Friday, June 24, 2011

கடவுளுக்கு ஒரு விண்ணப்பம்


பலர் பல பெயரால் பணிபரம் பொருளே
உலகில் ஓர் அணுவும் உனையலாது அசையாது
என்னும் உரை நினைந்து உன்னை வேண்டுவல் இது
முன்னை நாள் இளமையும் முடிவிலா வாழ்வும்
உதவினை சிலர்க்கு என ஓதுவார் ஒரு கதை
இதமுற அவ்வரன் எனக்கு நீ உதவினும்
கொள்ளேன் தள்ளோணாச் சள்ளையே கொடுக்குமால்
செல்வமும் இன்பமும் செல் சினச் செருக்கும்
நல்கு என நயவேன் நன்மைதீர் வறுமையும்
பலப்பல இன்னலும் விலக்கு எனப் பணிகிலேன்
நன்றே வருகினும் தீதே விளைகினும்
ஒன்றே என மதித்து ஏற்கும் என் உள்ளம்
வேண்டிலேன் கீர்த்தி ஈண்டு அது நிகர்க்கும்
வறிய பேய்த் தேர் எனறிவேன் மற்று யான்
உன்னை இன்று இரப்பது என்ன வெனில் கேள்
என்னின் எளியவர்க்கு என்னால் இயன்றதை
மன்னும் என் அகஒளி காட்டும் வழியினில்
உன்னி யுழைக்க உகந்தருள் அதன் பொருட்டு
இந்த என் உடல் இருக்கு நாள் மட்டும்
நொந்து நோவாதருள் நோய் வருமாயினும்
மனமும் அறிவும் மயங்கி விடாது அருள்
தினமும் இதுவே செய்யும் அவா அருள்
உடல்வலியோயுமேல் மனோவலி நிலைபெராவிடில்
உடனே உயோர் ஒழிந்து உலக
நடனசாலையை நான் நழுவிட அருள்கவே
.
(தனி பாடல் திரட்டு - கடவுளிடம் விண்ணப்பம் -குருவென நான் கருதும் -டாக்டர் .மகாதேவன் எழுதிய திரிதோஷ மெய்ஞான தத்துவ விளக்கம் எனில் நூலிலிருந்து இங்கு பதிக்க பட்டுள்ளது )
முதல் வாசிப்பிலயே என்னை கரைய செய்த வரிகள் ,இறைவன் எனும் கட்டமைப்போ /சக்தியோ /உருவமோ /அருவமோ /பிரபஞ்ச நியதியோ -அது எதுவாக இருந்தாலும் மனமார ,உளமார என் உள்ளம் வேண்டுவது இதுவே .

Sunday, June 19, 2011

விஷ்ணுபுரம் வாசிப்பனுபவம் -1

மானுடன் ஞானத்தை நோக்கி பயணம் செய்யும் தருணம் எது ? மானுட வாழ்வின் பொருளென்ன ? பிறப்பதும் மரிப்பதும் ஏன் ? உறவுகளின் பொருளென்ன ? துக்கமும் சுகமும் ஏன் ? காலம் என்பது என்ன ?
புலன்களுக்கு புலப்படாத ஒரு மிக பெரிய பகடை ஆட்டத்தின் காய்களா? வீழ்வதும் ,பிழைத்து இருப்பதும் மட்டுமே சாத்தியமான கோடானகோடி உயிரின் அர்த்தமற்ற சாகரத்தின் ஒரு சிறு துளி மட்டும் தானோ ?
எதன் மீது நிற்கிறோமோ ,எதை சாஸ்வதம் என்கிறோமோ அவை எல்லாம் அடித்து நொறுக்கி விட்டால் ,பின்பு எதன் மீது நிற்பது ,எதை பற்றி கடப்பது ? அப்படி ஏதேனும் ஒன்றை பற்றி தான் ஆகவேண்டுமா ? அக இருட்டில் தொலைந்து விடுவோம் , மனிதன் தனியன் .அவனுக்கு ஆக பெரிய பயம் அவனது மனம் தான் ,ஆம் அதை அவன் நெருங்குவதில்லை ,பாவனைகளால் விளக்கி அதை தர்க்க சட்டகத்தில் அடைத்து சொற்களால் பூசி ஒரு மாய மாளிகையை எழுப்புகிறான் .மனதை சந்திக்கும் திராணி மனிதனுக்கு இருப்பதில்லை ,உண்மைக்காக தேடல்களும் ,விவாதங்களும் ,தரிசனங்களும் ,இலக்கியங்களும் ,காப்பியங்களும் ,காவியங்களும் இன்னும் அனைத்தும்- சொற்களின் பிரவாகங்கள் நிரப்பி தன்னை தானே நம்ப வைக்கும் முயற்சி தானோ ? வாழ்க்கைக்கு பொருள் இருக்கிறது என்று மீண்டும் மீண்டும் உரக்க சொல்வது தன் மனதை நம்ப வைக்கும் வெற்று உத்தியோ ?
மனிதனின் ஆக பெரிய சுமை ஞானம் தான் .ஆம் இந்த ஞானம் சுமை ,அதை உருவாக்க தர்க்கங்களை சுமக்க வேண்டும் ,தர்க்கங்களை உருவாக்கி நம் அகந்தைக்கு தீனி போட வேண்டும் .மனிதனுக்கு 'நான்' மட்டுமே உண்டு ,பிறது அனைத்தும் அவனை சார்ந்தது எனும் எண்ணம் .'நான்' மட்டுமே அவனது நிரந்தர முகம்,அவன் மட்டுமே அவனுக்கு மிக முக்கியமானவன் .பிறிது அனைத்தும் அவனது தேவைகள் மட்டும் தானோ ? எத்தனை பெரிய செருக்கு ? பிரபஞ்ச மகா இயக்கத்தின் ஒரு துளி ,ஒரு சிறிய அணு கொள்ளும் செருக்கு .அவனுக்கு சூரியனும் சந்திரனும் ,பிரபஞ்சமும் ,காலமும் அவனை சுற்றி மட்டுமே சுற்றுகிறது .அவனுக்கு அவனை தவிர வேறு யாரும் முக்கியம் இல்லை போலும் . மனிதன் பூரணத்தை நோக்கி ,முழுமையை நோக்கி ஓடுகிறான் ,அவன் தன்னளவில் முழுமையாக இல்லை என்று அவன் எண்ணுவதாலே ஓடுகிறான் .பூனையும் ,புலியும் எதை தேடியும் ஓடுவதில்லை ,இரையும்,துணையையும் தவிர ,அவைக்கு நோக்கங்களை பற்றி கவலை இல்லை .இம்மையின் துயரங்களை பற்றியும் மறுமையின் பயமோ அவைகளுக்கு இல்லை .
நாம் நம் இயல்பை தொலைத்து விட்டோம் ,வெறும் மிகைகளும் ,பாவனைகளும் நம்மை கட்டமைத்துவிட்டது .மிகைகளும் பாவனைகளும் நம்மை ஆட்கொண்டுவிட்டது ,நம்மை நாமாக இல்லாமல் ஆக்கி புதிய பிம்பங்களை உருவாக்கி சுற்றி எழுப்புகிறது .
வேண்டாம் எதையும் அறிந்துகொள்ள வேண்டாம் ,அறிதல் ஒளியல்ல ஒளி போல் ஒரு பாவனை.அறிதல் சுமை என்று அறிந்த பின்னும் ,மதுவின் போதை போல் நம்மை ஞானம் உள்ளிழுக்கிறது .ஆழம் ,இருட்டு ,பயம் என்று அறிந்த பின்னும் நம்மால் மீண்டு வர முடியவில்லை .ஆம் இது ஒரு போதை ,ஞான போதை ,இன்னும் இன்னும் என்று நம்மை இழுத்து செல்லும் போதை ,நம்மை தனியனாக்கி வெட்டவெளியில் கூரைகளும் ,தளங்களும் இல்லாது அந்தரத்தில் அந்தகாரத்தில் ஆழ்த்திவிடும் போதை .ஆம் நாம் ஒரு அடிமை ,இவை அனைத்தும் தெரிந்தும் இதிலிருந்து மீள வழி இல்லாது யுகங்களாக கேள்விகளோடு ஓடி களைக்கும் அடிமைகள்.
இதுவரையிலான மானுட அறிதல் தான் என்ன ? எதையும் அறிய முடியாது என்பதே ஆக சிறந்த அறிதல் .
இந்த வாழ்வு துக்கமா ? இல்லை மனிதனுக்கு மகிழ்ச்சியே இயல்பு ,உயிரின் துடிப்பு மகிழ்ச்சியே ,ஆனந்தமே சாஸ்வதம் .இதை தான் மனம் நம்பவேண்டும் என்கிறது ,ஆயினும் இது உண்மை இல்லை என்று மனதின் ஓரத்தில் ஒரு விஷ பாம்பு சீறுகிறது .மனிதன் விஷமா ? உயிர் விஷமா ? இல்லை என்னுள் சுகந்தம் இருக்கிறது ,பூக்கள் மலர்கிறது ,பட்சிகள் சிறகுகளை அழுத்தி எழும்புகிறது .எல்லையற்ற இருமை ,எங்கும் ,இது தான் வாழ்வா ? பிரபஞ்சத்தில் இருமையை கடந்த ஒருமையை நம் அனுபவத்தில் உணர முடியாதா ? அப்படி எதுவுமே இல்லையோ ? தீராத வினாக்கள் .
இல்லை இவை எவற்றிக்கும் நான் செவி சாயக்கபோவதில்லை,வினாக்களுக்கு விடை தேடினால் விடயுள் பல வினாக்கள் முளைக்கும்.ஆம் ஞானம் ஒரு மகிசாசுரன் ,அவன் எழும்போது அவனை வீழ்த்த நாம் உபயோகிக்கும் தர்க்கம் எனும் ஆயுதம் ,அவனை குத்தி செருகி சிதறடித்த பின்பு ,ஒவ்வொரு சிதறல்களும் ஒரு கேள்வியாக முளைக்கிறது ,இந்த பிரபஞ்சமே கேள்விகுறிகளின் காடோ ? நேற்றைய,இன்றைய ,நாளைய கேள்விகள் வளைந்து எழுந்து எங்கும் நிற்கின்றன .கனவு தான் ,வாழ்வே ஒரு பெரும் கனவோ ? யாருடைய கனவு ?யாருடைய கனவில் நான் வாழ்கிறேன் ? இதிலிருந்து என்றேனும் ஒரு நாள் ஒரு புன்முறுவலோடு விழித்து எழலாம் என்பது தான் நமது வாழ்வின் நம்பிக்கையோ ? விழிக்க வேண்டும் என்று நினைக்கும் தோறும் அதுவும் கனவின் ஆழத்தில் சென்று சேர்ந்து ,அதுவும் கனவின் ஒரு பகுதியாக மாறிவிடுகிறது ,விழிக்க வேண்டும் எனும் எண்ணம் கூட ஒரு கனவோ ? விழிப்பு தன்னிச்சயானதோ ? அதை எதுவும் நிகழ்த்த முடியாதோ ?

மரணம் என்றால் என்ன? தணியாத இந்த கேள்வி ,மானுடன் வாழ்வை தொடங்கியது முதல் அணையாது இருக்கிறது .மரணம் ,சதுரங்கம் விளையாடும் சிறு பிள்ளை போல் ,தனக்கு தோன்றிய நேரத்தில் விளையாட்டை குற்ற உணர்வின்றி குதூகலமாக கலைத்து விடும் .கட்டங்களில் சிக்கிய ராஜாக்களும் ,மந்திரிகளும் ,ராணிகளும் இதை உணர்வதில்லை .மரணத்தின் பின்பு என்ன ?

வேண்டாம் ,எனக்கு அந்த மிருக நயனியின் பச்சை நிற பார்வை .வாழ்ந்து சுவடற்று மறையும் தொள்ளாயிரம் பூச்சிகளை போல் ,தினம் தினம் மண்ணில் உதிர்ந்து தனது சுகந்தத்தை காற்றுக்கு தந்து மண்ணில் மட்கிபோகும் பல லட்சம் காட்டு பூக்களை போல் நானும் ஆகிவிட வேண்டும் .

Saturday, June 4, 2011

ஒளியிலே நனைவது

சில சம்பவங்கள் ஏன் நடக்கிறது என்பது நமக்கு புரிவதில்லை .சில சம்பவங்கள் நடக்க வேண்டும் என்று உளமார பிரார்த்தித்தும் பல நேரங்களில் நமக்கு அது நடக்கமால் நழுவி ஓடி விடும் .சில நேரங்களில் நாம் கனவு கண்ட அத்தனை மகத்தான தருணங்களும் ஒரு சேர அமைந்தால் நாம் எப்படி அதை தாங்கிகொள்வோம்?
மனிதர்களுக்கு துக்கத்தில் ஒரு ருசி இருப்பதை புரிந்து கொண்டுவிட்டனர் .மனித துக்கங்கள் பரவி வசீகரிப்பது போல் சந்தோஷம் பரவுவது இல்லை .அதனாலே மகத்தான ,மகிழ்ச்சியான தருணங்களில் நாம் வாயடைத்து நின்றுவிடுகிறோம் .
ஏப்ரல் மாத இறுதியில் தொடங்கி மே மாத முதல்வாரம் வரை எனக்கு அப்படி சில தருணங்கள் வாய்க்க பெற்றது .
கடந்த ஒரு வருடமாகவே ஜெயமோகன் மேல் ஒரு ஈர்ப்பு என்னை அறியாமல் எனக்குள் வளர்ந்து வந்துள்ளது .தொடர்ந்து இணையத்தில் அவருடைய கட்டுரைகள் ,கதைகள் அதன் பின்பு கடந்த இரண்டு புத்தக திருவிழாவிலும் அதிகம் வாங்கியது அவரது எழுத்துக்களே .ஆழ்ந்த இலக்கிய ஞானம் ஏதும் இல்லையென்றாலும் தொடர்ந்து ஒரு வசீகரம் எனக்கு ஜெயமோகனின் எழுத்துக்கள் பால் உள்ளது .இதற்கு தொடக்கமாக இன்றைய காந்தியை தான் சொல்ல வேண்டும் .இன்றைய காந்தி என்னுள் பெரும் தாக்கத்தையும் ,நான் நம்பிய பல விஷயங்களின் வேறு கோணத்தையும் எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியது .இணையத்தில் உள்ள அவரது கூகிள் குழுமத்தில் இணைந்தேன் .அவரை நேரில் சந்திக்கவேண்டும் எனும் அவா மனதை அழுத்தியது .
இதற்கும் ஒரு காரணம் உண்டு ,சென்றவருடம் ஈரோடு கதிர் அவர்கள் பதிவில் ஏழூர் அய்யாசாமி எனும் பெரியவரை பற்றி வாசித்தேன் .பத்தாயிரம் மரங்களை தனிமனிதனாக வளர்த்தெடுத்தார் .அவரது ஏழ்மையை கடந்து ,சமூகத்தை மேம்படுத்த அவர் வாழ்நாள் முழுவது செயாலாற்றினார் .அவரை சந்திக்கவேண்டும் எனும் ஆசை எனக்கு வந்தது .பின்பு இங்கு காரைக்குடியில் நாங்கள் நண்பர்களாக சேர்ந்து ஒரு பதினைந்து மரங்களை தெருக்களில் நட்டோம் .அதில் இரண்டு மட்டுமே பிழைத்து உள்ளது .அவரை சந்திக்க பல தடவை திட்டம் இட்டும் ஏதோ ஒரு தடை வந்தது .என் மனம் அந்த திட்டம் நிறைவேற தடையாக இருந்ததே நிஜம் ,ஏதேனும் ஒரு காரண கிளையை பற்றிக்கொண்டு அது தொங்கியது .பின்பு இந்த வருடம் ,சில மாதங்களுக்கு முன்பு அவர் மறைந்தார் எனும் செய்தி என்னை ஆழ்ந்த துயரத்தில் தள்ளியது .இனி யாரேனும் சந்திக்க எண்ணினால் அதற்கான முயற்சியை தள்ளி போடுவது முட்டாள் தனம் ,வாழ்க்கை மிகவும் சிறியது என்பதே நான் கற்ற பாடம் .
தொடர் கடித பரிமாற்றம் மூலம் மே ஒன்று -ஞாயிறு அன்று அவரை சந்திக்க அனுமதி கொடுத்தார் .ஆயினும் இறுதியில் அவர் அன்று சென்னை செல்வதாக முதல் நாள் சொல்லிவிட்டார் .மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்த சந்திப்பு நிகழவில்லை எனும் வருத்தம் இருந்தது .
சரி இந்த ஞாயிறு எனது 'சந்திக்க வேண்டிய நபர் ' லிஸ்டில் உள்ள இன்னொருவரை சந்திக்க முடியுமா என்று பார்த்தேன் .அவர் தமிழருவி மணியன் அய்யா .கடந்த சில ஆண்டுகளாகவே அவரை எனக்கு பிடித்தது ,அவரது நேர்மை பிடித்தது ,மேலும் மனதில் இருக்கும் காந்தி பிசாசு வேறு ஆட்டுவித்ததால் அவரை சந்திக்க சந்தர்பம் தேடி நின்றேன் .அவரை தொடர்புகொள்ள வழி ஏதும் கிடைக்கவில்லை .வலையில் அவரது முகவரியை தேடி பார்க்க முயன்று தோற்றேன் .விகடனுக்கு கேட்கலாம் என்று எண்ணினேன் .யதார்த்தமாக எங்கள் ஊர் கேபிள் சானலை நோட்டம் விட்டு கொண்டிருந்த பொழுது கீழே ஒரு விளம்பரம் ஓடியது .தமிழருவி மணியன் முப்பதாம் தேதி காரைக்குடி அருகே பலவான்குடி வருகிறார் என்று .நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை ,மீண்டும் எவளவோ முயன்றும் அந்த விளம்பரம் கண்ணில் படவில்லை .
பின்னர் அந்த கேபிள் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கேட்டறிந்தேன் .எல்லாம் நண்மைக்கே என்பது போல் உணர்ந்தேன் .
நானும் என் நண்பனும் பின்னர் மணியம்மாவும் எங்கள் ஊரிலிருந்து காரில் புறப்பட்டு பலவான்குடி சென்றோம் ,காரைக்குடிக்கு அருகே என்றாலும் ,இதற்கு முன் நான் அங்கு சென்றதில்லை ,வழி விசாரித்து செல்ல இரவு எட்டு ஆகிவிட்டது .கொஞ்சம் பதட்டம் ,கொஞ்சம் ஆர்வம் என்று அவர் பேசும் இடத்தை நோக்கி சென்றோம் .நல்லவேளையாக அப்பொழுது தான் தொடங்கினார் .இரவு ஒன்பதே கால் வரை அவரது பிரசங்கம் தொடர்ந்தது .
மிக தெளிவான ,அவசியாமான கருத்துக்களை கோர்வையாக எடுத்துரைத்தார் .காமராஜர் சரியாகவே அவருக்கு தமிழருவி என்று பட்டம் கொடுத்துள்ளார் .
விழா முடிந்தபின்னர் ,மேடையிலிருந்து இறங்கியவரை வழிமறித்து ,என்னை அறிமுகம் செய்து கொண்டு ,சுப்புவையும் மணியம்மாவையும் அறிமுகம் செய்து கொண்டு ,அவரிடம் ஒரு இரண்டு நிமிடம் பேசினேன் .காந்திய மக்கள் இயக்கம் தொடர்பாக ."காசு சம்பாதிக்கணும் ,பதவி வேணும் என்றால் இங்க வராதிங்க தம்பி ,நம்கிட்ட இருக்குறத கொடுக்க தயாரா இருக்கணும் ,களப்பணி செய்யணும் அப்டின வாங்க ,இதுக்கு சில படிவங்கள் விதிகள் எல்லாம் இருக்கு ,புதிய ஆட்சி வந்தவுடன் இதன் அடுத்தகட்டம் பற்றி பேசலாம் "-என்றார் மிகுந்த நம்பிக்கையுடன் .பின்பு அவரது செல் நம்பரை கொடுத்தார் வாங்கிகொண்டு விடைபெற்றோம் .மனம் நிறைவாக இருந்தது .ஒரு நல்ல மனிதரை ,நேர்மையான காந்தியரை ,நமது வாழ்க்கை தரத்தை ஒரு படியேனும் உயர்த்த முயலும் ஒரு நல்ல ஆத்மாவை சந்தித்த நிறைவு .
மீண்டும் மனம் ஒரு மாதிரி அரித்து கொண்டே இருந்தது ,ஞாயிறு தவிர வேறு நாட்கள் எனக்கு கிளினிக் உண்டு .மே முழுவதும் ஒவ்வொரு ஞாயிறும் ஏதேதோ வேலைகள் .ஜெயமோஹனை ஞாயிறு என்று இல்லாமல் வார நட்களிலேனும் சந்திக்க முடிவு செய்தேன் .

ஆயுர்வேதத்தை பொறுத்தவரையில் எனக்கு தேரிசனம்கோப் டாக்டர் .மகாதேவன் துரோணரை போல் .நான் ஒன்றும் ஏகலைவன் இல்லை ,ஆனாலும் அந்த இடத்திற்கு என்னை உயர்த்திக்கொள்ள முயல்பவன் .எனக்கு மிகவும் பிடித்த ஒரு ஆயுர்வேத அறிவுஜீவி .அத்தனை மகத்தான மருத்தவரை நான் சந்தித்ததே இல்லை .சென்னையில் பயின்று கொண்டிருந்த சமயங்களில் அவரது புத்தகங்களும் அவர் பேசிய சி டிகளும் தினம் தோறும் என் மூளையை ஆக்கிரமித்தது .அவரிடம் சீடனாக சென்று ஒரு ஆறுமாதமாவது பயில வேண்டும் என்பது எனது கனவு ,ஆயினும் எனது குடும்ப சூழல் அதற்கு என்னை அனுமதிக்கவில்லை .அவரிடம் பயின்ற மாணவர்கள் அவரை பற்றி சொல்லியது எனக்கு கொஞ்சம் பயமாக இருந்தது ,எனது சுயத்தை அடமானம் வைக்க வேண்டும் என்பது போல் இருந்ததால் நான் அவரிடமிருந்து சற்று தொலைவில் என்னை தள்ளி வைத்துக்கொண்டேன் .எல்லாம் இந்த பாழாய் போன ஈகோ !ஒரு மனிதனை அவனது விருப்பத்திளிருந்தும் ,ஞானத்திளிருந்தும் ,விடுதளையிளிருந்தும் எத்தனை தூரம் தள்ளி வைக்கிறது ?.இவர் எழுதிய சில புத்தகங்கள் எனக்கு தேவையாக இருந்தது .சென்னையில் அது கிடைக்கவில்லை .அவருடைய இடத்தில் மட்டுமே உள்ளதாக தகவல் வந்தது .தேரிசனம்கோப் அதுவும் நாகர்கோவிலில் பக்கமே இருப்பதாக சொன்னார்கள் .அவரையும் ஒரு மெயிலில் தொடர்புகொண்டேன் .அவருக்கு இருக்கும் வேலையில் திருப்பி தொடர்பு கொள்வார் எனும் நம்பிக்கை இன்றியே அதை செய்தேன் .மனதிற்கு சாக்கு வேண்டுமே ?எப்பொழுது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்று பதில் அனுப்பினார் .ஆச்சர்யமாக இருந்தது

