Friday, January 19, 2018

புத்தக கண்காட்சி அனுபவங்கள் - 2018

இப்போது கிண்டில் வந்துவிட்டது, காமன்ஃபோல்க்ஸ், புதினம், nhm, மகிழ், டிஸ்கவரி என இணையம் வழியாக அவசியமான புத்தகங்களை தருவிக்கும் வசதியும் வந்துவிட்டது, இத்தனை தொலைவிலிருந்து புத்தக கண்காட்சிக்கு ஏன் செல்ல வேண்டும் எனும் கேள்வி எஞ்சி இருக்கிறது. காரைக்குடியில் வேறு வருடா வருடம் கண்காட்சி நிகழ்கிறது, நானே கூட இரண்டு வருடமாக ஒரு ஸ்டால் எடுத்து நடத்துகிறேன். (இந்த வருடம் வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் பழக்க தோஷம் கை நடுங்கிவிட்டது. இந்த வருடமும் உண்டு) அப்படி   நடத்திய வகையில், அதன் முக்கியமான லாபம் என்பது எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்து வைத்து கொள்வது தான். இப்படி வெறித்தனமாக சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் சரி பாதி வாசித்திருப்பேனா என தெரியவில்லை. கிண்டில் வந்ததில் இருந்து முக்கியமான ஆங்கில திருட்டு புத்தகங்களை தரவிறக்கி அதை தான் அதிகமும் வாசித்து கொண்டிருக்கிறேன். 

புத்தக கண்காட்சி ஒரு பண்பாட்டு நிகழ்வு, அறிவு விடாய் கொண்டவர்களும் கனவுலகை கட்டி எழுப்புபவர்களும் அதிகமும் சங்கமிக்கும் வெளி ஹாரி பாட்டர் வரிசையில் குவிடிச் உலக கோப்பைக்கு உலகெங்கும் உள்ள விசார்ட்கள் கூடுவது போன்றது. புத்தகங்களை வாங்குவதற்கு என்பதை காட்டிலும் அந்த பண்பாட்டு அனுபவத்தில் நாமும் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்பதே நோக்கம். 

எப்போது செல்வது என்பதில் பல குழப்பங்கள், கடைசியில் தத்கல்லில் புக் செய்து கொண்டு 18 ஆம் தேதி பல்லவனில் புறப்பட்டேன். தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜாவை கிண்டிலில் வாசித்து முடித்தேன். முனைவர் சரவணன் எழுதிய சங்கக் காலம் பற்றிய புத்தகத்தை வாசிக்க துவங்கினேன். பெரிய கண்ணாடி சாளரத்தில் தெரிந்த நிலவெளியை பார்த்து, கொஞ்சம் தூங்கி, கொஞ்சம் விழித்து என தாம்பரம் வந்து இறங்கினேன். அங்கு நண்பர் சிவமணியன் காத்திருந்தார். சிவமணியன் மதுரைக்காரர் சென்னையில் பணி, பள்ளிக்கரணையில் வீடு. அவருடைய மகன் ரிஷி சுதீர் பிறந்த அதே மகா சிவராத்திரியின் கடைசி சாமத்தில் பிறந்தவன். மார்ச், 8, 2016. சென்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு அங்கிருந்து அண்ணா நகர் சரவணபவனுக்கு கிளம்பினோம். கிளம்புவதற்கு முன் சிவமணியன் எனக்கு குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய தென்னிந்திய கோபுர கலை எனும் அற்புதமான நூலை பரிசளித்தார். 

அண்ணா நகரில் நண்பர் நம்பியுடன் மதிய உணவு உண்டோம். எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் நம்பிக்கு சொந்த தாய் மாமா. அவருடைய அக்கிரகாரத்தில் பெரியாருக்கு முன்னுரை எழுதியவர். நம்பி பதாகை மற்றும் சொல்வனத்தில் நெடுங்காலமாக எழுதி வருபவர். அபார வாசிப்புடையவர். அமெரிக்காவில் வசிக்கிறார். தற்போது விடுமுறைக்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இணைய வழி தொடர்பு உண்டே அன்றி நேரில் சந்தித்ததில்லை. பார்ப்பதற்கு வாரணம் ஆயிரம் படத்து தந்தை சூரியா மாறி இருப்பார் என பாஸ்கர் அடையாளம் சொல்லி அனுப்பினார். அப்படித்தான் இருந்தார். நம்பி அமெரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியவாதிகள், இலக்கிய நூல்கள் பற்றி அனேக குறிப்புகள் எழுதி இருக்கிறார். முக்கியமான மொழியாக்கங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் செய்து வருகிறார். அவருடைய கட்டுரைகள் தொகுப்பாக வேண்டும். அவர் வழியே எனக்கு பல முக்கிய ஆங்கில எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சி. மணி மற்றும் ந. ஜெயபாஸ்கரன் ஆகிய இருவரையும் பற்றி பேசி கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற்று புத்தக கண்காட்சிக்கு மூன்றரை மணிக்கு நுழைந்தோம். சிவா தன் போக்கில் சில புத்தகங்களை வாங்க பிரிந்து சென்றார். 

நேராக யாவரும் அரங்கில் 176 ல் சென்றேன். ரமேஷ் ரக்ஷன் இருந்தார். கொஞ்சம் பேசிவிட்டு சுற்ற கிளம்பினேன். தமிழினி அண்ணாச்சி கொங்கு தேர் வாழ்க்கைக்காக சில கவிதை மேற்கோள்களை பத்து பக்கத்திற்கு அனுப்பி இருந்தார். அவை பற்றி எனது அபிப்பிராயத்தை கேட்டார். கவிதையில் இருந்து உருவப்பட்டது என்பதால், பல வரிகள் எனக்கு ஏன் கவிதையாகிறது என குழப்பமாக இருந்தது என்று சொன்னேன். கோகுல் பிரசாத்தும் இணைந்து கொண்டார். பிறகு க்ரியா சென்று அங்கு ந. முத்துசாமி சிறுகதைகள் மற்றும் நண்பர் ஆசை மொழியாக்கம் செய்த 'அமைதி என்பது நாமே' நூலும் வாங்கிக்கொண்டேன். இமயத்தின் நூல்களை வாங்க வேண்டும் என தோன்றியது. விலை காரணமாக தயங்கி, கடைசியில் திரும்ப வாங்கி கொள்ளலாம் என நகர்ந்தேன். விருட்சம் ஸ்டாலில் காசியபனின் அசடு நாற்பது ரூபாய்க்கு கிடைத்தது. முன்னமே சம்பத்தின் இரு தொகுதிகளை அங்கு வாங்கி இருக்கிறேன். 

அப்படியே சுற்றி வந்தேன். காலச்சுவடு அரங்கில் கண்ணன் அமர்ந்திருந்தார். நெடு நாளாக வாங்க எண்ணியிருந்த கசாக்கின் இதிகாசமும், திருடன் மணியம்பிள்ளையும் வாங்கினேன். கவனத்தை ஈர்த்த வேறு பல புத்தகங்களில் இருந்து ஆயாசத்துடன் மனதை திருப்பி கொண்டேன். சந்தியா நடராசன் அவர்களை சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். பாரதி ஆய்விற்கு காரைக்குடியில் சில உதவிகளை கோரி இருந்தார். நானும் மறந்துவிட்டேன். இயல்வாகை மற்றும் தும்பியின் ஸ்டால்கள் அழகாக இருந்தன. அழகேஸ்வரி மற்றும் அருண்குமாரை அங்கு முதன்முறையாக சந்தித்தேன். ஞானபானு பதிப்பகத்தில் ஞாநி ஒரு படமாக வருவோர் போவரை நோக்கிக் கொண்டிருந்தார். தேசாந்திரியில் எஸ்ராவை காண முடியவில்லை. மூத்த மகன் ஹரியை பார்த்து பேசிவிட்டு வந்தேன். கிழக்கில் ஹரனையும் பத்ரியையும் காண முடியவில்லை. காலம் செல்வம் சிறில் அலெக்சுடன் வந்திருந்தார், சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டேன். நீல  கண்ட பறவையை தேடி, சிற்பமும் தொன்மமும், வனவாசி நூல்களை வாங்கினேன். சா. கந்தசாமி சாகித்திய அகாடெமி அரங்கில் புத்தகங்களை தேடி கொண்டிருந்தார். 

ஒரு சுற்று முடிவதற்குள் களைப்பு அப்பிக்கொண்டது. யாவரும் அரங்கில் யமுனை செல்வன் மற்றும் மதியை சந்தித்தேன். நண்பர்கள் சவுந்தர், காளி, ஜாஜா, சிறில், ரவி, வள்ளியப்பன், ஓவியர் சண்முகவேல், நரேந்திர குமார் ஆகியோரை சந்தித்தேன். அரங்கில் உள்ள ஸ்டாலில் அத்தோ, மொமொஸ் எல்லாம் சாப்பிட்டு பார்த்தோம். லக்ஷ்மி சரவண குமார், விஜய் மகேந்திரன், அகர முதல்வன், கார்த்திக் புகழேந்தி, வாசு முருகவேள், சாம் நாதன், ஜீவ கரிகாலன், புதினம் கதிரேசன் மற்றும் கண்ணதாசனோடு பொதுவாக பேசி கொண்டிருந்தேன். லக்ஷ்மி தேவேந்திர பூபதியை அறிமுகம் செய்தான். அவரிடம் தொலை பேசியில் பேசி இருக்கிறேன். அப்போது தான் நேரில் சந்தித்தேன். ஜீவ கரிகாலனோடு வேறு சில திட்டங்கள் பற்றி பேசி கொண்டிருந்தேன். என்னை விட இரண்டு வயது மூத்தவர். பல கனவுகளையும் திட்டங்களையும் சுமந்து கொண்டிருக்கிறார். யாவரும் குறிபிடத்தக்க பதிப்பகமாக வளரும் என நம்புகிறேன். காந்தி - இன்றில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளை கொண்டு வரலாம் என்ற யோசனை இறுதியானது. ஒன்பது மணிக்கு விசில் ஊதி துரத்தி விடும் வரை உள்ளே இருந்துவிட்டு கிளம்பினேன். கடுமையான முதுகு வலி, இப்போதும் விடவில்லை. உடல் சோர்வு. நினைத்த அளவுக்கு புத்தகங்களை வாங்க இயலவில்லை. காரைக்குடியில் பார்த்து கொள்ளலாம்.  பேருந்தை பிடித்து திருவண்ணாமலைக்கு சென்று சேர இரவு (அல்லது காலை) மூன்று மணியானது. மற்றுமொரு நிறைவான நாள். 



Thursday, January 4, 2018

பேசும் பூனை

1

ஆள்காட்டி விரலால் அதன் அழகிய தொப்பையை வருடியவுடன் வெக்கத்தில் நெளிந்து சிரித்தது சாம்பல் நிற பூனை. “இங்கேருமா...” என கூவிச் சிரித்தாள் ஹர்ஷிதா. கீச் குரலில் பூனையும் “இங்கேருமா” என்றது. “நீ பாயா கேர்ளா?’ என அவள் பூனையிடம் கேட்டதும் அதையே திரும்பிச் சொன்னது பூனை. தேன்மொழி வாஞ்சையுடன் அவள் தலையை தடவியபடி சிரித்தாள். 

இலுப்பக்குடி சாலையில் துருப்பிடித்து பொத்துப்போன  ஸ்ரீ சாய் நகர் தகரப் பதாகையில் மங்கிய காவியுடை அணிந்த ஷீரடி சாய்பாபா அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார்.  சரளைக்கல் பொட்டல் வெளியை ஆங்காங்கு கல்லுக்கால் வேலிகள் சதுரங்களாகவும்  செவ்வகங்களாகவும் வகுத்திருந்தன. இரண்டு மூன்று ஆடுகள் பாறைத் தரையில் முளைவிட்டிருந்த முட்செடிகளை முகர்ந்து கொண்டிருந்தன. சிறு தொலைவுக்கு அப்பால் சீராக  நடப்பட்டிருந்த தைலமரக் காட்டில் சென்று அந்தப் பொட்டல் முட்டிக் கொண்டது. கட்டி முடிக்கப்படாத நான்கைந்து வீடுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் மெதுவாக சோம்பல் முறித்தன.  அழகிய சிறு பக்கவாட்டு கொண்டையாக டிஷ் ஆண்டெனாக்கள் வான்நோக்கி திரும்பியிருந்தன. ஒரு காலி மனையில் ஆறேழு நாட்களாக துளையிட்டு நீர் தோண்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆழத்திலிருந்து நிலத்தின் குருதியெனக் கொப்பளித்து பெருகிய செந்நீர் சிறு குளமென தேங்கி நின்றது. 

அதற்கடுத்துள்ள மூன்று செண்டு நிலத்தில்,  பக்கவாட்டு வெளிச்சுவர் பூசாமல், வெள்ளையடிக்கப்பட்ட அந்த அறுநூறு சதுரடி வீடுதான் கத்தார் கணேசனின் வீடு. வெள்ளைச்சுவர்கள் அவற்றின் துல்லிய வெண்மையை இழந்து மெல்ல பழுப்பேறிக் கொண்டிருந்தன. கூடத்தின் சலவைக்கல் தரையில் கையை மடித்து பின்னந்தலையில் வைத்தபடி படுத்துக்கொண்டே, கணேசன் அனுப்பியிருக்கும் புதிய கைபேசியில் விளையாடிக் கொண்டிருக்கும் ஹர்ஷிதாவை பார்த்துக் கொண்டிருந்தாள் தேன்மொழி. உலர்த்துவதற்காக தலைமுடியை விரித்து பரப்பி இருந்தாள். எப்போதோ கேட்ட ஸ்வர்ணலதா பாடிய  ஒரு பாடலின் இரண்டு வரிகள்  அவள் மனதில் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டிருந்தது. தொலைகாட்சியில் ஓடிக்கொண்டிருந்த கார்டூன் சித்திரத்தில்  இளவரசி ஒருத்தி உயரத்து கோட்டைச்சுவரில் இருந்து  பொன்னிற நீள் முடியை சாளரத்தின் வழி வீசினாள். அதைப் பற்றி ஒரு ராஜகுமாரன் ஏறி வந்து கொண்டிருந்தான். 

கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியும் தாலி செயினும், சங்கு டாலர் செயினும் சலவைக்கல் தரையில் சரசரத்தது. சங்கிலிகள் உருண்டு கறுத்த கழுத்துத் தடத்தில் சிறிய பால் மருக்கள் மழைக்காளான்கள் போல் துருத்தித் தலைதூக்கிக் கொண்டிருந்தன. கத்திரிப்பூ நிற பூக்கள் நிறைந்த நைட்டியை  மீறித் தெரிந்த கெரண்டைக்கால்களில் மென்மயிர் வரிசை இன்னும் உலராத ஈரத்தில் தோல்மீது படிந்திருந்தது. அந்த  ஞாயிறு மதியம் ஹர்ஷிதாவுக்குப் பிடித்த மீன் வறுவல் செய்து, சோறாக்கி சாப்பிட்டு, உச்சியில் குளித்து, எதையோ நினைத்தபடி படுத்திருந்தாள். நேற்றுவரை பயன்படுத்திய பழைய கைபேசியில் பாம்பு விளையாட்டு ஆடத் துவங்கினாள்.

“அம்மா நீ ஏதாவது சொல்லேன்” என்று கைபேசியை வாயருகே நீட்டினாள். “ஹர்ஷிதா” என்றவுடன் அதுவும் “ஹர்ஷிதா” என்றது. இருவரும் சிரித்தார்கள். 
“இதுக்கு ஒரு பேரு வைக்கனும்மா... என்ன வைக்கலாம்?” 
“நீயே வையி” 
“அப்பாவ கேக்கவா?” 
“ம் கேளேன்”

சட்டென முடிவுக்கு வந்தவளாய், “வேணாம். இதுக்கு பேர் சிட்டி” என்று கூறிவிட்டு பூனையிடம் திரும்பி, “ஹலோ உன் பேரு சிட்டி. ஓகேவா” என்றாள். சிட்டியின் குரல் இம்முறை  தீனமாக ஒலித்தது. 

