Thursday, March 10, 2022

கூண்டு- சக்திவேல் கடிதம்

 அன்புள்ள சுனீல் அண்ணா,


 அம்புப்படுக்கை தொகுப்பிலிருந்து கூண்டு சிறுகதையை வாசித்தேன். கூண்டு ஏறத்தாழ நம்முடைய மரபான உருவக கதையே ஆகும். ஆனால் அதை நவீன சிறுகதையாக்குவது எது ? அதன் உள்ளடக்கத்தில் அமைந்த அமைப்பை பகடிக்குள்ளாக்கும் விமர்சனத் தன்மை தான் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்ததில் நவீன சிறுகதையில் எக்காலத்தும் பொருந்தும் உருவக வடிவில் அமைந்ததே கூண்டு. கூடுதலாக அவன் ஏன் வெளியே உள்ளான் என்ற கேள்வியை வாசகனில் ஏற்படுத்தி செல்லும் அம்சம்.

கூண்டை வாசித்து முடித்தவுடன், ‘பசுவை தன் கைக்கயிற்றால் பிணைத்து வைத்திருப்பவன், தானும் உடன் பிணைக்கப்பட்டிருக்கிறான்.’ என்ற ஜென் வரியே நினைவுக்கு வந்தது. ஒவ்வொருவரையும் போலவே அவனும் தன்னை வஞ்சித்தவர்கள் கூண்டில் அடைப்படுவார்கள் என நினைத்து மகிழ்கிறான். ஆனால் கூண்டால் ஒவ்வொரு கூட்டமும் பிடிக்கப்படும் போது பிறரில் உருவாகும் எந்த உணர்ச்சிகளும் அவனில் எழவில்லை. ஆம் இவை எல்லாம் இப்படி நடக்கின்றன என்று பார்க்கும் விலக்கல் தன்மையினால் போலும் வெளியே நிற்கிறான். பிறர் அனைவரும் கண்ணீரோடு கம்பிகளில் முட்டி அழுது என்னை ஏற்றுகொள் என கெஞ்சுகையில், ‘நானும் செய்திருக்கிறேன் நீ என்னை தேடி வா,’ என்கிறான். நாம் தேடிச்செல்லாதவை நம்மை நாடி வருதில்லையா ? எல்லோரும் உள்ளே இருக்கும் தங்கள் உறவுகளை நினைத்து ஏங்குகையில் அவனுக்கு மட்டும் கொல்லனின் குழந்தை புன்னகை தெரிவதன் மர்மம் என்ன ? ஆக்கப்பட்டதற்கு அப்பால் ஆக்கியவனை காண துடிக்கும் கண்கள் தான் அவனை விலக்குகின்றன போலும்.


இப்படி கேள்விகள் மனதில் எழும்போதே அந்த கூண்டு உருவாவதிலுள்ள ஒரு அபத்தம் கண்ணில் படுகிறது. அதற்காக கொல்லன் கேட்ட பொருள்கள் என்று சொல்லப்படுபவை எல்லாமே கற்பனையில் உதித்தவை. ஒவ்வொரு புதுச்சிறையை பற்றிய கற்பனைக்களும் அவை எழுந்து வருகையில் இருக்கும் யாதார்த்திற்குமான முரண்பாடு. சிறியவையே வளர்ந்து சிறையென்றாகும் விந்தை. அந்த உண்மையை காண மறுக்கும் அபத்தம். இப்படித்தானே மனித குலத்தை ஆட்கொண்ட ஒவ்வொரு புது கண்டுபிடிப்பும் எழுந்து வந்துள்ளது.


 எப்போதும் நம் அரசாங்க அமைப்புகளின் ஒருபகுதியாக உள்ள அராஜக கூட்டத்தினரின் இயல்பும் தொன்றுதொட்டு வருவது. இப்போது எழுதி கொண்டிருக்கையில் ஒவ்வொரு கூண்டும் முந்தைய கூண்டுடன் இணையும் சித்திரம் ஒன்றில்லாமல் இன்னொன்று இயங்க முடியாதன் இயல்பை குறிப்பதாக விரிகிறது. ஒன்று இன்னொன்றுடன் இணைந்து உருவாகி கொண்டே இருக்கும் முழுமையை பார்ப்பதன் விளைவே வெளியில் மொட்டை பாறையில் காயும் அவனது வேதனை போலும்.


 


அன்புடன்


சக்திவேல்

Saturday, February 19, 2022

நீலகண்டம்: அமுதென்றும் நஞ்சென்றுமான பிரபஞ்சங்களின் சந்திப்பு- விக்னேஷ் ஹரிஹரன்


(நீலகண்டம் குறித்து விக்னேஷ் எழுதிய கட்டுரை) 

இந்திய சிந்தனை மரபில் உள்ள அடிப்படை தொன்மங்களில் ஒன்று நாம் வாழும் உலகம் பல்வேறு உலகங்களுக்கு மத்தியில் இயங்கும் மற்றொரு உலகம் மட்டுமே எனும் தொன்மம். நம் தொன்மங்களில் பூமிக்கு மேல் 7 மேலுலகங்களும் நமக்கு கீழ் 7 கீழுலகங்களுமாக மொத்தம் 14 உலகங்களாக அவை அடுக்கப்பட்டிருக்கின்றன. அவை முழுவதுமாக பிரிக்கப்பட்ட தனி உலகங்களாக இன்றி ஒன்றுடனொன்று கலந்தே இருக்கின்றன. ஒரு உலகத்தின் நிகழ்வுகள் மற்ற உலகங்களில் எதிர்வினைகளையும் உண்டாக்குகின்றன. ஒரு விதத்தில் நவீன இயற்பியலின் மல்டிவர்ஸ் தியரியின் ஒரு பாகமான பிரேன் காஸ்மாலஜிக்கு அணுக்கமான ஒரு தொன்மமாகவே நாம் இதை புரிந்துகொள்ளலாம். புராணக் கதைகளில் தொடங்கி நவீன இயற்பியல் வரையிலான இச்சிந்தனைகள் அனைத்தின் பின்புலத்திலும் அமைவது நாம் காணும் பிரபஞ்சத்தின் சித்திரம் முழுமையானது அல்ல என்ற புரிதலே. 

நாம் காணும் இவ்வுலகம் நம் தற்போதைய மூளையின் நரம்பியல் அமைப்பாலும், நம்மைச் சுற்றி அமைந்த புறக்காரணிகளாலும் கட்டமைக்கப்படுவதே. அதைக்கொண்டு இப்பிரபஞ்சத்தின் அத்தனை செயல்பாடுகளையும் திட்டவட்டமாக வரையறுத்துவிட முடியாது. நம் அறிதலின் எல்லைக்கு உட்பட்டவற்றை அவற்றின் எல்லைகளுக்கு உட்பட்ட அளவிலேயே நாம் அறிகிறோம். பிரபஞ்சமோ நம் அறிதல்களுக்கும் அப்பால் விரிந்து கிடக்கிறது. நம் கண்ணுக்கு புலப்படாத பல்வேறு செயல்பாடுகளின் விளைவே நாம் அறியும் உலகம்.  அச்செயல்பாடுகளால் அமையும் காரண-காரிய உறவுகளை புரிந்துகொள்ள முடியாமலேயே நாம் தத்தளிக்கிறோம். அத்தகைய காலாதீதமான தத்தளிப்புகளை நவீன வாழ்வின் மிக முக்கியமான சிக்கல்களான குழந்தையின்மை, ஆட்டிசம் ஆகியவற்றின் பின்புலத்தில் அணுகுகிறது எழுத்தாளர் சுனில் கிருஷ்ணனின் நீலகண்டம்.

நம் வாழ்வில் துயரங்களையும், அவலங்களையும் சந்திக்கும்தோறும் நம் மனதில் எழும் அடிப்படையான கேள்வி "இது ஏன் எனக்கு நடக்கிறது?" (Why Me?) என்பதுதான். இந்த கேள்வியின் வழியே நம் அனுபவத்திற்கான அர்த்தத்தையே நாம் கண்டடைய முற்படுகிறோம். உலகின் அத்தனை மதங்களும் அதற்கான விடையை வெவ்வேறு சொற்களில் சொல்லிவிட முயல்கின்றன. பெரும்பாலும் அவ்விடைகள் ஒரு அளவில் தர்க்கத்துக்கு அப்பாற்பட்டவையாகவே இருக்கின்றன. இது மதங்களின் குறைபாடன்றி நம் உலகத்தின் காரண-காரிய உறவுகள் தர்க்கத்தின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதற்கான சான்றுகளே. அதன் சிடுக்குகளை முழுவதுமாக பிரித்து அறிந்துவிட முடியாததனாலேயே நவீன பகுத்தறிவுவாதம் இவ்வுலகத்தை அர்த்தமற்ற, காரண-காரிய உறவென்று ஒன்றுமில்லாத தற்செயல்களின் பெருந்தொகுப்பாக புரிந்துகொள்ள முற்பட்டது. ஆனால் மனித மனமோ இந்த வாதத்தை ஏற்க மறுக்கிறது. துயரங்களில் மனம் அதற்கான காரணத்தையே தேடுகிறது. அப்படி ஒன்றை கண்டுபிடித்துவிட்டால் அந்த துயரை வெல்ல முடியும், அதிலிருந்து மீண்டுவிட முடியும் என்று நம்புகிறது. அதனாலேயே அத்தகைய காரணங்கள் தர்க்கத்துக்கு அப்பால் இருந்தாலும் மனம் அதை ஏற்கிறது. நாவலில் செந்திலும், ரம்யாவும் இந்த நிலையில்தான் இருக்கிறார்கள். குடும்பத்தை எதிர்த்து செய்துகொண்ட காதல் திருமணத்தில் வென்று காட்டுவதற்கான போராட்டம், குழந்தையின்மை, அதன் காரணமாக ஏற்படும் சமூக அழுத்தம், உளவியல் சிக்கல்கள், உறவுச்சிக்கல்கள் என்று தொடங்கி வரூவின் ஆட்டிசம், அதனால் ஏற்படும் சிக்கல்கள், போராட்டங்கள் என்று தொடர்ந்து அலைக்கழிக்கும் வாழ்வின் சூழல்களில் இருந்து, மேலெழுவதற்கான ஒரு பிடிப்பையே இருவரும் தேடுகிறார்கள். செந்தில் "இது ஏன் எனக்கு நடக்கிறது?" என்ற கேள்வியையும் ரம்யா "இதிலிருந்து எப்படி மீள்வது?" என்ற கேள்வியையுமே அவர்களுக்கான பிடிப்பாக கொள்கிறார்கள்.

செந்தில் முதல் கேள்வியை சுமந்துகொண்டு அலைகிறான். அவன் வழியே நாவல் தர்க்கத்திலிருந்து தர்க்கத்திற்கு அப்பால் உள்ள காரண-காரிய உறவை நோக்கி எழுகிறது. வரூ ஏன் தன் வாழ்வில் வந்தாள்? என்ற கேள்வியே அவனை அலைக்கழிக்கிறது. வரூவுக்கு பதிலாக தன்னால் வேறு ஒரு குழந்தையை தன் வாழ்வுக்குள் கொண்டுவந்திருக்க முடியுமா? என்று தவிக்கிறான். தன் சிக்கலுக்கான காரணத்தை ஜோசியம், ஆன்மீகம், குடும்ப வரலாறு என்று அனைத்திலும் தேடி அலைகிறான். தன் குடும்ப வரலாற்றில் தான் அறிந்திராத நாகம்மையின் இருண்ட பக்கங்களை கண்டடைகிறான். தன் பூர்வீகத்தையே தன் சிக்கல்களுக்கான காரணமாக காண்கிறான். தன் துயர்களின் ஊற்றுக்கண்ணாக இருந்தாலும் அதை சரிசெய்ய முயல்கிறான். கரையான்களால் முழுவதுமாக உள்ளிருந்து அரித்துப்போன தன் பூர்வீக வீட்டின் வெளித்தோற்றத்தை புனரமைக்க முற்படும் செந்திலின் சித்திரமே அவனது ஒட்டுமொத்த சித்திரமாக நாவலில் நிலைபெறுகிறது.

செந்திலுக்கு நேர் எதிராக ரம்யாவோ தன்னை இச்சிக்கல்களை எப்படி எதிர்கொள்வது? என்பதை நோக்கி செலுத்திக்கொள்கிறாள். ரம்யாவின் வழியே நாம் குழந்தையின்மையின், ஆட்டிசத்தின் உலகியல் சிக்கல்களை காண்கிறோம். காதல் திருமணத்தில் வென்று காட்டுவதற்கான போராட்டம், குழந்தையின்மையால் ஏற்படும் சிக்கல்கள், வரூவின் மீதான பொறுப்புணர்வு, பயம், கசப்பு, சாகரின் மீதான அன்பு, ஏக்கம் என்று ரம்யா தன்னை உலகியலில் முற்றிலுமாக கரைத்துக்கொள்கிறாள். ரம்யாவின் குடும்பத்தின் பின்புலத்தில் அவர்களின் துயருக்கான தர்க்கத்தை மீறிய சில காரணங்களை கண்டடைவதற்கான சாத்தியங்கள் நாவலில் இருப்பினும் ரம்யா அவற்றை புறந்தள்ளி தன் சிக்கல்களை முழுக்க உலகியலிலேயே எதிர்கொள்ள முற்படுகிறாள். தன் பூர்வீக வீட்டை புனரமைக்க செந்தில் பணம் திரட்டும்பொழுது அந்த பணம் வரூவின் கல்விக்கும் சிகிச்சைக்கும் பயன்படும் என்று வாதிடுகிறாள். தன் குடும்பத்தை எதிர்த்து வாழவேண்டும் என்ற வைராக்கியத்திற்கும் தன் தாயின் அரவணைப்பிற்கான ஏக்கத்திற்கும் இடையே ஊசலாடுகிறாள். தன் தாயின் முன் வரூவை மறைத்து வைக்க முயலும் ரம்யாவின் சித்திரம் நுட்பமானது. நாவலில் செந்திலின் பார்வையில் நாம் காணும் ரம்யாவின் சித்தரிப்பு செந்திலின் மனப்போக்கை பிரதிபலிக்கிறது. அதிலிருந்து ரம்யாவின் சித்திரத்தை பிரித்து அறிகையிலேயே அக்கதாப்பாத்திரம் அடையும் வலியும் வெறுமையும் நமக்கு புலப்படுகின்றன.

இவ்விருவருக்கும் அப்பால் நாவலின் உயிராக அமர்ந்திருப்பவள் வரூ. அவளது பார்வையில் முன்வைக்கப்படும் அத்தியாயங்களே நாவலின் எல்லைகளை மறுவரையரை செய்கின்றன. நாம் வாழும் உலகிற்குள் பின்னியிருக்கும் பிற உலகங்களை நமக்கு காட்டுபவள் வரூ. அவளே காரணமாகவும், காரியமாகவும் ஆனவள். அவளது பார்வையில் உலகம் வேறொன்றாக மாறிவிடுகிறது. அவளை சாபமாகவும், பாரமாகவும், தன் இயலாமையின் வெளிப்பாடாகவும், வணிகப்பொருளாகவும் பார்க்கும் உலகத்திற்கு மத்தியில் அவள் சோட்டா பீமுடனும், நீமோவுடனும், பேக் மேனுடனும் விளையாடிக்கொண்டிருக்கிறாள். நம் அறிதல்கள், கட்டமைப்புகள், நம்பிக்கைகள் அனைத்தையும் நிராகரிக்கிறாள். அவள் மீது நிகழ்த்தப்படும் அத்தனை வன்முறைகளுக்கும் அதுவே காரணமாகிறது. அவளது உலகத்திற்கும் நமது உலகத்திற்கும் இடையில் இருக்கும் தொடர்பு இடைவெளியே (communication gap) நாவலின் அத்தனை துயர்களுக்கும் காரணமாகிறது. நாவலின் முடிவில் வரூ தன் உலகத்திற்கும் அப்பால் இருக்கும் நாகம்மையை சந்திக்கையில் நாவல் தன் உச்சத்தை அடைகிறது.

