Sunday, December 2, 2018

யாவரும் நூல் வெளியீட்டு விழா - சிறப்புரை

(நேற்று 2/12/18 யாவரும் பதிப்பகம் வெளியிட்ட பத்து நூல்கள் வெளியீட்டு விழாவில் ஆற்றுவதற்காக தயார் செய்த சிறப்புரை. சில புள்ளிகளை பேசும்போது தவறவிட்டேன்.)

https://www.youtube.com/watch?v=2mXntCtPjgw&t=768s

வணக்கம் 
நண்பர்களே,
ஒரு சக படைப்பாளியாக தமிழ் படைப்புலகில் தடம் பதிக்கும் எழுத்தாள நண்பர்களை ஆரத் தழுவி வரவேற்கிறேன். உங்கள் வருகை தமிழ் இலக்கிய சூழலில் மேலும் பல புதிய, பரந்த வாயில்களை திறந்து விடட்டும். சைலபதி, சிவக்குமார் முத்தையா, கிருஷ்ணமூர்த்தி மற்றும் ராம் முரளிக்கு இது முதல் நூல் அல்ல. ஜா. தீபா இலக்கிய சூழலில் நாம்  அறிந்த ஆளுமைதான். சித்ரன், சுரேஷ் மான்யா, மது ஸ்ரீதரன் மற்றும் வீரபாண்டியன் ஆகியோருக்கு நல்வரவு. தனிப்பட்ட முறையில் சித்ரனின் நூல் வெளிவருவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் அவனை விநோத்தாக, சக மருத்துவ மாணவனாக, என் முதல் இலக்கிய நண்பனாக நான் அறிவேன். எனது நவீன இலக்கிய பரிச்சயம் அவன் வழியே நிகழ்ந்தது. வருடாவருடம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கும் யாவரும் பதிப்பகம், பல புதிய எழுத்தாளர்களுக்கு களம் அமைத்து கொடுக்கிறது. ஜீவ கரிகாலன், கண்ணதாசன் உட்பட நண்பர்களுக்கு வாழ்த்துக்கள். புத்தகம் கைக்கு வராததால் விரிவாக ஒவ்வொரு தொகுப்பைக் குறித்தும் பேச இயலவில்லை, எனினும் வெளியிடப்படும் நூல்களின் முன்னுரைகளை வாசித்தேன். ராம் முரளி மொழியாக்கம் செய்த ஹோட்ரோவோஸ்கி நேர்காணல் சிறப்பாக இருந்தது. திரை, அளகபாரம், கல்நாகம், குறத்திகள் ஆடும் மூன்றாம் சாமம், கனாத்திறமுரைத்த கதைகள் ஆகிய கதைகளை வாசித்தேன். ஒவ்வொன்றும் ஒருவகை. தொன்மம், குடும்ப வாழ்வில் இடையீடு செய்யும் நவீன வாழ்வு, coming of age வகைக்கதை, கையறுநிலை, கற்பனையின் ஆற்றல் என ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு வகை. வெவ்வேறு பேசு பொருள் கொண்டவையும் கூட. சிறுகதைக்கான வடிவ நேர்த்தி கொண்டிருப்பவை. திரை ஒரு மகாபாரத தொன்மத்தை, காந்தாரியின் கதையை மீளுருவாக்கம் செய்கிறது. அதுவும் ஒரு பெண்ணிய கோணத்தில். அளகபாரம் நவீன காலத்தில் குழந்தை பேறு எத்தகைய சிக்கலாக மாறி வருகிறது, அதன் அழுத்தங்கள் என்னவாக இருக்கிறது என சொல்கிறது. கல்நாகம் காமம் சார்ந்த சாதாரண கதையாக நிறைவடையாமல் அதன் படிமச் செறிவு காரணமாக முக்கியத்துவம் பெறுகிறது. கனாத்திறமுரைத்த கதைகள் வாசிப்பின்பம் மற்றும் கற்பனையின் காரணமாக தனித்து தெரிகிறது. குறத்திகள் ஆடும் மூன்றாம் சாமம், கீழத்தஞ்சை பகுதியில் நையாண்டி மேளம் வாசிப்போரின் வாழ்வைப் பேசுகிறது. வாழ்வு ஆவணமாக மட்டும் எஞ்சாமல் வாழ்வை கரிசனத்துடன் அணுகும் பெண்களைச் சித்தரிக்கிறது. மது ஸ்ரீதரனின் முதல் கட்டுரை வாசிக்க சுவாரசியமாக இருந்தது. நினைவுத் தொடர்பு ஒன்றை பின்னுகிறார்.  

சிறப்புரை எனச் சொல்லிக்கொண்டாலும், இந்த வாய்ப்பை ஒரு எழுத்தாளன் தன் சக பயணிகளுடன் நிகழ்த்தும் உரையாடல் எனும் கோணத்திலேயே நிகழ்த்த விரும்புகிறேன்.  

அண்மையில் இந்த ஆண்டுக்கான யுவ புரஸ்கார் விருது வழங்கும் விழா மணிப்பூரின் இம்பாலில் நிகழ்ந்தது. நிகழ்விற்கு முதல்நாள், பஞ்சாபி எழுத்தாளர் குர்ப்ரீத் செத்ஜி ஒரு சிறிய கூட்டத்தை ஒருங்கிணைத்தார். நான் அவரிடம் உங்கள் கர்த்தார் சிங் துக்கலின் ‘பவுர்ணமி இரவு’ தமிழில் உள்ளது என்றேன். என் ஹிந்தி அறியாமையை மீறி அவருள் பொங்கிய பெருமிதத்தை உற்சாகத்தை உணர்ந்தேன். உருது எழுத்தாளரிடம் மண்டோவும் இஸ்மத் சுக்தாயும் தமிழில் கிடைக்கிறார்கள் எனச் சொன்னபோது அவர் விழியில் நிறைந்த மகிழ்ச்சியைக் கண்டேன். வங்காளி எழுத்தாளரிடம் தாகூர், சரத்சந்திரர், சத்யஜித் ரே, விபூதி பூஷன், தாரா சங்கர் பானர்ஜி, சுனில் கங்கோபாத்யாய ஆகியோரின் படைப்புகள் தமிழில் கிடைக்கின்றன என்றதும் அவர் ஆச்சரியமாக கேட்டுவிட்டு அவர்களைப் பற்றி பேசத் துவங்கினார். கன்னட எழுத்தாளரிடம் சிவராம் காரந்த், மாஸ்தி வெங்கடேச ஐயங்கார், பைரப்பா, அனந்தமூர்த்தி, டி.ஆர்.நாகராஜ், விவேக் ஷான்பாக் என ஒரு பெரும் வரிசை தமிழில் வாசிக்கப்படுவதைச் சொன்னேன். அவர் ஜெயமோகனை ஒரு பெயராக அறிந்திருந்தார். மலையாள எழுத்தாளரிடம் தகழி, பஷீர், எம்.டி. வாசுதேவ நம்பூதிரி, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு, ஓ.வி விஜயன், கமலாதாஸ், என்.எஸ்.மாதவன், சக்காரியா, புனத்தில் இக்கா, கல்பற்றா நாராயணன், மனோஜ் குரூர், கே.ஆர் மீரா என பெரும் வரிசையைச் சொன்னேன். அவருக்கு சாருவையும் ஜெயமோகனையும் பாஷாபோஷிணி வழியாக நன்றாகவே தெரிந்திருக்கிறது. அசோகமித்திரனின் தண்ணீரை மொழியாக்கத்தில் வாசித்ததாக சொன்னார். என் மொழியின் மகத்தான படைப்பாளி ஒருவனை இதோ இவன் படித்திருக்கிறான் எனும் மகிழ்ச்சி அளவற்றது. பாலசுப்பிரமணியன் பொன்ராஜை விடுங்கள் நம் பாரதியும், பிச்சமூர்த்தியும், புதுமைபித்தனும், மவுனியும், திஜாவும், குபராவும், சுந்தர ராமசாமியும், கி.ராவும் இன்னும் எந்த மொழியிலும் சென்று சேரவில்லை எனும் நிலை பெரும் ஆற்றாமையை ஏற்படுத்தியது. நாம் அவர்களை கொண்டு சேர்ப்பது நம் கடமை அல்லவா? ஆனால் அதை எப்படிச் செய்வது எனத் தெரியவில்லை. அசோகமித்திரன் இருமொழி புலமை பெற்றவர். ஆங்கிலத்திலும் தமிழ் அளவிற்கே நேரடியாக எழுதியவர். கன்னடம், வங்காளம் போன்ற மொழிகளில் இன்று இயங்குபவர்களும் இரு மொழி விற்பன்னர்கள் தான். ராஜஸ்தானி, பஞ்சாபி, சிந்தி போன்ற மொழிகளில் இயங்குபவர்களும் இருமொழிப் புலமை கொண்டவர்கள் தான். பெரும்பாலும் அவர்கள் ஹிந்தியிலும் நேரடியாக எழுதுகிறார்கள். இந்த போக்கை நாமும் கவனிக்க வேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.   

