஆளுகையின் கீழிருந்த குறைந்த காலகட்டத்தில் அனுபவித்த சுதந்திரம், அவர்களை மீட்பர்களாக நம்பிய எளிய மக்கள் என ஒரு தரப்பை சொல்லி செல்கிறது. நாஜி படைகளுக்கு ஆதரவாக உள்ளூர் ரஷ்யர்கள் யூதர்களைக் காட்டிக் கொடுப்பதும், அவர்கள் கொடூரமாக வேட்டையாடப்படுவதும் இணை தளத்தில் சொல்லபடுகிறது. தாஜிகிஸ்தான் அகதிகளின் இழிநிலை பதிவாகும் அதேசமயம் தாஜிகிஸ்தானில் ரஷ்யர்கள், ஆர்மீனியர்கள் மீது நிகழ்த்திய வன்முறையும் பதிவாகிறது. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்பான காலகட்ட நிகழ்வுகளும் ஆவணப்படுத்தபட்டுள்ளன. மாஸ்கோவின் மையத்தில் இருந்த ஒருவர், தனது மூன்று அறை அடுக்குமாடி வீட்டை மாஃபியாக்களிடம் இழந்த கதையொன்று வருகிறது. பெலாரசின் அதிபருக்கு எதிராக இளைஞர்கள் ‘விளையாட்டுத்தனமாக’ நடத்திய போராட்ட அனுபவம் விரிவாக எழுதப்பட்டிருக்கிறது. புதின் ஆட்சி வந்தபிறகு ஸ்டாலினும், பெரியாவும் மீண்டும் புனிதப்படுத்தபடுவதன் பின்னணி குறித்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. இன்றைய ருஷ்யாவில் ஏற்பட்டிருக்கும் சோவியத் எழுச்சி இந்நூலில் பதிவு செய்யப்படுகிறது. கொலைகார கொடுங்கோனாக வெறுக்கப்பட்ட ஸ்டாலின் மீண்டும் இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு பெறுகிறார் என்பது தெரிய வருகிறது. சோவியத் வாழ்வை அறியாத தலைமுறை ஒன்று சோவியத் பொற்காலத்தை பற்றி கனவு காண்பதை அறிகிறோம். மீண்டும் மார்க்ஸ் விவாதிக்கப்படுகிறார், லெனின், சே, ஸ்டாலின் படங்களைத் தரித்துக்கொண்டு இளைஞர்கள் திரிகிறார்கள்.  இங்குதான் சோவியத் யூனியன் பிளவுபட்டதும் சோவியத் ராணுவ உடைகள், பதக்கங்கள், நட்சத்திரங்கள், என எல்லாமும் சந்தையில் பரப்பி விற்கப்பட்டன. மார்ஷல் அக்ரோமெயவ் சோவியத்தின் உயர் பதவி வகித்தவர். அரசுக்கு ஆலோசகராகத் திகழ்ந்தவர். தற்கொலை செய்து மரித்துப் போகிறார். அவருடைய உடல் முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறது. மறுநாள் அவருடைய கல்லறையைத் தோண்டி தங்கம் நெய்யப்பட்ட ராணுவ உடையையும் மார்ஷல் தொப்பியையும் ராணுவ அலங்காரங்களையும், பதக்கங்களையும்  களவாடி சென்றனர். கருப்புச் சந்தையில் ராணுவ அதிகாரிகளின் உடுப்புகளுக்கு மதிப்பு அதிகமாம்.இகோர் எனும் பதினான்கு வயது சிறுவன் பற்றிய நினைவலைகளை வாசிக்கும்போது மனம் நிலைகொள்ள மறுக்கிறது. கவிதைகள் எழுதுவான், அழகாக இருப்பான், மயகோவ்ஸ்கியை நினைவுகூரும் முக அமைப்பு உடையவன். எல்லோர் மீதும் பிரியம் கொண்டவன். இகோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். காரணம் என ஏதுமில்லை. “நாங்கள் அவனுக்கு விளையாட ராணுவ பொம்மைகள் அளிப்போம், டாங்கிகள், துப்பாக்கிகள், ஸ்னைப்பர், அவன் ஒரு ஆண் மகன், அவன் போராளியாக வரவேண்டும். ஸ்னைப்பர் துப்பாக்கி பொம்மையின் விவரிப்பில் “ஸ்னைப்பர் அமைதியாகவும் துல்லியமாகவும் கொல்லும். முதலில் இலக்கை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்’ என்றிருந்தது. என்ன காரணத்தினாலோ, இதெல்லாம் ஒரு தவறாக தெரியவே இல்லை. எவரையும் அச்சுறுத்தவும் இல்லை. ஏன்? எங்களுக்கு எப்போதும் போர் மனநிலையே இருந்தது.”

