Monday, July 20, 2020

மாபெரும் நாவல் குறைதீர்ப்பு முகாம்


(கனலி இதழில் வெளியான சிறுகதை) 

சன்னமான காற்றில் உலைந்துக்கொண்டிருந்த புளிய மரத்திலிருந்துஅதன் நிழலில் மரப்பலகையில் ஒட்டியிருந்த மைக்கா பெயர்ந்து விந்தையான நிலப்பரப்பின் வரைபடங்களை உருவாக்கியபடி இருந்த துருவேறிய பழைய இரும்பு மேசையில் கைவைத்தப்படி நின்று சூனியத்தை வெறித்துக்கொண்டிருந்த பழுவேட்டையரின் மேலே புளியம்பழம் வந்து விழுந்தது.(சொற்களின் இளைப்பாறல்) வெளிறிய இத்துப்போன தந்த நிறத்து நில்கமல் நாற்காலிகள் மேசைக்கு இருபுறமும் இலவச மருத்துவ முகாம்களின் பாணியில் கிடந்தன. ஊரணியில் கலங்கிய செந்நீரில் கைலாசநாதர் ஆலய கோபுரம் நெளிந்துக்கொண்டிருந்தது. புளிய மரக் கொப்புகளை இணைத்த தடிமனான கயிறில் ஒரு துணிப்பதாகை ஆடிக்கொண்டிருந்தது.  வெள்ளைநிறத்துணியில் அடர்நீல எழுத்துக்களில் "மாபெரும் நாவல் குறைத்தீர்ப்பு முகாம்" என எழுதப்பட்டிருந்தது, கீழேயே சிறிய சிவப்பு  எழுத்துக்களில் “நாள்- விரோதி வருடம் தைத்திங்கள் பத்தாம் நாள்” என்றும் நெடுங்குடி என்றும் எழுதப்பட்டிருந்தன. நான்கு மூலைகளிலும் "உபயம் மல்லி சில்க் ஹவுஸ் கல்லுக்கட்டி" என்று பூபோட்ட பார்டருக்குள் தங்க நிறத்தில் சொற்கள் ஜொலித்தன. பழுவேட்டையர் இதயம் பதக் பதக்கென (சொல்லாட்சி உபயம்- அகரமுதல்வன்) அடித்துக்கொண்டது. 

இதெல்லாம் கிடாரத்தின் ஏற்பாடுதான். அவனையும் ஆளைக்காணவில்லை. முந்தைய நாள் நாளிதழில் இலக்கிய இன்பம் பகுதியில்  நிகழ்வுக்கான அறிவிப்பை அவனுடைய மொத்த செல்வாக்கையும் பயன்படுத்தி இடம்பெறச் செய்திருந்தான். பழுவேட்டையருக்கு அவனுடைய பிரியத்தை எண்ணி கண்ணீர் துளிர்த்தது. பூரிப்பில் உடல் சிலிர்த்தது. (கம்பளிப்பூச்சியின் ஆயிரம் ரோமக் கால்கள் குத்திட்டு நின்றன) வந்தவுடன் கட்டிப்பிடித்து உச்சி முகர்ந்து காதில் கவிதை சொல்ல வேண்டும் எனத் தோன்றியது. 

இதற்கெல்லாம் காரணம் முந்தைய வாரம் நடந்த உரையாடல்தான். நிலைப்படியில் அமர்ந்து வாரமலரில் இது உங்கள் இடம் வாசித்துக்கொண்டிருந்த பழுவேட்டையர், கிடாரத்தின் சைக்கிள் ஓசை கேட்டதும் வேகவேகமாக அருகிருந்த போர்கேஸ் புத்தகத்திற்குள் அதை பொதிந்து விட்டு விரித்திருந்த ஏதோ ஒருபக்கத்தில் கண்ணை ஓடவிட்டார். அருகே வந்து சைக்கிளை நிறுத்தி கிடாரம் வந்து தோள் தொட்டு உலுக்கும் வரை புத்தகத்திற்குள் மூழ்கி திளைத்தார் கிடாரத்தின் உலுக்கலில் திடுக்கிட்டு விழித்தவர். 

"வாடா வா..எப்படி இருக்க, நம்ம புது நாவல பத்தி என்ன பேசுறானுக? பட்டைய கெளப்புதா?"

சோர்ந்து தலை குனிந்திருந்தவன், ஆதரவாக நீண்ட பழுவேட்டையரின்  கையை தட்டிவிட்டான். "நீ வேற அண்ணே, அதெல்லாம் நீ நெனைக்கிற மாதிரி ஒண்ணுமில்ல" என்று சட்டையின் உள் பையிலிருந்து நான்கைந்து தாள்களை எடுத்து நீட்டினான். எல்லாம் பழுவேட்டையரின் புதிய நாவலைப்பற்றிய அபிப்பிராய கடிதங்கள். எழுந்து நின்று தளர்ந்திருந்த லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டார்.
“என்ன சொல்லுறானுக?” லேசாக அவர் குரலில் பதட்டம் தெரிந்தது. 

"அண்ணே நம்ம சீவலப்பேரி சீனிவாசன் கடிதம் போட்டிருக்காரு, நாவல வாசிச்சாராம், காதம்பரிய நீங்க உசுரோட விட்டது ஒரு அழகியல் பிழைன்னு கடுமையாக சொல்லியிருக்கார்."

பழுவேட்டையர் முகம் இறுகியது "ம்"

"அண்ணே அடுத்து நம்ம கொத்தமங்கலம் காளிங்கராயன் எழுதியிருக்கார், நாவலின் முடிவு சரியில்லை. மொத்தத்தையும் குலைத்து விடுகிறதுன்னு சொல்றார்"

பழுவேட்டையர் முகம் இருண்டது "ம்"

"அப்புறம் குழிபிற கண்ணபிரான் என்னசொல்றாருன்னா, செல்வத்துக்கு விபத்து நடந்தபோது அவனுடைய அம்மா அழுகிறது நம்பகமா இல்லை."

பழுவேட்டையர் முகம் சிறுத்தது. "ம்"

"அப்புறம் பிரான்மலை பரசுராமனென்ன சொல்றாருன்ன.."

"டேய் போதும்.. அவர் என்ன சொல்வாருன்னு எனக்குத் தெரியும்.”
பீடியைப் பற்றவைத்துக்கொண்டார். (புகைப்பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும்) புகை விசும்பில் உரு கலைந்து கரைந்தது.

 “எண்டா... முன்ன படிச்ச ஆளுக எல்லாம் நல்லாருக்குனுதானடா சொன்னாய்ங்க. மதகுப்பட்டி மகாலிங்கம், ஆலங்குடி வேல்முத்து, மாதவராயன்பட்டி மகாதேவன்...” சட்டென கிடாரத்தை நோக்கி முகம் திருப்பி  “நீ கூட நல்லாருக்குன்னு தான சொன்ன. இப்ப என்னடா இப்புடிச் சொல்ராய்ங்க."

:”நீங்க ஒன்னும் பயராதீக. ஆளாளுக்கு ஒன்னொன்னு சொல்லத்தான் செய்வாக”
“அது தெரிஞ்சதுதான். போட்டும் விடு, நம்ம வேல ஆய்போச்சு அடுத்தத பாப்போம்”

“அதெல்லாம் அப்புடி விட்டுற முடியுமா? நீ யாரு, எப்பேர்பட்ட ஆளு. உனக்கு உன் பவர் தெரியாதுண்ணே. பரசுராமன் சொல்றார், இந்தக்கதைய நல்லாருக்குன்னு சொன்னவைங்க எல்லாம் நாடுகடத்தனுமாம், எல்லாம் சேந்து உன்னைய கெடுத்து நாசமாக்கிட்டோமாம். இப்ப இது இனி உம் பிரச்சன இல்ல. என் பிரச்சின, மானப் பிரச்சின. சும்மா எல்லாம் விட்டுற முடியாது”

“பெரியவரு என்னமோ சொல்லிட்டாரு, நம்ம மேல அன்பானவரு, எதுவும் பண்ணிகின்னி வெக்காத”


"அதெல்லாம் ஒன்னும் செஞ்சிர மாட்டேன். ஆரோக்கியமான விமர்சன சூழல் இருக்கணும்னு நீ தான சொல்லுவ.”

“ஆமா.. அதுக்கு?”

 “எனக்கொரு யோசனை, எல்லோரையும் கூப்பிடுவோம், என்ன எதுன்னு கேப்போம். நாவல்ல என்னனென்ன குறைகளை கண்டீர்கள்? ன்னு கேப்போம்”
"கேட்டு?"
"அவுக அவுகளுக்கு ஏத்த மாதிரி, கேக்குற விஷயங்கள திருத்தி எழுதி  நல்லா சந்தோஷமா திருப்தியா அனுப்பி வைப்போம்"

பதற்றத்தில் பீடிக் கங்கை விரல்நுனி தொட்டது.
“இங்கேரு..கொன்றுவேன்..என்னடா வெளாட்டா?”
“அண்ணே கோவப்படாத, பொறுமையா யோசி. நீ ஒரு பின்நவீனத்துவ எழுத்தாளன்னு நிறுவ நாள்ள வாய்ப்பு. ஒரு நாவல் ஆனா ஊருபட்ட பிரதி, எப்படி நம்ம யோசனை? எல்லாம் சரியா நடக்கும், நீ சும்மா இரு நா பாத்துக்குறேன்.. உன்னைய எங்கக் கொண்டு நிறுத்துறேன்னு பாரு” என்றபடி சைக்கிளில் சென்றபோது அஸ்தமனச் சூரியன் பொற்கிரணங்களால் உலகை ஆசிர்வதித்துக்கொண்டிருந்தது.

நேற்றைய நாளிதழின் சனிக்கிழமை இலவச இணைப்பான ‘இலக்கிய இன்பத்தில்’ இப்படியொரு பெட்டிச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள்.(வார்த்தை எண்ணிக்கை நாற்பத்தியொன்று என்பது பழுவேட்டையருக்கு வாழ்நாளில் கிடைத்த மாபெரும் அங்கீகாரம். சாவுச் செய்திக்கு மட்டுமே தன் பெயரை இலக்கிய இன்பத்தில் புகைப்படத்தோடு போடுவார்கள் எனும் அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கையை அசைத்துவிட்டது. முன்ஜென்ம நற்பேறு. கடவுளுக்கு நன்றி)

உலக இலக்கிய வரலாற்றில் முதன்முறையாக, பழுவேட்டையரின் புதிய நாவலான "கூதக்காற்று"க்கு  மாபெரும் நாவல் குறைத்தீர்ப்பு முகாம் நாளை நெடுங்குடி கைலாசநாதர் ஆலையத்தின் அருகேயுள்ள புளிய மர நிழலில் நிகழவுள்ளது. பிரதி பன்மைத்துவத்தில் நம்பிக்கையுள்ள பழுவேட்டையரின் மெய் வாசகர்களே அலைகடலென, அனல் வெயிலென, அடைமழையென திரண்டு வாரீர். குறிப்பு- பிரதியை கையில் கொண்டு வருபவர்களுக்கே அனுமதி. 

கிடாரம் ஒன்பது மணிக்கு முகாம் தொடங்கும் என்று சொல்லியிருந்தான். ஆனால் பத்தரை ஆகியும் எவரும் வரவில்லை. பழுவேட்டையர் பீடியை பற்றவைத்துக்கொண்டு மரத்தில் அமர்ந்திருந்த காகத்தை வெறித்துப் பார்த்தார். அடுத்த கதையில் காகம் தலை சொடுக்கி திருப்புவதை எழுதி கதையாக்கிவிடுவான் எனும் அபாயத்தை உணர்ந்த காக்கை கண்ணெட்டா தொலைவிற்கு பறந்து போனது. பீடி தீர்ந்ததும் கங்கை காலில் அழுத்தி தேய்த்து விட்டு விரக்தியில் நாற்காலிகளை அருகிருந்த டீக்கடையில் வைக்கப்போனபோது தொலைவில் கிடாரத்தின் சைக்கிள் ஓசை கேட்டதும் மனம் குதுகலம் அடைந்தது. 

வழக்கத்தைவிடவும் சைக்கிள் கொடூரமாகத் திணறியது. அருகில் வந்தவுடன் தான் கேரியரில் ஒரு பெரியவர் ஜோல்னா பையுடன் அமர்ந்திருந்ததை காணமுடிந்தது. குள்ளமாக தடியாக தூக்கிவாரிய முடியுடன் தடித்த கண்ணாடி போட்ட ஒருவர் சாம்பல்நிற சஃபாரி உடையில் குதித்து இறங்கினார். 

"அண்ணே சாரத் தெரியலையா, சார் தான் சூரக்குடி சண்முகநாதன்" என மூச்சிரைப்புக்கு நடுவே அறிமுகப்படுத்தினான்.

இறுகிய முகத்துடன் கைகுலுக்கியதும் நாற்காலியில் அமர்ந்தார். 
"சார் இங்கனதான் வாராருன்னு பாத்த உடனே கண்டுபிடிச்சிட்டேன், அதான் கூட்டியாந்துட்டேன், சார் சோடா குடிக்கிறயளா"

வேண்டாம் என கையசைத்துவிட்டு பைக்குள் துழாவி கூதற்காற்று நாவலை எடுத்தார். 

"மிஸ்டர். பழுவேட்டையர், உங்க பபிரதிய எடுத்துக்குங்க"

பழுவேட்டையர் மேசையிலிருந்த அவருடைய பிரதியை எடுத்துக்கொண்டார்.  அப்போது அவர் விரல்கள் அனிச்சையாக படப்படத்தன.

“மொதல்ல அட்டைலேந்து ஆர்மபிப்போம்.சார் இது என்ன சார் படம்?”
“அது மரம் சார், காத்துல ஆடி உருவிழந்து போகுது”
“சார் இந்தா இருக்கே இது என்ன சார்?” என்று கோபமாக புளிய மரத்தைக் காட்டினார். “இது மரம். இது மரமா? படம் கூட தெளிவா இல்லேன்னா என்ன சார்? வாங்குன காசுக்கு இப்படிச் செய்யக்கூடாது சார்.அப்படித்தான் அன்னிக்கு யாரோ வாங்கான்னு ஒருத்தன் வரைஞ்சதா காமிசாணுக. ஒன்னு கூட தெளிவா நேரா இல்ல. என் பேரன் செட்டிநாடு ஸ்கூல்ல ரெண்டாவது படிக்கிறான் சார். என்னமா வரைவான் தெரியுமா, எல்லாம் அவ்வளோ ஸ்ட்ரெயிட்டா இருக்கும், என்னமோ போங்க சார்” பெருமூச்சுவிட்டு கண்ணாடியை கழட்டித் துடைத்தார்.
“சரி விடுங்க, அடுத்த தடவ பாத்து தெளிவா செய்ங்க. இப்ப நாவலுக்குள்ள போவோம்.
பக்கம் எண் ஏழு, அத்தியாயம் பேரு ஜாமம்னு வெச்சிருக்கிங்க, மொதப் பத்தியிலேயே சூரிய உதயத்தை எழுதி வெச்சிருக்கீங்க"
"சார் அதுல ஜாமம் வருதே"
"அது அப்புறம்ல வருது. ஆனா தொடக்கத்துல இல்ல, புலர்காலைன்னு அத்தியாயத்த மாத்துங்க"
பழுவேட்டையர் மென்று விழுங்கினார். 
"இல்ல சார் ..இந்த ஜாமங்கிறது ஒரு குறியீ.."
"அதெல்லாம் தேவையில்ல சார், தப்புன்ன தப்பு, எனக்கு திருப்தி இல்ல. மாத்திக்கொடுங்க." எனகே கூறி மேசையை ஓங்கித் தட்டினார். 

கிடாரம் குறுக்கிட்டு "இந்த மாத்திடுவோம் சார்..மொத்தமா எல்லாத்தையும் குறிச்சிக்கிட்டு மாத்தி தாரோம்..என்னண்ணே?" என்று பழுவேட்டையரைப் பார்த்தான். 