யுவ புரஸ்கார் அனுபவம் வழி நானறிந்தது என்னவென்றால், தமிழ் இலக்கியம் நிச்சயம் பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிடும்போது மிக வளமாக இயங்கி வருகிறது. தமிழைத் தவிர்த்து மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளி மற்றும் உருது ஆகியவை மட்டுமே உயிர்ப்புடன் வாழும் மொழியாகத் திகழ்கிறது.  உலக இலக்கிய, பிற மொழி கிளாசிக்குகள் மொழியாக்கம் வழி நம்மை வந்தடைந்த வண்ணம் உள்ளன. யதார்த்தவாத, நவீனத்துவ, பின் நவீனத்துவ எழுத்து முறைகள் ஒரே காலகட்டத்தில் வெவ்வேறு தளங்களில் தாக்கம் செலுத்தி தமிழை வளப்படுத்துகிறது. ஒரு பக்கம் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய கண்டங்களை தம் களமாக கொண்ட தமிழ் புனைவுகள் வெளிவருகின்றன. மறுபக்கம் தமிழகத்து இனக்குழுக்களின் வாழ்வியல் மற்றும் வரலாறு புதினங்களாக வெளிவருகின்றன. தகவல் தொழில்நுட்பத் துறையின் தாக்கத்தை உள்வாங்கி நவீன வாழ்வை, அதன் உறவு சிக்கல்களைப் பேசும் கதைகள் எழுதப்படுகின்றன. ஜெயமோகனின் ‘பெரியம்மாவின் சொற்கள்’ மொழியாக்கம் செய்யப்பட்டு சர்வதேச போட்டியில் வென்று அங்கீகாரம் பெற்றுள்ளது. பெருமாள் முருகனுக்கு சர்வதேச கவனம் கிடைத்திருக்கிறது. சாருவும் கூட ஆங்கில மொழியாக்கம் வழி பரவலாகி இருக்கிறார். இந்நிகழ்வுகள் வழி மேலும் பல தரமான தமிழ் எழுத்தாளர்களை உலக சமூகம் வருங்காலத்தில் கவனத்தில் கொள்ளும் எனும் நம்பிக்கை எனக்குண்டு.  

ஒரு எழுத்தாளனாக நம்முள் உள்ள மிக முக்கியமான கேள்விகள் என்பவை- நாம் எதற்காக எழுதுகிறோம்? யாருக்காக எழுதுகிறோம்? இக்கேள்விக்கான விடை என்பது அந்தரங்கமானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விடையிருக்கலாம். கலை மக்களுக்காகவா? கலை கலைக்காகவா? எனும் நெடுங்கால விவாத மரபின் நீட்சி. திட்டவட்டமான இறுதி பதில்கள் என ஏதுமில்லை. அவரவர் தேடிக் கண்டடைவதே சரி. இன்று புத்தகம் வெளியிடும் சிவக்குமார் முத்தையா அவருடைய முன்னுரையில் ‘பிரசாரமும் கூட கலைத்தன்மை கொண்டதாக இருந்தால் மட்டுமே தாக்கம் செலுத்தும்’ எனும் கருத்து எனக்கும் ஏற்புடையதே. 

நவீன மொழியியல் ஆய்வாளர்கள் குழந்தைகளின் மொழிவழி தம்மை முதன்முதலாக வெளிப்படுத்த கதைகளையே தேர்கிறார்கள் என கூறுகிறார்கள். கதைகள் நம்மை எப்போதும் தொடர்ந்தவண்ணம் உள்ளன. நம்மை பாதுகாக்கின்றன. அயோத்திதாச பண்டிதரை வாசிக்கும்போது கதை எப்படி அதிகார மாற்றத்தை நிகழ்த்துகிறது என்றுணர முடியும். இந்த புனைவு சூழ் உலகில் ஜீவித்திருக்க நமக்கு கதைகள் தேவையாய் உள்ளன. புடவி நெய்யும் கதையில் தற்செயலாக ஏதோ ஓரிடத்தில் அமைந்துவிடும் பாத்திரங்கள் தான் நாம். 