சோவியத்தின் போர் மனநிலை பற்றிய அவதானிப்புகள் பல இடங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. சோவியத்தே போரை எதிர்நோக்கி கட்டமைக்கப்பட்டதுதான் என முன்வைக்கப்படுகிறது. சிறையோ, போருக்கோ, முகாமுக்கோ செல்லாத சோவியத் ஆண்களே இல்லை எனும் அளவுக்கு சிறை சென்றதும், வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டதும் அனேக முறை கூறப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிப்புக்கு உள்ளாக்கியவர்கள்  என இரு தரப்புகளுடன் சேர்ந்தே வாழ சோவியத் மக்கள் பழகிவிட்டார்கள். பாதிப்பை ஏற்படுத்தியவரும் ஒரு வகையில் பாதிக்கப்பட்டவராகவே தன்னை எண்ணுகிறார். அன்றைய சூழலும் அச்சமும் தங்களை இயக்கியதாக கருதுகிறார்கள். இது ஒரு வகை விஷச் சுழல். எவர்தான் பாதிக்கப்படவில்லை? எனும் கேள்வி எழுகிறது. “எங்கள் வாழ்க்கையில் நாயகர்கள், பாதிக்கப்பட்டவர்கள், கொலைகாரர்கள், என மூவரைத் தவிர வேறு எவருமே இல்லை.”  நாயக அம்சத்தின் மீதான அலுப்பும் அசூயையும் பல்வேறு தருணங்களில் சாமானிய வாழ்வின் ஏக்கமாக வெளிப்படுகிறது.  

தனது எதிர் இருக்கையில் அமர்ந்திருக்கும் சக ஊழியன்தான் தன்னைப் பற்றி உளவு கூறியது என அறிந்தும் சிறை சென்று திரும்பும் அரசு ஊழியர் மீண்டும் அதே நாற்காலியில், அதே பணியை தொடர்கிறார், அதே தோழருடன் ஒன்றாக தேநீர் அருந்துகிறார். கடைசிவரை அதே பணியில் இருந்து ஓய்வும் பெறுகிறார்.

 அனைவரின் மீதும் பிரியமிகுந்த உறவுக்கார பாட்டிதான் தனது தாத்தாவின் மீது உளவுப் புகார் அளித்திருக்கிறார் எனும் செய்தி அவனை வாட்டுகிறது. அவரிடம் சென்று கேட்கிறான், “ஏன் அப்போது அப்படிச் செய்தீர்கள்?” என. “ஸ்டாலின் காலத்தைக் கடந்து பிழைத்த ஒரு நேர்மையானவனை எனக்கு நீ காட்டு” என்கிறாள் அவள்.87 வயது மூத்த சோவோக் வாசிலி பெட்ரோவிச்சுடனான உரையாடல் இந்நூலின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று. இளம் வயதில் கம்யூநிஸ்ட் கட்சியில் சேர்கிறார். இருநூறாண்டுகளாவது பழமையான தேவாலயம் ஒன்று இடிக்கப்பட்டு, அங்கு ஒரு பொதுக் கழிப்பிடம் கட்டப்பட்டதை பற்றி சொல்கிறார்.  பாதிரிமார்களுக்கு அதை சுத்தம் செய்யும் பணி அளிக்கப்பட்டது என நினைவு கூர்கிறார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் கிறித்துவம் மீண்டும் வலுவடைந்த சித்திரம் நூலின் மூன்று நான்கு இடங்களில் வருகிறது. லெனினையும், ஸ்டாலினையும் கடவுளாக நம்பிய மக்கள் சோவியத்தின் வீழ்ச்சிக்கு பிறகு கிறித்துவை தேடுகிறார்கள். மார்க்சியமும் விசுவாசத்தைக் கோரும் மற்றொரு மதம் தானா? இங்கு, ஜெயமோகனின் பின்தொடரும் நிழலின் குரலில் வரும் கே.கே.எம் நினைவுக்கு வந்தார். மார்க்சியத்திலிருந்து வெளியேறி தீவிர கிருஷ்ண பக்தியைக் கைகொள்வார் அவர்.

