Tuesday, November 3, 2020

நீலகண்டம் - பிரியத்தின் திரிபு- அனோஜன்

(வல்லினம் இணைய இதழில் நீலகண்டம் குறித்து அனோஜன் எழுதியுள்ள கட்டுரை)

நீலகண்டம் வாங்க இந்திய நவீன மனதில் இன விருத்தி என்பதற்கான இடம் தொல் மரபிலிருந்து அதிகம் விலகிச் செல்லவில்லை. மனதளவில் அதற்கான இறுக்கம் அதே மரபான தன்மையுடன் இருக்கிறது. சந்ததி விருத்தியின் ஒரு கண்ணி அறுந்துவிடும்போது ஏற்படும் சங்கடமானது, வாழ்கையின் பொருளியல், பாதுகாப்பு என்பவற்றோடு நிறைவான வாழ்க்கை உணர்வு எல்லாவற்றையும் நெருக்கடி கொள்ளச் செய்கிறது.


நவீன வாழ்க்கையில் குழந்தைப் பேற்றுக்கான ஏகப்பட்ட மருத்துவத் தீர்வுகள் இருந்தாலும் அதற்கு அப்பாலும் மீறித் தீர்க்க முடியாத, புரிந்துகொள்ள முடியாத பிரச்சினைகளாக அந்தச் சிக்கல் பல்வேறு புறநிலை, அகநிலைக் காரணங்களால் பின்னிப்பிணைந்து இருக்கின்றது.


சுனீல் கிருஷ்ணன் எழுதிய ‘நீலகண்டம்’ நாவல் குழந்தையின்மை என்ற பிரச்சினையை எடுத்துக்கொண்டு அதை மட்டும் பேசும் நாவல் அல்ல, குழந்தை வளர்ப்பு, ஆட்டிச குழந்தை வளர்ப்பில் இருக்கும் சிக்கல், பெற்றோரின் மனநிலை மாற்றங்கள், அறச் சிக்கல் என்று பல்வேறு இழைகளில் விரிகிறது.


பொதுவாகக் குழந்தையின்மை பிரச்சினைகளைப் பேசக்கூடிய நாவல்கள், சிறுகதைகள் யதார்த்த தளத்தில் மட்டுமே அதற்கான தீர்வை நோக்கிச் சென்று இருக்கின்றன. நீலகண்டம் யதார்த்த கதை சொல்லல் முறையிலிருந்து மீறியிருக்கின்றது. பிராமண சமூகத்தைச் சேர்ந்த ரம்யாவும், பிராமண சமூகத்தைச் சேராத செந்திலும் காதலித்து பெற்றோர் விருப்பத்துக்கு விரோதமாக மணம் முடிக்கின்றனர். தகவல் தொழில்நுட்பத் துறை அளிக்கும், பொருளாதாரச் சூழலில் நகர்ப்பகுதியில் சௌகரியமாக வசிக்கின்றனர். ரம்யா தன்னைத் தொடர்ந்து புறக்கணிக்கும் தனது அம்மாவினால் அதிகம் தொந்தரவுக்கு உள்ளாகிறார். செந்தில் அலுவலக வேலையில் மேலும் மேலும் மூழ்குகின்றார். தள்ளிப் போய்க்கொண்டு இருக்கும் குழந்தையின்மையும் அதைத் தொடர்ந்து வரும் சிக்கல்களும்,  முடிச்சுகளும் பல்வேறு முரண்களுடன் நகர்கின்றன.


நீலகண்டம் யதார்த்தத்தில் மட்டுமன்றி மரபில் குழந்தையின்மை என்பதற்கான தீர்வு, அதன் தேவை என்ன என்பதை ஆராயவும் செய்கிறது. யதார்த்தையும் தொன்மத்தையும் இணைக்கும் கதை சொல்லல் முறை இக்களத்தின் பல்வேறு சிக்கல்களை பல பரிமாணங்களில் அணுகி ஆராய வாய்ப்பளிக்கிறது.


நவீன நாவல்கள் அது எடுத்துக்கொள்ளும் களம், அதை வெளிப்படுத்தும் வடிவம் சார்ந்து அதன் முன்நகர்தல் நிகழ்கிறது. ஆனால், அவை சேதன முறையின்றி அசேதன முறையில் எழுதப்பட்டிருக்கும்போது ‘செய்யப்பட்ட’ போலி நாவலாகி விடுகின்றது. நீலகண்டம் நாவலில் பயன்பட்டிருக்கும் உத்திகள் கதையின் போக்கில் அதற்கான தேவையினால் உருவாகி இருப்பதால் அசேதன முறையில் இருக்கும் போலித்தன்மை உருக்கொள்ளாமல், அதுவே இலக்கியத் தன்மையையும் அளித்து விடுகின்றது. ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் வர்ஷினியின் அக உலகம் சித்தரிக்கப்படும்போதும் நிமோ, இசட் பாத்திர உத்தி, வர்ஷினிக்கும் சாகருக்கும் இடையிலான உறவைச் சொல்லும்போது கடைப்பிடிக்கப்படும் நீல யானையின் ஒப்புதல் வாக்குமூலம் போன்றவற்றை அவற்றிற்கான நல்ல உதாரணங்களாகச் சொல்லலாம்.


