Tuesday, September 3, 2013

காந்தியின் மதம்

காந்தியின் மதம் காந்தி இன்று இணைய தளத்தில் வெளிவந்த கட்டுரை. எழுதப்பட்ட போது. இக்கட்டுரையின் பேசு பொருள் குறித்து காரசராமான விவாதம் நண்பர் நட்பாசுடன்  நிகழ்ந்தது நினைவுக்கு வருகிறது. மதச்சார்பின்மை, போலி மதச்சார்பின்மை என ஆக்ரோஷமாக விவாதித்தோம். மதச்சார்பின்மை என்பதே ஒரு ஐரோப்பிய இறக்குமதி என்றார். காந்தியின் மதச்சார்பின்மை என்பது பன்மையை அங்கீகரித்து ஏற்றுகொள்வதன் விளைவு, அது இந்த மண்ணிலும் மரபிலும் பல்லாயிரம் ஆண்டுகளாக நீடித்து வருகிறது எனும் புரிதலை நாங்கள் ஒரு மாதிரியாக இறுதியில் அடைந்தோம், அதுவே போலி மதச்சார்பின்மைவாதிகளிடம் இருந்து காந்தியை தனித்து காட்டுகிறது.

--------------------------- 

பிபன் சந்திரா , நேஷனல் புக் ட்ரஸ்டின் தலைவராவார். புதுதில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர். அவர் 2003 ஆம் ஆண்டு பல்கலைகழகத்தில், மகாத்மா –மதச்சார்பின்மை, மதவெறி எனும் தலைப்பில் நீண்ட உரை ஒன்றை ஆற்றினார். அந்த உரையை தமிழில் அ.குமரேசன் மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் சிறிய நூலாக வெளியிட்டுள்ளது.



பிபன் சந்திரா, நாம் காந்தியை இன்னும் பல கோணங்களில் அணுக முடியும் என்கிறார். அவரை நாம் இன்னும் முழுமையாக ஆராயவில்லை என்பதே அவரது முக்கியமான குற்றசாட்டு. காந்தி மதத்தை எப்படி அணுகினார்? அவருடைய மதச்சார்பின்மை எத்தகையது? இந்த வினாக்களுக்கு விடையளிக்கும் வகையாகவே இப்புத்தகம் எழுதப்பட்டதாக பிபன் சந்திரா அவருடைய முன்னுரையில் குறிப்பிடுகிறார்.




காந்தி தன்னை இந்து என்று அடையாளப் படுத்திகொண்டவர். அவருடைய ராம பக்தி அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இன்னபிற மதத்தவர்களுக்கும் வெவ்வேறான அரசியல் – பெருளாதார நலன்கள் இருக்கிறது என்று அடிப்படைவாதிகள் முன்வைத்ததை காந்தி ஏற்கவில்லை. “ மத பெரும்பான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் எனும் இறுக்கத்திலிருந்து நாம் வெளியே வந்தாக வேண்டும். அரசு என்பதை பொருத்தவரையில், ஓர் இந்து அல்லது இஸ்லாமியரின் நலன்களிலிருந்து ஓர் பார்சியின் நலன்கள் எப்படி வேறுபட்டதாக இருக்க முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்.