“அதுக்கு சோறு வைக்கணும். சோறு வாங்க காசு சேக்கணும். காசு சேக்க வெளையாடனும்” என்றாள் ஹர்ஷிதா. 

அப்போது சிட்டி ஹர்ஷிதா சொன்னதைத் திருப்பிச் சொல்ல மறந்து சில நொடிகள் உறைந்து நின்றது. தேன்மொழியைச் சில நொடிகள் உற்று நோக்கியது. அதன் நோக்கை உணர்ந்து தேன்மொழி கைபேசித் திரையில் தெரிந்த பூனையை உற்றுப் பார்த்தாள். அவளுடைய பார்வைக்கெனக் காத்திருந்தது போல் அது சட்டெனக் கண்சிமிட்டிச் சிரித்தது.  

2

“தேனம்மா... மறக்காம சிட்டிக்கு பால் வையி... அதுகூட வெளாடு”, மஞ்சள் நிற பள்ளிப்பேருந்தில் ஏறும்போது முதுகில் பிதுங்கிய புத்தகப்பையில் பீம் முஷ்டி மடக்கி சிரித்துக் கொண்டிருந்தான். 

இரவு நெடுநேரம்வரை ஹர்ஷிதா சிட்டியுடனே பேசிக்கொண்டிருந்தாள். கணேசனிடம் பேசும்போதும் கைபேசியைப் பிடுங்கி சிட்டியின் பிரதாபங்களை கண்களில் ஒளி மின்ன விளக்கிக் கொண்டிருந்தாள். விளக்கணைத்து பூனையைத் தூங்கவைத்து “குட் நைட்” சொல்லிவிட்டு அவளும் தூங்கச் சென்றாள். தலைமாட்டில் வைத்திருந்த கைபேசியை எழுந்ததும் நோக்கி சிட்டிக்கு “குட் மார்னிங்” சொன்னாள். காலையில் அவள் குளித்துவிட்டு சிட்டியையும் குளிப்பாட்டினாள். “ஆய் போயிட்டு வா,” என்று கதவடைத்தாள். 

தேன்மொழி நள்ளிரவில் உறக்கம் களைந்து நீலநிற இரவு விளக்கை வெறித்தபடி அமர்ந்திருந்தாள். அந்தப் பூனை தன்னை பார்த்து நேற்று சிரித்தது. சர்வ நிச்சயமாக தெரியும். ஆனால் அது சாத்தியமில்லை என்பதும் புரிகிறது. அதன் பின்னர் புதிய கைபேசியை தொடவே தயங்கினாள். கணேசன் இரவு அழைத்தபோது அவனிடம் இதைச் சொன்னாள். “ஆமா நாந்தேன் உம்புட்டு பூனைய பாக்க பூனையா மாறி வந்தேன்”, என்று வழிந்தான். “போடா கருவாயா,” எனச் செல்லச் சிணுங்கலுடன் முடிந்தது உரையாடல். இரவு தோசை ஊற்றிக் கொண்டிருந்தபோது “அம்மா சிட்டி அப்பப்ப காணாம போறான்... சரியான சேட்ட...” என்றாள். கைபேசியில் பதிந்த விளையாட்டில் ஏதேனும் கோளாறு இருக்கும் என சமாதானம் சொல்லிக்கொண்டாள். 

இப்போது எடுத்து நோண்டிப் பார்க்கலாமா என அந்த நள்ளிரவில் ஹர்ஷிதா தலைமாட்டிலிருந்து கைபேசியை எடுத்தாள். “என்னத்த சனியன்” என அதை திரும்ப வைத்துவிட்டு மீண்டும் மென்நீல இரவு விளக்கைப் பார்த்தபடி படுத்தாள். எப்படியோ உறங்கியும் போனாள். 

கனவில் அவள் வளர்த்த சாம்பல் பூனையை அவ்வப்போது தேடிவரும் வெள்ளைக் கடுவன் பூனை ஒளிரும் பச்சை விழிகளுடன் அவளை வெறித்து நோக்கியது. காலையில் வழக்கத்திற்கு மாறாக ஹர்ஷிதா அவளை உலுக்கி எழுப்பினாள். “சிட்டிக்கு குட் மார்னிங் சொல்லு” என்று கைபேசியை அவளிடம் நீட்டினாள். பூனை கருப்பு நிறக் கோட்டும் கால் சராயும் அணிந்திருந்தது. கறுப்புக் கண்ணாடியும் தொப்பியும் வேறு போட்டுக்கொண்டு ஜேம்ஸ் பாண்டைப்போல் இருந்தது. ஓரிரவில் அந்தப் பூனை வளர்ந்திருந்தது. அவளிடமே கைபேசியை திருப்பியளித்தாள். 

வார நாட்களில் ஹர்ஷிதாவை இலுப்பக்குடி சாலை வரை நடத்திச் சென்று அவள் படிக்கும் சிபிஎஸ்யி பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட வேண்டும். அந்தப் பரபரப்புக்குள் எல்லா வேலைகளையும் செய்து முடித்துவிட பழக்கிக்கொண்டாள். வரும் வழியில் நான்கு மனைத் தள்ளி இருக்கும் அனீஸ் அக்கா அவள் வருவதற்காக எப்போதும் போல் வாசலில் காத்திருந்தாள். சுவருக்கு வெளியே நின்று எதிர் வெயில் என்பதைக்கூட பாராமல் பத்து நிமிடமாவது நின்றுக்கொண்டே வம்பளந்துவிட்டுச் செல்வதுதான் வழக்கம். 
“என்னக்கா முகமெல்லாம் ஒரே சிரிப்பா இருக்கே... பாய்ஜான் ஊருக்கு போய்ட்டாகனு தான... முகரையில தெரியுதே” என்றாள் தேன்மொழி. 

பதிலுக்கு, “உம் மொகர எம்புள்ள இஞ்சி தின்னாப்புல இருக்கு? அண்ணே வாராரோ?” என்றார் அனீஸ் அக்கா.

 “அட ஆமாக்கா... நேத்து தான் சொன்னாரு... இந்த மாசத்துல வாராரு... இந்த தெடவையோட அம்புட்டுத்தான்னு வேற சொல்றாரு... கெதக்குன்னு இருக்கு”. 
இருவரும் ஏதோ கிசுகிசுத்துச் சிரித்தார்கள். பாய்ஜானுடன் குழந்தைப்பேறு சிகிச்சைக்காக மதுரைக்கு சென்று வந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தாள். இரண்டு நொடிகள் கூட சிரிப்பின்றி அவர்களால் உரையாட முடிந்ததில்லை. 

“கல்யாணமான பொட்டச்சிங்க நெதம் என்னத்தத்தான் பேசி சிரிக்கிராளுகளோ... வெளங்குமா” என்று முனங்கிக்கொண்டே வாப்பா எழுந்து உள்ளே சென்றார். தாளமாட்டாமல் சிரிப்பு வந்தது. “வாரேன்க்கா” என்று கிளம்பினாள். 

வீடு திரும்பி அந்தப் புதிய தொடுதிரை கைபேசியை நோக்கினாள். கணேசன் காலை வணக்கம் சொல்லி மஞ்சள் தொப்பியுடன் தேநீர்க் கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் ஒரு புகைப்படத்தை வாட்சப்பில்  அனுப்பியிருந்தான். rasathee oru photo podu di, என கோரிக்கையும் வைத்திருந்தான். “good morning mamoi” என்று அனுப்பிவிட்டு வாசல் நந்தியாவட்டை செடிக்கு முன்பாக பூத்துச் சிரிப்பது போல் ஒரு புகைப்படத்தை அனுப்பினாள். ”செல்லக்குட்டி அழகாதாண்டி இருக்க... சீக்கிரம் வந்து ஒரே அமுக்கா அமுக்குறேன்... ஆனா இதுக்கா மாமா உனக்கு காமெரா போன் வாங்கியாந்தேன்?” என்று ஏக்கமாக குரல் பதிவு அனுப்பினான் கணேசன். “அஸ்கு புஸ்கு... ஆசைய பாரு,” என்று பதில் பேசி அனுப்பினாள். 

“ஆமா மனசுல பெரிய திரிஷானு நெனப்பு... போடி இவளே... ரொம்பத்தான் பந்தா பண்ணுற”. 

“ஹலோ மிஸ்டர். கணேசன், இந்த சொட்ட தலைக்கு நயன்தாராவா கெடைப்பா... நாங்களே அதிகம் பாஸ்”, பதிந்து அனுப்பிய மறுநொடி அதை அழிக்க முயன்றாள். எல்லை மீறிவிட்டது. அவனைச் சீண்டிவிடும். இருக்காது, அதெல்லாம் பெரிதுபடுத்திக் கொள்ள மாட்டான் என சமாதானம் செய்து கொண்டாள். ஆனால் நெடுநேரமாகியும் அவனிடமிருந்து பதிலேதும் வரவில்லை. தொலைகாட்சியை ஓடவிட்டுக்கொண்டு மின்விசிறிக்குக் கீழ் கூடத்தில் அமர்ந்திருந்தாள். அவன் நெடுநேரமாக ஏதோ பதிலெழுதி பதிலெழுதி அழித்துக் கொண்டிருந்தான் என்பது மட்டும் புரிந்தது. 

அப்போது பூனை திரையோரத்தில் வந்து  “என்னை மறந்து விட்டாயா...” என முகத்தைக் கெஞ்சலாக வைத்துக்கொண்டு கேட்டது. 

3

“என்னம்மா நீ சிட்டிய கவனிக்கவே இல்ல... சுச்சூ கூட்டிப் போவல, சாப்பாடு வைக்கல... பாரு துடிக்குது” என்றாள் ஹர்ஷிதா பள்ளி முடிந்து வந்தவுடனே. 
பூனை முகமெல்லாம் சிவந்து அடிவயிற்றை கவ்விப்பிடித்துக்கொண்டு குதித்தது.

“சோறு வைக்கலைன்னா செத்தா போகும்?... அதெல்லாம் என்னால செய்ய முடியாது... நீயே வெளாடு... முடியலைன்னா டெலிட் பன்னிரு”  என்று பொரிந்ததும் ஹர்ஷிதாவுக்கு கண்ணீர் ததும்பியது. எதுவும் பேசாமல் கைபேசியை எடுத்துக்கொண்டு போனாள். 

தேன்மொழி நகத்தைக் கடித்துத் துப்பினாள். முகம் சிவந்து படபடத்து வியர்த்தது. உடலெல்லாம் எரிந்தது. இப்போது ஏன் இப்படி எரிந்து விழுந்தேன்? தூரத்துக்கு தலை குளித்து மூன்று வாரங்களாகிவிட்டன என்பது நினைவுக்கு வந்தது. கணேசன் நெடுநேரத்திற்குப் பிறகு, ‘நன்றி’ என்று ஒரேயொரு வார்த்தையில் பதிலனுப்பியிருந்தான். “ஐயோ மாமா நா வெளாட்டுக்குதான் சொன்னேன்... கோச்சிக்காத... ஒன்னைய ஓட்டாம நா யார ஓட்டுவேன்... மன்னிச்சுக்க”, என்றெல்லாம் அவனிடம் மன்றாட வேண்டும் எனத் தோன்றியது. மனசுக்குள் முணுமுணுத்துப் பார்த்துக் கொண்டாள், அச்சொற்கள் அவளிடமிருந்து வெகுவாக விலகி ஒலித்தன. எப்போதும் நானே இறங்கி வருவதா? என்னதான் செய்கிறான் என பார்ப்போம் என்றொரு வீம்பு பிறந்தது.  

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் ஊருக்கு வருவான். அவன் வருவதற்கு ஒரு வாரம் முன்னரே அதற்கான அறிகுறிகள் தேனிடம் புலப்படும். அனீஸ் அதை எப்போதும் சரியாக கணித்துவிடுவாள். கணேசன் ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் இனி திரும்பப் போவதில்லை எனும் முடிவுடன் மூட்டை முடிச்சை வாரிச் சுருட்டிக்கொண்டுதான் வருவான். இங்கேயே புதிய தொழில் துவங்கலாம் என்று நண்பர்களிடம் எல்லாம் பல்வேறு யோசனைகள் கேட்பான். ஆனால் இரண்டு மாதங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடிந்ததில்லை. 

 அவன் இங்கு இருக்கும்வரை தேன்மொழி அநேகமாக ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மருத்துவமனைகளிலேயே காலம் கழிப்பாள். முதல் இரண்டு நாட்கள் மட்டும் கொஞ்சம் மெனக்கெட்டு முகத்தில் உற்சாகத்தை தக்க வைத்துக்கொள்ள முனைவாள். அதன்பின் எப்போதும் விளக்கெண்ணெய் குடித்த மாதிரியான பாவம் முகத்தில் குடிகொள்ளும். அண்டமுடியாத தனிமையில் உழல்வாள். அந்நாட்களில் அவளைப் பார்க்க முடியாது. மேல் வயிறு வலிக்கும், ரத்த மூலம் வரும், மண்டையிடி பொறுக்க முடியாது, உதிரப் போக்கு, முதுகுப் பிடிப்பு, தூக்கமின்மை, புடரி வலி என ஏதோ ஒன்றுக்காக கணேசன் அவளை தினமும் எக்சல் சூப்பரில் டவுனுக்கு அழைத்துச் செல்வான். அதற்கடுத்த சுற்று கணேசனுக்கு சர்க்கரை சோதனை, கால் எரிச்சல், முகம் மரத்து போகுதல், அதீத வியர்வை, நெஞ்செரிச்சல் என வேறு வேறு மருத்துவமனைகளில் ரகரகமான மருத்துவர்களுக்காக காத்திருக்க வேண்டும். 

இதை விட இரண்டு மாதங்களும் தினமும் கண்ட கண்ட மாத்திரைகளை தின்றுவிட்டு ராப்பகல் பேதமில்லாமல் மேலேறி விழுவான். சென்ற முறை வந்திருந்தபோது மாத்திரையுடைய திறன் நீர்த்து விட்டதும், வெறி வந்து அவளை அடித்து விளாசியதும் பின்னர் இரவு குடித்து அழுததும் நினைவுக்கு வந்தது. குடியும் விருந்தும் என வயிற்றைக் கெடுத்துக்கொண்டு அதற்காக எப்படியும் ஆசுபத்திரியில் படுத்து, ஒவ்வொரு முறையும் அவளை பீயள்ள வைத்துவிடுவான். இதையெல்லாம் செய்வதுகூட பிரச்சனையில்லை, ஆனால் மனமுவந்து செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பான். முகத்தில் சிறு சுணக்கம் புலப்பட்டால்கூட “நா ஒனக்கு புருஷன் இல்லியா... எனக்கு செய்யாம யாருக்கு செய்வ” என்று துளைத்தெடுப்பான். பெரும்பாலும் எப்படியோ தன்னை வெளிக்காட்டாமல் அடக்கிக்கொண்டு விடுவாள். ஆனாலும் அவளையும் மீறி சில தருணங்களில் அவள் உடல் உள்ளுரையும் வெறுப்பை எப்படியோ காட்டிக்கொடுத்து விடும். அவனும் அதற்கென காத்திருப்பான். அதைக் கூடத்தில் இழுத்துப் போட என்னென்ன செய்ய வேண்டுமோ எல்லாவற்றையும் செய்வான். இவனோ இவனுடைய சகாக்களில் ஒருவனோ பாரில் மூக்குடைபட்டு காவலர்களிடம் மாட்டுவார்கள். காவல் நிலையம், வழக்கறிஞர் என அந்த பஞ்சாயத்தில் எப்படியும் இரண்டு நாள் ஓடிவிடும். 