வர்ஷினியின் அகவுலகத்தை யதார்த்த கதைச் சித்தரிப்புடன் சொல்லும்போது எதிர்ப்படும் எல்லைகளை நுட்பமாக இன்னுமொரு உத்தியுடன் ஆசிரியர் கடக்கிறார். அது கார்ட்டூன் பாத்திரங்களான கடலாமை, பேக் மேன், நிமோ, டோரா, மிஸ்டர் இசட், நிஞ்சாஸ், சோட்டா பீம் எனத் தோன்றும் வண்ணமயமான உலகம். அந்த உலகம் கொடுக்கும் நெகிழ்வு அழுத்தமற்ற ஓர் உலகைக் கதைக்குள் நிகழ்த்துகிறது. வர்ஷினியின் அக உலகம், யதார்த்தமான உலகத்துடன் இணையும் புள்ளி இயல்பாக ஆர்ப்பாட்டமின்றி இருக்கின்றது. மருத்துவமனையில் ரொட்டித்துண்டுகளை எறும்புகளுக்குப் போடும் வர்ஷினியை எரிச்சலுடன் பார்க்கிறான் செந்தில்; ஆனால், செயல் நிகழும் நேரத்தில்தான் அவளது உணர்வுகள் இன்னுமொரு உலகமாகச் சொல்லப்பட்டுள்ளது. இந்த இரண்டு கண்ணிகளைப் பொருத்தும், அல்லது கலைக்கும் இடத்தில் ஆசிரியர் விழிப்புடன் செயல்பட்டுள்ளார்.


பிள்ளை வளர்ப்பில் இருக்கக்கூடிய அணுகுமுறைகள், தலைமுறை வித்தியாசங்களினால் வேறுபட்டு இருந்தாலும், பெற்றோரின் அன்பு திரிபடையும் இடங்கள் அதிக வித்தியாசங்களை அடைந்ததில்லை என்றே தோன்றுகின்றது. அன்பையும், அன்பின்மையையும் அமுதம், விஷம் என்ற குறியீட்டு அர்த்ததுடன் நாவலின் மையத்தை விசாரித்துப் பார்க்கிறது. இங்கு தீர்ப்புகள் இல்லாமல் விசாரணையே முதன்மைப் பணியாக இருப்பதால் கிளைக்கதைகள் நாட்டார்  கதைகள், தொன்மக் கதைகள், புராணக் கதைகள், குழந்தைக் கதைகள் என்று பல்வேறு தளங்களுக்குள் நகர்ந்து மீண்டும் மையம் எழுப்பும் ஆதர கேள்வியுடன் பிணைந்து நிற்கின்றன. ரம்யா ரயில் ஓட்டுனரின் மகளைச் சந்திக்கும் தருணத்திலும், செந்தில் சீராளனைச் சந்திக்கும் தருணத்திலும் வரும் உரையாடல்கள் நேரடியாக இவற்றை எழுப்புகின்றன.


திருவிளையாடல் புராணத்தில் வரும் சீராளன் அவனது தாய், தந்தையினரின் மிதமிஞ்சிய சிவபக்தியால் பலியிடப்படுகின்றான். பின்னர் அது இறைவனின் திருவிளையாடல் என்று அறியப்பட்டு, சீராளன் சிரஞ்சீவியாக எழுந்தருள்கிறான். உணர்ச்சிமயமான இக்கதையில் சில கேள்விகளை இணைத்துக் கேட்கும்போது, அங்கே கட்டப்பட்ட உணர்வுகள் தலைகீழாக்கம் பெறுகின்றன. பெற்றோர் தங்களது பக்தியைக் கட்ட என்னுயிரைக் கொடுப்பது நியாயமா?, என்கிற கேள்வி தொந்தரவு செய்யும் கேள்வியாகவே காலம் முழுக்க அவனுடன் இருக்கிறது.


பெற்றோரின் அன்பு திரிபடைந்து விஷமாவதை அறிந்து துயருரும் சீராளனின் கதை ஒரு திசை என்றால், அதன் மறுதிசையில் தன்னைக் காக்க ஐந்து குழந்தைகளை வேறுவழியின்றி இறப்புக்குள் வீழ்த்திய ரயில் ஓட்டுனரின் கதையாக இருக்கிறது. இரண்டிலும் அன்பின் திரிபு இருக்கிறது. இரண்டின் பொதுவான அம்சம் விரிந்து சென்று சங்கமிக்கும் இடம் சுயநலமா என்ற ஐயம் எழுகிறது. அதற்கு பிரியத்தின், பக்தியின் அதீதம் என்று அர்த்தம் கற்பிக்கலாம். ஆனால், அதன் கடின ஓட்டை விலக்கிப் பார்க்கும்போது தெரிவது என்ன என்பதின் அலைச்சல் நாவல் முழுக்க விரவியிருக்கிறது. அது எழுப்பும் பெற்றோர் X பிள்ளைகள் உறவின் கேள்விகள்தான் வெவ்வேறு திசையில் ஒரே கேள்வியை ஆராய்கிறது. அமுது எங்கு நஞ்சாகிறது? அது ஏன்?


தத்தெடுத்தலில் இருக்கக்கூடிய தேர்வு எனும் தற்செயல் உருவாக்கியிருக்கக்கூடியNL_large_1536241621 விளைவுதான் இத்தனை அலைக்கழிவுக்கும் காரணமோ என்றும் யோசிக்க வைக்கின்றது. அது செந்திலின் தெரிவாகத்தான் இருக்கிறது; ரம்யாவின் தெரிவாக இருந்திருந்தால் வேறுமாதிரியாக இருந்திருக்கலாம். மருத்துவ பரிசோதனையில் தன்னுடைய ஆணுறுப்பு தீண்டப்படும்போது செந்தில் அடையும் அவமானங்கள், அவனது உள்ளகச் சிக்கலுடன் தெளிவாகச் சொல்லப்படுகிறது. அவனது பூர்விக வீட்டில் பரவியிருந்த கரையான் என்ற படிமம் பல்வேறு வாசிப்புகளை அளிக்கக்கூடியது. தலைமுறையாக நீளும் பாவத்தின் அல்லது தீமையின் தொடர்ச்சிதானா கரையான் அளிக்கும் தொல்லைகள்? அவன் வீட்டிலிருந்து முற்றாக நீங்கிய பின்னர் அவனது பூர்வீக வீடு இயல்பாகிறது. ஆனால், அவனது தேர்வுகளில் நஞ்சு இருக்கிறதா என்ன? செந்திலின் தேர்வில் இருக்கக்கூடிய பிறழ்வை இப்படியான வாசிப்பில் கொண்டு செல்லவும் இயல்கிறது. செந்திலின் நண்பனான ஹரியுடனான உரையாடல்கள் ஒருவகையில் தனது நிழலுடன், இதுவரை தான் எடுத்த முடிவுகளின் எதிர் பக்கத்துடன் உரையாடுவது போன்றதாக இருக்கிறது. குடும்ப அமைப்பு, காதல், பிள்ளைப்பேறு  என்பவற்றின் மீதான அனார்கிஸ்ட் அணுகுமுறையாக அவனது வாதங்கள் இருக்கின்றன. ஹரி தனது தந்தையை இழந்த பின்னரும் அதே உறுதியுடன் இருப்பது செந்திலை வியப்புக்குள் வீழ்த்தத்தான் செய்கிறது.


ரம்யாவின் அகவுலகம் அவளது நாட்குறிப்பின் ஊடாகச் சொல்லப்படுகிறது. பெரும்பாலும் அம்மாவின் புறக்கணிப்பு பற்றிய துயரம் பதிவுகளாக இருக்கின்றன. ரம்யாவிடம் ஒரு கணத்தில் எங்கேயோ வளர்ந்த நஞ்சு வர்ஷினியை புறக்கணிக்க வைக்கின்றது. அதேபோல இன்னுமொரு நஞ்சுதான் ரம்யாவின் அம்மாவிடம் இருந்து புறக்கணிப்பாக வெளிப்படுகிறது. அகங்காரத்தின் நஞ்சு நீங்கிச் செல்லும் இடம் ஒரு நாடகீயத் தருணமாக இருக்கின்றது. புற்றுநோயும், இறப்பின் மீதான பயமும் அந்த நச்சை அம்மாவிடம் இருந்து விலக்குகிறது. அந்த நச்சு நீங்கிய பின்னர் அங்கு இருப்பது வெற்றிடமா? அல்லது பிரியமா? பிரியமும், அன்பும் கடையப்படும் உறவின் நுணுக்கங்களை மன நகர்வின் ஊடாக ஆசிரியரால் திறம்படவே எழுத முடிந்திருக்கிறது. ரம்யாவின் அம்மாவுடனான உறவிலிருக்கும் நச்சு நீங்கிய பின்னர், வர்ஷினி மீது ரம்யாவுக்கு பரவும் விஷம் ஏன்? பின்னர் எதற்கு இந்தக் குழந்தை வேண்டும் என்ற வேண்டுதல்கள் அலைக்கழிவுகள் எல்லாம்? இந்த இடத்தில் ஹரியின் பதில்கள் இன்னுமொரு விசாரணையை நிகழ்த்துகின்றது.


