Thursday, April 14, 2022

பேரின்ப ஊஞ்சல்- அக்கம்மாதேவி கவிதைகள்

காலச்சுவடில் வெளிவந்த கட்டுரை. 

பெருந்தேவி மொழியாக்கம் செய்த 'மூச்சே நறுமணமானால்' எனும் அக்கம்மாதேவியின் வசன கவிதை தொகுப்பு,  அக்கம்மாதேவி வீர சைவ மரபின் வழி வந்த முக்கியமான கன்னடப்பெண் கவி. பசவரின் காலத்தில் வாழ்ந்தவர். அவரது வாழ்வு குறித்த சித்திரத்தை பெருந்தேவி இத்தொகை நூலில் அளிக்கிறார். அக்கம்மா வீட்டை விட்டு வெளியேறி ஸ்ரீசைலம் சென்றடைந்த காலகட்டத்தில் எழுதிய வசனங்கள் என நானூறுக்கும் மேற்பட்டவை 'சென்ன மல்லிக்கார்ச்சுன'  எனும் அவரது கவி முத்திரையுடன் காணப்படுகிறது. அவற்றிலிருந்து 120 வசனங்களை வினைய சைதன்யா ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அத்தொகுதியின் தமிழ் மொழியாக்கமே இந்நூல். வினயா அக்கம்மாதேவியின் கவிதைகளைப்பற்றி குறிப்பிடும்போது 'எப்போதுமே மென்மையானது என்று சொல்ல இயலாத அவனது பேரன்பு அவளை உடைந்த கத்தியின் தகடெனக் குத்தித் தாக்க, கையறு நிலையில் தனது களிப்பையும் வலியையும் இவ்வசனங்களில் பாடுகிறாள்.' என கூறுகிறார். 



 சரணர்கள் என்றழைக்கப்படும் வீரசைவ துறவிகளுடன் இணைகிறார். பசவர், அல்லாம பிரபு போன்றவர்களை சந்திக்கிறார். பின்னர் தனியே ஸ்ரீசைலம் நோக்கி செல்கிறார். ஆடை களைந்து திசையாடை உடுத்தியவராக துறவுக்குள் அமைகிறார். ஸ்ரீசைலத்தை சென்றடைந்தவர் திரும்பவில்லை. இது ஒரு சுருக்கமான வாழ்க்கைச் சித்திரம். அவரை உள்ளூர் அரசன் மணந்துகொள்ள முயன்றார் என்றும் மணந்துகொண்டார் என்றும் பல கதைகள் உள்ளன. சிவனுக்காக வாழ்வை விட்டு வெளியேறியவர் என்பது மட்டும் தெளிவு. 


பக்தி காலத்து கவிகள் பெரும் பயணிகளும் கூட. இயல்பாகவே அவர்களிடள் ஒருவித நாடோடித்தன்மை உண்டு. வீர சைவத்தைச்சேர்ந்த சரணர்களும் அப்படிதான். ஆயிரமாண்டுகளுக்கு முன் திசையாடை உடுத்திய நாடோடி பெண் கவி எனும் ஆளுமையே அக்கம்மாதேவியின் மீது பெரும் வசீகரத்தை ஏற்படுத்துகிறது. அந்த வசீகரமே அவருக்கு பல இன்னல்களையும் அளிக்கிறது.  


அக்கம்மாதேவியின் வசனங்களிலேயே கூட பலவற்றில் ஒருவித மன்றாடல், எச்சரிக்கை போன்றவை மாறி மாறி ஒலிக்கின்றன. 'அடியார் உடலைக் கொண்டவன்/  தேவனென்று மறை பகர்வதால்/ அடியாரின் சிறு நோவும் சிவனைத் தொடும்' (12) என எச்சரிக்கிறார்.  அண்ணன்களே தந்தைகளே தொல்லை செய்யாதீர் (41) என மன்றாடுகிறார். 'வட்ட முலைகளையும் நிறையிளமையின் அழகையும்/ கண்டு என்னிடம் வந்தாயா அண்ணா?/ அண்ணா நான் பெண்ணல்ல/ அண்ணா நான் வேசியல்ல/ அண்ணா பின்பு என்னைக் கண்டு கண்டு/ யாரென்று வந்தாய் அண்ணா?' (44) என கேட்கிறார்.   சிவனுக்கென்று உள்ளவரை துன்புறுத்தாதே அண்ணா (46) என்கிறார். இக்கவிதைகள் வழியாகவே அவர் சமூகத்துடன் உரையாடி, தனக்கான இடத்தை படிப்படியாக உருவாக்கிக்கொள்கிறார். 




பொதுவாக பக்தி கவிதைகள் வெவ்வேறு உணர்வு நிலைகளில் எழுதப்படுபவை. மாத்ரு பாவம் என்றால் இறைவனை அன்னையாக கருதுவது. வாத்ஸல்ய பாவம் என்றால் இறைவனை குழந்தையாக பாவிப்பது.  சதி- பதி அல்லது பர்த்ரு பாவம் என்று வழங்கப்படும் நாயக நாயகி பாவமே பரவலாக காணப்படுவது. இறைவனை கணவராக, காதலராக கொள்வது. இதன் ஒரு பரிணாமமாக தாஸ்ய பாவம் எனும் இறையடியார் பாவமும் உண்டு. இறைவனை மட்டுமே ஆணாகவும் பிற அனைவரையும் பெண்ணாகவும் காணும் வழக்கம் மறைஞான மரபில் எப்போதும் உள்ளதுதான். 'கபீர் சொல்கிறேன்/ ராமனின் கண்களில்/ நாம் அனைவரும் பெண்களே'  என்கிறார் கபீர். அக்கம்மா 'ஆண்கள் அனைவரையும் பெண்களாக்கி

ஆளும் கொரவனைக் கண்டேன்' என அவர் பங்கிற்கு எழுதுகிறார்.‌  


நாயக நாயகி பாவத்தில் உள்ள ஐக்கிய வேட்கை கவிதைகள் பொதுவாக மூன்று நிலைகளுடையவை. 


நாயகனுக்காக காத்திருத்தல்

நாயகனை அடைந்து ஐக்கியமாதல்

ஐக்கிய அனுபவம் கிட்டிய பிறகு நாயகன் நீங்கிச்செல்வதால் ஏற்படும் பிறிவாற்றாமை.


ஆண்டாள் தொடங்கி மீரா, கபீர் என அத்தனை கவிகளும் இம்மூன்று நிலைகளிலும் கவிதைகள் எழுதியுள்ளார்கள். அக்கம்மாவும் விதிவிலக்கல்ல.


 'பீடத்தையும் பந்தலையும் போட்டு/  

உன் திருவடிகளுக்கு/  இடத்தை 

நிர்மாணித்திருக்கிறேன் ஐயனே/ 

சென்னமல்லிகார்ச்சுனனே எப்போது வருவாயென' (81) என சென்னமல்லிகார்ச்சுனனின் வருகைக்காக காத்திருக்கிறார். காத்திருத்தலின் மற்றொரு பரிணாமம் என்பது காக்க வேண்டும், மீட்க வேண்டும், அருள வேண்டும் என மன்றாடுதல். 'நானற்று நீயாகும் வழியை காட்டு.' (29) என மன்றாடுகிறார். சென்ற பிறவிகள் போகட்டும் இப்போது வழிகாட்டு என்கிறார் (27). பள்ளமும் நதியும் ஏரியும் வலையும் சூழ எங்கும் செல்ல முடியாமல் கொல்ல நினைக்கும் மாயையிடமிருந்து காக்க வேண்டும் என சென்னமல்லிகார்ச்சுனனிடம் வேண்டுகிறார். ஒருவகையில் இவை யாவும் இருத்தலியல் படிமங்கள்தான். ஆன்மீக கவிதைகளும் நவீன கவிதைகளும் இருத்தலியல் படிமங்களை ஒன்றுபோலவே பயன்படுத்துகின்றன. அங்கிருந்து அவை அடையும் அடுத்தக்கட்ட பரிணாமங்களே அவற்றின் தனித்தன்மையை தீர்மானிக்கின்றன என சொல்ல முடியும். ஆகவேதான் நவீன கவிதைகளின் வாசகனுக்கு ஆண்டாளோ அக்கம்மாவோ அந்நியமாக தெரியவில்லை‌. 


