Monday, April 20, 2020

இந்நாட்களில்

கொரோனா இந்தியாவிற்கு வருவதற்கு முன் வைரஸ் எனும் பொது தலைப்பில் மூன்று குறுங்கதைகளை எழுதினேன். தொடர்ச்சியாக எழுத எண்ணியிருந்தேன். ஆனால் மனம் குவியவில்லை. வீட்டில் முழுநேரம் இருப்பதால் சுதிரையும் சபர்மதியையும் கொஞ்சம் கூடுதலாக கவனித்து கொள்கிறேன். அதிலும் சுதீருக்கு யு.கே.ஜி வீட்டுப்பாடங்கள் கற்றுக்கொடுப்பது எழுதவைப்பது என் பொறுப்பு. நான் முழு ஆன்மீகவாதியாககனிந்துவிடுவேன் போலிருக்கிறது. உண்மையில் எத்தனை கவனச் சிதைவு. அவனை ஒரு இடத்தில் இருத்தி ஒரு வார்த்தை எழுத வைக்க ஒருமணி நேரம் ஆகிறது. கிளினிக் அடைத்துவிட்டு வீட்டிற்கே மருந்துகளை கொண்டு வந்து விட்டதால் மருந்து வாங்க வருபவர்களை நானே கவனித்து கொள்கிறேன். 

நாள் தவறாமல் காலையில் பன்னிரண்டு சுற்று சூர்ய நமஸ்காரம் செய்கிறேன். எடை மூன்று கிலோ குறைந்தது கூடுதல் பலன். முக்கிய காரணம் வெளியுணவு இல்லை என்பது தான். ஏறத்தாழ இரண்டு வருடங்களாக வாரயிறுதிகள் முழுக்க பெரும்பாலும் பயணத்தில் இருந்திருக்கிறேன். மாலையில் சற்று நேரம் சுதீர் சைக்கிள் பழகுகிறான். உடன் நானும் நடந்து வருகிறேன். எங்கள் வீடிருக்கும் பகுதி எப்போதும் ஆளரவமற்றது. இப்போது அதனினும் துல்லிய நிசப்தம். வீட்டு தோட்டத்திற்கு மயில்கள் வருகின்றன. மாடியில் இருந்து கிளி கூட்டங்களை காண முடிகிறது. அந்தி வானத்தை மாடியிலிருந்து காண்பது பெரும் நிறைவை அளிக்கிறது. 

இதற்கிடையே தான் எழுத்தும் வாசிப்பும். சத்திய சோதனை மொழியாக்கம் தொடர்ந்து வருகிறேன். நாளுக்கு ஒரு அத்தியாயம் செய்து முடிக்க வேண்டும் என எனக்கு நானே உறுதி எடுத்துக்கொண்டுள்ளேன். சில நாட்களில் கணினியில் அமர்ந்து எழுதும் மன அமைப்பு வருவதில்லை. இந்த ஊரடங்கு காலக்கட்டத்திற்குள் இரண்டாம் பாகத்தை முடிப்பேன் என எண்ணுகிறேன். ஒவ்வொரு ஞாயிறும் சக எழுத்தாளர் நண்பர்கள் சிலருடன் சிறுகதை விவாதங்களை ஸ்கைப் வழி செய்கிறோம். இரண்டு மணிநேரங்களுக்கு மேல் நீளும் அமர்வுகள் பெரும் உற்சாகத்தை அளிக்கின்றன. இது இப்போது ஐந்தாறு வாரங்களாக தொடர்ந்து வருகிறது. ஞாயிறு சந்திப்பு இப்போது நான் பெரிதும் எதிர்பார்க்கும் ஒன்றாக ஆகிவிட்டது. ஒவ்வொருமுறையும் புதியவற்றை கற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பு.

இந்த காலக்கட்டங்களில் தினமும் கொஞ்சமாவது வாசிக்கிறேன்.

அன்னையும் அரவிந்தரும் எழுதிய integral healing 1001 arabian nights, அமர் சித்ரகதா படக்கதைகள், மீரா பெண் எழுதிய 'beethoven's mystical vision', Eckhart Tolle 's  a new earth, சத்தியமூர்த்தியின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த ரூமியின் கவிதைகள்  டாக்டர். வேணு வெட்ராயனின் அலகில் அலகு கவிதை தொகுப்பு ஆகிய நூல்களை வாசித்தேன். இப்போது grimm's fairy tales வாசித்து வருகிறேன். அனைத்து நூல்களும் நிறைவான வாசிப்பனுபவத்தை அளித்தன. குறிப்பாக அரேபிய இரவுகளும் க்ரிம் தேவதைக்கதைகளும் இத்தனை ஆழமானவை என எனக்கு தெரிந்திருக்கவில்லை. பல கதைகளின் கற்பனையின் ஆழம் பிரமிக்க வைத்தன. அதே போல் மதரின் நூல் எனக்கு தனிப்பட்ட முறையில் சில திறப்புகளை அளித்தன எக்கார்ட் டோல் புத்தகமும் சில புரிதல்களை அளித்தன. அசரடித்த நூல் என்றால் மீரா பெண் எழுதிய பீத்தோவன் நூல் தான். ஒருவகையில் அது பீத்தோவனின் ஆன்மீக வாழ்க்கையின் வரலாறு என சொல்லலாம். கலை மனம் வெளிப்படும் சில இடங்களை தெரிவு செய்து வெளியிட்டிருக்கிறார்.. சர்வோதயம் வெளியிடு. நண்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டும் என பரிந்துரைக்கிறேன். 

திரைப்படங்கள் பெரிதாக பார்க்கவில்லை. தினமும் அரைமணிநேரம் அல்லது ஒருமணிநேரம் இரவு உறங்கும் முன் கொஞ்சம் பார்க்கிறேன். பெரும்பாலும் மார்வல் படங்கள். ப்ரைமில் குங்க்பூ பாண்டா தொடர் உள்ளது. நண்பர்கள் காணலாம். எனக்கு பிடித்திருந்தது. சுதீருடனும் மானசாவுடனும் சேர்ந்து எட்டு நாட்களுக்கு மதியம் தொடர்ச்சியாக ஹாரி பாட்டர் திரைப்படங்களை பார்த்தோம். 

தினமும் சில நண்பர்களுக்கு தொலைபேசுகிறேன். காய்கறிகள் மளிகை பொருட்கள் வாங்க நான் மட்டுமே வெளியே சென்று வருகிறேன். முக கவசம் அணிந்து காரைக்குடி வெயிலில் சென்று வருவது பெரும் கொடுமை. எவரேனும் வந்து சென்றாலோ அல்லது வெளியே சென்று விட்டு வந்தாலோ மெல்லிய பதட்டம் தொற்றி கொள்கிறது. நோய் என்னை எதுவும் செய்யாது ஆனால் வீட்டிற்குள் கொண்டு வந்துவிடக்கூடாது எனும் அச்சம் தான் காரணம். மருத்துவ நண்பர்களிடம் உரையாடியபோது நம்மூரில் இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் செல்லக்கூடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள். நமது நோய் எதிர்ப்பு ஆற்றல் இதை நன்றாக எதிர்கொள்ளக்கூடும் என்பது அவர்களின் ஊகம். அது மெய்யாக வேண்டும். 

கொரோனா பல விஷயங்களை நிரந்தரமாக மாற்றிவிடும். இதன் பொருளாதார பின்விளைவுகள் பாரதூரமனாவை. வாழ்க்கைமுறையில் சில நிரந்தர மாற்றங்களை கோருவது. காந்தி மீண்டும் மீண்டும் நினைவுக்கு வரக்கூடிய காலகட்டம் இது. தொடக்கத்தில் ஒரு டிஸ்டோபிய உலகம் அளிக்கும் கிளர்ச்சியுடன் தான் கொரோனாவை கண்டேன். ஆர்வமாக எல்லா செய்திகளையும் தொடர்ந்தேன். நாளடைவில் ஆர்வம் வடிந்தது. கொஞ்சம்  நானே என்னை நோக்கி கொள்ள பரிசீலித்து கொள்ள உகந்த காலம். katyar kajat ghusli என்றொரு மராத்தி படம்- அதன் இசை மிகவும் பிடித்துவிட்டது. தினமும் கேட்கிறேன். இந்துஸ்தானி, தும்ரி, கவாலி இசை கேட்கிறேன். செய்திகளில் இருந்து நம்மை விலக்கிக்கொண்டு அன்றைக்கு அன்று என வாழ்ந்தால் எந்த குறையும் இன்றி தான் செல்கிறது வாழ்க்கை. ஆனால் இந்த பாதுகாப்பு முட்டையை உடைத்துக்கொண்டு விழும் செய்திகளும் தகவல்களும் வருங்காலம் குறித்தும் கோடிக்கணக்கான மக்கள் குறித்தும் இனம்புரியாத அச்சத்தை எழுப்புகின்றன. 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் சொல்லப்பட்ட, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படும் வரிதான் என் பிரார்த்தனை. நம் அனைவருக்காகவும்..

பொய்மை நீங்கி மெய்ம்மை வரட்டும் 
இருள் நீங்கி ஒளி வரட்டும் 
மரணம் நீங்கி அமுதம் வரட்டும். 





Thursday, April 16, 2020

நீலகண்டம் : முதல் வாசிப்பின் சிறுகுறிப்பு.- கடலூர் சீனு

(நண்பர் கடலூர் சீனு - என் முதல் பதிப்பாளரும் கூட, நீலகண்டம் குறித்து ஒரு சிறுகுறிப்பை அனுப்பி இருந்தார். விரிவாக பேசவும் செய்தார். இந்த நாவலின் வடிவம் பற்றி அவர் கூறியவை இதுவரையிலான வாசிப்புகளில் சிறந்த ஒரு கோணம். அதை அவர் நேரமிருக்கும் போது விரித்து எழுதுவதாக சொன்னார். சீனுவிற்கு நன்றி)




ஒரு புனைவின் உலகினுள் ஒரு வாசகன் முதல் முறை நுழைந்து அது அளிக்கும் அனுபவத்தில் திளைப்பது மிக முக்கியமான ஒன்று. தேர்ந்த வாசகர் என்றாலுமே கூட வாசிப்பில் அவர் முன்னனுபவத்தை தோற்கடிக்கும் தனித்துவம் கொண்ட கலை, வடிவக் கூறு ஒன்றினை தேடும் வாசக ஆழ்மனம் அந்த முதல் வாசிப்பில் விழிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும்.

மறுவாசிப்பு என்பது அப்படிப் புனைவின் art, craft என முதல் வாசிப்பில் கண்டடைந்த தனித்துவமான அம்சம் அந்த புனைவுஉலகின் நெடுக்க எவ்வாறு இழைந்து நிற்கிறது என்பதை அனுபவிப்பதாக அமையும். 

அந்த வகையில், இந்த உள்ளிருப்பு நாட்களில் இரா முருகன் கோபிகிருஷ்ணன் என மருவாசிப்பு
நிகழ்த்திக்கொண்டிருந்த சூழலில், முதல் வாசிப்புக்கு என காத்திருந்த வரிசையில் முதல் நூலாக நின்ற நீலகண்டம் நாவலுக்கு ஒரு இரவை ஒதுக்கினேன்.

ஆட்டிசக் குழந்தையான வரு. அவள் வாழும் யதார்த்தம். அவளை தத்தெடுத்த தந்தையான செந்தில். அவன் வாழும் யதார்த்தம். இந்த இரு யதார்த்தங்களும் ஒன்றை ஒன்று புரிந்து கொள்ள இயலாமல் உறவு எனும் பெயரில் முறிந்த இரு கண்ணாடி முனைகள் போல ஒன்றை ஒன்று கீறிக் கிழித்துக் கொள்கின்றன. இரு யதார்த்தங்களும் இடையே உள்ள மெல்லிய ஆனால் கடக்கவே இயலாக் கோடு எங்கணம்
கரைந்து அழிந்தது என்பதை வரு எழுதிக்காட்டும் நாவலே நீலகண்டம்.

பாற்கடல் கடைகையில் எழும் நஞ்சைத் தாக்கும் சிவனின் கதை முதல், சிவனுக்கு பிள்ளைக்கறி என்றாகும் சீராளன் தொடர்ந்து, பிள்ளையைக் கொல்லும் சுடலைமாடன் வரை வரு சொல்லும் கதையில் வரும் எல்லாமே செந்தில் போன்ற 'நார்மல்' மனிதர்கள் வாழும் உலகின் யதார்த்தம். பாக்மான், நிமோ, நிஞ்சா டர்டில், என வருவின் டோலக் பூர் உலகிலோ மகிழ்ச்சி தவிர வேறு எதுவுமே இல்லை. செந்திலின் யதாதார்த்த உலகில் செத்துப்போகும் வான்மதி, வருவின் யதார்த்தத்தில் தேவதையாக இருக்கிறாள்.

இந்த தேவதை உலக யதார்த்தத்தை, செத்துப் போகும் உடல்கள் அடங்கிய யதார்த்தம் எங்கனம் புரிந்து கொள்ளும்? வரு உலகின் சிறகுகள் கொண்ட தேவதையை பிணமாக்கி மண்ணில் புதைக்க முயலும் நவீன மருத்துவம். அந்த நவீன மருத்துவ உலகின் உதவியுடன் தேவதையை மண்ணில் இறக்க முயலுகின்றனர் செந்தில் ரம்யா தம்பதி.

இந்த மையக் கதை ஓட்டத்தில் செந்திலின் குடும்ப பின்புலம், ரம்யாவின் குடும்ப பின்புலம், ஹரி நந்தகோபால் போன்ற மனிதர்கள், வருவை ஒத்த கொரில்லா, வள்ளி, போன்றவர்கள், தாய்மை, தந்தைமை, சகோதர உறவு,  காமம் குரோதம் சமூக அந்தஸ்து, குடும்ப அமைப்பு, என அனைத்தும் புராணக் கதைகள், தொன்மக் கதைகள், நாட்டார் கதைகள் என விரிவான பகைப்புலத்தில் இவற்றின் சாராம்சம் உடைத்துப் பரிசீலிக்கப்படுகிறது. 

மெல்ல மெல்ல செந்திலின் அகத்தில் இரு யதார்த்தங்களும் இடையியலான மெல்லிய புகைத்திரை கலைவது இந்த நாவலின் அழகிய சித்தறிப்புகளில் ஒன்று. மெல்லிய மது மயக்கில் சீராளனைக் காணும் செந்தில், கடற்கரையில் வருவை விட்டு விலக முடிவு செய்த கணம், அவன் குல தெய்வமான நாகம்மனை பார்க்கிறான். நாகம்மனின் இருப்பு வரு செந்தில் இருவரும் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ள எவ்வாறு துணை நிற்கிறது என்பது நாவலின் கவித்துவ சித்தரிப்பு.

கற்பனையில் வித விதமான கதை உலகம் வழியே எழுந்து பறக்கும் இந்தப் புனைவு, தர்க்கப் பூர்வமாக வரு எனும் ஆட்டிச நிலையாளரின் பார்வை நோக்கில் சொல்லப்படுகிறது. உணர்வுகள் கட்டுப்படுத்தப்பட்ட நிலையால் மட்டுமே கொள்ள இயன்ற கொந்தளிப்பு தனித்துவமான வாசிப்பு அனுபவம் அளிப்பது. குறிப்பாக வருவை குழந்தையாக ஒப்படைத்து விட்டு கண் கலங்கும் மாமன், தன்னை முரட்டுத் தனமாக கையாள வேண்டாம் என்று விண்ணப்பித்து அதன் காரணம் சொல்லும் விபச்சாரி, நஞ்சு அமுதம் என கணத்தில் மாற நந்தகோபால் காலில் விழும் செந்தில் என பல சித்திரங்களை சொல்லலாம்.

'இந்த' யதார்த்த உலகில் வாழும் மனிதர்கள் குடும்பம் என்றும் சமூமம் என்றும், உறவுகள் என்றும்,  தியாகம் என்றும் அன்பென்றும், அத்மீகம் என்றும் அமைப்புகள் கட்டி வைத்து அதில் சிக்கி உழலும் வாழ்வை, அதன் அடிப்படைகளை  'அந்த' யதார்த்த உலகில் வாழும் வரு, இந்த உலகுக்கு 'அந்நியனான' 'அந்த' வரு எப்படி  வினவுகிறாள். எங்கணம் பரஸ்பரம் இரு உலகும் ஒன்றை ஒன்று அறிந்து தகவமைகிறது
என்பதன் மீதான கலா ஸ்ருஷ்டியே இந்த நீலகண்டம் நாவல். இருள் கவிந்த இந்த நாட்களில், எனக்கான சுடரொளி வாசிப்பு. அந்த வரிசையில் மற்றொரு தண்ணொளி மென்சுடர் இந்தப் புனைவின் வாசிப்பு அனுபவம்.

Tuesday, April 7, 2020

1000 மணிநேர வாசிப்பு- அருண்மொழி நங்கை அவர்களுக்கு வாழ்த்துக்கள்


அமுதும் நஞ்சும் அணைந்ததொரு காதை ...
அன்புள்ள சுனீல்,
  நலமா? நாங்கள் நலமே.

ஒரு சிறிய நற்செய்தி. நான் நேற்றுடன் 1000 மணிநேர வாசிப்பு சவாலை நிறைவு செய்தேன். மகிழ்ச்சியும், உற்சாகமும் என்னை நிறைத்தது. ஏதோ சாதனை போலவே உணர்ந்தேன். என்னை நினைத்து பெருமிதம் கொண்ட மிக ச் சில தருணங்களில் ஒன்று. 
இதற்கான முழுமுதல் காரணம் நீங்கள். சென்ற வருடம் இச்சவாலை தொடங்கி வைத்து ஏராளமான ஆட்களை இதில் பங்குபெற செய்திருக்கிறீர்கள். 
    இச்சவால் இல்லாமலும் வாசிப்பவள் தான் நான் என்றாலும் இத்தனை மணி நேரத்தை இவ்வளவு முனைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் வாசித்திருக்க முடியாது என்றே கருதுகிறேன். உதாரணமாக இதற்குமுந்தைய  வருடம் நான் வாசித்த புத்தகங்கள் சுமார் 50-55. இந்த வருடம் அது இரு மடங்காகி இருக்கிறது.
  
 இந்த மாதிரி  சிறு சிறு இலக்குகள்தான்  வாழ்க்கையை மேலும் சுவாரஸ்யபடுத்துகின்றன. ஒரு சிறிய இலக்கை எய்தும்போது நிறைவு. பிறகு அடுத்த இலக்கு.இது ஒரு காந்திய வழியும் கூட. நம் சலிப்புற்ற அன்றாடத்தை சுவையூட்டுபவை இவையே என  நினைக்கிறேன்.  இந்த மடைமாற்றத்தை ஏற்படுத்தி தந்த உங்களுக்கு என் நன்றி.
    வெளிநாடு [3 பயணங்கள்] , சொந்த ஊர் சென்ற நாட்கள் தவிர பிற அனைத்து நாட்களும் வாசித்திருக்கிறேன்.

      இப்போது தற்சமயம் இதிலிருந்து விலகுகிறேன். பிறகு அடுத்த சவாலில் இணைந்து கொள்கிறேன். சில தனிப்பட்ட முயற்சிகள் செய்யப் போகிறேன். அதில் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களுக்கு அறிவிப்பேன்.

    சாந்தமூர்த்தி சார்  இரண்டாயிரத்தை நெருங்கப் போகிறார்.  ஒரு அசுர  சாதனை. அவருக்கு என் வணக்கமும் வாழ்த்தும். 

    ஓட்டத்தில் பங்கு பெறும் பிற அனைத்து வாசக நண்பர்களுக்கும் என் அன்பும் , வாழ்த்தும்.

வாசித்த புத்தக பட்டியல் அந்த அட்டவணையிலேயே இருக்கிறது.வேண்டுமென்றால் பயன் படுத்திக் கொள்ளுங்கள்.
அன்புடன், 

அருண்மொழி நங்கை.

அன்புள்ள அருணா அக்கா, 

ஏப்ரல் பதினாலு வந்தால் சவால் தொடங்கி ஒரு வருடம் நிறைவுறுகிறது. நான் இதை தொடங்கிய போது சராசரியாக நம்மால் நாளுக்கு மூன்று மணிநேரம் வாசிக்க முடிந்தால் ஒரு வருடத்தில் 1000 மணிநேரத்தை கடக்க முடியும் என நம்பினேன். உங்கள் விஷயத்தில் அது சரியாகவே நடந்திருக்கிறது. அதற்கு முன்னரே வெற்றிகரமாக இந்த சவாலில் வென்றுள்ளீர்கள். சாந்தமூர்த்தி அவர்களுக்கு பின்னர் இரண்டாவாதாக நிறைவு செய்திருப்பவர் நீங்களே. அதற்காக உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இதை தொடங்கிய நான் இன்னும் ஐநூறு மணிநேரங்களை தொடவில்லை. நண்பர்கள் சுரேஷ் பிரதீப், லாவண்யா, பாலசுப்பிரமணியன், சரவணக்குமார், ராதா மற்றும் கமலதேவி  ஆகியோர் ஐநூறை கடந்து விட்டிருக்கிறார்கள். அதை விட சாந்தமூர்த்தி ஒரு ஆயிரம் முடித்து இரண்டாவது ஆயிரத்தை நிறைவு செய்து, சின்ன பயக்கலா ஆருகிட்ட என மார்தட்டி கொண்டிருக்கிறார்.  நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இதில் பங்கு பெற்ற அனைவருக்கும் ஏதோ ஒருவகையில் பலனளித்திருக்கும் என நம்புகிறேன். தொடக்க நிலையில் விட்டவர்களுக்கு தங்கள் வாசிப்பின் குவியமின்மையை காட்டியிருக்கும். பலருக்கு தங்கள் ஆற்றல் மற்றும் கவனம் கூடியிருக்கிருப்பதை உணர முடியும். ஒரு பழக்கமாக வெவ்வேறு சூழலுக்கு இடையே வாசிக்க உதவியிருக்க கூடும். ஏதோ ஒருவகையில் எல்லோருக்கும் இது உதவியிருக்கும் என நம்புகிறேன். இந்த யோசனை என் வழியாக விதைக்கப்பட்டது என்பதில் சிறிய பெருமிதமும் மகிழ்ச்சியும் கொள்கிறேன். 
அடுத்து நீங்கள் தொடங்க விருக்கும் பணிக்கும் வாழ்த்துக்கள். 

சாந்தமூர்த்தி அவர்கள் தன வலைப்பூவில் அருண்மொழி அக்காவை  வாழ்த்தி ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார். அதில் இந்த போட்டியின் ஒரு சம்மரி இருக்கிறது. நண்பர்கள் வாசிக்க வேண்டும். 

கீழே அருண்மொழி நங்கை வாசித்த புத்தகங்களின் பட்டியல் உள்ளது. மொத்தம் நூற்றி பதிமூன்று நூல்கள். சில ஆங்கில நூல்கள், கணிசமான மொழியாக்க கிளாசிக்குகள், மறுவாசிப்புகள், வளரும் எழுத்தாளர்களின் ஆக்கங்கள், தமிழ் கிளாசிக்குகள் என பரந்துபட்ட வகையில் அமைந்திருக்கிறது. 

இந்த கொரோனா காலத்தில் நண்பர்கள் வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஆக்கப்பூர்வமாக வாசிக்க வேண்டும் என கோருகிறேன். 


1.கான்சாகிப்-சிறுகதைதொகுப்பு-நாஞ்சில் நாடன்
2.பஷீர் நாவல்கள்- மறுவாசிப்பு
3.எழுதாப்பயணம்-லக்‌ஷ்மி பாலக்ருஷ்ணன்
4.புனைவும் நினைவும்-சமயவேல்
5.மண்ணும் மனிதரும்-சிவராம காரந்த்-மறு வாசிப்பு
6.கோரா- டாகூர்
7.என் சரித்திரம்-உ.வே.சா
8.வெளிச்சமும் வெயிலும்-சிவா க்ரிஷ்ணமூர்த்தி
9.பிராது- கண்மணி குணசேகரன்
10. ஒற்றன் -அசோகமித்ரன் மறுவாசிப்பு
11.சுபிட்ச முருகன் -சரவணன் சந்திரன்
12.பச்சை நரம்பு-அனோஜன் பாலக்ரிஷ்ணன்
13.கரைந்த நிழல்கள்-அசோகமித்ரன் -மறு வாசிப்பு
14.18 வது அட்சக்கோடு-அசோகமித்ரன்
15.உருமால் கட்டு-சு. வேணுகோபால்
16.புதிய ஜார்- சாம்ராஜ்
17.சீர்மை-அர்விந்த் கருணாகரன் மறு வாசிப்பு
18.பிரபல கொலைவழக்குகள்-சொக்கலிங்கம்
19.எனது தேசத்தை மீளப்பெறுகிறேன் -ஆப்பிரிக்க உலக சிறுகதைகள்
20.எஞ்சும் சொற்கள்-சுரேஷ் ப்ரதீப்
21.வண்ண கழுத்து-தன்கோபால் முகர்ஜி
22.நிழலின் தனிமை-தேவி பாரதி
23.யுகாந்தா- ஐராவதி கார்வே
24.குவெம்புவின் சிறுகதைகள்-கன்னட சிறுகதைகள்
25. outlaw- by roy maxham
26.வனவாசி-விபூதிபூஷன்
27. அக்னி நதி- குல் அதுல் ஐன் ஹைதர் மறுவாசிப்பு
28. தம்மம் தந்தவன் -விலாஸ் சாரங்
29.பௌத்தத் தத்துவ இயல் -ராகுல் சாங்கிருத்யாயன்
30.இன்று- அசோகமித்ரன்
31.இனி நான் உறங்கட்டும்- பி.கே.பாலகிருஷ்னன்
32.பங்கர்வாடி-வெங்கடேஷ் மாட்கூல்கர்
33.கலாதீபம் லொட்ஜ்- வாசு முருகவேல்
34.கன்னி- ஃப்ரான்சிஸ் கிருபா
35.ஒரு குடும்பம் சிதைகிறது- எஸ்.எல். பைரப்பா
36.LIFE ON EARTH- DAVID ATTENBOROUGH
37.புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை- ஆர்தர் லில்லி
38.Sidhartha- Herman Hesse
39.இரண்டாம் இடம்-எம்.டி.வாசுதேவன் நாயர்
40. மானசரோவர்- அசோகமித்ரன்
41.நரசிம்மராவ்-இந்தியாவை மாற்றியமைத்த சிற்பி-வினய் சீதாபதி
42.காந்தி வாழ்க்கை-லூயி ஃபிஷர்
43.Fontamara-Ignazio silone
44.பாரிஸுக்கு போ- ஜெயகாந்தன்
45.தீயின் எடை- ஜெயமோகன் -30 அத்யாயங்கள்
46.அவரவர் பாடு- க.நா.சு
47.புனலும் மணலும்-ஆ.மாதவன்
48. மனோதிடம்- பன்னாலால் படேல்[ குஜராத்தி நாவல்]
49.கசாக்கின் இதிகாசம்-ஓ.வி. விஜயன் தமிழில்-யூமா.வாசுகி
50.ஒற்றை வைக்கோல் புரட்சி-மசானபு ஃபுகுவோகா
51.நீலகண்ட பறவையைத்தேடி-அதீன் பந்தோபாத்யாய-வங்க நாவல்- மறு வாசிப்பு
52.யுகாதி -கன்னட சிறுகதைகள்-நஞ்சுண்டன்
53. வேங்கைச் சவாரி- விவேக் ஷன்பாக்
54. யாமம்- எஸ். ராமகிருஷ்ணன்
55.சில நேரங்களில் சில மனிதர்கள்- ஜெயகாந்தன்
56.பயணக்கதை-யுவன் சந்திரசேகர்
57.சிலுவைராஜ் சரித்திரம்-ராஜ் கௌதமன்
58.குள்ள சித்தன்சரித்திரம்-யுவன் சந்திரசேகர்-மறு வாசிப்பு
59.நீல கண்டம்-சுனில் கிருஷ்ணன்
60..ஆட்டுக்குட்டிகள் அளிக்கும் தண்டனை-ஸொராண்டினோ-தமிழில் எம்.எஸ்
61. நிலாக்கள் தூர தூரமாக-பாரத தேவி
62.தக்கர் கொள்ளையர்கள்-வரதராசன்
63. தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்-மாரி செல்வராஜ்
64. ஏற்கனவே-சிறுகதை தொகுப்பு-யுவன் சந்திரசேகர்
65. நான்,சரவணன்வித்யா-லிவிங் ஸ்மைல் வித்யா
66.கானுறை வேங்கை- கே. உல்லாஸ் கரந்த்
67. தென்னாப்பிரிக்காவில் காந்தி-ராம சந்திரகுஹா
68.இன்றைய காந்திகள்- பாலசுப்ரமணியம் முத்துசாமி
69.பேய்ச்சி- நாவல்- ம.நவீன்
70.அங்கே இப்ப என்ன நேரம்- அ.முத்துலிங்கம். மறுவாசிப்பு
71. எனது இந்தியா- ஜிம் கார்பெட்- தமிழில் யுவன் சந்திரசேகர்
72. அனல் ஹக்- பஷீர்- தமிழில் யூசுப்
73.மீஸான் கற்கள்-புனத்தில் குஞ்ஞப்துல்லா-தமிழில் யூசுப்
74. ஆப்பிளுக்கு முன் - சரவண கார்த்திகேயன்
75. சுமித்ரா-கல்பற்றா நாராயணன்
76.கஸ்தூரி திலகம்-பரணீதரன்
77.போயாக்- ம. நவீன்
78..ராஜீவ் கொலைவழக்கு- ரகோத்தமன்
79.சதுரங்க குதிரைகள்-ஹிந்தி நாவல்- கிரிராஜ் கிஷோர்
80.ஒளி- சுசித்ரா
81.கூண்டுக்குள் பெண்கள்-விலாஸ் சராங்-சீனிவாசன்
82. மண்டை ஓடி- ம.நவீன்
83. நீல கண்டம்-சுனீல் கிருஷ்ணன் -மறு வாசிப்பு
84.களிற்றியானை நிரை-ஜெயமோகன் -25 அத்யாயங்கள்
85.கொல்லப்படுவதில்லை- வங்க நாவல்-மைத்ரேயி தேவி
86.காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை- ரா. கிரிதரன்
87.எழுதித் தீராப் பக்கங்கள்- செல்வம் அருளானந்தம்
88. பிறகு- நாவல்- பூமணி
89. வெக்கை- நாவல்- பூமணி
90.சொற்களில் சுழலும் உலகம்- செல்வம் அருளானந்தம்
91.அகதி- சா. ராம்குமார்
92.பெண்கள் துகிலுரிந்தால் பேரண்டம் அழியாதோ- அ.கா. பெருமாள்
93.மனை மாட்சி-எம்.கோபால க்ரிஷ்ணன்

94.வெளியேற்றம்-யுவன் சந்திரசேகர்

95. இறுதி யாத்திரை- எம்.டி. வாசுதேவன் நாயர்
96.பிரேம்சந்த் சிறுகதைகள்- தமிழாக்கம் சௌரி
97. கொங்கு தேர் வாழ்க்கை- நாஞ்சில் நாடன்

98. Mirror images- novel by Linda grey sexton

99.விழித்திருப்பவனின் கனவு- கே.என். செந்தில்
100.உப்பு வேலி-ராய் மாக்ஸம்- தமிழில் சிரில் அலெக்ஸ்
101.பதிமூணாவது மையவாடி- நாவல்- சோ. தர்மன்

102.தஞ்சை சிறுகதை பட்டறைக்கான சிறுகதைகள்

103.அசோகமித்திரன் சிறுகதைகள்-தொகுதி 1
104. என் கதை- நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை
105. வானமே எல்லை-கேப்டன் கோபிநாத்
106. கங்கை எங்கே போகிறாள்- ஜெயகாந்தன்
107.ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்- ஜெயகாந்தன்

108.ஆங்காரம்-நாவல்- ஏக்நாத்
109.திருநங்கையர்-சமூக வரைவியல்- பத்மபாரதி
110.சோளகர் தொட்டி- பாலமுருகன் -நாவல்

111.இருபது வருஷங்கள்- நாவல்-எம்.எஸ்.கல்யாணசுந்தரம்
112.ஜெயகாந்தன் குறுநாவல்கள்- தொகுதி ஒன்று

113.நான் பூலான் தேவி- மரிய தெரஸ்கூன், பால் ராம்பாலி


Sunday, March 22, 2020

அம்புப் படுக்கை - ஒரு வாசிப்பு- காளீஸ்வரன்

(நண்பர் காளீஸ்வரன் அவர்களை அண்மையில் ஈரோட்டில் சந்தித்தேன். அப்போதுதான் அம்புப்படுக்கை வாசித்ததாக கூறினார். அவருடைய வாசிப்பை எழுதி அனுப்பியுள்ளார். நன்றி)

என் பால்யத்தில், ஒவ்வொரு தைப்பூசத்துக்கும் என் அம்மாவின் சொந்த ஊரான வடுகபாளையத்தில் இருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள சென்னிமலைக்கு மாட்டுவண்டிகள் கிளம்பும். காவடி பூசைகள் முடிந்து வண்டிகள் கிளம்ப எப்படியும் அதிகாலை ஆகிவிடும். பெருமாநல்லூர் வழியே ஊத்துக்குளி வருவதற்குள் விடிந்துவிடும். அங்கு காலை உணவு. பின்னர் தோப்புப்பாளையத்தில் மதிய உணவு. மாலை வேளையில் சென்னிமலை சென்றிருப்போம். அதிகாலையில் கிளம்பும் மாட்டுவண்டிப் பயணம் பெரும்பாலும் உறக்கமில்லாத பயணமாகவே இருக்கும். அதற்கு மாட்டுவண்டிப் பயணம் தரும் கிளர்ச்சி, வைக்கோல் விரிக்கப்பட்டிருந்தாலும் கூண்டில் நன்கு சாய முடியாத அசெளகரியம் என சில காரணங்கள் இருந்தாலும், அவற்றைக் காட்டிலும் மிக முக்கியமான காரணம் மயங்காத்தாள் பெரியம்மா. அவர்கள் சொல்லும் கதைகள். பெரும்பாலும் ஒவ்வொரு வருடமும் ஒரே கதைகளாகத்தான் இருக்கும். ஆனால், இந்த வருடம் கேட்கும் கதைகளை, மீண்டும் கேட்க வேண்டுமானால், அடுத்த தைப்பூசம் வரை காத்திருக்க வேண்டும் என்பதே அக்கதைகளின் வசீகரத்தை இன்னும் உயர்த்துகின்றன. வளர்ந்துவிட்ட நவீன யுகம், 55 கி.மீ. தூரத்தை ஒரு நாள் முழுக்க கடப்பதை எப்படி அனுமதிக்கும் ? ஆகவே, மாட்டு வண்டிகளின் இடத்தை லாரி பிடித்துக்கொண்டது. பயண நேரமும் ஒன்றிரண்டு மணிகளாய் சுருங்கிப்போனது. கதைகளின் இடத்தை செல்போன்கள் ஆக்கிரமித்துக்கொண்டு பல வருடங்களாகி விட்டன. ஒரு சின்ன கையசைவில், பல்லாயிரம் கதைகள் அல்லது பாட்டுகள் எம்மொழியில் வேண்டுமே அம்மொழியில் என விஞ்ஞானம் அள்ளித் தந்திருக்கையில். ஒரே கதையை ஒரே மனிதனிடமிருந்து திரும்பத் திரும்பக் கேட்கும் சுகத்தை சொல்லி என்ன லாபம் ?

இந்த மனநிலை, பொதுவாகவே மனிதனின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.  உண்மையில் மனிதனைக் காட்டிலும் பன்மடங்கு தீவிரமாய் இயங்கவல்ல பல கண்டுபிடிப்புகளால் மனிதன் ஒரு சுமையாகக்கூட தோன்றலாம். இந்த அவநம்பிக்கையிலிருந்து பெரும் ஆசுவாசம் தருகின்ற ஒரு அற்புதக்கதையை சமீபத்தில் படித்தேன். திரு.சுனீல் கிருஷ்ணன் எழுதிய அம்புப்படுக்கை எனும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள “பொன் முகத்தைப் பார்ப்பதற்கும் போதை முத்தம் பெறுவதற்கும்” எனும் கதை அது. மனிதனின் இருப்பை இயந்திரங்களைக் கொண்டு நம்மால் பதிலீடு செய்துவிட முடியும். ஆனால், ஒவ்வொரு மனிதனின் இருப்பிலும் அவனுக்கான தனித்த அடையாளம் இருக்கிறது. உண்மையில் அந்த அடையாளமே அவன். அதை ஒருபோதும் இயந்திரங்கள் நிகர் செய்துவிட முடியாது என்பதில் இருக்கிறது எனக்கான சிறு நிறைவு. என்னதான் எஸ்.பி.பி. யே பாடினாலும், அட்சரம் பிசகாத வரிகள் அமைந்தாலும் வள்ளிக்குட்டிக்கு நாவன்ன லேனாவின் பாடலே அமுதமாய் அமைவது கொஞ்சம் நிம்மதியைத் தருகிறது.

குற்றம் புரிந்தவர்களைச் சூழும் ஒரு மந்திரக்கூண்டு; முழு நகரையும் கூழ்ந்துகொண்டுவிட, வெளியே தனித்துவிடப்பட்ட ”நல்லவன்” ஒருவனின் துயரம் சொல்லிமாளாது. தானும் கூண்டுக்குள் இருந்திருக்கவேண்டியவனே, ஆனால் வெளியிலிருப்பதற்குக் “இயந்திரக்கோளாறு” எனும் அவன் மன்றாட்டுடன் முடிகிறது “கூண்டு” கதை. ஒரு கோணத்தில், மற்ற  அனைவரும் ஒரு சிறு உலகில் அவர்களுக்கான சிறுமைகளுடன் மகிழ்ந்திருக்க, எவ்வளவு பரந்து விரிந்ததாய் இருப்பினும் அவன் இருப்பதுதான் கூண்டு எனும் எண்ணம் எழுகிறது. 

தன்னுள் முளைத்த அல்லது தான் கருவுற்று பின்னர் கைவிட்டுவிட்ட கீழ்மையின் உருவு என்பதே ஹரியின் மீதான காந்தியின் பாசத்துக்கான ஊற்றாக இருக்கலாம். மந்தையில் இருத்து தனித்துப் போன ஆட்டுக்குட்டிக்குத்தான் தேவனின் அரவணைப்பு அவசியம் அல்லவா. அந்தப் புரிதலினால் கூட, காந்தி மகான் தன்னுடைய மரணத்துக்குப்பின் நரகத்தைத் தேர்வு செய்கிறார். நிணம் கொதிக்கும் சிறுமைகள் நிறைந்த நரகத்தை நாடுவது அங்கேதான் மனிதர்கள் இருக்ககூடும், அங்கே தன்னுடைய சேவை தேவைப்படும் என்பதால் மட்டும்தானா? அவ்வுலகில்தான் தன் பிரியத்துக்குரிய வழி தவறிப்போன ஹரி இருக்கக்கூடும் என்பதாலும், அவனை நெஞ்சோடணைத்து மீட்சியளிக்கும் கடமையை உணர்ந்ததாலும்தான். ஹரி அவருள் இருந்து முளைத்தெழுந்ததாலோ என்னவோ அவ்வுலகில் எங்கும் அவர் முகம் நிறைந்திருக்கிறது. 

பொம்மைகளின் கைகளையுன் கால்களையும் திருகி விளையாடிப்பார்க்கும் குழந்தைபோல், சிலசமயம் காலமும் விளையாட ஆசை கொள்ளும்போது, மனித வாழ்வைக்காட்டிலும் பொருத்தமான பொம்மை கிடைப்பதில்லை. அனைத்து விதத்திலும் சரியானவாய் இருக்கும் வாசுதேவனின் வாழ்க்கையை ஒரு விபத்து புரட்டிப்போடுகிறது. உணர்வேயில்லாத அல்லது உணர்விருப்பதையே மறந்துபோன ஒரு நோயாளியிடம் காட்டப்படும் கருணைதான் உண்மையில் மிகப்பெரியது. பல வருடங்களுக்கு முன்பே திரு. ஜெயமோகன் அவர்களின் தளத்தில் படித்த கதை “வாசுதேவன்”. சமீபத்தில், மீண்டும் இந்தத் தொகுப்பில் இக்கதையின் முதல் நான்கு ஐந்து பத்திகளை படிப்பதற்குள்ளாகவே கதை நினைவில் எழுந்து வந்த வியப்புக்குறியது இந்தக்கதை.

மேற்சொன்ன கதைகளுடன், திமிங்கலம், காளிங்க நர்த்தனம், அம்புப் படுக்கை பேசும் பூனை, குருதிச்சோறு என முக்கியமான பல கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
”அம்புப் படுக்கை” - நிச்சயம் வாசிக்கப்பட வேண்டிய சிறுகதைத் தொகுப்பு.

Wednesday, March 18, 2020

பிள்ளை நஞ்சமுதே- எஸ்.ஜெயஸ்ரீ

(எழுத்தாளர் பாவண்ணன் பரிந்துரைத்ததன் பேரில் நீலகண்டத்தை வாசித்ததாக சொன்னார். நீலகண்டம் குறித்தான வாசிப்பை பகிர்ந்திருக்கும் கடலூர் ஜெயஸ்ரீ அவர்களுக்கு நன்றி. விருது பெற்ற அம்புப் படுக்கைக்கு கிடைத்த வாசிப்புகளை காட்டிலும் நீலகண்டத்திற்கு வெளியான நான்கைந்து மாதங்களுக்கு ஊடாகவே பல வாசிப்பு/விமர்சன கட்டுரைகள் வந்துள்ளன. ஒன்று இதன் வடிவத்தை வகுத்துக்கொள்ளும் முயற்சிகள் காரணமாக இருக்கலாம், அல்லது பேசுபொருள் காரணமாக இருக்கலாம். பலருடன் இந்த நாவல் உரையாடி வருகிறது மகிழ்சியையும் நிறைவையும் அளிக்கிறது.)

      திருமணத்திற்கென்று ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போதே, சந்தான பாக்கியம் நல்லாருக்கா என்ற கேள்வி பெற்றோர்  வாயிலிருந்து மிக வேகமாக ஓடி வரும். திருமணம் ஆன ஓரிரு மாதங்களிலேயே, என்ன குளிக்கிறியா என்ற கேள்வி எந்தப் பெண்ணும் எதிர் கொள்ள வேண்டிய கேள்வியாக இருக்கிறது. இந்தக் கேள்வியை அந்தப் பெண் ஒருசில மாதங்கள் விளையாட்டாக எதிர் கொள்கிறாள். அடுத்தடுத்த மாதங்களில் இந்தக் கேள்வி கேட்பார்களே என மற்றவர்களைத் தவிர்க்கத் தொடங்குகிறாள். அடுத்தடுத்த வருடங்களில் இந்தக் கேள்விக்கான விடையை அவள் தன்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். மாதச் சுழற்சி நெருங்க நெருங்க அதீத ஆர்வமும், எதிர்பார்ப்பும் கொண்டு திரிகிறாள். அதில் ஏமாற்றம் அடையும்போது, தான் இந்த உலகத்தில் வாழ்வதற்கே லாயக்கற்றவள் என்று மன அழுத்தம் கொள்கிறாள். இந்த அவளுடைய நிலைமை இரண்டு பக்கத்துக் குடும்பத்தையே ஆட்டம் காண வைக்கிறது. அப்புறம். அவள் பெற்றெடுக்கும் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்று மீண்டும் எல்லாரும் நிம்மதியிழந்து தவித்து, அந்தக் குழந்தை நல்லபடியாக இருந்தால்(அதாவது… நன்றாகப் படித்து, நல்ல மதிப்பெண்கள் வாங்கி, பெரிய ஆளாகி, படித்தவுடனே வேலைக்குப் போய், சம்பாதித்து, கார் வாங்கி, வீடு வாங்கி, திருமணம் செய்து, குழந்தை பெற்று…வட்டம் மீண்டும்…..)…இப்படியே இந்த உலகம் சுழலும்போதுதான், எல்லாம் சரியாகப் போய்க் கொண்டிருக்கிறது என்று இந்த உலகம் அர்த்தம் கொள்கிறது. இதில் எந்த இடத்திலாவது மாற்றம் இருந்தால், உலகமே தடுமாறுகிறது.
        எவ்வளவுதான் சிறந்த சோதிடர் கணித்துச் சொன்னாலும், பிள்ளைப்                        பேறு என்பது மனிதர்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல என்பது மீண்டும் மீண்டும் இங்கே நிரூபணமாயிருக்கிறது. ஒரு குழந்தை பிறக்கும்போது அது எப்படிப்பட்ட குழந்தை என்பது தெரியாது. ஆனால், இங்கே குழந்தைகள், அவர்களாக வளர்வதை விட, பெற்றோரின் விருப்பத்திற்கு இணங்கவே வளர்க்கப்படுகிறார்கள். பெற்றோர்கள்  தங்கள் விருப்பத்தை எல்லாம் அவர்கள் மேல் திணித்து, அந்தக் குழந்தையை பெரிய ஆளாக ஆக்கிக் காட்டுகிறேன் பார் என்று நெஞ்சு நிமிர்த்தி மற்றவர் முன் தன்னை பெருமைப்படுத்திக் கொள்வதற்காகவே உருவாக்குகிறார்கள் என்பதாகாவே இன்றைய உலகம் இருக்கிறது.
      முன்னோர் செய்த பாவம் பிள்ளைகள் தலையிலே என்பதும் ஒரு வழக்காக இன்றளவும் நிலவி வருகிறது. ஒரு குடும்பத்தில், முதல் குழந்தை பெண் குழந்தை. அது மூளை வளர்ச்சியில்லாமல் வளர்கிறது. அடுத்தும் ஒரு பெண் அதே மாதிரி.  மூன்றாவதாகவும் ஒரு பெண் அதே போல.  இதில் அந்தப் பெற்றோரின் எண்ணம், நம்பிக்கை நிச்சயம் அடுத்துப் பிறக்கும் குழந்தையாவது நல்ல குழந்தையாக இருக்கும் என்பதுதானே?. ஆனால், இப்படி நடக்க என்ன காரணம், யார் காரணம் என்பது தெரியாது. இப்படிப்பட்ட சூழலில், முன்னோர் சாபம் என்றோ, எப்போதோ எந்தத் தலைமுறையிலோ நடந்த துர்மரணம் என்றோ, எந்த சோதிடனோ, எந்த குறிசொல்லியோ சொன்னால் அதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.
        இவை எல்லாவற்றையும் ஒரு புள்ளியிலிருந்து பிரிந்து செல்லும் பல இழைகளாக நெய்திருக்கும் சுனில் கிருஷ்ணன், அந்தப் புள்ளியை, பிள்ளைப் பேற்றுக்காக அல்லாடும் ஒரு இளம் தம்பதியினரின் வேதனையாகவும் படைத்துக் காட்டுகிறார்.  ஆட்டிசத்தால் பீடிக்கப்பட்ட குழந்தையின் நிலை,  அதன் பொருட்டு அந்தப் பெற்றோர் படும் கஷ்டங்கள் என எல்லாவற்றையும்  சுனில் கிருஷ்ணன் “நீலகண்டம்” நாவல் மூலம் முன் வைக்கிறார்.
       ரம்யா, செந்தில் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். வேற்று சாதியைச் சேர்ந்தவனை மணந்து கொண்டதால், ரம்யாவின் பெற்றோர் அவளை விலக்குகிறார்கள். குழந்தை இல்லாமல் அவர்களின் ஆரம்ப வருடங்கள் நகர்கின்றன. அதில் ரம்யாவுக்கு கொஞ்சம் மன நோயாகிறது. ஒரு பெண் குழந்தையை, சட்டப் பூர்வமாக இல்லாமல், குறுக்கு வழியில் தத்தெடுக்கிறார்கள். அதன் பிறகு, அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அவன் ஆரோக்கியமான குழந்தையாகவும், தத்தெடுத்த பெண் குழந்தை ஆட்டிசம் பாதித்த குழந்தையாகவும் வளர்கிறது. பல வருடங்கள் கழித்து ரம்யாவின் பெற்றோர் அவர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு நாள் அவர்கள் அலுவலக நண்பர்களோடு இன்பச் சுற்றுலா போன இடத்தில் அந்தக் குழந்தை தொலைந்து போகிறாள். கிடைத்தாள் என்பதை பூடகமாக சொல்லி முடிகிறது நாவல்.
        காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் குடும்பத்தினரின் விலகலை எப்படி சகித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது, அதிலும் குறிப்பாக, பெண்ணுக்கு, அவளுடைய தாயின் அரவணைப்பு கிடைக்காமல், உதாசீனம் மட்டுமே கிடைக்கிறது எனும்போது, அந்த மனநிலையே, அவளுக்கு மனதில் மிகுந்த உளைச்சலை ஏற்படுத்தும். பிள்ளைப்பேறு சரியாக அமையாமல், கருச்சிதைவு என்பதிலெல்லாம், இந்த மன நிலையின் பங்கு நிச்சயம் இருக்கிறது. இந்த வேதனைகளை ரம்யாவின் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறது நாவல். 
       பிள்ளைப்பேறு தள்ளிப் போகிறதே என்று யார் யார் என்ன சொல்கிறார்களோ அதையெல்லாம் செய்யும் ஒரு சாதாரணப் பெண்ணின் மனநிலையினை, ( சோதிடம், அரசமரம், கோயில் என்று) எல்லாவற்றையும் வாசிப்பவருக்கு சலிப்பூட்டாமல் நாவல் சொல்லிச் செல்கிறது. தன்னிடம்தான் பிரச்சினை என்று செந்தி உணர்ந்து, செயற்கைக் கருவூட்டல் மருத்துவமனைக்குச் செல்லும் அத்தியாயத்தில், அந்த மருத்துவம் எப்படி ஒரே பண மயமாகியிருக்கிறது என்பதை மிக அழகாக எள்ளலோடு படமாக்கியிருக்கிறார் நாவலாசிரியர்.
       ஆட்டிசம் பாதித்த குழந்தையை சாதாரண குழந்தையாக ஏற்றுக் கொண்டு பள்ளியில் சேர்த்துக் கொள்ள மாட்டோம் என்கிறார்கள். சாதாரணக் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்கள் என்று காரணம் சொல்கிறார்கள். மன நலம் குன்றிய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேர்த்தால், இந்த ஆட்டிசக் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என பெற்றோர் நினைக்கிறார்கள். இது ஒரு ரெண்டுங்கெட்டான் நிலை என்பதை வாசிப்பவரையே உணர வைக்கிறது நாவல்.
       குழந்தைகள் ஏன் இப்படி உருவாகிறார்கள்? இதற்கு யார் காரணம்? நாவலாசிரியர், அழகாக மகாகவி கலீல் கிப்ரானைப் புகுத்திப் பேச வைக்கிறார். “அம்பு எதை அடைய வேண்டும் என்ற இலக்கை வில் தீர்மானிக்காது; அம்பை எய்துபவன்தான் தீர்மானிப்பான், அம்பை எய்துபவன் இயற்கையே, கடவுளே; நீங்கள் அல்ல; நீங்கள் வெறும் வில்தான்”. ஒரு குழந்தை எந்தப் பெற்றோராலும் தர நிர்ணயம் செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்படுவதில்லை. கலீலுடைய வார்த்தைகளிலேயே சொல்கிறார்.”அவர்களை போல் இருக்க முயற்சி செய்யலாம்; ஆனால், அவர்களை உங்களைப் போல் ஆக்கி விடாதீர்கள்”. இதுதான் நாம் குழந்தைகளைப் பற்றி  அறிய வேண்டியது.
        ஆனால், இன்றோ குழந்தைகளை பெற்றோர் விரும்பும் சட்டகத்திற்குள் அடைக்கவே அரும்பாடு படுகிறோம். ஏற்கனவே வகுத்து வைத்திருக்கும் சட்டகத்திற்குள்தான் அந்தக் குழந்தைகள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறோம். அதிலிருந்து மாறும்போது பதற்றம் அடைகிறோம்.சட்டகத்திலிருந்து விலகினால் அவர்களுடைய வாழ்க்கை கேள்விக்குறியாகும் என்று கவலைப்படுகிறோம்; ஏற்கத் தயங்குகிறோம். இதை, இந்த நாவலில்  சுனில் அழகாக ஒரு அத்தியாயத்தில் வேதாளம் சொல்லும் கதையாகப் பதிவு செய்கிறார். மானுட குலத்தின் வரலாறு வடிவமற்றவைக்கும், வடிவத்திற்கும் இடையிலான முரணும், போராட்டமும்தான். வடிவப் பிரக்ஞையையும், வடிவ முரணையும் ஒரு சேர ஏற்கும் காலம்தான் மானிடத்தின் பொற்காலம். என்ற வரிகள், ஒரு குறிப்பிட்ட சூத்திரத்துக்குள், குழந்தைகளை அடைக்க விரும்பும் பெற்றோருக்குச் சொல்லப்பட வேண்டியவை என்றே தோன்றுகிறது.
      பிள்ளைகளை அவர்கள் விருப்பத்திற்கு வளர விடாமல், தங்கள் பெருமைகளை இந்த உலகத்தார் முன் நிலைநாட்டிக் கொள்ளவே பெற்றோர் விரும்புகின்றனர். இதற்காக குழந்தைகளைப் பலிகடாவாக்குகின்றனர். பரஞ்சோதி என்கிற சிவத்தொண்டர், தன்னுடைய சிவத் தொண்டை நிலை நாட்டிக் கொள்வதற்காக, தன் பிள்ளை, சீராளனைத் தன் கையாலேயே வெட்டிக் கொடுக்கிறார்.  தன்னுடைய மந்திர சக்தியைப் பெருக்கிக் கொள்வதற்காக, கருவுற்றிருக்கும் தன் மகளையே கருவை எடுத்துப் பலியாக்குகிறான் மாகாளி மந்திரவாதி.  தன் கணவன் இன்னொரு பெண்ணுடன் உறவு வைத்துள்ளான் என அறிந்து, அந்தப் பெண்ணையும், தன் கணவனையும் பழி வாங்குவதற்காக, தன் பிள்ளைகளையே பலியாக்குகிறாள், கிரேக்கத்தின் மெடியா.  காலங்கள் வேறானாலும், இடங்கள் வேறு வேறானாலும், பெற்றோர், தங்கள் பிள்ளைகளைத் தங்கள் உடைமைகளாகப் பாவித்து, தங்கள் விருப்பத்திற்கு என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள் என்பதை இப்படி புராணம், நாட்டார் வழக்கியல் கதைகள், வேற்று நாட்டு இலக்கியம் என்று பல இடங்களிலிருந்து எடுத்துக் கையாண்டு கோர்த்திருப்பது மிகுந்த பாராட்டுக்குரியது.  இதை ஒரு படிமமாக நாவலில் காட்டியிருப்பது மிகவும் ரசனைக்குரியது.
            ஒரு பக்கம் இவற்றையெல்லாம் அலசினாலும், பிள்ளைப் பேற்றுக்கும், முன்னோர் சாபம், குடும்பத்தில் நடந்த துர்மரணங்கள் போன்றவற்றிற்கும் கூட ஒரு தொடர்பு இருக்க முடியும் என்பதான மக்கள் மத்தியாலான எண்ணத்தையும் அழகாகக் கையாண்டிருக்கிறது நாவல். 
         செந்தியின் பழைய வீட்டில், மீண்டும் மீண்டும் கரையான் வருவதும்,அதற்கு மருந்தடிக்கும்போது அப்பத்தா சொல்லுகின்ற ”பூச்சியண்டாத வீட்டில் மனுஷன் வாழக்கூடாது ராசா” என்பது அந்தக்காலத்து மனிதர்கள் மனங்களில் இருந்த ஈரத்தைக் காட்டுகிறது. வீட்டில் கரையான், பல்லி இவைகள் வருவதைத் தடுக்கவில்லை அவர்கள். எல்லா உயிர்களுக்கும் இடம் தரும், உயிரைக் கொல்லாத ஈரம் படைத்த மனிதர்களாக இருந்தார்கள்; மனதில் ஈரம் கொண்ட மனிதர்களுக்கே சந்ததியை நல்ல முறையில் பெருக்கும் பாக்கியம் கிட்டுகிறது. மனிதர்களின் ஆத்திரங்கள், சண்டைகள், சந்தேகங்கள் இவற்றில் குழந்தைகள் பலிகடாக்களாக ஆக்கப்படும்போது, அந்தக் குடும்பங்களில் குழந்தைப் பாக்கியம் இல்லாமல் போகிறது என்ற இந்த நம்பிக்கை பல கதைகள் மூலம் நாவலில் பல இடங்களில் சொல்லப்படுகிறது.  ஏதும் அறியாத, முழுமையாக எல்லாவற்றையும் நம்பும், குறிப்பாக பெற்றோரை நம்பும் குழந்தைகளைக் கொல்லவும் துணிந்த மனம் கொண்ட வம்சத்தில் பிறப்பதையே தவிர்க்கிறது குழந்தைச் செல்வங்கள். இப்படி ஒரு கிளை நாவலில் பிரிந்து செல்கிறது.
         குழந்தைகள் உலகத்தில் அதிகமாக அவர்களோடு உரையாடுபவர்கள் பொம்மைகளும், அவர்களுக்குப் பிடித்த கதை நாயகர்களும்தான். குழந்தைகளின் சண்டை என்பது அர்த்தமற்றது. அது வெறும் பிள்ளை விளையாட்டு. ஆனால், பெற்றோர்தான் இதை பெரிய விஷயமாக்கி அவர்களுக்குள் பேதத்தை வளர்த்து விடுகிறோமோ என்ற யோசனைக்குத் தள்ளும் நாவல். இந்த விஷயத்தை, குழந்தைகளுக்குப் பிடித்தமான குழந்தைக் கதைத் தொடரையே பயன்படுத்தி அழகாக சொல்லியிருக்கும் உத்தி மிகுந்த பாராட்டுக்குரியது.
       குழந்தைகளைப் பற்றியே பேசும் நாவல் எனில், இந்த நாவலுக்கு இந்தத் தலைப்பு என்ன பொருத்தம் என வாசகரை யோசிக்க வைத்து அதற்கு தானே நாவலாசிரியர் பதில் சொல்கிறார். பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் கடைந்ததைக் கூறுகிறார். பாற்கடலை இந்த மனித வாழ்க்கையெனக் கொண்டால், அமுதமாகிய பிள்ளைகளைப் பெறுவதற்கான முயற்சியில், சில சமயம் நாமே தேவர்களாகவும், சில சமயம் நாமே அசுரர்களாகவும் மாறுகிறோம். நாம் தேவர்களா, அசுரர்களா எனக் கண்டு கொள்ள முடியாமல் திண்டாடுகிறோம். அமுதம் கிடைத்தால் அதையும் விஷமாக மாற்றுகிறோம். விஷம் கிடைத்தால் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனத் தெரியவில்லை. நாவலாசிரியர் எழுதுகிறார்….” சுரக்கும் விடத்தை உமிழ்ந்து அழிப்பதற்கும், அதை உட்செரிந்து தான் அழிவதற்கும் இடையிலான விளையாட்டாக மாறிப்போனது இப்புடவி’ தன் கண்டத்தில் விடத்தை நிறுத்தத் தெரிந்தவர்களால் நிகழ்கிறது இவ்வுலகு..
      நாவலை, இப்படி பல புள்ளிகளிலிருந்து கோடுகளை இழுத்து அழகான கோலமாக ஆக்கியிருக்கும் சுனில் கிருஷ்ணன் மிகுந்த பாராட்டுக்குரியவர். ஆட்டிசம் பாதித்த குழந்தையை பற்றியதாக மட்டுமானதாக இந்த நாவலை உருவாக்கவில்லை அவர். குழந்தைகள் என்பவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே தவிர உங்களிடமிருந்தல்ல என்ற கலீல் கிப்ரானின் வரிகளை சொல்வதற்காகவே. நாவலை ஒரே நேர் கோட்டில் எழுதிச் செல்லாமல், வேதாளம், விக்கிரமன், குழந்தைகள் ரசித்துப் பார்க்கும், அந்தப் பாத்திரங்களோடு ஒன்றி விடும், பேக்மேன்,கடலாமை, நீலயானை போன்ற குழந்தைகள் தொடரின் பாத்திரங்களையும் பேச வைத்திருப்பது, சுடலையையும், மெடியாவையும் ஒரே மேடையில் நாடகப் பாத்திரங்களாக்கியது என ஒரு வித்தியாசமான வடிவில் நாவலை அமைத்திருப்பது சுவாரசியம் மிக்கது.                                                                                                                                                                                                                                          
        வித்தியாசமான நாவலை எழுதியிருக்கும் சுனில் கிருஷ்ணன் பாராட்டப்பட வேண்டியவர். அழகாக வெளியிட்டிருக்கும் யாவரும் பப்ளிஷர்ஸ் பாராட்டுக்குரியவர்கள். அட்டை வடிவமைப்பு அருமை..
                              ------------------------------       

சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை: அறிந்த உண்மையிலிருந்து விடுதலை- அ. ராமசாமி



(அ. ராமசாமி அண்மையில் வல்லினம் இதழில் வெளிவந்த இயல்வாகை கதை குறித்து ஒரு கட்டுரை எழுதி உள்ளார். நன்றி. கட்டுரை தொடக்கமே ஜெயமோகனை ஆசானாக கருதும் சிஷ்யர்கள் என இருக்கிறது. மேற்கு கிழக்கு எதிர்வுகளை உருவாக்கி, அதிலிருந்து கிழக்கின், இந்தியத்தன்மையின் மேன்மையை நிருவவதாக சொல்லி செல்கிறார்.  மேலும் இறுதியில் இத்தகைய கதைகள் இந்திய தன்மையின் படிநிலைகள் ஒடுக்குமுறைகள் சார்ந்து எதையும் சொல்வதில்லை எனவும் எழுதுகிறார். இந்த ஒரு கதையைக்கொண்டு இப்படியான முடிவுகளுக்கு வர முடியுமா எனத்தெரியவில்லை. ஏனெனில் இந்த மேற்கு கிழக்கு பகுப்பாக்கம் ஒரு காலனிய காலக்கட்டத்து கதையாடல். அதிகாரத்தை நிலை நிறுத்தவும் அதை எதிர்க்கவும் கைக்கொள்ளப்பட்டவை. அவை நிதர்சனம் அல்ல. எனினும் இவற்றுக்கு அப்பால் விரிவாக எழுதியதால் முக்கியத்துவம் பெறுகிறது. இது என்னுடைய விமர்சன முறைமை இல்லை என்றாலும் ஒரு முக்கியமான பார்வை என்பதால் பதிவு செய்கிறேன்..)



ஜெயமோகனை ஆசானாகக் கருதும் சிஷ்யர்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது ம.நவீனின் வல்லினம்.     மார்ச்,1,2020 இதழில் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள கதைத் தலைப்பு : இயல் வாகை.
சுனில் கிருஷ்ணனின் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில குறிப்புகள்:
இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும்.  மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்று.  மற்ற இரண்டு அடிப்படை வண்ணங்கள் பச்சை, நீலம்.  
இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்றல்ல. அடிப்படை வண்ணங்கள் சிவப்பு, பச்சை, நீலம். ஆகியனவே. இம்மூன்று வண்ணங்களிலிருந்து சேர்த்தும் பிரித்தும் ஏழு வண்ணங்களை உருவாக்கலாம். மஞ்சளை அடிப்படை வண்ணமாகக் கொண்டு சொல்லாடல் செய்யும் கலைத்துறையும் உண்டு. ஏழு வண்ணங்களின் சேர்க்கைக்கு நிறமாலை என்று பெயர். இயற்கை உருவாக்கிக் காட்டும் நிறமாலையின் பெயர் வானவில்
நிறமாலையின் /வானவில்லின் எழு வண்ணங்களில் கறுப்பும் வெள்ளையும் இல்லை. அடிப்படையில் அவ்விரண்டும் வண்ணங்களே அல்ல. ஏழு வண்ணங்களையும் ஒன்றாகக் கலக்கினால் கிடைப்பது கறுப்பு. அனைத்தும் கலந்த கலவையே கறுப்பு.  எல்லா வண்ணங்களையும் தனித்தனியாகப் பிரித்து விட்டால் மிஞ்சுவது ஒன்றுமில்லை. அதுதான் வெண்மை.சுனில் கிருஷ்ணன் இந்தக் கதைக்கு இயல்வாகை என்னும் தலைப்பு வைத்ததின் மூலம் தமிழ் இலக்கியவியல் சொல்லும் குறிப்புப்பொருள் என்னும் கலைச்சொல் வழியாகக் கதையை வாசிக்கத் தூண்டியுள்ளார்.


உலகம் என்பது இயற்கைப் பொருட்களால் ஆனது மட்டுமல்ல; செயற்கைப் பொருட்களாலும் ஆனது. இயற்கைப்பொருட்கள் – கருப்பொருட்கள் வாழ்க்கையை வண்ணமாக்குபவை என்று தமிழ் அழகியல் சொல்கிறது.  எவையெல்லாம் இலக்கியப் பிரதியின் பின்னணியாக – கருப்பொருட்களாக அமையக்கூடியன எனப் பேசும்போது  தெய்வம், உணவு, விலங்கு, தாவரங்கள், பறவைகள், பேச்சுமொழி, தொழில், இசைக்கருவிகள்,  முதலான எட்டையும் பட்டியலிட்டுள்ளது தொல்காப்பியம்  
  தெய்வம் உணாவே மாமரம் புட்பறை 
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப’ 
(-தொல். அகத்திணையியல் : 30).
 ********************************************************
மனிதச் சிந்தனை இரண்டு வகைப்பட்டது. நிகழ்வுகளையும் அதனை நிகழ்த்துபவர்களையும் எதிரெதிராக நிறுத்திப் பார்ப்பது ஒருவகையான சிந்தனை முறை. நல்லது – கெட்டது எனப் பொருள்களையும் வினைகளையும் பார்ப்பதற்குக் காரணம் மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் கணிப்பதே. இன்னொரு வகைச் சிந்தனை முறை இந்த இந்த உலகத்தை – உலகத்தின் இருப்பை – அதில் உலவும் மனிதர்களை வண்ணங்களின் அடுக்குகளாகப் பார்ப்பது. உலகத்துப் பொருட்கள் எவையுமே கறுப்பு – வெள்ளையாக இல்லை. அவற்றின் கூடுதல் குறைவுகளான நிறமாலை வண்ணங்களில் ஒன்றாகவே இருக்கின்றன. அதே போல மனிதர்களும் முழுவதும் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருப்பதில்லை. நல்லதின் அல்லது கெட்டதின் அளவு நிலையில் கூடுதல் குறைவுகளோடுதான் இருக்கிறார்கள். அப்படி மனிதர்கள் இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல; அவர்களை இயக்கும் கர்த்தாவின் தூண்டுதலால் மேற்கொள்ளப்படும் வினைகளே காரணங்கள் எனப் பார்ப்பது இன்னொரு பார்வை  
இவ்விருவகைப் பார்வையில் முதலாவது பார்வை அல்லது சிந்தன முறை மேற்கத்தியச் சிந்தனையாக அறியப்படுகிறது. இரண்டாவது பார்வை கீழ்த்திசைப் பார்வையாக- குறிப்பாக இந்தியச்சிந்தனை முறையாக நம்பப்படுகிறது.  இலக்கியப்பனுவல்கள் ஆக்கத்தைப் பேசும் மேற்கத்திய இலக்கியவியல் கூட நாயகத்தனம் – வில்லத்தனம் என்ற இரண்டின் அசைவுகளாகவே உருவாவதாக முன்வைக்கிறது. ஆனால் கீழ்த்திசைக் கலையியல் – குறிப்பாக இந்திய இலக்கியவியல் அவ்வாறு முன்வைக்காமல் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட பாத்திரங்களால் ஆனதே இலக்கியங்கள் எனப் பேசுகின்றன. எனவே கீழைத்தேயக் கலையியல், மேற்கத்தியக் கலையியலைக் காட்டிலும் மேலானது என்பது இந்திய ஞானத்தை முன்மொழிபவர்களின் வாதம்.
இந்தியத் தத்துவ ஞான மரபின் மேன்மையை முன்மொழிபவர்கள், இந்திய தத்துவம், இந்திய வாழ்வியல், இந்திய அறிவு, இந்தியக் கல்வி, இந்திய சிந்தனை முறை, அதன் வழியாக உருவாகும் இந்தியர்களை - மேற்கத்தியர்களின் சிந்தனைமுறைகளோடு நேர்நிறுத்தி விவாதித்து, இந்திய வாழ்வியலும், இந்தியம் மனமுமே நமக்கானது; மேற்கத்திய வாழ்வியலும் மனமும் நமக்கானதல்ல என்பதை முன்வைக்கிறார்கள். இதனை உள்ளடக்கமாகக் கொண்டு எழுதுபவராக நம் காலத்தில் முன் நிற்பவர் ஜெயமோகன். ஜெயமோகனுக்குப் பல முன்னோடிகள் உண்டு. க.நா.சுப்பிரமண்யம் முக்கியமான முன்னோடி.
ஜெயமோகனை முன்னோடியாக -ஆசானாக நினைக்கும் பல இளையதலைமுறை எழுத்தாளர்களை இப்போது அடையாளம் காட்ட முடியும். அவர்களுள் ஒருவராக இருப்பவர் சுனில் கிருஷ்ணன். வல்லினத்தில் வந்துள்ள ஜெயமோகனின் சர்வ ஃபூதேஷுவும், அதன் முன் காட்சியாகிய/கதையாகிய யாதேவியும் இந்த விவாதத்தை முன்வைத்துள்ள கதைகளே. அதே வல்லினத்தில் வந்துள்ள சுனில் கிருஷ்ணனின் இயல்வாகைக் கதை அந்த விவாதத்தை வேறுவிதமாக முன்வைத்துள்ளது.
சுனில் கிருஷ்ணனின் கதையில் மேற்கு – கிழக்கு என்ற இரட்டை எதிர்வுச் சொல்லாடலில் வைக்கப்படும் துறையாக இருப்பது மருத்துவத்துறை. அக்கதைக்குள் இரண்டு மருத்துவர்கள் இடம்பெறுகிறார்கள் ஒருவர் கதையின் மையப்பாத்திரமாக இருக்கும் சத்தியன். இன்னொருவர் சாமிக்கண்ணு. இவ்விருவரில் சாமிக்கண்ணு வயதில் மூத்தவர்; சத்தியன் இளையவர். இருவரின் மருத்துவ முறைகளில் – நோயாளிகளை அணுகும் முறையில் இருக்கும் வேறுபாடுகளைப் பேசும் சுனில் கிருஷ்ணனின் கதைப்பகுதியை அப்படியே தருகிறேன்:
தினமும் மைதானத்தில் நடை பயிலும் டாக்டர். சாமிக்கண்ணு கல்லூரி சாலையில் சத்தியன் நடப்பதை பார்த்ததும், “சத்தியா வாய்யா கிரவுண்டுல நடக்கலாம்” என பிடித்து இழுத்து வந்தார். வயது எழுபதுக்கு மேலிருக்கும்.  “நம்ம பயலுவ எவனும் வரல, அதான் உன்ன பாத்ததும் சரி சேந்து நடக்கலாமேன்னு உள்ள கூப்புட்டேன்” என கைகுலுக்கினார். சாமிக்கண்ணுவின் மருத்துவமனைக்குச் சிலமுறை ஐ.எம்.எ கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். எப்போதும் கூட்டம் அலைமோதும். பழைய பாணியிலான மருத்துவர் என சத்தியனுக்கு அவரைப்பற்றி ஓர் எண்ணம் உண்டு. பரிசோதனைகளை விடவும் நோயை நோயாளியிடமிருந்து அறிந்துகொள்ளவேண்டும் எனும் வினோத நம்பிக்கை உடையவர். மைதானத்து விளிம்புகளில் வான் நோக்கி நிமிர்ந்திருந்த இயல்வாகை மரங்களைச் சுற்றி விரவிக் கிடந்த அதன் மஞ்சள் பூக்கள் திடலின் செம்மண் பரப்பில் தனித்தீவுகளை போல் காட்சியளித்தன. சாமிக்கண்ணு அவற்றை நிதானமாக பார்த்தார். பிறகு இருவரும் நடக்கத் தொடங்கினர். பொதுவான மருத்துவ சங்கதிகள்தான் பேச்சு. ஐ.எம்.எ தேர்தல், ஆசுபத்திரி சூறையாடப்படுவது, மருத்துவமனை மரணங்கள அதன் பொருட்டு நிகழும் பேரங்கள் என சாமிக்கண்ணு பேசுவதை வெறுமே உம் கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார் சத்தியன். “ஜூன்ல ரிட்டையர் ஆனதும் நம்ம ஹாஸ்பிட்டல் வந்துருய்யா” என்றார். “உங்களுக்குத்தான் ஸ்கேன் எழுதவே பிடிக்காதே சார்” என்றார் சத்தியன் சிரித்துக்கொண்டே. “எனக்கு பிடிக்கலைன்ன என்ன? இப்ப மகன் தானே முழுசா பாக்குறான், அவன் பாணியே வேற, யாரும் நாளைக்கு கேஸ் கொடுத்துற கூடாது. நாம பத்திரமா இருக்கணும்னு சொல்றான்.” என சொன்னபோது அவருக்கு மூச்சு வாங்கியது. ஆமா நீ ஏன் ரேடியாலஜி எடுத்த? நல்ல கூருள்ள பயலாத்தான இருக்க.” என்று அவரை சீண்டினார் சாமிக்கண்ணு. நமுட்டுச் சிரிப்புடன் “பொய் சொல்ல வேணாம், முகதாட்சண்யம் பாக்க வேணாம், அனாவசியமா பேச வேணாம், நடிப்புகளை சகிச்சுக்க வேணாம், உங்களுக்குள்ள என்ன இருக்குன்னு உங்களுக்கே சொல்வேன். எல்லாத்துக்கும் மேல என் உலகத்தில் ரெண்டே ரெண்டு நிறம் மட்டும்தான். கறுப்பு இல்லைனா வெள்ளை. மத்தது எல்லாமே இந்த ரெண்டுக்கும் நடக்குற வெளையாட்டுதான். இந்த அறிவு எவ்வளவு ஆசுவாசத்த கொடுக்குது.” என்றார். “சர்தான்யா, நீங்க என்னத்தையாவது கண்டுபிடிச்சு வாரவன பயமுறுத்தி விடுறீகளே” எனச் சொல்லி சிரித்தார்.


மருத்துவரின் மனப்பாங்கைப் பேசும் கதையின் இந்தப் பகுதி. மனப்பாங்கை உருவாக்குவதில் மேற்கத்தியக் கல்விக்குப் பங்கிருக்கிறது எனச் சொல்கிறது. அதிலும் குறிப்பாக எல்லாவற்றையும் சரியாகக் கணக்கெடுத்துக் குறித்துக்காட்டிப் பொறுப்பை அறிவியலின் மீது சுமத்திவிட்டுத் தப்பிக்கும் நோக்கம் கொண்டது  ரேடியாலஜி போன்ற நவீன மருத்துவ முறைகளும் கருவிகளும் என்பதைக் குற்றம் சுமத்தும் கோணத்திலேயே சாமிக்கண்ணுவின் வழியாக முன் வைக்கிறது.  
சாமிக்கண்ணுவும் சத்தியனும் அடிக்கடி சந்திக்கும் நேரம் காலை நடை – வாக்கிங் நேரம். சாமிக்கண்ணு நடக்கும் மைதானப்பகுதியில் இயல்வாகை மரங்கள் உண்டு. சத்தியன் மைதானத்தின் விளிம்பில் நடப்பவர். அவர் வழக்கமாக நடக்கும் பாதையில் இயல்வாகை மரங்கள் இருந்ததில்லை. நோயாளிகளின் நோயை அவர்களிடமிருந்தே அறிந்துகொண்டு மருத்துவம் பார்க்கும் முறையை விரும்பும் சாமிக்கண்ணுவும் சத்தியனும் சந்திக்கும் இந்தக் காட்சி சுனில் கிருஷ்ணன் கதையில் ஒரு உள்ளுறையாக மட்டுமே – கருப்பொருளை ஒட்டிவரும் உள்ளுறையாக மட்டுமே அமைந்துள்ளது. உண்மையில் கதையின் முதன்மையான நிகழ்வுகள் இதிலிருந்து விலகியிருக்கின்றன.

திருமணமாகாமல் தனியாக வாழும் மருத்துவர் சத்தியனின் உறவுக்காரப் பையன் ராஜசேகருக்குப் பெண் பார்ப்பதும், நிச்சயம் செய்யப் போவதும் அப்போது அந்தப் பெண் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த உண்மை ஒன்றைச் சொல்வதா? மறைப்பதா? என்பதில் ஏற்படும் குழப்பங்களே கதை நிகழ்வுகள்.  தொடர்ந்து தனது உறவுக்காரப் பையனுக்கு நிச்சயம் செய்ய இருக்கும் அல்லி – ஏற்கெனவே கருவுற்றவள் என்பதும் அக்கருவைக் கலைப்பதற்காகச் சத்தியனின் மருத்துவமனைக்கு வந்தவள் என்பது தெரிந்தபோதும் அதைச் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறார். அப்படித் தவிர்த்துவிடக் காரணமாக இருப்பதன் பின்னணியில் தனது உறவுப் பையனுக்குப் பெண் கிடைக்காமல் போன காரணம் இருக்கிறது.

தான் தாய் மாமன் போல இருந்து பொறுப்போடு பெண் பார்த்துத் திருமணம் செய்துவைக்க நினைத்துப் பார்த்த பெண்கள் எல்லாம் அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிப்போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவரால் வேலை வாங்கித் தரப்பட்டு சிங்கப்பூரில் இருக்கும் அவனோடு போக விரும்பாமலும் சிலர் தவிர்த்திருக்கின்றனர். பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்வதற்கு முன் ராஜசேகரோடு பேசிப் பழகிப் பார்த்த பெண்களும் அவனை நிராகரித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இவள் தான் – ஏற்கெனவே கருவுற்று, அதனைக் கலைக்க வந்த அல்லிதான் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள்.  மாப்பிள்ளைக்கு அல்லியின் குடும்பப்பபின்னணியையும் அவளையும் பிடித்திருக்கிறது. ஆனால் மருத்துவர் சத்தியன் மனதில் மட்டும் அவள் கருவுற்று அதனைக் கலைத்தவள் என்ற உண்மை போட்டு வதைக்கிறது. அதைச் சொல்லித் திருமணத்தை நிறுத்திவிடலாம். ஆனால் அவர் சொல்லப்போகும் உண்மைக்கு தக்க ஆதாரம் எதுவும் இல்லை. ஆதாரமாக இருப்பன அவரது நினைவாற்றலும், வேலைத்தளத்தில் அவர் பின்பற்றும் நடைமுறைகளும் மட்டுமே. 

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து போகும்போது அன்றாட வேலைகளைத் தினசரி நாட்குறிப்பு எழுதுவதுபோல, மனதிற்குள் நினைத்துக் கொள்வது அவரது வழக்கம். அதன் மூலம் எல்லாவற்றையும் அவரது மனதில் பதிய வைத்துக்கொள்பவர். அந்த நோயாளி பின்னர் வரும்போது – மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தள்ளி வந்தாலும் நினைவிலிருந்தே எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு. அந்த ஆற்றலைத் தருவது ஒவ்வொன்றையும் தன் மனத்தில் பதிவுசெய்து வைத்திருப்பதுதான் என நம்புகிறார். அது ஒருவிதத்தில் மேற்கத்தியப் பகுப்பாய்வு முறை.    தனது கற்றல் உத்தி மூலம் உருவான திறன் எனவும் நம்புகிறார் சத்தியன். அந்தத் திறன்தான் – ஞாபகப் பதிவுதான் அல்லி, ஏற்கெனவே கருவுற்றவள்; அந்தக் கருவை ஒருமுறை கலைத்துக் கொண்டவள் என்கிறது. அந்தக் கருவுக்குக் காரணம் யார்? ஏற்கெனவே திருமணம் ஆனவளா? அல்லது திருமணம் செய்யாமலேயே கருவுற்றவளா? என அவளைப் பற்றிய முடிவுகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டம் அல்லியைப் பற்றிய கறுப்புநிறப் பதிவுகள். ஆனால் அல்லி ஏற்கெனவே கருவுற்றுக் கலைத்துக் கொண்டவளாகவோ, அதற்காக அவர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சென்றவளாகவோ காட்டிக்கொள்ளவில்லை.   தன்னைச் சந்தித்ததை மறைக்கிறாளா? இப்படிப்பட்ட பெண்ணைத் தனது பொறுப்பிலிருக்கும் – தன்னைத் தாய் மாமனாக நினைக்கும் ராஜசேகருக்குத் திருமணம் செய்யலாமா? என்ற தவிப்பும் இருக்கிறது. ஆனால் அந்தத் தவிப்பால் திருமணத்தை நிறுத்திவிட்டால் இன்னொரு பெண் கிடைக்காமல் அவனது திருமணம் மேலும் தள்ளிப்போகக் காரணமாகிவிடக் கூடாது என்ற குழப்பமும் இருக்கிறது. அவரது குழப்பநிலையை சுனில் கிருஷ்ணன் இப்படி எழுதுகிறார்:

தனக்கு தெரிந்ததை மகனுடைய இடத்தில் இருப்பவனுக்கு, அதுவும் அவனுடைய வாழ்க்கை தொடர்பானதை சொல்லவேண்டுமா இல்லையா? மருத்துவனாக அறிந்து கொண்ட ரகசியத்தை தனிப்பட்ட வகையில் பயன்படுத்துவது சரியா? சேகர் தன் சொந்த மகனாக இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை நடத்த அனுமதித்திருப்பேனா? சொன்னாலும் சேகருக்கு இதை ஏற்கும் பக்குவம் இருக்குமா? எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேவையற்ற சுமையை தான் சுமக்கத்தான் வேண்டுமா? இரண்டாக கிழிபட்டு மாறி மாறி தனக்குள் தர்க்கித்து ஓய்ந்து போனார். கவனப்பிழைகள் நினைவுப்பிழைகள் அவரிடமும் மலிந்தன.
குழப்பப் பின்னணியில் மேலும் சிக்கலுக்குள் நுழையாமல் – பெரிதும் ஆர்வமும் ஈடுபாடு காட்டாமல் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டு விலகி நிற்கிறார் சத்தியன். நிச்சயதார்த்தத்திற்குப் பின் அல்லியின் வீட்டார் வந்து அழைப்பிதழ் வைக்கும்போது அவரது தெளிவான முடிவு வெளிப்படுகிறது:
தேங்காய் பூ பழத்தை தட்டில் வைத்து அழைப்பிதழை அவருக்கு அளித்தார்கள். “தகப்பன் இல்லாத புள்ள, செய்முறையில கொத்தம் கொற இருந்தா பொறுத்துக்கிடணும். நீங்கதான் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்” என அல்லியின் அம்மா கைக்கூப்பி தழுதழுத்தார். “சித்தப்பா மொற உனக்கு, விழுந்து கும்புடுக்கம்மா” என்றதும் அல்லியும் வணங்கி நிமிர்ந்தாள். கிளம்புவதற்கு முன் “எங்கிட்டு பாத்தாலும் வெத்து வெள்ளச்சுவரா இருக்கே உங்களுக்கு போர் அடிக்காதா” எனக் குறும்பு மின்னும் கண்களுடன் சத்தியனிடம் கேட்டாள். அவளுடைய குரலை அதுவரை கேட்டிராத சத்தியன் சில நொடிகள் திகைத்து நின்றார். அவரையும் மீறி புன்னகை அரும்பியது அவளும் புன்னகைத்தாள். அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகும் கூட தன்னிச்சையாக முகத்தில் புன்னகை உறைந்திருந்தது அவருக்கே விநோதமாக இருந்தது.
என்று எழுதிவிட்டுக் கதைத் தலைப்பாக இருக்கும் இயல்வாகையைப் பொருத்திக் காட்டும் விதமாகச் சில வாக்கியங்களை எழுதிக்கதையை முடித்துள்ளார் சுனில் கிருஷ்ணன்.
நெஞ்சை கவ்வியிருந்த இறுக்கம் முழுக்க கரைந்திருந்தது. நாற்காலியில் தன்னைப் புதைத்துக்கொண்டபோது எடையற்று மிதப்பதாக தோன்றியது. புன்னகை சூடிய முகத்துடன் நாற்காலியில் சாய்ந்து கண் மூடியபோது இயல்வாகையின் பொன் மஞ்சள் பூக்கள் நினைவில் எழுந்தன. நாளை முதல் மைதானத்தில் அவருடன் சேர்ந்து நடக்கலாம் என முடிவு செய்திருப்பதை சாமிக்கண்ணுவிடம் சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டார்.
எனச் சுனில் கிருஷ்ணன் முடிக்கும் வரிகளில் – இயல் வாகை என்னும் கதைத் தலைப்புப் பொருத்தத்தோடு அவரது நிலைப்பாட்டின் சார்பும் வெளிப்படுகிறது.
மருத்துவத்தில் சோதனைகளின் அடிப்படையில்  கிடைக்கும் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளைப் பரிந்துரை செய்யும் தனது முறைக்குப் பதிலாக நோயாளியின் அனுபவ நிலையிலிருந்து நோயின் தன்மையை அறிந்து மருத்துவம் பார்க்கும் சாமிக்கண்ணுவின் முறைமையே ஏற்கத்தக்கது என அவர் மாறிவிட்டார் என்பதைச் சொல்லவே, இயல்வாகை மரத்தடியில் மஞ்சள் பூக்களின் தகதகப்போடு நடக்கலாம் என முடிவெடுத்தாக முடிக்கிறார். இயல்வாகையும் மஞ்சள் நிறமும் சாமிக்கண்ணுவின் தேர்வுகள். அதனை நோக்கி நகர்வதின் மூலம் தன்னிடமிருந்த கறுப்பு – வெள்ளைப் பார்வையைக் கைவிடப்போகிறார் சத்தியன் என்பது சுனில் கிருஷ்ணன் தரும் குறிப்பு.   
தலைப்பாக இருக்கும் கருப்பொருளைக் குறிப்புப்பொருளாக – உள்ளுறையாக   மாற்றிய நிலையில் சுனில் கிருஷ்ணனின் இயல்வாகைக் கதைத் தமிழ் இலக்கியவியல் பிரதியாக நிற்கிறது என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில்  இந்திய ஞானம், இந்திய வாழ்வியல், இந்திய மனித மனம் என்பதை மேன்மையானதாக முன்வைக்கும் எழுத்துகள், மேற்கத்திய வாழ்வியல் முன்வைக்கும் சமுதாய நடைமுறைகளைக் கணக்கில் கொள்வதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியதுள்ளது. மேற்கத்திய வாழ்வியலின் பின்னணியாக இருக்கும் சமூகக் கட்டமைப்பில் இருக்கும் இரட்டையில் இருப்பவன்- இல்லாதவன் அல்லது ஆதிக்கவாதி – அடக்கப்படுபவன் என்ற இரட்டை நிலையில் இடம் மாறும் வாய்ப்புகள் உண்டு. பொருளியல் அடையாளம் வழியாக உருவாகும் இவ்விரட்டை, இன்னொரு பொருளியல் நிலையில் – மாற்றத்தில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மாறிவிடும் வாய்ப்புகளைக் கொண்டது. ஆனால் அவர்கள் கொண்டாடும் கீழ்த்திசைச் சமூகங்களின் அமைப்பில் இருக்கும் வேறுபாடுகள் இன்னொருவகை வாழ்வியலுக்குள் மனிதர்களை நகரவிடாமல் தடுக்கும் கட்டுதிட்டான கோடுகளை-சாதியப் படிநிலைகளைக் கொண்டது. இதனை உள்ளடக்கமாக்கி இவர்கள்   இலக்கியப் பிரதிகளை உருவாக்குவதில்லை. அப்படி நிலைகளை இலக்கியப்பிரதிகளுக்கான -கச்சாப் பொருளாக - உரிப்பொருளாகக் கூட நினைப்பதே இல்லை என்பதும் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாக உள்ளது

Tuesday, March 17, 2020

WRITER PAZHUVETTAIYER FATHERS A CHILD- Naroba

(this is the english translation of the story from tamuse. its a pretty good translation, as i read now. thanks to tamuse.https://tamuse.wordpress.com/2017/05/04/pazhuvettaiyer-2/)
Writer Pazhuvettaiyer has fathered a child- indeed, it happened yesterday. Extremely fair complexioned, the child had the looks of a king, they said. In a city hospital, in the dead of night, as rain was pouring down, it seems the child cleaved the belly of his mother and with a loud cry leapt forth into the world. Both the mother and child are said to be fine.
Kidaram Kondan, poetic virtuoso, climbed up and down the stairs of many a shop, anxiously jangling his pockets as he searched long and hard for something he could gift the child. “Fuck, ” he sighed, “Commodities. Mere commodities.” And then he remembered the English language copy of ‘War and Peace’ that he had pilfered from the local library at Arumbalam. Having arrived at a decision, he wrapped the book in the covers of Pothys Store and with a majestic gait, went to see the child. A classic child born to a writer of classics deserves nothing less than a classical work of a classic author bestowed as a gift by a classic poet, he asserted to himself.
Pazhuvettaiyer removed his thick spectacles, laughed aloud, and embraced the poet, greeting him, “hey, Kidaram!”. His smile revealed an upper tooth broken into half in a joust of poetry the previous week. He informed Kidaram that his wife had been shifted from the labour ward just then. As the child had neonatal jaundice, he was in a separate room under a lamp irradiated with bright light. “Go and see him there,” he told the poet.
Inside the glass room where a sign warned, “Hush! Silence!”, a lean and wiry nurse with a slight smile playing on her lips was busy peering into her mobile phone. There might have been four or five children in that room. From a corner of the room, lying soaked in a flood of bright light, little Pazhuvettaiyer closed the copy of Dostoevsky’s ‘Crime and Punishment’ and asked, ‘Jesus… Tolstoy. Not again!!! Uncle… don’t you have anything by D.H Lawrence?’
(edited by Kalathugal)

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது

(நண்பர் நட்பாஸ் முன்பு குறுங்கதைகளுக்காக ஒரு தளம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து இருமொழியாக வெளியிடுவது அதன் நோக்கம். அதற்காக எழுதிய குறுங்கதை. பிறகு அந்த இணையதளம் செயல்படவில்லை. இதன் ஆங்கில மொழியாக்கத்தை அடுத்த சுட்டியில் அளிக்கிறேன்.)

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. ஆம். நேற்றுதான். செக்கச் செவலென்று, ராசா மாதிரி இருக்கிறானாம். பட்டணத்து ஆசுபத்திரியில், அத்துவான ராத்திரியில், ‘சோ’ வென மழை கொட்டிக்கொண்டிருந்தபோது, அடி வயிற்றைப் பிளந்து கொண்டு, அழுகுரல் எழுப்பியபடி, வெளியே குதித்தானாம். தாயும் சேயும் நலமாம்.
வித்தகக் கவி கிடாரம் கொண்டான் கடை கடையாக ஏறி இறங்கினான், குழந்தைக்கு ஏதாவது வாங்கிச் செல்லலாமே என்று. பையைத் தடவிக்கொண்டே. “ த்தா.. பொருட்கள்..வெறும் பொருட்கள்.” என சலித்துகொண்டான்..

அப்போதுதான் அரும்பலம் கிளைநூலகத்தில் ஆட்டய போட்ட ‘போரும் அமைதியும்’ ஆங்கிலப் பிரதி நினைவுக்கு வந்தது. ஒரு முடிவோடு, புத்தகத்தை போத்தீஸ் கவரில் சுற்றிக்கொண்டு குழந்தையைப் பார்க்க சென்றான், மிடுக்காக. செவ்வியல் எழுத்தாளருக்குப் பிறந்த செவ்வியல் குழந்தைக்குச் செவ்வியல் எழுத்தாளன் எழுதிய செவ்வியல் ஆக்கத்தை பரிசளிப்பதே செவ்வியல் கவிஞனாய் தான் செய்ய வேண்டியது என உறுதி செய்து கொண்டான்.

பழுவேட்டையர் தடித்த கறுப்பு கண்ணாடியைக் கழட்டிவிட்டு, ‘எலேய் கிடாரம்,’ என சிரித்தபடி தழுவிக் கொண்டார். போனவார கவிதை குஸ்தியில் ஒரு மேற்பல் பாதியாக உடைந்திருந்தது புலப்பட்டது.

இப்போதுதான் மனைவியை பிரசவ வார்டிலிருந்து அறைக்கு மாற்றியதாகச் சொன்னார். குழந்தைக்கு, பிறந்ததிலிருந்து மஞ்சக் காமாலை, ஆகவே ஒரு பெரிய விளக்கடியில் தனியறையில் வைத்திருக்கிறார்கள் “போய்ப் பார்த்துவிட்டு வா” என்றார்.

‘உஸ்ஸ் அமைதி’ என்று ஒட்டப்பட்டிருந்த கண்ணாடி அறைக்குள் ஒரேயொரு ஒடிசலான செவிலி கைபேசியில் எதையோ பார்த்து மென்நகை புரிந்து கொண்டிருந்தாள். நான்கைந்து குழந்தைகள் உள்ளே இருந்திருக்கலாம். அப்போது அறை மூலையிலிருந்து, மிகப் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் ‘’கர்த்தாவே… திரும்பவும் தால்ஸ்தாயா? மாமா… உங்களிடம் டி.எச். லாரன்ஸ் புத்தகம் ஏதும் இல்லையா?’ குட்டி பழுவேட்டையன், தன் கையில் இருந்த தாஸ்தாவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையையும்’ஐ மூடிவைத்துவிட்டு கேட்டான்.


Monday, March 16, 2020

நீலகண்டம்- கே.ஜெ. அசோக் குமார் - வளரும் விஷம்

(எழுத்தாளர் கே.ஜெ. அசோக் குமார் அவருடைய தளத்தில் நீலகண்டம் குறித்து எழுதியிருக்கும் கட்டுரை. நன்றி) 


நவீன வாழ்க்கை களமான அடுக்கக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆட்டிச குழந்தையை வளர்ப்பது என்பது மிக சிக்கலான வாழ்க்கைமுறையை இன்று பெற்றோர்களுக்கு அளித்துள்ளது. கூட்டு குடும்பமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் ஆட்டிச குழந்தைகள் ஒரளவிற்கு பெரிய சிக்கல்கள் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்துவிடுகிறது. குழந்தைகளிடையே இருக்கும் ஏற்றதாழ்வுகள் பெரிதாக்கப்படாமல் இருப்பதால் நமக்கு பிரச்சனைகள் எதுவும் கண்களுக்கு தெரிவதில்லை.


அடுக்கக வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் தனிமையில் வசிக்கிறது. அதுவும் ஆட்டிச குழந்தைகள் ஏற்கனவே தனிமை விரும்பிகள், அப்படியே அக்குழந்தைகளை விட்டுவிட்டால், மேலும் தனிமைபட்டு சமூக தொடர்ப்பு இல்லாமலாக அதன் குறைபாடு அதிகரிக்கும். ஆகவேதான் நவீன வாழ்க்கை ஆட்டிச குழந்தைகளின் வளர்ச்சியை சிக்கலாக்குகிறது.

நீலகண்டம் நாவல் ஆட்டிச குழந்தை வளர்ப்பின் பிரச்சனைகளையும், ஆட்டிச குழந்தை தன்னை வெளிப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கலைப் பற்றி கொஞ்சம் பேசுகிறது. கலப்பு திருமணம், குழந்தையின்மை, தத்து எடுத்தல், பல்வேறு சிக்கல்களோடு ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ப்பை பற்றியும் நீலகண்டம் நாவல் சுற்றி வருகிறது.

தத்து எடுக்கப்படும் குழந்தை ஆட்டிச குறைபாடுடன் இருப்பதை கண்டறிவதும், பிறகு அவர்களுக்கு பிறக்கும் குழந்தையுடன் ஒப்பீட்டு எப்படி இருவரையும் வளர்ப்பது என்று குழப்பத்தில் ஆழ்வதுமாக நகர்கிறது வாழ்க்கை. ஆட்டிசம் என்பது ஒவ்வொரு குழந்தையும் ஒருமாதிரி, அவர்கள் வளரும் சூழலுக்கு ஏற்ப அவர்களின் வளர்ச்சி இருப்பதால் அதை எளிதாக கண்டுக் கொள்ள முடிவதில் சிக்கலும் இருக்கிறது.

ந. பிச்சமுத்து எழுதிய மாங்காதலை சிறுகதை தமிழில் வந்திருக்கும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றியது. நாவல்களாக எதுவும் இதுவரை வராத நிலையில் சுனில் கிருஷ்ணன் எழுதியிருக்கும் நீலகண்டம் முக்கியமானதாக ஆகிறது. ஆட்டிச குறைப்பாடுள்ள குழந்தைகள் மனவளர்ச்சி குறைந்தவர்களிலிருந்து சற்று மேம்பட்டவர்கள், அவர்களை வளர்ப்பது கேஸ்-டு-கேஸ் என்பதால் அக்குழந்தையின் பெற்றோர்களே ஆசிரியர்களாக இருக்க வேண்டியிருக்கும். பொதுஇடங்களில் ஆட்டிச குழந்தையை அழைத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலே பெற்றோர்களுக்கு முதன்மையான பிரச்சனை. அதுவே இந்நாவலில் பேசப்பட்டும் இருக்கிறது. கூடவே ஆட்டிச குழந்தையின் எண்ண ஓட்டங்களை வேதாளம் சொல்லும் கதைகளின் வழியே சொல்கிறார் ஆசிரியர்.

****

உள்ளடக்கத்தை மீறும் வடிவசிக்கல்கள் நாவலை வாசகர்களிடமிருந்து தனிமைபடுத்தி விடுகின்றன. தேவையற்ற வடிவ சோதனைகள் உள்ளடக்கத்தை மறைத்துவிடுகின்றன. கலப்பு திருமணம், 




குழந்தையின்மை, தத்து எடுத்தல், என்று பலமுனைகளில் இருந்து பயணித்து மையமான ஆட்டிச குழந்தை வளர்ப்பு என்கிற சிக்கலை பேசவருகிறது. இப்படி சிதறலாக இருப்பது நாவலுக்கு அவசியமானதுதான். ஆனால் மையத்தைவிட மற்றசிக்கல்களை அதிகம் பேசுவதனால் வாசகனால் 'தொடர்பில்' இருக்கமுடியாமல் அலைவதும் நடக்கிறது.

ஏனெனில் ஆட்டிச குழந்தை வளர்ப்பில் மற்ற சிக்கல்கள் ஒரு பிரச்சனையே அல்ல என்பதுதான். ஆட்டிச குழந்தையின் சமூக பிரச்சனைப் பற்றி இதில் பேசப்படவில்லை. பள்ளியில் சேர்க்கப்படுவதிலிருந்து இக்குழந்தையின் சமூக தொடர்பின்மைவரை எழும் பிரச்சனைகள் முழுமையாக அலச வேண்டியவைகள். சாதாரண குழந்தையின் பள்ளிவாழ்க்கை இன்று பெற்றோர்களுக்கு பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குழந்தைகளை படிக்க வைப்பது போருக்கு தயாரிப்பது போன்ற நிலையில் இருப்பது குறித்தே இன்று நிறைய பேசவேண்டியிருக்கிறது. ஆட்டிச குழந்தையின் நிகழ்கால, வளர்ச்சியும் அவர்களின் எதிர்கால இடம் குறித்த பதபதைப்புகளும் பெற்றோர்களுக்கு இருக்கிறதை அலச வேண்டியிருக்கிறது.

ஏகப்பட்ட நாவல்கள் ஆங்கிலத்தில் ஆட்டிச குறித்து வெளியாகியுள்ளன. தமிழில் புனைவாக விவாதிக்கும் மனநிலையோடு வந்திருக்கும் ஒரே நாவல் நீலகண்டம் தான். அவ்வகையில் இந்நாவல் பாராட்டுதல்களை பெறுகிறது.

Sunday, March 15, 2020

கரோனா காலத்தில் ஜோர்பா

கசன்சாகிசின் 'ஜோர்பா எனும் கிரேக்கனை' மொழியாக்கம் செய்வது என் கனவு. ஆறு அத்தியாயங்கள் வரை செய்யவும் செய்திருக்கிறேன்.  எப்போதாவது செய்து முடிக்க வேண்டும். அதனுடைய சில பகுதிகளை மீண்டும் மீண்டும் நினைவு கொள்வேன். அப்படி எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று ஜோர்பாவின் இரண்டாம் அத்தியாயத்தில் வரும் இப்பகுதி. ஏனோ இந்த பத்தியை இப்போது வாசிக்கும்போது மிகுந்த ஆறுதலாக உணர்ந்தேன். அந்த ஆறுதலும் அமைதியும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். 

--
நான் எனது அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். புத்தர் பற்றிய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. புத்தருக்கும் ஆட்டிடையனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை மீண்டும் வாசித்தேன். இந்த ஒரு உரையாடல் அமைதியை பற்றியும் பாதுகாப்பை பற்றியும் பல வருடங்களாக என்னுள் தீரா வினாக்களை எழுப்பியவண்ணம் இருக்கிறது. 

ஆட்டிடையன் - எனது உணவு தயாராகிவிட்டது, நான் எனது ஆடுகளிடமிருந்து பால் கறந்துவிட்டேன், எனது குடிசையின் கதவு தாழிடப்பட்டுள்ளது, உள்ளே தணல் எரிகிறது, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- எனக்கு உணவும் தேவையில்லை பாலும் தேவையில்லை. இந்த காற்றே எனது புகலிடம், தணல் அணைந்துவிட்டது. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

ஆட்டிடையன்- என்னிடம் எருதுகள் உண்டு, மாடுகள் உண்டு, என்னிடம் என் தந்தை எனக்களித்த வயல்வெளிகள் உண்டு, எனது மாடுகளைச் சினையாக்கும் காளையும் உண்டு, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- என்னிடம் மாடுகளும் இல்லை, காளைகளும் இல்லை, எருதுகளும் இல்லை, வயல்வெளிகளும் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை. ஆகவே எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

ஆட்டிடையன்- எனக்கு நான் சொல்வதை கேட்கும், நம்பிக்கையான மனைவி இருக்கிறாள். எத்தனையோ ஆண்டுகளாக அவள் என் மனைவியாக இருக்கிறாள். இரவுகளில் அவளுடன் களியாடும்போது நான் மகிழ்வாக இருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- நான் சொல்வதை கேட்கும் சுதந்திரமான ஆன்மா என்னிடம் இருக்கிறது. நான் பலவருடங்களாக அதைப் பயிற்றுவித்திருக்கிறேன் என்னுடனே விளையாட அதற்கு கற்று கொடுத்திருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

   

இவ்விரு குரல்கள் என்னுள் மாறி மாறி ஒலித்துக்கொண்டே இருந்தன, தூக்கம் ஆட்கொண்டது. காற்று மீண்டும் பலமாக வீசத்தொடங்கியது. அலைகள் பக்கவாட்டுச் சாளரங்களின் கனத்த கண்ணாடிகளை அறைந்து மோதின. நான் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையில் ஊசலாடும் புகை போல் மிதந்தேன்.

கொடூரமான புயல் வீசியது, வயல்வெளிகள் நீரில் மூழ்கின, எருமைகள், மாடுகள், காளைகள் என எல்லாவற்றையும் நீர் விழுங்கி கொண்டது. குடிசையின் மேற்கூரை பிய்த்துக் கொண்டு போனது, தீ அணைந்தது, அந்தப்பெண் கதறினாள், மயங்கி மண்ணில் விழுந்து மரித்தாள், ஆட்டிடையன் தன் புலம்பல்களைத் தொடங்கினான். அவன் சொல்வது என் காதில் விழவில்லை ஆனால் அவன் உரக்க அழுது கொண்டிருந்தான், உறக்கத்திற்குள் மூழ்கி கொண்டிருந்தேன், ஆழ்கடலுக்குள் தப்பித்துச் செல்லும் மீனைப்போல் மூழ்கி கொண்டிருந்தேன்.