Monday, September 29, 2014

'மெட்ராஸ்' - ஒரு பருந்து பார்வை

சில வரிகள் நீளும் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்களை தாண்டி நான் பொதுவாக விரிவான சினிமா விமர்சனங்கள் எதுவும் எழுதியதில்லை. காரணம் நான் முறையாக சினிமாவை அறிந்தவன் அல்ல. எனது உலக சினிமா/ மாற்று சினிமா/ வேற்று மொழி சினிமா பரிச்சயம் ஆரம்பநிலையில் தான் இருக்கிறது. ஆனால் தமிழில் வரும் முக்கியமான திரைப்படங்களை திரையரங்கிற்கு சென்று கண்டுவருவது வாடிக்கை. அவ்வகையில் இன்று பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் மெட்ராஸ் பார்த்துவிட்டு வந்தேன். மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று என உறுதியாக சொல்வேன். மிகப்பிராமதமான திரைப்படமாக வந்திருக்க வேண்டியது ஒரு படி கீழிறங்கி மிகநல்ல திரைப்படமாக வந்திருக்கிறது என்றே எண்ணுகிறேன். தெளிவாகவும் தீர்க்கமாகவும் தனது அரசியல் பார்வையை முன்வைத்திருக்கிறார் ரஞ்சித். இத்திரைப்படத்தை நான் புரிந்துகொண்ட விதத்தை சற்றே விரிவாக பதிவு செய்யும் முயற்சியே இது, இது விரிவான, முழுமையான விமர்சனம் அல்ல. 
வடசென்னை பின்புலத்தில் தலித் அரசியலின் செல்திசையை பற்றிய மிகமுக்கியமான வினாக்களை எழுப்புகிறது திரைப்படம்.. கல்வி மற்றும் பணியின் காரணமாக மேல்மட்டத்தில் இருக்கும் காளி பிற்பாதியில் தலித் எழுச்சியின் அடையாளமான கோபக்கார இளைஞனை பிரதிநிதப்படுத்துகிறான். அரசியல் வழியான போராட்டத்தை பொருத்தவரை மாரி, விஜி, அன்பு ஆகிய மூவரின் பாத்திரப்படைப்பு அபாரமான குறியீட்டு தன்மை கொண்டவை. சமூகநீதிக்காக நேர்மையுடன் போராடும் அன்பு அரசியலில் எதிர்தரப்புகளுடன் உரையாட தயாராகவே இருக்கிறான். மாரி ஒருகாலத்தில் அவனுடைய இளமையில் அன்பை போன்றவனாக இருந்திருக்க கூடும். ஆனால் அரசியல் அதிகார படியில் ஏற அவனுக்கு சில சமரசங்கள் அவசியமாகின்றன. மாரியின் சமரச போக்கு நேர்மையற்ற அதிகார விழைவிலிருந்து பிறக்கிறது. அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள தன்தரப்பை அழிக்கவும் எதிர்த்தரப்புடன் சமரசம் செய்துகொள்ளவும் தயாராக இருக்கிறான். விஜி அன்பிற்கு நேரெதிர் துருவம். அதிகார விழைவின்றி வேறேதும் அற்றவன். மாரியை காட்டிலும் ஆபத்தானவன். மாரி அன்பை தனக்கு எதிராக எண்ணுவதும் அவனை அழிப்பதும் பின்னர் மாரியின் இடத்தை விஜி கைப்பற்றுவதும் மிக முக்கியமான சீரழிவு அரசியலை படம்பிடித்து காட்டுகிறது. அன்பை போன்ற நேர்மையான அக்கறையான குரல்களை எல்லா இயக்கங்களும் அதன் அதிகாரமையத்தில் மக்களின் முகமாக தக்கவைத்துகொள்கிறது. ஒருபோதும் அவர்களை அது மேலேற விடுவதில்லை எனும் குரூர நிதர்சனம் மனதை வாட்டுகிறது. அன்பின் பாத்திர படைப்பின் வழியாக நேர்மையான சமரசகுரலைத்தான் ரஞ்சித் முன்வைக்கிறார். அது அழிக்கப்படும் போது நேர்மையற்ற சமரச அரசியலும் அமைப்பை உடைக்க முயலும் கோபக்கார இளைஞனும் மட்டுமே எஞ்சி இருக்கிறான். நேர்மையற்ற சமரச அரசியலை காட்டிலும் கோபக்கார இளைஞன் மேலானவன் எனும் சித்திரம் மிக முக்கியமானதாய் படுகிறது. ஏனெனில் நேர்மையற்ற சமரச தரப்பு ஒருபோதும் நேர்மையான புதிய ஆற்றலை அனுமதிப்பதில்லை. கோபகார இளைஞன் அதற்கான வாய்ப்பை திறந்தே வைத்திருக்கிறான். கிருஷ்ணப்பாவின் மகன் கண்ணனின் பாத்திரம் மிக முக்கியமானது. ஆதிக்கவர்க்கம் இயன்றவரை எதிர்க்கும். ஆனால் அவைகளை கடந்து ஏதோ ஒரு புள்ளியில் ஒடுக்கப்படும் மக்களில் இருந்து ஒரு குரல் மேலெழும்பும் போது அதை தனதாக்கிகொள்ளவே முற்படும். விஜியை சமமாக உட்காரவைக்ககூட தயங்கும் கண்ணன் அவன் கொலை செய்ய முன்வரும்போது தான் எதிரில் அமர அனுமதிக்கிறான். மாரியை குறித்து கடுமையான கசப்பில் இருக்கும் கண்ணன் அவனை அனுசரித்து தன் தரப்பாக்கி கொள்கிறான். அவனுடைய அத்தனை ஆண்டுகால வெறுப்பும் ஆதிக்க முகமூடிக்குள் ஒளிந்து கொள்கிறது.

சுவர் ஆதிக்கத்தின் குறியீடு. சென்றகால அடிமைத்தனத்தின் எச்சமாக, வடுவாக அதை நினைவுபடுத்தியவண்ணம் நிற்கிறது. இந்திய தேசியமே எனக்கு சுவராக எழுந்து நிற்பது போல் ஒரு கணம் தோன்றியது. காளி அன்பிடம் இந்த சுவற்றிற்கு ஏன் இத்தனை அதீத முக்கியத்துவம் அளிக்கிறாய் என கேட்டவண்ணம் இருக்கிறான். அதன் குறியீட்டு முக்கியத்துவத்தை பற்றி அன்பு திரும்ப திரும்ப சொல்கிறான். நியாயப்படி அது வெள்ளையாக அப்படியேதான் இருக்க வேண்டும் என்று கூட சொல்கிறான். இந்த காட்சியை கண்டவுடன் காந்தியை எண்ணி புன்முறுவல் கொண்டேன். வாழ்ந்த காலம் முழுக்க ஆலய நுழைவு போன்ற காந்தியின் குறியீட்டு போராட்டங்களை கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். ஆனால் அத்தகைய துருவநிலைகளை தாண்டி பரஸ்பர தாக்கத்தை உணர முடிகிறது. அதன் ஒரு சான்று தான் இத்திரைப்படத்தின் இக்காட்சி. டி.ஆர்.நாகராஜ் ஒரு கட்டுரையில் கர்நாடகாவில் இயங்கும் தீவிரமான அம்பேத்காரிய தலித் இயக்கம் விடுதலையை ஒட்டி சாதி இந்துக்களுக்கு நீரளிக்கும் நிகழ்வை நடத்தினர். பொது இடத்தில் தலித் தன் கையில் நீர்பானை ஏந்தி நிற்பார். சாதி இந்துக்கள் அவரிடம் நீர் அருந்துவார்கள். காந்தியை கடுமையாக எதிர்க்கும் இத்தகைய குழுக்களிடம் கூட காந்தியின் செய்தி சென்று சேர்ந்திருப்பது தனக்கு நிறைவளிப்பதாக நாகராஜ் குறிப்பிடுவார்.     .

பொதுவாக இசை, காட்சி கோணங்கள் ஆகியவை நன்றாக இருந்தன. நாத்திக கலையரசியின் பாத்திரமும் தன் குடும்பத்தை பற்றி அஞ்சும் மேரியின் பாத்திரமும் மிக இயல்பாக வந்திருக்கிறது. கணவனின் உடலை தூக்கி செல்வதற்கு முன்னர் ‘என் உதடு ரொம்ப பிடிக்கும்னு சொல்வியே மாமா இந்தா கடிச்சுக்க’ என கதறும் இடம் இப்போதுவரை மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. எல்லாவற்றையும் புரட்டிபோடும் ஜானியின் பாத்திரத்தை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அன்பும் காளியும் தற்கால தலித் அரசியல் குறித்து பேசும் வசனங்களும், திராவிட – தலித் அரசியல் முரண்களை பேசும் வசனங்களும், தமிழ் தேசியத்தை இடித்துரைக்கும் வசனங்களும் மிககூர்மையாக வெளிபடுகின்றன. அத்தனை ஆண்டுகால பகைமைகள் தேர்தலுக்கு முன் பொருளிழந்து போகின்றன. தலைவர்களின் வரையில் சமரசமும் சமாதனாமும் மிக எளிதாக ஆகிவிடுகிறது. ஆனால் கடைநிலையில், தொண்டர்கள் அளவில் அந்த முரண் நீடித்துக்கொண்டே தானிருக்கிறது. 

நடைமுறை தேவை சார்ந்து இத்தகைய சமரசங்கள் ஏதோ ஒருவகையில் பலனளிக்கும் என்றே எனக்கு தோன்றுகிறது. பங்கிடபட்டாலும் கூட ஜனநாயகத்தில் அதிகாரம் கைவருவது ஒரு முக்கியமான விஷயம் என்னால் அவைகளை சந்தர்ப்பவாதமாக ஒதுக்கிவிடமுடிவதில்லை. அவைகளையும் இன்றியமையாத அரசியல் செயல்பாடாகவே கருதுகிறேன். 

இறுதியில் கல்வியுடன் சேர்த்து சமூக வரலாறையும் போதிக்கவேண்டும் எனும் கருத்தோடு முடிகிறது திரைப்படம். ஏனெனில் கல்வியில் மேலேறி சென்றவுடன் தங்கள் வேர்களை துண்டித்து கொள்கிறார்கள் எனும் விமர்சனத்தையும் வைக்கிறது. இன்றைய தேதியில் அடிமட்டத்திலான களப்பணி பிற எல்லாவற்றையும் காட்டிலும் முக்கியமானது. மாற்றம் கல்வியிலும் சமூக பிரக்ஞையை ஊட்டுவதிலும் துவங்க வேண்டும் எனும் செய்தியை பதிக்கும் விதமாக காளியும் கலையரசியும் தங்கள் பகுதி மக்களுக்காக பள்ளி நடத்த துவங்குவதோடு நிறைவு பெறுகிறது. என்னால் இறுதியில் வரும் சண்டைகாட்சிகளில் ஒன்ற முடியவில்லை என்பதே படத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரே குறை. விஜி உனக்காகவும் தான் நாங்க பேசுறோம் என காளி சொல்வது, தன் தவறுக்கு நண்பன் தண்டிக்கபடுவது, சமூக வாழ்விற்கும் - குடும்ப வாழ்விற்கும் இடையிலான முரண் என இன்னமும் கூட விரிவாக எழுத நிறைய இருக்கிறது. .மிகமுக்கியமான திரைப்படத்தை துணிவுடன் மக்களுக்கு அளித்த ரஞ்சித் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.   

-சுகி 

No comments:

Post a Comment