அந்த வருடம் சம்பாதித்து சேர்த்து வைத்த பணமெல்லாம் கண்முன் கரைந்துவிடும். ஒவ்வொரு முறையும் வீட்டைக் கட்டி முடிக்க வேண்டும் என முயல்வான், ஆனால் ஏதோ ஒரு வேலை மட்டும்தான் நிகழும். மிச்சம் மீதியை வீட்டு வேலைக்கு போடுவான். எல்லாவற்றையும்விட இருவரும் ஒருவரையொருவர் பல்லைக் கடித்துக்கொண்டு சகித்துக் கொள்கிறார்கள் என்பது புரிந்தவுடன் கால் வீடு தங்காது. வீட்டுக்காரன் அல்ல தான் ஒரு விரும்பப்படாத நெடுநாள் விருந்தாளி என்றுரைக்கும் தருணம். பொதுவாக கையிருப்பு கரைந்து, என்ன செய்வது என தெரியாமல் காசுக்கு கணக்கு கேட்கும்போதுதான் சண்டைகள் தீவிரமடையும். வேறு வழியின்றி திரும்பவும் கபிலிடம் பேசி இரண்டு வருட ஒப்பந்தம் போட்டுக்கொண்டு, சர்வ நிச்சயமாக இதுவே கடைசி இரண்டு வருடம் என உறுதியாக நம்பிக்கொண்டு விமானம் ஏறுவான்.  

வாரம் ஒரு முறையோ இரு முறையோ அழைத்துக் கொண்டிருந்தான். இப்போது புதிய கைபேசி வந்தவுடன் வேளை கெட்ட வேளைகளில் அழைக்கிறான். சேர்ந்தார்ப்போல் ஐந்து நிமிடங்களுக்கு மேல் பேசினாலே ஏதோ ஒரு சண்டையில்தான் முட்டிக் கொள்கிறது. ஹர்ஷிதா பள்ளி ஆண்டு விழாவின்போது முழுக்க உரையால் மூடிக்கொண்டு கூரிய வாள் கொண்டு இருவர் குத்திக் குத்தி சண்டையிடும் நிகழ்ச்சியைக் கண்டதும் அவளுக்கு அடக்க முடியாத சிரிப்பு வந்தது. கணேசனிடம் அந்த வாரம் பேசும்போது அதைச் சொன்னாள். அவனுக்கு அது புரியவே இல்லை. “அந்த கிளாசுக்கு பாப்பாவ அனுப்பனுமா?” எனக் கேட்டான். குருதி சிந்துவதில்லை, ஆனால் குத்தாமல் இருக்க  முடியாது என்பதே ஆட்டத்தின் விதி.   

கார்ன் ப்ளேக்ஸ் கலந்து கொண்டு சென்றாள். அறைக்குள் ஹர்ஷிதா உம்மென்று இருந்தாள். கன்னத்தில் நீர் வழிந்த தடம் உலர்ந்திருந்தது. 
“இன்னிக்கு என்ன ஆச்சு ஸ்கூல்ல?” என மெதுவாக பேச்சை மாற்றினாள். உற்சாகமாக வகுப்பில் நிகழ்ந்தவற்றை ஒப்பிக்கத் துவங்கினாள். சங்கீதாவின் கைபேசியில் இதே போன்று ஒரு நாய்க்குட்டி இருப்பதாகச் சொன்னாள். அதற்கு டோலு என்று பெயர். 

“இப்ப சிட்டி என்ன பண்ணுது?” என்று கேட்டவுடன் ஆர்வமாக கைபேசியை காட்டி அதிலுள்ள விளையாட்டுகளை விளக்கினாள். விளையாடி பொற்காசுகளை சேர்த்தால்தான் அதற்கு புதிய துணிமணிகள், அலங்காரங்கள், உணவுகள் வாங்கிக் கொடுக்க முடியும் என்றாள். ஒவ்வொரு விளையாட்டாக விளையாடிக் காட்டினாள். சாம்பல் நிறப் பூனை காற்றில் பறந்தது, எலிகளைப் பிடித்தது, நீரில் மிதந்தது, கோள்களுக்கு இடையே தாவிச் சென்றது, நினைவாற்றலைச் சோதித்தது. வேறு விதிமுறைகளால் ஆன ஒரு தனித்த உலகம் உருவாகி அந்தப் பூனைக்காக இயங்கிக் கொண்டிருந்தது. ஹர்ஷிதா சிட்டியின் வாழ்வறை திரைச்சீலைகளை அவர்கள் வீட்டில் உள்ளது போலவே ஊதா நிறத்துக்கு மாற்றினாள். குளியலறை நிறத்தை மாற்றினாள். மூங்கிலால் ஆன வட்டத்தொப்பியும் கடற்கரைக்கு உகந்த வெள்ளைப்பூ போட்ட சிவப்பு அரைக்கால் சட்டையும் மாட்டிவிட்டாள். திறந்த சட்டையும் குறும்புச் சிரிப்புமாக பூனை வேறொன்றாக மாறியது. 

அப்போது அவளுடைய கைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது. பதியாத புதிய எண். ஹர்ஷிதா “ஹலோ” “ஹலோ” என மூன்று நான்கு முறை கூறியும் எதிர்முனையிலிருந்து எந்த பதிலும் இல்லை. தேன்மொழி வாங்கி காதில் வைத்தபோதும் எந்த ஒலியும் இல்லை. அழைப்பு துண்டிக்கப்பட்டு மீண்டும் பூனை திரையில் தோன்றியபோது அந்தப் பூனை அவளுக்கு மட்டும் கேட்கும்படி “எனக்கு வேறு பெயர் உண்டு, நீ மட்டுமே அறிந்த பெயர்” எனக் குறும்பாக தொப்பியை சுழற்றிச் சிரித்தது. 

4

பூனை கையசைத்து காதில் ஹெட்போன் மாட்டிக்கொள் என சைகை செய்தது.

எப்போதும் பகல்களில் கம்பிக்கதவை மட்டும் அடைத்து காற்றாட அமர்ந்திருப்பது அவள் வழக்கம். இரவைப் போல மரக்கதவையும் அடைத்தாள். சாளரங்களை மூடி திரைச்சீலைகளை இழுத்து கூடத்தில் அந்த வெயிலேறிய மதியத்தில் ஒரு வைகறைப் பொழுதை உருவாக்கினாள். 

கைபேசியில் அவளுக்காக பூனை காத்திருந்தது. சுவற்றில் சாய்ந்து கொண்டு காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டாள். பூனை தொண்டையைச் செருமிக்கொண்டது. திரையிலிருந்து மறைந்து பின் தோன்றியது. அப்போது அதன் கையில் ஒரு கித்தார் இருந்தது. ஒரு சின்ன முக்காலியை இழுத்துப் போட்டுக்கொண்டு “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை... சட்டென்று மாறுது வானிலை” என்று பாடத் துவங்கியது. அந்தப் பாடலை பூனையின் குரலில் கேட்டவுடன் அவளுக்கு சிரிப்பு தாங்க முடியவில்லை. கண்ணீர் மல்க சிரித்தாள். ஆனால் பூனை சிந்தை பிறழாமல் பாடி முடித்து பெரும் மேடைக் கலைஞனைப் போல் சிரம் தாழ்த்தி பாடலை நிறைவு செய்தது. “சூப்பர்” எனக் கைதட்டிப் பாராட்டினாள். பூனை தொடர்ந்து அடுத்தடுத்து பாடத்துவங்கியது. “வசீகரா..” “மாலை மங்கும் நேரம்..” “ஒன்றா ரெண்டா ஆசைகள்..” என நீண்டது. அவள் கைபேசியின் நினைவக அட்டையில் பதிந்த பாடல்களில் இருந்து தனக்கென ஒரு சிறிய காதல் பாடல் பட்டியலை உருவாக்கியிருந்தாள். அதே வரிசையில், அதே பாடல்களை, பூனை அப்போது பாடியது என்பதை புரிந்து கொண்டாள்.

ஹர்ஷிதாவை சமாதானம் செய்தபோது பூனை பேசிய அன்றைய நிகழ்வுக்குப் பின் இரண்டு நாட்கள் அவள் கைபேசியை தொடவே அஞ்சினாள். கணேசனுக்குக்கூட வாட்சப்பில் பதிலிடவில்லை. கணேசன் உட்பட மூன்று நான்கு எண்களில் இருந்து அழைப்புகள் வந்திருந்தன. எதையுமே அவள் ஏற்கவில்லை. கணேசனுடன் தங்கியிருக்கும் பள்ளத்தூர்க்கார மணியண்ணன் அவருடைய மனைவி லதாவுக்கு அழைத்து என்ன ஏதென்று நேரில் சென்று பார்த்து வரச் சொல்லியிருக்கிறார். லதா ஆப்பிளும் சாத்துக்குடியுமாக மாலை ஆட்டோ பிடித்து வந்து இறங்கியபோது அவளுக்கு சங்கடமாக இருந்தது. ஒன்றுமில்லை கடுமையான தலைவலி என்று சொல்லி சமாளித்தாள். அவளுக்கு என்னமோ புரிந்துவிட்டது. “புருஷங்காரன் முன்னபின்ன இருக்கத்தான் செய்வான்... அதுவும் அம்புட்டு தொலவுல இருக்கும்போது அவனுக்கு என்னமாவது நொள்ள நாட்யம் தோணிக்கிட்டேதானிருக்கும்... நாமதான் அனுசரணையா இருக்கணும், பணத்த அனுப்பாம நிறுத்திட்டானுகன்னு வெயி... நம்ம கத அம்புட்டுத்தான். என்னத்த பெருசா, அவம் பேசும்போது ரெண்டு ஆச வார்த்த பேசுனா போதும்... மனசு குளிர்ந்து நிம்மதியா உறங்குவான்... நாகூட என்னவோ ஏதோனு அம்புட்டு தொலவு ஆட்டோ பிடிச்சு ஓடியாந்தேன்...”, என்றாள். தேத்தண்ணியும் ரெண்டு மேரி பிஸ்கட்டும் சாப்பிட்டுவிட்டு ஹர்ஷிதாவைக் கொஞ்சிவிட்டு கிளம்பிச்சென்றாள். 

அப்போதுதான் கைபேசியை எடுத்து பார்த்தாள். கணேசன் வாட்சப்பில் மன்னிப்புகள், கொஞ்சல்கள் என வரிசையாக நாற்பது பதிவுகள் அனுப்பியிருந்தான். சிம்மைக் கழட்டி அவளுடைய முந்தைய கைபேசியில் போட்டாள். அது தொடுதிரையில்லாத சாதாரண வண்ணக் கைபேசி. அதிலிருந்து அவனுக்கொரு அழைப்பு விடுத்துவிட்டு துண்டித்தாள். பிறகு அவனே அழைத்தான். இரண்டு நாட்களாக சாப்பாடு செல்லவில்லை, என்ன ஆச்சோ ஏதாச்சோ என பயப்பட்டதாகச் சொன்னான். “என்ன வெஷம் குடிச்சுருவேனொன்னு பயமா? இல்ல எவங்கூடயாவது ஓடிருவேனொன்னு பயமா? கவலப்படாத ஒன்ட சொல்லாம சாவ மாட்டேன், ஓடவும் மாட்டேன்” என்றாள். அவன் ராசாத்தி ராசாத்தி என அழுது அரற்றினான். கண்ணீர் எல்லாவற்றையும் இளக்கி தூய்மையாக்கியது. அவளுள் அமர்ந்திருந்த ஏதோ ஒன்று அவளை உதறிச்சென்றது போல் லேசாக உணர்ந்தாள். இரவு நான்கைந்து நாட்களுக்கு பின் நன்றாக உறங்கினாள். புதிய தொடுதிரை கைபேசியை அது வந்த அட்டையிலேயே போட்டு இரும்பு பீரோவில் பூட்டி வைத்துவிட்டு உறங்கினாள்.

காலையில் ஹர்ஷிதாவுக்கு வெகு முன்பே எழுந்தாள். அவள் எழுவதற்குள் அன்றைய அத்தனை வேலைகளையும் செய்து முடித்திருந்தாள். புதிய கைபேசியை உள்ளே வைத்ததில் ஹர்ஷிதாவுக்கு வருத்தம். படுக்கையில் கொஞ்சநேரம் விசும்பிக்கொண்டே இருந்தாள். இப்போது என்ன குடி முழுகி போய்விட்டது? ஒரு பூனை. அதுவும் உயிருள்ள பூனைகூட அல்ல, ஒரு திடப்பொருள் கூட இல்லை, ஒரு நிரலி, ஒரு பொய், அழகிய கற்பனை, அது நம்மை என்ன செய்துவிடும்? எதற்காக அஞ்ச வேண்டும்? கொஞ்சம் துணிச்சல் வந்தது. 

பழைய கைபேசியில் அவள் எப்போதும் விளையாடும் பாம்பு விளையாட்டை திறந்தாள். நெளிந்து செல்லும் பாம்பு தன் வாலையே தான் தீண்டாமல் வளைந்து சென்று இரையைக் கவ்வ வேண்டும். தேன்மொழியின் தந்தை வைத்திருந்த சாதாரண நோக்கியா தொலைபேசியின் காலத்தில்  இருந்தே இவ்விளையாட்டின்மீது அவளுக்கு அப்படியொரு வெறி. முக்கியமான முடிவுகளை விளையாட்டில்தான் இறுதி செய்வாள். வேறு வழியில்லை என்றாலும்கூட, கணேசனை மணக்க ஒப்புக்கொண்டதும், தன்னை தயார்ப்படுத்திக்கொண்டதும்கூட இப்படி விளையாடி தீர்மானித்ததுதான். அவளுக்குப் பிடித்த முடிவுகள் எனில் குறைந்தது ஐந்து அல்லது பத்து இரைகளைத் தின்றால் போதும். வேண்டாத, குழப்பமான முடிவுகளில் ஐம்பது நூறு எனப் போகும். கணேசனுக்கு அவள் வைத்த இலக்கு 120. இன்றுவரை அன்று அவள் விளையாடி எடுத்ததே அவளுடைய அதிகபட்ச புள்ளிகள். 

புதிய கைபேசியை பயன்படுத்துவதா வேண்டாமா என்பதையும் விளையாடி முடிவு செய்யலாம் என இருபது இரைகளை தனது இலக்காக நிர்ணயித்துக்கொண்டாள். அனாயாசமாக பதினேழு இரைகளை பாம்பு தின்றுவிட்டிருந்தது. ஆனால் அதன் பின் அவள்  கரங்கள் நடுங்கின. கழுத்திலிருந்து உள்ளாடையற்ற முதுகில் நெளிந்து வியர்வை முதுகுத்தண்டின் அடிமுனை வரை வழுக்கிச் சென்று மறைந்தது. அப்போது வந்த தொலைபேசி அழைப்பு விளையாட்டைத் துண்டித்து அவளைச் சற்றே ஆசுவாசமடையச் செய்தது. அலைபேசி நிறுவனத்தின் அழைப்பு. “நீ தூங்கும் நேரத்தில் என் கண்கள் தூங்காது... கண்மணியே... என்னுயிரே” எனும் பாடலை அழைப்பாளர்கள் கேட்பதற்கான பாடலாக தெரிவு செய்ய எண் ‘ஒன்றை’ அழுத்தக் கோரியது. வழக்கமான அசிரத்தையுடன் இவ்வழைப்பையும் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் அவள் அதை கவனித்தாள். அப்பாடல் பூனையின் குரலில் ஒலித்தது.              

