Thursday, October 24, 2019

அம்புப் படுக்கை - ஜி. வீர ராகவன் கடிதம்

(நண்பர் வீர ராகவன் அம்புப்படுக்கை குறித்து எழுதிய கடிதம்)

அன்பின் சுனீல்,

அம்புப்படுக்கை என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது பீஷ்மரின் கதாபாத்திரமே. வயதில் மூத்தவரென்பதால் அவர்தான் முதலில் இறக்கவேண்டும்.. ஆனால், தன பேரன், கொள்ளுபேரன்களின் இறப்பைக்கண்டு பிறகு அம்புபடுக்கையில் இருந்து யுதிஷ்டிரனுக்கு அறிவுரைகளையும்  சஹஸ்ரநாமத்தையும் கூறிவிட்டு பிறகு தந்தையின் ஆசியின்படி தனக்கு உகந்த நேரத்தில் உயிரை விடுகிறார்.



இந்த தலைப்பில் சிறுகதை தொகுப்பு என்றதும் என்னுடைய மஹாபாரத ஆர்வம் காரணமாக அனைத்தும் பாரத கதைகளாக இருக்குமென நினைத்து ஒரு கடையில் புரட்ட  ஆர்வம் குறைந்து வாங்காமல் வைத்துவிட்டேன் (படிக்காமல் விட்டதற்கு எவ்வளவு  சொல்லவேண்டியிருக்கிறது).



பிறகு விஷ்ணுபுரம் குழுமம் நடத்திய ஈரோடு சிறுகதை முகாமில் நீங்கள் இரண்டு அமர்வுகளை நடத்துகிறீர்கள் என்றதும்கூட படிக்கவில்லை. அவர் சிபாரிசு செய்த கதைகளை படித்துவிட்டு ஈரோடு அரங்கில் கலந்துகொண்டேன். அங்கே வந்தபிறகுதான் நான் செய்த தவறு உறைத்தது. நான் என்னுடைய ஆசான் என கருதும் ஜெயமோகன் (நான்தான் சொல்லிக்கொள்கிறேன், அவர் என்ன நினைக்கிறார் என தெரியவில்லை) ஒரு எழுத்தாளரை பார்க்குமுன் அவருடன் பேசும்முன் அவர் எழுதிய கதைகளை படித்திருக்கவேண்டும் இல்லையென்றால், அவரை நாம் அவமதிக்கிறோம் என்றே அர்த்தம் என பல இடங்களில் பலவாறு எழுதியிருக்கிறார். இதை மனதில் கொண்டு நான் உங்கள் அருகில் கூட வரவில்லை.



பிறகு, சென்னை திரும்பும் வழியிலேயே கிண்டிலில் அம்புப்படுக்கை சிறுகதை தொகுப்பை தரவிறக்கம் செய்து வழியிலேயே படித்து முடித்தேன்.



அ) வாசுதேவன் : அப்போது நான் டெல்லியில் இருந்தேன், திடீரென என் ஒரு வயது மகளுக்கு தொடர்வயிற்றுப்போக்கு. பெரிய அனுபவமெதுவும் இல்லையென்பதால் நானும் மனைவியும் களேபரம் செய்துவிட்டோம். என் வீட்டிலும் மனைவி வீட்டிலும் மனைவியையும் குழந்தையையும் உடனடியாக ஊருக்கு அனுப்பச்சொல்லி கட்டாயம், தினமும் 8-10 தொலைபேசி அழைப்புகள். பணமில்லாததால் விமானத்தில் அனுப்ப முடியாது, தொடர்வண்டியில் அனுப்பினால் இரண்டு நாள் ஆகும். இன்னசெய்வது என யோசித்திக்கொண்டிருக்கும்போது கூட வேலைசெய்யும் வயதில் மூத்த நண்பரொருவர் சொன்னார், "அங்கெல்லாம் அனுப்பாதே, ஒரு குழந்தையை (எந்த வயதானாலும் பிள்ளைகள் பெற்றோருக்கு குழந்தைகளே) மனம் சலிக்காமல் பார்த்துக்கொள்ள பெற்றோரால் மட்டுமே முடியும், இவற்றை சொன்னால் மனம் சங்கடப்படும், ஆனால் உண்மை இதுதான். நீங்களே குழந்தையை பார்த்துக்கொள்ளுங்கள்" என்றார். நான் என் மகளை அனுப்பாமல், உடன்வைத்து நானும் மனைவியும் பார்த்துக்கொண்டோம். அதேநேரத்தில், இது நடந்து 8 ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு ஒரு அறுவைசிகிச்சை நடந்தபோது என் பெற்றோரும் மனைவிக்கு டெங்கு வந்தபோது அவருடைய தாயாரும் வந்து கவனித்துக்கொண்டபோது இதை என்னால் நன்றாக புரிந்துகொள்ள முடிந்தது. இப்போதும் மகளுக்கு உடல் நலமில்லையெனில் நாங்களே பார்த்துக்கொள்கிறோம். இந்த கதையை படித்தவுடன், எனக்கு என்னுடைய புரிதல்கள் மிகவும் சரியென தோன்றிய தருணங்கள்... என்னால் மறக்க முடியாது. வாசுதேவனை அவனுடைய பெற்றோர் அவன் அப்படியே இருக்கட்டும், நாங்கள் இருக்கும்வரை பார்த்துக்கொள்கிறோம் என சொல்வது, இதே உணர்வினால் மட்டுமே.



ஆ) பேசும்பூனை : இந்தக்கதையின் கரு ஒரு சமகால பிரச்னையை அலசுகிறது. Talking Tom என்னும் செயலி வந்தபுதிதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரையும் பைத்தியமாக அடித்தது. அதேபோல சிலபல செயலிகள் மூலம் விளையாட்டு என சொல்லி மூளைக்கு ஏற்றப்பட்டு கைபேசியின் பயன்பாட்டை அதீதமாக வளரச்செய்து மூளையின் செயல்பாட்டையும், சிந்திக்கும் திறனையும் குறைக்கச்செய்து தங்கள் இலாபத்தை அதிகப்படுத்திக்கொண்டன. இதனால் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்களை மிகவும் சிறப்பாக சொல்கிறது. அந்த பிரச்சனை இப்போது ALEXA என்னும் புதிய செயலி மற்றும் மின்னணு இயந்திரம் மூலம் மேலும் வளரப்போகிறது. இப்போதே ALEXA-வும், SIRI-யும் அதுவாக பேசுவதையெல்லாம் பதிவுசெய்து இணையதளத்தில் ஏற்றம் செய்கின்றன என்னும் செய்திகள் பரவலாக வருகின்றன. நமக்கென எந்தவொரு அந்தரங்கத்தையும் வைத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையை இந்த சாதனங்கள் ஏற்படுத்தியுள்ளன. இதையும் வைத்து பேசும் கைபேசி என்னும் பேசும்பூனை-2.0 வர வாய்ப்பு உள்ளது.



இ) கூண்டு : இதுவும் ஒரு சமகால பிரச்னையை அணுகி அலசும் கதை. ஒரு தவறு நிகழ்கிறது எனில், அதை தட்டிக்கேட்காத, அதை உணராத ஒவ்வொருவரும் அந்த தவறுக்கு பொறுப்பாகிறார்கள் என்பதே நான் புரிந்துகொண்ட தரிசனம். இந்தியன் திரைப்படத்தில், சேனாபதியின் வார்த்தைகளில், "பண்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு இலஞ்சம் பழகிப்போயிருக்கு" என்னும் வாக்கியம். நாம் ஒரு தவறு செய்தோமென்றால், உடனே பார்ப்பது வேறுயாராவது அதே தவறை செய்து தப்பித்திருக்கிறார்களா என்பதே. எவரும் நம்மை விலக்கவில்லையென்றால், அந்த தவறை நாம் செய்ய தயக்கமிருப்பதில்லை. யாரையும் எந்தத்தருணத்திலும் ஏமாற்றாத ஒருவன் இருப்பனெனில் அவனை கூண்டுக்கு வெளியே தனித்து இருக்கும் ஒருவன் என நாம் பரிதாபப்படுகிறோம், பிழைக்கத்தெரியாதவன் என்று சொல்லி எள்ளி நகையாடுகிறோம். ஆனால் கூண்டுக்குள் இருப்பது நாமே என நமக்கு உறைப்பதே இல்லை.



ஈ) பொன்முகத்தை பார்ப்பதற்கும் போதைமுத்தம் பெறுவதற்கும் : கிராமத்திலிருந்து ஒரு சிறுவன் பொறியியல் படித்துவிட்டு சென்னையிலோ, பெங்களூரிலோ பன்னாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்கிறான். பிறகு வாழ்க்கையின் அடுத்தகட்டமான திருமணம், குழந்தைகள் என்பன தொடரும். குழந்தைகள் பிறந்தபிறகுதான் முக்கியமான பிரச்சனை தொடங்கும். கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்லும்பட்சத்தில் தாத்தா-பாட்டி இருவரும் பேரன்-பேத்தியை பார்த்துக்கொள்ள கிராமத்திலிருந்து தங்களுக்கு சிறிதும் பழக்கமில்லாத அடுக்குமாடி கட்டடத்திற்கு வருவார்கள். அவர்களின் அவஸ்தையை சொல்வதே இந்த கதை. நேரடியாக இதிலும் எனக்கு அனுபவம் உண்டு. டெல்லியிலிருந்தபோது ஒவ்வொரு வருடமும் என் பெற்றோர் இரண்டு மாதங்கள் அங்கே வருவார்கள். புரியாத மொழி, அறியாத கலாச்சாரம் என அவர்களின் அவஸ்தையையும், நண்பர்கள் இல்லாமல் பேசவும் ஆளில்லாமல் அவர்களின் கஷ்டத்தையும் பார்த்து சென்னை வர கிடைத்த முதல் வாய்ப்பையே தவறவிடாமல் ஒரு நிறுவனத்தில் சேர்ந்தேன். அங்கே ஒருமுறை டெல்லியில் இருந்தபோது என் பாட்டிக்கு உடல்நலமில்லாமல் போய்விட நானும் வெளிநாட்டில் இருக்க என் பெற்றோருக்கு விமானத்தில் சென்னை திரும்பவேண்டிய சந்தர்ப்பம். மிகவும் கஷ்டப்பட்டதாக அம்மா சொல்ல நான் அங்கே வெளிநாட்டில் அழுதுகொண்டிருந்தேன். இவ்வாறு பேரப்பிள்ளைகளுடன் இருப்பதற்காக இவர்கள்படும் அவஸ்தை கொஞ்சநஞ்சமில்லை.



உ) அம்புப்படுக்கை : நாம் பலநேரங்களில் மருத்துவரிடமிருந்து மருந்தைத்தவிர நம்பிக்கையையும் ஆறுதலையும் கூடத்தான். மருத்துவரின் எல்லாம் நல்லபடியா ஆயிடும், ஒண்ணும் கவலைப்படாதீங்க என்னும் வாக்கியத்திற்கு நிகரான இன்னொரு ஊக்கமூட்டும் வாக்கியத்தை கண்டுபிடிப்பது கடினம். இந்த கதையில் ஆனாரூனா செட்டியாருக்கு அடுத்தவருக்கு சொல்ல பலவிபிஹமான சாகசங்கள் நிறைந்த கதைகள் உண்டு. அவற்றில் நேதாஜியும், வெள்ளையரும், ஜப்பானியரும் வருவார்கள். ஆனால் அவர் எதிர்பார்ப்பது அவர் பலகாலமாக நம்பும் ஒரு வைத்தியரின் வார்த்தைகளையே. ஆனால் அவர் இல்லாததால் அவருடைய வாரிசிடமிருந்து. அவனும் ஒருவரை நோயிலிருந்து விடுவிப்பதென்பது நோயை குணப்படுத்துவது மட்டுமில்லை என்று நன்றாக அறிந்திருக்கிறான். எங்களூரான தருமபுரியில் ஒரு மருத்துவர் ஊட்டும் நம்பிக்கையானது அதீதமானது. அவரால் இன்னும் வாழ்வோர் ஏராளம். அதேநேரத்தில், வயதானவர்கள் சென்றால், நம்பிக்கையூட்டுவதோடு இந்த வயது வந்தால், இந்தமாதிரி பிரச்சனையெல்லாம் வரும், அதற்காக மனதை தயார் செய்து அனுப்புவார். பீஷ்மர் அம்புபடுக்கையின் வலியை பொறுத்துக்கொண்டு வாழ்வதைப்போல வாழ வழிசொல்வார்.



ஊ) ஆரோகணம் : போர் முடிந்துவிட்டது, அஸ்வமேதம் முடிந்துவிட்டது. பிள்ளைகளை இழந்து பேரனான பரிக்ஷித்திற்கு பட்டம் சூட்டிவிட்டு நாடுநீங்கி பாண்டவர்கள் மலையேறி செல்கிறார்கள். ஒவ்வொருவராக விழ தன்னை ஆரம்பத்திலிருந்து தொடர்ந்த நாயுடன் யுதிஷ்டிரர் எனப்படும் தருமர் நடந்துகொண்டே இருக்கிறார். அந்த நாயின் பொருட்டு சொர்க்கத்தையே மறுக்கும்போது அந்த நாயானது தருமதேவதையாக மாறுகிறது. அதுதான் அவர் அதுநாள்வரை கட்டிக்காப்பாற்றிவந்த அறம், தருமம். அதேபோல காந்தியும் யாருமில்லாதபோதும் தனியாக பலமுறை நடந்தார், எதன்பொருட்டும் அவர் தன்னுடைய கொள்கைகளையோ கருத்துக்களையோ மாற்றிக்கொள்ளவில்லை. அதுவே அவருடைய அறம். இந்த புனைவில் இவ்விரண்டுபேரும் இணைகிறார்கள். கதையில் சேர்ந்து நடக்கிறார்கள். காந்தியும் மக்களுக்காக நிஜஉலகின் சுவர்க்கத்தை விட்டதுபோல மேலுலகின் சுவர்க்கத்தையும் விட்டிருப்பார் என்பது தெள்ளத்தெளிவு.



எ) குருதிச்சோறு : நாட்டார் தெய்வங்களை குறித்த பல படைப்புகள் உள்ளன. அந்த நாட்டார் தெய்வங்கள் எந்தப்புள்ளியில் எவ்வாறு வைதீக வழிபாட்டு முறைக்குள் சேர்ந்துகொள்கின்றன என்பதே இந்த கதையின் கதைக்களம். இதில் பாலாயியே மனதில் ஆறாவடுவென மனதில் நிற்கிறாள். சபரியும் சுடலையும் அவரவர் புரிதலுக்கு ஏற்றவாறு தெய்வங்களை அறிகின்றனர். அன்னரக்ஷாம்பிகையோ, பாற்கடலில் ஆதிசேஷனின் மீது துயிலும் நாராயணனோ, பாலாயியோ, அன்னபூரணியோ எவர்மூலமாகவும் என்னுடைய தரிசனம் என்பது இருப்பதை உடனுள்ளோருடன் பகிர்ந்துண் என்பதே.



