Tuesday, February 5, 2013

அந்த நூறு பேர்.....


 (ஃபிப்ரவரி மூன்று அன்று கும்பகோணம் வி.எஸ். ராமனுஜம் அரங்கில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தர் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் நினைவு கருந்தரங்கில்  மாணவர்களுக்கு ஆற்றிய உரை) 


அசத்தொமா சத் கமைய
தமசோமா ஜோதிர் கமைய
ம்ருத்யோர்மா அம்ருதம் கமைய

                   இருள் விலகி எங்கும் ஒளி பெருகட்டும். 

சகோதர சகோதரிகளே, இப்படி தொடங்குவதே சுவாமி விவேகானந்தரின் நினைவுகளுக்கு நாம் செலுத்தும் மரியாதையாக இருக்க முடியும். சுவாமி விவேகானந்தரின் நூற்றி ஐம்பதாம் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் பகுதியாக நடைபெறும் இந்த விழாவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர் ஜெயமோகன் ஒரு விவாதத்தின் போது கூறினார், உலக மக்களை நோக்கி ஓங்கி ஒலித்த எத்தனையோ இந்திய குரல்களில் இருவரின் குரல்கள் மட்டுமே உலக மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டது, இன்றும் மதிக்கப்படுகிறது. அவ்விரண்டு குரல்களும் சத்தியத்தை தாங்கி சென்றன. உலகெங்கும் அமைதியையும் அன்பையும் நிலைநாட்ட விரும்பின. இன்றும் அவ்விரு குரல்களின் முக்கியத்துவம் காலப்போக்கில் கூடிக்கொண்டிருக்கிறதே அன்றி குறைந்தபாடில்லை.  ஒருவர் மகாத்மா காந்தி, மற்றொருவர் சுவாமி விவேகானந்தர். 


சகோதர சகோதரிகளே எனும் இந்த சொற்கள் ஏன் அத்தனை மனிதர்களையும் அன்று நெகிழ செய்தது? நண்பர்களே இவை வெறும் சொற்கள், வெறும் சொற்களுக்கு வலிமை ஏதுமில்லை. அந்த சொல்லை உதிர்க்கும் ஆளுமையின் வீச்சு, அந்த சொல்லை தாங்கி செல்லும் சத்தியத்தின் வலிமையையும் தான் அத்தனை உள்ளங்களையும் கொய்தது. இங்கு அமர்ந்திருக்கும் பலர் விவேகானந்தரை வாசித்திருக்க மாட்டீர்கள், ஆனால் கையை கட்டி நிமிர்ந்து வான் நோக்கி நிற்கும் விவேகானந்தரின் அந்த பிம்பம் உங்கள் அனைவருக்கும் பரிச்சயம் அல்லவா? ஒரு மனிதனின் புகைப்படம் இன்றும் நாம் நோக்குகையில் நமக்கு நிமிர்வை ஏற்படுத்துகிறது அல்லவா? ஆன்ம ஒளியால் சுடர்விட்டுக்கொண்டிருந்த ஒரு ஆளுமையின் இருப்பு, சொற்களை காட்டிலும், அவர் உதிர்க்கும் கருத்துக்களை காட்டிலும் சக்தி வாய்ந்தது. ஆன்ம பலம் என்பது அது தான். அது சுயம் பிரகாசமானது. ஒலி குவியல்களுக்கு அப்பால் நிலவும் பெரு மௌனத்தின் குரல் அது. அது நம்மை ஈர்க்கும், சத்தியம் சொற்களை நம்பி இல்லை, அன்புக்கும் தொடுகைக்கும் ஏங்கி நிற்கும் ஒரு சமூகத்தின் முன் நின்று அவர் உதிர்த்த அந்த சொற்கள்  அவர்களின் இதயத்தை தொட்டது.    