பெட்ரோவிச் நம்பிக்கைவாதி. ஸ்டாலின் காலத்தில் அவரது மனைவி சிறையில் அடைக்கப்படுகிறார். அவரைப் பற்றி உளவு சொல்லாததன் காரணமாக அவரும் கைதாகிறார். அதன் பின்னரும் ஸ்டாலினை மனதார நம்புகிறார். ஏதோ ஒரு பிழை நிகழ்ந்துவிட்டது என எண்ணுகிறார். பத்து வருட சிறைவாசத்திற்கு பிறகு, அவர் மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபிக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறார். இடைப்பட்ட காலத்தில் எல்லாவித சித்ரவதைகளையும் அனுபவிக்கிறார். மனைவி என்ன ஆனார் என ஒரு தகவலுமில்லை. வெளியே மீண்டும் கட்சி உறுப்பினராக வேண்டும் என கோருகிறார். கட்சி அவரை துரோகியாகக் கருதி ஏற்க மறுக்கிறது. ஆனால் மீண்டும் மீண்டும் முயல்கிறார். உறுப்பினரும் ஆகிறார். ஜெர்மானிய படையை எதிர்த்துப் போரிட ராணுவத்தில் சேர அனுமதி கோருகிறார். தயக்கத்திற்குப் பிறகு போர் முனைக்கும் அனுப்பப்படுகிறார். இந்த உன்மத்த ஈர்ப்பை விளங்கிகொள்ளவே முடியவில்லை. பெட்ரோவிச் தனது பேரனோடு அமர்ந்தபடி தனது கதையை நினைவு கூர்கிறார். பேரன் தாத்தாவின் தீவிரத்தை கேலி செய்யும் சோவியத் நகைச்சுவை துணுக்குகளை எடுத்துவிடுகிறான்.  

 “எவனொருவன் மார்க்சை வாசித்திருக்கிறானோ அவன் கம்யுனிஸ்ட், எவன் புரிந்துகொண்டுள்ளானோ அவன் எதிர்- கம்யுனிஸ்ட்”

சோவாக்களின் பிரச்சனை இது தான், அவர்கள் மகத்தான ஏதோ ஒன்றை கட்டி எழுப்புவதாக கருதினார்கள். மானுட குலத்தின் வருங்காலத்தை மனதில் கொண்டு தங்கள் நிகழ்காலத்தை தியாகம் செய்தார்கள், ஆனால் அந்த கனவுகளுக்கு எவ்வித பொருளும் இல்லை, வெறும் கேலிப் பொருட்களாக எஞ்சிவிட்டார்கள் என்பதே.  “ஒரு ரயில்வே நிலையம்… நூற்றுக்கணக்கான மக்கள். தோலிலாலான மேற்சட்டை அணிந்த ஒருவன் எவரையோ பதட்டத்துடன் தேடிக் கொண்டிருந்தான். அவனைக் கண்டுபிடித்தான். அவனை நோக்கிச் செல்கிறான், அவனும் தோல் மேலாடை அணிந்திருக்கிறான். “தோழர், நீங்கள் கட்சியில் இருக்குறீர்களா?” “ஆம் நான் இருக்கிறேன்”. “அப்படியென்றால், கழிவறை எங்கிருக்கிறது எனக் கொஞ்சம் எனக்கு சொல்ல முடியுமா?” ருஷ்ய ராணுவத்தில் இருந்த இவான் ஃபின்லாந்துடன் ‘உறை போரில்’ பங்கேற்றிருக்கிறார். மிகக் குளிர்ந்த நதியை ருஷ்ய ராணுவம் கடக்க வேண்டியிருந்தது. கரையடைவதற்கு முன்னரே சிலர் இறந்தனர். மறுகரையில் ஃபின்லாந்து ராணுவ வீரர்கள் நீந்திக் கரையேற முடியாமல் தவிக்கும் ருஷ்ய வீரர்களுக்கு கைநீட்டி உதவினார்கள். உற்சாகத்தோடு இருந்தார்கள். இவான் எதிரிகளை நேருக்கு நேர் அதுவரை சந்தித்ததே இல்லை. குழம்புகிறார். அவர்களுக்கு மாற்றுத் துணி அளிக்கிறார்கள். 1940 ல் இந்த போர் முடிவுக்கு வருகிறது. ஃபின்லாந்து மற்றும் ருஷ்ய போர் கைதிகள் தத்தம் அரசுகளிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள். ‘இரு வரிசைகளில் அவர்கள் பீடுநடை போட்டு வந்தார்கள். அவர்களின் பக்கம், அதாவது ஃபின்னிஷ்களின் பக்கம், வீரர்களை தழுவியும் கைகுலுக்கியும் வரவேற்றார்கள்… நம்மவர்கள், மறுபக்கம், எதிரிகளைப் போல் நடத்தப்பட்டார்கள். “சகோதரர்களே, நண்பர்களே” என தோழர்களைத் தழுவச் சென்றார்கள். ஆனால், “நில்லுங்கள்! ஓரடி எடுத்துவைத்தால் சுடப்படுவீர்கள்!” என்று எச்சரிக்கப்பட்டார்கள். ஜெர்மன் ஷேபெர்ட் நாய்களை பிடித்துக்கொண்டு நிற்கும் ராணுவ வீரர்கள் அவர்களை சூழ்ந்திருந்தார்கள். முட்கம்பிகளால் ஆன தற்காலிக முகாம்களில் விசாரனை துவங்கியது. “நீ எப்படி சிறைபிடிக்கபட்டாய்?” என விசாரணையாளர் வினவினார். எனது தந்தை “ஃபின்னிஷ் வீரர்கள் என்னை நீரிலிருந்து இழுத்தார்கள்” என்றார். “துரோகி. உனது தாய்நாட்டைக் காக்காமல் உன்னைக் காத்து கொண்டிருக்கிறாய்”. இவான் தன் வாழ்நாள் முழுவதும் அதற்காக வருந்தினார். உலக யுத்தத்தில் ஜெர்மனியின் ஆளுகைக்கு கீழ் வந்த பகுதிகளை சார்ந்தவர்கள் அதற்கு பின்னர் நாற்பது ஆண்டுகள்வரை சந்தேகத்துடன் இரண்டாம் குடிமக்களாக நடத்தப்பட்டார்கள்.