சடாரென்று முடிவெடுத்தேன் -மே நான்காம் தேதி ,புதன் கிழமை வார நாள் என்றாலும் பரவா இல்லை அன்றே சந்திக்கவேண்டும் என்று முடிவெடுத்தேன் .செவ்வாய் இரவு கிளினிக் முடித்துவிட்டு .மதுரைக்கு புறப்பட்டேன் ,அங்கிருந்து எக்ஸ்பிரஸ் பேருந்து மூலம் நாகர்கோவில் .அதிகாலை நான்குமணிக்கு அங்கு பொய் சேர்ந்தேன் .இத்தனை சீக்கிரம் வருவேன் என்று எதிர் பார்க்கவில்லை .நமக்கு என்று ஒரு திசை உணர்வு உண்டு .அதை நம்பி அங்கு சுற்றி வந்து ஏதேனும் விடுதி தென்படுகிறதா என்று பார்க்கலாம் என்று பார்த்தேன் .சுற்றி சுற்றி அலைந்தேன் திசை உணர்வு பறந்து பொய் வியர்க்க விருவிருக்க தெருத்தெருவாக நடந்ததுதான் மிச்சம் .ஜெயன் கதையில் வரும் யட்சி ஏதேனும் பிடித்ததோ என்று பயம் வந்துவிட்டது .மணி ஐந்தாகியது .மீண்டும் வடசேரி பேருந்து நிலையத்துக்கே வந்தேன் .கோடைகால இரவுகளும்,காலைகளும் மிக அற்புதமாக இருக்கும் ,நல்ல காற்றோடு தெளிவான வானத்தொடும் இருக்கும் .
தேரிசனம்கோப் பேருந்து நின்றது ஏறி அமர்ந்துகொண்டு உறங்கிவிட்டேன் ,பின்னர் நடத்துனர் எழுப்பி டிக்கட் கேட்டார் .இடம் வந்தால் இறக்கிவிடுமாறு சொல்லிவிட்டு மீண்டும் உறக்கம் .காலை ஐந்தரைமனிக்கு இறக்கிவிட்டார் .அங்கேனும் தங்குவதற்கு ஏதும் வசதி இருக்கும் எனும் குருட்டு நம்பிக்கையில் அத்தனை சீக்கிரம் அங்கு வந்து இறங்கினேன் .அந்தகாரம் வரைந்த இருள் ஓவியம் .இருட்டுகளின் வெவ்வேறு நிழல்களை கண்டேன் .கருமையின் வெவ்வேறு அடர்த்திகள் சூழ்ந்து இருந்தன .முப்பக்கமும் சூழ்ந்த சிகரங்களின் கருமை ..இறங்கி ஆஸ்பத்திரி எங்குள்ளது என்று விசாரித்து சென்றேன் .உள்நோயாளிகள் வளாகத்தில் நடந்துகொண்டிருந்தனர் .கேட் வெளிப்புறம் நின்று பார்த்துகொண்டிருந்தேன் .யாரையும் எழுப்ப மனம்வரவில்லை .வாக்கிங் போய்கொண்டிருந்த ஒரு அம்மா -வாட்ச் மானை எழுப்பினார் .நான் இம்மாதிரி மகாதேவன் அவர்களை காண வந்துள்ளேன் நானும் ஒரு மருத்துவன் என்று சொன்னேன் .தங்க ஏதேனும் இடம் கிடைக்குமா என்று கேட்டேன் ,இங்கு விடுதி ஏதும் இல்லை என்றார் ,ஆஸ்பத்திரியில் வார்ட் ஏதும் காலியாக உள்ளதா என்று கேட்டேன் ,அதுவும் இல்லை என்றார் .அங்கு வாசலில் ,வேப்பெமரத்தடியில் ஒரு திண்ணை இருந்தது அதை பார்த்து இந்த இடம் கிடைக்குமா என்றேன் ,ஒரு மாதிரி சந்தேக கண்ணோடு உள்ளே விட்டார் .
திண்ணையில் பையை வைத்துவிட்டு கண்ணை அயர்ந்தேன் .இரவெல்லாம் இவர்களை சந்திக்க போகிறோம் எனும் உற்சகாமே எனது தூக்கத்தை களவாடியது .கொசுக்கள் என்னை என் தாய் போல் நேசிக்கிறது ,சுற்றி சுற்றி வந்து ராகம் பாடியது .கொஞ்சம் விடிந்தவுடன் அங்குள்ள குழாயில் பல் விளக்கி காலாற வெளியே நடந்தேன் .வயலும் மலையும் சூழ்ந்த அற்புத பிரதேசமது .
பசி என் கவனத்தை உடலின் இருப்பை நோக்கி திருப்பியது .பஸ்சில் இறங்கிய பிரதான சாலையில் ஒரு சாயா கடை,சிவன் பாடல்கள் சத்தமாக ஒளித்து கொண்டிருந்தது .அத்தனை காலை பொழுதில் நல்ல கூட்டம் பலர் அமர்ந்து ரசவடை சாப்பிட்டு கொண்டிருந்தனர் .எனக்கும் இரண்டு வடை இரண்டு ஆப்பம் கொண்டுவர சொன்னேன் .காலையில் புளித்த மாவால் செய்த ஆப்பத்தை உண்பது சரியா என்று யோசித்தேன்,பசி என்னை வென்றது .அந்த வடையும் ஆப்பமும் அத்தனை ருசி .ருசியை என் மூக்கு உணர முடிகிறது .இதை எழுதும் சமயம் கூட .
பின்னர் அங்கு டுட்டி டாக்டராக பணிபுரிபவரின் அறைக்குள் அனுமதிக்கப்பட்டேன் .அங்கு குளித்துவிட்டு .அந்த ஆஸ்பத்திரியை சுற்றி பார்த்தேன் ,மிகவும் நேர்த்தியாக அதிக காசு பிடுங்குதல் இல்லாத எளிய ஆஸ்பத்திரி .
அங்கு உள்ள ஒரு சிவன் கோவிலுக்கு சென்றேன் .கோவில் பழைய சோழர் ஆலயம் .நடமாட்டமே இல்லை .கீழிறங்கி பிரஹாரம் சுற்றி வந்தேன் .கோவில் அய்யரும் வாதியகாரரும் அமர்ந்திருந்தனர் .சற்று பேச்சு கொடுத்தேன் .இந்த இடத்தின் முழு பெயர் - திரு சரம் கோர்ப்பு -அது மருவி தேரிசனம்கொப் என்றாகிவிட்டது .ராமாயணம் பால காண்டத்தில் தாடகையை வதம் செய்ய ராமர் வில்லில் நாண் ஏற்றி அம்பை குறி பார்த்த தளம் என்று சொன்னார் .இங்குள்ள சிவனுக்கு ராகவேச்வரன் என்று பெயர் .
பின்னர் மகாதேவனை சந்திக்க திரும்பினேன் .அவர் புதன் மற்றும் வெள்ளி இருக்கமாட்டார் என்று சொன்னார்கள் .நல்லவேளை நான் சென்ற சமயம் அவர் இருந்தார் .உள்ளே அவரது நோயாளிகளை பார்க்கும் அறைக்கு சென்றேன் ,காலில் விழுந்தேன் .அமர சொன்னார் .என்ன விஷயம் என்று கேட்டார் .வாய் குழற உளறினேன் .அவரே ஒருவாறாக புரிந்துகொண்டார் .பையில்லிருந்து எங்கள் ஊரின் ஸ்பெஷல் ஐட்டங்களை எடுத்து வைத்தேன் ,நெய் வறுவல் சீவல் , மிச்சேர்,நன்னாரி சர்பத் .அவர் வெவ்வேறு கூட்டங்களில் சொன்ன கருத்துக்களை அவருக்கே திருப்பி சொன்னேன் .
அத்தனை பெரிய மருத்துவர் ,ஒரு நாளுக்கு நூறு புற நோயாளிகளை பார்க்கும் மருத்துவர் -அவர் என்னிடம் கேட்டார் -"என்பா நம்ம மருத்துவ முறையே ஒரு ஏமாற்று முறையோனு சில நேரங்களில் தோணுது ".நான் கலங்கிவிட்டேன் .
ஆம் சில சமயங்களில் எனக்கும் இம்மாரி தோன்றியது உண்டு .ஆனால் நமக்கு தான் அறிவு போதவில்லை என்று எண்ணி இருந்தேன் ."நமது மருத்துவம் மட்டும் இல்லை ,ஒரு கோணத்தில் பார்க்கையில் ஒட்டு மொத்த மருத்துவும் ஒரு ஏமாற்று வேலை என்று தோன்றுவதும் உண்டு " என்று சொன்னேன் .சிரித்தார் .அவருடைய புத்தகங்களை வாங்க வேண்டும் என்று கேட்டேன் .மற்றுமொரு மருத்துவரை அறிமுகம் செய்து எடுத்து கொடுக்க சொன்னார் .ஒரு புத்தகம் வாங்க வேண்டும் என்று எண்ணினேன் ,ஜெயமோகன் அவர்களுக்கு ஒரு புத்தகம் வாங்கி செல்லலாம் என்றும் எண்ணி இருந்தேன் .கையிருப்பு 1500 இருந்தது .1700 மதிப்புள்ள இரு புத்தகங்களை அவருடைய கையெழுத்தோடு மிக குறைந்த விலையில் (525) ரூபாய்க்கு ஆசீர்வதித்து கொடுத்தார் .பின்பு சாப்பிடாமல் செல்ல கூடாது என்று சொல்லி வீட்டிற்கு சென்று சாப்பிட சொன்னார் .ஏற்கனவே காலை ஆறு மணிக்கு தின்ற ஆப்பமும் வடையும் செரிமானமாகி அடுத்த உணவை ஆவலோடு வயிறு எதிர்பார்த்த தருணம் .அவியலும் ரசமும் ,கேரளா அரிசியும் சுட சுட அன்புடன் மகாதேவன் அவர்களின் தாயார் கையால் பரிமாறப்பட்டது .பெரும் நன்றி பெருக்கோடு அங்கிருந்து புறப்பட்டேன் .அவரிடம் நான் ஜெயமோஹனை பார்க்க போகிறேன் என்று சொன்னவுடன் அவருக்கு அது மிக பெரிய மகிழ்ச்சியை அளித்தது .அகம் மகிழ்ந்து இலக்கியம் பற்றி சற்று நேரம் பேசினார் .
அங்கிருந்து வடசெரிக்கு பஸ்சில் வந்து ,பின்பு அங்கிருந்து பார்வதிபுரம் பேருந்தில் ஏறினேன் .அங்கிருந்து சாரதாநகர் கண்டுபிடித்து ஐந்தாவது கிராஸ் கண்டுபிடித்தேன் .ஜெயன் அணைத்து லண்ட்மார்க்சையும் முன்பே சொல்லிருந்தபடியால் எளிதாக செல்ல முடிந்தது .
ஹரிதம் -இது அந்த விசாலமான மாடி வீட்டின் பெயர் .உள்ளே படபடுப்புடன் நுழைந்து பெல் அழுத்தினேன் .கதவை ஒரு பையன் திறந்தான் ,கண்டவுடன் அவன் ஜெயன் அவர்களின் மகன் அஜிதன் என்று கண்டுகொண்டேன் .அப்பா இருக்கிறாரா என்று கேட்டு உள்ளே நுழைந்தேன் .வாங்க ,வருவீங்கன்னு சொன்னாரு என்றான் .ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது .ஜெயமோகன் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு அஜிதன் பற்றிய ஒரு சித்திரம் இருக்கும் ,அவனை அங்கு சந்தித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது .புதியவர் எனும் கூச்சம் இல்லாமல் நீண்ட நேரம் அவனோடும் பேசினேன் .அப்பா ,அவர் வந்துட்டார் என்று மாடியில் இருக்கும் தந்தையுடன் இங்கிருந்தபடியே கூறினான் .சற்று நேரம் கழித்து ஜெயமோகன் வந்தார் -கிட்டத்தட்ட இரண்டு மணியில் அவருடன் தொடங்கிய பேச்சு ,நான் ஆறரை மணிக்கு கிளம்பும் வரை நீடித்தது .
நம் ஆதர்ச நபரை சந்திக்கும் முன்பு நமக்கு மனதில் ஒரு பிம்பம் இருக்கும் ,அவர் இப்படி பேசுவார் ,அப்படி பழகுவார் என்று ஏதேதோ எதிர்பார்ப்புகள் இருக்கும் .ஜெயமோகன் அவர்களை சந்திக்கும் முன் அவரை அணுகுவதற்கு கடினமான ஒரு அறிவுஜீவி என்றே மனதில் எண்ணி இருந்தேன் .ஆனால் நிஜத்தில் மிகவும் எளிமையான மனிதர் , பேசும் நபரின் தகுதியும் ,ஆர்வமும் தெரிந்துகொண்டு அதற்கேற்றமாதிரி புரியும்படியான வாதங்களை முன்வைத்தார் .காந்தியம் குறித்தும் அண்ணா ஹசாரே குறித்தும், ஆயுர்வேதம் குறித்தும் ,மருத்துவம் குறித்தும் ,நகைச்சுவை அனுபவங்கள் ,இலக்கியம் குறித்தும் என்று பல்வேறு தலைப்புகளை தொட்டு சென்ற உரையாடல் ,அதே சோபாவில் அமர்ந்து இருந்த இடத்திலிருந்து பெயராமல் ஐந்து மணிநேரம் நீடித்தது .அவர் போட்டு கொடுத்த துளசி டி ,பின்பு அருண்மொழி அக்கா கொடுத்த பட்டினம் பக்கோடா,தேநீர் என்று வயிறுக்கும் தலைக்கும் வஞ்சனை இல்லாத உணவு .

அஜிதன் ,அருண்மொழி அக்கா என்று வீட்டில் இருக்கும் அனைவரும் இயல்பாக அந்த விவாதத்தில் பங்கெடுத்தனர் .மனிதருக்கு பகலில் ஒரு குட்டி தூக்கம் போடும் பழக்கம் உண்டு,நான் பாட்டுக்கும் பேசிகொண்டே அதை கெடுத்துவிட்டேன் ,இன்னமும் பேசி இருப்பேன் ,கடைசியில் அவர் கண்களில் தெரிந்த அயர்ச்சி ,அவருக்கு ஒய்வு தேவை என்பதை எனக்கு புரிய வைத்தது .புறப்படும் நேரத்தில் அவருடன் ஒரு புகைப்படம் எடுத்து கொண்டு சென்றேன் .

ஆறரைக்கு அங்கிருந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு புறப்பட்டேன் .வடசேரி வந்து உணவரருந்தி பின்னர் மதுரைக்கு பேருந்து பிடித்து ,அங்கிருந்து காரைக்குடி வந்து சேர காலை நான்கு மணி ஆனது .நான் ஏதேதோ விஷயங்கள் பேசவேண்டும் என்று திட்டம் இட்டிருந்தேன் ,ஆனால் அங்கு பொய் ஏதோ விஷயங்களை மணிகணக்கில் பேசியாகிவிட்டது .அதை எண்ணி பார்க்கையில் மனம் சோர்வாக இருந்தது ,ஒரு நல்ல வாய்ப்பை முழுவதும் பயன்படுத்திக்கொள்ள முடியாமல் போனதான ஒரு உணர்வு .ஒரு பெரிய எழுத்தாளுமையின் நேரத்தை விழுங்கி விட்டேனோ எனும் குற்றஉணர்வு ,சுய பரிதாபம் சுழலில் சிக்கியது மனம் .
மறுநாள் காலை நல்ல படியாக வந்து சேர்ந்தேன் என்று அவருக்கு தகவல் அனுப்பினேன் ,எனது பிரச்சனையை அவர் சரியாகவே கண்டுகொண்டிருக்கிறார் "இந்த சந்திப்பு உங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது என்று எண்ணுகிறேன் ,முதல் சந்திப்பில் எப்பவுமே அப்படி தான் " என்றார் .ஆம் இனி அவரிடம் பேசும் பொழுது ஒரு புதியவரிடம் பேசும் தயக்கம் இருக்காது ,நல்ல நட்பும் இனிய சூழலும் இருக்கும் .எல்லாம் நன்மைக்கே என்று தோன்றியது .

அந்த வாரம் ,என் வாழ்வில் மிக முக்கியமான வாரம் ,என்னை ஆழமாக பாதித்த ஆளுமைகளை ஒரு சேர சந்தித்தேன் ,தேடல் இருப்பவனுக்கு பாதைகள் பிறக்கும் .அகந்தையை புறம் தள்ள முயல்வது என்பது நமக்குள்ளே நடக்கும் போராட்டம் ,இருமையின் இருட்டு பக்கங்களில் தொடர்ந்து வரும் போர் ,அகந்தையை கசட்டி வைக்க முடியாமலே நான் மதிப்பு கொண்டிருந்த இந்த மனிதர்களை சந்திக்காமல் காலம் தாழ்த்தி வந்தேன் ,ஒரு வகையில் இது என் உடல் மற்றும் மனம் மீது நான் முழு ஆளுகை செலுத்தியதில் எனக்கு கிடைத்த பகுதி வெற்றி என்றே எண்ணுகிறேன் .என் அகந்தையை என் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டேன் என்று நம்புகிறேன் ,நான் எனது முதல் அடியை சரியான திசையில் வைத்துள்ளதாகவே எண்ணுகிறேன் .இனி இங்கிருந்து பிரபஞ்சமும் அதன் நியதிகளும் என்னை என் இலக்கை நோக்கி அழைத்து செல்லட்டும்

Monday, April 18, 2011

உதிரி பட்டாசுகள்

இந்த பகுதியில் பொதுவாக தோன்றும் எண்ணங்களையும் ,அனுபவங்களயும் பார்வைகளயும் பதிவு செய்கிறேன் .எந்த கோர்வையும் இல்லாத ,எந்த வரையரையும் இல்லாத கோர்ப்பு .

1.பன்றிகளையும் பாம்புகளையும் பறவைகளையும் அணில்களையும் ஆடுகளையும் உற்று அவதநித்துகொண்டே இருக்கிறேன் .அனேக மிருகங்கள் ஒரே மாதிரி இருப்பதாகவே பார்வைக்கு புலபடுகின்றன ,ஆகினும் ஏதோ ஒரு நுட்பமான வித்யாசம் இருக்கிறது நெஜம்.பலநூறு அல்சேஷன் நாய்களில் நமது நாயை கண்டுகொள்ள முடியுமா என்று எனக்கு தெரியவில்லை .பூச்சிகளும் ,பாம்புகளும்,பறவைகளும் நம் கண்களுக்கு தனித்தனியாக அடையாளம் கண்டு பிடிக்கும் திறனில்லை .நம் புலன்களில் நமக்கு கண்கள் மட்டுமே பிரதானம் என்று தோன்றுகிறது .என் சந்தேகம் என்னவென்றால் மிருகங்களின் பார்வையில் நாம் எப்படி தெரிவோம் ? எல்லாரும் வெறும் மனிதர்களாகவா ? நாய்களுக்கு அந்த நுட்பம் உண்டு என்று நிச்சயம் தெரிகிறது .மற்ற உயிர்வாழிகள் கண்களை மட்டும் நம்பி காலம்தள்ளுவது இல்லை.வளர்ப்பு பிராணிகள் தத்தமது எஜமானரை கண்டுகொண்டுவிடும் .மற்ற மனிதர்களை எவ்வாறு அது உள்வாங்கும் ? அடையாளங்கள் சுமப்பது மனிதனுக்கு மட்டுமே உரித்தான ஒன்றா ?
2.ஒரு நாள் காலை கிளினிக் செல்லும் சமயம் சாலையோரத்தில் நடந்து செல்லும் ஒரு மனிதரை கண்டேன் .அந்த காட்சி இன்னும் என் அகக்கண்ணில் அகலாது ஆழத்தில் அமிழ்ந்து இருக்கிறது .கந்தல் துணி உடுத்திய கரிய நிறமுடைய ,நெடிய மனிதன் அந்த குருவிகூட்டு மண்டையுடன் சென்ற மனம் பிறழ்ந்த மனிதரை நான் சந்தித்தேன் .தலையில் ஒரு பெரும் சாக்கு மூட்டை .தோளிலே ஒரு அழுக்கு பை ,இரு கரங்களிலும் பெரும் சாக்கு பைகள் .அத்தனை பாரத்தையும் சுமந்து கொண்டு நடந்து வந்தார் .பைகள் நெறைய கந்தல் துணிகளும் பிளாஸ்டிக் குப்பைகளும் நிரம்பி வழிந்தன . அந்த நொடி ,அது ஒரு தரிசனம் ,பிரபஞ்ச தரிசனம் ! ஆம் நாம் அனைவரும் இப்படி நமது கடந்தகால அக கழிவுகளை சுமந்து கொண்டு திரிகிறோம் .அது கழிவுகள் என்று தெரிந்தும் நாம் அதை இறக்கி வைத்து தூர எரிய மனமில்லாது ,அதை நம் அகந்தையோடு தொடர்பு படுத்தி ,அதை நமது உடைமையாக எண்ணி சுமந்து கொண்டிருக்கிறோம் .அக கழிவுகள் சுமக்கும் நாம் சற்று தெளிவானா பைத்தியமோ ?
3.வாசித்துகொண்டே இருக்கிறேன் சலிப்பு தட்டும் வரை வாசிப்பேன் .இது ஒரு பருவகாலம் ,என் மனம் எழுதுவதை காட்டிலும் வாசிப்பதில் அதிக நாட்டம் கொண்டு இழுத்து செல்கிறது .இப்பொழுது மனம் முழுவதும் ஜெயமோகன் தான் உக்காந்து பாடாய்படுத்துகிறார் .அன்றாடம் புதிய புதிய வாசல்களை திறந்துகொண்டே இருக்கிறார் .இப்பொழுது வாசித்து கொண்டிருக்கும் நாவல் அவருடைய காடு .காடு ,நம் மனதில் இருக்கிறது .காடும் நகரமும் பெரும் குறியீடுகள் .குட்டப்பனும் ,ரெசாலமும் நீலியும் பாத்திரங்களாக விரிந்து செல்கின்றனர் .காடும் காடு சார்ந்த ஒலிகளும் ஒளிகளும் வாசிக்க வாசிக்க நம்மை அங்கு கொண்டு சேர்கிறது .இது ஒரு அபாரமான வாசிப்பனுபவம் .கொஞ்சம் விரிவாக முழுவதும் வாசித்துவிட்டு பகிர்கிறேன் .
4.கிளினிக் வரும் கிராமப்புற நோயாளிகளுடன் தேர்தல் குறித்து பொதுவாக பேச்சு கொடுத்து பார்த்தேன் .தேர்தல் கமிசன் கண்களில் இறுதி கட்டத்தில் நன்றாக மன்னை தூவி இருக்கீறார்கள் .11 ஆம் தேதி முதல் பண பட்டுவாடா கனஜோராக நிகழ்ந்து உள்ளது .இதில் ஆளும் கட்சி எதிர் கட்சி என்று பெரிய வித்யாசம் ஏதும் இல்லை .ஆளும் கட்சி -இந்த முறை ஆட்சியிலிருந்து தங்களது பைகளை ரொப்பியதால் ஐநூறு கொடுத்து இருக்கீறார்கள் .எதிர் கட்சி இருநூறு கொடுத்து இருக்கீறார்கள் .கிராமபுரங்களில் இந்த முறை ஆளும் கட்சி அதிக வாக்குகளை வாங்கும் என்பதே என் கணிப்பு .பெரும் திரளான மக்களின் பங்கெடுப்பு என்னவென்று யாருக்கும் புரியவில்லை .எதிர் ஓட்டுகளா ? இல்லை காசினால் கிட்டிய ஓட்டுகளா என்பது விரைவில் தெரியும் .அரசியல்வாதிகளும் ,அதிகாரிகளும் ஊழல்வாதிகளாக இருந்தது போய் அதன் உச்சகட்டமாக ஒரு சமூகத்தையே ,ஒரு தேசத்தையே -அதன் ஒட்டுமொத்த மக்களையும் ஊழல்வாதிகளாக மாற்றி சாதிதுள்ளனர் நம் தலைவர்கள் .உண்மையில் மனம் வெதும்பியது .ஜனநாயகம் இப்படி நகைபுக்குள்ளாக்கபட்டுளது.நம் மக்களின் இந்த பலகீனத்தை அரசியல்வாதிகள் கடந்த இரண்டு தேர்தல்களில் நன்கு உணர்ந்துவிட்டனர் .இனி இந்த மாதிரி அணுகுமுறையே தொடருமோ எனும் பயம் நெஞ்சை வாட்டுகிறது .பாப்போம் .

Saturday, February 26, 2011

மாற்று அரசியல் -சில புரிதல்கள்

மாற்று அரசியல் -லட்சியவாதம் என்று அவ்வபொழுது எங்கேனும் சில குரல்கள் ஒலிக்கும் அதை கேட்கும் பொழுதெல்லாம் மனதில் ஒருவித மென்னகை படர்கிறது .எந்த கட்சியையும் சாராத மனசாட்சியுள்ள மனிதர்கள் இன்னும் ஆங்காங்கு வாழ்கிறார்கள் .இனி இந்தியாவில் ஒரு மகாத்மா வந்து நம்மை கைதூக்குவார் எனும் நம்பிக்கை மெல்ல மெல்ல மூச்சைடத்து மூர்ச்சையாகிறது ,ஆகினும் நம்பிக்கைதானே வாழ்க்கை எங்கோ ஒரு மூலையில் மானுடம் இன்னும் புலன்களுக்கு சிக்காமல் வாழ்கிறது எனும் நம்பிக்கையில் இந்த பதிவு .

பலநேரங்களில் நம்மை ஏன் மற்றொருவர் ஆள வேண்டும் எனும் வினா மனதில் கடும் அமளியை ஏற்படுத்துவதுண்டு ,ஒரு தேசம் என்பது சமூகங்களின் தொகுப்பு ,சமூகங்களோ குடும்பங்களின் தொகுப்பு ,குடும்பங்கள் தனிமனிதர்களின் தொகுப்பு .இந்த புரிதலில் அமிழ்ந்தோம் எனில் நமக்கு புரிவது தேசம் என்பது பல சமூகங்கள் ,குடும்பங்கள் ,தனிமனிதர்களின் கூட்டு சாத்தியம் .அதே போல் ஒவ்வொரு தனிமனிதனும்,சமூகமும்,குடும்பமும் சிறு சிறு தேசங்களே .தேசத்தை நிர்வகித்தல் என்பது இவை அனைத்தையும் நிர்வகித்தல் ,ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை நிர்வகித்தால் தேசமே நிர்வகிக்கப்படும் ,இது ஏற்கனவே உள்ள கோட்பாடுகள் தான்

சுதந்திரம் என்பது என்ன ? பல சமயங்களில் மூளை முறுக்கி சிந்தித்ததுண்டு .நாம் முற்றிலும் சுதந்திரமாக இயங்க முடியுமா ? உயிர்கள் ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்பவை ,சுதந்திரம் என்பது ஒரு வித மாயை ,வண்டலூர் மிருககாட்சி சாலையினுள் சுத்தி திரியும் புலியை போல் நாம் ,நமது உலகம் வண்டலூர் மட்டும் என்று எண்ணுவதால் வரும் குழப்பம் ,independence அல்ல interdependence என்பதே பிரபஞ்ச நியதி .

தன்னை தானே நிர்வகிக்கும் தனிமனிதர்கள் கொண்ட சமூகம் பிறக்கும் பொழுது அரசின் தேவை நமக்கு இல்லை ,இதையே அரசின்மை வாதம் முன்வைக்கிறது ,அத்தகைய நிலையை நாம் எட்டும் வரை அதிகாரமும் அராசங்கமும் மந்தையை கவனித்து ஆக வேண்டும்

சரி இதெல்லாம் இருக்கட்டும் ,இனி தமிழகத்தில் தேர்தல் திருவிழா .தேர்தல் எனும் ஒரு நாள் கூத்திற்கு செலவழிக்க படும் தொகை எவளவு தெரியுமா ? ஒரு தொகுதிக்கு ஆளும் கட்சி .எதிர் கட்சி ,உதிரி கட்சி ,அரசு எல்லாரும் செலவழிப்பது தொரயாமாக குறைந்தபட்சம் பத்து கோடிகள் அல்லது அதற்கு மேல் செலவு ஆகலாம் .அப்படியானால் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்காக 2340 கோடிகள் ஒரே நாளில் விரயமாகப்போகிறது ,இறுதியில் யார் அதிகம் செலவு செய்தார்களோ அவர்களை மக்கள் வெற்றி பெற செய்கின்றனர் .மாதம் முப்பதாயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியன் ,அல்லது ஆசிரியர்,மென்பொருள் நிறுவனத்தார் இவர்கள் யாரும் செலவு செய்ய துணியாத ஒரு தொகையை அதே முப்பதாயிரம் சம்பளமாக பெரும் ஒரு மக்கள் பிரதிநிதி அந்த பதிவிக்காக தன சம்பாத்தியத்தை விட மூவாயிரம் மடங்கு செலவழிக்க தயாராக இருக்கிறார் எனில் அவர்களுடைய நோக்கம் எத்தகையது என்பதை நாம் அறிய வேண்டும் .

இதிலே மக்கள் சேவை எங்கிருந்து வரும் ?மக்களை கவனிப்பாரா அல்லது போட்ட காசை திருப்பி மீண்டும் அடுத்த தேர்தலுக்கு காசை பிரட்ட முயல்வாரா ?
மக்கள் சேவை எனும் முகமூடி அணிந்து நம் முன் கட்சி கொடிகளை ஏந்தி வரும் இவர்களுக்கு நாமும் வேறு வழி இல்லாமல் ஒட்டு போடுகிறோம் ,இவருக்கு அவர் மேல் அவருக்கு இவர் மேல் இதுவே நம் ஓட்டை நிர்ணயிக்கும் சக்தி !

யார் ஒருவர் தன சக்திக்கு மீறி காசை இறைக்கிராரோ அவருக்கு வேறு நோக்கம் உள்ளது என்பதை அறிந்து ,இத்தகைய வேட்ப்பாளர்களை கட்சி ,ஜாதி சார்பின்றி புறக்கணிக்க வேண்டும் .யார் மிக குறைவாக செலவழித்து அதே சமயம் நிறைவாக நமக்காக குரல் கொடுப்பார் என்று தோன்றுகிறதோ அவர் சுயேட்சையாக இருந்தாலும் சரி அவர் வெல்ல மாட்டார் என்றாலும் சரி -அவருக்கு தான் நமது ஒட்டு போய் சேர வேண்டும் .
இதுவே மெய்யான ஜனநாயகத்தின் செயல்பாடு .நாம் ஒட்டு போட்டவர் வெல்வதும் தோற்பதும் அல்ல ,நாம் சரியான மனிதருக்கு வாக்களித்தோம் எனும் மன நிறைவே இங்கு முக்கியம் .இது ஒரு இயக்கமாக நம் மக்கள் முன் மலர வேண்டும் .அப்படி மலர்ந்தால் ஒழிய தேர்தல் நேர அதீத காசு மழை நிற்காது .ஒட்டு மொத்தமாக மக்கள் இவர்களை புறக்கணிக்க தொடங்கினால் ஒழிய இது சாத்தியம் இல்லை .
ஒரு அரசியல் இயக்கம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு இருக்கும் ,எனக்கும் உண்டு .
ஒரு அரசியல் தலைவனின் பார்வையில் முதல் முக்கியத்துவம் தேசத்துக்கு ,மக்களுக்கு அதன் பின்பு கட்சிக்கும் கொள்கைக்கும் அதன் பின்பே தனக்கும் தனது குடும்பத்துக்கும் என்பதை உறுதியாக கடைபிடிக்க வேண்டும்

கவர்ச்சி திட்டங்கள், இலவசங்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டு .மக்களின் வாழ்க்கை தரம் உயரும் வண்ணம் அவர்களின் சுயமரியாதை பங்கம் விளைவிக்காமல் நல்ல தனி மனிதர்களை உருவாக்க முனைய வேண்டும் .

தங்களது கொள்கைகள்,நம்பிக்கைகள் மேல் பற்று இருக்கலாம் -ஆனால் அது வெறியாகி அதை நிறுவ முயன்று வெறுப்பை விதைக்க கூடாது . அவரவர் கொள்கைகளில் உறுதியாக இருந்தாலும் மாற்று கொள்கைகளை ,நம்பிக்கைகளை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்

வீண் ஆடம்பரங்கள் கூடாது ,நெடுஞ்சாலையை நோண்டி வளைவுகள் வைத்தல் ,ரோட்டை மறித்து மேடை போடுதல் ,பெரும் கூட்டத்தை கடற்கரையில் கூட்டி கடற்பரப்பு எங்கும் கண்ணாடி பீர் குப்பிகளும் ,பாதி குதறிய பிரியாணி பொட்டலங்களும் நிறைந்து கிடக்கும் அவலம் இனி கூடாது .

தனி மனித தாக்குதல்களில் ஈடுபடாத அமைப்பு வேண்டும்.மக்கள் நலன் முன்னிலை வகித்தால் போதும் .நீ டாஸ்மாக்ல உருண்டது தெரியாதா ,நீ திருட்டு ரயில் ஏறியது தெரியாதா ,உனது நடத்தை பற்றி தெரியாதா எனும் சவடால்களும் ,அறைக்கூவல்களும் முதலில் நிற்க வேண்டும் .எதிர் கட்சி நம் எதிரி கட்சி அல்ல ,கருத்துக்களின் ஊடே மோதல்கள் நிலவலாம்,சமரசங்கள் இன்றி பயணிக்கலாம் ஆனால் அடிப்படை மனித உணர்வுகளை பாதிக்காது அவை நிகழ வேண்டும் .அவரும் மக்கள் மீது உள்ள அக்கறையில தான் சொல்லுறாரு என்று உணர வேண்டும் .

Tuesday, February 22, 2011

எனது வலையுலகம் -பதிவுகள் 50-கற்றதும் பெற்றதும்

எதையாவது தமிழில் உருப்படியாக எழுத வேண்டும் என்று எண்ணி நானும் கடந்த ஆண்டு வலைப்பூ தொடங்கி கிறுக்கி வருகிறேன் ,அப்படி இப்படி என்று பார்த்தால் இதோ ஐம்பதை தொட்டுவிட்டேன் ! அம்மா என்னை விமர்சிக்கும் பொழுதெல்லாம் இதை தான் சொல்லுவாள் -உனக்கு ஆரம்ப சூரத்தனம் ஜாஸ்தி ,எதையுமே முழுசா ஒழுங்கா செஞ்சது இல்லை .அவள் கூறுவது ஓரளவு சரியே .நான் தமிழில் எழுத போகிறேன் என்று அவளிடம் கூறிய பொழுது சிரித்தால் .இது எத்தன நாளைக்குன்னு பாப்போம் என்பது போல் இருந்தது .பத்து பதிவுகள் தாண்ட மாட்டேன் என்பதே அவள் கணிப்பு .உண்மையில் யாரும் பின்னூட்டம் இடவில்லை என்றால் அது தான் நடந்திருக்கும் ,நமக்கு கிடைக்குற ரெண்டு மணி நேரத்துல இதுக்கு முன்னாடி உக்காந்து தப்பும் தவறுமா எதையாவது டைப் பண்ணி என்ன பிரயோஜனம் என்று யோசித்து இருப்பேன் .ஆங்கிலத்தில் எழுத ஆரம்பித்த வலைப்பூ இப்படி தான் அந்தரத்தில் நின்றது .அட யாருமே இல்லாத கடைக்கு யாருக்குப்பா டீ ஆத்துற என்று என் மனம் என்னிடம் கேட்டுவிடும்.
திரட்டி என்று ஒன்று இருப்பதே எனக்கு தெரியாது ,யதார்த்தமாக தமிழ்வெளி எனும் திரட்டியை காண நேர்ந்தது ,பின்பு தமிழ் மனம் ,அப்புறம் இன்ட்லி .நான் எனது வலைப்பூவை இணைத்த திரட்டிகள் இவை மட்டுமே .இதற்க்கு மேல் செய்ய சோம்பல் .இதுவே போதுமானதாகவும் பட்டது .
வலைப்பூவை தங்களது நேரத்தை செலவிட்டு வாசித்து செல்லும் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒன்றை இங்கிருந்து கற்றுக்கொண்டு அல்லது பெற்றுக்கொண்டு செல்லவேண்டும்,நானே எனது பதிவுகளை ஏதாவதொரு காலத்தில் வாசிக்க நேரும் பொழுது ஏதும் சமரசங்கள் செய்துகொள்ளாத நேர்மையான எழுத்துக்களாக இருக்க வேண்டும் .இந்த இரு கோட்பாடுகளை மனதில் கொண்டு எழுதிவருகிறேன் ,ஓரளவுக்கு இதை மீறவும் இல்லை என்றே படுகிறது .(நீங்க தான் சொல்லணும் ).முடிந்தவரை வலையுலக அரசியல் (?) மற்றும் குழுமங்களில் (நம்மள யாரும் கூப்டா தானே !!)இணையாமல் ஆறேழு மாதங்கள் ஒட்டிவிட்டேன் .இப்படியே கடந்துவிட வேண்டும் என்பது என் எண்ணம் .

இந்த வலைப்பூவை பின்தொடரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ,குறிப்பாக பின்னூட்டங்கள் மூலம் தங்களது கருத்துகளை தெரிவிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் கோடான கோடி நன்றி .வலையுலகத்தில் கால பதித்த காலங்களில் அனேக பதிவுகளை படித்து பின்னூட்டம் இட்டு கொண்டிருந்தேன் ,இப்பொழுதெல்லாம் அதற்கு நேரம் கிடைப்பதில்லை .(நான் வளர்கிறேன் மம்மி !!) இனி கொஞ்சம் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் வாசித்து பின்னூட்டம் இட யத்தனித்து உள்ளேன்

இதை தவிர ,எனது எல்லா பதிவுகளையும் படித்து அதற்கு கருத்துக்களை என்னிடம் தொலைபேசியில் சொல்லும் என் நண்பர்களுக்கு ,பதிவுகளை எப்பயாவது எட்டி பார்க்கும் முகநூல் நண்பர்களுக்கும் நன்றி .
வலையுலகத்தில் பெரிதாக நண்பர்கள் என்று யாரையும் கண்டடையவில்லை -எனினும் ஒத்த மனமுடைய சிலரை கண்டுகொண்டது மகிழ்ச்சி .

மனதிற்கு திருப்தி அளிக்காத பதிவுகள் இதில் சில இருக்கிறது ,தமிழ் மன பரிந்துரை எனும் பதிவு- இதை எழுதி இருக்க கூடாது என்று இப்பொழுது மனம் சொல்லுகிறது .இலங்கை ராணுவம்- இந்திய மீனவர்கள் பிரச்சனையில் எழுதிய ஒரு பதிவு -கவிதை மாதிரி முயன்று மிகவும் மொக்கையாக முடிந்தது ,இன்னும் அழுத்தமாக சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது .அதே போல் ஆரம்பத்தில் எழுதிய முதல் மூன்று இடுகைகள் -வணக்கம் ,சிவன் ,தலைவன் இதெல்லாம் ஒரே இடுகையில் முடித்து இருக்கலாம் தேவை இல்லாமல் மூன்று இடுகைகளை ஆர்வகோளாரில் வீணடித்து தொலைந்தேன் .இந்த பதிவும் கூட தேவையா என்று யோசித்தேன் ,ஆனால் நான் நன்றி சொல்ல எனக்கு காரணம் இருப்பதால் இதை பதிகிறேன்


சிறுகதை முயற்சிகள் -ஐந்து கதை முயன்றுள்ளேன் ,இனியும் அந்த தொல்லை தொடரும் :) ஆயுர்வேதம் பற்றிய தொடர் அதுவும் தொடர்ந்து வரும் .இதை தவிர சில பதிவுகள் பாதியோடு நிற்கின்றன -பிள்ளை வளர்ப்பு தொடர்பாக மூன்று தொகுதிகள் வரை எழுதி உள்ள பெற்றால் மட்டும் போதுமா ,கடவுளும் மனிதனும் ,எனக்கு தெரிந்த கடவுள்கள் போன்றவை .இதை எல்லாம் எப்பொழுது முடிப்பேன் என்று எனக்கே தெரியவில்லை .புத்தக அறிமுகங்கள் இனியும் தொடரும் .வேறு சில முக்கியமான பதிவுகள் எழுதும் எண்ணம் உண்டு .சரக்கு தீரும் பிரச்சனை இப்போதைக்கு இல்லை .எழுத வேண்டும் எனும் எண்ணம் என்னை உந்தி தள்ளினால் ஒழிய எழுதுவது இல்லை என்றும் முடிவு செய்து இருந்தேன் .
வாசித்து வரும் நண்பர்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும் -என்னென்ன குறைகள் இருக்கிறது என்று ,முடிந்த வரை திருத்திக்கொள்ள முயல்கிறேன் .

தமிழ் வலையுலகம் எனக்கு கொடுத்தது எக்கச்சக்கம் .அன்றாடம் ஏதோ ஒன்றை நான் கற்றுக்கொள்கிறேன் .மாற்றுதரப்புகள், பின்னூட்டங்கள், பார்வைகள், எண்ணங்கள் ,படைப்பூக்கம் நிறைந்த படைப்புகள் இவை எல்லாம் அன்றாடம் என்னை புதிதாக சிந்திக்கவைத்த வண்ணம் உள்ளது .மனம் விரிவடைகிறது .என்னை பொறுத்தவரை ஒரு பதிவுகூட மொக்கை என்றோ வீண் என்றோ சொல்லிவிட முடியாது ,அந்தந்த பதிவுக்கான தேவை எங்கோ ஓரிடத்தில் இருக்கிறது அது யாருக்கோ பயனளிக்கவும் செய்கிறது இதுவே உண்மை .

தங்களது நேரத்தை செலவிட்டு எளிய அரசியல் ,சச்சரவுகளை கடந்து,வெறுப்பு-காழ்ப்புகளை உமிழாது தூய நோக்கத்தோடு செயல்படும் அனைத்து சகபதிவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வந்தனங்கள் .