ஏ) திமிங்கலம் : எதிர்காலத்தில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை பலர் பலவிதமாக எழுதியுள்ளனர். அவற்றில் ஒரு சாத்தியத்தை இந்த கதை கூறுகிறது. வளர்ப்புப்பிராணிகளை கொல்வதும், வயோதிகர்களை தற்கொலைக்கு தூண்டுவதும் முதியோர் இல்லங்கள் மலிந்துள்ள இந்தக்காலகட்டத்தில் நடக்க வாய்ப்புகள் இல்லையெனினும் எதிர்காலத்தில் நுகர்வுலகத்தில் நடக்க வாய்ப்புக்கள் அதிகமென தோன்றுகிறது.



மற்ற இரண்டுகதைகளான காளிங்க நர்த்தனமும் 2016ம் கதைகளாக சிறப்பாக இருந்தபோதிலும் எனக்கான புரிதல்களை தரவில்லை. ஜார்ஜ் ஆரவெல்லின் 1984 கதையை படித்தால் பிடிகிடைக்க வாய்ப்புகள் உண்டு. ஒருமுறை ஜெயமோகன் கூறியதுபோல காளிங்க நர்த்தனம் கதையை மீள்வாசிப்பு செய்தால் அதிலுள்ள படிமங்களெனும் கதவுகள் எனக்காக திறக்கலாம்.

Monday, September 9, 2019

மதிமுகம் நேர்காணல்

சென்ற மாதம் சென்னைக்கு செல்ல வேண்டிய சூழல் இருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியே திருமதி. அபிநயா ஸ்ரீகாந்த் மதிமுகம் தொலைகாட்சிக்காக ஒரு நேர்காணல் எடுக்க வேண்டும் என நேரம் கேட்டிருந்தார். நான் சென்னைக்கு வரும் வேளையில் நேர்காணல் எடுக்க அவருக்கு தோதாக இல்லை. அபிநயா ஸ்ரீகாந்த் அவர்களை 'யாவரும்' நிகழ்வு ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகம். பயனன்றே மதிமுகம் தொலைகாட்சிக்காக அவர் 'ஒரு படைப்பாளரின் கதை' எனும் பெயரில் எழுத்தாளர்களை நேர்காணல் செய்கிறார் என அறிந்து கொண்டேன். இதுவரை முப்பதிற்கும் மேற்பட்ட எழுத்தாளர்களை வாசித்து அவர்களை நேர்காணல் செய்கிறார். தமிழ் இலக்கிய சூழலில் இது ஒரு பெரிய விஷயம் என்றே எண்ணுகிறேன். நேர்காணல்கள் அபூர்வம் அல்ல ஆனால் பெரும்பாலும் பெரியதயாரிப்பு ஏதுமன்றி பொதுவான கேள்விகளே எழும். குறிப்பாக காட்சி ஊடகத்தில் இது அபூர்வம்.  அவ்வகையில் எனக்கும் மதிமுகம் நேர்காணல் நிறைவான அனுபவமாக இருந்தது.  சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பான எனது நேர்காணல் இப்போது யூ டியுபில் வலையேற்றப் பட்டுள்ளது. மதிமுகம் தொலைக்காட்சிக்கும், அபிநயா ஸ்ரீகாந்திற்கும் எனது நன்றிகள். கண்ணாடி போடாமல் சுவிசேஷ ஜபக்கூட்ட போதகர் போல் உள்ளதாக நண்பர்கள் சொன்னார்கள். கண்ணாடியை கழட்டியவுடன் முகத்தில் இருப்பதாக நம்பப்படும் அறிவுஜீவி களையும் காணும். 



Tuesday, August 20, 2019

பெரும் படம் காணல்- நரோபா

சுழல மறுத்த நிலைக்காற்றாடியின் இரும்புச் சட்டத்தை கழற்றி விட்டு என்ன செய்தால் சுற்றும் என்று தெரியாமலேயே எதையாவது கழற்றி மாட்டினால் சுற்றிவிடும் எனும் ஐதீகத்திற்கு இணங்க பழுவேட்டையர் திருபுளியை வைத்துக்கொண்டு அமர்ந்திர்ந்தார். காலையிலிருந்து மனம் அமராமல் படபடத்துக்கொண்டிருந்தது. செவப்பட்டி சிங்காரம் செவப்பட்டி எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைக்காக வண்டை வண்டையாக திட்டியிருக்கிறான் என செய்தி வந்தது. நேற்றிரவு சினிமாவுக்கு வந்தபோது முட்ட பப்சும் போண்டாவும் வாங்கிக்கொடுத்தவன் காலையில் ஏன் இப்படிச் செய்தான் என புரியவில்லை. அறையின் ஒற்றைக் காற்றாடியும் ஓடவில்லை என்பதால் வெளியேயும் புழுங்கியது. அரவமற்ற தெருவில் கிடாரம் கொண்டானின் சைக்கிள் திணறும் ஒளியை துல்லியமாக கேட்க முடிந்தது. திருபுளியை போட்டுவிட்டு அவசர அவசரமாக கசன்சாகிசின் 'ஜோர்பா எனும் கிரேக்கன்' நாவலை எடுத்துக்கொண்டு சுவரில் சாய்ந்து ஜென் நிலைக்குச் சென்றார்.

கிடாரம் சைக்கிளைக் சுவரில் சாய்த்துவிட்டு அரக்கப்பரக்க ஓடிவந்தான். சுவரில் சாய்ந்து புத்தகத்தை திறந்து கண்மூடிக் கிடக்கும் பழுவேட்டையரைப் பார்த்ததும் சற்று அமைதியானான். ஓசையின்றி அதேநேரம் தான் வந்ததை அறிவிக்கும் அளவிற்கு சலனம் ஏற்படுத்தி அவர் முன் சப்பணமிட்டு அமர்ந்தான். மூன்று நிமிடம் ஆகியும் கண் திறக்கவில்லை என்றதும் கிடாரம் பொறுமையிழந்தான். அவனாக கூப்பிடும் வரை ஜென் நிலையைத் துறக்க முடியாத கடுப்பில் அவன் கூப்பிடுவதற்காக செவி கூர்ந்து காத்திருந்தார். கூப்பிட்டால் தவம் கலைந்துவிட்டது என திட்டுவாரோ என குழம்பி கிடாரம் காத்திருந்தான்.  பொறுமையிழந்து அரைக்கண்ணால் பழுவேட்டையர் பார்ப்பதற்கும் கிடாரம் "அண்ணே" என அழைபப்தற்கும் காலப்பொருத்தம் அபாரமாக இருந்தது.

"வா கிடாரம்..என்ன விஷயம்"

"அதானே இந்த செவப்பட்டி சிங்காரம் பிரச்சனையப் பத்தி ஒலகமே அல்லோலகலப்படுது..நீங்க என்னடான்னா இங்க இப்படி அமைதியா இருக்கீங்க"

"ஒலகமேன்ன? ஒலகமேவா"

"அட..ஒலகமேன்ன ஒலகம் இல்லைனே, நம்ம இலக்கிய உலகத்தச் சொன்னேன் "

"இலக்கிய உலகம் முழுக்கவா?"

"இலக்கிய உலகம்னா.. அப்படி  முழுக்க சொல்லிரமுடியாதுல. மரபு குருப்பு, ரமணிச்சந்திரன் குருப்பு.. இவங்கல்லாம் வேற இல்லியா...நாஞ்சொல்றது நம்ம நவீன இலக்கியப் பரப்புண்ணே"

கண்ணாடியை கழற்றி கைலியில் துடைத்துக்கொண்டே
"நவீன இலக்கியம் முழுக்கன்னு சொல்ற.."

தலையை சொறிந்துகொண்டான். "அப்படிச்சொல்ல முடியுமான்னு தெரிலண்ணே..எப்படியும் ஃ பேஸ்புக்ல இருக்குற முன்னூறு நானூறு பேராவது இருப்பாய்ங்க"

"அவ்ளோ பேரா இருக்காய்ங்க?"

"துல்லியமா சொல்ல முடியாது அண்ணே, ஃபேக் ஐடி, எல்லாம் கழிச்சா எப்படியும் முப்பது நாப்பது பேராவது இருப்பாய்ங்க"

பழுவேட்டையர் கண்ணாடியை அணிந்துக்கொண்டு துள்ளி எழுந்து அமர்ந்தார்.
"அப்புறம் என்ன மஸ்துகுடா ஒலகம் முழுக்கன்னு சொன்ன?"

"கோவிக்காத அண்ணே.. செவப்பட்டி சிங்காரம் இவ்வளவு சொல்லியிருக்கான். நீ எழுதுன செவப்பட்டி இலக்கிய வரலாறு ல முன்னூறு பேரச் சொல்லலைன்னு சொல்றான். மாலை மலர், சிறுவர் மலர், ஆண்டு மலர், அறுபதாம் கல்யாண மலர், காதுகுத்து போஸ்ட் கார்ட், நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே இரங்கல் அஞ்சலி போஸ்டர், பனமரத்துல வவ்வாலா தலைவனுக்கே சவாலா  பேனர் வாசகங்கள்ன்னு ஆதாரத்தோட அடுத்தடுத்து நீங்க புறக்கணிச்ச ஆளுமைகளை பத்தி வெளியிடுறான் அண்ணே, நீ அங்க வந்து எதாவது பதில் சொல்லலாம்ல"

பழுவேட்டையர் எழுந்து நின்றார். கைலியில் சுருட்டி வைத்திருந்த பீடியைப் பற்றவைத்துவிட்டு வானத்தைப் பார்த்தார். அங்கே பட்சிகள் பறந்து கொண்டிருந்தன. தொலைதூரத்தில் கூவும் குயிலின் ஓசை கேட்டது. சூரியன் அப்போதுதான் துலங்கத் தொடங்கியிருந்தான். ஆழ மூச்சிழுத்து விட்டார்.

"கிடாரம் நாம இதுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது. எழுத்தாளன் எப்போதும் ஒரு பெரியச் சித்திரத்த தான் பாக்கணும்"

"அவன் உங்க வாசிப்பு சரியில்லன்னு சொல்றான்"

இன்னும் நிதானமான குரலில் "நாம ஒட்டுமொத்த சித்திரத்தப் பாக்கணும்" என்றார்.

கிடாரம் குழம்பியது அவனுடைய முகத்தில் தெரிந்தது. "அண்ணே நீங்க வேணும்னே பலபேர விட்டுடீங்கன்னு சொல்றான்.."

தூரத்தில் ரயில் தடதடக்கும் ஓசை கேட்டது. நாசியில் பூத்த மல்லியின் வாசனை நுழைந்து கிறங்கடித்தது.

"கிடாரம்.. கொஞ்சம் நிதானமா யோசிக்கணும், சிங்காரம் நம்ம பய, ஏதோ பேசிட்டான், நமக்கு ஒரு ஒட்டுமொத்த பார்வை இருக்குல்ல" என்றான் நிதானமாக.

கிடாரம் எழுந்து கீழேக்கிடந்த சுழலாத நிலைகாற்றாடியை ஆவேசமாக உதைத்தான். "போடா லூசுக்கூதி அவன் நீ காசு வாங்கிட்டு எழுதுறன்னு சொல்றான், வாயத்தொறந்து எதாவது சொல்றான்ன ஒட்டுமொத்தப் பார்வை, பெரிய சித்திரம்னு, சொல்றா கண்டராவொளி ..என்னடா உன் ஒட்டுமொத்த பார்வை?"

கிடாரத்தின் ஆவேசம் பழுவேட்டையரை நிலைக்குலையச் செய்தது. அவன் எப்போதும் இந்தமாதிரி நடந்துகொண்டதில்லை. அவன் தோள் தொட சென்றபோது சிணுங்கி விலகினான்.

"கிடாரம்..இப்புடி உக்காரு..பேசுவோம்.. என்னடா பொசுக்குன்னு வார்த்தைய விட்ட.. அண்ணன் காசு வாங்கிருப்பேனாடா? இந்த ஓட்ட ஃபேனைப் பாத்தப்புரமும் எவனாவது சொல்வானாடா?"

கிடாரம் விசும்பி அழத் தொடங்கினான். "எனக்குத் தெரியும் அண்ணே..இருந்தாலும் ஊர் பெசுதுல"

தோளோடு அணைத்து அவனை ஆறுதல் படுத்தினார். "ஊர் ஆயிரம் பேசும் டா..போட்டும் விடு"

"அண்ணே இப்பயாச்சும் சொல்லு, அதென்ன பெரிய சித்திரம்?"

"அது வந்துடா..சொல்றேன்" என மெதுவாக ஆரம்பித்தார்.

"மொத்தம் நாலு யுகம் இருக்கு தெரியும்ல..சத்ய யுகம், கிருத யுகம், த்வாபர யுகம், கலியுகம்..அது அடுத்தடுத்து வரும். காலம் ஒரு சுழற்சி..பெரியச் சக்கரம்"

கிடாரம் ஆர்வமாகக் கேட்டான்.

கொஞ்சநேரம் யோசித்த பின் மீண்டும் தொடர்ந்தார் "சரி அதவிடு, இப்ப வேற சொல்றேன், இந்த பிரபஞ்சம் விரிவாகிட்டே இருக்கு, அது முன்ன குட்டியா ஒரு பந்தாட்டம் இருந்துதாம், வெடிச்சு விரிவாகிட்டே இருக்கு, திரும்ப அது சுருங்கி ஒண்ணுமில்லாம போயிரும்"

கிடாரம் குழப்பமாகப் பார்த்தான்.
அவனுடைய சங்கடத்தைப் புரிந்துகொண்ட பழுவேட்டையர்
"சரி இதையும் விடு இப்ப வேற சொல்றேன்..நம்ம பூமி முழுக்க ஒருகாலத்துல பனி உறைஞ்சு கிடந்துதாம்..அப்புறம் உருகிடுச்சாம்..இது திரும்பத் திரும்ப நடக்குமாம்..கண்டத் தட்டுகள் எல்லாம் நகந்துக்கிட்டே இருக்காம், இந்த உலகத்த காப்பாத்த, நாம வாழறதுக்கு எல்லாம் நாம எதுவுமே செய்ய முடியாது. நாம எதவாது செஞ்சாலும் இல்லைன்னாலும் உலகம் அழியத்தான் போகுது. புரியுதா? எல்லாம் சுழற்சிதான்"

கிடாரம் மேலும் குழம்பினான்.

பழுவேட்டையர் வானில் பறக்கும் பட்சிகளை நோக்கியபடி கிடாரத்தை நோக்கித் திரும்பிச் சொன்னார்

"இம்மாம்பெரிய பிரபஞ்சத்துள, சின்ன உலகத்துல, தக்குனூன்டு இலக்கிய உலகம் எம்மாத்திரம் சொல்லு?" என்றபோது அவருடைய முகத்தில் அபூர்வ ஒளி பரவியது.

