Saturday, May 30, 2020

நீலகண்டம்- துரை அறிவழகன், ரா.செந்தில்குமார் வாசிப்பு


  எழுத்தாளர் துரை அறிவழகன் சிற்றிதழ் சூழலில் புழங்குபவர். மலேசியாவில்;பணியாற்றிவிட்டு இப்போது காரைக்குடியில் வசிக்கிறார். அனன்யா வெளியீடாக 'தனபாக்கியத்தின் இரவு' என்றொரு சிறுகதை தொகுப்பின் தொகுப்பாசிரியர். நீலகண்டம் குறித்து அவர் எழுதியுள்ள குறிப்பு. நன்றி.

மூன்று வருடங்கள் இருக்கும் அந்த குறும்படம் இணையத்தில் பார்த்து. தாமஸ் ஆல்வா எடிசன் வாழ்வை மையமாக வைத்து சஷிதரன் தயாரிப்பில் ஆட்டிசன் விழிப்புணர்வு குறும்படம் அது. லைட் அப் சம் ஒன்ஸ் லைப் எனும் 6 நிமிடங்கள் ஓட கூடிய குறும்படம்.  ஆட்டிசன் குறைபாடு உள்ள மேதை எடிசன். நீலகண்டம் வாசிப்பு அந்த நாளை நினைவுபடுத்தியது.  செந்தியும்,  ரம்யாவும் ஒரு மேதையை வருவுக்குள் தேடும் போது எடிசன் நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை. வரு ஆட்டிசன் குறைபாடு உள்ள குழந்தை.

 

 'நாவல் கோட்பாட்டில்' ஜெயமோகன்  சொல்வார் : "நாவல் என்பது தத்துவத்தின் கலை ". நீலகண்டம் நாவல் தத்துவத்தின் இறுக்கதுடன் அமையாது கலைக்குரிய நெகிழ்வு தன்மையுடன் அமைந்துள்ளது.

   

 ஒரு பறவையின் பார்வையில் விரிகிறது நாவல். கதை மாந்தர்கள் பிரவாகமாக கதை களத்தில் விரிகிறார்கள்.  'ஜெயமோகன்' கோட்பாட்டின்படி வடிவற்ற வடிவத்தை  கொண்டு வலை போல் கிளை பரப்பி நிற்கிறது நாவல்.

 

 'வரு ' முப்பட்டகத்தில் இருந்து சிதறும் ஒளி,  யதார்த்தம்,  மீயதார்த்தம் தளங்களின் வழி அற்புத உலகை காட்டுகிறது.

   

வேதாளம் கதைகள் மெய்யியல் விசாரணை சார்ந்த வாழ்வியல் பார்வையை திறந்து விடுகிறது.

     

அஷரா தேசத்தில் அச்சுவுடன் பேசும் நிமோ தங்க மீன்,  இசட் எறும்பு, பேக்மேன்,  கடல் ஆமை என விரிகிறது இன்னொரு உலகு.

   

 மலரின் பொருட்டு உயிரை கொடுப்பதை காட்டிலும் வாழ்விற்கு வேறு உன்னத நோக்கங்கள் ஏதுமில்லை எனும் வேதாளத்தின் பதில் வழி சுனிலின் உலகு புரிபடுகிறது 

     

பழகிய வழியிலிருந்து விலகி புதிய கலை நேர்த்தியுடனும்,  வடிவ நேர்த்தியுடனும் மலர்ந்துள்ள  நாவல் இது. மூங்கிலை  பிளந்து படல்களாக்கி  நம் முன் விரிந்து நிற்கிறது நீலகண்டம்.



----

எழுத்தாளர் ரா.செந்தில்குமார் டோக்கியோவில் வசித்து வருகிறார். தற்போது தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். நல்ல நண்பரும் கூட. ஃபேஸ்புக்கில் இந்த குறிப்பை எழுதி இருந்திருந்தார். நன்றி.





நமக்கு பிறக்கும் குழந்தைகள், நமக்கு என்னவாக இருக்கிறார்கள்? நம்முடைய கனவுகளை நிறைவேற்ற போகிறவர்களாய், அதீதமான திறமை வாய்ந்தவர்களாய், கருவிலேயே திருவுடையவர்களாய், சகலகலா வல்லவர்களாய் இப்படி என்னென்னவாகவோ இருப்பவர்கள், ஒருபோதும் குழந்தைகளாய் இருக்கமட்டும் நாம் அனுமதிப்பதில்லை. தம்மை முன்னிறுத்திக்கொள்ளாதவர்கள் கூட தம் குழந்தைகளின் அபாரங்களை பட்டியலிட தயங்குவதில்லை. ஏனெனில், அவர்கள் நம்முடைய வித்து. ஒருவகையில் அவர்கள் தம்முடைய உழைப்பால் அடையும் உயரங்களுக்கு கூட நாம் தான் காரணமென்கிற போலி பெருமிதம்.



இப்படிபட்ட சூழலில், ஆட்டிச குழந்தைகளாக இருக்க நேரிடுமென்றால், என்னவாகுமென்கிற புனைவே சுநீல் கிருஷ்ணனின் நீலகண்டம். முதலில், சிறப்பியல்புகளை, அவர்களிடம் அற்புதங்களை தேடும் பெற்றோரின் மனது, பிறகு கொள்ளும் ஏமாற்றங்கள், வாழ்வின் அன்றாட அலுப்புகளில் அடையும் தடுமாற்றம் என்று விரியும் நாவல், ஒரு உச்சகணத்தில் நமக்குள்ளே உள்ளுறைந்து ஒளிந்திருக்கும் நஞ்சை அடையாளம் கண்டு மீள்கிறது. 



டோராவும் சோட்டாபீமும் வருவை தேடிச்செல்வது, நீலயானையின் ஒப்புதல் வாக்குமூலம், வானதியின் வருகை போன்ற பகுதிகள் சுநீலின் சிறப்பம்சம். பேசும் பூனைகுட்டியை உருவாக்கி அதன் மூலம் கதையை நகர்த்திசெல்லும் மேஜிக்கல் ரியலிச உத்தியை தொடர்ந்து பயன்படுத்துகிறார். பெற்றோரால் பிள்ளைகறி சமைக்கப்பட்ட சீராளன் வரும்போது, இந்த உத்தி சிறப்பாக நாவலின் கருவுடன் பொருந்திவிடுகிறது. வருவின் நிலையை, நீலயானை கொண்டு விளக்குவது இதன் இன்னொரு உச்சம். 



இருநூறு பக்கங்கள் கொண்ட நாவலில், செந்திலின் முன்னோர்களின் கதை, ரம்யாவின் தாய் வந்து சேரும் இடங்கள், கரையான் அரிக்கும் வீடு போன்ற இடங்கள், நாவலின் மையத்தை விட்டு வாசகனை நகர்த்தியபடியே இருக்கிறது. இயல்பாக செந்தில், ரம்யா மற்றும் வரூ மீது எழவேண்டிய உணர்வு ரீதியான நெருக்கத்தை இது குறைத்து விடுகிறது. ஹரியின் கதாபாத்திரம் அவ்வளவாக நாவலுக்கு உதவவில்லை.



அமுதே நஞ்சாகும் தருணத்தை எழுத்தாக்கிய விதத்தில் முக்கியத்துவம் பெறுகிறது நீலகண்டம்.

No comments:

Post a Comment