Sunday, October 31, 2010

மரணத்தின் வாசல் வரை -1..


வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் என்று சில உள்ளன .அந்த நாட்களை உருவாக்கியது நம் அனுபவங்கள் தான்.அதிகம் நம் மனதில் நிலைப்பது எதிர்மறை அனுபவம் என்றால் மிகை ஆகாது .மகிழ்ச்சியை விட நம் மனம் துக்கத்தை எளிதில் பங்கு கொள்கிறது .சில நேரம் நம் மனம் துக்கத்திற்கு ஏங்குகிறதோ எனும் சந்தேகம் கூட எனக்கு உண்டு .
ஒரு பெரும் வலி அதனை தொடர்ந்து ஒரு வெறுமை அதனை தொடர்ந்து ஒரு எழுச்சி தொடர்ந்து ஒரு வெறுமை ,பின் ஒரு வீழ்ச்சி .இது தான் நமது வாழ்க்கை இதே சக்கரத்தில் நாம் சோதனை எலிகள் போல் சுழன்று ,உழன்று ஓடி கொண்டு இருக்கிறோம் .இது அயர்ச்சியை தரலாம் ஆனால் அனுபவங்களில் ஒரே சாயல் இருந்தாலும் அவை நமக்கு கொடுக்கும் செய்திகள் வெவ்வேறானவை .அதை சரியாக உள்வாங்குவது நமது திறமை .நாம் அனுபவத்தின் பாடத்தை கற்றோமா ? என்று வாழ்க்கை மீண்டும் மீண்டும் நம்மை பரிட்சித்து பார்க்கும். மீண்டும் மீண்டும் நாம் தோல்வி அடைந்தாள் நாம் இன்னும் சரியாக பாடம் படிக்கவில்லை என்று பொருள் .
விபத்துகள் ஏன் நேருகிறது ? என்று நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை .அது ஒழுங்கற்ற ஒரு அவதி என்று எண்ணலாம் .விபத்தின் ஒழுங்கே அது எப்பொழுதும் ஒழுங்கற்றது என்பதில் தான்.வெகு சாதரணமாக ஓடி கொண்டிருக்கும் வாழ்க்கையில் ஒரு சிறிய விபத்து சீண்டினால் கூட போதும் வாழ்க்கையின் பார்வை ,ஒரு குடும்பத்தின் பொருளாதாரம், நாம் வாழ்க்கையை பார்க்கின்ற தளம் என்று எல்லாமே கேள்விக்குறி ஆகி , நாம் எந்த தளத்தின் மீது நமது கால்களை நம்பிக்கையுடன் ஊன்றி நிற்கிறோமோ அந்த தளத்தின் அடித்தளத்தையே பிளக்கும் வல்லமை உண்டு .
வாழ்க்கையின் பெரும் கனவுகள் , பெரும் திட்டங்கள் எல்லாம் தூக்கி எரிந்து நசுக்க பட ஒரு நொடி போதும் .
விபத்து நமக்கு கற்று கொடுக்கும் முக்கியமான பாடம் வாழ்கையின் நிச்சயமற்ற தன்மை .வாழ்க்கை நிச்சயமற்றது என்பதை உணர்வதால் என்ன பலன் ? இதை இரு கோணங்களில் நாம் பார்க்கலாம் , ஒன்று வாழ்க்கையை முழுவதும் வாழ துணிவது ,ஏற்றுக்கொள்வது ,அதன் பிடியில் நம்மை ஒப்படைத்து ,நடப்பதெல்லாம் நன்மைக்கே என்று நம்புவது .விளைவுகளை எண்ணாமல் , செயல்களை நேர்மையும் ஈடுபாடுடனும் ,செயல்களை செய்வதால் ஏற்ப்படும் இன்பத்திற்காக செய்வது.இருத்தல் என்பது கடந்து வாழ்தல் எனும் தளத்திற்கு நாம் பயணிப்பது முக்கியம் .உயிர் வாழும் ஆசை அல்லது தற்காத்து கொள்ளும் உந்து சக்தி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொருந்தும் ஒரு அம்சம் , ஆனால் வேறு எந்த உயிரினங்களுக்கும் இல்லாத ஒரு வினோத குணம் மனிதனுக்கு உண்டு ,அது தற்கொலை .உயிர் வாழும் இச்சையை இழக்கும் ஒரே ஜீவ ராசி நாம் தான் என்று எண்ணுகிறேன் .
அன்றாடம் நாம் எத்தனையோ விபத்துகளை பற்றி படிக்கிறோம் , செவி மடுக்கிறோம் ,காண்கிறோம் ஆனால் அவை நமக்கு பாதிப்பு ஏற்படுத்துவது இல்லை .அதிகம் சென்றால் அரை நாள் நம் மனங்களை அது ஆக்கிரமிக்கலாம் .எங்கோ நடக்கிறது , அது நமக்கு செய்தி .இது தவறான எண்ணமா என்றால் நிச்சயம் இல்லை ,இப்படி ஒவ்வொரு நாளும் இவ்வுலகை விட்டு நீங்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்காக வருந்தி கொண்டே இருந்தால் நாம் நம் வாழ்க்கையை இழந்து நிற்போம்.

வாழ்க்கை நிச்சயமற்றது என்று உணருவதினால் எதிர்மறை எண்ணங்களும் உருவாக வாய்ப்பு உண்டு .பயம் ,அவ நம்பிக்கை ,பதட்டம் , நம் கனவுகள் இலட்சியங்கள் பறிக்க பட்டு விடும் எனும் கவலை .இது நம்மை இயற்கயின் திட்டத்திலிருந்து புறம் தள்ளுகிறது , நாம் மரிக்க விரும்பவில்லை , நாம் இயற்க்கைக்கு எதிராக சதிராடுகிறோம் , நமது பயம் நம்மை வழி நடத்துகிறது ,நம் இருப்பை ஆழ படுத்துகிறோம் நாம் அமரன் என்று எண்ணுகிறோம் ,நம்மை மரணத்திளிருந்து தப்புவிக்க நாம் பொருள் சேர்கிறோம் அதுவும் நமது தேவைக்கு மேல் .அது நம்மை காக்கும் என்று நம்புகிறோம் .ஆனால் எல்லாம் பொய் என்று உணர்ந்தவுடனும் நமது சுவடுகளை பதிக்க முயல்கிறோம் , நமது அடையாளங்களை இவ்வுலகத்திற்கு விட்டு செல்ல முயல்கிறோம் .மரணம் நம் மூக்கில் நுழைந்து நுரையீரலை அமுக்கி பிடித்து இதயத்தை கசக்கும் வரை நாம் மரணத்தை ஏமாற்றவே முயல்கிறோம்.கடவுளின் காலடிகளை பற்றி பதறுகிறோம் ,ஆனாலும் கருணை இல்லை .மரணம் உணர்வுகள் அற்ற சிலை மனிதன் ,அவனுக்கு நம் கனவுகள்,உறவுகள் நட்புகள்,முடிக்காத கடமைகள் எதை பற்றியும் கவலை இல்லை .இப்படி ஒரு ஊழியனை ஒவ்வொரு முதலாளியும் பெற ஏங்குவான் .
நாம் நிஜத்தில் தினமும் மரணத்தின் வாசல் வரை சென்று வருகிறோம் , இல்லை அது கூட தவறு தான் நாம் எங்கு வசிக்கிரோமோ அங்கெல்லாம் மரணத்தின் மூடிய கதவுகள் உள்ளது நாம் அதை முட்டி மோதிக்கொண்டு தான் இருக்கிறோம்.நாம் நினைக்கும் நேரத்தில் அது திறப்பதில்லை .இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவனுமே தன்னுடன் ஒரு மரணத்தின் வாசலை தூக்கி கொண்டு தான் திரிகிறோம் , என்றேனும் அந்த வாசல் திறக்க கூடும் , அதை நாம் தீர்மானிப்பது இல்லை .
தொடரலாம்- (எப்போது மீண்டும் இதை எழுத தோன்றுகிறதோ அப்பொழுது )

Tuesday, October 26, 2010

வேதனையான மருத்துவ சோதனை

இன்று சந்தைக்கு வரும் ஒவ்வொரு மருந்தும் பல கட்ட பரிசோதனைகளுக்கு பின் தான் வருகிறது .முதல் கட்டமாக நோயின் கூறுகளை ஆராய்ந்து அதை எந்த கட்டத்தில் வீழ்த்த வேண்டும் எனும் அறிவு ,பின்பு அந்த நோயின் கட்டமைப்பு எனும் பூட்டை உடைத்து அதற்கேற்ற சாவியை கண்டடைதல் .அந்த சாவி ஒரு புரதமாகவோ , ஹோர்மோன், என்று எதுவாகவும் இருக்கலாம் .இதை கணினி துணை கொண்டு (simulation technic-drug designing) நோய்க்கு ஏற்ற கூட்டு அணுக்களை இது நமக்கு பகுத்து தரும் .பூட்டுக்கு ஏற்ற சாவியை கண்டு பிடிப்பது போல் தான் இது .அந்த கூட்டு அணுக்கள்(molecules) பின்னர் பரிசோதனை கூடத்திற்கு செல்கிறது அங்கு அதன் செயல்பாடுகள் ,மருத்துவ குணங்கள் , நோயை குண படுத்த தேவை படும் அளவு (therapeutic dose) , மருந்தினுடைய பாதுகாப்பான அளவு(safe dose/lethal dose) என்று பல கட்டங்கள் கடந்து , மிருகங்களில் செலுத்தி அதன் திறனையும் பாதுகாப்பையும் உர்ஜிதம் செய்து , மனிதர்களை சென்றடைகிறது .

