(வேதாளத்துடன் செல்வதற்கான எளிய விதிகள் எனும் வேணு தயாநிதியின் கவிதை தொகுப்பிற்காக எழுதிய முன்னுரை. பதாகை- யாவரும் வெளியீடாக வெளிவர உள்ளது.)
புனைவெழுத்தாளனாக அல்ல, ஒரு கவிதை வாசகனாக என்னை நிறுத்திக்கொண்டு நண்பர் வேணு தயாநிதியின் முதல் கவிதை நூலுக்கு என் வாசிப்பை அளிப்பதே நியாயமாக இருக்கும். கவிதை குறித்து எழுதுவது அதன் பேசுபொருள் குறித்து எழுதுவது அல்ல. கம்பன் சொல்லை அம்புக்கு இணைவைத்தபடி இருக்கிறான். இராமனின் அம்பு தன்னை துளைத்துவிட்டது என எதிராளி உணர்ந்து கொள்வதற்கு முன்னரே அவன் உயிரை அரிந்துவிடும். நல்ல கவிதையும் அப்படித்தான். அது அர்த்தப்படுத்திக்கொள்வதற்கு முன்னரே நம்முள் ஏதோ ஒன்றை நிகழ்த்திவிடுகிறது. இது நல்ல கவிதை, இது நல்ல கவிதை, இது என்னை என்னமோ செய்கிறது. இப்படி எனக்கு ஏற்படும் பதைப்பை வாசகருக்கு கடத்த முயல்வதே கவிதை குறித்தான எழுத்துக்களின் நோக்கமாக இருக்க முடியும்.
வேணு உயிரியல் / மரபணுவியல் சார்ந்து உயராய்வு செய்து வரும் விஞ்ஞானி. அமேரிக்காவில் வசிக்கிறார். அவரது ‘பீத்தோவனின் ஆவி’ சிறுகதை வெளியாகி கவனம் பெற்ற அதே சமயத்தில் தான் எனது முதல் கதையான ‘வாசுதேவன்’ வெளிவந்தது. ‘சுடோகுயி’ போன்ற அறிவியல் புனைவு கதைகளும் எழுதியுள்ளார். ‘காஸ்மிக் தூசி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதி வருகிறார். இந்த முதல் தொகுப்புக்கு அவர் எடுத்துக்கொண்ட காலம் மிக அதிகம் தான். ஆனால் அதற்கான அவரது மெனக்கிடல்களை கவிதை தொகுப்பை வாசிக்கும் போது உணர்ந்துக்கொள்ள முடிந்தது.
வேணுவின் கவிதைகளில் முதன்மையாக என்னை வசீகரித்தது அமேரிக்க பனிக்கால சித்தரிப்புகள். “எண்ண முடியாத இலைகளின் வெறுமை”
என சுட்டப்படும் இலைகள் உதிர்ந்த பிர்ச் மரங்களும், வெண்பனியின் வெறுமையும், தனித்த பறவைகளும், மேப்பிள் மரங்களின் தனிமையும் பல கவிதைகளில் கையாளப்படுகின்றன. குளிர்கால அமெரிக்க நிலக்காட்சிக்கும் ஜனசந்தடி மிக்க மதுரை வீதிகளுக்குமாய் கவிதைகள் அலைபாய்கின்றன. காலமும் வெளியும் மயங்கி மேப்பிள் மர நிழலில் இருந்தபடி ஒரு நொடி மதுரைக்கு சென்று திரும்புகிறார். சுனைநீரில் பால்யகாலத்து கிணற்று குளியலை தேடுகிறார். தூரதேசத்து மலையடி சுனையின் ஒரு துளி இவற்றையெல்லாம் கொண்டு சேர்க்கிறது. புல் வெட்டும் இயந்திரத்தை காணும்போது ஊரிலிருந்த காராம் பசு நினைவுக்கு வருகிறது. “தூய வெண்மையின்/
பொருளின்மையில்,/ எப்படியாவது/
ஒரு துளி அர்த்தத்தை/சேர்த்துவிட/
முயல்வது போல்” என்கிறார். இயற்கை காட்சிகளின் சித்தரிப்பிலிருந்து மீபொருண்மை தளத்திற்கு தாவிட முடிகிறது. இஸ்கான் கீதை பதிப்பில் விஸ்வரூப தரிசன படம் ஒன்றுண்டு. பிரம்மாண்ட விஷ்ணுவைச்சுற்றி கணக்கற்ற குமிழ்கள் மிதக்கும். அவை ஒவ்வொன்றிலும் விஷ்ணு சயனித்திருப்பார்.
பிரபஞ்ச விளையாட்டு
கரைந்து குழைந்து
காற்றைக் குடிக்கும்
சோப்புக்குமிழி
வீங்கிப்பெருத்து
மிதந்தலையும்.
மூப்படைந்து
துளைகள் தோன்ற
வெடித்துச் சிதறும்.
உடையாத குமிழியொன்று
உயர்ந்தெழுந்து
நிறமடர்ந்து
வானவில்லாய்
விரிவடையும்.
மதிய வெய்யில்
மரத்தடியில் அம்முக்குட்டி
ஊதுகிறாள்
விளையாட்டாய்.
அவள் குழல் முன்
தோன்றி வளர்ந்து
விரிந்து மறையும்
எண்ணற்ற
பிரபஞ்சம்.
வேணுவின் கவிதை பிள்ளை விளையாட்டை பிரபஞ்ச விளையாட்டாக உருமாற்றுகிறது. மற்றொரு கவிதையான ‘திருப்பள்ளியெழுச்சி - மினியாப்பொலிஸில்’ உறங்கும் மகளை எழுப்புகிறது.
“நீ கிறுக்கப்போகும் ஓவியத்தில்
உதிப்பதற்கென்று
தயாராகி விட்டது சூரியன்
எழுந்துவிடு
சீக்கிரம்.” எனும் இவ்வரி சட்டென ஒரு மனவெழுச்சியை அளித்தது.
“இந்த அறைக்கு/ எப்படி வந்தேன்?/ இந்தப் படுக்கையில்/ ஏன் கிடக்கிறேன்?/
நான் யார்?” என முழுக்க மீபொருண்மை தளத்தில் நிகழும் கவிதையும் உண்டு. “சாலையைக் கடந்து/ மறுபுறம் அடைந்தால்/நானும்/ அவன் தானா?” (சிவப்பு விளக்கு) எனும் கவிதையில் காலம் ஒரு சாலையாக ஆகிறது. லிடியா டேவிஸின் ‘ரயிலின் மாயாஜாலம்’ எனும் குறுங்கதை நினைவுக்கு வந்தது. “நம்மை விட்டு அவர்கள் ரயில் பெட்டியில் விலகி, கழிப்பறையின் திறந்த கதவுகளை கடந்து, கடைசியில் இருக்கும் நழுவு கதவின் வழியாக, ரயிலின் ஏதோ ஒரு பகுதிக்குள் நடந்து செல்லும்போது, நாம் காணும் அவர்களின் பின்புற தோற்றத்தைக்கொண்டு நம்மால் சொல்ல முடியும், இவ்விரு பெண்கள், அவர்களது இறுக்கமான கறுப்பு ஜீன்ஸில், அவர்களது உயர்ந்த குதியணியில், இறுக்கமான ஸ்வெட்டர் மற்றும் ஜீன்ஸ் மேற்சட்டையின் நூதனமான அடுக்குகளில், நிறைந்து வழியும் நீளமான கருப்பு தலைமுடியில், அவர்கள் முன்னே செல்லும் பாங்கில், அவர்கள் ‘டீன்களின்’ இறுதியை சேர்ந்தவர்கள் அல்லது இருபதுகளின் தொடக்கத்திலிருப்பவர்கள் என்று. ஆனால் அவர்கள் நம்மை நோக்கி, முன்னாள் இருக்கும் விந்தையான மாயாஜாலம் நிறைந்த பகுதியில் கொஞ்சநேரம் சுற்றிபார்த்துவிட்டு, அப்போதும் நன்கு அடிவைத்தபடி, மறுபக்கத்திலிருந்து திரும்பி வரும்போது, நம்மால் அவர்களது முகங்களை இப்போது காண முடியும், வெளிறி, கோரமாக, கண்களுக்கு கீழே ஊதா நிழல்கள் படிய, கன்னங்கள் தோய, பொருத்தமற்ற மச்சங்கள் அங்குமிங்கும் தெரிய, கன்ன கோடுகள் தெரிய, நெற்றியில் காக்கை பாதம் போல் சுருக்கம் விழ, அவர்கள் இருவரும் சற்று மென்மையாக புன்னகைத்தாலும் கூட, ரயிலின் மாயாஜால விளைவின் காரணமாக அவர்கள் இதற்கிடையே இருபது ஆண்டுகள் முதிர்ந்துவிட்டனர் என்பதை நாம் காணவே செய்கிறோம்”
இவை எதுவும் இல்லாமல் சித்தர் பாடல் போல தொனிக்கும் ஒரு கவிதை சட்டென எங்கிருந்தோ சந்தத்துடன் வந்து சேர்கிறது.
