Wednesday, February 28, 2018

புயலிலே ஒரு தோணி - நாவல் வாசிப்பு

நெடுங்காலமாக வாசிக்க வேண்டும் என்றிருந்த நாவல். முன்னரே ஓரிருமுறை சில அத்தியாயங்கள் வரை வாசித்து தொடர முடியாமல் போன நாவலும் கூட. இம்முறை தடையின்றி வாசித்து முடித்தேன். அவருடைய மற்றொரு நாவலான கடலுக்கு அப்பால் இன்னும் வாசிக்கவில்லை. 

சிங்காரம் எங்கள் மாவட்டத்தை சேர்ந்தவர். அயல் நிலத்தில் நகரத்தார் வாழ்வை மிக நெருக்கமாக எழுதிய படைப்பாளியும் கூட. இந்நாவல் தமிழின் முதன்மை நாவல்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 

எழுபதுகளில் இந்நாவல் எழுதப்பட்டது. அன்றைய மைய இலக்கிய போக்கிலிருந்து வெகுவாக அன்னியப்பட்ட களத்தில் நாவல் நிகழ்கிறது. அதனாலேயே சரியாக கவனிக்கப்படாமலும் ஆனது. (அப்படி கவனிக்கபடாமல் மீண்டும் கண்டேடுக்கபட்டதாலே மிகையாக கொண்டாடப்படவும் படுகிறது) தமிழில் சர்வதேச களத்தில் எழுதப்பட்ட முதல் இலக்கியத்தரம் வாய்ந்த நாவல். உலகை உலுக்கிய இரண்டாம் உலகப்போரை களமாகக் கொண்டு எத்தனை படைப்புகள் தமிழில் உள்ளன? இந்திய விடுதலை போராட்டத்தை மையமாக கொண்ட இலக்கியதரம் வாய்ந்த புனைவுகள் கூட ஒப்பீட்டு அளவில் குறைவே. இந்த பின்புலத்தில் புயலிலே ஒரு தோணி முக்கியத்துவம் பெறுகிறது. 

அடிப்படையில் புயலிலே ஒரு தோணி நாயக சாகச கதை. தமிழக கிராமத்திலிருந்து அந்நிய தேசத்திற்கு பிழைக்க செல்லும் ஒருவன். அங்கிருந்து ராணுவத்தில் இணைகிறான். பெரும் சூரனாக எல்லா எதிரிகளையும் வெல்கிறான். ஊர் திரும்பாமல் பெரும் லட்சிய வேட்கையுடன் அந்நிய நாட்டு கொரில்லா படையில் இணைந்து அந்நாட்டின் விடுதலைக்காக போராடுகிறான். அங்கேயே மரிக்கிறான். கற்பனாவாத சாகசக் கதை என சொல்லிவிட முடியும்.  பாண்டியன் செகுவேராவாக முயன்ற கதை என்று கூட சொல்லலாம். பாண்டியன் யாமசக்கி, விலாசினி, சுந்தரம் பகுதிகள் எல்லாம் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு உரியவை. அதேப் போல் பாண்டியன் எப்பேர்பட்ட பெண்களையும் வென்றெடுக்கும் பேராற்றல் கொண்ட ஆண்மகனாக சித்தரிக்கப் படுவதும் கூட பெரும் பகல் கனவின் விளைவோ என தோன்றியது.  

இப்படியான நாவலுக்கு முதன்மை இலக்கிய அந்தஸ்து எப்படி வழங்கப்படுகிறது?

இரு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று வேறு எவரும் தமிழில் எழுதிவிடாத கதை களம். அதன் நம்பகமான சித்தரிப்பு. புலம் பெயர் தமிழரில் ஒரு சாராரின் வாழ்க்கை பதிவு. (ரப்பர் தோட்டமோ தொழிலாளிகளோ நாவலில் ஓரிடத்தில் கூட வரவில்லை). ஊர் கதைகள்,நினைவுகள் பகிரப்படும் போது பயன்படுத்தப்படும் வட்டார வழக்கு. நானறிந்த வரை செட்டிநாட்டு வழக்கு பதிவான ஒரே முக்கியமான இலக்கிய ஆக்கம் இதுவே. நினைவுகளின் ஊடாக சித்தரிக்கப்படும் மதுரை, சின்னமங்கலம், காரைக்குடி பகுதிகள் முக்கியமானவை. ஆவன்னா, நாவன்னா, மாணிக்கம், அயிஷா, இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரிகளின் பாத்திர வார்ப்புகள் சிறப்பாக உள்ளன. 

இதைவிடவும் முக்கிய காரணம் என்பது நாவலுக்குள் உள்ள பகடி. புதுமைபித்தனின் நேர் வாரிசு என சிங்காரத்தை அடையாளப் படுத்தலாம். தமிழ் பேரவை, மதுக்கூட பிரசங்கம் போன்ற பகுதிகளில் மொழி கட்டற்று பாய்ந்து செல்கிறது. ஐ.என்.ஏ அதிகாரியை பாண்டியன் சந்திக்கும், உரையாடும் பகுதிகள் எல்லாம் அபார பகடி. தமிழினத்தை கடைத்தேற்ற எதாவது செய்தாக வேண்டும் என்று எண்ணும் பாண்டியன் சுமத்திராவின் 'மெர்டேக்கா' போராட்டத்தில் உயிர்விடுகிறான். 

 நாவலில் வடிவக் குறைபாடுகளும் உண்டு. அயிஷாவின் பாத்திரம் என்னவோ செய்யப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருக்கையில் திருமணம் முடித்து 'மெர்டேக்கா' காரர்களோடு சேர்ந்துவிடாதே உன் முகத்தை பார்த்தால் தெரிகிறது என்று சொல்லி எச்சரித்துவிட்டு, நாவலில் அடுத்து பாண்டியன் என்ன முடிவெடுக்க போகிறான் என முன்னோட்டம் காட்டிவிட்டு சென்றுவிடுகிறது. சுமத்திராவிற்காக போரில் பங்கேற்பது வலுவான வாதங்களால் நியாயப்படுத்தப் படுகிறது ஆனால் அவன் ஊர் திரும்ப முடிவெடுப்பதற்கு போதிய நியாயங்கள் நாவலில் உருவாகவில்லை. ஆனால் நாவலில் பாண்டியன் அப்படி முடிவெடுக்கும் தருணம் எனக்கு முக்கியமாக பட்டது. நாவல் போதும், முடித்துவிடலாம் என்று முடிவெடுத்ததன் விளைவா அல்லது ஏதோ ஒரு மன உந்துதலில் எடுத்த முடிவா என தெரியவில்லை. ஆனால் பாண்டியனின் பலவீனத்தையும் காட்டி செல்லும் தருணமாக அவனுடைய ஊர் திரும்பும் முடிவை புரிந்து கொள்கிறேன். நாவலின் 'உண்மை' 'வடிவத்தை' உதறி எழும் தருணம் என்பதாலேயே இது என்னை ஈர்க்கிறது. பாண்டியன் ஊர் திரும்ப முடிவெடுக்க என்ன காரணம் இருக்கும் என யோசித்து கொண்டிருந்தேன். தனது லட்சியவாதத்தின் மீதான அலுப்பாக கூட இருக்கலாம். 

தமிழ் சமூகத்தின் போலி பெருமிதத்தை பகடி செய்தபடியே தமிழ் சமூகத்தின் இலட்சியவாதியாகவும் உருவெடுக்கும் முரணை சிங்காரம் வெற்றிகரமாகா நெய்துவிட்டிருக்கிறார். இந்நாவலின் பகடி பகுதிகளை எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காது. இவை இந்நாவலுக்கு காலாதீத தன்மையும் முன்னோடி இடத்தையும் அளிக்கின்றன. 


Life without facebook

I am intending to use this space as a bi lingual try out. Just to stay in touch with the language. Henceforth there will be occasional posts in English too.

So, there exists life without facebook. Its been two days since i deactivated facebook. Too early to boast, I understand. But life looks peaceful and lovely. You need not see blood bath, need not read hypocritical blabbering, importantly the negativity and hatred that one feels around, with adrenaline gushing over your veins. The biggest thing is you will be saved from observing the fall of icons and people whom you respected for their intellectual augur. Enough of disillusionment.  You can still respect them. Thank God.The internal rage has disappeared. When you come across some stupid and fundamentally flawed idea, there will be an internal urge to engage in discourse with him. Try to explain him. But what a vain! No one moves an inch in social media. You cannot convince anyone in a debate. OK in that case why is our mind resting in peace and move away. It is strange. while you refrain from debating there will be internal debate. What i miss? Yes some friends who are acquaintances in social media. I miss them. But yes will learn to live. I also miss the occasionally brilliant and creative memes in the flood of insensitive and stupid ones.

My mobile time has come down drastically, which has increased my reading time.Also i feel more attentive to Manasa and Sudhir. Life is Good.  

Sunday, February 25, 2018

சபிக்கப்பட்டவர்கள்

மனிதர்களே உங்கள் எலும்புகள்  ஓநாய்களுக்கு இரையாக படைக்கப்பட்டன. உங்கள் சதைகள் சிதலுக்குரியவை. நீங்கள் பெருமழையை புயலை பூமிப் பிளவை வென்றுவிட்டதால் அமரர்களாகிவிட முடியாது. உங்கள் அருகமர்ந்தவனின் நம்பிக்கையை, நன்மதிப்பை நீங்கள் ஒருபோதும் அடையாதபடிக்கு நாங்கள் அதை ஒளித்து வைத்துள்ளோம். உங்களை அழிக்க நாங்கள் ஆடிகளை படைத்திருக்கிறோம்.  நீங்கள் உங்களையன்றி வேறு எதையும் நோக்காமல் ஆவீர்கள். உங்கள் அழகில், பிசகில் லயித்து குலாவிக் கிடப்பீர்கள்  சோற்று மூட்டை அழுகி புழுத்தாலும் அதிலிருந்து ஒரு பருக்கையை கூட சிந்தவிட மாட்டீர்கள். உணவின்றியும் உணவுண்டும் மெல்ல மெல்ல மட்கி அழிவீர்கள். நீங்கள் வேட்டையாடிய மாமத யானைகளும், தோலுரித்த புலிகளும், நசுக்கிய சிற்றெறும்புகளும் தங்கள் ஆவிகளை உங்களுக்குள் புகுத்துவதற்காக தருணம் பார்த்து சுமந்து அலைகின்றன. அவை வேட்டையாடி பழிதீர்க்க வெறித்து திரிகின்றன. உங்கள் கட்டைவிரல் தளுக்கிற்கும், கண்னசைவிற்கும் எரிமலை வெடிக்கும் அதிகாரத்தை சும்மா ஒன்றும் அளித்துவிடவில்லை. உங்கள் மாமேருக்களை கரையான்கள் மூடி மறைக்கும் காலம் நோக்கி ஓடத்துவங்கி நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.

இனி கறையான்களின் காலம்...


Sunday, February 18, 2018

காரைக்குடி புத்தக கண்காட்சி 2018 அனுபவங்கள்


ஃ பிப்ரவரி 9 ஆம் தேதி துவங்கிய காரைக்குடி புத்தக கண்காட்சி 18 ஆம் தேதி வரை காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் நிகழ்ந்தது. சிறுநகரமான காரைக்குடியில் தொடர்ந்து 16 ஆவது ஆண்டாக பெரும் சவால்களை கடந்து உயிர்ப்புடன்  நடைபெறுகிறது. முதல் மூன்று ஆண்டுகள் மத்தியல் மின் வேதியல் ஆய்வு மையம் புத்தக கண்காட்சியை ஒருங்கிணைத்தது. அப்போது பெரும் வரவேற்பு கிடைத்தது. பல எழுத்தாளர்களை அழைத்து வந்தார்கள். பின்னர் அவர்கள் விலகிக் கொண்டதும் வாசிப்பின் மீது ஆர்வமுள்ள தன்னார்வ குழு புத்தக கண்காட்சியை ஒருங்கிணைக்க தொடங்கியது. பிற மாவட்டங்களைப் போல் மாவட்ட ஆட்சியர் ஆர்வமுடன் முன்னெடுப்பதில்லை. ஜெயகாந்தன், நாஞ்சில் நாடன், பாரதி கிருஷ்ணகுமார் என பல எழுத்தாளர்கள் காரைக்குடி புத்தக கண்காட்சிக்கு வருகை புரிந்துள்ளார்கள். தமிழ்த்தாய் கோவில் வளாகத்திலேயே புத்தக கண்காட்சி நிகழ்வது பெரும் அறிவு தொடர்ச்சியை பறைசாற்றுவதாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நிறைவு விழாவின் போது மாநில அளவில் சாதனை படைத்த காரைக்குடி மாணவர்களை மேடையில் மரியாதை செய்கிறார்கள். இந்த அண்டு பத்து அரசு பள்ளிகளுக்கு மொத்தம் இரண்டு லட்சம் மதிப்புள்ள புத்தகங்களை நூலகங்களுக்காக வழங்கினார்கள். ஆனால் இந்த புத்தகங்களை உள்ளிருக்கும் அரங்குகளில் இருந்து வாங்குவதே முறை. ஆனால் புரவலர்கள் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என ஒதுங்கிவிட்டனர். கௌரா ஏஜென்சீஸ் 50 சதவித தள்ளுபடியில் விற்றுக் கொண்டிருந்த புத்தகங்கள் எல்லோருடைய தேர்வாகவும் ஆயின. கல்லூரி நூலகத்திற்காக வாங்குபவர்களும் மொத்தமாக அங்கு வாங்கி சென்றனர்.சில லட்சங்களுக்கு புத்தகம் விற்பனை ஆனதாக பேச்சு. ஆக புத்தக விற்பனை என்பது அல்ல சிக்கல். என்ன விதமான புத்தகங்கள் என்பதே.

காரைக்குடியைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் டாக்டர். அய்க்கண் இன்று வரை முனைப்புடன் கண்காட்சியை ஒருங்கிணைத்து வருகிறார். ஐம்பது புத்தக அரங்குகள் உள்ள கண்காட்சியில் பெரும்பாலான அரங்குகள் வாடிக்கையாக வரும் பதிப்பகங்களே எடுத்துக் கொள்கின்றன. இம்முறை சுமார் 30 விற்பனை நிலையங்கள் பங்கு கொண்டன. தொடர்ந்து வருவதற்கு மிக முக்கிய காரணம் பதிப்பகத்தாருக்கு வசிப்பிடம் இலவசமாக வி.கே. என் அறக்கட்டளையால் வழங்கப்படுகிறது என்பதே. தமிழ் இலக்கியத்தின் வரலாற்றை செட்டிநாட்டை கழித்து விட்டு எழுதிவிட முடியாது. முக்கியமான பதிப்பாளர்கள் காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தான். சா. கணேசன் துவங்கிய காரைக்குடி கம்பன் கழகம் மரபிலக்கியத்தை இன்று வரை உயிர்ப்பித்து பெரும் தொண்டாற்றி வருகிறது. கந்த ஷஷ்டி விழா, ராமாயண சொற்பொழிவு, திருக்குறள் விழா, சிலம்பு விழா என கொண்டாட்டங்கள் வருடம் முழுக்க நீளும். இன்றும் திருமணம் மற்றும் பிற குடும்ப விழாக்களில் புத்தகங்களை அச்சடித்து பரிசாக வழங்கும் வழக்கம் நீடிக்கிறது. ரோஜா முத்தையா புத்தக சேகரிப்பைப் பற்றி தனியாக சொல்ல வேண்டியதில்லை. மரபிலக்கியத்தில் வலுவான தடம் பதித்த காரைக்குடி நவீன தமிழ் இலக்கியத்தில் சன்னமாகவே தடம் பதித்துள்ளது. ப. சிங்காரம் ஓரளவு இப்பகுதியின் வாழ்வியலை  அந்நிய நிலத்தின் பின்புலத்தில் பதிவு செய்திருக்கிறார்.முத்து மீனாள், ரமா இன்ப சுப்பிரமணியன், ஆறாவயல் பெரியய்யா, ஆறுமுக தமிழன், தேனம்மை லக்ஷ்மணன் போன்றோர் கவனிக்கத்தக்க எழுத்தாளுமைகள் என நினைவில் எழுகிறார்கள்.

என்.பி.டி, என்.சி.பி எச், சாகித்திய அகாதமி, கிழக்கு, பாரதி புத்தகாலயம் போன்ற முக்கிய பதிப்பகங்கள் எப்போதும் அரங்குகள் அமைப்பார்கள். முக்கியமான புதிய மற்றும் பழைய ஆங்கில நூல்களை விற்பனை செய்யும் புக் வேர்ல்ட் வருவார்கள். காலச்சுவடு, உயிர்மை, தமிழினி, சந்தியா போன்ற நவீன இலக்கியத்தின் முக்கிய பதிப்பகங்கள் துவக்க காலங்களில் வந்தாலும் போதிய லாபம் இல்லை என்பதால் கடந்த சில ஆண்டுகளாக வருவதில்லை. இந்நிலையில் கடந்த மூன்றாண்டுகளாக நவீன இலக்கிய நூல்களை கொண்டு சேர்க்கும் நோக்கில் ‘மரப்பாச்சி’ எனும் பேரில் ஓர் அரங்கை நடத்தி வருகிறோம். தமிழினி, வம்சி, எதிர், சர்வோதயா, யாவரும், இந்து, மணல்வீடு, தேசாந்திரி பதிப்பக வெளியீடுகளை விற்பனைக்கு வைத்தோம்.

சிறுநகரங்களில் தன்னார்வமாக ஏற்பாடு செய்யப்படும் புத்தக கண்காட்சி சந்திக்கும் சவால்கள் காரைக்குடிக்கும் பொருந்தும். புரவலர்கள் அளிக்கும் நிதியுதவியால் தான் இவ்விழா தொடர்ந்து நிகழ்கிறது. வார இறுதி நாட்களில் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் விற்பனை வார நாட்களில் மிகவும் மந்தமாகத்தான் இருக்கும். பள்ளி வளாகம் என்பதால்  வார நாட்களில் அரங்குகளுக்குள் மாலையில் தான் அனுமதி. மாணவர்களின் கலை நிகழ்சிகள் மாணவர்களையும், காண வருபவர்களையும் கண்காட்சிக்குள் அழைத்து வரும் எனும் நம்பிக்கை பொய்த்து போகிறது. கலை நிகழ்வுகளை காண வருபவர்கள் உள்ளே வருவதில்லை. அப்படியே வந்தாலும் நிதானமாக அரங்குகளுக்குள் சுற்றிப்பார்த்து  புத்தகங்களை வாங்குவதில்லை. தொடர் விளம்பரங்களும் வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்ச்சியும் தேவையாய் உள்ளன. சமூக ஊடகங்களிலும் காரைக்குடி புத்தக கண்காட்சிக்கு இருப்பு வேண்டியதாய் உள்ளது. இன்றைய இணைய யுகத்தில் நமக்கு தேவையான புத்தகங்களை தருவிப்பது மிகவும் எளிது. எந்த புத்தகங்கள் தேவை? எவை தரமானவை என்றறிவதே சவால். இச்சூழலில் புத்தக கண்காட்சி புத்தக விற்பனைக்கான ஏற்பாடு என்பதிலிருந்து பண்பாட்டு செயல்பாடாக பரிணாமிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது. சென்னை புத்தக கண்காட்சி தமிழக அளவில் பண்பாட்டு விழாவாக, எழுத்தாளர்கள், சிந்தனையாளர்களுடன் தொடர்ந்து சந்திப்புகளை ஒவ்வொருநாளும் ஒருங்கிணைக்க வேண்டும். அதுவே நாளடைவில் தரமான வாசக பரப்பை ஏற்படுத்தும்.

அண்மைய காலங்களில் வாசிப்பு ஆர்வம் பெருகுவதை கண்கூடாக உணர முடிகிறது. ஆனால் இந்த ஆர்வம் புத்தகங்களை நுகர் பொருளாக அணுகி வாங்குவதுடன் வடிந்து விடுகிறதோ எனும் ஐயம் ஏற்படுகிறது. உள்ளூர் அளவில் நல்ல புத்தகங்களை அடையாளம் காட்டும் வாசக அமைப்புகள் உருவாகி வலுப்பெற வேண்டும். புதிய ஊர்களில் முதல் ஓரிரு ஆண்டுகள் ஆர்வத்துடன் மக்கள் பங்கு கொள்ளும் புத்தக கண்காட்சிகள் காலபோக்கில் வெளிறிவிடுகின்றன. ஆர்வமுள்ள மூத்தோருக்கு பின் மெல்ல சிறு நகரங்களில் புத்தக கண்காட்சி நிகழாமல் ஆவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். புத்தக வணிகம் என்பதை தாண்டி அறிவு திருவிழாவாக புத்தக கண்காட்சி மாற வேண்டியதே இன்றைய காலத்தின் கட்டாயம்.  

சிறிய தட்டியில் காரைக்குடி நவீன இலக்கிய வாசகர வட்டத்தில் இணைய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் என எழுதி வைத்திருந்தோம். சுமார் 30 பேர் பெயர் கொடுத்திருக்கிறார்கள் என்பது நிறைவளிக்கும் செய்தி. மாதமொரு முறை கூடுகைகளை ஒருங்கிணைக்கலாம் என யோசனை. இந்த புத்தக கண்காட்சியில் கவிஞர் விஷ்ணு குமார், ராமச்சந்திரன் மற்றும் குயலவனை சந்தித்து உரையாடியது நிறைவான தருணங்களாக அமைந்தன. முதல் முறை சந்தித்தாலும் வெகு இயல்பாக உரையாட முடிந்தது. சென்னை போன்ற நகரங்களில் இயல்பாக இப்படி உரையாட பல வாய்ப்புகள் உள்ளன. உள்ளூரில் ஒத்த ரசனையும் தேடலும் உள்ள நண்பர்களை கண்டுபிடிப்பது குதிரை கொம்பு. தம்பி விஷ்ணு தான் எழுதப்போகும் நாவலைப் பற்றி சொன்னார். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. குயலவன் அளவுக்கோ விஷ்ணு அளவுக்கோ அவர்களுடைய வயதில் நவீன இலக்கிய வாசிப்பு எனக்கு இருந்தது இல்லை. விட்டதைப் பிடிக்க இரு மடங்கு வேகமாக ஓட வேண்டும்.

நரகத்தில் ஒரு பருவகாலம், நீரோட்டம் பார்ப்பது எப்படி, திராவிடம் மார்க்சியம்,தமிழ் தேசியம் – ராஜேந்திர சோழன் எழுதியது ஆகிய நூல்களை முழுக்க வாசித்தேன். அமரந்தா மொழியாக்கம் செய்த கூகி வாங் தியோவின் சிலுவையில் தொங்கும் சாத்தான், ஸ்ரீதர் ரங்கராஜ் மொழியாக்கம் செய்த சாமர் யாஸ்பெக்கின் பயணம்  மற்றும் கினோ, கார்த்திகை பாண்டியன் மொழியாக்கம் செய்த முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம் மற்றும் விஜய பத்மா மொழியாக்கம் செய்த இஸ்மத் சுக்தாய் கதைகள் ஆகிய நூல்களை கொஞ்சம் வாசித்தேன். பாமாவின் கருக்கு, தேவி பிரசாத் சட்டோபத்யாயவின் இந்திய நாத்திகம், அவன் காட்டை வென்றான் ஆகியவற்றை பிற அரங்குகளில் இருந்து வாங்கினேன். ஜஸ்டின் கார்டனர் (சோபியின் உலகம் எழுதியவர்) எழுதிய இரு நூல்கள், மற்றும் இந்திய தத்துவம் பற்றிய அறிமுக நூல் ஆகியவை புக் வேர்ல்டில் கிடைத்தன. ஆஸ்டிரிக்ஸ் காமிக்ஸ் விலையை பார்த்து பயந்து அங்கேயே  வைத்துவிட்டேன்.

லாப நட்ட கணக்குகளைப் பற்றி பேசினால் விரக்தி தான் எஞ்சும். நண்பர்கள் ஆளுக்கு ஆயிரமாக இந்த கண்காட்சியை நடத்த மூன்றாண்டுகளாக பிரதிபலன் இன்றி உதவி வருகிறார்கள். பங்குதாரர்கள் போல் செயலாற்றி வருகிறார்கள். அதவாது எனது நட்டத்தை தாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இதை எழுதுவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள். மேலும் சில வெளியூர்/ வெளிநாட்டு  நண்பர்கள் அவர்களுக்கு வேறு வாய்ப்புகள் இருந்தும் கூட என்னிடமிருந்து புத்தகங்களை வாங்கிக் கொள்கிறார்கள். இதையெல்லாம் தாண்டித்தான் 'மரப்பாச்சி' செயல்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு கிடைத்த விழுப்புண் இன்னும் நினைவில் உள்ளதால் இந்த ஆண்டு அரங்கை பதிவு செய்யும் எண்ணமே எனக்கில்லை. ஆனால் நிர்வாகிகளே அழைத்த போது மீண்டும் சபலம் ஏற்பட்டு ஒப்புக்கொண்டேன். முக்கியமாக மானசாவும் அம்மாவும் முகம் சுளிக்காமல் இவற்றை அனுமதிப்பதும் ஆதரவளிப்பதும் பெரிய விஷயம். அடுத்த ஆண்டு பற்றி இப்போது எந்த யோசனையும் இல்லை. மாதமொரு நாள் மரப்பாச்சி இலக்கிய கூடுகையை நடத்த வேண்டும் என்பது மட்டுமே இப்போது மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறது. பார்ப்போம்.    



Monday, February 12, 2018

அம்புப் படுக்கை சிறுகதை தொகுப்பு பற்றி

இதுவரை அம்புப் படுக்கை தொகுப்பு பற்றி வந்துள்ள பார்வைகளை இந்த இடுகையில் தொகுத்து கொள்கிறேன். வாசித்து எதிர்வினை ஆற்றிய அத்தனை நண்பர்களுக்கும் நன்றி. விரிவாக எழுதவில்லை என்றாலும் கூட வாசித்ததை தெரிவித்து ஊக்குவித்த கவிஞர் ராஜா சந்திரசேகர், எழுத்தாளர் பத்மஜா நாராயணன், எழுத்தாளர் நவீன், நண்பர் ராஜீவ் பாஸ்கரன், நண்பர் இராமசாமி கண்ணன்,  எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தி, எழுத்தாளர் கார்த்திகை பாண்டியன், எழுத்தாளர் கார்த்திக் பாலசுப்பிரமணியன், எழுத்தாளர் லக்ஷ்மி சரவணகுமார், எழுத்தாளர் சித்திரன், எழுத்தாளர் நாஞ்சில் நாடன், நண்பர் யமுனை செல்வன் மற்றும் நண்பர்களுக்கு நன்றி. 

நேரம் எடுத்து விரிவாக தங்களது பார்வைகளை பதிவு செய்த பத்திரிக்கையாளர் ஆசை, எழுத்தாளர்  கிருஷ்ணமூர்த்தி, நண்பர் காளி பிரசாத், மேரி கிறிஸ்டி, சிவமணியன், விஷ்ணு பிரகாஷ், ரமேஷ் கல்யாண், டேவிட்  ஆகியோருக்கும் நன்றிகள்.

கவிஞர் சமயவேல் அவர்களின் கட்டுரை
https://samayavel.blogspot.in/2018/02/blog-post.html

மேரி கிறிஸ்டி அவர்களின் வாசிப்பு 

http://www.jeyamohan.in/106732#.WoJzKKinHIV

எழுத்தாளர் கிருஷ்ணமூர்த்தியின் கட்டுரை 
http://www.kimupakkangal.com/2018/02/blog-post_4.html

ஆசை எழுதிய அறிமுகம் 

http://writerasai.blogspot.in/2017/12/blog-post_14.html

சிவமணியன் வாசிப்பு அனுபவம் 
https://sivamaniyan.blogspot.in/2018/01/blog-post.html

காளி பிரசாத் வாசிப்பு 
http://kaliprasadh.blogspot.in/2017/12/blog-post.html

யமுனைசெல்வனின் முதல் பார்வை
https://yamunaiselvan.wordpress.com/2018/01/02/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

விஷ்ணுபிரகாஷ் வாசிப்பு 

http://suneelwrites.blogspot.com/2018/01/1.html

ரமேஷ் கல்யான் அவர்களின் கடிதம்
http://suneelwrites.blogspot.com/2018/04/blog-post.html

துணை இயக்குனர் டேவிட் அவர்களின் வாசிப்பு
http://suneelwrites.blogspot.com/2018/05/blog-post_8.html
http://suneelwrites.blogspot.com/2018/05/2.html

Sunday, January 28, 2018

வாசகசாலை சந்திப்பு பற்றி...

நேற்று (28/1/18) மாலை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வாசகசாலை சார்பாக ஏற்பாடு செய்திருந்த நிகழ்வின் முதல் அமர்வில் எழுத்தாளர்கள் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கார்த்திக் பாலசுப்பிரமணியம் ஆகியோருடன் சேந்து பங்கு கொண்டேன். எழுத்தாளர்/ நண்பர் ஜீவ கரிகாலன் அமர்வை ஒருங்கிணைத்தார். இது ஓர் திடீர் ஏற்பாடு. தற்செயலாக சென்னையில் இருந்ததால் பங்குகொள்ள முடிந்தது. ஒரு ஞாயிறு பின்மதியத்தில் 30 க்கு மேற்பட்டோர் அவ்வளவாக அறியப்படாத எழுத்தாளர்களின் அமர்விற்கு வந்திருந்தார்கள். வாசகசாலை சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் தொடர்ந்து நிகழ்வுகளை ஒருங்கிணைத்து வருகிறது. மென்மேலும் தொடர வேண்டும். கார்த்திகேயன் வெங்கட்ராமன் உள்ளிட்ட நண்பர்களுக்கு நன்றிகள். 

குறுகிய காலம் என்பதால் என்ன பேசுவது என்பது பற்றி பெரிய திட்டமிடல் ஏதும் இல்லை. சிறுகதை எழுத்தாளனாக இது எனக்கு முதல் மேடையும் கூட (புத்தக வெளியீட்டின் போது பேசியதை தவிர்த்தால்). அகர முதல்வன், வாசு முருகவேல், கார்த்திக் புகழேந்தி, சீராளன் ஜெயந்தன், கவிதைக்காரன் இளங்கோ, ரமேஷ் ரக்ஷன் போன்ற சக எழுத்தாளர்களும் வந்திருந்தார்கள். 

முதலில் கிருஷ்ணமூர்த்தி பேசினார். தனது படைப்புலகில் குடும்பம் பேசு பொருளாக உள்ளது. அதன் சிக்கல்களை பற்றி தொடர்ந்து தமிழில் எழுத வேண்டும் என்று எண்ணுவதாக கூறினார். நல்ல கதையை எழுதும் பயணத்தில் தான் என்றும் இருப்பதாக சொன்னார். ஜீவ கரிகாலன் தற்கால சூழலில் குடும்பம் என்பது பின்னுக்கு சென்று தனி மனிதனை முன்னிறுத்தும் எழுத்து போக்கு மலர்வது முக்கியமானது என்று தனது வாதத்தை முன்வைத்தார். மேலும் பாலசுப்பிரமணியம் பொன்ராஜின் 'உடைந்து போன பூர்ஷ்வா கனவு' பற்றிய விவாதமும் வந்தது. அதுவே நவீன குடும்பத்தின் சிக்கலை பிரகடனம் செய்கிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொண்டோம். கார்த்திக் பாலசுப்பிரமணியம் 'குடும்ப அமைப்பின்' வீழ்ச்சியின் வேகம் தன்னை அச்சுறுத்துவதாக கூறினார். வேறெப்போதையும் காட்டிலும் இப்போது குடும்பத்தின் சிக்கல்களை எழுதுவது அவசியம் என்றார். 

என் பங்கிற்கு இரண்டு கருத்துக்களை வைத்தேன். யுவால் நோவா ஹராரி குடும்பத்தின்  இடத்தை இன்று அரசு எடுத்துகொள்வதாக சொல்கிறார். தனி மனிதவாதம் என்பது சுதந்திரத்திற்கான விழைவு என்பது எப்படி உண்மையோ அதேயளவு சந்தை பொருளாதாரத்திற்கான நுகர்வோரை உருவாக்குகிறது என்பதும் உண்மையே. அமெரிக்காவில்  பொருளாதார மந்தநிலையின் போது தனித்து வாழ்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து குடும்பமாக வாழ துவங்கியதைப் பற்றிய கட்டுரை ஒன்றை சென்ற ஆண்டு வாசித்திருந்தேன். லாசரா சொல்வது போல் ஒரு கூண்டுக்குள் இருக்கும் இரு புலிகள் போல ஒருவரை ஒருவர் பிராண்டும் வண்ணம் குடும்ப அமைப்பு மாறி இருக்கிறது. இதன் புதிய ஊடாட்டங்கள் எழுதப்பட வேண்டியதே என்றேன். 

ஜீவ கரிகாலன் பின்னர் என்னை அறிமுகம் செய்து பேச அழைத்தார். அடிப்படையில் நான் ஒரு கதை சொல்லி தான்.வாசுதேவன் என் கனவுகளை ஆக்கிரமித்ததும், அவனை எழுதி விடுவித்து என்னை எழுத்தாளன் ஆக்கிக்கொண்டதையும், காப்காவின் கிரேகர் சம்சாவுடன் அவனுக்கு இருக்கும் தொடர்பையும் கூறினேன். எனக்கான கேள்விகளாக விடுதலை மற்றும் சுதந்திரம் உள்ளது. முன்னரே வெளியீட்டு விழாவின் போது இதை பேசிவிட்டதால் அதிகம் சொல்லவில்லை. வெவ்வேறு எழுத்தாளர்களை வாசிக்கும் தோறும் என் மொழியும் வெளிப்பாடும் மாறி வருகிறது. அ.முத்துலிங்கம் தொடர்ச்சியாக வாசித்ததும் 'பொன் முகத்தை ..; கதை எழுதினேன். யுவன் சந்திரசேகரின் தாக்கத்தில் 'குருதி சோறு' வந்தது. முறையாக பள்ளியில் தமிழ் கற்றவனில்லை என்பதால் தமிழ் மரபிலக்கிய பயறிசி எனக்கில்லை. அசை, சீர் பிரித்து வாசிக்க முடியாது என்பது எனது குறைபாடுகளில் ஒன்று என்று கூறினேன். 

ஃபிரெடெரிக் எனும் நண்பர் 'சமகாலம்' என்பதற்கான வரையறை என்ன என்று ஒரு வினா எழுப்பினார். சமகாலம் என சொல்லிக்கொண்டாலும் எனது கதைகள் 90, 2000 காலகட்டங்களை சார்ந்ததே அதிகமும் என்றேன். ஜீவ கரிகாலன் இதற்கு மிக நல்ல விளக்கத்தை கூறினார். பருவ சூழல் மாற்றம், நீராதார சிக்கல், போர், பொருளாதார கொந்தளிப்பு, நுகர்வு, அடையாள சிக்கல்கள் என உலகை பாதிக்கும் விஷயங்கள் பற்றி எழுதுவதே சமகாலம் என தனது வரையறை சொன்னார். எழுத்தில் சமூக / அரசியல் பிரக்ஞை வெளிப்படுவதைப் பற்றி விவாதம் நிகழ்ந்தது. ஜீவ கரிகாலன் ஆதவன் தீட்சண்யா போன்றோர் தாங்கள் சார்ந்த அரசியலுக்கு தகுந்து எழுதுபவர்கள். அதுவல்ல அரசியல் பிரக்ஞை சார்ந்த எழுத்து என்றார். எழுத்தாளன், தான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புகொள்ளாவிட்டாலும் தன்னளவில் ஒரு ரிபல் தான் என்றேன். அவன் சமூகத்தை குத்தும் முள்ளாக எப்போதும் இருப்பான். ஹாரி பாட்டரை அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் பிரதியாக வாசிக்க முடியும், ஆலீஸின் அற்புத விளக்கம் டெம்ப்லர் குறியீடுகள் நிறைந்த அரசியல் பிரதி என டான் பிரவுன் அதற்கொரு வாசிப்பை அளிக்கிறார். எழுத்தாளன் எப்படி தன்னை மூடிக் கொண்டாலும் அரசியல் ஏதோ ஒருவகையில் உள்ளே வந்தே தீரும். சிக்கல் தனக்கு உகந்த அரசியலை ஒரு பிரதி முன்வைக்கிறது என்பதற்காக அது நல்ல பிரதி என அடையாளப்படுத்தப் பட கூடாது. நாம் நம்பாத, நாம் விரும்பாத அரசியலையும் அது உட்பொருளாக கொள்ளக்கூடும். அது தன்னளவில் உண்மையாக வெளிபட்டிருக்கிறதா என்பதே கேள்வி. தாமிரபரணியில் மறுகரை கூடங்குளம் எழுந்து கொண்டிருக்கும் போது கூட இங்கே எழுத்தாளர்கள் வேறோர் தாமிரபரணியை எழுதி கொண்டிருக்கிறார்கள் என்றொரு விமர்சனம் அன்றைய சூழலில் எழுந்ததைப் பற்றி பேச்சு வந்தது. எழுத்தாளர்களுக்கான அகத்தூண்டுதல் வெவ்வேறானது. சிலர் சமூக பிரக்ஞையுடன் எழுத வரக்கூடும், சிலர் அப்படி இல்லாமல் இருக்கவும் கூடும், அதை மட்டும் வைத்து எழுத்தாளர்களை மதிப்பிட முடியாது. அசோகமித்திரன் தான் சந்தித்த எளிய மனிதர்களுக்கான 'டிரிபியுடாக' கதைகளை எழுதுகிறேன் என நேர்காணலில் சொல்கிறார். எழுத்து ஒரு விளையாட்டாக, தனக்கென நோக்கம் என ஏதுமில்லாத லீலையாகவும் வெளிப்பட முடியும் என்றேன். வாசகர்கள் நிராகரிக்கவும் விவாதிக்கவும் இடமுண்டு என்பது வேறு விஷயம். அசோகமித்திரன் எழுதிய காலங்களில் இருந்த அரசியல் கொதிநிலை சூழல் வேறு, அண்மைய காலங்களில் தமிழ் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. இந்த சூழலுக்கான புனைவுகள் இனி தான் உருவாகும். ஈழ பின்புலத்தில் இதை பொருத்தி பார்க்கலாம் (இலங்கை என்று சொன்னபோது அகர முதலவன் ஈழம் என திருத்தினார்). ஹெமிங்க்வே போரை ஆராதித்தவர். போர் எழுத்தாளனுக்கு மிகப்பெரிய ஊக்க சக்தி என்று நம்பினார். கிளர்ச்சியான காலகட்டங்களை தமிழகம் தொடர்ந்து சந்தித்து வருகிறது ( ஊடகங்கள் சிலவற்றை மிகையாக்குகிறது). நல்ல படைப்புகள் இனி எழ கூடும் என்றேன். 

உலகமயமாக்கல் நம் தனி அடையாளங்களை அழித்து நுகர்வோன் எனும் ஒற்றை பெரும் அடையாளத்திற்குள் கொண்டு வரும் என நம்பினார்கள். உலகம் ஒரு கிராமம் ஆதல் எனும் உருவகம் அவ்வகையில் முக்கியமானது. அத்திசையில் தான் சென்றோம், ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சி அடையாளங்களை உருக்குவதை காட்டிலும் கெட்டித்து இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. 2010 அரேபிய வசந்தம் துவங்கி இந்த மாற்றத்தை உணர முடிகிறது. இப்போது சமகாலத்தில் இதோ ஒரு முக்கியமான சவால். வலது சாரியின் அரசியல் எழுச்சியை இந்த பின்புலத்தில் புரிந்து கொள்ள வேண்டும். மனிதர்கள் மீண்டும் தங்கள் அடையாளங்களை இறுக பற்றிக்கொன்டு உள்ளார்கள் என்றேன். ஜீவ கரிகலான் எப்போதும் நிகழும் விவாதமான கலை மக்களுக்கானதா? கலைக்கானதா? எனும் கேள்வியை ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய 8 ஆக உருவகித்தது சுவாரசியம். 

அடுத்து கார்த்திக் பாலசுப்பிரமணியம் பேசினார். அடிப்படையில் மனிதர்களின் மீதான கரிசனம், மற்றும் நிகழ்வுகளின் மீதான மாற்று சாத்தியத்தின் மீதான கற்பனை தன்னை எழுத தூண்டுவதாக சொன்னார். எப்போதும் நிறைவின்மையை பணியிடம் சார்ந்து உணர்வதால் எழுத முயல்கிறேன் என்றார். ஃபிரெடெரிக் 'ஏன் பறவையை போல் நம்மால் நம் வேலையை சுமையற்று செய்ய முடிவதில்லை? நிறைவின்மையை நம்மால் ஏன் மாற்ற முடியவில்லை என கேட்டார். இந்த நிறைவின்மையை உணர்வதாலேயே தான் எழுத்தாளனாக ஆகிறேன் என்றார் கார்த்திக். எனது தரப்பாக, ஃபிரெடெரிக் சூட்டும் நிலை ஒரு ஜென் நிலை, அது எல்லோருக்கும் வாய்க்க பெறுவதில்லை என்றேன். படைப்பு தன்னிச்சையாக மலரும், நிறைவின்மையில் இருந்தும் மலரும். ஆன்மீக வாதியும் எழுத்தாளனும் நிறைவின்மையை இடு பொருளாக கொண்டு  தான் செயல்படுகிறார்கள். ஆனால் தேடலும் வெளிப்பாடும் வேறு வேறாக இருக்கிறது என்றேன்.

ஃபிரெடெரிக் 'ஏன் நீங்கள் உலகமயமாக்கல், பொருளாதாரம் சார்ந்தே எல்லாவற்றையும் நோக்குகிறீர்கள் என கேட்டார், அதற்கும் தனி மனிதனுக்கும் என்ன சம்பந்தம் என்றார். இந்த கேள்வி உண்மையிலேயே திடுக்கிட செய்தது (கொஞ்சம் உடல்மொழியில் மிகையாக வெளிப்படவும் செய்தது). பிறகு அவருக்கு நீண்ட விளக்கத்தை அளித்தேன். உலகமயமாக்கல் சுரண்டலுக்காக உருவானது, அதன் நோக்கமே அது தானா  என்றால் சொல்லத்தெரியவில்லை. ஆனால் விளைவுகளில் இதுவுமொன்று. ஆகவே அது குறித்து கவனம் தேவை என்பதே எனது வாதம். 

தற்கால எழுத்தாளர்களுக்கு கற்பனை வறட்சி உள்ளதே சிக்கல் என ஒரு நண்பர் கூறினார். கற்பனை வறட்சி என்பதை காட்டிலும் கற்பனையை தக்க வைத்து கொள்வது தான் சிக்கல். கற்பனை தொடர்ச்சி. இந்த சவாலை நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தும் எழுத்தாளர்கள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும் என்றேன். சமூக பிரக்ஞையுடன் கதைகள் எதனால் எழுதப்படுவதில்லை என்றொரு கேள்வியும் எழுந்தது. இம்முறை புத்தக கண்காட்சியில் அதிகமும் 'பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்கு மூலம்' போன்ற அரசியல் நூல்களே அதிகம் விற்றன. புனைவு சமகால அரசியல் கொதிநிலையை தவிர்க்க துவங்கினால், வாசகன் 'உன்னை ஏன் வாசிக்க வேண்டும்?' என்று கேட்டப்படி நகர்ந்து விடுவான் என்றார் ஜீவ கரிகாலன்.

அமர்வு நிறைவுக்கு வந்தது. என்னளவில் என்னை தொகுத்து கொள்ள நல்ல வாய்ப்பு. இங்கே எழுதி இருக்கும் அளவிற்கு தெளிவாக பேசினேனா என்பது தெரியவில்லை. (வழக்கம் போல், சுற்றி கொஞ்சம் இழுத்து பேசியிருக்க கூடும்) இப்போது யோசிக்கையில், எழுத்தாளன் காலாதீதத்தை நாடுபவனாகவே  இருக்கிறான் என தோன்றுகிறது (குறைந்தது எனது நாட்டம் அதுவே). அவன் விழைவது அழிவற்ற மறுமையை. ஆனால் அவன் அந்த மறுமையை சமகாலம் எனும் நிலத்திலிருந்து எவ்விக்குதித்தே அடையமுடியும்.  

இரவு 7.15 ரயில் இருந்ததால் அடுத்த அமர்வில் பங்கு பெறாமல் கிளம்பிவந்தேன். வாய்ப்பு அமைத்து அளித்த  வாசகசாலை மற்றும் யாவரும் நண்பர்களுக்கு நன்றி. 


Tuesday, January 23, 2018

சிறுகதை குறிப்புகள் - 2 - பாதசாரியின் 'காசி'

எழுத்தாளர் பாதசாரி அதிகம் எழுதியவர் இல்லை.  ஒரு சிறுகதை தொகுப்பும் ஒரு கவிதை தொகுப்பும் மட்டுமே வெளி வந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். மிகக் குறைவாக எழுதியும் கூட அவருடைய 'காசி' இல்லாத சிறந்த சிறுகதை பட்டியலே இல்லை. 



காசி முன்னரே வாசித்திருந்தாலும், இப்போது மீண்டும் வாசிக்கும் போது வழமையான சிறுகதை இலக்கணத்திற்குள் அடங்கக் கூடிய கதை இது இல்லை என்று தோன்றியது. கதைசொல்லி காசியின் நினைவுகளை மீட்டுகிறான். அதிலும் கூட ஒரு தேர்வு இருக்கிறது. அவர்களுடைய மகிழ்ச்சியான இளமை கால நினைவுகளை காட்டிலும் காசி அலைவுற்று அல்லல்படும் நினைவுகளே அதிகம். ஏறத்தாழ காசியின் முழு வாழ்க்கையும் கதை சொல்லியின் நினைவுகளின் ஊடாக சொல்லப்படுகிறது. ஒருவகையான 'சுய சரிதை' கதை சொல்லல், மையம் என ஏதுமின்றி நினைவு பெருக்கிலிருந்து கையளவு அள்ளி வைக்கிறது. 



காசி அவனுடைய அத்தனை அலைகழிப்புடனும் மறக்க முடியாத கதை மாந்தராக நின்று விடுகிறான். ஒரு எரி நட்சத்திரம் போல் கொந்தளித்துக்கொண்டே இருக்கிறான். அவனுடைய கொந்தளிப்பிற்கு நேர்மாறாக கதை சொல்லி குணா குளிர்ந்து கிடக்கிறான். காசியே "நீ பெண்ணா இருந்திருக்கக் கூடாதான்னு தோணுது. சரியாச் சொன்னா நீ பெண்ணா மாறிடக் கூடாதான்னு... உன்னோட இருந்தா பாதுகாப்பா, தைரியமா இருக்குடா குணா. அறிவோட குத்தலைப் பொருட்படுத்தாம சொன்னாகடவுளோட மடியிலே இருக்கிற மாதிரி... அதுவும் பெண் கடவுள். என்னால் ஒரு ஆணை கடவுளா கற்பனை செய்யவே முடியலே.. விளையாட்டு மைதானமா முள்ளுவேலி இல்லாத மனசு உனக்கு". இந்த எரிந்து அணையும் ஆண் எதிர் குளிர்ந்து அணைக்கும் பெண் எனும் இருமை கதையை பிணைக்கிறது. காசியின் கைலி அவிழ்ந்து குணாவின் முன் போதையில் நிர்வாணமாக கிடக்கும் தருணமும் கதையில் உண்டு. 



காசியின் தத்தளிப்புகளுக்கு என்ன தான் காரணம்? ஒருவேளை அந்த சாமியார் சொல்வது போல் செக்ஸ் தானா? அப்படியாக குறுக்கிவிட முடியாது. இருத்தலியல் சிக்கலின் வெளிப்பாடு, ஆன்மீக தத்தளிப்பு என வேறு தளங்களில் பொருள் கொள்ள முடியும். குறிப்பாக எழுபது எண்பதுகளின் வேலையின்மையை சமூக பின்புலமாக காணும் போது இந்த சித்திரம் பொருந்தும். ஆனால் காசியின் முக்கிய சிக்கல் என்பது அவன் கலவி என்பதோ காமம் என்பதோ அல்ல. அவனொரு hyper masculine ஆளுமையாக புலப்படுகிறான். அவனை ஆற்றுபடுத்தும், நிறைவு செய்யும் பெண்தன்மை கொண்ட பெண்ணை அவன் அடையவில்லை என்பதே என எனக்கு தோன்றியது. அவனுடைய ஆன்மீக தத்தளிப்பு, மனப் பிறழ்வு வேடங்கள் எல்லாம் இதன் மேல் நிகழும் பாவனையோ எனும் ஐயம் கதையில் எழுகிறது.  ஒருவித யின் - யாங் சமன்பாடு நோக்கி தான் நாம் அனைவரும் முயன்று கொண்டிருக்கிறோம். காசிக்கும் - அவனது தந்தைக்குமான உறவு, காசிக்கும் இலக்கிய பரிச்சயம் கொண்ட மற்றுமொரு நண்பனுக்குமான உறவு, காசிக்கும் மணமுறிவு ஏற்பட்ட பெண்ணுக்குமான உறவு என பல்வேறு உறவு சிக்கல்களை கதை சொல்லிச் செல்கிறது. 



ஜெயமோகனின் அம்மையப்பம் கதையின் ஆசாரி நினைவுக்கு வந்தார். அவரால் ஏணியை ஒழுங்காக கூட்ட முடியாது ஆனால் அபாரமாக புடைப்பு சிலை செய்துவிட்டு செல்வார். கலை மனம் கொள்ளும் அமைதியின்மையை தத்தளிப்பை சொன்ன வகையில் காசி மிக முக்கியமான கதையாக தன்னை நிலை நிறுத்தி கொள்கிறது.      

Sunday, January 21, 2018

சிறுகதை குறிப்புகள் - 1- குளத்தங்கரை அரசமரம் - வ.வே. சு. ஐயர்

(ஒரு பயிற்சிக்காக தினமும் சிறுகதைகளை வாசித்து அதைப்பற்றி கருத்துக்களை எழுதி தொகுக்கலாம் என நானும் விஷால் ராஜாவும் முடிவு செய்துள்ளோம். அப்படி நேற்று வாசித்த கதை)

குளத்தங்கரை அரசமரம் வ.வே.சு ஐயரால் எழுதப்பட்ட கதை. தமிழின் முதல் நவீன சிறுகதை என்று அடையாளப்படுத்தப் படுகிறது. இக்கதை தாகூரின் கதையால் உந்தப்பட்டதாக இருக்கலாம் என்றொரு ஊகமும் முன்வைக்கப்படுகிறது. அதேப்போல் பாரதியின் கதையை முதல் கதையாக நோக்கும் பார்வையும் உண்டு. எது எப்படியோ தமிழ் சிறுகதை வரலாற்றில் இக்கதைக்கு முக்கிய இடமுண்டு. 


தமிழின் முதல் சிறுகதையின் கதை சொல்லி மனிதன் அல்ல காலத்தின் சாட்சியாக குளத்தங்கரை ஓரம் நிற்கும் 'அரச மரம்'. ஆனால் இந்த நூதன துவக்க சாத்தியத்தைப் பயன்படுத்தி தமிழ் சிறுகதைகள் பயணிக்கவில்லை. யதார்த்த கதைகளே வெகுகாலம் வரை எழுதப்பட்டன என்பது தான் ஆச்சரியம். இலத்தீன் அமெரிக்க கதைகளை போல் வளர்ந்திருக்க ஒரு சாத்தியம் இருந்திருக்கிறது. ஆனால் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தை வளர்த்த அரசியல் கொதி நிலை இங்கு இல்லை என்பதால் இயல்புவாத கதைகளை நோக்கி நகர்ந்திருக்கிறோம். 

கதை எழுதப்பட்ட காலகட்டத்தை சூழலை விவரிக்கிறது. பாலிய விவாகம், வர தட்சணை போன்ற சமூக சிக்கலை பேசு பொருளாக கொள்கிறது. ஆனால் இதை பிரச்சாரமாக முன்னெடுக்கவில்லை. எவரும் சீறி பாய்ந்து எதுவும் பேசுவதில்லை. ஆனாலும் கதையின் உணர்வு கடத்தப்படுகிறது. அறுபத்னாட் வங்கி திவால் ஆனதன் சமூக தாக்கத்தை ருக்மிணியின் குடும்ப சூழலை விவரிப்பதன் வழியாக இதை நிகழ்த்துகிறது. நாகராஜன் ருக்மிணியின் மிதக்கும் சடலத்தை மீட்டவுடன் ஜூலியத் மாதிரி நட்டாற்றில் இறந்து விட்டாயே என்று அழுது அரற்றுகிறான். ஐயரின் வாசிப்பை சூட்டுவதாக இருந்தாலும் கூட, பட்டணத்தில் இருந்து திரும்பி வந்த நாகராஜனின் பாத்திரத்திற்கு பொருந்தாமல் இல்லை. 

அரசமரம் அங்கு விளையாடி வளர்ந்த ருக்மிணியின் வாழ்வை அவளின் காதலை துயர முடிவை சொல்கிறது. இந்த வடிவில் எல்லா சாத்தியங்களையும் வ.வே.சு ஐயர் இக்கதையில் பயன்படுத்தி இருக்கிறார். பார்வையில் விழுவது, காதில் விழுவது, நிழலை பெருக்குவது என மரம் எனும் கதை சொல்லி முழுமையாக பயன்படுத்தப் பட்டிருக்கிறார். 

ஏன் கதை சொல்லி ஒரு அரச மரம் என கேட்டுக் கொண்டால்? கதை வேறு தளங்களில் இக்கேள்வி வழியாக விரிகிறது. அரசு மரம் ஞானத்தின் மரமாக, பிள்ளை பேறுக்காக என மரபில் அரச மரம் வகிக்கும் இடம் முக்கியமானது. வம்ச விருதியின் குறியீடாகவே மரபில் அரச மரம் போற்றப் படுகிறது. 'விதைக்குள் ஒளிந்திருக்கும் காடு' எனும் பயன்பாடு ஆல் - அரசு மரங்களுக்கு பொருந்துவது. இங்கே அரச மரம் காலதீதமாக, சாட்சியாக நிற்கிறது. தன் இனத்தை பெருக்கிய மூதாதையின் மண் வடிவாக எல்லாவற்றையும் காண்கிறது. இப்போது கதை வெவ்வேறு காலகட்டங்களின் அற மோதல்களாக பொருள்படும் சாத்தியம் கொள்கிறது. மூதாதை தன் வம்சத்து பெண் வரதட்சினையில் சிக்கி சீரழிவதை கையறு நிலையில் காணும் மூதாதை மரம் எனும் போது கதை மேலும் விரிகிறது.  

பெரிய விவரணைகள், துருத்தும் உவமைகள் என ஏதுமற்ற நவீன கதைகளுக்கு உரிய இறுக்கமான உரைநடை மற்றும் அடங்கிய தொனி இதை நவீன சிறுகதையின் துவக்ககால பெரும் பாய்ச்சல்களில் ஒன்றாக ஆக்குகிறது.   

Saturday, January 20, 2018

பேசும் பூனை - எதிர்வினைகள் - 1


(பேசும் பூனை கதைக்கு வந்த எதிர்வினைகளை இங்கு தொகுத்திருக்கிறேன். இவை ஜெயமோகன் தளத்தில் பதிவேற்றப் படாத, அவருக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள். கதையை பற்றி நல்லதோ அல்லதோ எவ்வித எதிர்வினை வந்தாலும் அது கதையின் விதி மட்டுமே. எனக்கு அதில் பெருமை கொள்ளவோ வெட்கம் கொள்ளவோ ஏதுமில்லை. தொழில்நுட்ப குறைபாடுகளை களைய முயலலாம். போர் வீரன் உடற் பயிற்சி செய்வது போலத்தான் வாசிப்பது எழுத்தாளனுக்கு. தனது க்ராப்டை கூர்மையாக்கி தயாராக வைத்துகொள்ள வேண்டும். படைப்பூக்கம் தன்னால் வந்து அமரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும். விமர்சனம் ஒரு எழுத்தாளரை உருவாக்கிவிட முடியும் என நான் நம்பவில்லை. ஆனால் அவனுடைய வெளிப்பாடை சர்வ நிச்சயமாக மேம்படுத்த உதவும். உண்மையில் ஜெயமோகன் தளத்தின் வழியாக பெரிய வாய்ப்பு அமைந்தது. ஆயிரம் பேரையாவது இக்கதை சென்று சேர்ந்திருக்கிறது. வாசித்து கருத்துக்களை எழுதிய அனைவருக்கும் நன்றி.)

--- 

அன்புள்ள ஐயா


பேசும்பூனை குறித்து



தொழில்நுட்பமும் தனிமையும் சேரும்போது நிகழும் மாபெரும் உளச்சிக்கலை அழகாய், விரிவாய் சொன்னது. வெளிநாட்டு வேலைதரும் பொருளாதார வாய்ப்புகள், நிறைவின்மையை ஊட்டி வளர்த்து, பொருட்களைக் கொண்டு நிரப்ப முயன்று தோற்கும் நிலை.





பாம்பு விளையாட்டிலிருந்து பேசும்பூனைக்கு நகர்ந்த்து android தந்த பாய்ச்சல். தான் மட்டுமே செயலாற்றும் நிலையிலிருந்துஇருவழி தொடர்பு தரும் வரைகலை நிரலியும் செயற்கை அறிவும் அடிமனதை பிராண்டும் நெருக்கமும் கிளர்ச்சியும் கொண்டுவளர்வதையும், பாம்புக்கும் பூனைக்கும் மாறி மாறி தவிக்கும் முக்கிய பாத்திரத்தின் ஊசலையும் சித்தரித்தது சிறப்பு





நிரலியிடம் அச்சம் வரும் நிலையை உளவியல் மானுவல் என்னவாக வரையறை செய்துள்ளது என்று அறியக்கூடவில்லை. வரும்நாட்களில் முகநூல் உளநோய்கள் மிகும் என்று எதிர்பார்க்கலாம். தன் விருப்பு, தன் வெறியாய் மாறும்  புள்ளியில் மனிதனில்உள்ள விலங்கு விழித்துக் கொண்டிருக்கிறது





வெண்பூனையின் பச்சைக் கண்கள் விஷ்ணுபுரத்தில் வரும் பச்சைக் கல்லை நினைவுறுத்துகின்றன.  கடைசிக் கீறலில் மணிக்கட்டுநரம்பு துண்டிக்கும் போது, அனல்காற்றின் சுய வதை நினைவுக்கு வருகிறது. மரண அனுபவத்தில் உயிர் அல்லது ஆன்மாவாழ்வின் மைய தருணங்களை மீவிரைவில் ஓட்டுகிறது. ஜெ , கோவை கீதை உரையில், ‘நமக்கு விபத்து வருவதை நாம்பார்ப்போம் ‘ என்று கூறுவது போல, உயிர் ஒரு நொடியுள் முழு வாழ்வை மீள ஓட்டிப்பார்க்கிறது. (என் நண்பர் ஒருவர் இருசக்கரவாகனத்தில் அடிபட்டு, பேருந்தின் அடியில் கிடந்தபோது, சாலை ஓரப்பாதியில் இருந்துகொண்டு, தன் உடலை தாண் பார்த்த்தாகஅதிர்ச்சியுடம் கூறினார்)



இறுதிக்களத்தில் ஒருவேளை சாதாரண உயிர்கள் கடந்த வாழ்வைப் பார்க்கும் போலும். ரமணர் போன்ற அசாதாராணர்கள்,எதிர்கால வாழ்வை ஓட்டிக்கடந்து, பிறர்க்கும் கடக்கவைப்பர் போலும். தனது தாயாருக்கு மரண காலத்தில் எஞ்சிய கர்மாவை ஒருநிமிட்த்தில் அனுபவிக்க வைத்தார் என்பது நோக்கத்தக்க செய்தி. Flatlines பட்த்தில் வரும் செயற்கை மரணத்தருவாய்களில் தன்ஆய்வாளர்கள் குழந்தைப் பருவ நினைவுகளும் குற்ற உணர்வு சமானமும் கொள்வர்.





மின் பொறிச் செயலிகள் பெரும் செயலின்மைக்குள் நம்மைத் தள்ளுகின்றன. இந்த மயக்கத்திலிருந்து  மானுடம்விழித்துக்கொள்ளும் காலம் குறுக வேண்டும். -

மிக மோசமாக தகவல் தொடர்பை பாதித்து, பாதி தொடர்பிலிருக்கும் போதே பேச்சை வெட்ட வேண்டுமெனும் துடிப்பைத்தந்து,அடுத்த அடுத்த பணிகளுக்கு முழுமையின்றி தாவிச்செல்லும் அவசரத்தை கொண்டாடச் செய்து, தன்னையே நேசிக்கும் பித்தில்தள்ளி, கவனகத்தை சிதறடித்து, உறவுகளை உலுக்கும் கையடக்க கிராதகனை உடைத்தெறிய வேண்டும் என்ற வேகத்தைஅளித்தது கதையின் வெற்றி.





அன்புடன்

ஆர் ராகவேந்திரன்

கோவை





அன்புள்ள ஜெ



பேசும்பூனை கதையை இன்னொரு முறை வாசித்தபோது அந்தக்கதையை நான் என்னையறியாமலேயே சுருக்கிக்கொண்டுவிட்டதை உணர்ந்தேன். இப்படி இந்தக்கதையை எழுதியிருந்தாலென்ன. ஒரு பெண்ணிடம் அவள் மகளின் செல்போனிலுள்ள பூனை பேச ஆரம்பிக்கிறது. அவள் தற்கொலைக்கு முயல்கிறாள். அது பேசுவது, அவள் அதை தவிர்ப்பது மட்டும்தான் கதையில் உள்ளது. அந்த மரண விளையாட்டில் மெல்லிய புகைமூட்டமான செய்திகள் வழியாக அங்கிங்கே ஒரு தெளிவு வந்து அவளுடைய பின்புலம் சொல்லப்பட்டிருந்தால் என்ன? இந்தக்கதை அப்போது இன்னும்கூட ஆழமானதாக இருந்திருக்குமோ? நான் ஊகிக்கவேண்டியதையும் சேர்த்தே ஆசிரியர் சொல்லிவிட்டாரா?



நாராயண்

மும்பை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,



நானே தயங்கி தயங்கி எழுதினேன். உங்கள் வாசகர்கள் அடித்து துவைக்கிறார்கள். நல்ல வேளை நான் கதை எல்லாம் எழுதப் போவதில்லை என்பது சந்தோஷமாக இருக்கிறது.



சுனீலின் இந்த நல்ல கதை முக்கியமானக் கதையாக ஆகியிருந்திருக்கக் கூடும். பொதுவாக இந்த இடத்தை எழுதுபவர்கள் காமத்தை வைத்தே எழுதுவார்கள். இதில் அது இல்லை என்பதே ஆசுவாசமாக இருக்கிறது. கதை இரண்டு முக்கியமான கேள்விகளை உருவாக்குகிறது. தேன்மொழியின் உலகுக்குள் அவள் அப்பா, கணவன் யாருமே நுழைந்ததில்லை. திருமணம் புடவை எதிலும் அவள் விருப்பத்தை கேட்டதில்லை. அதற்கு மாற்றாக அவள் மகளிடம் நெருங்கியிருக்க வேண்டும். ஆனால் அவளுக்கு இறந்து போன மகனே பெரிதாகத் தெரிகிறாள். ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை அவன் வழியாக தன் தனிமையின் உலகத்துக்குள் நுழையும் ஒரு ஆணை எதிர்பார்த்திருந்திருக்கலாம். அது நிகழாததே அவளைத் தனிமையில் ஆழ்த்துகிறது.



அந்த தனிமையில் நுழையும் பூனை பெரிய ஆசுவாசம்தானே, அதனிடமிருந்து ஏன் அவள் தப்பிக்கப் பார்க்கிறாள்? அது அவளை நுகர்வோராக பார்த்தாலும் கூட? அவள் அஞ்சுவது அப்படி ஒரு இடத்தை (அது ஒரு app-ல் இருந்தால் கூட) பகிர்ந்து கொள்வதைத்தான் என நினைக்கிறேன். இந்த புதிய உறவிடம் தன்னை வெளிப்படுத்துவதை அனீஸிடம் மறைப்பதில் அவள் தயக்கம் வெளிப்படுகிறது. நான் இதைப் பார்த்திருக்கிறேன். இள வயதில் பெண்கள் சுதந்தரத்தைக் கனவு காண்பார்கள். ஆனால் அதனுடன் வரும் பயத்தை எதிர்கொள்ள முடியாமல் குடும்பத்தில் சரணடைந்து விடுவார்கள். அவர்கள் விரும்புவது பாதுக்காப்பான ஒரு எல்லைக்குள் கட்டில்லாத சுதந்திரம். அம்மாக்களுக்கு மகன்களிடம் மட்டும்தான் அது கிடைக்கும். முப்பது வயதுக்கப்புறம், சௌகர்யமான பாதுகாப்பான குடும்பம் எனவும், உள்ளே கனவுகளில் அலையும் இளம்பெண் எனவும் இரண்டு உலகமாக தன்னை பிரித்துக் கொள்ளாத பெண்கள் அபூர்வம். சாதாரணமாக முகனூலில் நிறைய பெண்கள் அப்படி இருக்கிறார்கள். இங்கு அவர்கள் உலகம் குடும்ப உலகத்திற்கு நேர் எதிர். தேன்மொழி தன்னை இரண்டாக பிரித்துக் கொள்ளும் கணம்தான் அந்த தற்கொலை முயற்சி.



இந்த இடங்கள் எல்லாமே கதாசிரியர் யோசிக்காமல் எழுதியது எனத் தோன்றுகிறது. அதனால்தான் கதை இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அவர் கவனம் பூனை அவளை ஆக்கிரமித்துக் கொண்டதை விவரிக்க போய் விடுகிறது. தமிழ் சினிமாவில் ஹீரோ ஒரே பாட்டில் எப்படி பணக்காரனாக ஆனார் என்று காட்டுவதைப் போல இருந்தது. படித்து முடித்த உடன் பூனை அவளை எதை எல்லாம் வாங்க வைத்தது என்பதே நினைவில் வருகிறது, நல்ல சாப்பாட்டுக்கு அப்புறம் தட்டே ஞாபகத்தில் இருப்பதைப் போல.



புது எழுத்தாளர்களுக்கு எல்லாவற்றையும் சொல்லி விட வேண்டும் என்று பதட்டமாக இருக்கும். ஆனால் புற உலகத்தை கொஞ்சமாக சொன்னால் கூட போதும். அப்புறம் உணர்ச்சிகளை சொல்லலாம் அல்லது அதை வாசிப்பவரிடம் விட்டுவிடலாம். நான் வண்டி ஓட்டக் கற்றுக் கொள்ளும் போது சரியாகத் திரும்பாதோ என ஸ்டியரிங்கை நிறையத் திருப்பி விட்டேன். அப்போது வண்டி ஒட்டக் கற்று கொடுத்த என் மாமா சொன்னார், இது அம்பாஸடர் இல்ல. பவர் ஸ்டியரிங். சும்மா கைய வச்சா போதும் என்று.



எழுதும் போதுதான் தெரிகிறது இதை எல்லாம் நான் பார்த்திருக்கிறேன் என்பது. அதற்கு நன்றிகள்.



மாத்யூ ஆர்னால்ட்



அன்புள்ள ஜெ,

பேசும்பூனை நல்ல கதை என எல்லாரும் எழுதிவிட்டார்கள். நான் பேச நினைப்பது ஏன் அது ஒரு மாபெரும் சிறுகதையாக இல்லை என்பதைப்பற்றி மட்டும்தான். அதாவது இலக்கியம் என்பது அடிப்படையில் அன்றாட வாழ்க்கைக்கு எதிரான ஒரு ரிவோல்ட் மட்டும்தான். ஆகவே அன்றாட வாழ்க்கையையே சிறுகதையிலே மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கும்போது சலிப்பு உருவாகிவிடுகிறது. அன்றாடவாழ்க்கை அதற்கு அப்பால்செல்லும் கதைமையத்துக்கான லாஞ்சிங் பேட் மட்டும்தான். அது எவ்வளவு இருக்கவேண்டுமோ அவ்வளவுதான் இருக்கவேண்டும். நம்மை எக்சைட் செய்வது அன்றாடவாழ்க்கை அல்ல. அதைக்கொண்டு நாம் சென்றடையும் இடம்தான். அது ஸ்பிரிச்சுவலாக இருக்கலாம். சைக்கடெலிக்கானதாக இருக்கலாம். வேறு எதுவானாலும் சரி. ஆனால் பேசும்பூனை போன்ற கதைகளில் அன்றாடவாழ்க்கையை பரப்பிப்பரப்பி அதைவிட்டு மேலே செல்லும் இடத்தை சென்று அடைவதற்குள் களைப்படைய வைத்துவிடுகிறார்கள்



ராம்சுந்தர்.

சுனில் கிருஷ்ணனின் ’பேசும்பூனை’ – அகத்தின் குரல்



எதிப்பார்ப்புகளுக்கும், உண்மைக்குமான இடைவெளியைப் பற்றிய கதையிது. எவருக்குமே தான் எண்ணிய வாழ்க்கை அமைவதில்லை. சிலருக்கு அந்த இடைவெளி குறைவாகவும், சிலருக்கு அதிகமாகவும் இருக்கிறது. பிள்ளைக்காகவாவது இனி வாழவேண்டுமேன அந்த இடைவெளியைக் கடக்க, ஏதோவொரு காரணத்தைக் காட்டி தன் வாழ்நாட்களை கடத்துவார்கள். அப்படி ஒரு காரணம் கிடைக்காத போது ஏற்படுகிற விளைவுகளைப் பற்றி சித்தரிக்கும் கதை.



நாம் பார்க்கும் மனிதர்களுக்கு எப்போதும் இரண்டு முகம் இருக்கும். ஒன்று வெளியில் காட்டிக்கொள்கிற அல்லது நடிக்கிற முகம் மற்றது நடிக்காத, உண்மையான முகம். முன்னது புறம் மற்றொன்று அகம். சராசரி குடும்ப பெண்ணான தேன்மொழியின் எதிப்பார்ப்புகளுக்கு ஏற்ப வாழ்க்கை அமையவில்லை. காமத்திற்காக மட்டும் மனைவியை நாடும் கணவனாக கணேசன். புடவை பிடிக்குமா எனப் பூனை கேட்டதும், “அவள் கண்கள்சட்டென சிவந்து கலங்கின. “இத அவன் இதுவர கேட்டதில்லை” “ என நினைத்துக்கொள்வாள்.  அவளுக்கும் அவனுக்குமான உறவு என்பது “வீட்டுக்காரன் அல்ல அவன் ஒரு விரும்பப்படாத நெடுநாள் விருந்தாளி”.  உண்மை முகம் வெளிப்படுகின்ற போது இருவருக்குமான முரண்பாடுகள் உச்சத்தை அடைகின்றன.  அதனைச் சரிக்கட்ட வேறு ஒரு காரணத்தை கண்டடைகிறாள்.



பேசும் பூனை வெறும் நிரலி என்று சொல்லிவிட முடியாதேன்றே தோன்றுகிறது. காரணம், 1. பூனை அவளுக்கு மட்டும் கேட்கும்படி “எனக்கு வேறுபெயர் உண்டு, நீ மட்டுமே அறிந்த பெயர்” எனக் குறும்பாக தொப்பியை சுழற்றிச் சிரித்தது. 2. கணேசனுடன் அவள் சாமதானம் அடைந்தவுடன் “அவளுள் அமர்ந்திருந்த ஏதோ ஒன்று அவளை உதறிச்சென்றது போல் லேசாக உணர்ந்தாள்”. என பல்வேறு இடங்களில் அது நிரலி மேல் மாயமாய் செயல்படும் அவளது உள்விருப்பங்களே அன்றி வேறு இல்லை.  விரும்பும் பாடல், நவீன வீட்டு உபயோகப் பொருட்கள் என எல்லாம்  பூனையின் குரலில் ஒலித்த அவளது அகமே.



முக்கியமான இடம், ஹர்ஷிதா பூனையை எளிதாகத்  தாண்டி வேறு விளையாட்டுக்குப்  போய்விடுகிறாள். அவளது அம்மா கேட்டும் கூட வேண்டாமென்கிறாள். ஆனால் தேன்மொழியால் அதனைக் கடக்க  முடியவில்லை. தன் அகத்தை அதில் ஏற்றிக்கொள்கிறாள். ஒருவேளை இது அவளது மனச்சிக்கலின்  தொடக்கமாக இருக்கலாம் என்றுகூட எண்ணிக்கொள்ளச் சாத்தியமிருக்கிறது. பாம்பு விளையாட்டு என்பது தன் அகத்தோடு விளையாடுவதாய் கொள்ள வேண்டியிருக்கிறது. கணேசனை மணக்க அவளது அகம் வைத்த இலக்கு 120. அதையும் தாண்டி தான் சாக வைத்த இலக்கு அதிகம். அகமனதை வென்று தான் நிஜத்தை ஏற்றுக்கொண்டாள். பூனை நிரலியை தொடர அவள் வைத்த இலக்கு இருபதை எட்டும் போது மனம் தவிக்கிறது, வென்றுவிடுமோ என்ற பயம்.  வெற்றி,தோல்வி எதுவும் தெரியாமலே பூனை நிரலியை உயிர்ப்பிக்கிறாள். எனவே பூனை நிரலி என்பதும் அக மனதுடன் விளையாடுவதே ஆகும். அவ்வாறே அவள் சிறுவயது முதல் வளர்ந்திருக்கிறாள்.



உண்மை உடையும் தருணம் தன் பிள்ளையை அடிக்கும் இடத்தில் நிகழ்கிறது. அதுவரை இருந்த மாயம் விலகி, நிகழ்காலம் அவளை எட்டுகிறது. எதிர்பார்ப்புகளின் உலகத்தில் வாழ்ந்துவிட்டு, உண்மை உலகினை காணும் போது வருகிற ஏமாற்றம் தாங்கிக்கொள்ள முடியாததாய் இருக்கிறது.  தற்கொலைக்கு அதுவே காரணமாகவும் அமைகிறது. ,மறுபடியும் அவள் அகமனதுடந்தான் விளையாடி வெல்கிறாள்.



மயக்கத்திலிருந்து முழித்த பிறகும் கேட்கும் அந்தப் பூனையின் குரல் சர்வ நிச்சயமாய் அவளது அகத்தின் குரல், அது அழியாது. இந்த முறை நிரலி இல்லாமலே அது செயல்பட ஆரம்பிக்கிறது.

குறுநாவலாக எழுத முயன்று சிறுகதையை வடிவத்தைஅடைந்திருக்கும் சிறுகதையிது, எனவே அதற்கான குறைபாடுகளைக் கொண்டிருக்கிறது. நிச்சயமாய் இது தமிழில் எழுதப்பட்ட நல்ல சிறுகதை என்பதில் எந்தவித தயக்கமும் இல்லாமல் சொல்ல முடியும்.





நன்றி

மகேந்திரன்.க



அன்புள்ள ஜெ



பேசும்பூனை ஒரு நல்ல கதை. ஆனால் இன்றைய புதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் உரிய ஒரு பொது அம்சம் உள்ளது. அதாவது வரண்ட நடை. இது அசோகமித்திரனில் இல்லை. அவர் எப்போதுமே மெல்லிய ஹ்யூமருடன் மட்டுமே சொல்வார். இது சா.கந்தசாமியிடம் இருக்கும் அம்சம். பூமணி போன்றவர்களிடமும் உண்டு. ஆனால் சுவாரசியமான தகவல்கள் வழியாக அதை அவர்கள் ஈடுபட்டிவிடுவார்கள்.

வரண்டநடை என ஏன் சொல்கிறேன் என்றால் ஒன்று ஆர்வமூட்டக்கூடிய புதியசெய்திகள் இருக்கவேண்டும். நகைச்சுவை இருக்கலாம். அல்லது உணர்ச்சிகளாவது இருக்கலாம்.  அல்லது அழகுணர்ச்சியுடன் சொல்லப்பட்ட நெரேஷன் இருக்கலாம். வண்ணதாசனிடம் இருப்பது போல எதுவுமே  இல்லாமல் சும்மா சொல்லிக்கொண்டே போகிறார்கள். இந்த கதைகளில் இதுவரை விதிவிலக்காக இருப்பது சுசித்ராவின் கதை மட்டுமே.

கரு என்றவகையில் எனக்கு இந்தக்கதையே பிடித்திருந்தது. ஆனால் இன்னொருமுறை வாசிக்கமாட்டேன். அந்த அளவுக்கு டிரை. ஜீரோ நெரேஷன் என்ற பேரில் ஃபேஸ்புக்கில் எந்தக்கவனமும் இல்லாமல் போஸ்ட்கார்டு எழுதுவதுபோல எழுதுகிறார்கள். அப்படியே எல்லாரும் பழகிவிட்டார்கள் என நினைக்கிறேன்



செந்தில்குமார்

அன்புள்ள ஜெ,
வெளிநாடு வாழும் கணவனைப் பிரிந்து தேன்மொழி வாழும் சலிப்பான வாழ்க்கைக்கு ஒரு தொழில்நுட்ப தீர்வாக வருகிறது பூனை. தோழனாக, காதலனாக, கணவனாக என்று அடுத்தடுத்த படி நிலைகளுக்கு சென்றுகொண்டே இருக்கிறது பூனை.

பூனை அவளின் அனைத்து புற அக தேவைகளை பூர்த்திசெய்கிறது. ஆனால் தவிர்க்க முடியாத ஒரு சிக்கல் அதில் உள்ளது. அது ஒரு கற்பனை உலகு என்பதுதான். அதை உடைக்க முடியாமல் தன் நிகழ் உலகை உடைக்க தற்கொலை வரைச் செல்கிறாள்.



முக்கியமான முடிவுகளை எடுக்க தேன்மொழி பாம்பு ஆட்டத்தை பயன்படுத்துவது நல்ல சித்தரிப்பு. அது கதையை சிதறவிடமால் கருவை இன்னும் இறுக்கமாக முன்வைக்கிறது.

வாட்சப், வீடியோ கால் என மனிதர்களை இணைக்கமுயல்கிறது தொழில்நுட்ப வளர்ச்சி. ஆனால் மனிதன் இன்னமும் நிஜத்தில் அருகாமயைத் தேடும் உயிர்தான்.

ஒரு விஷயத்தை அழுத்தமாக முன்வைக்கும் கதை மேலெழுந்துவிடுகிறது. மனைவி, குழந்தையை சொந்த ஊரில் விட்டுவிட்டு பொருளைத் தேடி வெளிநாடு செல்லும் சமூக சிக்கலைச் பேசும் கதையாகிவிடுகிறது. பொருள் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் குடும்ப வாழ்வு தொலைந்து விடுகிறதே என்ற அச்சத்தை எழுப்புகிறது கதை.

பேசும்பூனை அருமையான கதை. சுனில் கிருஷ்ணனுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
ராஜா.



அன்புள்ள ஜெ,



பேசும்பூனை உங்களைப் பொறாமைப்பட வைக்கும் கதை, தமிழின் சிறந்த கதை என முன்னொட்டோடு பிரசுரமாகியது. இருந்தாலும் உங்கள் வாசகர்கள் அக்கதையை ஆங்காங்கே கிழித்து விட்டார்கள். அல்லது அப்படிச் சொன்னதனாலேயே கிழித்துவிட்டார்கள். அது குறுநாவல். அப்படி விரிவதற்குரிய கதைதான். ஆகவே கொஞ்சம் விரிவாக்கம் இருக்கிறது. அதேசமயம் முக்கியமான கதை என நினைக்கிறேன். என்ன இருந்தாலும் ultimate fall என்பது இலக்கியத்தில் ஒரு முக்கியமான கரு. அந்தவகையான கதை



ஜெகதீஷ்

Friday, January 19, 2018

புத்தக கண்காட்சி அனுபவங்கள் - 2018

இப்போது கிண்டில் வந்துவிட்டது, காமன்ஃபோல்க்ஸ், புதினம், nhm, மகிழ், டிஸ்கவரி என இணையம் வழியாக அவசியமான புத்தகங்களை தருவிக்கும் வசதியும் வந்துவிட்டது, இத்தனை தொலைவிலிருந்து புத்தக கண்காட்சிக்கு ஏன் செல்ல வேண்டும் எனும் கேள்வி எஞ்சி இருக்கிறது. காரைக்குடியில் வேறு வருடா வருடம் கண்காட்சி நிகழ்கிறது, நானே கூட இரண்டு வருடமாக ஒரு ஸ்டால் எடுத்து நடத்துகிறேன். (இந்த வருடம் வேண்டாம் என நினைத்திருந்தேன், ஆனால் பழக்க தோஷம் கை நடுங்கிவிட்டது. இந்த வருடமும் உண்டு) அப்படி   நடத்திய வகையில், அதன் முக்கியமான லாபம் என்பது எனக்கு தேவையான புத்தகங்களை எடுத்து வைத்து கொள்வது தான். இப்படி வெறித்தனமாக சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்களில் சரி பாதி வாசித்திருப்பேனா என தெரியவில்லை. கிண்டில் வந்ததில் இருந்து முக்கியமான ஆங்கில திருட்டு புத்தகங்களை தரவிறக்கி அதை தான் அதிகமும் வாசித்து கொண்டிருக்கிறேன். 

புத்தக கண்காட்சி ஒரு பண்பாட்டு நிகழ்வு, அறிவு விடாய் கொண்டவர்களும் கனவுலகை கட்டி எழுப்புபவர்களும் அதிகமும் சங்கமிக்கும் வெளி ஹாரி பாட்டர் வரிசையில் குவிடிச் உலக கோப்பைக்கு உலகெங்கும் உள்ள விசார்ட்கள் கூடுவது போன்றது. புத்தகங்களை வாங்குவதற்கு என்பதை காட்டிலும் அந்த பண்பாட்டு அனுபவத்தில் நாமும் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்பதே நோக்கம். 

எப்போது செல்வது என்பதில் பல குழப்பங்கள், கடைசியில் தத்கல்லில் புக் செய்து கொண்டு 18 ஆம் தேதி பல்லவனில் புறப்பட்டேன். தஸ்லிமா நஸ்ரினின் லஜ்ஜாவை கிண்டிலில் வாசித்து முடித்தேன். முனைவர் சரவணன் எழுதிய சங்கக் காலம் பற்றிய புத்தகத்தை வாசிக்க துவங்கினேன். பெரிய கண்ணாடி சாளரத்தில் தெரிந்த நிலவெளியை பார்த்து, கொஞ்சம் தூங்கி, கொஞ்சம் விழித்து என தாம்பரம் வந்து இறங்கினேன். அங்கு நண்பர் சிவமணியன் காத்திருந்தார். சிவமணியன் மதுரைக்காரர் சென்னையில் பணி, பள்ளிக்கரணையில் வீடு. அவருடைய மகன் ரிஷி சுதீர் பிறந்த அதே மகா சிவராத்திரியின் கடைசி சாமத்தில் பிறந்தவன். மார்ச், 8, 2016. சென்று கொஞ்ச நேரம் பேசிவிட்டு அங்கிருந்து அண்ணா நகர் சரவணபவனுக்கு கிளம்பினோம். கிளம்புவதற்கு முன் சிவமணியன் எனக்கு குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதிய தென்னிந்திய கோபுர கலை எனும் அற்புதமான நூலை பரிசளித்தார். 

அண்ணா நகரில் நண்பர் நம்பியுடன் மதிய உணவு உண்டோம். எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் நம்பிக்கு சொந்த தாய் மாமா. அவருடைய அக்கிரகாரத்தில் பெரியாருக்கு முன்னுரை எழுதியவர். நம்பி பதாகை மற்றும் சொல்வனத்தில் நெடுங்காலமாக எழுதி வருபவர். அபார வாசிப்புடையவர். அமெரிக்காவில் வசிக்கிறார். தற்போது விடுமுறைக்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார். இணைய வழி தொடர்பு உண்டே அன்றி நேரில் சந்தித்ததில்லை. பார்ப்பதற்கு வாரணம் ஆயிரம் படத்து தந்தை சூரியா மாறி இருப்பார் என பாஸ்கர் அடையாளம் சொல்லி அனுப்பினார். அப்படித்தான் இருந்தார். நம்பி அமெரிக்க, ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க இலக்கியவாதிகள், இலக்கிய நூல்கள் பற்றி அனேக குறிப்புகள் எழுதி இருக்கிறார். முக்கியமான மொழியாக்கங்களை தமிழில் இருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் செய்து வருகிறார். அவருடைய கட்டுரைகள் தொகுப்பாக வேண்டும். அவர் வழியே எனக்கு பல முக்கிய ஆங்கில எழுத்தாளர்கள் அறிமுகம் ஆனார்கள். சி. மணி மற்றும் ந. ஜெயபாஸ்கரன் ஆகிய இருவரையும் பற்றி பேசி கொண்டிருந்தார். அவரிடம் விடைபெற்று புத்தக கண்காட்சிக்கு மூன்றரை மணிக்கு நுழைந்தோம். சிவா தன் போக்கில் சில புத்தகங்களை வாங்க பிரிந்து சென்றார். 

நேராக யாவரும் அரங்கில் 176 ல் சென்றேன். ரமேஷ் ரக்ஷன் இருந்தார். கொஞ்சம் பேசிவிட்டு சுற்ற கிளம்பினேன். தமிழினி அண்ணாச்சி கொங்கு தேர் வாழ்க்கைக்காக சில கவிதை மேற்கோள்களை பத்து பக்கத்திற்கு அனுப்பி இருந்தார். அவை பற்றி எனது அபிப்பிராயத்தை கேட்டார். கவிதையில் இருந்து உருவப்பட்டது என்பதால், பல வரிகள் எனக்கு ஏன் கவிதையாகிறது என குழப்பமாக இருந்தது என்று சொன்னேன். கோகுல் பிரசாத்தும் இணைந்து கொண்டார். பிறகு க்ரியா சென்று அங்கு ந. முத்துசாமி சிறுகதைகள் மற்றும் நண்பர் ஆசை மொழியாக்கம் செய்த 'அமைதி என்பது நாமே' நூலும் வாங்கிக்கொண்டேன். இமயத்தின் நூல்களை வாங்க வேண்டும் என தோன்றியது. விலை காரணமாக தயங்கி, கடைசியில் திரும்ப வாங்கி கொள்ளலாம் என நகர்ந்தேன். விருட்சம் ஸ்டாலில் காசியபனின் அசடு நாற்பது ரூபாய்க்கு கிடைத்தது. முன்னமே சம்பத்தின் இரு தொகுதிகளை அங்கு வாங்கி இருக்கிறேன். 

அப்படியே சுற்றி வந்தேன். காலச்சுவடு அரங்கில் கண்ணன் அமர்ந்திருந்தார். நெடு நாளாக வாங்க எண்ணியிருந்த கசாக்கின் இதிகாசமும், திருடன் மணியம்பிள்ளையும் வாங்கினேன். கவனத்தை ஈர்த்த வேறு பல புத்தகங்களில் இருந்து ஆயாசத்துடன் மனதை திருப்பி கொண்டேன். சந்தியா நடராசன் அவர்களை சந்தித்து கொஞ்ச நேரம் பேசினேன். பாரதி ஆய்விற்கு காரைக்குடியில் சில உதவிகளை கோரி இருந்தார். நானும் மறந்துவிட்டேன். இயல்வாகை மற்றும் தும்பியின் ஸ்டால்கள் அழகாக இருந்தன. அழகேஸ்வரி மற்றும் அருண்குமாரை அங்கு முதன்முறையாக சந்தித்தேன். ஞானபானு பதிப்பகத்தில் ஞாநி ஒரு படமாக வருவோர் போவரை நோக்கிக் கொண்டிருந்தார். தேசாந்திரியில் எஸ்ராவை காண முடியவில்லை. மூத்த மகன் ஹரியை பார்த்து பேசிவிட்டு வந்தேன். கிழக்கில் ஹரனையும் பத்ரியையும் காண முடியவில்லை. காலம் செல்வம் சிறில் அலெக்சுடன் வந்திருந்தார், சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டேன். நீல  கண்ட பறவையை தேடி, சிற்பமும் தொன்மமும், வனவாசி நூல்களை வாங்கினேன். சா. கந்தசாமி சாகித்திய அகாடெமி அரங்கில் புத்தகங்களை தேடி கொண்டிருந்தார். 

ஒரு சுற்று முடிவதற்குள் களைப்பு அப்பிக்கொண்டது. யாவரும் அரங்கில் யமுனை செல்வன் மற்றும் மதியை சந்தித்தேன். நண்பர்கள் சவுந்தர், காளி, ஜாஜா, சிறில், ரவி, வள்ளியப்பன், ஓவியர் சண்முகவேல், நரேந்திர குமார் ஆகியோரை சந்தித்தேன். அரங்கில் உள்ள ஸ்டாலில் அத்தோ, மொமொஸ் எல்லாம் சாப்பிட்டு பார்த்தோம். லக்ஷ்மி சரவண குமார், விஜய் மகேந்திரன், அகர முதல்வன், கார்த்திக் புகழேந்தி, வாசு முருகவேள், சாம் நாதன், ஜீவ கரிகாலன், புதினம் கதிரேசன் மற்றும் கண்ணதாசனோடு பொதுவாக பேசி கொண்டிருந்தேன். லக்ஷ்மி தேவேந்திர பூபதியை அறிமுகம் செய்தான். அவரிடம் தொலை பேசியில் பேசி இருக்கிறேன். அப்போது தான் நேரில் சந்தித்தேன். ஜீவ கரிகாலனோடு வேறு சில திட்டங்கள் பற்றி பேசி கொண்டிருந்தேன். என்னை விட இரண்டு வயது மூத்தவர். பல கனவுகளையும் திட்டங்களையும் சுமந்து கொண்டிருக்கிறார். யாவரும் குறிபிடத்தக்க பதிப்பகமாக வளரும் என நம்புகிறேன். காந்தி - இன்றில் இருந்து தேர்ந்தெடுத்த கட்டுரைகளை கொண்டு வரலாம் என்ற யோசனை இறுதியானது. ஒன்பது மணிக்கு விசில் ஊதி துரத்தி விடும் வரை உள்ளே இருந்துவிட்டு கிளம்பினேன். கடுமையான முதுகு வலி, இப்போதும் விடவில்லை. உடல் சோர்வு. நினைத்த அளவுக்கு புத்தகங்களை வாங்க இயலவில்லை. காரைக்குடியில் பார்த்து கொள்ளலாம்.  பேருந்தை பிடித்து திருவண்ணாமலைக்கு சென்று சேர இரவு (அல்லது காலை) மூன்று மணியானது. மற்றுமொரு நிறைவான நாள்.