முதலில் ஒரு சிறு பிரிவுக்குள் ( சுமார் 20-30)தன்னரர்வ நபர்களுக்கு மருந்தை செலுத்தி அவர்களை நாள் முழுவதும் கவனித்து ,அவர்களின் உடலில் ஏற்படும் அனைத்து உயிர் வேதியல் ( bio chemical) மாற்றங்களை தொடர்ந்து ஆராய்ந்து ,மருந்தின் குண நலன்களை ,சாதக பாதகங்களை , பாதுகாப்பை , திறனை புரிந்துக்கொள்ளப்படுகின்றன .இதை முதற் கட்ட மருத்துவ பரிசோதனை என்று அழைகின்றனர் ( phase 1 clinical trials).இத்தகைய மனித பரிசோதனைகளுக்கு எதிக்ஸ் குழு உள்ளது , அது எல்லாம் விதிகளின் படி தான் நடக்கிறதா என்று கண்காணிக்கும்
.பரிசோதனையில் பங்கு பெரும் தன்னார்வ நபர்களுக்கு உரிய காப்பீடு , மற்றும் குடும்ப உறுபினர்களின் ஒப்புதல் ஆகியவை மிகவும் முக்கியம் .இதை தொடர்ந்து இரண்டாம் கட்ட பரிசோதனை பல இடங்களில் இன்னும் அதிகமான மனிதர்களை கொண்டு நடத்த படும் .பின் மூன்றாம் கட்ட சோதனை பல நாடுகளில் பல்வேறு விதமான மக்கள் குழுக்களில் ,வெவ்வேறு மரபணு கூறுகள் ,சமூக நிலை , வயது , என்று பல்வேறு தளத்தில் நடத்த படும் .ஒரு மருந்து சந்தைக்கு வர இந்த அணைத்து கட்டங்களை கடந்து வர சுமார் பத்து பதினைந்து ஆண்டுகள் ஆகிவிடும் .

மருத்துவ வரலாற்றிலே ஆக பெரிய கரும்புள்ளியாக கருதப்படுவது அமெரிக்க அரசால் நடத்த பட்ட சிபிலிஸ் (syphilis) பரிசோதனை என கூறினால் அது மிகை ஆகாது .வெகு சமீபத்தில் அமெரிக்க அரசின் சார்பாக திருமதி .ஹிலாரி கிளிண்டன் அவர்கள் கௌதமேல (gauthamela) அரசிடம் மன்னிப்பு கோரியது .அப்படி என்ன தான் நடந்தது அங்கு ?
மேலே குறிப்பிட்ட மருத்துவ பரிசோதனை திட்டங்கள் வகுக்க முக்கியமான காரணமாக இருந்தது இந்த சம்பவம் தான் .சுமார் 64 வருடங்களுக்கு முன் அமெரிக்க அரசால் அங்கு நடத்த பட்ட மருத்துவ பரிசோதனை பற்றி சொன்னால் ,மனிதாபிமானமுள்ள எந்த ஆன்மாவும் வெட்கி தலை குனியும் .
இரு வேறு பரிசோதனைகள் நம் கண் முன் விரிகின்றன. முதலில் tuskeege பரிசோதனை ,அமெரிக்க சுகாதார துறையால் 1930 களில் தொடங்கி சுமார் நாற்பது வருடம் நடந்த இந்த சோதனையில் ஆப்ரிக்க- அமெரிக்க கறுப்பினத்தவர்கள் நானூறு பேரை மகான் கவுன்டி எனும் இடத்திலிருந்து தேர்ந்தெடுத்து நடத்தப்பட்டது .இந்த நானூறு பேருக்கும் சிபிலிஸ் எனும் கலவியின் மூலம் பரவும் நோய் (sexually transmitted disease) இருந்தது .அன்றைய காலகட்டத்தில் இது ஒரு பயங்கர நோயாகும் .இவர்களை டாஸ்கீஜி,அலபாமா எனும் இடத்தில் வைத்து இவர்களுக்கு சிகிச்சை ,உணவு,உறைவிடம் மற்றும் ஈம கிரியைக்கான செலவை அளிக்க ஏற்பாடு செய்வதாக சொல்லி அழைத்து போனர். அவர்களில் நோயால் பாதித்த ஆண்கள் ,பெண்கள் ,பிறக்கும் போதே இந்நோயினால் பாதிக்க பட்ட குழந்தைகள் அடங்குவர் .அவர்களுக்கு இந்நோய் இருப்பதை கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை .ஆனால் அவர்களுக்கு எந்த மருத்துவமும் அங்கு செய்யவில்லை , அவர்களுக்கு உள்ள நோயின் தன்மையை , பாதிப்பை ஆராய அவர்களை அப்படியே விட்டுவிட்டனர் .கல்வி அறிவு இல்லாத , ஏழை மக்களான அவர்கள் அரசாங்கம் அவர்களுக்கு நன்மை செய்கிறது , குணமாகிவிடும் என்று நம்பி அங்கு இருந்தார்கள் .1940 களிலயே சிபிலிஸ் நோய்க்கு பென்சில்லின் சிறந்த மருந்து என்று நிறுவப்பட்டது , பென்சில்லின் மருந்துகள் இருந்தும் கூட அந்த மருந்தை நோயால் பாதிக்க பட்டவர்களுக்கு இவர்கள் அளிக்காமல் அவர்களை சாக விட்டது தான் கொடுமை .அவர்களுக்கு இந்நோய்க்கு மருந்து உள்ளது என்றோ , அது கிடைக்க கூடிய தூரத்தில் தான் உள்ளது என்றோ தெரிந்திருக்கவில்லை அல்லது இந்த விஷயங்கள் அவர்களிடமிருந்து மறைக்க பட்டது .1972 ல் இந்த ரகசிய பரிசோதனை அம்பலமாகி நிறுத்தப்பட்டபோது வெறும் எழுபத்தி இரண்டு நபர்களே குற்றுயிரும் கொலையுயிருமாக மீதம் இருந்தனர்.

இந்த பூதத்தை தோண்டி துருவும் போது தான் கௌதமேலாவில் நடந்த சிபிலிஸ் பரிசோதனை பூதம் கிளம்பியது .
அங்கு சிறையில் இருந்தவர்களுக்கு இந்த பரிசோதனை நடத்த பட்டது .அலபமாவிலாவது நோய் இருந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் விட்டனர் , இங்கோ நோய் இல்லாதவர்களுக்கு கூட நோயை பரப்பி பின்பு ஆராய்ந்தனர் !
ஆம் சிபிலிஸ் நோயை இந்நோய் உள்ள விலை மாதர்களை கொண்டு சிறையில் உள்ள கறுப்பின மக்களுடன் தொடர்பேற்படுத்தி இந்நோயை பரவ செய்தனர் !இதற்க்கு எதிர்ப்பு வந்த உடன் நோய் கிருமிகளை உரிய விதத்தில் பாதுகாத்து அதை நேரடியாக சிறைவாசியின் ஆணுறுப்பில் செலுத்தினர் !!இதில் ஈடுபட்ட டாக்டர் கட்ளர் இதை கடைசி வரை நியாய படுத்தியது இன்னும் கொடுமை !!இவர் அமெரிக்காவின் துணை சர்ஜென் ஜெனரல் பதவி வரை வந்தவர் !!

இது ஏதோ அமெரிக்காவில் நடந்தது ,அமெரிக்க ஏகாதிப்பத்தியம் அப்படி இப்படி என்று எண்ண வேண்டாம் , இரண்டாம் உலக போரின் போது நாஜிக்கள் ,ஜப்பானியர்கள் என்று இதை பலர் செய்து உள்ளனர் .இன்றும் pfizer போன்ற மிக பெரிய நிறுவனம் கூட ஆப்ரிக்காவில் விதிகளை மீறியதாக குற்றம் சாட்ட படுகிறது .இந்தியா இப்போது மருத்துவ பரிசோதனைக்கு மிக ஏற்ற நாடாக பார்க்க படுகிறது .நம்மூரில் உள்ள சொபளங்கி சட்டங்கள் , நம் மக்களின் அறியாமை , இங்கு உள்ள மக்கள் தொகை மற்றும் மரபணு வேற்றுமைகள் என்று பல காரணம் .நாம் மருத்துவர்களை கடவுளாக பார்க்கிறோம் , அதை அவர்களின் வசதிற்கு பயன் படுத்துகின்றனர் .இது எல்லா மருத்துவர்களுக்கும் பொருந்தாது .கிராம புறங்களிலும் , சேரி பகுதியிலும் பல மருத்துவ பரிசோதனைகள் நடைபெறுகின்றன , அதில் நாம் பங்கேடுகிறோம் எனும் அடிப்படை கூட தெரியாமல் மக்கள் உள்ளனர் .இலவச மோகமும் இதற்க்கு காரணம் .நாம் விழிப்புடன் இருப்பது அவசியம் .மனிதனின் பேராசைக்கு அளவு இல்லமால் போய்விட்டது
மனித இனத்தின் சிறப்பு குணம் இது தான் போல- ஒரு சாரர்/தனி மனிதன் வளமோடு வாழ யாரையும் எதையும் அழிக்கலாம் , இதற்க்கு நாம் குரங்காகவே வனங்களில் திரிந்து இருக்கலாம்.

