Saturday, August 22, 2020

காசியபனின் அசடு- ஒரு வாசிப்பு குறிப்பு

 சில ஆண்டுகளுக்கு முன் சென்னை புத்தக கண்காட்சியில் விருட்சம் ஸ்டாலில் காசியபனின் அசடு நாவலை கையில் எடுத்தேன். மிக நல்ல நாவல் அவசியம் படியுங்கள் என அழகிய சிங்கர் கூறினார். சமீபத்தில் தமிழினி இணைய தளத்தில் கயல்விழி ஐசக் பாஷவிஸ் சிங்கரின் 'கிம்பல் த ஃபூல்' கதை மொழியாக்கம் வாசித்தேன். அபாரமான கதை. அதைப்பற்றிய விவாதத்தில் சரவணன் மாணிக்கவாசகம் காசியபனின் அசடை விட மோசம் இவன் என்பதாக ஒரு வார்த்தை எழுதி இருந்தார். 

Kasiyaban (Tamil Edition) eBook: Kesavamani, Revathi: Amazon.com ...

ஒரு வேதாந்த மாணவனாக பொதுவாக தமிழ் நாவல்களில் ஆன்மிகம், அதிலும் குறிப்பாக வேதாந்தம் எந்த தளத்தில் எப்படி கையாளப்படுகிறது என்றறிய முயன்று கொண்டிருக்கிறேன். வேதாந்தத்திற்கும் நவீன தமிழ் இலக்கியத்திற்குமான தொடர்பு பாரதியிடமிருந்தே தொடங்குகிறது. நவ வேதாந்தம்- குறிப்பாக அரவிந்தர், ஜே.கே, நித்ய சைதன்ய எதி ஆகியோர் தமிழ் இலக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்கள் என்பதை உணர முடிகிறது. புனைவு எழுத்தாளன் வேதாந்தத்தை கைகொள்ளும்போது என்ன நிகழ்கிறது? குறிப்பாக அவனுடைய புனைவுகளை அவன் வேதாந்த சாதனையின் பகுதியாக எப்படி மாற்றிக்கொள்கிறான்? ஒரு அவன் செய்யவேண்டியது எல்லாம் அடையாளக் குறிகளை காட்டும் பதாகைகளை நாடுவதுதான். செல்திசையை குரிப்பவையும் எச்சரிக்கைகளை உரைப்பவையும் என இரண்டாக வகுக்கலாம். மனிதனின் கீழ்மைகளை எழுதுவதும், அவனுடைய மேன்மைகளை எழுதுவதும் ஒன்றின் இருவேறு செயல்திட்டங்கள் எனும் புரிதலை வேதாந்தம் வழியாகவே அடைய முடிகிறது.

 அசடு - காசியபன் - விருட்சம் | panuval.com

அழகிய சிங்கர் காசியபனை பற்றி ஒரு சிறிய அறிமுகம் எழுதியுள்ளார். வெங்கட் சாமிநாதனின் முன்னுரையும் உள்ளது. அம்முன்னுரை ஒரு ஏமாற்றம். எவ்வகையிலும் அசடு நாவலின் தனித்தன்மை அல்லது முக்கியத்துவத்தை அது சுட்டவில்லை. ஒருவேளை அப்படி எதுவும் இல்லை என்பதைத்தான் சொல்கிறாரோ என்னவோ. 

காசியபன் மலையாளம் அறிந்தவர். 53 வயதில் முதல் கதையை எழுதத் தொடங்கினார் என்பது ஆச்சரியமான தகவல். சில கவிதைகள், சிறுகதைகள், மூன்று நான்கு நாவல்கள் எழுதியுள்ளார். அசடு- 1978 ஆம் ஆண்டு வெளியானது. காசியபனுக்கு தத்துவ ஆர்வமும் வாசிப்பும் உண்டு. இந்நாவலில் வேதாந்த வரிகள் காயங்குளம் எனும் பித்தனின் பாடல் வரிகளாக இடையிடையே வருகின்றன. 

