Thursday, June 15, 2017

இராமன் எத்தனை இராமனடி - அ.கா.பெருமாள்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

நண்பர் போகன் தன்னுடைய தளத்தில் பகிர்ந்திருந்த ஒரு நெகிழ்ச்சியான அனுபவத்தை வாசிக்க நேர்ந்தது. ராமனை எளிய மக்கள் தங்கள் ஆதர்ச நாயகனாக அணுகி பணிந்து வணங்கி கொண்டாடுவதற்கும், ராமன் எந்த விழுமியத்தின் சாரமாக முன்னிறுத்தப்படுகிறாரோ அதை மண்ணில் போட்டு மிதித்து அந்தப் பெயரை அடையாள அரசியலின் பகடையாட்டத்தில் பயன்படுத்துவதற்குமுள்ள வேறுபாடு மிக அதிகம். ராமனும், கர்ணனும், பீஷ்மனும், யுதிஷ்டிரனும் காலம் காலமாக கொண்டாடப்படும் மகத்தான மானுட விழுமியங்களின் உயிர் வடிவங்கள் அல்லவா? காலந்தோறும் பிறழும் மானுட மனங்களை தியாகத்தாலும் அறத்தாலும் ஈகையாலும் கருணையாலும் நீதியாலும் நெறிபடுத்தும் மாபெரும் யுகபுருஷர்கள் அல்லவா? யுகபுருஷர்கள் என்றாலும் அழுக்கும் அழகும் இணைந்த நம்மைப்போன்ற மனிதர்கள்தானே அவர்களும்.  





மானுட மனம் இதிகாசம் எனும் தொடர்வண்டியில் காலமாற்றத்திற்கு ஏற்ப புதுபுது பெட்டிகளை இணைத்து அதை நீட்டித்துக் கொண்டே செல்கிறது. முனை புலப்படாத வேர் போல அவை நம் ஆழத்தில் வேர்விட்டு கிளைபிரிந்து அகன்று வளர்ந்துக்கொண்டே போகிறது. ராமனும் ராமனுடைய கதையும் மதங்களுக்கும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு இந்திய மக்களின் நனவிலியில் எங்கோ ஒரு மூலையில், தூரத்து புகைமூட்டமாக, ஒரு நினைவெச்சமாக இருந்து கொண்டேதானிருக்கும்.

காலச்சுவடு வெளியிட்டுள்ள முனைவர் அ.கா பெருமாளின் 'இராமன் எத்தனை இராமனடி' எனும் இந்த நூல், உலகெங்கும் விரவிக் கிடக்கும் வெவ்வேறு ராம கதைகளையும் தொன்மங்களையும், நாட்டாரியல் கூறுகளையும் சுவாரசியமாக, எளிமையான நடையில், தகவல் செறிவுடனும் உரிய தரவுகளுடனும் அளிக்கும் அற்புதமான நூல். 

இரண்டு பகுதிகள் கொண்ட இந்த நூல், முதல் பகுதியில் உலகின் வெவ்வேறு பகுதிகளில் புழங்கும் ராமாயண வடிவங்களைப் பேசுகிறது. இரண்டாவது பகுதியில் செவ்வியல் ஆக்கங்களில் இல்லாத, வாய்மொழி மரபாக சொல்லப்பட்டு புழக்கத்தில் இருக்கும் வெவ்வேறு ராமாயண கதைகளைப் பேசுகிறது. புத்தகத்தில் ஆங்காங்கே இடம் பெற்றிருக்கும் ராமாயண நிகழ்வுகளின் பண்டையகால ஓவிய மாதிரிகள் அந்த ஓவியம் குறிக்கும் நிகழ்வைப் பற்றிய அடிக்குறிப்புடன் இடம்பெற்றுள்ளது நூலிற்கு ஒரு செவ்வியல் தன்மையை அளிக்கிறது. பின்னிணைப்பாக, தமிழக கோவில்களில் உள்ள வெவ்வேறு ராமாயண சிற்பங்கள் மற்றும் ஓவியங்களின் பட்டியலையும், ராமாயண கதை இடம்பெற்றுள்ள புராணங்களின் பட்டியலையும், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளில் உள்ள வெவ்வேறு ராமாயண நூல்களின் பட்டியலையும் அளித்துள்ளார் முனைவர் அ.கா.பெருமாள்.

சங்ககாலத்தில் இருந்தே ராமாயண கதையும் வால்மீகி எனும் பெயரும் தமிழில் வாய்மொழியாகப் புழங்கியதற்கு சிலச் சான்றுகளை அளிக்கிறார் பெருமாள். வடமொழியில், ரிக் வேதத்தில் உள்ள குறிப்புகளில் தசரதன், ராமன், சீதை போன்றவற்றையொத்த பெயர்கள் காணக்கிடைக்கின்றன. நற்றிணை, மணிமேகலை, ஆழ்வார் பாடல்கள், நாயன்மார் பாடல்கள், பல்லவ சிற்பங்கள், பிற்கால சோழர்கள், நாயக்கர்கள் என வெவ்வேறு காலகட்டங்களின் ஊடாக ராம வழிபாடு தமிழகத்தில் அடைந்த பரிணாமத்தை விளக்குகிறார். சிவன் கோவில்களில் ராமன் வணங்கப்பட்டதற்கான சான்றுகள் நாயன்மார்களின் பாடல்களிலும், சிவன் கோவில் சிற்பங்களிலும், கல்வெட்டுகளிலும் காணக் கிடைக்கிறது என்பது சைவ வைணவ பாகுபாடுகளுக்கு அப்பால் ராமன் எவ்வாறு அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பதற்குச் சான்றாகும். அதைவிட மிக சுவராசியமானது, ஜைன ராமாயணம். அதில், ராவணன் அருகர்களை வணங்கும் சமணராகச் சித்தரிக்கப்படுகிறார். வாலி மிக உயர்ந்த ஜைன துறவியாகச் சித்தரிக்கப்படுகிறார். கைலாயத்தை ராவணன் தூக்கும் நிகழ்ச்சி இங்கும் சொல்லப்படுகிறது, ஆனால் அங்கு வசிப்பவர் ஈசன் அல்ல, வாலி. வாலி தன் பெருவிரலால் கைலாயத்தை அழுத்தி ராவணனின் அகந்தையைப் போக்குகிறார்.

வால்மீகி ராமாயணம் போன்ற செவ்வியல் ஆக்கங்கள் விட்டுச்செல்லும் பூடகமான இடைவெளியை, அல்லது தர்க்கத்துக்கு சிக்காத நிகழ்வுகளை இட்டு நிரப்பும் விதமாக, தர்க்கப்பூர்வ விளக்கம் அளிக்கும் வகையில் நாட்டார் கதைகள் சொல்லப்படுகின்றன என்ற எண்ணம் இந்த நூலை வாசிக்கையில் தோன்றுகிறது. உத்தர ராமாயணம், சீதையை மீண்டும் காட்டுக்கு அனுப்புதல், கூனியின் வஞ்சத்துக்கான காரணம், சூர்ப்பனகையின் வரலாறு, சீதையின் பிறப்பு ரகசியம், வாலிவதைக்கான காரணம்- போன்றவைகளை பற்றிய வெவ்வேறு கதைகள் காணக்கிடைப்பது இதனால்தானோ என்ற எண்ணம் வருகிறது. வால்மீகி ராமாயணத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு நிகழ்வுக்குமே ஒரு மாற்று நிகழ்வு வெவ்வேறு ராமாயணங்களில் இருக்கக்கூடும் என்கிறார் பெருமாள். 

வெவ்வேறு வட்டாரங்களில் புழங்கும் மாற்று கதை வடிவங்கள் பிரத்யேகமாக அவ்வட்டாரத்திற்கு உரியதாக இருப்பதன் பின்னணியை ஆராய்ந்தால் அது அப்பகுதிவாழ் மனிதர்களின் வரலாறை அறிய ஒரு கருவியாகப் பயன்படும். சுழிந்தோடும் பெரு நதியிலிருந்து வயலுக்குள் வாய்க்கால் வழியாக உட்புகும் நநதிநீர் போல் ராமாயணம் எனும் ஒற்றைக் கதைப்பரப்பிலிருந்து வெவ்வேறு நிலப்பரப்புகளில் புதிது புதிதாக கதைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. ஒவ்வொரு காப்பிய பாத்திரங்களும் வெவ்வேறு ராமாயணத்தில் கொள்ளும் வடிவங்களைக் கூர்ந்து அவதானிப்பது சுவாரசியமான அனுபவம். மலேசிய வாய்மொழி ராமாயணத்தில் ராமன் சாதாரண தலைவனாகவும், லட்சுமணன் பெரும் தியாகியாகவும் வீரனாகவும் சித்தரிக்கப்படுகிறான். ராமனைக் காட்டிலும் பெரும் தியாகி உண்மையில் லட்சுமணன்தான் என்று எனக்குத் தோன்றுவதுண்டு, ராமனுக்காவது உடன் மனைவி சீதா வந்தார். 

சிங்களர்களின் ராமாயணத்தில் விபீடணன் உத்பவ வர்ணா எனும் பெயரில் அவர்கள் வழிபடும் கடவுளாக வணங்கப்படுகிறார். பர்மிய ராமாயணத்தில் ராமன் ஒரு போதிசத்துவனாக அறியப்படுகிறான். திபெத்திய வாய்மொழி ராமாயணத்தில் தசரதனுக்கு ராமன் இலக்குவன் என இரண்டு பிள்ளைகள் மட்டுமே உண்டு. ராமன் தானாகவே ராஜ்ஜியத்தை இலக்குவனிடம் மனமுவந்து ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் செல்கிறான், அங்கு சீதையை சந்தித்து மணக்கிறான். பங்களாதேஷில் புழங்கும் வாய்மொழி மரபில், ராம-லக்ஷ்மணர்களின் மனைவியாக சீதை சித்தரிக்கப்படுகிறாள். ஜீன ராமாயணத்தில் சூர்ப்பனகையின் மகளையும் வேறு சில பெண்களையும் மணக்கிறான் அனுமன். நாரதரும், ராவணனும் பலி கொடுத்து வேள்வி வளர்க்கும் பிராமணர்களை ஜீன ராமாயணத்தில் எதிர்க்கிறார்கள். சமண ராமாயணத்தில் ராமனுக்கு எட்டாயிரம் மனைவிகள், இலக்குவனுக்கு பதினாறாயிரம் மனைவிகள். அதைவிட ராமன் மரித்துவிட்டான் எனும் பொய் செய்தியை கேட்டு இலக்குவன் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான்.

இராமாயணத்தை நிகழ்த்தி காட்டுவதற்கு என்றே உருவான கலை வடிவமாக தோல்பாவை கூத்து உருவானது. தோல்பாவை கூத்தை பற்றி மிக விரிவாகவே பதிவு செய்துள்ளார் பெருமாள். அது வால்மீகி மற்றும் கம்பனிடமிருந்து வேறுபடும் புள்ளிகளையும் அடையாளப்படுத்துகிறார். சிவனிடம் வரம் வாங்கி ராவணனை கோனார் வேடத்தில் வந்து கண்ணன் குழப்புகிறார் என்றொரு நிகழ்ச்சி இந்தக் கூத்தில் இடம்பெற்றுள்ளது. அதேபோல் அகலிகையை அடைய கௌதமரும் இந்திரனும் ஆசைப்பட்டனர், தேவர்களின் முன்னிலையில் அவர்களுக்கிடையே போட்டி ஒன்று நடத்தப்பட்டது. எவரொருவர் தண்ணீருக்குள் முழ்கி பதினான்கு வருடம் கழிக்கிறாரோ அவருக்கே அகலிகை என்று முடிவானது. இந்திரன் தாக்குபிடிக்க முடியாமல் பாதியில் வெளியேறிவிடுகிறான். சீதையும் ராமனும் சொக்கட்டான் விளையாடும்போது மாய மான் அவர்கள் பார்வையில் படுகிறது. அனுமன் இலங்கையிலிருந்து தூக்கி எறிந்த சஞ்சீவி மலையின் ஒரு துண்டுதான் கன்னியாகுமரி அருகே இருக்கும் மருத்துவாழ் மலை என்று நம்பப்படுகிறது (இந்த மலைக்கு நண்பர்களுடன் சென்றிருக்கிறேன், வழுக்கு பாறைகள் உருண்டு திரண்ட மலை) இது போன்ற கூற்றுகள் கதைக்கு ஒரு நெருக்கத்தை கொடுப்பதாகவே இருக்கின்றன. 

இந்திய ஞான மரபு, காலத்தை ஒரு சக்கரமாக, சுழற்சியாக உருவகிக்கிறது. யுகம் யுகமாக நிகழ்ந்தவையே மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன எனும் நம்பிக்கை ஆழமாக விதைக்கப்படுகிறது. ராமாயண நாட்டாரியல் கதைகளில் இந்த போக்கு சில கதைகளில் தென்படுகிறது. ஒட்டுமொத்த பிரபஞ்ச பேரியக்கத்தின் அளவிலா பிரம்மாண்டத்தின் மீதான பெருவியப்பாக இக்கதைகளை நாம் உணர முடியும். விஸ்வாமித்திரன் தசரதனிடம் ராமனைத் தன்னுடன் அனுப்பச்சொல்லி கேட்கும்போது, தசரதன் தயங்குகிறான். விஸ்வாமித்திரன், "ராமன் ஜனிப்பான், அவன் தாடகையை அழிப்பான் என்று சிந்தாமணி பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்டிருக்கிறது, அதனால் அனுப்பு." என்கிறான். சீதையின் கணையாழியைக் கொண்டுவரும் அனுமன் ஒரு ரிஷியிடம் அதைத் தந்துவிட்டு இளைப்பாறுகிறான். ரிஷி அதை ஒரு கமண்டலத்தில் போடுகிறார். மீண்டும் புறப்பட யத்தனிக்கும் சமயத்தில் கமண்டலத்தைக் கவிழ்த்தால் அதில் ராமநாமம் எழுதப்பட்ட அனேக கணையாழிகள் கிடக்கின்றன. இதில் எது தன்னுடைய கணையாழி என்று குழம்புகிறான் அனுமன். அந்த முனியிடம் எது தன்னுடைய கணையாழி என்று வினவும்போது, “எத்தனையோ ராமன்களும், சீதைகளும் அனுமன்களும் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள், அதில் எந்த கணையாழி எந்த சீதையுடையது என்பதை யாரறிவர்” என்கிறார்.

பாதாள இலங்கையை ஆளும் ராவணனின் ஒன்றுவிட்ட தம்பியான மயில்ராவணனை அழித்து ராம லட்சுமணர்களை அனுமன் மீட்கும் கதை ஒரு அபாரமான ஃபேண்டஸி அனுபவம். அங்கு அனுமன் சந்திக்கும், அவனே அறியாத அவனுடைய மகன் மச்சவல்லபன், தந்தைக்கும் தலைவனுக்கும் இடையில் முடிவெடுக்கத் தயங்கும் மனப்போராட்டம் ஒரு அற்புதமான புனைவு தருணம். மாய எதார்த்தவாதம் போன்ற பின் நவீனத்துவ பட்டிகள் இந்திய செவ்வியல் ஆக்கங்களுடன் பொருத்திப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. இக்கதைகளை வாசிக்கும்போது இதில் நிறைந்து கிடக்கும் புனைவு தருணங்களும், மேலும் விரித்தெழுத உள்ள சாத்தியக்கூறுகளும் அபாரமானவை எனும் எண்ணம் தோன்றியது. எந்த ஒரு புனைவாசிரியனும் தவற விடக்கூடாத படைப்பாகவே இதை நான் பார்க்கிறேன். சூர்ப்பனகை தன் கணவனை அழித்த ராவணனையும் தன் மகன் செம்பகாசுரனைக் கொன்ற இலக்குவனையும் தன்னை புறக்கணித்த ராமனையும் ஒருசேர பழிவாங்கும் கதையே ராமாயணம் என்று முற்றிலும் வேறோர் புதிய கோணத்தில் இந்த ராமாயணத்தை அணுக முடியும்.

அற்புதமான இந்த நூலில் குறையென்று ஒன்றே ஒன்றைச் சுட்டிக் காட்டலாம் - ‘கூறியது கூறல்’ போல் சில பகுதிகள் திரும்ப திரும்ப தென்படுவதுதான் அது. இதிலுள்ள தோல்பாவை கூத்து சார்ந்த பகுதி பெருமாள் அவர்கள் எழுதி இன்று மறுபதிப்பு காணாத வேறோர் நூலின் பகுதிகளை அப்படியே கையாண்டிருப்பது அதற்கான காரணமாக இருக்கலாம்.

இந்திய பெருநிலத்தின் வெவ்வேறு நிலபரப்பில் மக்கள் சொல்வதற்கு ஒரு ராமாயண கதை இருக்கிறது. இங்கு சீதை தங்கினார், இங்கு ஜடாயு வந்தார், இங்கு மான் வந்தது என்பது போன்று. கண்ணுக்குத் தெரியாத இந்த பண்பாட்டு நூல் இந்த நிலத்து மக்களை பின்னி பிணைக்கிறது என்று தோன்றுகிறது.  இந்த நூலை வாசித்து முடிக்கையில் ‘விஷ்ணுபுரத்தில்’ வரும் ஒருவரி நினைவில் உதித்தது “கதைகள்தான் என்றாலும், அவை ஒவ்வொன்றும் எத்தனை மகத்தானவை!”



-சுகி

இராமன் எத்தனை இராமனடி

பேராசிரியர்.அ.கா.பெருமாள்

தமிழ், நாட்டாரியல், அபுனைவு, வரலாறு,

காலச்சுவடு வெளியீடு

Wednesday, June 14, 2017

சிக்கவீரன் ராஜேந்திரன் - மாஸ்தி வெங்கடேச ஐயங்கார்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

ஒரு வரலாற்று புனைவு’ எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் என்று சிக்கவீர ராஜேந்திரனை பற்றி இணைய நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தின்போது குறிப்பிட்டிருந்தார். ஹேமா ஆனந்ததீர்த்தனின் மொழியாக்கத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடாக, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதி 1947 ஆம் ஆண்டு முதற்பதிப்பு கண்ட  இந்த கன்னட  நாவல் எதேச்சையாகத்தான் என் கண்ணில் பட்டது. 508 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் (1990 ஆம் ஆண்டில் வெளியான) இரண்டாவது பதிப்பின் விலை 32 ரூபாய் எனும் முதல் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவே  எனக்கு கொஞ்ச காலம் பிடித்தது.



குழந்தை கரையோரம் கட்டி விளையாடும் மணல் வீடுகளைக் கருணையற்ற தன் அலைநாவுகளால் கரைத்தழிக்கும் கடல்போல் ஒரு இந்திய சமஸ்தானம் காலத்தால் சுவடின்றி கொண்டு செல்லப்படுவதை விவரிக்கும் கதை மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின்  ;சிக்கவீர ராஜேந்திரன்;.  இது ஓர் ஒற்றை நிகழ்வா எனில் இல்லையென்றே சொல்ல வேண்டும். உண்மையில் குடகின் வீழ்ச்சியின் சித்திரம் பெரும்பாலான இந்திய சமஸ்தானங்களுக்கும் பொருந்துவதே. தரையில் சிதறி மெல்ல இணையும் பாதரசத் துளிகளாக அவை ஒவ்வொன்றும் ஆங்கிலேய பேரரசின் பெரும்பரப்பில் இணைந்து மறைந்தன.

