Sunday, September 1, 2013

ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே

நண்பர் ஒருவர் நாகராஜனின் குறத்திமுடுக்கு குறுநாவலுக்கான சுட்டி அனுப்பியிருந்தார். எப்போதோ ஆம்னிபஸ் இணையதளத்தில் நாளை மற்றொரு நாளே குறித்து எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது, அதை இங்கு மீள் பதிவு செய்கிறேன்.  
--------------------

நண்பர்களுடனான விவாதத்தின்போது, ஒரு நண்பர் சொன்னார், ‘ஒரு நாள் பிறருடைய புலன்களுக்குச் சிறைபடாத ‘ஹாலோ மேன்களாக’ மாறும் வாய்ப்பு கிட்டினால் நாம் செய்யும் முதல் காரியமே நம்மைப் பற்றி நாம் கொண்டுள்ள மிகையான மகானுபாவ பிம்பங்களுக்குப் பின் ஒளிந்திருக்கும் உண்மை முகத்தை நமக்கு காட்டிவிடுவதாக இருக்கும்’. அவரை கோபமாக எதிர்த்து விவாதித்து மறுத்தேன், ஆனால் நம் லட்சிய பிம்பங்களைக் கலைக்கும் இந்த அவநம்பிக்கை செருப்பில் ஏறிய முள்ளாக என்னைக் குத்திக்கொண்டே இருக்கிறது. ஆகாய விமானத்தின் தரை நிழல்போல அற்பத்தனங்களும், சல்லித்தனங்களும் மானுட வாழ்வில் தவிர்க்க முடியாதவை போலும்.  அவற்றைத் தாண்டி வருவதும், அழித்து எழுவதும் சாத்தியமா என்று தெரியவில்லை. குறைந்தபட்சம் புரிந்து ஏற்றுகொள்வதைத் தவிர வேறு வழியேதும் இல்லை. 





ஜி நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளே நாவலின் முன்னுரையில் நாகராஜன் ஒருமுறை சொன்னதாக ஜெ.பி. சாணக்கியா குறிப்பிடும் ‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ எனும் இந்த ஒற்றை வரியை, நாவலை வாசித்து முடித்தது முதல், ஒரு மந்திரத்தைப் போல் மீண்டும் மீண்டும் மனம் உச்சாடனம் செய்துகொண்டிருக்கிறது. சல்லித்தனத்தின் மகோன்னதம், மகோன்னதமான சல்லித்தனம், சல்லித்தனமும் மகோன்னதமும் ஒன்றையொன்று இட்டு நிரப்பிக் கொள்கின்றன.


நாகராஜன் நாவலின் தொடக்கத்தில் சொல்வது போல்

“இது ஒரு மனிதனின் ஒரு நாளைய வாழ்க்கை. நீங்கள் துணிந்திருந்தால் செய்திருக்கக்கூடிய சின்னதனங்கள், நிர்பந்திருக்கப்பட்டிருந்தால் காட்டியிருக்கக்கூடிய துணிச்சல்,....இவையே அவன் வாழ்க்கை. அவனது அடுத்த நாளைப்பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டாம், ஏனெனில் அவனுக்கும் நம்மில் பலருக்குப் போலவே- நாளை மற்றுமொரு நாளே!”   

முந்தைய நாள் போதையின் தொடர்ச்சியாக தான் கண்ட கனவிலிருந்து தத்தித் தடவி விழித்தெழ முயல்வதிலிருந்து அவனது அன்றைய தினம் தொடங்குகிறது. நண்பனின் மனைவி ராக்காயி மோகனாவாக மாறி ‘தொழிலுக்கு’ இறங்கத்  தயார் என்று அவனிடம் அறிவிக்கிறாள். முத்துசாமியை சந்திக்கிறான், அவனுக்கு கைம்பெண் ஒருத்தியை ‘ஏற்பாடு’ செய்கிறான், இடையில் சாராயக் கடையில் ஒரு சில்லுவண்டி தகராறில் ஈடுபடுகிறான், முந்தைய நாள் போதையில் நெறி பிரண்ட ஒரு ‘பெரிய மனிதனை’ மிரட்டி காசு பிடுங்குகிறான், தேவி லாட்ஜில் இளைப்பாறி சூடான சோஷலிச விவாதத்தை வேடிக்கை பார்க்கிறான், தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தான் ‘சேர்த்துக் கொண்ட’ மீனாவிற்கு வேறு ஏற்பாடு செய்ய தரகர் அந்தோணியை சந்திக்கிறான், வீடு திரும்பும் வழியில் ரோட்டில் ஒரு சில்லறை தகராறில் இழுபட்டுக்கொண்டிருந்த தன்னுடைய நீண்டநாள் பகையாளி சோலை பிள்ளையின் மரணத்தை சாத்தியப்படுத்தி, அந்தக் கொலைக்கு சாட்சியாகி சிறைகம்பிகளை ஊடுருவும் வெளிச்சத்தில் அன்றைய தினத்தை மங்கலாக நினைவுகூர முனைவதோடு அவனுடைய அன்றைய தினம் முடிவடைகிறது.

கந்தனின் ஒரு நாளை நம்முன் காட்டும் நாகராஜன், அதனூடாக மெல்லிய நினைவுகளாக பல கதாப்பாத்திரங்களை அறிமுகம் செய்கிறார். காதலில் நசிந்து தூக்கிட்டு மரணித்த அண்டை வீட்டு பரமேஸ்வரன், கடும் காய்ச்சல் வந்து மரித்துப்போன அவனுடைய மகள் கீதா, கந்தனிடம் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிய மகன் சந்திரன், அவனை வளர்த்த ஆயிஷா பீவி, காய்கறி மார்கெட் மொத்த வியாபாரி சுப்பையா செட்டியார், அவருடைய ஆசைநாயகி ஆங்கிலோ இந்திய ஐரீன் என பல துணைபாத்திரங்கள் நினைவுகள் வழியாகவே கட்டமைக்கப்படுகின்றன. 

லாரியின் நுனி மோதி மூளை பாதித்து கபே கபே என்று உளறி அரற்றும் அண்டைவீட்டு சிறுமி ஜீவா அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உளறளற்ற வெறும் மௌனத்தில் அடங்குகிறாள். பத்து ரூபாய் காசிற்காக இளமை காலத்தில் நிர்வாணமாக ஓடிய அந்தோணி அதற்குபின் தான் கண்டடைந்த மகத்தான ஞானவாக்கியத்தை கந்தனுக்கு போதிக்கிறார், ‘இந்தப் பணமே ஒரு மானங்கெட்ட விஷயம்’.  கருப்பையா டிரைவரின் சாட்சியக்கதை ஒன்று இடையில் ஓடுகிறது, தேவி லாட்ஜ் உருவான கதையும் குறுக்கே விழுகிறது. ஏட்டு ‘பொடியன் பொன்னுசாமி’ போட்ட பொய் வழக்குக்காக முதன் முதலில் கோர்ட்டில் தானே வாதாடிய நினைவு வந்து மீள்கிறது. 

சோஷலிச- கம்யுனிச விவாதங்கள் நாவல் முழுவதும் அவ்வப்போது வெவ்வேறு குரல்களின் வழியாக எள்ளல் தொனியில் எழுந்துக்கொண்டே இருக்கின்றன. புரட்சி எழுச்சியில் உலகை புரட்டிவிட முடியும் என கனவு காணும் முத்துசாமிக்கும் நாவலின் நாயகன் கந்தனுக்கும் நடக்கும் உரையாடல் இது:

“இந்தச் சமுதாயத்துலே எத்தனையோ கொடுமைகள் நடக்குது” என்றான்.

“நாமும் கொஞ்சம் கொஞ்சம் கொடுமைகள் செய்யலாங்கறே, இல்லே?” என்றான் கந்தன்.

“நாமா ஒன்னும் கொடுமைகள் செய்யலே, சமுதாய அமைப்பு நம்மை அப்படிச் செய்ய வைக்கறது”

“உம்”

“உதாரணமா- அண்ணே, கோவிச்சுக்காதீங்க- நீங்க செல தப்புப் பண்றீங்க இல்லே;, அதுக்கெல்லாம் என்ன காரணம்?”

“கொளுப்பு தான்”

“இல்லண்ணே வறுமைதான் காரணம்”

சாமானிய மனிதன் அறிந்திடாத வேறோர் உலகம் உண்டு, அங்கு மீறல்கள் இயல்பாகவும், ஒழுக்கம் மீறல்களாகவும் பார்க்கப்படும். நாகராஜனின் புனைவுலக மாந்தர்கள் மீறல்களை தங்கள் இயல்பாக கொண்டவர்கள், அது சார்ந்த எந்த நியாயப்படுத்தலும் அவர்களுக்கு தேவையில்லை. தங்கள் நிலைக்காக எவரையும் அவர்கள் நொந்துக்கொள்வதில்லை. சவரம் செய்யும் சிறுவனின் கை உராயும்போது கந்தனுக்கு ஆம்பிளைத்தனமான ஆசை முளைக்கிறது. கோவில் நிலத்தில் இயங்கும் தேவி லாட்ஜில் நடக்கும் அக்கிரமங்களைக் கண்டு முதலில் பொங்கி பின்னர் சமரசத்திற்கு வந்து ‘சகல வசதிகளையும்’ அனுபவிக்கத் துணியும் கோவில் தர்மகர்த்தா, கல்யாணமான பெண் என்றால் ஒரு ரேட், ஆகவில்லையென்றால் ஒரு ரேட் என கணக்கு வைத்து கருக்கலைப்பு செய்யும் டாக்டர் என்று புனித பிம்பங்களை உடைப்பதில் நாகராஜனுக்கு ஒரு அலாதியான இன்பம் போலிருக்கிறது.       

எது அறம்? எது ஒழுக்கம்? தன் மனைவியை அவளுடைய இசைவோடு தொழிலுக்கு அனுப்புகிறான் கந்தன், நண்பனின் மனைவியை அவனுக்குத் தெரியாமல் அவளுடைய விருப்பத்தின் பேரில் தொழிலில் ஈடுபடுத்தத் துணிகிறான், ஏமாற்றி காசு பறிக்கிறான், தக்க சமயத்தில் தன்னுடைய வன்மத்தை தீர்த்துக்கொள்ள சூழலைப் பயன்படுத்திக் கொள்கிறான், ஆனால் அதே கந்தன் காசுக்காக ஆசைப்பட்டு கருத்தடை ஆபரேஷனுக்கு ஒரு இளைஞனை பிடித்துக்கொடுத்த தரகனை சாராயக்கடையில் சாத்துகிறான், உடல்நிலை நொடிந்து கொண்டிருக்கிறது என்றுணர்ந்து மனைவிக்கு மாற்று ஏற்பாடு செய்கிறான். மனிதனுடைய வாழ்வு சல்லித்தனத்திற்கும் மகத்துவத்திற்கும் இடையில் ஊசாலடிக் கொண்டிருக்கிறது. மகத்துவத்தின் ஒவ்வொரு பாய்ச்சலுக்குப் பின்னும் சல்லித்தனத்தின் சம அளவிலான விசை இருக்கிறது என்பது பௌதிக விதி போலும்.

மிக நுட்பமான பகடிகளும், அங்கதங்களும் சிதறிக்கிடக்கும் இந்த நாவலை, விளிம்பு நிலை மக்களின் வாழ்வை உக்கிரமாகவும் அதேநேரம் பகடிகளுக்கும் அங்கதங்களுக்கும் குறைவில்லாமலும் சித்தரித்த மற்றொரு முக்கிய படைப்பான ஜெயமோகனின் ஏழாம் உலகத்துடன் இணைத்துப் பார்க்கலாம் என்று தோன்றியது. மாங்காட்டு சாமியும், ராமப்பனும் ஏழாம் உலகத்தை சமூக தளத்திலிருந்து ஒரு ஆன்மீக தளத்தை நோக்கி மெல்லக் கொண்டு சென்றார்கள். கந்தனுக்கு ஆன்மீகத்தை பற்றியும், கடவுளை பற்றியும், மீட்சியை பற்றியும் கவலையில்லை, அது அவனுக்குத் தேவையும் இல்லை, ஏனெனில் அவன் அன்றைய நாளுக்காக மட்டுமே வாழ்பவன்.

 நாகராஜனின் உலகத்திலும் அனுபவங்களால் முதிர்ந்த ஞானி ஒருவர்  உண்டு, அவர் தரகர் அந்தோணி, எனினும் அவர் வேறு வகையான மனிதர். சூழ்ச்சியே மனிதனை மனிதனாக்குகிறது, பிற மிருகங்களில் இருந்து அவனை வேறுபடுத்தி, வாழ்விற்கு அர்த்தம் கொடுப்பதே அதுதான் என்று நம்பும் மனிதர் அவர். பல நுண்ணிய சித்திரங்களை தன்னுடைய நாவலில் அளிக்கிறார் நாகராஜன், சாராயக் கடையில் பய பக்தியுடன் எதிரில் நிற்கும் சீடனுக்கு வேதாந்தம் போதிக்கும் சாராய சாமியார், கொத்து வேலைக்காக காத்திருக்கும் அனைவரையும் ஏற்றிக் கொண்டு போகும்போது, முதிர்ந்த கிழவரும், இளம் கர்பிணி சிறுமியும் மட்டும் எஞ்சி இருப்பார்கள்.  வேலைக்கு செல்ல முடிவெடுத்து நின்ற முதிய கிழவரை வந்து ஒரு குழந்தை "தாத்தா வாங்க வீட்டுக்கு போகலாம்" என்று அழைக்கும், இந்த ஒற்றைவரியின் வழியாக அந்த கிழவரின் வாழ்க்கை கதையையும் அன்றைய நிலையையும் சொல்லிச் செல்கிறார் நாகராஜன். 

நடனமாடும் பவுண்டேய்ன்களைப் (dancing fountains) பார்த்திருப்போம், ஒரே மாதிரிதான் அது ஒவ்வொரு முறையும் ஆடும், ஆனால் அதற்குப் பின்னணியில் தாளகதியை மாற்றி வெவ்வேறு நிகழ்வுகளாகக் காட்டுவார்கள். அதைப்போல்தான் வாசிப்பின் அனுபவங்களை பகிர்தல், ஒவ்வொருவரும் நிகழ்வுகளைத் தான் உணர்ந்த தாளகதியின் லயத்தில் பதிவு செய்வது அதன் வெவ்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்வதாக இருக்கும்.

மனிதனின் அன்றாடம் சலிப்பூட்டுவது, திருப்பங்கள் ஏதுமற்ற மந்தமான பயணம், ஆனால் அந்த அர்த்தமற்ற அன்றாடங்களின் தொகுப்பில், நாம் கடந்து வந்த தூரத்தைத் திரும்பி நோக்கினால் அதன் விரிவு நமக்கு பிரமிப்பாகத் தென்படலாம். இந்த நாவலில், கந்தனின் ஒரு நாள் என்பது ஒரு சட்டகம்.  சட்டகத்திற்குள் சிறைபட்ட  நதியின் முப்பரிமாண ஓவியம் போல், அதன் அத்தனை நீர்குமிழ்களும், சுழிப்புகளும், நீரலைகளும் துல்லியமாக தென்படுகின்றன. அடுத்த நொடி அவையாவும் கரைந்து போயிருக்கக்கூடும், ஆனால் இந்த ஓவியத்தின் காலமற்ற ஒற்றை நொடியில் அவை உறைந்து நிற்கின்றன. அதற்கு முன் அங்கு எத்தனையோ குமிழிகள் தோன்றி மறைந்திருக்கும், இனியும் தோன்றும், அவையும் இவை போலிருக்கும், ஆனால் இவையல்ல. நாளை மற்றொரு நாளே - அந்த நாள் ஒவ்வொரு நாளுமாய் அதன் சட்டகத்தில் பூரணமாக நிறைந்து வழிகிறது.  

கந்தன் தன்னுடைய மகள் கீதா ஆசையாக விளையாடிக் கொண்டிருக்கும் பலூனை சிகரெட்டால் சுட்டு ‘டப்பென்று’ உடைக்கிறான். அழுது அரற்றுகிறாள், இப்போதே தனக்கு பலூன் வேண்டும் எனப் பிடிவாதம் பிடிக்கிறாள். மெல்ல சமாதானம் செய்து வெளியேறுகிறான் கந்தன், மீண்டும் வீட்டிற்கு வரும்போது அனலாகக் கொதிக்கிறது அவளது உடல், ஓரிருநாளில் வில்லென வளைந்து மரணமடைகிறாள். “குழந்தைகள், ஆசையா ஒன்ன வச்சிருக்கும்போது அத அழிக்கக்கூடாது’ என்று பக்கத்து வீட்டு பரமேஸ்வரன் சொல்லும்போது அப்படி இருக்குமோ என்று யோசிக்கிறான். 

நாகராஜனின் இந்த நாவலின் மையப்படிமமாக இந்த நிகழ்வையே நான் காண்கிறேன். விளையாடிக்கொண்டிருக்கும் பலூன் உடைந்து அழும் குழந்தை, ஒரு பொருளின் அழிவை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் கந்தன், தன்னைப் போலவே அக்குழந்தையும் அதை விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புகிறான். கந்தன் பிறர் போற்றும் எதையும் பொருட்படுத்துவதில்லை, சமூக பொதுஅறங்களும் விழுமியங்களும் விளையாட்டுக்குச் சுட்டு உடைக்கப்பட வேண்டிய ஊதிப்பெருத்த பலூன், அவ்வளவுதான்.

அந்தோணி, கந்தனிடத்தில் சொல்லும் அறிவுரை ஒன்றுண்டு, “தம்பி  ஏமாத்தறவங்களும் ஏமார்றவங்களும் இருக்கிறதுதான் உலகத்தின் தன்மை; அதன் அழகுன்ட்டுக்கூட எனக்குப் படுது.” ஆம் ஒருவகையில், இதுதான் நாகராஜனின் படைப்புகளின் தன்மையும் அழகும்கூட.
    
நாளை மற்றொரு நாளே
ஜி.நாகராஜன்
தமிழ், நாவல்
காலச்சுவடு வெளியீடு
-சுகி 

2 comments:

  1. வணக்கம் நண்பரே...

    வலைச்சரத்தில் தங்களைப் பற்றி தெரிவித்துள்ளேன்... நேரமிருப்பின் கீழிருக்கும் இணைப்பின் வழியாக வலைச்சரம் வந்து பாருங்கள்...

    நன்றி...

    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_3.html

    ReplyDelete