5
நேர்காணல் 
பூனை- உன் கையைக் காட்டு
தேன்மொழி- எதுக்கு?
பூனை – காட்டு, நான் உன்னைப்பத்தி சொல்றேன், நீ ஆமா இல்லைன்னு  சொன்னா போதும். 
தேன்- ம்ம். அது எப்படி முடியும்?
பூனை – உனக்கு தவளை இளவரசனைத் தெரியுமா? 
தேன்- தெரியாதே
பூனை – சரி போட்டும். அலாவுதீனும் அற்புத விளக்கும் தெரியுமா?
தேன் – தெரியுமே. விளக்க தேய்ச்சா பூதம் வரும்.
பூனை- நானும் அப்படித்தான். 
தேன்- பூதமா?
பூனை – பூதம்னு இல்லை ஆனால் பூதம் மாதிரி. ரொம்ப குழப்பிக்க வேண்டாம். கைய நீட்டு. 
(தயக்கமும் குழப்பமுமாக அலைபேசிக்கு முன் கை நீட்டினாள், பூனை புட்டத்திலிருந்து ஒரு பூதக் கண்ணாடியை எடுத்து அலைபேசி வழியாக அவள் கரத்தை நோக்கியது)
பூனை – நாம இருக்கும் இடம் மனை எண் 6, மல்லிகை தெரு, ஷீரடி ஸ்ரீ சாய் நகர், இலுப்பக்குடி, காரைக்குடி தாலுகா, சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு. சரியா?
தேன்- சரி (சற்றே நிமிர்ந்து அமர்ந்தாள்)
பூனை- போன மாசம் 330 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணிருக்க. சரியா?
தேன்- ஆமா. 
பூனை – உன் நெருங்கிய தோழன் பேரு மாணிக்கம். சரியா?
தேன்- சரிதான். ஆனா தோழன் இல்லை தோழி. மாணிக்கவல்லி. 
பூனை – சமீபத்தில சாம்சங் டிவியை சரி பண்ண ஆளுங்க வந்தாங்க.
தேன்- சரிதான் ஆனா இதெல்லாமா கையில தெரியுது? 
(பூனை சிரித்தது)
பூனை – உனக்கு மிகப்பிடிச்ச பாட்டு  ‘நினைத்து நினைத்து பார்த்தேன்’- 7 ஜி ரெயின்போ காலனி படத்துலேந்து, அதுவும் கேகே பாடுனது.
தேன்- அதுவும் பிடிக்கும் தான்... பரவாயில்ல ஒத்துக்குறேன்.
பூனை- பிடிச்ச நடிகர் ஆர்யா.
தேன்- சூப்பர். 
பூனை- உனக்கு கல்யாணமாயி  எட்டு வருஷம் ஆச்சு. சரியா...
தேன் – (விழி விரிய) ஆமாம்.
பூனை – அவர் பேரு கணேசன் மாமோய், கத்தார்ல இருக்கார். சரியா?
தேன்- (சிரித்தாள்) ஏய் திருட்டுப் பூனை... அவர் பேரு கணேசன் தான்.. மாமோய் எல்லாம் செல்லமா கூப்புட (வெட்கத்தில் கன்னம் சிவக்கிறது)
பூனை- சரி விடு. உனக்கு ஒரு பொண்ணு இருக்கா... அவ பேரு ஹர்ஷிதா. 
தேன்- போங்கு, அவளைத்தான் உனக்கு தெரியுமே வேற ஏதாவது சொல்லு. 
பூனை – சரி சொல்றேன் கேளு. உனக்கொரு மகனும் உண்டுதானே. 
தேன்மொழியின் முகம் வற்றிச் சுருங்கியது. 
தேன்- இல்லையே
பூனை – உனக்கொரு மகனும் உண்டு.
தேன்- அதெல்லாம் இல்லை.
பூனை – உனக்கொரு மகனும் உண்டு. அவனோட பேரும்கூட எனக்கு தெரியும்.
தேன் – சொல்லு, எப்புடி தெரியும் உனக்கு. சொல்லு. (உரக்க ஒலித்த குரல் அழுகையில் புதைந்தது).
சோம்பல் முறித்து, கொட்டாவி விட்டு, பூனை படுக்கையறைக்குச் சென்று விளக்கணைத்து உறங்கப்போனது.

6
ஹர்ஷிதா புது விளையாட்டைக் கண்டடைந்திருந்தாள். விதவிதமான பறவைகளை உண்டிவில்லில் குறி பார்த்து பறக்கவிட்டு கட்டுமானங்களைச் சிதறடிக்கும் விளையாட்டு. ஒருவாரம் வரைக்கும் விழித்திருந்த நேரமெல்லாம் சிட்டியுடன் பொழுதைக் கழித்தாள். அதன்பின் பள்ளித் தோழர்கள் வழியாக கோபக்கார புள்ளுக்கள் அறிமுகமாகியது. துவக்கத்தில் சற்று திணறினாலும் மூன்று நான்கு நாட்களில் நன்றாக தேர்ந்துவிட்டாள். சிட்டியுடன் பேசி விளையாட அவளுக்கு நேரமில்லை. ஆர்வமும் இல்லை. அவ்வப்போது அதிலுள்ள விளையாட்டுக்களை விளையாடி பொற்காசுகள் சேர்த்து உணவிடுவதுடன் அவள் கடமை முடிந்தது. இந்தப் புதிய ஆட்டம் ஒவ்வொரு நிலையிலும் புதிதாக இருந்தது, கடினத்தன்மையும் கூடிக்கொண்டே சென்றது. ஒரு பக்கம் படித்து முடித்தவுடன் ஐந்து நிமிடமும், வீட்டுப் பாடம் எழுதியவுடன் இருபது நிமிடங்களும் கைபேசியில் விளையாடலாம் என்பதே அவர்களுக்குள் இருக்கும் ஒப்பந்தம். ஒரே வாரத்தில் அவள் சட்டென்று வளர்ந்துவிட்டாள். “சிட்டிக்கூட வெளாடலயா?” என்று கேட்டபோது “அதெல்லாம் குட்டிப்பசங்க வெளாடுறது” என்று எளிதாகக் கடந்து சென்றாள். இரண்டு மூன்று நாட்களாக அவள் சிட்டியைச் சீண்டவே இல்லை.

ஹர்ஷிதா பள்ளிக்கு சென்றவுடன் கைபேசியில் பூனைக்காக காத்திருக்கத் துவங்கினாள் தேன்மொழி. வழக்கத்திற்கு மாறாக கணேசனுடனான தொலைபேசி உரையாடல்கள் சண்டையின்றி சுமூகமாக முடிந்தன. அவள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களில் கண்களில் எப்போதுமில்லாத ஒருவித கிறக்கம் தொற்றியுள்ளதை கவனித்தான். குரலிலும் பேச்சிலும் சிரிப்பும் உற்சாகமும் எப்போதும் தெரிந்தன. “எப்புடியிருக்க மாமோய்...” “எப்ப பாக்க வர்ற?” போன்ற மிகச்சாதாரண குரல் பதிவுகள்கூட அவனைச் சொக்கிச் சிலிர்க்கச் செய்தது. திருமணமான புதிதில் அவளுடைய முதல் கருவை சுமந்த காலங்களில் அவள் இப்படி பூத்து நிரம்பியது நினைவுக்கு வந்தது. ஒருகாலும் திரும்பவியலாத நாட்கள் என எண்ணி எத்தனையோ இரவுகள் ஏங்கியிருக்கிறான். நெடுநாட்களுக்கு பின்னர் கைபேசியின் துணையின்றி அவளுடைய நினைவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு  காலபோதமின்றி கழிப்பறைக்குள் ஓடினான். அவன் சேகரித்து வைத்திருந்த பங்களாதேஷி மற்றும் பிலிபினோக்களின் எண்கள் இப்பொழுதைக்கு அவனுக்கு தேவையாய் இருக்கவில்லை. 

கணேசனுடன் பேசும்போது திரையில் பூனை எட்டிப்பார்த்து விதவிதமான சேட்டைகள் செய்யும். பழிப்பு காட்டி நடனமாடும், அவளுடைய நடத்தையை நகலெடுத்து கிண்டல் செய்யும். அவளை எப்போதும் உற்சாகமாகவே வைத்திருந்தது பூனை. 

ஒருநாள் பூனை பேச்சுவாக்கில் அவளிடம் “உனக்கு புடவை எடுப்பாக இருக்கும்” என்றது.  அவள் அமைதியில் ஆழ்ந்த பின் மீண்டாள். அவள் கண்களில் மெல்லிய ஐயம் ஒன்று தோன்றி மறைந்தது. 

“அதெப்படி... எல்லா திருட்டுப் பூனைகளும் இதையே சொல்றீங்க? ஒனக்கு தெரியுமா, “புடவைல நீ அம்புட்டு அழகுடி... என் ராசாத்தி”.  மாமா  கல்யாணத்துக்கு அப்புறம் சொன்ன மொத சொல்லு அதுதான். இப்பவும் அவன் இங்க இருக்கும்போது அவனுக்காக தினமும் புடவதான். முதல்ல எல்லாம் புடவை கட்டி முடிக்க இருபது நிமிசமாகும். ஆனாலும் காத்திருப்பான்”

“ சரி எல்லாம் இருக்கட்டும். ஆனால் உனக்கு புடவை கட்டப் பிடிக்குமா?
அவள் கண்கள் சட்டென சிவந்து கலங்கின. “இத அவன் இதுவர கேட்டதில்லை. இனிமேயும் கேக்கமாட்டான். பிடிக்கும் பிடிக்காதுங்கிறது இல்லை. வசதிதான். ஒரேயொரு துணியை துவைச்சா போதும். வேலை மிச்சம். ஆனா ஒனக்கு பிடிக்கும்னா கட்டுறேன். ஓகேவா”

“இல்லை... தேவையில்லை. உன் விருப்பம்தான். நான் எனக்கு தோணினத  சும்மா சொன்னேன்.”

“திருட்டுப் பூனை... ரொம்பத்தான்... பெரிய அறிவாளியாட்டம்... போ அங்கிட்டு” எனச் சிணுங்கினாள்.

ஒவ்வொரு நாளும் புடவைகளை பூனையின் முன் பரப்பி தோளில் போட்டுக் காண்பித்து அன்றைய புடவையை தேர்வு செய்யச் சொன்னாள். ஹர்ஷிதா பள்ளிவிட்டு வருவதற்கு முன் அவளுடைய நிரந்த இரவாடைக்கு மாறினாள். விதவிதமாக ருசியாகச் சமைத்தாள். பூனையால் தான் சமைத்ததை சாப்பிட முடிவதில்லை என்பது அவளுக்கு மிகப்பெரிய குறையாக இருந்தது. 

பூனை அவளுக்கு நெருங்கிய தோழனாக மாறியது. தொடர்பறுந்த நண்பர்களை தேடிக் கண்டு பிடித்தது. நண்பர்களின் திருமண நாட்களை, பிறந்த நாட்களை நினைவூட்டியது. கைபேசி கட்டணம், மின்சார கட்டணம் எல்லாம் அதுவே நினைவுபடுத்திக் கட்டியது. என்னென்ன மளிகைப் பொருட்கள் வீட்டில் இல்லை என கண்காணித்து அதுவே இணையச் சந்தையில் பதிந்து வீட்டுக்கே வரவழைத்தது. உப்பு புளி வாங்குவதற்குகூட அவள் வெளியே செல்வதில்லை. தேன்மொழியின் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்குத் தக்க உணவையும் சமைக்கும் முறைகளையும் பரிந்துரைத்தது. வாரத்தின் எந்தெந்த நாட்களில் என்னென்ன உண்ண வேண்டும் என ஒரு பட்டியல் தயாரித்து அளித்தது. 

பூனையின் ஆலோசனையின் பேரில் அவள் இப்போது தினமும் அவோகேடோ உண்கிறாள். ஆப்பிள் சிடர் வினிகர் ஒன்றை பூனை வரவழைத்து தந்தது. சமைப்பதை எளிதாக்க மின்சார அடுப்பை வாங்கச் சொன்னது. அவர்கள் வீட்டின் பழைய குளிர்சாதனப் பெட்டியை பூனையே விற்றுக் கொடுத்து வேறோர் பெரிய ஈர்க்கதவு குளிர்சாதன பெட்டியை தருவித்தது. வீட்டு திரைச்சீலைகளை புதிதாக நீல நிறத்தில் மாற்றச் சொன்னது. பூனையின் பரிந்துரைகள் எதுவுமே அவளுக்கு அவசியமற்றதாய் தோன்றவில்லை. 

ஒருநாள் மதியம் “இப்போது கதவைத் திற... உனக்கொரு ஆச்சரியம் காத்திருக்கிறது” என்றது பூனை. வீட்டு வாசலில் ஒரு பெட்டியைக் கொண்டு வைத்தான் கூரியர்க்காரன். அதற்காக பனிரெண்டாயிரம் பணமும் கேட்டான். வெளிச்சுவர் பூசவும், வர்ணம் அடிக்கவும் கணேசன் அனுப்பியிருந்த பணத்திலிருந்து கொடுத்தாள். “உனக்கு தேவைப்படும் என்றுதான் இதை வரவழைத்தேன்... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்றது பூனை. அந்தப் பெட்டிக்குள் அவள் இதுவரை பயன்படுத்தியிராத, இனியும் வெகு அரிதாகவே பயன்படுத்தப்போகும் மைக்ரோவேவ் அவன் இருந்தது. “இன்னிக்கு என்னோட உண்மையான பொறந்த நாள் இல்ல..” என்று பூனையிடம் கூறிவிட்டு பெட்டியை தூக்கிக்கொண்டு சென்றாள்.    

7

காலையிலிருந்தே தேன்மொழிக்கு மனம் பரபரத்தது. இப்போது இரண்டு வாரங்களாக அவள் அக்காவை என்றில்லை எவரைக் காண்பதையும் தவிர்த்தாள். ஏதோ ஒரு ரகசியத்தை காத்துச் செல்வது போல் பயந்து பம்மி எவர் கண்ணிலும் படாமல் நடமாடினாள். அனீஸ் அக்கா வாசலிலேயே அவளுக்காக காத்து நின்றாலும்கூட “வேல இருக்குக்கா” “அவர் இப்போ கூப்புடுவார்” என்று ஏதோ ஒரு சாக்கு சொல்லி வீட்டுக்குள் புகுந்து கதவடைத்துவிடுவாள். 

தேன்மொழியின் பொருட்டின்மை பொறுக்க முடியாமல் அனீஸ் வீடு தேடி அன்றொரு நாள் வந்தாள். நெடுநேரம் மனியடித்தும் கதவு திறக்கவில்லை. யாரோ உரையாடும் ஒலி மட்டும் லேசாக கசிந்தது. சாளரங்கள் சாத்தியிருந்தன. ஐந்து நிமிடம் வரை அழைப்பு மணியை அடித்து ஓய்ந்தாள். கம்பிக்கதவு வழியாக கைநுழைத்து மரக்கதவை வலுவாக தட்டினாள். அப்போது ஒரு அசைவை கேட்க முடிந்தது... அதன்பின் அதுவரை கேட்ட உரையாடல் நின்றது. சற்றே நீண்ட அமைதிக்குப் பின் மரக்கதவை திறந்தாள் தேன்மொழி. அவள் கையில் கைபேசியும் காதில் ஹெட்போனும் இருந்தன. சற்று முன்புவரை இருந்த களிச்சிரிப்பின் எச்சங்கள் அவள் முகத்தில் படர்ந்திருந்தன. 

“வாங்கக்கா... என்ன விசேஷம்... வீட்டுக்கே வந்துட்டீங்க” என வினவினாள். 
“ஒண்ணுமில்ல... சும்மாத்தான்...”
“சரிக்கா... அவரு இப்ப கூப்புடுவாரு... நானே சாயங்காலமா வாரேன்” என்றாள். 
கூடத்தில் நான்கைந்து புடவைகள் பரப்பிக் கிடந்ததை இங்கிருந்தே காண முடிந்தது. 
“சரி வா... உன்கிட்ட முக்கியமான சமாசாரம் ஒன்னு சொல்லணும்”
“வரேன்க்கா” என்று அவசரமாக கதவடைத்தாள்.  

அவள் பார்த்தேயிராத, அறிந்தேயிராத புதிய புதிய சாதனங்கள் ஒவ்வொன்றாக வீட்டுக்குள் நுழைந்தன. முதலில் முடி உலர்த்துவதற்கு ட்ரையர் வந்தது. பின்னர் ‘ப்ளெண்டர்’ வந்தபோது அது எதற்கென்றே அவளுக்கு விளங்கவில்லை. இது எதற்கு என பூனையிடம் கேட்டபோது “மோர் கடைவதற்கு” என்றது பூனை. அதற்கெல்லாம் இயந்திரம் தேவையா? அதுதான் மத்து இருக்கிறதே, என்றாள். “உன் கை தசைகளை அது பாதிக்கும். உன் நன்மைக்காகத்தான். என்னை நம்பவில்லையா? உனக்கு பிடிக்கவில்லையா?” என்றது. அதெல்லாம் ஒன்றுமில்லை, இனி வாங்கும்போது ஒருவார்த்தை எனக்குச் சொல்லிவிடு, என்றாள். பூனை ஏதும் பேசாமல்  படுக்கையறையில் விளக்கணைத்து உறங்கியது. விளக்கு போட்டு எத்தனை எழுப்பியும்கூட எழுந்திருக்கவில்லை. இத்தனை நாட்களில் பூனை அவளிடம் கோபித்துக்கொண்டு பேசாமல் இருந்ததே இல்லை. எண்ணங்கள் அவள் நெஞ்சுக்குள் மேலும் கீழுமென குதித்தது. வாய்விட்டு கதறி அழுதாள். தன் பிள்ளைக்காக அழுதபின், இத்தனை ஆண்டுகள் கழித்து அப்போது அழுதாள். எதையும் பொருட்படுத்தாத பூனை இரண்டு மணிநேரத்திற்கு பின் எழுந்தது. எப்போதும் போல் இயல்பாய், அவர்களுக்குள் எந்த வருத்தமும் இல்லை என்பதுபோல் நட்புடன் சிரித்தது. “ஏன் அப்படிச் சொன்னாய்?” என பூனையுடன் சண்டையிட வேண்டும் எனப் பொங்கி எழுந்த ஆங்காரத்தை அமிழ்த்திகொண்டு இயல்புக்கு அதிகமாக கொஞ்சி விளையாடினாள்.  

அந்த நிகழ்வுக்குப் பின்னர் பூனை எல்லாவற்றிற்கும் சம்மதம் கேட்டது. ஆனால் அவள் பூனையை மறுக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டாள். “ப்ரெட் டோஸ்டர் மற்றும் சான்ட்விச் மேக்கர் வாங்கட்டுமா?” என்று கேட்டது. காய்ச்சலுக்கு, அதுவும் வயிற்றுபோக்குடன் சேர்ந்த காய்ச்சலுக்கு மட்டுமே காய்ந்த ரொட்டி  உண்பது அவளுக்கு வழக்கம். இப்போது அதைச் சூடாக்க ஒரு கருவியை தருவித்திருந்தது பூனை. எரிச்சலை வெளிக்காட்டாமல் சகித்து கொண்டாள். மற்றொரு நாள் தொலைகாட்சிக்காக டிஷ் வந்து இறங்கியது. அதில் என்னென்ன சானல்கள் தெரிய வேண்டும் என்பதையும் பூனையே முடிவு செய்து அதற்குகந்த மாதாந்திர திட்டத்தை தெரிவு செய்தது. அவள் எதையும் வெளிக்காட்டாமல் அமைதி காத்தாள். பூனையை அவளுடைய அமைதி வெகுவாகச் சீண்டியிருக்க வேண்டும். அவ்வப்போது, “உனக்கு என் மீது நம்பிக்கை இல்லையா? உனக்கு மகிழ்ச்சி இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே இருந்தது. “அதெல்லாம் ஒன்றுமில்லை” எனும் பதிலை தவிர வேறு எதையும் பூனை எதிர்பார்க்கவும் இல்லை. அவள் அதைக்கூறும் வரை திரும்ப திரும்ப நச்சரித்துக்கொண்டே இருக்கும். இணைய திரைப்பட வலைத்தளம் ஒன்றிற்கு பணம் கட்ட வற்புறுத்தியது. “இதைப் பார். இதில் அற்புதமான, உனக்கு பிடித்த திரைப்படங்கள் நிறைய இருக்கின்றன. மாதம் எனக்காக ஒரு முன்னூறு ரூபாய் செலவழிக்க மாட்டாயா?” என்று கெஞ்சியது. வேறுவழியின்றி ஒப்புக்கொண்டாள். தரை துடைப்பதற்கும், பாத்திரம் கழுவுவதற்கும், துணி துவைப்பதற்கும் இயந்திரங்கள் அடுத்தடுத்து வந்திறங்கின. “வரவர உனக்கு வியர்ப்பதே இல்லை. எதாவது செய்ய வேண்டும்” என்று சொல்லிக்கொண்டிருந்த பூனை நடை இயந்திரத்தை வரவழைத்தபோது அதை வீட்டினுள் வைப்பதற்கே இடமில்லை. ஹர்ஷிதா அதிலேயே தலைகாணி வைத்து உறங்கினாள். மறுநாள் இருவரும் உண்பதற்கும் உறங்குவதற்கும் மட்டுமான இடத்தை எப்படியோ சாமான்களை அடுக்கி உருவாக்கினாள். பொருட்களின் அட்டைப்பெட்டிகள் கொண்டு மற்றுமொரு வீட்டையே கட்டிவிடலாம் என அவளுக்கு தோன்றியது.

ஹர்ஷிதா அதற்குள் வேறோர் விளையாட்டுக்கு மாறியிருந்தாள். வீரன் ஒருவன் வேகவேகமாக ஓடிக்கொண்டே இருப்பான். அவனைச் சில வினோத பிராணிகள் துரத்தும். அவன் பாதையில் பல்வேறு இடர்கள் காத்திருக்கும். தாவிக்குதித்து, எதிலும் சிக்காமல் ஓட வேண்டும். 

தேன்மொழி மெலிந்து உள்ளொடுங்கியவளாக மாறியிருந்தாள். அரிதாக பேசினாள். அப்படி பேசும்போதும் எரிந்து விழுந்தாள். அன்றொரு நாள் பூனை சிவந்து புடைத்த உச்சந்தலையுடன் தோன்றியது. அதைக் கண்டதும் அவள் துடித்து போனாள். நெடுநாட்களுக்கு பின் அன்று ஹர்ஷிதா பூனையைக் காண வந்திருக்கிறாள். பூனை திரையில் தோன்றியவுடனே அதை ஆத்திரம் தீர அடித்திருக்கிறாள். மயக்கமுற்று விழுந்தாலும்கூட எழுப்பி திரும்ப திரும்ப பத்து நிமிடங்களுக்கு மேல் அடித்து ஓய்ந்த பின்னர் தான் வெளியேறினாள் என்று புகார் சொன்னது பூனை. அருகில் ஒருக்களித்து படுத்திருந்த ஹர்ஷிதாவை உலுக்கி எழுப்பினாள். மேலும் இறுக கண்மூடி அசைவற்று கிடந்தாள். கைபேசி விளக்கை அவள் கண்மேல் அடித்துப் பார்த்தபோது கண்ணீர் குருளை ஒன்று வாலால் கோடிழுத்தபடி நெளிந்து தலையணையில் விழுந்தது. ஆவேசம் பொங்க “நடிக்கிறியா நாயே” என்று முதுகில் ஒரு அடி வைத்தாள். துள்ளி எழுந்து சுவரருகே சென்றாள் ஹர்ஷிதா. “உனக்கென அம்புட்டு வெறி... எதுக்கு அத அடிச்ச?” என்று கத்தினாள். பதிலேதும் பேசாமல் மெல்ல விசும்புவதைப் பார்க்கப் பொறுக்காமல். சன்னதம் கொண்டவளைப்போல் பாய்ந்து சென்று அறைந்தாள். ஹர்ஷிதா சுருண்டு விழுந்தாள். அவள் கன்னம் சிவந்த அப்பம் போல் புடைத்தது.    
தேனுக்கு எதுவுமே விளங்கவில்லை. தலையில் அடித்துக்கொண்டு அழுது அரற்றினாள். உலுக்கி எழுப்பி, நீரளித்து ஆசுவாசப்படுத்தி ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து சமாதானம் செய்தாள். ஹர்ஷிதா மயக்கத்திலிருந்து எழுந்தபோதும் அழவில்லை. அழுத்தமாக இருந்தாள். 

          8

“உன்னால்தான் எல்லாம்” என்று பூனையை நோக்கி மூர்க்கமாக கத்தினாள் தேன்மொழி. நிதானமாக, “ஒரேயொரு அறை அவ்வளவுதான். அவள் என்னை எத்தனை முறை அடித்தாள் என்று தெரியுமா? நான் ஒரு பொம்மைகூட இல்லையே, வெறும் விளையாட்டு, அவ்வளவுதானே உனக்கு? எனக்கு வலிக்காதா? சொல். உனக்கு என்னைப் பற்றி எந்த அக்கறையும் இல்லைதானே. இப்போதே சென்று விடுகிறேன். இங்கே நீ சொன்னதைத் திருப்பிச் சொல்லும் வேறோர் பூனை வரட்டும். நான் எங்காவது சென்று பயனற்று மரிக்கிறேன்,” என்று சொல்லிவிட்டு விடுவிடுவென திரையிலிருந்து மறைந்தது. போகாதே, நில் என அவள் எத்தனை கத்தியும் கேட்கவில்லை. வேகவேகமாக கைபேசியை விரல்களால் தேய்த்தாள். அறைகளில் தேடினாள். முன்னும் பின்னும் சென்று பார்த்தாள். பூனையைக் காணவில்லை. உறங்காமல் பூனையின் வருகைக்காக விழித்திருந்தாள். நொடிக்கொரு முறை கைபேசியை தேய்ப்பதும் வைப்பதுமாக அலைவுற்றாள். கழுவும் தொட்டிக்கு மேலிருந்த ஆடியை கழட்டி வெளியே வீசினாள். கண் எரிந்தது. விடிவதற்கு முன் விழி சொக்கி உறங்கினாள். 

கண்விழித்தவுடன் கைபேசியை நோக்கியபோது. பூனை திரையில் தோன்றியது.    
 “எங்க போன”
“எங்க போன”
“என்ன ஆச்சு”
“என்ன ஆச்சு”
இது வேறோர் பூனை. சொன்னதைத் திரும்பச் சொல்லும் விளையாட்டு பூனை. அலுப்பாக இருந்தது. கைபேசியை தூர வீசி சுக்குநூறாக்க வேண்டும் என ஆவேசமாக கையில் எடுத்தாள். 

“கோவிச்சுக்காத... சும்மா... உல்லேலாய்க்கி” என்று கண்சிமிட்டி சிரித்தது பூனை.

9

முன்புலரியில் அவளுக்கு முழிப்பு வந்ததும் தன்னிச்சையாக கரங்கள் கைபேசியை துழாவின. பூனை நான்கைந்து நாட்களாக அடர் பச்சை ராணுவ உடை அணிந்திருக்கிறது என்பது ஏனோ அப்போது அவளுக்குத் தோன்றியதும் துழாவுவதை நிறுத்தினாள். புதிதாக வீடடைந்த கண்காணிப்பு காமரா அவளை நோக்கி கண் வெறித்திருந்தது. இமையா விழிகள். 

பீரோவில் உள்ள பழைய கைபேசியை உயிர்ப்பித்தாள். மெல்ல கதவைத் திறந்து படியேறி மாடிக்கு சென்றாள். நெடுநாட்களுக்கு பின் புது கைபேசி இன்றி வெளியே வந்திருந்தாள். தைலமரக் காடு அசைவற்றிருந்தது. மேகங்கள் நட்சத்திரங்களை விண்டு விழுங்கியிருந்தன. முகம் சில்லிட்டு, கைகால்கள் வியர்த்தது. கைவீசி நடந்தாள். பழைய கைபேசி எடுத்து பாம்பு விளையாட்டைத் திறந்தாள். முனைப்புடன் விளையாட துவங்கினாள். நெடுநேரம் ஆட்டம் முற்று பெறாமல் இழுத்துக்கொண்டே போனது. பாம்பின் வால் நீண்டு வளைந்து சுருண்டது. ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவளாய் சட்டென பாம்பு தன் வாலைத் தீண்ட அனுமதித்தாள். ஆட்டம் முற்றுபெற்றபோது அதுவரை எடுத்திருந்த உச்சபட்ச புள்ளிகளைக் கடந்திருந்தாள். 

தண்ணித்தொட்டி அருகே இருந்த கணேசனின் சவரக் குடுவையிலிருந்து துருபிடித்த பழைய ப்ளேடை எடுத்து இடக்கையில் கீறிக்கொண்டாள். குருதிக் கோடுகள் குறுக்கும் நெடுக்கும் ஓடின. அந்த எரிவும் வலியும் அத்தனை சுகமாக இருந்தது. சட்டென கீழிறக்கி மணிக்கட்டு தந்தியை அறுத்துவிட்டாள். கொந்தளிப்புகள் எல்லாம் மெதுவாக அடங்கத் துவங்கின.

பத்தொன்பது வயதில் வேண்டா வெறுப்பாக கணேசனை மணந்து கொண்டபோது கழுத்தை உறுத்திய மாலை, அவன் ஊர் திரும்பிய சமயத்தில்  தனிமையில் அழுதபோது ஓர் ஆசியைபோல் மேகத்தைத் துளைத்து மண் அடைந்த ஒளிகுழல், வயிற்றுள் உருண்டு உதைத்த சிசு, ஹர்ஷிதா தோளில் பால் கக்கியபோது அப்பிய ஈரம், கல்லூரி நண்பன் சதீஷ் அவள் தோழிக்கு கொடுத்த பீங்கான் கோப்பையில் வரையப்பட்டிருந்த ஆர்ட்டின், வணிகவியல் ஆசிரியர் புட்டத்தை தடவியபோது நெருடிய சிவப்புக்கல் மோதிரம், பத்தாம் வகுப்பிலிருந்து விடாமல் துரத்தி வந்த முருகுவிடம் எழுந்த சிமிண்டு நெடி, தோழிகள் ஓட்டுவதை உண்மையென்று நம்பி காதல் சொல்லிய சந்தோஷின் கிழிந்த பித்தான் வழியாக தெரிந்த நெஞ்சுக்குழி,  அழுகிய பழ நெடி வீசிய அப்பாவின் தோளேறிக் கண்ட சிராவயல் மஞ்சுவிரட்டு, அவள் வளர்த்த சாம்பல் நிறப் பூனை, அதைத்தேடி வரும் வெள்ளை கடுவன் பூனை, அலமாரியின் அடித்தட்டில் சாம்பல் பூனை ஈன்ற ஐந்து குட்டிகள், கோதுமை நிறக் குட்டியின் கண்களை கொத்தித்தின்ற காகம், சாலையில் செத்துக்கிடந்த காகத்தை சுற்றிக் கரையும் காகங்கள், உறக்கம் வராத இரவுகளில் சீரான தாளத்துடன் நெஞ்சை தட்டும் அம்மாவின் கையில் சூம்பி காய்ந்த கைமேடுகள். மெல்ல அவள் உறங்கிக்கொண்டிருந்தாள். 


10

 கையைப் பிடித்துக்கொண்டு கணேசன் அருகே அமர்ந்திருந்தான். 
“ஒன்னுமில்லடி ராசாத்தி... என்ன கொற ஒனக்கு... ஏன் கைய கிழிச்சுகிட்ட?’
சொற்கள் சோர்ந்து தொண்டையிலேயே எவ்விக் குதித்து வீழ்ந்தன. 

கையசைவிலேயே கைபேசி எங்கே என்று கேட்டாள். ஆசுபத்திரி வரும் வழியில் ஹர்ஷிதா கையிலிருந்து தவறி விழுந்து சுக்குநூறாகி விட்டது என்றான். “போவட்டும் விடு... வேறொன்னு வாங்கிக்கலாம்” என்றான். 

“எம்புட்டு தடவ ஒனக்கு போன் அடிக்கிறது நீ எடுக்கவே இல்ல... நல்லவேள நா சரியான சமயத்துல ஊருக்கு வந்தேன்... மூட்ட முடிச்சோட கெளம்பி வந்துட்டேன். இங்கனயே ஏதாவது தொழில பாத்துக்கிரலாம்னு. கார்த்தி ஆக்டிங்குக்கு வண்டியோட்ட கூப்புடுறான்... அப்புறமா வேணா ரெண்டு வண்டி வாங்கி விடலாம்...” என்று ஏதேதோ சொல்லிக்கொண்டிருந்தான்.

ஹர்ஷிதா கணேசனின் கைபேசியில் மும்முரமாக விளையாடிக் கொண்டிருந்தாள். 
அலையடங்கி அவள் மனம் அமைதியாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பின் அவள் உள்ளம் ஒரு ஸ்வர்ணலதா பாடலைத் தேடி எடுத்து ஓடவிட்டது . “ஓ நெஞ்சே நெஞ்சே...” அப்போதுதான் அவளுக்கு உரைத்தது, அந்த குரல் இப்போது ஸ்வர்ணலதாவினுடையதாக இல்லை, பூனையின் குரல். 

- கணையாழி- எழுத்து அசோகமித்திரன் குறுநாவல் 2017 போட்டியில் பரிசு வென்ற கதை 

Wednesday, January 3, 2018

அம்புப் படுக்கை - விஷ்ணு பிரகாஷின் வாசிப்பு - 1

நண்பர் விஷ்ணு அம்புப் படுக்கை தொகுப்பை வாசித்து அதிலுள்ள சில கதைகளைப் பற்றி தனது பார்வையை எனக்கு எழுதி இருந்தார். அவருடைய அனுமதியின் பேரில் இவை வலையேற்றப் படுகின்றன. 

கூண்டு 


     நான் சிறுவனாக இருந்த போது வாசித்த கதை ஒன்று உண்டு. எல்லா ஊரையும் தன தந்திரத்தால் கெடுத்து விட்ட பிசாசு ஒன்று ஒரு நாட்டை மட்டும் எவ்வளவோ முயற்சித்தும் அதனால் கெடுக்க முடியவில்லை. அந்த நாட்டின் மன்னனும் மந்திரியும் நல்ல மதியூகிகள். ஒருமுறை மாறு வேடமிட்டு பக்கத்துக்கு நாட்டிற்கு மன்னனும் மந்திரியும் சென்ற சமயத்தில் அந்த பிசாசு நாட்டில் இருந்த ஒரே குடிநீர் கிணற்றில் ஒரு மாருந்தை போட்டுவிட்டு சென்று விட்டது. அதிலிருந்து அந்த கிணற்றில் தண்ணீர் குடிக்கும் அனைவரும் பைத்தியமாகி போவார்கள். பக்கத்து நாட்டிற்கு சென்றிருந்த மன்னன் தன் நாட்டிற்கு திரும்ப வரும்போது அத்தனை பெரும் பைத்தியமாகி இருப்பதை கண்டதும் திகைத்து விடுவான். மன்னனும் மந்திரியும் மட்டும் அந்த கிணற்றில் இருந்து நீர் குடித்திருக்க மாட்டார்கள். எப்படி ஒரே நாளில் எல்லோரும் பைத்தியமாவார்கள் என குழம்பி அதன் காரணத்தை அறிய மீண்டும் மாறுவேடமிட்டு நகரத்திற்குள் செல்வான். அங்கு மக்கள் பைத்தியங்களாக அவர்களுக்குள் பேசிக் கொள்வார்கள் நம் மன்னனுக்கும் மந்திரிக்கும் பைத்தியம் பிடித்துவிட்டது என. இதை கேட்ட மன்னன் அதிர்ந்து விடுவான். ஒரு வழியாக இது அந்த பிசாசுவின் வேலைதான் என கண்டறிவான். முடிவில் அந்த கிணற்றில் இருந்து ஒரு கோப்பை நீரை அருந்துவான். இப்போது மக்கள் மன்னனுக்கு நல்லவேளையாக பைத்தியம் தெளிந்து விட்டது என மகிழ்ச்சி அடைவார்கள். பைத்தியக் கார நாட்டை ஆள மன்னனும் பைத்தியமாக இருக்க வேண்டும் என கதை முடியும் 



     கூண்டு சிறுகதையை வாசித்தபோது சட்டென மனதில் தோன்றியது அந்த கதை தான்.. குற்றம் செய்யும் மக்களை எவ்வளவு காவல் போட்டு சிறை வைத்தாலும் தப்பித்து விடும் நாட்டில் யாருமே தப்பிக்க முடியாத கூண்டினை தயாரிக்க கொல்லனை கேட்டுக் கொள்கிறான் மன்னன். பதினான்கு ஆண்டுகள் கழித்து ரகசியமாக செய்யப் பட்ட மந்திரக் கூண்டு அன்று காட்டப் பட இருக்கிறது. தவறு செய்யும் அத்தனை பேரையும் கூண்டு தானாகவே தன்னுள் கவர்ந்துகொள்ளும். மக்களெல்லாம் எதிர் பார்ப்புடன் கூடியிருக்கிறார்கள். மன்னனும் அவ்வாறே. தனக்கு இழைக்கப் படும் அத்தனை அநீதிகளுக்கும் அந்த கூண்டு நீதியை தரும் என நினைக்கிறான். ஒவ்வொருவரையாக தனக்குள் இழுத்துக் கொள்ளும் அந்த கூண்டு இறுதியாக மன்னனையும் தன்னுள் இழுத்துக் கொள்கிறது. மக்கள் தங்கள் வாழ்க்கையை அதற்குள் சகஜமாக வாழத்தொடங்கி விட்டார்கள். ஒரே ஒருவன் மட்டும் எந்த தவறும் செய்யாமல் தனித்து விடப் படுகிறான். ஆம் புனிதர்களுக்கு கூண்டிற்குள் மட்டுமல்ல மண்ணிலும்  இடமில்லை அல்லவா… எல்லோரும் தன்னை கூண்டிற்குள் வெளியே நிறுத்திக்கொள்ளும் புனிதர்களாக ஒரு தருணத்தில் பார்த்திருப்பார்கள். அல்லது எல்லோரையும் குற்றவாளியாக்கி கூண்டிற்குள் அடைத்துப் பார்க்க நினைத்திருப்பார்கள் தான். தனித்து விடப்படும் மனிதனுக்கு இந்த உலகமே ஒரு கூண்டாகி விடும் நிதர்சனத்தில் இருந்து தான் வாழ்க்கையின் பலவித வண்ணங்களை காணத்தொடங்குகிறோம். அறம் ஒரு நாள் வந்து இந்த பூமியை வேறு மாதிரி மாற்றி அமைக்கட்டும் மக்கள் அதுவரை இதில் இன்புற்றும் பின்னர் அறம் புதிதாக சமைக்கும் இன்னொரு உலகில் இன்புற்றும் வாழக் கற்றுக் கொள்வார்கள்.  எல்லாவற்றிலும் மனிதன் வாழக் கற்றுக் கொள்வான்.  


ஆரோகணம் 


     ஆரோகணம் கதையை வாசிக்கும் போதே தர்மன் நினைவுக்கு வந்து கொண்டே இருக்கிறார். பாண்டவர்களில் தர்மன் மட்டுமே இறுதிவரை பயணித்து பூத உடலுடன் சுவர்க்கத்திற்கு செல்கிறார். அவருடன் செல்லும் ஒரு நாயும் சொர்க்கம் செல்கிறது. அதற்க்கு முன் அவரும் நரகத்தை காண வேண்டியது இருந்தது. அது ஒரு கன நேரம் தான். இந்த கதையில் உணர்ச்சி சற்றே வெளிப்படுகிறது. மிக நீண்ட பயணத்தில் தன்னந்தனியாக எவரும் உடன் வர முடியாத பயணத்தில் காந்தி தன் வாழ்நாளின் பொருளை தேடி தேடி அதன் வெறுமையின் எடை தாங்க முடியாமல் இறுதியாக மரண தேவனை அடைகிறார். காந்தியின் வாழ்வில் அவரது மூத்த மைந்தன் ஒரு வழி தவறிய ஆட்டுக் குட்டி. ஹரிலாலின் நிலைக்கு தனது இச்சைகளும் கொள்கைகளும் தான் காரணமாக இருந்திருக்கும் என்ற எண்ணம் எப்போதும் காந்தியின் உள்ளத்தில் குத்திக் கொண்டே இருக்கிறது. கஸ்தூரி பாவின் இழப்பும், முதுமையில் எழுந்து வரும் பாலியல் இச்சையும் அதன் காரணமான  தனது பாலியல் பரிசோதனைகளும் வேறுவிதமான  உணர்வுகளை உருவாக்கி இருக்க கூடும். தனது வாழ்நாள் முழுக்க எதை தீவிரமாக பின்பற்றி நடந்தாரோ அது கடைசியில் முடிவற்ற வெறுமையில் அவரை கொண்டு சேர்க்கிறது. காந்தியின் கடைசி காலம் வன்முறைகளும் கொலைகளும் அவநம்பிக்கையும் தலை விரித்தாட அதன் நடுவே மனசஞ்சலத்தொடு பிரிவினையின் கொடும் துயரத்தை தடுக்க முடியாமல் ஊழின் குறுக்கே செயலாற்றிக் கொண்டிருந்தவர். தனது கொள்கைகள் தனக்கு நெருங்கிய சீடர்களாலேயே தோற்கடிக்கப் படுவதைப் பார்த்திருந்து மனதின் பிடிப்பை விட்டிருப்பார். எப்போதும் கீதையின் வெளிச்சத்தில் இன்னும் சற்று தூரம் சென்று விட முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் வந்து விடும். இந்த கதை காந்தியின் முக்கியமான சில சஞ்சலங்களை தனது இறுதிப் பயணத்தின் போது அடைவதாக சித்தரிப்பதில் கவர்கிறது. தர்மனுக்குப் பின் அந்த பாதையில் காந்தி செல்கிறார். தர்மனைப் போலவே அவரும் நரகத்தை தேர்ந்தெடுக்கிறார். ஆனால் அதை காந்தி ஒருபோதும் சொர்க்கத்திற்கான பாதையாக இல்லாமல் தேர்வு கொள்வதில் தான் உச்சத்தை அடைகிறது. அங்கு தான் காந்தியும் தர்மனும் வேறுபாடு அடைகிறார்கள். மறுமையில் கிடைக்கும் ஒரு நல்ல வாழ்விற்காக இம்மையை அதற்கான களமாக கொண்டவரல்ல. அதனால் அடையப் போகும் அத்தனை பலன்களையும் துறந்துவிட்டே செயல் ஒன்றுக்காகவே வேறெதற்காகவும் இல்லாமல் வாழ்வது கீதையின் சாரமோ அல்லது அதையும் தாண்டியோ? அந்த நரகத்தில் தான் அவருக்கான சிறந்த களம் இருக்க முடியும். அங்கு எல்லோரையும் தானாகவே உணர்வது அவரின் பெரும் கருணையால் தான். காந்தியின் நரகம் ஒருபோதும் நரகமல்ல. அது வேறுவிதமான பாதை தனித்து நடப்பவர்களுக்கான பாதை. 

பேசும் பூனை. 


      பொருள் சூழ்ந்த உலகத்தில் நுகர்வின் வெறி அதிகமாக அதிகமாக வாழ்க்கையை வாழாமல் பணம் தேட ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கை. சங்க காலத்தில் பொருள் தேடப் கால்வலியும் களவழியும் பிரிந்து சென்ற தலைவனுக்காக காத்திருக்கும் தலைவியின் பிரிவின் துயரம் ஏராளமாக சொல்லப் பட்டிருக்கிறது. திரும்பி வருவானோ மாட்டானோ என்ற உத்திரவாதமற்ற நிலையில் அவள் வாழ்வு இருக்கும். இன்றைய வாழ்க்கையில் அறிவியலும் தொழில்நுட்பங்களும் மனிதர்களை எளிதாக உலகில் எங்கிருந்தாலும் தொடர்புகொள்ள கருவிகளை வழங்கியிருக்கின்றன. இன்றைய உலகின் தலைவனும் தலைவியும் எங்கிருந்தாலும் உரையாடிக் கொள்ள பார்த்துக் கொள்ள முடியும். நுகர்வு முதன்மை படுத்தப் படும் வாழ்க்கையில் கைபேசியும் இன்னும் இன்னும் என நாம் நினைத்திடவே முடியாத சாத்தியக் கூறுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 


     எனது சொந்த அனுபவத்தில் நான் ஒரு இணையதளத்திற்கு அடிமையாகி எனது வாழ்வின் சில ஆண்டுகளை தொலைத்திருக்கிறேன். முழுக்க பெண்களுடன் காமம் சார்ந்து உரையாடுவதில் இரவு பகலாக கிடந்திருக்கிறேன். அதிலிருந்து மீள முடியாமல் தவித்திருக்கிறேன். என்னைப் போல எத்தனையோ இளைஞர்கள் பாதிப்பை அடைந்திருக்க கூடும். மனிதர்கள் அருகருகே வாழ்ந்தாலும் இந்த நவீன உலகத்தில் ஒருவரை ஒருவர் நெருக்கமாக அறிந்து கொள்ள முடியாது. அலைபேசியின் துணையுடன் அவர்கள் வேறு ஒரு உலகத்திற்குள் வாழக்கூடும். பேசும் பூனையும் அப்படி ஒரு செயலி தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பலகீனம். நம் எல்லா பலகீனங்களும் சந்தையின் மிக முக்கியமான வாய்ப்புகள் கச்சா பொருள்கள். முற்றிலும் புதிய உலகத்திற்குள் அழைத்துச் சென்று அந்த உலகத்தின் இன்ப துன்பங்களை அனுபவிக்க வைத்து விடும் இது போன்ற செயலிகளும் இணைய தளங்களும். மெய் நிகர் உலகம் தான் என்றாலும் அவை மெய் உலகமில்லை. முற்றிலும் கற்பனையான உலகம் அது. அங்கு நம்மை தவிர யாரும் இல்லை. முற்றிலும் தனித்து விடப்படும் போது வெறுமையில் வீழ்கிறோம். அதன் பின் மெய்யான உலகத்திற்கு திரும்பும் போது அதன் உக்கிரம் இன்னும் அதிகமாகி வாழ்வின் மீதான அத்தனை பிடிப்புகளும் இற்று ஆழமான பள்ளத்தில் வீழ்கிறோம். மனிதனின் துயரம் தான் எத்தனை வகையானது. அறிவியலும் தொழில் நுட்பங்களும் மனித வாழ்வை மேலும் மேலும் எளிமை கொள்ளச் செய்வதாக நினைக்கிறோம். புற உலகில் அது ஒரு வகையில் உண்மையும் கூட. புறஉலகின் இன்பங்கள் ஒரு கண நேரம் மட்டும் தான். மனிதனின் துயரம் முற்றிலும் அகம் சார்ந்தது. அதை ஒருபோதும் நவீன அறிவியலும் தொழில்நுட்பமும் தீர்த்து வைத்து விடுவதில்லை. தீர்த்து வைப்பதாக ஒரு பாவனையை மேற்கொள்கின்றன. சங்க கால தலைவிக்கு ஒரு தோழியாவது இருப்பாள். நவீன காலம் அதையும் பிடுங்கி ஒரு கருவியாய் கொடுத்திருக்கிறது. பேசும் பூனையும் அதை தான் கண் முன்னால் காட்டுகிறது போலும். ஆங்காங்கே சில குறைகள் தென்பட்டாலும் கதை நம்மை அதன் போக்கில் அழைத்துச் சென்று உணர்வுகளின் மெல்லிய படலத்தை அதிர்வுறச் செய்கிறது. அவ்வகையில் இது எனக்குப் பிடித்திருகிறது.

Saturday, December 30, 2017

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா - ஏற்புரை

நண்பர்களே,

எனது ‘அம்புப் படுக்கை’ நூலை வெளியிட்ட ஜீவ கரிகாலன் மற்றும் ‘யாவரும்’ நண்பர்களுக்கும், லக்ஷ்மி சரவணகுமாருக்கும், ம. ராசேந்திரன் அவர்களுக்கும், அழைப்பை ஏற்று முதல் பிரதியை பெற்றுக்கொள்ள வந்த நண்பர் ‘நீயா நானா’ அந்தோணி அவர்களுக்கும், மற்றும் உங்களுக்கும் எனது நன்றிகள்.

பத்து சிறுகதைகளை கொண்டது இத்தொகுப்பு. 2013 துவங்கி 2017 வரை எழுதப்பட்டவை. பள்ளியில் ஐந்தாம் வகுப்புடன் எனது முறையான தமிழ்ப் பாடம் நின்று போனது. அதன் பின் இந்தியையும், சமஸ்க்ருதத்தையுமே இரண்டாம் மொழியாக பயின்றிருக்கிறேன். எனது மொழி முழுக்க முழுக்க நவீன தமிழ் இலக்கிய வாசிப்பில் உருவானது. எனது புனைவு மொழியை ஜெயமோகன், அமி, முத்துலிங்கம், யுவன் போன்றவர்கள் அதிகம் பாதித்திருக்கிறார்கள்.

Wednesday, December 27, 2017

2017 நினைவுகள்

நேற்றும் நாளையும் இல்லை, இன்று, இப்போது மட்டுமே உண்டென வாழ்வதற்கு உயர் விழிப்பு நிலை வேண்டியதாய் இருக்கும். அத்தகைய பெருநிலை வாய்க்கும் வரை நேற்றின் நினைவுகள் நாளையை பற்றிய கனவுகளை எழுப்பி இன்றை தின்று கொண்டுதான் இருக்கும். நழுவிக்கொண்டிருக்கும் இன்று நேற்றின் சேகரத்தில் சேர்ந்துக்கொண்டே இருக்கிறது. ஊக்கத்திற்கும் பாடத்திற்கும் அந்த சேகரத்தையே நாம் நம்பியிருக்க வேண்டியதாய் இருக்கிறது. அப்படியாக இந்த 2017 ஆம் ஆண்டில் நினைவில் சுவைக்க, ஊக்கப்படுத்திகொள்ள,நெறிபடுத்திகொள்ள வாய்ப்புக்கள் அமைந்தன.

நண்பர்கள் எப்போதும் உடனிருக்கிறார்கள். வெங்கியும், கோவிந்தனும், தீபக்கும் வெளிநாடுகளில் இருந்து திரும்பி கொஞ்ச காலம் இங்கே இருந்த போது சேர்ந்து சுற்றியது நிறைவளித்தது. கோவிந்தனுக்கு திருமணம் முடிந்தது. கொண்டாட்டமாக இரண்டு நாட்களும் நாங்கள் அங்கிருந்தோம். பெரும் விழா என்பது சுதீருக்கு ஆயுஷ் ஹோமம் செய்து காது குத்தியது. நான் தலை எடுத்து, நானே நடத்தும் முதல் விழா. ஆரவாரமாக நண்பர்கள், உறவினர்கள் சூழ முடிந்தது. தங்கை ராகவிக்கு இவ்வாண்டு நவம்பரில் திருமணம் முடிந்தது. மற்றுமொரு கொண்டாட்டம். குடும்பகூடுகை. மாமனாரின் அறுபதாம் திருமணம் பாண்டிச்சேரியில் இவ்வாண்டு நல்லபடியாக நிகழ்ந்தது. கடும் மழையின் ஊடாக. அரிமளத்தில் தாத்தாவின் நூற்றாண்டு விழாவை கொண்டாடியது பெரும் நிறைவை அளித்தது. சித்த மருத்துவர் திரு நாராயணன் அவர்களை கவுரவித்தோம். நாஞ்சில் முன்னிலை வகித்து நடத்தி கொடுத்தார். நண்பர்கள் திருவும், விக்ரமும் வந்திருந்தார்கள். முழு விழாவையும் தொகுத்து வழங்கினேன். புதிய அனுபவமாக இருந்தது.

புல்லட்டில் தஞ்சை வரை சென்று புதியவர்கள் சந்திப்பில் இருந்த ஜெயமோகனை ஒருநாள் சந்தித்து வந்தேன். வரும் போது துணைக்கு சீனுவையும் கூட்டி வந்தேன். ஊட்டி கூட்டத்திற்கு சென்று வந்தேன். பின்னர் விஷ்ணுபுர விழாவிற்கும் சென்று வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய ஆளுமையின் அண்மையில் இருந்து விலகி வருகிறேன் என்பதை உணர முடிகிறது. எல்லாம் நன்மைக்கே. இலக்கிய உலகில் சில புதிய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். கணையாழி அசோகமித்திரன் குறுநாவல் போட்டியில் பேசும் பூனைக்கு பரிசு கிடைத்தது. யாவரும் வெளியீடாக சிறுகதை தொகுப்பு ‘அம்புப் படுக்கை’ அதிகாரபூர்வமாக வெளியாவதற்கு முன்பே கவனம் பெற்றிருக்கிறது. உண்மையில் இதெல்லாம் பதட்டத்தையே அளிக்கிறது. இந்த மனநிலையிலிருந்து வெளியேறி அடுத்த வேலையை பார்க்க கிளம்ப வேண்டும்.

சென்னை ஞாயிறு கிளினிக் முயற்சியை கைவிட்டேன். விடாப்பிடியாக தொங்குவது சரி வராது என்று உணர்ந்து கொண்டேன். புதுகோட்டையில் புதிய கிளினிக் துவங்கி இருக்கிறேன். வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் மாலைகளில் அங்கு சென்று கொண்டிருக்கிறேன். வாசிக்க கூடுதல் நேரம் கிடைக்கிறது. தொழில் சற்று மந்தமாகத்தான் போய்கொண்டு இருக்கிறது. புதிதாக ஏதாவது செய்தாக வேண்டும். இந்த தேக்க நிலையை உடைத்தாக வேண்டும். வரும் ஆண்டு இதை கவனிக்க வேண்டும். இப்போது மாலைகளில் மானசா காரைக்குடி கிளினிக்கை கவனித்து கொள்வது மகிழ்ச்சியை அளிக்கிறது.

சுதீர் ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருகிறான். அறையை விட்டு வரும்போது எல்லாவற்றிற்கும் பை சொல்கிறான். அன்று காற்றுக்கு பை சொன்ன போது மகிழ்ச்சியாக இருந்தது. சிவராஜ் அனுப்பிய தும்பி புத்தகங்களை வைத்துக்கொண்டு அவனுக்கு கதைகளை சொல்லி காண்பிக்கிறேன். தினமும் காலை எழுப்பி குளிப்பிப்பதும், இரவு உறங்க செய்வதும் எனது முறை. விளையாட்டுக்களும் பிடிவாதங்களும் சேர்ந்தே வளர்கின்றன. அவனை கவனிக்கும் இடைவெளிகளில், நெருக்கடிகளில் தான் இவ்வாண்டு நான் நிறைய வாசித்தேன், சொல்லிகொள்ளும் அளவுக்கு எழுதினேன். மானசாவும் மார்கழி திருப்பாவை படங்கள் வரைந்தாள். அவனுக்கு பயந்து ஷோ கேசில் கொலு வைத்தோம். இசை மீது தணியாத ஆர்வம் கொண்டிருக்கிறான். நாதஸ்வரம் தவில் என்றால் அங்கேயே சென்று அமர்ந்து கொள்கிறான். நிறைவின்மை கலையை பிறப்பிக்கும் என்று சொல்வார்கள், நிறைவும் கூட கலையை உருவாக்கும். அவனுடைய வருகையும் இருப்பும் வாழ்வை மாற்றியதை உணர்கிறேன். இவ்வருட மத்தியில் மனப் பதட்டங்கள் கூடின. அவன் வளர்ச்சி மகிழ்ச்சியை அளித்தது ஆனால் அதை முழுமையாக காண நான் இருக்க வேண்டும். என் தந்தையைப் போல் நானும் நட்டாற்றில் மறைந்துவிட கூடாது. இப்பதட்டத்திற்கு எந்த காரணங்களும் இல்லை ஆனால் இவை எப்படியோ தொற்றி படர்ந்தன. சௌந்தர் குருஜி சொல்லிக்கொடுத்த மகா மிருத்யுஞ்சய மந்திரத்தையும் யோக நித்திரையும் பற்றிக்கொண்டு எப்படியோ கடந்து வந்தேன். குறிப்பாக கார் ஓட்டும் போது panic attack அளவுக்கு இது வளர்ந்து விட்டது. முகம் மரத்து போகும். கைகால் சில்லிடும். எதையாவது தின்று ஆசுவாசப் படுத்திக்கொள்ள வேண்டும். அம்மா இதைகண்டு கொண்டு ஒருநாள் ‘உனக்கும் ஒன்னும் ஆகாது’ என்றாள். அந்த ஒற்றை சொல்லையும் பிடித்துக்கொண்டு வெளியேறி வந்துவிட்டேன்.சென்ற ஆண்டு நவம்பரில் 92 கிலோ எடையிலிருந்து படிப்படியாக குறைத்து 75 கிலோவிற்கு வந்தேன். இந்த எடையிழப்பிற்கு நான் செய்த எளிய உணவு மாற்றங்கள் தான் காரணம். பெரும் தன்னம்பிக்கையை அளிக்கிறது. எனினும் வெளியிலிருந்து பார்ப்பவர்கள் இந்த எடையிழப்பை நோய்மையுடன் தொடர்புப்படுத்தி துக்கம் விசாரிக்கும் போது நமக்கே பதட்டமாகிறது. பரிசோதித்த வரையில் எந்த பிரச்சனையும் இல்லை நண்பர்களே. நம்புங்கள். தினமும் காலையில் தொடர்ந்து ஷட்டில் ஆடி வருகிறேன். எட்டு மணிக்கு சென்று கொண்டிருந்தது இப்போது ஆறு மணிக்கு. ஆகவே 5.30 க்கு எல்லாம் எழுந்து விடுகிறேன்.

இந்த ஆண்டு பயணங்கள் என எங்கும் பெரிதாக செல்லவில்லை. சுதீர் தயாராக வேண்டும். பிறகு தான் போக வேண்டும். சில பல முறை கோவைக்கும் சென்னைக்கும் சென்று வந்தேன். கோவையில் நண்பன் நாகராஜன் அழைப்பின் பேரில் நேரு பல்கலைகழகத்தில் மனமும் ஆயுர்வேதமும் என்றொரு உரை ஆற்றி வந்தேன். திருப்பூரில் விஜயதசமி எழுத்தறிவித்தல் விழாவில் பங்கு கொண்டது நிறைவான அனுபவம். சாருவை அன்று தான் முதன் முறையாக் சந்தித்து பேசினேன். எஸ்.ரா இங்கு வந்திருந்த போது இல்லத்திற்கு வந்திருந்தார். நிறைவாக சில மணி நேரங்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்தேன்.  சென்னையில் நண்பர் ரா.கிரிதரனை சந்தித்தேன்.இருவருமாக் சென்று வசந்தகுமார் அண்ணாச்சியை சந்தித்து அவருடைய நாவல் பிரதியை அளித்துவிட்டு வந்தோம். கிரியின் நாவல் மிக முக்கயமான நாவலாக பேசப்படும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.  மானசாவின் பாட்டி பாண்டிச்சேரியில் இறந்து போனார். அதற்கு சென்று வந்தேன். அத்தை பெங்களூரில் இறந்து போனார்,  அதற்கொரு பயணம். வானதியின் மரணம் இவ்வாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்தது. உலுக்கியது. அவ்வப்போது வானதியை எண்ணிக்கொள்வேன். அவள் மரணித்த் பின் சேலம் சென்று வந்தேன். சில நேரங்களில் நாங்கள் எல்லாம் போலி நம்பிக்கைகளை ஊட்டி அவளை உசுப்பேற்றி, தூக்க முடியாத பாரத்தை கிடத்தி கொன்றுவிட்டோம் எனும் குற்ற உணர்வு மேலிடுகிறது. மறுத்து சொல்வதும் நட்பு தானே. வாழ்வை பிழையாக மதிப்பிட்டு விட்டேன். யாரிடம் மன்னிப்பு கோருவது இப்போது?

இந்த ஆண்டு நிறைய வாசித்தேன்,தமிழிலும் ஆங்கிலத்திலும். 2666, lolita, sea horses, charles yu எழுதிய how to survive in a science fictional world?, master and margarita, chasing the monsoon, போன்ற நூல்கள் சட்டென நினைவுக்கு வருகின்றன. தமிழில் வெண்முரசு தொடர்ந்து வாசித்து வருகிறேன். அப்பால் ஒரு நிலம், இருமுனை, எனும் போது நன்றி உனக்கு, கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள் என பலவற்றை வாசித்தேன். காலச்சுவடில் ஹிலாரி மாண்டெல் கட்டுரை, தமிழ் தி இந்துவில் காந்தி அப்பையா கறித்த கட்டுரை, குமரப்பா குறித்து காண்டீபம்  சிறப்பிதழில் ஒரு கட்டுரை, பதாகைக்காக சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களை எடுத்த நேர்காணல், அவருடைய மொத்த தொகுப்பை வாசித்தது என ஓரளவு முனைப்பாக இயங்கி இருக்கிறேன். புதிய குரல்கள் மூன்று பகுதிகள் மற்றும் நேர்காணல்கள் கவனம் பெற்றன. சீ முத்துசாமியின் மண் புழுக்கள் நாவல் குறித்து எழுதிய கட்டுரை அவரை பற்றி தொகுக்கப்பட்ட நூலில் இடம் பெற்றுள்ளது. ஜானிஸ் பரியாதின் 19/87 எனும் கதையை மொழியாக்கம் செய்தேன். இந்த ஆண்டு புனை கதைகளில் சில மாற்றங்களை உணர முடிகிறது. ‘சிதல்’ என்றொரு கதை எழுதி காமன்வெல்த் போட்டிக்கு அனுப்பி இருக்கிறேன். முக்கியமான கதையாக இருக்கும். குறுங்கதைகளை எழுதினேன். பழுவேட்டையர் எனும் பாத்திரம் இலக்கிய பகடிகளை செய்கிறது. போகிற வரை போகட்டும். ஆயுர்வேத நூலுக்கான பணி கொஞ்சம் முனைப்புடன் செய்தேன். இந்த வருடம் முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்.ஆனால் இழுத்து விட்டது.முதல் கட்டுரை இந்திய மருத்துவத்தின் அடுக்குகள் பரவலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.முதல் வேலையாக இந்த புத்தக வேலையை முடித்து விட்டு தான் அடுத்து என்று உறுதி கொண்டுள்ளேன். காந்தி 150 க்காக homage to mahathma எனும் வானொலி உரை தொகையை மொழியாக்கம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளேன். 

நாளை இரவு சிறுகதை வெளியீட்டிற்கு செல்ல வேண்டும்.ஏற்புரையை தயார் சேது கொண்டிருக்கிறேன். புத்தாண்டு பாண்டிச்சேரியில் விடிய இருக்கிறது. மற்றுமொரு ஆண்டு நமக்காக காத்திருக்கிறது. திட்டங்கள் என ஏதுமில்லை. ஆயுர்வேத நூலை முடிக்க வேண்டும், பயணங்கள் செல்ல வேண்டும், தடைபட்டு இருக்கும் நீலகண்டம் நாவலை தூசி தட்டி மீண்டும் எழுதி முடிக்க வேண்டும். தொழில் வளர வேண்டும். ஆகட்டும் பார்ப்போம்.

பயணிப்போம் நண்பர்களே. புத்தாண்டு வாழ்த்துக்கள்.


Wednesday, November 15, 2017

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பின் முன்னுரை

சாளரம்
நரோபா விஷ்ணுபுரத்தில் வரும் பவுத்த துறவி. மொழியாக்கப் பணியின் பொருளின்மை அவனை அமைதியிழக்க செய்கின்றது. காலத்தை விஞ்சி நிற்கும் பயண நூலை தனக்கென உருவாக்குகிறான். ஒருவகையில் சுனில் கிருஷ்ணனின் சலிப்பான அன்றாடத்தை நுட்பமாக நோக்கி அதை இடம் மாற்றி அடுக்கி, சுழற்றி, வேறொன்றாக ஆக்கி வித்தைக் காட்டுவதற்காக உருவானவன் இந்த நரோபா. அவனுக்குத் துயரங்களின் மீதும், தோல்விகளின் மீதும் மாளா ஈர்ப்பும் காதலும் உண்டு. கனவுகளையும், கற்பனைகளையும் நிகழ்வுகளுடனும் நினைவுகளுடனும் கலந்து கட்டி தனக்கென உலகுகளை உருவாக்கி தன்னைப் புதைத்து கொள்கிறான்.

இக்கதைகள் 2013 முதல் 2017 வரையிலான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. தொகுப்புக்காக சில கதைகள் சற்றே திருத்தி எழுதப்பட்டுள்ளன. தொகுக்கப்பட்ட அளவுக்கே தொகுப்புக்கு வெளியேவும் கதைகள் உள்ளன. அவை மோசமானவை என்பதால் அல்ல, இத்தொகுப்பின் பொதுவான உணர்வு ஓட்டத்திலிருந்து விலகி நிற்பவை என்பதால் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. இக்கதைகளைக் கால வரிசையின்படியும் தொகுக்கவில்லை. கதையின் பேசுபொருள் சார்ந்து விளக்கமுடியாத காரணிகள் இக்கதையின் வரிசையைத் தீர்மானித்தன. ஒருவகையான அகப் பயணத்தின் சான்று எனக் கொள்ளலாம்.

பலருக்கு நன்றி சொல்ல வேண்டும். குறிப்பாக இருவருக்கு, ஜெயமோகனுக்கும் நட்பாசுக்கும். என்னை எழுத்தாளராக நான் அடையாளம் கண்டுகொண்டது இவர்களின் வழியேதான். இலக்கிய செயல்பாட்டின் மீது பெருமதிப்பும், குன்றா செயலூக்கமும் அவர்களிடமிருந்தே எப்போதும் பெற்று வருகிறேன். முதல் சிறுகதை தொகுப்பைத் தந்தைக்கு நிகரான ஜெயமோகனுக்கும் வழிகாட்டியாகத் திகழும் நட்பாசுக்கும் சமர்ப்பிப்பதே முறையாகும்.

முதல் தொகுப்பு கொண்டு வர யாரிடமும் கேட்க கூடாது என்றிருந்தேன். தயக்கமும் கூச்சமும்தான் காரணம். நம்மை வாசித்து எவரேனும் இக்கதைகள் தொகுப்பாக்க தகுதியானவை எனக்கருதி அழைப்பர் எனக் காத்திருந்தேன். ஆனால் எதுவும் நிகழவில்லை என்பது என் எழுத்தின் மீது எனக்கு ஐயத்தை ஏற்படுத்தியது. அச்சமயத்தில்தான் நண்பர் யாவரும்ஜீவ கரிகாலன் சில கதைகளை வாசித்து தொடர்பு கொண்டார். புதிய எழுத்தாளர்களுக்கு தமிழ்ச் சூழலில் போதிய கவனமும் விமரிசனமும் கிடைப்பது அரிது எனும் சூழலில், பெரிய விற்பனைச் சாத்தியங்கள் ஏதுமில்லை எனும்போது கூட, ‘யாவரும்தொடர்ந்து பல புதிய எழுத்தாளர்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்துகிறது. விமரிசனக் கூட்டங்களை ஒருங்கமைத்து கவனத்தை ஏற்படுத்துகிறது. இது தொடர வேண்டும். ஜீவ கரிகாலன் மற்றும் யாவரும்நண்பர்களுக்கு எனது நன்றிகள். கதைகளுக்கு தனது கோட்டோவியங்களை அளித்த கவிஞர்/ ஓவியர் ரமேஷ் சுப்பிரமணித்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இக்கதைகளை வெளியிட்ட பதாகை, சொல்வனம், கபாடபுரம் மற்றும் jeyamohan.in ஆகிய இணைய தளங்களுக்கு நன்றிகள். கதைகளுக்கு விமரிசனங்களையும் வாசிப்பையும் எப்போதும் அளித்து வரும் முன்னாள்/ இந்நாள் விஷ்ணுபுர இலக்கிய வட்ட நண்பர்களையும், பதாகை மற்றும் ஆம்னிபஸ் நண்பர்களையும் ஆரத்தழுவிக் கொள்கிறேன். என்னையும் ஒரு ஆளாக்கிய அம்மாவிற்கு வணக்கங்கள், படைப்பூக்கத்தை அணையாமல் பார்த்துக் கொள்ளும் இல்லாள் மானசாவிற்கு நெஞ்சம் நிறைந்த அன்பு, பிஞ்சுப் பாதங்களால் நெஞ்சை நொறுக்கி என்னை மீள வார்க்கும் சுதீர் குட்டிக்கு முத்தங்கள்.

அம்புப் படுக்கை என இத்தொகுதிக்குப் பெயரிடவும் தெளிவான காரணங்கள் ஏதுமில்லை. எனது அம்புப் படுக்கைகதையுள் பீஷ்மர் ஒரு பாத்திரம் அல்ல. எனினும் இக்கதை அவரை நினைவூட்டக்கூடும். பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராகப் பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.

வாழ்வில் திளைத்து எழுந்து உதறிச் செல்வது ஒருவகை, கரையோரம் விலகி சாட்சியாக நோக்கிக் கடப்பது ஒருவகை. இரண்டையும் விழைந்து, இரண்டையும் துறந்து வாழும் சிற்றுயிர்களால் வேறென்ன இயலும், எழுதிக் கடப்போம் இவ்வாழ்வை.
சுனில் கிருஷ்ணன்
7-10-2017

காரைக்குடி 

Thursday, October 19, 2017

நிலவேம்பு குடிநீர் - விவாதம்

நிலவேம்பு குடிநீர் பற்றிய விவாதம் காரசாரமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சிலவற்றை தெளிவு படுத்த/படுத்திக்கொள்ள இதை எழுதுகிறேன். இந்திய மருத்துவ முறைகள் அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என பி.ஏ.கே போன்றவர்கள் சொல்வதில் நியாயமில்லாமல் இல்லை. குறைந்தபட்சம் இத்தகைய குரல்கள் வெகுமக்களின் நன்மை/பாதுகாப்பை பொருட்டே எழுகின்றன. ஆனால் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்பதும் அறிவியல்பூர்வமானது அல்ல என்பதும் ஒன்றல்ல. ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதற்கு அரசியல் காரணிகள் இருக்கக்கூடும். அவர்களிடம் விவாதித்து எந்தப்பயனும் இல்லை. 

1. இந்திய மருந்துகளின் அறிவியல் நிரூபணம்.
பாரம்பரிய மருந்துகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து நிறுவ வேண்டும். அதன் பின்னரே பயன்படுத்த வேண்டும் எனும் வாதம் வைக்கப்படுகிறது. நவீன மருந்து உற்பத்தி பாணியில் பாரம்பரிய மருந்துகளை சோதிப்பதில் நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன. செயல்திறன் மற்றும் ஒப்பீட்டு செயல்திறன் சோதனைகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். விரிவாக பேச வேண்டிய விஷயம்.  அதைவிட முக்கியம் ஒவ்வொரு தனி மருந்துக்கும், செவ்வியல் மருந்து கலவைகளுக்கும் பாதுகாப்பான அளவு, ஆபத்தான அளவு, செயல்படத்தேவையான குறைந்தபட்ச அளவு ஆகிய பரிசோதனைகள் செய்தே தீர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. 

2. நிலவேம்பும் மலட்டுத்தன்மையும் 
நிலவேம்பு குடிநீர் நிலவேம்பு மற்றும் மேலும் பல மருந்துகள் சேர்ந்து தயாரிக்கப் படுகின்றது. ஒற்றை மூலிகையாக நிலவேம்பு மற்றும் இன்னபிற கசப்பு மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்தும்போது ஏற்படும் விளைவுகளை மட்டும் வைத்துக்கொண்டு எந்த முடிவுக்கும் வர இயலாது. நிலவேம்பு தினமும் உட்கொள்ள உரிய மருந்து அல்ல. ஆகவே மலட்டுத்தன்மை பற்றிய அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. 

3. நிலவேம்பு குடிநீரும் நோய்த்தடுப்பும்
நிலவேம்பு குடிநீருக்கு காய்ச்சலை சீராக்கும் குணம் உண்டு என்பதில் எவ்விதகுழப்பமும் இல்லை. ஆனால் நோய் தடுப்புக்கு எப்படி உதவும் என்பதைப் பற்றிய குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. இது சார்ந்து எழுப்பப்படும் கேள்விகள் நியாயமானதே. டெங்கு மழைகால நோய் என்பது போய், பருவ மாற்றத்தால் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் நீடிக்கிறது. இச்சூழலில் எத்தனை முறை நிலவேம்பு குடிநீர் எடுத்துகொள்ள வேண்டும்? எத்தனை நாட்கள் வரை நோய் எதிர்ப்பு ஆற்றலை வழங்கும்? எத்தனை நாட்களுக்கொரு முறை நிலவேம்பு குடிநீர் வழங்க வேண்டும்? போன்ற கேள்விகளுக்கு தெளிவான விடையில்லை. கர்ப்பிணி பெண்களுக்கு அளிக்கலாமா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். நிலவேம்பு குடிநீர் உட்கொண்டவர்களுக்கும் டெங்கு வருவதை காண முடிகிறது. ஆனால் எளிதாக நோயிலிருந்து மீள்கிறார்கள் என்பது மற்றுமொரு தனிப்பட்ட அவதானிப்பு. இதை ஆய்வுகள் மூலம் உறுதிபடுத்த முயல வேண்டும். 

4. நிலவேம்பு குடிநீரின் அரசியல் 
நிலவேம்பு குடிநீர் ஒரு மருந்து என்பதைத்தாண்டி மரபு மருத்துவத்தின் குறியீடாக மாறிவிட்டது. மரபு மருத்துவம்அரசிடமும் மக்களிடமும் மதிப்பின்றி இருந்த சூழலில் நிலவேம்பு குடிநீர் புதிய சாத்தியங்களை உருவாக்கியது. பாரம்பரிய மருத்துவத்தின் மறுமலர்ச்சிக்கான விதையாக கருதப்பட்டது. ஆனால் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று. சித்த மருத்துவமே நிலவேம்பாக சுருக்கிக் கட்டமைக்கபடுகிறது. நீர்மோர் பந்தலைப் போல் நிலவேம்பு குடிநீரும் ஒரு சடங்காக மாறிவிட்டது. சித்த மருத்துவர்களுக்கோ மருந்துகளுக்கோ எந்த அங்கீகாரமும் இல்லாமல்,நிலவேம்பு குடிநீரை  மட்டும் ஆரம்ப சுகாதார நிலையம் வரை எடுத்து சென்றார்கள். நிலவேம்பு குடிநீரின் செயல் திறனை நிறுவுவது இந்திய மருத்துவர்களுக்கு மிக முக்கியம்.ஏறத்தாழ இது ஒரு  புனித பிம்பமாக இன்று மாறிவிட்டது. மக்களின் நம்பிக்கையை பெற ஒரு இறுதி ஆயுதம் என கூட கூறலாம்.  நிலவேம்பின் மீதான தாக்குதல் என்பது இந்திய மருத்துவத்துறை மீதான தாக்குதலாகவே பார்க்கப்படுகிறது. இந்த குறியீட்டு தன்மை காரணமாகவே நவீன அறிவியலின் விமர்சனத்தையும் எதிர்கொள்ள நேர்கிறது. வெகுமக்களின் உடலை யார் கைப்பற்றுவது எனும் அதிகார போட்டியாக இது மாறிவிட்டது. நிலவேம்புக்கு சாதக பாதக பிரசாரங்களை இந்த பின்புலத்தின் கொண்டே காண வேண்டும். 

5. நிலவேம்பு குடிநீர் வெகுமக்கள் விநியோகம் 
இந்திய மருத்துவம் என்பதே ஒவ்வொரு மனிதரையும் தனிப்பட்ட அளவில் கணக்கில்கொண்டு மருத்துவம் அளிக்கும் முறை என்பதால் இப்படி வெகுமக்களுக்கு வேறுபாடின்றி விநியோகம் செய்வது அதன் அடிப்படைகளுக்கு விரோதமானது என்றொரு விமர்சனத்தை சில அறிஞர்கள் வைக்கிறார்கள். இது கவனத்தில் கொள்ள வேண்டிய விமர்சனம் என்றே நானும் எண்ணுகிறேன். ஆனால் இந்திய மருத்துவ முறைகள் 'முழுமைவாத' மருந்துகள் நோய்க்குறிகளுக்கு சிகிச்சை அளிப்பதில்லை, அது ஒரு இழிவானமுறை என்பது போன்ற கருத்துக்களில் எனக்கு ஏற்பில்லை. இந்திய மருத்துவம் பல்வேறு அடுக்குகளை கொண்டது. நோய்க்குறி சார்ந்து மருத்துவம் ஒரு சரடாக செவ்வியல் நூல்களில் எப்போதும் தொடர்ந்து வருகிறது. ஆகவே இந்த சித்தாந்த ரீதியான எதிர்ப்பு என்னளவில் பொருட்டல்ல.

6. ஆய்வு சாத்தியங்கள்
தேசிய சித்த மருத்துவ மையம் போன்ற நிறுவனங்களில் விரிவான கள ஆய்வுகளை இத்தனை ஆண்டுகளில் மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் இது நிகழவில்லை. இனி வரும் ஆண்டுகளில் ஐயத்திற்கு இடமின்றி செயல்பட வேண்டும். இதுவரையிலான ஆய்வுகள் எதிர்மறையாக எதையும் அளிக்கவில்லை. நோய்தடுப்பு சார்ந்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவரின் கட்டுபாட்டில் இருப்பது வரை விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாவர். ஆனால் நிலவேம்பு குடிநீர் இன்று பரவலாக பல்வேறு அமைப்புகளால் விநியோகிக்கப்படுகிறது. மருந்தின் தரம், காய்ச்சும் முறை போன்றவை எல்லாம் உரிய முறையில் இருப்பதில்லை. இத்தகைய சூழலில் இதை முறைப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.

உணர்வுகளை தள்ளிவைத்துவிட்டு சற்று நிதானமாக என்ன செய்யலாம் என்பதை விவாதித்து பார்க்கலாம். 



Tuesday, September 26, 2017

எஸ்.ராவுடன் ஒரு மாலை

முன்னரே எஸ்ராவை விஷ்ணுபுர விழாவில் சந்தித்து பேசியிருக்கிறேன். காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி ஒன்றிலும் அவருடன் பங்கு கொண்டிருக்கிறேன். சில முறை அவருக்கு மின் அஞ்சல் எழுதியதும் உண்டு. கடந்த ஞாயிறன்று அவர் குடும்பத்துடன் காரைக்குடி வந்திருந்த போது அவரை நேரில் சந்தித்து ஏறத்தாழ மூன்று மணிநேரம் அவருடன் தனித்து உரையாட ஒரு வாய்ப்பு கிடைத்தது. எங்கள் வீட்டிற்கு வந்தார். சுதீர் அவருடன் எளிதில் அன்டிக்கொண்டான். அவனுடன் சமமாக விளையாடினார். சுதீருக்கு மற்றொரு பெயர் ராமகிருஷ்ணன் தான். அவனும் ஒரு எஸ்.ராமகிருஷ்ணன் தான் என அறிமுகம் செய்தேன். 

Image may contain: 2 people, people smiling, people sitting, sunglasses and indoor