Friday, November 19, 2010

குருஜி-4-சற்றே பெரிய கதை

கண்ணை மூடி அப்படியே கிடந்தேன் ,எனக்கு ஏதாவது ஏற்படுகிறதா என்று கவனித்தேன் , எதுவுமே நடக்கவில்லை ,முதல் மாற்றம் ஏற்ப்பட்டது தொடை லேசாக பிடித்து இழுத்தது ,லேசாக தலையை தூக்கி திருப்பி பார்த்தேன் கோவியும் ,நாயரும் அப்படியே தான் இருந்தார்கள் ,ஏதோ சத்தம், நாயரிடமிருந்து வந்தது ,குறட்டை ,நான் மட்டும் எழுந்து விட்டால் அவசர குடுக்கை ,என்றும் ஞான சூன்யம் என்றும் எண்ணி விடுவார்களோ என்று அப்படியே கிடந்தேன் .அப்பொழுது உணர்ந்தேன் ,பாதி பேர் நாயரை போல் ஆன்மீகத்தின் பெயரால் உறங்குகின்றனர் ,மீதி பேர் என்னை போல் சமூக நிர்பந்தத்தின் பெயரால் நடிக்கின்றனர் ஏதாவது நடக்குமா என்று காத்து நிற்கின்றனர் ,அந்த காத்திருப்பு ,அந்த வெறுமை எனக்கு என் வாழ்வின் மிக பெரிய பாடத்தை கற்று கொடுத்தது ,இது நமக்கான வழி அல்ல ,குரு என்று ஒரு மனிதரை ஏற்று கொள்ளுவதால் நாம் அவரை நிறை குறைகளுக்கு அப்பார்ப்பட்ட ஒரு நிலையில் நாமே அவரை தூக்கி வைக்கிறோம் ,இந்த உலகத்தில் நிறை குறைக்கு அப்பாற்பட்ட மனிதனே இல்லை ,அது நாம் வளர்த்தெடுக்கும் பிம்பமே அன்றி வேறெதுவும் இல்லை ,கோவி போல் ஒருவரை குருவாக சுமப்பதால் அவரை அசட்டு தனமாக சாக்கு சொல்லி நாம் அவரை குருவாக ஏற்றுக்கொண்டோம் என்கின்ற ஒரே காரணத்துக்காக அவரை தற்காக்கும் அவல நிலை எனக்கு வேண்டாம் ,மனிதர்களை நிறைகுறைகளோடு ஏற்று கொண்டு அவர்களை அப்படியே நேசிப்பதே சிறந்தது ,உண்மையை விட நமக்கு நம் நம்பிக்கைகள் முக்கியம் ,முழுமை என்பது இங்கு யாருக்குமே இல்லை ,மனிதர்கள் மொத்தம் இருவகை ,முழுமையை நோக்கி பயணிப்பவர்கள் அல்லது முழுமையை விட்டு விலகி செல்வபர்கள் ,ஆனால் யாருமே முழுமையானவர்கள் அல்ல இந்த பிரபஞ்சமே நமக்கு குரு நாம் கற்றுக்கொண்டே போகலாம் எப்படி வாழ்வது அல்லது எப்படி வாழக்கூடாது என்று .நமக்கு நம்பிக்கை இல்லாத விஷயங்கள் கூட பிறர் செய்கிறார்கள் என்பதால் நாமும் செய்கிறோம் ,நிர்பந்தத்திற்கு பணிகிறோம் .நம் சுயத்தை காட்டிலும் நம் சுயத்தின் பிம்பங்கள் நமக்கு முக்கியம் ,மற்றவர் கண்களிலும் ,மனம்களிலும் நம்மை நாம் நிறுவ முயல்கிறோம் .விதிகளுக்கு அப்பாற்பட்ட முழுமை என்பது மாயை ,ஏனெனில் விதிமுறைகள் மனிதனுக்கு மனிதன் மாறுபடுகிறது,முழுமையின் அளவீடும் மாறும் .,சடாரென்று நான் எழுந்தேன் நின்று கொண்டிருந்த அருணிடம் ,"நான் அவசரமாக ஊருக்கு போகணும் ,கோவி கிட்டயும் நாயர் கிட்டையும் சொல்லிடுங்க " என்று சொல்லி உடனடியாக அங்கிருந்து கிளம்பிவிட்டேன் ,நான் குருஜியை காணவில்லை ,எனக்கு அவர் தேவை இல்லை ,எனக்கு கால்கள் இருக்கிறது என்று உணர்ந்த பின் ,ஊன்றுகோல் அவசியம் இல்லை ,எனது சட்டை பாக்கெட்டில் ,பர்சில் ,எந்த குருவின் படமும் வேண்டாம் ,ஒரு பாக்கெட் கண்ணாடி போதும் ,என்னை நான் நோக்குவதாலே ,என்னை நான் செதுக்குகிறேன் ,அபூர்வ சக்தியோ இல்லையோ எனக்கு இந்த குனியமுத்தூர் பயணம் தெளிவை அளித்தது ,என்னை நான் ஏமாற்றி கொள்ள தயாரில்லை
..
குனியமுத்தூர் பஸ் ஸ்டாண்ட் ,ஊருக்கு போக நின்றிருந்தேன் ,,அப்போது புறக்கண் இல்லாத அவள் என் அகக்கண்ணை திறந்தாள் "சார் ஸ்டிக்கர் ,போட்டோ ,பேனா ,எது எடுத்தாலும் அஞ்சு ரூவா ,ஏதாவது வாங்கிக்க சார் " ஆழ்ந்த சிந்தனையின் பிடியில் இருந்த நான் சடாரென்று விழித்து எழுந்தேன் பளிச்சென்று தெரிந்த அந்த ஸ்டிக்கர், நான் பார்த்து சிரித்தேன் ,ஐந்து ருபாய் கொடுத்து அதை வாங்கினேன் , அதே கூடையில் மூலையில் பாக்கி குருஜி கூலர்சொடு ,டிசைனர் காஸ்ட்யும் போட்டு கொண்டு பென்ஸ் காரின் பக்கவாட்டில் சாய்ந்து நின்று சிரித்தார் .
நானும் அவரை பார்த்து சிரித்தேன் ,நான் மனமெல்லாம் மகிழ்ச்சியோடு வாங்கிய அந்த ஸ்டிக்கரை சத்தம் போட்டு என் மனதுக்குள் படித்தேன்...

"உன் வாழ்க்கை ,உன் கையில் "

முற்றும்.
குறிப்பு -இது முற்றிலும் புனைவே ,எந்த ஒரு குருவையும் நேரடியாக தாக்குவது அல்லது எந்த மத ,இறை நம்பிக்கயாளர்களின் நம்பிக்கையை புண் படுத்துவது இதன் நோக்கம் அல்ல .
முந்தைய பகுதிகள்