ஹெரால்ட் ப்ளூம் நல்ல இலக்கியம் அதிகபட்சம் என்ன செய்ய முடியும் எனும் கேள்விக்கு, சரியாக வாசித்து உள்வாங்கப்படும்போது நல்ல இலக்கியத்திற்கு உலகை சொஸ்தப்படுத்தும், ஆற்றுப்படுத்தும், குணப்படுத்தும் தன்மை இருக்கும். அதற்கப்பால் வேறு எதுவுமில்லை என்கிறார். மானுட கீழ்மையை, வன்முறையை, மனப் பிறழ்வுகளை, மன வக்கிரங்களை, வெறியாட்டை என அகத்தின் இருளை எழுதுவதும் கூட ஒருவகையான அறுவை சிகிச்சைப் போல், உள்ளிருப்பவற்றை வெளிக்கொணர்ந்து பரப்புவதே. அது வலி நிறைந்ததாக இருக்கலாம் ஆனால் அதுவும் உலகை ஆற்றுப்படுத்துவது தான். டால்ஸ்டாயின் வழியும் தாஸ்தாவெஸ்கியின் வழியும் வேறுதான் ஆனால் இருவருமே மகத்தான ஹீலர்கள். துரியனும் தர்மனும் சென்று சேர்வது ஓரிடத்திற்கே.  

சமகாலத்தை எழுதுவதா? அல்லது காலாதீத விழுமியங்களை எழுதுவதா? எது சிறந்தது என்பது மற்றுமொரு அலைக்கழிக்கும் கேள்வி. சமகாலத்தை எழுதுவதில் உள்ள சவால் என்பது அது செய்தியறிக்கை ஆகாமல் இருப்பதில் உள்ளது. அனைவரும் அறிந்த ஒன்றிற்கு அப்பாலுள்ளவற்றை அறிய முயல்வது. சமகாலம் எனும் தோணியில் பயணித்து அவனுடைய அகம் எனும் குடுவையில் காலாதீதம் எனும் நதியிலிருந்து அள்ளி வைக்கும்போதே கலை மேம்பட்டதாகிறது என்பது என் அவதானம். சமகாலமா காலாதீதமா எனும் பட்டிமன்ற பேச்சுக்கு எவ்வித பொருளுமில்லை. சமகால பொருத்தம்,பொருத்தமின்மை என்பதைத் தாண்டி ப்ளூம் ஒரு தேர்ந்த இலக்கியத்திற்கு மூன்று இயல்புகள் இருந்தால் போதும் என்கிறார் “ aesthetic splendour, cognitive power and wisdom”. (அழகியல் விகசிப்பு, அறிவுணர்வின் ஆற்றல் மற்றும் ஞானம் என புரிந்துகொள்ளலாம்).  எழுத்தாளன் கலையின் வழி  வாழ்வர்த்தம் சார்ந்து, அவனுடைய இருப்பு சார்ந்து மெய்யியல் கேள்விகளை சென்று முட்டிக் கொள்கிறான். அந்த சுவற்றின் மறுபுறம் செல்வதற்கான வழியை துழாவுகிறான். அங்கே என்ன உள்ளது என்பதை ஊகிக்க முயல்கிறான். எழுத்தாளன் மெய்யியலை முறையாக கற்றால் நல்லது, ஆனால் அப்படிக் கற்றாலும் இல்லையென்றாலும், அது அறிவியல் புனைவாக இருந்தாலும் கிராமத்தை களமாகக் கொண்ட யதார்த்த புனைவாக இருந்தாலும் அவன் சென்றடைவது இந்த மெய்யியல் தளத்தையே. குறிப்பாக நாவல் எனும் கலை வடிவம் மெய்யியல் விசாரங்களை விரித்தும் அணுகியும் நோக்கும் ஒரு கலை வடிவமாக இருக்கிறது. நாவல் எனும் வடிவம் ஒரு ஆலமரத்தைப் போன்றது. திட்டமற்ற வடிவில் விரவிப் பரவுவது எனினும் அதன் ஆழத்தில் உள்ள திட்டத்துடனான ஒர்மையுறவு கொண்டது. அந்த ஓர்மை உறவு சிதைக்கப்ப்படும்போது அதன் கலைத்தன்மை சரிகிறது. 

சிறுகதை எனும் வடிவம் நடாலிய ஹாதொர்ன், எட்கர் ஆலன் போ மற்றும் நிகோலாய் கோகோய் காலகட்டத்தில் வேர்கொண்ட வடிவம், அதாவது 1830-60. 1890 களில் தான் அவற்றை சிறுகதை என அடையாளப் படுத்தினார்கள். தொடக்கக் கால சிறுகதை ஆசிரியர்கள் சிறுகதை வடிவத்தை யதார்த்தம் தவிர்த்த கதைகளுக்கான களமாகவே கண்டார்கள். தமிழின் முதல் சிறுகதை என பலராலும் அடையாளப்படுத்தப்படும் வ.வே.சு ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரத்தின்’ கதைசொல்லி ஒரு மரம். உலகெங்கிலும் நவீன சிறுகதையின் தோற்றம் என்பது அதன் முந்தைய வடிவான தேவதைக் கதைகள், தொன்மக் கதைகள் போன்ற மிகு புனைவுகளின் நீட்சியாகவே இருந்துள்ளன. ஆனால் மிக முக்கியமான வேற்றுமை என்பது அவை நாயகர்களின் கதைகளை அல்ல, பொதுவெளியில் ஒலிக்காத முகமற்றவர்களின், குரலற்றவர்களின் குரலாகவே ஒலித்தன. அரசமரம் ஒரு நாயகனை,அரசனைப் பற்றிய கதையைச் சொல்லவில்லை. தான் பார்த்து வளர்ந்து கண் முன் சமூக ஒடுக்குமுறையால் உயிர்விட்ட ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. நவீன இலக்கியம் காவியங்களில் இருந்து வேறுபடும் புள்ளி என்பது இதுவே. வரலாற்று நாயகர்களின் கதைகளையும் நாம் எழுதலாம், ஆனால் அதை வழமையான ஒற்றைக் கோணத்தில் இருந்து அணுகாமல் வெவ்வேறு கோணங்களில் எழுத முடிய வேண்டும். யதார்த்த கதைகள் மண்ணையும் அதன் மனிதர்களையும் பேசின. சித்தரிப்புக்கள் கதையின் மையமாகின. எனினும் நுண்ணிய வாழ்க்கைச் சித்தரிப்புகள் கதையின் உயிரோட்டத்திற்கு வலுச் சேர்ப்பதாக இருக்க வேண்டும். எத்தனை துல்லியமான, எத்தனை இன்பமயமான விவரணையாக இருந்தாலும் கூட கதையோட்டத்திற்கு பொருத்தமில்லை என்றால் அது துருத்தித் தெரியும். யதார்த்தவாத கதைகள் பெரும் சமூக வாழ்வினுள் இருக்கும் மனிதர்களை சித்தரித்தது. நவீனத்துவம் சமூகத்திலிருந்து துண்டாக்கிக்கொண்ட தனி மனிதனின் அகத் தத்தளிப்பை கலையாக்கியது. யதார்த்தவாத கதைகள் கால ஓட்டத்தை, அத்துடன் ஒழுகிச் செல்லும் வாழ்வுகளைச் சித்தரிப்பவை. நவீனத்துவம் கால ஓட்டத்தில் எதிர்நீச்சல் அடிப்பவர்களின் கதையைப் பேசுகிறது. பின் நவீனத்துவம் சிதறிய ஆடித் துண்டுகள் வழியாக நூறு நூறு சுக்குகளாக பிரிந்து கிடக்கும் சுயத்தின் விசாரணையாக பரிணாமம் கொள்கிறது. நிகழ்வுகளை தலைகீழாக்குகிறது. பொருள் பொருளின்மை எனும் இருமையை பகடியின் வழி கடந்து செல்ல முயல்கிறது. இன்று, இப்போது நாமொரு தொன்மக் கதையை மறு அக்கம் செய்தாலும் கூட மூலக் கதைக்கும் இன்றைய கதைக்கும் இடையில் நிகழ்ந்த வரலாற்று- சமூக மாற்றங்களின் இடையீட்டின் வழி மாறி வரும் விழுமியங்களுக்கு இடையிலான மோதலாகத்தான் இருக்க முடியும். 

