Monday, February 5, 2024

என்னை நானறிய என்பதே எழுத்து

 

(சந்தியா பதிப்பக வெளியீடாக நண்பர் கே.பி. நாகராஜன் தொகுத்துள்ள 'ஏன் எழுதுகிறேன்' நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரை. 'எதற்காக எழுதுகிறேன்' எனும் சிறிய நூலை சந்தியா முன்னரே கொண்டு வந்திருந்தது. தி.ஜா, ஜெயகாந்தன், சிசு. செல்லப்பா போன்றோர் அதில் எழுதியிருப்பார்கள். ஒரு காலகட்டத்தில் இயங்கும் படைப்பாளிகளின் மாறுபட்ட பார்வைகளை அறிந்துகொள்ள உதவுவது.)


 

ஏன் எழுதுகிறேன் எனும் கேள்வி எப்படி எழுத வந்தேன் என்பதுடன் நுட்பமாக தொடர்புடையது என நம்புகிறேன். 2012 ஆம் ஆண்டு எனது முதல் கதை 'வாசுதேவன்; வெளியானது. ஆயுர்வேத பயிற்சி மருத்துவராக இருந்த காலகட்டத்தில் நிகழ்ந்த அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது. விபத்துக்கு பின் பிரக்ஞையற்ற நிலையில் வருடக்கணக்காக கிடந்த  இளைஞனுக்கு எங்களுடைய பேராசிரியரின் அறிவுறுத்தலின் பேரில் நாங்கள் சிகிச்சையளிக்க  சென்றோம். தினமும் எண்ணெய் தேய்ப்பது, ஆசனவாயில் மருந்து செலுத்துவது, மூக்கில் உள்ள குழாய் வழியாக கஷாயம் கொடுப்பது, ஒத்தடமளிப்பது என  சாத்தியமான எல்லா சிகிச்சைகளையும் அளித்தோம். வீட்டில் உள்ளவர்கள் அற்புதத்திற்காக காத்திருக்கையில் ஏதும் பெரிதாக நடந்துவிடாது என்பதை நான்கு நன்கு உணர்ந்திருந்தோம்.  ஒருமாதத்திற்கு பின் சிகிச்சை நிறுத்தப்பட்டது. பொருளாதாரம் உட்பட பலகாரணிகள்.  அதன் பின்னர் சில நாட்களிலேயே அவன் இறந்து போனான். அவனது மரணம் என்னை கடுமையாக பாதித்தது. பல ஆண்டுகளுக்கு அவனது மண்டையோடு பகுதி நீக்கப்பட்ட தலையும், குச்சி போன்ற கைகால்களும், அந்தர வெறிப்பும் என்னை நிம்மதியிழக்க செய்துள்ளன. அவனது மரணம் என்னை பாதித்தது என்பதைவிட, அவன் வாழ்வான் எனும் போலி நம்பிக்கையை அவர்கள் வீட்டிற்கு நாங்கள் கொடுத்தோம் எனும் குற்ற உணர்வே என்னை ஆட்டுவித்தது. ஒருவகையான நம்பிக்கை துரோகம். அப்படி நடக்காமல் இருந்திருந்தால் ஒருவேளை அவன் பிரக்ஞையின்றி என்றாலும் உயிரோடு இருந்திருப்பானோ? 


காஃப்காவின் உருமாற்றத்தை வாசித்தபோது எனது வாசுதேவனை நான் புரிந்துகொண்டேன்.  அதுவரை நேசிக்கப்பட்டவன் , ஒருவிடிகாலையில் சட்டென பூச்சியாக மாறிவிடுகிறான். நேசம் பரிவாகவும், அது பரிதாபமாகவும் வெறுப்பாகவும் மெல்லமெல்லத் திரிந்து போன ஒரு நாளில் அவன் உயிரை விடுகிறான். இது கிரேகர் சம்சாவின் கதை வாசுதேவனின் கதையும் கூட.  


 பீடிக்கப்பட்டவனைப் போல அந்த கதையை ஒரேயமர்வில் எழுதிமுடித்தேன். அன்றைய இரவுக்கு பிறகு இன்றுவரை அவன் என் கனவுகளில் வருவதில்லை. அவனது வாழ்விற்கும் மரணத்திற்கும் என்னாலான நியாயத்தை செய்துவிட்டேன் எனும் உணர்வா, அல்லது அந்த மரணத்திற்கு நான் பொறுப்பில்லை எனும் கண்டடைந்தலா எது என்னை அவனிடமிருந்து விடுவித்தது என என்னால் துல்லியமாக வரையறுத்து சொல்ல இயலவில்லை. அப்போது முதல் வாசிப்பையும் எழுத்தையும் இறுகப் பற்றிக்கொண்டேன். எளிதில் விடை காண முடியாத ஒரு கேள்வியை வாசுதேவன் எனக்களித்தான். தனக்கான சரியான கேள்வியை கண்டுகொள்வதே தீராத படைப்பூக்கத்திற்கான அடிப்படை. அதுவே நம் படைப்பை தீர்மானிக்கும். நாம் ஒரு உயிரை எப்படி மதிப்பிடுகிறோம்? பயனுள்ளவரிலிருந்து பயனற்றவறாக ஒருவர் உருமாறும் புள்ளி எது? பயன் பயனின்மை என்பதற்கு அப்பால் நம்மிடம் வேறு அளவுகோல்களே இல்லையா?  பயனற்றவர்களும் தோல்வியுற்றவர்களும் தானே இலக்கியத்தின் செல்லப்பிள்ளைகள். ஏன் இந்த வியர்த்த வேலையை இலக்கியம் செய்கிறது? ஏன் எழுதுகிறேன் எனும் கேள்வியை எனக்கு நானே வெவ்வேறு காலகட்டத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன், வெவ்வேறு பதில்களை கண்டடைந்திருக்கிறேன்.  பொருளீட்டவா? எழுத்தில் பொருள் ஈட்ட முடிந்தால் மகிழ்ச்சிதான், ஆனால் அது முதன்மை இயங்குவிசையா?  எனது மருத்துவ தொழிலில் ஈட்டுவதை விட வெகு சொற்பமாகவே இதில் ஈட்டுகிறேன், அதற்கென அளிக்கும் நேரத்தை விட கூடுதல் நேரத்தை இலக்கியத்திற்கென அளிக்கிறேன். இது ஒரு லாபகரமான தொழிலில்லை. 


மனித வரலாற்றை வடிவமைத்த அடிப்படை விசைகளில் ஒன்று என அங்கீகார விழைவை சொல்கிறார் ஃபிரான்ஸிஸ் ஃபுக்குயாமா. தைமோஸை நிறைவடையச்செய்வது சாமான்யமல்ல. அங்கீகாரம் புகழ் போன்றவை கிடைத்தால் சரிதான்‌. ஆனால் எழுத்தாளராக நான் விரும்புவது இம்மையின் அங்கீகாரங்களை அல்ல. ரோபர்ட்டோ போலொன்யோவின் சேவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் இரண்டு இளம் எழுத்தாளர்கள் முன்னோடியான மூத்த பெண் எழுத்தாளரை தேடி கண்டுபிடிக்க செல்வார்கள். தன்னை மறைத்துக்கொண்டு எங்கோ ஒடுங்கி எழுதிக்கொண்டே இருப்பார்.‌ ப. சிங்காரம் 60-70 களில் எழுதிய நாவலை அவர் காலத்தில் எவருமே வாசித்து அங்கீகரிக்கவில்லை. தனியராக வயதேறி எழுத்தை கைவிட்டு மரணமடைந்தார். ஆனால் இன்று அது தமிழில் ஒரு கிளாசிக். நவீன இலக்கியத்திற்குள் அறிமுகமாகும் எவரும் படித்தேயாக வேண்டிய நூல்கள். எவரோ ஒருவர் நாளை, நம் காலத்திற்கு பின் நம்மை கண்டடைவார் எனும் குருட்டு நம்பிக்கை மட்டுமே விசை. ஆனால் அந்த நம்பிக்கை பெரும்பாலான சமயங்களில் பொய்த்து போவதையே வரலாறு நமக்கு உணர்த்துகிறது. நிச்சயம் இந்த ஆக்கம் காலம்கடந்து நிற்கும் என சமகாலத்தில் கொண்டாடப்பட்ட ஆக்கங்கள் பத்தாண்டுகளில் மறைந்துவிடுவதை காண்கிறோம். எது காலத்தை கடக்கும் எது தேங்கும் என எவராலும் உய்த்துணர முடியாது. காலத்துடனான சூதாட்டத்தில் எப்போதும் நாம் தான் தோற்போம்.  அமரத்துவத்தின் மீதான விழைவு இல்லாத படைப்பூக்கமே இருக்காது என எண்ணுகிறேன். அது எனக்கும் உண்டு. அந்த விழைவை எழுத்தாளர் இழந்துவிடக்கூடாது என்றே எண்ணுகிறேன். அதுவே தரமான படைப்புகளை மட்டுமே நாம் அளிக்க வேண்டும் என்பதற்கான உந்துவிசையாக இருக்க முடியும்.   


எழுத்து என்னை விடுவித்தது என்பதே நான் வாசுதேவனை எழுதியபோது கண்டடைந்த பதில். பின்னர் நான் காந்தியை வாசிக்கவும் மொழியாக்கவும் செய்யத் தொடங்கினேன். காந்தி எனக்கு அரசியல்வாதி மட்டுமல்ல,  உரையாடவும் மறுக்கவும் இடமளிக்கும் மெய்யியலாளர். தீராத அறக்கேள்விகளை நம்முள் எழுப்பிக்கொண்டே இருப்பவர் காந்தி. அக்கேள்விகள் வாழ்வுடன் பொருதும் போது புனைவுகளாக பரிணாமம் அடைந்தன. 


எழுதுவதற்கான உந்துதலை மூன்று கேள்விகளிலிருந்தே நாம் பெரும்பாலும் பெறுகிறோம் என ஒரு உரையாடலில் எழுத்தாளர் ஜெயமோகன் குறிப்பிட்டார். நான் யார், ஏன் இருக்கிறேன்?  மனிதர்கள் ஏனிப்படி இருக்கிறார்கள்?  இந்த உலகம் ஏனிப்படி இருக்கிறது? இவற்றை தனித்த கேள்விகளாக காண முடியாது. ஒன்றுடன் ஒன்று தொடர்பும் தொடர்ச்சியும் கொள்கின்றன என்றே எண்ணுகிறேன். இரண்டாவது முறை இக்கேள்வியை எழுப்பிக்கொண்டபோது நான் கண்டடைந்த பதில், என்னை நானறிய என்பதே. எழுத்து எனது கபடங்களை, போலித்தனங்களை எனக்கு காட்டிக்கொண்டே இருக்கிறது . அதன் வழியாக சமூகத்தின் தீராத பிளவுகளை கண்டுகொண்டபடி இருக்கிறேன். இந்த முரண்களும் மதிப்பீடுகளும் ஒன்றையொன்று  உரசுகின்றன. 


 எனது முதல் நாவலான 'நீலகண்டத்தையும்' 'விஷக்கிணறு' கதையையும் எழுதிய பின்னர் இதே கேள்வியை எழுப்பிக்கொண்டேன். இப்போது எனக்கு வேறோரு பதில் புலப்படுகிறது. கார்ல் யுங் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் நிழலைப்பற்றி குறிப்பிடுகிறார். ஒளியின் அடர்வு கூடக்கூட நிழலின் கருமை கூடியபடியேதான் இருக்கும். அரவிந்தர் இதை வேறு சொற்களில் சொல்கிறார்‌. நீங்கள் ஒளியை நோக்கி மேலேற மேலேற இருளுக்குள்ளும் அதே ஆழத்திற்குள் இறங்கியபடியே இருப்பீர்கள். கதை எனது இருளை, எனது நிழலை எனக்கு அறியத்தருகிறது. ஒரு மத்திய காலத்து ஐரோப்பிய பயணியைப்போல் புதிய கண்டடைதல் பெரும் போதையும் சாகசமும் அளிப்பதாக உள்ளது. எழுதுவதென்பது தெரிந்ததை பகிர்வதற்கல்ல, புதியதை கண்டுபிடிப்பதற்காக என பரிணாமம் அடைகிறது. ஒரு சமூகமாக நாம் நம் இருளை கண்டுகொள்ளவும் வெளியேற்றவும் பாதுகாப்பான வழியாகவே கலை இலக்கியத்தை வளர்த்தெடுத்துள்ளோம் என்று கூட எனக்கு இப்போது தோன்றுகிறது.   வலுவான இலக்கியப் பண்பாடு நம்முள் இருக்கும் இருளை நமக்கு உணர்த்தும், அது இச்சமூகத்தையும் தேசத்தையும் காக்கவும் கூட செய்யும். 


எழுத்து என் உயிர் எழுதாமல் உயிர்வாழ முடியாது என்றெல்லாம் என்னால் சொல்ல முடியாது. ஆனால் எழுத்தும் வாசிப்பும் அற்ற வாழ்வு ருசியற்றதாக மந்தமானதாகவே இருக்கும்.   ஒரு சிறிய பொறி அல்லது காட்சி அல்லது கனவு வருடக்கணக்காக ஆழத்தில் துயில் கொள்ளும், ஏதோ ஒன்று விழித்து மேலெழும்பி என்னை வெளிக்கொணர் என கோருகிறது. அதை மட்டுமே வழித்துணையாக கொண்டு, தீர்மானமான இலக்கற்ற வெளியில் துழாவிச் சென்று எங்கோ ஒரு புள்ளியில் இருள் நீங்கும் ஒளியை கண்டு கொள்கிறேன். எழுதி முடித்த பின்னரே நான் கதையாக்குகிறேன். நினைவில் அமிழ்ந்த ஒரு மனிதரைப் பற்றி எழுதத் துவங்கி அவர் மீது வேறு பல மனிதர்களின் சாயை கவிந்து முற்றிலும் வேறொருவராக உருமாறுவதை ஆச்சரியத்துடன் காண்கிறேன்.  ஒரு மனிதனுக்குரிய தோற்றமும், வெவ்வேறு மனிதர்களின் இயல்புகளும் எப்படி ஒரு பாத்திரத்தில் உருக்கொள்கிறது என்பது பெரும் புதிர். தொடர்பற்றவையும் தொடர்புள்ளவையும் என எதையெதையோ மனித அகம் தொடுத்து விளையாடுகிறது. இந்த சுவாரசியம், இந்த விளையாட்டு, இந்தப் புதுமை என்னை எழுத வைக்கிறது. கதைகள் வாசிப்பதும் எழுதுவதும் வாழ்வை சுவாரசியமாக ஆக்குகின்றன. வாழ்க்கையை அர்த்தப்படுத்திக்கொள்ள எனக்கு கதைகளை விட மேலான வேறு காரணங்கள் ஏதும் அகப்படவும் இல்லை.


பஞ்சதந்திர கதைகளில், பூ பாதங்கள் கொண்ட பிரம்மராக்ஷசன் ஒருவன் தோளில் ஏறியமர்ந்த கதை ஒன்றுண்டு. எழுத்தை அப்படி என்னை பீடித்த பிரம்மராக்ஷசனாக கற்பனை செய்வது நன்றாக உள்ளது. தன்னை ஆக்கிரமித்தவனின் மீதே மையல் கொள்ளும் ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமா என்னவோ தெரியவில்லை. திருவாளர். பிரம்மராக்ஷசரே, உனக்கு வேண்டியதை எடுத்துக்கொள். எம்மை கைவிடாமல் எம்முடனேயே எப்போதும் இரும் என்பது மட்டுமே எனது கோரிக்கை. No comments:

Post a Comment