Thursday, November 18, 2010

குருஜி -3-சற்றே பெரிய கதை

கோவிந்தன் பஸ்ஸில் தனது பையிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்தான் " வெங்கி இத படிச்சு பாரு " வாழ்க்கை எனும் பஞ்சாமிர்தம் எனும் அந்த புத்தகத்தின் அட்டையில் ஜீன்ஸ் ,கூலர்ஸ் போட்டு ஒரு ஜேர்மன் ஷெபர்ட் நாயை பிடித்து கொண்டு நிக்கும் பாக்கி சுகதேவ் குருஜி போட்டோ வித்யாசமாக பட்டது .தமிழாக்கம் ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் பெயர் போட்டிருந்தது , சட்டென்று எனக்கு ஒரு ஆச்சர்யம் ,கோவி அதை உணர்ந்தவனாக " இவரு குருஜியோட பிரதான சிஷ்யர் ," இந்த எழுத்தாளரை எனக்கு நன்றாக நினைவு உள்ளது ,ரெண்டுங்கெட்டான் வயதில் கடைக்கு சென்று பிரபல மஞ்சள் பத்திரிக்கைகள் வாங்க காசு இல்லாத பொழுது ,என் நண்பன் "அதெல்லாம் எதுக்கு டா ,நான் நம்ம பஞ்சாயத்து லைப்ரரில ஒரு புக் படிச்சேன் செமையா இருந்துச்சு " என்று சொல்லி இவர் புத்தகத்தை கொடுத்தான் ,நானும் லைப்ரரி தான் கதி என்று சில நாட்கள் கிடந்தேன் ,வீட்டில் எல்லாருக்கும் பையன் ஏதோ பெரிய பெரிய புத்தகம்லாம் படிக்கிறான் பெரிய அறிவாளியா வருவான்னு பேசிக்க ஆரம்பிச்சுடாங்க .கடைசியாக ஒரு நாள் அதே புத்தகத்தை தேடி வந்த முத்துகுமார் வாத்தியாரிடம் மாட்டி,"இதெல்லாம் பெரியவங்க படிக்கிறது,பிச்சுருவேன் " என்று அவர் மிரட்டிய பின் தான் அது நின்றது .இன்று அவர் ஆன்மீக எழுத்துக்களை எழுதுகிறார் என்பது எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை அளித்தது .
பேருந்தில் மீண்டும் இளைய சேனாதிபதி படம் ஒன்றை போட்டார்கள் , சரி இந்த புத்தகத்தை பிரட்டி பார்க்கலாம் என்று முடிவு செய்து தொடங்கினேன் .ஆஹா ஒவ்வொரு வரிகளும் தத்துவ தேன் சொட்டியது ,நம் லட்சியங்களை துரத்தி செல்ல வேண்டும் , அதை எட்டி பிடிக்க வேண்டும் ,ஆசை பட வேண்டும் ,அதை அடைய நாம் அயாராது முயல வேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை நம்பிக்கை தெறித்தது , அதிலும் அதில் அவரது சொந்த அனுபவங்கள் பற்றிய குறிப்புகள் எல்லாம் ஒவ்வொன்றும் பிரமாதம் ,மசால் தோசைக்காக மைசூரு வரை சைக்கிள் மிதித்து வந்த கதையை கேக்கும் போது அவரது லட்ச்சிய வெறி தெரிகிறது ,மசால் தோசை தானே என்று நாம் சால்ட்டாக எண்ண கூடாது ,அதையும் விடாமல் துரத்தி அடைய வேண்டும் என்கிறார் குருஜி .அவரது சிறிய வயதில் ஓணான்களின் கழுத்தில் சுருக்கு மாட்டி பிடித்து இழுத்து செல்லும் அந்த குறிப்புகளை வாசிக்கும் போதே அவரது முழு வீரம் புரிகிறது , அவர் எதுக்கும் துணிந்தவர் என்று புரிகிறது ,சீச்சு சீச்சு தனது பென்சிலை குட்டியூண்டு ஆகும் வரை பாதுகாத்து வைப்பாராம் ஆஹா என்ன ஒரு சிக்கனம் , பின்பு அதை தன்னுடன் படிக்கும் ஏழை நண்பனுக்கு இலவசமாக கொடுத்துவிடுவாராம் .இதுவல்லவோ தயை ,கருணை கடலே என்று என் கண்கள் பணிந்தது .அவருக்கு ஞானம் வந்த கதை அபாரமானது அவரது 13 ஆவது வயதில் அவருக்கு 13 நாள் பொண்ணுக்கு வீங்கி வந்து வேறு வழி இல்லாமல் பேச முடியாமல் இருந்தாராம் ,அப்போது தான் அந்த மிருகின ஜம்போ க்ரியாவை அவரது ஞான குரு அரூபமாக வழங்கினாராம் .
பூர்வாசிரமத்தில் அவரது இயற் பெயர் தேவா, அவர் சாயங்கால வேளைகளில் மைசூர் பஸ்ட் ஸ்டாண்டில் சுக்கு காப்பி விற்றதனால் ,நாளடைவில் சுக்கு தேவா என்று அழைக்க பட்டு அதுவே மருவி சுகதேவ் என்று ஆனதாம் .பூர்வ ஜன்ம கர்மங்களில் கொஞ்சூண்டு மீதி -பாக்கி இருந்ததால் இந்த ஜன்மாவில் அதை கழிக்க அவர் அவதரித்து உள்ளார் என்பதால் பாக்கி சுகதேவ் ஆனார் .(அவர் ஏதோ நிதி நிறுவனம் நடத்தி அதில் பலருக்கு பாக்கி கொடுக்க வேண்டி இருந்ததாக நண்பன் சுப்பு சொன்னான் !அதெல்லாம் பொய் என்று இதை படித்த உடன் தெரிந்து கொண்டேன் ).என் மனமெல்லாம் மகிழ்ச்சி நம்பிக்கை பொங்க அப்படியே உறங்கி விழித்தேன் , கோவி " வெங்கி எந்திரிங்க ,நாயர் எந்திரியா ,குனியமுத்தூர் வந்துருச்சு " என்று சொல்லி தட்டி எழுப்பி ,தட்டுமுட்டுகளை எடுத்து கொண்டு இறங்கினோம் , அங்கேருந்து இன்னொரு பேருந்து பிடிச்சு தூக்க கலக்கத்தில் அந்த காலை பொழுதில் மலைகள் சூழ ஒரு அற்புதமான இடத்தில் இறங்கினோம் "பாஷா யோகா மையம் உங்களை வரவேற்கிறது " என்று ஒரு பெரிய விளம்பரம் ,குருஜி படையப்பா தலைவர் மாறி ஒரு படமெடுத்த நல்ல பாம்பை முத்தம் கொடுக்கும் பிரம்மாண்ட படம் எங்களை வரவேற்றது ,நாயர் "சாரே பாம்பு கூட இவ்வுட நல்ல போஸ் குடுக்குது " என்று என் காதில் முணுமுணுத்தான் ."வாங்க" என்று எங்களை உள்ளே அழைத்து போனான் , ஒரு வட நாட்டு இளைஞன் வெள்ளை குர்தா போட்டு கொண்டு "ஹாய் கோவி" என்று கூவினான் ,"ஹை அருண் "! என்று இவனும் கூவினான் , எங்களை எல்லாம் அறிமுகபடுத்திவிட்டு ஏதோ பேசிக்கொண்டே உள்ளே நடந்தோம் , அப்பொழுது மொட்டை தலையுடன் ஒரு இளம் வயது பெண் துறவியை காவி உடையில் கண்டோம் , எனக்கு மனதில் ஏதோ செய்தது ,கோவி " பிரானாம் மாதா ஜி " என்று வணக்கம் வைத்து எங்களை அறிமுகம் செய்தான் ,நான் கோவியிடம் கேட்டேன் "என் இவங்க மொட்டை அடிசுருக்காங்க ?", கோவி சொன்னான் " அவங்க சன்யாசம் வாங்கிட்டாங்க ,துறவறம் பூண்டதுனால இந்த மாறி ஆகிட்டாங்க இதெல்லாம் பெரிய விஷயம் " நாயர் கவட்டை போட்டான் " சாரே குருஜி கூட சந்நியாசி தான அப்புறம் என் அவரு மட்டும் நெறைய முடி வெச்சுகிட்டு அதுக்கு மைண்டனன்ஸ் எல்லாம் செலவு ஆகுமே ,அது எப்படி சாரே " என் மனதில் சிறு நெருடலாக தோன்றிய இந்த வினாவை கேட்டே விட்டான் , சற்று கடுப்பான கோவி "நாயர் கடவுள் , எப்படி வேணாலும் இருப்பார் ,அவருக்கு விதிகள் கிடயாது ,அத இந்த உலகத்துக்கு உணர்த்த தான் அவரு இப்டி இருக்கார் ,புரியுதா " என்று லேசாக கடித்தான் ,எனக்கு அவன் ஏதோ சப்பை கட்டு கட்டியதாக பட்டது .
எங்களுக்கு ஒரு அறை ஒதுக்க பட்டது ,குளித்து சிற்றுண்டி உண்டு வெளியே வந்தோம் ,அங்கே அருண் எங்களுக்காக காத்திருந்தான் ,"வாங்க சுத்தி பாக்கலாம் .என்று அழைத்து சென்றான் ,குருஜியின் பிரசங்கம் ஒலிபெருக்கியில் கேட்டு கொண்டிருந்தது ,"கடவுள்ங்க்றவர் எங்கயோ இல்ல இங்க உங்க பக்கத்துல ,உங்களுக்குள்ள இருக்குறார் ,நாம அவர மறந்துட்டோம் ,நாம் எல்லாரும் கடவுள் ,கடவுளின் பிம்பம் , அந்த உணர்வு நமக்கு இருந்தால் போதும் நாம் கடவுள் " என்று அற்புத சொற்பொழிவு கேட்டது ,பக்க வாட்டில் உள்ள ஒரு அமைப்பில் பல பொருட்கள் விற்ப்பனைக்கு உள்ளதாக சொன்னான் அருண் , உள்ளே பொய் பார்த்தால் எங்கும் குருஜியின் படங்கள் புலி குட்டியுடன் விளையாடுவது போல் ,சிறு குழந்தையை கொஞ்சுவது போல் ,ஆழ்ந்த தியானத்தில் இருப்பது போல் , கோல்ப் விளையாடுவது போல் என்று பல்வேறு சைஸ் படங்கள் ஒவ்வொன்றும் ஒரு விலை .நாயர் கேட்டான் " சாரே நாம எல்லாரும் கடவுள்னு குருஜி சொல்லுறார் , பின்னே எதுக்கு சாரே அவரோட இத்தனை படம் ?" என்று இயல்பாக என் மனசாட்சியில் வந்த கேள்வி நாயரின் வாய் வழியாக வந்து விழுந்தது , அருண் "குருஜி பூஜா நேரம் நீங்க பாருங்க நா வரேன் " என்று நழுவி விட்டான் ,கோவி சங்கடத்தில் நெளிவது தெரிந்தது ,"நாயர் உனக்கு நம்பிக்க இல்லன விடு,நீ ஒன்னும் வாங்கவேணாம் ,நாங்க உன்ன வாங்க சொல்லல " என்று சொன்ன போது உண்மையிலயே அவன் மீது எனக்கு பரிதாபம் ஏற்ப்பட்டது .
ஓரிடத்தில் பல பக்த்தர்கள் வித்யாசமான கோலத்தில் படுத்திருந்தனர் , இடக்கையை மேலே நீட்டி ,வலக்கையை மடித்து நெற்றிக்கு அடியில் வைத்து ,இடக்காலை நீட்டி வலக்காலை 4 போல மடித்து ,குப்புற படுத்திருந்தனர் ,அதுவும் அசைவற்று .நான் கேட்டேன் "என்னத் இது ?", கோவி பக்கத்தில் அதே மாறி வடிக்க பட்ட ஒரு சிற்ப்பத்தை காண்பித்தான் ,"இந்த மாதிரி படுத்து இருக்கும் போது பல சூக்ச்ம சக்கரங்கள் திறக்கும் ,பேரானந்தம் கிடைக்கும்ன்னு குருஜி சொல்லிருக்கார் ,எல்லாரும் மணிக்கணக்கில் இந்த மாறி இங்க வந்து படுத்து இருந்து சமாதி நிலைக்கு போய் வருவாங்க ,நீங்களும் இப்ப படுத்து பாருங்க"
என்று அவன் சொல்லிய படியே படுத்து விட்டான் ,சற்று தயங்கிய நாயரும் கூட தயாராகிவிட்டான் ,வேறுவழி இன்றி நானும் கூட .அப்பொழுது நான் எண்ண
வில்லை என் வாழ்கையே நான் மறுபடியும் எழும் போது மாறப்போகிரதன்று .
தொடரும் ...

குருஜி-2 -சற்றே பெரிய சிறுகதை

இப்பொழுது தான் அவனை தனியாக சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது .அலுவலக எதிரில் இருக்கும் கிருஷ்ணன் நாயர் டீ கடையில் அமர்ந்து ஆகாசத்தை பார்த்து ஒரு நமுட்டு சிரிப்பு சிரித்து டீயை இடக்கையால் சுற்றி ஆத்தி அப்படியே ஒரு வாய் குடிப்பதும் மீண்டும் ஆகாயத்தை பார்த்து சிரிப்பதும் குடிப்பதும் என்று போனது .நான் மெதுவாக அவனிடம் சென்றேன் ,"வா வெங்கட் ,நீ என்ன பாக்க வருவன்னு எனக்கு தெரியும் " என்று சொல்லி புன்முறுவல் பூத்தான் , நான் அப்படியே பூசி மொழுகி பொத்தம் பொதுவாக ஒரு சிரிப்பு சிரித்தேன் , நாயர் "இது எந்தா பிரமாதம் எனக்கு கூட அறியும் வெங்கட் சார் தினம் இதே மூணு மணிக்கு இவ்வுட வரும் " என்று சந்தில் புகுந்து நாதஸ்வரம் வாசித்தான் .நாயரை கண்ணாலே துச்சமாக ஒரு பார்வை பார்த்து விட்டு கோவிந்தன் தொடர்ந்தான் "வெங்கட் வாழ்கைய பத்தி என்ன நினைக்குற ? " என்றானே பார்க்கணும் அந்த கேள்வியை கேட்ட உடன் சின்ன வயதில் பல்பத்தை தொலைத்து விட்டு தேடி அடிவாங்கிய போது ஏற்பட்ட அந்த ஒரு பரபரப்பு எனக்கு ஏற்ப்பட்டது , கேட்டு விட்டான் ,என்னிடம் இது வரை யாரும் கேட்க்காத இந்த கேள்வியை கேட்டே விட்டான் ,எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ,இது வரை நான் இதை பற்றி ஏதாவது யோசித்திருந்தால் தானே ஏதாவது சொல்ல முடியும் ,எதுவுமே சொல்லவில்லை என்றால் நம்மை முட்டாள் என்று எண்ண மாட்டானா ? நாம் அறிவு ஜீவி என்று உலகத்தில் நம்மை நிறுவ வேண்டாமா ,இப்படி என் எண்ணங்கள் எல்லாம் என் மனதில் ஸ்க்வாஷ் ஆடியது (எப்போதுமே கபடி தான் ஆடணுமா என்ன ,தீபிகா விளையாடியதை பார்த்த பின் இப்பொழுது எல்லாம் என் மனம் ஸ்க்வாஷ் தான் விளையாடுகிறது )