பிபன் சந்திரா, காந்தி கனவு கண்ட சமூக சுதந்திரங்களை பற்றி குறிப்பிடுகிறார். அவர் முக்கியமாக கருதியது, பேச்சு மற்றும் எழுத்து சுதந்திரத்தையும், பொதுக்கூட்டங்கள் நடத்தும் சுதந்திரத்தையும் தான். அது எத்தகையதாக இருக்க வேண்டும் என்றால் “பேச்சு சுதந்திரம் என்பதற்கு அர்த்தம் என்னவென்றால், ஒரு பேச்சு காயபடுத்துமானால் கூட அதற்கு தடை இருக்கக் கூடாது, பத்திரிக்கை சுதந்திரம் உண்மையாகவே மதிக்கப்படுகிறது என எப்போது சொல்ல முடியும் என்றால் , பத்திரிக்கைகளில் கடுமையான சொற்களால் விமர்சிக்க முடிகிற போதும் தகவல்களை தவறாகக் கூட வெளியிட முடிகிற போதும் தான். கூட்டங்களில் புரட்சி திட்டம் தீட்டுவதற்கு முடியும் போது தான் அதற்கான சுதந்திரம் முழுமையை அடைந்ததாக பொருள்கொள்ள முடியும்” என்றார். ஆனால் இந்த உரிமைகளை கொண்டு பிளவை ஏற்படுத்தி மனிதர்களின் மனங்களில் நச்சை கலப்பதை அவர் கடுமையாக எதிர்த்தார்.

“எனக்கு மட்டும் அதிகாரம் இருக்குமானால் வகுப்புவாதத்தையும், மதவெறியையும், வெறுப்புணர்வையும், பகையையும் வளர்க்கக் கூடிய எல்லா எழுத்துக்களையும் தீண்டத்தகாதவையாக நான் அறிவிப்பேன்” என்று 1936 ல் பேசினார் அவர். கண்மூடித்தனமான மதவெறியை அவர் கடுமையாக எதிர்த்தார். அவை மதத்தின் ஆன்மீக சாராம்சத்தை உள்வாங்காத முடியாத கூட்டத்தால் எப்போதும் முன்னெடுத்து செல்லப்படுகிறது. உண்மையில் அது அந்த மதத்தின் அடிப்படைகளுக்கே எதிரானது எனும் புரிதல் அவருக்கு இருந்தது. மார்ச் 1947 ல் மதவெறி அதன் உச்சங்களை எட்டியிருந்த காலத்தில், அவர் எழுதினார் “இந்துக்களை அழிப்பதன் மூலம் முஸ்லீம்கள் இஸ்லாத்துக்கு சேவை செய்ய இயலாது, மாறாக அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை அழித்தவர்கள் ஆவார்கள். அதேபோல் இஸ்லாமியத்தை அழித்துவிடலாம் என்று இந்துக்கள் நம்புவார்களானால், அவர்கள் இந்து தர்மத்தை அழிப்பவர்களாவார்கள்”.

காந்தியின் தனி வாழ்க்கையில் இந்து மதத்திற்கு மகத்தான பங்கு உண்டு, ஆனால் அவர் கனவு கண்ட இந்திய தேசம் இந்து தேசம் அல்ல, மாறாக அது மதசார்பற்ற ஜனநாயகம். மதசார்பற்ற தேசத்திற்கு நான்கு அடிப்படை வரையறைகளை முன்வைக்கிறார் பிபன் சந்திரா, முதலாவதாக – மதம் என்பது தனிப்பட்ட வாழ்வை சார்ந்தது, அதை அரசியல் பொருளாதார தளத்தில் இழுத்து விட கூடாது எனும் தெளிவு. இரண்டாவதாக , பல மதங்கள் உயிர்த்து இருக்கும் நிலபரப்பில் அனைத்து நம்பிக்கைகளையும் சமமாக மதிப்பது அரசின் கடமையாகும். மேலும் மூன்றாவதாக, வெவ்வேறு நம்பிக்கையாளர்களை சமமாக நடத்துவது மற்றும் நான்காவதாக, இந்தியாவை பொருத்தவரை தீவிர மதவெறிக்கு எதிராக மக்களை திரட்டும் சக்தியாக மதச்சார்பின்மை செயலாற்றுவது.