“இரவி அணைந்து
இரவு வரக்கண்டு
விடாய் கொண்டு
விழி அயர்ந்து
கடாவு எழ
அனுட்டானம் எனப்
பிரக்ஞை கொண்டு
கண் மலர எழுந்தனன்
யானே இன்று.
எழாவிடின்
உறட்டை சவம்
நிவகம்
எவர்க்கும்
சூதகம்.”
(நிகழ்தகவின் மானுடத்துவம்).
இயற்கை காட்சிகளின் மீபொருண்மை தளம் ஒரு வகை என்றால் வழிபடுதலுக்குரியவை நிகழ் தளத்திற்கு இறங்கி வருவது மற்றொரு வகை. சடாரி, காலபைரவரின் கடைசி பயணம், நவீன சிவபெருமானின் ஒரு ஞாயிறு மதியம், புத்த வீர சாமி ஆகிய கவிதைகளை இந்த வகையில் சொல்லலாம். இவ்வகை கவிதைகளில் ‘நந்தி’ எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு பிரதோஷ பூஜை கவிதைக்குள் என்னவாக எல்லாம் உருமாறுகிறது என்பதை கவனிக்கலாம்.
நந்தி
ஆலகால விடம் அருந்தி
அம்மை மடியில்
மயங்கிக் கிடக்கையில்
காத்திருக்கும் பக்தர்களின் வரிசைக்கு, காவல்.
தசைச்செழிப்பு புடைத்தெழும்ப
எந்நேரமும் எழுந்துவிடும் ஆயத்தமாய்
பிரகதீஸ்வரர் முன்
வீற்றிருக்கும் நந்தி.
கயிலாயத்துள் நுழையும்
பக்தகோடிக்கு ஜருகண்டி.
அத்துமீறினால்
விஷ்ணுவே ஆனாலும் விபரீதம்.
வெறும் மூச்சுக்காற்று போதும்
கருட பகவானை
தடுமாறி விழவைக்க.
உயிர் பிச்சைக்கு
அந்த சிவபெருமானே வந்து
சொன்னால்தான் ஆச்சு.
அவதார அதிகார கைலாச
சிறிய பெரிய, மற்றும்
சாதாரண நந்திகள் மத்தியில்
ஓரமாய் எங்கோ உடனுறைகிறார்
சிவபெருமான்.
காலத்தில் உறைந்த கறுப்பு உலோகம்
விலாப்புறங்கள் சிலிர்த்து திமில் சரிய
முன்னங்கால் உயர்த்தி
கொம்பசைத்து
வாலைச்சுழற்றி
கழுத்துப்பட்டையின் மணி ஒலிக்க
எழுந்துவிடக்கூடும், எந்நேரமும்.
என்றாலும்,
நந்திகள் ஏன் எப்போதும்
அமைதியாக
அமர்ந்திருக்கின்றன?
பிரதோஷ நேரங்களில்
எண்ணற்ற நந்திகளுள்
ஏதோ ஒன்றை தற்செயலாய் தெரிவுசெய்து
அதன் சிரசின்மேல்
தன் ஏழுதாண்டவங்களுள்
ஏதாவது ஒன்றை
இடக்கால் வீசி
ஆவேசமாய் நடனமிடுகிறார்
சிவபெருமான்.
நடனம் முடியும்வரை
ஈட்டி முனை வேய்ந்த வேலிக்குள்
மூச்சைப்பிடித்தபடி
விழிபிதுங்க
அசையாமல்
அமர்ந்திருப்பதைத் தவிர
வேறு வழியில்லை.
நந்தி
இம்மி அசைந்தாலும்
போதும்.
அவரின்
அடவு
தப்பிவிடும்.
வேணு இலகுவான விளையாட்டு நிறைந்த கவிதைகளும் எழுதியுள்ளார். “படிமங்கள் செறிந்த/ வரிகளுக்குள்/ ஆழமாகவே/ நுழைந்து சென்றிருந்தது/
தோட்டா./ சிரமம் ஏதுமின்றி. (ஒரு புத்தகத்தின் மரணம் அல்லது
கவிதையைக் கொலை செய்வது எப்படி?). ‘அந்த சம்பவத்திற்கு பிறகு’ என்றொரு கவிதையில் ஒரு சின்ன விளையாட்டு நிகழ்கிறது. வடையை தொலைத்த காகம் பாட்டு பயிற்சியை நிறுத்திவிட்டு காதலில் விழுகிறது. வடையை வென்று பின்னர் திராட்சையை சாப்பிடமுடியாத நரியோ ஊர் ஊராக அலைந்து கொண்டிருக்கிறது. பாட்டி கதைக்கும் நிதர்சனத்திற்கும் இடையிலான கோட்டை அழிக்கிறாள். இந்த கவிதையின் ஒருவித கால- வெளி விளையாட்டு தொழில்படுகிறது. ‘தக்காளி காதல்’ உணவாகிப்போன தக்காளிக்கான அஞ்சலி குறிப்பு. தனது நல்லியல்புகளை ஈந்து பிறரை மேன்மையாக்கி தன்னை கரைத்துக்கொண்ட தக்காளி நீடுழி வாழட்டும். சிரிக்கும் புத்தரும் குழந்தையின் மென்பாதமும் அதை விவரிக்க பயன்படுத்தப்படும் உவமை.
வேணுவின் கவிதைகளில் சர்ப்பங்கள், பூனைக்குட்டிகள், டைனோசர்கள், நிழல்கள், வேதாளங்கள் என வெவ்வேறு படிமங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பூனைக்குட்டியும் டைனோசர்களும் உறவு சிடுக்குகளை சொல்ல உதவுகின்றன. “வெறும்/சாதாரண/ ஒரு பூனைக்குட்டி./அது இல்லாமல்/
வாழவே முடியாது/என்று நினைத்ததுதான்-/எவ்வளவு பெரிய
முட்டாள்தனம்?”. ‘அல்லல் உழப்பது’ என்றொரு கவிதை குடிகாரனுக்கு நண்பனாக இருப்பதைப் பற்றி சொல்கிறது. “இன்றின்/வரஇயலாமையை/ ஏதாவதொரு/ பொய்சொல்லி/ எப்படியாவது/ நிறுவி விடலாம்தான்./
ஆனால்/ இன்றிரவு/அவன் உடலை/ அவன் வீட்டில்/ வேறு யார் /
கையளிப்பார்?” என விசனப்படுகிறது. ‘மயானத்திலிருந்து திரும்பிய பிறகு’ எனும் இறந்து போன முன்னாள் காதலிக்காக வெளிப்படையாக துக்கம் கொண்டாட முடியாத இக்கட்டான துயர நிலையை சுட்டுகிறது.
வேதாளங்கள் நம்மை அசைவுகரியப்படுத்துபவை. நாமாக சென்று தேர்பவை அல்ல. அவை நம்மை வந்து சேர்கின்றன ஆனால் மெல்ல மெல்ல அவற்றை நேசிக்க தொடங்குகிறோம். வேதாளத்திற்கு ஏதோ ஒரு தோள் போதும். நமக்கு தான் வேதாளம் வேண்டியதாய் இருக்கிறது. டைனோசர்கள் பீடிக்க காத்திருக்கின்றன. ‘நிழல்களின் புகலிடம்’ கவிதை வாசிக்கும் போது அவையும் அப்படி காத்திருப்பதை காண முடிகிறது. “என் இருப்பிலிருந்து/
பிரித்துவிட முடியாதபடிக்கு/ ஒன்றி பதுங்கியிருக்கின்றன/ எனக்குத்தெரியாமல்/ எப்படியோ/
எனக்குள் குடியேறிவிட்ட/ நிழல்கள்.” சர்ப்பங்களும் இப்படி நம்முடனேயே வாழ்கின்றன. “இப்போதுங்கூட ஒன்று/
இந்த அறையில் தான்/
எங்கோ ஒளிந்திருக்கிறது/ அப்படியே இருக்கட்டும்./ கைதொடு தூரத்தில் இருந்தாலும்/ அவற்றை கண்டு கொள்ளாதீர்./ நீங்கள் / கண்டுகொள்ளாதவரை/
அவைகளும்/ உங்களை / கண்டுகொள்வதில்லை.” முகமூடிகள் முகத்தின் இடத்தை எடுத்துக்கொள்கின்றன. எது முகம் எது முகமூடி என்பது புரியாமலாகிறது. கார்ல் யுங் ‘நிழல்’ நமக்குள் சேகரமாவது என்கிறார். பலவீனமான தருணத்தில் நம்மை ஆட்கொள்ளும் என்கிறார். நிழலை கண்டுகொள்வதும் அதன் இருப்பை அங்கீகரிப்பதும் இன்றியமைதாததென உணர்வதும் என பல்வேறு நிலைகளில் வேணுவின் கவிதை பயணிக்கிறது. இந்த நிழல் தான் வேதாளமாகவும் டைனோசராகவும் பூதகணங்களாகவும் கவிதைக்குள் வருகின்றன. இந்த இருமை ஒரு கற்பிதம்தானோ எனும் பார்வையை ‘பூதகணங்களின் கனவில் வரும் தேவதைகள்’ கவிதை வழி அடைகிறோம்.
“இமைகளுக்குள்
கருவிழிகள்
உருளும் ஆழ்துயிலில்
தேவதைகள்
தோன்றும்
கனவில்.
தேவதையின் முகம் கண்டு
குழந்தையைப்போல
முறுவல் பூக்கும்
பூத முகம்.
இறுக்கம் அவிழ்ந்து
புன்னகை இடம் மாறி
குடிகொள்கையில்
பூதமும்
தேவதையும்
ஒன்று.”
தற்கால தமிழ் கவிதைகளின் பரப்பில் வேணு தயாநிதியின் கவிதைகளை எங்கு பொருத்திப்பார்ப்பது எனும் கேள்விக்கு என்னிடம் துலக்கமான பதில் ஏதும் இல்லை. நுண் சித்தரிப்புகள், பகடி, இயற்கை சித்தரிப்பு என பல்வேறு கவிஞர்களின், கவிதை போக்குகளின் தாக்கம் உள்ளதை கவனிக்க முடிகிறது. ஏறத்தாழ பத்துவருட காலம் எழுதிய கவிதைகள் என்பதால் இப்படி வெவ்வேறு தாக்கங்கள் புலப்படுவது இயல்பே. எனினும் ஒரு கவிதை வாசகனாக மிகுந்த நிறைவளித்த தொகுப்பிது என்பதை நிச்சயமாக சொல்ல முடியும். நண்பர் வேணுவிற்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
சுனில் கிருஷ்ணன்
22.12.2023
No comments:
Post a Comment