நாம் என்ன மாதிரியான கதைகளை எழுத வேண்டும்? ஒரு எழுத்தாளன் யதார்த்தவாத அல்லது நவீனத்துவ அல்லது பின் நவீனத்துவ கதையை எழுதப் போகிறேன் எனும் முடிவுடன் எழுத அமரும்போதே அவன் கலையை விட்டு அகல்கிறான். ஏனெனில் எழுத்தாளன் கதையை எழுதுகிறான், அவன் அகம் சுமக்கும் கருப்பொருளுக்கு உரிய வெளிப்பாட்டு முறையை கதையே தேர்ந்தெடுக்கும். மேலும் இத்தகைய வகைப்பாடுகளை வாசகனும் விமர்சகனும் நிகழ்த்தி கொள்ளட்டும் எனும் தெளிவிருப்பதே நன்மை பயக்கும். இன்றைய எழுத்தாளனுக்கு மிக முக்கியமான தேவை என்பது கவனச் சிதைவை கடந்து தொடர்ந்து எழுதுவதற்கான பொறுமை. ஒரு கதை தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் வரை காத்திருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன். ஒரு கதை எழுதி முடித்த பின் அதிலிருந்து உணர்வு ரீதியாக விலகிய பின்னர் சில நாட்கள் கழித்து எவருடைய கதையையோ வாசிப்பது போல் வாசித்து பார்க்கும்போதும் அக்கதையில் வசீகரம் நீடிக்கிறதா என நோக்குவது கதையை பிரசுரிப்பதற்கு முன்பான முக்கியமான கட்டம். இணையமும் சமூக ஊடகமும் என் அனுபவத்தில்  என் கவனத்தை, தொடர் வாசிப்பை, சிந்தனைத் தொடர்ச்சியை அறுபடச் செய்கிறது. சமூக ஊடக பிம்ப பரிபாலனம் நம் நேரத்தை விழுங்கி விடுகிறது. ஆனால் அதைவிட்டு முற்றாக அகன்றுவிடவும் முடிவதில்லை.  வெகு சில ஆளுமைகளே சமூக ஊடக செயல்பாடுகள் வழியாக தங்கள் படைப்பூக்கத்தை தக்கவைத்து கொள்கிறார்கள். அதற்கான மனத் திண்மையும் மன அமைப்பும் இருந்தால் அத்தகைய வழியைத் தேர்வு செய்யலாம். இல்லையேல் புத்தரின் மத்திம மார்க்கத்தை தேர்ந்து கொள்வதே சிறந்தது. 

கதைக்கான அளவைகள் மாறி வருகின்றன. கதையின் வடிவமும் உட்பொருளும் ஒன்றுடன் ஒன்று பிணைந்தது. அவற்றின் ஓர்மை சிதறும்போது வடிவச் சோதனைகள் துருத்தித் தெரியும். இத்தகைய சூழலில் நாம் கேட்க வேண்டிய கேள்வி- இவ்வடிவம் இக்கதைக்கு மேலதிகமாக என்ன அளிக்கிறது? முதன்மையான வாசகனே தேர்ந்த எழுத்தாளன் ஆக முடியும். இக்கேள்வியை எழுத்தாளனுக்குள் இருக்கும் வாசகன் நேர்மையாக எழுப்பிக்கொண்டாலே போதும். 

எத்தகைய கதையை எழுத வேண்டும்? தற்காலத்தின் பொருத்தப்பாடுள்ள கதைகளை எழுத வேண்டும் எனச் சொல்வது எளிது. ஆனால் அத்தகைய எளிய சூத்திரங்கள் ஏதுமில்லை. சிலரின் அகம் இன்றிலிருந்து நேற்றை நோக்கியே திறந்திருக்கும். ‘நினைவேக்க’ கதைகள் என புறம்தள்ளிவிட முடியாது. அசோகமித்திரன் ஒரு நேர்காணலில் எளிய மனிதர்களின் நினைவுகளைப் போற்றும் விதமாக கதைகளை எழுதுவேன் என்றார். ‘நினைவேக்க’ கதைகளின் சிக்கல் என்பது அதில் தனித்துவம் உள்ளதா? ஒருவகையில் இவ்வகைக் கதைகள் காலத்திற்கு எதிராக தன் நினைவுகளை நிறுத்தும் போராட்டம். மலேசிய இலக்கியம் வழியாகவே ‘நினைவேக்க’ கதைகள் குறித்த எனது பார்வை மாறியது. அழிந்து கொண்டிருக்கும், மாறிக்கொண்டிருக்கும் ஒரு வாழ்நிலையில் காலத்தை நிறுத்தி ஆவணப்படுத்த வேண்டியதது தேவையாகிறது. அண்மையில் வு மிங் யி எனும் தைவானிய எழுத்தாளரின் ‘stolen bicycle’ நாவலை வாசித்தேன். சைக்கிள் நம் வாழ்வில் புகுந்து ஒரு நூற்றாண்டுகாலம் இருக்கலாம். தைவானின் வெவேறு காலகட்டத்து சைக்கிள்களின் வரலாறின் வழி அத்தேசத்தின் வரலாறை, அவர்களின் குடும்ப வரலாறை காட்டிச் செல்லும் நாவல். சட்டென யோசித்தபோது தமிழ் மகனின் வெட்டு புலி நினைவுக்கு வந்தது. ஒரு தீப்பெட்டியின் அட்டைவழி தமிழக சமூக வரலாறை பேசிய நாவல். பொருளியல், சமூக தளங்களில் நேரும் மாற்றங்கள் நம் அகத்தை வடிவமைக்கின்றன. ஜார்ஜ் சாண்டர்சின் ‘persuasive nation’ நாம் எல்லாம் நுகர்ச்சிக்காக நிர்பந்தப்படுத்தப் படுகிறோம், பழக்கப் படுகிறோம் என்பதை புனைவாக்குகிறார். நாம் வாங்கிக் குவிக்கும், சேகரிக்கும் பொருட்கள் நம் வாழ்வை, நம் அகத்தை மாற்றியமைக்கின்றன. பருவ மாற்றம், சூழலியல் களம் சார்ந்து நாம் எழுதுவதற்கு மிகப்பெரிய களம் உள்ளது. தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி தனி மனித உறவுகளில் என்னவிதமான இடையீட்டை செய்துள்ளது? அதை சமன்செய்ய நாம் என்ன யுத்தியைக் கடைபிடிக்கிறோம்? ஒரு உதாரணத்தைச் சொல்லலாம், என்னுடன் யுவ புரஸ்கார் விருது பெற வந்திருந்த மலையாள எழுத்தாளர் அமல், நாவலுக்காக அவ்விருதைப் பெற்றார். அவருடைய நாவலின் கதையும் களமும் சுவாரசியமானது, அசல் அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. அவருடைய சொந்த கிராமத்தில், சகோதரனின் நண்பன் ஒரு ஃபேக் ஐடி வழி தன்னை அப்போல்லோ மருத்துவமனை மருத்துவர் என்றும், தான் பிறந்து வளர்ந்த கேரள கிராமத்திற்கு மருத்துவமனை கட்டுவது தன் கனவு என்று வெளிநாட்டு வாழ் மலையாளிகளிடம் பேசி மிகப்பெரிய தொகையை சேகரித்துள்ளார். இவ்விவகாரம் வெளிப்பட்டு காவலர்கள் குறுக்கிடுகிறார்கள். எழுத்தாளரின் சகோதரனின் ஐபி முகவரி அதில் தொடர்பு பட்டிருந்ததால். மொத்த குடும்பமும் காவலர் அரணிற்குள் வர நேர்கிறது. ஒரு கிராம அளவில் அவர்கள் இந்த சிக்கலால் என்ன மாதிரியான இடர்களை எதிர்கொள்கிறார்கள் என்பதே நாவலின் கருப்பொருள். இந்தக் கதையின் வழி எனக்குள் பல கேள்விகள் எழும்பின. ஏன் நமக்கு ஃபேக் ஐடிக்கள் தேவையாய் இருக்கின்றன? பத்திருபது பதில்கள் சொல்ல முடியலாம். அவை நம் சிதறுண்ட சுயத்தின் சாயலைக் கொண்டவையா? விளையாட்டிற்காக ஒன்று, வீராவேசமாக பொங்குவதற்கு ஒன்று, காமம் சார்ந்த தேவைகளுக்கு ஒன்று, ரகசியமாக உளவு நோக்குவதற்கு ஒன்று..இப்படி. இவை நம் அசலான சுயத்துடன் மோதல் கொள்ளும்போது அது என்னவிதமான விளைவுகளை ஏற்படுத்துகிறது? மூன்றாண்டுகளுக்கு முன் மரணித்த என் நண்பனின் ஃபேஸ்புக் கணக்கை அவனுடைய அக்கா நிர்வகிக்கிறார். அவ்வப்போது அவனுடைய சுவற்றில் நினைவுகளை பகிர்வார். அவனுடைய புகைப்படங்களை, அவனுடைய ஸ்டேடஸ்களை பகிர்வார். அவனுடைய நினைவுநாள் அன்று அவன் பக்கத்திற்கு சென்று அஞ்சலி செலுத்துவார்கள். அது மட்டுமில்லை என்றால் தொடர்பறுந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் உயிரோடு இருக்கும் நம் கணக்கற்ற நண்பர்களில் ஒருவன் என்றே நான் அவனை எண்ணியிருக்கக் கூடும். அவன் உண்மையில் மரித்துவிட்டானா என்றொரு துணுக்குறல் ஏற்பட்டது. யுவால் நோவா ஹராரி அவருடைய ‘சேப்பியன்ஸ்’ நூலில், நாம் வெட்கப்பட வேண்டியதில்லை நம் அறிவியலும் தொழில்நுட்பமும் மரணமின்மையை இலக்காகக் கொண்டவையே என்கிறார். philosopher s stone, ரசவாதம், அட்டாங்க யோகம் என மரணமின்மையின் பாதை வரலாறு முழுவதும் கடினமானதாகத்தான் இருந்திருக்கிறது. தஞ்சை கோவிலின் சிற்பியும், சித்தன்னவாசலின் ஓவியனும் மரணமின்மையை அடைந்தவந்தான் ஆனால் அவன் தன்னை முன்னிறுத்தவில்லை. தன்னை ஊடகமாக்கிக்கொண்டு அவன் வழியே வெளிப்பட்ட கலையை விட்டுச் சென்றான். மரணமின்மைக்கான மேம்பட்ட வழி கலைச் செயல்பாடாகவே இருந்திருக்கிறது. இன்றைய சமூக ஊடகம் மரணமின்மைக்கான சாத்தியத்தை வெகுஜனப் படுத்தியிருக்கிறது. மரணமின்மையின் ஒருதுளியை நாம் ருசித்துவிட்டோம். நம் மரணமின்மைக்கான வேட்கை பிளாஸ்டிக்கை உருவாக்கியுள்ளது. தனிப்பட்ட ஒரு அணுவின் மரணமின்மைக்கான விழைவு புற்று நோயாக ஆகிறது. ஏதோ ஒருவகையில் இவையிரண்டும் ஒன்றின் இருவேறு வெளிப்பாடுகளாக ஆகின்றன. சத்தியம் வாய்மை என காலம்காலமாக புகழப்பட்ட விழுமியம் வர்ணமிழந்து வெளிறி கரைந்து புலன்வயப்படாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. இவை நம் நவீன வாழ்க்கையின் சிக்கல். இத்தகைய சிக்கல்களும் சவால்களும் இல்லை என்றால் நவீன வாழக்கை என்ற ஒன்று இல்லை. வாழ்க்கையின் பொருளின்மை நம்மை கனமாக அழுத்துவதற்கு மனிதகுலம் இடைவெளி அளிப்பதில்லை. நாய்வாலை நிமிர்த்தும் பூதமாக நாம் பொருளற்ற புதிய சிக்கல்களை ஒவ்வொரு கணமும் உற்பத்தி செய்கிறோம். ஒரு புதிர் விளையாட்டு போல் அதில் ஈடுபடுகிறோம். சலிக்கச் சலிக்க வேறொரு விளையாட்டை உருவாக்குகிறோம். இவ்விளையாடுகளின் ஊடாகவே நாம் பரிணாமம் கொள்கிறோம். நம் காலத்தின் மெய்யியல் என்ன? அதன் கேள்விகள் என்ன? இவற்றை புனைவுகளின் ஊடாக கண்டடையவேண்டியது முக்கியமாகிறது.

சிறுவர் மலரின் கடைசி பக்கத்தில் எக்ஸ் ரே கண்ணன் ரே வுடைய படக்கதை வரும். ஒருவகையில் இலக்கியவாதிகளாகிய நாம் எக்ஸ் ரே கண் கொண்டவர்கள் தான். எல்லாவற்றையும் ஊடுருவிக் காண முயல்கிறோம். ஒரு மருத்துவனாக தோல் போர்த்திய உடலின் அழகை விட்டுவிட்டு எப்போதும் உள்ளிருக்கும் எலும்புகளைப் பார்ப்பது எத்தனை கடினமானது என நான் அறிவேன். ஆனால் எங்கோ கண்டடைதலின் இன்பம் நம்மை இயக்குகிறது. அதுவே நம்மை எழுத்தாளராக ஆக்குகிறது. ஊனக் கண்ணையும் ஞானக் கண்ணையும் கொண்டு நோக்கும் வாய்ப்பு நமக்கிருக்கிறது. வேறு எவருக்கும் கேட்காத குரல்கள், வேறு யாரும் செவிமடுக்காத கதைகள் நமக்கு மட்டும் கேட்கின்றன. இது நமக்கான உள்ளார்ந்த அழைப்பும் கூட. கதைகளே எழுத்தாளனின் ஆன்மீக ஈடேற்றத்திற்கான சாதனம். எழுதுவோம். 
வாழ்த்துக்கள் நண்பர்களே. 


No comments:

Post a Comment