    

ஸ்வெட்லான இந்த நூலின் வழியாக என்ன அரசியலை முன்வைக்கிறார் எனும் ஐயம் எழவே செய்கிறது. ஒரு பக்கம் ஸ்டாலினின் ருஷ்ய அழித்தொழிப்புகளை பதிவு செய்கிறார், மறுபக்கம் முதலாளித்துவ ருஷ்யாவின் மீதான கண்டனம் சற்றே அதிக கடுமையுடன் பதிவாகிறது. மீண்டும் சோவியத் எழுச்சி நேராதா எனும் ஏக்கம் புலப்படுகிறது. புதின் மீதான விமர்சனங்களுக்காகத்தான் இந்நூலுக்கு இப்போது நோபல் அறிவிக்கப்பட்டதா எனும் கேள்வியும் எழத்தான் செய்கிறது எனினும் நோபலுக்கு எவ்வகையிலும் தகுதியற்ற நூல் அல்ல. ஸ்வெட்லான ஒரு நேர்காணலில் ‘ஸ்டாலினின், பெரியாவின், புதினின் ருஷ்யாவை நான் ஏற்கவில்லை’ என்கிறார். கோர்பசேவ் நல்லெண்ணம் கொண்ட ஒரு அசடர் எனும் பிம்பம் இந்நூல் வழியாக ஏற்படுகிறது. சோவியத்தின் தவறுகளை களைய எண்ணினார், ஆனால் அதன் விளைவுகள் தீர்வுகள் என்னவாக இருக்கும் என்பதில் அவருக்கு ஒரு தொலைநோக்கில்லை எனும் எண்ணம் ஏற்படுகிறது. ஸ்வெட்லானவின் ருஷ்யா கோர்பசேவின் ருஷ்யாதான் என தோன்றுகிறது.   

யுரியேன்னா எனும் கட்சி ஊழியர் கம்யுனிசம் குறித்து வைக்கும் பார்வை நம் கவனத்துக்குரியது.

“சோசியலிசம் என்பது வெறும் கூட்டுப் பண்ணைகள், உளவாளிகள், இரும்புத்திரை மட்டுமல்ல. அது சமத்துவத்தை நம்பிய பிரகாசமான கனவும்கூட. எல்லாமும் பகிர்ந்தளிக்கப்பட்டது. பலவீனர்கள் கருணையுடன் நோக்கப்பட்டனர். ..எல்லாரிடமும் அடித்து பிடுங்குவதை விடுத்துவிட்டு, பிறருக்காக இரங்கினோம்.

