Monday, October 28, 2013

மருத்துவத்திற்கு மருத்துவம் – டாக்டர்.பி.எம்.ஹெக்டே – தமிழில். டாக்டர்.ஜீவானந்தம்


(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை ஒன்று)  

இன்றைக்கு இந்திய மருத்துவம் பயின்றவர்களுக்கு உள்ள மிகப்பெரிய சிக்கல் என்பது அவர்களுக்கு இந்திய மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை, நவீன மருத்துவத்தின் மீதும் பூரண நம்பிக்கை இல்லை என்பதே. நவீன மருத்துவத்தின் எல்லையும் இந்திய மருத்துவத்தின் எல்லையும் வேறானவை. நவீன மருத்துவம் கைகழுவிய நோயாளிகளே பெரும்பாலும் இந்திய மருத்துவ முறைகளை நாடி வருகிறார்கள். நம்பிக்கை நீர்த்து தீராத பிணியிலிருந்து மீண்டெழ முடியும் என தங்கள் இறுதி நம்பிக்கையாக இந்திய மருத்துவத்தை நாடி வரும் ஒவ்வொரு நோயாளியை பார்க்கும் போதும் என் மனம் கலக்கமடையும். உண்மை நிலையை சொல்வது அவர்களின் நம்பிக்கையை அழிப்பதாகும், போலி வாக்குறுதிகளையும் அள்ளி வீசிவிட முடியாது. பெரும் மனப்போராட்டம் தான். நான் உண்மை நிலையை விளக்குவதையே எனது வழிமுறையாக கொண்டிருந்தேன், அண்மைய காலம் வரை. 


                                                  டாக்டர் பி.எம் ஹெக்டே 



“அரிதாகவே முற்றாக குணப்படுத்துகிறோம். பெரும்பாலும் சுகம் அளிக்கிறோம்.  எப்போதும் ஆறுதல் தருவோம்” – ஹிப்போக்ரேடஸ் 

நாமறியாத, நமக்கு புரியாத கணக்கற்ற சமன்பாடுகளால் ஆனது தான் வாழ்க்கை. மருத்துவன் எதையும் தீர்மானிப்பதில்லை. மரணத்துடன் கைகுலுக்கி மீண்டு எழுந்த அதிசயங்களை கண்டவர்களுக்கு புரியும். அதிகம் எஞ்சினால் அவன் வாசித்த நூல்களைக் கொண்டு வாழ்வை பற்றிய சில ஊகங்களை முன்வைக்க முடியும். அவன் ஊகங்கள் கண் முன்னால் பொய்த்து போவதை உணர்ந்தவன் ஒருபோதும் இறுமாந்திருக்க மாட்டான். அவனால் ஆறுதல் அளிக்க முடியும், உனது ஆறா காயங்களின் வலி எனதாக உணர்கிறேன் என்று அவன் தோள் தடவி தேற்ற முடியும், அந்த வலியிலிருந்து உன் மனவலிமையால் மீண்டு எழுவாய் என இன்முகத்துடன் நம்பிக்கை அளிக்க முடியும். இவைகள் போலி வாக்குறுதிகள் அல்ல. மனமறிந்து அவருக்காக வேண்டும் பிரார்த்தனைகள். ஆம் நான் இப்போது எவருடைய ஊன்றுகோல்களையும் பிடுங்கி வீசுவதில்லை.   


டாக்டர். பி.எம்.ஹெக்டே அவர்களின் கட்டுரைகளையும், உரைகளையும் தொகுத்து ‘மருத்துவத்திற்கு மருத்துவம் எனும் பெயரில் ஈரோடு டாக்டர். ஜீவானந்தம் அவர்களின் மொழியாக்கத்தில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது தமிழினி.  நேரில் சந்தித்ததில்லை எனினும் டாக்டர் ஜீவா மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. பலவகையிலும் அவரை ஆதர்சமாக ஏற்றுக்கொண்டவன். தேர்ந்த இலக்கிய வாசகர், காந்தியர், சுற்றுச்சூழல் ஆர்வலர். மருத்துவ துறையின் சீர்கேடுகளை களைய தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர்.  

இந்நூலை எழுதிய டாக்டர்.ஹெக்டே குறித்து ஆயுர்வேத உள்வட்டங்களில் பெருமதிப்புடன் பேசுவதுண்டு, ஆயுர்வேதம் மீது நம்பிக்கை வைக்கும் வெகுசில நவீன மருத்துவர்களில் ஒருவர். நவீன மருத்துவ கல்வி பயின்று, மிக உயர்ந்த பதவிகள் வகித்து ஒய்வு பெற்றவர். கல்வியாளர், சிந்தனையாளர், எழுத்தாளர், மருத்துவர் என அவர் ஒரு பன்முக ஆளுமை. மக்களுக்கான மருத்துவத்தை முன்னெடுப்பதில் சிரத்தை எடுத்து பல்வேறு மாற்று முயற்சிகளை சோதித்து பார்த்தவர். மருத்துவக் கல்வியிலும் பல சோதனை முயற்சிகளை புகுத்த முயன்றவர். ஜீவாவும் சரி ஹெக்டேவும் சரி, ஏறத்தாழ ஒரேவிதமான மனப்பாங்கு கொண்டவர்கள். இருவரின் குரல்களும் ஒற்றை சுருதியில் ஒன்றாக இயைந்து ஒலிக்கின்றன,

இசை கச்சேரிகளில் நமக்கு பரிச்சயமான ‘குறையொன்றும் இல்லையோ’ அல்லது ‘அலை பாயுதேவோ’ பாடினால், துள்ளிக்கொண்டு நாம் அனைவரும் உற்சாகமாகி பாடலுடன் ஒன்றிணைந்துகொள்வதை போல் இருக்கிறது என் மனநிலை. அரிதினும் அரிதாகவே வாசகன் எழுத்தாளனுடன் முழுவதுமாக உடன்படுகிறான். பூரணமாக ஏற்றுக்கொள்ளும் போது வாசகன் எழுத்தாளனின் கருத்துக்களையும் தரிசனத்தையும் தனதாக்கிக் கொள்கிறான். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒரு சொல்லின் மீது கூட எனக்கு எந்த மாற்றுகருத்தும் இல்லை. ஆகவே இது ஹெக்டே, ஜீவாவின் குரல்கள் மட்டுமல்ல, எனது குரலும் கூட.  

மருத்துவம், கல்வி, நீதி ஆகிய மூன்றையும் எளிய மக்கள் நம்புகிறார்கள். அதற்கான நிறுவனங்களையும், அதில் பங்கு வகிப்பவர்களையும் தங்களுக்கு வாழ்வளிக்க வந்த கடவுளாகவே எண்ணிய காலமொன்று உண்டு. விருப்பு வெறுப்பின்றி, தன்னலமின்றி தங்கள் கடமைகளை செய்து மக்கள் வாழ்வில் இருளகற்றிய ஆன்மாக்களை இன்றும் ஏதோ ஒருவகையில் தொழுதுக் கொண்டுதானிருக்கிறோம். மரண தருவாயில், அல்லது தீராத சீக்கில் இருந்து தன் குடும்பத்தில் எவரையோ காத்த ஒரு வைத்தியர்/மருத்துவர்  பற்றிய கதை அநேகமாக ஒவ்வொரு குடும்பத்திலும் உண்டு. இன்று மருத்துவமனைகளில் காசு பறித்த அல்லது உயிர் குடித்த கசப்பான நினைவுகள் மட்டுமே அதிகம் எஞ்சி இருப்பது ஏன்?

மக்களின் நம்பிக்கையை காசாக்கும் அற்புத கலையை இன்று நாம் வளர்த்தெடுத்து விட்டோம். அதன் வழியாகவே கேள்விக்கு அப்பாற்பட்டதாக தன்னை கருதிக்கொள்ளும் புதிய அதிகார மைய்யங்கள் உருவாகின்றன. இந்த நம்பிக்கைகள் கேள்விக்குட்படுத்தப்படும் போது உரசல்கள் எழுவது இயற்கையே. ஆசிரியர் – மாணவர் உறவு என்பது எப்படி கல்வி தொகை – மதிப்பெண் என்ற நிலையில் வெற்று வணிகமாக முடங்கி நிற்கிறதோ அதேப்போல் மருத்துவர் – நோயாளி உறவும் வணிகர் – நுகர்வோர் உறவாக சீர்கெட்டு நிற்கிறது. அதிகரித்து வரும் நுகர்வோர் வழக்குகள், மருத்துவர் – நோயாளி சச்சரவுகள் ஆகியவை மக்களிடையே பெருகி வரும் அவநம்பிக்கையின் சான்று. ஹெக்டே மிக முக்கியமான புரிதல்களை முன்வைக்கிறார்- முதலில் மருத்துவர்கள் தங்களை பற்றிக்கொண்டிருக்கும் மிகை பாவனைகளை விமர்சிக்கிறார், மருத்துவரும் மனிதர் தான், அவரும் தவறு செய்யக் கூடும், அந்த தவறை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் திண்மை வேண்டும் என்று வாதிடுகிறார். மருத்துவர்கள் நோயாளிகளை  வலியில் அவதியுறும் சக மனிதர்களாக அணுகாமல், ஒருவித ரட்சகர் மனோபாவத்துடன் நடந்துகொள்வது தான் இத்தகைய சிக்கல்களின் ஆணிவேர். மருத்துவர்கள் தங்கள் தவறுகளை மூடி மறைக்கும் போது மக்களின் நம்பிக்கையை இழக்கிறார்கள். நோயாளியுடனான எளிய உரையாடல்கள்  வழியாகவும், நோயாளியை மெய்புலன்களை கொண்டு தீர  பரிசோதிப்பதின் மூலமும் எளிதாக நோயறிய முடியும் எனும்போதும் கூட தங்களை தற்காத்துக்கொள்ளும் பெருமுனைப்பில் தேவையற்ற பரிசோதனைகளை எழுதி நோயாளியின் நிதி சுமையை பெருக்குகிறார்கள் என்கிறார் ஹெக்டே.    

டாக்டர். ஹெக்டே இன்றைய மருத்துவத்தை பீடித்துள்ள சீக்குகளை பற்றி பேசுகிறார். இன்று புழக்கத்தில் இருக்கும் நவீன மருத்துவத்திற்கு தான் முதலில் அவசர சிகிச்சை தேவைபடுகிறது என்கிறார். நவீன மருத்துவர் அல்லாத ஒருவர் இத்தகைய விமர்சனங்களை முன்வைத்தால், அவை எளிதில் புறந்தள்ளிவிடப் படக்கூடும். ஹெக்டேயின் குரல் ஒருவகையில் ‘அமைப்புக்குள்ளிருந்து ஒலிக்கும் கலகக் குரல்’  அவ்வகையில் மிக முக்கியமானது. சில சங்கடமான கேள்விகளை எழுப்புகிறார். நவீன மருத்துவத்தின் மீதான விமர்சனங்கள், மற்றும் அதன் சீர்கேடுகளை களையும் வழிமுறைகள் என இந்நூலின் உள்ளடக்கத்தை இரண்டாக வகுக்கலாம். 

தொழில்நுட்பம் உண்மையில் மனிதாபிமானத்திற்கு மாற்றாகுமா? பரிவுடன் நோயாளியின் படுக்கைக்கு அருகே நின்று அவரை பரிசோதித்து அவருடைய குறைகளை அவரிடமே கேட்டறிவதன் மூலமே 80% நோய்களை கண்டறிய முடியும், 100 % குணமாக்க முடியும் என்பதை சில ஆய்வுகளை கொண்டு நிறுவுகிறார்.  ஒட்டுமொத்த மருத்துவமே நோயாளி மைய நோக்கிலிருந்து முற்றிலுமாக புரண்டு நோய் மைய நோக்கிலேயே செயலாற்றுகிறது. இன்று நோயாளிகள் வெறும் புள்ளி விபரங்கள், எண்ணிக்கைகள் மட்டுமே. மருத்துவர் – நோயாளி உறவின் பூரண உச்சத்தில் நிகழ்வதே குணமாதல் என்கிறார் ஹெக்டே. திறன் மிகுந்த மூளையும் கருணை நிறைந்த இதயமும் கொண்டவனே மகத்தான மருத்துவனாக இருக்க முடியும். மருத்துவர்கள் தங்கள் 'மக்கள் தொடர்பு' திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார். 

ஹெக்டே மருந்து நிறுவனங்கள் மீதும், நோயறியும் கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைக்கிறார். உச்சபட்ச கொலஸ்ட்ரால் அளவை 260 லிருந்து 200 ஆக குறைத்ததன் மூலம் கோடிகணக்கான புதிய மருந்து அடிமைகளை உருவாக்க  முடிந்திருக்கிறது. சர்க்கரை மாத்திரைகளும், ரத்த அழுத்த மாத்திரைகளும் ஒரு நோயாளி வாழ்நாள் முழுவதும் உட்கொள்ள வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறான். உண்மையில் அதனால் ஏதேனும் மாற்றம் ஏற்படுகிறதா? இறப்பு விகிதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?  என்றால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மாற்றம் ஏதுமில்லை என சில ஆய்வு தகவல்களை கொண்டு நிறுவுகிறார். இஸ்ரேலில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட காலகட்டத்தில் மரண விகிதம் குறைந்திருந்ததாக சொல்லும் ஆய்வு தகவல் ஒன்றை சூட்டும் ஹெக்டேவின் கூற்று, உயிர்காக்கும் மருத்துவமே உயிர் பறிக்கும் சாதனமாக மாறிப்போனதை பற்றி பல கேள்விகளை எழுப்புகின்றன.

நோயறியும் நிறுவனங்களை பொருத்தவரை, மண்ணில் பிறந்த அத்தனை மனிதர்களும் நோயாளிகளே. ஆரோக்கியம் என்பது அதுவரை நோய் கண்டறியப்படாத தற்காலிக நிலை மட்டுமே என்று ஆழமாக நம்புகின்றன. இருதயத்தில் எங்கோ ஒரு மூலையில் உள்ள ரத்தக் குழாயை கண்டுபிடித்து அதற்குள் உள்ள சிறு அடைப்பை கவனப் படுத்தி அதற்கு வாழ்நாள் சிகிச்சை தொடங்க வேண்டும். நோயறியும் நிலையங்களே நோய் உற்பத்தி நிலையங்களாகவும் மாறி விட்டன. மனிதர்களின் உயிர் பயம் தான் இவர்களின் தொழிலுக்கு மூலதனம். முழு உடல் பரிசோதனைகள் எல்லாம் ஒருவகையான மோசடியே என்கிறார். மனிதர்களை நோயாளியாக்கி பார்க்கும் குரூர விளையாட்டு தான் இது என்கிறார். புற்று நோய், இருதய நோய் (கொலஸ்ட்ரால். ரத்த அழுத்தம் இத்யாதியை உள்ளடக்கியது), சர்க்கரை ஆகியவையே இன்று மக்களை பெரிதும் அச்சுறுத்தும் நோய்கள். அமேரிக்கா போன்ற வல்லரசு தேசத்திலேயே மருத்துவத்தாலும் மருந்துகளாலும் நடக்கும் மரணங்கள் நான்காவது இடத்தை பிடித்திருக்கின்றன என்பதை கவனிக்க வேண்டும் என்கிறார் ஹெக்டே. 

மருத்துவ ஆய்வு முறைகளின் மீதும் கடுமையான விமர்சனங்களை வைக்கிறார் ஹெக்டே. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ அறிவியல் ஏடுகள் இன்று உலகெங்கிலும் இருந்து வெளியாகின்றன. இவைகளில் வெகு சிலவே உண்மையான ஆய்வரிக்கைகளை வெளியிடுகின்றன. மருந்து நிறுவனங்களும் நோயறியும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இரு பெரும் மாஃபியாக்கள் போல் செயலாற்றி பெரும்பாலான ஆய்வுகளின் முடிவுகளை ஒரு ஐந்து அல்லது பத்து சதவிகிதம் அவர்களுக்கு சாதகமாக மாற்றி வெளியிடுவதன் மூலம் பல நிரந்தர மருந்து அடிமைகளை பெற முடியும். பெரும்பாலும் மருந்துகள் ஐந்தாண்டுகள் பல்வேறு கட்ட சோதனை எல்லைகளை கடந்து சந்தையை சென்றடைகின்றன. நடைமுறையில் நோயாளி ஐந்தாண்டு அல்ல, தன் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அந்த மருந்துகளை உட்கொள்ள போகிறான், அதுமட்டுமல்ல வேறு பல மருந்துகளுடனும் சேர்த்து தான் இதையும் உட்கொள்ள போகிறான். இந்த சூழலில், ஒரு மருந்தை நீண்ட நாட்கள் உட்கொள்ளும்போது ஏற்படும் பின்விளைவுகளை எப்படி ஐந்தாண்டு ஆய்வில் பூரணமாக வெளிக்கொணர முடியும்? மற்ற மருந்துகளுடன் இணைந்து உட்கொள்ளும் போது (drug - drug interaction, drug – food interaction) ஒட்டுமொத்த விளைவு பற்றிய போதுமான ஆய்வுகள் இன்று இல்லை என்கிறார். மருத்துவ ஆய்வு எனும் பெயரில் இந்தியா மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் மருந்து நிறுவனங்கள் மருத்துவர்களை தங்கள் கையில் போட்டுக்கொண்டு மிகப்பெரிய மோசடிகளை அரங்கேற்றிவருகின்றன.   

ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெரும் மாணவ மாணவிகள் பெரும் கனவுகளோடு நான் மருத்துவனாகி எளிய மக்களுக்கு சேவை செய்வேன் என்று சொல்வது ஒருவித சடங்காக மாறிவிட்டது. இன்னும் மருத்துவ சேவை 80% மக்களை சென்றடையவில்லை என்கிறது உலக சுகாதார மையம். லட்சிய கனவுகளுடன் மருத்துவ கல்வி பயிலவரும் மாணவர்கள், கல்வி கற்ற பின்னர் என்ன ஆகிறார்கள்? நிர்பந்தங்கள் அவர்களுடைய நியாய உணர்வை சுரண்டி விடுகிறது. நோயாளிகளின் துயரங்களை பற்றிய நுண்ணுணர்ச்சிகளை மழுங்கடித்து, பெரு நிறுவனங்களின் கைப்பாவைகளாக அவர்களை ஆக்கிவிடுகின்றன. ஹெக்டே கல்விமுறையிலேயே இதற்கான காரணங்களை தேடுகிறார். மாணவர்கள் அதி உயர் தொழில்நுட்பத்தைத்தான் மருத்துவம் என்று பயில்கிறார்கள். கல்வித்திட்டம் மருத்துவ வணிகர்களுக்கு சாதகமாக மருத்துவர்களை உருவாக்கும் வகையில் தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிராமங்களுக்கு செல்லும் மாணவன் அவனறிந்த கருவிகள் ஏதுமற்ற சூழலில் தனித்து விடப்படுகிறான். நம்பிக்கை இழந்து தலைதெறிக்க ஓடிவருகிறான். கிராமத்திலிருந்து மருத்துவம் பயிலச்\செல்லும் மாணவர்களின் கதையும் இதுவேதான். எவரும் மீண்டும் கிராமங்களுக்கு வருவதில்லை. இந்த விஷச்சுழலில் இருந்து மக்களுக்கான மருத்துவத்தை மீட்டு எடுக்க வேண்டும் என்கிறார் ஹெக்டே. 

இந்திய மக்களுக்கான மருத்துவம் எப்படியிருக்க வேண்டும்? இங்குள்ள பாரம்பரிய மருத்துவமுறைகளை நவீன மருத்துவர்கள் புரந்தள்ளுவதை கண்டிக்கிறார். நவீன மருத்துவம் அவசர கால உயிர்காக்கும் சிகிச்சைக்கு நிச்சயம் பலனளிக்கிறது, எனினும் நீண்டகால நோய்களுக்கு இந்திய மருத்துவ முறைகள் நல்ல பலனளிக்கும். சின்ன சின்ன நோய்களை எல்லாம் நாம் ஆயுர்வேத, சித்த மருத்துவ முறைகளின் மூலம் தீர்வு கண்டுவிட முடியும். நவீன மருத்துவம் பிற மருத்துவ முறைகளில் உள்ள சாதகமான அம்சங்களை தனதாக்கிக் கொள்ள வேண்டும். ஒருங்கிணைந்த மருத்துவ முறை தான் ஏழை எளிய மக்களை சென்றடைய சரியான வழியாக இருக்க முடியும் என்பதே அவர் கருத்து. இந்த கல்வி சூழலே கிராமங்களில் கம்பவுன்டர்கள் மருத்துவர்களாக அவதாரமெடுக்க காரணமாகிறது. மாற்றாக கிராமத்தில் கல்வி கற்ற பட்டதாரி இளைஞர்களுக்கு அடிப்படை பயிற்சிகளை அளித்து மருத்துவத்தை பரவலாக்க முடியும் என்று கருதுகிறார்.  

கலை பற்றிய தோரோவின் மேற்கோளை மீண்டும் மீண்டும் கையாள்கிறார் ஹெக்டே "மனிதனுக்கு மகிழ்வூட்டுவதே  கலை" எனும் வரையறையை அடிப்படையாக கொண்டால் மருத்துவமும் ஒரு கலை தான் என்பது ஹெக்டேவின் வாதம். 'என்னை மாற்றிய மனிதர்' என்று மருத்துவத்தை பற்றி கொண்ட பார்வையை மாற்றிய தேவண்ணா எனும் இளைஞர் பற்றிய கட்டுரை மிக முக்கியமானது. பயிற்சி டாக்டராக நான் பணி புரிந்த போது எனக்கும் சம்மட்டியடி பட்ட  அனுபவம் ஒன்று உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு தெய்வீக மருத்துவன் இருக்கிறான். உடலின் சிக்கல்களை  தானாகவே சரி செய்துகொள்ளும் திறன் அதற்கு இருக்கிறது. மருத்துவன் உடல் தன் இயல்பு நிலையை அடைவதற்கு உதவுபவனாக இருக்க வேண்டுமே தவிர, அதை தடுத்து நிறுத்துபவனாக இருக்கக் கூடாது. உடலின் தேவைக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் திறன் அதற்கு உண்டு.  சிறப்பு மருத்துவர்களின் பெருக்கம் பற்றி கவலை கொள்கிறார் ஹெக்டே. காலப்போக்கில் வலது காதிற்கு ஒரு மருத்துவர் இடது காதிற்கு ஒரு மருத்துவ நிபுணர் வந்துவிடுவார்கள் போலிருக்கிறது என்று கிண்டல் செய்கிறார். நவீன மருத்துவம் மற்றும் அறிவியலின் குறைத்தல் வாதத்தை கண்டிக்கிறார். மருத்துவம் மனிதனை முழுமை நோக்குடன் அணுக வேண்டும் என்பதே அவருடைய கருத்தாக இருக்கிறது. 

நூலின் குறை என்று ஒன்றை சுட்டிக்காட்ட வேண்டும் என்றால், பல இடங்களில் வாசித்தவற்றையே மீண்டும் மீண்டும் வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. வெவ்வேறு இடங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல் என்பது காரணமாக இருக்கக்கூடும். இந்நூலை வாசித்து முடித்தவுடன், என் கவலையெல்லாம் புதிதாக புற்றீசல் போல் முளைத்து வரும் ஊட்டச்சத்து மற்றும்  நல்வாழ்வு தொழில் துறை  (nutrition and wellness industry) பற்றி திரும்பியது. நவீன மருத்துவத்திற்கு மாற்று என்று சொல்லிக்கொண்டு இவர்கள் மீண்டும் அதையே தான் செய்கிறார்கள். ஊட்டசத்து மிகுந்த ஆரோக்கியமான உணவுக்கு மாற்றாக இவர்கள் பழசாறுகளையும், வைட்டமின் மாத்திரைகளையும், மூலிகை சாறுகளையும் அநியாய விலைக்கு விற்றுக்கொண்டு திரிகிறார்கள். மக்களும் நவீன மருத்துவத்திற்கு மாற்று என்று நம்பி மற்றோர் அடிமைதனத்திற்குள் நுழைகிறார்கள். நோனிக்களும் ஆலோ வேராக்களும் இன்று புதிய பேயோட்டிகளாக உருவெடுத்து நிற்கின்றன. ஆயுர்வேத மருந்து நிறுவனங்கள் அலோபதி மருந்து நிறுவனங்கள் பயணப்பட்ட அதே ராஜப்பாட்டையில் தான் செல்கின்றன. 

ஒவ்வொரு மருத்துவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல். மருத்துவர் என்றில்லை, பொதுவாக அனைவருமே மருத்துவம் பற்றிக்கொண்டுள்ள பார்வைகளை மறுசீராய்வு புரிய வேண்டிய காலகட்டத்தில் நின்றுகொண்டிருக்கிறோம். இந்நூல் நமக்குள் எழுப்பும் கேள்விகளை பின்தொடர்வது சிறந்த தொடக்கமாக அமையும். 

"இறைவா, தேவைப்படும் நோயாளிகளுக்குத் தேவைக்கு தகுந்த மருத்துவம் தரவும். தேவைப்படாதவர்களுக்குத் தேவையற்ற மருத்துவக் குறுக்கீடு செய்யாமல் காக்கவுமான அறிவைத் தா" - மருத்துவர் ஹசின் சன்னின் பிராத்தனை    
  
மருத்துவத்திற்கு மருத்துவம் 
டாக்டர் பி.எம்.ஹெக்டே 
தமிழில்- டாக்டர்.ஜீவானந்தம் 
தமிழினி வெளியீடு 
மருத்துவம், அபுனைவு


No comments:

Post a Comment