இலவசமாக வலைப்பூ வழங்கி ,அதில் தமிழில் தட்டச்சு செய்யும் வசதியும் அளித்த கூகிளாண்டவருக்கு நன்றி .:)
எனது பதிவுகளோ ,கருத்துகளோ யாரையும் இம்மியளவு மனம் வருந்த செய்து இருந்தாலும் எனது மனப்பூர்வமான மன்னிப்பை கோருகிறேன் .
தனித்தனியாக பல பதிவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றினாலும் .அதை அவர்களுக்கு தனியே தெரிவிப்பதே சிறந்தது என்பதினால் அதை இங்கு செய்யவில்லை ,


மேலும் இதுகாறும் தாங்கள் அளித்துவந்த நட்பும் அன்பும் இனியும் தொடரும் என்று நம்பிக்கையுடன்
என்றும் அன்புடன்
டாக்டர்.சுனில் கிருஷ்ணன்

குறிப்பு-சற்றே சுய சொரிதல் கூட இருப்பது போல் உள்ளது -பொறுத்துக்குங்க :) எப்பயாவது ஒரு வாட்டி இப்படி சொரிஞ்சுகரதுனால மன்னிச்சுக்குங்க :)

Wednesday, February 16, 2011

ராஜப்பாவின் சித்திரங்கள்

ராஜப்பா -இவரை பற்றிய என் நினைவுகள் மிக குறைவே ,அவரை நான் சரியாக அறிந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படவில்லையே என்று இன்று வருந்துகிறேன் .இவர் எனது தாத்தாவின் தம்பி (சின்ன தாத்தா ).தம்பி என்றால் ரத்த உறவு அல்ல ,தாத்தாவின் சித்தியின் மகன் .இறுதி வரை பிரம்மச்சாரியாக வாழ்ந்து மறைந்தவர் .நாடோடி வாழ்க்கை வாழ்ந்த கண் முன்னாள் இருந்தும் யாரும் அறியாத ஒரு மேதை என்றே இன்று எண்ண தோன்றுகிறது .அதிகம் பேசமாட்டார் ,ஒரு இடத்தில் பத்து நாட்களுக்கு மேல் தங்கியதாக நினைவு இல்லை .ஏதோ ஒரு சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து அகன்றுவிடுவார் .ஏதோ ஒன்றை பழுது பார்த்துக்கொண்டும் ,உருவாக்கி கொண்டும் சதா சர்வ காலமும் 'பிசியாக ' இருப்பார் .
அவர் அற்புதமாக பிடில் வாசிப்பார் என்று தாத்தா அவரை பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன் .ஒரு அழுக்கு வேட்டி,மேல் சட்டை அணியாமல் துண்டு போர்த்திய ஒல்லியான தேகம் ,ஒட்டி உள்ளிழுக்கப்பட்ட வயிர் ,தலையில் ஓமகுச்சி நரசிம்மன் போல் இருபுறமும்( மட்டுமே) நரைத்த மயிர் இருக்கும் ,அவரை பார்க்கும் பொழுதெல்லாம் அவரது முகசாயல் பூனையை நினைவுபடுத்தும் .அவருடைய புகைப்படம் ஒன்றே ஒன்று எங்கோ கண்டதாக நினைவு அதையும் இன்று கண்டுபிடிக்கமுடியவில்லை .

அவரது கடைசி காலத்தில் அவரது நடவடிக்கை ஒரு வித பித்து நிலையை நோக்கி அவர் பயணிக்கிராரோ என்று சந்தேகம் எழும் வண்ணம் இருந்தது .ஒரு முறை காரைக்குடிக்கு வந்துவிட்டு எங்கள் வீட்டிற்கு வராமல் வழியில் ஒரு மண் குவியலின் மேல் கிடந்து என் அப்பாவின் பெயரை அரற்றி கொண்டிருந்தாராம் .அப்பாவிடம் சிகிச்சை பெரும் ஒருவர் இவரை வீட்டிற்கு கொண்டு சேர்த்தார் .மற்றொரு முறை டர்பண்டின் எண்ணெய் குடித்து ஒரே அமர்களம் .நான் ஐந்தாவது படிக்கும் சமயம் ,அவரது மறைவுக்கு ஒரு வாரம் முன்பு எங்கள் வீட்டிற்கு வந்தார் ,எனக்கு 'கார்' வடிவம் இருக்கும் ஒரு மஞ்சள் நிற பென்சில் பாக்ஸ் கொடுத்தார் .அது இன்றும் என்னிடம் பத்திரமாக உள்ளது ,மிகவும் ராசியான பாக்ஸ் -பத்தாவது மற்றும் பனிரெண்டாவது பொது தேர்வுகளுக்கும், நுழைவு தேர்வுகளுக்கும் அதையே எடுத்து சென்றேன் .பின்பு தான் தெரிய வந்தது அது திருச்சியில் இருக்கும் அண்ணனிடமிருந்து அவனுக்கு தெரியாமல் எடுத்து வந்தது என்பது .அதே போல் எனது பெல்ட் ஒன்றை அவனுக்கு கொடுத்தார் என்று அறிகிறேன் .கொட்டம்குச்சி பிடில் செய்வது ,கலிடோஸ்கோப் செய்தது ,இன்னும் ஏதேதோ பெபர்களும் அட்டைகளும் நிறைந்த நினைவுகள் .இது மட்டுமே இன்று என் மனதில் இருக்கும் அவரை பற்றிய நினைவுகள் .
என் சொந்த ஊரான அறிமளத்தில் ,எங்கள் வீட்டு திண்ணை சுவர்களில் சில ஓவியங்கள் உண்டு .அத்தனை ஜீவனுள்ள ஓவியங்கள் .தாத்தா அந்த சிறிய திண்ணையில் அமர்ந்து வைத்தியம் பார்ப்பார் .மறுபுறம் இன்னொரு திண்ணையில் நோயாளிகளும் குடும்பத்தினர்களும் அமர்வார்கள் .யாரும் இல்லாத பொழுது அந்த திண்ணை தான் எனது வாசஸ்தலம் ,அந்த ஓவியங்களில் இருப்பவர்கள் யார் என்று தெரியாத வயது ,அவர்கள் தான் எனக்கு தோழர்கள் ,நான் என்ன பேசினாலும் காது கொடுத்து மறுப்பு தெரிவிக்காத நண்பர்கள் .பேசி விளையாடி மகிழ்ந்த தருணங்கள் அற்புதமானவை

பிற்காலத்தில் அந்த ஓவியங்களை காணும் பொழுதெல்லாம் எனக்கு வியப்பு ஏற்படாமல் இல்லை .அந்த ஓவியங்கள் ராஜப்பா தீட்டியது என்று தாத்தா சொன்னதும்,எனக்கு மனமெல்லாம் ஒரு வித மகிழ்ச்சியும் ,வருத்தமும் ஒரு சேர வரும்.எல்லாம் பென்சிலால் வரையப்பட்டவை .கடந்த பொங்கலுக்கு ஊருக்கு சென்றிருந்த சமயம் அவர் வரைந்த அந்த ஓவியங்களை எனது புகைபடகருவியில் பதிந்துள்ளேன் .அதை இங்கு பகிர்கிறேன் .


1.இந்தியாவின் ஆக பெரிய மக்கள் தலைவர் மகாத்மா காந்தி


2.சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் -ஜவஹர்லால் நேரு













இந்த ஓவியங்கள் தீட்டப்பட்ட காலம் 1947 -1952 வரை .ஒவ்வொரு ஓவியத்திலும் அது வரைந்து முடிக்கப்பட்ட நாளும் அவரது கையெழுத்தும் இருக்கிறது .அனைத்துமே வெறும் பென்சில்களால் தீட்டப்பட்டது (அந்த காலத்து பென்சில் கூட எவளவு தரமாக இருக்கிறது!! ).இன்றும் அந்த முட்டை பற்று போடப்பட்ட செட்டிநாட்டு சுவர்களில் காலத்தால் அழியாத படைப்புகளாக நிலைத்து நிற்கிறது .பழைய மரங்கள் எல்லாம் கரையான் அரித்து வீட்டை இடித்து புதுபிக்க வேண்டும் என்று பெரியப்பா சொன்னார் .ஏனோ மனம் கனத்தது .ராஜப்பா வாழ்க்கை முழுவதும் அலைந்து திரிந்து அல்லாடிய ஒரு கலைஞன் ,படைப்பூக்கம் தலைகேறி பித்தாக ஆடிய ஒரு மேதை .உயிரை கலந்து உருவாக்கும் எந்த ஒரு படைப்பும் ஜீவனுள்ளது ,அது தன்னை தானே காத்துகொள்ளும் வல்லமை கொண்டது.பின்கட்டை மட்டும் இப்பொழுது முற்றிலும் இடித்து புதிய வீடு கட்டி முடித்தாகி விட்டது .நாளை இதுவும் இடிந்து விழலாம் ,ஆனால் ஓவியமாக இல்லாவிட்டாலும் புகைப்படமாவது நிச்சயம் எஞ்சி இருக்கும் ,ராஜப்பா ஒன்றும் ரவிவர்மா இல்லை ,இது ஆக சிறந்த ஓவியங்களா ? ..எனக்கு தெரியாது .இவருக்குள் அந்த விதை இருந்தது உண்மை .இந்தியாவில் திறமை இருந்தும் ,முட்டி மோதி தன்னை பிரகடனபடுத்த வேண்டும் ,ராஜப்பா அப்படி தன்னை முன்னிறுத்த தெரியாமல் வாழ்ந்து மறைந்த ஒரு ஜீவன் .
ராஜப்பா இன்றும் வாழ்கிறார் .அந்த ஜீவனுள்ள பாரதியின் கண்களை பாருங்கள் ,இப்பொழுது கூடவா தெரியவில்லை ?

Saturday, February 5, 2011

ஆயுர்வேதம் ஒரு அறிமுகம் -11-முதுகு வலி

அன்றாடம் மருத்துவர்கள் சந்திக்கும் நோயாளிகளில் பெரும்பான்மை நிச்சயம் மூட்டு வலியாகவோ ,முதுகு வலியாகவோ தான் இருக்கும் .எனக்கு தெரிந்து நாற்பது வயதிற்கு மேல் உள்ள அனேகர் இவ்விரு வலிகளால் அவதி படுகின்றனர் .இவ்வகை நோய்களை பற்றிய அறிவும்,தீர்வும் நமக்கு மிகவும் முக்கியம் .

மனிதர்களுக்கு ஏன் முதுகு வலி ?
இயல்பாகவே இதர பாலூட்டி விலங்கினங்கள் போல் இல்லாமல் நாம் நிமிர்ந்து நடப்பது இதன் முக்கிய காரணம் ஆகும் .நான்கு கால்களில் இதர பிராணிகள் போல் நாம் நடந்தால் ,முதுகு புவி ஈர்ப்பு விசைக்கு ஆட்படாது ,நாம் நிமிர்ந்து நடப்பதால் உடலின் எடையை சமன் செய்யவும் ,தாங்கவும் முதுகெலும்பு நமக்கு உறுதுணையாக உள்ளது .ஆயினும் ,முதுகெலும்பின் ஊடாக இருக்கும் ஜவ்வு புவிஈர்ப்பு விசைக்கு ஆட்படுவதால் இயல்பாக அனைத்து மனிதர்களுக்கும் தேய்வு ஏற்படுகிறது .

முதுகு தண்டின் அமைப்பு

முதுகெலும்பு முப்பத்தி மூன்று எலும்புகள் வரிசயாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்க படுவதால் வரும் அமைப்பு .இந்த படத்தை பார்த்தீர்கள் ஆனால் புரியும் ,இந்த எலும்புகளுக்கு உள்,அல்லது நடுவாக போகும் ஒரு குழாய் தான் முதுகு தண்டு ,இது மண்டை ஓட்டின் அடிப்புறம் (நம் பின் மண்டையில் உள்ள ஓட்டை ) வழியாக மூளைக்கு நுழைகிறது .முதுகு தண்டிலிருந்து நம் உடல் முழுவதும் நெரம்புகள் -எலும்புகளின் ஊடாக வெளி வருகிறது .இந்த நெரம்புகள் -மூளையிலிருந்து நமது தசைகளுக்கு ,மூளையின் கட்டளையை எடுத்து செல்லும்,அதன் மூலம் நாம் கை கால்களை அசைப்பது எல்லாம் சாத்தியமாகிறது ,இதே போல் நமது உடலிலிருந்து நாம் பெரும் உணர்வுகள் இந்த நெரம்புகள் மூலம் உள்வாங்க பட்டு தண்டு வடம் மூலம் மின் அதிர்வு சமிங்கைகளாக மூளையை சென்று அடைகிறது .

ஒரு முதுகு எலும்பிற்கும் ,மற்றொன்றிற்கும் இடையில் ஒரு மெத்தை போன்ற அமைப்பு உள்ளது -இதன் பெயர் 'டிஸ்க்' ,இதில் பசை தன்மையும் ,நீர் தன்மயும் அதிகம் உண்டு ,இந்த டிஸ்க் (காண்க படம் ) இரு எலும்புகளுக்குள் உரசல் ஏற்படமால் ,அதிர்வுகளை தாங்கும் வல்லமை கொண்டது ,இதன் மூலம் நடுவில் செல்லும் தண்டுவடத்திற்கு எளிதில் பாதிப்பு வரமால் காக்கிறது .மேலும் முதுகு தண்டிலிருந்து வரும் நெரம்புகள் முதுகு எலும்புகளுக்கு நடுவில் உள்ள இந்த இடைவெளி மூலமாக வெளியில் வருகிறது .எலும்புகள் இந்த நெரம்பை அழுத்தாமல் இந்த டிஸ்க் ஒரு 'குஷன் ' போல செயல் படுகிறது .மொத்தம் முப்பத்தி ஒரு ஜோடி முதுகு தண்டு நெரம்புகள் நம் உடலில் உள்ளன .
இந்த நெரம்புகள் முப்பத்தி மூன்று எலும்புகளுக்கு மத்தியிலிருந்து வெளிவந்தும் ,உள் சென்றும் செயல் படுகின்றன .இதில் முதல் எட்டு ஜோடி நெரம்புகள் -கழுத்து மற்றும் கைகளை கவனிக்கின்றன .அடுத்த பனிரெண்டு ஜோடிகள் -நெஞ்சு,விளா,வயிறு பகுதிகளை கவனிக்கின்றன ,அடுத்து உள்ள ஐந்து ஜோடி நெரம்புகள் (லம்பார் ) கால்களின் தசைகளை கவனிக்கின்றன ,அடுத்து வரும் ஐந்து ஜோடிகள் (சாக்றல்) மற்றும் ஒரு ஜோடி வால் நெரம்பு(coccygeal ) இடுப்பு பகுதியை,மலகுடலை,பிறப்பு உறுப்புகளை கவனிக்கின்றன .