.”தங்களை கம்யுனிஸ்ட் என்றழைத்துக் கொண்டவர்கள் எல்லாம் திடீரென்று தாங்கள் பிறந்த முதல் நாளிலிருந்தே கம்யுனிசத்தை வெறுத்ததாக வாக்குமூலம் அளித்தார்கள். கட்சி உறுப்பினர் அட்டைகளை திருப்பியளித்தார்கள். சிலர் நேரில் வந்து அமைதியாக கட்சி உறுப்பினர் அட்டையை திருப்பியளித்தார்கள். பலர் கதவை ஓங்கி அறைந்து வெளியேறினர். மக்கள் மாவட்ட கட்சி தலைமையகத்திற்கு முன்பு உறுப்பினர் அட்டைகளை இரவுகளில் வீசி எறிவார்கள், திருடர்களை போல. கம்யுனிசத்தை விட்டு வெளியேறுவது என்றாலும்கூட தெளிந்த சிந்தையோடு அதைக் கைவிடு.”

எது விடுதலை? ஸ்வெட்லானவின் மாந்தர்கள் அனைவரும் எழுப்பும் மையமான வினா இதுவே.  “எங்களுக்கு எவரும் சுதந்திரமாய் வாழ கற்றுக் கொடுக்கவில்லை. விடுதலைக்காக மரிக்க மட்டுமே நாங்கள் கற்றிருக்கிறோம்.” சுதந்திரத்தை நோக்கிய அலைக்கழிப்புகளில் மீண்டும் மீண்டும் முன்பைக் காட்டிலும் பெரிய சுழல் ஒன்றில் ரஷ்யர்கள் உழல்கிறார்கள். விடுதலைக்கு நாங்கள் பழகவில்லை என்கிறார்கள். “மக்களுக்கு வேறெதுவுமே வேண்டியதில்லை, அவர்களுக்கு அளிக்க வேண்டியதே இல்லை. அவர்களுக்கு தேவையில்லை. ரொட்டியும் சாகச கோமாளித்தனங்களும் போதும். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான கண்டுபிடிப்பு இதுவே.” சுதந்திரத்தின் முதல் சில தருணங்களை அனுபவித்தவுடனேயே மீண்டும் ருஷ்ய சமூகம் தன்னை அதிகார ஆட்டங்களுக்குள் புதைத்து கொள்கிறது. ஸ்டாலின், குருஷேவ், கோர்பசேவ், எல்ட்சின் என எல்லோரையும் கடந்து, கம்யுனிசத்தின் கோர முகத்தை அறிந்து கொண்ட பின் பெற்ற சுதந்திரம் எத்தகையது? “நாங்கள் மலத்தில் புரண்டபடி வெளிநாட்டு உணவுகளை உண்டு கொண்டிருக்கிறோம். தாய்நாட்டிற்கு பதிலாக விசாலமான  பேரங்காடியில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுதான் சுதந்திரம் என்றால் எனக்கிது தேவையில்லை.”

