Tuesday, December 30, 2014

விஷ்ணுபுரம் விழா 2014 - நினைவுகள்

கோவைக்கு கிளம்பியது முதல் ஊர் திரும்பியது வரை விழா ஒட்டுமொத்தமாக ஒரு இனிய அனுபவமாக அமைந்தது. அதற்குழைத்த அத்தனை கோவை நண்பர்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். 

சனிக்கிழமை காலை பத்துமணிக்கு யாத்ரி நிவாசில் விவாத அரங்கிற்கு மானசாவுடன் நுழைந்த போதே முன்னரே குழுமியிருந்த நண்பர்களின் முகங்களில் தென்பட்ட பிரமிப்பும் உற்சாகமும் எனக்கும் தொற்றிகொண்டது. பாவண்ணன் அவர்களுடனான உரையாடளில் எனக்கு மொழியாக்கம் குறித்து அவர் கூறியவை முக்கியமானதாக தோன்றின. தமிழ் இலக்கிய பிரதிகள் ஆங்கிலத்தையோ பிற இந்திய மொழிகளையோ சென்றடையவில்லை என்பதற்கு இன்று இரு மொழிகளில் ஆழ்ந்த அறிவும் பரிச்சயமும் கொண்டவர்கள் இல்லாதது மிகப்பெரிய குறை என்றார். அவருடைய கவலை நியாயமானதே, குறைந்தபட்சம் ஆங்கிலத்தின் வழியிலாவது அவை பிற மொழிகளை சென்றடைய வேண்டும். வேடிக்கையாக பல மொழியாக்க அபத்தங்களை நண்பர்கள் சுட்டிகாட்டிக்கொண்டே சென்றனர். 

DSC_3449.JPGஜெ தளத்தில் சிறுகதைகள் வெளிவந்த சமயத்தில், ஒவ்வொரு கதையையும் வாசித்து அதுகுறித்து பொருட்படுத்ததக்க எதிர்வினைகளை வைத்த முக்கிய எழுத்தாளர் (ஜெயை தவிர) அவரே. தனி அஞ்சலில் மேலும் சில கருத்துக்களையும் விமர்சனங்களையும் எழுதியிருந்தார், நாம் கவனிக்கபடுகிறோம் எனும் உணர்வை எனக்கு அதுவே அளித்தது, அதற்காக நான் என்றும் நன்றியுடையவனாவேன். உதிரிகளாக இணையத்திலும் இதழ்களிலும் வாசித்திருந்தாலும், அவருடைய கதைகளை ஓரளவிற்கு வாசித்துவிட்டு தான் அவரை சந்திக்க வேண்டும் என எண்ணியிருந்தேன். விழாவிற்கு அவர் வருகிறார் என்றறிந்தவுடன் நூலகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட குதிரை மற்றும் எழு லட்சம் வரிகள் ஆகிய இரு சிறுகதை தொகுப்புகளை எடுத்துவந்து முழுமையாக வாசித்து முடித்தேன். ஞானக்கூத்தனுக்கு விருது அளிக்கபடுவதால் அவருடைய கவிதைகளை வாசிப்பதுடன் நின்றுவிடுவதில்லை, இதுவே விஷ்ணுபுர கூடுகைகள் நமக்களிக்கும் சவால். இளம் வாசகனாக வாசிப்பில் சோம்பி விடகூடாது. சு.வேணுகோபாலையும், எம்.கோபாலகிரிஷ்ணனையும், நாஞ்சில்நாடனையும் அவன் சிறிதளவேனும் வாசித்திருக்க வேண்டும். அப்போது அவர்களுடனான உரையாடல்கள் வழியாக படைப்பாளிகளை அகத்திற்கு நெருக்கமாக உணர முடியும்.    தனிப்பட்ட முறையில் பாவண்ணன் அவர்களுடன் அங்கு உரையாடி கொண்டிருந்தேன். நல்லவர்களின் துயரம் என்பதே அவருடைய கதைகளில் பொதுவாக ஊடுருவி செல்லும் சரடு என எனக்கு தோன்றுகிறது என சொல்லிகொண்டிருந்தேன். ஆனால் அப்படி சுருக்கிவிடமுடியாது என்பதும் உண்மையே, அதற்கு உதாரணம் அவருடைய சூறை எனும் கதை. சூறை மனிதர்களில் சந்தர்ப்பவாதத்தை காட்டும் ஒரு கதை, மெல்ல மெல்ல ஒரு ரயில்நிலையம் பொருளற்று உருக்குலையும் சித்திரம். என்னளவில் அவருடைய மிக சிறந்த கதைகளில் ஒன்று என்பேன். அவரும் அக்கதையை குறித்து பேசிக்கொண்டிருந்தார். பாண்டிச்சேரி என்பதால் மட்டுமல்ல மணாசாவிற்கும் அவருடன் பேச மற்றுமொரு காரணமும் உண்டு, அவளே  வாசித்த முதல் முழு சிறுகதை பாவண்ணன் எழுதிய எழு லட்சம் வரிகள் என்பதே.  

DSC_3514.JPG

ஜெ தனது உரையில் குறிபிட்டது போல் கருத்தியல் பூசல்களுக்கு அப்பால் நல்ல நட்பு கொண்டிருக்க முடியும் என்பதற்கு ஆகசிறந்த உதாரணம் புவியரசு அவர்கள். வானம்பாடி கவிதைகள் குறித்து அவர் பேசியதும், நவீன கவிதை குறித்து அவர் சொன்னவற்றையும் ஏற்க முடியவில்லை என்றாலும், அக்கவிதைகளையும் அக்குரல்களையும் புறக்கணிக்க வேண்டியதில்லை என்றே தோன்றுகிறது. அவை குறிப்பிட்ட சில சமூக காரணிகளால் உந்தப்பட்டு உருவானவை. உற்சாகமாக கசப்பின்றி அவ்வயதில் உரையாடுவதற்கும் ஒரு கொடுப்பினை வேண்டும்.

சுசீலா அம்மா நூல் வெளியீடை பொருத்தவரை ஜெயும் பாவண்ணன் அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள். அம்மாவிற்காக அவர் எழுப்பியிருக்கும் ஆத்மார்த்தமான நினைவு சின்னமே யாதுமாகி எனும் நாவல் என்றார் ஜெ. ஒருவகையில் நல்ல இலக்கியம் உண்மையின் பாற்பட்டது, அந்த உண்மை எத்தகையது என்பதில் விவாதங்கள் இருக்கலாம். ஆகவே நிச்சயம் ஒரு கவனிக்கத்தக்க நாவலாக யாதுமாகி அமைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன். சுசீலா அம்மாவின் ஏற்புரை உணர்ச்சிபூர்வமாக சிறப்பாக அமைந்தது.  

நான் பங்குபெற்ற கூடுகைகளில் மிக முக்கியமான கூடுகை என ராஜீவனுடனான கலந்துரையாடலை சொல்வேன். எல்லாவகையிலும் கவிதைகள் குறித்தும் படிமங்கள் குறித்தும் விவாதம் நீண்டது. தேவதேவனும் வேறு பல வாசகர்களும் சில முக்கியமான கேள்விகளை எழுப்பியபடியே சென்றனர். படிமத்திற்கும் பிம்பத்திற்குமான இடைவெளியை தொட்டு சென்றபடி இருந்தது விவாதம். எஸ்.ரா.பவுண்டு முன்மொழிந்த இமேஜிசம் ஃபாசிசத்துடன் நுட்பமாக தொடர்புடையது என்றார். அதன்காரணமாகவே அதை தவிர்த்து மேலேற வேண்டும் என கூறினார். டி.பி.ராஜீவன் நிதானமாகவும் ஆழமாகவும் செறிவாகவும் ஒவ்வொரு பதிலையும் சொன்னார். விழாவில் அவராற்றிய உரையும் மிகசிறப்பாக அமைந்தது. ராஜீவன், கல்பற்றா, தேவதேவன், ஞானக்கூத்தன் என இவர்களுக்குள் இருக்கும் பொதுசரடை பற்றி சிந்தித்துகொண்டிருக்கிறேன். உள்ளே பற்றி பதறி எறிந்தாலும் கூட புறத்தில் எப்போதும் ஒரு அதிசயிக்கவைக்கும் நிதானம். 

சு.வேணுகோபால் அவர்களுடனான உரையாடலும் முக்கியமானதே. படைப்பு மனத்தை இயக்கம் விசைகள் விசித்திரமானவை என எண்ணிக்கொண்டேன். கோபமும், காமமும், அவமதிப்பும், சோகமும் கூட அவனை உந்தி தள்ளுகிறது. இருபத்தியொரு நாட்கள் எழுதி தள்ளியதை பற்றி அவர் சொன்ன போது உலகெங்கும் அப்படித்தான் என தோன்றியது. பாத்திரங்கள் உருபெறும்/உருமாறும் இடங்கள் என நுட்பமாக பேசினார்.  

விஷ்ணுபுரம் கூடுகைகள் வழியாக நானடைந்த மிக முக்கிய பயிற்சி என்பது ஓரிடத்தில் அமர்ந்து மணிகணக்காக விவாதங்களை செவி கூர்வது என்பதே. ஆச்சரியமாக அவை அயர்ச்சி தருவதில்லை. ஜெ மீதிருக்கும் மதிப்பும் மரியாதையும் கூட அத்தகைய கட்டுகோப்பை உருவாக்கி இருக்கிறதோ என தோன்ற செய்கிறது. 