முதுகு தண்டு -முதுகெலும்பின் முழு நீளம் வரை இருப்பதில்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் ,பொதுவாக முதுகு தண்டு லம்பார் முதுகெலும்புகள் ( L1,L2 ) அத்தோடு முடிந்து விடும்,அதன் பின்பு எலும்புகளின் ஊடாக நெரம்புகள் மட்டும் வெளிவரும் .



இன்னொரு முக்கியமான விஷயம் -நமது முதுகெலும்பு இயல்பாக முற்றிலும் நேராக இருப்பதில்லை ,சற்று வளைந்த வடிவம் உடையது (காண்க படம் ) இந்த வளைவுகள் கழுத்து பாகத்தில் கூடும் பொழுது மேல் முதுகு கூன் ,விழுகிறது ,இது இடுப்பு பாகத்திலும் நடக்கலாம் .நமது தண்டு முன்புரமாகவோ ,பின்புறமாகவோ ,பக்கவாட்டிலோ அதிகமாக வளைய கூடாது .அப்படி வளைந்தால் அதனால் வருங்காலத்தில் நிறைய சிக்கல்கள் வரலாம் .(காண்க படம் )பிரசவ காலத்தில் பெண்களுக்கு இயற்கையாகவே இத்தகைய கூடுதல் கூன் விழும் ,பின்பு அது சரி ஆகிவிடும் .

யாருக்கு முதுகு வலி வரும் ?

  • அதிகமாக அமர்ந்து வேலை பார்போருக்கு -குறிப்பாக முதுகு பக்கம் சரியான 'சப்போர்ட் ' இல்லாமல் அமர்பவர்களுக்கு ,கணினி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு ,
  • அதிக தொலைவு -நேரம் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களுக்கு
  • பெண்களுக்கு -குறிப்பாக பிரசவித்த பெண்களுக்கு ,அதுவும் அறுவை சிகிச்சைக்கு ஆட்ப்பட்டவர்களுக்கு,மாதவிடாய் கடந்தவர்களுக்கு .
  • அதிக எடை தூக்கும் வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கு
  • உடல் பருமனாக இருப்பவர்களுக்கு
இதை தவிர நாற்பது வயதிற்கு மேல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்

முதுகு வலி காரணங்கள்
  • பெரும்பான்மையான முதுகு வலி -வெறும் தசை பிடிப்பினால் ஏற்படுவது .
  • நேரடி விபத்து -முதுகெலும்பு முறிவு
  • முதுகெலும்புகளுக்கு இடையில் உள்ள ஜவ்வு -டிஸ்க் அழுத்தம்(compression),நீர்த்து போகுதல் (dehydration), விலகுதல் (herniation),முற்றிலும் விடுபடுதல் (prolapse)
  • ஆட்டோ இம்முன் நோய்கள் ,ஆர்த்ரைடிஸ் ,முடக்கு வாதம் ,ருமடிக் ,அன்கிலோசிங் -போன்றவை முக்கிய நோய்கள் ஆகும் .இது எந்த மூட்டுகளையும் தாக்கலாம் .முதுகெலும்புகளை தாக்கினால் வலி பயங்கரமாக இருக்கும் .

  • சிறு நீரக கற்கள் -இடுப்பிலும்,கால் சந்து பகுதியிலும் வலி இருக்கும்,சிறு நீர் கழிக்கும் பொழுது எரிச்சல்,வலி ,ரத்தம் கலந்து வெளியேறுதல் என்பது அதன் குறிகள் .
  • மல கட்டு -பல நேரங்களில் கீழ் முதுகு வலிக்கு இதுவே காரணம் ஆகிறது .முதுகு வலியை தவிர்க்க குடலை தினமும் சுத்தமாக வைத்தல் முக்கியமானது .
  • பெண்களுக்கு -மாதவிடாய் சமயங்கள் ,கருப்பை கட்டிகள்,கரு முட்டை கட்டிகள் ,பால்லோபியன் குழாய் அடைப்பு ,வெள்ளை படுதல் ஆகியவையும் முக்கியமான காரணங்கள் .
  • வாய்வு பிடிப்பு
  • முதுகெலும்பு புற்று நோய்
  • முதுகெலும்பு -டி.பீ
  • வைரஸ் காய்ச்சல்கள் -வைரஸ் அல்லது பாக்டீரியா கிருமிகள் முதுகு தண்டின் உள்ளே இருக்கும் திரவத்தை (cerebro spinal fluid) தாக்குவது
  • வால் எலும்பு வலி -coccydyna
இதை எல்லாம் விட ஒரு முக்கிய காரணம் -மன அழுத்தம் .ஆம் ! மன அழுத்தத்தின் பொழுது மூளை நம்மை திசை திருப்ப செய்யும் ஒரு லீலை தான் பல நேரங்களில் முதுகு வலியாக வெளிவருகிறது .எலும்பை ஒட்டி உள்ள தசைகளுக்கு செல்லும் பிராணவாயுவை மூளை தன் சமிங்கை மூலம் குறைக்கிறது அதனால் இது ஒரு எலும்பு வலியை போலோ ,இல்லை நெரம்பு வலியை போலோ நமக்கு தெரிகிறது .இவ்வகை வலிகளுக்கு சிறந்த தீர்வு -இது நம் மன அழுத்தத்தால் வருகிறது என்பதை நாம் உணர்வது தான் ,இந்த அறிவே நம் மூளையின் சித்து வேலையே பலிக்காமல் செய்து விடும் .

இதை தவிர சில காரணங்களும் உண்டு .ஆகினும் பொதுவாக இவைகளே பிரதான காரணங்கள் .
நோய் அறிதல்
  • எக்ஸ் ரே
  • எம் ஆர் ஐ ஸ்கேன்
  • சீ டி ஸ்கேன்
போன்றவை உதவும் .
சிலநேரங்களில் சில ரத்த பரிசோதனைகள் உதவலாம் .
பொதுவாக இவ்வகை ஸ்கேன் -எல்லாம் உடனடி தேவை என்று எல்லாம் இல்லை ,நோயாளிகளின் நோய் குறிக்கு ஏற்ப நாம் நோய்களை புரிந்து கொள்ளலாம் .ஆயுர்வேத சிகிச்சை பொறுத்த வரை -ஸ்கேன் அவளவு அவசியம் இல்லை .நவீன மருத்துவம்- முதுகெலும்பு அறுவை சிகிச்சை போன்றவை என்றால் இது நிச்சயம் தேவை படும் .
முதுகு வலி -ஆயுர்வேத பார்வை
பொதுவாகவே வலி என்பது வாத தோஷத்தின் வெளிப்பாடு என்று ஆயுர்வேதம் நம்புகிறது .முதுகு வலியை தனி நோயாக ஆயுர்வேதம் அணுகவில்லை ,ஆயினும் கூட பல நோய்களின் குறிகளில் முதுகு வலி உண்டு .
நாபிக்கு கீழ் பகுதி வாதத்தின் இடம் என்று வரையறுக்கிறது .மூட்டுகள் கபத்தின் இடம் என்றும் விவரிக்கிறது மேலும் அசைவு ,செயல் என்பதும் வாதத்தின் குணங்கள் .மேலும் ஜவ்வு நீர்த்து போகுதல் என்பது -சவ்வின் நீர் தன்மை வற்றி போகுதல், அதாவது அங்கு ஒரு வித வறட்சி ஏற்படுகிறது -வறட்டு தன்மை வாதத்தின் குணமாகும் .வாத தோஷத்தின் நேர் எதிர் துருவமாக கப தோஷம் இருக்கிறது.கபம் ஸ்திரத்தன்மை கொடுப்பது .பொதுவாக எந்த ஒரு நோயும் வாத பித்த கப தோஷங்களின் பங்கு இல்லாமல் உருவாகாது .ஏதோ ஒரு மட்டத்தில்,ஒரு விகிதத்தில் இந்த தோஷங்கள் நோய்களுக்கு காரணமாகும் .அதிக பிடிப்பு உள்ள நோய்கள் வாத -கப தோஷ கூட்டினால் வரும் .மேலும் உடலில் உள்ள அக்னி மந்தமாகும் .வாதம் செல்லும் இயல்பான பாதை அடைப்பட்டு அது வேறு திசையில் பயணிப்பது என்றும் எடுத்து கொள்ளலாம் ..
சிகிச்சை
  • முதுகு வலியின் காரணத்தை பொறுத்தே சிகிச்சை அமையும் .வெறும் தசை வலிகள்,பிடிப்புகள் இளம் சூடாக தான்வன்தரம் தைலம்,நாராயண தைலம் ,பிண்ட தைலம் போன்றவை நன்றாக தேய்த்து சுடு நீர் அல்லது இலை ஒத்தடம் கொடுத்தால் போதும் .
  • டி பீ ,புற்று நோய் ,வைரஸ் பாதிப்பு ,விபத்து -போன்றவைகளுக்கு உடனடி கவனமும் சிகிச்சையும் தேவை .இங்கு ஆங்கில நவீன மருத்துவ சிகிச்சை பிரதானமாகும் ,ஆயுர்வேதம் உப மருந்தாக பயன்படுத்தலாம் .

  • சிறு நீரக கற்கள் ,பெண்களின் பிரச்சனைகளுக்கு -ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் நல்ல தீர்வுகள் உண்டு ,அக்காரணத்தை சரி செய்வதன் மூலம் முதுகு வலியிலிருந்து அடியோடு விடுபடலாம் .பெண்களின் நோய்களுக்கு உண்டான தீர்வை பற்றி மற்றொரு சமயத்தில் விரிவாக விவாதிக்கலாம் .

  • மலக்கட்டு வராமல் பார்த்து கொள்ள வேண்டும் .தினம் சரியான அளவில் நீர் குடித்து ,காலை சிறிய உடல் பயிற்ச்சிகளை செய்தல் முக்கியமாகும் .இரவு உணவு எளிதாக செரிக்கும் வண்ணம் உட்கொள்ளுவது மலசிக்கலை தவிர்க்க உதவும் .

  • வாய்வு தொல்லையை பொறுத்தவரையில் ஜீரண உறுப்புகள் சரிவர இயங்காததும் ,நாம் உட்க்கொள்ளும் உணவும் முக்கிய காரணம் .அதை தவிர-உறங்கும் பொழுது வாயை திறந்து கொண்டு உறங்குகிரோமா என்று கவனிக்க வேண்டும் ,மூச்சு குழாய்க்கு பதிலாக காற்று உணவு குழாயில் புகுவதால் வயிறு முழுவது காற்று நிறைந்து இருக்கும் .(aerophagia).இதை தவிர்த்தல் நலம்.வயிற்று பொருமல் ,வாய்வு தொல்லைகளுக்கு -சிறிது பெருங்காயத்தை நெய்யில் வதக்கி சுடு நீரில் சாப்பிட்டால் நல்ல குணம் தெரியும் .அஷ்ட சூரணம்-இதற்க்கு ஏற்ற மருந்தாகும் .வாயு குளிக,அபாயரிஷ்டம் போன்றவயும் உதவும் .
  • டிஸ்க் சார்ந்த நோய்களுக்கு -ஆயுர்வேதத்தில் நல்ல சிகிச்சை முறைகளும் ,மருந்துகளும் உண்டு .கடி வஸ்தி(காண்க படம்),சிநேக வஸ்தி,கஷாய வஸ்தி ,அப்யங்கம் ,இல கிழி ,மணல் கிழி ,பேதி போன்றவையும் ,வர்மம் சிகிச்சையும் நல்ல பலன் தரும் .
  • முதுகு பிடிப்பு மற்றும் வலி ஆகியவயிலிருந்து விடுபட -இரவு எண்ணெய் தேய்த்து பின்பு காலை ,ஆத்து மணலை ஒரு இரும்பு சட்டியில் வறுத்து ,துணியில் பொட்டலம் கட்டி ,அடுப்பில் உள்ள தோசை கல்லில் வைத்து எடுத்து ஒத்தடம் கொடுக்கலாம் .நல்ல பலன் தரும் .

  • யோகா ஆசனங்கள் -தினமும் செய்து வந்தால் வலி நன்றாக குறையும் ,ஆகினும் டிஸ்க் விலகி இருந்தாலோ ,விடுபட்டு இருந்தாலோ முதுகை அதிகமாக வளைக்கும் ஆசனங்கள் செய்வது விபரீதமாக முடியலாம் ,கவனம் தேவை .பொதுவாக -அனைவரும் பவன முக்த ஆசனம்,புஜங்க ஆசனம் ,சலாப ஆசனம் ,ஷஷாங்க ஆசனம் ,வஜ்ரா ஆசனம் போன்றவையை தினமும் செய்யலாம் .சாமானியர்கள் இதை செய்தால் முதுகு வலி வராது .


  • கணினி முன் அமர்ந்து அதிக நேரம் செலவிடுபவர்கள் சரியான முறையை பின்பற்ற வேண்டும் .(காண்க படம்)

இன்னும் இதை பற்றி எழுதி கொண்டே போகலாம் ,ஆயினும் நண்பர்களுக்கு ஏதேனும் கேள்வி இருப்பினும் அதற்க்கு ஏற்றவாறு ,அதை மட்டும் விவாதிக்கலாம் என்று எண்ணி உள்ளேன் .
பிசியோ தெரபி ,உடல் பயிர்ச்சி ,வாழ்க்கை முறை மாற்றம் மூலமாக முதுகு வலியை எளிதில் நாம் குணபடுத்தலாம் .நோயின் காரணத்தை அறிவதே முக்கியம் ,பின்பு அதற்க்கு ஏற்ற தீர்வை நோக்கி பயணிக்கலாம் .
ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வுகள் உண்டு .எனக்கு தெரிந்த ,உங்களுக்கு பயனளிக்க கூடிய பொது தகவல்களை இங்கு தொகுத்து தந்துள்ளேன் .மேலதிக விவரங்கள் ஏதும் வேண்டுமென்றால் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம் .

எங்க ஊரு டாக்டர் தேவ குமார் -அவரோட தமிழ் துளி தளத்துல ,இதை பற்றி விரிவாக அணுகி உள்ளார் .அதையும் பார்க்கலாம் .அவர் ஒரு எலும்பு மற்றும் மூட்டு மருத்துவ நிபுணர் என்பதால் அவரது கருத்துக்கள் முக்கியமானவை .


Tuesday, February 1, 2011

காண்டேசா கனவுகள்-சிறுகதை

"கிருஷ்ணா ..".."அப்பா சிங்கப்பூருலேந்து வந்துருக்காக ,எனக்கு இம்புட்டு ஜாமாங்க வாங்கியாந்துருக்காறு " ,தனது பையை மெதுவாக திறந்து காட்டினான் மணி .ஒரு பெரிய ரிமோட் கண்ட்ரோல் போலீஸ் கார்,இரண்டு குட்டி ஜீப்புகள் ,சிவப்பு அட்டையும் தங்க பேப்பர் சுற்றிய சாக்கலேட்டுகள் ,அப்புறம் -அந்த சிறிய நீல நிற ஹாட் வீல்ஸ் காரை பார்த்த உடன் கிருஷ்ணாவின் முகம் பிரகாசித்தது ."மணி ,அது கான்டசா கார் தானே ?".கிருஷ்ணாவிற்கு காண்டேசாவின் மீது ஒரு வித பாசம்,அவனுக்கு அந்த வண்டி மிகவும் பிடிக்கும் ,பேப்பரில் வந்த காண்டேசா படங்களை கத்தரித்து புத்தகத்தின் நடுவே பதுக்கி வைத்துருப்பான் .அப்பா செட்டியார் அய்யாவோட அம்பாசடர் கார் ஓட்டுவார் ,ஆனாலும் அந்த காண்டேசா காதல் அவனுக்கு ஓயாது ."அப்பா ,இந்த தகர டப்பாவை குடுத்துட்டு கான்டசா ஓட்டுப்பா " என்று அப்பாவை நச்சரித்த காலம் உண்டு .தெரு கோடியில் இருக்கும் மாடி வீட்டு முத்து அங்கிளின் மெரூன் காண்டேசா கார் கிருஷ்ணாவிற்கு மிகவும் பிடித்தது .மண்டை வீங்கிய அந்த கருப்பு அம்பாசடர் -பார்க்கும் பொழுது அவனை திட்டி தீர்க்கும் ,அவனது பள்ளி கணக்கு டீச்சர் அவனுக்கு நினைவுக்கு வரும் .முத்து அங்கிளின் காரை அவரில்லாத பொழுது, யாருக்கும் தெரியாமல் காரை தொட்டு தொட்டு பார்ப்பான் .ஒருமுறையாவது அவன் அந்த வண்டியில் ஏறிவிட வேண்டும் என்று முடிவு செய்து இருந்தான் .
மாமாவும் ராமு தாத்தாவும் அன்று பனிரெண்டு மணி அளவிற்கு பள்ளிக்கு வந்து ஆசிரியரிடம் ஏதோ பேசி கொண்டிருந்தனர் .கிருஷ்ணாவை அவனது மூன்றாம் வகுப்பு எ பிரிவிலிருந்து அழைத்து வந்தனர் .ஏதோ கையெழுத்து போட்டு "மனச தேத்திக்கிங்க " என்று சொல்லி ஆசிரியர் மாமாவிடம் கிருஷ்ணாவை அனுப்பி வைத்தார் .கிருஷ்ணாவிற்கு -பரிச்சையில் பெயில் ஆகி அழுது அடி வாங்கியது போல் இருந்தது ராமு தாத்தாவின் முகமும் ,மாமாவின் முகமும் .இன்று என்ன சீக்கிரமாக அழைத்து கொண்டு போகிறார்கள் என்று புரியவில்லை ,பொதுவாக அப்படி அழைத்து போக அம்மாவோ ,அப்பாவோ தான் வருவார்கள் ."மாமா ,எப்ப வந்தீக ? அத்த வரலியா ,எங்க போறோம் ? அப்பா ,அம்மா வரலையா ?" முகத்தை தொங்கவிட்டு கொண்டு அமைதியாக நடந்து வந்தார் மாமா.ராமு தாத்தா" எல்லாம் வந்த்ருகாக ,அப்பாரு வெளிநாடு போறாரு ,அதான் டாட்டா சொல்லனும்ல உன்னையும் கூட்டியாறோம் " என்று தழுதழுத்தார் ."சிங்கப்பூரா?" "ஆமா " கிருஷ்ணாவிற்கு மனதில் சந்தோஷம் -அப்பாவிடம் சொல்லி மணி அப்பா போல் வரும் போது தனக்கும் காண்டேசா கார் வாங்கி வர சொல்ல வேண்டும் .

வீடே வீங்கி வெடித்து விடும் போல இருந்தது .அந்த சின்ன ஓட்டு வீட்டிற்குள் பெரும் கூட்டம் நெருக்கி அடித்து கொண்டு நுழைந்து கொண்டே இருந்தது .சுவற்றில் சாய்ந்து வெறித்து பார்த்து கொண்டிருந்தார் அந்த பெரியவர் ,கண்களில் நீர் இல்லை .யார் யாரோ வருவதும் ,கையை பிடிப்பதும் ,அழுவதும் ,ஆறுதல் கூறுவதும் சம்பிரதாயமாக நடந்து கொண்டிருந்தன .அவர் காதுகளுக்கு எந்த அழுகுரலும் கேட்கவில்லை ,அங்கு வரும் யாரையும் அவருக்கு தெரியவில்லை .எண்ணங்களும் ,நினைவுகளும் சுற்றி சுற்றி வருகின்றன ,முடிவற்ற எண்ண சுழற்ச்சியின் மத்தியில் தன்னை மறந்து நின்று இருந்தார் .மனமுருக தனக்கு மறதியை வழங்க கூடாதா என்று அவரது ஆழ் மனம் வேண்டியது .நினைவுகள் எத்தனை கொடிய வியாதி.தன் மகனின் இழப்பின் நிதரிசனம் அவருக்கு பிடிபடவில்லை ,வெறுமையும் விரக்க்தியும் மனதை கவ்வி நிறைந்துள்ளது .அழு அழு என ஆழ் மனம் அழுத்துகிறது ஆனால் அவர் அழவே இல்லை .

ரோஜாவும் ,சம்பங்கியும் ,சாமந்தியும் வீடெங்கும் ஓடும் கண்ணீர் நதியில் சிறு சிறு தோணிகளாக மிதந்தன .மனித வியர்வையின் உப்பும்,மலர்களின் சுகந்தமும் ,ஊதுபத்தியின் தீக்குளிப்பால் வரும் வாசம் எல்லாம் கலவையாக காற்றில் கலந்து நாசிக்குள் நிறைந்தது .இந்திய கிரிக்கட் அணி வீரர்களின் 'ஹடுள்' போல வீட்டின் மையத்தில் ,அம்மாவை சுற்றி தலை விரி கோலத்துடன் அமர்ந்து எழுப்பும் அழுகுரல்கள் ,புதிதாக ஒரு அத்தையோ ,ஆயாவோ உள்ளே வந்தால், விஸ்வரூபம் எடுக்கும் ஆள் கண்ட சமுத்திரம் போல் ,கண்ணீரும் அழுகுரலும் புதிய உச்சத்தை தொட்டு கீழ் இறங்கும் .
சாயங்காலம் மணியின் அம்மாவும் அப்பாவும் மணியோடு வீட்டுக்கு வந்தார்கள் ."கிருஷ்ணா ,உங்க அப்பா செத்துட்டாரா டா ?" மௌனமாக மணியிடம் வந்த கிருஷ்ணா "அவரு சிங்கப்பூரு போறாரு ""வாடா ஆடலாம்" என்று சொல்லி வீட்டு வாசலில் உள்ள கொட்டகையை தாண்டி ரோட்டிற்கு வந்து ஒரு அரச மரத்து குச்சியை உடைத்து ,வட்டம் போட்டு "அண்டர் ,ஓவர் ,பிடிக்க முடிஞ்சா பிடிச்சுக்கோ " என்று தூக்கி போட்டு விளையாட்டை துவங்கினார்கள் .

எல்லாம் முடிந்துவிட்டது ,இப்பொழுதும் அவர் அழவில்லை ,கிருஷ்ணாவிற்கு அம்மாவை பார்க்க பிடிக்கவில்லை ,அவள் அழுத வண்ணம் இருந்தாள் ,அவள் அழுவதை பார்த்தால் இவனுக்கும் அழுகை வரும் ,எல்லாரும் அழுதால் அப்பா தனது சிங்கப்பூரு பயணத்தை ரத்து செய்து விடலாம் ,தனக்கு காண்டேசா கார் கிடைக்காது .அதனால் அவளை பார்க்காமல் தவிர்த்தான் .ராமு தாத்தா பெரியவரிடம் ஏதோ சொன்னார் "போயிட்டு வந்துரட்டும் ,சடங்கு முக்கியமாச்சே ,தம்பி இங்கனயே இருக்கட்டும் -இங்க தம்பிக்கு சடங்கு இருக்கு " என்றார் ,பெரியவர் ஒன்றும் சொல்லாமல் நின்றார் .அம்மா காரைக்காலில் உள்ள ஆயா வீட்டிற்கு சென்று ஒரே நாளில் திரும்ப வேண்டும் ,அவரோடு மாமாவும் செல்வதாக முடிவானது .வாசலில் நின்ற முத்து அங்கிள் பெரியவரிடம் " பாருங்க ,சந்துரு எனக்கு எவளவோ செஞ்சுருக்கான் ,தம்பி மாறி,தப்பா எடுத்துக்கலனா ,என் வண்டியையும் டிரைவரையும் அனுப்புறேன் ,தங்கச்சியும் ,அவரும் சட்டுன்னு போயிட்டு திரும்பிடலாம் ,பஸ் எல்லாம் ஏறி இறங்கி நேரத்தோட வர்றது சிரமம் ,இப்ப இருக்குற நெலமைக்கு நல்லதில்ல " பெரியவர் ஏதும் பேசவில்லை ,ராமு தாத்தா "உங்களுக்கு சங்கடம் இல்லையே ?" என்று மெதுவாக கேட்டார் "அதெல்லாம் ஒன்னும் இல்லைங்க " என்று சொல்லி வண்டியை கொண்டு வந்து நிறுத்த சொன்னார் .

அந்த மெரூன் கலர் கான்டசா வந்து நின்றது ,கிருஷ்ணாவின் அம்மாவும் மாமாவும் வண்டியில் ஏறினார்கள் ,அதுவரை அழாதிருந்த கிருஷ்ணா குபிரென்று அழுதான் ,பெரும் கூச்சலோடு வெளியே ஓடி வந்தான் ,"அம்மா !! போகாத !!" அழுது வற்றிய அவளின் கண்கள் மீண்டும் குளமாகின ,"வந்துருவேண்டா கிருஷ்ணா " என்று வாஞ்சையும் ,வருத்தமும் கலந்த குரலில் உச்சி முகர்ந்து ,வண்டியில் ஏறினாள் .அவள் மாமாவுடன் காண்டேசாவில் தெருவை கடந்து செல்வதை வாசலிலே நின்று அழுதபடி பார்த்து கொண்டிருந்தான் ."பாவம் அப்பா போனதுக்காக குழந்த அழறது " என்று பச்சாதாப பேச்சுகளும் ,"அழாதே அம்மா வந்துடுவா " என்று தேற்றல்களும் அவன் காதில் விழுந்த வண்ணம் இருந்தன .அழுகை நின்றபாடில்லை .அழுது கொண்டே உள்ளே ஓடி வந்து ,ஓரமாய் ஒடுங்கி வார்த்தை இழந்த அந்த பெரியவரின் வேட்டியை உலுக்கி "தா ..த்..தா ....கா ...கான் ...டேசா..கான்டசா ..அ..ம்மா ..போறா ..என்ன...ய..வி..ட்டு..ட்டு..." என்று தேம்பி தேம்பி அழுதான் .உயிரற்ற ஜடமாக அத்தனை நாட்களும் உறைந்து நின்றிருந்த பெரியவர் ,பெரும் தூக்கத்திலிருந்து விடுபட்டது போல் "சந்திரா ..." என்று அடக்க முடியாமல் கண்களில் வழிந்து ஓடும் நீரை துடைத்து கொண்டு ,தேக்கி வைத்த பெரும் துக்கம் அவரது குரலிலிருந்து பெரும் ஓலமாக புறப்பட்டது .கிருஷ்ணாவை வாரி அனைத்து ,அவனை தூக்கி கொண்டு கண்களில் நீர் பெருக வீட்டுக்குள் இருக்கும் சந்துருவின் படத்தை நோக்கி ஓடினார் .