நூறாண்டுகளுக்கு முன்னர் சுவாமிஜி பேசியதும் எழுதியதும் இன்றும் பரவலாக வாசிக்க படுகிறது. இன்று அவைகளுக்கான முக்கியத்துவம் என்ன?. சுவாமிஜி வாழ்வின் நிரந்தரமான, எக்காலத்திற்கும் உரிய, ஒட்டுமொத்த மானுட குலத்திற்கு உரிய சிக்கல்களை நோக்கி, பிரச்சனைகளை நோக்கி பேசுகிறார். காலமும் இயற்கையும் உந்தி தள்ளி விளையாடும் பந்து தானா மனிதனின் வாழ்க்கை? வாழ்வு இன்பமயமானதா? துன்பமயமானதா?     
வேதகாலத்து ரிஷி முதல் இன்று வரை மனிதன் இதற்கான விடையை தேடி அலைகிறான். வெவ்வேறு வகைகளில் முட்டி மோதி அலை பாய்கிறான். ஓய்ந்து மரணம் எனும் நிதர்சனத்தை எதிர்கொண்டு மறைகிறான். காலம் அனைத்தையும் உண்டு செரிக்கிறது. மனிதன் என்றேனும் ஒருநாள் அதன் பாரம் அவனை அழுத்தி தள்ளுவதை உணர்வான், அப்போது வாழ்க்கையை பற்றி அதுவரை அவன் கொண்டிருந்த அனைத்து நம்பிகைகளும் சிதைந்து, இவையெல்லாம் ஏன் எனக்கு நடைபெறுகிறது என கேட்பான். அந்த நொடியில், பிரபஞ்சமே தனக்கு எதிராக செயல்படுகிறது என்று தோன்றும் கணத்தில், நாம் செல்லும் திசையே உண்மையில் நம் வாழ்வின் தொடக்கம் என கூறலாம். அப்படி ஒரு தருணத்தில் ஒருவேளை நமக்கு விவேகானந்தர் அறிமுகம் ஆனால் நாம் உண்மையில் அதை சாத்திய படுத்திய வீழ்ச்சிக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். 

சுவாமிஜி நம்மை நோக்கி சொல்கிறார்- இன்பமும் துன்பமும் மாறி மாறி ஓயாது அடிக்கும் பேரலைகள், அதில் உங்களை இழந்து விடாதீர்கள், நிமிர்ந்து நில்லுங்கள், துணிந்து செல்லுங்கள், நீங்கள் ‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகள்’, சிதிலமடையும் உடலில்லை, குழப்பியடிக்கும் எண்ணங்களும் இல்லை, மரணம் துளைக்காத ஆன்மா நீங்கள். தொடக்கமும் முடிவும் இல்லாத பரம்பொருளின் வார்ப்பு நீங்கள். ஆற்றலை உணருங்கள், ஆற்றலே வாழ்வு, அதுவே நம் பலம், பலவீனம் மரணம். செயலற்று முடங்குவதை காட்டிலும் உணர்ச்சி கொந்தளிப்புடன் இருப்பது மேல். இக்கணமே புறப்படுங்கள். 

நண்பர்களே, இந்த வாழ்க்கை சுமை அல்ல, நாம் மானுடர்களாக பிறந்து வாழ்வது பாவக்கடன் தீர்ப்பதற்காக அல்ல. நாம் ‘அழியாத பேரின்பத்தின் குழந்தைகள், நமக்கு வாழ்வெனும் வரம் வாய்த்திருக்கிறது. துணிந்து புறப்படுங்கள். எத்தனை மகத்தான செய்தி, இருண்ட மன குகைக்குள் சோர்ந்து சோம்பி கிடக்கும் நம்மை ஒளியை நோக்கி அழைத்து செல்லும் எழுச்சி மிகுந்த வாசகங்கள். விவேகாநந்தர் இளைஞர்களுக்கு விட்டுசெல்லும் மிக முக்கியமான செய்தி என்று ஒன்றை சொல்லவேண்டும் என்றால் இதைத்தான் சொல்ல வேண்டும், துவளாமல் முயற்சி செய்யுங்கள்.      
   
நூறு இளைஞர்களை தாருங்கள் இந்த தேசத்தை நான் மாற்றி காட்டுகிறேன் என்று சுவாமிஜி சொன்னார், அது உங்கள் அனைவருக்குமே தெரிந்திருக்கும். அவர் கேட்ட நூறு இளைஞர்களை இந்தியாவால் இத்தனை ஆண்டுகளாக கொடுக்க முடியவில்லையா என்ன? ஆற்றல் மிகுந்த, துணிவு கொண்ட இளைஞர் படை இந்த நூறாண்டில் உருவாகவில்லையா? அப்படி இருந்திருந்தால் சுவாமிஜி கனவு கண்ட சமூகத்தை நம்மால் கட்டமைக்க முடிந்திருக்குமே? கொஞ்சம் யோசித்து பார்த்தால், சுவாமிஜி கேட்ட அந்த இளைஞர்கள் நிச்சயம் இருக்கின்றார்கள், கடந்த காலங்களிலும் வாழ்ந்திருக்கிறார்கள், நூறல்ல அத்தகைய பல்லாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள், இன்றும் நம்மிடையே இருக்கிறார்கள், ஆனால் பிரச்சனை அதுவல்ல நம்மை வழிநடத்த சுவாமி  விவேகானந்தர் இல்லை, அவரை ஒத்த மகத்தான ஆன்மாக்கள் இன்று இந்தியாவில் மிக அரிதாகி வரும் இனம். இனி நாம் விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களை உருவாக்குவது முக்கியமல்ல, நூறு விவேகானந்தர்களை உருவாக்க வேண்டும். அதற்காக உங்களை இல்லறம் துறந்து துறவு பூன வேண்டும் என சொல்லவில்லை, இதை அப்படி அர்த்தப்படுத்திகொள்வது அறிவீனம்.

நாம் வெற்றியை எப்படி புரிந்துகொண்டுள்ளோம்? எதை நாம் வெற்றி என கொண்டாடுகிறோம்? மேலாண்மை வகுப்புகளில் மீண்டும் மீண்டும் வாழ்வியல் வெற்றியை மட்டுமே வெற்றியாக கருதும் மனபான்மைக்கு நாம் பழக்கப்படுத்தப்பட்டுள்ளோம். நான் மீண்டும் அன்றாட வாழ்விற்கு தேவையான அதே அம்சங்களை பற்றி பேசப்போவதில்லை. இந்த தேசம் ஆன்மீகத்தால் கட்டி எழுப்பப்பட்டது. அதுவே இந்த தேசத்தின் ஆன்மா என்கிறார். அது வீழும் போது இந்த தேசம் வீழ்ந்துவிடும் என்கிறார். வாழ்வியல் ஆன்மிகம் என்று நான் சொல்லுவேன். நமது உலகியல் வாழ்க்கைக்கும், முற்றிலும் ஆன்மீக வாழ்க்கைக்கும் இடையிலான ஒரு பாலம். வாழ்ந்து தளர்ந்து அதன் பின்னர் தான் ஆன்மீகத்தை நோக்கி நம்மை திருப்பிக்கொள்ள வேண்டும் என்றில்லை. உண்மையில் அப்போது நாம் பாதுகாப்பின்மையால் சூழப் பட்டிருப்போம். இன்று நமக்கு ஆன்மிகம் சார்ந்து அதிகம் தென்படுவது பிழையான முன்னுதாரனங்களே அவைகளை கொண்டு நாம் ஆன்மீகத்தை இழிவாக மதிப்பிட வேண்டியதில்லை. வாழ்வியல் ஆன்மிகம் என்பது நம் அன்றாட வாழ்கையை ஆன்மிகம் மூலம் மேலும் செறிவாக்குவது என கூறலாம். கலங்காத மனதுடன், சமநிலையுடன், அச்ச்சமின்மையுடன், அளவற்ற அன்புடன் நாம் அன்றாட வாழ்வை நெருக்கடிகள் ஏதுமின்றி இனிமையாக கடந்து செல்ல முடியும்  என்று எண்ணுகிறேன். இன்னும் சொல்வதானால் நம்மிடம் இருக்கும் உடைமைகளை கொண்டு நாம் வெற்றியாளரா என்பது தீர்மானிக்கப்படுகிறது. மிக நுட்பமாக நோக்கினால் இதன் பின்புள்ள அரசியல் நமக்கு புலப்படக்கூடும், ஒருவகை நுகர்வு பின்னல் நம்மை சுற்றி பின்னப்படுவதை நம்மால் உணரமுடியும். எண்பதுகள் வரையிலும் கூட இந்தியாவில் உடமையாக்கம் மகிழ்ச்சியுடன் நேரடியாக தொடர்புகொண்டதாக இல்லை. மேற்கின் சமூக அமைப்பிற்கும் கிழக்கின் சமூக அமைப்பிற்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடாக இதை கொள்ளலாம். மகிழ்ச்சியை கொண்டே ஒரு சமூகத்தின் வளர்ச்சியை கணக்கிட வேண்டும் என காந்தி சொன்னார். பொருளியல் வல்லுநர் ஷுமாக்கர் அவருடைய பௌத்த பொருளியல் கட்டுரையில் விரிவாக இந்த புள்ளியை வளர்த்து எடுக்கிறார். துறவு மனப்பான்மை ஓங்கி இருந்த அன்றைய இந்தியாவை பற்றி சுவாமி விவேகானந்தர் விவரிக்கிறார். பொருள் குவிப்பு இல்லாதவரையும், உடமைகளை துறந்த தூய மனம் கொண்ட துறவியையும் இந்த சமூகம் வெற்றியாளராகவே காண்கிறது என்கிறார். அதைவிட மிக முக்கியமான விஷயத்தை சொல்கிறார், இந்த இருமையை மறுதலிக்கிறார் பொருளீட்டவும் முடிந்து ஆன்ம வேட்கையையும் பின்தொடர்ந்து வாழ முயல வேண்டும் என்கிறார். நண்பர்களே நாம் கவனிக்க வேண்டியது இந்த புள்ளியை தான், நாம் உலக வாழ்க்கையை விட்டு ஒதுங்கி வாழ வேண்டும் என்றில்லை. இந்த சமன்பாடு நமக்கு கைகூடினால் போதும். இந்த புரிதலே விவேகானந்தர் கனவு கண்ட லட்சிய இளைஞருக்கு இருக்க வேண்டிய மிக முக்கியமான புரிதல் என எண்ணுகிறேன்.

விவேகானந்தரை ஒரு சிந்தனையாளராகவும் நாம் அணுகலாம். சமநிலை – சீர்குலைவு பற்றி அவர் சொல்லும் கருத்துக்கள் எனக்கு மிக முக்கியமானதாக பட்டது. இரண்டு பிரி முறுக்கு கயிற்றை போல், ஒரு பக்கம் திரிகள் பிரிகின்றன, மறுபக்கம் அவை இறுகிக்கொண்டே இருக்கின்றன.  முற்றிலுமான சமநிலை என்பது அழிவில் மட்டுமே சாத்தியம் என்கிறார் சுவாமிஜி. பிரபஞ்ச இயக்கத்தின் பன்முக தன்மையை, நன்மை தீமை விதிகளுக்கு அப்பாற்பட்டு புரிந்துகொள்ள முடியும். நன்மையையும் தீமையும் பிரபஞ்ச இயக்கத்திற்கு அத்தியாவசியமானது எனும் புரிதல் மிக முக்கியமானது, மிகவும் அடிப்படையானதும் கூட. ஏனெனில், இந்த விளையாட்டை புரிந்து கொள்வதன் மூலமே நாம் வெறுப்பை விட்டு வெளிவர முடியும். எதிர்தரப்புகள் எதிரிகள் அல்ல, அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல, மாறாக ஒரு விளையாட்டின் இன்றியமையாத எதிர் தரப்பு, அல்லது ஒரு செயலின் எதிர் செயல் என்று புரிந்துகொள்ள முடியும். இதையே சக்கரத்தின் ஆரங்கள் அனைத்தும் விளிம்பில் இருந்து ஒற்றை மையத்தை நோக்கி நீள்கின்றன. அதை போல் உயர்கள் அனைத்துமே அதன் போக்கில் வெவ்வேறு ஆரங்கள் வழியாக ஊர்ந்தும் ஓடியும் உருண்டும் விடுதலை எனும் மையத்தை நோக்கியே நகர்கின்றன என்கிறார். வாழ்க்கையின் பிரம்மாண்டத்தை, பிரபஞ்ச பேரியக்கத்தின் அற்புதத்தை, அதில் நாம் ஒரு துளி எனும் உணர்வு நமக்கு ஏற்பட வேண்டும். இதையே நான் விவேகானந்தரின் லட்சிய இளைஞர்களின் மிக முக்கியமான தகுதி என்பேன்.  
அக்காலத்தில் பல சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவில் தலையெடுத்தன. சில சட்டகங்கள் உருவாக்கப்பட்டு அதற்கு ஏற்ப இந்து மதத்தை வெட்டி வடிவம் அளிக்கும் முயற்சிகள் நடந்தேறின. வெகு ஜன மக்களின் வழிபாடுகளை புறக்கணித்து உயர் தத்துவ தளத்தை மட்டுமே தூய்மையான இந்து மதம் என கொண்டாடும் ஒரு போக்கு இருந்த காலகட்டத்தில், விவேகானந்தர் கடுமையாகவே விமர்சிக்கிறார் “அறிஞர்கள் இழைக்கும் கொடுமை, பாமரர் செய்யும் அநீதியைவிடப் பயங்கரமானது” என்கிறார். நான் இதை மிக முக்கியமான விஷயமாக எடுத்துகொள்வேன். நாம் கல்வி கற்றவர்கள், கல்லூரியில் பயின்றவர்கள். ஒன்றை நினைவுகொள்ள வேண்டும் நண்பர்களே, நாம் கற்ற, கற்கும் இந்த கல்வியானது நம் வாழ்விற்கான நிதியாதாரத்தை உறுதி செய்வதற்கான பயிற்சி. இந்த கல்வியை கற்றதால் மட்டுமே நாம் நம்மைவிட குறைவாக ஏட்டுக்கல்வி கற்ற நம் அப்பாக்களையும் தாத்தாக்களையும் காட்டிலும் அறிவாளிகளாகி விடமாட்டோம். நான் பள்ளியில் பயின்ற காலகட்டத்தில் எனக்கு பிடிக்காத பாடம் வரலாறு தான். இன்றை பற்றிய கவலைகளும் நாளைய பற்றிய கனவுகளும் நிறைந்த வாழ்வில் வரலாறிற்கு பங்கில்லை என்று எண்ணினேன். ஆனால் நான் பயின்ற ஆயுர்வேதம் எனக்கு வேறு ஒன்றை சொன்னது. நூற்றாண்டுகளாக இந்த மண்ணில் பலவற்றை மனிதன் சோதித்து பார்த்துக்கொண்டே இருக்கிறான். ஆட்சி முறையில் இருந்து , ஆன்மிகம் வரை இங்கு பலவற்றை முட்டி முயன்று சோதித்து கொண்டிருக்கிறான். சிலவற்றை கண்டடைந்தும் இருக்கிறான். இங்கு ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபை நெருங்கி அறிவதன் மூலமே நாம் கனவு காணும் எதிர்காலத்தை நோக்கி முன்நகர முடியும். நம் மரபை, நம் வரலாறை சரிவர அறியாமல் நம் மன்னுக்குகந்த எந்த விஷயத்தையும் நம்மால் சாதிக்க முடியாது. சுவாமி நம் மரபில் நின்றுகொண்டு எதிர்காலத்தை நோக்கி பேசுகிறார். நம் வரலாறை நாம் அறிந்தாக வேண்டும், இந்த மண்ணின் மரபே சிறந்தது என்று சொல்ல மாட்டேன், ஆனால் நாம் வாழும் மண்ணின் மரபை நாம் அறிந்தாக வேண்டும். அதன் முன்னவர்களை மதிக்க வேண்டும். அவர்கள் முட்டாள்கள் அல்ல, அவர்கள் வேறுவகையில் அறிவுடையவர்கள். அனுபவம் மிகுந்தவர்கள். வாழ்க்கையின் வேறு பக்கங்களை அறிந்தவர்கள். அவர்களை உதாசீனபடுத்துவது தவறான அணுகுமுறை. கேள்வியின்றி மரபு வழங்கும் அனைத்தையும் ஏற்றுகொள்ளுங்கள் என நான் சொல்லவில்லை, உங்கள் பகுத்தறிவை கொண்டு ஆராயுங்கள். அது முழுவதும் குப்பை என்று புறம் தள்ளாதீர்கள் அதிலுள்ள மாணிக்கங்கள் உங்களுக்கு தென்படாமலே போகலாம். 

நான் சில நண்பர்களுடைய துணையுடன் காந்திக்காக ஒரு தளம் நடத்தி வருகிறேன். இடைப்பட்ட ஒரு காலத்தில் தளத்திற்கு வருகை புரிபவர்களின் எண்ணிக்கை குறைய தொடங்கியது. அதற்கான காரணம் என எதையும் பெரிதாக எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. காந்தி ஒரு ஊடக பிரபலம் இல்லை இன்று. தினமும் வாசிக்க வேண்டிய தேவை இருக்காது. ஒவ்வொருநாளும் மூன்று அல்லது நான்கு மணிநேரம் செலவழித்து ஒரு பதிவை கொண்டு வரவேண்டி இருந்தது. சற்று மனம் தளர்ந்தேன், யாருக்காக இந்த தளத்தை நடத்துகிறோம்? எனும் கேள்வி எழுந்தது. ஊட்டியில் நடந்த ஒரு முகாமின் போது,  நண்பர் அரவிந்தனும் அப்போது வந்திருந்தார், ஜெயமோகனுடன் இது குறித்த என்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்தேன். ‘உங்கள் காலத்திற்கு பிறகு நீங்கள் எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என எண்ணுகிறீர்கள்?’ என்று அவரிடம் கேட்டேன். ‘அதை பற்றி எனக்கு கவலை இல்லை. எனக்கு என்னுடைய எழுத்து நிறைவை தருகிறது. இது எனக்கொரு ஆன்மீக பயணம் ஆகவே எழுதுகிறேன். அதற்கு மேல் நான் என்னை நிலைநிறுத்திக்கொள்ளவேண்டும் என்றெல்லாம் கவலை படவில்லை என்றார்’. 1890 களில் தமிழகத்தில் சில நூறு பேர் பெண் கல்வியை பற்றி பேசியும் எழுதியும் வந்தார்கள், அன்று அது வெறும் அபத்தமாக கேலி செய்யப்பட்டிருக்க கூடும், அதை எழுதியவர்கள் கூட ஒரு நூறாண்டில் இந்தியா இத்தனை தூரம் மாற்றம் கண்டிருக்கும் என எண்ணியிருக்க மாட்டார்கள். எதை செய்வதால் நாம் நிறைவை அடைகிறோமோ, அதுவே நாம் இங்கு ஆற்ற வேண்டிய பணி, தொய்வடையாமல், சோர்வடையாமல் அதை நாம் செய்தாக வேண்டும். இன்று தொடர்ந்து தொய்வின்றி தளம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கீதை சொல்வதைப்போல் “பலனை எதிர்பாராத கர்மம்”. சுவாமிஜியும் மிகுந்த நம்பிக்கையுடன் சொல்கிறார், நான் தொடங்கிய பணி முடிவுறுவதை பார்க்க நான் இருப்பேனோ மாட்டேனோ ஆனால் அதை நிச்சயம் வேறு சிலர் செய்யக்கூடும். வரலாறு தனிமனிதர்களின் பெருமுயற்சிகளால் நிறைந்தது, பெருந்திரள் மக்கள் அவர்களை அவர்கள் காலத்திற்கு பின்னர் தான் பின்தொடர்வார்கள். பணியை வேறு எதற்காகவும் செய்ய வேண்டாம், அதன் இன்பத்திற்காக அது தரும் நிறைவிற்காக மட்டும் செய்யுங்கள். வாழ்க்கை எத்தனை பெரிய வரம் என உணர்வோம்.          


 தனக்கான பாதையை தானே உருவாக்குபவன் சற்று முரட்டு தனமாகத்தான் இருப்பான் என்கிறார் சுவாமிஜி. அவனிடம் மென்மையை எதிர்நோக்காதே அதற்கான நேரம் அவனிடம் இல்லை என்கிறார். நண்பர்களே நமக்கு நேரமில்லை, நாம் செல்லும் இடமெல்லாம் அமைதி குடிகொள்ள வேண்டும், எங்கும் அன்பு நிறைய வேண்டும். கனவுகள் விதைக்கப்படட்டும், அவை நம் சந்ததியினாரால் அறுவடை செய்யப்படக்கூடும். வெறுப்பையும் தோல்வியையும் விதைக்காமல் அன்பையும் நிறைவையும் விதைப்போம் அதுவே இந்த உலகத்திற்கு வேண்டிய அமைதியை தரும்.
 இறுதியாக...

மகத்தான மாற்றங்கள் நம்மிலிருந்து தொடங்க வேண்டும் – be the change you wish to see. 

நன்றி வணக்கம்....
-சுகி 


No comments:

Post a Comment