Wednesday, October 20, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 6 -நோய்

ஒவ்வொரு மருத்துவ முறையும் உலகில் தோன்ற நோய் , நோய் பற்றிய பார்வை தான் முக்கியம் .
ஆங்கிலத்தில் dis ease -என்று நோயை குறிப்பிடுகிறோம் . நோய் என்பதை புரிந்து கொள்ள ஆரோக்யம் என்பதை நாம் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும் .ஆரோக்கியம் என்பது வட மொழியிலிருந்து வந்த ஒரு சொல்.ரோகம் இல்லாத சூழல் என்பதே ஆரோகியத்தின் பொருள்.
ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் காரான காரிய கொட்பாடில் நம்புகிறது .நமது உடலில் உள்ள பல்வேறு அம்சங்கள் ஒத்திசைவோடு செயல் படுகின்றது .ஒட்டுமொத்தமாக ஒரு சம நிலை தன்மை இதில் அடங்கி இருக்கிறது .இந்த சமநிலைத்தன்மை நீடித்து இருக்கும் வரை எந்த கோளாறும் இல்லை .இது குலையும் போது வரும் சூழலே நோய் .



ஆங்கில - நவீன மருத்துவத்திற்கும் பண்டைய இந்திய மருத்துவத்திற்கும் நோயின் பார்வையில் உள்ள வேறுப்பாட்டை இப்படி புரிந்து கொள்ளலாம் , நம் உடல் என்பதை ஒரு தேசத்தோடு ஒப்பிட்டால் , கிருமி அல்லது நோய் எனும் விதேச சக்தி நம் தேசத்தை தாக்குகிறது . நாம் உலகில் வசித்து கொண்டு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் நாம் பல்வேறு நோய்களினோடு , கிருமிகளினோடு நாம் அறியாமலே நமது நோய் எதிர்ப்பு சக்தி எனும் ராணுவம் போரிட்டு கொண்டுள்ளது .நம் ஒவ்வொரு செயலும் , ஒவ்வொரு எண்ணமும் , நாம் வாழும் ஒவ்வொரு நிமிடமும் நாம் சமநிலைதன்மையை குலைக்கிறோம், உடல் அதன் சக்திகளை கொண்டு இதை நிரப்பி சரி செய்ய முயல்கிறது .ஒவ்வொரு நிமிடமும் இது நடக்கிறது , பொதுவாக நம் உடலின் ராணுவம் வேகமாக செயல்பட்டு எதிரிகளை அழிக்கிறது.ஒரு கட்டத்தில் நமது உடலின் ராணுவம் சோர்ந்து விடுகிறது அல்லது எதிரிகளின் பலம் அதிகமாகி பின்வாங்கும் சூழல் ஏற்படுகிறது .இந்த கட்டம் வந்த உடன் தான் உடல் சில குறியீடுகளை நமக்கு அளிக்கிறது , எங்களால் சமாளிக்க முடியவில்லை ,எங்களுக்கு உதவி தேவை எனும் குறியீடு .இந்த குறியீடுகளே நோயின் அறிகுறிகளாக தென்படுகிறது , சுருக்கமாக சொன்னால் வலி , ஜுரம் போன்ற அறிகுறிகள் நமது கவனத்தை உடலின் மீது திருப்ப ஒரு உத்தி என எண்ணலாம்.
இந்த கட்டத்தில் நாம் உடலின் ராணுவத்திற்கு உதவுவது தான் மருத்துவம் .இதை இரண்டு மாதிரியில் செய்யலாம் , ஒன்று ராணுவத்திற்கு வெளியிலிருந்து ஆதரவு வழங்கலாம் , தமது படையை , புதிய ஆயுதங்களை வழங்கலாம் அல்லது இருக்கும் ராணுவத்தை சீர்ப்படுத்தி எதிரிகளை திருப்பி தாக்கும் திறனையும் உற்சாகத்தையும் அளிக்கலாம் .
முதலாவது நவீன மருத்துவத்தின் வழி இரண்டவாது பண்டைய மருத்துவத்தின் வழி .ஆண்டி பயோடிக் போன்ற மருந்துகள் வெளியிலிருந்து வந்து சேர்ந்த கூடுதல் படைபலம் , அவர்களுக்கு என்று ஒரு ஆயுள் உண்டு அது வரை போராடி விட்டு உடலிலிருந்து கரைந்துவிடுவர் .பண்டைய மருத்துவ முறைகள் நமது பாதுகாப்பை பல படுத்தி தாக்குதலை தாங்கும் வல்லமையை அளிக்கின்றது.
இது ஒரு பொதுவான புரிதல் என்றாலும் இதற்க்கு இரண்டு மருத்துவ முறைகளிலுமே விதி விலக்குகள் உண்டு.
இது வெளியிலிருந்து வரும் கிருமிகளுக்கு பொருந்தும் சித்தாந்தம் .இப்பொழுது அதிகமாக மக்களை பாதிப்பது தவறான வாழ்க்கை முறை பின்பற்றுவதால் வரும் நோய்களே பிரதானம் , மெடபோலிக்(metabolic ) நோய்கள் ,auto immune diseases ஆகியவைகள் எனலாம் .
இதில் குறிப்பாக auto immune diseases - நமது சர்க்கரை நோய் , முடக்கு வாதம் (rhematid arthritis) இவை எல்லாம் இதில் அடங்கும் .இந்த வகை நோய் சற்று வித்யாசமானது ,நமது உடல் ராணுவத்தில் பல்வேறு அணுக்கள் பல்வேறு வேலையை பிரித்து செய்கின்றன ,முக்கியமாக மூன்று பிரிவுகள் என்று சொல்லலாம் முதலில் எதிரிகளை கண்டு பிடிக்கும் பகுதி (identification) ,பின்பு எதிரிகளை அழிக்கும் பகுதி(eradication) பின்பு எதிரிகளின் தகவலை சேமிக்கும் பகுதி(database) .இந்த மூன்று அம்சங்களும் மிக முக்கியமானது , ஒரு கிருமி நமது உடலில் நுழைந்தால் முதலில் அதை கிருமி , எதிரி என்று நமது உடலின் ராணுவம் கண்டு கொள்ள வேணும் , பின்பு அது இதற்க்கு முன் உடலில் நுழைந்து அழிக்க பட்ட எதிரிகளின் தகவல்களோடு இந்த எதிரியை ஒப்பிட்டு பார்க்கும் , அதில் தகவல்களுடன் ஒத்துமை இருந்தால் , அந்த கிருமியை எளிதில் வீழ்த்தலாம் , ஏனெனில் முன்பே இந்த கிருமியை அழிக்க நமது உடல் ராணுவம் ஒரு முறையை கையாண்டு வெற்றிகொண்டுள்ளது .இந்த முறையை தான் நாம் தடுப்பூசி முறையில் பயன் படுத்துகிறோம் .பலவீனப்படுத்த பட்ட நோய் கிருமிகளை உடலில் செலுத்தி அதற்க்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி அந்த நோய் கிருமியின் தகவல்களை நமது உடல் சேமித்து வைத்து விடுகின்றன .மீண்டும் தாக்குதல் தொடங்கும் போது எளிதில் வீழ்த்த முடிகின்றது .இந்த auto immune diseases இல் என்ன நடக்கிறதென்றால் வெளியிலிருந்து வரும் ஒரு சக்தியை கிருமி என்று என்னுவதக்ற்கு பதிலாக நமது உடலிலே உள்ள நமக்கு அன்றாடம் உழைத்து பயன் தரக்கூடிய நம் உடலின் மற்ற அவசியமான திசுக்களை எதிரியாக எண்ணினால் என்ன நடக்கும் ? அது தான் இது . ஒரு உள் நாட்டு போர்.நமது உடலின் ராணுவம் நமது உடலின் திசுக்களையே அழிப்பது.(நமது தமிழ் சமூகத்திற்கும் கூட இந்த நோய் தான் உள்ளது போலும், சொந்த தமிழ் சகோதர்களை அழித்தொழிக்க உதவி கொண்டு இருக்கிறோம் ).இவ்வாறு இன்சுலின் சுரக்கும் திசுக்கள் அழிந்தால் சர்க்கரை நோய் வருகிறது , மூட்டுகளில் உள்ள திசுக்கள் அழிந்தால் முடக்கு வாதம் வருகிறது , தோல் திசுக்கள் அழிந்தால் சொரியாசிஸ் (படல நோய்) வருகிறது .
இவ்வகை நோய்களுக்கு எந்த முறையிலுமே நிரந்தர நூறு சத விகித தீர்வு என்பது கிடையாது , காரணம் நாம் என்ன தான் முயன்றாலும் நமது உடல் ராணுவத்தின் மெமரியில் இந்த திசுக்கள் நமது எதிரி என்று படிந்து விட்டது .இதை நாம் என்ன மருந்து கொடுத்தாலும் மாற்ற முடியாது என்பதே நிதர்சனம் ,

ஒரு வரியில் சொல்வதென்றால் நம் எல்லோர் உள்ளும் ஒரு மருத்துவர் இருக்கிறார் நாம் செய்ய வேண்டியது அவருக்கு துணை நிற்பது மட்டுமே

இன்னும் தெரிந்து கொள்வோம்...