நான் ஒருவழியாக வாயை திறந்து சொன்னேன் "வாழ்க்கைங்கறது நாம் மட்டும் வாழ்றது இல்ல பிறருக்காக நாம வாழ்றது " என்று ஏதோ ஒரு படத்தில் ஏதோ ஒரு ஹீரோ சொன்ன வசனத்தை சொன்னேன் ,கோவிந்தன் இதை கேட்டதும் சிவமணி ட்ரம்ஸ் போல் அதிர்ந்து சிரித்தான் ,நாம ஏதாவது தப்ப சொல்லிட்டோமோ என்று மனம் பதறியது ,ஆடதொட கஷாயத்தை வெறும் வயற்றில் குடித்தால் வருமே ஒரு முக பாவானை அது போல் வந்தது ,"வெங்கட் முதல்ல நீ யாரு ,நான் யாரு ,நாமங்க்றது யாரெல்லாம் ,பிறர்ன்னு யார சொல்லுவ நீங்கறது நீ இல்ல ,நான்கறது நான் இல்ல ,நாயர் கூட நாயர் இல்லை ..நாமெல்லாம் .." என்று அவன் தொடரும் பொழுது பளிச்சென்று நான் பேசினேன் " கரக்ட் கோவி ,எனக்கு கூட இந்த ஆளு நாயர் இல்லன்னு கொஞ்ச நாளா டௌட் ,நான் பேசுற மலையாளம் கூட இந்த ஆளுக்கு புரியல , இவன பாத்தா அந்த திருநெல்வேலி ரெட்டை கொலை பண்ணிட்டு ஒட்டு மீசை வெச்சுக்கிட்டு தப்பிச்சு வந்தவன் மாறியே இருக்கான் , " நாயர் பதறி " சேட்டா இப்படி எல்லாம் பறைய கூடாது " என்று தலையாலம் (தமிழ் + மலையாளம்) பேசினான் .அமைதியாக தொடர்ந்தான் கோவி " வெங்கி , நேத்து நான் வெறும் கோவிந்தன் இன்னிக்கோ ஆச்சார்யா கோவிந்தன் ,நாளைக்கு நான் யாருன்னு எனக்கே தெரியாது ,இந்த மாற்றத்துக்கெல்லாம் யாரு காரணம் ? எல்லாம் என் குருநாதர் பாக்கி சுகதேவ் மகாராஜ் தான் நான் உன்ன கூட்டிட்டு போறேன் ,ஒரு வாரம் கிளாஸ் ,ரெண்டாயிரம் பீஸ் ,குண்டலினிய அப்டியே மூலாதாரத்திளிருந்து கெளப்பி சஹாஸ்ராரத்துல கொண்டு போய் நிப்பாட்டி அப்ப உன் அகக்கண்ண திறப்பாரு குரு ,அதெல்லாம் ஒரு அனுபவம் ,மிருகின ஜம்போ க்ரியா அடடா எப்பேர்பட்ட விஷயம் , மூச்ச உள்ள இழுத்து ரெண்டு நாசியையும் விரலால அடைச்சு ,நெத்திய சுருக்கி ,கண்ண உருட்டிஅப்படியே ஒரு நிமிஷம் இருக்கணும் ,அப்புறம் வாய் வழியா மூச்ச இழுத்து மறுபடியும் 30 செகண்ட் அப்டியே இருக்கணும் ,அப்போ கடவுள் குருஜி வடிவத்துல அப்படியே கண் முன் சச்சிதானந்த சொரூபமாய் நடனம் ஆடுவார் " லயித்து சொல்லி கொண்டிருந்த கோவி நாயரின் குரல் கேட்டு திடுக்கென்று விழித்தான் "ஞான் கண்டிருக்கு சாரே ,ஞான் தினம் இத கண்டிருக்கு " என்று குதித்தான் நாயர் , "நாயரே என்ன சொல்லுறீங்க கோவி மாறி நீங்களும் கடவுள பார்த்தீங்களா " என்று அதிர்ச்சியில் கேட்டேன் "சச்சிதானந்தம் ,நம்ம 21G கண்டக்டர் , சைதாபேட்டை கூவம் பிரிட்ஜில் ஏறும் சமயத்துல எல்லாரும் இப்படி தான் மூக்க பொத்தி செய்வாங்க , இது ஒரு க்ரியான்னு எனக்கு தெரியாது பச்சே பஸ்சு கண்டக்டர் சச்சிய எனக்கு நல்லா அறியும் " கடுப்பான கோவி "நாயர் சும்மா இருங்க இதெல்லாம் உங்கள மாறி ஞான சூன்யத்துக்கு புரியாது ,வெங்கி அடுத்த மாசம் குருஜி கைலாஸ் போறாரு ஒரு நாப்பதாயிரம் செலவாகும் ,ரெடி ஆகுங்க போகலாம் ,அதுக்கு முன்னாடி இந்த சனி ஞாயர் குனியமுத்தூர் ஆஸ்ரமத்துக்கு போகலாம் , டிக்கெட் எடுத்துடுங்க ,குருஜி கூட உலக சமாதன மாநாடு முடிசுகிட்டு வெள்ளி கிழம வந்துருவார் அவரோட பிரசங்கத்தையும் கேக்கலாம் ,என்ன சரி தான ?" :வெங்கி சாரே நானும் கூட குருஜி ஆணோந்த ஜகடன் பத்திரிக்கையில் எழுதியத படிச்சுருக்கேன் ,யானும் நீங்க கூட வரும் " என்று சொல்லி இருவரும் டிக்கெட் செலவை என் தலையில் கட்டிவிட்டு நடை கட்டினார்கள் சம்பந்தமே இல்லாமல் சில மாதங்களுக்கு முன் கோவியுடன் முதல் நாள் இளைய சேனாதிபதி நடித்த ஏறா படம் பார்த்தது நினைவுக்கு வந்தது , அதில் இளைய சேனாதிபதியின் அறிமுக காட்ச்சியில் தண்ணீருக்குள்ளிருந்து திமிங்கலம் மாறி வரும் அந்த காட்சிக்கு இவன் விசில் அடித்ததிலிருந்தே ,இவன் கூட படத்துக்கோ வெளியூருக்கோ போகக்கூடாது என்று முடிவு செய்து இருந்தேன் ,ஆனால் விதி யாரை விட்டது .

வெள்ளிகிழமையும் வந்துவிட்டது , நாங்கள் மூவரும் கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து குனியமுத்தூர் கிளம்பினோம் , எனக்கு என் வாழ்வில் ஏதோ ஒரு பெரிய மாற்றம் ஏற்ப்படபோகிறது என்று ஒரு நம்பிக்கை பிறந்தது .
தொடரும்.....
முந்தைய பகுதி

குருஜி-1 சற்றே பெரிய சிறுகதை

.

குருஜி-1 சற்றே பெரிய சிறுகதை

"அதிரடிக்கார மச்சான் மச்சான் மச்சான் டீ", அலறியது என் கைப்பேசி .பக்கத்தில் படுத்திருந்த சுப்பு எரிச்சலில் 'உச்' கொட்டி போர்வையை காது வரை மூடி சுருண்டு படுத்து கொண்டான் .அந்த பத்துக்கு பத்து அறையில் சூரியன் மெதுவாக தவழ தொடங்கிருந்தது .விடிய காலை ஏழு மணிக்கு எந்த விடியா மூஞ்சி அழைக்கிரான்னு எரிச்சலாக கண்ணை கசக்கி கொண்டு கைப்பேசியை பார்த்தேன் ,என்னோட பாஸ் ,தீபக், நான் வேலை பார்க்கும் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை மேலாளர் .போன் செய்ய பெரிதாக காரணம் ஏதும் இல்லை ,கடந்த இரண்டு மாதங்களாக நான் நான் பெர்போமிங் லிஸ்டில் உள்ளேன் ,நிறுவனத்தின் டார்கெட்டை நான் தொடும் தூரத்தில் இல்லை .இரண்டு மாதத்திற்கு முன் வரை நான் தொடர்ந்து ஆறு மாதங்களாக டாப் பெர்போர்மேர் லிஸ்டில் முதலிடத்தில் இருந்தேன் .என்னை ஊக்க படுத்துகிறேன் ,தேற்றுகிறேன் என்று தினம் அரை மணிநேரமாவது இப்படி ஏதாவது மொக்கை போடுவார் .எரிச்சலோடு ஆமாஞ்சாமி போட்டுவிட்டு வேலையே பார்ப்பேன் .இன்றும் அதே தொடர்ந்தது.


எல்லாம் மூன்று மாதங்களுக்கு முன் தொடங்கியது ,ஊருக்கு போன என்னை எனது மாமன் மகளுக்கு பேசி முடித்தார்கள் ,வருகிற தை மாதம் திருமணம் என்று முடிவாயிற்று .சிறு வயதிலிருந்தே பார்த்து பழகியவள் எனக்கு எப்பொழுதுமே அவளை பிடிக்கும் என்பதாலும் நானும் ஒத்து கொண்டு ,அவளுக்கும் பிடித்திருக்கும் எனும் நம்பிக்கையில் தட்டு மாற்றி விட்டு சென்னைக்கு வந்தேன் ,சென்னை வந்த இரண்டாம் நாள் எனக்கு போன் செய்தால் ,தான் இப்பொழுது வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டதாகவும் தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும் ,வேறொரு பையனை காதலிப்பதாகவும் ,அவன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பனி புரிவதாகவும் கூறினாள். இத்தனையும் சொல்லிய பிறகு நம்மால் ஆன எதையாவது செய்வோம் என்று எங்கள் வீட்டை எதிர்த்து அவளுக்கு பையன் வீட்டு சம்மததோடு சென்னையிலயே பதிவு திருமணம் நடத்தினேன் .எல்லாம் கிரகம் பிடிச்ச தமிழ் சினிமா பாத்ததால வந்த வினை , நாமளும் ஹீரோ ஆகலமேன்னு ஒரு நப்பாசை ,இப்பொழுது என் அம்மா மற்றும் ஊரில் உள்ள உறவினர்கள் என் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் ,நான் அவர்களுடன் பேச முயன்றும் பயனில்லை .பெரும் மன உளைச்சலில் என்னால் எதிலுமே சரியாக கவனம் செலுத்த முடியவில்லை .
இந்த இரண்டு மாதங்களாக நான் மட்டும் மாறவில்லை எனது அலுவலகத்தில் கோவிந்தனும் மாறிவிட்டான் .கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து டாப் பெர்போமர் அவன் தான் .ஆபீஸ் வண்டியை எடுத்து கொண்டு முக்கு கடையில் முட்டை போண்டா சாப்பிட்டு, டீ குடித்துவிட்டு ,பேப்பர் படிச்சிட்டு ,எதிர் வரிசையில் உள்ள வசந்த் அண்ட் கோ வாசலில் நின்று கிரிக்கெட் போட்டி பார்த்து விட்டு பொறுமையாக அலுவலகம் வருவான் ,"சார் கிளயண்ட் அவுட் ஒப் ஸ்டேஷன் ,ரெண்டு நாள் கழிச்சி வர சொல்லிருக்காங்க " என்று வாய்ஸ் கார்டு கூசாமல் பொய் சொல்லுவான் (வாயை விட வாய்ஸ் கார்ட் தான் முக்கியமுங்க ).இப்படி சென்று கொண்டிருந்த அவனது வாழ்க்கை இப்பொழுது திடீர் மாற்றம்,அவனை சுற்றி ஏதேதோ கதைகள் உலா வந்தது எனது அலுவலகத்தில் .ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது ரெட் இருந்தாலும் கூட இவன் முன்னாள் நிற்கும் வண்டிகளை வெறுப்பேற்றும் வண்ணம் ஒளிரும் ஹோரன் இப்போது அடிப்பதில்லயாம்,சிக்னலில் ஓரமாக ஒதுங்கி எல்லா வண்டியும் போய்விட்டதா என்று உறுதி செய்து கொண்டு தான் கிளம்புகிரானாம் .இந்த ஆச்சர்யத்தை நானே கண்டு ஊர்ஜிதப்படுத்தினேன் .எட்டணா சில்லறை பாக்கி தராத நடத்துனர் சட்டையை பிடித்து போலீஸ் ஸ்டேஷன் வரை போன கதை எனக்கு தெரியும் ,ஆனால் இப்பொழுது எல்லாம் சில்லறை தராத நடத்துனரை பார்த்து மர்ம புன்னகை புரிவதோடு சரியாம் ,அன்றொரு நாள் 5B பேருந்தில் வரும்போது இப்படி தானாம் சில்லறை கொடுக்காத நடத்துனரிடம் இறங்கும் பொழுது சிரித்து கொண்டே சொன்னானாம் "அந்த எட்டணாவ நீங்களே வெச்சுக்குங்க ,ஆஸ்பத்திரில இருக்குற உங்க பையனுக்கு உதவும்" இதை கேட்ட அந்த நடத்துனர் கர்நாடகா திறந்து விட்ட காவேரி நீர் போல் போல போல வென அழுதே விட்டானாம் "சாமி நீங்க தெய்வம் " என்று சொல்லி கோவிந்தனின் காலை பிடித்தான் என்று அந்த பஸ்சில் பயணித்த மதன் என்னிடம் சொன்னான் .நம்புவதா இல்லையா என்று யோசனையில் இருந்தேன் .வீரு இன்னொரு கதை சொன்னான் அவனும் கோவிந்தனும் ஒரு நாள் சாயங்காலம் தாம்பரத்தில் ஒரு க்ளயன்ட்டை பார்க்க மின்சார ரயிலில் சென்றார்களாம் , ஏற்க்கனவே ரயில் பெட்டி வேலைக்கு சேர்ந்த புதிதில் தைத்த காக்கி சட்டையை இருவது வருட சர்வீசுக்கு பிறகும் போட்டிருக்கும் போலீஸ் காரரின் தொந்தியை போல் கூட்டம் பிதுங்கி வழிந்ததாம் ,அப்பொழுது திருசூலம் ஸ்டேசன்னில் ஒரு துபாய் ரிட்டன் பார்ட்டி இரண்டு பெரிய பெட்டிகளை தூக்கி கொண்டு வந்தாராம் ,ஒரு பெட்டியை கூட்ட நெரிசலில் கோவிந்தனின் கால் மேல் தூக்கி வைத்துவிட்டாராம் ,இதே பழைய கோவிந்தனாக இருந்தால் அங்கு ஒரு கிடா வெட்டு நடந்திருக்கும் , ஆனால் கோவிந்தன் சிரித்து கொண்டே அந்த ஆசாமியிடம் சொன்னானாம் " சார் ட்ரைன்ல இடம் இல்லை ,புரியுது, என் இன்னொரு கால் கூட ப்ரீயா தான் இருக்கு அது மேல கூட உங்க இன்னொரு பெட்டிய வைக்கலாமே " இதை கேட்ட உடனே அந்த துபாய் ரிட்டன் ,ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டு என்று சொன்ன ஏசு பிரானே தன் கண் முன்னாள் வந்து விட்டதாக எண்ணி ,குரல் தழுதழுக்க தனது கழுத்தில் உள்ள புதிய துபாய் தங்க சங்கிலியை அவனுக்கு அணிவித்துவிட்டு ,பிதா சுதன் பரிசுத்த ஆவி ,ஆமென் என்று சொல்லி கண்ணீர் மல்க விடை பெற்றானாம் .
இப்படி ஏகப்பட்ட கதைகள் தினம் தினம் கோவிந்தனை பற்றி காதில் விழுந்த வண்ணம் இருந்தது .இதற்க்கு எல்லாம் காரணம் அவன் இரண்டு மாதங்களுக்கு முன் அவன் குனியமுத்தூரில் உள்ள பிரபல குரு ஜி பாக்கி சுகதேவ் மகாராஜ் அவர்களின் ஆஸ்ரமத்திற்கு சென்று ஒரு வாரம் தங்கி மிருகின ஜம்போ பிராணாயாமமும் ஆசனங்களும் கற்று வந்தது தான் என்று என் காதில் சுப்பு கிசுகிசுத்தான் .ஒரு நாள் அவனிடமே சென்று என்ன ஏது என்று கேட்டுவிடலாம் என்று எண்ணினேன் ,அவனிடம் எனது பிரச்சனைகளுக்கு தீர்வு இருக்கும் என்று எனக்கு ஏதோ ஒரு நம்பிக்கை .
அதற்கேற்ற சந்தர்ப்பமும் வாய்த்தது....
தொடரும்
குறிப்பு - இது என் முதல் சிறு கதை முயற்ச்சி ,அது சற்றே பெரிய கதையாக வந்து விட்டது .இதில் வரும் பெயர்களும் ,சம்பவங்களும் முற்றிலும் புனைவே ,எனது நெருக்கமான நண்பர்களின் பெயரையே இதற்க்கு நான் பயன் படுத்தி உள்ளேன் .இது யாரயும் குறிப்பது அல்ல ,மேலும் யாரையும் இது எந்த மதத்தின் நம்பிக்கையும் அல்லது தனி நபர் நம்பிக்கையும் சாடும் முயற்ச்சி அல்ல .கொஞ்சம் சிரிக்க கொஞ்சம் சிந்திக்க .

Wednesday, November 17, 2010

ஆட்டிசம் ,கற்றல் குறைப்பாடுகள் ஓர் அலசல்

ஆட்டிசம் -இன்று உலகையே ஆட்டி படைக்கும் ஒரு நோய் .குறிப்பாக இந்த கணினி யுகத்தில் குழந்தைகளை அதிகம் பாதிக்கிறது .அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் குழந்தைகளின் எடை பருமனையும் ,ஆடிசத்தயும் கட்டுப்படுத்த முடியாமல் அரசாங்கம் தவிக்கிறது .அமெரிக்காவில் 166 குழந்தைகளுக்கு ஒருவர் என்ற ரீதியில் ஆட்டிசம் பாதிப்பு உள்ளதாக கூறப்படுகிறது .நமது இந்தியாவில் 250 குழந்தைகளில் ஒன்று எனும் வீதத்தில் சுமார் நாற்பது லட்சம் பேர் பாதித்து இருக்கலாம் என்று ஆட்டிஸ்டிக் சொசைட்டி இந்தியா கூறுகிறது .
குழந்தைகள் பற்றிய அறிவு முக்கியம் ,அவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து அவதானித்தல் மூலமே இந்த நோயை நாம் கண்டறிய முடியும் .திட்டவட்டமாக இந்த நோய்க்கு காரணங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை , மரபணுக்கள் மற்றும் புற சூழல் ஆகியவை இரு பெரும் காரணிகளாக நம்பப்படுகின்றன . ஆட்டிசம் எனும் நோய் ஒரு கூறுக்குள் அடக்க முடியாது ,இது பேச்சு ,செயல் ,அசைவு ,புரிதல் ,மொழி கற்று கொள்ளுதல் ,ஞாபகம் ,மனம் என்று பல்வேறு தளத்தில் பாதிப்பினை ஏற்படுத்த வல்லது .இதை மொத்தமாக ஆட்டிசம் சார்ந்த நோய்கள்(autistic spectral disorders) என்று வரை அறுக்கலாம் .
சுமார் மூன்று வயதிலேயே இந்நோயை நாம் இனம் காணலாம் .நெரம்பு மண்டலம் மற்றும் மரபணு கூறுகளின் பாதிப்பால் வளர்ச்சி தடை ஏற்படுகிறது .குழந்தைகள் அந்தந்த வயதில் கற்று கொள்ளவேண்டிய திறன்களை பயில்வதில்லை ,வார்த்தைகள் ,சப்தங்கள், மொழி ஆகியவை சரியாக உள்வாங்க படுவதில்லை .அவர்களுக்கென்று ஒரு தனி உலகம் அதில் தான் சஞ்சாரம் .
ஆட்டிசம் மூளைக்கும் நுண்ணறிவுக்கும் ஏதோ ஒரு தொடர்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது .ஏதோ ஒரு துறையில் அவர்கள் அசாதாரணமாக திகழ முடியும் ,ஆகினும் கூட அது உயர் நுண்ணறிவு ஆட்டிசம் எனும் ஒரு பிரிவில் மட்டுமே சாத்தியம் .இந்த காணொளியை காணுங்கள் .

ஸ்டீபன் ,இங்கிலாந்தை சேர்ந்தவர் ,தனது முதல் ஐந்து வருடங்களில் முற்றிலும் வாய் பேச இயலாதவர் .இவருக்கு ஓவிய திறமை இருந்ததை கண்டு கொண்டு அதில் அபார திறமையாக செயல் படுகிறார் ,இவருக்கு பட்டை பெயரே ஹுமன் காமெரா ,எந்த ஒன்றையும் சில வினாடிகள் பார்த்தாலே அதை முழுவதுமாக தீட்டிவிடுவார்.மேலே நீங்கள் காணும் கானொளியில் இத்தாலி தேசத்தின் தலை நகரமான ரோம் நகரை ஒரு முறை ஹெலிகாப்டேரில் சுற்றி வந்து விட்டு மூன்று நாட்களில் அதை அப்படியே தீட்டுகிறார் .எந்த ஒரு தகவல் பிழையும் இல்லாமல் .
தாரே ஜமீன் பர் படத்தில் வரும் குழந்தை இவ்வகையே , ஐன்ஸ்டீன் ,எடிசன் போன்றவர்கள் கூட தங்களது இளம் வயதில் கற்றல் குறைப்பாடுகள் உள்ளவர்களாகவே திகழ்ந்து உள்ளனர் .
இவ்வகை குழந்தைகள் தங்கள் வாய்க்குள்ளே முனுமுனுக்கும் ,நாம் சொல்வதை காது கொடுத்து கேட்க்காது .ஆட்டிசம் சார்ந்த நோய்கள் பல கூறுகள் .கற்றல் குறைப்பாடு (learning disabilities)ஆட்டிசத்தோடு இனைந்து இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம் இவ்வகையில் ஒன்று தான் டிஸ்லெக்ஸ்யா -எழுத்துக்கள் சரியாக புரியாததால் வரும் கற்றல் குறைப்பாடு .


இந்த படத்தை காணுங்கள் ,எழுத்துக்கள் mirror image போல் திருப்பி எழுத பட்டிருக்கும் . e, s,c d,p,m இந்த எழுத்துக்கள் அனைத்துமே தவறாக இருக்கும்

இதை தவிர டிஸ்கால்குலியா-கணக்கு கற்றுக்கொள்ளுவதில் உள்ள சிக்கல்கள் .டிஸ்க்ராபியா-எழுத்துக்கள் ,எழுதுவது சம்பந்தமாக வரும் குழப்பங்கள்.
கற்றல் என்பது நமது இந்த்ரியங்கள் ,புற சூழல் ,மூளை மற்றும் நெரம்பு ஆகியவயின் ஒட்டு மொத்த கூட்டு பணியில் ஏற்படுவதாகும் .புலன்கள் வழியாக நாம் ஒரு அனுபவத்தை உள்வாங்கி ,அதை மூலையில் சேமித்து ,அதன் அம்சங்களை தேவையான பொழுது நினைவு கூறுவது அவசியம் .வாசித்தல் என்பது வேறு கற்றல் என்பது வேறு ,கற்றலில் கவனம் மிக முக்கியம்.
நான் எனது அனுபவத்தில் அதிகம் காணும் கற்றல் குறைப்பாடு - கவனக்குறை செயல் தீவிர (attention deficit hyper active-adhd disorder )நோய்களே ஆகும் .இக்குழந்தைகள் துருதுருவென்று ஓடி கொண்டே இருப்பார்கள் ,எந்த ஒரு விஷயத்திலும் தொடர்ந்து அதிக நேரம் கவனம் செலுத்த முடியாது .சற்று வயதிற்கு மிகுந்த அதிக பிரசங்கித்தனமான பேச்சுக்களும் கூட சிலருக்கு இருக்கும் .அடம் ,கோபம் போன்ற உணர்ச்சிகள் மிகையாக இருக்கும் .இவர்களை நீங்கள் ஏதாவது ஒரு வேலையில் ஈடுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும் .இக்காலத்தில் அனேக குழந்தைகள் இப்படி தான் இருப்பார்கள் அவர்களுக்கு எல்லாம் இந்த பிரச்சனை என்று பொருள் இல்லை .ஐந்து ஆறு வயது வரை நாம் பொருத்து இருக்கலாம் அதன் பின்னும் இது போன்ற பிரச்சனைகள் தொடர்ந்தால் ,அதோடு எழுத்துக்கள் ,வார்த்தைகள் உள்வாங்குவதில் பிரச்சனை இருந்தால் நிச்சயம் கவனிக்க வேண்டும் .முறையாக மன நல அல்லது குழந்தைகள் நல மருத்துவரை சந்திப்பது சிறந்தது .
இது வரை எந்த மருத்துவ முறையிலும் இவ்வகை நோய்க்கு தீர்கமான தீர்வு கண்டு பிடிக்கவில்லை என்பதே உண்மை .ஆகினும் கூட சில காலம் கழித்து தொடர் முயற்சியால் இவ்வகை குழந்தைகள் சாதிக்கிறார்கள் .இதற்க்கு பெற்றோர்களின் பங்கு அபாரமானது ,மிகுந்த பொறுமை மற்றும் பக்குவம் வேண்டும் அதே போல் ஆசிரியர்களின் பங்கும் மிகவும் முக்கியமானது ,இவர்களுக்கு கற்றுக்கொடுக்க சில புதிய முறைகளை பயன்ப்படுத்த வேண்டும் ,சற்று கூடுதல் கவனம் மற்றும் நேரம் ஒதுக்க வேண்டும்
தற்போதைக்கு இந்தியாவில் ஆட்டிசம் சார்ந்த நோய்களை கவனிக்க சிறப்பு மையங்கள் உள்ளன .இங்கு மனோ தத்துவம் ,மூளைநெரம்பியல், ஆயுர்வேதம் ,யோகம் (குறிப்பாக சில ஆசனங்களும் ப்ரானயமங்களும் ) ஆகியவைகளை இணைத்து ஒரு கூட்டு முயற்ச்சியாக வெற்றிகரமாக செயல் படுத்துகின்றனர்.ஆயுர்வேதத்தில் -உட்கொள்ள சில மருந்துகள் ,சிரோ தாரா சிகிச்சைகள் வழங்க படுகின்றன .
இந்நோயை பொறுத்த மட்டில் நோயை பற்றிய அறிவும் புரிதலுமே இதற்க்கு மிக முக்கிய சிகிச்சை .குழந்தைகளை கணினி தொலைக்காட்சி போன்ற கவன ஈர்ப்பான்களை தவிர்த்து ,அம்மா அப்பா தாத்தா பாட்டி ஆகியர்வகளின் அன்பின் சூழலே நோய் தடுப்பு முறை ஆகும் .இயற்கையான சூழலில் குழந்தைகளை வெளி உலகில் பழக விடுதல் மிக முக்கியம் ஆகும் .
விதைகள் நடுவது சுலபம் ,அதை வளர்த்து மரமாக்கி பூத்து குலுங்க செய்வது மிக கடினம் .
மானுடம் மலரட்டும் .
இது சம்பந்தமாக பயனுள்ள சில சுட்டிகள்
பட உதவி -கூகிள்

Monday, November 15, 2010

கட்டாயம் பார்க்க வேண்டிய காணொளி


நம் கண் முன்னாள் நடக்கும் அத்து மீறல்கள் எத்தனை ?
சுனிதா கிருஷ்ணன் அவர்களை போல் வாழ்க்கை போராளிகளை நாம் இனம் கண்டு அவர்களை ஆராதிக்க வேண்டும் .
மனிதர்கள் எத்தனை அசாதாரண கீழ்மைக்கு செல்கின்றனர் என்பதன் சிறந்த எடுத்துகாட்டு .
நாம் என்ன செய்ய போகிறோம் ? மனம் முழுவதும் ஒரு கணக்கிறது. தயவு செய்து இந்த செய்தியை முடிந்த வரை எடுத்து செல்லுங்கள்.இந்த காணொளியை காணுங்கள்.
பாதிக்க பட்டவர்களை நாம் புறக்கணிக்கிறோம் ,பாதிப்பை விட புறக்கணிப்பின் வலி கொடுமையானது .புறக்கணிப்பின் உச்சியில் இவர்கள் உயிர் ஊசல் ஆடுகிறது .அவர்களுடைய ஆன்ம பலம் எத்தனை அபாரமானது !!இத்தனை கொடுமை ,வலி ,வேதனை,புறக்கணிப்புக்கு பின்னும் போராடும் இந்த துணிவு !!
சுனிதா கிருஷ்ணன் ,நாற்பதை தொடும் இந்த பெண் ஒனாய்களால் வேட்டையாடப்பட்ட பொழுது பதினைந்து வயது .அதற்க்கு பின் கிட்ட தட்ட 3200 குழைந்தைகள் ,பெண்களை human sex trafficking இதிலிருந்து மீட்டுள்ளார் ,கிட்ட தட்ட பதினான்கு முறை அவர் தாக்க பட்டுள்ளார் ,அவரது வலது காது செயல் இழந்து போனது ,உதவியாளர் ஒருவரை இழந்துள்ளார் ,ஆனால் அவரது போராட்டம் ஓய வில்லை.hatss off to sunitha krishnan

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -8- medical ethics

ஆயுர்வேதத்தில் மருந்துகளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளதோ அதே அளவு நடத்தை விதிகளுக்கு முக்கியத்துவம் வழங்குகிறது .நவீன காலக்கட்டத்தில் நாம் மருத்துவர் நடத்தை விதிகள் (medical ethics and code of conduct)பற்றி அடிக்கடி கேள்வி படுகிறோம் .ஒரு மருத்துவர் எவ்வாறு இருக்க வேண்டும் ,இருக்க கூடாது என்று தொழில் சார்ந்த மற்றும் தனி மனித ஒழுக்கம் சார்ந்த விதி முறைகள் வகுக்க பட்டுள்ளன .ஆயுர்வேதத்தில் நடத்தை விதிகள் ஏதேனும் உள்ளதா ?
ஆச்சர்ய படும் வண்ணம் மிக அற்புதமாக ஒரு மருத்துவன் எவ்வாறு இருக்க வேண்டும் ,யார் நல்ல மருத்துவன் என்று பல இடங்களில் அற்புதமாக விளக்க பட்டுள்ளது .ஆங்காங்கு சிதறி கிடக்கும் இந்த அற்புத முத்துக்களை சிறிது சிரம பட்டு தொகுக்க முயற்சித்துள்ளேன் .
மருத்துவம் செய்வதால் உண்டாகும் விளைவு என்ன ?
மருத்துவனுக்கு சரியான முறையில் மருத்துவம் செய்வதால் நான்கு விஷயங்கள் கிட்டும் என்கிறது ஆயுர்வேதம் .
க்வச்சித் தர்மா-சிறிது தர்மம்
க்வச்சித் மைத்ரி -புதிய நட்புகள்
க்வச்சித் யஷஹா -பெரும் புகழ்
க்வசித் அர்த்த -தேவையான அளவு பணம் .
அடுத்து ஒரு அருமையான பகடி ..ஓரிடத்தில் மருத்துவனையும் யமனையும் ஒப்பீடு செய்கிறது .


யமனும் கொடூரமானவன் தான் மருத்துவனும் கொடூரமானவன் தான் .யமனாவது பரவா இல்லை உயிரை மட்டும் பிடுங்கி செல்கிறான் ,மருத்துவன் உயிரையும் எடுத்து காசையும் பிடுங்குகிறான் ,இவன் யமனை விட கொடியவன் என்கிறது .இதே போல் யமனுடைய சகோதரனாக மருத்துவனை வர்ணிப்பதும் உண்டு .(அந்த காலத்துலயே சூப்பர் ஸ்பெசாலிட்டி ஆஸ்பத்ரிகள் இருந்திருக்கும் போல )
இன்று மருத்துவர்கள் அனைவரும் வெள்ளுடை வேந்தர்களாக வளம் வருகின்றனர் .இதை முதன் முதலில் வழி மொழிந்தது சுஸ்ருத்தர் தான் ,அவர் மருத்துவனின் உடை எப்போதுமே வெள்ளை நிறத்தில் தான் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் .கத்தியை பிடித்தால் கை நடுங்குகின்றது என்றால் ,அவன் அறுவை சிகிச்சைக்கு தகுதியற்றவன் என்று கூறுகிறார் .மாதம் ஒரு முறை முடி திருத்த வேண்டும் பதினைந்து நாளுக்கு ஒரு முறை முக சவரம் செய்ய வேண்டும் ,பதினைந்து நாளில் மூன்று முறையாவது நகம் வெட்ட வேண்டும் என்று ஏகப்பட்ட கெடுபிடி

ஒரு நோய் வெற்றிகரமாக முறியடிக்க பட நான்கு தூண்கள் அவசியம் என்று சரகர் கூறுகிறார் .முறையே மருத்துவர் ,மருந்து , பரிசாரகர்கள் (support staafs-nurse ) மற்றும் நோயாளி .இவர்கள் நான்கு பெரும் சரியாக இருந்தால் தான் ஒரு நோய் குணமாகும் என்று அழுத்தி சொல்லுகிறார் .ஒவ்வொருவருக்கும் நான்கு குணங்கள் உண்டு .மருத்துவனை பற்றி கூறும் போது , சுத்தம் ,செய் நேர்த்தி ,பாட அறிவு .அனுபவ அறிவு ஆகிய நான்கும் கை கூடியவனே சிறந்த மருத்துவன் என்று கூறப்படுகிறது .நோயாளிகளின் குணத்தை பற்றி கூறும் போது ஞாபக சக்தி , மருத்துவரின் சொல் பேச்சு கேட்பது ,நேர் மறை எண்ணம் ,மற்றும் மருத்துவருக்கு கொடுக்க பணம் (!) ஆகியவை முக்கியமாக கருதப்படுகிறது .

மருத்துவனை இரண்டு வகையாக பிரிக்கிறார் சரகர் ,பிராண அபிசார ,ரோக அபிசார .முதலாமவன் உயிரை எடுப்பவன் இரண்டாமவன் நோயை அகற்றுபவன் .அந்த காலத்திலே போலி மருத்துவர்கள் இருந்து இருக்கிறாகள் .அவர்களின் குணங்களை அற்புதமாக விளக்குகிறார் ,எல்லாம் தெரிந்தது போல் காட்டி கொள்வார்கள் ,அது வேண்டும் இது வேண்டும் என்று அலைகழிப்பார்கள் ,பொய்யான வாக்குறுதிகளை சொல்லி ஏமாற்றுவார்கள் , ஆகின வரையும் காசை பிடுங்குவார்கள் .இதை எல்லாம் கடந்து அவரிடம் சென்ற நோயாளி பிழைத்தால் அது அவன் அதிர்ஷ்டம் ,அதை தாங்கள் நிகழ்த்திய மாயாஜாலம் போல் மிகை படுத்துவார்கள் ,அசம்பாவிதம் நடந்தால் எல்லாம் விதி என்று அதன் மேல் பழியை போட்டு நகர்ந்து செல்வார்கள் .முறையாக குருகுலத்தில் பயின்று குருவிடம் அனுமதி பெற்ற பின் தான் மருத்துவம் புரிய வர வேண்டும் ,அப்படி வராதவர்களை போலிகள் என்று வர்ணிக்கிராகள்.(அந்த காலத்து மருத்துவ பல்கலை கழகம் மற்றும் மருத்துவ கழகம்!!) .


அந்த காலத்துலயே 'மால்' வெட்டும் பழக்கமும் இருந்திருக்கு போல.நோயாளிகளிடமிருந்து ஏதாவது இலவசமாக வாங்குவதென்பது மின்னலின் சக்தியில் தீக்கு இரையாவது போல் ,விஷ பாம்பு கடிப்பது போல் என்று பயமுறுத்துகிறார்கள் .
ஆயுர்வேதத்தில் என்னை ஈர்த்த உச்ச கட்ட கருத்து ,வேறெந்த மருத்துவமும் சொல்லாத கருத்து (சித்த மருத்துவம் விதி விளக்கு ).ஒரு மருத்துவன் நோயாளியை எவ்வாறு நடத்த வேண்டும் என்கின்ற கேள்விக்கு சரகர் கூறி இருக்கும் விடை இன்று வரை என்னை மெய் சிலிர்க்க வைத்த விடை ,அப்படி ஒரு தீர்க்க தரிசனம் ,அப்படி ஒரு ஆழம் அந்த கருத்தில் .
தம் புத்ர வத் உபாச்சறேத் -நோயாளிகளை உன் சொந்த பிள்ளைகளை போல் கவனி .
இதற்க்கு மேல் அடுத்த கட்டம் -மம பூத தயா பிரதி -நீ உன்னை எவ்வாறு நடத்துவாயோ அவ்வாறு உன்னிடம் வரும் அனைத்து ஜீவன்களையும் நடத்து.

இதை விட சிறந்த கருத்து எதுவுமே இல்லை ,என்னை நெகிழ செய்த கருத்து .கண்களில் நீர் பணிக்கும் .எண்ணி பாருங்கள் ,ஒரு மருத்துவர் அதிக வீர்யமுள்ள மருந்துகளை ,ஒரே பெயருள்ள வெவ்வேறு கம்பெனி மருந்துகளை ,இல்லை தேவயற்ற பரிசோதனைகளை ,இல்லை சந்தைக்கே வராத அல்லது சந்தையில் தடை செய்ய பட்ட ஒரு மருந்தை தன் குழந்தைக்கோ இல்லை தனக்கோ கொடுக்க முயல்வாரா? நிச்சயம் கிடையாது .நோயாளி என்பவன் வேறு யாரோ என்பதால் தான் இந்த அசிரதை அஜாக்கிரதை எல்லாம் .எத்தனை பெரிய தத்துவத்தை எளிமையாக ஒரு வரியில் அடக்கி விட்டார்கள் !!
இப்படி ஒவ்வொரு மருத்துவரும் எண்ணி மருத்துவம் செய்தால் உலகம் எத்தனை அற்புதமாக இருக்கும் .!!
பட உதவி-கூகிள்
முந்தைய தொகுப்புகள்

Saturday, November 13, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 7

இன்றைய காலக்கட்டத்தில் மருத்துவ துறையில் பல பிரிவுகள் உள்ளன .ஸ்பெசாலிட்டி, சூப்பர் ஸ்பெசாலிட்டி என்று தினம் தோறும் புதிய பிரிவுகள் வந்த வண்ணம் உள்ளன .ஆயுர்வேதத்தில் எப்படி ?
ஆயுர்வேதத்திலும் பல பிரிவுகள் உள்ளன .முதல் கட்டமாக ஆயுர்வேதத்தை மூன்றாக பிரிக்கலாம் .
1.மானுஷ ஆயுர்வேதம்- மனிதர்களுக்கானது
2.வ்ருக்ஷ ஆயுர்வேதம் -மரம் செடி கோடிகளுக்கு ஆனது
3.மிருக ஆயுர்வேதம் - பிராணிகளுக்கு ஆனது .
இதில் வ்ருக்க்ஷ ஆயுர்வேதம் முற்றிலும் வழக்கொழிந்து போய் விட்டது .கவனிக்க மரங்களுக்கு ஜீவன் உள்ளது அதை பேண வேண்டும் எனும் முனைப்பு அன்றே இருந்து உள்ளது
மிருக ஆயுர்வேதம் பரவலாக ஓரளவுக்கு விஞ்சி இருக்கிறது - யானைகளுக்கும் குதிரைகளுக்கும் இன்றும் சில இடங்களில் இது நடைமுறையில் உள்ளது .முறையே கஜ ஆயுர்வேதம் , ஹய ஆயுர்வேதம் என்று அழைக்க படுகின்றன .பண்டைய காலத்தில் பாலக்காப்ய எனும் ஒரு கஜ ஆயுர்வேத நிபுணர் வாழ்ந்தார் அவர் இயற்றிய பாலக்காப்ய சம்ஹிதையின் சிதறிய வடிவங்கள் இன்றும் கிடைக்க பெறுகின்றன . ஹய ஆயுர்வேதத்தில் மற்றும் பசு ஆயுர்வேதத்தில் மிக பிரசித்தி பெற்ற விர்ப்பன்னராக திகழ்ந்த இருவர் - நகுல ,சகாதேவன் , இவர்கள் ஒரு வருடம் இந்த வேடத்தில் தான் விராட மன்னனின் கீழ் பனி புரிந்தனர் .

மானுட ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் இதை எட்டு அங்கமாக பிரிக்கின்றனர் .
1.காய சிகிச்சை -பொது மருத்துவம் என்று கொள்ளலாம்
2.பால சிகிச்சை -பெண்கள் ,மகப்பேறு ,குழந்தைகளுக்கான பிரிவு
3.கிரக சிகிச்சை - மன நோய்கள் ( உண்மையில் பேய் பிசாசுகள் பீடித்தல் மற்றும் அதனை விரட்டுவதற்கு உண்டான வழி முறைகள் பற்றி இங்கு விவரிக்க படுகின்றன )
4.ஷாலாகிய தந்திரம் - தோளுக்கு மேல் உள்ள பாகங்களுக்கான சிகிச்சை -கண் ,காது ,மூக்கு ,தொண்டை ,பல் ,தலைமுடி ,தலை ,கழுத்து எல்லாம் இதில் அடக்கம் .
5.சல்ய தந்திரம் - அறுவை சிகிச்சை
6.ரசாயன சிகிச்சை - வருமுன் காப்போம் , நோய் தடுப்பு முறைகள் மற்றும் உடலை பேணுதல் ,இளமை மாறாமல் காத்தல்
7.விஷ சிகிச்சை - விஷ முறிவு , ஒவ்வாமை .
8.வ்ருஷ்ய கர்மா - பிள்ளை பேரு பெற , கலவி சார்ந்த பிரச்சனைகளும் அதன் தீர்வும் .

இத்தனை அங்கங்கள் இருந்தும் நாளடைவில் இது மருவி இரு பெரும் நீட்சியாக மாறியது .
தன்வந்தரி சம்ப்ரதாயம் -அறுவை சிகிச்சை பிரதானமாக கொண்டது
ஆத்ரேயா சம்ப்ரதாயம் -மருத்துவத்தை அடிப்படையாக கொண்டது .
சுஸ்ருதர் தன்வந்தரி வழி வந்தவர் ,வாக் பட்டர், சரகர் ஆத்ரேயர் வழி வந்தவர்கள் .
பௌத்த ஜைன மதங்கள் வேரூன்றிய பின் ரச சாஸ்திரம் எனும் புதிய உட் பிரிவு மருத்துவ சம்பிரதாயத்தில் வந்தது .
ரச சாஸ்த்திரம் -கனிமங்களை மருத்துவத்திற்கு பயன் படுத்த தொடங்கினர் .ரச சாஸ்திரம் இன்றைய நவீன வேதியல் ,மருந்தியலின் தந்தை எனலாம் .பல்வேறு தாதுக்களை அதன் மூலத்திலிருந்து பிரிப்பது ,அதை சுத்தி செய்வது , உருக்குவது ,வார்ப்பது என்று என்னனென்னமோ அதில் சாதித்து உள்ளார்கள் .
ரச சாஸ்திரத்தின் அடிப்படை அற்புதமானது ,இவ்வுலகத்தின் பொருட்கள் எல்லாம் ஒரே மூல கூறால் ஆனது ,ஆகையால் எதையும் எதுவாகவும் மாற்றலாம் என்பது தான் அடிப்படை நம்பிக்கை .பிற்காலத்தில் டால்டன் கூறினாரே atom is indestructible , அதற்க்கு எல்லாம் பல நூறு வருடங்களுக்கு முன் இந்த சிந்தனை நீட்சி நம் நாட்டில் இருந்து உள்ளது .

திட பொருளை சக்தி வடிவமாக மாற்றலாம் அதே போல் சக்தி வடிவை கொண்டு திட பொருளை உருவாக்கலாம் என்று அது நம்புகிறது .இது கிட்ட தட்ட நமது ஐன்ஸ்டீன் கோட்பாடு என்பது ஆச்சர்யம் தான் .அப்படி அவர்கள் பல்வேறு தாதுக்களை பாதரசமாக மாற்றி பின்னர் அதை தங்கமாக மாற்ற முயன்றனர் .இந்த தேடலில் பல உபரி கண்டுபிடிப்புகள் நிகழ்ந்தது .கந்தகத்தின் கிருமி நாசினி குணத்தை இந்தியா எப்பொழுதோ அறிந்து இருந்தது .மனோசிலை , கந்தகம் , தங்கம், வெள்ளி என்று எதையும் அவர்கள் விட்டு வைக்க வில்லை .

மேலும் ............

Sunday, October 31, 2010

மரணத்தின் வாசல் வரை -1..


வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்று சில உள்ளன .அந்த நாட்களை உருவாக்கியது நம் அனுபவங்கள் தான்.அதிகம் நம் மனதில் நிலைப்பது எதிர்மறை அனுபவம் என்றால் மிகை ஆகாது .மகிழ்ச்சியை விட நம் மனம் துக்கத்தை எளிதில் பங்கு கொள்கிறது .சில நேரம் நம் மனம் துக்கத்திற்கு ஏங்குகிறதோ எனும் சந்தேகம் கூட எனக்கு உண்டு .
ஒரு பெரும் வலி அதனை தொடர்ந்து ஒரு வெறுமை அதனை தொடர்ந்து ஒரு எழுச்சி தொடர்ந்து ஒரு வெறுமை ,பின் ஒரு வீழ்ச்சி .இது தான் நமது வாழ்க்கை இதே சக்கரத்தில் நாம் சோதனை எலிகள் போல் சுழன்று ,உழன்று ஓடி கொண்டு இருக்கிறோம் .இது அயர்ச்சியை தரலாம் ஆனால் அனுபவங்களில் ஒரே சாயல் இருந்தாலும் அவை நமக்கு கொடுக்கும் செய்திகள் வெவ்வேறானவை .அதை சரியாக உள்வாங்குவது நமது திறமை .நாம் அனுபவத்தின் பாடத்தை கற்றோமா ? என்று வாழ்க்கை மீண்டும் மீண்டும் நம்மை பரிட்சித்து பார்க்கும். மீண்டும் மீண்டும் நாம் தோல்வி அடைந்தாள் நாம் இன்னும் சரியாக பாடம் படிக்கவில்லை என்று பொருள் .
விபத்துகள் ஏன் நேருகிறது ? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை .அது ஒழுங்கற்ற ஒரு அவதி என்று எண்ணலாம் .விபத்தின் ஒழுங்கே அது எப்பொழுதும் ஒழுங்கற்றது என்பதில் தான்.வெகு சாதரணமாக ஓடி கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சிறிய விபத்து சீண்டினால் கூட போதும் வாழ்க்கையின் பார்வை ,ஒரு குடும்பத்தின் பொருளாதாரம், நாம் வாழ்க்கையை பார்க்கின்ற தளம் என்று எல்லாமே கேள்விக்குறி ஆகி , நாம் எந்த தளத்தின் மீது நமது கால்களை நம்பிக்கையுடன் ஊன்றி நிற்கிறோமோ அந்த தளத்தின் அடித்தளத்தையே பிளக்கும் வல்லமை உண்டு .
வாழ்க்கையின் பெரும் கனவுகள் , பெரும் திட்டங்கள் எல்லாம் தூக்கி எரிந்து நசுக்க பட ஒரு நொடி போதும் .
விபத்து நமக்கு கற்று கொடுக்கும் முக்கியமான பாடம் வாழ்கையின் நிச்சயமற்ற தன்மை .வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை உணர்வதால் என்ன பலன் ? இதை இரு கோணங்களில் நாம் பார்க்கலாம் , ஒன்று வாழ்க்கையை முழுவதும் வாழ துணிவது ,ஏற்றுக்கொள்வது ,அதன் பிடியில் நம்மை ஒப்படைத்து ,நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புவது .விளைவுகளை எண்ணாமல் , செயல்களை நேர்மையும் ஈடுபாடுடனும் ,செயல்களை செய்வதால் ஏற்ப்படும் இன்பத்திற்காக செய்வது.இருத்தல் என்பது கடந்து வாழ்தல் எனும் தளத்திற்கு நாம் பயணிப்பது முக்கியம் .உயிர் வாழும் ஆசை அல்லது தற்காத்து கொள்ளும் உந்து சக்தி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் ஒரு அம்சம் , ஆனால் வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு வினோத குணம் மனிதனுக்கு உண்டு ,அது தற்கொலை .உயிர் வாழும் இச்சையை இழக்கும் ஒரே ஜீவ ராசி நாம் தான் என்று எண்ணுகிறேன் .
அன்றாடம் நாம் எத்தனையோ விபத்துகளை பற்றி படிக்கிறோம் , செவி மடுக்கிறோம் ,காண்கிறோம் ஆனால் அவை நமக்கு பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை .அதிகம் சென்றால் அரை நாள் நம் மனங்களை அது ஆக்கிரமிக்கலாம் .எங்கோ நடக்கிறது , அது நமக்கு செய்தி .இது தவறான எண்ணமா என்றால் நிச்சயம் இல்லை ,இப்படி ஒவ்வொரு நாளும் இவ்வுலகை விட்டு நீங்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்காக வருந்தி கொண்டே இருந்தால் நாம் நம் வாழ்க்கையை இழந்து நிற்போம்.

வாழ்க்கை நிச்சயமற்றது என்று உணருவதினால் எதிர்மறை எண்ணங்களும் உருவாக வாய்ப்பு உண்டு .பயம் ,அவ நம்பிக்கை ,பதட்டம் , நம் கனவுகள் இலட்சியங்கள் பறிக்க பட்டு விடும் எனும் கவலை .இது நம்மை இயற்கயின் திட்டத்திலிருந்து புறம் தள்ளுகிறது , நாம் மரிக்க விரும்பவில்லை , நாம் இயற்க்கைக்கு எதிராக சதிராடுகிறோம் , நமது பயம் நம்மை வழி நடத்துகிறது ,நம் இருப்பை ஆழ படுத்துகிறோம் நாம் அமரன் என்று எண்ணுகிறோம் ,நம்மை மரணத்திளிருந்து தப்புவிக்க நாம் பொருள் சேர்கிறோம் அதுவும் நமது தேவைக்கு மேல் .அது நம்மை காக்கும் என்று நம்புகிறோம் .ஆனால் எல்லாம் பொய் என்று உணர்ந்தவுடனும் நமது சுவடுகளை பதிக்க முயல்கிறோம் , நமது அடையாளங்களை இவ்வுலகத்திற்கு விட்டு செல்ல முயல்கிறோம் .மரணம் நம் மூக்கில் நுழைந்து நுரையீரலை அமுக்கி பிடித்து இதயத்தை கசக்கும் வரை நாம் மரணத்தை ஏமாற்றவே முயல்கிறோம்.கடவுளின் காலடிகளை பற்றி பதறுகிறோம் ,ஆனாலும் கருணை இல்லை .மரணம் உணர்வுகள் அற்ற சிலை மனிதன் ,அவனுக்கு நம் கனவுகள்,உறவுகள் நட்புகள்,முடிக்காத கடமைகள் எதை பற்றியும் கவலை இல்லை .இப்படி ஒரு ஊழியனை ஒவ்வொரு முதலாளியும் பெற ஏங்குவான் .
நாம் நிஜத்தில் தினமும் மரணத்தின் வாசல் வரை சென்று வருகிறோம் , இல்லை அது கூட தவறு தான் நாம் எங்கு வசிக்கிரோமோ அங்கெல்லாம் மரணத்தின் மூடிய கதவுகள் உள்ளது நாம் அதை முட்டி மோதிக்கொண்டு தான் இருக்கிறோம்.நாம் நினைக்கும் நேரத்தில் அது திறப்பதில்லை .இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவனுமே தன்னுடன் ஒரு மரணத்தின் வாசலை தூக்கி கொண்டு தான் திரிகிறோம் , என்றேனும் அந்த வாசல் திறக்க கூடும் , அதை நாம் தீர்மானிப்பது இல்லை .
தொடரலாம்- (எப்போது மீண்டும் இதை எழுத தோன்றுகிறதோ அப்பொழுது )

Tuesday, October 26, 2010

வேதனையான மருத்துவ சோதனை

இன்று சந்தைக்கு வரும் ஒவ்வொரு மருந்தும் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின் தான் வருகிறது .முதல் கட்டமாக நோயின் கூறுகளை ஆராய்ந்து அதை எந்த கட்டத்தில் வீழ்த்த வேண்டும் எனும் அறிவு ,பின்பு அந்த நோயின் கட்டமைப்பு எனும் பூட்டை உடைத்து அதற்கேற்ற சாவியை கண்டடைதல் .அந்த சாவி ஒரு புரதமாகவோ , ஹோர்மோன், என்று எதுவாகவும் இருக்கலாம் .இதை கணினி துணை கொண்டு (simulation technic-drug designing) நோய்க்கு ஏற்ற கூட்டு அணுக்களை இது நமக்கு பகுத்து தரும் .பூட்டுக்கு ஏற்ற சாவியை கண்டு பிடிப்பது போல் தான் இது .அந்த கூட்டு அணுக்கள்(molecules) பின்னர் பரிசோதனை கூடத்திற்கு செல்கிறது அங்கு அதன் செயல்பாடுகள் ,மருத்துவ குணங்கள் , நோயை குண படுத்த தேவை படும் அளவு (therapeutic dose) , மருந்தினுடைய பாதுகாப்பான அளவு(safe dose/lethal dose) என்று பல கட்டங்கள் கடந்து , மிருகங்களில் செலுத்தி அதன் திறனையும் பாதுகாப்பையும் உர்ஜிதம் செய்து , மனிதர்களை சென்றடைகிறது .

முதலில் ஒரு சிறு பிரிவுக்குள் ( சுமார் 20-30)தன்னரர்வ நபர்களுக்கு மருந்தை செலுத்தி அவர்களை நாள் முழுவதும் கவனித்து ,அவர்களின் உடலில் ஏற்படும் அனைத்து உயிர் வேதியல் ( bio chemical) மாற்றங்களை தொடர்ந்து ஆராய்ந்து ,மருந்தின் குண நலன்களை ,சாதக பாதகங்களை , பாதுகாப்பை , திறனை புரிந்துக்கொள்ளப்படுகின்றன .இதை முதற் கட்ட மருத்துவ பரிசோதனை என்று அழைகின்றனர் ( phase 1 clinical trials).இத்தகைய மனித பரிசோதனைகளுக்கு எதிக்ஸ் குழு உள்ளது , அது எல்லாம் விதிகளின் படி தான் நடக்கிறதா என்று கண்காணிக்கும்
.பரிசோதனையில் பங்கு பெரும் தன்னார்வ நபர்களுக்கு உரிய காப்பீடு , மற்றும் குடும்ப உறுபினர்களின் ஒப்புதல் ஆகியவை மிகவும் முக்கியம் .இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பரிசோதனை பல இடங்களில் இன்னும் அதிகமான மனிதர்களை கொண்டு நடத்த படும் .பின் மூன்றாம் கட்ட சோதனை பல நாடுகளில் பல்வேறு விதமான மக்கள் குழுக்களில் ,வெவ்வேறு மரபணு கூறுகள் ,சமூக நிலை , வயது , என்று பல்வேறு தளத்தில் நடத்த படும் .ஒரு மருந்து சந்தைக்கு வர இந்த அணைத்து கட்டங்களை கடந்து வர சுமார் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிடும் .

மருத்துவ வரலாற்றிலே ஆக பெரிய கரும்புள்ளியாக கருதப்படுவது அமெரிக்க அரசால் நடத்த பட்ட சிபிலிஸ் (syphilis) பரிசோதனை என கூறினால் அது மிகை ஆகாது .வெகு சமீபத்தில் அமெரிக்க அரசின் சார்பாக திருமதி .ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கௌதமேல (gauthamela) அரசிடம் மன்னிப்பு கோரியது .அப்படி என்ன தான் நடந்தது அங்கு ?
மேலே குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனை திட்டங்கள் வகுக்க முக்கியமான காரணமாக இருந்தது இந்த சம்பவம் தான் .சுமார் 64 வருடங்களுக்கு முன் அமெரிக்க அரசால் அங்கு நடத்த பட்ட மருத்துவ பரிசோதனை பற்றி சொன்னால் ,மனிதாபிமானமுள்ள எந்த ஆன்மாவும் வெட்கி தலை குனியும் .
இரு வேறு பரிசோதனைகள் நம் கண் முன் விரிகின்றன. முதலில் tuskeege பரிசோதனை ,அமெரிக்க சுகாதார துறையால் 1930 களில் தொடங்கி சுமார் நாற்பது வருடம் நடந்த இந்த சோதனையில் ஆப்ரிக்க- அமெரிக்க கறுப்பினத்தவர்கள் நானூறு பேரை மகான் கவுன்டி எனும் இடத்திலிருந்து தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது .இந்த நானூறு பேருக்கும் சிபிலிஸ் எனும் கலவியின் மூலம் பரவும் நோய் (sexually transmitted disease) இருந்தது .அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பயங்கர நோயாகும் .இவர்களை டாஸ்கீஜி,அலபாமா எனும் இடத்தில் வைத்து இவர்களுக்கு சிகிச்சை ,உணவு,உறைவிடம் மற்றும் ஈம கிரியைக்கான செலவை அளிக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி அழைத்து போனர். அவர்களில் நோயால் பாதித்த ஆண்கள் ,பெண்கள் ,பிறக்கும் போதே இந்நோயினால் பாதிக்க பட்ட குழந்தைகள் அடங்குவர் .அவர்களுக்கு இந்நோய் இருப்பதை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை .ஆனால் அவர்களுக்கு எந்த மருத்துவமும் அங்கு செய்யவில்லை , அவர்களுக்கு உள்ள நோயின் தன்மையை , பாதிப்பை ஆராய அவர்களை அப்படியே விட்டுவிட்டனர் .கல்வி அறிவு இல்லாத , ஏழை மக்களான அவர்கள் அரசாங்கம் அவர்களுக்கு நன்மை செய்கிறது , குணமாகிவிடும் என்று நம்பி அங்கு இருந்தார்கள் .1940 களிலயே சிபிலிஸ் நோய்க்கு பென்சில்லின் சிறந்த மருந்து என்று நிறுவப்பட்டது , பென்சில்லின் மருந்துகள் இருந்தும் கூட அந்த மருந்தை நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு இவர்கள் அளிக்காமல் அவர்களை சாக விட்டது தான் கொடுமை .அவர்களுக்கு இந்நோய்க்கு மருந்து உள்ளது என்றோ , அது கிடைக்க கூடிய தூரத்தில் தான் உள்ளது என்றோ தெரிந்திருக்கவில்லை அல்லது இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து மறைக்க பட்டது .1972 ல் இந்த ரகசிய பரிசோதனை அம்பலமாகி நிறுத்தப்பட்டபோது வெறும் எழுபத்தி இரண்டு நபர்களே குற்றுயிரும் கொலையுயிருமாக மீதம் இருந்தனர்.

இந்த பூதத்தை தோண்டி துருவும் போது தான் கௌதமேலாவில் நடந்த சிபிலிஸ் பரிசோதனை பூதம் கிளம்பியது .
அங்கு சிறையில் இருந்தவர்களுக்கு இந்த பரிசோதனை நடத்த பட்டது .அலபமாவிலாவது நோய் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டனர் , இங்கோ நோய் இல்லாதவர்களுக்கு கூட நோயை பரப்பி பின்பு ஆராய்ந்தனர் !
ஆம் சிபிலிஸ் நோயை இந்நோய் உள்ள விலை மாதர்களை கொண்டு சிறையில் உள்ள கறுப்பின மக்களுடன் தொடர்பேற்படுத்தி இந்நோயை பரவ செய்தனர் !இதற்க்கு எதிர்ப்பு வந்த உடன் நோய் கிருமிகளை உரிய விதத்தில் பாதுகாத்து அதை நேரடியாக சிறைவாசியின் ஆணுறுப்பில் செலுத்தினர் !!இதில் ஈடுபட்ட டாக்டர் கட்ளர் இதை கடைசி வரை நியாய படுத்தியது இன்னும் கொடுமை !!இவர் அமெரிக்காவின் துணை சர்ஜென் ஜெனரல் பதவி வரை வந்தவர் !!

இது ஏதோ அமெரிக்காவில் நடந்தது ,அமெரிக்க ஏகாதிப்பத்தியம் அப்படி இப்படி என்று எண்ண வேண்டாம் , இரண்டாம் உலக போரின் போது நாஜிக்கள் ,ஜப்பானியர்கள் என்று இதை பலர் செய்து உள்ளனர் .இன்றும் pfizer போன்ற மிக பெரிய நிறுவனம் கூட ஆப்ரிக்காவில் விதிகளை மீறியதாக குற்றம் சாட்ட படுகிறது .இந்தியா இப்போது மருத்துவ பரிசோதனைக்கு மிக ஏற்ற நாடாக பார்க்க படுகிறது .நம்மூரில் உள்ள சொபளங்கி சட்டங்கள் , நம் மக்களின் அறியாமை , இங்கு உள்ள மக்கள் தொகை மற்றும் மரபணு வேற்றுமைகள் என்று பல காரணம் .நாம் மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறோம் , அதை அவர்களின் வசதிற்கு பயன் படுத்துகின்றனர் .இது எல்லா மருத்துவர்களுக்கும் பொருந்தாது .கிராம புறங்களிலும் , சேரி பகுதியிலும் பல மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன , அதில் நாம் பங்கேடுகிறோம் எனும் அடிப்படை கூட தெரியாமல் மக்கள் உள்ளனர் .இலவச மோகமும் இதற்க்கு காரணம் .நாம் விழிப்புடன் இருப்பது அவசியம் .மனிதனின் பேராசைக்கு அளவு இல்லமால் போய்விட்டது
மனித இனத்தின் சிறப்பு குணம் இது தான் போல- ஒரு சாரர்/தனி மனிதன் வளமோடு வாழ யாரையும் எதையும் அழிக்கலாம் , இதற்க்கு நாம் குரங்காகவே வனங்களில் திரிந்து இருக்கலாம்.