Sunday, May 21, 2017

எல்லைகள் கடந்த எழுத்து

(சொல்வனம் அ.முத்துலிங்கம் சிறப்பிதழுக்கு எழுதிய கட்டுரை) 

ஷாவுலின் சாக்கர்  என்றொரு திரைப்படம். வெவ்வேறு உலகியல் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்கள் குஃபூவை வாழ்வில் பயன்படுத்துவதை பற்றிய சில காட்சிகள் வரும். அ.முத்துலிங்கத்தின் கதைகளை வாசிக்கும் போது மனக்கண்ணில் எனக்கு தோன்றிய காட்சி இதுவே. ‘லாவகம்’ அல்லது ‘நளினம்’ என அதை சொல்லலாம். கதை சொல்லிகள் – எழுத்தாளர்கள் எனும் இருமையை பற்றி ஜெயமோகன் அவருடைய முத்துலிங்கம் பற்றிய கட்டுரையில் விரிவாக விவாதித்திருக்கிறார். கி.ரா, நாஞ்சில், , அ.முத்துலிங்கம், யுவன் என ஒரு தேர்ந்த கதைசொல்லிகளின் மரபு நமக்கிருக்கிறது. கதை சொல்லிகள் மொழியை ‘லாவகமாக’ திருப்ப கூடியவர்கள். வானிலிருந்து காணும் லாட வடிவ (ஆக்ஸ் போ) ஏரியை போல், அந்த திருப்பல்கள் மிக அழகாக இருக்கும். அப்படி எழுத்தில் குங்ஃபூ விற்பன்னர் என அ.முத்துலிங்கத்தை கூறலாம். ஒரு காகம் பறந்து அமர்ந்து மீண்டும் பறப்பது போல் மொழியை அத்தனை இலகுவாக கையாள்கிறார். ஆனால் அந்த காகம் பறந்து எழுந்த பின்னர் ஒவ்வொரு முறையும் பனம்பழம் விழுவது தற்செயல் அல்ல.


எழுத்தாளன் சொற்களின் அடுக்குகளை நம்பி செயல்படுபவன். கதைசொல்லி நிகழ்வுகளின் அடுக்குகளின் ஊடாக செயல்படுபவன். அவனுக்கு சிறுகதை என்பது நிகழ்வுகளின் பின்னல். வாழ்க்கையின் மர்மங்களை சொல்லி தீர்க்க முடிவதில்லை அவனால். கதைசொல்லிகளின் சிக்கல் யாதெனில் சில கதைகள் கதைகளாக உருகொள்ளாமல் நிகழ்வுகளாக, நினைவு குறிப்புகளாக நின்றுவிடும். முத்துலிங்கத்தின் சில கதைகளுக்கு இத்தகைய தன்மையுண்டு. அவருடைய நாட்குறிப்புகள், கட்டுரைகள் வாசிக்கும் போது அவை இப்படி புனைவுக்கு வெகு அருகில் இருந்தும், கதையாகாத சுவாரசிய நிகழ்வுகள் என தோன்றியது. அவருடைய 48 ஆவது அகலக்கோடு கதையில் வரும் சிவமூர்த்தி ஒரு பாலத்தின் மீதேறி நின்று கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் மாறி மாறி பரவசத்தோடு சென்று வருவார். இலையையும், எறும்பையும் எல்லைகளை கடந்து செல்ல வைப்பார். அதே போன்ற பரவசத்தோடு தான் முத்துலிங்கத்தின் படைப்புலகம் புனைவுக்கும் நிகழ்வுக்கும் இடையிலான எல்லைகோட்டை அழித்து விளையாடுகிறது.

நடுத்தரவர்க்கத்து வாழ்க்கையின் அபத்தங்களை சிரிக்க சிரிக்க சொல்கிறார். ‘இலக்கணப் பிழை’, ‘புவியீர்ப்பு கட்டணம்’ போன்ற கதைகளை உதாரணமாக கொள்ளலாம். இக்கதைகளின் நாயகர்கள் நடுத்தர வாழ்வில் சிக்குண்டவர்கள். தங்களுக்கு மேலான அதிகார வர்க்கத்தோடு சமரசம் செய்து வாழ்ந்தாக வேண்டிய நிர்பந்தம் கொண்டவர்கள். ‘இலக்கண பிழை’ வாடிக்கையாளர் பிரிவு அதிகாரிக்கும் வாடிக்கையாளருக்கும் இடையில் நடக்கும் கடித பரிமாற்றமாகவே சொல்லப்படுகிறது. புலம் பெயர்ந்து வந்த இடத்தில் ஒரு பத்திரிக்கையில் துணை ஆசிரியராக பணியாற்றுகிறான். அவனுக்கு ‘இலக்கணப் பிழை திருத்தி’ மென் பொருள் தேவையை இருக்கிறது. அதை பயன்படுத்தும் முறையை அவன் அறியவில்லை. வாடிக்கையாளர் பிரிவு அதிகாரிக்கு எழுதுகிறான், அக்கடிதங்களின் ஊடாக அவனுடைய முழு கதையும் சொல்லப்படுகிறது. இறுதியில் பிழைகளில் இருக்கும் அழகை ஏற்க கற்றுகொள்வதாக கதை முடிகிறது. ‘புவியீர்ப்பு கட்டணம்’ வாசிக்கும் போது வெடித்து சிரித்தேன்.  பகடி எனும் வகைமை  அதிகாரத்தை விமர்சன நோக்கில் அணுகும்போதே வீரியமடைகிறது. அதற்காகவே உருவாக்கப்பட்ட வகைமை என கூட கூறலாம். வாழ்வின் அபத்தங்களை சொல்வதற்கு உகந்த வடிவமும் அதுவே. ‘புவியீர்ப்பு கட்டணம்’ புவியீர்ப்பை நுகர்வோனுக்கும் அதிகாரிக்கும் இடையில் நிகழும் தொலைபேசி உரையாடலாக சொல்லப்படுகிறது. அரசாங்க வரிகளின் அபத்தத்தை நகையாடுகிறது.

பொதுவாக பிற இலங்கை எழத்தாளர்கள் அளவுக்கு அ.முத்துலிங்கம் இலங்கையின் அரசியலை எழுதியதில்லை என ஒரு விமர்சனம் வைக்கப்படுவதுண்டு. ஆனால் அது முழு உண்மையல்ல. “வெள்ளிகிழமை இரவுகள்” “பொற்கொடியும் பார்ப்பாள்” “எல்லாம் வெல்லும்” போன்ற கதைகள் சட்டென நினைவுக்கு வருகின்றன. “வெள்ளிகிழமை இரவுகள்” மிக நுட்பமாக ‘அடையாள சிக்கலை’ சொல்லி செல்கிறது. கனடாவின் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்குள் அவர்களின் பெற்றோரை பொருத்து வரும் வேறுபாடை சொல்கிறது. அதன்வழியாக அச்சிறு பெண் குழந்தையின் மன நெருக்கடி, ஏக்கம் போன்றவற்றை நமக்கு கதை கடத்திவிடுகிறது. தனது மகளை இலங்கைக்கு அழைத்து சென்று அவளுடைய தந்தையான இலங்கை ராணுவ வீரனை அறிமுகம் செய்கிறாள் அன்னை. முன்பொருமுறை ஓரிரவு அவன் அவளை வன்புணர்வு செய்ததை நினைவூட்டிவிட்டு விடுவிடுவென சென்று விடுகிறாள். அங்கே அவனுக்கொரு குடும்பம் இருக்கிறது. ஏறத்தாழ அதே வயதும் தோற்றமும் உடைய ஒரு பெண் குழந்தை அங்குமிருக்கிறாள்.ராணுவ வீரன் தேசத்துக்காக தன்னை அர்பணித்து கொண்டவன் எனும் புனித பிம்பத்தை சூடியவன். போர் எனும் வெறியாட்டத்தில் சரி தவறுகளுக்கு அப்பால் மூர்க்கமாக செயல்பட பயிற்றுவிக்கபட்டவன். ஒரு நொடியில்  அவன் பிம்பம் நொறுக்கப்பட்டு குடும்பத்தின் முன் அப்பட்டமாக நிற்கிறான். மிக தீர்க்கமான விமர்சனத்தை தீவிரமாக வெளிபடுத்துகிறது இக்கதை.   “எல்லாம் வெல்லும்” என்னை அவ்வளவாக கவரவில்லை. ஒரு போராளியின் வாழ்வையும் நம்பிக்கையின் உடைவையும் இறுதி போரின் பின்புலத்தில் சொல்கிறது.

அ.முத்துலிங்கத்தின் வயதுக்கும் அவருடைய எழுத்துக்கும் தொடர்பில்லை. அவர் இன்றைய தலைமுறையினரின் ‘நவயுக’ எழுத்தாளர் என சொல்வேன். “வேட்டை நாய்” என்றொரு கதை. காதலனும் காதலியும் பரஸ்பரம் ரகசியங்களை பரிமாறிகொள்கிறார்கள். இக்கதையிலும் “வெள்ளிகிழமை இரவுகள்” கதையை போல்,  காதலி அவளுடைய இளம் வயதில் அவள் தந்தையை தாய் அடையாளம் காட்டிய நிகழ்வை சொல்கிறாள். அவர்கள் மகிழ்ந்து திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்போது //அதற்கு பிறகு நடந்தது ஒருவரும் எதிர்பாராதது. தபால்வண்டியை ஓட்டிக்கொண்டு ஒரு மீசைக்கார மனிதர் சென்றார். அவன் ‘அதோபார், உன்னுடைய தகப்பனாக இருக்கலாம்’ என்றான். அவள் கையைப் பறித்துக்கொண்டு நடுவீதியில் நின்று கத்தினாள். ‘நீ மோசமானவன். நான் சொன்ன ரகஸ்யம் பவித்திரமானது. நீ அதை கேலிப்பொருள் ஆக்கிவிட்டாய்.’’// . ஆணின் உளவியல் வெளிப்படும் ஒரு இக்கட்டான தருணம். சென்ற யுகத்து படைப்பாளிகள் இதற்கு பின்பான பகுதிகளை வேறு மாறி இறுக்கமாக அணுகியிருக்க கூடும். ஆனால் அ.முத்துலிங்கம் இக்கதையை இப்படி முடிக்கிறார் //நசுங்கிப்போய் இருந்த நிலையிலும் அவனுக்கு அவளைப் பார்க்க சிரிப்பாக வந்தது. அவனுடைய வாழ்நாள் முழுக்க  அவள்தான் மனைவியாக இருக்கவேண்டும் என்று தீர்மானித்தான். அப்பொழுது அவர்களுக்கு மணமாகி 45 நிமிடங்கள் கழிந்தது நினைவுக்கு வந்தது.//முத்துலிங்கத்தின் ‘அமெரிக்ககாரி’ எனும் ஒரேயொரு கதையை மட்டும் எடுத்துக்கொண்டு விரிவாக இக்கட்டுரையில் விவாதிக்கலாம் என்றிருக்கிறேன். தமிழின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என இக்கதையை சொல்வேன். கதை இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு படிக்க சென்றவளின் பண்பாட்டு சிக்கல்களை பேச துவங்குகிறது. உச்சரிப்பு, மொழி பயன்பாட்டில் உள்ள வேறுபாடுகள் அவளை தனித்து காட்டினாலும் நுட்பமான அறிவால் அதை புரிந்துகொண்டு பழகி கொள்கிறாள். பலரும் அவளை நெருங்க முயன்று விலகுகிறார்கள். முதலாமவன் ;மூன்றாம் நாள் அவளிடம் அறையில் தங்க முடியுமா என கேட்கிறான், இரண்டாமவன் அன்றே கேட்கிறான். மூன்றாமவன் வாயில் முத்தம் கொடுக்கிறான், நன்றி கூறல் விழாவிற்கு இல்லத்திற்கு அழைத்து சென்று வீட்டினரை அறிமுகம் செய்கிறான். விருந்துண்டு உறங்கி கொண்டிருக்கும்போது நடுசாமத்தில் அவன் வந்து நிற்கிறான். துரத்தி விடுகிறாள். அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை. இலங்கையில் அவளுடைய சூட்டிகையிம் காரணமாக ‘அமெரிக்ககாரி’ என அழைக்கப்பட்டவள். அவளும் அப்படித்தான் எண்ணினாள், கனவு கண்டாள். ஆனால் அவள் அமெரிக்காவிலும் ‘இலங்கைக்காரியாகவே’ இருந்தாள். // சின்ன வயதிலேயே தாயாரிடம் கேட்பாள், ‘நான் அமெரிக்கக்காரியா?’ தாய் சொல்வார், ‘இல்லை, நீ இலங்கைக்காரி.’ ‘அப்ப நான் எப்படி அமெரிக்கக்காரியாக முடியும்?’ ‘அது முடியாது.’ ‘நான் அமெரிக்காவுக்கு போனால் ஆகமுடியுமா?’ ‘இல்லை, அப்பவும் நீ இலங்கைக்காரிதான்.’ ‘நான் ஒரு அமெரிக்கனை மணமுடித்தால் என்னவாகும்?’ ‘நீ அமெரிக்கனை மணமுடித்த இலங்கைக்காரியாவாய். நீ என்ன செய்தாலும் அமெரிக்கக்காரியாக முடியாது.’//

கலாச்சார விழாவில் அவள் பாடி அபிநயம் பிடித்த  ‘என்ன தவம் செய்தனை’ பாடலை வெகுவாக ரசித்த வியட்நாமிய காரன் அவளை நெருங்குகிறான். பலசந்திப்புகளுக்கு பின்னரும் அவன் அவளை அறைக்கு அழைக்கவில்லை. அவனோடு இயல்பாக இருக்க அவளால் முடிந்தது. மெல்ல உறவு வளர்ந்து உறுதியாகி மணமுடித்து கொள்கிறார்கள். நான்கு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் மருத்துவரை சந்திக்கிறார்கள். அவனுக்கு விந்தணு எண்ணிக்கை குறைபாடு இருக்கிறது. வீடு வாங்க சேர்த்த பணத்தை கொண்டு அவனுடைய ஆப்ரிக்க ஆசிரியரின் விந்தணுவை தானமாக பெற்று ஐ.வி.எப் முறையில் கருதரித்து பெண் குழந்தையை பெற்றெடுக்கிறாள். // ‘அம்மா, அவள் முழுக்க முழுக்க அமெரிக்கக்காரி. நீ அவளை பார்க்கவேணும். அதற்கிடையில் செத்துப்போகாதே.’
இருவரும் ஒரே சமயத்தில் பேசினார்கள். அவர்கள் குரல்கள் அட்லாண்டிக் சமுத்திரத்தின் மேல் முட்டி மோதிக்கொண்டன. அவள் மடியிலே கிடந்த குழந்தையின் முகம் அவள் அம்மாவுடையதைப் போலவே இருந்தது. சின்னத் தலையில் முடி சுருண்டு சுருண்டு கிடந்தது. பெரிதாக வளர்ந்ததும் அவள் அம்மாவைப்போல கொண்டையை சுருட்டி வலைபோட்டு மூடுவாள். தன் நண்பிகளுடன் கட்டை பாவாடை அணிந்து கூடைப்பந்து விளையாட்டு பார்க்கப் போவாள். சரியான தருணத்தில் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிப்பாள்.
‘என் அறையில் வந்து தூங்கு’ என்று ஆண் நண்பர்கள் யாராவது அழைத்தால் ஏதாவது சாட்டுச் சொல்லி தப்பியோட முயலமாட்டாள். பல்கலைக்கழக கலாச்சார ஒன்று கூடலில் ‘என்ன தவம் செய்தனை’ பாடலுக்கு அபிநயம் பிடிப்பாள் அல்லது பதினாறு கம்பி இசைவாத்தியத்தை மீட்டுவாள். ஒவ்வொரு நன்றிகூறல் நாளிலும் புதுப்புது ஆண் நண்பர்களைக் கூட்டி வந்து பெற்றோருக்கு அறிமுகம் செய்துவைப்பாள். அவர்களின் உயிரணு எண்ணிக்கை மில்லி லிட்டருக்கு இரண்டு கோடி குறையாமல்  இருக்கவேண்டுமென்பதை முன்கூட்டியே பார்த்துக்கொள்வாள்.// என்று இக்கதை முடிகிறது.

அவன் அவளிடம்  அவசியமென்றால் என்னைவிட்டுவிட்டு வேறொருவரை திருமணம் செய்துகொண்டு குழந்தை பெற்றுகொள் என்கிறான். அவள் மறுக்கிறாள். அப்போது கிளிண்டன் – மோனிகா உறவு அமெரிக்காவில் செய்தியானதை பற்றிய ஒரு வரி வருகிறது. அவன் அவளிடம். ‘ஏ, இலங்கைக்காரி, நீ ஏன் என்னை மணமுடித்தாய்?’ என்றான். ‘பணக்காரி, பணக்காரனை முடிப்பாள். ஏழை ஏழையை முடிப்பாள். படித்தவள் படித்தவனை முடிப்பாள். ஒன்றுமில்லாதவள் ஒன்றுமில்லாதவனை முடிப்பாள்.’ அவள் சொல்லாமல் விட்டபதில் ‘ஆசியன் ஆசியனை மணப்பாள்’ என்பதே. விளையாட்டாக சொல்லப்படும் ஒரு வரியாக இக்கதைக்குள் இது வருகிறது “அவளுடைய கட்டிலை அவனுடைய கட்டிலுக்கு பக்கத்தில் போட்டபோது அது உயரம் குறைவாக இருந்தது.  ‘ஆணின் இடம் எப்பவும் உயர்ந்தது என்பதை நினைவில் வைத்துக்கொள்’ என்றான் அவன். “ ஏனோ அவனை மணக்க அவளுக்கு இது தான் காரணம் என தோன்றியது.

இந்தக்கதையை பெரும் பரவசத்தோடு மீண்டும் மீண்டும் வாசித்தேன். நவயுகத்தின் அடையாள சிக்கல்களின் மிக முக்கியமான இழைகளை தொட்டு செல்கிறது. அமெரிக்காவின் வசதிகளை அனுபவித்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியும் இலங்கையில் துயரப்படும் தன் அன்னையை பற்றி எண்ணுகிறாள். நாற்பது டாலர் சப்பாத்து வாங்கியதை எண்ணி அவளுக்கு வெட்கமாக இருக்கிறது. ஒருவகையில் அப்படி அந்த பணம் செலவானதை எண்ணி வருந்தும் வரை அவள் இலங்கைக்காரி தான். நவீன காலகட்டத்தின் மிக முக்கியமான சிக்கல்களில் ஒன்று பண்பாட்டு உராய்வினால் நேரும் ‘அடையாள சிக்கல்’. தேச பண்பாடுகள் அளவுக்கு எல்லாம் செல்ல வேண்டாம், கவிதையை பற்றி பேசிகொண்டிருக்கையில் நாஞ்சில் ஒருமுறை “இந்த கோயில்பட்டி எழுத்தாளர்களே இப்படித்தான்..விசும்பு, மௌனம்னு” என்றார்இந்திய இலக்கியத்தில் தமிழ் இலக்கியத்திற்கு ஒரு முகம் இருக்கும், நூறு மைல் கூட தொலைவில்லாத நாஞ்சில் நிலத்துக்கும் கரிசல் மண்ணுக்குமே பண்பாட்டு உராய்வு இருக்கிறது. பதினான்கு கிலோமீட்டர் அப்பால் உள்ள தேவகோட்டை நகரத்தார்களுடன் காரைக்குடி நகரத்தார்கள் மண உறவு கொள்ள யோசிப்பார்கள். நவீன மனிதனின் பொருளியல் சுதந்திரமும் தொழில்நுட்பமும் கல்வியும் அவனுக்கு வாய்ப்புக்களை அளிக்கின்றன. நவீன மனிதனின் முன் இருக்கும் மிகப்பெரிய கேள்வி என்பது எவ்விதம் தன் அடையாளத்தை தாண்டி செல்வது? எப்படி வேறோர் அடையாளத்தில் தன்னை புகுத்தி கொள்வது?  ‘அமெரிக்ககாரி’ என இலங்கையில் சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் அமெரிக்காவில் ‘இலங்கைகாரியாகவே’ இருக்கிறாள். அமெரிக்ககாரி கதையில் வரும் இவ்வரி தான் இக்கதையின் மையம் என எண்ணுகிறேன். //ஒருநாள் கேட்டாள், ‘ஓர் இலங்கைப் பெண்ணுக்கும், வியட்நாமிய ஆணுக்குமிடையில்  ஆப்பிரிக்க கொடையில் கிடைத்த உயிரணுக்களால் உண்டாகிய சிசு என்னவாக பிறக்கும்?’ அதற்கு அந்தப் பெண் ஒரு வினாடிகூட தாமதிக்காமல் ‘அமெரிக்கனாக இருக்கும்’ என்றாள். //சென்ற ஆண்டு ரெய்த் உரைகளில் க்வாமி அந்தோணி அப்பையா ‘பிழையான அடையாளங்கள்’ எனும் தலைப்பில் விரிவாக உரையாற்றி இருக்கிறார். அப்பையா ஆப்ரிக்க தந்தைக்கும் ஆங்கிலேயே அன்னைக்கும் பிறந்த அமெரிக்ககாரர். ‘அடையாள சிக்கல்கள்’ ‘பண்பாட்டு உராய்வுகள்’ ஆகியவைகளை திறந்த மனதோடு அணுக முடியும் என்கிறார். மனிதன் எல்லாவற்றிலும் ஒரேயொரு அடையாளத்தை மட்டுமே பேணியாக முடியும் என்பதில்லை என கருதுகிறார். ஒரே நேரத்தில் தான் ஒரு கானாக்காரன்னாகவும், ஆங்கிலேயனாகவும், அமெரிக்கனாகவும் இருக்க எந்த தடையும் இல்லை என்கிறார். அடையாள சிக்கல்களுக்கு தீர்வாக உலகம் தழுவிய மானுடத்தை முன்வைக்கும்  ‘காஸ்மோபோலிடனிசத்தை’ முன்வைக்கிறார். ‘அமேரிக்கா’ காஸ்மோபோலிடன்களின் கனவு என கூறலாம். முத்துலிங்கத்தின் இலங்கைகாரி காணும் ‘அமெரிக்க’ கனவுவும் இது தான். அவள் புக முடியாத அடையாளத்துக்குள் இயல்பாக வந்தமர்கிறாள் அவளுடைய மகள் ‘அமெரிக்ககாரியாக’. இப்போது யோசிக்கையில் இந்த கதை என்றல்ல, முத்துலிங்கத்தின் மொத்த படைப்புலகை தொகுத்து காணும் போது, தமிழின் முதல் (இப்பொழுதைக்கு ஒரே) காஸ்மோபோலிடன் எழுத்தாளர் என இவரையே கூற முடியும் என தோன்றுகிறது.ஆசிஷ் நந்தி ஓர் உரையாடலில் தேர்ந்த படைப்பாளியின் மிக முக்கியமான கூரு எதுவென தான் ஆராய்ந்து அறிந்து கொண்டதை சொல்கிறார். “the capacity to host and celebrate the ‘otherness’ of other” என்கிறார். “பிறராதல்’ என இதை கூறலாம். படைப்பாளி ‘பிறராகி’ அவனுடையவைகளை தமதாக்கி கொள்கிறான். அ.முத்துலிங்கம் நிலபரப்புகளை கடந்து, மனிதர்களை கரிசனத்தோடு அணுகுகிறார். ‘தகவல் தொழில்நுட்பம்’ இவ்வுலகத்தை சுருக்கி கைக்கடக்கமாக ஆக்கிய பின்னர் உலகின் பிற துண்டங்களில் என்ன நிகழ்கிறது என அறிந்து கொள்ளும் ஆவல் நமக்கு மிகுதியாகி இருக்கிறது. அவ்வகையில் நாம் வாசிக்க வேண்டிய முதன்மை படைப்பாளிகளில் அ.முத்துலிங்கமும் ஒருவர்.

No comments:

Post a Comment