Saturday, October 9, 2010

மனிதகுலத்தின் அழியா யுத்தம்

மனித குலத்தின் மிக நீண்ட போர் , முடிவடையாத ஒரு யுத்தம் நேற்று இன்று நாளை என்று எக்காலமும் தொடரும் ஒரு யுத்தம் ஒன்று உண்டு .
அது அறிவுக்கும் மனதிற்கும் இடையில் நடக்கும் ஒரு போர் .அறிவையும் மனதையும் வார்த்தைகளால் விளக்குவது கடினம் ,இருந்தும் முயல்கிறேன் , அனுபவம் , கல்வி சார்ந்து , தர்க்கத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் முறையை அறிவு எனலாம் , பகுத்தாய்வு முறை எனலாம் .அனுபவம் தன் அனுபவமாகவும் இருக்கலாம் இல்லை கண்ட கேட்ட பிற விஷயங்களாகவும் இருக்கலாம் .

தர்க்கங்களை தகர்த்து , அனுபவம் ,கல்வியை கடந்து ( சில நேரம் முரனாகக்கூட ) உள்ளுணர்வுகளை அடிப்படையாக கொண்டு , அளவில்லாத ஆற்றலை தன்னிடத்தில் கொண்டுள்ள ஒரு அமைப்பு மனம்.
அறிவின் நடைமுறை மற்றும் விதிகள் மனதில் செல்லுபடியாகாது. அறிவு செயலின் விளைவை சார்ந்து சிந்திக்கும் , மனம் செயலின் காரணத்தை சார்ந்து புரிந்துகொள்ளும் .
மனதிற்கும் அறிவுக்குமான இந்த போராட்டம் அன்றாடம் நடக்கும் செயல் , இதை இன்னொரு கோணத்தில் பார்க்கும்போது இதை போராட்டம் என்று கூறுவது மிகை எனவும் படுகிறது , ஏனெனில் இவை இரண்டும் ஒன்றை சார்ந்து மற்றோன்று எனும் நிலையில் உள்ளது , போராட்டம் என்பதை காட்டிலும் அவைகளின் இயல்பு நிலையே இது தான் , ஒன்றை ஒன்று தங்களின் பலவீனங்களை இன்னொன்றின் பலத்தால் நிரப்புகிறது எனவும் சொல்லலாம் .

மனம் அறிவு இந்த இரண்டில் எது சிறந்தது , உயர்ந்தது எனும் கேள்வி மிக முக்கியமானது பொதுவாகவே நமக்கு எழும் முதல் கேள்வியும் கூட , என்னை பொருத்தமட்டில் சிறந்தது உயர்ந்தது என்று இதை நாம் பிரிக்க முடியாது .அப்படி செய்தால் அது மடத்தனம் கூட .அறிவு சார்பு நிலையில் அதிகம் நிலைத்து இருக்கும் போது உணர்சிகளற்ற மரத்து போன நிலை உருவாகிவிடுகிறது .இன்று நம் அறிவு சமூகம் இன படுகொலைகள் , சமூக அவலங்களை கண்டும் காணாது
இருப்பதே இதற்க்கு சான்று .பிற உயிர்களின் உணர்வுகளையும் , இருப்பையும் நாம் உணரமால் போக வாய்ப்பு உண்டு .உணர்வு சார் நிலை பற்றி நான் என்ன கூறுவது ? இன்று நடக்கும் எல்லா அநியாய உயிரிழப்புகளுக்கும் இது தான் காரணம் , முறை தவறிய உறவுகள் முதல் முதல் காட்சி படம் வரை மனம் சார்ந்த நிலை தான் .
காயமே இது பொய் அடா காற்றடைத்த பையடா என்று சொன்ன இதே தேசத்தில் தான் இறந்த மனிதர்களுக்காக ஒப்பாரி வைக்கும் வழக்கம் உள்ளது .மனிதன் இந்த இரு பெரும் அமைப்புகளை சம நிலைக்கு கொண்டுவந்து நிறுத்தசெய்த முயற்சிகள் தான் அனைத்துமே என்று சொன்னால் அது மிகை ஆகாது . சட்டம் , தண்டனை, சமூக அமைப்பு , சமூக கட்டுப்பாடு இவை அனைத்துமே அறிவின் மூலமாக நம் மனதிற்கு கொடுக்க படும் செய்தி .அறிவின் அடக்குமுறைகளை எதிர்த்து அல்லது அதற்க்கு பதிலாக மனம் கொடுத்தது தான் கலை .நம் உணர்வுகளின் மிகை வடிவம் தான் கலை , நடைமுறையில் இல்லாத அல்லது ஒவ்வாத அல்லது நம்மால் வெளிபடுத்த முடியாத உணர்வுகளின் வெளிப்பாடாக அறிவு அனுமதித்து , அங்கீகரித்து மனதின் வடிகாலாக வளர்ந்து வந்தது தான் கலை..இதனால் தான் அறிவியல் படைப்புகளை காட்டிலும் கலை படைப்புகள் நம்மை எளிதாக சென்றடைகின்றன , ஆனால் அவை அறிவியல் படைப்புகள் போல் பலன் தருமா என்றால் அது சந்தேகமே , அறிவியல் நமக்கு பயன் தரும் , கலை நமக்கு மகிழ்ச்சி தரும் .
காடு மனித மனம் , நகரம் நமது அறிவு .காடு நமது இயல்பு , நகரம் நாம் உருவாக்கியது.காட்டை அழித்து அழித்து நாம் உருவாக்கியது நகரத்தை , நமது தேவைகளுக்கான ஒரு சொர்கபுரியை .அறிவின் ஆளுமை அதிகமாக அதிகமாக நாம் உணர்வுகளற்று போகின்றோம் , நமது தேவைகளுக்காக அறிவை பயன் படுத்தி எதை வேண்டுமானாலும் அழித்து நமது தேவைக்காக அதை மறு உருவாக்கம் செய்திடலாம் .அறிவு சார்ந்த சமூகத்தில் சுரண்டல் இருக்கிறது சுயநலம் இருக்கிறது .மனிதம் மறித்து விடுகிறது .மனம் சார்ந்த சமூகத்திலோ உணர்வு குவியலாக வழிமுறை தெரியாமால் விழி பிதுங்கி இருக்கிறது .அறிவு பூர்வமாக செயல் பட கூட நம் மனம் தான் காரணம் .மனம் அனுமதித்தால் தான் அதுவும் சாத்தியம் காடும் வேண்டும் நாடும் வேண்டும் , அறிவும் வேண்டும் மனமும் வேண்டும் .

இயற்கையின் விதி அபாரமானது நாம் சமநிலையிலிருந்து வழுவினாலும் அது சமநிலையை நோக்கியே இந்த உலகத்தை அழைத்து செல்லும் , சில நேரம் வலு கட்டாயமாகவும் கூட .உணர்வுகளற்ற சமுதாயத்தை நாம் நமது அறிவின் மூலமாக உருவாக்க முயற்சிக்கிறோம் , நமது மனதின் குரலை நாம் புறக்கணிக்க தொடங்கிவிட்டோம் .இதை தான் பண்டைய புராண கதைகளில் தேவ அசுர யுத்தம் என்று உருவக படுத்தி இருக்கிறார்களோ என்று எனக்கு ஒரு எண்ணம் உண்டு .காடு தன்னகத்தில் பல நகரங்களை கொண்டுள்ளது , மனம் தன்னகத்தில் நாம் புரிந்து கொள்ள முடியாத சாத்திய கூறுகளால் நிரம்பி வழிகிறது .
அறிவு -மனதின் முரணியக்கம் அபாரமானது, மிக நுட்பமானதும் கூட இதை எல்லாம் நாம் உணரும் தருணம் இது. நம்மை நாமே சற்று உற்று நோக்கினால் போதும் நாம் விழிப்படைந்துவிடுவோம் .
சரி போதும்ன்னு நெனைக்கிறேன் :) பதிவுலகத்துல இருந்துட்டு எந்திரன் பத்தி எதுவுமே எழுதலேன்னா எப்படி ?
என்னை பொறுத்த மட்டில் என்னை ஏமாற்றாமல் படம் எனக்கு மன பூர்வமா / உணர்வு பூர்வமா நிறைவை, மகிழ்ச்சியை கொடுத்துருச்சு :)

Tuesday, October 5, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் - 5 ஆயுர்வேதம் FAQ

1. ஆயுர்வேதம் என்பது கேரளத்தை சேர்ந்த மருத்துவமா ?

ஆயுர்வேதம் இன்று அதிகம் புழக்கத்தில் உள்ள மாநிலம் கேரளம் .மேலும் சுற்றுலா துரையின் அபார வளர்ச்சியின் காரணமாக கேரளத்தில் இதற்க்கு பெரும் வரவேற்ப்பு உள்ளது .அங்கு மக்களுக்கு இயல்பாகவே பல ஆயுர்வேத சிகிச்சை முறைகள் , மருந்துகள் பரிச்சயம் .எண்ணெய் குளியல் பிழிசில் போன்ற சிகிச்சை முறைகள் அங்கு பிரபலம் .இன்றும் பல வைத்திய பரம்பரைகள் ஆயுர்வேதத்தின் சாரத்தை மாற்றாமல் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கின்றனர் .இவை எல்லாம் கூறினாலும் , ஆயுர்வேதம் கேரளா மருத்துவம் என்று கூற இயலாது , இமயம் முதல் குமரி வரை எல்லா இடத்திலும் இது புழக்கத்தில் உள்ளது , வரலாற்று ரீதியாகவும் அதுவே உண்மை , ஆகவே இது இந்திய மருத்துவ முறை என்பதே சரி .