"மாத்திருவோம் சார்"
"அடுத்து... பக்கம் 27, மூணாவது பேரா, நாலாவது வரி, சுகுணா காப்பித் தம்ப்ளரை கழுவினாள்ன்னு எழுதி இருக்கீங்க, ஆனா பத்தாவது பக்கம் ரெண்டாவது பேரா ஆறாவது வரில அவளுக்கு சமைக்கத் தெரியாதுன்னு சொல்றீங்க” எனச் சொல்லி இடைவெளிவிட்டு கூர்மையாக பழ்வேட்டையரை நோக்கினார் “சொல்றீங்கதானே?”
“ஆமாசார்”
, பாத்திரச் சித்தரிப்பில் ஓர்மை கூடவில்லையே சார்?" கண்ணாடிக்கும் நெற்றிக்குமான இடைவெளியிலிருந்து மீண்டும் கூர்மையாக பார்த்தார். 

கண்களை பார்க்கக்கூசி கிடாரத்தை பார்த்தார் பழுவேட்டையர். கிடாரம் அமைதியாக தரையைப் பார்த்தான். தயங்கியபடி "சார் அது ரெண்டுக்கும் சம்பந்தம் எதுவும்.."
"சம்பந்த எல்லாம் இருக்கு சார்...இல்லைன்னு எப்படி சார் சொல்வீங்க? அதெல்லாம் மாத்திதான் ஆகணும். அவளுக்கு பதிலா வேற யாராவது காப்பித் தம்பளர கழுவட்டும்."
"அப்ப காதம்பரிய கழுவச் சொல்லலாமா சார்?"
"அதெப்படி சார்? அவதான் சீன்லையே இல்லையே?"
கிடாரம் நிமிர்ந்தான் "அண்ணன் பாவம் சார்.  நீங்களே ஒருத்தீர்வ சொல்லிருங்க"
"சரி புதுசா ஜானகின்னு ஒரு பாத்திரத்த போட்டு கழுவ வைக்கிறதுல உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே" என்றார் வெற்றி புன்னகையோடு.

/"போட்டுரலாம் சார்"
"அப்புறம் ஒரேயொரு சீனுக்காக ஜானகிய உருவாக்க முடியாதுல, ஒரு இருவது எடத்துல குறிச்சித் தாரேன், அங்க எல்லாம் சேத்துடுங்க"

"எல்லா எடத்துலயும் தம்பளர் கழுவுவாங்களா சார்?" என கிடாரம் அப்பாவியாக கேட்டான்.

"இல்ல வேறவேற செய்ய வெச்சு பன்முகத்தன்மையை காட்டலாம். ஒருதடவ தட்டு, கரண்டி, ஸ்பூன், கிண்ணி, இப்புடி மாத்தி மாத்தி. அதெல்ல்லாம் எழுத்தாளர் சுதந்திரம் நான் தலையிட மாட்டேன்"

"அடுத்து பக்கம் நூத்தியெட்டு. சார் செல்வத்த இப்புடி அநியாயமா ஆக்சிடெண்டு ஆக்கி கால ஒடைச்சி விட்டுட்டீங்களே அந்த விபத்து வேண்டியதில்லை"

"பக்கம் நூத்தி அறுபத்தியாறு. இதெல்லாம் நல்லாவா இருக்கு, எந்த ஊர்லயாவது இப்படி எல்லாம் நடக்குமா சார். மாத்துங்க"
"பக்கம் இருநூத்தி எழுபது..இந்த கனவெல்லாம் யாருக்கு வேணும்,  நெஞ்சத் தொட்டு சொல்லுங்க சார், உங்களுக்கு கனவுலாம் நியாபகம் இருக்குமா? வெட்டி வீசுங்க"

"பக்கம் முன்னூத்தி ஆறு, இதென்ன சார் மொவறைய பாக்குற சவரக் கண்ணாடி செல்வத்துக்கிட்ட பேசுது..ஹஹா செம காமடி....சின்ன புள்ளைங்களா சார் நாங்க..நல்லா காதுல பூ சுத்துறீங்க. எடுத்து விடுங்க"

"பக்கம் முன்னூத்தி பதிமூணு ..என்ன சார் இது செல்வத்துக்கும் காதம்பரிக்கும் கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கீங்க, அப்பா ஜானகி எதுக்கு வந்தா? அவளுக்கு செஞ்சு வைங்க"