ஆலகால விஷமும் அமுதும் ஒரு நாணயத்தின் இரு முகங்களே. எந்த நொடியிலும் அமுது திரிந்து விஷமாகவும். விஷம் திரிந்து அமுதாகவும் மாறக்கூடும். அவ்விருமைகளின் முடிவற்ற விளையாட்டை உணர்ந்து அதை தங்கள் கழுத்தில் நிலைநிறுத்தக்கூடிய நீலகண்டர்களாலேயே இவ்வுலகம் நிலைநிறுத்தப்படுகிறது. அவ்வகையில் நீலகண்டமும் செய்ய முற்படுவது அதையே. 14 உலகங்களாக பிரிக்கப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு உயிரும் பிறவிகள்தோறும் இந்த உலகங்களின் வழியே தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருக்கின்றன. ஏறியும் இறங்கியும் ஆடும் இந்த பரமபத விளையாட்டில் ஒரு உயிர் மோட்சத்தை அடைய தேவையான அடிப்படைகளில் ஒன்றாக முன்வைக்கப்படுபவர்கள் குழந்தைகள். அத்தனை உலகங்களையும் பூமியோடு இணைக்கும் கண்ணிகள் அவர்கள். நாம் வாழும் உலகிற்குள் பிணைந்திருக்கும் பிற உலகங்களை காணும் ஆற்றல் படைத்தவர்கள். உயிர்களுக்கு அமரத்துவத்தை அளிக்கும் அமுது அவர்களே. அத்தகைய குழந்தைகளையும், குழந்தைமையையும் பற்றிய காலாதீதமான அறச்சிக்கல்களை நவீன வாழ்வின் குழந்தையின்மை, ஆட்டிசத்தின் பின்புலத்தில் கிரேக்க நாயகி மெடிசா முதல் சுடலைமாடன் வரை, குழந்தைகள் கார்ட்டூன் முதல் தொன்மக்கதைகள் வரை அனைத்து தளங்களிலும் நீலகண்டம் கையாள்கிறது. நம் உலகம் அதனுள் பிணைந்திருக்கும் பிற உலகங்களை சந்திக்கும் தருணங்கள் மகத்தானவை. அமுதும் நஞ்சும் ஒன்றை ஒன்று சந்திக்கும் புள்ளிகள் அவை. அத்தகைய சந்திப்புகளில் உலகத்தின் தர்க்கமும், அத்தர்க்கத்திற்கு உட்பட்ட காரண-காரிய உறவும் அர்த்தமற்றுப் போகின்றன. அத்தகைய உலகங்களின் சந்திப்புகளில் நாம் நம் அறிதலின் எல்லைகளை கண்டடைந்து கடக்கும் தருணங்களின் தொகுப்பே நீலகண்டம்.      

Monday, February 14, 2022

எனது நூல்கள்


இந்த புத்தக கண்காட்சிக்கு எனது பங்களிப்பில் ஐந்து நூல்கள் உருவாகியுள்ளன. 

முதற்கால் - ஆயுர்வேத மருத்துவர் இல . மகாதேவனுடனான நேர்காணல் - காலச்சுவடு வெளியீடு 

https://www.commonfolks.in/books/d/mutharkaal

காந்தியைச் சுமப்பவர்கள்- காந்தியை கதை மாந்தராக கொண்ட சிறுகதைகளின் தொகை நூல்,. தொகுப்பாசிரியர்- சுனில் கிருஷ்ணன். நீண்ட முன்னுரையும் எழுதியிருக்கிறேன். பரிசல் வெளியீடு. 

https://www.commonfolks.in/books/d/gandhiyai-sumappavargal

ஆயிரம் காந்திக்கு- காந்திய ஆளுமைகள் பற்றிய கட்டுரைகள். வெளியீடு, நன்னூல் பதிப்பகம். 

https://www.commonfolks.in/books/d/aayiram-gandhigal

நாளைய காந்தி- காந்தி கட்டுரைகள், யாவரும் வெளியீடு 

https://www.commonfolks.in/books/d/naalaiya-gandhi

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு குழந்தை பிறந்திருக்கிறது - தொகுப்பாசிரியர் நரோபா- தேர்ந்தெடுத்த படைப்புகள்- யாவரும் வெளியீடு 

https://www.commonfolks.in/books/d/ezhuththaalar-pazhuvettaiyarukku-kuzhandhai-pirandhirukkirathu 


காந்தியைச் சுமப்பவர்கள் - எழுத்தாளர் பாவண்ணன் உரை

 காந்தியை கதை மாந்தராக கொண்டு எழுதப்பட்ட சிறுகதைகள் அடங்கிய தொகை நூல் 'காந்தியைச் சுமப்பவர்கள்' பரிசல் வெளியீடாக வெளிவந்துள்ளது. காந்தி கல்வி நிலையம் - புதன் வாசகர் வட்டம் ஏற்பாடு செய்த இணைய வழி நூல் அறிமுக கூட்டத்தில் எழுத்தாளர் பாவண்ணன் நூலை அறிமுகம் செய்து உரையாற்றியுள்ளார் நன்றி  பாவண்ணன் அவர்களுக்கு. 

இணையத்தில் வாங்க 



நாளைய காந்தி ஒரு வாசிப்பு


'யாவரும்' பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'நாளைய காந்தி' குறித்தான தனது வாசிப்பை நண்பர் முத்துக்குமார் அவரது இணைய பக்கத்தில் எழுதியுள்ளார். நன்றி முத்து.  

https://www.commonfolks.in/books/d/naalaiya-gandhi 




 மலை உச்சியில் நின்று கொண்டு பார்த்த நகரத்தின் அசைவின்மையிலிருந்தெழுந்த அழகு, அதனை நெருங்கும் போது தொலைந்து நம்மை ஒரு விலக்கம் கொள்ளச் செய்கிறது. காந்தியை நெருங்கி அறிய முயலும் போது நமக்கு நடப்பதும் இதுவாகத் தான் இருக்குமோ என்று எண்ண வைக்கிறது எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் அவர்களுடைய ‘நாளைய காந்தி’ என்ற கட்டுரைத் தொகுப்பு. காந்திய ஆர்வலரும், காந்தி பற்றி தொடர்ந்து எழுதி வருபவருமான இவர், இக்கட்டுரைத் தொகுப்பின் முன்னுரையில் குறிப்பிடுவதும் இந்த விலக்கத்தைத்தானா என்று புரியவில்லை. காந்தியைப் பற்றி தொடர்ந்து எழுதி வரும் இவர், ‘காந்தியை வெறும் பண்டமாக மாற்றி விற்கிறேனா நான்?’ என்று கேட்டிருப்பது சற்று திடுக்கிடவும் வைக்கிறது. இனிமேல் நான் தொடர்ந்து காந்தியைப் பற்றி எழுதுவேனா? என்று தெரியவில்லை என்றும் குறிப்பிடுகிறார். இப்படி தொடர்ந்து அவரைப் பற்றி எழுதுவது மிகப் பெரிய சுமையாக இருக்கிறது என்று கூறுவது விலக்கத்தின் உச்சம். இப்புத்தகத்திலுள்ள கட்டுரைகளை விட இந்த முன்னுரையின் தாக்கம் அதிகம்.


The Holy Trinity


இந்த மாற்றத்தின் விதைகளை இக்கட்டுரைத் தொகுப்பில் கல்மலர் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகளில் கண்டு கொள்ள முடிகிறது. காந்தியை சமகாலத்தில் வைத்து எப்படிப் புரிந்து கொள்வது என்பதை எழுத்தாளர் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ மிக நுட்பமாகவும், விரிவாகவும் வெளிப்படுத்தியிருக்கும். பள்ளிப் புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களில் இருந்து நான் வார்ப்பெடுத்திருந்த காந்தியின் பிமபத்தை இப்புத்தகம் உடைத்து மறுவார்ப்பெடுத்தது. காந்தி என்ற பிம்ப மாயையிலிருந்து விலகி, அவரை ஒரு ஆளுமையாக அவருடைய குறை நிறைகளோடு நெருங்க முடிந்தது ‘இன்றைய காந்தி’ வாசிப்பிற்கு பின்புதான். ஆனால் ‘நாளைய காந்தி’ யின் வழியாக இன்னமும் நெருங்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம் காந்தி எழுதிய மூன்று நூல்களான இந்திய சுயராஜ்யம், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் மற்றும் சத்தியசோதனை பற்றிய கட்டுரைகள் தான்.


சத்தியசோதனை என்பது, நேரம் கிடைத்தால் வாசிப்பதற்கு ஏதுவாக புத்தக அலமாரியில் இருக்க வேண்டிய புத்தகம் மட்டுமே என்ற பொது மனநிலையில் தான் தானும் இருந்ததாக சுனீல் இங்கு ஒப்புக் கொள்கிறார். கல்மலர் என்ற தலைப்பில் உள்ள மூன்று கட்டுரைகளும் காந்தி எழுதிய இம்மூன்று நூல்களையும் முழுதும் படித்த பிறகு சாகித்ய அகாடமியில் அவர் ஆற்றிய உரைகளின் கட்டுரை வடிவம்.


இந்திய சுயராஜ்யத்தை காந்தியுடைய அரசியலின் தத்துவ வடிவமென்றால், அதன் செயல்வடிவம் தான் தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகம் என்று உருவகிக்கிறது இக்கட்டுரைகள். சுயராஜ்யம் ஒரு அறிவுஜீவியினுடையது என்றால், சத்யாகிரகம் ஒரு போர்ப்படைத் தளபதியினுடையது. சத்யசோதனை ஒரு ஆன்ம சாதகன் தன்னுடைய பயணத்தை ஆசானாக நின்று தன் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது. அபாரமான உருவகமிது.


ரயில்வே துறையை பரிசகிக்கும் காந்தி, தன் லட்சியங்களுக்காக அவற்றை உபயோகிக்காமல் இருக்கவில்லை. லட்சியத்தை அடைவதற்கான நடைமுறையில் ஏற்படும் சவால்கள் தன்னை பலகீனமாக்கினாலும், வெற்று கௌரவத்திற்காக அப்பலகீனங்களை மறைக்காத காந்தியின் எதார்த்தம் எந்த லட்சியவாதியையும் சீண்டக்கூடியது.


அகிம்சை என்பது கோழைகளின் அச்சத்தை மறைக்கும் ஆயுதமல்ல. வலியவர்களின் (உடல் சதையின் வலிமையல்ல) கையில் இருக்க வேண்டிய திசைகாட்டி.


கடமையுணர்வு உள்ளவர்களே உரிமையைக் கோரும் போராட்டத்தை சத்யாகிரக வழியில் நடத்தமுடியும்.


பழக்கப்படாத திரள் போராட்டத்திற்கு உகந்ததல்ல.


போராட்டங்கள் எதிரிகளை வெல்வதற்கான வடிவமல்ல. நம்முடைய அச்சங்களை நேர்மையாக எதிர்கொள்வதற்கான வடிவம்.


இப்படி காந்தியை நெருங்க நெருங்க நமக்கு கிடைக்கும் இந்த புரிதல்கள் தான் நம்மை பதற்றம் கொள்ளச் செய்கின்றன. அவரிடமிருந்து நாம் விலக்கம் கொள்வதும் இதனால் தான் என்று எண்ண முடிகிறது. அவருடன் சமகாலச் சூழ்நிலையில் வாழ்ந்தவர்களுக்கும் இப்பதற்றமும், விலக்கமும் இருந்திருக்க வேண்டும். நிகழ்காலத்தில் உள்ள நாமெல்லாம் எம்மாத்திரம்.


இறைவனை வணங்குவதும், பூஜிப்பதும் எளிய வழிகள் தான். அவனை அறிவது….காந்தியின் இம்மூன்று புத்தகங்களும் The holy Trinity என்று உணர வைத்தன இக்கட்டுரைகள்.

'முதற்கால்' முன்னுரை


முதற்கால் (டாக்டர் இல. மகாதேவன் நேர்காணல்)’

நேர்கண்டவர்: சுனில் கிருஷ்ணன்

ஆழ்ந்த அறிவு, சிரத்தையுடன் கூடிய அபாரமான உழைப்பு, தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்கும் வேட்கை, அசாத்தியமான ஆசிரியத்துவம், ஆயுர்வேதத்தை வெறும் மருத்துவ முறையாக மட்டுமின்றி முழுமையான வாழ்க்கைமுறையாகவே காணும் அணுகுமுறை முதலானவற்றைக்கொண்ட டாக்டர் மகாதேவன் இந்திய ஆயுர்வேத உலகில் ஓர் இயக்கமாக விளங்குகிறார் என்று சற்றும் மிகைப்படுத்தாமலேயே சொல்லலாம்.

ஆயுர்வேதத்தின் தற்காலச் சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும் அறிவியலுக்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை இந்த நேர்காணல் அணுகுகிறது. நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகாரப் போட்டிகள் எனப் பலவற்றைக் குறித்து ஆரோக்கியமான விவாதங்களை ஏற்படுத்தக்கூடிய சிந்தனைகள் இந்த நேர்காணலில் உள்ளன.

தத்தளிப்புகளின் ஊடாக மகாதேவன் மேற்கொண்டுவரும் ஆன்மிகப் பயணத்தின் தடங்களையும் இதில் காணலாம். நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவராக மட்டுமின்றி, மொத்த வாழ்க்கையையும் முழுமையான ஆரோக்கியத்தை நோக்கிச் செலுத்தக்கூடிய முழுமையான ஆயுர்வேத வைத்தியராகத் தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ள மகாதேவன் என்னும் அலாதியான ஆளுமையையும் அறிந்துகொள்ளலாம்.

ஆயுர்வேதத்திலும் இந்திய மருத்துவ முறைகளிலும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் இந்த நேர்காணல் அமைந்துள்ளது.

அச்சு நூல் விலை: ரூ. 120

மின் நூல் விலை: ரூ. 94

காலச்சுவடு இணையதள இணைப்பு

https://books.kalachuvadu.com/.../u0baeu0ba4u0bb1u0b95u0.../

மின் நூலின் இணைய இணைப்பு

https://www.amazon.in/dp/B09Q3KJX9D

அச்சுநூலின் இணைய இணைப்பு

https://www.amazon.in/dp/B09Q1D1GF1

முன்னுரை

2019 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று இந்நேர்காணல் டாக்டர்.‌இல. மகாதேவன் வசிக்கும் தெரிசனம்கோப்பில் எடுக்கப்பட்டது. காலை ஐந்து மணிக்கு அவர் வீட்டை சென்றடைந்தபோது புத்தகம் வாசித்துக்கொண்டிருந்தார். ஆறேழு மாதங்கள் முயன்று பெற்ற தேதி. அவரழைக்கும் நேரத்திற்கு என்னால் செல்ல முடியாத சூழல். வார இறுதிகளில் அவருக்கு ஓய்வோ விடுப்போ இல்லை. ஓருவழியாக இந்த தேதி முடிவானது.  முறையான நேர்காணலுக்கு முன்னும் பின்னுமாய் நிறைய உரையாடினோம்‌. காலை உணவுக்கு பிறகு மாலை 3.30 வரை இடைவெளிவிட்டு மொத்தம் ஐந்து மணிநேர உரையாடல் பதிவு செய்யப்பட்டது. நேர்காணல் இறுதி வடிவம் பெறுவதற்கு முன், காலமாற்றத்தை கருத்தில் கொண்டு  மேலும் சில கேள்விகளை அனுப்பி பதில் பெற்றுக்கொண்டு நேர்காணலை விரிவாக்கினேன். மகாதேவன் அவர்களுடன் காரில் பயணித்தபடியும் அவருடன் உள்நோயாளிகள் பிரிவில் அமர்ந்தபடியும் உரையாடினேன். ஏறத்தாழ ஒருமணிநேர உரையாடல் தொழில்நுட்ப பிழையால் பதிவாகாமல் போனது. இருவரையுமே அது சோர்வடையச்செய்தது. எனினும் அதே கேள்விகளை மீண்டும் கேட்டு பதில்களை பெற்றுக்கொண்டேன். ஒலிப்பதிவை அச்சு வடிவத்தில் ஆக்குவதே நேர்காணலில் ஆகக்கடினமான வேலை. படைப்பூக்கமிக்க எழுத்தாளர்களுக்கு அயர்ச்சியூட்டும் பணியும் கூட. அந்த பணியை  மகாதேவன் அவர்களின் செயலர் சஜுவும் சாராதா ஆயுர்வேத மருத்துவமனையின் இளம் மருத்துவர்களும் சிறப்பாக செய்து கொடுத்தார்கள். அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.  முக்கியமாக சஜுவையே அடிக்கடி தொடர்புகொள்ளவும் தொந்திரவு செய்யவும் வேண்டியிருந்தது. இந்த நேர்காணலை நூலாக கொண்டுவரும் யோசனையை அளித்தவர் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன். அவருக்கும் புத்தக வடிவமைப்பு மற்றும் பிழைதிருத்தத்திற்கு பொறுப்பேற்ற காலச்சுவடு நண்பர்களுக்கு நன்றி. அவருக்கான கேள்விகளை தயார் செய்ய உதவிய என் மனைவி டாக்டர். மானசாவிற்கும் நன்றி. டாக்டர். மகாதேவன் கோரிக்கையின் பெயரில் நூலுக்கு தெளிவான அணிந்துரை அளித்துள்ள கீழப்பாவூர் ஆ. சண்முகையா அவர்களுக்கும் நன்றி. நேர்காணல் அச்சாகும் முன்னர் வாசித்து கருத்துக்களை சொன்ன நவீன மருத்துவர் டாக்டர். மாரி ராஜ், யோக ஆசிரியர் சவுந்தர் மற்றும் நண்பர் சுபஸ்ரீ

ஏன் மகாதேவன் முக்கியமானவர்? ஏறத்தாழ எட்டு ஆண்டுகளுக்கு முன் சொல்வனம் இணைய இதழில் அவர் குறித்து 'பிஷக் உத்தமன்' எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரையை சில திருத்தங்களுடன் இந்த நூலுக்கான அறிமுகமாக பயன்படுத்திக்கொள்கிறேன். இத்தனை ஆண்டுகளில் ஆயுர்வேத உலகத்திலும், தனியாக எனது ஆயுர்வேத மருத்துவ செயல்பாடுகளிலும் அவருடைய தாக்கம் பெருகியுள்ளதே தவிர குறையவில்லை‌. அன்றும் இன்றும் அவரை என் ஆசிரியராகவே கருதுகிறேன். ஒரு தனி மனிதர் எப்போது இயக்கமாகிறார்?  தனது சுற்றத்தையும் சம காலத்தையும் கடந்து தலைமுறைகளை தொட்டு அவர்களுடைய வாழ்வை நேரடியாகவோ மறைமுகமாகவோ மாற்றியமைக்கும் ஆற்றல் பெறும் போது தனி மனிதர் இயக்கமாக ஆகிவிட்டதாக கொள்ளலாம். டாக்டர். மகாதேவன், இந்திய அளவில் உள்ள ஆயுர்வேத மருத்துவர்களை பொறுத்தவரை அந்நிலையை அடைந்துவிட்டார்.  நான் எப்போதும் என்னை அவரது பள்ளியை சேர்ந்த வைத்தியனாகவே கருதி வருகிறேன். இந்த நேர்காணல் ஆயுர்வேதம் மற்றும் இந்திய மருத்துவ முறைகளின் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி சாமானிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையிலேயே தொகுக்கப்பட்டுள்ளது. இயன்ற வரை சமஸ்க்ருத சொற்களுக்கு தமிழில் பொருள் அளிக்க முயன்றிருக்கிறேன். ஆங்கில மருத்துவ கலை சொற்களுக்கு விளக்கம் கொடுக்க முயன்றிருக்கிறேன். அவருடைய மாணவனாக இந்த நேர்காணல் மிகுந்த நிறைவை அளித்தது. நேர்காணல் இரண்டு தன்மைகளை கொண்டுள்ளதை கவனிக்கிறேன். ஒருபக்கம், ஆயுர்வேதத்தின் தற்கால சவால்கள், போக்குகள், நவீன மருத்துவத்திற்கும், அறிவியலிற்கும் அதற்குமான உறவு என வரலாற்று நோக்கில் ஆயுர்வேதத்தை அணுகுகிறது. ஆன்மீகத்தையும் மதத்தையும் நீக்கிவிட்டு ஒரு மதச்சார்ப்பற்ற அறிவியல் துறையாக நவீன காலகட்டத்தில் ஆயுர்வேதத்தை நிலைநிறுத்தும் முயற்சி ஒரு முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கிறேன். ஆனால் இந்த மாற்றத்தினால் ஏற்பட்ட சிக்கல்களையும் இழப்புகளையும் சேர்த்தே மதிப்பிட  வேண்டும் என்பதை மகாதேவனின் நேர்காணல் உணர்த்துகிறது. இதற்கான தீர்வு குறித்த உரையாடலையும் தொடங்கிவைக்கும் என நம்புகிறேன்.  நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைவதின் சாத்தியக்கூறுகள், அதிலுள்ள அறச்சிக்கல்கள், அதிகார போட்டிகள் என பலவற்றை குறித்து இந்நேர்காணல் நல்ல விவாதங்களை ஏற்படுத்தும். மறுபக்கம்  மகாதேவன் எனும் தனிமனிதரின் பயணம். தத்தளிப்புகளின் ஊடாக அவரடைந்த ஆன்மீக பயணம் எனக்கு மிக முக்கியமானது. அவ்வகையில் அவர் முழு ஆயுர்வேத வைத்தியராக தனது இலக்கை அடையும் பயணத்தில் உள்ளார். இவ்விரண்டு தன்மைகளும் இணைந்தே நேர்காணலில் வெளிப்படுகிறது. இந்த நூல் அவர் ஆயுர்வேத சமூகத்திற்கு அளித்தவற்றுக்கான ஒரு சிறிய செய்நன்றியும் கூட. இந்த நூலுக்கு "முதற்கால்" என தலைப்பிட்டுள்ளேன். வெற்றிகரமான சிகிச்சைக்கு மருத்துவர், மருந்து, நோயாளி மற்றும், பரிசாரகர் (இன்றைய நோக்கில் செவிலி என சொல்லலாம். நோயாளியை கவனித்து கொள்பவர் என பொருள்) என நான்கு பாதங்கள் முழுமையாக அதன் இயல்புகளுடன் இருக்க வேண்டும் என சொல்கிறது ஆயுர்வேதம். அதில் முதலாவதும் மிக முக்கியமானதுமான பாதம் மருத்துவர். அதை குறிக்கும் வகையிலேயே இத்தலைப்பு சூட்டப்பட்டுள்ளது. இந்த நூலை என் தந்தை காலஞ்சென்ற மருத்துவர். ராமச்சந்திரனுக்கு சமர்ப்பிக்கிறேன். தன் குறுகிய வாழ்நாளில் மக்கள் மருத்துவர் என பெயரெடுத்தவர். நினைவுகளாகவும் கதைகளாகவும் காலந்தோறும் அவர் பெருகுவதை காண்கிறேன். அவரேந்திய சுடர் அணையாமல் இருக்கட்டும். 

சுனில் கிருஷ்ணன்

10-5-21

காரைக்குடி


நாற்கூற்று மருத்துவம்- ரா. கிரிதரன்

 ஆயுர்வேத மருத்துவர் இல. மகாதேவனுடன் நான் எடுத்த நேர்காணல் 'முதற்கால்' எனும் நூலாக  காலச்சுவடு வெளியீட்டுள்ளது.   அது குறித்து எழுத்தாளர் ரா. கிரிதரன் எழுதிய கட்டுரை சொல்வனம் இணைய இதழில் வெளிவந்துள்ளது. நன்றி 



மருத்துவர் இல.மகாதேவன் தெரிசனங்கோப்பில் ஆயுர்வேத மருத்துவராக அவரது பரம்பரை வைத்தியத்தை பயின்று வருகிறார். ஆயுர்வேதம் பற்றி அறிந்தவர்களுக்கு அவரைத் தெரியாமல் இருக்காது. பல ஆண்டுகளாக ஆயுர்வேத மருத்துவத்தின் சிறப்புகளையும் எல்லைகளையும் தனது சிகிச்சை வழியாகவும் மேடை உரைகள் வழியாகவும் பிரபலப்படுத்தி வருபவர். நவீன மருத்துவத்தோடு ஒட்டியும் விலகியும் அவர் பயின்று வரும் வைத்தியங்கள் ஆயுர்வேதத்தின் நவீனப் போக்கைத் தீர்மானித்து வருகிறது. இந்நூல் முழுவதும் ஒரே நேர்காணலைக் கொண்டுள்ளது. ஆயுர்வேத மருத்துவரும் எழுத்தாளருமான சுனில் கிருஷ்ணன் பல வாரங்கள் காத்திருந்து இல.மகாதேவனோடு இந்த நேர்காணலை நிகழ்த்தியுள்ளார்.


ஆயுர்வேதம் பற்றிய எவ்விதமான அடிப்படையும் தெரியாமல் இந்நூலைப் படிக்கத் தொடங்கினேன். இக்கால விளம்பரங்களிலும் தொலைக்காட்சி மேடை உரைகளிலும் ஆயுர்வேத முறைப்படி மருத்துவமும் மருந்துகளும் விற்கப்படும் வீச்சைப் பார்க்கும்போது நமக்கு பொதுவாக அதன் முறைமைகள் மீது அதிக அறிவு இருந்திருக்க வேண்டும் என நினைப்போம். எப்பொருளை எடுத்தாளும் மூலிகைகளின் படி சேர்த்த ரசாயனம், சித்தா முறைப்படி தயாரித்த பல் பொடி எனப் பலவிதமான எடுத்தாள்கைக்கு ஆயுர்வேதமும் சித்தா மருந்துகளும் உட்படுகின்றன. போலியான செய்திகளை அவை பரப்புவதோடு மட்டுமல்லாது நம் பாரம்பரிய சிகிச்சை முறைகளிலும் மருந்துகளிலும் இருக்கும் மகத்துவத்தைப் பற்றி மிகையான கருத்துகளை மக்கள் மத்தியில் பரப்பிவிடுகின்றன.


முழுவதும் நேர்காணலாக அமைந்திருக்கும் இந்நூலில் நான்கு விதமான விஷயக்கொத்துக்கள் நமக்குக் கிடைக்கின்றன.


ப்ராசீனமாக நமக்குக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு

ஆயுர்வேத சிகிச்சை முறைகளையும் மருந்துகளைத் தயாரிக்கும் முறைகளைக் கூறும் சமஸ்கிருத புத்தகங்கள் பற்றிய அறிமுகம்.

பல்துறையோடு சேரும் ஆயுர்வேதம் எனும் சமன்வய ஞானம்

நவீன மருத்துவமும் ஆயுர்வேதமும் இணையும் அல்லது விலகும் புள்ளிகள்

மூல நூல்கள்


ஆயுர்வேதத்துக்கான மூல நூல்கள் பலவும் சமஸ்கிருதத்தில் உள்ளன.    சரக சம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம் போன்ற நூல்களைப் பற்றிய அடிப்படைகள் தமிழில் கிடைத்தாலும் முழுமையான மொழியாக்கங்கள் இல்லாதது ஒரு குறை என்கிறார். தமிழ் வழி படித்ததால் மகாதேவன் சமஸ்கிருத மூல நூலின் தத்துவங்களோடு நெருங்க முடியாததை ஒரு குறையாக முன் வைக்கிறார். ப்ராசீனமாகக் கிடைக்கும் ஆயுர்வேத அறிவு என்பது பல நூல்களில் பரந்துள்ளதால் விரிவான அறிவு கல்லூரிகளில் கிடைக்காது என்கிறார். பல வருடங்கள் தனிப்பட்ட முறையில் பயில்வதும், பயிற்சி செய்வதும் மூல நூல்களை தன்வசப்படுத்தும் வழி என அவர் கூறுகிறார்.


ஆயுர்வேதத் துறையின் பயிற்சிகள்


ஆயுர்வேதக் கல்வி என்பது பயிற்சியுடன் நூலறிவும் சேர்ந்த ஒன்றாகவே பார்க்க வேண்டும் என்பது மிக முக்கியமான பார்வையாக இந்நூலில் வெளிப்படுகிறது. மூல நூலில் கொடுக்கப்பட்டுள்ள வியாதியும் அதற்குண்டான சிகிச்சையும் அந்த குறிப்பிட்ட நோயாளிக்கு பிரத்யேகமான ஒன்று. அதில் சொல்லப்பட்டுள்ள மூளிகைகள் கால மாற்றத்தினால் கிடைக்காமல் இருக்கலாம், அதே போல ஆங்கில மருத்துவத்தின் முன்னேற்றத்தினால் பல நோய்களுக்கான அடிப்படைப்பார்வை முன் போல இல்லாமல் மாறி இருக்கலாம். இன்றைய காலத்தில் ஆயுர்வேதப் பயிற்சி என்பது மூல நூலை அப்படியே வழி மொழிவதோ, அப்பயிற்சிகளை எல்லா நோயாளிகள் மீதும் செயல்படுத்துவதோ அல்ல.


இன்றைக்கு ஆயுர்வேதம் படிக்க வரும் மாணவர்களுக்கு அவர்கள் கல்வி முடிவும் வரை மூலிகைகளை அடையாளம் காணும் ஞானம் வருவதில்லை என மகாதேவன் சொல்வதை நம் பிற துறை படிப்புகளோடு பொருத்திப் பார்க்க முடிகிறது. சமஸ்கிருத அறிவின் போதாமை, நம்மைச் சுற்றி இருக்கும் தாவரங்கள் பற்றிய அறியாமை, உடலின் முற்குணங்களைப் பற்றிய தெளிவு இல்லாமை, ஒரு குருவிடம் சென்று பயிலும் ஆர்வமோ வாய்ப்போ இல்லாமை போன்ற பல காரணங்களால் கல்லூரிப்படிப்பில் முழுமையான பயனை மாணவர்களால் பெற முடியாது என்கிறார் மகாதேவன். பொறியியல் போன்ற துறையிலும் இப்படிப்பட்ட போதாமைகளை நம்மால் பார்க்க முடிகிறது. விஞ்ஞானப் படிப்பின் அடிப்படைகள் பற்றி ஆர்வம் இல்லாததும், பயிற்சியாக எதையும் செய்யாமல் ஏட்டுப்படிப்பாக மட்டுமே இருக்கும் கல்வி அமைப்பின் சிக்கல்கள் இதோடு ஒத்துப்போகின்றன. ஆயுர்வேத மூல நூல்கள் சமஸ்கிருதத்தில் இருப்பது கூடுதல் சிக்கல். ஆனாலும் அது கடக்க முடியாத சிக்கல் அல்ல என்பதே மகாதேவனின் வாதம். ஆயுர்வேதம் போன்ற பன்முக ஞானத் தேவை இருக்கும் துறை, பிற அறிவுத் துறையிலிருந்து பலவற்றைப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவரது அனுபவ அறிவு. நன்னூல், நாலடியார், திருக்குறள், சித்தர் பாடல்கள் போன்றவற்றில் ஆயுர்வேத அறிவின் சாரம் இருப்பதை அவரது ஒவ்வொரு பதிலிலும் நம்மால் பார்க்க முடிகிறது.


இன்றும் அவர் காலை நான்கு மணிக்கு எழுந்து மூல நூல்களயும், பிற தமிழ் நூல்களையும் படிக்கிறார். அதிலிருந்து கற்றுக்கொள்வதை நேரடியாகப் பயன்படுத்தாமல் நோயாளியின் தன்மை, நோயின் குறியீடுகள் போன்றவற்றைக் கொண்டு சிகிச்சை செய்கிறார்.


உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று

அப்பால் நாற்கூற்றே மருந்து


அது மட்டுமல்லாது ஆங்கில மருத்துவத்தின் வளர்ச்சிப்பாதையை உற்று கற்று வருகிறார். இதனால் பிற ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவர்கள் போல கிணற்றில் அடைந்து கிடைக்கும் பார்வை இவரிடம் இல்லை. ஆங்கில மருத்துவம், சித்தர் மருத்துவம் போன்றவற்றின் வளர்ச்சிகளிலிருந்தும் தோல்வியிலிருந்தும் அவர் தொடர்ந்து கற்று வருகிறார். அதோடு மட்டுமல்லாது அவற்றை சிகிச்சையிலும் செய்து காட்டுகிறார். உதாரணத்துக்கு ஆயுர்வேதத்தில் அவசர சிகிச்சைக்கு இடமில்லை என்பதை உணர்ந்திருப்பதால் நோயாளிகளின் குடும்பங்களுக்கு சரியான திசையைக் காட்ட முடிகிறது என்கிறார்.


இந்நூலின் ஆசிரியர் சுனில் கிருஷ்ணன் ஆயுர்வேத மருத்துவராக இருப்பதால் பல கேள்விகளை அவருடைய அனுபவத்திலிருந்தே கேட்டிருக்கிறார். இது ஒரு விதத்தில் ஆழமான விளக்கங்களைக் கோரி நிற்கிறது. குறிப்பாக ஆயுர்வேதம் பற்றிய அறிமுகமில்லாத வாசகர்களுக்கு ஒரு சிறு அறிமுகத்தைத் தந்திருந்தால் இக்கேள்விகளின் ஆழத்தை மேலும் அதிகமாகப் புரிந்துகொண்டிருக்க முடியும். பல சம்ஸ்கிருத வார்த்தைகளுக்கு சிறு குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் அவற்றை விரிவாகப் பேசமுடியா விட்டாலும், முடிவில் ஒரு அட்டவணையாகக் கொடுத்திருந்தால் மேலதிகத் தகவல்களை வாசகர்கள் அறிந்து கொண்டிருக்க முடியும். அதே போல, நவீன மருத்துவத்தை விட ஆழமான மருத்துவர் நோயாளி உறவையும், நோயாளி மருந்து அளிப்பவர் உறவு


ஆயுர்வேதத்தைப் பற்றி அறிந்து கொள்ளவும், மருத்துவர் மகாதேவன் அவர்களின் பங்களிப்பினால் இந்தக் கிளையானது எவ்வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதையும் அறிந்துகொள்ள மிக முக்கியமான நூலாக இது அமைந்துள்ளது. குறிப்பாக, எவ்விதமான வியாதிகளுக்கு ஆயுர்வேதம் நல்ல சிகிச்சை அளிக்கிறது எனத் தெரிந்துகொள்ளவும், ஆயுர்வேதப் படிப்பை பயில விருப்பமுள்ளோருக்கும் நல்ல ஒரு வழிகாட்டியாக இந்நூல் அமைந்திருக்கிறது.


இதைத் தொடக்கமாகக் கொண்டு ஆயுர்வேதம் சார்ந்து மேலும் பல நூல்கள் தமிழில் வர வேண்டும் எனும் விருப்பத்தை அதிகரித்துள்ளது. இந்த நூலைத் தொகுத்த சுனில் கிருஷ்ணனும், இல. மகாதேவனும் முன்னெத்தி ஏராக இருப்பார்கள் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.


அச்சு நூல் விலை: ரூ. 120
மின் நூல் விலை: ரூ. 94
காலச்சுவடு இணையதள இணைப்பு
மின் நூலின் இணைய இணைப்பு
அச்சுநூலின் இணைய இணைப்பு

Tuesday, November 16, 2021

கடவுளைக் காதலிப்பது



(கோவையில் 'ஆன்மீக கவிதைகள்' பற்றி ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம். நேற்று ஜெ தளத்தில் வெளியான கட்டுரையை அவருக்கு அனுப்பிய பின்னரும் இக்கட்டுரை வளர்ந்தபடியே இருந்தது. இன்னும் வாசிக்க வேண்டிய பல கவிகள் உள்ளனர்.‌ இதை ஒரு தொடராக விரித்தெழுத வேண்டும். குணங்குடி மஸ்தான் சாகிபு, புனித ஜான், செங்கோட்டை ஆவுடையக்கா, துளசிதாசர், ஹபீஸ் என பலரை தொட்டு எழுத வேண்டும்.‌ பாரதியில் சென்று முடியவேண்டும். நன்றி - https://www.jeyamohan.in/159263/.  சாரு தனது  தளத்தில் கட்டுரைக்கான சுட்டியை அளித்திருக்கிறார். நன்றி சாரு http://charuonline.com/blog/?p=10998. 

 1


கவிஞர்  என்பவர் உலகின் முதல் மனிதர் என்றும், நாவலாசிரியர் என்பவர் உலகின் கடைசி மனிதர் என்றும் எழுத்தாளர் கோணங்கி ஒரு உரையாடலின் போது குறிப்பிட்டார். முதல் மனிதர் ஒரு குழந்தையின் குறுகுறுப்பைக்கொண்டவர், யாவற்றையும் அறியத்துடிப்பவர், அவருக்கு இவ்வுலகின் ஒவ்வொரு துளியும் வியப்பின் பெருவெளி. கடைசி மனிதர் கனவுகளை இழந்தவர். அனைத்தும் தலைகீழாகவும் பொருளற்றும் திரிந்தும் போவதை கண்ணுறுபவர். நாவலாசிரியருக்கு அல்லது பொதுவாகவே புனைவெழுத்தாளருக்கு கவிதையின் மீதிருக்கும் மையல் இங்கிருந்தே தொடங்குகிறது. தூயதும், அரியதுமான வெகுளித்தனத்தின் மீதான, மூர்க்கமான பிரேமையின் மீதான ஈடுபாடு. ஏக்கம். தொலைந்த பால்யத்தை போல மீள முடியாத ஆனால் பரவசமளிக்கும் வெளியை கவிதையே அவருக்கு அளிக்கிறது. இன்றைய என் வாசிப்பில் கவிதையை தன்னகத்தே கொண்ட சிறுகதையோ நாவலோ ஒருபோதும் சோடைபோவதில்லை என்பதை காண்கிறேன். 


'ஆன்மீக கவிதைகள்' என்பது மிகவும் பரந்த தலைப்பு. திருக்குறளும் தேவாரமும் பிரபந்தமும் செழித்த மொழி தமிழ். இந்த கட்டுரைக்கு நான்  கவிதைகளைத் தேர்ந்தெடுக்க வைத்துக்கொண்ட முதன்மையான அளவுகோள் ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாடு என்பதே. அதிலும் கூட, சமய எல்லைகளுக்கு அப்பால் மத்தியகாலத்து மறைஞானிகளின் கவிதைகளுக்கே அதிக முக்கியத்துவம் அளித்துள்ளேன். பிற கவிதை வகைகளை அவ்வப்போது தொட்டுக்காட்டியுள்ளேன். கவிஞர்களின் ஆன்மீக‌ வெளிப்பாடு என வரயறையை சற்று மாற்றியமைத்தால் பாரதி தொடங்கி தேவதேவன் வரை பலருடைய கவிதைகளை பேச இயலும். ஆனால் அவை வேறொரு சந்தர்ப்பத்தில் விவாதிக்கப்பட வேண்டியவை. அவை எப்படி இக்கவிதைகளுடன் நீட்சிகொள்கின்றன என்பதை கவனிக்க இயலும். 


கவிதையை மொழியின் முதலும் உச்சமுமான வெளிப்பாடு என கொள்ளலாம். இதன் காரணமாகவே மிக எளிதாக நகலெடுக்கப்படத்தக்கதாகவும் உள்ளது. கவிதைகள் எழுதப்படும் அளவிற்கு வாசிக்கப்படுவதில்லை என்பது மற்றொரு சுவாரசியமான முரண்.  காலங்காலமாக கவிதையே ஆன்மீக வெளிப்பாட்டுக்கான ஊடகமாக திகழ்ந்து வருகிறது. ஜெயதேவரை பற்றிய ஒரு தொன்மக்கதை ஒன்றுண்டு. ராதை கண்ணனின் சென்னி மீது கால் வைப்பதாக ஒரு பகுதியை எழுத உந்துதல் பிறக்கிறது. ஆனால் எழுத தயங்குகிறார். யோசனையுடன் குளிக்க சென்றவருக்கு அவ்வரி எழுதப்பட்டிருந்ததை காண வியப்பாக இருக்கிறது. அது கண்ணனே எழுதியது. சாட்சியாக பத்மாவதி இருந்தார். ஒரு வகையில் கவியின் கற்பனைக்கு தடை ஏதுமில்லை, அது கடவுளால் அங்கீகரிக்கப்பட்டது. அதனளவில் அது புனிதமானது என்பதை இக்கதை உணர்த்துவதாக வாசிக்க இடமுண்டு. கீத கோவிந்தம் மொழியாக்கத்துக்கு சுதீப்தா கவிராஜா எழுதிய முன்னுரையில் சாமான்ய புழங்கு மொழியால் வெளிப்படுத்த இயலாத உணர்வு நிலையை பக்தர்  அடையுமாபோது, அந்த உணர்வை வெளிப்படுத்த கவிதையே உகந்ததாக ஆகிறது என சுட்டுகிறார். உயர் கவித்துவமே கடவுளுக்கு அருகே அழைத்துச்செல்லும் ஊடகம். பண்டைய கவிதைகள் சந்தத்தில் இயங்குபவை.  பாடல்களாக இசைக்கப்படுகின்றன. கீத கோவிந்தம் நிகழ்த்து கலையாக இசையுடன் நாட்டியமும் சேர்ந்தே நிகழ்த்தப்படுகிறது. 

ஜெயதேவரின் அஷ்டபதியில் ஒவ்வொரு பாடல்களுக்கும் உகந்த உணர்வு நிலைக்கு ஏற்ப ராகங்கள் வகுக்கப்படுகின்றன. மொழியால் கடத்த முடியாததை இசை கொண்டு நிரப்ப முயல்கிறது. கவிதை கீதமாவதன் வழியாக சொல்லின்மையை எட்ட முயல்கிறது. 

சங்கரரின் சவுந்தர்ய லகரியைப் பற்றி நடராஜ குரு குறிப்பிடும்போது அது எப்படி படிமம் மற்றும் காட்சி ஏற்படுத்தும் அதிர்வு வழியாக தொடர்புறுத்தும் ஆதி மொழியை (proto language) கையாள்கிறது என விளக்குகிறார். ஆதி மொழி தான் இப்போது வரை நீடிக்கும் ஆகப்பழமையான மொழி அமைப்பு, மீமொழி (meta language) அறிவார்ந்த உரையாடலுக்கு உரியது. ஆதிமொழி வடிவவியல் பிரக்ஞை (geometric orientation) கொண்டது. கவிதை, இசை மற்றும் குறியீடுகளை பயன்படுத்தும் கலை வடிவங்களுக்கான தொல்கால விதைநிலம் அதுதான். ஆதி மொழி எழுதப்பட்டதிலிருந்து எழுதப்பட முடியாததற்கு நம்மை இட்டுச்செல்லும்  வாகனம் என சொல்லலாம். சவுந்தர்ய லகரிக்கு பொருந்துவது பொதுவாக ஆன்மீக கவிதைகளுக்கும், ஒரு எல்லையில் மொத்த கவிதைகளுக்கும் பொருத்திப் பார்க்கலாம். கவிதை, மொழியில் உள்ள சொல்லுக்கும் பொருளுக்கான பிணைப்பை தளர்த்தி பொருள்கோடல் சாத்தியங்களை பெருக்குகிறது. கவிதைகளில் வரும் மலையும் நிலவும் கடலும் வெறும் மலையும் நிலவும் கடலும் அல்ல. கவிதையின் கள்ளமின்மை அல்லது குழந்தைமை என நாம் சுட்டுவது இந்த ஆதி மொழியைத்தான். கவிதை சுடு சரமென  நம்மை கிழித்து உட்புகுவதற்கு என தனிப்பாதையை தேர்ந்துகொள்ளும். நவீன கவிகளில் கூட பெரும்பாலான கவிகள் ஏதோ ஒரு புள்ளியில் ஆன்மீகத்தை தொட்டு மீள்கிறார்கள். ஞானிகள் படிபடியாக ஏறிச்சென்று காண்பதை  கவிகள் ஒரு கணத்தில் எல்லைகளை கடந்து காணும் பேறு பெற்றவர்கள். பண்டைய காலத்தில் ஊழ்கத்தில் அமர்ந்து ஞானத்தில் திளைத்த ரிஷிகளையும் கவி என்றழைத்தார்கள். ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதத்தை கவிதையாகவே வாசிக்க முடியும். 



சிருஷ்டி கீதம்


அப்போது அசத் இருக்கவில்லை

சத்தும் இருக்கவில்லை

உலகம் இருக்கவில்லை

அதற்கப்பால்

வானமும் இருக்கவில்லை



ஒளிந்துகிடந்தது என்ன?

எங்கே?

யாருடைய ஆட்சியில்?

அடியற்ற ஆழமுடையதும்

மகத்தானதுமான நீர்வெளியோ?

மரணமிருந்ததோ

மரணமற்ற நிரந்தரமோ?

அப்போது இரவுபகல்கள் இல்லை

ஒன்றேயான அது

தன் அகச்சக்தியினால்

மூச்சுவிட்டது

அதுவன்றி ஏதுமிருக்கவில்லை


இருட்டால் போர்த்தப்பட்ட வெளி

வேறுபடுத்தலின்மையால்

ஏதுமின்மையாக ஆகிய வெளி

அது நீராக இருந்தது

அதன் பிறப்பு

வெறுமையால் மூடப்பட்டிருந்தது!

தன் முடிவற்ற தவத்தால்

அது சத்தாக ஆகியது



அந்த ஒருமையில்

முதலில் இச்சை பிறந்தது

பின்னர் பீஜம் பிறந்தது

அவ்வாறாக அசத் உருவாயிற்று!


ரிஷிகள்

தங்கள் இதயங்களை சோதித்து

அசத்தில் சத்தைக் கண்டடைந்தனர்

அதன் கதிர்கள்

இருளில் பரந்தன


ஆனால் ஒருமையான அது

மேலே உள்ளதா?