தொட்ட வீரன், பின்னர் சதி செய்து அரியணை ஏறிய லிங்க ராஜன். இந்த  வரிசையில் அவனுக்குப் பின்னர் குடகின் ஆட்சி பொறுப்புக்கு வருகிறான் சிக்கவீரன். அவனது அவையில் மந்திரியாக இருக்கும் நொண்டி பசவன் தனித்து வளர்ந்த மன்னனின் உற்ற தோழன்.  சிக்கவீரனை அவன் படிப்படியாக அழிவுப் பாதையில் இழுத்து செல்கிறான். மக்களை முற்றிலுமாக மறந்த அவனை  மதுவும் பெண்பித்தும் முழுவதுமாக ஆட்கொள்கின்றன. பேரழிவைக் கொண்டு வரும் காட்டருவி வெள்ளத்தின்  அடக்கமுடியாத வேகத்துக்கு தன்னால் முயன்றவரை அணைபோட முயன்று ஒவ்வொரு முறையும் உடைந்து சிதறினாலும், தளராமல் மீண்டும் மீண்டும் முயலும் மகத்தான காவியப் பெண்ணாக வருகிறாள் அவனது மனைவி, குடகின் குல விளக்கு கௌரம்மாஜி. அத்தனை துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு தன் மூர்க்க கணவனை காவல் தெய்வமாகக் காத்து நிற்கிறாள். மூத்த அமைச்சர்கள் மீது எரிந்து விழும் மன்னன் தன் மகள் புட்டவ்வாவை கடித்துகொள்ளக்கூட தயங்கும் வாஞ்சையுள்ள சாதாரண தந்தைதான்.

சிக்கவீரனைக்  காட்டிலும் தானே அரசாளும் தகுதியுடையவன் என எண்ணும் தமக்கை கணவன் சென்ன பசவனைப் பழிவாங்க வேண்டும் எனும் நோக்கில் அவனது தங்கை தேவம்மாஜியை சிறையிலடைக்கிறான் சிக்க வீரன். தேவம்மாஜியின் கருவிலிருக்கும் குழந்தை மூலம் எதிர்காலத்தில் மன்னனின் உயிருக்கு மட்டுமின்றி அந்த குழந்தைக்கும் ஆபத்து என்று தனக்குச் சொல்லப்படும் ஆரூடத்தை  நம்பும் சிக்க வீரனின் மனைவி கௌரம்மாஜியின் தீவிர முயற்சியால் அவனது தமக்கை தேவம்மாஜி விடுதலை அடைகிறாள். 

அப்பங்கொளம்அரண்மனையில் சிறைவைக்கப்பட்டிருந்த அவர்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சில விசுவாசமான வீரர்களுடனும் ஆங்கிலேயர்களிடம் அடைக்கலம் தேடி பெங்களூருக்குத் தப்பி வர முயல்கிறார்கள். இடையில் குழந்தை தவறி விழுந்து சிக்கவீரனிடமே  அகப்பட்டுவிடுகிறது. அதை மீட்கச் செல்லும் சென்ன பசவனின் விசுவாசியான சோமன் எனும் வீரன் பொதுமக்களின் முன்னிலையில் கழுவேற்றப்பட்டு அவனுடலை கழுகுகள் கொத்தித் தின்னும் சித்திரம்  மனதை ஆழமாக தைத்து விடுவதாக இருக்கிறது. ‘கரிங்காளி, என் தாயே , இதுவும் உன் இஷ்டம். எஜமானையும்  எஜமானியையும் காப்பாற்று தாயே. அவர்களின் குழந்தையையும் காப்பாற்று’ என்றுதான் கழுமரத்தின் கூர்மையான முனை தன் வயிற்றைக் கிழிக்கும்போதும் அலறுகிறான் சோமன்.

மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் 

சென்ன பசவனும் தேவம்மாஜியும் ஆங்கிலேயரிடம் அடைக்கலம் புகுந்திட, குழந்தை சிக்கவீரனிடம் சிக்கிக் கொள்கிறது. ஆங்கிலேயர்களின் நட்பு நாடான குடகின் பிரச்சனை தீர்க்க அவர்களின் உதவியை நாடுகிறான் சென்ன பசவன். 'குழந்தையை ஒப்படைத்து விடுங்கள்,; என ஆங்கிலேயர்களும், ;தங்கையையும் அவளது கணவனையும் அனுப்பி வையுங்கள்,' என சிக்க வீரனும் மாறி மாறி தூதுக் கடிதங்கள் அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர்.  நடுஜாமத்தில், குடிவெறியில் மன்னன் குழந்தையைக்கொல்லும்போது நம் மனம் பதைபதைக்கிறது. அதுவே இந்த நாவலின் உச்சம். 

இதைத் தொடர்ந்து மன்னனின் அணுக்க மந்திரிகள், போபன்னாவும் லக்ஷ்மி நாரயணய்யாவும் அவனுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். இளைஞர்களையும் வணிகர்களையும் கொண்ட காவேரித்தாய் எனும் ஒரு புரட்சிக் குழு உருவாகி அவர்களும் சிக்க வீரனுக்கு எதிராக திரள்கின்றனர்.

இந்த வாய்ப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆங்கிலேய கும்பனி சர்க்கார் முடிவு செய்கிறது. போபண்ணா, லக்ஷ்மி நாரயனய்யா , ராணி கௌரம்மாஜி போன்றவர்கள் அரசனை மீட்க எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. தன்னைத் தூக்கி வளர்த்த சாவித்திரி அம்மா, அந்தப்புரத்தை நிர்வகிக்கும்  தொட்டவ்வா, ஒப்பற்ற வீரரான பெரியவர் உத்தைய தக்கன் போன்றவர்களை மீறவும் முடியாமல் உதாசீனப்படுத்தவும் முடியாமல் தவிக்கிறான் அரசன்.

இதற்கிடையில் தாந்த்ரிக உபாசனைகளை கற்றுத் தேர்ந்த பகவதி ஊருக்கு வருகிறாள். லிங்க ராஜனுக்கும் அவளுக்கும் பிறந்த வாரிசுதான் நொண்டி பசவன் என்பது இப்போது துலக்கமாகிறது. ராஜவிசுவாசமும், மதிநுட்பமும் நிறைந்த தன் மகன் நொண்டி பசவனை அரசனாக்க வேண்டும் என திட்டம் திட்டுகிறாள் அவள் . ஆனால் அவளது திட்டம் அவனுக்கு எதிராகவே திரும்பி இறுதியில் சிக்கவீரனின் கரங்களிலேயே நொண்டி பசவனும் மடிகிறான். இறுதியில் மக்கள் ஆதரவுடன் மடிகேரிக்கு நுழைந்து சிக்கவீரனை பதவி நீக்கம் செய்து அவனையும் அவன் குடும்பத்தையும் வேலூர் அரண்மனையில் அனைத்து வசதிகளுடனும் குடியமர்த்த ஆங்கிலேய அரசு ஆணையிடுகிறது. சரியான வாரிசுகள் வேறு யாரும் இல்லாத காரணத்தினால் கும்பனி நிர்வாகமே ஆட்சியை ஏற்றுகொள்ள முடிவு செய்கிறது. புட்டவ்வா ஆங்கிலேய அதிகாரியை மணந்துகொண்டு கிறித்தவத்தைத் தழுவி இங்கிலாந்துக்கு செல்கிறாள். மன்னனும் அவளுடன் இங்கிலாந்தில் வசித்து மறைகிறான். புட்டவ்வாவின் மகளான எலிசபெத்தை கதையாசிரியர்   இங்கிலாந்தில் எதேச்சையாக சந்திப்பதாகவும், அவர் மூலம் இந்த கதையை கேட்டறிந்ததாகவும் கதை முடிகிறது.

நுண்ணிய வர்ணனைகளோ , உணர்ச்சிப் பெருக்குகளோ இல்லாத எளிமையான நேரடி மொழி மாஸ்தியுடையது. கதையும் குழப்பங்கள் ஏதுமற்ற நேரடி கதைதான். ஒவ்வொரு முடிச்சாக கதை விரிந்துகொண்டே போகிறது. இதுவரையிலான எனது புனைவு வாசிப்பில் ஆகச்சிறந்த மொழியாக்கம் என இதையே குறிப்பிட வேண்டும்.  இந்த மன்னன் எப்படியாவது அழிவிலிருந்து மீண்டுவிட மாட்டானா என்றே மனம் ஏங்குகிறது. நடக்கக்கூடாது என நாம் எண்ணும் மிக  மோசமான தேர்வுகளையே இறுதிவரை சிக்கவீரன் தனதாக்கிக் கொள்கிறான். அவனுடைய அத்தனை அட்டூழியங்களுக்கும் அப்பால் அவன் ஆங்கிலேயர்களிடம் சரணடையும்போது மனம் கனக்கவே செய்கிறது. அவனை எண்ணி பரிதாபப்படவே முடிகிறது.  வரலாற்று நிகழ்வுகள் என்பது கடல்பரப்பிலிருந்து எம்பி நிற்கும் பனி சிகரங்களை போல். அதன் ஆழத்தையும் விரிவையும் புனைவின் மூலம் கச்சிதமாக பொருத்துவதே நல்ல வரலாற்று புனைவாக இருக்க முடியும். வரலாறும் புனைவும் மிக கச்சிதமாக ஒன்றையொன்று நிரப்பி முழுமை செய்துகொள்ளும் அற்புதத்தை இந்த நாவல் செய்துள்ளது. வரலாற்று நாவல்களில் ஒரு முன்னோடி என கொண்டாடப்பட இது ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். மாஸ்தி வரைந்து காட்டும் இந்த உலகம்  ஸ்கேல் வைத்து எந்த மீறல்களும் இல்லாமல் வரையப்பட்ட சதுரங்கள் போல தெளிவான தர்க்கத்தால் ஆனது.

போர்குதிரைகளும், ரகசிய தூதுவர்களும் , வில்லன் மந்திரிகளும் , அழகிய ராணிகளும் இளவரசிகளும் மட்டும் கொண்ட உலகம் அரசர்களுடையது எனும் எண்ணத்தை இந்த நாவல் முழுவதுமாக உடைக்கிறது. சிக்கவீரனின் ஒழுங்கீனமும் பொறுப்பற்ற வாழ்வும் பெரும்பாலான இந்திய மன்னர்களின் பொதுகுணமாக இருந்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் ஆங்கிலேயர்கள் எளிய மக்களுக்கு பயன்படும் அளவிற்கு மேலான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய மன்னர்களிடமிருந்து மக்களை மீட்டனர் என்றே தோன்றுகிறது. 

வரலாறு நம் கணக்குகளை பொருட்படுத்துவதில்லை. நம் விருப்பங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. தன் போக்கில் அது மனிதர்களை புரட்டிபோட்டுக்கொண்டே முன்னகர்கிறது.  இதுவே இந்தியாவிலும் நிகழ்ந்திருக்கிறது. பிரம்மாண்டமான ஒரு கான்கிரீட் கட்டிடம் ஒவ்வொரு தளமாக வெடி வைத்துத் தகர்க்கப்பட்டு, இறுதியாக தரையோடு தரையாகி மண்ணில் மட்கும் கோர அழிவின் சமரசமற்ற சித்திரம் சிக்கவீர ராஜேந்திரன். இதுபோல் இந்தியாவின் அத்தனை சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் பேரரசால் ரத்தத்தாலும் சட்டத்தாலும் வென்று அழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் எழுதப்படாத கதைகள் எத்தனை.


சிக்கவீர ராஜேந்திரன்
மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்
கன்னட நாவல்- தமிழில் ஹேமா ஆனந்ததீர்த்தன்
நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு.

Tuesday, June 13, 2017

சகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

சுவாமி விவேகானந்தர் குறித்து ஆழமாக இதற்கு முன்னர் நான் எதையும் வாசித்ததில்லை. ராமகிருஷ்ண மடத்தை சார்ந்த நடமாடும் புத்தக விற்பனை நிலையம் அவ்வப்போது எங்கள் பகுதியை கடந்து செல்லும். நானும் அது வரும்போதெல்லாம் சென்று புத்தகங்களை நோட்டமிட்டு வருவேன். அப்படி அண்மையில் அந்த வண்டி வந்திருந்த சமயத்தில், 11 பகுதிகள் கொண்ட விவேகானந்தரின் மொத்த எழுத்துக்கள் அடங்கிய ஞான தீபம் தொகுப்பு கண்ணில் பட்டது. மிக குறைந்த  விலையில் அவை கிட்டியது எனினும் முழுமையாக வாசிக்க நேரம் கிடைக்குமா என்றொரு ஐயம் எனக்கு. ‘சகோதர சகோதரிகளே’ எனும் இந்த 642 பக்க நூல் எழுபத்தைந்து ரூபாய்க்கு கிடைத்தது. ஒட்டுமொத்த தொகுப்பில் இருந்து முக்கியமான தேர்ந்தெடுத்த பகுதிகளை கொண்ட நூல். விவேகானந்தர் ஆற்றிய உரைகள், எழுதிய கடிதங்கள், கட்டுரைகள், தனிப்பட்ட உரையாடல்கள், கவிதைகள் என பல வகையான எழுத்துக்களை இத்தொகுப்பு தாங்கி வெளிவந்துள்ளது.  





எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு விவாதத்தின் போது சொன்னார், உலக மக்களை நோக்கி ஓங்கி ஒலித்த எத்தனையோ இந்திய குரல்களில் இருவரின் குரல்கள் மட்டுமே உலக மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது, இன்றும் மதிக்கப்படுகிறது. அவ்விரண்டு குரல்களும் சத்தியத்தை தாங்கி சென்றன. உலகெங்கும் அமைதியையும் அன்பையும் நிலைநாட்ட விரும்பின. இன்றும் அவ்விரு குரல்களின் முக்கியத்துவம் காலப்போக்கில் கூடிக்கொண்டிருக்கிறதே அன்றி குறைந்தபாடில்லை.  ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். இந்த பின்புலத்தில் இருவரின் சிந்தனைகளும் பலவகையில் பின்னி பினைவதை காண முடிகிறது. 

காந்தி நேரடியாக விவேகானந்தர் குறித்து எழுதியதும் பேசியதும் மிகக்குறைவு தான். ஆனால் ஒரே சிந்தனை அலையின் வெவ்வேறு புள்ளிகள் அவர்கள் எனும் எண்ணம் இந்த புத்தகத்தை வாசிக்கையில் ஏற்பட்டது. உதாரணமாக காந்தி ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்த மதம் உண்டு என்கிறார். விவேகானந்தர் மத உட்பிரிவுகள் மற்றும் அவைகளுக்கு இடையே நிலவும் முரண்பாடுகள் குறித்து ஏறத்தாழ இதே கருத்தை முன்வைக்கிறார். இந்தியாவின் அரசியல் கூட மதத்தின் வாயிலாகவே பேசப்பட முடியும் என்கிறார் சுவாமிஜி, காந்தியும் இதே கருத்தை பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியுள்ளார். மதவாதத்தையும், அதி தீவிர மத பற்றையும், அதை கொண்டு மக்களிடம் பிளவேற்படுத்துவதையும் விவேகானந்தர் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து எழுதுகிறார். கர்ம யோகத்தை பற்றி எழுதும் போது – ‘பலன் அளவிற்கே பாதையும் முக்கியம்’ என்கிறார். காந்தியின் வாழ்க்கை செய்தி என இதை சொல்லலாம்.  இவர்கள் இருவருக்கும் இருக்கும் கருத்தொற்றுமை பற்றி விரிவாக வேறோர் கட்டுரை எழுதப்பட வேண்டும். 

ஒரு அந்நிய தேசத்திற்கு சென்று அங்கு கூடியிருக்கும் மக்களை நோக்கி சகோதர சகோதரிகளே என்று அழைத்தார் விவேகானந்தர். இந்த சொற்கள் ஏன் அத்தனை மனிதர்களையும் அன்று நெகிழ செய்தது? இவை வெறும் சொற்கள், வெறும் சொற்களுக்கு வலிமை ஏதுமில்லை. அந்த சொல்லை உதிர்க்கும் ஆளுமையின் வீச்சு, அந்த சொல்லை தாங்கி செல்லும் சத்தியத்தின் வலிமையும் தான் அத்தனை உள்ளங்களையும் கொய்தது. ஆன்ம ஒளியால் சுடர்விட்டுக்கொண்டிருந்த ஒரு ஆளுமையின் இருப்பு, சொற்களை காட்டிலும், அவர் உதிர்க்கும் கருத்துக்களை காட்டிலும் அதிக விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. அன்புக்கும் தொடுகைக்கும் ஏங்கி நிற்கும் ஒரு மக்கள் திறளின் முன் நின்று அவர் உதிர்த்த அந்த சொற்கள்  அவர்களின் இதயத்தை தொட்டிருக்கும். 

நூறாண்டுகளுக்கு முன்னர் விவேகானந்தர்  பேசியதும் எழுதியதும் இன்றும் பரவலாக வாசிக்க படுகிறது. இன்று அதன் முக்கியத்துவம் என்ன?. அவர் வாழ்வின் நிரந்தரமான, எக்காலத்திற்கும் உரிய, ஒட்டுமொத்த மானுட குலத்திற்கு உரிய சிக்கல்களை நோக்கி பேசுகிறார். காலமும் இயற்கையும் உந்தி தள்ளி விளையாடும் பந்து தானா மனிதனின் வாழ்க்கை? வாழ்வு இன்பமயமானதா? துன்பமயமானதா?     

விவேகானந்தர்  நம்மை நோக்கி சொல்கிறார்- இன்பமும் துன்பமும் மாறி மாறி ஓயாது அடிக்கும் பேரலைகள், அதில் உங்களை இழந்து விடாதீர்கள், நிமிர்ந்து நில்லுங்கள், துணிந்து செல்லுங்கள், நீங்கள் ‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகள்’, சிதிலமடையும் உடலில்லை, குழப்பியடிக்கும் எண்ணங்களும் இல்லை, மரணம் துளைக்காத ஆன்மா நீங்கள். தொடக்கமும் முடிவும் இல்லாத பரம்பொருளின் வார்ப்பு நீங்கள். ஆற்றலை உணருங்கள், ஆற்றலே வாழ்வு, அதுவே நம் பலம், பலவீனம் மரணம். செயலற்று முடங்குவதை காட்டிலும் உணர்ச்சி கொந்தளிப்புடன் இருப்பது மேல். இக்கணமே புறப்படுங்கள். 

இந்த வாழ்க்கை சுமை அல்ல, நாம் மானுடர்களாக பிறந்து வாழ்வது பாவக்கடன் தீர்ப்பதற்காக அல்ல. நாம் ‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகள், நமக்கு வாழ்வெனும் வரம் வாய்த்திருக்கிறது. எத்தனை மகத்தான செய்தி, இருண்ட மன குகைக்குள் சோர்ந்து சோம்பி கிடக்கும் நம்மை ஒளியை நோக்கி அழைத்து செல்லும் எழுச்சி மிகுந்த வாசகங்கள். விவேகானந்தர் இளைஞர்களுக்கு விட்டுசெல்லும் மிக முக்கியமான செய்தி என்று ஒன்றை சொல்லவேண்டும் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும், 'துணிவு கொள்'.
    
நாம் வெற்றியை எப்படி புரிந்துகொண்டுள்ளோம்? எதை நாம் வெற்றி என கொண்டாடுகிறோம்? மீண்டும் மீண்டும் உலகியல் வெற்றியை மட்டுமே வெற்றியாக கருதும் மனபான்மைக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். இந்த தேசம் ஆன்மீகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அதுவே இந்த தேசத்தின் ஆன்மா என்கிறார். அது வீழும் போது இந்த தேசம் வீழ்ந்துவிடும் என்கிறார். இன்னும் சொல்வதானால் நம்மிடம் இருக்கும் உடைமைகளை கொண்டு நாம் வெற்றியாளரா என்பது தீர்மானிக்கப்படுகிறது. மிக நுட்பமாக நோக்கினால் இதன் பின்புள்ள அரசியல் நமக்கு புலப்படக்கூடும், ஒருவகை நுகர்வு பின்னல் நம்மை சுற்றி பின்னப்படுவதை நம்மால் உணரமுடியும். அஜய், ஜார்ஜ் சாண்டர்ஸ் பற்றி எழுதிய கட்டுரையில் இதை விரிவாக விளக்கி இருப்பார். எண்பதுகள் வரையிலும் கூட இந்தியாவில் உடமைபெருக்கம் மகிழ்ச்சியுடன் நேரடியாக தொடர்புகொண்டதாக இல்லை. மேற்கின் சமூக அமைப்பிற்கும் கிழக்கின் சமூக அமைப்பிற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடாக இதை கொள்ளலாம். மகிழ்ச்சியை கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை கணக்கிட வேண்டும் என காந்தி சொன்னார். பொருளியல் வல்லுநர் ஷுமாக்கர் அவருடைய பௌத்த பொருளியல் கட்டுரையில் விரிவாக இந்த புள்ளியை வளர்த்து எடுக்கிறார். துறவு மனப்பான்மை ஓங்கி இருந்த அன்றைய இந்தியாவை பற்றி சுவாமி விவேகானந்தர் விவரிக்கிறார். பொருள் குவிப்பு இல்லாதவரையும், உடமைகளை துறந்த தூய மனம் கொண்ட துறவியையும் இந்த சமூகம் வெற்றியாளராகவே காண்கிறது என்கிறார். அதைவிட மிக முக்கியமான விஷயத்தை சொல்கிறார், இந்த இருமையை மறுதலிக்கிறார் பொருளீட்டவும் முடிந்து ஆன்ம வேட்கையையும் பின்தொடர்ந்து வாழ முயல வேண்டும் என்கிறார். 

விவேகானந்தரை ஒரு சிந்தனையாளராகவும் நாம் அணுகலாம். சமநிலை – சீர்குலைவு பற்றி அவர் சொல்லும் கருத்துக்கள் எனக்கு மிக முக்கியமானதாக பட்டது. இரண்டு பிரி முறுக்கு கயிற்றை போல், ஒரு பக்கம் திரிகள் பிரிகின்றன, மறுபக்கம் அவை இறுகிக்கொண்டே இருக்கின்றன.  முற்றிலுமான சமநிலை என்பது அழிவில் மட்டுமே சாத்தியம் என்கிறார் அவர். பிரபஞ்ச இயக்கத்தின் பன்முக தன்மையை, நன்மை தீமை விதிகளுக்கு அப்பாற்பட்டு புரிந்துகொள்ள முடியும். நன்மையையும் தீமையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு அத்தியாவசியமானது எனும் புரிதல் மிக முக்கியமானது, மிகவும் அடிப்படையானதும் கூட. ஏனெனில், இந்த விளையாட்டை புரிந்து கொள்வதன் மூலமே நாம் வெறுப்பை விட்டு வெளிவர முடியும். எதிர்தரப்புகள் எதிரிகள் அல்ல, அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, மாறாக ஒரு விளையாட்டின் இன்றியமையாத எதிர் தரப்பு, அல்லது ஒரு செயலின் எதிர் செயல் என்று புரிந்துகொள்ள முடியும். 

சக்கரத்தின் ஆரங்கள் அனைத்தும் விளிம்பில் இருந்து ஒற்றை மையத்தை நோக்கி நீள்கின்றன. அதை போல் உயர்கள் அனைத்துமே அதன் போக்கில் வெவ்வேறு ஆரங்கள் வழியாக ஊர்ந்தும் ஓடியும் உருண்டும் விடுதலை எனும் மையத்தை நோக்கியே நகர்கின்றன என்கிறார். விடுதலை அனைவருக்கும் உண்டு. ஒருமை நிலையை கண்டடைவதே அறிவியலின் நோக்கம் என்கிறார், காரண காரியங்களில் அந்த இறுதி காரணத்தை அறிவதை நோக்கியே அறிவியல் பயணப்படுகிறது. ஒருவகையில் ஆன்மீக சாதனைகளும் வேறு வகையாக இதே ஒருமை நிலையை நோக்கியே  பயணப்படுகிறது என்று தோன்றுகிறது. தூலத்தில் இருந்து நுண்மையை நோக்கிய நகர்வு முக்கியமானது, நுண்மையே ஆற்றலின் இருப்பிடம் என்கிறார். இயற்கையை கடந்து செல்லும் முயற்சியே மதம் என்கிறார். பிரபஞ்சத்தின் செயல்பாடுகள் எதிர் எதிர் சக்திகளின் முரணியக்கத்தால் உருவாபவை. மதமே மனிதனின் வாழ்வின் மிக உயர்ந்த தளம், ஆகவே அங்கும் இந்த முரணியக்கம் அதி உக்கிரமாக செயல்படும். மனிதன் அறிந்த அதிதூய அன்பு நிலை அங்கிருந்து தான் வந்தது, மிகக்கொடூரமான வெறுப்பும் அங்கிருந்து தான் வரும் என்கிறார். மத பூசல்களை புரிந்துகொள்ள  இது மிக முக்கியமான சிந்தனை சரடாக தென்படுகிறது. ஆங்காங்கு இப்படி பல சிந்தனை தெரிப்புக்களை காண முடிகிறது.   

அக்காலத்தில் பல மத சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவில் தலையெடுத்தன. சில சட்டகங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு ஏற்ப இந்து மதத்தை வெட்டி வடிவம் அளிக்கும் முயற்சிகள் நடந்தேறின. வெகு ஜன மக்களின் வழிபாடுகளை புறக்கணித்து உயர் தத்துவ தளத்தை மட்டுமே தூய்மையான இந்து மதம் என கொண்டாடும் ஒரு போக்கு இருந்த காலகட்டத்தில், விவேகானந்தர் கடுமையாகவே விமர்சிக்கிறார் “அறிஞர்கள் இழைக்கும் கொடுமை, பாமரர் செய்யும் அநீதியைவிடப் பயங்கரமானது” என்கிறார். உணவு கேட்டு வருபவனுக்கு கற்களை கொடுப்பதற்கு சமம், பசித்த மனிதனுக்கு தத்துவங்களை கொடுப்பது என்கிறார். நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் பலவற்றை மனிதன் சோதித்து பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆட்சி முறையில் இருந்து , ஆன்மிகம் வரை இங்கு பலவற்றை முட்டி முயன்று சோதித்து கொண்டிருக்கிறான். சிலவற்றை கண்டடைந்தும் இருக்கிறான். இங்கு ஒரு மரபு இருக்கிறது. ஒவ்வொரு தேசத்திற்கும் இருக்கிறது. உயர்வு தாழ்வு எனும் பேதங்கள் அங்கு முக்கியமல்ல. அந்த மரபை நெருங்கி அறிவதன் மூலமே நாம் கனவு காணும் எதிர்காலத்தை நோக்கி முன்நகர முடியும். நம் மரபை, நம் வரலாறை சரிவர அறியாமல் நம் மன்னுக்குகந்த எந்த விஷயத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. சுவாமி நம் மரபில் நின்றுகொண்டு எதிர்காலத்தை நோக்கி பேசுகிறார். 

 நூலின் இறுதி பகுதியில் விவேகானந்தர் எழுதிய கவிதைகளின் மொழியாக்கத்தை பதிப்பித்துள்ளனர். அக்கவிதைகள் நமக்கு முற்றிலும் வேறு ஓர் விவேகானந்தரை காட்டக்கூடும். தாயை காணாமல் பொறுமையிழந்து அரற்றி அழும் குழந்தையின் குரல் அதில் ஒலிக்கிறது. 

நீரிற் குமிழி போல்மிதக்கும் 
                நிலத்தில் அமைதி எனக்கில்லை!
சீர்இல் வெறுமை உரு, நாமம்,
                         சென்மம், இறப்பொரு பொருட்டில்லை 

புறத்தே அமையும் உருவுக்கும் 
            பொலியும் பெயர்க்கும் அப்பாலே 
விரைந்து செல்ல உள்ளத்தில் 
                       விருப்பம் எத்தனை கொண்டிருந்தேன்

ஆஆ! வாசல் கதவங்கள் 
             அடைத்திராமல் திறந்துவிடு 
ஆமாம்! எனக்கு நிச்சயமாய் 
                      அவைகள் திறக்கப்பட வேண்டும் 


- என் நாடகம் முடிந்தது 


மலைமேலே, பள்ளத்தே, மாமலையின் தொடரினிலே,
கலைநிறையும் கோயிலிலே, கவின்பள்ளி வாசலிலே,
கிறிஸ்தவநற் சபையினிலே கீர்த்த்திமிகு மறைகளிலே,
சிறப்புயரும் பைபிளிலே, சீரார் குரான் அதிலே 

ஒரு பயனும் இல்லாமல் உனைத்தேடி நான் அலைந்தேன்
இருளடர்ந்த பெருங்காட்டில் இழந்தவொரு குழந்தையைப்போல் 
யார் துணையும் இல்லாமல் அலறித் துடித்திருந்தேன் !

-கடவுளைத் தேடி   

வாசித்து முடிக்கையில் அவை எனக்கான கவிதைகள் என்று தோன்றின. யுகம் யுகமாக கடந்து வந்து கடைசி வாயிற்கதவை தட்டிக்கொண்டு காத்துக்கொண்டிருப்பவனின் குரல். விரக்தியும் நம்பிக்கையும் முறையிடலும் பொறுமையின்மையும் மாறி மாறி ஒலிக்கும் குரல். அவ்வரிகள் என்னை அதிர செய்தன. விவேகானந்தர் பக்தி யோகத்தை பற்றி பேசும்போது ஒரு கதை சொல்கிறார், உண்மையான ஆன்ம வேட்கை கொண்டவன் எப்படி இருப்பான் எனில், ஒரு திருடனைப்போல், அவன் அடைந்து கிடக்கும் அறைக்கு அடுத்த அறையில் பொற்குவியல் குவிந்து கிடப்பதை அவன் அறிந்தான் என்றால் எத்தனை பதைபதைப்புடன் இருப்பானோ அப்படி இருப்பான். அவனுக்கும் அந்த புதையளுக்கும் இடையில் உள்ள அந்த ஒற்றை சுவரை கடக்க எப்பாடு பட்டாவது முயல்வான். விவேகானந்தரின் கவிதை வரிகளில் நான் அந்த பதபதைப்பை காண்கிறேன். அவருடைய கவிதைகளை பற்றி மேலும் விரிவாக எழுத வேண்டும். 

இந்த நூல் பல வகையிலும் மிக சிறந்த திறப்புகளை கொடுத்தது, ஏற்கனவே துளிர்ந்த சில நம்பிக்கைகள் திடப்பட்டது, மேலும் பல எண்ணங்களை கேள்விக்கு உள்ளாக்கியது, இன்னும் வேறு தளங்களில் மேலதிக வாசிப்பையும் சிந்தனையையும் கோருகிறது. இதற்கு மேல் நான் வேறென்ன ஒரு நூலில் எதிர்பார்க்க முடியும்? இந்த நூலை பற்றி மிகக்குறைவாக சொன்ன உணர்வே ஏற்படுகிறது. மிக விரிவாக இந்நூலை பற்றி எழுதவேண்டும். மொழிபெயர்ப்பாளர் பெயர் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் மிக சிறப்பாக செய்திருக்கிறார் என்பதை குறிப்பிட்டாக வேண்டும். முழு தொகுப்பையும் வாங்கி படிக்க வேண்டும் எனும் எண்ணம் மேலிடுகிறது. இணையத்தில் கொட்டி கிடக்கும் மேற்கோள்கள் மட்டுமல்ல சுவாமி விவேகானந்தர், அதையும் தாண்டி அவருடைய ஆளுமையின் வீச்சை புரிந்துகொள்ள இந்த நூல் நமக்கு உதவக்கூடும். 

சகோதர சகோதரிகளே 
சுவாமி விவேகானந்தர் 
ஆன்மிகம், தமிழ் 
ஸ்ரீ ராமகிருஷ்ண மடம்

Monday, June 12, 2017

குழந்தைகளும் குட்டிகளும் - ஒல்கா பெரோவ்ஸ்கயா

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

அப்பாவை பற்றிய நினைவுகள் என்று சில புகைமூட்டமான பிம்பங்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றன. எனது எட்டாவது வயதில் அவர் எங்களை விட்டு பிரிந்தார். அப்பாவை பற்றிய நினைவுகளை மீட்பது இன்றும் எனக்கொரு மிகப்பெரிய சிக்கல். அசல் நினைவுகளும் புகைப்பட- செவிவழி செய்தி கற்பனைகளும் இணைந்து ஒரு பிம்பத்தை உருவாக்கி விட்டது. அப்பாவின் நினைவுகளை மீட்க முயலும் போதெல்லாம் நினைவில் தவறாமல் வரும் நபர்கள், அவர் வளர்த்த ஜான்சியும், டாக்கியும், ப்ரூசியும், முயல்களும், புறாக்களும், கிளிகளும், மீன் தொட்டியும் தான். 


டாக்கியும் ப்ரூசியும் போமேரனியன் நாய் குட்டிகள். டாக்கி நோய்மை பட்டு மரண தருவாயை நெருங்கிக்கொண்டிருந்த சமயத்தில், அதை காண சகிக்காமல் அப்பா அதை முப்பது கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள முந்திரி காட்டில் விட்டுவிட்டுவந்தார். அழுது கொண்டே இருந்தேன். ஓரிரு நாட்களுக்கு பின்னர் காலை எழுந்து வீட்டு வாசலுக்கு வந்த போது டாக்கி அங்கு படுத்திருந்தது. வயிறு மட்டும் சீறுவதும் ஒடுங்குவதுமாக இருந்தது. வாயிலிருந்து மஞ்சள் நிற வலனை. டாக்கி மரணத்தை தழுவுவதற்காக முப்பது கிலோமீட்டருக்கு அப்பாலுள்ள வீட்டு வாயிலை வந்தடைந்தது. ஜான்சி நான்கடி உயரத்திற்கு வளர்ந்த கொடுஞ்சிவப்பு கண்களும் காரிருள் திருமேனியும் கொண்ட டாபர் மேன் நாய், அப்பா சாய்வு நாற்காலியில் சாய்ந்து அமரும் அமைதியான அந்திப் பொழுதுகளில் இரண்டு கால்களை அப்பாவின் தோளில் புதைத்துக்கொண்டு சாய்ந்து உறங்கும் ஜான்சியின் சித்திரம் அப்பாவின் பிம்பத்துடன் பின்னி பிணைந்தது. அப்பாவின் மரணத்திற்கு பின்னர் ஒரு வாரம் உண்ணா நோன்பு இருந்து உன்னத நிலையை எய்தியது. நான் இப்போது எந்த பிராணிகளையும் வளர்ப்பதில்லை, மூர்க்கமான தூய அன்பை வெளிப்படுத்தும் அந்த ஜீவன்களின் பிரிவு நினைவெனும் பெரும் சுமையை கிடத்தி விட்டு செல்கின்றன.     

ஒல்கா பெரோவ்ஸ்கயா எழுதிய குழந்தைகளும் குட்டிகளும் எனும் நூலை வாசித்து முடித்த போது அப்பாவின் நினைவுகளும், சக ஜீவன்களுடன் நான் கழித்த பால்ய காலம் பற்றிய நினைவுகளும் கிளர்ந்து எழுந்தன. ஒல்காவின் இந்த நூலில் அவரது இளமை கால நினைவுகளை நம்முடன் பகிர்கிறார். அவர் குடும்பத்துடன் வளர்ந்த வளர்ப்பு பிராணிகளை பற்றி எழுதுகிறார்.

என்னிடம் உள்ள புத்தகம் 1976 ஆம் ஆண்டு ருசிய பதிப்பகமான முன்னேற்ற பதிப்பகத்தால் அச்ச்சிடப்பட்டுள்ளது. வழவழப்பான தாளில் அழகான ஓவியங்களுடன் புத்தம் புதிய புத்தகம் போல் மிளிர்கிறது. ருசிய எழுத்தாளர் ஒல்கா, எழுதியதை தமிழில் மொழிபெயர்த்துள்ளார் ருக்மிணி. கசாக்கிஸ்தான் அல்மா- அத்தா பகுதியில் இளமை காலத்தை கழித்த ஒல்கா, ‘எனது அருமை தாய் தந்தையரின் மங்காத நினைவுக்கு அஞ்சலியாய் இந்தப் பிள்ளை பருவ மனப்பதிவுகளை அர்ப்பணிக்கிறேன்’ என்று எழுதுகிறார். சிறுவர் இலக்கியத்தில் ஒல்காவிற்கு மிக முக்கியமான இடமுண்டு. ருசிய அரசியலின் களையெடுப்பு காலகட்டத்தில் இவரும் சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டார் என்று இவரை பற்றிய விக்கி பக்கம் தெரிவிக்கிறது.  

ஒல்காவும் அவருடைய சகோதரிகளும் வளர்க்கும் குட்டிகளை பற்றியது தான் இதிலுள்ள ஆறு அத்தியாயங்கள். ஆறு அத்தியாயங்களும் வெவ்வேறு பிராணிகளை சூட்டுகின்றன. ஈஷ்கா – மீல்க்கா கழுதைகளும், சுபாரி எனும் குதிரையையும் வேண்டுமானால் நாம் வளர்ப்பு பிராணிகள் என கூறலாம். தியான்காவும், தோம்ச்சிக்கும்- இரண்டு ஓநாய்கள், மீஷ்கா- ஒரு மறால் மான், வாஸ்கா- ஒரு புலி, பிராந்திக்- ஒரு நரி- இவைகளை வழமையான வளர்ப்பு மிருகங்கள் என ஏற்றுக்கொள்ள முடியாது என்றே எண்ணுகிறேன்.  ஒவ்வொரு அத்தியாத்தையும் தனித்தனி சிறுகதையாக கொள்ளலாம். அல்லது ஒட்டுமொத்தமாக நினைவு குறிப்பாகவும் வாசிக்க இடமுண்டு. சில போது அம்சங்களை கவனிக்க முடிந்தது- காட்டு விலங்குகளை பொறுத்தவரை, ஒவ்வொரு குட்டியும் மனிதர்களுடன் பழகுவதில் தொடக்க்கத்தில் மிகுந்த தயக்க உணர்வு கொண்டவையாக இருக்கின்றன. உணவு வழங்கும் கரங்களையே அவைகள் முதலில் நேசிக்க தொடங்குகின்றன. மீஷ்கா எனும் மானுக்கு ஒல்காவின் அன்னை பாத்திரத்தில் பாலூற்றிவிட்டு விரல்களை சப்பக்கொடுப்பார், மெல்ல விரல்களை பாலுக்குள் இறக்கி அதற்கு உணவூட்டுவார். மனிதர்களுடன் பழக தொடங்குகின்றன, நேசிக்க பழகுகின்றன. அவைகளின் இயல்பு குணங்கள் வெளிப்படாமல் இருப்பதுவரை எந்த சிக்கலும் இல்லை. அவைகளின் இயல்பு குணங்கள் வெளிப்படும் போது, மனிதன் அவைகளை ரசிப்பதில்லை. அதை தொடர்ந்து கண்டிக்கிறான். அந்த கண்டனங்களை அவைகள் சிலவேளையில் மிக மூர்க்கமாக எதிர்கொள்கின்றன, சில வேளைகளில் குற்ற உணர்வில் கூனி குறுகுகின்றன. ஒரு எல்லைக்கு மேல், அது அவர்களுடன் வாழ முடியாத நிலைக்கு வரும்போது மரணத்தையோ அல்லது பிரிவையோ எதிர்கொள்கின்றன. எஞ்சி இருப்பது அவைகளை பற்றிய அன்பான நினைவுகள் மட்டுமே. 

மற்றொரு முக்கியமான கோணம், காட்டு விலங்குகளின் மீது அன்பிருந்தாலும், அவைகள் காட்சி பொருள்கள் தான். நரி வளர்ப்பதும், புலி வளர்ப்பதும், ஓநாய் வளர்ப்பதும் அவர்களுக்கு கொஞ்சம் பெருமை அளிக்கலாமே தவிர அவைகளால் அவர்களுக்கு பெரிய பயனேதும் இல்லை. ஒல்கா கழுதைகள் மீதும் சுபாரி (குதிரை) மீதும் அளவுகடந்த நேசம் கொண்டிருந்ததாக சொல்வதற்கு இது காரணமாக இருக்கக்கூடும். முட்டைகளை பதுக்கும் நரி, உண்டவுடன் பெருத்த வயிறுடன் செரிமானத்திற்காக தரையில் உருளும் ஓநாய், பனிச்சரிவை முன்னரே கண்டுகொண்டு பயணத்தை தவிர்க்கும் குதிரை என பிராணிகளை பற்றிய மிகக்கூரிய அவதானிப்புகள் புத்தகம் முழுவதும் நிரம்பி வழிகின்றன. அதேப்போல் வைன் அருந்தி உறங்க செல்லும் ஓநாய், மாமிச உருண்டைகளை உண்ணும் குதிரை, துண்டு பீடிகளை விரும்பி உண்ணும் மான், ஆல்பகொரா பழங்களை விரும்பி உண்ணும் ஓநாய், தலை முடி முழுவதும் எச்சில் படுத்தி சிகை அலங்காரம் செய்யும் புலி என அவர் அறிந்த விலங்குலகின் சில விநோதங்களையும் படம்பிடித்து காட்டுகிறார் ஒல்கா.      
தியான்காவும் தோம்சிக்கும் ஒல்காவின் தந்தையால் வேட்டைக்கு சென்ற இடத்திலிருந்து கொண்டு வந்து பரிசளிக்கப்பட்ட இரண்டு ஓநாய் குட்டிகள். தொடக்கத்தில் பழக தயங்கும் குட்டிகள் பின்னர் மெல்ல குழந்தைகளுடன் விளையாட தொடங்குகின்றன. நாய்களுடன் நட்புறவு கொள்கின்றன. வேறு வீடுகளில் சென்று கோழி பிடிக்கும் போது தோம்ச்சி சுடப்படுகிறது. தியான்கா போலீஸ் நாய்கள் குழுவில் கொண்டு விடப்படுகிறது. தியான்கா ஒரு பெண் நாய் என்றே கருதப்படுகிறது. தியான்கா ஓநாய்க்கும் – வூல்ஃப் போலீஸ் நாய்க்கும் பிறந்த வாரிசுகள் தலை சிறந்த நாய்கள் என அணிவகுப்பில் அங்கீகரிக்கப்படுகின்றன. மீஷ்கா துள்ளி குதித்தோடும் மான், கண்டதையும் மென்று தின்னும் பழக்கம் அதற்கு உண்டு. மெல்ல குருதியோடும் இரு மொட்டுக்கள் முளைத்து கொம்பாகிறது. கொம்புடைய சமயத்தில் மீஷ்காவின் நடத்தை முற்றிலும் வேறுவகையாக மாறிவிடும். இறுதியில் ஒரு பெரும் கலைமான் கூட்டத்துடன் தன்னை கரைத்துக்கொண்டது. 

குழந்தைகள் காசு சேர்த்து சந்தைக்கு சென்று தங்களுக்காக ஒரு பெண் கழுதையை வாங்கி வந்தனர். அது தான் ஈஷ்கா. குளிப்பதென்றால் ஈஷ்காவிற்கு சுத்தமாக பிடிக்காது. “தக்கடா பிக்கடா” நடை நடக்கும் ஈஷ்காவின் மீது சவாரி செய்தனர் குழந்தைகள். ஈஷ்கா ஈன்ற முதல் குட்டி இறந்துவிடுகிறது. அதன்பின்னர் அதற்கு பிறந்த குட்டி தான் மீல்க்கா. வேட்டைக்காரர் ஒருவர் தூக்கிக்கொண்டு வந்த குட்டிகளில் ஒன்றை ஒல்காவின் தந்தைக்கு பரிசளித்தார் அப்படி அவர்கள் இல்லம் புகுந்தது தான் வாஸ்கா. ஏனைய வேட்டை நாய்கள் குட்டியாக இருந்த போதே புலியை கண்டு அஞ்சி நடுங்கிய சூழலில் காட்டை பார்க்காத மாய்லிக் எனும் நாய் மட்டும் இயல்பாக வாஸ்காவுடன் பழகியது. யாரையும் தொந்திரவு செய்யாத சாது வாஸ்கா, பசித்தால் முற்றிலும் உக்கிரமாக மாறிவிடும். வாஸ்கா குழந்தைகளுக்கு ஒரு விளையாட்டு தோழன் ஆனது. பொம்மைகளை கவ்விக்கொண்டு ஓடும். குழந்தைகள் அந்த பொம்மைகளை மீட்பார்கள் மெல்ல வேலி தாண்டி வேட்டையாட தொடங்கியதும் சிக்கல் தொடங்குகிறது. ஒரு வேட்டை விலங்கு நம்முடன் இருக்கிறது எனும் பிரக்ஞை அப்போது தான் அவர்களுக்கு உதிக்கிறது. மிருக காட்சி  சாலைகளுக்கு மிருகங்களை விற்கும் வியாபாரியிடம் வாஸ்கா கொடுக்கப்படுகிறது. அந்த பிரிவு வாஸ்காவிற்கும் சரி குழந்தைகளுக்கும் சரி அப்பிரிவு கொடுமையாக இருந்தது. கூண்டுக்குள் அடைபட்ட வாஸ்கா, நன்றாகவே கவனிக்கப்பட்டது.  அவ்வப்போது குழந்தைகள் சென்று பார்த்துவிட்டு வருவார்கள். கூண்டுக்குள் அடைபட்டு பிரிவின் தவிப்பில் வாடிக்கொண்டிருந்த புலி ஒருநாள் இதைய கோளாறால் மரணமடைகிறது. 


சுபாரி எனும் குதிரை பற்றிய நினைவுகளையே இந்த நூலின் சிறந்த பகுதி என கூறலாம். சுபாரி கடுமையான குளிரில் தன் எஜமானருக்கு அடிபணியாமல் தன்னுயிரை பணையம் வைத்து அவரை காத்தது. மூன்று நாள் பனிப்பொழிவின் இடையில் சிக்கி உயிர்பிழைத்து மீண்டு வருகிறது. குழந்தைகளின் பராமரிப்பில் மரணத்தருவாயில் இருந்து மீண்டு எழுகிறது. குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிசெல்வதும், அவர்களை வண்டியில் இழுத்துக்கொண்டு சந்தைக்கு செல்லவும் அந்த உயர்ந்த குதிரை பயன்பட்டது. சுபாரியில் இருந்து குழந்தைகள் பலமுறை விழுந்து காயப்பட்டாலும், அவர்கள் ஒரு போதும் சுபாரியை அதற்காக குறை சொன்னதில்லை. இறுதியில் செயலிழந்து சுபாரியும் மரணத்தை தழுவுகிறது.   

    
கதைகளின் முக்கிய பாத்திரங்களான வளர்ப்பு பிராணிகளை தவிர்த்து மாய்லிக் எனும் நாய், கினோ தாய் எனும் குதிரை போன்றவைகளின் ஆளுமைகளும் ஆங்காங்கு வெளிப்படுகின்றன. நான்கு சகோதரிகளில், வயதில் மூத்த சகோதரிகளான ஒல்கா- சோன்யா மற்றும் இளைய சகோதரிகளான நத்தாஷா- யூலியா ஆகியவர்களுக்குள் இருந்த நெருக்கத்தையும், பிணைப்பையும் உணர முடிந்தது. கழுதையின் மீதிருந்து கீழே விழும் யூலியா பிறர் கேலியில் இருந்து தப்பிக்க சொல்லும் காரணம் “மேலிருந்து கீழே விழும்போது அப்படியொன்றும் வலிக்காது, ஏனென்றால் காற்று நம்மை தாங்கி பிடிக்கும்.” குழந்தைகளின் உலகில் மட்டுமே செயல்படக்கூடிய மாய விதிமுறைகள், பெரியவர்களுக்கு புரியாத தர்க்கங்கள் இருக்கக்கூடும் போல. குழந்தை பருவத்து காயங்கள் ஆருவதே இல்லை. இன்றும் நம்முடலில் எஞ்சி இருக்கும் ஏதோ ஒரு தழும்பு வழியாக அன்றைய தினத்து குறும்பின் நினைவுகள் வழிந்துகொண்டிருக்கின்றன.  கசாக்கிஸ்தான் பகுதிகளின் கால சுழற்சியை பற்றியும் இயற்கை வளங்களை பற்றியும் அற்புதமான விவரணைகளை அளிக்கிறார். அரசியல் சீற்றங்களில் பொங்கிக்கொண்டிருந்த ஒரு தேசத்தின் கொந்தளிப்பான காலகட்டங்களை கடந்து வாழ்ந்த ஒல்கா (1902-61), சிறுவர் சிறுமியர் பங்குபெறும் ஒரு மே தின அணிவகுப்பை தாண்டி எந்த சிறிய அரசியல் அசைவையும் பதிவு செய்யவில்லை.  ஒவ்வவொரு கதையை பற்றி இன்னும் கூட நுண்மையாக எழுத வேண்டும். 

மனிதன் vs மிருகங்கள், அல்லது மனிதன் vs இயற்கை என நாம் சந்திக்கும் முரண்பாடுகளை பற்றிய சிந்தனைகளை கிளருகிறது. சுவாமி விவேகானந்தர்,  மனிதன் இயற்கையை வென்றாக வேண்டும். இத்தனை நூற்றாண்டுகளாக மானுட வரலாறு என்பதே இயற்கையுடனான போராட்டம் தான் என்கிறார்.  காந்தி நேரெதிராக வேறொன்றை சொல்கிறார். இயற்கை ஒவ்வொரு மனிதனின் தேவையையும் பூர்த்தி செய்யும் வல்லமை கொண்டது, ஒரு போதும் எந்த ஒரு மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்ய அதனால் இயலாது என்கிறார். இந்த இரண்டு எதிரெதிர் கோணங்களிலுமே உண்மை இருப்பதாக நம்புகிறேன். இரண்டையும் முழுமையாக பின்பற்றுவது சாத்தியமா என்று தெரியவில்லை. இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையிலான ஒரு புள்ளி இருக்கக்கூடும், அதுவே இனி உலகை தழைக்க செய்யும் எனும் எண்ணம் வலுப்பெறுகிறது. அந்த மைய்ய புள்ளி என்பது வேளாண்மை சார்ந்த கிராம வாழ்க்கையாக இருக்கக்கூடும் என தோன்றியது. நாம் சாமானியமாக வளர்க்கும் நாய்களை பற்றியும், பூனைகளை பற்றியும், பசுக்களை பற்றியும் அவர் பேசவில்லை. ஓநாய், நரி, புலி, மறால் மான் ஆகியவைகளை பற்றி பேசுகிறார். வளர்ப்பு பிராணிகளுக்கு உரிய குணாதிசயங்கள் அற்ற இப்பிராணிகளை மனிதர்கள் எப்படி பழக்கி இயைந்து வாழமுடிகிறது? ஆதி மனிதன் இப்படித்தான் நாயையும், பசுவையும் பழக்கி இருப்பான் என்று தோன்றியது. ஒருவகையில் அவன் அப்படித்தான் இயற்கையை வெற்றிக்கொள்ள தொடங்கினான், ஆனால் அவன் அதன் மூலம் தான் இயற்கையுடன் இயைந்து வாழவும் தொடங்கினான். 



குழந்தைகளும் குட்டிகளும் 

ஒல்கா பெரோவ்ஸ்கயா
ருஷ்ய இலக்கியம்
சிறுவர் இலக்கியம்
தமிழ் மொழியாக்கம்

Sunday, June 11, 2017

குதிரைகளின் கதை - பா.ராகவன்


(ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய கட்டுரை)

சென்ற வருடம் காரைக்குடி புத்தக கண்காட்சியின்போது அகப்பட்ட புத்தகம் இது. பொதுவாக, வாங்க வேண்டும் என ஏற்கனவே இறுதி செய்து வைத்திருக்கும் புத்தகங்களைத் தவிர பிறவற்றை வாங்குவதற்குமுன் முன்னுரையை ஒரு இரண்டு நிமிடமாவது வாசிப்பேன். அப்படி வாசித்ததால் வாங்கிய புத்தகம்தான் பா.ராவின் 'குதிரைகளின் கதை'. குமுதம் ஜங்ஷன் இதழில் ‘காந்தி சிலை கதைகள்’ எனும் பெயரில் வெளிவந்த எட்டு சிறுகதைகளின் தொகுப்பிது. 





நான் வாசித்தவைகளுள் மிக சிறந்த முன்னுரைகளில் ஒன்றாக பா.ரா இந்த தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரையைச் சொல்வேன். காந்தி எனும் மனிதரை மிகுந்த அன்யோன்யத்துடன் அணுகும் குரல் இது. “இந்த கதைகளை பற்றி சொல்ல வந்தேன், கதாநாயகராகவும், துணை பாத்திரமாகவும் வெறும் சாட்சியாகவும் வழிப்போக்கராகவும் இன்னபிறவாகவும் இவற்றில் காந்தி வருகிறார். இந்த எல்லா கதைகளின் களனும் சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையை சுற்றிய பகுதியாக அமைந்து இருப்பது தற்செயல் அல்ல. நிலவை காட்டி சோறூட்டுவது போல சிலையை காட்டி கதை சொல்ல விரும்பியதன் வெளிப்பாடு அது,”- என்று மிக தெளிவாக இந்த தொகுப்பை பிணைக்கும் திரியைச் சுட்டுகிறார். உண்மையில் இந்த முன்னுரையின் உயரத்தை கதைகள் தொட்டிருக்கின்றனவா எனக்கேட்டால் ஆம் என்றும் சொல்வேன் இல்லையென்றும் சொல்வேன்.

ஆக, அப்பட்டமாகவும் பூடமாகவும் புனைவின் நிகழ்வுகளுக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பை பின் தொடரவேண்டும் எனும் சமிக்ஞையை நான் பற்றிக்கொண்டேன்.  இது தவறான வாசிப்பாக இருக்கலாம். ஆகவே இக்கதைகளின் வழியாக காந்தியைக் கண்டடைய முயற்சிக்கும் அதே வேளையில் கதை பயணிக்கும் பிற கோணங்களையும் முடிந்த அளவிற்கு கவனத்தில் கொள்ள முயற்சிக்கிறேன். விமர்சகர்களுக்காகவோ அங்கீகாரம் வேண்டியோ தான் எழுதவில்லை என்கிறார். இதுவரை (2004 ஆம் ஆண்டின் நிலை) தான் எழுதியவற்றுள் தனக்கு அபாரமான நிறைவளிப்பவை இக்கதைகள் என்று தன் முன்னுரையை முடிக்கிறார் பா.ரா. 

மனிதன் பெரும்பாலும் தன் பொருளியல் தேவைகளை பூர்த்தி செய்ய செக்குமாடாக உழைக்கிறான். படைப்பூக்கம் மறைந்து வெறும் இயந்திரம் ஆகிறான். தன் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இழக்கிறான். ஆழ்மனதில் அவை எவ்வித பயனுமற்றவை என்று உணர்ந்து, தன் அத்தனை ஆண்டுகால வாழ்க்கையும் பயனற்றது என்று சோர்வடைகிறான். அந்தப் புள்ளியில் அவனுக்குத் தேவை ஒரு பிடிப்பு. கற்பிதமாகவேனும் ஏதேனும் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமே அவன் அந்த நாளைய வாழ்க்கையை கடக்க முடிகிறது. இத்தகைய ஊன்றுகோல் எதுவும் இல்லாதவனின் தவிப்பை விவரிக்கும் கதை, ‘இருளின் நிறம் வெண்மை. 

கணக்கு வாத்தியார் மாசிலாமணிக்கு அவருடைய பணி நிறைவளிப்பதில்லை. கூட்டலையும் கழித்தலையும் தவிர அனைத்துமே அன்றாட வாழ்வில் அவசியமற்றவை, கற்பிப்பதும் வீண் என்று நினைக்கிறார். பணி ஓய்விற்கு பின்னர், ‘வாழ்வின் சாயங்கால’ பொழுதில்  இலவசமாக ஒயர் கூடை பின்னி அளிக்கும் தன் மனைவியை தனது பற்றுகோல் என கண்டுகொள்கிறார். ஆனால் அவளும் கைவிட்டு போகிறாள். காந்தி கையில் தடியுடன் நிற்கிறார். காந்திக்கு நாடு எனும் ஊன்றுகோல் இருந்தது போல் தன் மனைவிக்கும் வீடு எனும் ஊன்றுகோல் இருந்தது என்று எண்ணுகிறார். 

இந்த கதையை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய முதல் கேள்வி- கஸ்தூர்பா மரணத்தை காந்தி எவ்வாறு எதிர்கொண்டிருக்கக் கூடும்? காந்தியின் அந்திம கால சறுக்கல்களுக்கு காரணம் காந்தியும் தன் ஊன்றுகோலை தொலைத்ததுதானோ என்னவோ என்று தோன்றியது. இறுதியில், இந்த ஆசிரியர் தன்னிடம் பயின்ற மாணாக்கனைச் சந்திக்கும்போது தன் வாழ்விற்கும் பயனுண்டு என்று கண்டுகொள்கிறார். ‘கற்பதைக் காட்டிலும் கற்கும் அனுபவம் அல்லவா முக்கியம்’. இனியுள்ள தூரத்தைக் கடக்க அவருக்கொரு ஊன்றுகோல் கிடைத்து விட்டது.

ஒரு மரபு கவிஞன் தன் தந்தைக்காக காதலை துறக்கும் கதை, ‘பூக்களால் கொலை செய்கிறேன்’. பா.ராவின் இக்கதைகளில் காந்தி என்பதைத் தாண்டி வேறு சில பொது போக்குகளை அடையாளம் காண முடிந்தது. அவைகளில் மிக முக்கியமாக- தமிழ் சினிமா மற்றும் திராவிட அரசியல் மீதான மெல்லிய எள்ளல் அநேகமாக அனைத்து கதைகளிலுமே ஒரு தீன ஸ்வரமாக ஒலிப்பதை கேட்க முடிகிறது. ஒருவகையில் அது பா.ரா. டச் என்றும் சொல்லலாம். இக்கதையிலும் அவைகளுக்கு குறைவில்லை. 

காந்தி இக்கதையில் ஒரு காவல்காரர் போல் நிற்கிறார் என்று எண்ணுகிறான் கவிஞன். ஒருவகையில் காந்தி காவல்காரர்தான். மதமாற்றம் செய்துகொண்டால் திருமணத்திற்கு ஒப்புதல் எனும் நிபந்தனை அவனை நோக்கி முன்வைக்கப்படும்போது, காந்தியை தன் தந்தையின் இடத்தில் வைத்து சிந்திக்கிறான். அந்த முடிவிலிருந்து காந்தி அவனை காக்கிறார். 

காந்தியைப் பழிவாங்க எண்ணி மதம் மாறிய ஹரிலாலின் நடத்தை அவரை ஆழமாக புண்படுத்தியது என்பதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ஒருவேளை ஹரிலால் காதலுக்காக, அன்பிற்காக, மதம் மாறி இருந்தால் அதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது.  

ஒரு வாசகனாக இத்தொகுப்பில் எனக்கு மிக நெருக்கமான கதைகள் என்று இரண்டைச் சொல்லுவேன்- 'கூறாமல் சன்னியாசம்' மற்றும் 'குதிரைகளின் கதை'. தந்தை இடத்தில் இருக்கும் அண்ணன், அவனுக்குப் பொருந்தாத அழகு கொண்ட அண்ணி. அண்ணியின் அழகால் ஏற்பட்ட தாழ்வுணர்வை அவன் தன் தம்பியுடன் பகிர்ந்து கொள்கிறான். தன் திசையை தானே தீர்மானிக்கும் நதியாக இருக்க வேண்டும் அல்லது திடமான கரையாக இருக்க வேண்டும், இரண்டும் இல்லையென்றால் காலம்தோறும் கரை தொட முயலும் படகாக நதியின் போக்கில் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான். தன் அண்ணனின் அச்சம் அவனை உறுத்துகிறது. ஒரு அடர் மழை மாலையில் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பௌத்த துறவி ஆகிறான். அவன் ஏன் துறவியானான்? அண்ணனின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அவனுடைய துறவை எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டது? மிக நுட்பமாக பா.ரா அதைக் காட்டி செல்கிறார். துறவுக்கு வீட்டை விட்டு புறப்படும் பெருமழை நன்நாளில் காந்தியின் மேலிருந்த எச்சங்கள் கழுவப்படுவதை பார்க்கிறான். தன் எச்சங்களை கழுவத் துடித்த அந்த மழைக்காக காந்தியை போல் அவனும் காத்திருந்தான் போலும். 

'மூன்று காதல்கள்' கதையில் இரண்டு காதல்கள் போலீஸ் பெருமாள்சாமியின் தங்கைகளுடையவை. மூன்றாவது காதல்? பாகிஸ்தான் பிரிவினையின் நியாயத்தை காந்தியின் பார்வையில் சொல்ல முற்படும் மாய யதார்த்த பாணியிலான கதை. காந்தி சிலை கதைகள் எனும் தொகுப்பிற்காக எழுதப்பட்ட கதை எனும் எண்ணம் தோன்றியது. நேரடி பிரசார நெடியையும் ஒருவர் உணரக்கூடும் என்றாலும் இக்கதையில் பெருமாள்சாமிக்கும் கிழவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்கள் எனக்கு உவப்பானதாகவே இருந்தன. பாகிஸ்தான் பிரிவினையின் போதிருந்த காந்தியின் மனநிலையை சாமானிய வாசகர் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும். 

தோல்வியின் நிழலில் தூக்க மாத்திரை உட்கொண்ட ஒருவன் காந்தியின் அண்மையில் மீண்டெழும் கதை, “யுவர்ஸ் ஒபிடியன்ட்லி”. “சாவறது சுலபம் ராசா. இஷ்டம் இல்லாத  சட்டையை தூக்கிப் போடறது மாதிரிதான். வாழ்றதுதான் கஷ்டம். கிளியறுதுக்கே காத்திருக்குற சட்டை அது. தச்சி, தச்சி போடணும். தச்சது தெரியாம தைக்கிறதுதான் நமக்கிருக்கிற சவால்” என்று வாழ்வின் ரகசியத்தை ஒரு நாடகீய தருணத்தில் அவனுக்கு உணர்த்துகிறாள் குறி பார்க்கும் கிழவி. காந்தி காணாத தோல்வியல்ல. தொடக்கத்தில் அவர் மும்பையில் பாரிஸ்டராக தோல்வியடைந்தவர்தான். ஆனால் எங்குமே முட்டி நின்றுவிடவில்லை. 'தன் படை வெட்டி சாதல்'  மத கலவரங்களால் அன்று நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மனமுடைந்து போனாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் முயன்றார். காந்தியை நான் மிக நெருக்கமாக உணர்வது அந்த புள்ளியில்தான்.  

பெரும் கனவுகள் சுமந்து திரியும் மனிதர் ஒருவர் நிர்பந்தத்தின் பேரில்  தன் கனவுகளைப் புதைத்து, பொருளாதார பாதுகாப்பிற்காக செயலின்மையின் நிழலில் நின்று காலமெல்லாம் குற்ற உணர்வுடன் வாழ்வை கழிக்கும் நிலை கொடூரமானது. அத்தகைய ஒரு நிலையை உணர்த்தும் கதை, “வாசல் வரை வந்த கனவு”. நீதிபதி கிருஷ்ணசுவாமி தந்தையின் கனவைத் தாங்கி செல்ல தன் கனவை துறந்தவர். விடுதலை போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பியவர். ஆனால் அவரின் தந்தை அன்று எரிந்த விடுதலை வேட்கை தீயில் மகன் காணாமல் போய்விடக்கூடாது என்று அஞ்சுகிறார். 

இரண்டு சரிகளில் எதை, ஏன் நாம் தேர்ந்தெடுக்கிறோம்? நம் மன பலவீனங்களுக்கு ஏதுவாக உள்ள சரியையே மனம் பற்றிக்கொள்கிறது என்று நான் நினைக்கிறேன். எத்தனையோ நிகழ்வுகள் என்னை இன்று அசைத்துப் பார்க்கின்றன. அவைகளுக்கு எதிராக பகிரங்கமாக எனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என மனம் குமுறும், ஆனால் இறுதியில் அதற்கான துணிவின்றி பின்வாங்கிவிடுகிறேன். வயதேற வயதேற இளமையின் நிராசைகள் மட்டுமே எஞ்சி பூதாகர உருவெடுத்து நம் துயராக மாறுமோ என்னவோ.  

இத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என நான் கருதும் மற்றொரு கதை- 'குதிரைகளின் கதை'. கதையில் முத்துப்பாண்டி ஒரேயொரு குதிரையை வைத்துக்கொண்டு மெரீனா கடற்கரையில் பிழைப்பு நடத்துகிறான். ஒருவகையில் அவன் நேசித்த மீனாட்சியும் ஒரு குதிரைதான். தந்தையிடம் இருந்த குதிரை முத்துபாண்டிக்கு வருகிறது. முத்துபாண்டி விரும்பிய மீனாட்சி தந்தையுடன் சேர்ந்துக் கொள்கிறாள். “மேலும் காலம் தப்பிய காலத்தில் அதன் இருப்பு கூடுதலாகச் சில விஷயங்களை ஞாபகப்படுத்தக் கூடியது. இழந்த தொன்மங்களின் ஆர்வமூட்டும் முரட்டு நெடி அவற்றில் முக்கியமானது” என்று குதிரைகளை பற்றி எழுதுகிறார் பா.ரா. காந்தி சிலைகூட, காந்தியும்கூட காலம் தப்பிய காலத்தில் நின்று கொண்டு இழந்தவற்றின் முரட்டு நெடியை நமக்கு உணர்த்துபவர்தான். 

இத்தொகுப்பில் உள்ள குறிப்பிடத்தக்க பொது அம்சம், கடந்த காலத்தின் மீதான ஏக்கங்கள் மீண்டும் மீண்டும் இக்கதைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொன்மத்தின் குறியீடாக நிற்கும் குதிரைகளைப்போல், பிளாஸ்டிக் யுகத்தில் எஞ்சி இருக்கும் ஒயர் கூடைகளை போல், பங்கெடுக்க முடியாத விடுதலை போராட்டம் போல். காந்தியும்கூட கடந்த காலத்தின் நிழலாகவே இக்கதைகளில் தென்படுகிறார். எனினும் நிகழ்காலத்து சிக்கல்களில் ஒரு படிமமாக அல்லது குறியீடாக காந்தி இக்கதைகளில் வருகிறார். 

“புலவர் ஷேக்ஸ்பியர்” அறுபது எழுபதுகளின் காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் வாத்தியாரின்(ர்களின்) கதை. நேரடியாக விவரிக்கப்படவில்லை என்றாலும் திராவிட அரசியல் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவைகளையே இக்கதை சுட்டுகின்றது. குடும்பத்தையும் அரசியல் ஆசைகளையும்  சமன்படுத்த முயன்று குடும்ப நலனுக்காக அரசியலை விட்டு ஒதுங்கியவரின் கதை. காந்தி ஒட்டுமொத்த குடும்பத்தையே அரசியலில் இறக்கியவர். தேச நலனுக்கும் குடும்ப நலனுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று கருதியவர். இக்கதையும் சரி, 'வாசல் வரை வந்த கனவை'யும் சரி, வாசிக்கும்போது 'இன்றைய காந்தி' நூலில் ஜெயமோகன் எழுதிய வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது. காந்தி ஒரு மோசமான தந்தை எனும் விமர்சனத்திற்கான பதில் என இதை கொள்ளலாம்- மோசமான’ தந்தைகளால் உருவாக்கி நமக்களிக்கப்பட்ட இந்த நாடு ‘மிகச்சிறந்த’ தந்தைகளால் இன்று சீரழிக்கப்படுகிறது என்பதல்லவா உண்மை? நமது யுகம் அயோக்கியத்தனத்தை அரியணையில் அமர்த்தி மகத்தான தியாகங்களில் குறைகண்டுபிடிக்கிறது இல்லையா? 

ஒட்டுமொத்தமாக இந்த எட்டு கதைகளின் வழியாக வாழ்வை வெவ்வேறு கோணங்களில் நமக்கு காட்ட முயன்றிருக்கிறார் பா.ரா., அதனூடாக காந்தியையும்கூட. குமுதம் ஜங்ஷன் இதழ் என்பதாலோ என்னவோ  குறிப்பிட்ட ஒரு "டார்கெட் ஆடியன்ஸ்" நோக்கி எழுதப்பட்ட கதைகளாக சில நேரங்களில் தென்பட்டது. பாராவின் மிகப்பெரிய பலம் அவருடைய மொழி நடை. அங்கதம் வெகு இயல்பாக அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அதை மட்டும் கணக்கில் கொண்டால் கதையின் ஆழத்தையும் அடர்த்தியையும் நாம தவறவிடக்கூடும். 

குதிரைகளின் கதை 
பா.ராகவன்
சிறுகதைகள், தமிழ்
கிழக்கு வெளியீடு 

Friday, June 9, 2017

சர்வாதிகாரத்திலிருந்து மக்களாட்சியை நோக்கி...- ஜீன் ஷார்ப்


(ஆம்னிபஸ் தளத்தில் எழுதிய கட்டுரை)

சீனத்து கிராமத்தில் ஒருவன் வாழ்ந்து வந்தான். அவனை “குரங்கு தலைவன்” என்று மக்கள் அழைத்தனர். பழக்கப்பட்ட குரங்கு கூட்டம் ஒன்று அவனுடைய கட்டுப்பாட்டில் இயங்கியது. குரங்குகள் தினமும் அணிவகுத்துக் காட்டுக்குச் செல்லும். அங்கு கிடைக்கும் பழங்களில் பத்து சதவிகித பழங்களை ஒவ்வொரு குரங்கும் தன் தலைவனுக்கு அளிக்கும். ஒரு நாள் அந்த குழுவில் இருந்த இளைய குரங்கொன்று கேள்வி எழுப்பியது “ நாம் ஏன் அவனுக்குப் பங்களிக்க வேண்டும்? நாமே உண்ணக்கூடாதா? நாம் ஏன் அவனுக்குக் கட்டுப்பட வேண்டும்?” சடாரென்று அனைத்து குரங்குகளும் விழிப்படைந்தன. அன்றிரவே கொட்டடியை நாசப்படுத்தி தப்பிச் சென்று தங்களுக்கென ஒரு வாழ்க்கையைத் தேடிக்கொண்டன. அரசியல் அதிகார சமன்பாடுகளை விளக்கும் ஜீன் ஷார்ப்புக்குப் பிடித்த சீன நாட்டுப்புற கதை இது.




ஜீன் ஷார்ப் அமெரிக்காவில் வாழும் மிக முக்கியமான சமூக ஆய்வாளர். உலகளாவிய மக்கள் போராட்டங்களை பற்றி பல தளங்களில் ஆய்வு செய்து வருபவர். இத்துறையில் ஒரு முன்னோடி என கொண்டாடப்படுபவர். காந்தியின் இன்றைய அரசியல் முக்கியத்துவம் குறித்து ஷார்ப் எழுதிய கட்டுரையே நான் முதன்முதலாக வாசித்த அவருடைய எழுத்து என சொல்லலாம். காந்தியை அவர் “வன்முறையற்ற போர்” யுத்திகளை அறிவியல் பூர்வமாக வளர்த்தெடுக்க முயன்ற முன்னோடி ஆளுமை என கருதுகிறார். 

'சர்வாதிகாரத்தில் இருந்து மக்களாட்சியை நோக்கி' – எனும் இந்த சிறிய புத்தகம் (இதை புத்தகம் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை, சற்றே பெரிய துண்டு பிரசுரம் என்றுகூட சொல்லலாம்) உலகெங்கிலும் பல மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அண்மைய காலத்து அரேபிய கிளர்ச்சிகளிலும் அதற்கு முன்னர் நடந்த வேறு பல போராட்டங்களிலும் இந்த நூல் வலுவான தாக்கம் செலுத்தியதாக அறிகிறோம். மனிதர்கள் அடிமைப்படுத்தப்பட்டு அழியக்கூடாது எனும் எண்ணத்தின் காரணமாகவே இது குறித்து பல ஆண்டுகளாக சிந்தித்து எழுதிவருவதாக ஷார்ப் தெரிவிக்கிறார். 

ஒடுக்குமுறைகளில் இருந்தும் சுரண்டல்களில் இருந்தும் மக்களை மீட்பதைத் தம் நோக்கங்களாகச் சொல்லிக் கொள்ளும் சர்வாதிகார அமைப்புகளும் அதிகாரத்தை அடையும்போது அதையே நிகழ்த்துகின்றன எனும்போது விடுதலை இயக்கங்கள் தனிமனித சுதந்திரத்தைப் பெற்றுத் தர முடியுமா என்ற கேள்வியின் தீவிரம் நம்மை அச்சுறுத்துகிறது. இந்த அச்சத்துக்கு இந்நூல் ஒரு தீர்வை முன்வைக்கிறது.  ஷார்ப் சுட்டும் புள்ளி விவரங்கள் நமது வழமையான நம்பிக்கைகளை அசைத்துப் பார்க்கக்கூடும் - அண்மைய ஆண்டுகளில் உலகெங்கும் அகிம்சை போராட்டங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகின்றன என்கிறார் இவர். சமீபத்தில் சொல்வனம் இதழில் நரோபா எழுதிய அகிம்சையின் வெற்றி எனும் கட்டுரை சுட்டும் எரிக்கா செனோவேத் எழுதிய புத்தகம் ஏறத்தாழ ஷார்ப்பின் பார்வைகளை வலுவாக்கும் ஆய்வு ஆதாரங்களை அளிப்பதாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. 

தனது நாற்பதாண்டு கால அனுபவங்களை கொண்டு எழுதப்பட்ட ஒரு ஆராய்ச்சி நூல் என்பதால் இதை முழு கவனத்துடன் வாசிக்க வேண்டும் எனக் கோருகிறார் ஷார்ப்.

.

முற்றதிகார அரசை எப்படி எதிர்ப்பது? முதலில், ஏன் எதிர்க்க வேண்டும்? அரசதிகாரம் எதைச் சார்ந்து நிற்கிறது? - இது போன்ற மிக முக்கியமான கேள்விகளுடன் தொடங்குகிறார் ஷார்ப். ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியையும் ஒரு எச்சரிக்கையுடன்தான் முடிக்கிறார் இவர் - சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டம் என்பது ஒன்றும் அத்தனை சுலபமல்ல. பல இழப்புக்களைச் சந்திக்க நேரிடும். ஒரே இரவில் அத்தனையையும் சாதித்துவிட முடியாது. ஆனால் முற்றிலும் நம்பிக்கை இழக்க தேவையில்லை. 

ஷார்ப் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் ஒவ்வொரு முறைமையையும் பரிசீலிக்கிறார். ராணுவ சதி மூலம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும்போது ஒரு சர்வாதிகாரி மறைந்து மற்றொருவர் அந்த இடத்தை அடைவதே வரலாறு. மிக உயர்ந்த நோக்கத்துடனும் தீரத்துடனும் ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய பல மனிதர்கள் போற்றுதலுக்கு உரியவர்கள்தான் எனினும் வன்முறை விடுதலை பெற்றுத் தருவதில்லை என்கிறார் ஷார்ப். ஆயுதமேந்திய போராட்டம் ஆளும் தரப்பிற்கு எல்லையற்ற வன்முறையைப் பிரயோகிப்பதற்குத் தேவையான தார்மீக உரிமையை அளித்துவிடுகிறது என்கிறார் அவர். பெரும்பாலும் இத்தகைய ஆயுதமேந்திய போராட்டங்கள் முன்னைக் காட்டிலும் அதிக சேதாரத்தை விளைவிக்கின்றன என்று தன் பார்வையை ஆதாரங்களுடன் இந்நூலில் முன்வைக்கிறார். 

முற்றதிகார அரசின் முழு பலம் அதன் ராணுவமும் ஆயுதங்களும்தான், வன்முறையைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்தரப்பின் பலவீனத்துடன் மோதாமல் பலத்துடன்தான் மோதுகிறோம். கொரில்லா முறை போர்கள் மூலம் அரசை மாற்றுவது சுலபமல்ல, அப்படியே அது நிகழ்ந்தாலும் முந்தைய ஆட்சியைக் காட்டிலும் அதிக அடக்குமுறையையே புதிய ஆட்சியாளர்கள் கையாள்வார்கள் என்கிறார் அவர். ஷார்ப் இதற்குச் சுட்டும் காரணம் முக்கியமானது. 

சர்வாதிகார அரசுகள் அரசு சார்பில்லாத எந்த அமைப்புகளையும், அவை மத அமைப்புகளாக இருந்தாலும் சரி, எளிய சமூக சேவை அமைப்புகளாக இருந்தாலும் சரி, அவைகளை வளர விடுவதில்லை. மனிதர்கள் தனித்து விடப்படுகின்றனர். அநீதிகளுக்கு எதிராக மெல்லிய முனகல்கூட எழுப்ப முடியாத அளவிற்கு பலவீனர்களாகி விடுகின்றனர். நெருங்கிய உறவினர்களுடன், நண்பர்களுடன்கூட தங்கள் விடுதலை வேட்கையை அவர்களால் பகிர்ந்துகொள்ள முடிவதில்லை.  

ஆனால், மக்களாட்சியை நோக்கிய பயணத்திற்கும் மக்களாட்சி நீடிப்பதற்கும் அரசு சாரா அமைப்புகளின் வளர்ச்சி இன்றியமையாதது. அதிகாரத்தைக் கைப்பற்ற முற்படும் கொரில்லா அமைப்புகள் மைய அதிகாரத்தைப் பரவலாக்குவதை நோக்கமாகக் கொண்ட அரசு சாரா அமைப்புகளுக்கு எதிரானவைதான். அதிகார குவிப்பு கொண்ட மைய ராணுவ அரசையே தீவிரவாத அமைப்புகளால் அளிக்க முடியும். அரசு அதிகாரத்துக்கு வெளியே, மக்கள் குழுக்களாக திரளும் அமைப்புகள் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தனி நபர்களைக் காட்டிலும் குழு அடையாளத்தின் வழியாக மக்கள் ஒன்று திரண்டு ஒடுக்குமுறையை எதிர்க்க முடியும்.

பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கைகளின் பங்களிப்புகளை பற்றி ஷார்ப் கூறும் கருத்துக்கள் நம் கவனத்திற்கு உரியவை. கொள்கை அளவில் அடிப்படை முரண்பாடுகள் இல்லாதபோது சமரச பேச்சுவார்த்தைகள் உதவக்கூடும். சில சலுகைகளை கேட்டுப் பெறவும் உரிமைகளை நிலைநாட்டவும் உதவலாம். மனித உரிமை, சுதந்திரம், வழிபாட்டு உரிமை போன்ற அடிப்படை பிரச்சனைகள் நம் முன் நிற்கும்போது பேச்சுவார்த்தைகள் பயனளிக்காது என்கிறார் ஷார்ப். தம் தரப்பின் ஆதரவைப் பெருக்கி அதிகார குவிப்பைத் தகர்த்து அரசை தம் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வைப்பதே சரியான வழிமுறையாக இருக்கும் என்கிறார் அவர். 

விரும்பினால் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்ற நிலையில் ஒரு சர்வாதிகார அரசு தன் எதிர் தரப்பை சரணடையச் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் அதை சந்தேகத்துடன்தான் அணுக வேண்டும். அதில் ஏதோ ஆபத்து பொதிந்திருக்கிறது. ஒரு சர்வாதிகாரியின் மொழியில் அமைதி என்பது – ஒன்று சிறைசாலையின் அமைதி அல்லது கல்லறையின் அமைதியாகவே இருக்க முடியும் என்கிறார் ஷார்ப். சர்வாதிகாரிகள் நடத்தும் தேர்தல்கள் தங்கள் வெற்றியை தவிர பிறவற்றை அங்கீகரிப்பதில்லை.

சர்வதேச அமைப்புகள் மற்றும் வெளிநாட்டு தலையீடுகளை நம்பி எப்போராட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்கிறார் அவர். அப்படி ஒரு அன்னிய தேசம் ஏதோ ஒரு வகையில் உதவ முன்வந்தால் அதை ஐயத்துடன் அணுக வேண்டும். உள்ளிருந்து வலுவான எதிர்ப்பு அலைகள் எழாதபோது வெறும் சர்வதேச குறுக்கீடுகள் எதையும் சாதித்திட முடியாது. உள்ளிருந்து எழும் போராட்டங்களுக்கு பக்கபலமாக வேண்டுமானால் அவர்கள் இருக்கக்கூடும்.  

மிக முக்கியமாக, அகிம்சை போராட்டங்கள் வெகு காலம் நீடிப்பவை எனும் நம்பிக்கையை உடைக்கிறது இந்த நூல். ஆனால் உரிய சூழல் உருவாக பல ஆண்டுகள் ஆகலாம். உண்மையான போராட்டகாலம் என்பது மிக குறுகிய காலமாக இருக்கக்கூடும். ஒடுக்கப்படும் தரப்பை குழுவாக திரட்டும் பணி மிக முக்கியமானது. அவர்களுக்கு மெல்ல மெல்ல நம்பிக்கையூட்ட வேண்டும். இத்தகைய முன் கட்ட நடவடிக்கைகளுக்குதான் நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது.

ஒரு அரசாங்கம் எந்தெந்த அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது? இந்த கேள்விக்கு விடையாக ஷார்ப் ஆறு ஆற்றல் ஊற்றுகளைச் சுட்டிக் காட்டுகிறார். அவைகளை சார்ந்துதான் எந்த ஒரு அரசாங்கமும் இயங்க முடியும். அவைகளை மெல்ல அழிப்பதன் மூலமே அரசை வீழ்த்த முடியும். 

ஒரு அரசின் தார்மீக இருப்பை பற்றிய கேள்வியை முதலில் எழுப்பியாக வேண்டும். அரசுக்கு அடிபணிவது நம் கடமை எனும் மனப்போக்கில் இருந்து விடுபட்டு, அரசின் தகுதியை, நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்த வேண்டும். அரசு வெகுவாக சார்ந்திருப்பது மக்களின் இந்த நம்பிக்கையில்தான். அரசுடன் ஒத்துப்போகும் குழுக்கள், தனி மனிதர்கள் - இவற்றின் எண்ணிக்கையே அரசின் பலத்தை தீர்மானிக்கிறது. 

அடுத்ததாக அரசாங்கத்தின் பின்புலமாக இயங்கும் அறிவு சமூகம் மற்றும் அரசாங்கத்தில் பங்கு பெற்றிருப்பவர்கள், இவர்களுடைய  ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியமானவை. அவர்களே சர்வாதிகாரியின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் அளிப்பவர்கள். 

அடுத்ததாக கொள்கை ரீதியிலான, உளவியல் ரீதியிலான தவிர்க்க முடியாத காரணங்கள் மக்களை ஆட்சியாளர்களின் சொல்லுக்கு கீழ்படிய செய்கிறது.  தேசத்தின் இயற்கை வளங்கள் மற்றும் பொருளாதார வளங்கள் மீது ஆட்சியாளருக்கு இருக்கும் அதிகாரமும், அரசாங்கத்தை எதிர்த்தால் அது அளிக்கக்கூடிய தண்டனைகள் பற்றிய அச்சமுமே அரசாங்கங்களின் அதிகாரம் செல்லுபடியாவதற்கான முக்கிய காரணிகள். 

எப்பேர்பட்ட சர்வாதிகார அரசாங்கமாக இருந்தாலும் பலவீனங்கள் இல்லாமல் இருக்காது என்கிறார் ஷார்ப். அகிலசின் குதிகாலைப்போல். குறிபார்த்து, உரிய நேரம் பார்த்து வீழ்த்த முடியும் என்பதே ஷார்ப் தரும் நம்பிக்கை. பலவீனங்கள் என சிலவற்றை பட்டியலிடவும் தவறவில்லை.  
.

ஒரு வலுவான அரசியல் எதிர்ப்பு இயக்கம் என்பது – சர்வாதிகாரியின் முடிவுகளுக்கும் வழிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் இருக்கும். அவைகளை நிராகரிக்கும். அரசு அவர்களை எதிர்கொள்ளத் திணறும். இதனால் சர்வாதிகார அரசின் பலம் மெல்லக் குன்றும். சமூகத்தின் அனைத்து அடுக்குகளில் உள்ளவர்களின் பங்களிப்புகளையும் கோரும் அரசியல் அமைப்புகள் அதிகாரத்தை பரவலாக்கும். பரந்து விரிந்த அமைப்பாக இருக்கும் அதே வேளையில் குறிப்பிட்ட ஒரு இலக்கை நோக்கி தன்னை குவித்துக்கொள்ளும் மாண்புடையதாக இருக்கும் எந்த ஒரு எதிர்ப்பு இயக்கமும் சர்வாதிகாரிகளைக் குழப்பும். 

அரசாங்கம் நிலையான ஆட்சியைக் கொடுக்க மக்களின் ஆதரவு வேண்டும். சில அமைப்புகளின், தனிமனிதர்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அகிம்சை வழியிலான போராட்டம் மூலம் இதை தடுக்க முடிந்தால் ‘அரசியல் அதிகார பட்டினியால்” அரசாங்கம் நாளடைவில் உதிர்ந்து விடும்.

இருநூறு வகையான அகிம்சை போராட்டங்கள் சாத்தியம் என்கிறார் ஷார்ப். அவைகளை மூன்றாக வகுக்கிகிறார் - எதிர்ப்பு, ஒத்துழையாமை, அகிம்சை ரீதியிலான குறுக்கீடுகள். இவை ஒவ்வொன்றிலும் உட்பிரிவுகள் மற்றும் பல்வேறு வகைப்பாடுகள் உள்ளன.

அகிம்சை போராட்டங்களுக்கு ரகசியத்தன்மை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே எவ்வித மறைமுக நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல், நேரடியாக ஒருங்கிணைந்து செயல்படுவதே உத்தமம். மேலும் பூடகத்தன்மை பெருந்திரள் மக்கள் பங்களிப்பாற்றுவதைத் தடுப்பதாக அமையும். அதேபோல் போராட்டத்தின் இறுதி இலக்கை எட்டும் வரை அபாரமான கட்டுப்பாட்டுடன் இருந்தாக வேண்டும். எந்த தூண்டுதலுக்கும் செவி சாய்க்காமல் இறுதிவரை அகிம்சையை பின்பற்றினால்- போராட்டத்தின் தார்மீக ஆதரவு கூடும்.

அகிம்சை போராட்டங்கள் சில வழிமுறைகளில் செயல்படுகிறது என்கிறார் ஷார்ப். அரிதிலும் அரிதாக எதிர் தரப்பு இவர்களின் நியாயங்களைப் புரிந்துக்கொண்டு இவர்கள் பக்கத்திற்கு மாறி வருதலும் உண்டு. அடிப்படை முரண்பாடுகள் ஏதுமற்ற நிலையில், இரு தரப்புகளும் குறிப்பிட்ட ஒரு சிக்கலில் பொதுவான உடன்பாட்டிற்கு வரலாம். 

அரசின் தார்மீக ஆதரவைச் சிதைத்து அதன் மூலம் அரசை வலுவிழக்க செய்வது அடுத்தக்கட்ட வழிமுறை. இதன் உச்சநிலையில் அரசு முற்றிலும் செயலிழந்து, பூரணமாக ஆதரவை இழந்து விடும்.   மேலும் அகிம்சை போராட்டங்கள் அதிகாரத்தை பரவலாக்க உதவும். மீண்டும் சர்வாதிகாரம் முளைக்க விடாமல் தடுக்கும் அளவிற்கு மக்களுக்கு அனுபவமும் தன்னம்பிக்கையும் வாய்த்திருக்கும் என்கிறார் ஷார்ப்.

பெரும்பாலான மக்கள் போராட்டங்கள் எவ்வித திட்டமிடலும் இன்றி திடிரென்று தோன்றியவைதான். ஆனால் அதன் காரணமாகவே அவை ஒடுக்கப்படும் அபாயமும் அதிகம் என்கிறார் ஷார்ப். சர்வாதிகாரத்தை எதிர்ப்பது மட்டும் முக்கியமல்ல. பிற அம்சங்களை கணக்கில் கொள்ளவில்லை என்றால் மற்றொரு சர்வாதிகாரி அதிகாரத்தை கைப்பற்றவே அத்தகைய போராட்டங்கள் வழிவகுக்கும். துல்லியமான திட்டமிடல் மூலம் சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கி நகர வேண்டும் என்கிறார் ஷார்ப். உரிய திட்டமிடலும் தலைமையும் இல்லாததே பல போராட்டங்கள் தோல்வியைத் தழுவ காரணமாகிறது.

திட்டமிடலின் பல்வேறு படிநிலைகளை விரிவாக விளக்குகிறார் அவர் - ஒட்டுமொத்த போராட்டத்திற்கும் ஒரு வடிவம் அளிக்க வேண்டும். பின்னர் சிறிய சிறிய தொடர் போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டும். முக்கிய இலக்கிலிருந்து வழுவாமல் இருக்க வேண்டும். கொண்ட கொள்கைகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று எண்ணுவது உத்தம குணம்தான், ஆனால் அது விடுதலையை அடைய உதவாது என்கிறார். காலத்துக்கும் சூழலுக்கும் ஏற்ப திட்டங்களை மறுவரையறை செய்வது முக்கியம்.

ஒரு மூர்க்கமான சர்வாதிகாரிக்கு எதிராக மக்களை பொது இடத்தில் திரட்டி போராடச் செய்வது ஆபத்தை விளைவிக்கலாம் (திபெத் படுகொலை, ஜாலியன்வாலா பாக் – உதாரணங்களை நினைவில் கொள்ளவும்). எனவே சிறிய அளவிலான, ஆபத்தில்லாத எளிய போராட்ட வழிமுறைகளையே துவக்கத்தில் கையாள வேண்டும் (கருப்பு பதாகை அணிவது, பணி நிறுத்தம் போன்றவை). அதுவே இப்போராட்டங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும்.   

காவல் துறை, உளவு துறை, அதைவிட முக்கியமாக ராணுவம் போன்ற அமைப்புகளின் பரிபூரண விசுவாசத்தை நம்பியே ஒரு சர்வாதிகாரியால் இயங்க முடியும். அவ்வமைப்புகளில் மெல்ல அவநம்பிக்கையையும் அற குழப்பத்தையும் ஏற்படுத்த முயல்வது மிக முக்கியமான கட்டம். 

ஒட்டுமொத்தமாக இரண்டு பகுதிகளாக இந்த நூலை புரிந்து கொள்ளலாம். முதல் பகுதியில் வன்முறை போராட்டத்தின் பாதகங்களை அலசுகிறார், இரண்டாம் பகுதி அகிம்சை போராட்டத்தின் சாதக பாதகங்களையும் வெவ்வேறு வழிமுறைகளையும் அலசுகிறது. 

ஷார்ப் காந்தியின் மீது பெருமதிப்பு கொண்டவர், ஆனால் அவரை காந்தியர் என்று வரையறுக்க முடியாது. தான் அகிம்சையை முன்னெடுக்க அதன் ஆன்மீக அம்சம் காரணமல்ல என்பதை தெளிவாக்கி விடுகிறார், போராட்டக் களங்களில் வன்முறையைக் காட்டிலும் அகிம்சையே மேலான உத்தி என்ற நடைமுறை உண்மை மட்டுமே அவருடைய அகிம்சை சார்புக்குக் காரணமாக இருக்கிறது. இது அத்தனை சரியான அணுகுமுறையாக எனக்கு படவில்லை.

அண்மையில் நான் பத்திரிக்கைகளில் கண்ட புகைப்படம் என்னை வெகுவாக அமைதியிழக்கச் செய்தது. எங்கெல்லாம் தவறு நேர்ந்தது என பட்டியலிட்டு அந்த ரணங்களை கிளறிவிட விரும்பவில்லை. இந்த நூலை வாசிக்கும்போது காந்தியும் இலங்கையின் சகோதர சகோதரிகளின் கணக்கற்ற புகைப்பட பிம்பங்களும் மாறி மாறி மனத்திரையில் ஓடிக்கொண்டே இருந்தன. சர்வாதிகாரி பற்றி ஷார்ப் சொல்லும் வரையறைகள் வரிக்குவரி அண்டைய தேசத்து அரசுக்குப்  பொருந்துவதாக எனக்குத் தோன்றியது. 

இனியும் அங்கு சுதந்திர போராட்டம் சாத்தியம் என்றால் அது இத்திசையில்தான் செல்ல முடியும். அதுவே அத்தனை உயிர் துறப்புகளுக்கும் அர்த்தம் கொடுக்கும். எதிர் தரப்பின் சாமானிய மக்களை இத்துயரங்கள் சென்றடைய வேண்டும். தாம் தவறிழைக்கிறோம் என்பது அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும். இனம், மொழி போன்ற பேதங்களுக்கு அப்பாற்பட்டு சக மனிதனை வதைக்கும் அரசுக்கு நாம் நம் மௌனத்தால் ஆதரவளிக்கிறோம், அதன் மூலம் அந்த பாவத்தில் நாமும் பங்குவகிக்கிறோம் என்பதை அவர்கள் உணர்ந்தாக வேண்டும். அந்த மாற்றம் உள்ளிருந்தே துவங்க வேண்டும். நம்பிக்கையுடன் காத்திருப்போம். 

Thursday, June 8, 2017

ஆகஸ்ட் 15 - குமரி எஸ்.நீலகண்டன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

மனிதனுக்கு தன் வாழ்வின் கதையை மீள மீள சொல்வதில் ஒரு இனம்புரியாத ஆனந்தம் இருக்கும் போலிருக்கிறது. தான் பெற்ற வெற்றிகள், அம்முயற்சிகளில் தாம் பெற்ற தோல்விகள், நினைவெச்சமாக உலர்ந்த வடுக்கள், வலி கொடுக்கும் ஆறாத காயங்கள். உலகில் பிறந்து மரிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகத்திற்கு விட்டுச் செல்ல ஏதோ ஒரு வாழ்க்கை செய்தி இருக்கத்தான் செய்கிறது. வரலாற்று நிகழ்வுகளுடன் தனி மனித சரிதைகளை சேர்ந்து வாசிப்பது அபாரமான அனுபவம். ஒற்றை நிகழ்வின் கணக்கற்ற பரிமாணங்களை அவை நமக்குக் காட்டக்கூடும். காந்தியின் செயலராக பணிபுரிந்த கல்யாணம் அவர்களின் வாழ்வைப் பேசும் இந்த நாவலை வாசித்தவுடன் வரலாற்றின் மாற்று பரிமாணங்கள், சாத்தியகூறுகள் குறித்த சிந்தனைகள் தொற்றிக்கொண்டன.



நாவலாசிரியர் குமரி எஸ்.நீலகண்டன் சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர். அவர் எழுதிய ;ஒரு ராஜகுமாரனின் கதை' எனும்  கவிதை (இந்த நாவலின் ஒரு பகுதியாக வருவது) 'காந்தி இன்று' தளத்தில் ஏற்கனவே பிரசுரம் ஆகியிருக்கிறது. 490 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் இதுவரை நாம் அறிந்திடாத பல வரலாற்று நிகழ்வுகளை நமக்கு சொல்லி செல்கிறார். அத்துடன் நில்லாமல் பிற்சேர்க்கை பகுதியிலும் நாவலின் பகுதியாகவும் காந்தியுடன் கல்யாணம் மற்றும் பிரபலங்கள் இருக்கும் அறிய புகைப்படங்கள், காந்தி கைப்பட திருத்திய கடித குறிப்புகள் , வெளிவராத கடிதங்கள, வெவ்வேறு முறையில் காந்தியை விளித்து எழுதப்பட்ட தபால் அட்டைகள், நாளேட்டு செய்தி பிரதிகள் என பல அரிய ஆவணங்களையும் தொகுத்துள்ளார்.


காந்தியின் தனி செயலராக அவருடைய இறுதி காலத்தில் பணியாற்றியவர் கல்யாணம் எனும் தமிழர். இந்த ஒற்றை வரி தகவலை தாண்டி நமக்கு அவரை பற்றி ஆழமான தகவல்கள் எதுவும் தெரியாது. அறியப்படாத அந்த ஆளுமையை மையமாக கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது.  

நீலகண்டன் கல்யாணத்துடன் தொடர்ந்து உரையாடி, அவருடைய உரையாடல்களை பதிவு செய்து, பதிவு செய்தவைகளை கல்யாணமே சரிபார்த்து, அதன்பின்னரே அச்சுக்கு வந்ததாக அறிகிறேன். கல்யாணம் ஆகஸ்ட் பதினைந்தில் (1922) பிறந்தவர், இந்தியா ஒரு தேசமாக பிறந்ததும் ஆகஸ்ட் பதினைந்தில்தான். நாவலின் மற்றொரு பாத்திரமான பதின்மூன்று வயது சத்யா எனும் பெண்குழந்தையும் ஆகஸ்ட் பதினைந்து (2000) அன்று பிறந்தவள்தான். ஒட்டுமொத்தமாக இரண்டு தலைமுறைகளின் கதையையும் அதன் வழியாக இந்தியாவின் கதையையும் சொல்லும் முயற்சியே இந்த நாவல் என்று சொல்லலாம்.

தாய் தந்தையரிடையே மன முறிவு ஏற்பட்டதால் மத்திய மந்திரியான மாமாவின் வீட்டில் வளர்கிறாள் சத்யா. மாமாவின் வீட்டைப் பராமரிக்கும் தாமரை அக்காவின் உதவியுடன் வலைப்பூ ஒன்றை தொடங்கி எழுதத் தொடங்குகிறாள். அதை வாசிக்க நேரிடும் காந்தியின் செயலர் கல்யாணம் தன் வாழ்வனுபவங்களையும் வலைப்பூ தொடங்கி எழுதத் தொடங்குகிறார். சமகால நிகழ்வுகளின் மீதான விமர்சனமாக புனைந்து  நெய்யப்பட்ட சத்யாவின் வலைப்பூவும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளையும் வாழ்வனுபவங்களையும்  பேசும் கல்யாணத்தின் வலைப்பூவும் பின்னி முயங்கி இந்த நாவலுக்கு வடிவமளிக்கின்றன. 



வலைப்பூ வழியாக கதை சொல்லல் தமிழக புனைவுலகில் இதுவே முதல் முறை என்று எண்ணுகிறேன். பின்னூட்டங்களைக் கொண்டு அந்த பத்தி எதை சுட்ட வருகிறதோ அதைக் கோடிட்டுக் காண்பித்து விடுகிறார். பின்னூட்ட பெயர்களில்கூட தமிழ் வலைப்பூக்களில் நாமறிந்த சில பதிவர்களின் பெயர்களையே பயன்படுத்தியிருப்பது நாவலுக்கு அதிக நம்பகத்தன்மை அளிக்கிறது. ஒரு வலைப்பூவின் இடுகையின் எதிர்வினையாக மற்றொரு வலைப்பூவின் இடுகை அமைந்துள்ளது. பெரும்பாலும் சத்யாவின் சம கால யதார்த்தம் பற்றிய இடுகைகளை வாசித்து தன்னுடைய நினைவுகளை மீட்டு கல்யாணம் எழுதிச் செல்வதாக கொள்ளலாம். சில நேரங்களில் நேர்மாறாகவும் அமைக்கப்பட்டுள்ளது.   

நாவல் முழுவதும் இரண்டு குரல்கள்தான் ஒலிக்கின்றன. அவ்விரண்டு குரல்களுக்கும் இடையிலான வேறுபாட்டை ஓரளவு மொழியில் சாத்தியமாக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பதின்மூன்று வயது சத்யாவின் எழுத்து வழியாகவே அவளைப் பேணும் தாமரை, மந்திரி மாமா, சத்யாவின் தாய் தந்தை, மாமா மகன் சுரேஷ் போன்றவர்களின் சித்திரம் உயிர் பெருகிறது. கால கிரமம் என்றில்லாமல் கிழித்து அடுக்கப்பட்ட டைரி பக்கங்கள் போல் கல்யாணத்தின் வாழ்க்கையை சொல்கிறது அவருடைய வலைப்பூ. காந்தி, நேரு, படேல், ஜின்னா, பிர்லா, மவுண்ட்பேட்டன், ராஜாஜி, சி.வி ராமன் என அவர் நெருங்கி அறிந்த பல வரலாற்று ஆளுமைகள் உயிர்பெற்று உலவுவது மட்டுமல்ல அவருடைய மனைவி மக்கள் அவரை ஏமாற்றிய பொறியாளர் , கட்டட ஒப்பந்தகாரர், ஆங்கில பத்திரிக்கையாளர் என சாமானியர்களாலும் போக்கிரிகளாலும் அவருடைய நினைவுகள்  நிரம்பி வழிகின்றன. 

கல்யாணம் எனும் மனிதரின் நேர்மையான வாழ்க்கை பதிவே இந்த நாவலின் மிகப்பெரிய பலம். அவரது தனி வாழ்வு, காந்தியை பற்றிய நினைவுகள்  மற்றும் பொது நிகழ்வுகளை பற்றிய அவரது நினைவுகள் என அவருடைய நினைவலைகளை மூன்றாக வகுக்கலாம், தன்னுடைய திருமண வாழ்வு, தன் பிள்ளைகளை பற்றிய நினைவுகள், தன் வாழ்வில் சந்தித்த ஏற்றங்கள் ஏமாற்றங்கள் என பலவற்றையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக கல்யாணம் தன்னுடைய மனைவி சரஸ்வதியை பற்றி விவரிக்கும் அத்தியாயம் நாவலின் சிறந்த பகுதிகளில் ஒன்று. தன்னளவில் ஒரு சிறுகதையை போல் கச்சிதமாக எழுதப்பட்ட பகுதி. சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடல்நலம் குன்றி அவதிப்பட்ட சூழலில் பதினெட்டு வயது கூட நிரம்பாத அவரது மூத்த மகள் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்து, பின்னர் ஒருவருடம் காத்திருந்து தானம் அளித்து உயிரை மேலும் ஐந்த வருடம் நீட்டிக்க செய்தது நெகிழ்ச்சியான சம்பவம். அதேபோல் நாவலின் இறுதியில் தன் மரணத்தை தானே கண்டுணரும் கனவை விவரிக்கும் பகுதியும் சிறப்பாக வந்திருக்கிறது.

அடிப்படையில் கல்யாணம் ஒரு செயல்வீரர். எழுதுவதிலெல்லாம் ஆர்வம் இல்லை, அந்த நேரத்தில்கூட தோட்டத்தில் நான்கு கன்றுகளை நட்டு வளர்க்கலாம் என்பதே அவருடைய சித்தாந்தம். தோட்டத்து செடிகளுக்கு மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நீரூற்றாமல் இருந்தால் அவை வாடிவிடும் எனும் காரணத்திற்காக வெளியூரில் நடைபெற்ற மூத்தமகளின் திருமணத்திற்கே செல்லவில்லை என்பதை வாசிக்கும்போது காந்தியின் சில மிகை நடத்தைகள் (eccentricities) அவருடன் வாழ்ந்தவர்களுக்கும் ஒட்டிக்கொண்டுவிடும் என தோன்றியது. அல்லது அத்தகைய மனப்போக்கு கொண்டவர்கள் தான் காந்தியுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?  

கல்யாணத்திடம் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை. தன் வாழ்வில் ஒருமுறை மட்டும் தான் சொல்ல நேர்ந்த பொய்யையும் பகிர்கிறார். நீதிமன்றத்திலுள்ள கழிவறையை உபயோகிப்பதற்காகச் சொன்ன அற்ப பொய்தான் எனினும் அதுவும் கூட அவர் மனதை அத்தனை ஆண்டுகளாக உறுத்தியிருக்கிறது என்பதே அவரது நேர்மையின் சான்று. அவர் அடைந்த உயரங்களை மட்டும் அவர் பேசவில்லை, அவருடைய வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் கூட நம்முடன் பகிர்கிறார். ஒப்பந்தத்தின்படி சரிவர வீடு கட்டித்தராத பொறியாளர் மீது விடாது மீண்டும் மீண்டும் வெவ்வேறு நீதிமன்றங்களின் படியேறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நீதிமன்றமும் சிலகாலம் வழக்கை விசாரித்துவிட்டு, இது தங்கள் விசாரணைக்கு உட்பட்டதல்ல என கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது.  அத்தனை இழுத்தடிப்புகளுக்குப் பின்னரும் அவர் தனது வைராக்கியத்தை கைவிட்டுவிடவில்லை. நீதி அமைப்புகளின் மீது அவர் நம்பிக்கை இழக்கவில்லை (வாசிக்கும் நாம் இழக்கக்கூடும்). 

கிருபானந்த வாரியாரிடம் நெருக்கமாக இருந்தார் என்பதால் நம்பி வீடுகட்ட முன்பணம் அளித்த நபர் அவரை ஏமாற்றிவிடுகிறார். காந்தியுடன் தொடர்புடைய அரிய பொருட்கள் சிலவற்றை கண்காட்சிக்கு வைக்கிறார். அவருடன் நெருங்கி பழகிய ஆங்கில பத்திரிக்கையாளர் ஒருவர அவற்றை திருடி கள்ள சந்தையில் விற்றுவிடுகிறார். தொண்டு அமைப்புக்கு இலவசமாக வழங்கிய காந்தியின் ஆவணங்களை அவர்கள் வெளிநாட்டிற்கு விற்க முயல, அதை இவரே முன்னின்று செய்ததாக அவதூறு செய்தி வெளியானது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாங்கிய இரண்டாயிரம் ரூபாய் கடனை அடைக்க ஆயிரம் ரூபாய் தருகிறார் ஒரு நண்பர். 




இந்திய விடுதலை, பிரிவினை, காந்தியின் மரணம் என வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டங்களில் வரலாற்று நாயகர்களின் அண்மையில் காலம் கழித்தவர் கல்யாணம். அந்த தருணங்களின் நேரடி சாட்சியும் கூட. அவ்வகையில் அவருடைய கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. படேல்- நேரு மோதல்கள். பிர்லா – நேரு பிணக்கம், பிர்லா – படேல் இணக்கம், கான் அப்துல் கஃபார் கானின் வருத்தம் என அன்றைய சூடான அரசியல் செய்திகளை பற்றிய தன்னுடைய நினைவுகளை நம்முடன் பகிர்கிறார். 



கல்யாணம் வழியாக நாவலாசிரியர் கூறும் சில தகவல்கள் அதிர்ச்சி ஏற்படுத்த கூடும். பிரிவினையின்போது படேலிடம் வந்து சில இந்துக்கள் தங்கள் உடமைகள் சில முஸ்லீம்களால் சூறையாடப்பட்டன என்று முறையிடும்போது படேல் பதிலுக்கு “நீங்கள் மட்டும் ஏன் சும்மா இருந்தீர்கள்?” எனும் ரீதியில் எழுப்பும் பதில் கேள்வி காந்தியின் செவிகளை அடைந்ததை அடுத்து அவர் பெரும் வேதனை அடைந்தார் என்கிறார் கல்யாணம். மற்றொரு தருணத்தில் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்கக்கூடாது என அமைச்சரவை முடிவு செய்தபோது காந்தி பிடிவாதமாக வலியுறுத்தி அந்த பணத்தை கொடுக்கக் செய்தார். அப்போது கோபத்துடன் கூட்டத்தை விட்டு வெளியே வந்த படேல் “கிழவன்..முட்டாள்” என்று உணர்ச்சி மிகுதியில் கொட்டிய சொற்களை பதிவு செய்கிறார் கல்யாணம். 

எப்போதுமே சொல்லப்படும் வாதம் ஒன்றுண்டு, நேருவைக் காட்டிலும் படேல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா சுபிட்சமாக இருந்திருக்கும் என்று. இந்த சில நிகழ்வுகளை வாசிக்கையில் காந்தியின் தேர்வு சரிதான் என்று தோன்றியது. காந்திக்கு அணுக்கமாக இருந்தவர்கள்கூட அவரையும் அவரது கொள்கைகளையும் சரிவர உள்வாங்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களைச் சென்றடைய காங்கிரசுக்கு ஒரு முகம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். 


காந்தியின் சத்திய வேட்கை மற்றும் நேர்மையை பற்றி நாம் அனைவரும் அறிவோம். அவருடன் வாழ்ந்த, அவர் பெயரைச் சொல்லி வாழும் மனிதர்கள் அனைவரும் அப்படியிருக்க வேண்டும் என்பது மடமைதான். ‘ மிகவும் ஆச்சரியப்படத்தக்க அளவில் காந்தியின் கீழ் வேலை பார்த்த ஒரு சிலரிடமும் கூட கோள், பொறாமை, பின் வேலைகள் போன்ற துர்குணங்கள் இருந்தன’ என்று எழுதுகிறார். காந்தியின் செயலராக இருந்த பியாரிலால் ஒருமுறை வாகனத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு பழியைக் கல்யாணத்தின் மீது சுமத்தியதை பற்றிய தன் நினைவுகளை கல்யாணம் எழுதுகிறார். நிறுவப்பட்ட உண்மைகளுக்கு எதிரான சில செய்திகளையும் அவர் அளிக்கிறார். காந்தி மரண தருவாயின் போது ஹே ராம் என உச்சரித்துக்கொண்டு இறக்கவில்லை என ஆணித்தரமாக வாதிடுகிறார். அப்படி அவர் மரணிக்க விரும்பினார் என்பது உண்மை, ஆனால் அது நடக்கவில்லை. அப்படி நிறுவப்படுவது உண்மையின் திருவுருவாக வாழ்ந்து மறைந்த காந்தியின் நினைவுகளுக்குச் செய்யப்படும் இழுக்கு அல்லவா?



காந்தி அளவிற்கு சமகால வரலாற்றை ஆவணப்படுத்தியவர்கள் எவரும் இல்லை என தோன்றியது. ஆசிரமவாசிகள் தினமும் அன்றைய நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுத வேண்டும். காந்தி அவைகளை திருத்திக் கொடுப்பார். காந்தியின் இறுதி ஆண்டுகளில் அவருடைய அணுக்கத்தில் காலம் கழித்தவர் எனும் கோணத்தில், காந்தி செய்த பரிந்துரை, ஆசிரம வாழ்க்கையில் இருந்த அரசியல், காந்தியுடன் அவர் சென்ற ரயில் பயணங்கள், சின்ன சின்ன அன்றாட நிகழ்வுகள், காந்தி சுடப்பட்ட நாள் அன்று நடந்த நிகழ்வுகள் என காந்தியை பற்றிய கல்யாணத்தின் நினைவுகள் மிக முக்கியமானவை. காந்தியின் பிம்பத்தை ஊதிபெருக்கவில்லை. நிகழ்வுகளை அப்படியே தன் நினைவுகளில் இருந்து மீட்டு பதிகிறார். காந்தியின் தவறுகள் பலவீனங்கள் என எதையும் பூசி மெழுகவில்லை. அவர் மீது இவருக்கிருந்த வருத்தங்களையும் பதிவு செய்கிறார். இவை அனைத்தையும் தாண்டி அவரின் மகத்துவத்தையும் அங்கீகரித்து ஏற்கிறார். திறந்த மனதுடன் வாசிக்கும் வாசகன் காந்தியை மேலும் நெருக்கமாக உணரக்கூடும். 

 காந்தி – ஹரிலால், காந்தி – கஸ்தூர்பா உறவு ஆகியவைகளை பேசும் அத்தியாயங்கள் உணர்ச்சிபூர்வமானவை. நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கஸ்தூர்பாவை ஒருவேளை காந்தி தனது அலோபதி மருந்து பயன்படுத்த மாட்டேன் எனும் வைராகியத்தை தளர்த்தி இருந்தால் பென்சிலின் பயன்படுத்தி உயிர்பிழைக்க வைத்திருக்க முடியும் என எழுதுகிறார். 


காந்தியின் மனம் பிரிவினையை எப்படி எதிர்கொண்டது? இந்தியா – பாகிஸ்தான் என இரு தேசங்களிலும் இரு தேசத்து கொடிகளையும் பறக்க விட வேண்டும் என காந்தி விரும்பினார் என்கிறார் கல்யாணம். ஒரே தேசமாக இந்தியா இருந்திட எத்தகைய சமரசங்களுக்கும் அவர் தன்னை திறந்து தயாராகவே வைத்திருந்தார். சுதந்திரத்திற்கு பின்பான பிரிவினையின் காலகட்டத்தில் காந்திக்கு பல சாமானிய மக்களும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். அவைகளில் சில இப்புத்தகத்தில் வெளியாகி இருக்கின்றன. அமைச்சர்களின் கேளிக்கை, ஆடம்பரங்களை விமர்சித்தும் பிரிவினையில் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்து மீண்டு வர உதவுமாறு கோரியும் வெவ்வேறு தொனிகளில் எழுதப்பட்டுள்ள அக்கடிதங்களை வாசிக்கும் போது மனம் வேதனை அடைகிறது. 

கரைக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த காந்தியின் அஸ்தியை பல ஆண்டுகளுக்கு பின்னர் அன்றைய குடும்ப சிக்கல்களுக்கு அதுதான் காரணமோ என்று எண்ணி கரைக்கிறார், அப்படியும் மனமில்லாமல் கொஞ்சம் அஸ்தியை பத்திரப்படுத்தி வைத்துள்ளதாக கல்யாணம் எழுதுகிறார். காந்தியின் நினைவாக எஞ்சி இருப்பது அது மட்டும்தான் போலும்.  


அசல் வரலாறும் புனைவும் முயங்கி உருவாகியுள்ள இந்த நாவலின் முக்கியமான பலவீனம், இதன் புனைவு பகுதி வரலாற்று பகுதிக்கு ஈடுகொடுக்கும் விதமாக காத்திரமாக அமையவில்லை என்பதாக எனக்கு தோன்றியது. கல்யாணம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தெளிவாக தெரிந்த படியால் அதற்கு ஏற்ப சத்யாவின் இடுகைகளை அமைத்தாக வேண்டிய நிர்பந்தம் நாவலாசிரியருக்கு இருப்பதால் அது சில இடங்களில் துருத்திக்கொண்டு மிகையாக தெரிகிறது. நிகழ் கால அரசியல் – சமூக நிகழ்வுகளின் விமர்சனம் மூலமாக காந்திய காலத்து மகத்துவங்களை அடர்த்தியாக காட்ட முயன்றுள்ளார். ஒரு உத்தியாக இதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், பல நேரங்களில் தொடர் வாசிப்புக்கு அப்பகுதிகள் தடையாக இருக்கின்றன. 

நாளேடுகளிலும் இணைய விவாதங்களிலும் பொதுவாக சமகாலத்தை பற்றி  பொதிந்துள்ள அதே நம்பிக்கையின்மையின் குரல் (அவை நிதர்சனமாகவே இருப்பினும் கூட) . சிற்சில அபாரமான அத்தியாங்களை தவிர்த்து புதிய கோணங்களில் இக்கால பிரச்சனைகளை அணுகி இருக்கலாமே எனும் எண்ணம் மேலிட்டது.. கல்யாணம் அவர்களின் தன் வரலாறாகவே இந்த நூல் வந்திருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.  இன்னமும்கூட கல்யாணத்தின் வாழ்க்கை விரிவாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவே எண்ணுகிறேன்.  

சத்யாவை பொருத்தவரை சிறுமிக்கு உரிய வெகுளித்தனம் ஆங்காங்கு தென்படுகிறது. சமகால அரசியல்வாதியின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள மந்திரி கந்தன் பாத்திரம், நாம் ஊடகங்களின் வழி அறிந்த கறைபடிந்த அரசியல்வாதிகள் பலரை நினைவுபடுத்தக்கூடும். பதிமூன்று வயது சிறுமிக்கு இத்தகைய உலக பிரக்ஞையும் பக்குவமும்  சாத்தியமா எனும் கேள்வி எழவே செய்கிறது. எனினும் சாத்தியமில்லை என்று புறந்தள்ளிவிட முடியாத உயரத்தையும் இன்றைய இளையதலைமுறையில் சிலர் அடைந்திருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும்.   

“என்னைச் சந்திக்கும் பல நண்பர்களும் அடிக்கடி கேட்கும் கேள்வி. நீங்கள் காந்தியோடு இவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறீர்கள், ஏன் இன்னமும் நீங்கள் காந்தியைப் பற்றியும் உங்களைப் பற்றியும் புத்தகம் ஏதும் எழுதவில்லை என்று. எதார்த்தத்தில் பார்த்தால் காந்தியின் கொள்கைகளை புதைத்து விட்டு காந்தியைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் காந்தியைப் பற்றி புகழ்ந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காந்தி மகாத்மாதான். நான் செயல்படும் மனிதன். காந்தியின் கொள்கைப்படி சேவை செய்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரமானது காந்தியை கொல்வதற்கும் அவரது கொள்கைகளை புதைப்பதற்குமான எந்த கட்டுப்பாடுகளுமில்லாத சுதந்திரமாக ஆகிவிட்டது. காந்தியை கோட்சே ஒருமுறைதான் கொன்றான். காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டு காந்தியின் கொள்கைகளை பலரும் கொலை செய்துகொண்டே இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட காந்தியின் உடலை எரித்தபோது காந்தியின் கொள்கைகளையும் அத்தோடு எரித்துவிட்டார்கள்,” என்று ஒலிக்கிறது கல்யாணத்தின் குரல். 

இப்படிப்பட்ட வாழ்க்கைப் பார்வை கொண்டவர் ஒருகாலும் தன் வரலாறு எதையும் எழுதி ஆவணப்படுத்த முயன்றிருக்க மாட்டார். அவ்வகையில் கல்யாணம் எனும் ஒரு  மனிதரின் நினைவுப் பேழையை திறந்து, நிகழ்வுகளை சேகரித்து  அதை ஆவணப்படுத்தும் வரலாற்று பணியை செவ்வனே செய்திருக்கிறது குமார் எஸ். நீலகண்டனின் இந்த ஆகஸ்ட் 15. 


ஆகஸ்ட் 15
குமரி. எஸ்.நீலகண்டன் (அவரது வலைப்பூ)
நாவல் 
புத்தகம் கிடைக்குமிடம் – 
204/432 D7, parson guruprasad resedential complex 
TTK road, alwarpet, chennai- 18
ph- 9444628536

Wednesday, June 7, 2017

உலகம் குழந்தையாக இருந்த போது - வெரியர் எல்வின்


(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

உலகம்எப்படி உருவானது? ஏன் உருவானது? அதன் அன்றாட இயக்கத்தை தீர்மானிப்பது யார்? இத்தனை நிறங்களில் பூக்கள் ஏன் பூக்க வேண்டும்? புலிகளின் உடலில் உள்ள வரிகள் வந்ததெப்படி? பறவைகளுக்கு சிறகு முளைத்தது எப்படி? இத்தனை விதமான பறவைகளின் குரல்கள் ஏன் உலகெங்கும் ஒலிக்க வேண்டும்? மனிதர்கள் எங்கிருந்து வந்தார்கள்? மனிதர்கள் எங்கு செல்கிறார்கள்? வாழ்வின் நோக்கம் என்ன? மரணம் என்றால் என்ன? மரணத்திற்கு பின் என்ன? மனிதன் பெருவியப்புடன் ஒவ்வொன்றையும் கேள்வி கேட்கிறான். காலந்தோறும் கேள்விகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. விடைகளை நெருங்க நெருங்க மேலும் கேள்விகள் எழுந்து கெக்கலித்து சிரிக்கின்றன. தன்னை மூடியிருக்கும் அஞ்ஞான பிசினை கேள்விகுறி கோடரியை கொண்டு கிழித்து பிளந்து தன்னை புதிதாக கண்டடைய முயன்றுக்கொண்டே இருக்கிறான். கேள்விகளே செயலின்மையில் இருந்து அவனை மீட்கும் மீட்பர். கேள்விகளே அவனை அலைக்கழித்து நொடிந்து உதிர செய்கின்றன.       




இயற்கையை உன்னிப்பாக கவனிக்கும் மனிதனுக்கு வாழ்க்கை மாபெரும் வியப்பு வெளி. அவன் கண்டு, கேட்டு, உணரும் ஒவ்வொன்றும் அவனை மாளாத வியப்பில் ஆழ்த்துகிறது. அழுக்குருண்டையை உருட்டி செல்லும் சின்னஞ்சிறிய பூச்சி முதல் அண்டவெளியின் காரிருளில் அனைத்தையும் தம்முள் ஈர்க்கும் கருந்துளை வரை மனிதன் இயற்கையை வியக்க ஆயிரம் காரணங்கள் உண்டு. மனித அகத்திற்குள் கண்மூடி உறங்கும் குழந்தை கண்விழிக்கும் போது மட்டுமே நம்மால் வாழ்வின் ஆச்சரியங்களை ரசிக்க முடிகிறது. இந்த கேள்விகள் நம்முள் உறங்கும் குழந்தைகள் எழுப்பியவை அக்கேள்விகளுக்கான விடை தேடும் முயற்சியில் பரிணமித்து உருவானவை தான் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம் போன்றவை என கூறலாம். குழந்தைமையை மேதமையாக மாற்ற முடிந்தவர்களால் தான் உலக வரலாறு நிரம்பியிருக்கிறது போலும்.


 குழந்தையின் மனம் கற்பனைகளால் நிரம்பியது, தொடர்பற்ற, தர்க்கமற்ற நிகழ்வுகளையும் அதனால் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். தனக்குள் விழித்திருக்கும் குழந்தையின் எண்ணங்களை வார்த்தைகளாக வடிக்க முயல்பவன் தான் கவிஞன். எல்வின் தொகுத்த இந்த பழங்குடி கதைகளை வாசிக்கும் போது ஆதி மனிதன் ஒரு மகத்தான கவி எனும் உணர்வு மேலிட்டது. ஒரு கவி மனம் மட்டுமே அடைய கூடிய புரிதல்களை, கவித்துவ தர்க்கம் மட்டுமே கொண்டு அணுகப்பட வேண்டிய உண்மைகளை முன்வைத்தவர்கள் பழங்குடிகள். வானமும் பூமியும் ஒன்றையொன்று நேசித்த காலத்தில் அவைகளுக்கு இடையே இடைவெளியே இல்லை. மனிதர்கள் எல்லாம் எலிகளை கொண்டு நிலத்தை உழுதனர். இந்த இட நெருக்கடியால் கோபமடைந்த ஒரு கிழவி தன் துடைப்ப கட்டையை ஒங்க முயல, அதை கண்டு மிரண்ட வான் தொலைதூரத்திற்கு சென்றது என்கிறது ஒரு கதை. வான் பாதையில் சங்கிலியில் பிணைக்கபட்ட காட்டுபன்றிகளின் ரோமம் உரசும் போது ஏற்படும் தீப்பொறி மின்னலாகிறது, அவை ஒன்றையொன்று பார்த்து உறுமுவது இடியாகிறது- இது ஒரு பழங்குடி இனத்தின் நம்பிக்கை. மற்றொரு கதையும் உண்டு. மண்ணில் கொட்டுமேளங்களுக்கு அற்புதமாக நடனமாடிய நங்கைகள் மீது மையல் கொண்டு இறைவன் ஒவ்வொரு முறை மழையை பூமிக்கு அனுப்பும் போதும் அவர்களை மேலிருந்து கீழே வர செய்கிறான். பெண்களின் நடனம் மின்னலாகவும் இளைஞர்களின் கொட்டுமேளம் இடியாகவும் ஒலிக்கிறது. வாழ்வு பெரும் கொண்டாட்டங்களால் நிறைந்தது. இடியும் மின்னலும் இறைவனின் ஆசிகள்.     

வெரியர் எல்வின் மிக முக்கியமான பழங்குடி ஆய்வாளர், காந்தியர், மத்திய இந்தியாவின் வெவ்வேறு பழங்குடி இன மக்களுடன் நெருக்கமாக நேரடி தொடர்பு கொண்டவர், பழங்குடி வாழ்வு தொடர்பாக அரசாங்க கொள்கையை உருவாக்கியவர் என இப்படி எல்வினை பற்றி ஆங்காங்கு வாசித்திருக்கிறேன் ஆனால் அவருடைய எழுத்துக்கள் எதையும் வாசித்ததில்லை. இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த சமயம் அவருடைய ‘ உலகம் குழந்தையாக இருந்தபோது’ எனும் இந்த நூல் கண்ணில்பட்டது.

ராமச்சந்திர குகா முன்னுரையுடன் என்.சி.பி.எச் வெளியீடாக வந்திருக்கும் இந்த 90 பக்க சிறிய நூல் இந்திய பழங்குடி மக்களிடையே புழங்கும் சில கதைகளின் தொகுப்பாகும். எல்வினின் ஆளுமை பற்றிய குகாவின் விவரனையுடன் தொடங்குகிறது இந்நூல். இந்திய பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்குவதில் எல்வின் எவ்வகையில் பங்காற்றினார் என சொல்லிசெல்லும் குகா அதன் வழியாக நவீன இந்தியாவின் கட்டமைப்பில் அவருடைய பங்களிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திசெல்கிறார்.

துவக்க காலம், ஆதி மனிதர்கள், கண்டுபிடிப்புகள், பேசும் மிருகங்கள், மாய உலகின் அனுபவங்கள் , உலகின் முடிவு என ஆறு தலைப்புகளில் மொத்தம் முப்பத்தெட்டு கதைகள் கொண்ட தொகுப்பிது. சிறகு முளைத்த யானைகள் முட்டை உடைத்து வெளிவரும் பனி எருமை (yak) என ஆங்காங்கு அமினாஜெயல் பென்சிலில்  தீட்டிய ஓவியங்கள் கதைகளுக்கு உயிரூட்டுகின்றன.



நாம் காணும் இயற்கை நிகழ்வுகளின் காரணம் என்னவாக இருக்கும்? ஏழெட்டு வயதுவரை கூட சிவ பெருமானின் ‘உச்சா’ தான் பூவுலகில் மழையாக பொழிகிறது என நம்பிக்கொண்டிருந்தேன். நிலநடுக்கம் ஏன் வருகிறது தெரியுமா? பூமிக்கடியில் சிறைப்பட்டுள்ள இளவரசர்கள் அறைகதவை ஆட்டிப்பார்க்கும் போதெல்லாம் பூமி ஆடுகிறது. பனிப்பாறைகள் உருவானது எப்படி என்பதாவது தெரியுமா? பாழ் வெளியில் பசித்தழுத குழந்தைகளுக்கு இறைவன் மேலிருந்து போட்ட சோற்று உருண்டைகள் உறைந்து பனிப்பாறைகள் ஆகின. நீரில் மிதந்த உலகை இரும்பு தூண்கள் கொண்டு நான்கு மூலைகளிலும் அடித்து நிறுத்திய நங்கா பைக்காவை பற்றியாவது தெரியுமா? 


ஒன்று மற்றொன்றாக உருமாற்றம் கொள்வது, இக்கதைகளில் உள்ள பொதுகூறுகளில் ஒன்று. அவைகளுக்குள் உள்ள தொடர்புகள் அபார கற்பனையால் மட்டுமே விளைந்திருக்க முடியும். கிட்டுங் எனும் கடவுள் தன் வாலை பிடுங்கி தூர வீசினார், அதுவே பனை மரமாக மாறியது. சாமானிய மனிதர்களுடைய வால்கள் எல்லாம் உதிர்ந்து புற்கள் ஆகின. கண்ணில்லாத மனிதனுக்கு காகத்தின் கண்களை பொருத்தினார் கடவுள், மயிலிறகை உருவி இமைகள் செய்தார். ஆமை யானையாக மாறுகிறது, பெண் மானாக மாறுகிறாள், புலி கருப்பு நாயாகவும் பின்னர் மனிதனாகவும் மாறுகிறது. பாம்பு மனிதனாக மாறுகிறது. 


இயற்கையின் இயல்பிற்கு ஏதேனும் ஒரு காரணத்தை கண்டடைவது மற்றொரு பொதுக்கூறு என கூறலாம். முன்பொரு காலத்தில் பெண்களிடமிருந்து தாடியை கடன்பெற்ற ஆடு திருப்பித்தரவில்லை, ஆகவே பெண்களுக்கு தாடி மறைந்தது. மனிதனை போல் பிடில் வாசித்து ஏமாற்றிய குரங்கு வழக்கமாக அமரும் கல்லை சுற்றி தீமூட்டி விட்டுவிட்டதால், அது அங்கு வந்து அமர்ந்த போது அதன் அடிப்பாகம் வெந்துவிட்டது. அது முதல் குரங்குகளின் அடிப்பாகம் வெந்தது போல் காட்சியளிக்க தொடங்கியது. நான்கு ரெக்கைகள் கொண்ட யானைகளால் தொந்திரவுக்கு உள்ளானார்கள் மனிதர்கள். கடவுள் அவைகளை வெட்டி இரண்டை மயிலுக்கு தந்தார், இன்னும் இரண்டை வாழை மரத்திற்கு தந்தார். நீளமான வாழை இலைகளுக்கு அதுவே காரணம். 

குரூபியான அரசகுமாரியை யாரும் திருமணம் செய்துகொள்ள முன்வரவில்லை, அன்பிற்கு ஏங்கி மனம் வெதும்பி உயிர் துறக்கிறாள். கடவுளிடம் சென்ற அப்பெண் ஒரு வரம் கோருகிறாள் “மண்ணில் வாழ்ந்த சொற்ப காலத்தில் நான் சந்தோஷமாகவே இல்லை. யாரும் என்னை சீண்டவில்லை. இப்போதாவது என்னை யாவரும் விரும்பும் ஒரு பொருளாக மாற்றுங்கள்”. அனைவரும் சுவைத்து மகிழும் புகையிலையாக மாறினாள். மனிதனின் உளவியல் சிடுக்குகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சும் ஆழம் கொண்ட கதை. அபாரமான மனவெழுச்சியை தந்தது. ஜன்மாந்திரமாக அன்பிற்கு, ஒரு தொடுகைக்கு ஏங்கும் ஆன்மாக்கள் தான் நிலபரப்பெங்கும் மனம்வீசி கவர்ந்திழுக்கும் பலவண்ண மலர்களாக மலர்கிறதோ? 


கதைகள் மூலமாக நாம் என்ன அறிகிறோம்? நாம் அறிந்திடாத நமது முகங்களை அறிந்துகொள்ள கூட முடியும். இத்தகைய கதைகள் எந்த சூழலில் உருவாகின? அதன் கலாச்சார பின்புலம் என்ன? நாட்டுப்புற கதைகளுக்கும் பழங்குடி கதைகளுக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. பழங்குடி கதைகள் பரிணாமம் கொண்டு நாட்டுப்புற கதைகளாகிறது, அவை மேலும் பரிணமித்து புரானங்களாகவும் செவ்வியல் கதைகளாகின்றன, உருமாறுகின்றன. இப்பரிமாணங்கள் வழியாக மனித அகத்தை நாம் அறிந்துகொள்ள முடியும். ஏன் சில கதைகள் மட்டும் பிரம்மாண்டமாக பேரூரு கொண்டன? அதன் மூலம் மனிதன் எதை உணர்த்த முயல்கிறான்? தொன்மங்கள் வழியாக தொல்படிமங்களாக மாற்றி மனிதன் ஏன் இவற்றை பேண வேண்டும்?


உதாரணமாக மாயஜால கதைகளில் மீண்டும் மீண்டும் மான், மாம்பழம் என்று ஏதோ ஒன்று பெண்ணாக மாற்றப்படும் உளவியலை கவனிக்கலாம். ஏதோ ஒரு சிக்கலில் இருந்து தம்மை மீட்கும் சாமானியர்களுக்கு அரசர்கள் தங்கள் மகள்களை திருமணம் செய்துக் கொடுத்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். (இது இன்றைய தமிழ் சினிமா காதல் கதைகள் வரை கூட நீடிக்கிறது) இக்கதைகளுக்கான உளவியல் தேவை என்னவாக இருந்திருக்கும்? மனிதனின் கனவுகளும் நிராசைகளும் தான் இக்கதைகளை உருவாக்குகின்றனவோ?     


இக்கதைகள் அபார கற்பனைகளால் உயிர்பெறுகின்றன. அதேப்போல் தேர்ந்த புனைவாசிரியர் போல் எல்வின் இக்கதைகளை காட்சி படுத்துகிறார். மின்மினி பூச்சிகளிடமிருந்து தீயை பெற்றதாக சொல்லும் கதையில் உறைந்திருக்கும் கற்பனை சிலிர்க்க செய்கிறது. சலிப்பாக சென்ற வாழ்க்கையை உயிரூட்ட ஒரு தேவதை கூச்ச உணர்வை மனிதர்களுக்கு ஏற்படுத்த முனைகிறாள். உயிர்வண்டுகளை பிடித்து மனிதர்களுக்குள் செலுத்தினாள். அவ்வண்டு மோவாய்க்கு அடியிலும், விலா பக்கத்திலும் அக்குளிலும் வசிக்க தொடங்கியது. எவரேனும் அவ்விடங்களை தொட முயன்றால் அது அங்கிருந்து ஊர்ந்து ஓடும். கூச்சமும் சிரிப்பும் பிறக்கும். உடலுக்குள் ஊரும் பூச்சிகளால் கூச்சம் ஏற்படுகிறது என்பது அற்புதமான கற்பனை.


மனிதன் இயற்கையை உற்று கவனித்து அதன் தொழில்நுட்பங்களை உள்வாங்கி தனக்கு தேவையானவற்றை உருவாக்குகிறான். சக்கரமும், தீயும் உருவாக்கிய அந்த அநாமதேய பழங்குடி மூதாதையர் என்றும் நம் வணக்கத்துக்குரியவர். யானையின் கால்கள் போல் வலுவான மரத்தூண்உருவாக்கி, பாம்பை போல நீளமான, வலுவான கழிகளை கொண்டு, எருமை எலும்பு கூட்டை போல் குறுக்கு கழிகளை கட்டி கூரையை உருவாக்கி, மீனின் செதில்களை போல் இலைகளை கொண்டு கூரையை மறைத்தால் ஒரு வீட்டை உருவாக்கலாம். சுத்தியலும் குறடும் உருவான கதையை சொல்லும் போது யானையின் கால்களில் மிதிபட்டு பொருட்கள் நசுங்குவதை கவனிக்கிறான். அதை கொண்டு கல்லில் சுத்தியலை செதுக்கி உருவாக்குகிறான். நீர்நிலையில் அவனை கவ்வும் நண்டின் கொடுக்கை நினைவில் கொண்டு குறடை உருவாக்குகிறான். பச்சை மாமிசம் தின்றுக்கொண்டிருந்த மனிதன் எப்படி தீயை கண்டுகொண்டு ருசியாக உண்ண தொடங்கினான் என்பதை பற்றி விளக்கும் கதை ஆச்சரியப்படத்தக்க அளவிற்கு தர்க்கப்பூர்வமானது, அறிவியல்பூர்வமானது. காட்டு தீயில் கருகி இறந்த ஓர் உயிரின் மீது விரல் பதிகிறான், வழுக்கிக்கொண்டு உள்ளே புதைகிறது. சூடு பொறுக்க முடியாமல் வாயில் வைத்து குளிர்விக்கிறான். அதன் ருசியை கண்டுகொள்கிறான். அடுத்து தோலுடன் ஒரு முயலை சுட்டு உண்கிறான் தோல் சுருங்கி தீயில் விழுந்து நெருப்பை அணைத்துவிடுகிறது. அதன்பின்னர் தோலை உரித்து உண்ண அறிகிறான். மழைகாலத்தில் சேற்று காலுடன் குளிர்காய வருகிறான். நெருப்பின் சூட்டில் மண் இறுகுகிறது. அதை கவனித்த அவன் மண்ணை கொண்டு மண்பாண்டங்கள் செய்கிறான், துல்லியமான அறிவியலின் வழி. இது ஒரு பழங்குடி கதை என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். ஒருவேளை இது உண்மையாகவும் இருக்கக்கூடும். இப்படித்தான் மனிதன் ஒவ்வொன்றின் பயன்பாட்டையும் கண்டுகொண்டானோ?    

இறுதி அத்தியாயம் மரணம் எப்படி ஒரு வரமாக வந்து மூப்பின் அவஸ்தைகளை முற்றுக்கு கொண்டுவந்தது என்று சொல்கிறது. நூலை வாசித்து முடிக்கையில் மனமெங்கும் புதிய கேள்விகளால் திமிலோகப்படதுவங்கின. மனிதனுக்கு பணிக்கப்பட்ட கடமை என்பது கூட தனக்கான கேள்வியை மீட்டெடுத்து அதற்கான விடையை கண்டடைவது தான் போலும். பல நேரங்களில் இத்தகைய கண்டடைதல்கள்  அந்தரங்கமானது அது நமக்கான விடை, நமக்கான உண்மை. அது பிறர் புரிந்துகொள்ள முடியாத ஒரு கவித்துவ தரிசனமாக இருக்கலாம், பிறருக்கு உணர்த்த முடியாத ஆன்மீக அனுபவமாகவும் இருக்கலாம், நிரூபணம் கோரும் அறிவியல் கோட்பாடாகவும் இருக்கலாம்..   அடுத்தடுத்து வீழும் அடுக்கு சீட்டுகளின் சங்கிலி தொடர் நிகழ்வு போல் ஒவ்வொரு கேள்வியும் மற்றொன்றுக்கு இட்டுச்செல்கிறது. மண்ணில் தவழ்ந்த ஆதி மனிதனின் முதல் கேள்வி என்னவாக இருந்திருக்கும்? ‘நான் யார்’ என்று அவன் கேட்ட அந்த கேள்விக்கான விடையை கண்டடையும் வரை மனிதன் ஓயமாட்டான். ஒருவகையில் அந்த ஒற்றை கேள்வி விடையை கண்டுகொள்ள வழிதேடி பெற்றெடுத்த கணக்கற்ற பிள்ளைகள் தான் நாம். 


உலகம் குழந்தையாக இருந்த போது
வெரியர் எல்வின் 
நாட்டாரியல், மொழியாக்கம், தமிழ், 
NCBH வெளியீடு.