Friday, November 30, 2018

அரிப்பு - டான் டெலிலோ


நன்றி - கல்குதிரை கார்கால இதழ் 30 
மொழியாக்கம்- நரோபா
மொழியாக்க மேம்படுத்துனர்- நட்பாஸ் 

ஆனால் எவருமே வந்திருக்கவில்லை, ஆகவே சற்றுநேரம் சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தான். ஞாயிற்றுக்கிழமை போல் உணரச் செய்யும் சனிக்கிழமைகளில் ஒன்று அன்றைய நாள். இதை எப்படி விளக்குவது என்று அவனுக்கு தெரியவில்லை. அவ்வப்போது இப்படி நிகழ்வதுண்டு, குறிப்பாக வெப்பம் கூடுதலான மாதங்களில், ஒருவேளை அது இயல்பானதாகக் கூட இருக்கலாம், எனினும் அது குறித்து எவரிடமும் அவன் விவாதித்ததில்லை.  

விவாக ரத்திற்கு பிறகு மனத்திலும் உடலிலும் அவன் ஒரு வினோதமான உணர்வின்மையை உணர்ந்தான். அவன் கண்ணாடியை நோக்கினான்,  தன்னை திரும்ப நோக்கிய முகத்தை கூர்ந்து கவனித்தான். இரவில் படுக்கையில் தன்னுடைய பாதியிலேயே தொடர்ந்தான், மற்றொரு பாதிக்கு தன் முதுகை காட்டினான். காலப்போக்கில் ஒரு வாழ்க்கை ஊர்ந்து வெளிவந்தது. மனிதர்களிடம் பேசினான், நெடிய நடை சென்றான். ஜோடி சப்பாத்துக்களை வாங்கினான் அதுவும் ஒன்றல்ல, இரு சப்பாத்துக்களையும் தீவிரமாக சோதித்த பிறகு வாங்கினான். காலணி கடையின் ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை வெவ்வேறு வேகங்களில் நான்கு முறை நடந்தான், பின்னர் அமர்ந்து சப்பாத்துக்களை குனிந்து நோக்கினான். ஒரு சப்பாத்தை கழட்டி கையில் எடுத்தான், முன்வளைவை அழுத்தியபடி, சப்பாத்திற்குள் கையை வைத்துப் பார்த்தான், அதை நோக்கி தலையசைத்து ஆமோதித்தான், உறுதியான அதன் குதியையும் பாதத்தையும் சும்மா இருக்கும் கைவிரல்கள் கொண்டு தட்டினான். 
விற்பனையாளன் சற்று தொலைவில் நின்றான், கவனித்தபடி காத்திருந்தான், அவன் யாரோ, அவன் அங்கு இல்லாதபோது என்ன சொன்னாலும் செய்தாலும் சரி.
அலுவலகத்தில் அவனுடைய மேசை சன்னலையொட்டி அமைக்கப்பட்டிருந்தது, வீதியின் எதிர்சாரியில் உள்ள கட்டிடத்தை வெறித்தபடி காலம் கழித்தான், சாளர வரிசைகளின் உள்ளே அங்கு எதுவுமே புலப்படவில்லை. அவனால் வெறிப்பதை நிறுத்த முடியாத காலங்களும் உண்டு. 
அவன் பார்க்கிறான், சிறிது கள்ளத்தனமாய் சொறிந்து கொள்கிறான். . சிலநாட்கள் இடது மணிக்கட்டில். மாலை பொழுதுகளில் வீட்டிலிருக்கும்போது புஜங்களில். இரவில் பெரும்பாலும் தொடைகளிலும் கெண்டைக்கால்களிலும். அவன் வெளியே நடந்து செல்கையில், பெரும்பாலும் கரங்களில் அவ்வப்போது அரிக்கிறது. 
அவன் நாற்பத்து நான்கு வயதானவன். தன் உடலில் சிக்குண்டவன். கரங்கள், கால்கள், நெஞ்சும் வயிறும். முகம் அரிப்பதில்லை. தலையில் உருவான ஏதோ ஒன்றுக்கு மருத்துவர் ஒரு பெயரளித்தார். ஆனால் அது எப்போதாவதுதான் அரித்தது. பிறகு அரிக்கவே இல்லை. ஆகவே அந்தப்பெயர் ஒரு பொருட்டில்லை. 
அவனுடைய கண்கள் தெருவுக்கு எதிர்சாரியில் உள்ள சாளரங்களை கிடைமட்டமாக மேய்ந்தது, ஒருபோதும் செங்குத்தாக இல்லை. உள்ளுக்குள் உள்ள வாழ்க்கைகளை கற்பனை செய்ய அவன் முயன்றதில்லை. 

அவன் அரிப்பை புறத்திலிருந்து வரும் புலனறிவு என்று எண்ணத் துவங்கினான், வெளியே இருக்கக் கூடிய, ஆய்வு செய்யவியலாத ஏதோ ஒரு பொருளின் விளைவு, அறையுள் உள்ள காற்று, அல்லது தெருவில் உள்ளது அல்லது வளிமண்டலத்திலேயே, பூகோளச் சூழலில் ஏற்பட்ட சீர்கேடு. 
அவன்  இதை நினைத்தான்,  ஆனால் நம்பவில்லை. அது ஓரளவு அறிவியல் புனைவு. நீட்டி, சுருண்டு, படுக்கையில் குப்புறப் படுத்து, பருத்தி பைஜாமா அணிந்த வெற்றுடலுடன், கிரீம்களிலும் லோஷன்களிலும் மிதந்து கொண்டு, நெடுநேரம் அமைதியற்று இருக்கும் காலங்களில் சொறியாமலோ தேய்க்காமலோ இருக்கமுனையும் போது அந்த எண்ணம் ஒரு வகையான ஆறுதலாகவும் இருந்தது. 
அவன் அவனுடைய நண்பன் ஜோயலிடம் சில நேரங்களில் சனிக்கிழமை ஞாயிற்றுகிழமையை போல் தோன்றுவதாக சொல்லிவிட்டு அவனுடைய மறுமொழிக்காக காத்திருந்தான். ஜோயலுக்கு இரு குழந்தைகளும் சாண்ட்ரா என்ற பெயருடைய ஒரு மனைவியும் உண்டு. அவர்கள் எப்போதுமே சாண்ட்ராவும் ஜோயலும் தான், இது தலைகீழானதே இல்லை. 

 “சனிக்கிழமை, ஞாயிற்றுகிழமை, அதனால் என்ன. செவ்வாய்க்கிழமை புதன்கிழமையைப் போல் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்காதா என்ன? அதைவிடவும் மேல், இந்த வாரத்தின் செவ்வாய்கிழமை அடுத்த வாரத்தின் புதன்கிழமையாக தோன்றுவது.” 

ஜோயல் அலுவலக சகா. நேரம் கிடைக்கும்போது கவிதைகள் எழுதினான். அண்மையில் படைப்புக்களை பிரசுரிக்கும் முயற்சிகளை நிறுத்திக்கொண்டான். அவன் சொன்னான் “அரிப்பு எப்படி இருக்கிறது? உலக வரலாற்றில் அரிப்பைப் பற்றி யோசித்து பார்க்கிறேன் என் மனதில் எதுவும் தோன்றுவதில்லை.”

நண்பன்,  முன்னாள் மனைவி, மருத்துவர்கள், துடைத்து சீராடைகளும் அவற்றுக்கேற்ற காலணிகளும் அணிந்த செவிலியர்கள். இவர்கள் அறிவார்கள். வேறு எவருக்கும் தெரியாது. 

 “ஓர் பேரரசர், அரச குடும்பத்தின் உறுப்பினர். நீ பணியாற்ற ஒரு பின்புலம் தேவை. ஒரு புகழ்பெற்ற அரசியல்வாதி ரகசியமாக சொறிந்துகொள்பவன். இப்படி ஆய்வு செய்து திருப்தி அடையத்தக்க ஏதோ ஒன்று.”

“அப்படியா நினைக்கிறாய்”

“அல்லது விவிலியத்தில்.  நிச்சயமாக. ஒரு பெரும் கதையாடலின் பகுதியாக உன்னை உணர்வாய், ஆயிரக்கணக்கான வருடங்கள். புனித தலம். அரிப்பு.”

“ஒரு வார்த்தை. ஒரு அசை.”

“நான்கு எழுத்துகள். எப்போதாவது விவிலியத்தை வாசிக்கிறாயா? விவிலிய காலத்தில் ஒரு ப்ளேக் உண்டு. நிஜமாகத்தான் கேட்கிறேன்.”

“நானும் அப்படியேதான்”

“ஆய்வு செய். நானாக இருந்தால் செய்வேன். எவ்வளவு மோசமாக இருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிகிறது. நடு ராத்திரியில்”
“பட்டப்பகலில்”

“இன்னும் மோசம்” என்றான் அவன் நண்பன்.  
அவன் ஒரு பெண்ணை பார்த்துக் கொண்டிருந்தான், மேம்போக்காக நோக்கிக் கொண்டிருந்தான். அவர்கள் தயங்கும் இரு தனியர்கள். அரிப்பைப் பற்றி அவன் ஒரு வார்த்தைக்கூட சொல்லவில்லை. ஒருவேளை நெருக்கம் ஏற்பட்டால், அப்படி நிகழ்வது எதிர்பாராததாக இருக்கக்கூடாது என விரும்பினான். அவன் உடலை அவளுக்கு அளிக்கையில், கரங்கள், கால்கள், பிற இடங்களில், களிம்புகள் மற்றும் ஒவ்வாமை குறைக்கும் பூச்சுகள், அதி பயங்கர வீரியம் கொண்ட கார்டிகோ ஸ்டீராய்டுகள் மற்றும் லோஷன்களின் மிச்சில்களை அவள் உணரக்கூடும்.   
.
அவர்கள் அவ்வப்போது சேர்ந்து இரவுணவு உண்டார்கள், திரைப்படம் சென்றார்கள், பரஸ்பரம் முழு பெயரிலிகளாய் புதையுண்டு போகக் கூடாதென்பதை மனதில் கொண்டு அன்றாட நடைமுறையொன்றை உருவாக்கிக் கொண்டார்கள்.

அவள் பெயர் அனா (ana). ஒரேயொரு n தான். இந்த தகவல் துணுக்கு அவனுக்கு ஆர்வமூட்டும் ஒன்று. காணாமல் போன ஒரு n எனும் உண்மை. நோட்டுப் புத்தகத்தில் பென்சிலில் அந்தப் பெயரை  கிறுக்குவதை விரும்பினான். பெரிய “A”  சிறிய “n”, சிறிய “a”. அலுவலகத்தில் அவனுடைய கணினியில் வெவ்வேறு எழுத்துருக்களில், முழுவதும் பெரிய எழுத்துக்களில், அல்லது தலை கீழாக அல்லது சாய்வு எழுத்தாக அல்லது அழுத்தமாக அல்லது ரோமானிய எழுத்துருக்கள் அல்லாத தூரதேசத்து எழுத்துருக்களில் தட்டச்சு செய்து பார்த்தான். 

இரவுணவின்போது அவர்கள் அப்போது பார்த்து முடித்த திரைப்படத்தை பற்றி பேசினாள். அவன் கிட்டத்தட்ட மறந்திருந்தான். காட்சிக்கு காட்சி அச்சுறுத்தல் அதிகரித்து கொண்டே இருந்தது.  படத்தைக் காட்டிலும் ஏறத்தாழ காலியாகிக் கிடந்த திரையரங்கம் ஆர்வமூட்டுவதாக இருந்தது. உணவு மேஜையின் குறுக்கே சாய்ந்தபடி, கொஞ்சம் கோமாளித்தனமாக, அவளுடைய பெயரைப் பற்றி கேட்டான். குடும்ப பாரம்பரியத்தை ஒட்டியதா? ஐரோப்பிய நாவலில் உள்ள பெயரா?

அப்படி எந்த பாரம்பரியமும் இல்லை என்றாள். வெளிநாட்டு தாக்கமும் இல்லை. குறிப்பிட்ட ஒரு வகையில் உச்சரிக்கப்படும் ஒரு பெயர் அவ்வளவே.  

மெதுவாக தலையசைத்தான், உடலின் சாய்வு நிலையில் கைவிடப்பட்டவனாக, தான் உணர்ந்த ஏமாற்றத்தை எண்ணி வியந்தான். ஒருவழியாக மீண்டும் அமர்ந்தான், அப்போதும் தலையாட்டிக் கொண்டிருந்தான், அவளுடைய உடலை அவன் கற்பனையில் செய்வதை உணர்ந்துகொண்டான், எப்போதுமே உடலைத்தான். இது ஒன்றும் காமம் தூண்டும் வளைவுகள் கொண்ட உடலல்ல ஆனால் அதைவிடவும் அற்புதமானது, வெறும் உடல், ஆதி பௌதிக அமைப்பு. 

அவளுடைய அன்னையின் பெயர் ஃபிளாரன்ஸ் என்றாள். 
ஆனால் மேஜையின் எதிர்ப்புற நாற்காலியில் உள்ள அவளுடைய உடல், அந்த மானுடம், அந்த ஆளுமை, பல நூறாயிரம் வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக, பல மில்லியன் ஆண்டுகளாக பரிணமித்த ரத்தமும் சதையுமான திரள். அதன் உடல்தன்மையைப் பொறுத்தவரை கூனி, பாதி தவழும் அதன் முந்தைய வடிவங்களில் இருந்து, எந்த வகையிலும் பிரித்தறியமுடியாத உடல். 

நிறுத்து, என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.  அவர்கள் உணவைப் பற்றியும் உணவகத்தைப் பற்றியும் பேசினார்கள். அவன் அவளிடம் அவள் தந்தையின் பெயரென்ன எனக் கேட்டான். 
காலையில் அவன் பணியாற்றிய கட்டிடத்தின் நடைகூடத்தில் நடந்தான். அவரவர் அலுவலகங்களுக்கு செல்லும் பிறரை நேருக்கு நேர் பார்ப்பதை கவனமாக தவிர்த்தான், நான்கைந்து சூட்டுகள், டைகள், மேற்சட்டைகள் மற்றும் பாவாடைகள். அவர்கள் எங்குமே செல்லாமல், ஒரே இடத்தில் கால்களை மேலும் கீழுமாக அசைத்து கைகளை லேசாக வீசுவதாக கற்பனை செய்து பார்க்க விரும்பினான். 
அவனுடைய முன்னாள் மனைவியிடமிருந்த ஒருவிதமான புன்னகையை திரும்ப திரும்ப நினைவுகூர்ந்தான். அவள் அவனை நோக்கவில்லை, அவள் வெற்றிடத்தில் புன்னகைத்து கொண்டிருந்தாள். சண்டைகளால் கொதித்த வாரங்களுக்கு முன் சேர்ந்திருந்த அந்த நான்கு ஆண்டுகளில் இரவுணவு மேசையின் எதிர்ப்புறத்திலிருந்து அவள் எப்படி முத்தங்களை பறக்கவிட்டு அரிப்பை விரட்ட வேண்டினாள், நதியை ஒட்டி கோடைக்கால மாலைகளில் சென்ற அந்த மென் ஓட்டங்கள். 

அரிப்பின் சீர்மை, இரண்டு தொடைகளிலும், முழங்கை வளைவுகளிலும், இடது முன்னங்கால், பின்னர் வலது. கவட்டை அரிப்பதில்லை. புட்டத்தில், ஆம், படுக்கைக்கு செல்லும் முன் தனது கால் சராய்களை அவிழ்க்கும் போது, பிறகு நின்றுவிடும்.  

அவனால் அந்த புன்னகையை மறக்க முடியவில்லை. அது ஒரு அழகிய கணம், நினைவால் ஏந்தப்பட்டது, உருவம் மாறிக் கொண்டிருக்கும் கடந்த காலத்தை நோக்கி திரும்பியிருந்த அவள் தலை, கதைசொல்லும் வரம் பெற்ற பாட்டி, அப்போது எப்போதோ இருந்த ஏதோவொன்று, அந்தப் புன்னகையைத் தொடர்ந்து சென்று அவள் வாழ்வினுள் புக, ஒரு நிமிடமோ அல்லது ஒரு மணி நேரமோ, குற்றமற்ற காலத்தில் அவளது நினைவுகூர்தலின் வசியத்தில் சேர்ந்திருக்க, விரும்பினான்.
அவர்கள் ஞாயிறு ப்ரஞ்சுக்காக சந்தித்தார்கள், இரு தம்பதிகள், அறையின் மறுமுனையில் உள்ள கட்டையின் மீதிருந்த தொலைகாட்சியில் கால்பந்து விளையாட்டு ஓடிக்கொண்டிருந்தது, ஓசை அணைக்கப்பட்டிருந்தது. திரையை காண்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. குறுகியகால பரபரப்பு, மந்தகதி ரீப்ளேக்கள், சாதாரணமான ஓட்டத்திற்கோ, பந்து கடத்துவதற்கோ, துரத்தலுக்கோ மூன்று நான்கு ரீப்ளேக்கள், வெவ்வேறு காமிரா கோணங்கள், மேஜையில் நிகழ்ந்த உரையாடலில் கலந்து கொண்டான், தனது பான் கேக்குகளை உண்டபடி தொடர்ந்து பார்த்தான். விளம்பரங்களையும் கூட பார்த்தான்.     

 “ஞாயிறு ப்ரஞ்ச்” எனும் வார்த்தை நலமாக இருக்கும் உலகை சுட்டுவது
ஆனால் ஜோயல் முழங்கையை மேஜையின் மீது ஆணியடித்தாற்போல் ஊன்றி,  கையை உயர்த்திச் சுழற்றிக் காட்டுவதற்காக முள்கரண்டியை கீழே வைத்துவிட்டு தற்போதைய சூழலைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான், ஓயாத உலகளாவிய கொந்தளிப்பு, தேசங்களையும் சூழல்களையும் பெயர் சொல்லி குறிப்பிட்டான், .  அதன் பின் அவன் பேசுவதை நிறுத்தி யோசிக்க இடைவெளி விட்டான், அடுத்து என்ன சொல்ல நினைத்தான் என்பது அவனுக்கு இறுதியில் நினைவுக்கு வந்து விட்டது போலிருந்தது, கை இன்னும் உயர்ந்திருந்தது ஆனால் பிறர் அமைதியாய் இருக்க வேண்டுமென்ற கோரிக்கையில் இப்போது அசைவற்றிருந்தது, காலம் மற்றும் வெளியை நோக்கி வெறித்திருந்தான், பின் கடைசியில் அனா என்ற பெயரில் உள்ள எழுத்துகள் அனைத்தும் சாண்ட்ரா என்ற பெயரிலும் இருக்கிறது என்றான்.

சாண்ட்ரா சொன்னாள், “இந்த தகவலை வைத்துக்கொண்டு என்ன செய்வது?”

ஒவ்வொரு இரண்டு அல்லது மூன்று நிமிடத்திற்கும் மூன்று அல்லது நான்கு விளம்பரங்கள். கொத்துகொத்தாக விளம்பரங்கள். எங்கும், எல்லா இடத்திலும் இருப்பவர்களில் தான் மட்டுமே விளம்பரங்களை பார்ப்பவன் என்று எண்ணுவதற்கு தலைப்பட்டான். அந்த தொலைவில் திரையில் தெரியும் பிம்பங்களோடு இணைந்த வார்த்தைகளை வாசிக்கவே முடியவில்லை.  

அனா சொன்னாள், “நான் என் தட்டிலுள்ள உணவை பார்த்துக்கொண்டிருக்கிறேன்”

பிறர் காத்திருந்தார்கள், ஆனால் அவள் சொல்வதற்கு இது மட்டும்தான் இருந்தது.

அவன் தன் முள்கரண்டியை நேராய் உயர்த்திப் பற்றியிருந்தான். முதல் பாதி முடிந்திருந்தது, சற்றே நீண்ட இடைவெளிக்கு பின் அவனால் பார்ப்பதை நிறுத்த முடிந்தது. 
“என் சட்டையை கழட்டினால் அரிக்கத் துவங்குகிறது”

அரைக்கால் சட்டைக்கு மேல், முட்டிவரை நீளும், முன்பக்கம் திறந்த அங்கியை அணிந்து மல்லாந்து  பரிசோதனை அறையில் படுத்திருந்தபோது தன் நிலையை தோல் மருத்துவரிடம் விளக்கிக் கொண்டிருந்தான். அவள் அவனுடைய கணுக்கால், கெண்டைக்கால் மற்றும் தொடைகளை சோதித்துக் கொண்டிருந்தாள். தோல் நோய் உருவாவதைப் பற்றி கவனமின்றி பேசினாள். அவனுக்கு இந்த சொல் பிடித்திருந்தது. மேலிருந்து கீழே உருட்டிவிட்டது போல் ஒரு மனிதனின் மீது குற்றம் புரியும் நோக்கம் அல்லது தீமை கவிவது என்பதாக இருந்தது, அரிப்பின் சபிக்கத்தக்க இயல்பைப் பற்றி ஜோயலின் விவிலிய சார்பான கூற்று நினைவுக்கு வந்தது. 

இந்த மருத்துவருடனான மூன்றாம் சந்திப்பு முடியவிருந்தபோது அவனை அடுத்த வாரமோ அல்லது ஆறு மாதத்திலோ அல்லது வரவே வேண்டாம் என்றோ சொல்வாரா என யோசித்து கொண்டிருந்தான். சோப்புகள் மற்றும் ஷாம்பூக்களின் பெயர்களை பட்டியலிட்டாள், அவனுடைய நோய்க்குறிகளை ஒட்டி வரக்கூடிய பிரச்சனைகளை விளக்கினாள், அவன் இவை எல்லாவற்றையும் மனனம் செய்ய முயன்றான். ஆனால் அரைகுறை ஆடையணிந்த சூழலில் அது கடினமாக இருந்தது.  

குறிப்பிட்ட வலிநீக்கி வெளிபூச்சு மருந்தின் உட்பொருள்களின் பயன்பாட்டினால் வரும் வெளித்தெரியாத ஆபத்தான விளைவுகளை பட்டியலிட்டாள். 

நம் நினைவாற்றல் சரியாக இயங்குவதற்கு நாம் முழுவதுமாக ஆடை அணிந்திருக்க வேண்டுமா என்று யோசித்தான். 

“சில நோயாளிகளுக்கு மாத்திரை, பிளாஸ்திரி, அல்லது ஊசி கொடுக்கிறேன். ஆனால் உங்களைப் பொறுத்தவரை நீங்கள் உங்கள் அரிப்பை நீண்டகால பொறுப்பாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் பார்க்கிறேன்.”  

மருத்துவர் கையுறை அணிந்த விரல்களை அவனது கன்ன எலும்புகளின் மீது, நெற்றியின் மீது, கிருதாவின் மீது வைத்து முகத்தை சோதித்தார். அவளுடைய உதவியாளர் ஹன்னா அறையின் மூலையில் சட்டென தோன்றினாள், ஹன்னாவும் அவனும் ஒருவரையொருவர் வெறுமே வெறித்துகொண்டார்கள், அவனும் ஹன்னாவும், பின் அவள் வெளியேறினாள். 
தனிப்பட்டமுறையில் ஏதாவது சொல்லவேண்டும் என்றால் ஜோயல் வேக வேகமாக கண் சிமிட்ட தொடங்குவான். 

இதுதான் அவன் சொன்னது.

சில நேரங்களில், வீட்டிலுள்ள கழிவுச் சட்டி அருகே நின்றிருக்கும்போது, சட்டியில் உள்ள நீருடன் மூத்திரம் மோதும்போது சொற்களை போல் ஏதோ ஒலிப்பதை அவன் கேட்டிருக்கிறான். 

“இது எத்தனை கால இடைவேளையில் நிகழும்?”

சராசரியாக இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை இது நிகழ்கிறது என்றான். சொற்கள். சிறிய குரல் உதிர்க்கும் சொல்லை ஒத்த ஒன்றை அவன் கேட்டான், பிறகு சில சமயங்களில் மற்றொரு சொல், அவன் அந்த ஒலியை விளக்க முற்பட்டான், காலை பரப்பி, அவன் கரங்களைக் குவித்து கவட்டைக்கு அருகில் வைத்து நிகழ்த்திக் காட்ட முனைந்தான்.  

 “சிறு சொற்கள்”

“நான் இதை கற்பனை செய்துகொள்ளவில்லை”

“அல்லது ஏதோ ஒரு ஓசை ஏதோ ஒன்றை சொல்கிறது”

“மூத்திர ஓட்டம் இலகுவாக இருக்கும்போது மட்டும்”

“ஏதோ ஒன்று சொல்லப்பட்டதைப் போல். ஒரு உச்சாடனம்”

“ஒற்றை அசை”

உள்ளூர் உடற்பயிற்சி நிலையத்தின் உடுப்பு மாற்று அறையில் உடற்பயிற்சிக்குரிய ஆடையணிந்து, பஸ்கி, குதித்தல் மற்றும் ட்ரெட்மில்லுக்கு தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

“நீ ஒரு கவிஞன். எங்கெங்கும் சொற்கள்”

“சௌம் (zaum). பகுத்தறிவுக்கு அப்பாலான கவிதை. நூறு வருடங்களுக்கு முன். வடிவமும் ஒலியும் கொண்ட சொற்கள்.”

“சட்டியிலுள்ள நீரில் ஏற்படும் சிறு துடிப்புகள்”

“சௌம்”

“பகுத்தறிவுக்கு அப்பால்”  

 “பகுத்தறிவுக்கும் மரபுக்கும் வெளியே, சொற்களும் எழுத்துக்களும் சுதந்திரமானவை. ஆனால் அது எப்போதும் அப்படித்தானே, மொழியால் எப்போது உண்மையாக நிதர்சனத்தை விளக்க முடிந்திருக்கிறது என்பதுதானே கேள்வி?.” ஜோயல் கூறினான். 

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவ்வப்போது அது நிகழ்வதுதான். அவள்தான் பார்ப்பதை தொடங்குவாள், அவள் முகத்தில் உணர்ச்சி இருக்காது, அவன் பேசுவதை அல்லது சாப்பிடுவதை நிறுத்திவிட்டு இப்போது பார்வை பரிமாறிக்கொள்ள வேண்டிய நேரம் என தனக்குத் தானே சொல்லிக் கொள்வான். 

கண்களை சற்று நேரம் மூச்சு விடாமல் இருப்பதோடு துவங்குகிறான். அவர்கள் என்ன செய்தாலும் அதில் அவளுக்கு உதவியாளனாக தன்னை இருத்திக் கொள்வான். பார்த்துக்கொள்வதைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பேசிக்கொள்வதில்லை. அதுவே நிகழும் பிறகு நின்றுவிடும். 

கண் திறந்து மீண்டும் மூச்சு விடத் துவங்கும்போது, அதோ இருக்கிறாள், அனா, அவன் முகத்தில் அவள் கண்கள் ஆழ்ந்து இருக்கின்றன.  அவனுள்ளே அல்லது அவனைத் துளைத்துப் பார்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாள். மனிதனை அவனது தனித்தன்மைகள் அனைத்திலும் கரைத்து வேறொன்றைக் கண்டெடுக்க வேண்டி. எதுவானாலும் சரி.. 

அவள் முகம் சலனமற்றும் தீவிரமாகவும் இருந்தது. இது பரஸ்பர சுயபரிசோதனையா? முடிவற்ற மானுட பரிமாற்றம் எனும் தொடர்பு வலையிலிருந்து எளிய ஓய்வா? இந்த விஷயத்தை ஆய்வதை தவிர்க்க முயல்கிறான். அவளது பால்யகாலத்துக்குரிய வேடிக்கையான ஒரு துண்டம், கசப்பும் இனிமையும் கலந்த ஏக்கத்தின் நினைவு. 

முகம் மற்றும் கண்களின் உறைந்த சட்டகத்தில் இருப்பவர் எவர் என ஒவ்வொருவரும் கற்பனை செய்து காண முயல்கிறார்களா? அவரவர் அடையாளத்தின் சொல்லற்ற கண்ணுறுதலா அல்லது வெற்றுப் பார்வையா?
எண்ணங்களின்றி இருக்க முயன்றான். கண்களில் இருந்தும் மனதில் இருந்தும் சூழல் சார்ந்த புலன் அனுபவங்களை நீக்க முயன்றான், மனக் குப்பைகள். 
ஒருகால் அவள் வெறுமே பார்க்கவும் பார்க்கப்படவும் விழையலாம். 
பின், நோக்கமாய்க் கொள்ளாத விழைவைத் திருப்தி செய்வதற்கான ஒரு பண்படாத உணர்வு இருக்கிறது, ஒரு ஜீவத்துவ தேவை. இடது முன்கையில் வலது கையை வைத்து விரல் நுனிகளால் அரிப்பை தணிக்க முயல்கின்றன, ஆனால் சற்று நேரத்தில் கரம் அசைய துவங்கி விரல் நகங்கள் மண்ணை கிளரும் இயந்திரங்களாக தோண்டுகின்றன. பின்னால் சாய்ந்து, கண்களை மூடி, பழியுணர்வு ஓர் படலமாய் மிதப்பதை உணர்கிறான். இது முட்டாள்தனமானது என்பது அவனுக்கொரு பொருட்டல்ல. 

“உன் உடலைப் பழி தீர்க்கிறாய்?” என்றான் ஜோயல்.

“இருக்கலாம். எனக்கு தெரியவில்லை.”

“இந்த அரிப்பை ஒரு குறியீடாக எண்ணுவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. தனிப்பட்டமுறையில், உன்னைப் பற்றி என்ன சொல்ல முடிகிறது என்று பார்க்கலாம்.”

“கவிதை எழுதுவதோடு நிறுத்திக் கொள்”

“இப்போது எழுதி முடித்த ஒன்றுக்கு தலைப்பை முடிவு செய்ய முயன்று கொண்டிருக்கிறேன்”

“நீ சாண்ட்ராவுடன் பேசுவதுண்டா?”

 “சில நேரங்களில், ஆம். நான் எழுதுபவை பற்றி அவளுக்கு கருத்துக்கள் உண்டு.”

“அரிப்பைப் பற்றி சாண்ட்ராவிடம் பேசியதுண்டா?”

“அது எப்படி முடியும். இல்லை”

“அது எப்படி முடியும். எனக்கு அது தெரியும். நன்றி” என்றான்.
விளக்கொளி மாறுவதற்காக மூலையில் காத்திருந்தான். வாரில் கட்டப்பட்ட நாய்கள் ஒன்றின் மீது ஒன்று பாய்ந்து கொண்டிருந்தன. இடது கை வலது மணிக்கட்டை தேய்க்கிறது, பின்னர் வலக்கை இடது மணிக்கட்டை தேய்க்கிறது. போக்குவரத்து இடை நின்றதும் இருவர் தெருவை கடந்தார்கள், ஆனால் விளக்கு மூன்று, இரண்டு, ஒரு வினாடியில் மாறிவிடும் என்பதை அறிந்தவனாக, அவன் எங்கிருக்கிறானோ அங்கேயே தொடர்வதாக முடிவு செய்துகொண்டான். எண்கள் இறங்குவதை காண அவனுக்கு பிடிக்கும். 

இரு சதவிகித ஓட்ஸ் கூழ்மம் கலந்த சிரங்கு களிம்பு. 

மூன்று சதவிகித சாலிசிலிக் அமிலம் கலந்த சொரியாசிஸ்சின் பல அறிகுறிகளை தணிக்கும் களிம்பு. 

இருபத்தி நான்கு மணிநேரம் ஈரப்பதம் தக்க வைத்து மிருதுவாக்கும் தன்மை (emollient) நிறைந்த மருந்து கூட்டு. 
உயர்ந்த, மெலிந்த உடல் தோற்றமும் பெரிய முன் பற்களும் அவனை நட்புக்குரியவனாக காட்டின. அலுவலகத்தில் உள்ளவர்கள் சில சமயங்களில் தங்களின் அழுக்கு ரகசியங்களை அவனை நம்பி பகிர்ந்து கொண்டார்கள். அவனுடைய சுவாரசியமற்றது போல் தோன்றும் சுபாவத்தின் மீதான நம்பிக்கையை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அவன் எதுவும் செய்ய மாட்டான், அல்லது எதுவும் சொல்ல மாட்டான்,  

அவனும் ஜோயலும் அணுக்க வல்லுனர்கள்(access specialist), சட்ட விரோத மருந்துகளை உட்கொள்ளும் உடல் ஊனமற்ற வாடிக்கையாளர்கள் வீட்டில் இருந்தபடி மருந்து பெறுவதைச் சாத்தியமாக்குபவர்கள்.

அரிதாகவே அவர்கள் செய்யும் பணியைப் பற்றி பேசிக் கொண்டார்கள். உள்ளூர் செய்திகள், பருவநிலை, தேசமெங்கும் மனிதர்கள் நிகழ்த்தும் துப்பாக்கிசூடு என அவர்கள் தோன்றி மறையும் விஷயங்களைப் பற்றி பேசினார்கள். 

அவ்வப்போது ஜோயல் அறையிலிருக்கும் பிறருக்கு அஞ்சலி செய்தியை வாசித்து காட்டுவான். ஆண்களும் பெண்களுமாய் திரையை எதிர்கொண்டிருக்கும் ஆறு பேர். சில அஞ்சலிகளை அவனே இட்டு கட்டினான், முழு புனைவு, அதற்கு சில சிரிப்புகளைப் பெற்றான், சில சமயங்களில் கைத்தட்டல்கள் வெடித்தன. 
“நான் உன்னிடம் பொய்யுரைக்க விரும்பவில்லை. சொபினின் இறுதி ஊர்வலம் ஒரு தவறான அறிகுறி.”

இணையத்தில் புதிய மருத்துவரின் பெயர், அவரை புகழும் விதமாக, ‘அரிப்பு நிபுணர்’ என்றிருந்தது. குள்ளமாகவும், அகலமாகவும் இருந்தார், ஒரே தீவிர விழைவு கொண்டவனைப் போல் தோற்றமளித்தார். சோதனை அறையில் பாக்சர் அரைக்கால் சட்டையணிந்த நோயாளியை ஆழமாக கவனித்தார். பிறகு மருத்துவர் கையை சுழற்றினார் நோயாளி திரும்பினான். மருத்துவர் நோயாளியின் நோய் வரலாறு குறித்து சோதனை முடிவுகளில் இருந்து சேகரித்ததைக் கொண்டும் உடலில் என்ன காண்கிறாரோ அதைக்கொண்டும் தீர்மானமாக பேசினார். 

இப்போது மேசையில் நோயாளி மல்லாக்க படுத்திருந்தான். 

“நான் என் சட்டையையோ கால் சராயையோ கழட்டியவுடன் அரிப்பு துவங்குகிறது. அல்லது அரிப்பு அங்குதான் உள்ளது, இரவும் பகலும் வந்து செல்கிறது.” 

அவன் அணியும் ஆடை குறித்து பேசினார்கள். உள்ளாடைகள், தலையணை மற்றும் போர்வைகள். நோயாளியின் கருத்துகளுக்கு நேரடியாகவும் தெளிவாகவும் பதிலுரைக்கவில்லை என்றாலும் ‘அரிப்பு நிபுணர்’ சில சிறிய வாக்கியங்கள் வழியாக நம்பிக்கை ஏற்படுத்தினார், 

 “நான் பார்த்தவரை, நீங்கள் ‘அழும் புண்ணால்’ அல்லது அடோபிக் டெர்மடைடிசால் பாதிக்கப்படவில்லை”

வெவ்வேறு வகையான அரிப்புகளுக்கு வெவ்வேறு வகையான களிம்புகளை பட்டியலிட்டார். தொடர் பயன்பாட்டில் தோலை சன்னமாக்கும்  ஸ்டீராய்டைப் பற்றி எச்சரித்தார். அவர் அணிந்திருந்த அறுவை கவுன் அவருடைய காலணியையே மறைக்கும் அளவு நீளமாய் இருந்தது. 

“இங்கு அக்குளுக்கு அருகில் உள்ள தனித்த தடிப்பு. அதை தொட வேண்டாம். சொறிவதற்கு உரியதல்ல.”

அவர் கூறிய மருந்துகள் குறிப்பிட்ட ஒருவிதமான மொழியில் அடைபட்டிருந்தன, மூட்டமான சொற்கள் மற்றும் பதங்கள், அசைகள் நிறைந்தவை, ஏதோ ஒருவகையில் முற்றாதிக்கம் செலுத்துபவை. 

மருத்துவர் நோயாளியிடம் முகத்தை திருப்ப சொன்னார். 

“இந்த சீர்மை பிரமிப்பூட்டுவது. அதன் இடது மற்றும் வலதுத்தனம். இல்லையா? உலகமெங்கும் அரிப்பெடுப்பவர்களுக்கு முன்கை முன்கை, புட்டம், புட்டம். ஒரே சமயத்தில் நிகழ்கிறது.” 

மருத்துவர் மேசையின் மீதிருக்கும் உடலிடம் பேசவில்லை, மாறாக அந்த அறையிடம், சுவர்களிடம், அல்லது எங்கோ பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஒலிப்பதிவு கருவியிடம் பேசினார். இந்த முழு அமர்வுமே குற்றங்கள் நிகழாத புறநகர் ஆய்வு மையத்தில் உள்ள மருத்துவரின் சகாக்கள் பயன்பெறுவதற்காக என்றொரு எண்ணம் நோயாளிக்கு தோன்றியது. 

ஆலோசனை முடிந்தவுடன், ‘அரிப்பு நிபுணர்’ வெறுமே அறையை விட்டு வெளியேறவில்லை. தப்பியோடுவது போல் இருந்தது. 
ஆரம்ப காலங்களில் நதியோரம் மனைவியுடன் சேர்ந்து ஓடும்போது அவனுக்கு அரிப்பை பின்னால் விட்டுவிட்டு வருவதாக தோன்றியதுண்டு. அவன் அதை ஓடிக் கடந்தான். சில நேரங்களில் அவன் கருணை மிகுந்த உயிர் ஆற்றலிடம் சரணடைந்தபடி, தன் கரங்களை தூக்கியபடி ஓடினான்.
ஜோயல் வரிகளைப் பற்றி விவாதிக்க மாட்டான். அவை வெறும் வரிகள். இடைவெளியும்தான், அது என்னவோ அதுவே தான். துண்டிக்கப்பட்ட இடைவெளி, துண்டிக்கப்பட்ட சொற்கள்,  தொங்கும் சொல். 

“நான் முழு கவிஞனாக விரும்புகிறேன். ஆனால் என் படைப்பில் நான் பேசும்படி எதுவுமேயில்லை.”

“நீ அரிப்பைப் பற்றி பேச வேண்டும்.”

“மருத்துவர் என்ன சொன்னாரோ அதை எனக்கு திரும்பச் சொல்”

“அழும் புண்கள். அதைப்பற்றி மேற்கொண்டு அறிய மறந்துவிடுகிறேன்.”

“அதன் அறிவியல் பெயர் என்னவேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் இந்த பதத்திற்கு அபாரமான அழகியல் தன்மை உள்ளது.”

“அடோபிக் டெர்மடைடிஸ்”

“மனிதத்தன்மையே அற்றது. மறந்துவிடு”

ஜோயல் “அழும் புண்கள்” எனும் சொற்றொடரை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அதைப்பற்றி யோசித்து கேலியாக ஏதாவது சொல்ல முயன்றான். 
அவனுடைய அரைக்கால்சராயை கழட்டியவுடன் தொடைகள் அரிக்கத் துவங்கின. அனா கட்டிலில் பார்த்தபடி காத்திருந்தாள், அவனுடைய கரங்களை அழுத்தமாக பக்கவாட்டில் வைத்துகொண்டான். அவளுடைய படுக்கையறைச் சூழல் பரிச்சயமற்று இருந்தது. ஒரு நொடி நின்றான், அவளுடைய கனிவான துளைக்கும் பார்வையை அங்கீகரிக்கும் வண்ணம் புன்னகைத்தான். அரிப்பு போய்விட்டது ஆனால் அவள் அங்குதான் இருந்தாள். அவனுக்கு இது எத்தகைய விடுதலையை அளித்தது, அன்றாடத்திலிருந்து விடுதலை, அவனும் அவளும் மட்டும் கொஞ்சநேரத்திற்கு மகிழ்ந்திருப்பது எத்தனை எளிது.
அவர்கள் கட்டிடத்தின் சுவரில் சாய்ந்தபடி நின்றார்கள், உணவு இடைவேளை, இரு பெண்கள், சக பணியாளர்கள், புகைத்து கொண்டிருந்தார்கள், அவன் தெருவிளிம்புக் கல்லருகே தன்னை நிறுத்திக்கொண்டு அவர்களை பார்த்துக் கொண்டிருந்தான். 

“நான் என் வாழ்வில் இரு முறை புகைத்திருக்கிறேன்” என்றான் அவன். 
முதல் பெண் கேட்டாள் “அப்போது உனக்கு எத்தனை வயது?”
“பதினேழு, பிறகு இருபத்தியேழு”
“இந்த எண்களை நினைவு வைத்திருக்கிறாய்” என்றாள். 
“அவற்றை நினைவில் வைத்திருக்கிறேன். நான் அவற்றை பற்றி எண்ணுவதுண்டு.”
அவர்கள் புகைப்பதைக் காண அவனுக்கு பிடித்திருந்தது. அவர்களுடைய செயல்களில் எளிய நளினம் இருந்தது, முகத்தை நோக்கி மிதக்கும் கையின் தன்னிச்சை அசைவுகள், விரிந்த உதடுகள், புகையை உள்ளிழுக்கையில், முதலில் ஒருத்தி அப்புறம் மற்றொருத்தி, அவர்கள் முகம் எப்படி பின்னோக்கிச் சாய்கிறது, கவனத்தைத் தப்பும்  வகையில், அதன்பின் அவள் புகையை வாய்வழி வெளியேற்றுகையில்  தலை மெல்ல முன்னும் பின்னும் அசைகிறது, ஆழ்ந்த நிம்மதி, கண்கள் மூடிக் கொள்கின்றன, முதலில் ஒருத்தி, சற்று நேரம், அதன் பின் மற்றொருத்தி. செயலை அதன் விளைவுகளில் இருந்து பிரித்துப் பார்க்கிறேன் என தனக்குத்தானே நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருந்தது. 
“எத்தனை காலம் புகைத்தாய்?” முதலாமவள் கேட்டாள். 
“முதல் முறை, ஒன்றரை வாரம் இருக்கலாம்.”
“இரண்டாம் முறை?.”
“இரண்டாம் முறை. இரண்டு வாரங்கள்.”
“இனி இப்போது நீ நிரந்தரமாக வாழ்வாய் என்று எதிர்பார்க்கிறாயா?”
“அலுவலகத்தில் இருக்கும்போது இல்லை”
“அப்படியென்றால் என்ன எதிர்பார்க்கிறாய்?”
“எனது மேஜைக்கு அருகேயுள்ள சாளரத்தின் வழியே குதிப்பதை எதிர்பார்க்கிறேன்.”
இரண்டாமவள் சொன்னாள், ”எங்களையும் உன்னோடு அழைத்துக் கொள்”
வீட்டில் ஒரு அறையிலிருந்து இன்னொரு அறைக்கு நடந்தான், பிறகு அங்கு ஏன் இருந்தான் என்பதை மறந்தான். அவனுடைய அலைபேசி ஒலித்தது. அவன் ஏன் மற்றொரு அறைக்கு சென்றான் என்பதை அவனுக்கு உரைக்கும் குறுஞ்செய்தியை வாசிப்பேன் எனும் அரைகுறை எதிர்பார்ப்புடன் முதல் அறைக்கு சென்று அதை எடுத்தான். 

இரண்டு மணிநேரத்திற்கு பிறகு அவன் மீண்டும் பரிசோதனை மேஜையில் இருந்தான், அறுபதுகளில் இருக்கும் மருத்துவர் நாற்காலி நுனியில் அமர்ந்து கொண்டு அவனுடைய இடது முன்கையை தூக்குவதும் நோக்குவதுமாக, அரிப்புத் தடங்களில் உற்று நோக்கி, மயிர்க்கால்களின் உள், திசுக்களைக்கூட கவனமாகச் சோதித்து கொண்டிருந்தார்.

“உனது அரிப்பிற்கு பிறரை சொறியச் சொல்லாதே. அது பயன்தராது.” என்றாள். “நீயேதான் சொறிந்துகொள்ள வேண்டும்”

அந்த சிறிய அறை ஏறத்தாழ கைவிடப்பட்டதாக தோன்றியது- தேங்கிய காற்று, தகவல் பலகையில் குத்தியிருந்த கசங்கிய ஆவணங்கள்,  பொருட்கள் சிதறிக் கிடந்தன. 

மருத்துவர் அவனிடம் கேள்விகளை கேட்டார், பிறகு அவன் கூறியதை திரும்பச் சொன்னார். அவளுடைய பேச்சு வழக்கை அடையாளம் காண முயன்றான், ஒருவேளை மத்திய ஐரோப்பாவா, அவளுடைய திறன் மீது இது அவனுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. 

“அரிப்பு அவ்வப்போது நிற்கும்போது, ஐந்து நிமிடங்களோ ஆறு நிமிடங்களோ, நீங்கள் கொஞ்சம் வெறுமையை உணர்வீர்கள்.  என்ன எண்ணுவீர்கள்?”  

அவன் சிரிப்பைத் தேடினான், ஆனால் அது அங்கு இல்லை. 
“குளிக்கும் நேரத்தை குறைத்துக்கொள்ள வேண்டும்”
“எனக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது”
“உங்களுக்கு இது சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் என்னால் அல்ல.” என்றாள் . 
அவள் அவனுடைய முகத்தை நேரடியாக நோக்கிக் கொண்டிருந்தாள். பார்த்தாள் பேசினாள். அவள் நான்கு அல்லது ஐந்து மொழிகளைப் பேசுபவள் என்று அவன் உறுதியாக நம்பினான்.  
 “பிற நோயாளிகள், இன்னும் மோசம்”
“என் நிலையும் மோசம்தான்”
“இந்த போட்டியில் நீங்கள் இல்லவே இல்லை”
“நான் என்னையே ஏமாற்றிக் கொள்கிறேன். மோசமான நிலையில்லை என எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன்”
“உங்களால் உண்ண முடிகிறது. உறங்க முடிகிறது.”
“நான் உண்கிறேன். உறங்குவது எப்படி என்பதை மறந்துவிட்டேன்.”
“வயதாக ஆக, நான் சொல்வதை கேளுங்கள், பேசுவதும் நடப்பதும் குறையக் குறைய அரிப்பு அதிகரிக்கும்.”
ஆழமாக ஊடுருவி, அவன் பின்வாங்கும் வரை, அவள் தொடர்ந்து நோக்கியபடியே இருந்தாள்.

 “நாம் எங்கிருக்கிறோம் என்பதைப் பாருங்கள், நீண்ட கூடத்தின் கடைசி அறையில். நான் நாளுக்கு நான்குமுறை அங்கிருந்து இங்கும் பிறகு இங்கிருந்து அங்கும் திரும்ப நடப்பேன். இது பதிமூன்றாம் நூற்றாண்டு ஆதரவற்றோர் மற்றும் இறப்பவர்களுக்கான நோயாளர் விடுதி இல்லை என்று எனக்கு நானே சொல்லிக்கொள்ள முயல்கிறேன். ஆனால் என்னை ஏற்கச் செய்வது அத்தனை எளிதல்ல.”

அவள் பேசுவதை கேட்க அவனுக்கு பிடித்திருந்தது ஆனால்  அவள் வெற்றுவெளியை நோக்கி பேசினாள். 

“அரிப்பு இல்லாத மக்களிடம் அரிப்பைப் பற்றி நான் பேசினால் அவர்களுக்கு அரிக்கத் துவங்கிவிடுகிறது.”
“இது உண்மையா?”
“இது உண்மைதான்.” என்றாள். “வார்சாவில் ஒரு குழுவிடம் பேசினேன். அவர்கள் பேராசிரியரும் மாணவர்களும். அரிப்புக்கு என்று உரிய நரம்புகள், எலிகளில் உள்ள உணர்வு நியுரான்கள் பற்றி பேசப்பேச பார்வையாளர்கள் மத்தியில் அரிப்பு அதிகமாவதை காண முடிந்தது.” 
 “அவர்கள் இதைப்பற்றி கேள்வி கேட்டார்களா?”
“கேள்விகள் ஏதுமில்லை. பொது  மேடையில் நான் கேள்விகளை ஏற்பதில்லை.”
நீட்டப்பட்டிருந்த கரத்தை நோண்டுவதை நிறுத்தியபின் அதை அதன் பக்கத்திற்கு திருப்பாமல் அப்படியே கீழே விட்டாள், பிறகு மேசையை சுற்றி வந்து இன்னொரு கையை தூக்கினாள். 
அவன் கேட்டான், “உங்களுக்கு எப்போதாவது அரிக்குமா?”
அவனைப் பார்த்தாள், இந்த குறிப்பிட்ட நோயாளியிடம் புதிய கோணத்தை கண்டுகொண்டாள், அவனுடைய குரலை நகல் செய்வதாக எண்ணிக்கொண்டு இந்த கேள்வியை திரும்ப எழுப்பிக் கொண்டாள். 
“எனது ஒரே அரிப்பு என்பது என்னை சுற்றி என்ன இருக்கிறது என்பதே.” அவளுடைய சொந்த குரலில் கூறினாள். “மேலும் நான் ஏன் இங்கிருக்கிறேன் என்பதும்”
அந்தச் சந்திப்பு முடியவிருந்த சமயத்தில், நோயாளி கால்சராய், சட்டை மற்றும் சப்பாத்துக்களை அணிந்துகொண்டான், மருத்துவர் ஓரிரு மருந்துகளை பரிந்துரைத்தார். 
 “நீங்கள் உங்கள் மருந்துகளை வாங்கும்போது அதில் செருகப்பட்டிருக்கும் அறிவுறுத்தல்களை வாசிப்பீர்கள், ஆனால் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை. அவை முட்டாள்தனமானவை, தவறாக வழிநடத்தக் கூடியவை. நாளுக்கு இருமுறை, மும்முறை, நான்கு முறை மருந்துகளை பயன்படுத்தாதீர். நான் சொல்வதை நீங்கள் கேட்கிறீர்கள். நாளைக்கொரு முறை.”
இதை திரும்பச் சொல்ல கடமைபட்டவனானான். 
“நீங்கள் சொறிவீர்கள், தொடர்ந்து சொறிவீர்கள். ஆனால் நான் என்ன சொல்கிறேனோ அதையும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.”
“நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”
 “உங்களை நீங்களே தெளிவான, கச்சிதமான எந்த வெளிச்சத்தில் புகைப்படம் எடுத்து கொண்டாலும் நல்லது என் அன்பரே”
“அரிப்பில்லை என்றால் நீங்கள் ஒரு ஆளே இல்லை” 
கூடத்தில் நீண்டதுரம் நடந்தான். தனித்தீவாக இருக்கும் அலுவலகத்தில் தனித்திருக்கும் மருத்துவரைப் பற்றி எண்ணினான். மின்தூக்கி வருவதற்கு வெகுநேரம் ஆனது.

அவனும் அனாவும் எதைப் பற்றியும் அதிகம் பேசாமல், சில சமயங்களில் இடைகளை இடித்தபடி  நடை சென்றபோது, நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம், நாங்களாகவே இருக்கிறோம், என்று எண்ணிக் கொண்டான். அவர்களை ஒரு களங்கமின்மை பொறுப்பிற்கு அப்பால் கொஞ்ச நேரத்திற்கு கொண்டு வைத்தது. 

காலப்போக்கில் இந்த தொடர்பு திரவ நிலையிலிருந்து திடமாக மாறியது. 
“நாம் காதலில் விழுகிறோம் என்றால் அதற்கு என்ன பொருள்?” அவள் கேட்டாள் “எனக்கு சரிவரத் தெரியாத ஒரு மனிதனின் மீது இத்தனை அன்பு வைப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது.”
அவன் தலை குனிந்து, அவள் சொல்வதைக் கூர்ந்து கவனித்தபடி நடந்தான். 
“எனக்கு உண்மையில் உன்னை தெரியாது. இது வெறும் தகவல் இல்லை.” பரிதாபமாக சிரிப்பது போன்ற பாவனையில் சொன்னாள்.   
லாபியில் இருந்த மனிதர்கள் வரிசையாக காத்திருந்தார்கள். ஒரு மின்தூக்கி சீரமைக்கப்பட்டு கொண்டிருந்தது. மற்றொன்று ஐந்தாம் தளத்தில் இருந்து கீழிருக்கும் அவர்களை நோக்கிச் சிமிட்டிக் கொண்டிருந்தது, அதன் இறக்கம் தடைப்பட்டு விட்டது. 
பதினோராம் மாடியில் உள்ள அவனது அலுவலகத்திற்கு படி ஏறலாம் என்று முடிவு செய்தான், இதே புகாரை பொதுவாக கொண்டிருந்த வேறு சிலரும் அவனோடு சேர்ந்து கொண்டார்கள். முதற் தள படிக்கட்டுகளில் பாதிதூரம் கடந்ததும் படிகளை எண்ண துவங்கினான், பிறகு மீண்டும் கீழே சென்று முதற் படியிலிருந்து சரியாக எண்ண வேண்டும் என முடிவு செய்துகொண்டான். 
எண்ணிக்கொண்டிருக்கையில் அவ்வப்போது கீழே பார்த்தான், அவனது உதடுகள் அசைவதை குறித்த பிரக்ஞை அவனுக்கிருந்தது. சூட்டும் டையும் அணிந்து பேஸ்பால் தொப்பி அணிந்த ஒருவன் ஒரு சமயத்தில் இரண்டு படிகளை தாவி அவனை உரசிக் கொண்டு கடந்து சென்றான். 
ஒன்றரை மாடி கடந்தபோது தான் அணிந்திருந்த சப்பாத்துக்களை கவனித்தான். பார்த்துக் கொண்டே எண்ணினான், தனக்கு இந்த சப்பாத்துக்கள் பிடிக்கவில்லை எனும் உண்மையை நினைவு கூர்ந்தான், அப்படி இருந்தும் இவற்றை ஏன் வாங்கினான் என புரிந்துகொள்ள முயன்றான். 
இன்னும் நிதானமாக படியேறினான், செருப்புக் கடையில் சப்பாத்துகளுடன் அதை வாகாக உணர்வதற்காக மேலும் கீழும் நடந்து சென்றதை கண்டு கொண்டிருந்தான். உண்மையிலேயே தன்னைக் காணவில்லை, ஆனால் ஒரு கை தொலைவில் காற்றில் எங்கோ புகைமூட்டமான உருவமாக அதை உணர்ந்தபடி இருந்தான். மனிதர்கள் படிகளில் அவனை கடந்து சென்றபடி இருந்தார்கள். அவன் கீழே நோக்கி படிகளை எண்ணியபடி, சப்பாத்துகளை பார்த்துக் கொண்டிருந்தான்.  
அவன் முன்னும் பின்னுமாக பலமுறை நடந்து பின்னர் அமர்ந்திருந்தான், அவன் மட்டுமே கடையிலிருந்த ஒரே வாடிக்கையாளர், ஒரு சப்பாத்தை கைக்கொண்டும் கண் கொண்டும் கவனமாக சோதித்திருந்தான். 
அவனுக்கு சப்பாத்துக்கள் தேவையில்லை என்று விற்பனை பிரதிநிதியிடம் சொல்வது அத்தனை சிக்கலா, அத்தனை சங்கடமான விஷயமா? விற்பனை பிரதிநிதி அவனுடைய நாள் நாசமாகிப்போனது என்று வருந்துவானோ என்றெண்ணினானோ?
அவனுக்கு விடை தெரியவில்லை ஆனால் தாமதமாக, விற்பனை பிரதிநிதியால், செருப்பு கடையால், சப்பாத்துக்களால் ஏமாற்றப்பட்டதாக உணரத் துவங்கினான். தன்னுடைய தளத்தை அடைய ஒரு மாடி இருக்கும்போதே படிகளை எண்ணுவதை நிறுத்திவிட்டான். 
அலுவலகத்தில் அவனுடைய மேஜையில் அமர்ந்தான், இடது மணிக்கட்டு காலை அரிப்பின் உச்சத்தில் இருந்தது, சாளரத்தின் வெளியே நோக்கினான், கொஞ்ச தூரத்தில் இருக்கும் கட்டிடத்தின் முகப்பை கண்கள் ஒட்டின, சாளரங்களின் நேர்கோட்டு வடிவை மீண்டும் நோக்கினான். அவன் இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் நோக்கி சாளரங்களை புத்தகத்தைபோல் வரிவரியாக வாசித்தான்.  
இறுதியில், அவளிடம் சொல்லாமல் இருப்பது ஏமாற்றுவதாக தோன்றியது. 
பெரும்பாலும் காலியாகிக் கிடந்த கஃபே மூலை மேஜையில் அமர்ந்திருந்தார்கள். அதிக தகவல்களை தவிர்த்துவிட்டு இந்த அரிப்பு பொறுத்துக் கொள்ளத்தக்க நிலைதான், ஆனால் அத்தனை சீக்கிரத்தில் தணியப்போவதில்லை என்று சொல்வதுதான் அவன் திட்டம். 
இதற்கிடையே வானிலிருந்த இடிமுழக்கத்தை கேட்டார்கள், அவள் வளர்ந்த பகுதியின் இடியைப் பற்றி பேசினாள். புயல் நெருங்குகையில், பேரிகை முழக்கமும், கோணல்மாணலான வெளிச்சக்கீற்றுகளும் அளித்த அச்சம் மிகுந்த வியப்பு. 
அவள் பேசுவதைப் பார்த்துக் கொண்டிருந்தான். 
அவள் வெளிர்நிறம், முகம், தலைமயிர் மற்றும் சிறிய கைகள், ஒரு கையின் மூன்று மத்திய விரல்களைக் கொண்டு இன்னொரு கையின் அதே விரல்களை மென்மையாக தடவிய பாங்கு. நினைவுகொள்வதன் சமிக்ஞை, பதட்டமானதா அல்லது அமைதிப்படுத்துவதா – அவனுக்கு உறுதியாக தெரியவில்லை. 
அது தொற்றுவியாதி அல்ல என அவன் சொல்வான், அல்லது வருங்கால சந்ததியில் தன் சுவடுகளை விட்டுச் செல்லும் முன்னோர்களின் சுமையும் அல்ல. சிரிக்காமல் நகைச்சுவையாக ஏதாவது சொல்லி இதை முடித்துக் கொள்வான். 
உனக்கும் அரிப்பிருந்தால், நாம் பேசுவதற்கு எத்தனை இருக்கும் என்று எண்ணிப் பார்.’
அவன் வாழும் கட்டிடம் அங்கிருந்து நடக்கும் தொலைவில் இருந்தது. ஆகவே அவர்கள் அங்கே செல்லலாம் என்று யோசனை சொன்னான். அவனுடைய குடியிருப்பிற்கு அவள் வந்ததே இல்லை, தோளைக் குலுக்கி சின்னதாக ஒகே என்றாள். அவள் கழிவறைக்கு சென்றபோது சற்றே நிதானித்தான். பின்னர் வேகமாக ஆண்கள் பகுதிக்கு சென்று ஒரு அறையில் தன்னை பூட்டிக்கொண்டு இடத்து கால்சராயை தூக்கி வெறித்தனமாக சொரிந்துகொண்டான், இறுதிகட்ட அவசரத்தில், அவள் மேஜைக்கு திரும்புவதற்குள் திரும்பினான். 
மழை பெய்யத் துவங்கியது, அவர்கள் கட்டிடங்களின் சுவற்றையொட்டி ஒருவர்பின் ஒருவராக ஒற்றை வரிசையில் லேசான வசைசொற்களை உதிர்த்தபடி சென்றார்கள். புத்தகங்கள், புகைப்படங்கள் மற்றும் சிறிய, சுத்தமான, குறுகலான சமையலறையை நோட்டம்விட்டபடி வாழறையை அவள் சுற்றி வருவதை கவனித்தான்.  
அவள் சோபாவில் அமர்ந்தாள், காபி மேஜையின் மறுபுறம் இருந்த நாற்காலியில் அவன்  அமர்ந்திருந்தான். அவன் எங்கெல்லாம் வாழ்ந்திருக்கிறான் எனும் வரலாற்றை சுருக்கமாக அவளுக்கு சொன்னான். என்ன காரணத்தினாலோ அவன் குசுகுசுத்தான். 
அவன் அரிப்பைப் பற்றி எதுவுமே சொல்லவில்லை. 
படுக்கையில் சொற்களற்ற உடல் செயல்பாடுகள் மட்டும்தான், அதைத் தொடர்ந்த இடைவெளியில் தன்னினைவின்றி சொறிந்து கொண்டு அவன் தனியாய்ப் படுத்திருந்தான், அவளுடைய பார்வையின் எல்லைக்கு அப்பால் கழுவு தொட்டிக்கு கீழே உள்ள சிறிய சேமிப்பு இடத்தில் உள்ள மருந்து அலமாரியில் எல்லா களிம்புகளையும் ஜாடிகளையும் வைத்திருந்தான் என்பதை தனக்குத் தானே நினைவுகூர்ந்து கொண்டான்.   
ஒவ்வொருவரும் பிறிதொருவர் இல்லாமல் இருக்கவே முடியாது எனும் அளவிற்கு இது ஓர் ஈடுபாடு இல்லை என எண்ணிக்கொண்டான். ஆனால் இதை எப்படி புரிந்துகொள்வது என்பதில் அவனுக்கு தெளிவில்லை. 
அவள் அறைக்கு திரும்பியபோது அவள் பெயரை உரக்க உச்சரித்தான். 
பிறகு அவளை வீட்டிற்கு நடத்திச் சென்றான், காற்றுக்கு எதிராக சாய்த்து அவன் பிடித்திருந்த குடைக்குப்  பின் இரு கூனிய உருவங்கள் சென்றன. 
ஜோயல் அலுவலகத்தின் மூலையில் அமைதியாக அவனிடம் பேசுகிறான். அவனுடைய மூத்திரம் கழிவுச் சட்டியில் மென்மையாக தெறித்தபோது பேசிய வார்த்தைகள், மீண்டும் கேட்டிருக்கின்றன. 
“எங்கு, இங்கா?”
“வீட்டில், வீட்டில் தான் இருக்க வேண்டும். இங்கு நான் யூரினலை பயன்படுத்துகிறேன். வீட்டில், கழிவுச் சட்டி  மட்டுமே உள்ளது.”
“ஒரு வார்த்தையைப் போல் ஒலிக்கும் ஓசை இல்லை அது”
“அது என்னவோ சொல்கிறது.”
 “ஆனால் அது ஒரு சொல்லென்றால் உன்னால் அந்த சொல்லை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?”
“அந்தச் சிறிய தெறிப்பை நோக்குகிறேன். நோக்கி, செவி கூர்கிறேன். நான் முயல்கிறேன்.”
“அது எதையோ சொல்கிறது என்று எண்ணுகிறாயா.”
“அதற்கு தன்னை வெளிபடுத்தும் தன்மை உள்ளது. அது எதையோ சொல்கிறது, தொடர்பு கொள்கிறது.”
அவன் வேகவேகமாக கண் சிமிட்டினான். 
  “சரி. அது ஒரு சொல், ஆனால் அது ஆங்கில வார்த்தை என்பது எப்படி தெரியும்?”
“அதுதானே என் மொழி.”
“இது முட்டாள்தனமாக போய்க்கொண்டிருக்கிறது. உனக்கது தெரியும்.”
“நான் உன்னை நம்புவதால் உன்னிடம் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.”
“சாண்ட்ராவுக்கு இதைப்பற்றி தெரியுமா?”
“அவளிடம் சொல்வதற்குரிய துணிவு எனக்கு இதுவரை இல்லை”
“அவளிடம் சொல். அதை கேட்க ஆவலாக உள்ளேன்.”
“இந்த காட்சியை கற்பனை செய்து பார்.” ஜோயல் சொன்னான். “அவள் கழிவறைக்கு என்னை பின்தொடர்ந்து வருகிறாள், நான் ஜிப்பை கழட்டுவதற்கு காத்திருந்து நிற்கிறாள்.”
 “அவளிடம் காட்டாமலே அவளிடம் சொல்லலாம்”
“அவள் சிரிப்பாள். எங்கள் பிள்ளைகளிடம் சொல்வாள்.”
“நான் அதை யோசிக்கவில்லை.”
“எட்டு வயதும், ஆறு வயதும் ஆனவர்கள். அவர்களுடைய எதிர்வினையை கற்பனை செய்துபார்.”
“சௌம்”
“நினைவிருக்கிறதா. நல்லது.”
“பகுத்தறிவுக்கு அப்பாலான கவிதை.”
“வடிவங்களும் ஒலிகளும். வருங்காலத்துக்குரிய சௌம். உனக்கு நினைவிருக்கிறது. ஒரு வடிவம், ஒரு ஒலி.”
“குழந்தைகளிடம் சொல். சௌம். அவர்கள் அந்த சொல்லை சொல்வார்கள்.”
அவர்கள் மீண்டும் தங்கள் மேசைகளுக்கு திரும்பினார்கள், திரையை நோக்கி குனிந்து செய்திகளில் கண்களை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். 
இப்படித்தான் உறக்கத்தின் அண்மைய நிலை ஒரு மனிதனின் பிரக்ஞையை இணக்கப்படுத்துகிறது. பிற எல்லாமும் மறைந்து விடுகின்றன. கடந்த காலமும் இல்லை வருங்காலமும் இல்லை, மனித வடிவில் வாழும் அரிப்பு, முன்னுக்கு பின் முரணாக சிந்திக்கும் ராபர்ட் டி வால்ட்ரன்,  போர்வையில் ஓர் உடல், தனக்குள் குவிந்தவன்.  ♦


டான் டெலிலோ “the angel esmeralda” மற்றும் வேறு பல தொகுப்புக்களை எழுதியவர். “zero k “ அவருடைய அண்மைய நாவல். 









Sunday, November 25, 2018

லித்தியம்


1
 அவள் கன்னத்தில் என் விரல்கள் பதிந்து பழுத்திருந்தது. கண்கள் சிவந்து கலங்கி நீர் வழிந்தது. அவள் விசும்புவதை கூட கேட்க முடிந்தது. அது குட்டி நாய்களின் இரவு கமறலை ஒத்திருந்தது. மறு கன்னத்தையும் அறைந்தேன். அவள் தலைமயிரை கொத்தாக பிடித்து சுவற்றில் மோதினேன். பத்து நிமிடங்களில் நூறு முறை விழித்திரையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. கண் திறக்கும்போது, மகேசு அமைதியாக சுவறில் சாய்ந்து தொலைக்காட்சி பார்த்து கொண்டிருந்தாள். கண் மூட அஞ்சினேன். வீட்டில் இருக்கும் ஒவ்வொன்றும் ரகசிய ஆயுதத்தை பதுக்கிக்கொண்டு வன்மத்துடன் மோதி சிதறுவதற்கு நான் கண் மூட வேண்டும் என காத்திருந்தன. கடிகாரம் தன் முள்ளை கூர்மையாக்கிக் கொண்டிருந்தது. மின்விசிறி தன் விளிம்புகளை பட்டைதீட்டிக் கொண்டிருந்தது. அவசரமென்றால் மேசையை சாய்த்து கேடயமாக பயன்படுத்த வீட்டு பாத்திரங்கள் தயராய் இருந்தன. 

இவளோடு இருபத்தியிரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன்! இறந்து எதிர் சுவரில் படமாக தொங்கிக் கொண்டிருக்கும் அவள் அப்பனின் படத்தை உடைத்து வீச வேண்டும். சுவற்றில் மாட்டியிருக்கும் எல்லாவற்றையும் நொறுக்கி எறிய வேண்டும். ஜ்யோத்ஸ்னாவிண் முகம் ஒருகணம் மின்னி மறைந்தது. மகேசை ஏன் மணந்தேன்? தெரியவில்லை. 

பெங்களூர், மங்களூர், ஹோஸ்பெட், கொப்பல் என ஊர் ஊராக வாழ்ந்திருந்தும் கூட அவள் இன்னமும் அதே நெடுங்குடிகாரியாகவே இருக்கிறாள். பெங்களூரில் இருந்த போது ஓவிய கண்காட்சிகளுக்கும், இலக்கிய கூட்டங்களுக்கும் இசை கச்சேரிகளுக்கும் அழைத்து போயிருக்கிறேன். அவற்றின் ஒருதுளி கூட அவளுள் எஞ்சவில்லை. அருண் பிறக்கும் வரையிலான நாட்களில் மாதவிடாய் காலங்களில் சொல்லற்று வெறித்து கிடப்பாள். அந்த மவுனம் பெரும் வாதையாக என் நெஞ்சை அறுவும். அவனை கருவான பின் தனக்குள்ளாக அழுவாள். பிரசவ காலத்தில் சர்வ நிச்சயமாக தான் இறந்துவிடுவேன் என்றாள். அருண் பிறந்ததும் அவன் பாலுக்கு அழுவது கூட காதில் விழாத அளவிற்கு பிரமை பீடித்தவள் ஆனாள். அப்போது நாங்கள் ஹோஸ்பெட்டில் இருந்தோம். குழந்தையை பார்க்க வந்த அலுவலக நண்பர்களுக்கு காப்பி போட உள்ளே சென்றவள் நெடுநேரமாகியும் வரவில்லை. பொறுமையின்றி எழுந்து தேடினால் கழிவறையிலிருந்து அழுது வீங்கிய கண்களுடன் வெளியே வந்தாள். ஏதோ சிக்கல் என்று புரிந்தது. மனநல மருத்துவர் க்ரானிக் டிப்ரஷன் என்றார். லித்தியம் அப்போது தான் அவளுக்கு அறிமுகமானது.

நானறிந்து அவளாக யாருடனும் தொலைபேசியில் பேசியது இல்லை. அவள் வீட்டிலிருந்து அவர்களே அழைத்தாலும்கூட ஓரிரு நிமிடங்கள் அசிரத்தையாக பேசிவிட்டு வைத்துவிடுவாள். அவளுக்கென்று உள்ள கைபேசியை சீண்டுவதும் இல்லை. நானோ அருணோ அழைத்தால் மட்டும் பேசுவாள். சிரிப்பாகவோ கோபமாகவோ அல்லது ஆரம்ப காலத்தில் அவளை பீடித்த அழுகையாகவோகூட இல்லாத வெறும் சோர்வில் உறைந்து போன முகமூடியுடன் வாழ்வதாக தோன்றும். அருண் மட்டுமே எங்களை இப்போதுவரை பிணைத்திருக்கும் சரடு. 

கன்னத்தைக் கை பதம் பார்க்கும் அந்த ஓசை ஒரு தாளம் போல் திரும்பத் திரும்ப இத்தனை நேரமாக என் செவிக்குள் ஒலித்தப்படி இருக்கிறது. ஒரு எண்ணத்திற்கும் மற்றொன்றுக்கும் இடையே, ஒரு சொல்லுக்கும் பிறிதொன்றுக்கும் இடையே. ஒரு நிறுத்தற்குறியைப் போல் அறை விழுந்தபடி இருந்தது. கைத்தட்டு போல் கூர்மையாகவும் இல்லாத தொடைத்தாளம் போல் அமுக்கமாகவும் இல்லாத ஓசை. 

வழக்கமான நேரத்தைத் தவறவிட்டுவிட்டேன். வியர்த்து ஊற்றியது. தலை கனத்தது. நாசி இழுத்த காற்று உருக்கிய உலோகமாக மெல்ல அடர்ந்து தொண்டையில் இறங்கியது. மூச்சுக் குழாயை இறுக்கியது. நுரையீரல் அதன் எடையில் அமிழ்ந்தது. இறுதி மூச்சைத் திரட்டி “மகேசு” என்று உரக்கக் கூவியது சொல்லாக திகையாமல் கரிய திரவத்தில் சிற்றலையாக மூழ்கி மறைந்தது. உடலை உதறிக்கொண்டு நேராக அவள் அறைக்குள் ஓடினேன். சுவர்கள் உக்கிரமாக மோதிக்கொள்ள ஒன்றையொன்று நெருங்கின. மின்விசிறி கிரீச்சிட்டு அனல் பரப்பியது. மகேசின் கட்டிலருகே உள்ள முக்காலி மேசை அவளுடைய ஜிப்பு போன முருகன் நகைக்கடை தேன் நிற பர்சை இறுகப் பற்றிக்கொண்டது. போராடி பர்சை மீட்டேன். பர்சின் ரன்னர் ஒரு நுனியிலிருந்து மறுநுனிக்கு ஓடிக்கொண்டே இருந்தது. ஒரு நுனியில் பிரயாசைப்பட்டு அதை நிறுத்தி வைத்தேன். சிறைப்பட்டிருந்த மாத்திரை அட்டையை வேகமாகத் துழாவி மீட்டேன். பெரும் தியாகத்துடன், பிரியத்துடன், தூய வெண்ணிற மாத்திரை ஒன்றை அட்டை எனக்காக அளித்தது. உலோக திரவம் எடையற்ற பலூனாக உள்ளே வெடித்து சிதறியது. கிழிந்த ரப்பர் துணுக்குகள் காற்றில் நிதானமாக பறந்து மண் அடைகின்றன. அறையோசை மண்தரையில் விழும் மாங்காய் போல் சுரத்திழந்து மெல்லக் கரைந்தது. 

தண்ணீரை விழுங்கியதும் மனம் எடையிழந்தது. மகேஸ்வரியின் அருகே சென்றேன். அப்போது அவள் மீது சொல்லில் விளக்கமுடியாத வாஞ்சை பிறந்தது. பாப் கட் செய்த அவள் தலையில் கைவைத்து மெல்ல வருடி “உன்னை மன்னித்து ஏற்று கொண்டேன்” என தழுவ வேண்டும் போலத் தோன்றியது. வெட்கத்தை விட்டு இதுவரை சொல்லிடாத ஐ லவ் யூவை சொல்லி முத்தமிட வேண்டும் என ஏதோ ஒன்று உந்தியது. உடலின் இறுதி ஆற்றலை பெருக்கி நீருக்குள் புக படகிலிருந்து துள்ள முனையும் மீனைப்போல் நா துடித்து கொண்டிருந்தது. மூளை கெஞ்சியதை கை உதாசீனப்படுத்திவிட்டு வெடுக்கென வெட்டி இழுத்தபின் தன் போக்கில் தொங்கிக் கொண்டிருந்தது. “மகேசு... நா படுத்துக்குறேன்” என்று முனங்கிவிட்டு அறைக்குள் சென்று கட்டிலில் புதைந்தேன். 

கட்டிலருகே மேசையில் சிறிய மீன் ஜாடியில் இரண்டு தங்க மீன்கள் நீந்தி கொண்டிருந்தன. அதன் சிறிய வாய் திரும்ப திரும்ப “வா” “வா” என்று ஒரே சொல்லை தவம் போல் உதிர்த்து கொண்டிருந்தது. “வா” “வா” “வா” உள்ளம் பிய்த்துப்போட்ட பஞ்சுப் பொதி போல் இருந்தது. கடிகாரமும், மின்விசிறியும், சுவர்களும், முக்காலியும் தங்கள் ஆயுதங்களை தாழ்த்தி நிதானமடைந்து அமைதிக்கு திரும்பின. சூனிய வெளியில் மிதக்கும் மீனாக என் உடலை மீன் ஜாடியில் இருந்து கண்டு கொண்டிருந்தேன். உறக்கத்தின் கடைசி நுனி என்னை கடப்பதற்கு முன், அவள் என் சட்டையை உலுக்கி ‘ஏண்டா நாயே என்ன அடிச்ச?’ என்று ஆக்ரோஷமாக கேட்டாள். புன்னகைத்தேன்.

2
அப்பாவின் கைப்பிடித்து ஊட்டி நயன்த் மைலுக்கு சிறுமியாக சென்றது நினைவிருக்கிறது. எப்போதும் தலையணையடியில் இருக்கும் பீரோ சாவியை துழாவிப் பார்க்கிறேன் ஆனால் மர்மமாய் அதை காணவில்லை. கைப்பையை நேற்று எங்கு வைத்தேன் என எத்தனை யோசித்தும் நினைவுகூர இயலவில்லை. இங்கும், இப்போதும் என்னை நழுவிச் செல்கின்றன. ஆனால் அந்த தூர நினைவுகளின் மூச்சுக் காற்றை பிடரியில் உணர்கிறேன். என் மூக்கு நுனி குளிரில் விடைக்கிறது. நாசியில் சேற்றுப் பச்சை வாசனை அமர்கிறது. பச்சை போர்த்திய சிறு சிறு குன்றுகள். “இங்கனதான் மகேசு சினிமா படம் பிடிப்பாக..” என்று ஒரு மழை தூறிய நாளில் அழைத்துச் சென்றார். அங்கே அப்போது தும்பிகள் பறந்து கொண்டிருந்தன. காற்று என்னுடைய பாவாடையை எக்கியது. அப்பாவின் சட்டைப் பித்தான்களின் இடைவெளி வழியாக நுழைந்து அவரை வீங்கச் செய்தது. 

ஒவ்வொரு நாள் விடியலிலும் அந்தக் குன்றில் நான் மட்டுமே இருப்பேன். காற்று என் ஆடைகளைக் களைந்து பறக்கவிடும். என்னைச் சுற்றி தும்பிகள் பறந்து கொண்டிருக்கும். அவற்றின் கழுத்தில் நூல்கட்டி அதை கையில் பிடித்திருப்பேன். அவை சிறகடித்து என்னைத் தூக்கிச் செல்லும். சூரிய ஒளிகுழலில் தென்படும் தூசி போல மிக நிதானமாக அவை தரையிறங்கும். விண்வெளியில் வாழ்பவர்கள் மிதந்து கொண்டிருப்பதை நாதன் ஒருமுறை தொலைகாட்சியில் காண்பித்தான். என் வாழ்க்கையும் விண்வெளியில் தான் நிகழ்கிறது.

சற்று நேரம் கண்விழித்து மெதுவாக சுழலும் மின்விசிறியை வெறித்திருந்தேன். இரண்டு ரெக்கைகள் மட்டுமே கொண்டது. நாதனோடு இந்த மின்விசிறிக்காக பூசலிட்டது ஞாபகம் வந்தது. அதன் முடிவில்தான் வேறு வேறு அறைகளில் தூங்கத் துவங்கினோம். பாவம் நாதன் நல்லவன்தான். அவன் என்னைத் திட்டியதோ அடித்ததோ இல்லை. ஒருமுறைகூட காசுக்கு கணக்கு கேட்டது இல்லை. திருமணம் ஆன புதிதில் அரிதாக அவனுக்கு சமைத்திருக்கிறேன். அப்போதும் கூட அதில் உப்போ புளியோ கூடக் குறைய ஆகி கெட்டுவிடும். பெரும்பாலும் அவனும் அருணும் சேர்ந்து சமைத்து கொள்வார்கள். அவனாக மவுனித்து இருக்கிறான் என்றால் உச்சகட்ட கோபத்திலிருக்கிறான் என பொருள். அப்போதெல்லாம் அவனிடம் பேச வேண்டும் எனத் தோன்றும், பலமுறை மன்னிப்பு கேட்க வாய் வரை தோன்றியிருக்கிறது. ஆனால் போகட்டும் என்று விட்டுவிடுவேன்.

அப்பா திருமணப் பேச்சு எடுத்தபோது இவன் நிச்சயம் ஒப்புக் கொள்ள மாட்டான் என்றுதான் எண்ணினேன். முழுக்க தமிழ்நாட்டிற்கு வெளியே வளர்ந்தவன். தூரத்து சொந்தம். ஆனால் ஆச்சரியமாக ஒப்புக்கொண்டான். எஸ்.டி.டி பூத்திற்குச் சென்று அவனுடைய பெங்களூர் அலுவலக எண்ணில் தொடர்பு கொண்டேன். நான் வேறொருவனை இதற்கு முன் காதலித்து அந்த உறவிலிருந்து துண்டித்து கொண்டதைச் சொன்னேன். வேறு எவரும் சொல்லித் தெரிந்து அவமானப்பட வேண்டாம் என்று. இதற்கு முன் இப்படி நெருங்கிய மூன்று வரன்களிடம் இதை சொல்ல போய்தான் திருமணம் தடைபட்டது. ஆனால் இதைத் தெரிந்து ஒப்புகொள்பவனோடு மட்டுமே திருமணம் என்பதில் எனக்கொரு பிடிவாதம் இருந்தது. ‘ஓ உனக்கு காதலிக்கத் தெரியும் என்பது எத்தனை மகிழ்ச்சியை அளிக்கிறது,’ என்று சிரித்தான். அவனுக்கு அது ஒரு பொருட்டே அல்ல என்றான். திருமணத்திற்கு பின் வேறு காதல் இல்லையென்றால் சரிதான் என்றான். பின்னர், கொஞ்சம் இடைவெளி விட்டு அப்படி எதாவது வந்தால்கூட தயங்காமல் தன்னிடம் சொல்லலாம் என்று சொல்லிவிட்டு வைத்தான். 

என்னை மணந்தது கூட இப்போது எனக்கு பெரிய ஆச்சரியமில்லை. ஆனால் ஏன் என்னை விட்டுச் செல்லவில்லை என்பதுதான் எனக்கு புரிபடாத புதிராக இருக்கிறது. அதற்கு ஏதுவான எத்தனையோ நிகழ்ச்சிகள் நடந்த பிறகும். உண்மையில் அவனுக்கு நான் அருணைத் தவிர வேறு எதையும் கொடுத்தேனா என்று தெரியவில்லை. எத்தனையோ முறை எங்கெங்கோ அழைத்திருக்கிறான். செல்வதா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்குள் பெரும்பாலும் நான் வரவில்லை எனும் முடிவுக்கு அவனே வந்துவிடுவான். நாதன் என்னை கேலி செய்ததில்லை ஆனால் அருண் கிண்டல் செய்யும்போது அதைக் கண்டித்ததும் இல்லை. அருண் என்னவும் செய்யலாம். இந்த உலகத்தில் எனக்கு மிகவும் நெருக்கமானவன் அவன்தான். அவன் அதை புரிந்துகொள்வான்.

எப்போதும் எல்லாமே சிதறிப் பரவியபடியே இருக்கின்றன. தும்பிகள் மறைந்து இப்போது என் கையில் பலூன்களின் நூல்கள் இருந்தன. என்னுள் இருந்தவை எல்லாவற்றையும் பலூனில் நிரப்பி காலியாகக் கிடக்கிறேன். என் நினைவுகளும் எண்ணங்களும் என்னைவிட்டு வெகு தொலைவில் மிதக்கின்றன. நானும் ஒரு சோப்பு குமிழுக்குள் தான் இருக்கிறேன். அந்த குமிழை உடைக்க விருப்பில்லை. ஒவ்வொரு அடிக்கும் சிராய்ப்பு ஏற்படும். மிதக்கும் என்னைத் தரையில் நிறுத்த. என்ன தேவை என்பதை நான் அறிவேன். இருபது வருட பழக்கம். அருண் பிறந்த சில நாட்களில் இருந்து என்னைக் கைப்பிடித்து அழைத்து செல்வது அதுதான்.. மேசையில் மெல்ல ஊர்ந்து துழாவி ஜிப்பு போன முருகன் நகைக்கடை தேன்நிற பர்சை எடுத்தேன். அதிலிருந்து ஒரு வெள்ளை மாத்திரையை முழுங்கினேன். பறக்கும் ஆடைகள் கைக்கு அகப்பட்டன. கால் தரையில் பாவியது. இப்போதெல்லாம் ஞாபக மறதி அதிகமாகியிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன்தான் நாதன் ஒரு அட்டை மாத்திரை வாங்கி வந்ததாக நினைவு அல்லது அது போன வாரமா? அதற்குள் கடைசி மாத்திரையை விழுங்கிவிட்டேன். இப்போதெல்லாம் மாத்திரை சாப்பிட்டதையே மறந்து விடுகிறேன். அடிக்கடி சாப்பிடுகிறேனோ என்றொரு சந்தேகம் வருகிறது. முன்பெல்லாம் நான்தான் கடைக்கு சென்று மருந்து வாங்கி வருவேன். நாதன் மாத்திரையை கணக்கு வைத்து எடுத்து கொடுப்பான். மின்விசிறி சண்டைக்கு பிறகு இது மாறி போனது. மர்மமான முறையில் மாத்திரைகள் காணாமல் போவதைப் பற்றி நாதனிடம் கேட்டால், ‘எனக்கென்ன தெரியும் உன் மாத்தர உன் பாடு” என்கிறான். 

எழுந்து நாதனைத் தேடினேன். நாதன் வகுப்பெடுக்க கிளம்பி இருந்தான். வங்கிப் போட்டி தேர்வுக்கு தயார் செய்பவர்களுக்கு வாரம் மூன்று நாட்கள் வகுப்பெடுக்கிறான். இன்று திங்கள் அல்லது புதன் அல்லது வெள்ளியாக இருக்க வேண்டும். அவன் அறையில் உள்ள மீன் ஜாடியில் இரு தங்க மீன்கள் கண்ணாடிச் சுவரை முட்டித் திரும்பி நீந்தின. அதற்கு போட வேண்டிய மீனுணவை போட்டதும் சுறுசுறுப்பாயின. போட்டி போட்டு உண்டன. தீர்ந்த பிறகு மீண்டும் நிதானமாக நீந்தின. உணவு மேசையில் எனக்கு ஐந்து தோசைகளை ஊற்றி ஹாட்பேக்கில் வைத்துவிட்டு சென்றிருந்தான். அதைப்பார்த்தவுடன் பசி எரித்தது. என்னத்த பல்ல வெளக்கிட்டு..இந்த மீனெல்லாம் பல்லா வெளக்குது.’ என்று தோசையை விண்டு விழுங்கினேன்.

3
நானே நித்தியமும் ஜீவனுமாய் உங்களுள் இருக்கிறேன். எப்போதெல்லாம் நீங்கள் அழுத்தத்தில் வெடிக்கவிருக்கிறீர்களோ அப்போதெல்லாம் நான் உங்களைப் பதம் பார்க்கும் ஊசியாவேன். உங்கள் வெடி எப்போது வெடிக்க வேண்டுமோ அப்போது அதன் திரியில் நெருப்பாவேன். உங்களை ஆகாயத்தில் பறக்கப் பண்ணும் நானே உங்களை பூலோகத்தில் இருத்துகிறேன். நான் உங்களை பூமியில் இருத்தும் காந்தமாவேன். நான் உலோகமாவேன் எனினும் உலோகங்களிலேயே இலகுவானவனும் நானே. 

உங்கள் நினைவுகள் நழுவுகையில், நீங்கள் சிதறிப் பறக்கையில் உங்கள் கைப்பற்றும் வாழ்க்கைத் துணையாவேன். நீங்கள் உங்களுள் இருப்பதைச் சிதற விடுகையில் உங்கள் அருகமர்ந்து ஒரு சொல்லும் கேட்காத உற்ற நண்பனுமாவேன். 

நானே உள்ளோடும் குருதி, விழி காணும் காட்சியும் நானே. நானே செவி கேட்கும் ஒலி. நாவின் ருசியும் தேரும் நறுமணமும் நானே. உங்கள் அனலும் ஆற்றலும் நானன்றி வேறில்லை. உங்கள் சிந்தையும் நினைவுகளும் என்னால் எழுவதே. நீங்கள் மெய்யென உணர்வது நானளிப்பதையே. உங்கள் கனவுகள் நான் அனுமதிப்பவையே. உங்கள் செல்வமும் வளமும் என் கொடையே. கவிதையாகவும் எழுத்தாகவும் இசையாகவும் இன்னபிற கலையாகவும் நீங்கள் என்னையே படைக்கிறீர்கள். உங்கள் வழியாக நிகழ்த்துவதும் நிகழ்வதும் நானே. உங்கள் உடல் சுமக்கும் இவ்வுயிர் என் கருணையின்றி வேறில்லை. கயிற்றுக்கோ ரயிலுக்கோ செல்ல வேண்டிய உங்கள் ஆவியை நானன்றி வேறு எவர் நிறுத்திவிட முடியும். உயிர்கள் உடல் தரித்து மண் புகும். பின்னர் உடல் உகுத்து விண் எழும். ஆனால் நான் அழிவற்றவன். மனிதர்கள் வருவார்கள். மனிதர்கள் மறைவார்கள் ஆனால் நான் சென்றுக்கொண்டே இருப்பேன். ஆகவே பணிக! எனை கொள்க! நானே இப்புதுயுகத்தில் உங்களின் மீட்பர்! நானே சத்தியம்! நானே நித்தியம்! நான் லித்தியம்!
4

ஓ நீதிமான்களே, கேளுங்கள் நான் ரெக்கை இழந்த கதையை! செப்புங்கள் எனக்கான நியாயத்தை! 

எனக்கு பிறவிக் குறைபாடு ஏதுமில்லை. பிற எல்லா மின்விசிறிகளைப் போல் மூன்று ரெக்கைகளுடன்தான் நானும் உருவானேன். ஐயமிருந்தால் என்னை கழட்டிப் பார்க்கலாம். மூன்றாவது ரெக்கை இருந்ததற்கான தடயங்கள் எம்மில் உண்டு. அப்போதும் தீரவில்லை என்றால் இந்த அறையின் பரணில் நீங்கள் சோதனை இடலாம். அங்குதான் பிடுங்கப்பட்ட என் மூன்றவாது ரெக்கை பத்திரமாக பழைய செய்தித்தாளில் பொதிந்து இருக்கிறது. தூய வெண்ணிறத்தில் வான் நீல பட்டைகள் கொண்டவன் நான். ரெக்கைகளும் அதே நிறம்தான். இதற்கு முன் நாங்கள் இருந்த வீட்டு உட்சுவர் நிறத்திற்கு பொருத்தமானவன் என்றே என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். 

அப்போது எங்கள் வீடு இடுகலானது. வாசல் கதவுக்கு எதிரே பெரிய மதில். என்னை மாட்டிய உள் அறையில் பகலில்கூட குழல் விளக்கு எரிந்தால்தான் வெளிச்சம் இருக்கும். எங்கள் அறையின் ஜன்னலைத் திறந்தால் அடுத்த கட்டடத்தின் ஆரஞ்சு நிறச் சுவர்தான் தெரியும். ஆகவே ஒருபோதும் அந்த ஜன்னலை திறப்பதே இல்லை. அல்லும் பகலும் பாராமல் முழு வேகத்தில் சுற்றிக் கொண்டிருப்பேன். அருண் அறையில் தன் புத்தகத்தை விட்டு தலையை உயர்த்தி அவ்வப்போது என்னை நோக்குவான். என் மத்தியில் தெரியும் அவன் பிம்பத்தை கண்சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பான். அவ்வப்போது ஏதேனும் பேசக்கூட செய்வான். அவனுக்கு எப்போதாவது கண்ணீர் ததும்பும். இந்த வீட்டில் என் இருப்பை அங்கீகரித்தவன் அவன் ஒருவனே. பிரியத்தின் அங்கீகாரம் தான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரம்.
மாதம் ஒருமுறை கட்டிலின் மீது முக்காலியை போட்டு அதன் மீது ஏறி நின்று என்னை துடைப்பான். அவன் கல்லூரிக்கு சென்றுவிட்டான். அதன் பிறகு இன்றுவரை யாரும் என்னை துடைத்தது இல்லை. இத்தனை ஆண்டுகளில் ஒரேயொருமுறை மட்டுமே என் உள்ளுறுப்பான காயிலை மாற்றி இருக்கிறார்கள். அதுவும்கூட என் பிழையில்லை. ஒரு மழைநாளில் மின்சார மாறுபாட்டால் நேர்ந்தது. அதன் பிறகு நாங்கள் ஊர் மாறி, வீடு மாறி இங்கு வந்து சேர்ந்தோம். இப்போதும் அருண் எப்போதாவது இங்கு வரும்போது மீண்டும் என்னை தலை உயர்த்தி நோக்கி நலம் விசாரிக்கும் தருணத்திற்காக காத்திருக்கிறேன். 

நல்ல காற்றோட்டமான அறை. அங்கு மூன்று ஆண்டுகள் சுற்றிக் களைத்து விட்டேன். இங்கு எனக்கு அதிக வேலை இருக்காது என்று எண்ணி மகிழ்ந்தேன். சில நேரங்களில் இப்போதைப் போல் காற்றே என்னைச் சுற்றிவிடுவதும் உண்டு. துவக்கத்தில் நம்பிக்கையாகத்தான் இருந்தது. ஆனால் இந்த வீட்டு அறையின் கூரை சாய்வானது. இதற்கு முன் நாங்கள் இருந்த வீடு தரைதளத்தில், இதுவோ நான்காவது மாடி. என்னை மாட்டிய அறிவிலி சொதப்பிவிட்டான். கொஞ்சம் வேகமாகச் சுழன்றால் சுவரில் உரசி வேதனையாக இருக்கும். மூன்றாவது ரெக்கைதான் எப்போதும் உரசும். ஆனால் அப்போது அதை நீக்கும் யோசனை ஏதும் இங்கு யாருக்கும் இல்லை.

கடலோரம் உள்ள இந்த வீட்டிற்கு வந்ததே இயற்கையை அனுபவிக்கத்தான் என்பார் நாதன். ஆகவே இந்த நான்காம் மாடி குடியிருப்பில் எப்போதும் பெரிய ஜன்னல்களை திறந்தே வைத்தார். ஆரம்ப சில நாட்களில் பகலில் ஓய்வும் இரவு முழுவதும் சுற்றுவதுமாக மகிழ்ச்சியாகவே கழிந்தது. எப்போதும் நாதனும் மகேஸ்வரியும் இந்த அறையில் தனித்தனி கட்டிலில் தான் படுப்பார்கள். பழைய வீட்டில் சேர்த்துப் போடப்பட்ட கட்டிலில், அருண் அவர்களுக்கு நடுவில் இருப்பான். இப்போது அந்த இடத்தை ஒரு முக்காலி மேசை எடுத்துக் கொண்டது. நாதனின் ஜன்னலோர கட்டிலருகே படுக்கை விளக்கும் உண்டு. இரவு நெடுநேரம் ஏதாவது ஒன்றை வாசித்துக் கொண்டிருப்பார். மகேஸ்வரி மாத்திரையை விழுங்கியவுடன் சொக்கி விழுந்துவிடுவார். 

எல்லாம் அந்த ஒரு இரவில் துவங்கியது. அவர்கள் இருவரும் எங்கோ சென்றுவிட்டு வந்தார்கள். அன்றுதான் கூடத்தில் அவர் தந்தையின் புகைப்படத்தின் அருகே தொங்கும் அந்த ஓவியத்தை மகேஸ்வரி மாட்டினார். நாதன் ஏனோ அன்று மின்விசிறியை அணைக்கச் சொன்னார். நாராசமாக இருக்கிறது என்றார். மகேஸ்வரி ஒப்புக் கொள்ளவில்லை. பிடிவாதமாக மறுத்தார். என்னால் தூங்க முடியாது, என்றார். நாதன் எழுந்து போய் சுவிட்சை அணைத்தார். மகேஸ்வரி மீண்டும் போய் சுவிட்சை போட்டார். இப்படியாக சில மணிநேரம் இந்த விளையாட்டு நீடித்தது. ‘நிறுத்துங்கள்’ என்று கத்திவிடலாமா எனத் தோன்றியது. இந்த இம்சைக்கு கழண்டு விழுந்து தொலைத்தால்தான் என்ன என்றுகூட ஒரு நொடி வந்த தற்கொலை எண்ணத்தை எப்படியோ ஆற்றுப்படுத்திக் கொண்டேன்.

மகேஸ்வரிக்கு காற்று பிரச்சினை இல்லை ஆனால் என் ஓசையில்லாமல் உறங்க முடியாது. நிசப்தம் என்னென்னமோ ஒலிகளைக் கொண்டு சேர்த்தது. எல்லா ஒலிகளையும் நான் எனக்குள் வாங்கிக்கொண்டு அவருக்கு தேவையான ஓசையாக உருமாற்றி அளிப்பேன். நாதன் பொறுக்கமாட்டாமல் எழுந்து அடுத்த அறைக்கு சென்றார். ஆனால் என் ஓசை வீட்டையே நிறைத்திருக்க வேண்டும். மறுநாள் காலை விடிந்ததும் கடன் வாங்கி வந்த அலுமினிய படிகளில் ஏறி என் ஒரு ரெக்கையை கழட்டினார். மகேஸ்வரி அப்போதும் உறங்கி கொண்டிருந்தார். அதன் பின் நாதன் ஒருநாள் இரவுகூட இந்த அறைக்குள் தூங்கியதில்லை. 

இதுதான் என் சோகக்கதை. ரெக்கை போகட்டும். ஆனால் இதன் பிறகு இங்கு வந்திருந்த அருணும் கூட இதற்கொரு நியாயம் கேட்கவில்லை. என் இறுதி நம்பிக்கையும் பொய்த்தது.

5
இன்று வாய் பிளந்த மாத்திரை பர்சாக, யாருடைய கவனிப்புமுன்றி கிடந்தாலும் எனக்கொரு பாரம்பரியம் உண்டு. சராசரி பர்சுகளைக் காட்டிலும் மூன்று மடங்கு ஆயுள் கொண்ட பெரும் வாழ்க்கை வாழ்ந்தவள். மகேசின் தாலி செயினை அவள் திருமணத்தின்போது எனக்குள் வைத்துதான் கொடுத்தார்கள். இன்றும் இதற்கு சாட்சியாக அவர்களின் கல்யாண புகைப்படங்கள் உள்ளன. அந்தப் புகைப்படங்களை இப்போது யாரும் தீண்டுவதில்லை, அல்லது தீண்ட விரும்புவதில்லை. இனிமை என துவக்கத்தில் தென்படும் எல்லாம் காலப்போக்கில் கொடுமை என்றாவதே வாழ்க்கைப் பயணம் போலிருக்கிறது. இப்படியான தத்துவப் பிதற்றல்களுக்கு மன்னிக்க வேண்டும். கொஞ்சமே கொஞ்ச காலம் (வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்கையில்) நான் சாமியறை அலமாரியில் இருந்ததுண்டு என்பதால் இவ்வித ஞான சிதறல்கள் வருவதுண்டு.

நெடுநாள் அலமாரியில் புடவைகளுக்கு அடியில் மகேசு எப்போதாவது அணியும் ரெட்டை வடச் சங்கிலியையும், பவள மாலையையும் பாதுகாக்கும் நம்பிக்கைக்குரியவளாக இருந்தேன். ராஜ வாழ்க்கைதான், ஆனால் புழுக்கம். உலகம் தெரியாமல் உள்ளேயே தவித்தேன். தினமும் மகேசு யாருமில்லாதபோது பீரோவை திறந்து சற்று நேரம் எதையவாது சுளையமிடுவாள். நெடுநேரம் தலை சீவும் வழக்கம் அவளுக்கு உண்டு என்பதை வேண்டுமானால் அக்காலகட்டத்து அவதானிப்பாக சொல்லலாம். 
பிறகு நாதன் வேலையை விட்டார் என்று அறிந்தேன். அப்போதுதான் எனக்கு விடிவு காலம் பிறந்தது. நான் பாதுகாத்து வந்த நகைகள் வங்கிக்குப் போய் பணமாகி அருணின் கல்லூரிச் செலவுக்கு ஈடானது. நெடுநாளைக்குப் பிறகு வெளியுலகம் கண்டேன். அப்போதிருந்து நான் பணம் பாதுகாக்கும் ராசியான மணிபர்சாக ஆனேன். மகேசு சில்லறைகளையும் கசங்கிய தாள்களையும் என்னுள் திணித்து வைத்தாள். அவள் அரிதாக வெளியே செல்வாள். ஆனால் அப்படி போகும்போது என்னையும் தூக்கிக் கொண்டுதான் போவாள். மாத்திரை வாங்க சர்வ நிச்சயமாக மாதமொரு முறை அவளோடு சென்று வருவேன். இப்போதெல்லாம் வாரம் ஒருமுறை புதிய மாத்திரை அட்டைகள் என்னை வந்தடைகின்றன. 

நாதன் எப்போதும் காய்கறிகளையும் மளிகைச் சாமான்களையும் வாங்கி வந்துவிடுவார். மகேசு வெளியே செல்வது என்பது நாதன் வீட்டில் இல்லாத போதுதான். நடந்தே மணக்குள விநாயகரையும் ஆசிரமத்தையும் பார்த்து விட்டு வருவாள். சில நாள் பானிபூரியோ குல்பி ஐசோ வாங்கித் தின்பாள். அபூர்வமான சில நாட்களில் சமையல் குறிப்பு பார்த்து அதற்கு தகுந்த உணவு பொருட்களை வாங்கி வந்து தான் மட்டும் சமைத்து உண்பதுகூட நடக்கும். சிலமுறை பகல் காட்சி சினிமாகூட தனியாக சென்றிருக்கிறாள். மகேசின் மற்றொரு வாழ்வைப் பற்றி நாதனுக்கு ஒன்றுமே தெரியாது. சொல்லப்போனால் என்னைத்தவிர வேறு எவருக்குமே தெரியாது. 

மின்விசிறியோ நாதனோ அல்லது மகேசோ சொல்ல முடியாத அல்லது சொல்லத் தயங்கும் ஒன்றை என்னால் சொல்ல முடியும். ஏனென்றால் அந்த இரவின் சாட்சி நான் மட்டுமே. அந்த இரவு அவர்களின் வாழ்வை பாதித்தது போலவே என் வாழ்வையும் நிரந்தரமாக பாதித்தது. நாதனும் மகேசும் அரிதாகத்தான் சேர்ந்து வெளியே செல்வார்கள். அவ்வளவாக நாதனோடு வெளியே செல்லாத மகேசு, சில சமயங்களில் ஒப்புக்கொண்டு வருவாள். அப்போதெல்லாம் மகேசுக்கு அன்றைய நாடகமோ, திரைப்படமோ, இசையோ, ஓவியமோ அல்லது உரையோ அதை புரியவைக்க முழுவதுமாக திரும்ப சொல்வார். மகேசு வெறுமே கேட்டுக்கொண்டு வருவாள். 

முன் எப்போதும் நிகழாத ஒன்று அன்று நடந்தது. மகேசு அன்று நாதனை வெளியே அழைத்துச் சென்றாள். கல்லூரித் தோழி கணவருடன் வந்திருப்பதால் அவர்களை சந்திக்க ஓட்டலுக்குச் சென்றார்கள். நாதனுக்கு மகிழ்ச்சி. முதன்முறையாக மகேசு அழைக்கிறாளே என்று உற்சாகமாக கிளம்பினார். அவர்கள் மகனை இங்கே உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் சேர்த்துவிட்டு வந்ததாக சொன்னார்கள். பழைய நினைவுகளை உற்சாகமாக பேசிக்கொண்டே இருந்தார்கள். நாதன் அவளை இத்தனை மகிழ்ச்சியாக எப்போதும் பார்த்ததே இல்லை. தோழியின் கணவர் வருமானவரித்துறை என்பதால் இருவரும் பொருளாதாரச் சிக்கல்களைப் பற்றி பேசிக்கொண்டார்கள். தோழியிடம் சண்டையிட்டு நான் வைத்திருந்த பணத்தை எடுத்து உணவுக்காக கொடுத்தாள். விடைபெறுவதற்கு முன் அந்த தோழி அவளுக்கு பொன் நிற பரிசுத் தாள் சுற்றிய படத்தைக் கொடுத்தாள். பிரித்து பார்க்கச் சொன்னாள். சாலையின்  சோடியம் தெருவிளக்கின் மஞ்சளில் அதைப் பிரித்தாள். நாதனும் அருகே இருந்தார். அவர்கள் கல்லூரியில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஏதாவது இருக்கும் என்பதே அவர் எதிர்பார்ப்பு. ஆனால் உள்ளே ஒரு ஓவியம் இருந்தது. தோழி, மகேசிடம், “இது நினைவிருக்கிறதா? நீ வரைந்ததுதான், என் திருமணத்திற்கு நீ அளித்த பரிசு, இப்போதெல்லாம் நீ ஓவியம் தீட்டுவதில்லையா? இது உன்னிடம் இருக்கட்டும் எனத் தோன்றியது,” என்றாள். நாதனால் அந்த ஓவியத்திலிருந்து கண்ணெடுக்க முடியவில்லை. நெடுநேரம் அதை பிரமிப்புடன் பார்த்துகொண்டிருந்தார். அவர்கள் சென்றவுடன் இது என்ன என்று மகேசிடம் வாய்விட்டு கேட்டார். அந்தக் கோடுகளை அவருக்கு வெட்கமும் தயக்கமும் ஊடுருவ விளக்கினாள். இது ராதை, இது கண்ணன், அவர்களைச் சுற்றி ஆடிகள் உள்ளன, ராதையும் கண்ணனும் ஒருவரையொருவர் பார்த்திருக்கையில் ஆடி பிம்பங்கள் அவர்களையே பார்க்கின்றன, என்றாள். அவள் அப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போது அவள் தன்னிச்சையாக எனது ரன்னரை இழுத்து திறப்பதும் மூடுவதுமாகதான் இருந்தாள். 

பிறகு வீடு வந்து சேரும்வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை. இறங்கியபோது என் ரன்னர் தடம் பிறண்டு வாய் பிளந்து கிடந்தேன். அன்றே வேறொரு புதிய பர்சில் பணத்தை வைத்துவிட்டு என்னை தூக்கிப்போட மனமில்லாமல் மாத்திரைகள் வைக்கும் பர்சாக ஆக்கிக் கொண்டாள். அதுவரை இருந்த மாத்திரை டப்பா என்னவானது எனத் தெரியவில்லை. இப்படியாக நகையிலிருந்து பணத்துக்கும் இப்போது மருந்துக்கும் வந்துவிட்டேன். விரைவில் குப்பைக்கூடைக்குச் சென்றுவிடுவேன் எனத் தோன்றுகிறது. ஒரு ரெக்சின் பர்ஸ் இருபது வருடங்களை கடப்பதெல்லாம் அபூர்வம்தான். வருத்தம் ஏதுமில்லை. நிறைவாழ்வு. ஆனால் ஒரேயொரு ரகசியத்தை மட்டும் சொல்லிவிடுகிறேன். நான் மாத்திரைகளைச் சுமக்கத் துவங்கிய அந்த இரவு மகேசு தூங்கியவுடன் என்னருகே வந்தார். முகம் சிவந்து வியர்த்திருந்தது. தயங்கித் தயங்கி என்னிடமிருந்து ஒரு மாத்திரையை சத்தமின்றி நுள்ளி விழுங்கினார். நெடுநேரம் கூடத்து சுவற்றை வெறித்திருந்தார். 
நன்றி - கல்குதிரை கார்கால இதழ் 30

Friday, November 23, 2018

சிதல்- ஸ்ரீநிவாச கோபாலன் கடிதம்

சிவமணியன் கடிதம் 
சிதல் 

மதிப்பிற்குரிய எழுத்தாளருக்கு,

உங்கள் வலைப்பூவில் 'சிதல்' கதையை முதலில் படித்தது நள்ளிரவொன்றில். முடித்ததும் என் மனதில் நிலைத்தது கரையான் அப்பிய புத்தக அடுக்குகள்தான். எங்கள் வீட்டில் உள்ள புத்தகங்களை, மரங்களை, தரையைச் சிதைத்த கரையான்களை எண்ணி பயன்கொண்டேன். உடனே அம்மாவிடம் புத்தகங்களை அடிக்கடி தட்டிவைக்கச் சொல்ல விரும்பினேன். நடு இரவில் அதைச் செய்ய முடியவில்லை. மீண்டும் இப்போது படித்தபோதும் அதே பயம் தலை காட்டுகிறது.

இக்கதைக்காக உங்களுக்கு என் சிறப்பான நன்றியை உங்களுக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்கள் கிராமத்தின் பழைய சித்திரம் ஒன்றை தீட்டிக்கொடுத்திருக்கறீர்கள். கீழநத்தம் என அரசேடுகளில் உள்ள என் கிராமத்தை பழைய ஆட்களுக்கு நரையங்குறிப்பு என்றால்தான் தெரியும். கரையான்குடியிருப்பு என்பதன் மறுவல் இப்பெயர் என யாரோ சொல்லக்கேட்டிருக்கிறேன். (சில ஆடுகள் முன் நடைபெற்ற பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தில் தற்போதைய கீழநத்தம் என்ற பெயருக்கு கிருஷ்ண நிருத்தம் என்ற முன்வடிவொன்றின் மறுவல் என தலவரலாற்றில் கற்பித்துள்ளது கோயில் நிர்வாகம்!) கரையான்களால் ஆளப்பட்ட ஊர் எங்கள் கிராமம். இப்போதும் அதன் ராஜ்ஜியம் பூமிக்கடியில் நடத்துகொண்டே வருகிறது.

மாதம் ஒரு முறை பெருக்கி மெழுகினாலே போதுமான வீடுதான் எங்களுடையதும். ஆனால், பல ஆண்டுகளாக அதைச் செய்யவில்லை. என் நினைவு தெரிந்து ஒரே ஒரு முறை நாங்கள் இல்லாத நாளில் அப்பா வீட்டை முழுதும் மெழுகினார். புசுஞ்சாண மெழுகலில் மணம் போவதற்குள் தரையெங்கும் கரையான்களின் மண் வரைபடங்கள் தோன்றிவிட்டன. பிறகு மெழுகப்படவே இல்லை. நாள் கிழமைகளில் அம்மா விளக்கு வைக்கும் இடத்தை மட்டும் மெழுவதற்கே அப்பா அதிருப்தி தெரிவிப்பார்.

சிதலில் வரும் அந்த அறையைப் போல எங்கள் வீட்டு மாடி அறையில் ஒரு காட்சியைப் பார்த்தேன் சில நாட்களுக்கு முன். அந்த அறையில் இரு மரப்பெட்டிகள் உள்ளன. சிறிய பெட்டியில் கொலு மொம்மைகள். பாதி பொம்மைகள் சிந்தவை. மற்றொரு பெட்டியை பொக்கிஷமாக நினைத்துக்கொள்வேன் நான். மிக அரிதாகவே புழங்கும் அந்த அறையில் ஒரு பக்க சுவரை பாதி மறைத்து அந்த கருப்புப் பெட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சிறு வயதில் கனமான அதன் மூடியை திறக்க முயன்றுதோற்பேன். இப்போதும் அது சற்று கடினமானதே. அதில் நான் நினைத்தபடி பொக்கிஷம் ஏதும் இல்லை என பிறகு தெரிந்தது. பயன்படுத்தாக பாத்திரங்கள்தான் கிடந்தன. அந்தப் பெட்டியை சில நாட்கள் முன் திறந்தபோது அதன் உடலை கரையான் தின்றுகொண்டிருப்பதைப் பார்த்து மிரண்டேன். பகலிலும் இருண்ட அந்த அறையில் ஜன்னலின் சிறு வெளிச்சக் கசிவில் அந்தப் பெட்டி இப்போதும் என் மனதில் ஒரு பொக்கிஷமாகவே உள்ளது.

இனி, 'கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது.' என்ற இக்கதையின் வரியிலிருந்தே என் ஊரின் பழைய சித்தரத்தை என்னால் மீட்டுக்கொள்ள முடியும். மறுகாலை எடுத்து வைப்பதற்குள் முன்வைத்த கால் செல்லரித்துவிடும் என 'மோக முள்' நாவலில் தி.ஜா. எழுதிய நடை வர்ணனையும் நினைவில் மீள்கிறது.

சிவமணியன் எழுதியக் கடிதத்தைப் பகிர்ந்திருந்தீர்கள். அவர் சொல்வதுபோல 'குறுதிச்சோறு' கதையை நினைக்காமல் இக்கதையை வாசித்து முடிக்க இயலாது. ஆனால் எனக்கு இக்கதை குறுதிச்சோறு கதையின் தொடர்ச்சி போல தெரியவில்லை. அந்தக் களத்தில் எழுதவிரும்பிய மற்றொரு கதையையே எழுதிப்பார்த்திருக்கிறீர்கள் சிதலில்.

இரு முறை வாசித்தபோது இக்கதைக்குப் போதுமான வாசிப்பைக் கொடுத்தேனா என்பது எனக்கு சந்தேகம்தான். ஆனால், இன்னும் ஏதோ எஞ்சியிருக்கிறது என்ற உணர்வை கதை கடத்திவிட்டது. கதையின் பகுதிகளில் வீழ்ச்சியும் புனரமைப்பும் மாறிமாறி சித்தரிக்கப்படுகின்றன. அவை கட்டிடங்களில் மட்டுமின்றி அவற்றைச் சார்ந்துள்ள மனித உள்ளங்களில் பெருகிச்சரியும் நம்பிக்கையையும் குறிக்கின்றன. கதையின் முடிவு இவ்விரு நிலைகளுக்குமிடையே விட்டுவிடுகிறது.

பல சிறுகதைகளில் பேசப்பட்ட அறவீழ்ச்சியின் முகமாக இக்கதையைப் பார்ப்பது பழைய வாசிப்பாகவே இருக்கும். கதைக்களத்தை சூழலியல் ரீதியாக அணுகலாம் எனவும் தோன்றுகிறது. அறிவியல் புனைவாக எழுதப்பட்டால் எப்படி வந்திருக்கும் என்றும் யோசித்துப்பார்க்கிறேன்.

முடிவில், இதைவிட சிறந்த கதைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் நம்பிக்கையை உங்கள் முதல் தொகுப்பு கொடுத்திருக்கிறது என்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

அன்புடன்
வே. ஸ்ரீநிவாச கோபாலன்

நன்றி ஸ்ரீநிவாச கோபாலன் 

இம்பால் குறிப்புகள்

ஹோட்டல் கிளாசிக் கிராண்ட். அறை எண் 2005 ற்கு நாங்கள் சென்று சேர்ந்த அன்றே மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. இங்கே யார் நம்மை அழைக்கப்போகிறார்கள் என்று எடுத்தபோது. கீழே வரவேற்பில் இருந்து 'என்னுடன் அங்கு வந்திருக்கும் விருந்தினர் ஒருவர் பேச விரும்புவதாக' சொன்னார். அப்போது நிற்காத ரயில்நிலையத்தை கடக்கும் வேகத்துடன் ஹிந்தியில் ஒருவர் பேசினார். பெசியவரையில் புரிந்தது ஒன்றேயொன்றுதான் லாபிக்கு வருகிறீர்களா, கொஞ்சம் பேசிக்கொண்டிருக்கலாம். 
உருது எழுத்தாளர், கபிமோ, குர்மீத், நான்,  அமல், தீபா நசீர். ஷானாஸ்  ரெஹ்மான்
--
அக்டோபர் 26 மாலை விருது விழா இம்பால் 'பழங்குடி ஆய்வு மையத்தில்' ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 25 மாலையே நாங்கள் வந்து சேர்ந்துவிட்டதால் காலை எங்கவாது சுற்றிப்பார்க்கலாம் என முடிவு செய்திருந்தோம். ஜெயமோகன் பிரம்மாண்ட சிவனும் சிவ கணங்களும் இருக்கும் உணகொட்டி எனும் இடத்தைப் பற்றி சொல்லியிருந்தார். அவசியம் சென்று வாருங்கள் பார்க்க வேண்டிய இடம் என்றார். பிறகுதான் அது திரிபுராவில், இம்பாலில் இருந்து ஆயிரத்தி முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் இருப்பது தெரிந்தது. 
--
இம்பாலுக்கு செல்வதற்கு முன் நாங்கள் ஒருநாள் கொல்கத்தாவில் இருந்தோம். அங்கே அரிமளத்தை பூர்வீகமாக கொண்ட குடும்பம் வசிக்கிறது. பெரியப்பாவிற்கு நெருக்கமானவர்கள். ஒரு வண்டியில் எங்களை மொத்த கொல்கத்தாவையும் அழைத்து சென்று ஒருநாளில் காண்பித்தார் ஜெயந்தி. பிரமாதமான வீட்டுச் சாப்பாடு அங்கிருந்த மூன்று வேளையும். கொல்கத்தாவின் ஆகச்சிறந்த அனுபவம் என்பது வியேன் என்றொரு கடையில் சுடச்சுட ரசகுல்லா, சந்தேஷ், சம்சம் உண்டதுதான். இவை எல்லாவற்றையும் விட 'மிஷ்டி தோய்' என்றொரு இனிப்பு உண்டு. வாழ்நாள் அனுபவம். லசி என்பது தயிரான பின் இனிப்பு சேர்ப்பது. மிஷ்டி தோய் திரட்டுப்பால் போல வெல்லமிட்டு காய்ச்சி அதை உறைக்கு ஊற்றி தயிராக்குதல். எங்களுக்கு கொடுத்துவிட்ட ஒரு பானை மிஷ்டி தோயை விமானத்திற்கு கொண்டு செல்லக்கூடாது என்று செக்யுரிட்டியில் தடுத்ததால் விமான நிலையத்திலேயே அவசர அவசரமாக சாப்பிட்டு முடித்தோம்.
--
அக்டோபர் 27 யுவ புரஸ்கார் விருதாளர்கள் ஏற்புரை நிகழ்ச்சி சிறிய அரங்கில் நிகழ்ந்தது. ஏற்கனவே அனுப்பி, சரிபார்க்கப்பட்ட உரையை வாசிக்க வேண்டும். அவ்வுரைகள் அங்கே அமர்ந்த அனைவருக்கும் நகலெடுத்து அளிக்கப்பட்டன. சரிபாதி உரைகள் ஆங்கிலத்திலும் மீதி உரைகள் ஹிந்தியிலும் இருந்தன. என்னருகே அமர்ந்திருந்த கன்னட எழுத்தாளர்களிடம் திரண்ட கருத்தை கேட்டுத் தெரிந்துகொண்டேன். சிலர் எழுதி வைத்த உரையை மாற்றியபோது முடிந்த வரை எழுதியதையே வாசியுங்கள் என அறிவுறுத்தப்பட்டார்கள். இது ஒருவகையான சென்சார்ஷிப் என்றே பட்டது.  
--
முதல்நாள் தொலைபேசியில் என்னை அழைத்தவர் குர்மீத் எனும் பஞ்சாபி எழுத்தாளர். இதுவரை ஏழு நாவல்கள் எழுதியுள்ளார். திரைத்துறையிலும் பணியாற்றுகிறார். எப்படியோ பேசிக்கொண்டோம். பிறகு அவர் நேபாளி, உருது, காஷ்மீரி மொழிகளில் விருது பெற்றவர்களையும் அழைத்திருந்தார். குர்மீத் உங்கள் சிறந்த கதைகளை கூறுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். ஒவ்வொருவரும் உணர்ச்சிபூர்வமாக தத்தமது கதைகளை ஹிந்தியில் சொல்லத் துவங்கினார்கள். பெரும்பாலும் அவர்கள் தங்கள் கதைகளை என் விழி நோக்கி சொல்லத் துவங்கினார்கள். மொழி புரியாதபோதும் அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உன்னிப்பாக கவனிப்பதாக பாவனை செய்ததுடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம். அந்தக் கதையில் நுட்பங்களை சுட்டிக்காட்டி அவர்களை மேலும் குஷிபடுத்த முயன்றிருக்கக் கூடாது என்பதை இப்போது உணர்கிறேன். ஒருவகையில் அவ்வை ஷண்முகி டெல்லி கணேஷ் போல் அவர்கள் என்னை பார்த்திருப்பார்கள்.
--
அமல் நானும், கே.எல். தேசிய பூங்காவில்
லோக்டக் மிதக்கும் ஏரிகளை காணச் செல்லும் வழியில் கேபுள் லாம்ஜா தேசிய பூங்காவிற்கு (Keibul Lamajao National park) இந்தியாவின் கிழக்கு எல்லையில் இருக்கும் தேசிய பூங்கா. இங்கு சங்காய் எனும் அரிய மானினம் முற்றிலும் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீட்டு பாதுகாக்கப் படுகிறது. நாற்பது சதுர கிமி பரப்பளவு கொண்டது. ஒரு சிறிய குன்றின் மீதேறி சென்றால், அங்கு அமைக்கப்பட்ட பார்வை மேடையில் நின்று மான்களை நோக்கலாம். கீழே சிறிய படகும் உண்டு. அதில் கொஞ்சம் தொலைவு சென்றுவரலாம். நாங்கள் அங்கு சென்று சேர்ந்தபோது காலை பத்துமணி இருக்கலாம். அப்போது எங்கள் கண் முன் பரந்த புல்வெளி விரிந்திருந்தது. அங்கிருந்த வழிகாட்டி இளைஞர் தொலைநோக்கி வழி பார்க்கச் சொன்னார். அப்போது புல் மறைப்பிற்கு அப்பால் ஒரேயொரு காதை மட்டும் காண முடிந்தது. அது எல்லா மான்களின், நாய்களின், கன்றுகளின் காதுகளைப் போன்றே இருந்தது. 
--
இலங்கை பயணத்தின்போது அற்புதமான ஒளியமைப்பில், அழகுணர்வுடன் அலங்கரிக்கப்பட்ட உணவகங்களில் சாப்பிடக் கிடைத்தது என்னவோ கட்டை கட்டையான பரோட்டாவும் கெட்டித்தயிரும் தான். நல்லவேளையாக இம்பாலில் அப்படியொன்றும் நிகழவில்லை. தாவ்ரத்தின்னிகளின் பாடு கொஞ்சம் கடினம்தான். எனினும் நாம் இங்கு நன்கு பழகிய வட இந்திய உணவுகளை அங்கும் பரிமாறினார்கள். ஒருநாள் மதியம் மட்டும் விழா அரங்கிலேயே மணிப்பூரி மதிய உணவு பரிமாறினார்கள். அங்கும் கூட செட்டிநாட்டில் செய்யப்படும் கவுணி அரிசி போன்ற ஒன்றை சிறிய பேப்பர் கோப்பைகளில் வைத்தார்கள். ரசவடை போன்ற ஒன்றும் மிகச் சுவையாக இருந்தது. குலாப் ஜாமூன் ஊடுருவல் வரவேற்கத்தக்கது என்றாலும் தடுத்து நிறுத்தவே முடியாது போலும். 
--
சாலைகளில் சர்வ சாதாரணமாக துப்பாக்கி ஏந்திய ராணுவவீரர்கள் நடமாடினார்கள். அவர்களை இயல்பாக கடந்து செல்வதற்கு மக்கள் முயன்றபடி இருக்கிறார்கள். நண்பர் கார்த்திக் புகழேந்தியின் உறவினர் இம்பாலில் ராணுவத்தில் நல்ல பதவியில் இருக்கிறார். அவரும் அவரது மனைவியும் அங்குதான் தங்கினார்கள். விமானநிலையத்தில் இருந்தே துப்பாக்கி சூழ தான் வலம்வந்ததாக சொன்னார். இம்பாலை விட்டு சற்று வெளியே வந்தால் கூட அதன் சாலைகள் தரம் மிக மோசமாக இருக்கின்றன. இப்போது விரிவாக்கம் செய்கிறார்கள். லோக்டக் செல்லும்வழி இருபுறமும் தகர குடிசைகள் அவர்களின் ஏழ்மையின் அடையாளமாக காண முடிந்தது. 
--
ஏற்புரையில் இந்தி மொழிக்கு விருது பெற்றவரின் உரை துணிச்சலாக இருந்தது என பலரும் அபிப்பிராயப்பட்டனர். இந்தி மொழிக்கு விருது பெற்ற ஆஸ்திக் வாஜ்பெயியுடைய தந்தை உத்யயன் வாஜ்பேயியும் ஒரு கவிஞர். மத்திய பிரதேசத்தில், போபாலில் வங்கிப் பணியில் உள்ளார் ஆஸ்திக். சாகித்திய அகாதமியின் பாரபட்சம் மற்றும் அரசியல்தான் அவருடைய ஏற்புரையின் பேசுபொருள். அவருடைய உரைக்கு மட்டும் சாகித்திய அகாதமியின் துணைத் தலைவர் மாதவ் பதினைந்து நிமிடம் விளக்கம் அளித்தார். வேறென்ன, சம்பிரதாயமாக, ஒரு அமைப்பின் பொறுப்பில் இருப்பவர் என்ன சொல்ல முடியுமோ அதைச் சொன்னார்.
துணைத்தலைவர் மாதவ் 
--
குர்மீத் மற்றும் குழாமுடன் திணறிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு மலையாள குரல் அருகில் கேட்டது. உண்மையில் அந்த நொடி நானடைந்த ஆசுவாசமும் மகிழ்ச்சியும் அளப்பறியாதது. மலையாளத்தில் நாவல் பிரிவில் விருது பெற்றவர் பெயர் அமல். சமூக யதார்த்தவாத கதைகளை எழுதுவதாக அவருடைய ஏற்புரையில் சொன்னார். மறுநாள் நாங்கள் லோக்டக் செல்லும்போது வண்டியில் ஒரு இடம் இருந்ததால் அவரையும் ஏற்றிக்கொண்டோம். சுதீர் அமலுடன் ஒட்டிக்கொண்டான். இப்போதும் அமல் கூறியது போலவே அவ்வப்போது 'ஆண ஆண' எனக் கூறுவான். அமல் சுவாரசியமான மனிதர். அவருடைய எளிமையையும் தயக்கத்தையும் கண்டு பலரும் 'இவன் எழுதி இருப்பான்?' என அவநம்பிக்கையுடன் பார்த்திருக்கக்  கூடும். ஆனால் என் கணிப்பு வேராக இருந்தது. இங்கே வந்திருப்பதிலேயே காத்திரமாக வாசித்திருக்கக் கூடியவர், எழுதியிருக்கக் கூடியவர் அமலாகத்தான் இருக்கும். கேரள எல்லையில் உள்ள தமிழக ஊர் ஒன்றில் தான் பொறியியல் படித்தார். பின்னர் சாந்தி நிகேதனில் கலை வரலாறு கற்று. அங்கே பரிச்சயமான ஜப்பானிய பெண்ணை காதலித்து சென்ற ஆண்டு திருமணம் செய்துகொண்டு தற்போது டோக்கியோவில் வசிக்கிறார். இதுவரை மூன்று நாவல்கள் மூன்று சிறுகதை தொகுப்புகள், மூன்று கிராபிக் நாவல்கள் வெளிவந்துள்ளன. விருது கிடைத்த நாவலின் கதைச் சுருக்கம் சுவாரசியமானது. சமூக ஊடகம் கிராம அளவில் செலுத்தும் தாக்கம் தான் அதன் மையம். அவர் வாழ்வில் நிகழ்ந்த உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் எழுதி இருக்கிறார். 
--
குர்மீத், துஷ்யந்த், ராணி முர்மு, பூஜா, நான், பாலசுதாகர் 
இரவு பத்து மணிக்கு உறங்கிக் கொண்டிருக்கும்போது அறையின் அழைப்புமணி ஒலித்தது. பாலசுதாகர் மவுலி, தெலுங்கு மொழிக்காக விருது பெற்றவர் அவருடைய தம்பியுடன் வந்து நின்றார். மவுலி உயிரியல் ஆசிரியர். கவிதைகள் எழுதுகிறார். சிறுகதைகளும் உண்டு. குடும்பத்துடன் இரவுணவு அருந்தும்போது தெலுங்கு போன்ற ஒன்றை நாங்கள் பேசுவதை கேட்டு ஆர்வமாகி என்னுடன் பேசுவதற்காக வந்தார். 'அவன் காட்டை வென்றான்' தமிழில் உள்ளது என்றேன். அவருக்கு ஜெயகாந்தனை தெரிந்திருக்கிறது. பல்வேறு ஊர்களில் நிகழும் கவிதை கூடுகைகளுக்கு சென்று வந்திருக்கிறார். சிற்பி, சேரன் ஆகியோரை அறிந்துள்ளார். கிளம்பும்போது அவருடைய இரு கவிதை நூல்களை அளித்தார். தெலுங்கு பேசத் தெரிந்தும் படிக்கதெரியாத பாவியாகிய நான் அதை என் மாமியாருக்கு அளித்துவிட்டேன். அவருக்கு தெலுகு வாசிக்கவும் எழுதவும் தெரியும்.    
--
யுவ புரஸ்கார் ஏற்புரை நிகழ்வின்போது சமரக்னி பானர்ஜி (அல்லது பந்த்யோபாத்ய) ஒரு விஷயத்தை சொன்னார். சாகித்திய அகாதமி இளம் எழுத்தாளருக்கான பயணப் படியை பெற்றிருக்கிறேன் என்றார். அப்போதுதான் சாகித்திய அகாதமி அப்படியொரு நிதியை அளிக்கிறது என்பதே தெரிய வந்தது. இப்போதும் அதை பெறுவதற்கான வழிமுறை என்னவென்று தெரியவில்லை. 
--
இந்த பயணத்தின் மிகச் சிறந்த அனுபவம் என்பது லோக்டக் பயணம் தான். இருபுறமும் சமவெளியில் கதிர்கள், அப்பால் மலைத் தொடர்கள். சென்றா எனும் சிறு தீவிற்கு சென்றோம். அங்கிருந்து மிகப்பெரிய நீர்நிலையான லோக்டக்கின் விரிவை காண முடிந்தது. துல்லிய நீலத்தில் வானும் அதை பிரதிபலிக்கும் நீரும், தூரத்து மலைகளும் ஒரு ஓவியத்திற்குள் இருப்பதான பிரமிப்பை அளித்தது. ஒரு படகு பயணம் சென்று மிதக்கும் தீவு ஒன்றில் இறங்கினோம். நிலம் நழுவுவதை ஒரு உவமையாக வாசித்திருக்கிறேன் அன்றுதான் அதை உணர முடிந்தது. நீர் மேல் மிதக்கும் தெர்மோகோல் மீது கால் வைப்பது போன்ற உணர்வு. நீர் தாவரங்களின் அடர்ந்த வேர் பரப்புகளால் பின்னப்பட்ட தரை. அதன் மீது சிறிய குடில் அமைத்து வாழ்கிறார்கள். எங்களுக்கு சுடச்சுட எலுமிச்சை தேநீர் கொடுத்தார்கள். நீரை கிழித்துக்கொண்டு படகு திரும்பியபோது பின்னால் எழுந்த நீர் கோடுகள் ஒரு மாபெரும் யானையின் மத்தகத்தை ஒத்திருந்தது. மொத்த ஏரியையும் உடலாக சூடிய நீலயானை, அதன் மத்தகத்தில் வெள்ளியலை பட்டை.
லோக்டக் - சென்றா தீவிலிருந்து 
--
பஞ்சாபி குர்மீத்திடம் கர்த்தார் சிங் துக்கலைப் பற்றி சொன்னேன்.அ வருடைய பவுர்ணமி இரவுகள் தமிழில் கிடைக்கிறது என்றேன். மனிதர் உற்சாகமானார். பெங்காலி சமரக்னியிடம் தாகூரைத் தவிர்த்து, விபூதி பூஷன் பந்த்யோபாத்யாய, தாரா சங்கர் பானர்ஜி, சுனில் கங்கோபாத்யாய ஆகியோர் எழுத்துக்கள் தமிழில் கிடைக்கிறது என்றேன். வியப்படைந்தார். கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் மற்றும் விக்கிரம ஹத்வாராவிடம் சிவராம் காரந்த், பைரப்பா, அனந்தமூர்த்தி, மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், தேவனூரு மகாதேவா, விவேக் ஷான்பாக் என பலரும் தமிழுக்கு அறிமுகம் என்றேன். அதுவும் விவேக் ஷான்பாகின் காச்சர் கோச்சர் இங்கு நன்கு கவனிக்கப்படுகிறது என்றேன். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைக் காண முடிந்தது. சென்ற ஆண்டு எச்.எஸ். சிவபிரகாஷ் அவர்களை சந்தித்தையும் சொல்லிக்கொண்டிருந்தேன். மலையாள எழுத்தாளர் அமலிடம் தகழி, எம்.டிவி, சக்காரியா, பஷீர் எனத் துவங்கி கே.ஆர்.மீரா வரை தமிழுக்கு வந்ததை சொன்னேன். அவர் அசோகமித்திரனின் தண்ணீரை வாசித்திருக்கிறார். ஜெயமோகனின் நூறு நாற்காலிகள், யானை டாக்டர் ஆகியவற்றை வாசித்திருக்கிறார். சாருவை அறிந்துள்ளார். நம் புதுமைபித்தன் கூட வேறு மாநிலங்களுக்கு சென்ற சேரவில்லை எனும் நிதர்சனம் என்னை வெகுவாக அலைக்கழிக்கிறது.

--
பஞ்சாபி குர்மீத் பார்ப்பதற்கு மிகுந்த வயதானவராக தோற்றமளித்தார். ஆனால் ஒல்லியான நெடிய உருவம்.கசன்சாகிசின் ஜோர்பாவிற்கு பொருத்தம். என் பிறந்த வருடத்தை கேட்டார். 1986 என்றேன். தான் 1989 என்று சொன்னார். நீங்கள் எல்லாம் என்னைவிட வயதில் மூத்தவர் ஆசியளியுங்கள் என கிண்டல் செய்தார். ஆனால் விருதாளர்கள் பற்றிய சிறிய தகவல் குறிப்பு உள்ள புத்தகம் எல்லோருக்கும் அளிக்கப்பட்டது. அதில் விருதாளர் பற்றிய தகவல், புத்தகத்தைப் பற்றிய குறிப்புகள் மற்றும் தொடர்பு தகவல்கள் உள்ளன. அதில் குர்மீத் 1985 ஆம் ஆண்டு பிறந்தவர் என்றிருந்தது.
--
புதுவை வெண் முரசு கூடுகைக்கு சென்றபோது நண்பர்கள் வைத்துக்கொடுத்த ராம்ராஜ் வேட்டி சட்டையை போடுவதென்று தீர்மானித்திருந்தேன். வேட்டியை கட்டும்போதுதான் தெரிந்தது அது நான்கு முழம் என்று.
-


லோக்டக் ஏரியின் மத்தியில் குடும்பத்துடன். 



யுவ புரஸ்கார் விருதையொட்டி இளம் எழுத்தாளர்கள் சந்திப்பும் நிகழ்ந்தது. அதற்காக கொங்கனி எழுத்தாளர் ஒருவர் வந்திருந்தார். கர்நாடகாவில் கொங்கனி கன்னட எழுத்துருவில் புழங்குகிறது, கோவாவில் ஆங்கில எழுத்துரு பயன்பாடும் உண்டு, மகாராஷ்டிரத்தில் தேவநாகரி எழுத்துருவில் கொங்கனி புழங்குகிறது என்றார். உங்கள் ஊர் இலக்கியம் வளமாக உள்ளது. நாங்கள் இறந்து கொண்டிருக்கும் மொழியை இறுக்கி பிடித்து கொண்டிருக்கிறோம் என்றார். ஒரேயொரு கொங்கனி நாளிதழ் மட்டுமே உண்டு. சில வாராந்திரிகள், இலக்கிய சஞ்சிகைகள் உண்டு என்றார்.
--
நாங்கள் காங்க்லா கோட்டைக்கு சென்றபோது எங்களுடன் கார்த்திக் புகழேந்தியும் அவருடைய மனைவி சுபாவும் இணைந்து கொண்டார்கள். காங்க்லா கோட்டையில் நம் கேரள படகைப்போன்று நீளமான படகு மூன்று  சங்காய் மான் தலை போன்ற முகப்புடன் இருந்தன. பெரும் பச்சை புல்வெளி. மெல்லிய தூறலுடன் சற்று தொலைவு நடந்துவிட்டு திரும்பினோம்.
--
குஜராத்தி மொழிக்கு ஈஷா என்றொரு கவிஞருக்கு கிடைத்தது. அவர் தொலைக்காட்சி தொகுப்பாளர், நாடக நடிகையும் கூட. குஜராத்தை சேர்ந்த பூஜா என்பவருக்கு நாடகத்திற்காக சிந்தி மொழிக்கான யுவ புரஸ்கார் கிடைத்தது. இவரும் தொலைக்காட்சி தொகுப்பாளர், மேடை நாடக நடிகர். அனால் இருவருக்கும் மற்றொருவரை தெரிந்திருக்கவில்லை. கொங்கனிக்கு விருது பெற்ற வில்மா மங்களூரில் இருக்கிறார். கன்னட எழுத்தாளர்களுக்கும் அவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
--
காஷ்மீரி எழுத்தாளர் தீபா நசீருடைய கணவர் கடைசி நேரத்தில் வரவில்லை. அவருடைய மகனுக்கு ஏறத்தாழ சுதீர் வயதிருக்கும். ஒற்றையாளாக சமாளிக்க மிகவும் சிரமப்பட்டார். சுதீருக்கும் அவனுக்கும் வேறு அவ்வப்போது தள்ளுமுள்ளு. விருது நிகழ்வு முடிந்தவுடன் வாயிலில் யுவ புரஸ்கார் விருது பெற்றவர்களின் புகைப்படங்கள் ஒட்டியிருந்த பதாகையில் இருந்து அவருடைய கருப்பு வெள்ளை புகைப்படத்தை பிய்த்து கொண்டிருந்தார். அப்போது நான் மட்டுமே கீழே இருந்தேன். என்னிடம் 'நீங்களும் உங்களுடையதை எடுத்துக் கொள்ளுங்கள்' என்றார். 'நன்றி.பிறகு' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்துவிட்டேன்.
--
உருது எழுத்தாளர் அலிகார் பல்கலைகழகத்தில் முனைவர் ஆய்வு செய்து வருகிறார். 1991 ஆம் ஆண்டு பிறந்தவர். இந்திய உருது இலக்கியத்தைக் காட்டிலும் பாகிஸ்தானிய உருது இலக்கியம் அபார வளர்ச்சி அடைந்து வருவதாக சொன்னார். சிறுகதைகளுக்காக விருது கிடைத்தபோதும் அவர் விமர்சன கட்டுரைகளும் எழுதி வருகிறார். அவருடைய பெயரைக் கொண்டு ஷானாஸ் ரெஹ்மான் ஆண் என்று எண்ணியிருந்தேன்.
ஜெயத்ரத் ஷுணா, அமல், நான் 
--
விழா அரங்கில் சாகித்திய அகாதமி புத்தகங்கள் விற்பனைக்கு இருந்தன. எண்ணியது போலவே பிறருக்கு சுட்டிக்காட்டும் படியான தமிழ் மொழியாக்கங்கள் ஏதுமில்லை. சுனில் கங்கோபாத்யாய அவர்களின் பெரு நாவல் ஒன்று இரு பாகங்களில் மலிவான விலையில் ஆங்கில மொழியாக்கத்தில் கிடைத்தது. அதைத் தவிர இராமாயண, மகாபாரத மருவுகள் பற்றிய தொகுப்புக்கள் வாங்கிக்கொண்டேன்.
--
லோக்டக் செல்லும் வழியில் ஜப்பான் போர் நினைவகம் ஒன்றுள்ளது. இரண்டாம் உலகப்போரில் ஜப்பான் தோற்ற போர் முனைகளில் ஒன்று. ஜப்பான் அரசு கட்டிக் கொடுத்தது. மூன்று பெரும் செந்நிற பாறைகளை வைத்திருக்கிறார்கள். ஜப்பான், இந்தியா மற்றும் பிரித்தானியாவை குறிப்பவை என ஓட்டுனர் சொன்னார். நினைவுநாளில் அந்த அந்த குடும்பத்தினர் அந்த தேசத்திருகுரிய கல்லில் மலர் அஞ்சலி செலுத்துவார்கள் என்றார்.
--
நேபாளி எழுத்தாளர் சுடேன் கபிமோ அவர் மொழிக்கான சாகித்திய அகாதமி பொறுப்பாளர் அவரை அழைத்து விருது பற்றி சொல்லவில்லை என வருந்தினார். அப்போது காஷ்மீரி எழுத்தாளரும் சேர்ந்து வருந்தினார். காரணம் காஷ்மீரி பொறுப்பாளருக்கு வேண்டப்பட்டவருக்கு கொடுக்காமல் தனக்கு கிடைத்ததினால் வருத்தம் என்றார். அப்போதுதான் சாகித்திய அகாதமி தமிழக பொறுப்பாளர் நம்மையும் அழைக்கவில்லை என்பது நினைவுக்கு வந்தது. ஆனால் இதில் வருந்துவதற்கு என்ன இருக்கிறது என்பதுதான் விளங்கவில்லை.
--
எல்லா எழுத்தாளர்களும் ஹோட்டலில் சந்தித்து பேசலாம் என முடிவு செய்தோம். இரண்டு நாளும் அது சாத்தியமாகவில்லை. எப்படியோ அதற்குள் ஒரு சிறிய குழுக்கள் உண்டாகிவிட்டதை உணர முடிந்தது. இப்போது வாட்சப் குழு ஒன்று உள்ளது. அதிலும் பெரும்பாலும் யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. மொழி, பிராந்தியம், சாதி என நுட்பமான ஏதோ ஒன்று மனிதர்களை பிணைக்கவும் பிரிக்கவும் செய்கிறது.
--
இந்தி எழுத்தாளர் ஆஸ்திக் என் ஏற்புரை நன்று எனச் சொல்லி ஏதேனும் படைப்புகளை அனுப்ப முடியுமா எங்களுக்கு ஒரு இந்தி இதழ் உள்ளது அதில் மொழியாக்கம் செய்து வெளியிடலாம் என்றார். ஆஸ்திக் மற்றும் கன்னட எழுத்தாளருடன் ஆங்கிலத்தில் பேச முடிந்தது. மலையாளி மற்றும் தெலுங்கு எழுத்தாளர்களுடன் சரளமாக அவர்களுடைய மொழியிலேயே பேச முடிந்தது.
விக்கிரம ஹத்வாரா, நான், பத்மநாப பட் 
--
அமல் ஒரு ரஜினி ரசிகர். காலாவை ரஜினி ரசிகர்கள் சூழ ஜப்பானில் பார்த்ததாக சொன்னார். கன்னட எழுத்தாளர் விக்ரம் தமிழ் திரைப்படங்களை நேரடியாக பார்ப்பதாக சொன்னார். தமிழ் வெகுமக்கள் திரைப்படங்களின் வீச்சு நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது. தென்னிந்தியா மொழிகளில் அதன் வீச்சு தெரிந்ததே. ஆனால் நேபாளி எழுத்தாளரும், ஹிந்தி எழுத்தாளரும் தமிழ் திரைப்படங்கள் பார்ப்பதாக சொல்வது எனக்கே வியப்பாக இருந்தது.
--
ஏற்புரை நிகழ்ச்சிக்கு நன்றி தெரிவித்து சாகித்திய அகாதமி செயலர் சீனிவாச ராவ் பேசும்போது தமிழில் இருந்து வந்த ஏற்புரை சர்ச்சைக்குரியதாக உள்ளது என அலுவலகத்தில் ஒரு சிறிய பரபரப்பு ஏற்பட்டதாக சொன்னார். காரணம் ஏற்புரையின் முதல் சில வரிகள். மொத்தமாக படிக்கும்போது உரையும் பொருளும் தளமும் மேலானதாக இருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
--
இளம் எழுத்தாளர் சந்திப்பிற்கு வந்திருந்த காஷ்மீரி கவி நல்ல உயரம் சிவப்பு. கார்த்திக் புகழேந்தி அவருடன் பேசிக்கொண்டிருந்தார். அவர்  ராஜீவ் மேனன் இயக்கும் சர்வம் தாளமயம் திரைப்படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்துள்ளதாக சொன்னார்.
--
மலையாள மொழியிலிருந்து சிறுகதை வாசிக்க வந்திருந்த ஷிகாப் தீவிர கிரிக்கெட் வெறியர். இந்தியா மேற்கிந்திய தீவுகள் போட்டியை பார்த்துக்கொண்டு 96 உலககோப்பை நினைவுகளை பேசிக்கொண்டிருந்தோம். அரைநாள் பேசிவிட்டு ஒரு ஸ்லாம் புக்கை நீட்டி என்னைப்பற்றி எதாவது எழுதி கையெழுத்து இட்டு கொடு என்றார். வாழ்க வளமுடன்.
விக்கிரம ஹத்வாராவுடன் 
--
கன்னட எழுத்தாளர் விக்கிரம ஹத்வாராவுடன் உரையாடிய நேரம் முக்கியமானது என எண்ணுகிறேன். நம் நற்றிணையில் வந்திருந்த அவருடைய காரணம் கதை எனக்கு பிடித்திருந்தது. அதைப் பற்றியும் பொதுவாக இலக்கியத்தைப் பற்றியும் பேசினோம். ஏறத்தாழ எங்கள் பார்வைகள் ஒரேமாதிரி இருந்ததை உணர்ந்து கொண்டோம்.
--
பத்மநாப பட் கன்னட பிரஜாவாணி இதழின் சினிமா பக்கத்திற்கு பொறுப்பாக உள்ளார். சுருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது மீ டூ குற்றசாட்டு சூட்டி பரப்பரப்பானது. அதை வெளிகொணர்ந்த நிருபர் அவரே. ஏறத்தாழ சின்மயி வைரமுத்து விவகாரத்தில் சின்மயி எப்படியெல்லாம் பழிக்கப்பட்டாரோ அதுவே சுருதிக்கும் நிகழ்ந்ததாக சொல்லிக்கொண்டிருந்தார்.
--
சமஸ்க்ருதத்தில் யுவ புரஸ்கார் பெற்ற முனி ராஜ சுந்தர் விஜய்க்கு என் வயதுதான். அவர் விழாவிற்கு வரவில்லை. விசாரித்தபோதுதான் அவர் சமணத் துறவி என்பதை தெரிந்துகொண்டேன்.
--
மாமியார், அம்மா, மனைவி,சுதீர்- காங்க்லா கோட்டை ரோஸ் கார்டனில்- p.c karthik pugazhendhi
மணிப்பூரில் வைணவம் அதிகம் பின்பற்றப்படுவதாக சொன்னார்கள். அங்கே கோவிந்தாஜி கோவிலுக்கு சென்றோம். சரியாக நாங்கள் சென்ற நேரத்திற்கு அங்கு ஆரத்தி நிகழ்ந்தது. மூன்று சந்நிதிகள். ராதே கிருஷ்ணா, பூரி ஜகந்நாதர் மற்றும் கிருஷ்ணர் என அடுத்தடுத்து இருந்தன. அந்த கோவில் பூசகர்கள் தீவிர ஆசாரவாதிகள். அது ஏதோ ஒரு ஒவ்வாமையை அளித்தது. பிரசாதமாக ஒரு மலரை ஒரு பெண்ணிற்கு கொடுக்க அவளருகே வீசிவிட்டு சென்றார் பூசகர்.
--
யுவ புரஸ்காரர்களில் அநியாயத்திற்கு யுவர் 1994 ஆம் ஆண்டு பிறந்த ராஜஸ்தானி எழுத்தாளர் துஷ்யந்த் ஜோஷி. அவருடைய தந்தை முன்னரே சாகித்திய அகாதமி வாங்கியவராம். தனுஷ் பட பணக்கார அமுல்பேபி வில்லன்களில் ஒருவரைப் போல் தோற்றமளித்தார்.
--
காலை ஐந்து மணிக்கு எல்லாம் புலர்ந்து, மாலை ஐந்து மணிக்கெல்லாம் இருட்டி விடுகிறது. இரவுகளில் நல்ல குளிர். பகல்களில் வெப்பம் அதிகமில்லை. ஒருவித ஐரோப்பிய பருவநிலை எனச் சொல்லலாம்.
--
கிளம்புவதற்கு முன் கார்த்திக் புகழேந்தி உரையை கேட்டுவிட்டுத்தான் சென்றேன். மராத்தி, வங்காளி மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் தாங்கள் ஏன் எழுதுகிறோம் என்பதைக் குறித்து பேசினார்கள். மூன்றுமே வெவ்வேறு வகையானவை. மராத்தி மொழியை சார்ந்தவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. கார்த்திக் புகழேந்தி உக்கிரமான உணர்வுகளை கடத்துவதாக இருந்தது.
--
விழா மேடை அழகாக இருந்தது. ஆனால் விழா அரங்கு படுமோசம். பழைய திரையரங்க நாற்காலிகள் போல் ஓட்டை உடைசல் நாற்காலிகள். வாசகசாலை அரங்குகள் இதைவிட நன்றாக இருக்கும் என கார்த்திக் சொன்னார்.
--
எஸ்தர் டேவிட் 
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட எஸ்தர் டேவிட் எனும் பெண் எழுத்தாளர் நங்கள் பயணித்த விமானத்தில்தான் இம்பால் வந்தார். அவரைக் கண்டதுமே மானசாவிடாம் இவர் நிச்சயம் எங்கள் கோஷ்டியாகத்தான் இருக்க வேண்டும் எனக் கூறினேன். என் ஐயம் உறுதியானது. எழுத்தாளர்கள் எப்படியோ சக எழுத்தாளர்களை மோப்பம் பிடித்துவிடுவார்கள். இந்திய யூத பின்புலம் கொண்ட எழுத்தாளர் என கூகிள் சொல்கிறது. வாசித்து பார்க்க வேண்டும்.
--
சாகித்திய அகாதமி தலைவர் வராததால் துணைத்தலைவர் நிகழ்வை முன்னின்று நடத்தினார். ஏற்புரை நிகழ்வின்போது அவராற்றிய உரை மிக முக்கியமானது என விக்கிரம ஹத்வாரா விளக்கினார். நாற்பதுகளில் எழுத்து நம்மை விட்டு அகலும் அபாயம் உண்டு. அந்த பருவத்தில் கலையை இறுகப் பற்றிக்கொண்டு கடந்துவிடுங்கள் என ஆலோசனை சொன்னார். உலகியல் வாழ்வு சுழற்றி வீசும் பருவம் அதுவே.
--
தங்கியிருந்த ஹோட்டலில் பப்பே உண்டு. தயிர் வடை போன்று ஒன்றை வைத்திருந்தனர். ஆனால் அதன் மீது இனிப்பு ஊற்றியிருன்தனர். இப்போது இதை எழுதும்போது கூட அதன் வாடை குமட்டுகிறது. டோஸ்டரில் ப்ரெட் டோஸ்ட் செய்து நிறைய வெண்ணைத் தடவி சமாளித்தோம். இந்தப் பயணத்தின் மாபெரும் வெற்றி என்பது ஊருக்கு சென்ற அறுவரில் எவருக்கும் ஒருநாள் கூட எந்த உடலுபாதையும் வரவில்லை என்பதே.
--
ஒட்டுமொத்தமாக இலக்கியம் உயிர்ப்புடன் திகழும் மொழிகள் என தென்னிந்திய நான்கு மொழிகள், வங்காளி மற்றும் ஹிந்தியைச் சொல்லலாம் எனத் தோன்றுகிறது. பிற மொழிகளில் எழுதும் ஆட்கள் குறைந்து வருகிறார்கள்.
--
தேர்ந்த எழுத்துக்காரராக மட்டுமில்லாமல் இருமொழி புலமை மேலதிகமாக தேவைப்படுகிறது. இனி வரும் காலம் அப்படிப்பட்டதுதான் என்றொரு எண்ணம் கன்னட, வங்காள எழுத்தாளர்களை காணும்போது தோன்றியது. ஆனால் இதெல்லாம் யார் பொறுப்பு? எப்படி தமிழில் நிகழ்வதை பிறருக்கு கொண்டு சேர்க்கப் போகிறோம்? தெரியவில்லை. பேசியவரை பிற மொழிகளில் யதார்த்தவாதமே பெரும் போக்காக திகழ்கிறது. இந்திய மொழிகளில் தமிழின் இடம் நிச்சயம் நல்ல நிலையில் உள்ளதாக தோன்றியது.
--
புத்தக விற்பனைப் பற்றி பேச்சு வந்தது. நேபாளி எழுத்தாளர் கபிமோ அவருடைய நூல் நேபாளில் பத்தாயிரம் பிரதிகள் விற்றதாக சொன்னார். பஞ்சாபியும் ஏழாயிரம் பிரதிகள் விற்றுள்ளன என்றார். நான் வாயை மூடிக்கொண்டு இருந்தேன். இங்கே முதன்மை எழுத்தாளருக்கே ஆயிரம் பிரதிகள் விற்க மூன்று ஆண்டுகள் ஆகும் எனும் பரிதாப நிலையை எப்படிச் சொல்வது.
--
இம்பாலில் அதே நாட்களில் நரம்பியல் மாநாடும் நிகழ்ந்தது. அதற்கு வந்தவர்களும் எங்கள் ஹோட்டலில் தான் தங்கியிருந்தார்கள். கோவை கே.ஜி மருத்துவமனை நரம்பியல் மருத்துவர்கள் இருவர் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். தமிழ் பேச்சைக் கேட்டதும் போய் பேசினோம்.
--
இம்பாலில் இருந்து கொல்கத்தாவந்து அங்கிருந்து உடனடியாக சென்னைக்கு விமானம் பிடிக்க வேண்டும். பரபரப்புடன் வந்தோம். இறுதி நேரத்தில் வண்டி ஏறினோம். எப்போதும் விமானத்தில் தூங்கிவிடும் சுதீர் அன்று நசநசத்துக்கொண்டே இருந்தான். எங்கள் இருக்கைக்கு பின்னிருக்கையில் இருக்கும் பெண் பயணி விமான பணிப்பெண்ணிடம் புகார் சொன்னார். நாங்களும் அமைதியாக்க முயற்சித்தோம் ஆனால் படுதோல்வி. பின்னர் அவரே ஒருகட்டத்தில் கோபமாக சுதீரைப் பார்த்து கத்தினார். நல்ல பயணம் இப்படியான கசப்புடன் முடிவுற்றது.
--
மணிப்பூரி உள்ளூர் தொலைகாட்சியில் அவர்கள் ஊரின் ஆல்பம் இசை கேட்டேன். பெரும்பாலான பாடல்கள் பிரமாதமான மெலடிக்கள்.
--
ஒட்டுமொத்தமாக இந்த பயணம், பயணக் காட்சிகள் என்றென்றைக்கும் நினைவிலிருக்கும். சிலர் நீண்டகால நண்பர்களாக தொடரவும் வாய்ப்புண்டு.
--
இன்று, ஏறத்தாழ ஒருமாதத்திற்கு பின் திடிரென்று நினைவுகளை எழுதக் காரணம் கன்னட எழுத்தாளர் பத்மநாப பட் அனுப்பிய புகைப்படங்கள். இந்த நினைவுக் குறிப்புகள் என்றேனும் அசோகமித்திரனின் ஒற்றனைப் போல் ஒரு நாவலாக விரியவும் வாய்ப்புண்டு.














Wednesday, November 21, 2018

சிதல் - சிவமணியன் கடிதம்


அன்புள்ள சுனீலுக்கு,


நலம் மிக்க நலத்துடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். 


‘சிதல்’ சிறுகதை முதல் வாசிப்பில் உங்கள் சிறுகதையான ‘குருதிச்சோறு’வின் நீட்சி போலத் தோன்றியது. நிலத்தால் தொலைவினில் இருந்தாலும் என் மனமொழியில் என்றும் இருக்கும் வட்டாரச் சொற்களான துப்புரவாக, சுளுவில் , சகட்டுமேனி, தந்தரை, மொகரை, ரவைக்கு போன்ற சொற்கள் நிரம்பிய வர்ணனை வாசிப்பினை  அணுக்கமாக்கின. 



பெரிய செந்தியின் குழந்தைக்கால நினைவுகளின் மீட்டெடுப்பின் சூழல் விவரம் குறியீட்டு ரீதியாக அவனின் அணுக்கமான உறவுகளை சுட்டுகிறதோ என எண்ண வைத்து கதைக்குள் ஆழ்ந்து இழுத்தது. சிங்கங்களை அய்யா, அப்பா எனவும், பவளமல்லி செடியை அன்னையாகவும்,  முன்பு வெள்ளி நிறத்திலிருந்து  இப்போது கருப்பேறியிருக்கும் தாமரைக்கதவினை அப்பத்தாவாகவும் அடையாளமிடத் தோன்றியது.  கரையான்கள் ‘பவளமல்லி’ தண்டு முதலாக அனைத்து அழிக்கும் கணமும், செந்தியின்  கனவுகளில் கரையான்கள் மாறி மாறி வேறு உருவேடமணிந்து வரும்  வரிகளையும் மீண்டும் மீண்டும் வாசித்தேன். 


வாசிக்கையில் நினைவில் பதிந்த விவரணைகள்


கைவைத்த  இடத்தில் தூசி மறைந்து துலக்கமடைந்தது. 


செந்தியின் அப்பத்தாவிடம் ‘குட்டி கொடுத்து’ வந்தவள் மீனா. (தத்துகொடுப்பது போல நிகழ்வோ?)


ஆத்தங்குடி கற்கள்


வாடகை எதுவும் தரவேண்டாம். மாதமொரு முறை வீட்டை கூட்டி மொழுக வேண்டும் (அவ்வளவு பெரியவீட்டிற்கு மாதமொருமுறையே அதீதம்தான்)


சூலத்தின் இரு பிரிகளில் தொங்கும் வளையல்களை கொண்டுதான் அது காளியாத்தா என உறுதி செய்து கொண்டார்களாம்



காவன்னா லேனாவிடம் வதைபடும் சாத்தையா , சோலச்சியின் வாழ்வு தருணத்தின் விவரிப்பு மிகையற்ற சொற்களானாலும், அழுத்தமாக அமைந்திருந்தது. பாண்டியின் சுருக்கமான விவரிப்பிலிருந்து அவன் பெற்ற தண்டனைக்கு காரணம் என்னவென ஊகிக்க முடிந்தது.  



ஈர்க்குச்சி வழியாக மண் உதிர்ந்து, சாவித்துளை வழியாக தெரியவந்தஅறையளவு கரையான் புற்றிலும், நீரைக்கண்டு அஞ்சும்  மக்கள் நெருப்பைக் கண்டு அஞ்சவில்லை போலும் , கரையான் மண்ணுக்குள் ஒரு தீக்கங்கைச் சுமந்து கொண்டு திரிகிறது போன்ற வரிகளிலும் மனம் மீண்டும் மீண்டும் சென்று குவிகிறது. 



பரிவற்ற லேவாதேவித்தனத்தினால் மனிதமனங்கள் மட்டுமில்லாமல், சூழலும் ஈரம் துவர்ந்து பாலையாகிப்போகும் என இந்தக் கதையிலிருந்து பெற்றுக்கொண்டேன். 



வாழ்த்துக்கள்.


அன்புடன்,

சிவமணியன்

நன்றி சிவமணியன்.

Tuesday, October 30, 2018

இன்று

இன்று

உச்சி வெயில் மண்டையைப் பிளந்தது
சக்தி வாய்ந்த இரு அதிபர்கள் கைகுலுக்கிக் கொண்டார்கள்
தீவிரவாத தாக்குதலில் முப்பது பேர் மரணமடைந்தார்கள்
புறநகர்ச் சாலையில் ஒரு பேருந்து கவிழ்ந்துவிட்டது
எங்கள் தெரு பிள்ளையார் கோவிலுக்கு குடமுழுக்கு
விராட் கோலி சதமடித்தார்
ஒன்றுவிட்ட பெரியப்பா இறைவனடி சேர்ந்தார்
குட்டிப் பயலுக்கு வயிற்றுப்போக்கு
ஒரு கதையையும் எழுதினேன்
அதுபாட்டுக்கும் எதன் மேலும் விழாமல்
நடந்து சென்று அடுப்பு சாம்பலில் சுருண்டு படுத்து கொண்டது.

Sunday, October 28, 2018

Sahitya Akademi yuva puraskar 2018 acceptance speech 27.10.18

Vanakkam
I come from the land which embraced the whole world as  “yaadhum oore yaavarum keleer” several centuries before. The land that created Thiruvalluvar, Ilango, Andal, Kamban and Bharathi.

Gandhi is neither a Mahatma nor the father of a nation, for me he is a failed philosopher, a wounded warrior, a wretched grandfather whom I adore and feel close to. He is a harmless scapegoat who can be blamed for every misery. In times of disquiet I converse with him.  In our times, Don’t we have any other choice than to live with our fractured selves ? Free market was supposed to be the panacea for all the troubles of India. But after the euphoric first decade post liberalisation, the historical wounds fester. In lies, manipulation and half-truth the wound still bleeds. Truth is dead, atleast in the allegorical sense, like in an Orwellian world. Today truth is manufactured and customised. What could I do? unlike Bapu I am  puny, imperfect, indifferent and lazy.  I imagine Bapu looking at me with his reassuring toothless grin and saying ‘So were our times. So was every time in the past, Every era has its own distress and unrest to live with. Face it, seek it, embrace it.’ Then he disappeared in the mist.

And what would a ‘not so courageous’ man do? As Javier Cercas says, “Fiction saves, reality kills”. I read and write. I hide, I debate, I project and I dissipate myself.

In a world that is increasingly paranoid and polarized, Art is a powerful tool, or rather the only tool against dangerous stereotypes. Art is all that we have when propaganda dents our deepest selves and alters our sub conscious. Fiction is a way to retain our private universe. I read fiction, I live a hundred lives, I live in the fictional town of the past, Vishnupuram and confront the deluge that encompasses everything. I live in a small mansion in a crowded street and face the drought along with Jamuna, the drought that destroys compassion. I am in the courtroom where Mr. K is sentenced during  the trial anxiously. I am there in the shores of Crete, where Zorba dances and laughs merrily as if there is no tomorrow.

I create my universe, in ‘Thimingilam,’ in ‘Vasudevan’, where I face the question that torments me, the meaning and meaninglessness of our life. I lose myself in the grips of ancient myths, they surface in my stories as images. I write to keep myself sane, I write to preserve my occasional insanity. I write to know myself, I write to heal, sometimes to purge. I write because I know that I am no Bapu, and never can I be. I have to live with this naked truth, with my hypocrite self. Being a hypocrite is easy when we are unaware of it. Being a vigilant hypocrite, I have nowhere else to go but to fiction. Hypocrisy is the fuel of my creativity. Once we learn to live with it, we may even start loving the life being  in the conflict zone always and the world looks beautiful.

I sincerely thank my publisher ‘Yavarum’and their publishing team, especially Mr. Jeeva Karikalan for trusting me. My heartfelt gratitude for writer Jeyamohan, who is a father  figure to me and a mentor. Warm hugs to the friends of Vishnupuram literary circle and Padhakai ezine, for they provided a learning platform for me. Thanks would not suffice for Mr. Baskar, who played a crucial role in editing my writings.


The arrival of two important persons in my life officially kick-started my creative life: my wife Manasa, who, being a creative person herself, knows the turbulence of the creative process. She inspires me. Our son Sudhir, fosters my creativity through his presence and inquisitiveness.

I dedicate this Sahitya Akademi Yuva Puraskar award to my mother Smt. Ramadevi, for being a pillar in our lives, standing steady and strong amidst the torments of life.

Thank you
Suneel Krishnan