கிடாரத்திற்கு புரிந்தமாதிரியும் இருந்தது, புரியாதமாதிரியும் இருந்தது.  உதைந்த நிலைக்காற்றாடியை நிமிர்த்தி வைத்துவிட்டு சிந்தனைவயப்பட்டவனாக "ஆகமொத்தம் அவனுக்கு நீ எந்த பதிலும் சொல்லப் போறது இல்ல..அதானே" என்றான். "அது அப்படி இல்லடா.." எனச் சொல்லத் தொடங்கியதும். கையை நீட்டி நிறுத்தச் சொன்னான். ஏதோ முனங்கியபடி அறையை விட்டு கிளம்பிச் சென்றான்.

நிலைக்காற்றாடி சட்டகத்தைப் பூட்டி ப்ளக்கில் செருகி சுவிட்சைப் போட்டுப்பார்த்தார். காற்றாடிச் சுழலத் துவங்கியது. 
"





    

Wednesday, June 12, 2019

Chernobyl - Glimpse of apocalypse

Just completed watching the mini series Chernobyl which was aired last month in HBO. Watched the 5 episode series in Hot star. One word that came up in my mind after watching the series- haunting. Be it the music, the color and tone of visuals, the pace of narration. Everything gets darker and grim. What is the difference between art and propaganda? there is a human factor, a dilemma, a moral torment.
Image result for chernobyl

It is about confronting truth. In the post truth era, where we spin our lies and construct a make belief truth. But there is a cost to it, How long can we evade from the blatant truth? at some point we need to confront it. But then we might pay a heavy cost as we procrastinate. Chernobyl poses a severe moral pressure. On one end it portrays blatant selfish power games of a super power. On the other end it shows the unrewarded sacrifice of its martyrs, who laid their life to save millions others. The scene showing miners is a classic example. The soldiers who become bio robots to remove the graphite pieces inspite of heavy radiation are another ones. The sequence involving hunt of pet animals across chernobyl is another moving portion. The world is so homocentric. Remembered a portion from yu ming yi's novel 'The stolen bicycle' where on the eve of second world war bombing the zoo keeper had to kill the animals he guarded and fed. 

One cannot expect any accountability from Government of any form in the event of great hazard. As such the Government under the banner of looking for greater good eventually try to nullify the moral questions. Now they are going to dump the nuclear wastes at our own bak yard at koodankulam. I love my nation and these are my people and hence my protest comes out of the immense love of the nation. Who will be accountable in case of a disaster? and whom can we trust? will there be anyone left here who could be held accountable? With so much of corruption and incompetence around us what to believe and what not to believe. The bare fact is at some point there should be a bar at consumption. Instead of imposing it on the lesser developed, it should be an active sacrifice from the top end. I know it is utopic and unreasonable.Well that is the way of Gandhi. 

My sincere wishes for the crew. 



Sunday, June 9, 2019

Master and Margarita- Mikhail Bulgakov

“எழுத்தாளர்கள் அடையாள அட்டையால் உருவாவதில்லை”- புல்ககாவ், Master and Margarita.

மிகேல் புல்ககாவ் எழுதிய நாவலான ‘Master and Margarita’ பற்றி தற்செயலாக அறிய நேர்ந்தது. இதற்கு முன் பரிச்சயமற்ற இந்நாவலை, இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று என விமர்சகர்கள் மதிப்பிடுகிறார்கள் எனும் தகவல் வாசிக்க வேண்டும் என்ற பெரும் ஆர்வம் அளித்தது. இந்நாவலை வாசிக்கத் துவங்கிய பின்னர்தான் ‘காலச்சுவடு’ நேர்காணலில் பா.வெங்கடேசன், தன் மீது தாக்கம் செலுத்திய படைப்புகளில் ஒன்றாக இதைக் குறிப்பிட்டிருந்ததை கவனித்தேன்.

ஆழ்ந்த கிறித்தவ மத நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர் புல்ககாவ். ஸ்டாலினிய ரஷ்யாவில் வாழ்ந்தவர். மருத்துவர், நாடகாசிரியரும்கூட. ஸ்டாலின் அவர் மீது படைப்பாளியாக மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். பல்வேறு இக்கட்டுக்களின்போது ஸ்டாலினே நேரடியாகத் தலையிட்டு அவர் சிறை புகாமல் காத்திருக்கிறார். வாழ்வாதாரத்திற்கு ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார். பிற்காலத்தில் கிடைக்கப் பெற்ற ஆவணங்களில் சோவியத்தின் கடவுள் மறுப்பு புல்ககாவ் மனதை ஆழமாகத் தொந்தரவு செய்துள்ளது தெரிகிறது. “இயேசு  ஒரு இழிமகனாகவும், ஏமாற்றுக்காரனாகவும் சித்தரிக்கப்படுகிறார்... இந்தக் குற்றத்தை என்னவென்று அழைப்பது” என்று எழுதுகிறார். இந்நாவல் ஒருவகையில் அந்த உணர்வைச் சமன் செய்ய எழுதப்பட்டது என்றுகூட தோன்றுகிறது. கற்பிதம் என்றும் பிழையென்றும்கூடச் சுட்டலாம்தான், ஆனால் வாழ்விற்கு பொருள் அளிக்கும் வல்லமை இன்னும் பெருமளவில் மதத்தையும் கலையையுமே சார்ந்திருக்கிறது. மனிதனின் ஆன்மீகத்தை அவனிடமிருந்து பிடுங்கி அழிப்பது அவனுடைய வாழ்வர்த்தத்தையும் சேர்ந்தே அழிப்பதாகும். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்பான ரஷ்யாவை விவரிக்கும் ஸ்வெட்லானா அலெக்சியவிக் நாள்தோறும் தேவாலயங்களில் பெருகும் கூட்டத்தைப் பற்றி பதிவு செய்துள்ளார்.




எழுதி, அழித்து, திருத்தி என 1928 முதல் அவர் மரித்த 1940 வரையிலான பனிரெண்டு வருடங்கள் இந்நாவலை உருவாக்கியிருக்கிறார் புல்ககாவ். நடுவில், மன உளைச்சலில் நாவலின் பகுதிகளை எரித்திருக்கிறார். “கைப்பிரதிகள் எரிவதில்லை” (Manuscripts don't burn) எனும் இந்நாவலின் ஒரு வரி ரஷ்யாவில் பிரபலமானது. நாவலை முடித்துச் சில நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் தயக்கத்துடன் வாசிக்கக் கொடுத்திருக்கிறார். நாவலை வெளியிடுவதான திட்டமே அவரிடம் இல்லை. இப்படிப்பட்ட ஒரு நாவல் அவரிடம் இருப்பது தெரிந்தாலே அவருக்கு மிகப்பெரிய சிக்கல் எனும் சூழலே நிலவியது. அவர் மரித்து இருபத்தேழு ஆண்டுகளுக்குப் பின், ஸ்டாலினின் காலம் முடிவுக்கு வந்த பின்னர், இந்நாவல் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றது. புல்ககாவுக்கு மறுக்க முடியாத இலக்கிய இடத்தை பெற்றுத் தந்தது.

சாத்தானின் வடிவமாக திகழும் பேராசிரியர் ஊலண்ட் மற்றும் அவருடைய சகாக்கள் மாஸ்கோவில் நிகழ்த்தும் அட்டகாசங்கள் மற்றும் மாஸ்கோவின் இலக்கியச் சூழலின் மீதான பகடி, இயேசுவின் வழக்கில் தீர்ப்பு வழங்கிய பாண்டியஸ் பைலேட்டை மையமாக கொண்டு விவரிக்கப்படும் பண்டையகால ஜெருசேலம், நாவலின் பிற்பகுதியில் அறிமுகமாகும் நாவலாசிரியரும் அவருடைய காதலியுமான மார்கரீட்டாவின்  கதை என நாவல் மொத்தம் மூன்று தளங்களில் நிகழ்கிறது. கிறித்துவின் வழக்கை விசாரித்த பாண்டியஸ் பைலேட்டின் கதை சாத்தானின் வாய்மொழியாக, இவான் எனும் கவிஞன் காணும் கனவாக, மாஸ்டர் எனத் தன்னை அழைத்துக் கொள்ளும் நாவலாசிரியரின் நாவலின் பகுதியாக என வெவ்வேறு தளங்களை இணைக்கும் சரடுகள் பின்னிச் செல்கின்றன.

சமகால மாஸ்கோவின் நிகழ்வுகள் யதார்த்தத்தை மீறிய மாந்த்ரீகத்தன்மை கொண்டவையாகவும், அற்புதங்களை செய்த இயேசு கிறித்துவின் காலகட்டத்து சித்தரிப்புகள் மிகுந்த யதார்த்தத்துடனும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டுள்ளன. இந்த தலைகீழ் திருகல் வெறும் யுத்தியன்று. பாண்டியஸ் பைலேட் ஏசுவுக்கு அளித்த மரண தண்டனை சார்ந்த குற்ற உணர்வே நாவலின் மைய உணர்வு. வெவ்வேறு தருணங்களில் ‘உள்ளதிலேயே மிக மோசமான தீயவழக்கம் என்பது துணிவின்மை’ எனும் வசனம் ஒலிக்கிறது. அதிகாரத்தின் நிழலில் நின்று தனி மனிதனாக நியாயத்தை நிலைநாட்ட முடியாத இயலாமை பாண்டியசை இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலாக மீட்சியின்றி வதைக்கிறது. நிலவொளியில் தூக்கமின்றி அவனுடைய உற்ற துணையான நாயுடன் வதைபட்டு கொண்டிருக்கிறான். மாஸ்டர் அவனுடைய நாவலின் முடிவின் வழியாக அவனுக்கு மீட்சியை அளிக்கிறான். யேசுவுடன் இணையாக நிலவொளிப்பாதையில் பேசிக்கொண்டே நடக்கிறான். ஒருவகையில் ஸ்டாலினால் காக்கப்பட்டு, அரசின் அடக்குமுறைக்கு எதிராக எதையும் நிகழ்த்த முடியாத தனது கோழைத்தனத்தின் பிரதியாகதான் பாண்டியசை உருவாக்கினார் புல்ககாவ் என விமர்சகர்கள் சுட்டுகிறார்கள். நாவலில் நிலவு மனசாட்சியின் உருவகமாக பல்வேறு இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. நிலவு அவர்களை வதைக்கிறது. அமைதியிழக்க செய்கிறது.

சாத்தானும் அவனுடைய சகாக்களாக வரும்  ஃபெகோட் எனும் நீள்கழுத்துக்காரன், பெஹெமோத் எனும் பேசும் பூனை, அசசெல்லோ எனும் ஊத்தப்பல்கார அடியாள் மற்றும் ஹெல்லா எனும் சூனியக்காரி ஆகியவர்கள் மாஸ்கோவில் நிகழ்த்தும் மாந்த்ரீக அற்புதங்கள் இருண்ட அங்கதத்தின் உச்சங்கள். புல்ககாவ்வின் முத்திரைப் பகுதிகள் என இவற்றை சொல்லலாம். எளிய நேரடி விவரணைகள் மற்றும் மெல்லிய பகடி வழியாக அச்சமூட்டும் ஆழங்களைச் சித்தரிக்க அவரால் முடிகிறது.  மந்திரவாதிகளாக அறிமுகமாகி மாஸ்கோவின் நாடக மேடையில் இவர்கள் நிகழ்த்தும் நிகழ்ச்சியின் சித்தரிப்பும் மனிதர்களை இயக்கும் பேராசை, பொறாமை, சிறுமை போன்ற  இயல்புகளின் அபார பகடி.

“மாஸ்கோ எனும் நகரத்தின் கட்டிடங்கள் மாறியிருக்கின்றன, ஆனால் மனிதர்கள் மாறவில்லை” என்கிறான் சாத்தான். பாடற்குழு இயக்குனர் என அறிமுகம் செய்துக்கொண்டு ஃபெகோட் ஒரு அரசு அலுவலகத்தின் பணியாளர்கள் அனைவரையும் கூட்டிசை இசைக்கச் செய்யும் பகுதியை எழுதுவதற்கு அபார கற்பனை வேண்டும். பாவிகளுக்கு அளிக்கப்படும் வேனிற்கால முழுநிலவு விருந்து நாவலின் மற்றொரு மிக முக்கியமான பகுதி. நள்ளிரவில் அங்கு வந்து சேரும் ஒவ்வொரு மனிதர்களையும்  விருந்து உபசரிப்பவரான மார்கரீட்டாவுக்கு அவர்களின் பாவங்களை கொண்டு அறிமுகம் செய்யும் பகுதி துணுக்குறச் செய்யும். ஃபிரைடா எனும் இளம் பெண் ஏமாற்றப்பட்டு கர்ப்பமடைந்து பெற்ற குழந்தையை தனது கைக்குட்டையால் அழுத்திக் கொல்கிறாள். விசாரணையின்போது குழந்தைக்கு தன்னால் பாலூட்ட முடியாததே காரணம் என்கிறாள். ஒவ்வொருநாள் இரவும் அவள் அன்று அழுத்திய கைக்குட்டை சாத்தானால் அவளுக்கு முன் கொண்டு வைக்கப்படும். மார்கரீட்டா விருந்தினர்களை உபசரித்ததற்கு பிரதிபலனாக அவளுடைய மீட்சியை கோருகிறாள். பெஹெமோத் மற்றும் ஃபெகோட் மாஸ்கோவின் இலக்கிய அமைப்பின் கட்டிடத்திற்குள் சென்று நிகழ்த்தும் குழப்பங்கள், கிளம்புவதற்கு முன் கட்டிடங்களை எரித்துச் செல்வதெல்லாம் ரகளையான சித்தரிப்புகள்.

 சாத்தானிடம் உலகத்தின் பிரதியாக சிறிய அளவிலான  உலக உருண்டை ஒன்றிருக்கும். உலக நிகழ்வுகளை அதில் காணலாம். மார்கரீட்டாவிற்கு போர் நடக்கும் ஓர் இடத்தை காட்டுவான். அப்போது போரை நிர்வாகம் செய்யும் சாத்தானின் மற்றுமொரு சகாவான அபாடான் குறித்து பெருமையாகச் சொல்வான். மரித்து கிடக்கும் பிறந்த குழந்தையை காண்பித்து, “பாவம் செய்வதற்கு கூட அவனுக்கு நேரமில்லை. அபாடானின் பணி அற்புதமானது. அவன் ஒரு போதும் சமநிலை தவறாதவன், போரின் வெற்றி தோல்விகளுக்கு அப்பால் இரு பக்கத்திற்கு சம அளவிலேயே பாதிப்பை அளிப்பவன்.” என்பான்.
  