காமத்தின் கற்பனையில் கருகி அமர்ந்திருந்தேன் அம்மா

மோகித்து முத்தமிட்டு மடைச்சியானேன் அம்மா

வெளியிடாது விடாது களித்து நம்பினேன்

என் தேவன் சென்னமல்லிகார்ச்சுனன்

என்னை விரும்பாவிட்டால்

என்ன செய்வேன் அம்மா (99). 


வெந்தீயென பற்றி எரியும் காமத்தின் புழுக்கத்தை சொல்கிறது இவ்வசனம். 

 

'தேடிக் காணாத உடலையும்

முயங்கிப் பெறாத சுகத்தையும்

எனக்கருள்க சென்னமல்லிகார்ச்சுனனே. புழுவை போல் வளைந்து நெளிந்தேன்

மணலைப் போல் காற்றில் பரந்தேன்

கனவுகளிலும் வேதனைமில் மிரண்டேன்

ஆவிச்சூட்டைப்போல் சுருள் சுருளாகக வெந்தேன். (100)






'பால் நீர் போல நீயிருப்பதால்

முன்னால் என்ன பின்னால் என்ன என்றறியேன்

யார் செய்வோன் யார் சேவகன் என்றறியேன்

எது கனத்தது எது சிறியது என்றறியேன்

சென்னமல்லிகார்ச்சுனனே

உன்னை விரும்பிக் கொண்டாடினால்

எறும்பும் ருத்ரன் ஆகாதோ

சொல் ஐயனே.(79)


மேலே உள்ள வசனம் ஐக்கிய நிலையின் அனுபவத்தை சொல்கிறது. இரண்டற்ற நிலையில் லயித்திருக்கிறார். 'சென்ன மல்லிகார்ச்சுனனுக்குள் இருப்பவளை என்னவென்று அழைப்பாய் அம்மா?' (78) என கேட்கிறார். 

'சுகமே படுக்கை 

பார்வையே அணிகலன்

ஆலிங்கனமே ஆடை 

முத்தமே ஊட்டம்

காதல் பேச்சு தாம்பூலம்

உணர்ச்சி மோகனம் நறுமணத் தைலம்

சென்னமல்லிகார்ச்சுனனோடு கலத்தல் 

பரம சுகம் அம்மா!' (70) என்பதில் அவரது பரவசம் வெளிப்படுகிறது. இது இரண்டாவது கட்டம். 


'கூட்டத்தில் பிரிந்து அகப்பட்ட யானை

தன் விந்தியாவனத்தை நினைவுகூர்வதைப் போல்

நினைவுகூர்கிறேன் ஐயனே

சிறைப்பட்ட கிளி தன் உறவை நினைவுகூர்வதைப் 

போல் நினைவுகூர்கிறேன் ஐயனே (90)' என பிரிவை எண்ணி வருந்துகிறார். இது மூன்றாம் நிலை. பெரும்பாலான வசனங்களை இம்மூன்று பிரிவுகளுக்குள் அடக்கிவிடலாம். 


'ஐம்பொறிகளால்தொல்லையுற்று

இறுமாந்த இளம் உடல் வீணாய்ப் போனதே!

