Saturday, January 1, 2011

இந்திய மருத்துவம் -இன்றைய பிரச்சனைகள்

நீண்ட நாட்களாக இதை எழுத வேண்டும் என்று எண்ணி இருந்தேன் ,ஏதோ வேலைகள் கணினி முன் அமர்ந்து நிதானமாக எழுத இயலவில்லை ,
ஏதோ ஒரு தயக்கம் .இப்பொழுது எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன் .ஒரு ஆயுர்வேத மருத்துவனாக ,நான் இதனுள் புழங்கி கொண்டிருப்பதால் இதை ஆராதிக்கும் அதே சமயத்தில் இதில் உள்ள குறைப்பாடுகள் என் கண்களை உறுத்துகின்றன . உற்று நோக்கியதில் எந்த ஒரு மருத்துவமுமே பரிபூரணம் அல்ல என்பதை புரிந்து கொள்ள முடிந்தது .

இந்திய மருத்துவத்தை பொறுத்த வரையில் இன்றைய சிக்கல்களின் தோற்று வாயாக மூன்று முக்கிய காரணிகளை கூறலாம் .மருத்துவர்கள் ,அரசு ,பொது மக்கள் என்று இவர்களை சார்ந்து புரிந்து கொள்ளலாம் .ஒவ்வொன்றையும் சற்று
ஆழமாக நோக்க வேண்டும் .

1.இப்பொழுது நவீன மருத்துவத்தை பொறுத்த மட்டில் ,மருத்துவர்கள் நோயாளிகளின் தேவையை மட்டுமே கவனிக்கும் வசதி உண்டு ,மருந்து தயாரிப்பது ,புதிய மருந்துகளை கண்டு பிடிப்பது போன்றவை உயிர் வேதியல் ,மருந்தாளுமை ஆகியவை பயின்றவர்கள் கவனிக்கின்றனர் .இங்கே அது மாதிரி இல்லை , இங்கே இலை தழைகளை கொணர்வது,மருந்து செய்வது என்று அனைத்துக்குமே ஒரே மருத்துவ படிப்பு தான் .

2.குழப்பம் -சித்த மருத்துவமும் சரி ஆயுர்வேதமும் சரி அண்மைய காலம் வரை குரு -சிஷ்ய பரம்பரையின் வாயிலாக தொன்று தொட்டு வழங்கப்பட்டுள்ளது .சுதந்திரத்திற்கு பின்பு தான் கல்லூரி ,பல்கலைகழக அமைப்புகள் எல்லாம் அதிகமாக வந்தது .அறிவு தொடர்ச்சி நடைபெறுவதில் இதனால் பெரும் சிக்கல் நிலவுகிறது .பாரம்பரிய ரகசியங்கள் தங்களோடு அழிந்தாலும் அழியட்டும் அது வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்று பல தொன்மையான மருத்துவ முறைகள் வழக்கொழிந்து போய் விட்டன.பல செயல்முறைகளும் ,மருத்துவ கோட்பாடுகளும் நீர்த்து போய்விட்டன அல்லது தவறாக உருவகபடுத்தப்பட்டுள்ளன
3.எந்த ஒரு துறையுமே தன்னை புதுபித்தல் முக்கியமாகும் ,தனது பழைய தோல்களை கழட்டி எரிந்து புதிய சட்டையை மாட்டும் பாம்பை போல ,உயிர்ப்புடன் ஒன்று உயிர் வாழ அது புதுபிக்கப்பட வேண்டும் ,ஆனால் இந்திய மருத்துவத்தின் நிலை சிக்கலானது .இன்னும் சொல்ல போனால் இந்திய மருத்துவத்தில் புதிய மூலிகைகள் இணைக்கப்பட்டு ஒரு நூறு வருடங்களாவது கழிந்து இருக்கும்.


4.இன்றைய அறிவியல் கண்டு பிடிப்புகளை கொண்டு அது எதை எதையோ சாதிக்கலாம் ,நடைமுறையில் அது நடக்கவில்லை .இதற்க்கு காரணம் -இத்துறையில் போதிய நவீன ஆய்வுகள் இல்லை ,அரசு இந்திய மருத்துவத்திற்க்காக பெரும் தொகையை ஒதுக்கினாலும் அது சரியான முறையில் பயன்படுவதாக தெரியவில்லை .ஆங்காங்கு நடத்தப்படும் ஆய்வுகள் அனைத்தும் முன்முடிவுகள் சார்ந்த ஆய்வுகளாக இருக்கிறது ,ஒன்று அது மருத்துவத்தை மட்டம் தட்ட வேண்டும் என்கின்ற ஒரே நோக்கோடு செய்ய படுகிறது ,அல்லது நாம செஞ்சா சரியா தான் இருக்கும் என்று ஒரு நம்பிக்கையோடு செய்ய படுவது மேலும் ஆய்வுகள் மிகவும் தட்டையாக உள்ளது ,முழுமையான உருவத்தை அளிக்கவில்லை என்பது ஒரு முக்கிய குற்றசாட்டு.



5.பெருகி வரும் போலிகள் -இது மற்றும் ஒரு முக்கியமான பிரச்சனை ,தினம் தோறும் நாம் தொலை காட்சியில் எப்படியும் ஒரு பத்து பதினைந்து போலிகளை காண்கிறோம்,அதுவும் குறிப்பாக பாலியல் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லுகிறேன் பேர்வழி என்று செய்யும் அட்டகாசங்கள் அளவில்லாதவை .இதை எந்த மருத்துவ சங்கமும் தட்டி கேட்பது இல்லை ,பொதுவாக இத்தகைய விளம்பரங்களில் வரும் ஆட்கள் எக்கசக்கமாக கறந்து விடுவர் அது தெரியாமல் நம் மக்கள் அவர்களை நம்பி ஏமாறுவர் . மேலும் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு ,பணபலம் ஆகியவை தற்காத்து நிற்கும் .எங்கள் சங்கங்கள் கூட இவர்கள் விஷயத்தில் எவ்வளவு முனைந்தும் ஏதும் செய்ய முடியாதது துரதிஷ்டமே
.
6.தவறான பொருளாதார ,கல்வி கொள்கைகள்
இன்றைய அவசர யுகத்தில் அனைத்தும் பணம் ,நேர விரயம் என்பது சம்பாதிக்கும் திறன் என்பதை குறிக்கிறது ,எல்லா சமயங்களிலும் இந்திய மருத்துவத்தால் நவீன மருத்துவம் போல் நோய் குறிகளை உடனடியாக சரி செய்ய முடிவதில்லை .மேலும் நாம் நம் பாரம்பரிய அறிவுகளின் மேல் கொண்டுள்ள முன்முடிவுகளோடு சேர்ந்த ஒரு வித ஒவ்வாமை ,இதை வெற்றிகரமாக நமது கல்வி முறை நம்முள் செலுத்தி உள்ளது .இந்த கல்வி முறை நம்மை ஒரு வித நுகர்வு வெறிக்கு இட்டு செல்கிறது ,அவசியத்திற்கு அதிகமான நுகர்வு ,பகட்டு நமது அடையாளமாக திணிக்க படுகிறது .நான் நமது பாரம்பரிய அறிவை அப்படியே ஏற்றுகொள்ளுங்கள் என்று கூறவில்லை ,இதை பரிசீலனை கூட நாம் செய்வதில்லை என்பதே நிதர்சனம்.நாம் அறிய நமது கல்வி முறைகள் உதவுவதில்லை மாறாக அதை சீரழிக்கும் அனைத்து உபகரணங்கள் ,வழிமுறைகளை நமக்கு அது ஊட்டுகிறது.நமது கல்வி முறைகள் நம்மை மாற்று வழிகளில் சிந்திக்க விடுவத்தில்லை , நம்மை ,நமது சிந்தனையை சுய அறிவை மழுங்க அடிக்கும் ஒரு இயந்திரத்தனமான கல்வி முறையை பின்பற்றுகிறோம் .இயற்கைக்கும் நமக்குமான உறவை சிதைக்க படுகிறது ,ஒரு சுரண்டல் சமூகம் உருவாக வழி வகை செய்கிறது.இத்தகைய கல்விமுறையில் பயின்ற பின்பு இந்திய மருத்துவத்தை புரிந்து கொள்வது மிகவும் சிரமம் ,நாம் ஓவியத்திற்கான சட்டம் அடிப்பதில்லை சட்டத்தை வைத்து கொண்டு அதற்குள் ஓவியத்தை அடக்க முயல்கிறோம் .

7.இந்திய மருத்துவம் யார் பயில்கிறார்கள் என்று பார்த்தால் ,ஒன்று பரம்பரை மருத்துவர்கள் -தங்களது குடும்ப நீட்சியாக அல்லது ஏதோ ஒரு மாணவன் -நவீன மருத்துவம் படிக்கும் வாய்ப்பை கோட்டை விட்டதால் அவர்களது குடும்பத்தின் நிர்பந்ததினால் அல்லது அரசு வேலை கிடைக்கும் எனும் நப்பாசயினால் கல்லூரிக்கு வருகின்றனர் .வேண்டா வெறுப்பாக வரும் மாணவர்களுக்கு கல்லூரியில் காத்திருக்கும் மற்றொரு அதிர்ச்சி ,இது வரை பயின்ற அறிவியலுக்கு தொடர்பில்லாத வேறு ஒரு உலகம் .தான் படித்தது மட்டும் உண்மை என்று நம்பும் மனம் இதை ஏற்று கொள்ள தயங்குகிறது .ஒட்டு மொத்தமாக பார்த்தால் படிக்கும் கூடத்தில் வெகு சிலர் மட்டுமே அதன் போக்கை கண்டு கொள்கின்றனர் .எனக்கு இந்திய மருத்துவத்தை புரிந்து கொள்ள நான்கு ஆண்டுகள் பிடித்தது ,அதுவரை நானும் கூட ஒரு வித விரக்தியில் இருந்தேன் ,நல்ல வேலையாக எனக்கு ஒரு நல்ல ஆசான் கிட்டினார் .இது எல்லோருக்கும் அமைவது இல்லை என்பதே சிக்கல் .பெரும்பாலும் இப்படி ஆர்வமில்லாமல் படிக்கும் மாணவர்கள் படித்த உடன் வேறு ஏதாவது வழியில் சென்று விடுகின்றனர் .பல இருவத்தி நான்கு மணி நேர ஆஸ்பத்திரிகளில் இரவு நேர மருத்துவ பனி இந்திய மருத்துவர்கள் மற்றும் ஹோமியோ மருத்துவர்களே பனி புரிகின்றனர் .நம் கல்விமுறை இந்திய மருத்துவர்களுக்கு வெற்றிகரமாக ஒன்றை கொடுத்தது என்றால் அது தாழ்வு மனப்பான்மை தான் .

8.இப்பொழுது இந்திய மருத்துவம் நோக்கி வரும் மக்கள் யார் என்று கவனித்தால் ,ஒன்று நவீன மருத்துவத்தின் பால் நம்பிக்கை இழந்து ,அதிக பண விரயம் ஏற்பட்ட பின்பு ,நவீன மருத்துவம் தங்களை கைவிட்டு விட்டது என்று நம்பும் சமயத்தில் -எத்தை தின்னால் பித்தம் தெளியும் எனும் நோக்கில் இந்திய மருத்துவத்தை நாடும் ஒரு வழக்கம் இங்கு உள்ளது .பொதுவாக இவ்வகை நோய்களுக்கு -அதுவும் நீண்ட காலமாக பல ஆங்கில ரசாயான மருந்துகள் உண்டு அவர்களது இயல்பு நிலையிலிருந்து வெகுவாக விலகி இருப்பார் ,அதை சரி செய்து உடலை இயல்பு நிலைக்கு திருப்ப காலம் அதிகமாக தேவை படும் ,சில நேரங்களில் அத்தகைய நிகழ்வுகள் சாத்திய படுவதும் இல்லை .ஒரு மருத்துவ பேருண்மை சொல்லவா -மருத்துவமே ஒரு மிக பெரிய சூது தான் ,வெவ்வேறு முயற்சிகள் ,சில பலனளிக்கும் சில அளிப்பதில்லை . வெகு சிலரே இந்திய மருத்துவத்தை விருப்பத்தோடு நாடுகிறார்கள் என்பது நான் பார்க்கும் கண் கூடான உண்மை .

9.வணிகம் மற்றும் வியாபாரம்
எனது தாத்தா எங்கள் வட்டத்தில் பிரபலமான சித்த வைத்தியர் .காலனாவிற்க்கும் அரயனாவிற்க்கும் மருத்துவம் பார்த்தவர் ,எனது அப்பா அரசு சித்த மருத்துவர் அஞ்சு ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் மருந்து கொடுத்தவர் .இன்றைய காலம் வேறாகிவிட்டது -சாதாரணமாக ஆயுர்வேத மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் இப்பொழுது உயர் வர்க்க மக்களின் சிகிச்சையாக மாறி போனது வருந்தத்தக்க உண்மை .எளிய மக்களின் அன்றாட தேவைகளை போக்கிய வைத்தியர்கள் ,எளிய மருந்துகள் எல்லாம் காணாமல் போய்விட்டன .ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் ஒரு வித நிறுவன கலாச்சாரம் வெகு வேகமாக பரவுகிறது.என்னை தேய்தல்-மசாஜ் மட்டுமே ஆயுர்வேதம் என்பது போன்ற பிம்பம் எழுப்ப படுகின்றது .மருந்தில்லாத எளிய முறைகள் ,உணவு முறைகளை சீர் செய்தல் மூலம் பல நோய்கள் தீர்க்க படும் ,இதை பற்றிய சரியான அறிவை மருத்துவர்கள் நோயாளிகளுக்கு பல நேரங்களில் கொண்டு சேர்பதில்லை .

10.மூலதன தட்டுபாடு
இயற்க்கை வளங்கள் சுரண்டல் பல வகையிலும் நடை பெறுகிறது .வரைமுரைகளின்றி பல அறிய வகை மூலிகைகளை உபயோகித்த்மையால் இன்று பல மூலிகைகள் அழிந்து விட்டன அல்லது அழிவின் விளிம்பில் உள்ளன .ஒரு நூறாண்டுகளுக்குள் தான் எத்தனை மாற்றம் ? மூலிகை தட்டுபாடு -இதனால் கலப்படம் நடக்கிறது ,மருந்து தனது செயல் வீரியத்தை இழக்கிறது .முறையாக மூலிகைகளை பாதுகாக்க வேண்டும் ,அதை முறையாக உபயோகித்தல் வேண்டும் .அரசு தரப்பில் இதற்கான முயற்ச்சிகள் நிச்சயம் குறைவே .இதை ஒவ்வொரு கடை குடிமகனுக்கும் கொன்று சேர்க்க வேண்டும்

11.இதை எல்லாம் கடந்து வந்தாலும் இறுதியாக இந்திய மருத்துவம் வெல்ல வேண்டியது எளிய மக்களிடம் தான் இழந்த நம்பிக்கையை .பத்திய பயம் ,ஒவ்வாமை பயம் என்றும் பழக்கம் இல்லை என்றும் பல காரணங்கள் மக்கள் தரப்பில் .இந்திய மருத்துவம் தனது பெருமையை மீட்டு மீண்டும் மக்களிற்கு பயனுள்ள எளிய மருத்துவமாக மாற -அனைவரின் பங்களிப்பும் அவசிய படுகிறது .மேலும் நவீன மருத்துவர்கள் -இந்திய மருத்துவத்தை நோக்கி சில நேரங்களில் த்வேஷ பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர் .இந்திய மருத்துவத்தின் பால் நம்பிக்கை கொண்டுள்ள பலரை நான் அறிவேன் ஆகினும் கூட சிலர் இத்தகைய செயலில் தங்களை தாழ்த்தி கொள்கிறார்கள் .இது ஒரு தவறான போக்கு .ஆயினும் கூட அவர்களின் விமரிசனத்திற்கு பல நேரங்களில் இந்திய மருத்துவத்தால் அவர்களது மொழியில் விடை அளிக்க முடியவில்லை என்பதும் நிதரிசனம்இன்னும் பகிர நெறைய விஷயங்கள் இருந்தாலும் ,பதிவின் நீளம் கருதி இதோடு நிறுத்துகிறேன் ,மீண்டும் மற்ற்றொரு சமயத்தில் விரிவாக பகிர முயல்கிறேன் .

பார்க்கலாம் என்ன நடக்கிறது என்று ....

14 comments:

  1. உண்மைதான் சார், இந்திய மருத்துவத்தை விட ஆங்கில மருத்துவமே சிறந்தது என்று எண்ணும்போக்கு மனதளவில் மக்களிடம் உருவாகி விட்டது, அதை மாற்றி கொண்டு வர என்ன வழி என்றும் சிந்திக்க வேண்டும் என நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. பெருசா இருக்கு.. நிதானமா படிச்சுட்டு அப்புறம் கமென்ட்டறேன்.. ;-)

    ReplyDelete
  3. வாங்க சுரேஷ் ,ஆர் வீ எஸ் :)
    பொறுமையா படிங்க :)

    ReplyDelete
  4. பல தகவல்களை தந்து இருக்கீங்க. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  5. இந்திய மருத்துவர்களுக்கு வெற்றிகரமாக ஒன்றை கொடுத்தது என்றால் அது தாழ்வு மனப்பான்மை//

    புதியமூலிகைகள் சேர்க்கப்படாததும் ஆய்வுகள் நடை பெறாதது என எல்லாமே வருத்தமான விசயம்..

    ReplyDelete
  6. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    டி வீ ஆர் சார் ,சித்ரா மேடம் ,முத்துலெட்சுமி மேடம்..
    காலம் மாறும் என்று நம்புவோம் .

    ReplyDelete
  7. மருத்துவரே... நீங்கள் சொல்கிற அளவுக்கு இன்றைக்கு ஆராய்ச்சி ஒன்றும் பெரிதாக செய்யப்படவில்லை. ஒருவர் வேம்பில் இருந்து ஒரு மருந்து எடுத்தார் என்றால் இன்னொருத்தர் புங்கையில் இருந்து அதே மருந்தை எடுத்து அதை விட இது சிறந்தது என்பார். to openly say todays' science is full of bullshits. எதற்கு ஆராய்ச்சி பண்ண வேண்டுமோ அதை விட்டு தேவை இல்லாமல் வேற எதற்கோ ஆராய்ச்சி பண்ணுகிறார்கள். இதற்கு காரணம்,

    1. நாம் பள்ளியில் கற்ற முறை. நன்றாக மனப்பாடம் செய்தால் தான் நல்ல "வேலைக்கு" செல்ல முடியும் என்று சொல்லித்தருவது. அதாவது மற்றவர்களை பார்த்து "காப்பி"அடித்து முன்னேர்வது.
    2. மற்றொண்டு நமது கூர்மையான அறிவை இன்றைய கல்வியை பயன்படுத்தி மழுங்க செய்வது.

    இன்றைய கல்வி திட்டத்தில் மாற்றம் செய்தல் போதும். தாங்கள் சொன்ன தோல் தானாகவே உரியும். இத்தனை வருடங்கள் உரிக்கவேண்டிய தோல்களும் உரியும்.

    ReplyDelete
  8. தீபக் -ஆராய்ச்சி,அறிவியல் துறையில் இருக்கும் நீங்களே இப்படி கூறி இருப்பது பெரிய விஷயம் .இன்றைய ஆய்வுகள் எதை நோக்கி போகின்றன என்று எனக்கு பெரும் சந்தேகம் உண்டு ,அரசு பணத்தை லபக்கும் ,போயான தகவல்களும் முன் முடிவுகளும் கூடிய ஆய்வுகளே அதிகம் .இந்திய மருத்துவத்தை பொறுத்த வரை -இந்த மருத்துவத்தின் கோட்பாடுகள் நவீன ஆய்வாளர்களுக்கு புரிவதில்லை ,எங்களுக்கு நவீன ஆய்வு முறைகள் புரிவதில்லை இதுவே மிக பெரிய சிக்கல்

    ReplyDelete
  9. மருத்துவரே, ஆராய்ச்சியாளன் என்பதினாலே சொல்கிறேன். நீங்கள் படிப்பதோ/மருத்துவம் பார்ப்பதோ ஒரு மனிதனை முழுமையாக எண்ணி தீர்வு தர முயற்சிப்பீர்கள். ஆனால் நாங்கள் செய்வதோ ஒரு ஒரு செல் ஆக பிரித்து அதற்குள் என்ன நடக்கிறது என்று சொல்ல முயற்சிப்போம். இதில் பிரச்னை எங்கு இருந்து வருகிறது என்றால், மருத்துவர் சொல்கின்ற எல்லா நோய்க்குறியும் செல்லில் தெரிவது இல்லை. இதனால் தான் மருத்துவர்களுக்கும் முனைவர்களுக்கும் எந்நேரமும் ஒத்து போவது இல்லை. simple you try to see a human as a whole, and we try to separate each and every part, DNA, RNA, proteins, cell organelles, ribosomes, plasma membrane, signaling molecules etc etc... if a scientist also tries to see a diseases as a whole, we can easily bring cure to most of the diseases...

    ReplyDelete
  10. அன்பரே எனது பெயர் அழகப்பன்,தங்களது வலைப்பூவை பல திங்களாக பார்த்து வருகிறேன்.படித்தவர்களிடையேயும் இந்தியத் திருநாட்டில் ஆங்கிலேய மருத்துவத்தினால் விளையும் கேடுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை.இது என்னையும் மிக வருந்த வைத்த விடயம்.நான் உங்கள் கருத்துக்களோடு நூறு சதவிகிதம் ஒத்துப் போகிறேன்.தங்களது வலைப்பூவின் தொடர்பாளர்கள்,என் வலைப் பூவிற்கு வந்ததனாலேயே,அந்த வழியேதான் தங்கள் வலைப்பூவை அறிந்தேன்.நலம் செய்ய நன்றே விளையும்.புறம் செய்ய புன்மையே கூடும்.நன்றி.
    என் வலைப்பூவைப் பாருங்கள்.
    மிக்க நன்றி
    என்றென்றும் பேரன்பினால்
    சாமீ அழகப்பன்

    ReplyDelete
  11. தீபக் -சமீப காலமாக மாற்று அறிவியல் குறித்த சிந்தனை வலுப்படுகிறது ,உங்கள் கருத்து வலுவானது ,மேலும் விவாதிக்கலாம் .
    இப்பொழுது நவீன மருத்துவமும் ஆய்வும் எவ்வண்ணம் செல்கிறது என்று எனக்கு ஒரு புரிதல் இருக்கிறது -
    உதாரணம் -சர்க்கரை நோய் -சர்க்கரை அளவு ரத்தத்தில் அதிகமாக இருக்கிறது என்பது அதன் நோய் குறி ,அதுவே நோய் அல்ல ,நம் மருத்துவம் அனைத்தும் சர்க்கரை அளவை கட்டுபடுத்துவதில் இருக்கிறது ,அதாவது நோய்குரியை இல்லாமல் ஆக்க முயல்கிறது அன்றி நோயை அல்ல ,இதே புரிதல் உயர் ரத்த அழுத்தத்திற்கும் பொருந்தும் .இதற்க்கு காரணம் ,நாம் ஒட்டு மொத்த தொகுப்பாக உடலை கானது அதை சிறு சிறு கூறுகளாக பிரித்து காண்பது தான் ,இது என் அளவில் ஒரு தவறான அணுகுமுறையாக படுகிறது .

    ReplyDelete
  12. நன்றி அழகப்பன் அய்யா ,உங்கள் அறிமுகத்திற்கு நன்றி .தங்கள் வலைப்பூவை இது நாள் வரை நான் கவனிக்கவில்லை ,மன்னிக்கவும் ,இனி வருகிறேன் .

    ReplyDelete
  13. நண்பரே ...நீங்கள் சொன்னவைகள் பெரும்பாலும் உண்மை ..
    யாதார்தத்தை சொல்லியுள்ளீர்கள் ...வரவேற்கிறேன் ...
    முடிந்தால் www.ayurvedamaruthuvam.forumta.net தளத்திலும் உறுப்பினர் ஆகி கட்டுரைகளை எழுதலாமே ..
    சக ஆயுர்வேத நண்பர் என்ற முறையில் ...
    எனது வேண்டுகோளை ஏற்பீர்களா ?

    ReplyDelete
  14. curesure4u
    வலை உலகில் தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ,நிச்சயம் முடிந்த வரை செய்கிறேன்

    ReplyDelete