மனநல மருத்துவமனையில் இருக்கும் நாவலாசிரியர் மாஸ்டர் தனது பக்கத்து அறையில் இருக்கும் இவானுக்கு தனது கதையை கூறுகிறார். இவான் ஒரு வளரும் கவிஞன், சாத்தானை முதன் முதலாகச் சந்தித்தவன். அவனுடைய சாட்சியங்களின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டு மனநல மருத்துவமனையில் அனுமதிக்கபட்டவன். மாஸ்டர் தனது நாவலைப் பற்றியும் மார்கரீட்டாவுடன் தனது காதலையும் பற்றி சொல்கிறான். மார்க்கரீட்டா அவனது நாவலை அனுதினமும் பெருங்காதலோடு வாசிக்கிறாள், அவனுக்கு துணை நிற்கிறாள். அவனுடைய நாவலின் கைப்பிரதி சில விமர்சகர்களால் நிராகரிக்கப்படுகிறது. மனமுடைந்து போகிறான். மொத்த நாவலையும் எரிக்கிறான். மிக சிறிய பகுதியை மார்க்கரீட்டா காப்பாற்றுகிறாள். பொருத்தமற்ற மணவாழ்வில் இருக்கும் மார்க்கரீட்டா திருமணத்தை உதறிவிட்டு அவனுக்காக வருவதாக சொல்கிறாள். துணிவின்றி பித்தேறி மனநல மருத்துவமனையில் சேர்கிறான். மாஸ்டர் என்ன ஆனான் என்றறியாமல் அவள் காத்திருக்கிறாள். சூனியக்காரியாகும் வாய்ப்பை சாத்தான் அவளுக்கு வழங்கியபோது, அதை ஏற்று படைப்பை நிராகரித்த விமர்சகரின் வீட்டை நாசம் செய்கிறாள். சாத்தானிடம் மாஸ்டரை மீட்டுக்கொடுக்கும்படி கேட்கிறாள்.

புல்ககாவ் இருளையும் ஒளியையும் துருவப்படுத்தாமல் இரண்டும் இன்றியமையாதது என இந்நாவலில் காட்டுகிறார். தேவனும் சாத்தானும் சேர்ந்தே உருவாக்குகிறார்கள் இவ்வுலகை. சாத்தானையும் அவனுடைய சகாக்களையும் நம் மனம் இயல்பாக நேசிக்கத் துவங்குகிறது. மத்தேயுவிடம் சாத்தான் உரையாடும்போது “தீமை என்பது இல்லையென்றால், உனது நன்மை என்ன செய்யும்? நிழல்கள் இல்லையென்றால் இவ்வுலகம் எப்படி தோற்றமளிக்கும்? பொருட்களும் மனிதர்களுமே நிழல் அளிக்கிறார்கள். இதோ எனது கத்தியின் நிழல். மரங்களும் உயிரினங்களும்கூட நிழல் அளிக்கும். கூசும் வெளிச்சத்தை அனுபவிக்க வேண்டும் எனும் உனது கனவின் காரணமாக, உலகத்தின் தோலை மொத்தமாக உரிக்க வேண்டுமா? மரங்களையும், உயிரினங்களையும் கிழித்து எரிய வேண்டுமா? நீ ஒரு முட்டாள்”.

விஷ்ணுபுரம் விருது விழா சமயத்தில் ஒரு விவாதத்தின்போது கவிஞர் தேவதச்சன்  “இவ்வுலகில் அன்பே மிகப்பெரியது என எண்ணிக் கொண்டிருந்தேன், அன்பைவிட விடுதலையே பெரியது என்பது எனது கண்டுபிடிப்பு” என்றார். நாவலின் இறுதியில் மாஸ்டரும் மார்க்கரீட்டாவும் மீட்படையவில்லை, ஆனால் அவர்களுக்கு இயேசுவின் எண்ணத்திற்கு இணங்க சாத்தானால் நிரந்தர அமைதி வழங்கப்படுகிறது. அவர்கள் காதல் செய்த அதே கட்டிடத்தின் அடித்தளத்தில் என்றென்றைக்குமாகச் சேர்ந்திருக்கிறார்கள். அவர்களுக்குப் பிடித்தமான, மனதிற்கு இதமானவை மட்டுமே சூழ்ந்த உலகு, ஒரு கற்பித உலகு அங்கு அவர்கள் நிம்மதியாக, அமைதியாக வாழலாம். ஆல்டஸ் ஹக்ஸ்லியின் ‘Brave new world’ நாவலில் எப்போதும் அமைதியாக மகிழ்ச்சியாக இருப்பதற்காக தங்களை மயக்கத்தில் ஆழ்த்திக் கொள்ளும் மனிதர்களின் சித்திரம் நினைவுக்கு வந்தது. மாஸ்டருக்கும் மார்க்கரீட்டாவிற்கும் வழங்கப்பட்ட அமைதி உண்மையல்ல. சார்லஸ் யூவின் கால இயந்திரத்தைப் பற்றிய நாவலில் கதை நாயகனின் அம்மா அவளுக்குப் பிடித்த ஒரேயொரு மணிநேரத்தை வருடக்கணக்காக மீள மீள வாழ்வாள். எல்லாமும் கட்டுப்படுத்தப்படும் முற்றதிகார தேசத்தில் சுதந்திரம் என்பது எட்டாக்கனி. குறைந்த பட்சம் தனது மன அமைதியை எப்படியேனும் தக்க வைத்துக் கொள்ளவே மக்கள் விழைவார்கள். ஓரளவு நுண்ணுணர்வை சாகடித்தால் போதும், கொஞ்சம் ஒத்துழைத்தால் போதும். முற்றதிகாரத்தில் மக்கள் ஏன் விரும்பி கீழ்ப்படிகிறார்கள் எனும் கேள்விக்கான விடை இதுதான் என தோன்றுகிறது. ஒருவேளை அன்பைக் காட்டிலும், விடுதலையைக் காட்டிலும்கூட, மிகப்பெரியது கற்பிதமாகவேனும் அடையப்படும் அமைதியும் நிம்மதியும்தானா?

The Master and Margarita, Mikhail Bulgakov,
Penguin Classics, ரூ.192/-
Amazon 

Saturday, May 18, 2019

சிங்கப்பூர் -மலேசிய பயணம் - 2

மலேசியா பற்றி இங்கே கிளம்புவதற்கு முன்னரே பலர் எச்சரித்தார்கள். கையில் அணிந்த மோதிரத்தை கூட கழட்டி வைத்துவிட்டே வந்தேன். தமிழர்கள் என நம்பி பேசிவிட வேண்டாம் என்றெல்லாம் சொல்லி கிலி ஏற்படுத்தினார்கள். இப்படிச் சொன்னவர்களில் பலரும் மலேசியா சென்றவர்கள். அலல்து மலேசியாவில் உறவினர்களை கொண்டவர்கள். ஆனால் இத்தகைய அச்சம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. கூட்டம் முடிந்தவுடன் வேதனையுடன் மலேசிய எழுத்தாளர் ஒருவர் இதை பகிர்ந்துக்கொண்டார். ஒருவகையில் மலேசிய தமிழர்கள் அனைவரையும் குண்டர் எனும் நோக்கில் சித்தரித்ததில் ‘கபாலி’ க்கு பங்குண்டு என்று வருந்தினார்.
                                  

சரண் கைக்காயம் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு செல்லாமல் விடுப்பில் இருந்தது எனக்கு பல வகையிலும் நிம்மதி. அவரும் மலேசியாவிற்கு வந்தார். நவீன் ஒரு காட்டெருமையை வாகனமாக மாற்றியிருப்பது போல் ஒரு முரட்டு கார் வைத்திருந்தார். ஐந்து பேர் அமரும் வண்டி தான். ஆனால் பிற்பகுதியில் சாமான்களை ஏற்றிச்செல்லும் வசதி கொண்டது. தோட்டப்புறத்திற்கு ஏதுவான வண்டி. மலேசியாவில் பலரும் இவ்வகை காரை வைத்திருக்கிறார்கள். செந்துல் பகுதியில் ஒரு தமிழ் கடையில் நிறுத்தி காலையுணவு உண்டோம். சிங்கப்பூர் மலேசியாவில் மைலோ ஒரு முக்கிய பானம். காபி டீயைத்  தவிர்த்து மைலோ அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்தேன். ஆனால் சிங்கப்பூருக்கு வந்த இரண்டாம் நாள் மூன்றுவேளை மைலோ குடித்தத்தில் ஒருமாதிரி மூளை சூடானது. கொக்கோ அதிகம் என்பதால் இருக்கலாம். அத்துடன் மைலோவையும் விட்டுவிட்டு பழச்சாறுகளை மட்டும் குடித்தேன். இங்கே எல்லா வகையான பானங்களையும் தண்ணி என்றே சொல்கிறார்கள். உணவுடன் சேர்த்து ஏதோ ஒன்றையும் குடிக்கிறார்கள். நெஸ்கபே, ப்ரூ போன்றவை எல்லாம் முக்கிய பானம், பசும் பால் வேண்டும் என்றால் சொல்ல வேண்டும். செந்துல் பகுதியில் நவீன் வழக்கமாக நிகழ்வு நடத்தும் ஹோட்டல் கிராண்ட் பசிபிக்கிற்கு சென்றோம். பல வருடங்களாக அங்கே நிகழ்வு நடத்துவதாக சொன்னார். அறைக்குள் சென்றதும் உறங்கி எழுந்தபோது மணி பன்னிரண்டு. ஸ்ரீதர் ரங்கராஜ் மற்றும் மஹாத்மன் எழுப்பினார்கள். 

உண்மையில் சிங்கப்பூர் பயிலரங்கு தயாரிப்பிற்கு நான் எடுத்துக்கொண்ட காலத்தை விட அதிகம் மலேசிய உரைக்கு எடுத்துக்கொண்டேன். சமகால சிறுகதை செல்நெறிகள் எனும் தலைப்பு. ஒரு கணக்கு போட்டு பார்த்ததில் இந்த பத்து வருடங்களில் ஐம்பது சிறுகதை எழுத்தாளர்களாவது அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். இருபது இருபத்தி ஐந்து தொகுப்புக்களாவது வாசித்திருப்பேன். இவர்களில் பத்து பதினைந்து பேர்களாவது அடுத்த பத்தாண்டுகள் தாண்டியும் எழுதுவார்கள் என நம்பினேன். மூவாயிரம் சொற்கள் கடந்தும் முடிவடையாத கட்டுரை ஒன்றை சமகால சிறுகதைகள் குறித்து எழுதிக் கொண்டிருந்தேன்.
ஸ்ரீதர் ரங்கராஜ், மஹாத்மன், சீ.முத்துசாமி


ஸ்ரீதர் ரங்கராஜ் இணையத்தில் பழக்கம். இப்போது அவர் சமூக ஊடகங்களில் இல்லை. இருந்த காலங்களில் கொஞ்சம் பேசியிருக்கிறோம். அவருடைய மொழியாக்கங்கள் தரமானவை. உலக இலக்கிய பரிச்சயம் உடையவர். எல்லாவற்றையும் விட மதுரைக்காரர். இயல்பாகவே அவர் மீது அன்பும் மதிப்பும் கொள்ள இவை போதும். இந்த மலேசிய பயணத்தில் மேலும் நெருக்கமானவராக அவரை உணர்ந்தேன். மகாத்மனின் கதைத் தொகுப்பை நவீன் எனக்கு அளித்தார். மலேசிய சிறுகதைகளின் சிறந்த பத்து கதைகளில் ஒன்றை அவர் எழுதி உள்ளார் என்றார். மலேசியாவின் இருண்ட பக்கங்களில் புழங்கியவர். அவ்வுலகம் குறித்து அதிகம் அறிந்தவர். அவரை எப்படியாவது ஒரு நாவல் எழுத வைத்துவிட வேண்டும் என ஊக்கப்படுத்திக்கொண்டுள்ளார். மதிய உணவுக்கு செல்லும்போது சீ.முத்துசாமி அவர்களை சந்தித்தேன். அவருடைய அண்மைய நாவலான் மலைக்காடு வாசித்திருந்தேன். எனக்கு பிடித்திருந்தது. வல்லினம் நண்பர்கள் பாண்டியன் மற்றும் கங்காதுரை இணைந்து கொண்டார்கள். சரியாக ஐம்பது பேருக்கு மட்டுமே நாற்காலிகள் போட்டிருந்தார்கள். போஸ்னியா –செர்பியா போரில் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை சார்பாக பங்கேற்ற மலேசிய தமிழ் அதிகாரியை நவீன் அறிமுகம் செய்தார். அவரையும் எப்படியாவது நாவல் எழுத வைக்கும் முயற்சியில் நவீன் ஈடுபட்டிருக்கிறார். இப்படியான ஒரு போரில் தமிழர் பங்கேற்று அந்த அனுபவத்தை நாவலாக்க முடிந்தால் சிறப்பாக இருக்கும் என கனவு காண்கிறார். நவீன் எல்லா லட்சியவாதிகளை போல் ஒரு கனவு ஜீவி தான். 
சரியாக இரண்டு மணிக்கு அமர்வு துவங்கியது. யதார்த்தவாத எழுத்துக்களை மட்டுமே முக்கியமாக கருதும் ஒரு சூழலில் மாற்று போக்குகள் குறித்து விலக்கம் உள்ளதால் தற்கால சிறுகதைகளை எப்படி அணுக வேண்டும் எனும் நோக்கில் உரையை தொடரச் சொன்னார். யதார்த்தவாதம், நவீனத்துவம், யதார்த்த மீறிய கதைகள் என வெவ்வேறு வகை கதைகள், பேசுபொருள் சார்ந்து உளவியல், பாலியல்,நவீன வாழ்க்கைச் சிக்கல், மாய யதார்த்தவாதம், அறிவியல் புனைவு, டிஸ்டோபிய புனைவுகள் என பலவற்றையும் சுருக்கமாக சில உதாரண கதைகளைக் கொண்டு விளக்கினேன். முக்கால் மணிநேர உரைக்கு பின் கேள்வி பதில் அமர்வு. சரியாக சொல்வதானால் சுமார் 2.15 மணிநேரம் கலந்துரையாடல் நிகழ்ந்தது. மருத்துவர் சண்முக சிவா, சீ. முத்துசாமி , ஸ்ரீதர், பாண்டியன் என பலரும் கேள்வி கேட்டார்கள். ஒரு கதைக்கு பலதள வாசிப்பு எப்படி சாத்தியம் என சில உதாரணங்களைக் கொண்டு விளக்க முற்பட்டேன். என் கதைகளைப் பற்றியும் உரையாடல் நிகழ்ந்தது. பெரும்பாலும் எல்லோரும் வாசித்து வந்திருந்தார்கள் என்பதால் கேள்விகள் அனைத்துமே ஓரளவு தரமானவையாக இருந்தன. மொத்தமும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வு முடிந்ததும் அர்வின், திலீப், பவித்ரா, உதயகுமார், போன்ற பலரும் வந்து பேசிக்கொண்டிருந்தார்கள். முல்லை ராமையா எங்கள் பகுதிய சார்ந்த மொழியியல் பேராசிரியர். அவர்களையும் சந்தித்து பேசினேன். புகைப்பட படலங்கள் முடிந்த பின் எனக்கும் ஒருவித நிறைவு ஏற்பட்டது. எல்லோருமாக சேர்ந்து சிரித்தபடி ஆப்பம் தேங்காய்ப்பால் சாப்பிட்டுவிட்டு கலைந்தோம்.

சரண் நான் நவீன் கோலாலம்பூரில்

நவீன் என்னையும் சரணையும் வண்டியில் கே.எல்.சிசி அழைத்து சென்றார். விளக்கொளியில் மின்னியது. வர்ண ஜாலத்தில் நடனமிடும் நீர் கோடுகளின் அருகே திட்டில் அமர்ந்து இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். மலேசிய இலக்கிய சூழல், சிக்கல்கள் என பலவற்றையும் பேசினோம். தமிழ் இலக்கியத்தின் கடைசி ஆங்கறி யங் மேன் நவீனாகத்தான் இருக்கமுடியும். பலருடன் பூசலும் சண்டையும் நிகழ்ந்தாலும் அவர்கள்மீது இப்போதும் மதிப்புடன் இருக்கிறார். அவர்கள் விலகிச் செல்வதற்கு உரிய நியாயங்கள் இருக்கக்கூடும் என புரிந்து கொள்கிறார். அங்கிருந்து சீனா டவுனுக்கு சென்றோம். அனைத்து பொருட்களின் நகல்களும் மிக மலிவு விலையில் கிடைக்கும். நவீன் பேரம் பேசி முப்பது வெள்ளிக்கு எனக்கும் சரணுக்கும் ஒரு கைக்கடிக்காரம் வாங்கிக் கொடுத்தார். சுதீருக்கு ஒரு நீர்க்குமிழி துப்பாக்கி பதினைந்து வெள்ளிக்கு வாங்கிக்கொண்டேன். பேசிக்கொண்டே இருந்தவர் தெருவின் முடிவுக்கு சென்றார். “சரண் இனிமே இது உங்க இடம்” என்றார். மலேசியாவின் சிவப்பு விளக்கு பகுதிக்கு சு. வேணுகோபாலையும் அழைத்து வந்திருக்கிறார். “எனக்கு அதெல்லாம் பழக்கம் இல்லை” என்று சொன்னாலும் விடாமல் வேடிக்கை பார்க்க கூட்டி வந்தார். இப்போது எங்களை அழைத்து வந்திருக்கிறார். ஆள் நடமாட்டமில்லாத ஒரு மடி வீட்டிற்குள் சட்டென நுழைந்து படி ஏறி சென்றார். உண்மையில் சிவப்பு விளக்கு பகுதியில் சிவப்பு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இடுங்கலான கார்ட்போர்ட் அறைகள். அதன் வாசலில் பெண்கள் அமர்ந்திருந்தார்கள். கண்டவுடன் தமிழ் என கண்டுபிடித்து கொண்டார்கள். “நல்லா கம்பனி குடுக்கிறேன் சார்” என ஒரு பெண் கொஞ்சி கேட்டாள். மறு பக்கம் இன்னொரு தமிழ் பெண் “மாமா” என்று அழைத்தாள். நாற்பது வெள்ளிக்கு வருவதாக சொன்னார்கள். கைக்கடிக்காரம் வாங்கியதை விட பத்து வெள்ளி கூடுதல். சதுர வளாகத்தை ஒருமுறை சுற்றி வந்து வெளியேறினோம். நாங்கள் வெளியேறும்போது அங்கே சிரிப்பொலிகள் கேட்டன. காலையில் ஆற்றிய உரையில் பாலியல் தொழிலாளிகளுக்கு நம் கதைகளில் இருந்து விடிவு கொடுக்க வேண்டும் என கூறியிருந்தேன். இப்போது நானும் வாழ்வின் இருண்ட பக்கங்களை கண்டதாக சொல்லலாம். “உங்களையும் எழுத வெச்சுடுவோம்” என்றார் நவீன். “ஒரு காந்தியவாதிக்கு இந்த அனுபவமெல்லாம் தாங்காது நவீன்” என்றேன். புக்கிட் பித்தாங் எனும் மலேசிய தூங்கா நகரத்திற்கு சென்றோம். பெரும் கட்டிடங்கள். ஒரு சாலை முழுக்க உணவகங்கள். நவீனும் சரணும் உண்டார்கள். தெரு பாடகர்கள் தொடர்ந்து வந்தபடி இருந்தார்கள். ஒரு கித்தாரையும் டிரம்சையும் மைக்கில் இணைத்தபடி ஆங்காங்கு நின்று பாடினார்கள். பெரும்பாலும் நல்ல இசை. மெக் டொனால்ட்ஸ், ஸ்டார் பக்ஸ் வாசல்களில் இன்னும் சற்றே பெரிய குழுவாக பாப் இசைத்தார்கள். மக்கள் கூடி நின்று வேடிக்கைப் பார்த்தார்கள். எங்கள் ஹோட்டல் இருக்கும் பகுதிக்கு மிக அருகே திருநங்கை குடியிருப்பு இருப்பதாக நவீன் கூறினார். அங்கே இருந்த ஆஷா எனும் திருநங்கை தலைவியை வல்லினம் இதழுக்காக நேர்காணல் செய்துள்ளார். அவர்களின் வாழ்வு, சிக்கல்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அப்பகுதியை வண்டியில் இருமுறை சுற்றிக் காண்பித்தார். ஒருவழியாக அறைக்கு திரும்பினோம். அறைக்குள் வைபை எடுக்காததால் லாபிக்கு வந்து தான் போன் பயன்படுத்த முடியும். சிங்கப்பூரின் ஒழுங்கு நேர்த்தி எல்லாம் ஒருவித பிரமிப்பை ஏற்படுத்தினாலும் மலேசியாவின் ஒழுங்கின்மை மற்றும் ஏறத்தாழ கேரளாவைப் போலிருக்கும் நிலபரப்பு மற்றும் மனிதர்கள், கூட்டம்,குப்பை  எல்லாம், மனிதர்கள் என எல்லாம் சேர்ந்து இது நம்ம ஊர் எனும் நினைப்பை ஏற்படுத்தியது. 

பத்துமலையில் நவீனுடன்
காலை நவீன் பத்துமலைக்கு அழைத்துச் சென்றார். பிரம்மாண்டமான முருகன் பொன்னிறத்தில் கொலாலம்ப்பூரை நோக்கிக் கொண்டிருந்தார்.  திரிபங்க நிலை இல்லாமல் நேராக நிமிர்ந்து நின்றார். மலை பார்க்க சிறியதாக இருப்பதால் ஏறுவோம் என சொல்லி ஏறத் துவங்கினோம்.ஆனால் செங்குத்தான ஏற்றம். படிகள் உயரமானவை. குன்றக்குடியை விட இரு மடங்கு இருக்கலாம். முழுக்கை சட்டை போட்டு மலை ஏறியபின் வியர்வை வட்டங்கள் சட்டையில் படர்ந்திருந்தன. சிறிய முருகன் கோவில். வள்ளுவர்கள் தான் பூசகர்கள் என நவீன் கூறினார். பிள்ளையார்பட்டி குருகுலத்தை சேர்ந்தவர்கள் பலரும் சிங்கப்பூர் மலேசிய கோவில்களில் பூசகர்களாக உள்ளார்கள் என அறிவேன். குகை உண்மையில் ஒரு எரிமலை வாய் போல் இருந்தது. எல்லாமும் உருகி உறைந்தது போல் இருந்தது. மாலைகளில் வவ்வால் கூட்டம் வரும் என்றார். வௌவால் நெடியை உணர முடிந்தது. எங்கிருந்தோ நீர் ஒழுகிக் கொண்டிருந்தது. மலேசியா இஸ்லாமிய நாடு என்றாலும் இத்தனை உயரமான முருகன் சிலையை அனுமதித்திருக்கிறது. அதற்கு எதிர்ப்புகள் இருந்தாலும் இன்று அது எல்லோரும் வந்து செல்லும் சுற்றுலா மையமாக இருக்கிறது. கீழே இருந்த கோவில்களுக்கு செல்லவில்லை.

குகை உள்ளே

அங்கிருந்து ஓராங் அஸ்லி எனும் மலேசிய பூர்வகுடிகளுக்கு நிர்மாணிக்கப்பட்ட அருங்காட்சியகம் சென்றோம். உலகெங்கும் பழங்குடி சமூகத்திற்குள் நிறைய ஒற்றுமை உள்ளதாக அவர்களுடைய சடங்குகள், பயன்படுத்தும் பொருட்கள், மூலிகைகளை பார்க்கும்போது தோன்றியது. உதாரணமாக அவர்களும்  இஞ்சியை வயிற்று உபாதைகளுக்குத்தான் பயன்படுத்துகிறார்கள். பெரிய தகவல் தொடர்பு சாத்தியம் இல்லைதான். ஆனால் பொதுத்தன்மை உள்ளது. கூட்டு நனவிலி வழியாக ஒரு கண்டடைதல் மானுட இனம் முழுவதற்கும் பரவி இருக்குமா? 

ஸ்ரீதர் எங்களுடன் இணைந்து கொண்டார். மதியம் சரவணபவனில் உண்டோம். லிட்டில் இந்தியா முழுக்க ஆங்காங்கு சிறு தோரண வாயில்கள் கட்டி இருந்தார்கள். முரகாமியின் கினோ, கசார்களின் அகராதி, ஆர்டிமிசியா க்ரூஸின் மரணம், சாமர் யாஸ்பெக்கின் பயணம் போன்ற நூல்களை மொழியாக்கம் செய்திருக்கிறார். வல்லினத்தில் மலேசிய சிறுகதைகள் குறித்து கூர்மையான விமர்சனங்கள் சிலவற்றை எழுதி வாசித்ததாக நினைவு. ஒரு பயணத்தின் இலக்கு எந்த அளவிற்கு முக்கியமோ பாதையும் அதேயளவு முக்கியம். ஸ்ரீதர், நவீன், சரண் என மூவரும் சுவாரசியமான பயணத் தோழர்கள். வாய் ஓயாமல் பேசிக்கொண்டு வந்தோம். உரையாடல்களை இங்கே எழுத முடியாது. ஆனால் இப்பயணத்தின் செறிவான பகுதி என நவீன் மற்றும் ஸ்ரீதருடன் பேசிக்கொண்டு வந்ததையே சொல்வேன். நகரின் மறு எல்லையில் இருக்கும் செம்பனை தோட்டத்திற்கு நவீன் எங்களை அழைத்து சென்றார்.
ஸ்ரீதர் ரங்கராஜ், சரணுடன் செம்பனை பழத்தை ஆராய்ந்த போது 

தீ நிற தென்னை குருத்துக்கள் போல் இருந்தன செம்பனை காய்கள். வெறுமே கையால்  அழுத்தினால் கூட எண்ணெய் வந்தது. தொட்ட புறங்களில் மூன்று தமிழ் கோவில்களையாவது கடந்து வந்தோம். அங்கே பிரபலமான அங்காளம்மனை கண்டோம். லிங்க வடிவிலான மண் உருவம். வெள்ளி கண்கள் பதிக்கப்பட்டிருந்தன. எதிரே மாசாணி அம்மன் போன்று சுதையால் ஆன கர்பிணி தெய்வம் பிரம்மாண்டமாக படுத்துக் கிடந்தாள். அதன் முகம் தமிழக கோவில் போல திருத்தம் கொண்டதில்லை. ஒருவித பழங்குடித்தன்மை கொண்டது என சொல்லலாம். மழை காலத்தில் நனையாமல் இருக்க ஒரு நகரும் தகரக்கூரை இருந்தது. பெரிய பண்ணையில் ஆட்கள் மிகக் குறைவாக தென்பட்டார்கள். செம்பனை பழங்களை பொறுக்க ஜெ.சஈ பி போன்ற ஒரு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்தோனேசியர்கள் தான் பெரும்பங்கு பணி செய்கிறார்கள் என்றார் நவீன். ரப்பர் தோட்டங்கள் அழிந்ததும் அங்கு வாழ்ந்த தமிழர்கள் வெளியேற வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இவர்களே வேறுவழியின்றி குற்ற செயல்களுக்கு செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இன்றும் பெரும்பாலான உள்ளூர் குற்ற முகவர்கள் தமிழர்கள் தான். அவர்கள் சீனர்களுக்கு ஊழியம் செய்கிறார்கள். சீனர்களின் செல்வாக்கு அளப்பறியாதது என நவீன் சொல்லிக்கொண்டிருந்தார்.