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளுக்கும், வோட்காவுக்கும்கூட அங்கு ரேஷன் இருந்தது. நீண்ட வரிசையில் மக்கள் நின்று அதை வாங்கி சென்றார்கள். “இந்த தேசம் துண்டாகக் காரணம், குலக் பற்றி மக்கள் அறிந்து கொண்டதுதான் என உண்மையில் நம்புகிறீர்களா? புத்தகம் எழுதுபவர்கள் அப்படித்தான் எண்ணுகிறார்கள். மக்கள்… சாமானியர்கள் வரலாற்றைப் பற்றி கவலை கொள்வதில்லை. அவர்களின் கவலையெல்லாம் எளியவற்றை பற்றியே. காதலில் விழுவது, திருமணம் புரிவது, பிள்ளைகள் பெற்று வளர்ப்பது, வீடு கட்டுவது. இந்நாடு பெண்களுக்கான காலணிகள், டாய்லட் பேப்பர்கள் பற்றாக்குறையால் வீழ்ந்தது. போதுமான ஆரஞ்சுகள் இல்லாமல் வீழ்ந்தது. கடவுளால் சபிக்கப்பட்ட அந்த நீல நிற ஜீன்ஸ்களால் வீழ்ந்தது.”  ஸ்வெட்லான முன்னுரையில் ‘ஹோமோ சொவிக்டஸ்’ எனும் புதுயுக மனிதனைப் பற்றி சொல்கிறார். சமத்துவத்தை பற்றி மனிதன் கண்ட மாபெரும் கனவு. ஆனால் சமத்துவம் உயிரிச்சைக்கு எதிரானது. மனிதன் எப்போதும் தனக்கெதிராகத்தான் போராடிக் கொண்டிருக்கிறான். “மனிதர்கள் எப்போதும் சுதந்திரத்தை அடையவோ அல்லது வெற்றியையும் நிலைத்தன்மையையும் அடையவோ நிர்ப்பந்திக்கபடுகிறார்கள், வேதனையுடன் பிணைந்த சுதந்திரம் அல்லது சுதந்திரமற்ற மகிழ்ச்சி. பெரும்பாலானவர்கள் பின்னதையே தேர்கிறார்கள்.” சிக்கல் மகிழ்ச்சியை அடைவதே விடுதலை என முன்வைக்கப்படுவதால்தானா? கட்டற்ற நுகர்வுக்கும் வருங்கால நன்மையின் பேரால் அச்சத்தை படைகளமாய் கொண்ட முற்றதிகாரத்திற்கும் மாற்றாக நம்முள் வேறொன்றுமில்லையா? காந்தி இருக்கிறார். வெறும் நுகர்வோனாக நாம் மாறாமலிருக்க வேண்டும் என எச்சரிக்கிறார், ‘எல்லோர் தேவையையும் இப்புவி நிறைவு செய்யும் ஆனால் ஒருவரின் பேராசையைக் கூட நிறைக்க அதனால் முடியாது’ என்கிறார்.  மாற்றம் எதுவும் வெளியிலிருந்து அல்ல உள்ளிருந்தே நிகழ வேண்டும் என்கிறார், அதற்காக உரையாடியபடி நம்பிக்கையுடன் காத்திருக்கிறார். மனிதன் வேறு எதற்கு எதிராகவும் போரிட்டதைக் காட்டிலும் தனக்கெதிராகத்தான் இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக போராடி கொண்டிருக்கிறான். தன்னிலிருந்து மேம்பட்ட தன்னை வடித்தெடுக்க போராடுகிறான்.  நிகோஸ் கசன்ஜாக்கிஸ் எழுதிய  ‘ஜோர்பா எனும் கிரேக்கன்’ நாவலின் ஒரு பகுதி நினைவுக்கு வந்தது. கீழே அளிக்கப்பட்டுள்ள நாவலின் சிறு பகுதி ஏதோ ஒரு வகையில் இவ்வுரையாடலின் தொடர்ச்சி என தோன்றியது.

“சட்டென தொலைவில் பனிமூடிய நகரம் மனதில் துலங்கியது. ரோடினின் படைப்புகளுக்கான கண்காட்சியில் இருந்தேன், பிரம்மாண்டமான வெண்கக்ல கரத்தை காண்பதற்காக நின்று கொண்டிருந்தேன். ‘கடவுளின் கரம்’. பாதி மூடியிருந்தது, உள்ளங்கையில் ஆணும் பெண்ணும் களி மயக்கில் முயங்கி போராடிக் கொண்டிருந்தார்கள். ஒரு பெண் என்னருகே வந்து நின்றாள். காலாதீதமாக அமைதியின்றி முயங்கி கிடக்கும் ஆணையும் பெண்ணையும் கண்டு ஈர்க்கப்பட்டாள். ஒல்லியாக, நன்றாக உடுத்திக்கொண்டிருந்தாள். அவளது வெளிர்நிற கேசம் அடர்ந்திருந்தது,மெலிந்த உதடுகளும் உறுதியான மோவாயும் கொண்டவள் அவள். அவளிடம் ஒருவித உறுதியும், முனைப்பும் இருந்தது. பொதுவாக நானே உரையாடலைத் துவக்குவது எனக்கு பிடிக்காத ஒன்று. ஆனால் என்னை எது உந்தித் தள்ளியதென்று தெரியவில்லை, அவளை நோக்கித் திரும்பி வினவினேன்

“என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய்?”

“நாம் இதிலிருந்து தப்ப முடிந்தால் ..” வெறுப்புடன் முணுமுணுத்தாள்.

“தப்பித்து எங்கே செல்வது? கடவுளின் கரம் எங்கும் உள்ளது. விடுபட முடியாது. நீ வருந்துகிறாயா?”

‘இல்லை, இவ்வுலகில் மிக உன்னதமான மகிழ்ச்சி என்பது அன்பாகவே இருக்கக்கூடும். ஆனால் நான் இப்போது அந்த வெண்கலக் கரத்தை கண்டுவிட்டேன், நான் தப்பிக்க விழைகிறேன்.- (ஜோர்பா எனும் கிரேக்கனில் வரும் ஒரு பகுதி)

கடவுளின் கரமே ஆனாலும் அது இறுகிய வெண்கலம் அல்லவா?

No comments:

Post a Comment