நறுமணத்தை உண்கையில் 

படபடப்பதை நிறுத்தும் தும்பியாக

இனி என்று என்னை உட்கொள்ளப் போகிறாய்

சென்னமல்லிகார்ச்சுனனே?' (91) 


தும்பிக்கு தேன் குடிக்கும் போது பதட்டமில்லாத நிதானம் கைகூடுகிறது. தேன் ததும்பி காத்திருக்கும் மலரை தும்பி கண்டுகொண்டு அருந்துகிறது. நம் முயற்சிகள் இருந்தாலும் முக்தி என்பது இறையால் அருளப்படுவதென்பது விசிஷ்டாத்வைதத்தின் பார்வை. பக்தி இயக்கம் அத்வைத வேதாந்தத்தின் இறுகிய மெய்யியல் சட்டகத்தை நெகிழ்த்திய மெய்யியல் மரபென விஷிஷ்டாத்வைதத்தை குறிக்க முடியும். 'சிவன் நேசித்தாலன்றி கைகூடாது' (77) என நேரடியாகவே சொல்கிறார். இந்த வசனம் நம்மாழ்வார் பாசுரத்தை எனக்கு நினைவுபடுத்தியது. 


வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று


ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்


பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்


கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே


உன்னை எப்போது காண்பேனோ அப்போது வாரி விழுங்கிவிட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் நீயோ என்னை முந்திக்கொண்டு என்னை முழுதாக விழுங்கிவிட்டாய் என்கிறார் நம்மாழ்வார். 




அக்கம்மாதேவி கவிதைகளின் ஊடாக சில உரையாடல்களை நிகழ்த்துகிறார். அவ்வுரையாடலின் வெவ்வேறு தரப்புகளுடன் முட்டி மோதுவதும், முரண்படுவதுமே அவரை ஞானியாக அல்லாமல் எரியும் தீவிரம் கொண்ட கவியாக நமக்கு காட்டுகிறது. ஞானியரின் சொற்கள் தெள்ளிய நீரோடை என்றால் கவியின் சொற்கள் ஆர்ப்பரிக்கும் அருவி. அவரே ஒரு வசனத்தில் குறிப்பிடுவது போல் 'அஞ்ஞானியுடன் பழகுவது கல் உரசி நெருப்பு உருவாவது போல். ஞானிகளுடனான பழக்கமென்பது தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பது போல். ஆனால் அக்கம்மா இவையிரண்டையும் தேர்வு செய்யாமல் 

சரணர்களுடனான உறவை தேர்ந்தெடுக்கிறார் அது 'கற்பூர மலை தீப்பிழம்பாவது போல்.' (23) இந்த உருவகம் அபாரமானது. கல்லிலிருந்து நெருப்பை உண்டாக்க பெரும் முயற்சி வேண்டும். வெண்ணெய் எடுக்கவும் பொறுமை வேண்டும். ஆனால் கற்பூர மலை நெருப்பை தொட்ட உடனேயே தீப்பிழம்பாகி விடும். முயற்சி, பொறுமை என எதுவும் தேவையில்லை அண்மை மட்டுமே போதும். கவியின் பாதை இதுவாகவே இருக்க முடியும். 



குன்றின் மீது வீடு கட்டி விலங்குகளுக்கு அஞ்சுவது, சமுத்திரக்கரையில் வீடு கட்டிவிட்டு நுரைதிரைகளுக்கு அஞ்சுவது, சந்தை மத்தியில் வீடு கட்டிவிட்டு கூச்சலுக்கு நாணுவது அபத்தம் என்கிறார் (7).  இது  உலகவாழ்கையை அச்சமின்றி, ஓடி ஒளியாமல் எதிர்கொள்ள வேண்டும் என சொல்கிறது. அதற்கடுத்த வசனத்திலேயே உலகத்துடன் எப்படி வாழ்வது எனும் கேள்விக்கு விடையும் அளிக்கிறார். பல் பிடுங்கப்பட்ட பாம்பு போல உடல்பந்தம் விடுபட்ட உடலுடன் பிரபஞ்சத்திலிருந்து மாயையை நீக்கி வாழ முடியும் என்கிறார். இதற்கு மாறான எண்ணமும் கவிதையில் வெளிப்படுகிறது. வெளியேறியவர்கள் நியதிகளற்றவர்கள். அவர்களால் மீண்டும் நியதிகளுக்குள் பொருத்திக்கொள்ள முடியாது. 'துன்ப வினைகளில் உழலும் மனிதர்கள் காணாமல் ஒன்றைப்பேசினால் நிட்டையுள்ள சரணர்கள் நிலையற்ற உலகத்துக்கு திரும்புவார்களா?' (13)  என கேட்கிறார். இந்த வசனத்தில் அவர் பயன்படுத்தும் உருவகங்கள் மரபானவை. வெட்டப்பட்ட மூங்கில் மீண்டும் துளிர்காது  ஏனெனில் அது வேரை இழந்து விடுகிறது. சுட்ட மண் சட்டி மண்ணுடன் கலக்குமா? தவம் எனும் நெருப்பால் பக்குவப்பட்டது மீண்டும் எப்படி தன்னியல்பை இழக்கும்? பழுத்த கனி காம்போடு ஒட்டுமா? காம்பு என்பதே உலகியல். கனி பழுக்கும் வரை அதை தாங்கி பிடிப்பதோடு அதன் கடமை நிறைவடைகிறது. 


'மலைக்குச் சாரமில்லை என்கிறார்கள்

பிறகெப்படி மரங்கள் பிறக்கின்றன?

கரிக்குச் சாரமில்லை என்கிறார்கள்

பிறகெப்படி இரும்பு அதில் உருகுகிறது?

தனக்கு உடலில்லை என்கிறார்கள்

பிறகெப்படி சென்னமல்லிகார்ச்சுனன்

காதலித்துக் கூடுவான்? (100)' என கேட்கிறார். அத்வைத வேதாந்தத்தின் உடல் மறுப்பின் மீதான விமர்சனமாக இதை காண முடியும். 

கணவன் கூட இகத்தின் குறியீடாகவே கவிதையில் உருகொள்கிறார். 'இகத்துக்கு ஒரு கணவன்/ பரத்துக்கு ஒரு கணவனா?/ உலகியலுக்கு ஒரு கணவன்/ பரம்பொருளென ஒரு கணவனா?' (64) என கேட்டு சென்னமல்லிகார்ச்சுனேன கணவன் பிற ஆண்கள் எல்லாம் முகில் மறைக்கும் வண்ண பொம்மைகள் போல்வர் என்கிறார்.  மற்றொரு வசனத்தில் 'இந்தச் சாவுற்ற கேடுற்ற கணவர்களை

அடுப்பில் வை தாயே.' (116) என மனமுருக வேண்டிக்கொள்கிறார். தற்காலிகமானதை அல்ல நிரந்தரமானதையே தேர்வு செய்கிறார். ஆனால் அதை தற்காலத்துக்கு கொணர்கிறார். இவ்வகை வசனங்களில் எனக்கு அபாரமானதாக தோன்றியது இவ்வசனம் தான்.


'உள்ளே கணவன் வெளியே காதலன் 

இரண்டையும் நடத்த முடியவில்லை அம்மா

சென்னமல்லிகார்ச்சுனனே

வில்லையும் விளாம்பழத்தையும்

ஒன்றாய்ப் பிடிக்க முடியவில்லை ஐயா.' (33) 


பல்வேறு வாசிப்பு சாத்தியங்கள் கொண்ட வசனம் இது. கணவர் - வில்

விளாம்பழம்- காதலர். வில்லின் நாண் நேரானது, அம்பு இலக்கை சென்று நேராக தாக்குவது, கவனத்துடன் கையாளப்பட வேண்டியது. நியதிகள் உடையது. விளாம்பழம் கடின ஓட்டுக்குள் இருக்கும் இனிமை.  பொதுவாக உள்ளே காதலன் வெளியே கணவன் என்பதை நம்மால் எளிதில் வகுத்துக்கொள்ள முடியும். ஆனால் இங்கே அது தலைகீழாகிறது. உள்ளே, தனித்திருக்கும் போது அதிகாரம் செலுத்தும் கணவனாக உள்ள அவனே வெளியே தொலைவுக்கு செல்லும்தோறும் ஏக்கமளிக்கும் காதலனாகவும் இருக்கிறான் என வாசிக்க முடியும். விளாம்பழம் கொழகொழ என ஒட்டிக்கொள்வது. அதை தொட்ட கையால் வில்லை பற்ற முடியாது. வழுக்கும். எப்போது அவன் காதலன் எப்போது அவன் கணவன் என சட்டென அறியமுடியாது. 






'மூச்சே நறுமணமானால் யாருக்குப் பூ வேண்டும்?

பொறுதியும் கருணையும்

சாந்தமும் சகிப்பும் இருந்தால் 

சமாதிக்குத் தேவையென்ன? 

உலகமே தானான பின் 

ஏகாந்தத்துக்கு அவசியமென்ன

சென்னமல்லிகார்ச்சுனனே?'


ஆன்மீகம் என்பது எங்கோ உள்ளதல்ல. அதை அன்றாடத்தளத்திற்கு, பயன்பாட்டிற்கு கொணரும் மெய்யியலை அக்கம்மா முன் வைக்கிறார். 'காயகமே கைலாசா' என்பது பசவரின் வாக்கு. பரத்துக்காக இகத்தை கைவிடும் போக்கை சரணர்கள் ஏற்கவில்லை. 'சென்னமல்லிகார்ச்சுன தேவனின் சரணருக்கோ/ 

இகபரம் இரண்டும் உண்டு' (76) என்கிறார். 


அக்கம்மா முறையாக மெய்யியல்  பயின்றவர் என்றறிகிறோம். பஞ்ச பூதங்கள், சக்கரங்கள், மாயை போன்ற சொற்களை பயன்படுத்துகிறார். ஒருவகையில் பிற பக்தி கால கவிகளிடமிருந்து இது அவரை தனித்து காட்டுகிறது.  'சூரியனைப் போன்றது ஞானம்

சூரியக் கதிர்கள் போன்றது பக்தி

சூரியனின்றி கதிர்களில்லை

கதிர்களின்றி சூரியனில்லை.' (85) என ஞானத்துக்கும் பக்திக்குமான உறவை சொல்கிறார். ஞானம் தொலைவில் உள்ளது. ஆனால் நாம் உணர்வது  அதன் வெம்மையையும் ஒளியையும் கொண்டுவரும் கதிர்களை. ஞானத்தின் இருப்பை நமக்கு உணர்த்துவது பக்தி என்பதாக புரிந்நுகொள்ளலாம்.



  அக்கம்மாவின் வசனங்களில் தென்படும் சில கற்பனைகளும் உருவகங்களும் அவரை நவீன கவிமனதிற்கு நெருக்கமாக்குகிறது. 'நீருக்குள் இறங்கியிருந்தும் வண்ணான் 

தாகித்துச் செத்ததைப் போல' (17) 'உதயம் அஸ்தமனம் எனும் படிகளால்

ஆயுட்குவியல் அளந்து தீர்வதற்கு முன்.'(5) என்பது செறிவான கற்பனை. 'பட்டுப் புழு தன் சிநேகத்தால் கூடுகட்டி

தன் நூல்களாலே தன்னைச் சுற்றி சுற்றி 

மடிவதைப் போல.' (20) இது நவீன கவிதைகளில் பயன்படுத்தப்படும் படிமம். 'பாம்பின் வாயிலிருக்கும் தவளை

ஈயைக் கவ்வக் குதிப்பதைப் போல

ஊட்டத்துக்கான தேடல் விடுவதில்லை.'(30) இதுவும் அபாரமான இருத்தலியல் படிமம். 


'யானை எரிந்து மலை எரிந்து

பொன்னரளி மரம் மிஞ்சும்போது

கீர்த்திமிகு சென்னமல்லிகார்ச்சுனனைக் கலப்பேன்' (51) பொன்னரளி மரம் மட்டும் எஞ்சுவது என்பதொரு அற்புதமான காட்சி. 


நவீன தமிழ் கவியுலகின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான பெருந்தேவியால் கவிதை பிரக்ஞையுடன் இவ்வசனங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன என்பதே இத்தொகுதியை பிறவற்றிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. 















 

No comments:

Post a Comment