கோலா செலான்கூரில் ஏறிவிளையாடும் மந்திகள்

அங்கிருந்து கோலா செலாங்கூர் எனும் சிறிய குன்றுக்கு சென்றோம். மனிதர்களுடன் நெருங்கி விளையாடும் கருங்குரங்குகள் நிறைந்த குன்று. அதற்கு தின்பண்டங்களை வாங்கிக்கொடுத்தால் நம் மீது ஏறி விளையாடி உண்ணும். சரண் மீது நாலைந்து குரங்குகள் பாய்ந்து ஏறின. என் கையில் இருந்த ஒரு சீப்பு வாழைப்பழத்தை மொத்தமாக ஒரு குரங்கு பறித்துக்கொண்டு ஓடியது. பிற குரங்குகளிடமிருந்து அதை பாதுகாப்பதே அதன் எஞ்சிய நேரத்து வேலையாக இருந்தது. உள்ளே ஒரு அரச பரம்பரைக்கான அருங்காட்சியகம் இருந்தது. விஷ கிணறு பற்றிய ஒரு குறிப்பு அங்கு கவனத்தை கவர்ந்தது. துரோகிகளை கழுத்துவரை அக்கிணற்றில் இறக்கி விடுவார்களாம். விஷ மூலிகைகள் மற்றும் மூங்கிலின் பகுதிகளை அந்த கிணறில் நிரப்பி துன்புறுத்தி கொல்வார்கள் என்றது அக்குறிப்பு. மனிதனின் உச்சபட்ச கற்பனைகள் கொலையிலும் காமத்திலும் தான் இதுவரை வெளிப்பட்டிருக்கிறது எனத் தோன்றியது. கலைஞன் வன்முறை மற்றும் காமத்தில் ஏன் தத்தளிக்கிறான் என்பதை ஒருமாதிரி புரிந்து கொள்ள முடிந்தது. அவன் அறத்தைப் பற்றிக்கொள்ளவில்லை என்றால் பாதாளத்தில் வீழ்ந்து விடுவான். நாவலைப் பற்றி சொல்லும்போது ஹிலாரி மாண்டெல் மனிதர்களின் அனுபவங்களின் மீதான பேராசையின் காரணமாக எழுதப்படுகிறது, வாசிக்கப்படுகிறது என்கிறார். அனுபவங்களின் பேராசை மனிதனை எந்த எல்லை வரை கொண்டு நிறுத்தும் என்பதற்கு பதில் இல்லை. நவீன் ஊட்டி முகாம் அனுபவங்களையும் ஜெயமோகன் சொன்ன புலி ஜோக்கையும் சொல்லிக்கொண்டிருந்தார். அதை ஜெ எப்படி சொல்லியிருப்பார், அவரிடம் கமல் அதை எப்படி சொல்லியிருப்பார் என கற்பனையில் விரித்து பார்த்து சிரித்துகொண்டிருந்தோம். ஸ்ரீதரை இறக்கிவிட்டுவிட்டு சரணின் கோரிக்கையின் பேரில் நவீன் எங்களை போயாக் கறி கிடைக்கும் இடத்திற்கு அழைத்து சென்றார். திங்கக்கிழமை விடுமுறை என்பதால் ஒரு முதலையின் எண்ணிக்கை குறையாமல் இருந்தது. மலாய் மொழி ஆங்கில எழுத்துருவை பயன்படுத்துகிறது. ஆங்கில உச்சரிப்பிற்கு ஏற்ப எழுத்துக்களை பயன்படுத்துகிறது. கடை போன்ற சொற்கள் தமிழில் இருந்து மலாய்க்கு சென்றிருக்க வேண்டும். நவீன் இலக்கிய செயல்பாடுகளுக்கு அரசாங்கத்தையோ வேறு புரவலர்களையோ அமைப்புகளையோ நம்பியிருக்கவில்லை. குழந்தைகளுக்காக யாழ் பதிப்பகம் நடத்துகிறார். பாடத்திட்டத்தை மாறுபட்ட முறையில் இப்பதிப்பக புத்தகங்கள் கொண்டு சேர்க்கிறது. அதிலிருந்து வரும் வருமானத்தைக் கொண்டே எல்லாவற்றையும் நடத்த முடிகிறது. வல்லினம் பதிப்பிக்கும் நூல்களுக்கு அச்சானவுடன் இருபது சதம் ராயல்டியை முன்கூட்டியே வழங்குகிறார். நாவல் பட்டறை நடத்தி பின் நாவல் போட்டி நடத்துவது, சிறுகதை பட்டறை நடத்தி பின் போட்டி நடத்துவது என முனைப்புடன் செயல்படுகிறார். எம்மைப்போன்ற எழுத்தாளர்களுக்கு இருக்கும் விலகல் பாவம் நவீனுக்கு கிடையாது. ஒருவித சாகசத்தன்மை உடையவர் என சொல்லலாம். மலேசிய இலக்கியத்திற்கு நிச்சயம் அவருடைய பங்களிப்பு நல்ல பலனைத் தரும் என நம்புகிறேன். சிறிய எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட சமூகத்தில் அறிவுப்பசி கொண்டவர்கள் மேலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே இருக்க முடியும். படைப்பூக்கம் கொண்டவர்கள் அதனினும் சிறிய வட்டம். இத்தகைய தேசங்களில் படைப்பூக்கம் கொண்டவர்கள் எளிதில் அங்கீகரிக்கப்பட்டுவிட முடியும். சில நேரங்களில் அந்த அங்கீகாரமே அவர்களின் படைப்பூக்கத்திற்கு எதிரானதாக ஆகிவிடவும் கூடும். அங்கீகாரம் எளிதில் கிடைக்கும்போது போலிகள் உருவாகும் சூழலும் ஏற்படக்கூடும். மொத்த தமிழ் இலக்கிய பரப்புடன், உலக இலக்கிய பரப்புடன் மோதி நிலைகொள்வது வரை ஓயாமால் இருக்க வேண்டும். நவீன் மலேசியாவில் அத்தகைய சூழலை உருவாக்கி இருக்கிறார் என்றே எண்ணுகிறேன்.

வல்லினம் குழு

அறையில் இறக்கிவிட்டு விடைப்பெற்று சென்றார். இந்தைறு நாட்களில் இருநூறு கிலோமீட்டராவது அவருடன் வண்டியில் சுற்றி இருப்போம். களைப்பு மேலோங்க மலேசிய பஸ் நிலையத்திற்கு சென்றோம். கிட்டத்தட்ட அது ஒரு விமான நிலையம். எங்கள் பேருந்து நள்ளிரவு ஒன்றரை மணிக்கு வந்தது. மலேசிய எல்லையை கடக்கும்போது காலை ஆறு மணி. சிங்கப்பூர் எல்லையில் பெரும் கூட்டம். சரண் சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர் என்பதால் வேறு பாதையில் சென்றுவிட்டார். வரிசை நகர்ந்து நெருங்கியதும் ஒரு படிவம் நிரப்ப வேண்டும் என திருப்பி அனுப்பப்பட்டேன். நிரப்பி கடந்து வெளியே வருவதற்குள் எங்கள் பேருந்து சென்றுவிட்டிருந்தது. அங்கிருந்து ரயில் பேருந்து என மாறி மாறி சரண் வீட்டிற்கு சென்று சேர்ந்தோம். சரணின் மனைவி ரத்தியும் நல்ல வாசகர். விஷ்ணுபுரம் வட்டத்து பிரதிநிதியாக என்னிடம் பலகேள்விகளை எழுப்பினார். நானும் இயன்றவரை பதில் சொன்னேன். சுடச்சுட இட்லியும், தோசையும் கேசரியும் சாப்பிட்டு லிட்டில் இந்தியா கிளம்பினோம். சிங்கப்பூருக்கு சென்று திரும்பும்போது வாங்கி வரவேண்டிய பொருட்கள் என நமக்கு ஒரு மரபிருக்கிறது. மூன்று மணிநேரம் முஸ்தபாவில் சுற்றி வேண்டியவற்றை வாங்கிக்கொண்டு செட்டிநாடு கறி பேலஸில் உண்டு கணேஷின் இல்லத்திற்கு சென்றோம். அங்கே விட்டு வந்திருந்த பெட்டியில் சாமான்களை அடுக்கி அவரிடம் விடைப்பெற்று ரயிலில் விமான நிலையம் கிளம்பினோம். சரண் விமான நிலையத்தில் என்னை விட்டுவிட்டு சென்றார். உண்மையில் எனக்கு இப்போது நண்பர்கள் என சில பள்ளி நண்பர்களையும் இலக்கியம் வழி அடைந்த நண்பர்களையும் மட்டுமே சொல்லமுடியும். விஷ்ணுபுரம் வட்டம் ஒரு குடும்பம் என்பது கிளிஷேவாக இருக்கலாம் ஆனால் அது உண்மை. எங்களுள் கடும் முரண்பாடுகள், சண்டைகள் வந்தாலும் கூட இந்த நண்பர்களிடம் எப்போதும் அணுக்கத்தை உணர்கிறேன்.

இந்த ஆறு நாட்கள் எனக்கு பல அனுபவங்களை அளித்தது. புதியவற்றை கற்றேன். நண்பர்களை கண்டுகொண்டேன். என்னை எந்த நம்பிக்கையின் பேரில் அழைத்தார்களோ அதற்கு உண்மையாக இருந்தேன் எனும் நிறைவுடன் ஊர் திரும்பினேன். இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும். வாசிக்கவும் எழுதவும் எத்தனையோ இருக்கின்றன.    

   











சிங்கப்பூர் - மலேசியா பயணம்- 1


தமிழ் முரசு நாளிதழ் மற்றும் சிங்கப்பூர் கலை மன்றம் இணைந்து நடத்தும் ஒருநாள் அறிவியல் புனைவு - வரலாற்று புனைவு பயிலரங்கிற்காக என்னை அழைத்திருந்தார்கள். சிங்கப்பூரோ தஞ்சாவூரோ எங்கு சென்றாலும் உரிய தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பது என் நிலைப்பாடு. அறிவியல் புனைவு, வரலாற்று புனைவு தொடர்பாக இரண்டு மாதங்கள் தொடர்ந்து  வாசித்து என்னை தயார் செய்து கொண்டேன். வழக்கமாக செல்லும் ஊட்டி கூட்டத்திற்கு கூட இந்தமுறை செல்லவில்லை.  வெளிநாட்டிற்கு தனியாக பயணிப்பது இதுவே முதல்முறை எனும் பதட்டம் வேறு லேசாக பட்டாம்பூச்சிகளை பறக்கவிட்டது.

மே எட்டாம் தேதி நள்ளிரவு திருச்சியில் இருந்து புறப்பட்டு ஒன்பதாம் தேதி காலை சிங்கப்பூர் சென்று சேர்ந்தேன். சரண் விமான நிலையத்திற்கு வந்து அழைத்து சென்றார். லிட்டில் இந்தியாவில் உள்ள மெட்ராஸ் ஸ்ட்ரீட், ஹோட்டல் தவுலத்தில் தங்கினேன். சிறிய பால்கனி கொண்ட அறை. தொலைக்காட்சியில் ஒரேயொரு சிங்கப்பூர் தமிழ் சேனல் ஓடியது. அதுவே அவ்வப்போது எப்.எம் ஆகவும் மாறியது. புதிய ஊர்களுக்கு செல்லும்போது, அதுவும் தனித்திருக்கும்போது தொலைகாட்சியையோ வானொலியையோ ஓடவிடுவது வாடிக்கை. வேறென்ன தனிமை குறித்தான பயம்தான். அசந்து உறங்கும் வரை ஏதேனும் ஒன்று ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். மெல்லிய வெளிச்சம் பரவியிருக்க வேண்டும். குளியலறை விளக்குகள் எரியும். லேசாக திறந்து வைத்தபடி தான் உறங்குவேன். 

காலை நேராக நண்பர் கணேஷ் அவர்கள் நடத்தும் உணவகத்திற்கு சிற்றுண்டி உண்பதற்கு சென்றோம். ஹோட்டலில் இருந்து நடந்து செல்லும் தொலைவுதான். கணேஷ் எங்கள் ஊரைச் சேர்ந்தவர். பெராக் ரோட்டில் செட்டிநாடு கறி பேலஸ் எனும் ஹோட்டலை நிர்வகித்து வருகிறார். இலக்கிய பரிச்சயம் உள்ளவர். ஜெயமோகனோடு இமையப் பயணம் சென்றவர். பொங்கலையும் வடையையும் பேசிக்கொண்டே உண்டு முடித்தோம். சரண் சிங்கப்பூர் ரயிலில் என்னை செந்தோசா அழைத்து சென்றார். எம்.ஆர்.டி ரயில் பிடித்து பின்னர் மோனோ ரயில் மாறி சென்றோம். மோனோ ரயில் சென்னைக்கு எந்தவிதத்திலும் பயனளிக்காது எனும் எண்ணமே தோன்றியது. 

சிங்கப்பூரின் பொது போக்குவரத்து அமைப்பு அபாரமானது. புதியவரும் கூட தனியாக பயணம் செய்துவிட முடியும் அளவிற்கு எளிமையானது. நகரத்தின் குறுக்கும் மறுக்கும் ஓடும் ரயில் பாதைகள் நாட்டின் அத்தனை இடத்தையும் முழுமையாக இணைக்கிறது. எந்த ரயில் நிலையத்திலும், எந்த பேருந்து நிலையத்திலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாகனம் வருவதற்காக காத்திருக்கவில்லை. ஏறத்தாழ காரில் செல்லும் அதே காலம் தான் பொதுபோக்குவரத்திலும் எனும்போது பெருவாரியான மக்கள் பொதுபோக்குவரத்தையே பயன்படுத்துகிறார்கள்.  

ஒரு புதிய தேசத்திற்கு சென்றதும் இயல்பாக இந்தியாவுடன் ஒப்பிட்டு நோக்கக் கூடாது என்ற எண்ணியிருந்தேன். அது சார்ஸ் பறவை காய்ச்சல் போலவே புதுப் பயணிகளுக்கு மட்டும் தொற்றும் வியாதி. சிங்கப்பூரின் நிலப்பரப்பு மிகச் சிறியது. செல்வ வளமோ அபாரமானது. இந்தியாவுடன் எவ்வகையிலும் ஒப்பிட முடியாது. ஆனால் அவற்றை மீறி மனம் அந்த ஒப்பீட்டை நிகழ்த்த துவங்கியது. மலேசியாவில்தான் சற்று ஆசுவாசம் கொள்ள முடிந்தது. ஏனெனில் ஏதோ ஒருவகையில் அது மலபார் பகுதியின் நீட்சி எனும் எண்ணமே ஏற்பட்டது. சிங்கப்பூர் அழகிய நெற்றியில் வைக்கப்பட்ட மினுங்கும் அழகிய நெற்றிப் பொட்டு என எண்ணிக்கொண்டபோது சமாதானம் ஆனேன்.
  
அரசு அனைவருக்கும் இலவசமாக ஸ்மார்ட் வாட்ச் அளித்து, அதிகம் நடப்பவர்களை ஊக்குவிப்பதாக சரண் கூறினார். நடக்கும் தொலைவிற்கு ஏற்ப பயண கட்டணங்களில் சலுகை உண்டு என்றார். ரயிலில் அத்தனைப்பேரும் தங்கள் மொபைல் போனில் ஆழ்ந்தபடி பயணிக்கிறார்கள். பாதாள பாதையில் செல்லும்போது சாளரத்தில் காண்பதற்கு ஏதுமில்லை என்பது வேறு விஷயம். இதை ஒரு குற்றமாக காணவில்லை எனும்போது நமக்கு இன்னும் வயதாகவில்லை எனும் நிம்மதி நிறைந்தது.
யுனிவர்சல் ஸ்டுடியோ ஆப்டிமஸ் ப்ரைம்

செந்தோசாவில் யுனிவர்சல் ஸ்டுடியோவிற்கு சென்றோம். சரண் முன்னரே நுழைவு சீட்டுக்களை இணையம் வழி வாங்கி இருந்தார். வாரநாள் என்பதால் கூட்டம்  இருக்காது என எண்ணியது தவறு. விதவிதமான ஹாலிவுட் படங்களின் அரங்குகள். ட்ரான்ஸ்பார்மர் வரிசையில் சென்று நின்றோம். ஏறத்தாழ முக்கால் மணிநேரம் வரிசை நீண்டது. வெறும் வரிசை என்றில்லாமல் ட்ரான்ஸ்பார்மர் பட  அமைப்புகள், காட்சிகள் என நம்மை ஒரு அனுபவத்திற்கு தயார் செய்யும் வகையில் பாதையை அமைத்திருந்தார்கள். வளைந்து, மடிந்து சென்ற வரிசை, இதோ முடிந்துவிடும் இதோ முடிந்துவிடும் எனும் போது புதிதாக நீண்டது. ஒரு காப்காத்தனமான உலகத்தில் சிக்கிக்கொண்டது போல் உணர்ந்தேன். ஆனால் சுமார் ஒருமணிநேரம் நின்றதற்கு நல்ல அனுபவம். 3d கண்ணாடிகள் அணிந்து ஒரு வண்டியில் ஏறி அமர்ந்தோம். ஆப்டிமஸ் ப்ரைம் மற்றும் அவரது தோழர்கள் எங்களை காப்பாற்ற முயன்றார்கள். ஒரு காட்சியை காண்பது வேறு அந்த காட்சியின் பகுதியாக, பங்கேற்பாளராக ஆவது என்பது வேறு. இறங்கி வெளியே வந்தபோது தொலைதூரம் ஓடி தப்பித்த களைப்பு, ஆசுவாசம். இதையே தாங்கி பிழைத்துவிட்டோம், இனி எதையும் தாங்கிவிடலாம் என மனிதர்களுக்கு சொல்வதற்குதான் எத்தனை முறைகள். பெரும் அழிவிலிருந்து தப்பிப்  பிழைத்தவர்களின் முகங்களில் பெருமிதத்தை காணும்போது மொபைல் போன் ஸ்க்ரீனில் என் முகத்தை கண்டேன்.
யுனிவர்சல் ஸ்டுடியோ
அடுத்து மம்மி ரைடுக்கு சென்றோம். கூட்டமே இல்லை என்பதால் அதிகநேரம் நிற்கவில்லை. ஏன் கூட்டம் இல்லை என்பது உள்ளே சென்றதும் தான் புரிந்தது. இப்போது நாங்கள் உயிர்த்தெழும் மம்மியிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும். கிட்டத்தட்ட ஒரு ரோலர் கோஸ்டர் ரைட். மூளை ஜிவ்வென சூடாகி, முகம் வியர்த்து வெளியே வந்தேன். இரவு விமான பயணம், தூக்கமின்மை, காலையில் சாப்பிட்ட பொங்கல் வடை என எல்லாம் சேர்ந்து எனது ஆஸ்ட்ரல் உடல் எனக்கு முன் நடப்பதை காணச் செய்தது. பின்னர் தேவதை உலகிற்கு சென்று ஷ்ரெக் பார்த்தோம். மடகாஸ்கர் பயணம் சென்றோம். இந்தமாதிரி உடல் தாங்கக் கூடியவற்றுக்கு மட்டும் கூட்டிச் செல்லுங்கள் சரண் என கண்ணீர் மல்க கேட்க வேண்டும் போலிருந்தது. வாட்டர் வேர்ல்ட் சென்றபோது அங்கு ஒரு ஹாலிவுட் படத்தையே ஸ்டன்ட் மாஸ்டர்கள் சேர்ந்து நிகழ்த்தி காட்டினார்கள். நாங்கள் சென்ற அன்று வெய்யில் பிளந்தது. ஒவ்வொரு அரங்கிலிருந்து வெளியேறும்போதும் அந்த திரைப்படம் சார்ந்த ஒரு அங்காடிக்குள் சென்று விட்டுதான் வெளியேற முடியும் என்பதாக ஒரு அமைப்பு இருந்தது. லாஸ்ட் வேர்ல்ட்லிருந்து ஒரு டைனோசரை ட்ரக்கில் ஏற்று அழைத்து வந்தார்கள். அத்துடன் வரிசையில் நின்று அனைவரும் படம் எடுத்து கொண்டார்கள். என் குரல் என் செவிகளில் தொலைதூரத்தில் இருந்து ஒலிப்பதாக தோன்றியபோது இனியும் தாங்க முடியாது என அங்கேயே உணவு உண்டு அறைக்கு திரும்பினோம். அயர்ந்து உறங்கி எழுந்தபோது சரண் நாற்காலியில் கண்ணயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.
கோவிந்தராஜனுடன் சிங்கப்பூர் நதிபாலத்தில்

அபூர்வமாக இன்று வரை தொடரும் பள்ளிக்கால நட்பு சில உண்டு. கோவிந்தராஜன் அப்படியான நண்பன். பள்ளிக்கால, கல்லூரிகால நட்புகள் தொடரும்போது பேசுவதற்கு பழைய நினைவுகளுக்கு அப்பால் ஏதுமில்லை எனும் நிலை வரும்போது நாமும் அவரும் வெவ்வேறு ரசனைகள், வெவ்வேறு நிலைகளில் இருப்போம் என்பதை உணர்ந்து கொள்வோம். ஒருவித அசந்தர்ப்பமான மவுனச் சுவரை முட்டிக்கொண்டு நின்றிடுவோம். ஆனால் தொடர்பில் இருக்கும் நட்புடன் நாம் தொடர்ந்து பேசுவதற்கு விஷயங்கள் உண்டு. கோவிந்தராஜன் கால்நடையாக அழைத்து சென்று சாந்தி விலாசில் நெய் ரோஸ்ட் வாங்கிக் கொடுத்தான். பின்னர் நடந்தே வீரமாகாளிஅம்மன் கோவிலுக்கு சென்றோம். அங்கிருந்து பலத் தெருக்கள் சுற்றி நடந்தோம். அப்பகுதி எங்கும் தமிழ் குரலும் தமிழ் முகமும் சாதாரணமாய் புழங்கின. அனைத்து அறிவிப்புகளிலும் தமிழ் இடம்பெற்றது. பிறகு லதா எங்களோடு இணைந்து கொண்டார். மோடி வடை உண்பதற்கு முன்பே பிரபலமான கோமளவிலாஸ் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு இரவுலாவ சென்றோம். அறையை விட்டு வெளியேறும்போது எதிர் அறையில் யாரோ கன்னத்தில் அறைந்து பரவசத்துடன் ‘ஓ மை காட்’ என கத்திக்கொண்டிருந்ததை கேட்கமுடிந்தது. இனி அறைகள் எடுக்கும்போது கேமெரா இருக்கிறதா என சோதிப்பது போல் ஒலி வெளியே வராமல் இருக்கிறதா என்பதையும் சோதிக்க வேண்டும். சீக்கிரம் இதற்கான முறைமைகளை வாட்சப் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்காமல் வெளியேறினோம். நண்பர்களின் முகத்தை பார்த்தால் இச்சமயங்களில் வெடித்து சிரித்துவிடும் அபாயம் உண்டு. முன்னனுபவமும் உண்டு.

சிங்கப்பூர் இரவு

பேருந்து பிடித்து முன்னாள் தபால் அலுவலகமாக இருந்த புல்லர்டன் ஹோட்டல் அருகே சென்றோம். சிங்கப்பூர் நதி இரவின் விளக்குகளை பரப்பியபடி தளும்பிக் கொண்டிருந்தது. இருள் விளக்குகளுக்கு மேலும் பொருள் அளிக்கிறது. ரசனையுடன் ஒளியமைப்பு செய்திருந்தார்கள். நாம் அழகென கருதுவது எல்லாம் ஒளி விளையாட்டு என்றே தோன்றியது. எந்தக் கலையிலும் ஒளியையும் அதன் இன்மையையும் பயன்படுத்தத் தெரிந்தவனே கலைஞன். படரும் இருளில் எங்கெங்கே ஒளி பாய வேண்டும் என தீர்மானிப்பது அன்றி கலைஞன் வேறெதுவும் செய்வதற்கில்லை. இரவு அறைக்கு திரும்பினேன். அங்கே நள்ளிரவு ஆகும்போது இந்தியாவில் 9.30 ஆகும். உறக்கம் பிடிக்கவில்லை. வீட்டிற்கு அழைத்து அன்றைய கதைகளை பேசினேன். ஹோட்டலின் அடுத்த கட்டிடத்தில்இருந்த பப்பில் இசை துடித்துக் கொண்டிருந்தது. சிங்கப்பூரின் முதல் நாள் முடிவுக்கு வந்தது.    

இரண்டாம் நாள் காலை செந்தோசா அக்வாரியம் பார்க்கலாம்  என யோசித்திருந்தேன். ஆனால் முந்தைய நாள் உரையாடலின் போது லதா சிங்கப்பூருக்கு வருபவர்களுக்கு இந்த செந்தோசாவில் அப்படி என்னதான் பிடிக்குமோ என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் எனக்கு அது பிடித்திருக்காது என்பதையும் தீர்மானமாக சொல்லிவிட்டார். ‘இல்லை, உண்மையில் இந்த பூஷ்வா விளையாட்டு ரொம்ப பிராமதம்’ என சொல்லத் தோன்றியதை மென்று விழுங்கினேன். இந்த வெற்று கேலிக்கைகளை நாடியே அத்தனைப்பேரும் செல்கிறார்கள் என அலுத்துக்கொண்டிருந்தபோது தொலைதேசத்தில் இருந்து வந்த எழுத்தாளனாகிய எனக்கும் வேறுவழியில்லை. 

செட்டிநாடு கறி பேலஸில் உண்டுவிட்டு கணேஷின் வழிகாட்டுதலின் பேரில் ஜலன் பசார் எம்.ஆர்.டி ரயிலில் ஏறி சீனா டவுன் சென்றேன். அங்கிருக்கும் புத்தர் நினைவுச்சின்ன ஆலயம் பற்றி முந்தைய நாள் லதா கூறினார். அவருடைய எம்.ஆர்.டி கார்டையும் கொடுத்தார். அதில் கோவிந்தராஜன் இருபது டாலருக்கு டாப் அப் செய்து கொடுத்திருந்தான். சிங்கப்பூர் வந்த இரண்டாம் நாளே தனித்து பயணிக்கத் துவங்கினேன். எவ்வித குழப்பமும் இல்லை. இன்டர்நெட்டிற்காக சரண் எனக்கொரு சிம்கார்ட் அளித்திருந்தார். வாட்சப் அழைப்புகள் தெளிவில்லை என்றாலும் கூகுள் வரைபடங்கள் துல்லியமாக உதவின. சீனா டவுன் ரயில்நிலையத்திற்கு வெளியே மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. உள்ளே தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளின் நாட்டார் தெய்வங்கள் குடியிருக்கிறார்கள். வேள்வி ஒன்று நிகழ்ந்து கொண்டிருந்தது. சற்று தொலைவு நடந்தால் புத்தர் நினைவுச்சின்ன ஆலாயம் வந்தது. திபெத்திய புத்தர் கோவில். அதன் வாயிலிலேயே அந்த தெருவில் இருந்த மரண இல்லம் பற்றிய குறிப்பு இருந்தது. சீனர்கள் பெருந்திரளாக இங்கு தங்கியிருக்கிறார்கள். கவனிப்பாரற்று கிடப்பவர்கள் இங்குள்ள மரண இல்லங்களுக்கு சென்றார்கள். பெரும்பாலும் உள்ளே சென்றவர்கள் திரும்புவதில்லை. பின்னர் அரசு இதை தடை செய்தது. இன்றும் அந்த தெருவில் மரண சடங்கு சார்ந்த பொருட்கள் விற்கப்படுகின்றன.
புத்தர் நினைவுச்சின்ன ஆலயம்

நான் சென்றபோது பிக்குகளும் பக்தர்களும் மந்திர உச்சாடனத்தை துவங்கியிருந்தனர். மத்தியில் பிரம்மாண்டமான மைத்ரேய புத்தர் அமர்ந்த நிலையில் கிரீடம் அணிந்து உள்ளார். இரு பக்கமும் அவருடைய துணைவர்கள். மைத்ரேயர் வருங்கால புத்தர். போதி சத்வர் நிலையில் உள்ளவர். உலகம் முழுக்க, உயிர்கள் அனைத்திற்கும் ஞானம் வழங்குபவர். சுவர்களில் சிறிய புத்தர் சிலைகள் இருந்தன. பிக்குகள் வணங்குவதற்காக வைத்திருப்பவை என குறிப்புகள் கூறின. அகல் மாடம் போன்ற சிறிய மரக்குடவைக்குள் புத்தர் வெவ்வேறு முத்திரைகளுடன் அமர்ந்திருந்தார். ஆயிரகணக்கான புத்தர்கள் பக்கச் சுவர் முழுவதும் நிறைந்திருந்தார்கள். போதி சத்வர்களின் சிலைகளும் இருந்தன. ஆயிரம் கரங்கள் கொண்ட அவலோகிதேஸ்வரர், ஒரு கையில் வாளும் மறுகையில் ஏடும் ஏந்தி தாமரையில் அமர்ந்திருக்கும் மஞ்சுஸ்ரீ, நீலநிறத்தில் கோரைப் பற்களுடன் பாறையில் நிற்கும் அசலா என விதவிதமான வடிவங்களில் போதிசத்வர்களை பார்த்தேன். மொத்த ஆலயமும் பொன்னிறத்தில் மினுங்கியது. மொத்தம் ஐந்து மாடிகள் கொண்ட வளாகம். நான்காம் மாடியில் புத்தரின் பல் ஒரு பேழையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை பார்த்துக்கொண்டிருந்தபோது சரண் இணைந்து கொண்டார். இந்தியா, இலங்கை, பர்மா, தாய்லாந்து, ஜப்பான் என விதவிதமான புத்தர் வடிவங்களை அருங்காட்சியகத்தில் வைத்திருந்தார்கள். புத்த பிக்குகளின் மெழுகுச் சிலைகளும் இருந்தன. புத்தரின் மொத்த உடலும் சிறு சிறு துண்டுகளாக பகுக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. வெளித்திண்ணையில் சற்று நேரம் அமர்ந்திருந்தோம். தேசிய நூலகத்தின் அருகே ஒரு பழைய புத்தகக் கடை இருப்பதாக லதா சொன்னார். பிராஸ் பசா. நேராக அங்கு சென்றோம். இப்போது இது ஒரு பழக்கமாக ஒட்டிக்கொண்டது. சென்ற ஆண்டு கோவாவிற்கு செல்லும்போதும் அங்கிருக்கும் பழைய புத்தக கடையை தேடினேன். சில புத்தகங்களை வாங்கினேன். எழுத்தாளனுக்கு இதுதானே நல்ல நினைவு பரிசாக இருக்க முடியும். ஒருமணிநேரம் தேடி ஏழு புத்தகங்களை பொறுக்கினேன். சல்மான் ரஷ்டி, ஜின்ஜியாங், ஹா ஜின், எக்கார்ட் டோலே, எட்கர் ஆலன் போ, ஜீத் தாயில் மற்றும் நைபால் புத்தகங்களை வாங்கினேன். மொத்தம் 28.50 சிங்கப்பூர் டாலர். இந்திய பழைய புத்தகை சந்தையின் அதே மதிப்பு தான் இருந்தாலும் ஒரு நிறைவு. சரணுக்கு கையில் ஒரு சின்ன காயம் என்பதால் மதியம் இரண்டு மணிக்கு மருத்துவமனைக்கு செல்லவேண்டியிருந்தது. மருத்துவமனை வளாகமும் கூட ஒரு மால் போலத் தோன்றியது. டெட்டால் வாசனை இல்லாத ஒன்றை மருத்துவமனையாக மனம் ஏற்கவில்லை. லாபியில் ஒரு இதயச் சிற்பம் வடித்திருந்தார்கள். கீழே கம்மின்சின் ஒரு கவிதை வேறு இருந்தது. மருத்துவமனையில் கவிதைகள் வாசிக்கப்படும்போது இந்தியா வல்லரசாகிவிடும் எனத் தோன்றியது. மரப்பாச்சி கூடுகைகள் காவேரி மருத்துவமனையில் ஏன் நிகழ்கிறது எனக் கேட்டால் சொல்வதற்கு நல்லதொரு காரணம் புலப்பட்டது. சரவணன் அவருடைய வங்காள மருத்துவரை சந்தித்துவிட்டு ஓரிரு நிமிடங்களில் வந்தார். ஒரு மருத்துவ சந்திப்பிற்கு 40 $. கையில் சிறிய அடியும் வீக்கமும் தான். ஆனால் இங்கே சாதாரணமாக பொது மருத்துவர் பார்ப்பார்கள். அல்லது தற்காலத்தில் எலும்பு மருத்துவர் பார்க்கக்கூடும். சரவணன் சந்தித்தது கர மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரை. இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மருத்துவமனை உள்ளேயே இருந்த பெரிய புட் கோர்ட்டில் உண்டோம். ரெட் பீன் பாவ் மற்றும் மரவள்ளி சாஸில் டோஸ்ட் செய்யப்பட ரொட்டி. ரெட் பீன் பாவ் என்பது அரிசி மாவு கொழுக்கட்டை போல் வேக வைத்தது. அதனுள் பாசிப்பயிறு போன்ற ஒன்றை (அல்லது அதுவேதானா) இனிப்பு பூரணமாக நிரப்பி அளித்தார்கள். நல்ல சுவை. குங்க்பு பாண்டாவில் பாண்டாவின் விருப்ப உணவு இந்த கொழுக்கட்டை தான். ஷிபு கொழுக்கட்டை வழியாக குங்க்பு சொல்லிக்கொடுப்பார்.
ஆசிய நாகரீக அருங்காட்சியகம், கண்ணாடி உருளை