2. ஆயுர்வேதத்தில் அனைத்து நோய்களுக்கும் தீர்வு உண்டா ?

இன்றைய விளம்பர உலகத்தில் எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் தங்களது தனிப்பட்ட லாபத்துக்காக இவ்வாறு சில போலி மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தை சித்தரிக்கிறார்கள் .இது உண்மை இல்லை .ஆயுர்வேதத்தால் சில நோய்களை குணப்படுத்த முடியாது என்பதை ஆயுர்வேத மூல புத்தகங்களே அறிவிக்கிறது . எய்ட்ஸ் , புற்று நோய் இவைகளுக்கெல்லாம் இன்னும் முழுமையாக மருத்துவங்கள் எந்த முறையிலும் இல்லை .

3.ஆயுர்வேத மருந்துகளுக்கு பக்க விளைவு கிடையாது என்கிறார்களே ?

இது முழு உண்மை இல்லை .சில நேரங்களில் சிலருக்கு தேவை இல்லாத விளைவுகள் ஏற்படுவது உண்டு .ஒரே நோய்க்கு பல மருந்துகளை ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது , ஒவ்வொரு மனிதருக்கும் அவரது உடல் ,நோயின் தன்மைக்கேற்ப மருந்து வழங்கினால் எந்த பிரச்சனயும் இராது , மாறாக முறையாக தயாரித்த மருந்தை சரியான நோயாளிக்கு கொடுக்கவில்லை என்றால் நிச்சயம் விளைவுகள் இருக்கும் .ஆனால் அவை தற்காலிகமே , மருந்தை நிறுத்தினால் போதும் .மேலும் சில மருந்துகளில் உலோகங்கள் , தாது பொருட்கள் மூலமாக கொண்டு செய்யப்படுகின்றன , அதை உட்கொள்ளும் போது சற்று கவனம் தேவை .

4. ஆயுர்வேதத்திற்கு பட்ட படிப்பு உள்ளதா ? அல்லது எல்லாம் வெறும் அனுபவ ஞானம் தானா ?

நவீன மருத்துவம் போலவே ஆயுர்வேதம் , சித்த மருத்துவங்களுக்கு பட்ட படிப்பு , பட்ட மேற் படிப்பு , பட்டய படிப்பு எல்லாம் உண்டு .நவீன மருத்துவம் போலவே இதற்கும் 41/2+1 ,நாலரை வருட கல்லூரி படிப்பு மற்றும் ஒரு வருட பயிற்சி உண்டு .இதற்க்கு என்று தனி மருத்துவ கவுன்சில் உண்டு . மத்திய அரசாங்கத்தின் கீழ ஒரு துறை உண்டு , பதிவு பெற வேண்டும் .தமிழ்நாட்டில் இந்த படிப்புகள் டாக்டர் எம். ஜி .ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கீழ அங்கீகரிக்கப்பட்டுள்ளது .தமிழக அரசு சென்ற ஆண்டு முதல் அரசு ஆயுர்வேத கல்லூரியை நாகர்கோவிலில் தொடங்கி உள்ளது .அதை தவிர சென்னையில் நான்கு தனியார் கல்லூரி உள்ளது .

5. எந்த நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் நல்ல பலன் கிடைக்கும் ?

அறுவை சிகிச்சை அவசிய படும் நோய்களை தவிர அனைத்து நோய்களுக்குமே ஓரளவு ஆயுர்வேதம் பயன்படும் .
சில நோய்களுக்கு நவீன மருத்துவத்திற்கு துணையாக செயல்படும் .( சர்க்கரை , ரத்த அழுத்தம் ).
நெரம்பு மண்டல நோய்கள் , மூட்டு நோய்கள் , தோல் நோய்கள் , குழந்தை பேரு , சில மன நோய்கள், ஜீரண உறுப்பு கோளாறுகள் ( வயிற்று புண் , மூலம் ) இது போன்ற நோய்களில் நல்ல பலன் கிடைக்கும்

Monday, September 27, 2010

செப்டம்பர் - 30

அன்பு மணிக்கு ,

இன்று நினைத்தாலும் மனம் வலிக்கும் , மறக்க முடியாத அந்த நாள் . ஒரு பெரிய முட்டாள் தனத்தின் பிடியில் சிக்கி கோபம் , ஏமாற்றம் ,பச்சாதாபம் , கண்ணீர் என்று பல்வேறு உணர்வுகள் சுழற்றி அடித்த நாள் .நண்பனின் நினைவு நாள் .
மணி , பதின்மூன்று வருடம் பள்ளி தோழர்கள் நாம்
.அந்த ஒளி நிறைந்த கண்கள் , இன்னும் எங்களை கண்டு கொண்டே இருக்கிறது .விவரம் புரியாத எட்டு வயதில் ,இழப்பை உணர முடியாத எனக்கு என் தந்தையின் இழப்பு ,அதற்க்கு ஆறுதல் சொன்ன உனது
அந்த பக்குவம் எங்கே ? பள்ளியின் பக்கத்து தெருவில் இருக்கும் உன்
வீட்டில் நாங்கள் கழித்த காலம் எத்தனை? மதியம் உண்டு , உனது
தொலைகாட்சியில் இந்தியா பாகிஸ்தான் போட்டிகள் கண்டது , முதல் நாள் தலைவரின் படத்தை காண நாம் எல்லாம் முயன்றது எத்தனை முறை ? கடைசியில் உனக்கு துணைக்கு வந்தது கூட பாபா பாட்டு தானே .சுப்புவையும் , கோவிந்தனையும் , சாஸ்தனயும், வெங்கட்டையும் நீ ஓட்டி அள்ளிய நாட்கள் எத்தனை ? விளையாடிய கிரிக்கெட் போட்டிகளில் அழுகுணி ஆட்டம் ஆடியது எத்தனை ?"அதெல்லாம் நான் சிங்கபூர் போய்டுவேன் டா " என்று நீ சொன்னது எத்தனை முறை? இப்பொழுது எங்கே இருகிறாய் ? .இதையெல்லாம் எழுத வேண்டாம் என்று நான் இத்தனை நாள் எழுதவில்லை இருந்தும் எனது உணர்வெழுச்சியில் இதையெல்லாம் தவிர்க்க முடியவில்லை .நீ மட்டும் அந்த தற்கொலை முயற்சியில் தோற்றிருந்தால் நாங்களே
உன்னை கொன்றிருப்போம் அந்த அளவுக்கு உன் முட்டாள் தனத்தின் மேல் கோபம் .நீ யாருடனும் சண்டை போட்டு நாங்கள் பார்த்தது இல்லை , சிவா உடன் , ஸ்ரீ ராம் உடன் உனது சிறிய ஊடல்கள் மட்டும் தான் நினைவில் உள்ளது . நீ யாரையும் காதலித்து ஏமாறவோ , ஏமாற்ற்றவோ இல்லை , நீ சித காரியத்தின் விளைவை நீ அறிவாயா ? இன்றும் அம்மா உனை எண்ணி கண்ணீர் வடிக்கிறாள் , உங்கள் ஒரு மகன் போனால் என்ன நாங்கள் பல மகன்கள் உங்களுக்கு உள்ளோம் இது மட்டுமே எங்களால் அம்மாவிடம் சொல்ல முடியும் .அப்பா அவரது உணர்வுகளை வெளிக்காட்டவில்லை ,மென்று முழுங்கி அவர் படும் அவஸ்தை நீ அறிவாயா ?
உனக்கு மனதில் தைரியம் அதிகம் அதான் உன்னால் உன்னை முடித்து கொள்ள முடிந்தது ,அதுவும் ஊஞ்சல் கம்பியை கொண்டு .நல்ல வேலை நாங்கள் யாரும் உனது முகத்தை கடைசியில் பார்க்கவில்லை
உன் பெயரை சொல்லி இன்று நாங்கள் சேர்ந்துள்ளோம் , எங்களுக்கு அம்மா , அக்கா என்று புதிய உறவுகள் .மணிகண்டன் நினைவு அறக்கட்டளை, மனம் வலிக்கிறது மணி, உன் வாழ்வின் பயனே எங்களின் எழுச்சி தானோ ? .கனவுகள் பெரியது , தூக்கம் தொலைந்து விட்ட பின் கனவுகளை எங்கே தேடுவது .செப்டம்பர் 30 , இன்று உன் பெயரில் இலவச மருத்துவ முகாம் .அரூபமாய் இருக்கும் நண்பா , நீ மகிழ்ச்சியுடன் இருப்பாய் , நீ எங்களை காண்கிறாய் .அம்மா எங்கள் எல்லோர் மூலமாகவும் உன்னை தான் காண்கிறாள் .நீ எழுதினாயே ஒரு கடிதம் , உன் நண்பர்களுக்கு என்று , அடடா என்ன உபதேசங்கள் , வாழ்வின் விளிம்பில் நின்று கொண்டு வாழ்கையை வாழ உபதேசமா ?
பிறப்பு இறப்பு என்று தத்துவம் பேசினாலும் இழப்பின் வலி வாட்டுகிறது.
ஒன்றும் இல்லை இதற்க்கு மேல் உன்னிடம் சொல்ல எதுவும் இல்லை