"சார் இந்த முடிவு சரியில்ல,மொத்த நாவலையும் குலைச்சு போடுது, உங்களுக்கு தெரியலையா, செல்வத்த கொன்னுருங்க, காதம்பரிய ஊர விட்டு துரத்திடுங்க, ஜானகிக்கு சொத்து எல்லாம் வர்ற மாதிரி, லாஜிகலா திருத்தி எழுதுங்க"

அவர்  பொழியப்பொழிய கிடாரம் குறித்துக்கொண்டே வந்தான்.  
இப்படியாக மூன்று மணிநேரம் மொத்தம் எழுநூத்தி எண்பத்தியாறு திருத்தங்கள் சார்ந்து உடன்படிக்கை எட்டப்பட்டிருந்தது. 

பழுவேட்டையர் நிமிர்ந்தார். 
"சாருக்கு இப்ப திருப்திதானே?"

புத்தகத்தை முன்னும் பின்னுமாக பிரட்டிப் பார்த்தார். "ம்.. ஆனா” 
கிடாரம் இடைப் புகுந்து "சும்மா தயங்காம சொல்லுங்க சார்.. குறை இல்லாம போகணும்,கஸ்டமர் சாட்டிஸ்பெக்ஷன் முக்கியம்"
பழுவேட்டையரை நிமிர்ந்து பார்த்தார். கண்களில் தயக்கம் ததும்பியது. 
"இல்ல, இந்த நாலாவது பக்கத்துல 'சுமதிக்கு..'ன்னு போட்டு இருக்கீங்க"
"ஆமா அது அண்ணனோட மொத காதலி, அவுகளுக்குதான் மொத நாவல டெடிகேட் செஞ்சிருக்கார்"
"இல்ல அதான்..அத மட்டும் நீலவேணின்னு மாத்தி குடுத்தீங்கன்னா..நமக்கும் காதல்லாம் உண்டுதான" என்றபோது அபூர்வமான வெட்கம் அந்த கடுமையான முகத்தில் முதன்முறையாக ஒளி பாய்ச்சியது. 

பழுவேட்டையர் சிரித்தபடி அவருடைய பிரதியை வாங்கி திருத்திவிட்டு திருப்பிக் கொடுத்தார். 

"சரிங்க சார் ரொம்ப சந்தோஷம் " என கைகுலுக்கி விடைபெற்றார்.  “சீக்கிரம் அடுத்த நாவல்  எழுதி நல்லா முன்னு வரோணும், எழுத முன்ன சொல்லுங்க, ஒரு ஆலோசனை கமிட்டி  மீட்டிங் போடலாம்,ஆரம்பத்துலேயே பேசி முடிச்சிட்டா சிரமம் இல்லாம இருக்கும் பாருங்க, என்ன நாஞ்சொல்லுறது”

அவர் சென்றதும் வேகவேகமாக இடத்தை காலிசெய்யும் வேலையைச் செய்யத் தொடங்கினார் பழுவேட்டையர். “செத்த இருன்னே, ரெண்டு பேரு வாராகளாம்”

“”எவனாவது வந்தா உன்னைய வெட்டி பொலி போட்டிருவேன்” என கத்திவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

கீழாநிலைக்கோட்டையில் பஸ் ஏறியதும் ஆசையாசையாய் புத்தகத்தை பிரித்து பார்த்தார். முதல் பக்கத்திலேயே பழுவேட்டையருக்கு பதில் சூரக்குடி சண்முகநாதன் என திருத்தப்பட்டிருந்தது. கீழே “அய்யா, தெரியாம ஒரு கதை எழுதிட்டேன், சமூவம் என்னை மன்னிக்கணும், என்னைய விட்டுருங்க” என எழுதியிருந்ததன் அருகே கூப்பிய கரங்கள் பால்பாயிண்ட் பேனாவால் வரையப்பட்டிருந்ததை பார்த்தபோது சண்முகநாதன் பெருமிதத்தில் மிதந்து கொண்டிருந்தார்.   

     


2 comments:

  1. இந்தக் கதையை முன்பே வாசித்த ஞாபகம்... கனலியில்தானா..?
    கனலியில் முன்னரே வெளியாகியதோ...
    நல்ல கதை... வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. கனலியில் வெளிவந்த கதை தான். நன்றி.

    ReplyDelete