அங்கிருந்து ஆசிய நாகரீக அருங்காட்சியகம் சென்றோம். சிங்கப்பூரில் நான்கள் பார்த்த ஒரே அருங்காட்சியகம். இன்னும் தேசிய அருங்காட்சியகம், பொம்மைகள் அருங்காட்சியகம் என பார்க்காத பல அருங்காட்சியகங்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தின் முதல் பகுதியில் சிங்கப்பூரின் வணிக தொடர்பை, அதன் தொன்மையை உறுதிப்படுத்தும் கப்பல் உடைவு எச்சங்களை காட்சி படுத்தி இருக்கிறார்கள். இது ஒரு பெரும் வரலாற்று நிகழ்வாக சொல்லப்படுகிறது அங்கு. இந்து, இஸ்லாம், பவுத்த, கிறிஸ்தவ அருங்காட்சியம் மிகச் சிறப்பாக இருந்தது. இலவச குறிப்பேடுகளை ஒவ்வொரு பகுதியிலும் வைத்திருந்தார்கள். எல்லா பகுதிகளிலும் தமிழ் குறிப்பேடுகள் இருந்தன. வெளியே வந்து சிங்கப்பூர் நதியை நோக்கிக்கொண்டிருக்கும் நேருவின் சிலையை பார்த்ததும் ஒருநிமிடம் மனம் பொங்கியது. அவர் தோள்மீது கைபோட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டேன். மேலும்,  அவரிடம் மோடி உங்களை தினமும் திட்டுகிறாரே உங்களுக்கு வருத்தமாக இல்லையா என்று காதோரம் கேட்டேன். மவுனமாக நதியைப் பார்த்தபடி புன்னகைத்தார். பெரும் கண்ணாடி உருளைகள் முன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அறைக்கு திரும்பினோம். மாலை சிங்கப்பூர் மரபுடைமை வாரியத்தில் எழுத்தாளர் சங்கம் மற்றும் தமிழ் முரசு இணைந்து நடத்தும் ஒரு உரை ஏற்பாடு ஆகியிருந்தது. ‘கதைவழி பயணம்’ எனும் தலைப்பில் பேசுவதாக இருந்தேன். காரட் அல்வாவும் வடையும் வைத்திருந்தார்கள். மரபுடைமை வாரியத்தில் மலாக்கா செட்டி பற்றிய ஒரு அருங்காட்சியகம் இருந்தது. சிங்கப்பூர் எழுத்தாளர் சங்கத்தினர் பலரையும் அறிமுகம் செய்து கொண்டேன். சரியாக ஏழு மணிக்கு உரை துவங்கி 7.50 வரை பேசினேன். கதைகள் நமக்கு ஏன் தேவைப்படுகின்றன? கதைகள் என்ன செய்யும்? இப்படியான ஒரு உரை. நாற்பது ஐம்பது பேர் வந்திருந்தார்கள். எழுத்தாளர் சங்க வெளியீடான சில புத்தகங்களை அளித்தார்கள். மொத்தம் 110 உருப்பினர்களிருப்பதாகவும் அத்தனைப்பேரும் எழுதுபவர்கள் என்றும் சங்கத்தின் தலைவர் ஆண்டியப்பன் சொன்னார். 

நேருவுடன் நலம் விசாரித்தபோது
இரவுணவிற்கு மீண்டும் செட்டிநாடு கறி பேலஸ் சென்றோம். விஷ்ணுபுரம் வட்டத்து தோழர் சுபஸ்ரீ வந்திருந்தார். ஹோட்டலில் எழுத்தாளர் சித்ரா ரமேஷ் அவர்களை சந்தித்தோம். உரையாடியபடி உணவுண்டு முடித்து அறைக்கு திரும்பியபோது நள்ளிரவு. மறுநாள் முழுவதும் வகுப்பு. அதற்காக தயார் செய்திருந்த கோப்புகளில் சிலவற்றை சீரமைக்க வேண்டி இருந்தது. பங்கேற்பாளர்கள் அனுப்பிய புதிய கதைகளை வாசித்து குறிப்புகளை எடுத்துக்கொண்டு உறங்கச் சென்றேன்.    


சித்துராஜ் பொன்ராஜ்ஜின் ‘ரேமான் எனும் தேவதை’ சமீபத்தில் வாசித்திருந்தேன். எனக்கு அதில் சில கதைகள் பிடிக்கவும் செய்திருந்தது. மரபிலக்கிய பரிச்சயம், உலகளாவிய தன்மை என பலவற்றின் கலவை. ஆனால் அவரிடம் சொல்வதற்கு முன் சில சர்ச்சைகள் ஏற்பட்டு போயின. இப்போது அவரிடம் பேசினால் இதன்பொருட்டு என புரிந்துகொள்ளப் படுமோ எனும் தயக்கம் இருந்தது. எனினும் சிங்கப்பூர் கிளம்புவதற்கு முன்னரே உரையாடினேன். சிங்கப்பூரில் சந்திப்பதாக முடிவானது. சனிக்கிழமை காலை சித்துராஜ் பொன்ராஜ் அறைக்கு வந்து அழைத்து சென்றார். ஒரு காபி குடித்து பேசிக்கொண்டிருந்தோம். எழுத்து என்பதைத்தாண்டி இந்திய மரபு சார்ந்து பலவற்றில் எங்களுக்கு பொதுவான அனுபவங்கள் பேசு தளங்கள் இருந்ததை கண்டுகண்டோம். சின்ன மஸ்தா, அனாஹதம், பவுத்த சிற்பவியல் என சுவாரசியமான உரையாடல். அவருடைய நாவலை பரிசளித்தார். ஆச்சரியம் என்னவென்றால் இன்று தமிழ் எழுத்தாளர்களில் அவரளவிற்கு அதிக மொழி தெரிந்தவர்கள் பிறர் இல்லை என்றே எண்ணுகிறேன். இந்திய மொழிகள் தவிர்த்து ஸ்பானிஷ் பயின்றிருக்கிறார். நிகழ்வு நடக்கும் எஸ்.பி.ஹெச் (singapore press holdings) வளாகத்திற்கு கொண்டு விட்டார். எஸ்.பி.ஹெச் சிங்கப்பூரின் நான்கு மொழிகளிலும் இதழ்கள் நடத்தி வருகிறது. தமிழ் முரசு மிகப் பழைய நாளிதழ். நவீனின் மீண்டு நிலைத்த நிழல்கள் வழியாக கோ. சாரங்கபாணி மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது.
பய்லரங்கின் போது

இட்லி வடை சாப்பிட்டோம்.  பயிலரங்கில் சுமார் 28 பேர் பங்குகொண்டார்கள். மூத்த எழுத்தாளர்கள் துவங்கி கல்லூரி மாணவர்கள் வரை பலதரப்பட்ட பேர் அடங்கிய குழு. கல்லூரி கால செமினார்களில் இருபது நிமிட வகுப்புக்கள் எடுத்தது உண்டு. இலக்கிய உரை என்று கணக்கில் கொண்டால் கூட முதல்நாள் பேசிய ஒருமணிநேர உரைதான் அதிகபட்சம். ஒருநாள் முழுக்க வகுப்பு எடுப்பது என்பது எனக்கு புதிய அனுபவம். மூன்று பிரசெண்டஷங்களை கொண்டு வந்தேன். சிறுகதை அதன் வடிவங்கள், இலக்கணம் என்பது ஒரு வகுப்பு. பின்னர் அறிவியல் புனைவு பற்றிய ஒரு வகுப்பு. பயிற்சி கேள்விகள். அறிவியல் புனைவு கதைகள் சார்ந்த விவாதம். பயிலரங்கில் பங்கேற்றவர்கள் அனுப்பிய கதைகளை பற்றிய விமர்சன அமர்வு, வரலாற்று புனைவு பற்றிய அறிமுகம் மற்றும் தேர்ந்தெடுத்த கதைகள் பற்றிய விவாதம் மற்றும் பயிற்சி கேள்விகள் என தோராயமாக பகுத்துக்கொண்டேன். முதலில் வந்திருந்தவர்களை அறிமுகம் செய்து கொண்டு, அவர்கள் இந்த பயிலரங்கில் எதிர்பார்ப்பது என்ன என்பதை கேட்டுக்கொண்டேன். நான்கு கல்லூரி மாணவர்கள் வந்திருந்தார்கள். அவர்களை மையப்படுத்தியே இந்த வகுப்பை அமைக்க வேண்டும் என விரும்பினேன். அவர்களுக்கு புரியும் பட்சத்தில் எழுத்து அறிமுகம் கொண்ட பிறருக்கும் எளிதாக சென்று சேர்ந்து விடும். சிங்கப்பூரின் தங்கப் பேனா பரிசு பெற்ற எம்.கே.குமார் வந்திருந்தார். அழகுநிலா போன்றவர்கள் அறியப்பட்ட எழுத்தாளர்கள். கிருத்திகா, ஹேமா, பாரதி, மலையரசி போன்றோரும் தொடர்ந்து வாசிக்கவும் எழுதவும் செய்பவர்கள். பலருக்கும் ஜெயமோகன் தலம் நன்கு பரிச்சயமாகி இருந்தது. ராஜிக்கண்ணு, துரை மாணிக்கம் போன்றோர் வயதில் மூத்தவர்கள். ஒருவகையில் எனக்கே இது வியப்பாகத்தான் இருந்தது. நாள் முழுக்க உற்சாகமாக பாடம் நடத்த முடிந்தது. தொண்டை வறண்டு அவ்வப்போது சுடுதண்ணீர் குடித்துக் கொண்டேன். பங்கேற்ற அனைவரும் நிறைவான நேர்மறை எதிர்வினைகளையே அளித்தார்கள். பங்கேற்பாளர்கள் அளவிற்கே நானும் கற்றுக்கொண்டேன் என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களுடைய புத்தகங்களை பரிசளித்தார்கள். தேசிய கலை மன்றமும் அவர்களுடைய சில வெளியீடுகளை அளித்தார்கள். அதில் சிங்கப்பூரின் பிற மொழி இலக்கியங்கள் இருக்கக்கூடும். வாசித்து பார்க்க வேண்டும். பின்னர் அறைக்கு திரும்பினோம். ஒரு பையை மட்டும் எடுத்துக்கொண்டு இன்னொரு பெட்டியை கணேஷ் அவர்களின் கடையில் வைத்துவிட்டு சென்றோம்.

பயிலரங்கு பங்கேற்பாளர்கள்

இரவு ஷானவாஸ் அவர்களின் கடையில் உண்டோம். ‘வாசகர் வட்டத்தின்’ பொறுப்பில் இருப்பவர். அங்கே பலரையும் வேலை வாங்க வேண்டிய இடத்தில் இருப்பவர். அது வழியாக வாழ்க்கையில் அவர் சந்தித்த நெருக்கடியான தருணங்களைப்  பல கதைகள் வழியாக சுவாரசியமாக சொல்லிக் கொண்டிருந்தார். அவர் நல்ல கதைகளை எழுத முடியும். அதற்கான வாசிப்பும் வாழ்வனுபவங்களும் உள்ளன. அங்கிருந்து விடைப்பெற்று லாவண்டர் எம்.ஆர்.டிக்கு சென்றோம். மலேசிய பேருந்து நள்ளிரவு பனிரெண்டு மணிக்கு அங்குதான் வரும். ஆனால் அங்கு அதற்கான சுவடே இல்லை. லாவண்டர் எம்.ஆர்.டியில் இருந்து புறப்படும் ஒரு ரயில் நின்றுவிட்டது என்பதால் நாங்கள் அங்கிருந்த இரண்டு மணிநேரமும் சின்ன ஒலிப்பெருக்கி வழியாக ஒரு பாட்டியம்மா ஆதி அறிவித்தபடி இருந்தார். அருகாமை பேருந்து நிலையத்தில் வரும் பேருந்தில் ரயிலில் செல்பவர்கள் ஏறிக்கொள்ளலாம் என்றார். காலையிலிருந்து நின்றபடி வகுப்பெடுத்தது, அலைச்சல் எல்லாம் சேர்ந்து தூக்கம் சொக்கியது. ஒருமணிக்கு பேருந்து வந்து சேர்ந்தது. நல்ல வசதியான இருக்கைகள் கொண்ட பேருந்து. ஒருமணி நேரத்தில் சிங்கப்பூர் எல்லையை அடைந்ததும் பையைத் தூக்கிக்கொண்டு இம்மிக்ரேஷன் கடந்து மறுபுறம் ஏறிக்கொண்டோம். ஒரு பாலத்தை கடந்ததும் மலேசியா வந்தது. மீண்டும் இதேப்போல் ஏறி இறங்கி கடந்தோம். ஒருவழியாக உறங்கி விழித்தபோது காலை ஏழு மணி. பேருந்தை விட்டு இறங்கியதும் நவீன் காத்திருந்தார்.