எங்கோ நீ நலமுடன் இருப்பாய் என்ற நம்பிக்கையுடன்
உனது நண்பர்கள்

Sunday, September 26, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -4

ஆயுர்வேதம் வழங்கிய அறுவை சிகிச்சை முறைகளை பற்றி சென்ற பதிவில் கண்டோம் .இனி வரும் பதிவுகளில் ஆயுர்வேதத்தின் அடிப்படை அறிந்து கொள்வோம் . இதில் நாம் இறங்கும் முன் சில விஷயங்களை தெளிவுப்படுத்த ஆசைப்படுகிறேன்.பண்டைய மருத்துவ முறைகள் எல்லாவற்றுக்குமே ஒரு பொதுத்தன்மை இருக்கும் அது சமநிலை கோட்பாடு .நம் உடலில் , உள்ளத்தில் , உணர்வில் சம நிலையில் இருப்பது ஆரோக்கியம் என்று கூறப்படுகிறது .சீன மருத்துவ முறைகளில் கூட யின் யங் என்றும் நான்கு அடிப்படை பரு பொருட்கள் என்றும் அதன் சமநிலை கூறித்து பேசுகிறது .முன் கூறியபடி கிரேக்க மருத்துவமும் சம நிலை கோட்பாடை நம்பியது .
மனிதனை இயற்கையின் ஒரு பகுதியாக கருதியது , இன்று போல் மனிதன் உலகத்தின் மையம் எனும் கருத்து அப்பொழுது இல்லை .இயற்கையின் மாற்றங்கள் மனிதனை எவ்வாறு மாற்றும் அதை எவ்வாறு எதிர்க்கொள்வது என்பது பண்டைய மருத்துவங்களின் முக்கிய விஷயமாக அலசப்படுகிறது .
சரக சம்ஹிதை முழுவதும் ஒரு உரையாடல் தான் . அக்னிவேஷர் தனது குருவிடம் ஆயுர்வேதம் குறித்து எழுப்பும் கேள்விகள் அதற்க்கு அவர் அளிக்கும் விடை ,இது தான் அந்த படைப்பே .இதில் சிஷ்யருக்கும் குருவுக்கும் கருத்து வேறுபாடு உண்டு , உடன்படுதல் உண்டு ஏன் புறக்கணித்தல் கூட உண்டு .சில விஷயங்களை குரு ஆத்ரேயர் கூறும் பொழுது அதை மறுத்தலித்து இதை நான் எப்படி நம்புவது என்று கூட அக்னிவேஷர் வினா எழுப்பி உள்ளார் .ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் மொத்த கருத்துகளை மூன்றாக பிரிக்கலாம் நம் வசதிக்காக
1.எக்காலத்திற்கும் பொருந்தும் அடிப்படைகள்
தத்துவ சித்தாந்தங்கள் , முக்குற்ற அடிப்படை , பஞ்ச பூத கொள்கை , நோயின் அடிப்படைகள் ,சிகிச்சையின் அடிப்படைகள் இவை எல்லாம் அடங்கும் .
2. அக்காலத்திய வழிமுறைகள்
சில சிகிச்சை முறைகள் , சில எண்ணங்கள் வாசிக்கும் போது நமக்கு இன்றைய அறிவுக்கு தர்க்கத்திற்கு ஏற்பவையாக இருக்காது அதை அக்காலத்தின் மன ஓட்டம் கொண்டு நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் .
3.இப்பொழுதிற்கு புரிந்து கொள்ள முடியாத செயல் முறைகள் , அல்லது திரிபு , நடைமுறை சாத்தியங்களின் உள்ள குறைபாடு .சற்று ஆய்வு செய்தால் இவை நமக்கு நல்ல பலன் அளிக்க கூடியவை .
அதே போல் ஆயுர்வேதம் என்றுமே ஒற்றை படை சிந்தனையை கொண்டது அல்ல.ஒரு அத்தியாயத்தில் மது வகைகளின் தீய குணங்களை பற்றி இடித்து கூறும் , மற்றொரு இடத்தில் மது வகைகள் தயாரித்தல் , அதை உட்கொள்ளுவதர்கான விதிமுறைகளை கூறும் .அதே போல் ஆயுர்வேதத்தின் அடிப்படை கட்டமைப்பு வலுவாக உள்ளதால் மாற்று சிந்தனைகளையும் , முறைகளையும் உள்வாங்கி வளரும் தகுதி அதற்க்கு உண்டு .
இந்திய மருத்துவமா இல்லை ஆங்கில மருத்துவமா எது சிறந்தது என்று மிக முக்கியமான கேள்வி ஒன்று உண்டு .என்னை பொறுத்த வரை இந்த போட்டியே அர்த்தமற்றது , ஒரு தாய்க்கு மூத்தமகன் மேல் பாசம் அதிகமா இல்லை இளைய மகன் மேல் பாசம் அதிகமா என்று வரையறுப்பது எவ்வளவு மூடத்தனமோ அதே போல் தான் இதுவும் .இன்றைய நவீன மருத்துவம் என்பது பண்டைய சிந்தனையை கொண்டு அதை பரிசீலித்தோ இல்லை நிராகரித்தோ வளர்ந்த முறை , அது இன்னும் வளர்ச்சி காணும் ஒரு துறை . நான் நவீன மருத்துவத்தை பண்டைய மருத்துவ பண்பாட்டின் நீட்சியாகவே காண்கிறேன் .மனிதன் நோய்களுக்கு எதிரான போராட்டத்தை அவன் இந்த மண்ணில் ஜனித்த முதல் தொடங்கிவிட்டான் .உலகில் எந்த ஒரு மருத்துவ முறையுமே முழுமை கிடையாது , அதற்கென்று சில எல்லைகள் உள்ளது .தன மருத்துவத்தை புகழ நமக்கு அடிப்படை புரிதலே இல்லாத இன்னொரு மருத்துவமுறையை சாடும் இந்த இரு கோடுகள் பழக்கம் அபாயமானது .நவீன மருத்துவத்தை இந்திய மருத்துவ நம்பிக்கை உள்ளவர்களோ , இல்லை நவீன மருத்துவர்கள் இந்திய மருத்துவத்தையோ புறம் தள்ள முடியாது .

இதை எல்லாம் நாம் மனதில் நிலை நிறுத்தி கொண்டு சற்று அகலமான பார்வையுடன் ஆயுர்வேதத்தை பற்றி மேலும்
அறிவோம் .

Wednesday, September 22, 2010

பிடிச்சிருக்கு ...

நம் வாழ்வில் முக்கியமான முடிவுகள் இந்த ஒரு வார்த்தை தான் முடிவு செய்கிறது . "பிடிச்சிருக்கு .." ஒரு கல்யாணம் .காதல் ஆரம்பித்து காலையில் குடிக்கும் காபி வரை நம் தேர்வுக்கு காரணம் " அது பிடிச்சிருக்கு .." ஏன் பிடிச்சிருக்கு , எது பிடிச்சிருக்கு ? இது முற்றிலும் என் அனுபவங்களை சார்ந்து , நான் புரிந்து கொண்டதை எழுதும் முயற்ச்சி.நமது ரசனைக்கான காரணத்தை அலசும் பதிவு தான் இது ...

மனித மனத்திற்கு எப்பொழுதுமே சாகசம் பிடிக்கும்.சாகசம் என்பது அற்புதம் .அற்புதம் என்பது நமக்கு புரியாதது அல்லது இதுவரை நாம் உணராதது .இன்றும் நம்மால் எளிதில் செய்ய முடியாததை அதே சமயம் செய்ய வேண்டும் என்று எண்ணுவதை வேறு யாரேனும் செய்தால் அதை நாம் ரசிக்கிறோம் .சாமியார், சினிமா, சர்கஸ் எல்லாம் இதில் தான் சேரும்.ஒரு குழந்தையாக நமக்கு இந்த உலக நிகழ்வுகள் அனைத்தும் ஆச்சர்யத்தை அளிக்கிறது.ஒரு குழல் விளக்கு , கிலுகிலுப்பை என்று எல்லாமே நமக்கு அற்புதம் தான் .நமக்கு என்ன பிடிக்கும் என்பது நாம் மட்டும் தீர்மானிப்பது இல்லை .நாம் தாயின் வயிற்றில் இருக்கும் பொழுதே அதற்கு அடித்தளம் அமைகிறது .உதாரணம் அதிகமான மெல்லிசை பாடல்களோ , பக்தி பாடல்களோ இல்லை அதிரடி பாடல்களோ எந்த இசையை தாய் அதிகம் கேட்கிறாளோ அந்த இசை பிற்காலத்தில் குழந்தைக்கு எளிதில் பிடித்துவிடும் , ஏனெனில் இந்த ஒலியுடன் தனக்கு ஏதோ ஒரு வித தொடர்ப்பு உண்டு என்பதை உணர செய்யும் .

எனக்கு எப்பொழுதுமே ஒரு நம்பிக்கை உண்டு .மனிதனை சுற்றி ஒரு மின் காந்த விசை இருக்கும் என்று . இதை ஆரா என்றும் சொல்லலாம் .சில பேரை பார்த்த உடன் இதற்க்கு முன் எந்த ஒரு அறிமுகமும் இல்லாமல் போனாலும் கூட விரும்பவோ, வெறுக்கவோ , நம்பவோ இல்லை சுதாரிப்பாக இருக்கவோ தோன்றும் .இதை அறிவியல் பூர்வமாக விளக்குவது சற்று கடினம் .ஆனால் உணர்வு பூர்வமாக விளக்கலாம் .இது காலம்காலமாக , விலங்கினத்திலிருந்து நாம் கொண்டுள்ள எச்சரிக்கை உணர்வு மற்றும் உள்ளுணர்வு என்றும் கூறலாம் .நாம் வளரும் சூழல் நமது விருப்பங்களை பெரிதும் தீர்மானிக்கிறது .முப்பது வருடங்களுக்கு முன் தான் சாப்பிட்ட பழைய சோறு , சின்ன வெங்காயத்தின் ருசியை இன்றும் மறக்காமல் தேடி உண்ணும் எத்தனையோ கோடீசுவரர்கள் உள்ளனர் .
பொதுவாகவே ஒன்று பிடிப்பதற்கு காரணம் அது ஏதோ ஒரு வகையில் நமது கடந்த கால மகிழ்ச்சியை நினைவூட்டுவதாக இருப்பதால் தான் .எனக்கு சிறு வயதில் நான் பார்த்த படங்களில் நன்றாக நினைவில் உள்ள முதல் படம் ராஜ சின்ன ரோஜா ,அதிலிருந்தோ என்னவோ எனக்கு எல்லா ரஜினி படமும் என்னை குழந்தையாக ஆக்கி தன்னை மறக்க செய்வதால் இன்றும் என்றும் பிடிக்கும் .மனித உள்ளுணர்வுக்கு தனி சிறப்பு உண்டு , உற்று கவனித்தால் அதற்க்கு உண்மையான அன்பை வார்த்தைகள் இன்றி உணர்ந்து கொள்ள முடியும் .அதே போல் வெறுப்பையும் , பொறாமையையும் கூட உணர முடியும் . நம்மீது உளமார்ந்த அன்பை செலுத்தும் அணைத்து ஜீவன்களையும் நமக்கு பிடிக்கும் , அன்பில் உண்மை இருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாகவோ அல்லது கோபமாகவோ வெளிவந்தால் கூட நமக்கு பிடிக்கும் .உதாரணம் அன்று திட்டிய ஆசிரியரை இன்றும் நன்றி மறவாமல் எண்ணுவது .


சாகசங்களையும் புதுமையும் விரும்பிய நாம் வளர வளர பழக்கங்களின் கையில் சிக்கி விடுகிறோம் .நாம் பழகிய விஷயம் நமக்கு பிடிக்கும் நமக்கு பிடித்தால் நாம் அதை பழகுவோம் .இங்கிருந்து அமெரிக்கா சென்றும் இட்லி சாம்பார் சாப்பிடுவது கூட ஒரு உதாரணம் தான் .நமக்கு பயத்தை அளிக்கக்கூடிய , நமது நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கக்கூடிய எந்த விஷயமும் நமக்கு பிடிப்பதில்லை , எனக்கு இன்று வரை ராட்டினம் என்றால் பயம் சிறு வயதில் ஒரு முறை ராட்டினம் ஏறிவிட்டு வந்து வாந்தி எடுத்தேன், அந்த கசப்பான அனுபவம் இன்று வரை தொடர்கிறது.

இதையெல்லாம் தாண்டி நாம் கல்வியினாலும் , அறிவினாலும் , தேடல்களின் மூலமாகவும் சில விஷயங்களை கண்டடைந்து அதை நேசிக்க தொடங்குவோம் .அடிப்படையில் நம் எல்லோர் மனதினிலும் ஒரு தேடல் இருக்கிறது அந்த தேடல் எது என்பதை தெரிந்துக்கொள்ள நாம் பல விஷயங்களை தேடுகிறோம் , பல விஷயங்களை முயல்கிறோம் .இப்படி தான் வெவ்வேறு வாழ்க்கை சித்தாந்தங்கள் , ஆன்மீகம், தத்துவம் , புத்தகம் , இலக்கியம் என்று நம் வாழ்வில் நுழைகிறது .ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொன்று நமக்கு உதவுகிறது , எனக்கு இலக்கிய பரிட்சயம் தமிழ் நாட்டின் பலரை போல கல்கியில் தான் தொடங்கியது பொன்னியின் செல்வனும் சிவகாமியின் சபதமும் எனது கற்பனைகளை விரிய செய்தது .பின் தேவன் எழுத்துக்கள் , பின் நா பா . ஜெயகாந்தன் , சுஜாதா என்று மாறி மாறி இப்பொழுது ஜெயமோஹனில் நிற்கிறது .இலக்கியம் , சினிமா இவை இரண்டிலும் ஒப்பீடு சர்ச்சை தான் வளர்க்கும் .எனக்கு வெவ்வேறு எழுத்துக்கள் வெவ்வேறு வகையில் உதவி இருக்கின்றன .

இதெல்லாம் இருக்கட்டும் நண்பர்கள் மற்றும் வாழ்க்கை துணை தேர்வில் என்ன நடக்கிறது ?.நண்பர்கள் பொறுத்த மட்டில் ஒத்த மனம் கொண்டவர்கள் , ரசனை கொண்டவர்கள் எளிதில் நண்பர்களாகிடுவர்.இன்னொரு வகையான நடப்பு உண்டு பெரியாருக்கும் மூதரிஞருக்கும் இருந்தது போல .நேர் எதிர் குணங்கள் கொண்ட மனங்களின் நட்பு .அதிகம் பேசுபவர்களின் நட்பு வட்டத்தில் நிச்சயம் ஓரிரு நண்பர்கள் அதிகம் பேசாதவர்கள் இருப்பார்கள் .தங்களின் குணங்களை கொண்டு நிரப்பி கொள்ளும் முயற்சி எனவும் எண்ணலாம்.எதிர் குணங்கள் மேல் உள்ள ஈர்ப்பு அல்லது அதை அறியும் ஆர்வம் என்றும் எடுத்து கொள்ளலாம் .இப்படி எவ்வளவு சொன்னாலும் நமக்கு உணர்வுப்பூர்வமாக பிடித்ததை அறிவு பூர்வமாக அதன் காரணத்தை கண்டடைவது சற்று கடினம் தான் .உணர்வும் அறிவும் சம நிலைக்கொள்ளும் போது எல்லாரையும் பிடிக்கலாம் அல்லது மொத்தமாக பற்றற்றும் போகலாம் .ஏன் ஒரு விஷயம் பிடித்துள்ளது என்று ஆராய்ந்தால் நாம் நம்மை புரிந்துக்கொள்ள மற்றும் ஒரு அடி வைத்துள்ளோம் என்று பொருள் .சார்பு நிலையின்றி மனசாட்சியின் துணையோடு இதை அணுகினால் நமக்கு நம்மை பற்றி மேலும் தெளிவான சித்திரம் கிட்டும் .முயற்சி செஞ்சு தான் பாப்போமே .
நமது பழக்கம் எனும் சக்கரத்திலிருந்து சற்று வெளியே வந்து கைகளை அகல விரித்தால் மேலும் பல விஷயங்களை பார்த்து சொல்லலாம் " பிடிச்சிருக்கு .." என்று .
ஆண் பெண் தேர்வை பற்றி சொல்லும் ஒரு நல்ல குரும்படம் :)

Sunday, September 19, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -3


நாம் பண்டைய அறுவை சிகிச்சை முறைகளை ஆராய்ந்தோம் .அதன் தொடர்ச்சியாக சுஸ்ருதரின் காலத்தில் வியக்கத்தக்க சில விஷயங்களை
முயன்றுள்ளனர் அதை காண்போம் .
இன்று மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு சேரும் மாணவர்களுக்கு உடற்கூறு விஞ்ஞானம்(anatomy) ஒரு பாடமாகும் .அதில் இறந்த மனித உடல்களை பதப்படுத்தி ஒவ்வொரு அங்கத்தையும் அதன் அமைப்பையும் கூறாக்கி(dissection) கற்று தரப்படுகிறது .இந்த அறிவு மிக முக்கியம் ஆகும் , அதுவும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு எது எங்கு உள்ளது , இந்த நெரம்பு ,தசை எங்கிருந்து தொடங்குகிறது போன்ற எல்லா விஷயங்களிலும் நுண்ணறிவு வேண்டும் .
பிணத்தை மருத்துவம் பயில பயன்படுத்தும் முறை இந்தியாவில் எப்பொழுதோ உண்டு .ஆம் . சுஸ்ருதர் காலத்தில் அவர் இதை பற்றி கூறியிருக்கிறார். பிணத்தை மூலிகைகள் கொண்டு பதப்படுத்தும் முறையையும் விளக்கி இருக்கிறார் .(இது எகிப்திய முறைகளிலிருந்து வேறுப்பட்டது ).அறுவை சிகிச்சையின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமே போர் தான் .அம்புகள் , வாள் வீச்சுகள் உடலின் பல்வேறு பாகங்களை பாதித்த பொழுது அதை போக்கவே அறுவை சிகிச்சை முதலில் வழக்கிற்கு வந்தது .உள் உறுப்புகளை அம்புகள் தாக்கி இருந்தால் அதை எவ்வாறு எடுப்பது என்பது தான் , ஆரம்பக்கட்ட அறுவை சிகிச்சை ஆகும் .
மேலும் இன்றைய அறுவை சிகிச்சை முறையில் பயன்படுதப்படும் பல சாதனங்களின் முன்மாதிரி சுஸ்ருதர் காலத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது . வெவ்வேறு மிருகங்கள் ,பறவைகளின் தாடை அமைப்பை , பற்களை கண்டு அது போல் அவர் காலத்தில் பல சாதனங்கள் வெவ்வேறு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது .இதை சஸ்திரம் , யந்திரம் என்று கூறுகிறார்கள் .சிங்க முகம் , முதலை முகம் , கிளி முகம் என்று இவைகளின் பெயரும் அதையே குறிக்கின்றன ..இன்று இவை மறைந்து பல வேறு போர்செப்ஸ், கத்திரி , ப்ரோப் ,என அன்று சொன்ன அதே வர்ணனைகளுக்கு பொருத்தமாக உருமாறி வழக்கில் இருப்பது தான் ஆச்சர்யம் !.