காந்தி ஒரு போதும் தேங்கிய குட்டையாக ஓரிடத்தில் தங்கிவிடுவதில்லை. அவர் எப்போதும் சத்தியத்தை தேடிக்கொண்டே இருந்தார், தன் மனதிற்கு தான் இத்தனை நாள் சுமந்து வந்த நம்பிக்கை சரியில்லை என்றோ அதன் மீது சந்தேகம் பிறந்தாலோ அதை பரிசீலனை செய்து முற்றிலும் வேறான ஓர் முடிவை எடுக்க அவர் ஒருகாலும் தயங்கியதில்லை. அவர் எப்போதும் தன்னை விவாதத்திற்கு தயாராகவே வைத்திருந்தார், உண்மையை ஏற்றுகொள்ள திறந்த மனதுடன் காத்திருந்தார். அதற்கு உதாரணமாக பிபன் சந்திரா நாத்திகரான கோராவோடு கொண்ட உறவை சுட்டிக்காட்டுகிறார். கடவுளே உண்மை எனும் நிலைபாடிலிருந்து உண்மையே கடவுள் எனும் நிலைபாட்டை அவர் அடைந்தது உண்மையில் ஓர் மகத்தான பயணம் தான்.

அரசியலில் மதம் எனும் அத்தியாயத்தில் பலரும் தவறாக பொருள்கொள்ளும் முக்கியமான விஷயத்தை பற்றி பிபன் சந்திரா விவாதிக்கிறார். காந்தி, ஆங்கில சொல்லான religion எனும் பதத்தை இரண்டு கோணங்களில் பயன்படுத்துகிறார். மதம் எனும் பொருளில் சில இடங்களிலும் , ஆன்மிகம் எனும் பொருளில் சில இடங்களிலும் பயன்படுத்துகிறார். இந்த வேற்றுமையை குழப்பி கொள்வது அபாயகரமானது. ஏனெனில் காந்தி அரசியலின் அடிப்படையில் ஆன்மீகம் இருக்க வேண்டும் என்று சொல்வதும் அதே இடத்தில் மதம் இருக்க வேண்டும் என்று சொல்வதும் முற்றிலும் வேறு பொருள் தரக்கூடியவை. விரிவாக, அறநெறியை, ஆன்மீக பண்பாட்டை குறிக்கும் சொல்லாக அதை பல இடங்களில் கையாண்டுள்ளார்.

1940 ல் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த காந்தி, “ ஆம் மதத்திலிருந்து துண்டிக்கப்பட்டதாக அரசியலை என்னால் பார்க்க முடியாது என்ற கருத்து இப்போதும் எனக்கு உண்டு. சொல்லப்போனால், நமது ஒவ்வொரு செயல்பாட்டிலும் மதம் ஊடுருவி இருக்க வேண்டும் . ஆனால் இங்கே மதம் என்பது குருகியவாதமாகது, முறைபடுத்தப்பட்ட அறவழிப்பட்ட பிரபஞ்ச நிர்வாகம் என்பதில் ஒரு நம்பிக்கை என்பதே இதன் பொருள்...இந்த மதம் இந்து, இஸ்லாம், கிறித்தவம் முதலியவற்றுக்கு அப்பாற்பட்டது”.

காந்தியின் மதம் எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ள பிபின் சந்திரா கொடுத்துள்ள காந்தியின் இந்த மேற்கோள் உதவக்கூடும் ,”மதம் பல கிளைகளைக் கொண்ட ஒரு மரமாகும். கிளைகள் என்ற முறையில் பல மதங்கள் இருப்பதாக நீங்கள் சொல்லக்கூடும். மரமாக இருக்கும் மதம் என்னமோ ஒன்று தான்” 

அரசியலின் அடிநாதமாக ஆன்மீக மதம் இருக்க வேண்டும் என தொடர்ந்து வலியுருத்திய காந்தி, மதம் எனும் பெயரில் குறுகிய வரையறைகளை உருவாக்கி மக்களை பிளவு படுத்தும் போக்குகள் தென்படத் தொடங்கிய 1940 களுக்கு பிறகு முற்றிலும் அந்த சொல்லாடலை கடந்து விடுகிறார். அதன் பிறகு பல்வேறு சமயங்களில் மதம் என்பது அவரவர் சொந்த விஷயம் என்பதையே வலியுறுத்தி வந்தார். மேலும் கல்வியோடு மதத்தை இணைப்பதையும் அவர் முற்றிலுமாக எதிர்த்தார். அது புரிதலை வலுபடுத்துவதை காட்டிலும், பிளவையே ஏற்படுத்தும் என்றார். மதகல்வியை பற்றி கவலைபடவேண்டியது மத நிறுவனங்களே அன்றி அரசாங்கம் அல்ல என்றார். உண்மையில் உலகில் எத்தனை மனிதர்கள் உண்டோ அத்தனை மதங்கள் உண்டு என்றார். இறைவனை அடைய ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வழி உண்டு என்பதையே அவர் அப்படி குறிப்பிட்டார்.

மதவெறி செயல்களில் பெரும்பான்மையினர் , சிறுபான்மையினர் என எவ்வித நியாயப்படுத்தலையும் அவர் ஏற்கவில்லை. அதுவும் பெரும்பான்மையினர் அப்படி செய்வது அதிகார போதையில் தான் என கண்டித்தார். சிறுபான்மையினர் தங்களை இழிவாக , பலவீனர்களாக பெரும்பான்மையினர்களால் உணர்த்தப்படுகிரார்கள் என்றால் அது தான் கனவு கண்ட இந்தியா அல்ல என்றார்.

மத நூல்களில் சொல்லப்பட்டது அனைத்தையும் அப்படியே ஏற்றுகொள்ள வேண்டியதில்லை என்றார் காந்தி. அவருடைய வழிமுறை எப்போதும் அதை தன்னுடைய அனுபவ வட்டத்திற்குள் கொணர்ந்து , பகுத்தறிவை பிரயோகித்து உள்வாங்கி கொள்வதாகவே இருந்தது. பழமையானது என்பதற்காக தவறான எதையும் கடைபிடிக்க கூடாது என்பதில் அவர் திட்டவட்டமாக இருந்தார். “கீதை உட்பட எந்த ஒரு திருமறையையும்விட உயர்வானதாக எனது மதிப்பீட்டைப் பயன்படுத்துகிறேன். எனது பகுத்தறிவை விட எந்தவொரு மறை விளக்கமும் மேலோங்கியிருக்க நான் அனுமதிக்க மாட்டேன் “ என்று டிசம்பர் 1936 ல் எழுதினார் காந்தி.

பிபின் சந்திரா ஓர் சுவாரசியமான நிகழ்வை இத்தருணத்தில் சுட்டி காட்டுகிறார். 1925 ல் ஆப்கானிஸ்தானில் அகமதியா பிரிவை சேர்ந்த இருவர் சமயக் கொள்கைகளை கைவிட்ட காரணத்தினால் கல்லெறிந்து கொல்லப்பட்ட சம்பவத்தை காந்தி கண்டித்து இருந்தார். “திருகுர்ரானில் சொல்லப்பட்டது என்பதாலேயே இத்தகைய வடிவத்தில் தண்டனை அளிப்பதை நியாயப்படுத்த முடியாது” என்றார். மேலும் குர்ரானும் விமரிசனத்துக்கு அப்பாற்பட்ட நூல் அல்ல என்றார். கீதையை தான் எப்படி பார்க்கிறேனோ அதே கோணத்தில் தான் குர்ரானையும் தான் காண்பதாக கூறிய அவர், கீதைக்கு தான் எடுத்துகொள்ளும் உரிமையை இதற்கும் எடுத்துகொள்வேன் என்றார். 

காந்தியை ஓர் இந்துத்துவராக சித்தரிக்க முனையும் தரப்புகள் அதற்கு சான்றாக முன்வைப்பது அவருடைய ராமராஜ்ஜியம் எனும் கருதுகோளை தான். பிபன் சந்திரா காந்தியின் பல மேற்கோள்களை கொண்டு காந்தி ராம ராஜ்ஜியம் என எதை முன்வைத்தார் என்பதை தெளிவுபடுத்துகிறார். அவரை பொருத்தவரை அது கடவுளின் ராஜ்ஜியம் என்ற பொருளில் தான் பயன்படுத்தினார். ஆழமான பண்பாட்டு ஞானம் கொண்டவரான காந்தி, அந்த சொல்லாடலை கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் தன் கருத்தை கொண்டு செல்ல முயன்றார். பல இஸ்லாமிய தலைவர்கள் காந்தி பயன்படுத்திய இந்த சொல்லை மட்டும் கையில் எடுத்து, சுதந்திர இந்தியா ஓர் இந்து தேசமாக இருக்கும் என்று பிரச்சாரம் செய்தனர். மீண்டும் மீண்டும் பல தருணங்களில் காந்தி இது சார்ந்த விளக்கங்களை அளித்தவன்னமிருந்தார்.

காந்தியின் ராமராஜ்ஜியத்தை புரிந்துகொள்ள பிபன் சந்திரா அளித்துள்ள காந்தியின் இரண்டு மேற்கோள்கள் உதவும். இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் எல்லைப்புற பகுதிகளுக்கு பேச சென்றால், அங்கு குதாயீ ராஜ் என்றும் கிறித்தவர்களின் கூட்டத்தை நோக்கி பேசினால் கர்த்தரின் ராஜ்ஜியம் என்றும் பேசுவேன் என்றார் அவர். அப்படி சொல்வது மூலம் லட்ச கணக்கான மக்களை உடனடியாக அது சென்று சேர்கிறது என்றார். மேலும் அதை வேறு எப்படி சொன்னாலும் அது போலித்தனமானது என்றார்.

ராமராஜ்ஜியம் எனும் சொல் மூலம் அவர் பழமையை மீட்டுருவாக்கம் செய்ய முயலவில்லை. மாறாக அது ஓர் நவீன ஜனநாயக அரசு. அவருடைய மற்றுமொரு முக்கியமான மேற்கோள் மூலம் அவர் கண்ட லட்சிய சமூகத்திற்கு அளித்த பெயர் தான் ராம ராஜ்ஜியம் என்பதை புரிந்துகொள்ளலாம். ராமராஜ்ஜியம் என்பது எதை குறிக்கும் என்கின்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் “ மத ரீதியாக அதற்கு மண்ணில் இறைவனின் ஆட்சி என்று பொருள் கொள்ளலாம், அரசியல் ரீதியாக பொருள் கொள்ளும்போது அது பொருளுடைமை, இல்லாமை, நிறம், இனம், குலம்,பாலினம் ஆகிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்துப் போன ஜனநாயகம் என்றாகிறது, அதில் நிலமும் அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும், நீதி என்பது காலந்தவறாததாக , முறையானதாக, செலவு குறைவானதாக இருக்கும்; ஆகவே வழிபாட்டுச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிக்கை சுதந்திரம் ஆகியவை இருக்கும். இவையனைத்தும் சுயமாக விதித்துக் கொண்ட அறக் கட்டுப்பாடுமிக்க சட்டத்தின் ஆட்சி காரணமாக அமைந்திருக்கும். அத்தகைய ஒரு அரசு வாய்மை மற்றும் வன்முறையின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். வளமான , மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும் கிராமப்புற சமூகங்களையும் கொண்டிருக்க வேண்டும்”.   

பிபன் சந்திராவை பொருத்தவரை காந்தி பொதுவாழ்வில் சந்தித்த மிக பெரிய தோல்வி மதவாத களத்தில் தான் என்கிறார். அவருடைய தொடர் முயற்சிகளும், அயராத உழைப்பும் எந்த சேதத்தையும் வெறுப்பையும் தடுக்க முனைந்ததோ அது நிறைவேறாமல் போனது. மதவெறி முன்வைத்த பிளவுகளை எதை கொண்டு நிரப்புவது என்று புரியாமல் தவித்தார். தன்னிடம் உள்ள ஆயுதம் சத்தியாகிரகம் என்றார், அதை கொண்டு அவரால் தற்காலிக அமைதியை மட்டுமே மீட்க முடிந்தது என்கிறார்.

பிபன் சந்திரா காந்தி மதவாதத்திற்கு எதிராக தோற்றதற்கு மிக முக்கியமான காரணம் என முன்வைப்பது அவரோ பிற தேசிய தலைவர்களோ இதை தத்துவ சிக்கல் என உணராததே. மதவாதம், அரசியல் பொருளாதாரம் , வாழ்வாதாரம் என அனைத்து தளத்திலும் கிளை பரப்பும் ஓர் தத்துவம். அது ஏன் வளர்கிறது? அதற்கு ஆதரவான அம்சங்கள் என்ன ? அதை வீழ்த்துவது எப்படி போன்ற நுணுக்கங்களை அவர் ஆராயவில்லை. சாதிபாகுபடையும் காலணியாதிக்கதத்தையும் தத்துவ சிக்கலாக கண்ட காந்தி, அதை மாற்ற கருத்தியல் தளத்தில் செயலாற்றி வெற்றி கண்டார். ஆனால் இதை அவர் தத்துவ சிக்கலாக உணரவில்லை என்பதே விந்தை தான்.

காந்தி மதவாதத்திற்கு எதிராக இரண்டு தளத்தில் மாறி மாறி செயல்பட்டார் என்கிறார், அவருக்கு எந்த வழிமுறை சரியாக செயல்பட்டது என்பதை இறுதிவரை புரிந்துகொள்ள முடியவில்லை. சில நேரங்களில் தலைவர்களை தாண்டி நேரடியாக மக்களுடன் உரையாட முயன்றார். இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் வெகுஜன தளத்தில் ஒற்றுமை ஏற்படுத்த முனைந்தார். அவர்களை ஒருங்கிணைத்து இந்திய தேசிய சுதந்திர போராட்டத்தை பெருந்திரள் பங்கேற்கும் மக்கள் போராட்டமாக வளர்த்தார். ஆனால் , அந்த அணுகுமுறையை பின்னர் மாற்றினார். மதவாதத்தை தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் மதவாத தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த துவங்கினார். பல்வேறு தரப்புகளுக்கு இடையே சமரசம் ஏற்படுத்த முயன்றார். நாற்பதுகளில் அவர் இந்த முறையையே மீண்டும் மீண்டும் கையாண்டார். ஆனால் வடஇந்தியாவில் மக்களின் மனதில் பிணைக்க முடியாத அளவிற்கு வெறுப்பும் காழ்ப்பும் இரு தரப்பிலும் குடிகொண்டது. அவரது உச்சபட்ச தியாகம் தன் உயிரையும் உடலையும் போராட்டக்களத்தில் பணையம் வைக்க முடிந்தது தான். அது தற்காலிக அமைதியை மீட்டு தந்தது என்பதில் ஐயமேதும் இல்லை எனினும் தீண்டாமையை பகிரங்கமாக ஆதரிப்பது தவறு எனும் பொது போக்கு 1947 லியே தோன்றியது போல் மதவாதத்தை அவரால் முறியடிக்க முடியவில்லை. அவரே ஒரு சமயம், மதவெறிக்கு எதிராக தன்னுடைய சத்தியாக்ரகத்தை சோதிக்க முடியவில்லை என்று தன் ஆற்றாமையை வெளிபடுத்தினார்.