நாகம்மையின் தொல் கதை இருவேறு வடிவங்களில் செந்திலுக்கு சொல்லப்படுகின்றன. ஒன்றில் அண்ணாமலை அடையும் சந்தேகத்தின் விளைவால் நிகழும் துர்மரணமாக இருக்கிறது; மற்றையது இறைவனே திருப்பி தன்னிடம் அழைத்துச் செல்லும் துயரம் நிறைந்த இறப்பாக ஆகிறது. நாகம்மையின் சலங்கைச் சத்தமே இன்னும் எஞ்சி இருக்கிறது. நாகம்மையின் கதையும், வர்ஷியின் கதையும் இணையும் கண்ணி பச்சை நிற ஆடையில் இருக்கும் பிரியம் சார்ந்து குறிப்பாக உணர்த்தப்படுகிறது. அது நாவலுக்கு ஒரு அந்தரங்கத்தன்மையை அளித்து, பகுத்தறிவு நவீன மனம் புரிந்துகொள்ள முடியாத இழைகளை ஊகத்தில் விடுகிறது.


சீராளன், வர்ஷினி, நாகம்மை, வரலக்‌ஷ்மி என்று நீளும் சிறார்களின் பாத்திரங்களில் இருக்கும் ஒற்றுமை அவர்கள் பேசுவதற்கு தாமதம் ஆகிறது. அக மொழி உருவாகி இருக்கின்றனவே தவிர புறவயமாக பேச மறுப்பவர்களாக இருக்கிறார்கள். இந்தப் பிறழ்வுதான் பெற்றோர்கள் தம் மீது வஞ்சத்தைக் காட்டக் காரணமா என்ற கேள்வி சீராளன் மூலம் எழுப்பபடவும் செய்கிறது. இவர்களது உடனடி எதிர்வினை மௌனம்தான். ஆனால், அந்த மௌனம் சலனமாக உருக்கொண்டு பின்னர் அதீத விசையுடன் கேள்விகளாக விரிகின்றன.


ஒவ்வொரு கதைகளும் தன்னளவில் படிமங்களை உள்ளே கொண்டிருக்கின்றன. அவற்றை மற்றைய கதைகளுடன் பொருத்திப் பார்க்க பெரியதொரு படிமம் வளர்கிறது. அது இறுதி அத்தியாயத்தில் தேவர்கள், அசுரர்கள் கடையும் அமுதத்துடன் விரித்துச் சொல்லப்படுகிறது. ஒன்றின் மீது ஒன்றாக ஒட்டிவைத்த ஸ்டிக்கர் போல உரிக்க உரிக்க கதைகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பக்க அளவையும் தாண்டி இந்த நாவலுக்குள் ஏற்பட்டிருக்கும் ஆழத்துக்கும் விரிவுக்கும் காரணம் புத்திசாலித்தனமான கதை சொல்லும் உத்திகள் என்றே எனது வாசிப்பில் சொல்ல முடிகிறது.


தேவர், அசுரர் சித்தரிப்பு குறியீடாக ரம்யாவையும், செந்திலையும் சுட்டுகிறது. அவர்கள் தங்களுக்குள் மாறி மாறி உணர்ந்துகொள்ளும் பிரியமும், விஷமும் வர்ஷினியின் உலகத்தோடு உணர்த்தப்படுகிறது. வெளியே வந்த விஷம் தொண்டையில் முள்ளாக இருக்கவே போகிறது. சமயத்தில் அதன் துருத்தல்கள் ஒரு வடுவாக இருக்கப் போகிறது.


ஒன்று அமுதாகவும் மற்றொன்று நஞ்சாகவும் ஆவது எப்போது? என்ற வேதாளத்தின் கேள்விக்கு, வேதாளமே விக்கிரமனுக்கு விடையும் சொல்கிறது. எதுவும் நஞ்சாகவும் அமுதாகவும் ஆகலாம் இவ்வுலகம் நீலகண்டர்களால் ஆனது. அவர்கள் தங்கள் பிரியம் திரிந்து நஞ்சாவதை எப்போதும் காண்பவர்கள். தங்கள் பிரியத்தின், அதன் திரிபின் விளைவுகளை ஏற்பவர்கள். அதன் பொருட்டு பிரியத்தின் முள்ளை எப்போதும் தொண்டையில் பொதித்தவர்கள். அது ஒரு இனிய நினைவுகூரலாக, அன்பின் முத்தமாகத் தொண்டையில் எப்போதும் நிரடும். ஏறக்குறைய ஆசிரியர் இந்த நாவலில் கண்டடைந்த தரிசனமாக நாவலைப் படித்து முடித்தபோது அடைந்த உணர்வோடு இதனைச் சொல்லத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment