Tuesday, November 23, 2010

அதிமானுடன்- sci-fi சிறுகதை




"வணக்கம் ,என்னை தெரிகிறதா ?,நான் உங்களுக்கு நல்லா பரிச்சயமானவங்க ,கொஞ்சம் யோசிங்க ,இன்னுமா தெரியல ,சரி என்ன பத்தி சொல்லுறேன் ,இப்பவாவது நினைவுக்கு வருதான்னு பாப்போம் ,என்னை எல்லா எடத்துலயும் பாக்கலாம் ,காலேல வாக்கிங் போகும் போது தெரு நாய்களுக்கு ரொட்டி துண்டு வீசிருக்கேன் ,குளத்துல மீன்களுக்கு பொறி போற்றுக்கேன், வீட்டுல எலிய உயிரோட பிடிச்சு வெளிய விட்ருக்கேன்,எல்லா அரசு அலுவலங்களிலும் என்னை பாக்கலாம் ஒரு சின்ன மஞ்ச பையோட ,ஒரு சாதரன சான்றிதழ்க்காக நடையா நடந்து தேஞ்சிருக்கேன் ,அதே அலுவலகத்துல அரசு பேருந்துல வந்து இறங்கி நடந்து அலுவலகுத்துல உக்காந்து எந்த கையூட்டும் வாங்காம கடைசி வரைக்கும் குமாஸ்தாவாகவே காலம் தள்ளும் என்னை,இந்த விசித்திர அரசு ஊழியனை உங்களுக்கு தெரியலையா ?ஒரு நயா பைசா கூட லஞ்சமாக கொடுக்காத / வாங்காத இந்த நியாயஸ்தனை நினைவில்லையா ? இன்னும் சொல்றேன் கேளுங்க ,கண்ணுக்கு முன்னாடி அக்கிரமம் நடக்கும், அத பார்த்து நீங்களாம் நாம தப்பிச்சோம்னு ,நமக்கென்ன வந்ததுன்னு சொல்லி வேலைய பாக்க போகும் போது,அதை கண்டு தூக்கமிழந்து ,அழுது புலம்பி ,உயிர் வாழும் இச்சயால் ஏதும் செய்ய இயலாத கையாலகத்தனத்தை கொண்ட ஒரு சாமான்யனுக்கு என்ன தெரியலாம் ,உங்களுக்கு எப்படி தெரியும் ?,அக்கிரமங்களை கண்டு அதை சொந்த விருப்பு வெறுப்பு ஏதும் இல்லாமல் அவர்களுக்காக ரோட்டில் வந்து குரல்கொடுக்கும் பொழுது போலீஸ் குடுக்குமே முதல் அடி அது எனக்கு தான் , ஆயிரம் ஆயிரம் கோடிகள் அனாயாசமாக அமுக்க படும் போது அதை படிச்சு மன வருத்த பட்டு கோர்ட்ல சொந்த செலவுல கேஸ் போட்டு அதிகார வர்கத்தின் எதிரியாகி ,சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்ளும் இந்த அம்மாஞ்சியை தெரியவில்லையா ?
ஒவ்வொரு தேர்தலின் போதும் மறக்காமல் ஒட்டு சாவடிக்கு சென்று ஒட்டு போடும் பொழுது ,என் வோட்டை யாரோ ஒரு மகான் எனக்காக போட்டிருக்காங்கன்னு தெரிஞ்சு நொந்து வீடு வந்து சேரும் இந்த சாமானியனை தெரியலையா ?ஐந்து ரூபாய்க்கு செலோடேப் வாங்கினாலும் ,ஐந்த லட்சத்திற்கு வைரங்கள் வாங்கினாலும் தவறாமல் பில் கேட்டு வாங்கும் இந்த அப்பாவியை தெரியவில்லையா ? வருடம் தவறாமல் வீட்டு வரி,சொத்து வரி,வருமான வரி என்று ஆர்வத்துடன் க்யூவில் நின்று கட்டி ,இந்த அராசங்கத்தில் நாமும் ஒரு பங்கு என்று எண்ணி அக மகிழும் அந்த அசடை உங்களுக்கு தெரியவில்லையா ?

ஹ்ம்ம் ,என்ன எல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் ? நான் என்ன டாட்டாவா,அம்பானியா ,இல்லை யாருக்காவது பினாமியா ?
என் கைய்ய ,கால ,வெட்டி பிச்சி ,கிட்ட தட்ட குழி தோண்டி பொதச்சு தானே நீங்க இந்த நெலமைக்கு வந்தீங்க ? ஆனா நான் இன்னும் சாகலை , இன்னும் உயிரோட தான் இருக்கேன் ,இன்னும் என் கிட்ட போராடுற வலிமை இருக்கு , நான் பொருத்து போறவன் ,ஆனா நீங்க என்ன ரொம்ப சீன்டிடீங்க ,எனக்கு இப்ப கோவம் ,பயங்கர கோபம் ,என் கோபம் ரொம்ப கொடூரமானது எல்லாரையும் அழிச்சிடும் ,மதுரைய எரிச்ச கண்ணகி கோபம் நினைவுல இருக்குல ? இது உங்களுக்கு நான் தர்ற கடைசி வாய்ப்பு ,உங்கள மாத்திக்க இன்னும் கொஞ்சம் நேரம் ஒதுக்குறேன் ,முடிஞ்சா பிழைச்சுக்குங்க,இத உங்ககிட்ட சொல்ல தான் வந்தேன் ,சொல்லிட்டேன் ,நான் வரேன் ...ஆங் ..என் பேரு என்னன்னு சொல்லலயே ..திருவள்ளுவர் எனக்கு ஒரு பேரு வெச்சுருக்காரு..
"மானுட அறம்"..

குப்பென்று வியர்த்து ,திடிக்கிட்டு எழுந்தார்,மணி காலை நான்கு , என்ன கனவு இது ,இதயம் படபடத்தது ,தலையை பிடித்து யாரோ ரோடு ரோலர் கீழ வைத்தது போல் ஒரு அழுத்தம் ,வலி ,சற்றே நிதானித்தார் ,தடுமாறி வேட்டியை சரி செய்துக்கொண்டு,விளக்கை போட்டு அமர்ந்தார் ,அந்த மங்கலான அருவமான உருவம் பளிச்சென்று ஒளிந்தது போல் இருந்தது.
முந்தைய நாள் இரவு பதினொரு மணி வரை அந்த வெளிநாட்டு தரகரிடம் பேசியது நினைவுக்கு வந்தது ,இந்த பெரிய டெண்டரை அந்த நிறுவனத்திற்கு சாதகமாக முடித்தால் போதும் , அதன் பங்கு இவருக்கு 50,000 கோடி கிடைக்கும் என்று அந்த பன்னாட்டு நிறுவனம் இவருக்கு உத்தரவாதம் அளித்தது .அதை வைத்து சிங்கப்பூர் அருகே ஒரு சிறிய தீவை விலை பேசியது நினைவுக்கு வந்தது .
சற்று ஆசுவாசப்படுத்திக்கொண்டு ,அலைபேசியில் தொடர்பு கொண்டார் ,அந்த விடிய காலை பொழுதில் இவரது அழைப்பை உடனடியாக ஏற்றுக்கொண்டார் அமைச்சர் அன்புராஜ
" என்னய்யா அன்பு ,என்ன தூங்கலையா ,டக்குனு போன எடுக்குற ?"
"இல்ல தலைவரே ,நல்லா தான் தூங்குனேன் ,ஒரு கெட்ட கனவு,அதான் டக்குனு எந்திருச்சு உக்காந்து இருந்தேன் ,மனசு சரி இல்ல தலைவரே "
"என்னய்யா உனக்கும் கனவா ? சரி சரி எனக்கும் ஒரு மோசமான கனவுயா நேத்திக்கு பேசுனோமே அந்த டீலிங்க பத்தி ,அதான் பதறி எந்திருச்சு உக்காந்து இருக்கேன் ,அது சரியா வரும்னு படல பேசாம அத விட்ருவோமாயா? என்ன சொல்லுற "
"அதான் தலைவரே எனக்கும் சரியா படுது ,ஒன்னு ரெண்டாவது நல்லது செய்வோம் தலைவரே ,சனங்க முகத்துல முழிக்க முடியாது "
"சரிதான்யா,நானும் அத சொல்ல தான் போன் பண்ணேன் ,இதுக்கு முன்னாடி எப்படியோ அது கடக்கட்டும் ,இனிமே இதெல்லாம் வேண்டாம்யா,கொஞ்ச காலம் தான் இன்னும் ,அவுங்க கிட்ட சொல்லிரு எல்லாம் முறைப்படி தான் நடக்கும்னு ,பாக்கிய காலேல பாத்துக்கலாம் "
"சரிங்க தலைவரே " என்று போனை வைத்துவிட்டு நேராக தனது வீட்டு பூஜை அறைக்கு ஓடினார் அமைச்சர் அன்புராஜ ,முதல்வர் வீரப்பன் சாய்வு நாற்காலியை இழுத்து முற்றத்தில் போட்டு விடிவெள்ளியை ஊற்று பார்த்து அமர்ந்தார்.


அதே சமயம் மொட்டை மாடியில் இவர்களின் பேச்சை ஒட்டு கேட்டு ,வெற்றி களிப்பில் சிரித்தார் பேராசிரியார் .டாக்டர் .அமுதன் அருள்ராஜ்,மின் இயற்பியல் துறையில் உலக அளவில் பல அறிய கண்டுபிடுப்புகளை உலகுக்கு தந்த இந்திய விஞ்ஞானி ,இவரது சிரிப்பை முகமெல்லாம் ஆச்சர்யத்தோடு கண்டு கொண்டிருந்ததான் சிவா, அதே துறையில் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஐ .ஐ .டி மாணவன் .
" சார் இப்ப இங்க என்ன நடந்துச்சு ,எப்படி நடந்துச்சு ,ஒன்னுமே புரியல !இதுக்கு தான் என்ன வர சொல்லிருந்தீங்களா ?"
"சிவா ,ஆமாம் ,இதுக்கு தான், இது என் வாழ் நாள் சாதனையா நான் நினைக்கிறேன் ,இங்க நீ பார்த்தது அறிவியலின் அற்புதம் "
"டாக்டர் ,கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க"
"சிவா ,நம் மூளையில் எண்ணங்கள், இயக்கங்கள் ,கற்பனைகள் எல்லாவற்றிருக்கும் அலை வடிவம் உண்டு , உங்களுக்கு தெரிஞ்சுருக்கும் வலிப்பு நோய்க்கு மூளையின் அலைகளை கொண்டு ஈ.ஈ.ஜி (electro encephalo gram) எனும் முறை பயன்படுத்தப்படுகிறது ,மூளையின் மின்காந்த அலைகள் நம் அலைபேசி ,தொலைக்காட்சி போல தான் ,ஆனால் இன்னும் கொஞ்சம் நுணுக்கமானவை ,தொன்று தொட்டு டெலிபதி முறை உலகமெங்கும் மொழிகள் இல்லாமல் ,வெவ்வேறு நாடுகளில் இருக்கும் மனிதர்களிடம் கூட தொடர்பு கொள்ள பயன் படுத்த படுகிறது ,ஒவ்வொரு மூளைக்கும் குறிப்பிட்ட ஒரு அலைவரிசை உண்டு ,அந்த மூளை வெளியேற்றும் எண்ணங்கள் ,செய்திகள் ,அதற்க்கு ஒரு அலைவரிசை உண்டு , அலைபேசி இயங்குவது போல தான், தொலைக்காட்சி இயங்குவது போலதான் ,அண்ட வெளியில் நம் எண்ணங்கள்,பேச்சுக்கள்,செய்திகள் எல்லாம் அலைவடிவில் உலாவுகின்றன ,அதை நாம் ஒரு ரிசீவர் மூலம் வாங்கலாம் ,இப்பொழுது நாம் வீட்டில் உபயோகிக்கும் டிஷ் டி வீ போல தான் ,அதே மாறி மூளை அந்த அலைவரிசைக்கு ஏற்ற மாறி ட்யூன் செய்தால் அந்த அலைவடிவை நாம் உணர்ந்துக்கொள்ளலாம் .இப்பொழுது நான் கண்டுபிடித்து இருக்கும் இந்த கருவி ,ஒவ்வொரு அலையையும் நுணுக்கமாக ஆராயக்கூடியது ,இது உள்வாங்குவது மட்டும் அன்றி ,இதன் மூலம் நாம் அந்த அலைவரிசையில் அந்த மூளைக்கு செய்தி அனுப்பலாம்"

"ஆச்சர்யமா இருக்கு டாக்டர் ,அப்படினா நாம் உங்களது மடிக்கணினியில் உள்ள இந்த வீடியோ பதிவை அந்த மூளைக்கேற்ற அலைவடிவமாக மாற்றி அவுங்க ,தூங்கும் நேரத்துல கனவா அனுப்பி இருக்கோம் ,அப்படி தானே ?"
"அதே தான் சிவா ,மூளை அதிர்வலைகள் ,ஆல்பா ,பீட்டா ,காம்மா ,தீட்டா எனும் நாலு வகை ,பொதுவா நாம் இயங்கும் போது அதிக எதிர் மறை எண்ணம் கொண்டு இயங்குவோம் அப்பொழுது பீட்டா அலைகள் பிரதானமா இருக்கும், நேர்மறை சிந்தனை அதிகம் இருக்கும் போது ஆல்பா அலைகள் அதிகமாக இருக்கும்"
"டாக்டர் ,ஆம் ,கேள்விப்பட்டுருக்கேன் ,ஆல்பா த்யான முறைன்னு கூட இப்போ சொல்லி கொடுக்கராங்கலே !"
"அதான் சிவா, இந்த ஆல்பா ,பீட்டா ரெண்டும் மேல் மனம் ,தீட்டா நம் ஆழ மனம் ,இது இயல்பிலயே பிரதானமாக யோகிகளுக்கு இருக்கும் , மனம் பிரண்டவர்களுக்கும் இருக்கும் ,அதை தவிர நாம் உறங்கும் போது ,கனவு காணும் போது இவ்வலைகலே இருக்கும்,நாம இப்ப அமைச்சர் ,மற்றும் முதலமைச்சர் கிட்ட இந்த அலைவரிசையில் தான் தொடர்பு ஏற்படுத்தி கொண்டோம் , அதனால் இது அவர்களின் கனவில் வந்ததாக அவர்கள் எண்ணுவார்கள் "
"டாக்டர் ,பிராமாதம் ,என்னால நம்பவே முடியல ,வாழ்த்துக்கள் ,எப்படி இத சாதிச்சீங்கன்னு நெனச்சா ஆச்சர்யமா இருக்கு "
"சிவா ,இதுக்கு நான் ரொம்ப கஷ்ட்டபட்டேன் ,இப்போ நாம பார்த்தது ஒரு பரிசோதனை முயற்ச்சி தான் ,நான் முதல்வர் மற்றும் அமைச்சரின் அலைகளை தொடர்ந்து பத்து நாட்களாக அவதானித்து வருகிறேன் ,தகுந்த ஏற்பாடுகள் ,அவர்களின் அறைக்கருகே இருக்கும் சென்சார்கள் ,ஆம்பிளிபாயர்கள் என்று நான் மெனக்கெட்டேன் ,இதை நடைமுறை படுத்த இன்னும் நெறைய உழைக்கணும் ,ஆகினும் கூட நம் நாட்டிற்க்கு ஒரு 50,000 கோடிகள் இதனால் சேமிக்க பட்டுள்ளது "
"டாக்டர், உங்களின் இந்த கண்டுபிடிப்பை எப்ப உலகத்துக்கு அறிவிக்க போறீங்க ? கட்டாயம் இந்த ஆண்டிற்கான நோபல் உங்களுக்கு தான் "
"நோ சிவா ,நான் உங்கள வர சொன்னதே அதுக்காக தான் ,இந்த கண்டுபிடிப்பா நான் வெளிய சொல்றதா இல்ல ,இதுக்கு சமூகத்துல நெறையா வேலை இருக்கு ,நம்ம நாடு இப்படி அதல பாதலத்திற்கு போக என்ன காரணம் தெரியுமா ? பொறுப்பான ,உயர்ந்த இடத்துல இருக்கும் தனிமனிதன் மனசாட்சிய மறந்துட்டு சுயநலத்தோட செயல் படறது தான் ,மனுஷங்க எல்லாமே ஆரம்பத்துல நல்லவங்களா தான் இருக்காங்க, பணமும், சூழலும் அவுங்கள மாத்திடுது ,அவுங்க மனசாட்சிய இன்னிக்கு நாம செஞ்ச மாறி தட்டி எழுப்பினாலே போதும் பெருமளவு குற்றங்கள் குறையும் ,அதனால இத நான் சமூக வளர்ச்சிக்காக பயன் படுத்த விரும்புறேன் ,எனக்கு உங்க உதவி வேணும் சிவா "
"சொல்லுங்க டாக்டர் நிச்சயம் செய்றேன் "
"எனக்கு வயசாய்டுச்சு ,அதனால எனக்கு அப்புறம் இந்த கருவிய பாத்துக்குற ,பாரமரிக்கிற பொறுப்பு உங்களோடது ,நிச்சயம் செய்வீங்கன்னு நம்புறேன் "
"டாக்டர் ,நிச்சயம் செய்கிறேன் ,இந்த கருவிக்கு நீங்க என்ன பெயர் வெச்சுருக்கீங்க "
"இதற்க்கு நான் வெச்ச பேரு அதிமானுடன் -அதாவது சூப்பர் மேன்,மனிதனை ,அவனது சிந்தனையை மாற்றும் வல்லமை இருப்பதால் இந்த பெயர்,இதை நாம ரொம்ப கவனமா பயன் படுத்தனும் ,தனி மனிதர்களோட சுதந்திரம் கெடக்கூடாது ,எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகள் போல இதற்கும் நன்மை தீமைகள் உண்டு ,இந்த அதிமானுடன் பற்றிய எல்லா தகவல்கள்,அதனுடைய வரைபடம் எல்லாம் இந்த குறுந்தகடில் இருக்கு ,பத்தரம் ,இது வெளிய தெரிஞ்சா ஆபத்து " என்று பேசிய படியே இருவரும் கணினியையும் ,அந்த கருவியையும் கொண்டு இறங்கினர் .
மறுநாள் காலை எட்டு மணி செய்திகள் "முக்கிய செய்தி- பிரபல இந்திய விஞ்ஞானி பேராசிரியர் .டாக்டர் .அமுதன் அருள்ராஜ் அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்தார் "
நமுட்டு சிரிப்புடன் "வாட் இஸ் யுவர் லாஸ்ட் டாக்" என்று அந்த அதிமானுடனை வருடிய படி பேரம் பேசிக்கொண்டிருந்தான் சிவா .

குறிப்பு- இக்கதையில் வரும் சம்பவங்களும் ,கதாப்பாத்திரங்களும் ,முற்றிலும் புனைவே .இது யாரையும் குறிப்பது அல்ல .

கதை உதவி -உன்னைப்போல் ஒருவன் .இன்செப்ஷன்,இந்திய அரசு ,சி.பி.ஐ :) அப்புறம் எனக்கே எனக்கென்று இருக்கும் கற்பனை , கொஞ்சமாக மருத்துவ அறிவு .
பட உதவி-கூகிள்

8 comments:

  1. இதே கான்செப்ட்-ல ராஜேஷ்குமார் நாவல் ஒன்று படித்திருக்கிறேன் :-)

    நல்ல புனைவு.

    ReplyDelete
  2. வருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி :)
    இருக்கலாம் ,
    இன்னும் ஆங்கிலத்துல இதே கருவை நெறைய பேரு எழுதி இருப்பாங்க ,
    இது ஒரு ரெண்டு வருஷமா எனக்கு இருந்த கரு ,எழுதுனா ஏதாவது கத மாறி இருக்குமேன்னு தான் எழுதாம இருந்தேன், ஒரு மாறி துணிஞ்சு எந்த மாறி இருந்தாலும் பரவா இல்லன்னு எழுதிட்டேன் :)

    ReplyDelete
  3. நடக்கக்கூடிய செய்ல தான் - இறுதியில் உள்ள முடிவும் நடக்கும் - நமது நாட்டில் இரண்டுக்குமே சாத்தியக்கூறுகள் உண்டு.

    ReplyDelete
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சீனா அய்யா .
    முதல் விஷயம் நடந்தால் நல்லா இருக்கும்,இறுதி விஷயம் நடக்காம இருந்தா இன்னும் நல்லா இருக்கும் .

    ReplyDelete
  5. கதை உதவி -உன்னைப்போல் ஒருவன் .இன்செப்ஷன்,இந்திய அரசு ,சி.பி.ஐ :) அப்புறம் எனக்கே எனக்கென்று இருக்கும் கற்பனை , கொஞ்சமாக மருத்துவ அறிவு .

    ..... நீங்க ரொம்ப நல்லவங்க.... நேர்மையா சொல்லிட்டீங்க.... :-)

    ReplyDelete
  6. சித்ரா மேடம் ,வருகைக்கு ,கருத்துக்கு நன்றி

    :):)
    நாம சொல்லலன எப்படியும் யாரவது கண்டு பிடிச்சுருவாங்க ,அதான் கௌரவமா நாமளே ஒத்துக்குவோம் .

    ReplyDelete
  7. கதை அருமை. விறுவிறுப்பா இருந்தது.

    /குறிப்பு- இக்கதையில் வரும்
    சம்பவங்களும் ,கதாப்பாத்திரங்களும் ,முற்றிலும்
    புனைவே .இது யாரையும்
    குறிப்பது அல்ல .//

    அதான் ஒட்டு மொத்தமா எல்லாத்தையும் குறிக்குதே! :-)

    ReplyDelete
  8. திருமதி .கிருஷ்ணன்
    :)ஆட்டோ வந்துருமே :)

    ReplyDelete