நண்பர்கள் சேரும் போதெல்லாம் வெண்முரசு குறித்து பேசிக்கொண்டு இருந்தோம். பிரியத்துற்குரிய நண்பர்கள் எப்போதும் உடனிருந்தனர். கிண்டலும் கேலியுமாக பேசியும் சிரித்தும் கழிந்தன இவ்விருனாட்கள். விழாவும், உரைகளும், எவ்வகையில் முக்கியமோ அதேவகையில் அல்லது அதைக்காட்டிலும் நெருக்கமானது நண்பர்களுடன் கழிக்கும் நேரம். அதுவே இக்கூடுகைகளின் மிக சிறந்த அம்சம் என தோன்றுகிறது. சிறப்பான உணவு ஏற்பாடையும், தங்குமிடத்தையும் ஏற்பாடு செய்த சுரேஷ், விஜய் சூரியன், ராதா மற்றும் கோவைவாழ் நண்பர்களுக்கு நன்றிகள்.

இயக்குனர் வசந்தபாலனை விழாவில் தான் முதன்முறையாக  சந்தித்தேன் . கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தோம். பாசாங்கற்ற எளிய மனிதர். காவியத்தலைவன் பற்றியும் பேசினோம். இளைஞர்களை  திரையரங்கிற்கு இழுத்துவர முடியவில்லை என வருந்தி சொன்னார். நண்பர்களில் எவரோ ஒருவர், மக்களுக்கு படம் புரியவில்லை என்பது போல் ஏதோ ஒன்றை சொன்னார். பாலன் தீர்மானமாக "அவர்களை குறை சொல்லவேண்டியதில்லை..தியேட்டருக்குள் அழைத்துவர முடியவில்லை எனில் இங்கு தான் ஏதோ கோளாறு" என்றார். கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது. மற்றொரு நண்பர் "அங்காடிதெரு, வெயில் இரண்டும் பிரமாதமா இருந்துது என்றார்" நான் அதைவிட்டு வெளியே வர விரும்புகிறேன், ஆனால் நீ அதையே செய், அதுதான் உனக்கு வரும் என சொல்கிறார்கள் என்று சொன்னபோது உண்மையிலேயே மனதிற்கு வேதனையாக இருக்கிறது. இங்கே வெற்றி தோல்விகள் தீர்மானிக்கப்படும் விதம் நமக்கு புரிவதே இல்லை. இங்கே எவருமே முடவனையும் குருடனையும் பிரசவிக்க முயல்வதில்லை. ஆத்மார்த்தமான முயற்சிகள் சிலவேளை இலக்குகளை துளைப்பதில்லை. ஆனால் அம்முயற்சிகளுக்கு நிச்சயம் ஏதோ ஒரு இடமுண்டு. 

ஞானக்கூத்தன் பற்றி கே.பி.வினோத் எடுத்திருக்கும் ஆவணப்படம் உண்மையிலேயே மிக நல்ல அனுபவத்தை அளித்தது. மேலும் பல மூத்த எழுத்தாளர்கள் குறித்து இப்படியான சில முயற்சிகள் செய்யப்பட்டாக வேண்டும். அவர்கள் வாழும் காலத்திலேயே இது நிகழ வேண்டும். ஆவணப்படத்தை மிகுந்த ரசனையுடன் செய்திருக்கிறார். துவக்கத்தில் வரும் நெரிசலான திருவல்லிக்கேணி காட்சிகள் ஆகட்டும், ரயில் பற்றிய கவிதைவரிகளை காட்சிபடுத்தியவிதம் ஆகட்டும், ஞானக்கூத்தன் மனைவி அவருடைய கவிதைகளை பிடித்து மணந்து கொண்டதாக சொன்னபோது ஞானக்கூத்தன் சிரிப்பதாகட்டும், ந.முத்துசாமி மெல்ல கம்பீரமாக மீசையை முறுக்கிவிட்டுகொள்வதாகட்டும் எல்லாமே வெகு அழகாக நிதானமாக இயல்பாக அமைந்திருக்கிறது. இ.பா, பூமணி, அமி, கிரா, என நம்முடன் வாழும் மூத்த எழுத்தாளர்களின் வாழ்வும் இப்படி ஆவணபடுத்தபட்டால் மிக நன்றாக இருக்கும் என எண்ணிக்கொண்டேன். மிக குறுகிய காலகட்டத்தில், குறைந்த உபகரணங்கள் மற்றும் பொருட்செலவில் இது சாத்தியம் என்பது வியப்பை அளிக்கிறது

விழா இந்தமுறை மிக சிறப்பாக ஒருங்கிணைக்க பட்டது. மேடையில் சண்முகவேல் வரைந்த ஞானக்கூத்தனின் ஓவியம் துவங்கி எல்லாமே சரியாக இருந்தது. கால மேலாண்மை வெகு கச்சிதம் என்றே சொல்ல வேண்டும். ஞானக்கூத்தன் தன உரையில் குறிப்பிட்டது போல் ஒரு நவீன இலக்கிய விழாவிற்கு ஐநூறு அறுநூறு பேர் வருடாவருடம் கூடுவதென்பது மிகப்பெரிய விஷயம். அதுவே ஒரு படைப்பாளிக்கு நாம் அளிக்கும் மிகப்பெரிய கவுரவம். இளையராஜாவோ, கமலோ, பாலவோ, பாரதிராஜாவோ, மணிரத்தினமோ கூட இல்லாமல் அங்கு இத்தனை பேர் கூடியிருந்தார்கள் என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியை அளித்தது. ஒருவேளை மக்கள் ஜெயமோகனை கூட சினிமா பிரபலம் என்று தான் கணக்கில் கொண்டார்களோ என்னவோ.! எல்லா உரைகளுமே செம்மையாக இருந்தன. குறிப்பாக பாவண்ணன் மற்றும் ஜெயமோகனின் உரைகள் ஞானக்கூத்தனின் கவிதையின் ஆழ அகலங்களை தொட்டு காண்பித்தன. ஒரு சிரிப்பு முற்றதிகாரத்தை எவ்வாறெல்லாம் தொந்திரவு செய்கிறது என்று சொன்னார். கவிஞர் இசை ஆற்றிய உரை சிறப்பாக இருந்தது. உன்னதங்கள் உடைவது பற்றியும், அங்கதம் வெறும் சிரிப்பு மூட்டுவதற்கல்ல , அதன் பின்னால் அவனை தொந்திரவுக்கு உள்ளாக்கும் ஏதோ ஒரு வலியுண்டு , அதை வாசகர்கள் நோக்குவதில்லை என அவர் சொன்னது பொருத்தமாகத்தான் இருந்தது. ஞானக்கூத்தன் மிக சரளமாக, அவர் கவிதைகளில் இருக்கும் எள்ளல் தொனியுடன் அசத்தலாக பேசினார். உரக்க சிரிக்கவில்லை என்றாலும், துவக்கத்தில் படர்ந்த மென்னகை இறுதிவரை முகத்தை விட்டு அகலவே இல்லை. ஆர்ப்பாட்டமில்லாத எளிய நேரடி உரை. அவருடன் போதிய அளவு உரையாட முடியவில்லை என்பது மட்டுமே எனது ஒரே மனக்குறை. ஜெயனுடனும் சரிவர உரையாட முடியவில்லை. புதிய பல நண்பர்கள் சூழ இருந்தார். மானசா இந்த எனது  உலகத்தில் அன்னியமாக உணர்ந்துவிடகூடாது என்பதால் நானுமே கூட கொஞ்சம் கூடுதல் அக்கறை எடுத்துக்கொண்டதால்  கூட இந்த நிறைவின்மை ஏற்பட்டிருக்கலாம்.  

மற்றொரு வருடம் ஓடிவிட்டது. நினைவுகளை சுமந்தலைந்து, அங்கிருந்து விடைபெற்று திரும்பினேன். விஷ்ணுபுரம் கூடுகைகளில் விடைபெற்று கிளம் புவது என்பதே ஒரு பெரு  நிகழ்வு. ஒவ்வொருவரிடமும் சென்று சொல்லிக்கொண்டு கிளம்ப வேண்டும். ஒரே நேரத்தில் துயரமாகவும் பெருமையாகவும் தோன்றும். பள்ளி சுற்றுலா முடியும் மனநிலை. எப்படியும் விரைவில் சந்திக்கத்தான் போகிறோம். ஆனால் அந்த பிரிவில் ஏதோ ஒரு துயரம். மனதிற்கு நெருக்கமான மனிதர்களின் இருப்பை நம் மனம் எப்போதும் விரும்பிக்கொண்டே இருக்கிறது. ஒருவகையில் கரைந்துபோன விடலை பருவத்தின் எஞ்சிய வாசம் அப்போது மட்டுமே புலப்படுகிறது போலும். வாழ்விறுதியில் இத்தகைய கணங்கள் மட்டுமே நினைவில் எஞ்சியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!  

No comments:

Post a Comment