எனினும் பிபின் சந்திரா முன்வைத்தது போல், மதவெறிக்கு எதிராக காந்தி தோல்வி அடைந்தாரா என்பது விவாதத்திற்கு உரியது. இன்று இந்த தேசத்தில் இந்துக்களும் இஸ்லாமியர்களும் இன்ன பிற மதத்தவர்களும் இனைந்து வாழ்வதற்கு காந்தியின் வாழ்க்கை மகத்தான பங்காற்றியது என்பதை மறுக்கமுடியாது. மதவெறியின் தீவிரத்தையும் மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் நன்றாக உணர்ந்தே இருந்தார். ஒருவேளை சுதந்திர போராட்ட காலத்திலும், பிரிவினை காலத்திலும் காந்தி இல்லாமல் இருந்திருந்தால் சேதம் எத்தனை பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்வது கூட சாத்தியமில்லை. மேலும் பிரிவினையையும் மதவெறியையும் காந்தியின் தனிப்பட்ட தோல்வியாக பார்ப்பது உண்மையில் பிழையான பார்வை என்றே எண்ணுகிறேன். ஒட்டுமொத்த சூழலையும் , அரசியல் ஊடாட்டங்களையும் கணக்கில் கொண்டு பார்க்கும் போது அது காந்தியின் தோல்வி (மட்டும் !) அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். மேலும் வெற்றி தோல்வி என்று மட்டையடியாக எதையும் நிர்ணயிக்க முடியாது என்பதே நிதரிசனம். நேர்மைக்கும்,வாய்மைக்கும் , அன்பிற்கும் ஒரு நாளும் தோல்வி கிடையாது எனும் மானுட நம்பிக்கையே நம் வாழ்வை முன்னகர்த்துகிறது. இவை ஒரு புறமிருக்க, காந்தி மதவாதத்திற்கு எதிராக சில மாற்றுவழிகளை கையாண்டு இருக்கலாமோ எனும் ஐயம் எழவே செய்கிறது. எனினும் அதை ஓர் போதாமையாகவோ , குறையாகாவோ சூட்டலாமே ஒழிய அதை தோல்வியாக ஏற்கமுடியாது.  



காந்தியின் உதிரி மேற்கோள்களை கொண்டு இன்றுவரை அவர் மீது பல அவதூறு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப் படுகின்றன. அவர் சத்தியத்தை தேடிக்கொண்டே இருந்தார், தன் நிலைப்பாடுகளையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கி மாற்றிக்கொண்டே இருந்தார். அவரே ஒரு முறை, “ஒரே விஷயம் சார்ந்து தான் இருவேறு காலகட்டங்களில் இருவேறு கருத்துக்களை கூறியிருந்தால், கடைசியாக சொன்னதையே தன் கருத்தாக கொள்ள வேண்டும்” என கூறினார்.

இந்த சிறிய நூலில் காந்தியின் மதவாதத்திற்கு எதிரான குரல் நேர்மையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பல்வேறு சமயங்களில் அவர் எழுதிய/பேசிய தரவுகளை தெளிவாக வரிசைபடுத்துகிறது. அதை வாசிப்பதன் மூலம், காந்தியை நாம் இன்னும் நெருக்கமாக அணுக முடியும். மேலும் இன்றும் நம் முன் மக்களை பிளவுபடுத்தும் இன வாதம், மொழிவாதம், மதவாதம் போன்றவைகளை நாம் எப்படி எதிர்கொள்வது என்பதை பற்றி ஆழமாக சிந்திக்க உதவும். 

காந்தியின் மதம் அன்பையும் அறத்தையும் அடிப்படையாக கொண்டது, அங்கு அடையாளங்கள் சார்ந்த ஏற்ற தாழ்வுகளுக்கும், வெறுப்பிற்கும் இடமே இல்லை. அனுதினம் மக்களிடையே பரவிய வெறுப்பின் விஷம் மெல்ல சாதித்துகொண்டிருந்ததை கோட்சேவின் தோட்டாக்கள் நிறைவு செய்து வைத்தன. 
-சுகி 

1 comment: