Thursday, August 29, 2013

வாசுதேவன் சிறுகதை- சில எதிர்வினைகள்

இக்கதைக்கு வந்த எதிர்வினைகளை ஒட்டுமொத்தமாக தொகுத்து வைத்துள்ளேன். அவை பாராட்டுகிறதா நிராகரிக்கிறதா என்பது முக்கியமல்ல. கதையை வாசித்து காழ்ப்பின்றி ஆற்றப்படும் அத்தனை எதிர்வினைகளும் முக்கியமானதே, ஆக்கப்பூர்வமானதே. ஒட்டுமொத்தமாக அனைத்து எதிர்வினைகளையும் சேர்த்து வாசிக்கும் போது ஒரு முழுமையான சித்திரம் கிட்டுவதாக தோன்றுகிறது.

பிரதீப் பாரதி ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில்...

வாசுதேவன் :
சில ஆண்டுகளுக்கு முன் சுனில் எழுதிய ஒரு corporate guru வை பார்க்க போன கதைக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் தெரியவில்லை..ஹோர்லிக்ஸ் குடித்த வீட்டுக்கு துரோகம் செய்ய கூடாது போன்ற வரிகள் கதை மிக எளிமைபடுத்தி நீர்த்துப்போக செய்கிறதோ என தோன்றுகிறது..ஏதோ ஒன்று கதையில் ஓட்ட விடாமல் செய்கிறது. கதை literal ஆக முடிக்கப்பட்டு இருந்தாலும் கூட முடியாமல் தொக்கி நிற்பதாகவே தோன்றுகிறது. பார்த்துப்ப அவனுக்கு சூடு ஒத்துக்காது போன்ற வரிகள் வலிந்து உருவாக்கப்பட்ட தோற்றத்தை அளிக்கின்றன.

பிரதீப் பாரதி எனது கல்லூரி சீனியரும் கூட - அவர் தனிமடலில் பகிர்ந்து கொண்டது..

கிட்டத்தட்ட plot similar என்றுதான் சொல்ல வேண்டும்.. கதை நாயகன் + நண்பன்.. வழியில் எதிர்கொள்ளும் ஒரு சூழல்..அதை ஒட்டிய நாயகனின் அற சிக்கல் , மன விளையாட்டுகள் பின் சட்டேன்று வடிவது போல , குறிப்பாக சொல்ல போனால் அந்த அற வினாக்களுக்கு / மனதிருக்கு தீர்வாக “முடிவு”
முதல் பாதியில் மொழியின் வீச்சால் குருஜி கதையில் இருந்து மேலெழுந்த கதை, நீ அவனின் அம்மாவிடம் சொன்ன பிறகு கீழ் இறங்கி விடுகிறது..

குழந்தை பொம்மையை பிய்த்து விளையாடி கொண்டு இருந்தது என்ற இடத்தில உச்ச அதிர்வை தரும் கதை அடுத்து வந்த தெலுகு வரிகளால் அதை மழுங்க அடிக்கிறது ..தெலுகு தெரியாத என போன்ற வாசகர்கள் அதை எப்படி கடப்பார்கள் ? இந்த கதையை பொறுத்தவரை கதை தரும் அக எழுச்சியே பிரதானம்..நாவல் என்றால் அந்த வரிகள் பரவில்லை..நீண்ட விவாதங்களுக்கு அது வழி கோலும் ..சிறுகதையின் முடிவில் இது மாதிரி வரும் வரிகளை தேடி பிடித்து அர்த்தம் தெரிவதற்குள் அந்த சூழ்நிலை உருவாக்கிய மனஎழுச்சி வடிந்துவிடும்.

இன்னொன்று தொடர்ச்சியாக கட்டுரை எழுதுவதால் , கதை கட்டுரை வடிவை அடைகிறதோ என்று சந்தேகம்..வடிவம் முக்கியம் இல்லை என்று கொண்டால் கூட, ஒரு ரசவாதம் நிகழும் வாய்ப்பை தவற விடுகிறதோ..

1. தெலுகு குடும்பமாக மட்டுமே காட்ட வேண்டுமா..ஒரு வேலை தமிழ் குடும்பமாக காட்டி இருந்த அந்த இறுதி வரிகள் தமிழில் இருந்து இருக்கும்..இந்த இறுதி வரிகளுக்காகத்தான் ஆரம்பத்தில் இருந்து தெலுகு பேசப்பட்டதா?

2.அந்த horlicks வரிகள் ..நியாபடுத்த நண்பன் வாயிலாக சொல்லப்பட்டுள்ளது என்று நினைக்கிறன்..அதை வாசகனின் ஊகத்திற்கே விட்டு இருக்க முடியாதா? இல்லை நாயகனின் மன ஓட்டமாக சித்திரிக்க முடியாதா? அது ஒரு “அன்றாட பொது பயன்பாட்டு வரி” சட்டேன்ன்று சூழலை கீழ் இழுக்கிறது..கனவில் உள்ளவனை நாராசமாக கத்தி எழுப்புவது போல.

3. உரையாடல் கூட..பார்த்து ப்பா சூடு ஒத்துக்காது போன்ற வரிகள்..எப்படி சொல்ல்வது ..எதாவது யோசிக்கும் போது யாரவது பேசினால் கலைந்து போகுமே அது போல..நேரடி உரையாடலில் சொல்லாமல், இருந்து இருந்தால் வலிந்து திணிக்கபட்டது போல இருந்து இருக்காது என நினைக்கிறன்..

புதிய வாசகர்களுக்கு இந்த கதை வேறு மாதிரி கோணம் தரலாம்..ஆனால் உன்னை தொடர்ந்து கவனித்து படித்து வருபவன் என்ற முறையில், இது உனக்கு இன்று இந்த நிலையில் நீ எழுதிய கதை என்பது சற்று நெருடல்தான்..முழுமையாக வெளிப்படவில்லையோ என்றே நினைக்கிறன்

மதிப்புக்குரிய நண்பரும் இளம் எழுத்தாளருமாகிய ரா.கிரிதரன் குழுமத்தில் ஆற்றிய எதிர்வினை

அன்புள்ள சுனில்

நீங்க முன்னாடி எழுதிய கதையும் மருத்துவனின் அறம் சார்ந்த குழப்பங்களை மையமா வெச்சிருந்தீங்க. குறிப்பா ஆயுர்வேதமும் நவீன மருத்துவமும் முரண்படும் கருத்துகளை வெளிப்படையாகச் சொல்லாமல் பூடகமா காட்டி எழுதுவது போலிருக்கு. பூமியின் நாயகன், பூவுகலத்தைக் காப்பவன் என வேத காலத்து வாசுதேவனையும் , நவீன கடவுளர்கள் ரமணர்/அரவிந்தரும் காப்பாற்றணும் எனும் குறிப்புகளும் நல்லா வந்திருக்கு.

//ஹார்லிக்ஸ் குடிச்ச வீட்டுக்கு துரோகம் பண்ணக் கூடாது //

நம் நண்பர்கள் சூழலிலிருந்து இளங்கோவை சட்டென அடையாளம் காட்டும் வரி. உரையாடல்களில் நல்ல கவனம் தெரியுது. கதை சொல்லிக்கு அடிப்படையில் சில நம்பிக்கையின்மைகள் இன்னும் தெளிவா வெளிப்பட்டிருக்கலாம்னு தோணுது..மருத்துவத்தின் எல்லையை உணர்ந்தாலும் அதையும் மீறிய மனத்திடத்தின் சாத்தியம் பற்றிய வினாவை பல கட்டங்களில் நான் உணர்ந்திருக்கிறேன்..உங்க கதை அதை மீண்டும் சிந்திக்க வைத்திருக்கு.


பின்னூட்டப் பெட்டியில் தேன்மொழி சின்னராஜ் அவர்கள் போட்ட பின்னூட்டம்..

வாசுதேவன் -சுனில் கிருஷ்ணன்
வாழ்க்கையின் மிகப் பெரிய கேள்வியான “ஏன்” என்ற சொல்லுக்கு வலு சேர்க்கும் கதை .அதிலும் அந்தக் கடைசி வார்த்தை .. தெலுங்கை தாய்மொழியாகக் கொண்ட நான் இந்த வார்த்தையை எவ்வளவு முறை எளிதாக உச்சரித்திருப்பேன் ! ஆனால் இந்தக் கதையில் தான் அது எத்தகைய கனம் கொண்டு கிடக்கிறது ?

கூத்தாகிவிட்டதடி தோழி
என் ஆட்டம் கூத்தாகிவிட்டதடி
ஊழிக்காற்றாய் உன்மத்தமாய்
ஆடிய ஆட்டமெல்லாம்
கண்ணுக்கெட்டாத கரங்கள் ஆடிய
தோல்பாவைகூத்தானதடி தோழி
வெறும் தோல்பாவை கூத்தானதடி.


பயணம் கதை எழுதிய இளம் எழுத்தாளர் சிவேந்திரன் தனி மடலில் பகிர்ந்துகொண்டது 

தங்களின் கதையை வாசித்தேன்.உங்கள் கதையை நான் ஒரு வேறு முடிவுடனேயே வாசித்தேன்.மருத்துவர்கள் கைவிட்டபின் வாசுதேவனை இயலாமையால் தாய் தந்தை கைவிட்டுவிடுவார்களோ என்ற பதட்டம் வாசிக்கும் போது இருந்தது.தெலுங்கு புரியாவிடினும் முடிவை புரிந்துகொள்ள முடிந்தது.தெலுங்கை வீட்டுமொழியாகக் கொண்ட நண்பரிடம் இன்று தொலைபேசியில் அழைத்து தங்களின் கதையை வாசிக்குமாறும்.அதில் வரும் தெலுங்கு வசனங்களின் அர்த்தத்தை கூறுமாறும் சொல்லியுள்ளேன்  .மனிதன் எவ்வளவு திட்டமிட்டு வாழ்க்கையை நடத்த முயன்றாலும் எதிர்பாராமைகள் அவனை தூக்கி சருகு போன்று வீசிவிடுகின்றன என்பதுதான் கதை வாசித்த பின் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.தேன்மொழி சின்னராஜ் கதை குறித்த தனது கருத்தில் கூறியுள்ள பாடல் கதையின்  உணர்வு தரும் வீச்சை மேலும் அதிகப்படுத்திவிட்டது.

//இந்தக் குழந்த மட்டும் ஏதோ விளையாடிகிட்டு இருந்துச்சாம்.
பொம்மைகளின் கைகளையும் கால்களையும் கழுத்தையும் திருகி கோணலாக என்னமோ செய்து கொண்டிருந்தாள்.
இந்த இரண்டுவசனங்களின் பின்னும் புரியாமல் வரும் அந்த இரண்டு தெலுங்கு வசனங்களும்தான் மனதை அதிரவைத்தன.
எனக்கு தெலுங்கு புரியாதபடியால் எப்படி அர்த்தம்கொண்டேன் தெரியுமா?
தாய்:என்னடி செய்திருக்கிறாய்?

குழந்தை:முறிச்சுத்தா

தமிழில் எழுதியுருந்தால் எனது கற்பனைக்கான இடைவெளி குறைந்திருக்கும்.

மணல் வீடு ஹரிக்ரிஷ்ணன் - கூத்து கலைஞர் தனிமடலில் பகிர்ந்தது 

அன்பு சுனில் ஜெயமோகனின் வலையில் உங்கள் கதை வாசித்தபின்தான்  நட்பு அழைப்பு விடுத்தேன் .வாசு பாத்திரம் நெஞ்சில் நிற்கிறது . பாதசாரி அவர்களின்  காசி கதையில் கூட ஓரிடத்தில் இது மாதிரியான உணர்வு  நிலை  இருக்கும் . சில இடங்களில் அதிகமா விளக்கம் கொடுக்கறாப்புல தென்படுது. ( வாசுவோட அப்பா , அம்மா, ரெண்டுபேரும்  மகன பத்தி சொல்ற இடம் .)
இவண்

ஹரி

இளம் எழுத்தாளார் தனா (உறவு கதையை எழுதியவர்) பின்னூட்டப் பெட்டியில் எழுதியது

வாசுதேவன் கதையில் கதை சொல்லிக்கும் வாசுதேவனுக்குமான உறவு இணக்கமாவதை என்னால் உள்வாங்கிக்கொள்ளமுடியவில்லை. சூகி அதை ஒரு மேஜிக் மொமண்ட்டாக ஆக்கியிருந்தால் ஒட்டுமொத்தகதையும் வலுவாயிருந்திருக்கும். காலப்போக்கில் உருவான இணக்கம் என்பது கதையில் எனக்கு பலவீனமாக தெரிந்தது. ஆனால் கதையின் முடிவு முகத்தில் அறையும் ஒரு எதார்த்தம். மிக உருக்கமான ஒரு கதை..

மது - பின்னூட்டப் பெட்டியில் எழுதியது 

/ஆனால் கதையின் முடிவு முகத்தில் அறையும் ஒரு எதார்த்தம். மிக உருக்கமான ஒரு கதை/

‘வாசுதேவன்’ கதைசொல்லிக்கு கிடைத்திருக்கக்கூடிய ஒரு பெரும் வைணவ தரிசனத்தை முன்வைக்கிறது. ஒரு சராசரி உருக்கமான கதையிலிருந்து இதை மேலேற்றுவது இந்த தரிசனம்தான்


சிலிகான் செல்ப் இணைய புகழ் - ஆர்.வி எழுதியது 

வாசுதேவன் கதையில் எனக்கு முதலில் உறைத்த விஷயம் முடிவில் வரும் தெலுகு வசனங்கள்தான். “ஊரிக்கதான்” என்றால் “சும்மாதான்” என்று எல்லா தமிழனுக்கும் எப்படி புரியும்? அப்படி கஷ்டப்பட்டு அதை ஒரு தெலுகு குடும்பம் ஆக்க வேண்டிய அவசியம் என்ன? சிறுகதையும் எனக்கு பிரமாதமாகப் படவில்லை.

இது ஹரன் பிரசன்னா எழுதிய குறிப்பு 

சுனீல் கிருஷ்ணன் எழுதியது. கதை கொஞ்சம் வேகமாகச் சொல்லப்பட்டுவிட்டது போலத் தோன்றியது. மனமாற்றம் இன்னும் தெளிவாக வாசகர்கள் நம்பும் வண்ணம் விவரிக்கப்பட்டிருக்கவேண்டும். தேவையற்ற விவரிப்புகளைக் குறைத்திருக்கலாம். இதுவும் நெகிழ்ச்சியான கதையே. அதில் இக்கதை ஓரளவு வெற்றியும் பெறுகிறது. கடைசி இரண்டு வரிகளில், நான் புரிந்துகொண்டதுபோல, வாசுதேவன் கருணைக் கொலை செய்யப்படுவதாகக் கொண்டால், அதற்கான மனமாற்றம் சரியாகச் சொல்லப்படவில்லை. இது பெரிய பலவீனம். நான் புரிந்துகொண்டது தவறு என்றால், இன்னும் புரியும்படியாகச் சொல்லியிருக்கலாம்!

பின்னூட்டப் பெட்டியில் வந்திருந்த பொன் முத்துகுமார் அவர்களின் கருத்து 

வாசுதேவன் :

தனது வைத்திய முறையை முழுமையாக தங்களுடன் பகிர்ந்துகொள்ளாத, கற்றுக்கொடுக்காத மருத்துவரிடம் பயிற்சி எடுக்கும் – நம்பிக்கையற்ற – அலுப்பு கூடிய ஒரு இளநிலை மருத்துவனுக்கு வாசுதேவனுக்கு கொடுக்கப்படும் வைத்தியம் ‘இதெல்லாம் எதற்கு’ என்று தொன்றுகிறது. என்னால் இதை புரிந்துகொள்ள முடிகிறது. என் அக்கா கணவரின் தாய்வழி தாத்தா கம்பீரமாக உலா வந்தவர். பக்கவாதம் தாக்கி, உடலின் வலப்பகுதி கொஞ்சம் கொஞ்சமாக செயலிழந்து கிட்டத்தட்ட கார்டூன் பாத்திரம் மாதிரி ஆகி முடிந்து போனவர். (எங்கள் ஊரில் மரண தேதி-நேரத்தை சரியாக கணிக்கும், LIM மருத்துவரிடம் பயிற்சி பெற்ற ஒரு ‘மருத்துவர்’ இருந்தார். அவர் சொன்னது போல நள்ளிரவில் நிகழ்ந்தது மரணம்) இதை நேரில் பார்த்த முதல் மரணம் என்று நினைக்கிறேன். என் ஆரம்ப இருபதுகளில் பெரிய தத்துவ தொந்தரவெல்லாம் இல்லை. ஒரே ஒரு கேள்விதான். ‘ஏன்’. மேலும் ஓரிரு மனதை பாதிக்கும் மரணங்கள் பார்த்ததும் இதே கேள்விதான் மனதுக்குள்.

சுஜாதா சொன்னது போல ‘வாழ்க்கையில் சில ஏன்-களுக்கு பதிலே இல்லை’ என்று சொல்லிக்கொண்டதுதான் மிச்சம்.

கள்ளங்கபடமற்ற குழந்தை – கூட்டை நிறைய பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருக்கும் பெண் குழந்தை – பொம்மைகளின் கைகளையும் கால்களையும் கழுத்தையும் திருகி கோணலாக என்னமோ செய்துகொண்டிருக்கும் குழந்தை இங்கே அதற்கு பதில் சொல்கிறதோ ? “சும்மா-தான்” (நன்றி – ஆர்வி)

// உருக்குலைந்து துருப்பிடித்த இரும்பின் மீது உயிர்ப்புடன் படர்ந்திருந்தது கிளிப்பச்சை கொடி ஒன்று. இளநீலப் பூக்கள் ஆங்காங்கு எட்டிப்பார்த்தன. //

இங்கே வாசுதேவன் கூட உருக்குலைந்து துருப்பிடித்த இரும்பு போலத்தான், இல்லையா ?. அங்கே உயிர்ப்புடன் என்ன கொடி படர்ந்திருந்தது, என்ன பூக்கள் பூத்திருந்தன ? தெரியவில்லை. அதன் மேல் போய் ஏன் உயிர்ப்புடன் படர்ந்து பூத்திருக்க வேண்டும் ?

சும்மாதான்.

அன்புடன்
பொன்.முத்துகுமார்.விஷால் ராஜா ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து ...

//“வாசுதேவன்” கதையின் தொடக்கம் வெகு அட்டகாசமாய் இருந்தது. அதுவும் வாசுதேவன் பற்றிய விவரணைகள் வெகு துல்லியமாக வந்திருக்கின்றன. அந்த மருத்துவரின் கதாபாத்திரம் மட்டுமே தெளிவின்றி இருந்தது. மற்றபடி உயிர் வாழ்தல் என்பதன் அர்த்தம் குறித்த பரிசீலனைகளும் குழப்பங்களும் அறவுணர்வோடு வெளிப்பட்டிருக்கின்றன. கதையின் தொடக்கத்திலிருக்கும் உணர்வெழுச்சி இறுதியில் மொத்தமாக அடங்கிவிடும்போது இயல்பாக கைக்கூட வேண்டிய அமைதி அந்த குழந்தையின் கதாபாத்திரத்தால் சிதறிவிட்டதாகவே நான் நினைக்கிறேன். அது கொஞ்சம் நாடகத்தனமாக இருந்தது

பின்னூட்டப் பெட்டியில் திரு கேசவ மணி இட்டிருந்த பின்னூட்டம் 

கச்சிதமான வடிவமும் நேர்த்தியான சித்தரிப்புகளும் கொண்டது சுனீல் கிருஷ்ணனின் வாசுதேவன் கதை. என்ன ஏது என்று சொல்லாமல் ஆரம்பத்தில் பூடகமாக கதையை நகர்த்திச் செல்வதன் மூலம் கதையை ஒரு எதிர்பார்ப்புடன் படிக்கச் செய்துள்ளார் ஆசிரியர். கதை நடக்கும் வீட்டின் புறமும் அகமும் சில வரிகளின் வர்ணனை மூலம் நம் கண்முன் கொண்டு நிறுத்துகின்றன. கதை ஒரே நேர்கோட்டில் செல்லாமல் சற்றே முன்னும் பின்னுமாக மாற்றி கதைசொல்லியிக்கும் அமைப்பு கதைக்கு வலு சேர்க்கிறது.

இவையெல்லாம் கதையின் வெளித்தோற்றத்தின் சிறப்பாகச் சொல்லலாம்.

கடவுள்தான் நம்மை அடிக்க முடியும். நாம் கடவுளை அடிக்க முடியுமா என்ன? நன்றாக இருக்கும் ஒருவனை அடிபடவைத்து அவனைக் கோமாவில் ஆழ்த்தி, அவனையும் அவன் குடும்பத்தாரையும் துன்பப்படச் செய்யும் இவற்றுக்கெல்லாம் அர்த்தமிருக்கிறதா என்ன? என்ற கேள்வி கதையினூடான வாசிப்பில் நம் மனம் முழுதும் வியாபிக்கிறது. ஆனால் கதையைப் படித்து முடித்ததும் இவற்றுக்கெல்லாம் ஏதோ அர்த்தம் கட்டாயம் இருக்கவேண்டும் என்று தோன்றிவிடுகிறது. அர்த்தமில்லாமல் ஒன்றை இறைவன் நிகழ்த்தவேண்டிய அவசியம் இல்லை என்றும் படுகிறது.

மருத்துவத் தொழில் செய்யும் ஒருவன் அதை வெறும் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் மட்டும் செய்யாமல், மனித நேயத்துடனும் அக்கறையுடனும் நடக்கவேண்டும் என்ற பாடத்தை கதைசொல்லிக்குக் காட்டுவதற்காகவே கடவுள் இத்தகைய காரியத்தைச் செய்திருக்கிறார் என்று வேறோர் அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்ளும் போது, கதையின் வீச்சு புலப்படுகிறது.

இவையெல்லாம் கதையின் உள்ளடக்கம் நமக்குள் எழுப்பும் சிந்தனைகளாகச் சொல்லலாம்.

ஜடாயு குழுமத்தில் ஆற்றிய எதிர்வினை ..

வாசுதேவன்,  வாசலின் நின்ற உருவம் இரண்டு கதைகளிலும் நோயும், மரணமும் விளையாடும் குரூர விளையாட்டு  செறிவாக சித்தரிக்கப் பட்டுள்ளது. வாசுதேவன்  கதையின் “சும்மா தான்” என்ற கடைசி வரி  கதைக்கு மிக முக்கியமானது - அதை தெலுங்கிலும் எழுதி விட்டு,  பொருளும் தராமல் இருந்தது  - எழுத்தாளரே,  நோயாளி மீது மட்டுமல்ல, எங்களிடமும் கொஞ்சம் கருணை காட்டுங்க என்று சொல்லத் தோன்றுகிறது :) கதையில் வரும்  இளம் ஆயுர்வேத டாக்டர்  ஜீவன் மஷாய்  (ஆரோக்கிய நிகேதனம்) சாயல் லேசாக உள்ளவர். //

வாசக விமர்சகர் மதுரை சண்முகம் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம் '

அன்புள்ள ஜெமோ
சுனீல்கிருஷ்ணனின் வாசுதேவன் ஒரு நல்ல முயற்சி. நேரடியான அனுபவம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதை வாசகர்கள் அனுபவிக்கும்படி மொழியிலே பதிவும் செய்திருக்கிறார். ஆனால் கதையில் இன்னும் சில விஷயங்கள் நடக்கவேண்டியிருந்தது. அது நடக்கவில்லை. கதையிலே அந்த வாசுதேவன் என்ற தொன்மப்பகுதி இணைக்கப்பட்டதுபோல இருந்தது. இயல்பாக அது வரவில்லை. வாசுதேவனைப்பற்றிய வர்ணனைகளில் எங்கும் அது இடம்பெறவில்லை. அதேபோல வாசுதேவனின் வாழ்க்கைநிலையும் அவனுடைய துக்கமும் என்ன வகையில் இந்தக்கதையில் அர்த்தம் அளிக்கிறது என்று சொல்லப்படவில்லை. அதுவும் பெரிய பிரச்சினைதான்.
அதாவது வாசுதேவன் பிணமாக வாழ்கிறான், சாகிறான். அவனுடைய பெற்றோருக்கு அவனைப்பற்றிய துக்கமும் ஏக்கமும் இருக்கிறது. அதை மருத்துவர்கள் உணர்கிறார்கள். அவன் இறந்ததும் அவனிருந்த இடம் அப்படியே காலியாகிறது. ஆனால் இதை சொல்வது வழியாக ஆசிரியர் என்ன சொல்ல வருகிறார்? ஒரு அனுபவம் கதை அல்ல. அந்த அனுபவத்திலிருந்து ஆசிரியர் பெற்ற தரிசனம்தான் கதை. அந்தத்தரிசனத்தைப்பார்த்து செல்லக்கூடியமுறையில் கதை அமையும்போதுதான் கதைக்கு வடிவம் உருவாகிறது. யூனிட்டி என்று சொல்லப்படுவது அதுதான். அதாவது பர்ப்பஸும் யூனிட்டியும் ஒன்றுதான். அது இந்தக்கதையில் அமையவில்லை. ஆகவே ஒரு வலுவான அனுபவமாக மட்டும்தான் இந்தக்கதை நின்று விடுகிறது.

சுனீல் கிருஷ்ணன் வாழ்க்கையைப்பற்றி அவர் என்ன அறிந்தார் என்பதைச் சொல்ல கதைகளில் முயலவேண்டும். கதையை எழுதும்போதே அந்த விஸ்டம் கதைக்குள் திரண்டு வந்தால்தான் அது இலக்கியம். தொடர்ந்து எழுதுவார் என்றும் அந்த ரகசியம் பிடிகிடைக்கும் என்றும் நம்புகிறேன் வாழ்த்துக்கள்.

இளம் எழுத்தாளர் அணுக்ரகா குழுமத்தில் எழுதியது

//'வாசுதேவன்' கதை பிடித்திருந்தது. மிகவும் தெளிவான சிந்தனையோட்டம். பல கேள்விகளை எழுப்பிக் கொண்டே செல்கிறது கதை. உடல் தன் ஆரோக்கியத்தை இழந்ததுமே, வாழ்க்கையைப் பற்றிய நமது அர்த்தங்களும் எப்படி மாறுகின்றன. இந்த கணத்தின் 'நானாக' இருக்கும் ஒன்று அடுத்த கணத்திலும் இருக்குமா? நம் வாழ்க்கை நாம் அறிய முடியாத ஒன்றால் தீர்மானிக்கப்படுகிறதா? அப்படியானால் எதற்குமே அர்த்தமில்லையா? 'அர்த்தமில்லை' என்பது போல கதை முடிகிறது. இது வேறு பதில்களைத் தேடி நம்மைப் போக சொன்னாலும், 'பதிலுக்கு' மாறாக கேள்வியுடன் நின்றிருந்தால், இன்னும் நீட்டித்த பாதிப்புடன் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது.

பின்னூட்டப் பெட்டியில் கார்த்தி எழுதியது

வாசுதேவன் கதை சொல்ல வருவதாக எனக்குத் தோன்றுவது, குழந்தையின் கையில் கிடைத்த பொம்மை போலத்தான் இயற்கையின் கையில் கிடைத்த மனிதன் என்பதுதான். குழந்தை அதன் விருப்பத்திற்கு விளையாடித்தீர்க்கிறது, இயற்கையைப்போல. ஆனால் அதனிடம் கள்ளம் கபடம் இல்லை. எனவே ஒரு மரணத்திற்குப் பின் மிகுந்த சோகம் கொண்டு, ஏதோ ஒரு சக்தியிடம் மன்றாடுவது எல்லாம், குழந்தையிடம் சென்று ஏன் பொம்மையை உடைத்தாய் என்று கேட்பதைப் போலத்தான். குழந்தை அதைத்தான் செய்யும், ஏனென்றால் அதான் அதன் இயல்பு. அது போல் தான் இயற்கையும். குழந்தையைப் போல இயற்கையை அறிந்தவர் வேறு யாரும் இல்லை. அந்த மரண வீட்டிலும் குழந்தை குதூகலமாக விளையாடிக் கொண்டுதான் இருக்கிறது.
நல்ல கரு தான். ஆனால் இன்னும் செறிவாக, நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கலாம்.

நண்பர் கோபி ராமமூர்த்தி குழுமத்தில் எழுதியது 

வாசுதேவன்
ஒரு அனுபவத்தின் விவரிப்பாகத்தான் இதைப் பார்க்க முடிந்ததே தவிர அதைத் தாண்டி வேறேதும் பெரிதாக இல்லை. ‘ஹார்லிக்ஸ் குடிச்ச வீட்டுக்கு துரோகம் பண்ணக் கூடாதுடா’ என்று வருவது உறுத்தலாகப் பட்டது. போதாததற்குக் கதை முடியுமிடத்தில் தெலுங்கில் வரும் உரையாடல்கள். நடையிலும் சுவாரஸ்யமில்லை.

கதையின் தலைப்பும் பொருத்தமாக இல்லை. வாசுதேவன் என்ற தலைப்பு எனக்கு எதையும் சொல்வதில்லை. தலைப்பிற்கும் கதையின் தொடக்கம், மைய ஓட்டம், முடிவுகளுக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்று நினைப்பவன் நான். வணங்கானை எடுத்துக்கொள்வோம். மாடன் மோக்ஷத்தை எடுத்துக்கொள்வோம். கதையின் எல்லாக் கட்டங்களிலும் தலைப்பு அதனுடன் உறவாடிக்கொண்டே இருக்கும்.

வாசுதேவன் என்ற விஷ்ணுவின் வியூக வடிவம் குறித்து ஏதோ சொல்ல வருகிறார், அதற்கும் கதைக்கும் ஏதோ தொடர்பு வரப்போகிறது  என்று எண்ணிக்கொண்டிருக்கும்போது இருவரிகளுக்கு மேல் அது நகரவில்லை. துண்டாக நிற்கிறது.

சரண் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம்..

அன்புள்ள ஜெ
சுநீல் கிருஷ்ணனின் வாசுதேவன் மனதை நெகிழ்வித்த கதை. ஏன் இப்படி உயிர்வாழவேண்டும் என்று நோயுற்ற பலரையும் நோக்கி நோயில்லாதவர்கள் கேட்பதைக் கண்டிருக்கிறேன். அந்தக்கேள்வியை எவரைப்பற்றியும் கேட்கலாம். எவருடைய கேள்விக்கும் அர்த்தம் கிடையாது என்பதை அந்தக்கதை உணரச்செய்தது. கதையிலே என்ன இருக்கிறதோ இல்லையோ மனித வாழ்க்கையின் அர்த்தமில்லாத கடும் துக்கம் பதிவாகி இருக்கிறது. வைத்தியனும் வேசியும் காணக்கூடிய மனிதர்களே வேறு என்று ஒரு பேச்சுவழக்கு உண்டு. வேசி மனிதனின் இச்சையை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறாள். வைத்தியன் வலியை மட்டுமே பார்த்துக்கொண்டிருக்கிறான். இரண்டும் சேர்ந்தால் மொத்த மனிதவாழ்க்கையை சொல்லிவிடுவது மாதிரி. வேசியான வைத்தியரைப்பற்றி ஒரு கதை எழுதவேண்டும் என்று நானே நினைத்திருக்கிறேன். ஆனால் கதை எல்லாம் என்னால் எழுதமுடியாது என்பதை கொஞ்சம் கழித்துத்தான் உணர்ந்துகொண்டேன். இந்தக்கதை எனக்குள் இருக்கக்கூடிய கதைகளை நினைவுபடுத்தியது. வாழ்த்துக்கள்
சரன்

முத்துக்ரிஷ்ணன் நீலகண்டன் – முகநூலில் பகிர்ந்துகொண்டது
You are working in a field where you will come across many people who will open up to you more than to their loved ones. You have good writing skills. Please continue and proceed in the path of Chekov. Good wishes

சாமிநாதன் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில் 

அன்புள்ள ஜெ
சுனீல்கிருஷ்ணனின் கதையில் கடைசியில் வரக்கூடிய தெலுங்கு வரி புரியவில்லை. அதற்கு என்ன அர்த்தம்? அது கதைக்கு ஏதாவது மேலதிக அர்த்ததை அளிக்கிறதா ? அப்படி அளிக்கவில்லை என்றால் அதை அப்படி அழுத்தி முத்தாய்ப்பாக கொடுத்தது தவறு. அளிக்கிறது என்றால் தெலுங்கு தெரிந்தால்தான் ஒரு கதையை வாசிக்கமுடியும் என்ற நிலையில் எழுதியது அதைவிடப்பெரிய தவறு
சாமிநாதன்

கொஞ்சம் குழம்பி போயி நான் ஜெயமோகனுக்கு போட்ட கடிதமும் அதற்கு அவர் அளித்த பதிலும் ..

அன்புள்ள ஜெ ,

எதிர்வினைகளை வாசித்து வருகிறேன். அந்த இறுதி இரண்டு வரிகள் தெலுங்கில் வந்தது குறித்து வரும் கடிதங்களை வாசித்து வருகிறேன். பலருக்கும் அது தடையாக இருக்கிறது என அறிகிறேன். சண்முகம் போன்ற வாசகருக்கு கூட இக்கதை அனுபவ கதையாக நின்றுவிடுகிறது, அதன் தரிசனம் புலப்படவில்லை என்கிறார் ..கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது..உச்சகட்டமாக – அந்த வரிக்காகத்தான் முதலிலேயே தெலுங்கு வருகிறதா என கேட்கிறார்கள் சிலர்…
அந்த வரியை நான் திட்டமிடவில்லை.. ஒரு அசல் அனுபவத்தை புனைவாக ஆக்க முயன்றேன்..தெலுங்கு நாயக்கர் பின்புலத்தை உணர்த்தவே அந்த எளிய தெலுங்கு கொச்சைகள்..அவை ஒருவகையில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என எண்ணினேன்…அவ்வரிகள் வலிய திணிக்கப்பட்டது அல்ல…அந்த பின்புலத்தில் பிறந்து வளரும் குழந்தை அப்படித்தான் சொல்லும் என எண்ணினேன்..

இதை தமிழில் மாற்றுவதால் நல்லது நடக்கும் என்றால், மாற்றிக்கொள்ளலாம்..

என்ன செய்யலாம் ..

அன்புடன்
சுனில்

அன்புள்ள சுனில்

ஒரு கதையில் என்ன வருகிறதோ அதுதான் கதை. வாசகர்களுக்காக கதையை மாற்றக்கூடாது. அந்தக்கதை ஒரு வாழ்க்கை நிகழ்வுபோல. நிகழ்ந்துவிட்டது. நிகழ்ந்தவற்றை மாற்றும் உரிமை மனிதர்களுக்கில்லை

சும்மாதான் என்று அதற்குப்பொருள் என்று கேட்டுத்தெரிந்துகொள்ளட்டுமே. எவ்வளவோ ஆங்கிலக்கதைகளில் ஸ்பானிஷ் சொற்களும் பிரெஞ்சுச் சொற்களும் வருகின்றன

ஜெ

சிவராமன் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதம் 

அன்புள்ள ஜெ
வாசுதேவன் கதை வாசித்தேன். வாசுதேவன் என்று பெயர். ஆனால் அனந்தபத்மனாபனைப்போல கிடக்கிற உருவம். கரைந்து அழிந்துபோகிற உடலின் கடைசி. பல இடங்களில் கதை மெய்சிலிர்க்க வைத்தது. அதாவது வாசுதேவன் ஏதோ சொல்ல வருவதுபோலவோ அல்லது கையைப்பிடிக்க முயல்வதுபோலவோ தோன்றக்கூடிய இடங்களை வாசித்தபோது. இந்தமாதிரி உடலின் புலன்கள் எல்லாம் சிதிலமான பிறகு உள்ளே இருக்ககூடிய உயிர் என்ன நினைக்கும்? எப்படி உணர்ச்சிகளை வெளிக்காட்டும்? நினைக்கவே பயமாக இருக்கிறது.
ஒரு வைத்தியர் மட்டுமே எழுதக்கூடிய கதை. ஆகவே மறக்கமுடியாத கதை. ஆனால் அந்த அனுபவத்திலே இருக்கக்கூடிய உக்கிரமான நிலையை கதையில் இன்னும் அதிகமாக விரித்து எடுத்திருக்கலாமென்று தோன்றியது. சுருக்கமாகவே முடித்துக்கொண்டதுபோல நினைத்தேன். அந்த அனுபவத்தை மட்டுமே சொல்லிவிட்டது மாதிரியும் இருந்தது. அதிலிருந்து நிறைய இடங்களுக்கு போயிருக்கலாம்.

ஓர் இளம் எழுத்தாளரின் கதை என்ற அளவிலே முக்கியமான கதை. அழுத்தமாக எழுதப்பட்டிருந்தது. வாழ்த்துக்கள்
சிவராமன்

நான் மதிக்கும் மிக முக்கியமான நண்பர் நட்பாஸ், ஏறத்தாழ எனது எல்லா படைப்புகளையும் அவருக்கு அனுப்பிய பின்னரே பொது வெளிக்கு அனுப்புவேன். முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் வாசுதேவனை அனுகியிருந்தார். எனக்கே கூட அது சில திறப்புகளை அளித்தது.

நட்பாஸ் எழுதியது 

சுனில் கிருஷ்ணனின் வாசுதேவன் கதைக்கும் அதுதான். யாரும் ஜெயமோகன் மாதிரி எழுதக்கூடாது என்று சொல்லவில்லை, அதற்குத் தகுந்த கதைக்களன் இருந்தால் நல்லது. சுனில் கிருஷ்ணனின் அதிர்ஷ்டம் அது ஓரளவுக்கு அமைந்துவிட்டது - இருந்தாலும் கதைசொல்லியின் மனக்குரலாக அது அவ்வப்போது வெளிப்படும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது, அதையெல்லாம் தவிர்த்திருக்கலாம். "உன் கதைமாந்தர் அழும்போது நீ பெருமூச்சு விடுகிறாய்" என்று செகாவ் கண்டித்தது நினைவுக்கு வருகிறது ("When you describe the miserable and unfortunate, and want to make the reader feel pity, try to be somewhat colder — that seems to give a kind of background to another's grief, against which it stands out more clearly. Whereas in your story the characters cry and you sigh. Yes, be more cold. ... The more objective you are, the stronger will be the impression you make." - http://mockingbird.creighton.edu/NCW/chekwrit.htm )

வாசுதேவன் கதை ஆம்னிபஸ்ஸில் சுனில் எழுதிய "காப்காவின் உருமாற்றம்" என்ற பதிவில் துவங்குகிறது - http://omnibus.sasariri.com/2012/10/blog-post_5.html . "சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் கல்லூரியில் பயிற்சி மருத்துவராக பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் வாசுதேவனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) சந்தித்தேன்," என்ற நேரடி அனுபவத்தில் துவங்கும் அந்தப் பதிவு, வாசுதேவனை கப்காவின் பூச்சி நாயகன் சம்சாவாக அடையாளப்படுத்திவிட்டு, "ஏன் சம்சாவிற்கு சிறகு முளைத்து பட்டாம்பூச்சியாக அவன் புதிய வானங்களை நோக்கிப் பறந்து செல்லவில்லை? ஏன் அவன் புழுவாகவே இருந்து மறைந்தான்?" என்ற கேள்விகளோடு முடிகிறது. ஏறத்தாழ பத்து மாதங்களுக்குப் பின் இப்போது இந்தக் கதையில் வாசுதேவனுக்கு விடுதலை தந்திருக்கிறார் சுனில் - "வெளிறிய, அந்த ஈர்குச்சி தேகத்தின் குத்திட்ட கண்களும், தலையில் ஓடில்லாத இடத்தில் குழிந்த பள்ளமும் பல இரவுகளின் கனவுகளைக் கலைத்திருக்கின்றன," - இனி அவர் இப்படிச் சொல்ல மாட்டார் என்று நினைக்கிறேன்.

வாசுதேவன் கதையின் முடிவில் மானுடனல்ல. ஏதோ ஒரு இடத்தில் அவன் மானுட தளைகளிலிருந்து விடுபட்டு உறவுச் சங்கிலியின் வெறும் தளையாகிறான்.  பின்னர் அக்கா குழந்தை உருவில் அவனது பெற்றோரின் பாச உணர்வுகளுக்கு மாற்று கிடைத்தபின், அந்த உறவில் அவன் தொடர்கிறான். இது ஒரு உணர்வாக எந்த அளவுக்கு நம்மை வந்தடைகிறது என்பதையொட்டி இப்படிச் சொல்வது சரியாக இருக்கும். எனக்கே இது சில சமயம் சரியாக இருக்கிறது, சில சமயம் சந்தேகமாக இருக்கிறது. வேறெப்படியும் இது அர்த்தமாவதுமில்லை. இது குறித்து ஒரு முடிவுக்கு வர அவகாசம் தேவைப்படுகிறது என்று நினைக்கிறேன்.

ஆனால் தெரிந்தோ தெரியாமலோ இப்படியொரு விடுதலை வாசுதேவனுக்குக் கிடைக்கிறது என்றால், அப்படிப்பட்ட ஒரு முடிவு சுனில் கிருஷ்ணன் தன் துணிச்சலால் தந்தது அல்ல - "பல இரவுகளின் கனவுகளைக் கலைத்த" அந்த நிர்பந்தத்தால் தந்தது. அதையும் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. கதாசிரியனின் நோக்கத்தைத் தீர்மானிப்பது ஆபத்தான விஷயம் என்றால் அவனை உளபகுப்பு செய்வது அபத்தமான விஷயம்.

கோவையைச் சேர்ந்த ஒரு நண்பர் இன்று தொலைபேசியில் பேசும்போது, "இந்தக் கதை ஒரு தனி மனித அனுபவ பகிர்வாக மட்டுமே நின்று விடுகிறது, அனுபவப் பதிவைத் தாண்டிச் சென்றிருக்கலாம்," என்ற கருத்தை வெளிப்படுத்தினார். "ஆனால் பூடகமாகக்கூட கதாசிரியர் என்ன சொல்ல முயல்கிறார் எனப் புரியவில்லை. ஏதோ அவசரத்தில் ஒரு அனுபவத்தைக் கதையாக மாற்ற முயன்றது போல் உள்ளது. அது நிச்சயம் முழுமை பெறவில்லை," என்று பாஸ்கர் லக்ஷ்மனும் சொல்கிறார். தொடர் வாசிப்பு மட்டுமே இது உண்மையா என்ன என்று சொல்ல முடியும்.

ஆனால் அதற்கான அவசியம் இந்தக் கதைக்கு உண்டா என்பது யோசிக்க வேண்டிய கேள்வி

சொல்வனத்தில் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வரும் பாஸ்கர் லக்ஷ்மன் ஒரு கணித ஆய்வாளர் - அவருடைய கருத்துக்கள்.

சுநீல் கிருஷ்ணன் எழுதிய வாசுதேவன். இந்தக் கதையிலும் டாக்டர்​ ​- ​ ​நோயாளி சிக்கல். ஒரு நோயாளிக்கு ஒரு விழுக்காடு பிழைக்கும் நம்பிக்கை இருப்பினும், மருத்துவர் அவருக்கு​ச்​ ​ சிகிச்சைக் கொடுக்க வேண்டுமா? மருத்துவர் முடியாது என்றாலும் அதற்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறதா? எந்த மருத்துவ முறை சிறந்தது? iஇ​து ​ போன்ற கேள்விகள் இந்தக் கதையின் மூலம் எழுகி​ன்றன​. அது எதற்கும் ஒரு பதிலை​​ காத்திரமாக, ஒரு தரிசனம் கிடைக்கும்படி ​சொல்ல​வில்லை. தாங்கள் பயிற்சி எடுக்கும்  மருத்துவர் நோயாளியை ​ ​பணத்திற்காக ஏமாற்றுகிறார் என நினைக்கிறார்கள். அதை “எத்​தைத் தின்னால் பித்தம் தெளியும்” என்றி ரு​க்கும் பெற்றோரிடம் சொல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் இளங்கோவும் அவன் நண்பனும் தவிக்கிறார்கள். வெறுமனே உயிரோடு இருந்தால் போதும் என்று பெற்றோர்கள் நினைக்கிறார்கள்.

“பிணத்துக்கெல்லாம் வைத்தியம் பார்க்க வேண்டி இருக்கிறது” என்ற வரி முகத்தில் அறைந்தாற் போல் இருக்கிறது. வைத்தியம் பார்ப்பதால் நோயாளி மேல் ஒருவித பற்று உண்டாகிறது. அந்தக் கரிசனம் உண்மையைச் சொல்ல வைக்கிறது. கதையில் நடை நன்றாக வந்துள்ளது. ஆனால் பூடகமாகக்கூட கதாசிரியர் என்ன சொல்ல முயல்கிறார் எனப் புரியவில்லை. ஏதோ அவசரத்தில் ஒரு அனுபவத்தைக் கதையாக மாற்ற முயன்றது போல் உள்ளது. அது நிச்சயம் முழுமை பெறவில்லை. கதை தொடக்கத்தில் இருந்த நிதானம் இறுதியில் இல்லாமல் போகிறது. ஜெமோ வாடை இருந்தாலும், எல்லோர் எழுத்தை விட இவருடையது எனக்குப் பிடித்திருந்தது.

கடைசி இரண்டு தெலுங்கு வரிகளை தமிழ் படுத்துவோம்.

“யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா”  -- “எதுக்குடி இப்படி செய்யற ...அடி வேணுமா”.


“ஊரிக்க தா” – “ சும்மா தா”

எல்லாம் ஓய்ந்து விட்ட சூழலில் கூகிள் ப்ளஸ்சில் நடந்த ஒரு விவாதத்தை வாசிக்க நேர்ந்தது. ஓரளவு எல்லா கோணங்களையும் அலசி இருந்தார்கள். தென்றல், அமுத கங்கை, வாசு பாலாஜி - ஆகியவர்களுக்கு நன்றி.

தென்றல் 
ஹெவியான கதை.. நல்லாயிருந்தது.. கதாசிரியர் தன்னோட அனுபவத்தைக் கதையாக்கியிருக்கலாம்.. அருவருப்பு அச்சம் போன்ற கதைசொல்லியின் உணர்வுகளை நேர்மையாகச் சொல்லியிருந்தா மாதிரி இருந்தது.. போலவே, முடியாதுன்னு புரிஞ்சுட்டு அவங்ககிட்ட அதைச் சொல்ல முடியாமத் திணறி, நழுவிப் போறது..
//உருக்குலைந்து துருப்பிடித்த இரும்பின் மீது உயிர்ப்புடன் படர்ந்திருந்தது கிளிப்பச்சை கொடி ஒன்று. இளநீலப் பூக்கள் ஆங்காங்கு எட்டிப்பார்த்தன.//
Liked this picture! கதையோட பொருத்திப் பார்க்க முயற்சித்து சரிவராம விட்டுட்டேன்..
//இப்படியே யுகம்யுகமாக காத்துக் கொண்டிருப்பதில் என்ன பொருள்? எஞ்சியிருப்பவர்களின் ஆற்றலையும், நம்பிக்கையையும், செல்வத்தையும் உறிஞ்சுவதைத் தவிர வேறு என்ன பயனிருக்கு இந்த உயிருக்கு? உண்மையில் என் உயிருக்கு என்ன பயன்? அல்லது பிறக்கும் மரிக்கும் எந்த உயிருக்கும் தான் என்ன பயன் இருந்திட முடியும்?//
ம்ம்......
//“எல்லாம் சரியாயிடும்..எல்லாம் சரியாயிடும் நண்பா..எல்லாமே சரியாயிடும்” கண்களிலிருந்து நீர் தளும்பி வாசுவின் தோள் பட்டையில் வழிந்தது. எந்த அசைவும் இல்லை. எதுவுமே சரியாகாது.. நானறிவேன். ஒருவேளை வாசுவிற்கும் இது தெரிந்திருக்கக் கூடும்.//
மெல்ல வாசுதேவனோட சிநேகம் மலருவதாக உணர்ற இடத்துல கண் கலங்க வச்சது..
அண்ட், அந்தப் பெற்றோரோட எதிர்பார்ப்பும் நம்பிக்கையும்.. ஹ்ம்ம்.. இவங்க மேல அது ஏற்படுத்தும் அழுத்தமும்..
//சக்ஷன் போட கொஞ்சம் லேட்டானாக் கூட மூச்சு நின்னுடும்..” படபடப்பாக இருந்தது. இத்தனை நாளாக மனம் இந்தப் பதிலை தான் யோசித்து சேமித்து வைத்திருக்கிறது போலும். தங்கு தடையின்றி வந்துவிட்டது. சட்டென்று என்ன வார்த்தைகளை சொல்லிவிட்டேன். //
//இதுவும் அன்பு தான் என்று அவனிடம் எப்படி சொல்லி புரியவைக்க முடியும்.//
There you go!!!
//சற்று நேரம் மெளனமாக இருந்தான். “எனக்கு அவன் மேல எல்லாம் எதுவும் தோணலடா. ஆனா அவன் அப்பன் ஆத்தாள நெனைச்சா தான் ஒரு மாதிரியே இருக்கு.. அவன் போய்ட்டானா அவிங்களுக்கு செய்யுறதுக்கு எதுவுமே இருக்காதுல?”//
கதைசொல்லியின் நண்பராக வரும் இளங்கோ, ப்ராக்டிகலான ஆளாக, மனசுல உள்ளதைப் பட்டுன்னு பேசிடும், அதே நேரம் உணர்வுமுள்ள மனிதராகக் கவர்ந்தார்..
// “யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா” சீறிக்கொண்டு எழுந்தாள் வாசுவின் அக்கா.
அந்தக் குழந்தை களங்கமற்ற மழலையின் சிரிப்புடன் தலையை திருப்பி சொன்னது
“ஊரிக்க தா”//
இந்தத் தெலுங்கு வரிகளுக்கு என்ன அர்த்தம்??
--------------------
பேட்ச்மேட் ஒருத்தன் முன்ன கேட்ட கேள்வி ஒன்னு நினைவுக்கு வருது.. ஏதோ ஒரு உயிரினம், பாலைவனத்துல குப்புறக் கவிழ்ந்து இருக்கு, திரும்புவதற்கு போராடிக்கிட்டு இருக்கு, நீ அந்த வழியாகக் கடக்கற, என்ன செய்வ அப்படின்னான்.. அந்த உயிரினத்தின் மீது எனக்கு அச்சம்/அருவருப்பு இல்லாட்டா நான் அதைத் திருப்பி விடுவேன் னு சொன்னேன்.. அவன் சொன்னது, நான் interfere பண்ணாம கடந்து போவேன், Let nature take its course of action ன்னு..
இந்தக் கதைல அந்தக் குழந்தை செய்வது (அல்லது செய்யாம போவது) அவன் சொன்னது போலத்தான்!
ஆனா அவன் சொன்னதுல எனக்கு மறுகேள்வியுண்டு.. நான் அதைக் கடக்க நேரிடுவதும், எனக்கு அவ்வாறு தோனுவதும் கூட nature's course தானே!

amutham gangai

மிகு அன்பு நார்மல் இல்ல தென்றல். அதை உணர்கிறவங்களுக்கு தேவை , மெண்டல் டயர்ட்நெஸ் ஸில் இருந்து விடுதலைக்கான ஒரு காரணம்,தருணம்.
[அதற்குப் பின்னான குற்ற உணர்வுகளில் இருந்து விடுதலைக்காக நீண்ட சுய சித்ரவதை ]
தென்றல் ஸ்

//மிகு அன்பு //
கதைல இருக்கறது மிகு அன்பா அப்படின்னு தெரியல.. எதிர்பார்ப்பு, நம்பிக்கை, உண்மைல அது அவங்க வாழ்வுக்கான பிடிப்பாகவும் இருக்கு..
//அதற்குப் பின்னான குற்ற உணர்வுகளில் இருந்து விடுதலைக்காக நீண்ட சுய சித்ரவதை//
ம்ம்.. இப்படியும் இருக்கலாம்.. 
Vasu Balaji

/எல்லாரும் அமைதியாக முணுமுணுத்துக் கொண்டிருந்த போது சோஃபாவிற்கு அருகே ஏதோ சத்தம் கேட்டது. அந்தக் குட்டிப் பெண் குழந்தை கூடைநிறைய விளையாட்டு சாமான்களை கொட்டி கொண்டிருந்தாள். பொம்மைகளின் கைகளையும் கால்களையும் கழுத்தையும் திருகி கோணலாக என்னமோ செய்து கொண்டிருந்தாள்.
“யாலவே இட்ட செஸ்தா…தெப்பலு காவன்னா” சீறிக்கொண்டு எழுந்தாள் வாசுவின் அக்கா.
அந்தக் குழந்தை களங்கமற்ற மழலையின் சிரிப்புடன் தலையை திருப்பி சொன்னது
“ஊரிக்க தா”//
எனக்கு இங்க தரிசனம் கிடைச்சது:))

amutha gangai 

அவங்களை நிறைக்கவும் ஆள் வந்தாச்சு. 
தென்றல் ஸ்
அந்த வரிகளுக்கான அர்த்தத்தோட திரும்ப அந்தப் பத்திய வாசிச்சா........ எனக்கும் ஏதோ புரியறது :)
நீயும் பொம்மை
நானும் பொம்மை
நினைச்சுப் பார்த்தால் எல்லாம் பொம்மை!
தென்றல் ஸ்

//அவங்களை நிறைக்கவும் ஆள் வந்தாச்சு. //
ஆமா, அதுவும்.. ஒரு கோணத்துல பார்த்தா, அவங்க வாசுதேவனைப் போக விட்டதும் அதனால தான் :)
தென்றல் ஸ்

விமர்சனங்கள்ல, முழுமை இல்ல, அனுபவத்த எழுதினது போல இருக்கு ன்னு சொல்லியிருந்தாங்க.. அந்தத் தெலுங்கு வரிகள் புரிஞ்சிருந்தா அவங்களுக்கு வேற மாதிரி இருந்திருக்கலாம்..
எனக்கு கடேசிப் பத்தி சரியாப் புரியாமலேயே, அதுவரைல வந்த கதையே மனசுக்கு நெருக்கமாக இருந்தது..
Vasu Balaji

பொம்மையோட கழுத்த திருகி விளையாடுறது குழந்தைகளுக்கு புதுசா என்ன?
அதுக்கு அடிவேணுமான்னு வாசுவோட அக்கா ஏன் சீறணும்.
அப்டி திருகி விளையாடுற குழந்தைக்கு சும்மாதான்னு சொல்ல தெரிஞ்சிருக்குமான்னு ஒரு சம்சயம்.
amutham gangai

சார் ,
வாசுவுக்கு சக்ஷன் போடாம விட்டது ... இதுவும் ஒரு முடிவு. 
தென்றல் ஸ்

அது பிற்சேர்ப்பு இல்லையா.. அவர் தன்னுள் எழுந்த கேள்விக்கு என்ன பதில் என்பது போல சொல்லியிருக்கார்..
The so called life is just a game of dolls played by someone (fate), screwing them randomly as per his/its own wish என்பது போல :))))
தென்றல் ஸ்

//வாசுவுக்கு சக்ஷன் போடாம விட்டது ... இதுவும் ஒரு முடிவு. //
பனி, கதை படிச்சு முடிச்சு கொஞ்ச நேரம் கழித்து தான் மேல நான் சொன்ன நண்பனோட கேள்வி நினைவுக்கு வந்தது.. நான் அதோட பொருத்திப் பாத்துகிட்டேன், குழந்தை மற்ற மனிதர்களைப் போல interference ஏதும் செய்யாம, இயற்கையோட போக்குல நடக்கட்டும் ன்னு விட்டுடுது..  அந்நேரத்துல அந்த இடத்துல அக்குழந்தை மட்டுமே இருக்க நேர்ந்ததும் இயற்கையோட போக்கு ன்னும் எடுத்தக்கலாம்.. 
Vasu Balaji

may be euthanasia..may be mishandling for bedsore. அவங்க செய்யுறப்போ குழந்தை பார்த்து கேட்டிருக்கலாம். ஊரிக்கதான்னு சொல்லிருக்கலாம். குழந்தை அதேமாதிரி பண்ணி விளையாடுறதால பயத்தோட கோபம். அவங்க சொன்னத குழந்தை திருப்பி சொல்லுதுன்னு பார்த்தா ஆசான் சொல்றா மேரி வேற ஒரு திறப்பு. ஹி ஹி ராஜேஷ் குமார் கதை படிச்சிருக்கா நீன்னு ஆழ்வாசிப்பாளர்கள் சொல்லலாம்.
பெட்சோர் கொடுமை பார்த்தவங்களுக்கு தெரியும் அந்த நரகம்.:)
amutham gangai

இப்படி யோசிங்க , வாசுவோட அப்பா சக்க்ஷனோட  இம்பார்டன்ஸ் தெரிஞ்சவர். எப்படி தவற விட்டிருக்க முடியும் ?
@ thendral.
தென்றல் ஸ்
ஆமா, அவங்களாகவும் போகட்டும் ன்னு விட்டிருக்கலாம், மகள் திரும்பி வந்தவுடனே.. 
தென்றல் ஸ்
அட, இதுல என்ன இருக்கு அப்படிச் சொல்றதுக்கு? அவர் சக்ஷன் போடாம விடலாமே ன்னு சொல்லிட்டு, இதுவும் அன்பு தான் அப்படின்னு நினைச்சுக்கற இடம் எனக்குப் பிடிச்சது.. சேம் தாட்ஸ் என்பதால..  
Vasu Balaji
இல்ல இதுக்கு முதல்ல ஒரு இடத்துல மூட்டை முடிச்சுகளோட ஒரு குழந்தை பொம்மைய பரப்பி விளையாடிட்டிருக்குன்னு ஒரு வரி வருது. திரும்ப விளையாட்டுல ஸ்பெசிஃபிக்கா இத நோட் பண்ணி சொல்லிருக்காங்க. கத எயுதினவரும் டாக்டர். சோ முதல் வாட்டி படிச்சதுமே ஆசானுக்கு கடுலாசு போடுறவங்க மேரியா அதிர்வு ஏற்பட்டுச்சு. :))

நான் ஆச்சரியப்பட்டுப்போன எதிர்வினை என்பது எழுத்தாளர் பாவண்ணன் அவர்களிடமிருந்து வந்த எதிர்வினை தான். ஒவ்வொரு கதையையும் இத்தனை பொறுமையாக வாசித்து எதிர்வினையாற்றுவார் என நான் எண்ணவில்லை.

அவர் ஜெயமோகனுக்கு எழுதிய கடிதத்தில்
மரணத்தைப்பற்றிய இன்னொரு முக்கியமான சிறுகதை ”வாசுதேவன்”. சுய உணர்வே இல்லாமல் பல ஆண்டுகளாக படுத்த படுக்கையாக இருப்பவன் வாசுதேவன். அவன் சேர்த்துவைத்திருந்த பணம் அவனுடைய மருத்துவத்துக்கு உதவியாக இருக்கிறது. பணம் கரைந்துபோன தருணத்தில் மாற்று மருத்துவத்தில் நாட்டம் வந்து ஆயுர்வேதத்தை நாடுகிறார் வாசுதேவனின் தந்தை. மருத்துவம் செய்ய வந்த இரு பயிற்சி மருத்துவர்கள் முதலில் அருவருப்படைந்தாலும் நாட்கள் கழியக்கழிய ஈடுபாட்டோடு மருத்துவம் செய்கிறார்கள். அவர்களில் ஒருவன் முதல்கட்ட மருத்துவத்தின் இறுதியின் வாசுதேவன் பிரச்சினைக்கு எந்த மருத்துவமும் சரியாக வராது என தன் மனத்தில் தோன்றும் எண்ணத்தை வாசுவின் தாயிடம் பகிர்ந்துகொள்கிறான். அப்படி உண்மையைப் போட்டு உடைத்தது பெரிய பிழை என மற்றொருவன் அவனிடம் அலுத்துக்கொள்கிறான். நாலைந்து நாள் இடைவெளிக்குப் பிறகு வாசுவின் மரணச்செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. நிகழ்ந்தது கருணைக்கொலையா அல்லது இயற்கைமரணமா என்பது புதிரான அம்சமாக முன்வைக்கப்படுகிறது. பொம்மைகளின் கழுத்தைத் திருகி விளையாடும் குழந்தையின் நடவடிக்கையைப்பற்றிய குறிப்பொன்று கடைசிப்பகுதியில் உள்ளது. அது கதைக்கு இரண்டு திறப்புகளைக் கொடுக்கிறது. நிகழ்ந்தது கருணைக்கொலை என்பது ஒரு திறப்பு. பிறப்பு, இறப்பு, வாழ்க்கை எல்லாமே குழந்தைவிளையாட்டுபோல. மாபெரும் ஒரு விளையாட்டின் ஒரு பகுதியே எல்லாம். நம்மை பொம்மைகளாக்கி கடவுள் ஆடும் விளையாட்டு என்பது இன்னொரு திறப்பு.
---
உறவு, காகிதக்கப்பல், தொலைதல், வாசலில் நின்ற உருவம், சோபானம், கன்னிப்படையல், வாசுதேவன் ஆகிய சிறுகதைகளை என் மனம் மீண்டும்மீண்டும் அசைபோட்டபடியே இருக்கிறது.

அவருக்கு நன்றி கடிதம் எழுதினேன். மேலும் குறைகளை சுட்டிக்காட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர் போட்ட பதில்.

அன்புள்ள சுனில் கிருஷ்ணன்
வணக்கம். உங்கள் கடிதம் கண்டு மகி்ழ்ந்தேன்.  சென் மொழிபெயர்ப்பு நூலிலேயே
உங்கள் மொழியாளுமை மிகச்சிறப்பாக இருந்ததை அறிந்துகொண்டேன்.
நீங்கள் விரைவில் படைப்பாக்கத்துறைநோக்கி வருவீர்கள் என நினைத்ததுண்டு.
உங்கள் சிறுகதையைப் பார்த்ததுமே அதுதான் நினைவுக்கு வந்தது.
மிகநன்றாகவே எழுதியிருக்கிறீர்கள் சுனில். பெரிய குறை என சொல்வதற்கு
ஒன்றுமில்லை. இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம் என வேண்டுமானால்
நினைக்கலாம். இரு நண்பர்களிடையேயும் நிகழும் உரையாடல் பகுதியில்
உங்கள் கவனம் கூடுதலாக விழுந்திருக்கவேண்டும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை சுனில்.
எழுத்தும் வாசிப்பும் தொடரத்தொடர நீங்களாகவே பழகிவிடுவீர்கள்.
இப்போதைய உங்கள் விருப்பம் எழுத்தாக மட்டுமே இருக்கட்டும்.

வாழ்த்துகளுடன்
பாவண்ணன்
12.08.2013/

இறுதியாக ஜெ  வாசுதேவன் குறித்து சுருக்கமாக எழுதியது..

அன்புள்ள சுனீல்
இந்தக்கதையின் சிறப்பு என எனக்குப்படுவது வலியை, நோயை அதன் தீவிரத்துடனும் அர்த்தமின்மையுடனும் சொல்லமுடிந்திருப்பதுதான். ஒட்டுமொத்தமாக என்ன என்ற வினாவுடனும் ஒன்றுமில்லை என்ற பெருமூச்சுடனும் முடிகிறது. அதை குழந்தையின் வாயால் சொல்லவைத்திருப்பதில் இருக்கிறது கதையின் உச்சம்.
ஒரு தொடக்கக்கதை என்ற அளவில் முக்கியமானது. ஆனால் கதையின் உடலில் சொல்லப்படவேண்டிய எவ்வளவோ உள்ளது. மரணத்தின் முன்னிலையில் வாழ்க்கை கொள்ளும் பலவிதமான உருமாற்றங்கள், சகஜநிலைகள், சமாளிப்புகள்.
ஜெ

No comments:

Post a Comment