கணேசன் எனும் ஒரு மனிதனின் வாழ்க்கை கதை என சொல்லலாம். கதை சொல்லி கணேசனின் ஒன்றுவிட்ட தம்பி ஹரி. கதையை வாசிக்கும் நம்மிடம் சொல்கிறார். ஹரியின் பார்வையில் கணேசனின் பாலிய காலம் தொட்டு மரணம் வரையிலும் தாவித்தாவி நினைவுகூரப்படுகிறது. இந்த நினைவு தாவல் வழியாக இயல்பாக ஓர்  இடைவெளி உருவாகிறது. ஒரே மூச்சில் அத்தியாய பகுப்பு ஏதுமற்ற கூறுமுறை. பெரும் மிராசுதாரரின் வீட்டு பிள்ளையாக ஆனால் தாயில்லா பிள்ளையாக பாட்டியிடம் வளர்கிறான். அதன் காரணமாக அவனை எவரும் கண்டிப்பதில்லை. ஒருமாதிரி முரட்டு இயல்பு உடையவனாக. எவருடனும் இணங்க முடியாதவனாக இருக்கிறான். வாழ்க்கை முழுக்க ஊர் ஊராக தொழில் தொழிலாக மாறுகிறான். கொல்கத்தாவில், புனாவில், சென்னையில், பாலக்காட்டில் என அலைந்து கொண்டே இருக்கிறான். அவனுக்கும் அவனுடைய தந்தைக்குமான உறவு உராய்வுகள் மிகுந்தது. திருமணம் செய்து கொள்கிறான். ஆனால் மனைவியுடனான உறவும் நிலைக்கவில்லை. அவளும் அவனை கைவிட்டு செல்கிறாள். அவளுக்கு பிறக்கும் குழந்தைக்கு கணேசன் தந்தையில்லை என்பது லேசாக கோடிட்டு காட்டப்படுகிறது. இங்கு தான் கிம்பல் உடன் ஒப்பிட முடியும். ஆனால் கிம்பலின் வெகுளித்தனம் பெரும் ஆன்மீக ஆற்றலாக வளர்கிறது. உணவகம் வைத்திருக்கும் ஆண்டி ஐயரின் பாத்திரம் சுவாரசியமானது. ஏறத்தாழ கணேசனின் தந்தையின் இடத்தை எடுத்து கொள்கிறார்.  மனைவி விட்டு சென்றதும் மீண்டும் அவன் விருப்பம் போல் தன்போக்கில் அலைந்தபடி இருக்கிறான். கணேசனின் வாழ்வு அலைகழிப்பு மிகுந்ததா? அலைக்கழிப்பும் அலைந்து திரிவதும் ஒன்றா? இவற்றுக்கு இடையே நுண்ணிய வேறுபாடு உண்டு. அலைகழிப்பு புறக் காரணிகளால் உந்தப்பட்டு நேர்வது. ஆனால் அலைந்து திரிதல் சுய தேர்வாக நிகழ்வது. கணேசனே பெரும்பாலும் இந்த வாழ்க்கை முறையை தேர்கிறான். அவனுக்கு புண்ணிய தளங்களுக்கு செல்வதன் மீதிருக்கும் விருப்பம் சுட்டிக்காட்டபடுகிறது என்பதைத்தவிர இந்த அலைகழிப்பில் ஆன்மீகத்தன்மை எதுவும் வெளிப்படவில்லை. இதுவே பசித்த மானிடத்தின் கணேசனுக்கும் அசடு கணேசனுக்கும் இடையிலான வேறுபாடு. கரிச்சான் குஞ்சுவின் பசித்த மானிடம் பல மடங்கு சிறந்த நாவல் என சொல்லிவிட முடியும். அசடு கணேசனின் அலைச்சல் எவ்வகையிலும் அவனுடைய ஆன்மீக பயணத்தின் குறியீடாக ஆகவில்லை. அவனுக்கென தன இருப்பு சார்ந்தோ வாழ்க்கை சார்ந்தோ பெரிதாக எந்த கேள்விகளும் இருப்பதாக தெரியவில்லை. வாழ்ந்து கெட்ட குடும்பத்தின்/ அல்லது செல்லமாக வளர்ந்து பணிய முடியாதவனின் ஆளுமை சிக்கலை சொல்வதாகவே தெரிகிறது. அவனும் பசித்த மானுடம் கணேசனை போல் துய்த்து துறந்து கடக்கிறான். ஆனால் இவனிடம் அதிகமும் கசப்பே எஞ்சி இருக்கிறது எனும் தோற்றம் இந்த கதைசொல்லியின் பார்வையினால் ஏற்படுகிறது எனத் தோன்றுகிறது. இடையிடையே வேதாந்த விசாரங்களை கொண்டுவருவதால் கதை பெரிதாக மாறிவிடவில்லை என்றே சொல்ல வேண்டும். அல்லது காயங்குளம் எனும் பித்தனுக்கும் கணேசனுக்கும் இடையிலான உறவு சரியாக இணை வைக்கப்படவில்லை. கணேசனின் வாழ்க்கை மீதான ஹரியின் பார்வை என்பதாலேயே இயல்பாக பச்சாதாப குரல் மேலெழுகிறது. ஹரி பாதுகாப்பான நிலையான வாழ்வில் நின்றுக்கொண்டு கணேசனின் கதையை சொல்கிறான். அவனுக்கு தானும் இப்படி ஊர் ஊராக அலையவேண்டும் எனும் விருப்பம் ஏதுமில்லையா? வேதாந்த புரிதலின் படி ஹரியின் பாதுகாப்பு நிலையே முதன்மையாக கேள்விக்கு உட்படுத்தப்பட வேண்டும். கணேசனின் உருவம் தொடங்கி பாத்திர வார்ப்பு வரை எல்லாம் துல்லியமாக துலங்கி வருகிறது. கதைசொல்லிக்கு வெறும் குரல் மட்டும் தான். ஆனால் கணேசனின் விவரணை நாமறிந்த பல்வேறு மனிதர்களுடன் தொடர்புகொள்ள முடிந்தது. எஸ்.ரா அசடு பற்றிய கட்டுரையில் தாஸ்தாவேஸ்கி பாத்திரங்களுடன், குறிப்பாக காரம்சொவ் சகோதரர்களுடன் ஒப்பிட்டு எழுதி இருக்கும் கோணம் ஒரு முக்கியமான திறப்பு. 

நாவல் ஒரு நீண்ட உரையாடல் வடிவத்தை கொண்டிருக்கிறது. நினைவுக்குறிப்பு அல்லது நினைவஞ்சலி எனும் வடிவத்தை தேர்கிறது. கணேசனின் அகத்தத்தளிப்புகள், ஆன்மீக கேள்விகள் எதுவுமே பதியவில்லை. எலி செத்து அதை காக்கைகள் பிடுங்கும் ஒரு சித்திரமும் கணேசன் பெரும் புகையெழுப்பி விறகடுப்பில் தோசை வார்க்கும் சித்திரமும் மனதில் நிற்கும்.  வாசித்து முடித்ததும் ஒரு நிறைவற்ற உணர்வே எஞ்சியிருந்தது. 

No comments:

Post a Comment