முதன் முதலில் கண்புரை அறுவை சிகிச்சை செய்ததாக இவருக்கு ஒரு பெருமை உண்டு . அவரது cupping Technic இன்றும் சில மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படுகிறது .மேலும் முதல் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் என்கின்ற பெருமையும் இவருக்கே சேரும் .மூக்கு , காது ஆகியவைகளை போரின் முடிவில் வென்றவர்கள் தோற்ற நாட்டின் வீரர்களுக்கு வெட்டி விடும் பழக்கம் அந்த காலத்தில் உண்டு .இதை சரி செய்ய சுஸ்ருதர் ஒரு முறையை
விளக்குகிறார் , அது தான் இன்றைய பிளாஸ்டிக் அறுவை சிகிச்சையின் அடிப்படை .மூக்கின் வெட்டுபட்ட இடத்தை ஒரு இலையை கொண்டு அளவு எடுத்து அந்த இலையின் வடிவத்தில் முகத்தின் கன்ன பகுதியில் தோலை வெட்டி வெட்டுப்பட்ட இடத்தில பொருத்திவிடுவார்கள் .இம்முறையை reconstructive rhinoplasty என்று கூறுகிறார்கள் .இது இந்தியாவில் பதினெட்டாம் நூன்றாண்டு வரை புழக்கத்தில் இருந்தது .திப்பு சுல்தானின் அரண்மனை வைத்தியர்கள் இதை போர் வீரர்களுக்கு செய்துள்ளனர் .இங்கிருந்து 1794 gentleman's magazine எனும் இங்கிலாந்து பத்திரிக்கை இதை பற்றி தகவல் வெளியிட்டுரிக்கிறது . இதன் பின்பு தான் உலகம் முழுவதும் இந்த முறை பிரபலம் ஆனது ..
அறுவை சிகிச்சை எல்லாம் சரி , மீண்டும் அதை மூடுவதற்கு தையல் போட வேண்டாமா ? உள் உறுப்புகளுக்கு பட்டு நூல் கொண்டு தையல் போடப்படுகிறது ,(இம்முறையே இன்றும் பயன்படுத்தப்படுகிறது ) பிரத்யேகமாக இதற்க்கு என்று சில ஊசிகளை பற்றிய வர்ணனை கிட்டுகிறது .வெளி தோலிற்கு தையல் போட எறும்புகளை பயன் படுத்தினார்கள் ! ஆம் .பெரிய கட்டெறும்புகளை வரிசையாக வெட்டுபட்டுள்ள இரண்டு பாகங்களையும் இணைத்து கடிக்க செய்து அது கடித்த உடன் அதன் தலையை மட்டும் அப்படியே விட்டு விடுவார்கள் .உடல் பகுதியை அப்படியே எடுத்துவிடுவார்கள் தலை மட்டும் 'கப்' என்று பிடித்துக்கொள்ளும் (கிழிந்த இரு பக்கங்களை stapler போட்டு இணைப்பது போல் நான் சொல்லுவது புரியும் என்று எண்ணுகிறேன் !) , கொஞ்ச காலம் கழித்து அது நன்றாக சேர்ந்து விடும் , பின் இந்த எறும்பின் தலைகள் தானாக உதிர்ந்து விழுந்துவிடும் .

பி.கு - இதெல்லாம் இன்றைய காலகட்டத்தில் யாரும் முயற்சிக்க வேண்டாம் :)நான் பொறுப்பு அல்ல :) இம்மாரி முறைகள் வழக்கில் இருந்தது என்று சொல்லுவது மட்டுமே நோக்கம் , இன்றைய யதார்த்தத்தில் இம்மாரி முறைகளின் பங்களிப்பை பறை சாற்ற அல்ல.இவை எல்லாம் இன்றைய நவீன மருத்துவத்திற்கு அடித்தளம் வழங்கி இருக்கிறது என்பதை எடுத்து சொல்ல மட்டுமே .மேலும் தெரிந்துக்கொள்வோம் ..

முந்தைய பதிவுகளை காண ..

Wednesday, September 15, 2010

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -2

ஆயுர்வேதத்தை பொறுத்த மட்டில் மூன்று முக்கிய நூல்கள் -ப்ருஹத் த்ரயீ - மூன்று முக்கிய படைப்புகள் என்று அழைக்கப்படுகின்றன . அவை முறையே சரக சம்ஹிதை , சுஸ்ருத சம்ஹிதை , அஷ்டாங்க ஹ்ருதயம் ஆகும் .
இதில் அஷ்டாங்க ஹ்ருதயம் என்னும் படைப்பு சரக .சுஸ்ருத கோட்பாடுகளை ஒருங்கிணைத்து தொகுத்த ஒரு படைப்பாகும் , இன்று பெரும்பான்மையான
ஆயுர்வேத வைத்தியர்கள் பயன்படுத்தும் மூல புத்தகமும் இதுவே ஆகும் .இதை இயற்றியவர் வாக்பட்டர், கேரளத்தை சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது .இவரின் படைப்பையே மூலமாக கொண்டு கேரளாவில் ஆயுர்வேதம் இன்றும் சிறப்பாக திகழ்கிறது .இவரது காலம் 5-8 AD என்று கணிக்கப்பட்டுள்ளது .

இந்த மூன்று படைப்புகளும் வெவ்வேறு காலகட்டத்தில் படைக்கப்பட்டது , இவை அக்கால மனிதர்களின் தேவையை மற்றும் வாழ்க்கைமுறையை மனதில் கொண்டு பல விஷயங்களை முன்வைக்கிறது . சரகரின் காலத்தில் அறுவை சிகிச்சை அந்த அளவுக்கு பிரபலம் இல்லை .பாதரசம் ,கந்தகம் ,மனோசிலை போன்ற கனிமங்கள் பிரயோகம் அவ்வளவாக இல்லை அப்படியே இருந்தாலும் அவை வெளிப்ரயோகத்திற்கு மட்டுமே உள்ளது ,மூலிகை மருந்துகளே பெரும்பாலும் கையாளப்பட்டுள்ளது .சுஸ்ருதரின் காலக்கட்டத்தில் அறுவை சிகிச்சை பிராதானமாக முன்னிறுத்தப்பட்டுள்ளது. மக்கள் சற்றே அவசர பட ஆரம்பித்துவிட்டார்கள் என்பதிற்கு அறிகுறி .பின்னர் பௌத்த மதம் இந்தியாவில் வேரூன்றிய பின் அறுவை சிகிச்சை ஒரு விதமான ஹிம்சை என்றும் அது பௌத்த கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் ஒரு சித்திரம் தீட்டப்பட்டது ஆகையால் அது தடை செய்யப்பட்டது.

வாக்பட்டர் காலத்தில் கனிமங்களின் பயன்பாடு மருந்தாக எடுத்துரைக்கபடுகின்றன.அறுவை சிகிச்சைக்கு மாற்றாக அதே சமயம் வேகமாக பலனளிக்கும் சிகிச்சை முறையை கண்டெடுக்க முயன்றனர். அதன் விளைவு தான் ரச சாத்திரம் . தங்கம் ,பாதரசம் ,கந்தகம் ,இரும்பு ,தாமரம்,ஈயம் ,mica, ரத்தினங்கள் போன்றவற்றை மருத்துவத்திற்கு பயன்படுத்துவது இதன் நோக்கம் ஆகும் .நமது தமிழகத்தில் சித்தர்கள் இந்த கலையில் வல்லவர்கள் .இங்கிருந்து இம்முறைகள் நிச்சயமாக அங்கு சென்றதுக்கான சான்றுகள் நமக்கு கிடைக்கிறது .


பண்டைய காலத்து அறுவை சிகிச்சை முறை நமக்கு பெரும் ஆச்சர்யத்தை தர வல்லது .இன்றைக்கு உள்ளது போல் மயக்க மருந்துகள்(anaesthesia) அக்காலத்தில் இல்லை மது வகைகள் அறுவை சிகிச்சைக்கு முன் அளிக்கப்பட்டு முழுவதும் போதை ஏறிய அரைமயக்க நிலையில் தான் அந்த கால ஆபரேஷன் நடைபெற்றது .இன்றைக்கு உள்ளது போல் antiseptic measures அன்றைக்கு இல்லை ,ஆனால் வேப்பிலை ,மஞ்சள், குக்குலு போன்ற மூலிகைகளை அறுவை சிகிச்சை அறையில் புகை போடும் பழக்கம் உண்டு ,ரக்ஷோ தூபம் என்று பெயர், ராக்ஷஷர்களை அண்டவிடாது என்பதினால்
.இவை அனைத்திற்கும் கிருமி நாசம் செய்யும் வல்லமை கொண்டது என்று இன்றைய விஞ்ஞானம் கூறுகிறது .இன்றைய கிருமி தான் அன்றைய ராக்ஷசர்கள் போலும் .
மேலும் தெரிந்து கொள்வோம்...