அல்லது கீழே உள்ளதா?

அங்கு படைப்புசக்தி உண்டா?

அதன் மகிமைகள் என்ன?

அது முன்னால் உள்ளதா?

அல்லது பின்னால் உள்ளதா?

திட்டவட்டமாக யாரறிவார்?



அதன் மூலக்காரணம் என்ன?

தேவர்களோ

சிருஷ்டிக்குப் பின்னர் வந்தவர்கள்!

அப்படியானால் அது எப்படிப்பிறந்தது?

யாருக்குத்தெரியும் அது?



அதை யார் உண்டுபண்ணினார்கள்

அல்லது உண்டுபண்ணவில்லை?

ஆகாய வடிவான அதுவே அறியும்

அல்லது


அதுவும் அறியாது!



'முதல் மனிதனின்' அறிதலின் வெகுளித்தனமும் வியப்புமே கவிதையாக வெளிப்படுகிறது.  கபீரின் இவ்வரிகள் சிருஷ்டி கீதத்தின் அதே உணர்வின் நீட்சி என சொல்லலாம். 'சகோதரனே சொல்/ ஆகாயத்தை விரிகுடையெனச்/ செங்குத்தாக நிறுத்தி வைத்தது யார்? நீலப்பெருந்திரையில் / விண்மீன்களை மினுங்கவைத்தவர் யார்? அதைத் தீட்டிய/ அபாரமான தூரிகையாளன் எவன்?' இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வுலகை முதன்முறையாக புலன் விழித்து நோக்கும்போது ஏற்படும் வியப்பும் திடுக்கிடலுமே கவிதையை பிறப்பிக்கிறது. அவன் காணும் ஒவ்வொன்றும் அவனுக்கு வியப்பை அளிக்கிறது. 

  புலர் பொழுது உலக இயக்கத்தை தொடங்கி வைக்கும் பெருவியப்பு உஷை சூக்தமாகிறது. உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அல்லும் பகலும் அயராமல் வந்து கொண்டிருக்கிறார்கள். சோர்ந்து அமரவோ சோம்பல் கொள்ளவோ ஏதுமில்லை. இரவையும் பகலையும் பற்றிய கவிதை மரணத்தை பற்றியும் மறுபிறப்பைப் பற்றியும், காலாதீதத்தை பற்றியும் பேசும் புள்ளியில் சட்டென வேறொரு தளத்திற்குச் செல்கிறது. பகலும் இரவையும் போல் பிறப்பும் மரணமும் இயல்பாகிறது. மரணத்தின் துக்கமும் அச்சமும் விலகுகிறது. 

உஷை

(ரிக் வேதம் முதல் மண்டலம், 113வது சூக்தம்)

வந்தது ஒளிகளிற் சிறந்த இவ்வொளி

பிறந்தது  எங்கும் பரவும் பிரகாசம்

செங்கதிர்த் தேவன் எழ

வெளிச்சென்ற ராத்ரி

உஷைக்குப் பிறப்பிடம் ஈன்றாள்.

தன் வெண்மகவுடன் வந்தாள் சுடர்ப்பெண்

கரியவள் தன் இல்லத்தை அவளுக்களித்தாள்

ஒன்றான இவ்வுறவுகள்

நிறம் மாறி

ஒருவரையொருவர் தொடர்கின்றனர்

அழிவற்று.

முடிவற்றது

ஒன்றேயானது

சகோதரிகளின் பாதை

மாறிமாறி அதில் பயணிக்கின்றனர்

இந்த தேவியர்

இரு நிறமும் ஒரு மனமும் கொண்ட

பகலும் இரவும்

முறைதவறுவதில்லை

மோதிக் கொள்வதுமில்லை.

இன்னொளிசேர் சோதித் தலைவியைக்

காண்கின்றன எம் கண்கள்

கதவுகளைத் திறந்தாள்

பொலிவுடன்

உலகை சிலிர்க்கச் செய்து

செல்வங்களைக் காட்டினாள்

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

உறக்கத்தில் சுருண்டு கிடந்தோரை

சுகவாழ்விற்கென

வேள்விக்கென

பொருள் தேடலுக்கென

எழுந்தோடச் செய்தாள்

சிறிதே கண்டோர் பெரிதாய்க் காண

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

வீரச்செயலுக்கென ஒருவனை

புகழுக்கென ஒருவனை

மகத்தான வேள்விக்கென ஒருவனை

பலனுக்கென ஒருவனை

உழைப்பிற்கென ஒருவனை

தொழிலுக்கென அனைவரையும் என

உஷை

புவனத்தின் ஒவ்வொரு உயிரையும்

எழுப்பினாள்.

யுவதி வெண்துகிலினள் வான்மகள்

மண்மீது காணும் செல்வங்களின் தலைவி

இதோ வருகிறாள் உஷை

மங்கல நல்லொளியினளே

இந்தக் காலையில்

எமக்காகத் துலங்குக.

கடந்து சென்ற காலைகளின் வழிச்செல்பவள்

இனிவரும் முடிவற்ற காலைகளின் முதல்வி

உஷை

உயிருள்ளவை அனைத்தையும்

உந்திச் செலுத்துகிறாள்

மரித்தவற்றையும் உணர்விக்கிறாள்.

உஷையே

நீயே அக்னி சுடரத் தூண்டுவித்தவள்

கதிரோனின் கண்வழி உலகைப் புலப்படுத்தியவள்

வேள்வி செய்யவேண்டி மானுடரை எழுப்பியவள்

தெய்வீக நற்செயல்கள் புரிபவள்.

எத்தனை காலமாக

எழுகிறார்கள் உஷைகள்?

நமக்கு இன்னொளி தர

இன்னும் எத்தனை காலம்

எழுவார்கள்?

கடந்து சென்ற வைகறைகளுக்காக ஏங்கி

வரப்போகும் வைகறைகளுடன்

மகிழ்ச்சியாகச் செல்கிறாள்

உஷை.

போய்விட்டனர்

முன்னாட்களில்

உஷையின் உதயம் கண்ட மானிடர்

நாம்

இன்று வாழும் நாம்

அவளது நல்லொளி காண்கிறோம்

வரும் நாட்களில் அவளைக் காண

நமது பின்னோர் வருகிறார்கள்.

எதிர்ப்போரைத் துரத்துபவள்

பிரபஞ்சலயத்தில் தோன்றியவள்

பிரபஞ்சலயத்தைக் காப்பவள்

உவகையூட்டுபவள்

இன்னொலிகளை விழிப்புறச் செய்பவள்

சுமங்கலி

தேவர் விரும்பும் வேள்வியை ஏந்திவருபவள்

பெரும்புகழ் கொண்ட உஷை

இன்று எமக்காக உதித்திடுக.

உஷை

முற்காலங்களில்

இடையறாது உதித்தாள்

செல்வம்சேர் தேவி

இன்றும் தன் ஒளி காட்டுகிறாள்

வரும் நாட்களிலும் உதிப்பாள்

தன்னாற்றலால் இயங்குகிறாள்

அந்த அமுதப் பெண்

அழிவற்று.

வான் விளிம்புகளைத் தன்னொளியால்

சுடர்வித்தாள்

தேவி தன் கருந்திரையை

வீசிஎறிந்து விட்டாள்

உஷையின்

செம்பரிகள் பூட்டிய தேர் கண்டு

உலகம் விழித்தெழுகிறது.

உயிர்வளர்க்கும் செல்வங்கள் ஏந்தி

உணர்வளித்து

அற்புத எழிலொளி பரப்பி

கடந்து சென்ற பல வைகறைகளின் இறுதியாக

வரப்போகும் ஒளிமிகு வைகறைகளின் முதலாக

இன்று உஷை எழுந்தாள்.

எழுவீர்

வந்தது மீண்டும் வாழ்வும் உயிரும்

சென்றது இருள்

தோன்றுகிறது ஒளி

கதிரவனுக்காக

வழிதிறந்தாள் உஷை

நம் ஆயுளும் உணவும் செழிக்கும் இனி.

(தமிழாக்கம்- ஜடாயு)


2


 கவிதை எங்கிருந்து ஊற்றெடுக்கிறது எனும் கேள்விக்கு எனக்கு அரவிந்தரின் கோட்பாடு நெருக்கமாக உள்ளது. குறிப்பாக ஆன்மீக கவிதைகளுக்கு பொருத்திக்கொள்ள முடிகிறது. கவிதையைப் பற்றிய அறுதியான கோட்பாடாக இதை காண வேண்டியதில்லை.‌ ஆன்மீக ரீதியில் கவிதையை புரிந்துகொள்ள ஒரு வழிமுறை எனும் எல்லையுடன் இந்த புள்ளிகளை அணுக வேண்டும். மனித ஆன்மா பிரபஞ்ச பேரிருப்புடன் கொள்ளும் தொடர்பின் அடையாளமாக கவிதையை காண்கிறார் அரவிந்தர். சாமானிய மனம் (ordinary mind), உயர் மனம் (higher mind), ஒளிர் மனம் (illumined mind), உள்ளுணர்வு மனம் (intuitive mind) மற்றும் மேலான மனம் (over mind) என  ஐந்து பரிணாம படிநிலைகளை குறிப்பிடுகிறார். இதை தவிர்த்து   பிரபஞ்ச மனம் (universal mind), அதி பிரக்ஞை இருப்பும் (super conscient being) உள்ளது.  ஒவ்வொரு அடுக்கிற்கும் அதற்குகந்த படைப்பூக்கம் சொல்லப்படுகிறது. சாமானிய மனதில் படைப்பூக்கத்திற்கு பெரிதாக வேலையில்லை. ஒளி ஊடுருவ இயலாத அளவிற்கு இறுக்கமும் கணதியும் கொண்டது. உயர் மனம் சற்றே தெளிந்தது. தத்துவவியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் இந்த நிலையிலிருந்து செயல்படுவார்கள்.‌ மீ மொழியின் தளம் என சொல்லலாம். ஒளி சில புள்ளிகளில் இருந்து ஊடுருவும். அசல் சிந்தனைகள் தோன்றும். எனினும் தர்க்க சட்டகத்தை கடக்க இயலாது. இந்த நிலையிலிருந்து அமைதி கைகூடி வரும்போது இயல்பாக ஒளிர் மன அடுக்கை சென்றடையும். பெரும் முயற்சிகள் ஏதுமின்றியே சத்தியத்தையும் ஆனந்தத்தையும் உணர இயலும். சிறு புள்ளிகளில் ஊடுருவிய ஒளி இப்போது வெள்ளமாக பொழியும். கவிதைகளுக்கான வெளி இதுவே. மனம் இந்நிலையை அடைந்ததற்கான அறிகுறிகளில் ஒன்று கவிதை சட்டென ஊறி பிறப்பெடுப்பது என்கிறார் அரவிந்தர்.  கவிதையே மனதின் உயர் அடுக்குகளை பற்றி சொல்வதற்கு உகந்த ஊடகம் எனவும் அவர் சொல்கிறார். சொற்களின் பொருளை கடந்து அதன் ஒலிக்குறிப்பு மற்றும் ஒலிச் சேர்க்கையே அதன் அதிர்வுகளை கடத்த வல்லது. சொற்கள் அதிர்வுகள் உடுத்தும் ஆடைகள் மட்டுமே என்பது அவர் கருத்து. ஆதிமொழியின் வல்லமை ஒலி அதிர்வுகளின் ஊடாக தொடர்புறுத்தும் எனும் நடராஜ குருவின் கருத்தையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் இந்த தளத்தில் படைப்பூக்கத்தை தொடர்ந்து தக்கவைப்பது கடினம். ஒரே ஆக்கத்தில் சில வரிகளில் தாக்கம் தென்பட்டு பிற இடங்களில் சாதாரணமாக கடந்து செல்லும். இந்நிலையில் தொடர்பற்ற சீரற்ற படிமங்களையும் அறிதல்களையும் காண முடியும். இதற்கடுத்த நிலையில் எல்லாம் தெளிவடைகிறது. சொற்கள் தனது அலங்காரங்களை துறக்கிறது. உள்ளுனர்வு மனம் எனும் தளம் சத்தியத்தைப்பற்றிய நினைவு களன் என்கிறார். ஒளி வெளியிலிருந்து வருவதில்லை. இயல்பாக எப்போதும் யாவற்றையும் ஒளி சூழ்ந்திருக்கிறது. தர்க்கத்தின் பிடியிலிருந்த தன்னை முழுமையாக விடுவித்து கொண்டது. மேலான மனம் மனித பிரக்ஞையின் உச்சம். அது பிரபஞ்சமளாவிய பிரக்ஞை ஆனால் தனியிருப்பும் தொடர்கிறது. இதுவே கடவுளர்களின் வெளி. உலகின் மதங்கள் அனைத்தும் இங்கே உதித்தவை. கால வெளி எல்லைகளை கடந்த நிலை. கவிதை மந்திரமாவது இத்தளத்தில்தான். துண்டுபடாத தொடர் ஒளி சூழ்ந்து இருக்கும்.


   அமைதியும் நிலைபேறும் கொண்ட மனதில் காற்றில்லா வானத்தை பறந்து கடக்கும் பறவைகளை போல எண்ணங்கள் சுவடின்றி கடந்து மறையும். அத்தகைய மனதில் பிரபஞ்ச மனம் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும். புனித நூல்களில் காலம் கடந்து நிற்பவை ஆகச்சிறந்த கவிதை வரிகள். அவை மந்திரத்தன்மையை எழுப்புபவை. உதாரணமாக  'வானத்து பறவைகளை பாருங்கள்‌, அவை விதைப்பதும் இல்லை அறுப்பதும் இல்லை' எனும் விவிலிய வசனம் ஒரு கவித்துவ வாக்கு (poetic utterance). ஹெரால்ட் ப்ளூம் விவிலியத்தை புனைவு நூலாக வாசிக்க இயலும் என சொஆகல்கிறார். குறிப்பாக பழைய ஏற்பாட்டை. ஜெ எனும் பெண் எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடும் எனும் ஊகமும் அவருக்கு உண்டு. இந்த வரிசையில் மத நூல்களையும் புனித நூல்களையும் கவிதைகளாகவும் வாசிக்க இடமுண்டு என்பதாலேயே இந்த கட்டுரையை ரிக்வேத பாடலோடு தொடங்கினேன்.  


முண்டக உபநிஷத்தின் தொடக்கத்தில் வரும்

 'இரு பறவைகள்

இணைபிரியாத் தோழர்கள்

ஒரே மரத்தில்.

ஒன்று கனிகளை உண்கிறது

மற்றொன்றோ

உண்ணாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது.'  

இதுவும் ஒரு கவித்துவ வாக்குதான். கவி ஊடகம் கவிதை அவன் வழியாக வெளிப்படுகிறது என்பது ஒரு பார்வை. ஆனால் இதன் அடுத்த கட்டமாக கவிதையையும் கூட ஒரு ஊடகமாக காண முடியும்.  காலாதீத சத்தியம் சொற்களாக திரண்டு கவிஞன் வழியாக கவிதையாக கனிந்து வெளிப்படுகிறது என்றும் கொள்ளலாம். 

இந்திய மரபில் தியான சுலோகங்கள் என ஒவ்வொரு இறைவனுக்கும் அவரை விவரிக்கும் துதிகள் உண்டு. உதாரணமாக விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 'க்ஷிரோ தன்வத்..' என தொடங்கும் துதி உண்மையில் திருமால் பாற்கடலில் அணிகளுடன் படுத்திருக்கும் காட்சியை விவரிப்பது. அவருடைய முகம், அகம், அமர்ந்திருக்கும் முறை, அணிந்திருக்கும் ஆடை அணிகள் என துல்லியமான விவரனைகள். இவை புலன் நிகர் அனுபவத்தை அளிப்பவை.  தியானத்திற்குரியவை. வேதாந்தம் நிதித்யாசன மந்திரங்கள் என சிலவற்றை வரையறை செய்கிறது.  சங்கரரின் நிர்வாண ஷடகம் இத்தகையது. அடிப்படையில் தியான சுலோகங்களும் நிதித்யாசன மந்திரங்களும்  கவிதைகளே. நிதித்யாசனத்திற்கு உரியவை கருத்தை அடிப்படையாக கொண்டவை எனும் போது படிமத்தை அல்லது காட்சி அனுபவத்தை அடிப்படையாக கொண்ட தியான சுலோகங்கள் நவீன கவிதைக்கு சற்று கூடுதல் நெருக்கமானவை என சொல்லலாம்.


ஆழியின் துளி

துளிகள் கலந்து ஆழி ஆவதை

அறிவர் எல்லாரும்

ஆழி உலர்ந்து

ஒரு துளியாவதை அறிபவனோ

ஆயிரத்தில் ஒருவன்.


கபீரின் இவ்வரிகள் தியான சுலோகமாக கருதத்தக்கது. தேவதேவன், தேவதச்சன் ஆகியோரின் பல கவிதைகளை தியானத்திற்குரியதாக கருத இயலும்.  கபீரின் 'பிரசவம்' எனும்  கவிதையை நவீன கவிதை என்றே சொல்லிவிட முடியும்.  புறத்தை அவதானித்து அகவயப்படுத்திக்கொள்கிறது. 


வானம்பார்த்து மல்லாந்து

அலையில் மிதக்கும் சிப்பி

தவிப்புடன் காத்திருக்கிறது

சுவாதி மழைத்துளிக்காக

வெறும் வயிற்றில் துளிநீர் விழுந்ததுமே

உடல் புரண்டு முத்தை சூல் கொள்ளப் பயணிக்கிறது

கடல் ஆழத்தை நோக்கி


ரூமியின் ஒரு கவிதையில் உள்ள வரிகள் தேவதச்சனின் ஓரு கவிதையில் ஷூ லேஸ் கட்டும் குண்டு பெண்மணியை நினைவுப்படுத்தியது. 'அவ்வுலகும்/ இவ்வுலகும்/ தொட்டு உறவாடும்/ வாயிலின் வழியாக/ மனிதர்கள் பயணித்தவண்ணம் இருக்கின்றனர்./ வட்டவடிவான அவ்வாயிலோ/ திறந்து கிடக்கிறது இப்போது/ துயிலச் சென்றுவிடாதே மீண்டும்.' 

உறக்கச்சடவு என்பது விழிப்பு நிலைக்கும் கனவு நிலைக்கும் இடையில் நொறுங்கிக்கொண்டிருக்கும் சிறிய மேடை. இணை பிரபஞ்சங்களுக்கு இடையிலான  வாயில் உறைவதற்கு முன்னாலான நீர்மை நிலை. 


கவிதையைப் பற்றி சொல்வதற்கு கருத்துக்களை சார்ந்திருப்பதை விட கவிதைகளே உகந்தது. ஒரு கவிதையே மற்றொரு கவிதைக்கான திசை சுட்டி. ஆகவே கவிதை குறித்தான கட்டுரையில் அதிக கவிதைகளை மேற்கோள்காட்டுவது இயல்பானது.ன் 


3



கவிதையின் பேசுபொருள் மற்றும் தன்மை சார்ந்து தோராயமாக ஆன்மீக கவிதைகளை மறைஞான கவிதை, மெய்யியல் கவிதை, விழிப்புணர்வு நிலை கவிதை (mindfulness) ஐக்கிய வேட்கை கவிதை மற்றும் கண்டன கவிதை என ஐந்தாக வகுக்கலாம். மெய்யியல் கவிதைக்கு சிறந்த உதாரணம்  'இது' எனும் தாவோ கவிதை. கிட்டத்தட்ட தத்துவ கோட்பாடு இங்கு கவிதையாக உருகொள்கிறது. சாமான்ய மொழியில் செல்லும் போது 'இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை' 

எனும் பயன்பாடு வழியாக கவித்துவமான ஆதிமொழிக்குள் வழுக்கி செல்கிறது. இதுவே இதை கவிதையாக்குகிறது.



இது


பார்த்தாலும் இதைப் பார்க்க முடியாது

இது உருவத்திற்கும் சிறியது:

கவனித்தாலும் இதைக் கேட்க முடியாது;

இது ஒலியிலும் மெல்லியது;

ஊகிக்கலாம் ஆனால் தொட்டுவிட முடியாது;

இது, உணர்வுகளுக்கு அடியில் உள்ளது;

மேலான பொருட்கள்

இவைகள்தான் என்று வரையறை

செய்வதற்குள் தப்பிவிடுகின்றன. 

மேலும் இவை கலந்து ஒற்றைப்புதிராய் உள்ளது

இது எழும்போது அங்கே ஒளியில்லை

இது விழும்போது அங்கே இருளில்லை

இது விளக்கத்திற்கும் அப்பாற்பட்ட

ஒரு தொடர்ச்சியான மெல்லிழை

வெளிப்பட முடியாத உள்வலை

வடிவமில்லாதது இதன் வடிவம்

ஒன்றுமில்லாதது இதன் உருவம்

மௌனம் இதன் பெயர்;

இதைப் பின் தொடர்கையில் இதற்கு முதுகு இல்லை

இதை எதிர்கொள்கையில் இதற்கு முகம் இல்லை

இதற்கு முன்னும் இல்லை, பின்னும் இல்லை

போனதைப் புரிந்துகொள்ள இருப்பதைக் கவனியுங்கள்

ஆக உங்களுக்கு இயற்கை வழியின்

தொடரைப் பிடிக்க முடியும்

நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள்

என்று சற்று உணர்ந்து பாருங்கள்

இதுவே இதன் ஞானரசம்





விழிப்புணர்வு நிலை கவிதைக்கு சிறந்த உதாரணம் ஜென் மற்றும் வேதாந்த கவிதைகள்.  போகன் மொழியாக்கம் செய்துள்ள சீன கவிதைகள் நல்ல உதாரணம்.  


லஸ்டர் கணவாயில் இரவு மழை..


பள்ளத்தாக்கு நதியின்வெற்றிடத் தெளிவைத் தகர்த்துக்கொண்டுமழை உள்ளே வருகிறது.கூதல் காற்று கிசுகிசுப்புகள் இரவின் பின்பகுதியில் தொடக்கம்..பத்தாயிரம் முத்துகள் ஒரே தட்டில் விழுந்து ஒலி எழுப்புகின்றனஒவ்வொன்றின் ஒலியும் என் எலும்புகளைத் துளைக்கும் துல்லியம். நான் கனவில் என் தலையைச் சொரிகிறேன்எழுந்து விடியும்வரை கூர்ந்து  கேட்கிறேன்.ஒவ்வொரு சப்தமும் தோன்றுவதை,மறைவதை..

என் வாழ்க்கை முழுவதும் நான் மழையைக் கேட்டிருக்கிறேன்என் முடி இப்போது வெளுத்திருக்கிறது.இருந்தாலும் வசந்த கால நதி மீது பெய்யும்இரவு மழையை நான் அறிந்திருக்கவில்லை.


இக்கவிதையில் எப்போதும் இருப்பவற்றை விழிப்படைந்த மனம் நோக்கும்போது ஏற்படும் திடுக்கிடலை  பதிவு செய்கிறது. ஒருவகையில் கவிதை கதை இன்னும் சற்று விரிவாக சொல்வதானால் கலை, அறிவியல் கண்டுபிடிப்புகள் போன்றவை  கூட இத்தகைய அகம் விழிக்கும் தருணங்களால் ஆனதே. ஆர்கிமெடீஸ் தத்துவம், கனவில் தோன்றிய பென்சீன் வடிவம், நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள் பழம் என பல உதாரணங்களைச் சொல்ல முடியும். சட்டென வேறொரு நிதர்சனத்தில் விழித்தெழுவது. பொருள்முதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் புறவயமான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் தருணங்களாக காண்பதற்கு மாற்றாக கருத்துமுதல்வாதிகள் ஒட்டுமொத்த மானுட வரலாறையும் இத்தகைய விழிப்புணர்வின் தருணங்களாக மட்டும் காண முடியும். ஆதி மொழி என்பதே பிரபஞ்சம் தங்களுக்குள்ளாக உரையாடிக்கொண்டிருக்கும் மொழி. விழித்தெழும் மனம் அந்த மொழியையும் உரையாடலையும் கவனிக்கத்தொடங்குகிறது. உரையாடத் தொடங்குகிறது. தானறிந்த மொழியில் அதை பிரதிசெய்ய மானுட மனம் யத்தனிக்கிறது. கவி காளிதாசனின் நாக்கில் அன்னை எழுதியது முதல் மூங்கையான் கவிஞனானான். அன்னையென்பது சக்தி, பிரகிருதி, கட்டற்ற இயற்கையின் வடிவம். சாமான்ய மொழியில் உழன்றவனை ஆதி மொழி நோக்கி விழிக்க செய்தாள் அவள். சூரிய ஒளியில் ஒளிரும் ஒற்றை புழு நீடுழி வாழ்க எனும் செய்தியை எப்படி ஜெயமோகனுக்கு சொல்லியிருக்க இயலும்? கவி ஆதிமொழி வழியாக சொல்லின்மையின் அனுபவத்தை கடத்த முயல்கிறார். 


போகன் மொழியாக்கம் செய்த மற்றோரு கவிதை அன்றாடத்தின் உறைகணம் அளிக்கும் திறப்பைச் சொல்கிறது. 


ஏரியைக் கடந்து செல்லுதல்.


ஒரு மீனவன் தனது படகை வெகுதூரம்ஏரியினுள் ஓட்டிச் செல்கிறான்.எனது முதிய கண்கள் அவன் வழியைக் கடைசிவரை பின் தொடர்கின்றன.காட்சிக்குள் துல்லியமாக அவன் வருவதும் போவதுமான நெசவை..

பிறகு இது வினோதமடைகிறதுசட்டென்று அவன்  நாணலின் மீது சம நிலையுடன் நிற்கும்ஒரு நீர்ப்பறவை ஆகிவிட்டான்


 


 நித்ய சைதன்ய யதியின் ஒரு கவிதையை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்ளலாம்.


காலைப்பனியை நான் முத்தமிடுவதில்லை

நீ ஒரு மலர்

வண்டெதுவும் முத்தமிடாத  மலர்

நீ ஒரு பாடல்

மறையக்கூடிய உதடுகளால் இசைக்கப்படாத பாடல்

என் அகத்தை தூய்மையாக்கும்

இறைகூறும் இரகசியம் நீ

பேரின்பப் பரவசம் நல்கும்

இன்னிசைப் பாடல் நீ

நிலவை நான் கைகளில் அள்ளுவதில்லை

காலைப்பனியை முத்தமிடுவதுமில்லை

உன்னை என் கனவுகளில் காண்பதும்

நிலைபேற்றின் இன்னிசையை என

உன்னிடம் அன்பு பாராட்டுவதும் ஒழிய

வேறொன்றையும் நான் விழையவில்லை

 

கால்களை சேறாக்கிக் கொள்ளாமல்

மண்ணில் நடக்கும் ரகசியத்தை

உன்னிடமிருந்து கற்கவேண்டும் நான் 


இக்கவிதையின் இறுதிவரிகளை 

'அவன் 

வனத்தில் நுழையும்போது

புற்கள் நசுங்குவதில்லை

நீரில் இறங்குகையில் 

சிற்றலையும் எழுவதில்லை' (பெயரற்ற யாத்ரீகன், ஜென் கவிதைகள், தமிழில் எம்.யுவன்) எனும்  ஜென் கவிதையுடன் சேர்த்து வாசிக்க இயலும். 


மறை ஞான கவிதைகள் பண்பாட்டு கூறுகளில் இருந்து சில குறியீடுகளை பயன்படுத்தி கவிதையை சமைத்துக்கொள்ளும். மீமொழியின் கூற்றுகளை பயன்படுத்திக்கொள்ளும்.  கபீரின் இந்த கவிதையை உதாரணமாக சொல்லலாம். 


வெண்பட்டாடை


மெல்லிய

மிக மெல்லிய வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

அவனுக்கு வாய்த்த ஊடு இழை எது?

பாவு இழை எது?

ஆடையை நெய்ய

தேர்ந்த நூல் எது?

இங்கலத்தை தறியாக்கி

பிங்கலத்தை கயிறாக்கி

சூக்குமத்தை நூலாக்கி

வெண்பட்டாடையை

அவன் நெய்கிறான்

எண்ணிதழ் தாமரையைத் 

தகளியாக்கி

ஐம்பூதங்களையும் முக்குணங்களையும்

நூல்புரியாக்கி

அவன் ஆடை நெய்கிறான்

தறியை அசைத்தசைத்து

ஒவ்வொரு நூலையும் சரிபார்த்து

அன்னையின் கருப்பையில் பத்து மாதங்கள்

நெய்கிறான்

எடுத்தணிந்த தேவரும் முனிவரும்

மனிதரும் அதைக் கறையாக்கி நிற்க

சேவகன் கபீரோ

அழுக்கின்றி

அப்படியே வைத்திருக்கிறான்

அந்த வெண்பட்டாடையை. 


இடம், பிங்கலம், சுழுமுனை போன்ற தாந்திரிக குறியீடுகள் இக்கவிதையில் பயன்படுத்தப்பட்டுள்ளதை கவனிக்க முடியும். மற்றொரு கவிதையில் கபீர் பிரபஞ்சமளாவிய சித்திரத்தை அளிக்கிறார். 'நானோ/ எனது தறியின்/

ஊடு இழைக்கான நூல்களைப்/ பிணைத்துக்கொண்டிருந்தேன்/ பூமியையும் / ஆகாயத்தையும் பூட்டி/

அவன் தறியைச் செய்கிறான்/ சூரியனையும் சந்திரனையும்/ 

சட்டங்களாக்கி/ ஒருசேர/ அசைக்கிறான்.'


திருமந்திரம், சித்தர்பாடல்கள் போன்றவை இந்த வகைப்பாட்டிற்கு உதாரணமாக சொல்லலாம். அக்கம்மாதேவியும் 'அத்தை மாயை/ மாமன் பிறவி/

மூன்று இளைய மைத்துனர்கள் புலி போன்றவர்கள்/ நான்கு நாத்திகள்/ கேள் தோழி/ ஐந்து மூத்த மைத்துனர்களுக்குத் தெய்வமில்லை/ 

ஆறு ஓரகத்திகளை மீறமுடியவில்லை/, தாயே/ ஏழு பணிப்பெண்கள் என்னைக் காவல் காக்கிறார்கள்/ கர்ம வினையான என் கணவனின் வாயில் அறைந்து/  

சிவனோடு சோரம் போவேன்/ மனமென்ற சுகப் பிரசாதத்தால்/

சிவனோடு கலந்து அனுபாவத்தைக் கற்றேன்/ ஸ்ரீசைல மலையின் உடலழகிய/ சென்னமல்லிகார்ச்சுனனைக்/

கூடுகையில்/

நல்ல கணவனைச் /சேர்ந்திருக்கிறேன்.'


நேரடி பொருளுக்கு அப்பால் பல மறைபொருளை கொண்டவை. அண்மைய காலத்தில் வந்த சிறந்த மற்றும் சிக்கலான மறைஞான கவிதை காவியம் அரவிந்தரின் சாவித்திரி. மறைஞான கவிதைகளின் மிக முக்கியமான இயல்பு அக - புற ஒத்திசைவு. அண்டத்திலும் பிண்டத்திலும் உள்ளவற்றை இணைவைத்தல். இயற்கைக்கும் மனிதனுக்குமான (அப்படிச்சொல்வதே அபத்தமாக தோன்றும்) நீட்சியை, உறவை, ஒத்திசைவை பேசுபவை. இவை நவீன கவிதைகளிலும் தொடர்வதை கவனிக்க முடியும். 


'ஐக்கிய வேட்கை கவிதை' ஆன்மீக கவிதைகளில் இவையே மிகப்பெரும்பாலானவை. உணர்ச்சிகரமானவை. காதலர்-கணவர், தோழர், அடிமை,  தாய் - தந்தையர், பிள்ளை போன்ற பாவங்களை சூடிக்கொள்பவை. நாயக நாயகி பாவம் , தாஸ பாவம் ஆகியவையே பெரும்போக்கானவை. பொதுவாக இக்கவிதைகள்  மூன்று உணர்வு நிலைகளில் செயல்படுவதை கவனிக்க முடியும். பெருங்காதலின் காத்திருப்பை தவிப்பை சொல்பவை முதல் நிலை, அடைதலின், இயையதலின் உவகையை சொல்பவை இரண்டாம் நிலை, அடைந்தது கைவிட்டுபோகும் பிரிவாற்றாமை நிலையை அரற்றுவது மூன்றாம் நிலை.  காம வேட்கையை உன்னதமாக்கி ஆன்மீக அனுபவத்தை அளிப்பவை. தூய காதல் கவிதைகளாக இவற்றை வாசிக்க இடமுண்டு. தமிழில் ஆண்டாள், மாணிக்கவாசகர் காரைக்கால் அம்மையார் ஆகியோர் தமிழின் முதன்மை கவிகள். சூஃபி கவிகளையும் இவ்வரிசையிலேயே வைக்க முடியும். 



பற்றியெரியும் நகரம்


தீப்பற்றியெரிகிறது!

விறகேதுமின்றி எரியும் அதை

அணைக்கும் சக்தி படைத்த

மனிதன் எவரும் இங்கில்லை

எனக்குத் தெரியும்

அது உன்னிடமிருந்துதான்

பரவியது!

அந்தத் தீ

உலகம் முழுவதையும்

எரிக்கின்றது

அந்தப் பொறி

துவங்கியது

நீரிலிருந்துதான்

எரிய எரிய அது 

நீரை அவிக்கின்றது

முடிவின்றி எரியும் அது

கண்ணியர் ஒன்பது பேரையும்

எரிக்கின்றது

அதை அவிக்கும்

நீர் யாருக்கும் அகப்படவில்லை

நகரம் பற்றியெரிகிறது

காவலரோ உறங்குகின்றனர்

அவர்களது கனவில்

அவரவர்களின் வீடுகள்

பத்திரமாய் இருக்கின்றன

ஓ இராமா

உனது நிறங்கள் எரிகின்றன

துடிக்கின்றன.

முடவன்

அறிவை நம்பி இருக்கிறான் 

அதை மீறி

அவன் யோசிக்கலாகாது.

அதை எண்ணியே

வாழ்நாள் முழுதும் வீண் போய்விட்டது

உடலோ

தணியாத தாகத்தோடு தவிக்கிறது

பிறர் முன் நடிப்பவனை விடப்

பெரிய முட்டாள்

வேறெவருமில்லை

அவன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.


கபீர் சொல்கிறேன்

ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே



இது கபீரின் கவிதை‌.  'ராமனின் கண்களில்

நாம் அனைவரும் பெண்களே'. ஏறத்தாழ இதே வரியை அக்கம்மாதேவி சென்ன மல்லிகார்ச்சுனனுக்கும் மீரா கண்ணனுக்கும் பொருத்திச்சொல்கிறார்கள். மீரா பாடுகிறாள்


போகாதே போகாதே


போகாதே போகாதே என

நின்பாதம் பணிகிறேன்.

நான் உனக்கானவள்.

பக்தியின் பாதை எங்குள்ளது என எவரறிவர்

எங்கு செல்வதென நீயே வழிகாட்டு

என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும். 

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.

மீரா சொல்கிறாள்- கிரிதரனே என்னிடம் துளி ஒளியுண்டு

எனக்கதை நின்னுடையதுடன் கலக்க வேண்டும்.



 'காதலின் நுனிநாக்கால் தீண்டப்பட்டவனே அறிவான் என் அரற்றலை' எனும் கபீரின் வாக்கு ரூமிக்கும் அக்கம்மாதேவிக்கும் ஆண்டாளுக்கும் மீராவுக்கும் துல்லியமாக பொருந்தும். இக்கவிதைகள் பெரும்பாலும் கடல், நிலவு பறவை போன்ற பழக்கப்பட்ட அன்றாட படிமங்களை சரளமாக பயன்படுத்துபவை. அவற்றின் ஆற்றல்  முழுக்க முழுக்க உணர்வுநிலையிலிருந்து வருபவை. பெரும் பித்து நம்மைப்பற்றி கொள்ளும். 'என் உடல் பத்தியாகட்டும்,  சந்தனமாகட்டும். 

அது உன்னால் கொளுத்தப்படட்டும்.

வெறும் சாம்பலாக நான் உதிர்ந்த பின்

உன் தோளிலும் மாரிலும் எனை பூசிக்கொள்.' என அனத்துகிறாள் மீரா. உன்னை எப்போது காண்பேனோ அப்போது வாரி விழுங்கிவிட வேண்டும் என்றிருந்தேன் ஆனால் நீயோ என்னை முந்திக்கொண்டு என்னை முழுதாக விழுங்கிவிட்டாய் என்கிறாள் ஆண்டாள்1. மேலும் நாளுக்கு நாள் உயிரையும் உண்டு என்னை முழுவதும் உண்டான் என்கிறாள் அவள்2. பதினாறாயிரம் பேர் பாத்திருக்க பொதுவில் மாதவனின் வாயமுதத்தை நீ மட்டும் பருகுகிறாயே அதை நிறுத்து என வெண்சங்கிடம் சினந்து கொள்கிறாள்3. 'சுகமே படுக்கை பார்வையே அணிகலன்

ஆலிங்கனமே ஆடை முத்தமே ஊட்டம்

காதல் பேச்சு தாம்பூலம்

உணர்ச்சி மோகனம் நறுமணத் தைலம்

சென்னமல்லிகார்ச்சுனனோடு கலத்தல் பரமசுகம் அம்மா!' என்கிறாள் அக்கம்மாதேவி. 

'வாழ்வைத் துறந்தபோது நான்/ கடவுளின் உறைவிடம் ஆனேன்/ என்னை நான் எரித்தபோது/ என்னவானேன் என சொல்லக்கூடுமோ?/

உலகில் அனைவரும் தொடர்ந்து வாழ விரும்புகிறார்கள்/ 

ஆனால் என் நண்பனே, நான்/ மரணத்தில் எரிக்கப்பட விழைகிறேன்/ 

ஓ மொய்ன், காதலனோடு/ இணைவதற்கு உயிரை அளிக்க வேண்டும்/ 

வாழ்வை இழப்பது காதலில்/ அடைவதென்றாகும் அக்கணமே' இவ்வரிகள் க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி எனும் சூஃபியின் வரிகள். இவை அனைத்துமே தன்னை இழந்து காதலை பெற விரும்புபவை. சிறிய பாதுகாக்கப்பட்ட சுயமழிந்து பெரிய கட்டற்ற சுயத்துடன் தன்னை தொடர்புறுத்திக்கொள்ளுதல் எனும் நிலையையே இவை சுட்டுகின்றன. 




காதலின் வழி


நுட்பமான விவாதமல்ல

பிரளயமே

அங்கு செல்வதற்கான

வாயில்

தங்களது சுதந்திரத்தைப் 

பெருவானில் வட்டமிட்டுக்

களிப்பெய்துகின்றன

பறவைகள்

அவை எப்படிப்

பயில்கின்றன பறத்தலை?

அவை விழுகின்றன

அவ்வீழ்தலில்

வழங்கப்படுகின்றன

சிறகுகள்



இது ரூமியின் கவிதை‌. வீழ்தலில் வழங்கப்படும் சிறகு என்பது ஒருவகையில் சரணடைதல் எனும் நிலையை சொல்கிறது. மனிதன் தனக்கு அளிக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் தன்னிச்சையை (freewill) அவனை விட பெரிய ஆற்றலிடம் ஒப்படைப்பதன் வழி விடுதலை அடைகிறான் என்பதே சரணாகதி நிலை. ஆட்கொள்ளுதல் நிகழும்போது அவன் எதற்கும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. ஒரு வகையில் இது முழுமையாக அகம் விழித்த தருணமும் கூட.



இழிந்து இழிந்து உய்வடைவது இவ்வகை கவிதைகளின் மற்றொரு பொது இயல்பு. 

'வீடு வீடாகப் போய்க் கைநீட்டி வேண்ட வை ஐயனே

வேண்டினாலும் கொடுக்காதபடி செய் ஐயனே

கொடுத்தாலும் நிலத்தில் விழச் செய் ஐயனே

நிலத்தில் விழுந்தாலும் நான் எடுத்துக்கொள்ளும் முன்பே

நாயை எடுக்கச் செய் 

சென்னமல்லிகார்ச்சுனனே.' என்கிறாள் அக்கம்மாதேவி. அகந்தையை முழுமையாக கடக்க அவள் கண்ட வழிமுறை இது. காரைக்கால் அம்மையார் 

'பிறையும் புனலும் அனல் அரவும் சூடும்

இறைவர் எமக்கிரங்கா ரேனும் - கறைமிடற்ற

எந்தையார்க் காட்பட்டேம் என்றென் றிருக்குமே

எந்தையா வுள்ள மிது⁠' (அற்புத திருவந்தாதி 23). 

எனும் பாடலில் ஈசன் தன் அன்புக்கு மனமிரங்கவில்லை என்றாலும் அவருக்கு ஆட்பட்டவள் என்றவரையில் உவகை கொள்கிறாள். கடவுளை கணவனாகவும் காதலனாகவும் கைக்கொள்வது பெரும் இன்னல். பித்தின் பேரன்பை அவன் புரிந்துகொள்வதில்லை. பாராமுகத்துடன் கடந்து செல்கிறான். ஆனால் இந்த இம்சையே பெரும் சுகமும் கூட. 


அந்தவொரு முத்தத்திற்காக


வாழ்வெல்லாம் 

வேண்டிக் காத்திருக்கிறோம்

மெய்தீண்டி ஊன் உருகும்

அந்தவொரு முத்தத்திற்காக


கடல் அலை

யாசிக்கிறது முத்திடம்

சிப்பியை உடைத்து வெளிவர


எவ்வளவு தீவிர உத்வேகத்துடன் 

தேடுகிறது அல்லிமலர்

கட்டுக்கடங்காத

காதலன் ஒருவனை!


இரவில், 

சாளரத்தைத் திறந்து

நிலவை அழைப்பேன்

அதன் முகத்தே

என் முகத்தோடு

நெருக்கமாகப் பொருந்த

உயிர்முச்சை எனக்கு வழங்க


மொழியெனும் வாசல் அடைபட்டு

காதலின் சாளரம் திறக்கட்டும்

நிலவுக்கு வழி

வாசல் அல்ல

சாளரமே


இது ரூமியின் கவிதை. பேரனுபவத்திற்கான, பெருங்காதலின் தீண்டலுக்கான காத்திருப்பின் தகிப்பை சொல்கிறது. கவிதை உள்ளத்திலிருந்து பெருகியபடி இருக்கிறது.


க்வாஜா மொய்னுதீன் சிஷ்டியின் ஒரு கவிதை வாசிக்கும்போது மனம் அமைதியையும் ஆறுதலையும் உணர்கிறது. அருகிருந்து தேற்றும் நண்பனின், காதலரின் குரல். கவிதையில் சிடுக்காக ஏதுமில்லை. கவித்துவமான படிமங்களோ புதிய திறப்புகளோ இல்லை. ஆனாலும் அதன் எளிமையின் வலு வாசகரை ஆட்கொள்கிறது. 


என்னிடம் வருக நண்பனே 

எப்போதும் உண்மையாயிருப்பேன் 

நீ என்ன கொண்டு வந்தாலும்

அதை வாங்கிக்கொள்வேன்... நான்.


நீ உளம் மகிழ்ந்து 

அற்புதத்தைப் பார்க்க விரும்பினால் அருகில் வருக: 

தோட்டமாய், மலர்விரிப்பாய், மலராய் 

இருக்கிறேன் நான்.


உன் பாவங்களை நினைத்து 

இதயம் வருந்தினால் என்னிடம் வருக  

நோய்கொண்ட இதயங்களின்  

மருத்துவன் நான்.   


பலிபீடத்தில் இரகசிய இடங்களில் 

வணங்கப்படுபவன் மட்டுமல்ல: 

குடிகாரர்களின் இசைக்கலைஞன் நான், 

மதுவறைகளில் மதுஊற்றுபவன் நான். 


மடாலயங்களின் ஏகாந்தத்தில்

எனைத் தேடுபவனே வெளியே வருக 

சந்தை வெளியில் உனை அடைந்திட 

அலைந்து திரிகிறேன் நான்.


ஓட்டுபோடப்பட்ட சூஃபி மேலாடைக்கும்  

பொன்மகுடத்துக்குமான ஆசையை விட்டுவிடு 

என் தொப்பியையும் மேலங்கியையும்  

உனக்கு வழங்குகிறேன் நான்.

 

உன் இயலாமையைக் கண்டு 

மனம் தளரவோ கலங்கவோ வேண்டாம்... 

ஒவ்வொரு இடத்திலும் துணையாகவும், 

இதயத்தில் அன்பாகவும், இருக்கிறேன் நான்.


துன்பத்துடன் உன் இதய ரகசியங்களை சொல்ல வேண்டாம் 

உன் ஆத்மாவின் தனித்த அறையில் 

அதற்குத் துணைநின்ற சதிகாரனாக 

இருக்கிறேன் நான்.


உனைச் சுற்றி வட்டங்களை

எவ்வளவு காலம் வரைவாய்?

மையப் புள்ளியாக அமைக

உனைச் சுற்றி வருவது நான்.. 


நீ ஒரு முத்தென மயங்கும் களிமண்: பயனற்றது! 

தெய்வீகப் பெருங்கடலின் 

விலைமதிப்பற்ற முத்தை 

கண்டுதருகிறேன் நான்!


காதலின் நெருப்பால் எரிக்கப்பட்ட 

மொய்னின் உலர்ந்த விறகான உடல்  

ஒரு தீப்பொறியாக மாறியது 

அவர் தன்னிடம் சொன்னார் நெருப்பாகிறேன் நான்!

 

நாயக நாயகி பாவம் என்பது ஓருவகையில் சங்க இலக்கியத்தின் தலைவன் தலைவி பாவத்துடன் ஒப்பிடத்தக்கது. நாயக நாயகி பாவமாக இவ்வுணர்வு மேல்நிலையாக்கத்தை அடைகிறது. கீத கோவிந்தத்தை இரு மரபுகள் முதன்மை நூலாக கருதுகின்றன. சைதன்யரின் வழி வந்தவர்கள் உலகியல் தளத்தின் விளக்கங்களை பொருட்படுத்தாமல் ராதா மாதவத்தை கடவுளுக்கும் பக்தனுக்கும் இடையிலான ஜக்கிய வேட்கையின் குறியீடாக மட்டும் கண்டார்கள். இதற்கு மாறாக‌ சஹஜிய மார்க்கம் எனும் தந்திர மரபு கிருஷ்ணனாகவும் ராதையாகவும் தன்னை உணர்ந்து இயல்பாக கூடுவது என விளக்கிக்கொண்டனர். வங்காளத்து பால் மரபு இதன் நீட்சியே. காதலரை கடவுளாக காண்பதா, கடவுளை காதலராக காண்பதா, இவற்றில் எது சரியானது, எது உத்தேசிக்கப்பட்டது என தீரா விவாதங்களை நடத்தினாலும் தீர்மானமான முடிவை எட்ட இயலாது. ஆனால் காதலில் மனிதர் கடவுளின் முத்தத்தின் ஈரத்தை உணர முடியும் என்பதே இக்கவிதைகளின் சாரம். கடவுளுக்கு நெருக்கமாக இருக்கும் நிலை அதுவே. புலனும் அகமும் விழித்து மலர்ந்து கிடக்கும். 




இந்த நாயக நாயகி உறவு தலைகீழாகி பக்தன் ஆணாகவும் கடவுள் பெண்னாகவும் ஆவது அரிது. அபிராமி அந்தாதியும் சவுந்தர்ய லகரியுமே சட்டேன நினைவுக்கு வருகிறது. 


என் பிதற்றல்களெல்லாம்  ஜபமாகட்டும். 

என் செய்கைகள் எல்லாம் உன்னை வழிபடுவதற்கான முத்திரைகளாகட்டும். 

என் நடையெல்லாம் உன்னை வலம் வருவதாகட்டும்

என் உணவெல்லாம் உன் வேள்விப் படையலாகட்டும்

நான்  படுத்துக்கொள்வது உன்னை வீழ்ந்து வணங்குவதாக இருக்கட்டும்.

இன்னும் சுகமாக, எனது தனி முயற்சி ஏதுமின்றி எவையெல்லாம் செய்கிறேனோ அவை எல்லாம் உனை வணங்கும் முறையாகட்டும். 

-சவுந்தர்ய லகரி 27. 


சங்கரரின் சவுந்தர்ய லகரியில் வரும் இக்கவிதை ஒரு மந்திரமும் கூட. எளிமையும் செறிவும் ஒரு சேர உள்ள அரிய நிலை. முழு விழிப்படைந்த நிலையில் செய்யப்படும் செயல்யாவும் இறையின் பொருட்டே என்றாகிறது. வேதாந்தம் நமக்கு நிகழும் அனைத்தையும் ஈஸ்வர பிரசாதம் என நன்மை தீமை எனும் இருமைக்கு அப்பால் முழுமையாக பணிந்து ஏற்கச்சொல்கிறது. புரியும் அனைத்து செயல்களையும் ஈஸ்வர அர்ப்பணம் என கர்ம பலனை துறந்து நடக்க சொல்கிறது. இக்கவிதை அந்நிலைக்கான இறைஞ்சுதல்.




இக்கவிதைகள் நேரடியானவை, எளிமையானவை, உயிர்ப்புடைவையும் கூட. இந்த குரல்களின் இன்றைய நீட்சியை ஸ்ரீவள்ளி கவிதைகளிலும் ஜெயமோகனின் நீலத்திலும் காண முடியும். நீலத்தை நீள் கவிதையாக அல்லது வசன கவிதையாக கருதுவது உகந்தது. 'ஐக்கிய வேட்கை' கவிதைகள் வேதாந்த அனுபவத்தை அடித்தளமாக கொண்டவை. பிரம்மத்தை சத்தியமாக கண்டு பிற அனைத்தையும் மாயையாக காணும் நோக்கு அத்வைத வேதாந்தத்தினுடையது என்றால் விசிஷ்டாத்வைதம் மாயை என ஒதுக்கவதை மறுதலிக்கிறது. உருவும் அருவும் இறையின் வடிவமே என்கிறது. மெய்யியலுக்கும் கலைக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்கு விசிஷ்டாத்வைதம் ஒரு நல்வாய்ப்பை அளிக்கிறது. மெய்யியலுக்கு எதிர்வினையாக அதையொட்டி கலை ஒழுகுவது ஒருவகை என்றால் கலை ஒரு மெய்யியல் பள்ளிக்கான விதையாக ஆவது கலையின் மகத்துவத்தை பறைசாற்றுவது. ஆண்டாளின் வழியாகவும் ஆழ்வார்களின் வழியாகவும் பெருகியோடிய கவிதையே ராமானுஜரின் விசிஷ்டாத்வைதத்திற்கு அடிப்படை. 


மீரா,  கபீர், அக்கம்மாதேவி என அனைவருக்கும் உள்ள மற்றொரு பொதுத்தன்மை என்பது அவர்கள் கலகக்காரர்களும் கூட. வைதிக மரபு, சடங்குகள், தகுதிகள் சார்ந்து விடாமல் கேள்விகளை எழுப்புபவர்கள். தெலுங்கு கவி வேமனரின் பாடல்கள் பெரும்பாலும் இவ்வகையிலானவை.  'எச்சில் எச்சில் என்று சொல்லும் அந்த வாயினாலேயே வேதங்களைப் படிக்கும் பைத்தியக்காரர்களே! யோசித்துப்பார்த்தால், வாயிலிருந்து வரும் அதுவும் எச்சில் தானே! விஸ்வதாபிராமா கேளடா வேமனை'. 

 நம் சித்தர் பாடல்களிலும் இத்தகையத்தன்மை உண்டு. ஆன்மீகத்தை அமைப்பாக்கம் செய்வதற்கு எதிரான கலகக்குரல்களாக இக்கவிதைகள் சமூக முக்கியத்துவம் பெறுகின்றன. இவர்களுடைய கலகம் பெரும்பாலும் செரிந்த அக வாழ்விற்கு தடையாக புற வாழ்வு உள்ளது எனும் உணர்விலிருந்து எழுகிறது. உருகி உருகி காதல் மொழி பேசும் இவர்களால் கடுமையாக நிராகரிக்கவும் வெறுத்து ஓதுக்கவும் இயல்வது சுவாரசியமான முரண்தான். பட்டினத்தாரின் கவிதைகளில் உள்ள பெண் வெறுப்பை நினைவில் கொள்ளலாம். ஐக்கிய வேட்கை கவிதைகளும் மறைஞான கவிதைகளும் நாணயத்தின் ஒரு பக்கம் என்றால் அதன் மறுபக்கம் கண்டன கவிதைகள். இந்த முரணியக்கத்தை நவீன  கவிதைகளுக்கும் நீட்டித்து காண முடியும். கண்டன கவிதைகள் உரக்க ஒலிப்பவை, பொருத்தமற்ற உணர்வுநிலை என தோன்றினாலும் கூட ஆன்மீக கவிதைகளின் இன்றியமையாத பகுதியாக காண வேண்டியுள்ளது. கவிஞரின் அகம் முடிவற்ற ஊசலில் ஆடிக்கொண்டிருப்பதை உணர்த்துகிறது. 


சந்தனத்தை அறுத்துத் துளைத்துத் தேய்த்தால்

துக்கத்தில் வாசனையைத் துறக்குமா?

தங்கத்தைத் தட்டியுருக்கினால்

வேதனையில் வெந்து களங்கப்படுமா?

கணுக்கணுவாக வெட்டி கரும்பைக் கொணர்ந்து 

செக்கிலரைத்து வேகவைத்து 

பாகாக்கி சர்க்கரை செய்தால்

நொந்தேன் என இனிப்பதைத் துறக்குமா?

முன்னர் நான் செய்த இழிவுகளை

முன்னிலைப்படுத்தினால் உனக்கே கேடு!

என் தந்தை சென்னமல்லிகார்ச்சுனனே,

கொன்றாலும் சரணமெனாமல் உயிர்த்தரிக்க மாட்டேன்.


இது அக்கம்மாதேவியின் வசனம். முந்தைய இழிவுகளும், வாழ்வின் அன்றாட இக்கட்டுகளும் வருத்திய பின்னும் கூட கவிதையையும் சென்ன மல்லிகார்ச்சுனனையும் இறுக பற்றிக்கொள்கிறாள். தன் நிலைக்காக எவரையும் பழிக்கவில்லை. தன் இயல்பில் முழுக்க லயித்துக்கிடப்பதே சுகம். கண்டன போக்கிலிருந்து அரவணைக்கும் மன இயல்பிற்கு கவிதை பயணிக்கிறது. 


ஆன்மீகவாதிகளின் கவிதை வெளிப்பாட்டிற்கும் கவிஞர்களின் ஆன்மீக வெளிப்பாட்டிற்கும் உள்ள முக்கிய வேறுபாடு என்ன என்பதை ரூமியின் 'கொடி மீதல்ல' கவிதையை கொண்டு புரிந்து கொள்ள முடியுமா என பார்க்கலாம். ஆன்மீகவாதி சொல்லின்மையை இலக்காக்கிக்கொண்டு சொற்களின் ஊடாக பயணிக்கிறார். உரிய உயரத்தை எட்டியதும் அவர் சொற்களை உதிர்த்து மேலெழெவார். கவிஞருக்கு கவிதை உபாசனை மார்க்கம் மட்டுமல்ல உபாசனை மூர்த்தியும் கூடதான். நாத யோகம், லய யோகம் போல ஆதி மொழி வழியாக பிரபஞ்சத்துடன் ஒன்றுவதை கனவு காண்கிறார். ரூமியின் இந்த கவிதை சொற்களின் நிறைவின்மையை சுட்டுகிறது. 



கொடி மீதல்ல


எனது வார்த்தைகளை

வாங்குபவர்களுக்காக

விழைந்த காலம்

ஒன்றுண்டு


இப்போதோ

வார்த்தைகளிலிருந்து என்னை

யாரேனும் விடுவிக்கமாட்டார்களா

என ஏங்குகிறேன்


வசீகரமும் ஆழமும் கொண்ட

படிமங்கள் பலவற்றை

நான் புனைந்திருக்கிறேன்

ஆபிரஹாமைப் பற்றியும்

பிரதிமைகளுக்கு பெயர்போன

ஆபிரஹாமின் தந்தை அஜாரைப்

பற்றியுமான காட்சிகள்

நான் புனைந்தவற்றின் மீது 

மிகவும் சலிப்புற்றேன்


பின்னர்

உருவமற்றதொரு படிமம் வந்தது

விட்டுவெளியேறினேன் நான்

இனி வேறொருவரைத் தேடிக்கொள்ளுங்கள்

படிமங்கள் வடிவமைக்கும் வேலையிலிருந்து 

விலகிவிட்டேன்


ஒருவழியாகப்

பித்துநிலையின் சுதந்திரத்தைப்

புரிந்துகொண்டேன் நான்


ஏதோவொரு படிமம் வருகிறது

அலறுகிறேன் நான்

'வெளியே செல்!'

சிதறி மறைகிறது அது.


காற்றுக்குக் காதல்

கொடி தாங்கும் கம்பத்தின் மீதே

கொடி மீதல்ல

காதலின் சாரம் 

அதுவே



நவீன கவிதைகளில் ஆன்மீகத்தை பேசியவர்கள் என பாரதி தொடங்கி  ந. பிச்சமூர்த்தி, பிரமிள், தேவதேவன், ஸ்ரீ வள்ளி என ஒரு வரிசையை சுட்டிக்காட்ட இயலும்‌. நவீன கவிதை  தன்னை ஆன்மீகத்திலிருந்து விடுவித்துக்கொள்ள முயல்கிறது. அதன் வழி பல புதிய திசைகளில் பல்வேறு சாத்தியங்களுடன் தொடர்ந்து பயணிக்கிறது. இது ஒரு இன்றியமையாத இயல்பான மாற்றம். எனினும் ஆன்மீக கவிதைகள் ஓரு சரடாக எப்போதும் உயிர்த்திருக்கும் என்றே எண்ணுகிறேன். 


  • சுனில் கிருஷ்ணன்


1. வாரிக்கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று

ஆர்வு உற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்

பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்

கார் ஒக்கும் காட்கரை அப்பன் கடியனே


 2. கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான்


நாளுநாள் வந்து என்னை முற்றவுந்தானுண்டான்


காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு


ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.


3.  பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்

வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்

சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே



கட்டுரைக்கு உதவிய நூல்கள்


தாகங்கொண்ட மீனொன்று, ரூமி, தமிழில்- என். சத்தியமூர்த்தி.


புன்னகைக்கும் பிரபஞ்சம்- கபீர்- தமிழில் செங்கதிர்


மூச்சே நறுமணமானால் - அக்கம்மாதேவி- ஆங்கில மொழியாக்கம் வினய சைதன்யா. தமிழில் - பெருந்தேவி. (விரைவில் காலச்சுவடு வெளியீடாக வெளிவர உள்ளது)


பெயரற்ற யாத்ரீகன் - ஜென் கவிதைகள்- தமிழில் எம்.யுவன்- மறுபிரசுரம் விரைவில் நூல்வனம் வெளியிட உள்ளது.


வேமனர் மாலை- தமிழில் மதுமிதா. தமிழினி.‌


Mira bhai ecstatic poems- மூலத்திலிருந்து ஆங்கிலம் ராபர்ட் ப்ளை. தமிழில் - சுனில் கிருஷ்ணன். 



இருளுக்குள் ஒளிந்திருக்கும் இருள், தாவோ தே ஜிங், லாவோசி. தமிழில்- மலர்ச்சி பிரபாகரன். வெளியீடு- எழுத்து.



https://www.jeyamohan.in/1333 - சிருஷ்டி கீதம் மொழியாக்கம்.


இந்து ஞானம் ஒரு எளிய அறிமுகம். க்ஷிதி மோகன் சென். சுனில் கிருஷ்ணன், சூக்தம் மொழியாக்கம் ஜடாயு. 


Shri aurobindo or adventurer of consciousness - satprem.


நாச்சியார் திருமொழி - dravidavedam.org


அற்புத திருவந்தாதி காரைக்கல் அம்மையார்


The saundarya lahari- Nitya chatanya yati commentary. 


https://gurunitya.wordpress.com/2021/08/30/%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/


க்வாஜா மொய்னுதீன் சிஷ்டி கவிதைகள் தமிழில் சுபஸ்ரீ. 


Gita govindam - Love songs of krishna a radha- translated by Lee SIegel. Clay sanskrit



நன்றி 

பெருந்தேவி, போகன், ஜா. ராஜகோபால், சுந்தர வடிவேலன், மதுமிதா. 



Saturday, July 31, 2021

தத்தளிப்புகளின் கலைவடிவம் - புரவி நேர்காணல்


புரவி ஜுலை 2021 இதழில் என் நேர்காணல் ஒன்று வெளியாகியுள்ளது. வாசகசாலை நண்பர்களுக்கும் நேர்கண்ட எழுத்தாளர் கமலதேவிக்கும் நன்றி. 
வாசகசாலை 'புரவியை' நடத்துவதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாக அதன் அமைப்பாளர் தெரிவித்தார். 

இது அவர் அனுப்பிய செய்தி.

ஒவ்வொரு மாதமும் இதழ் அச்சுக்குப் போவதற்கு முன் வருகிற அதே பிரச்சனைதான். பண நெருக்கடிகளைத் தாண்டி ஒவ்வொரு இதழையும் அதே தரத்துடன் கொண்டு வருவதென்பது பெரிய போராட்டமாக உள்ளது. முடிந்தவரை நமக்குத் தெரிந்த வாசகர்கள், படைப்பாளிகள் மற்றும் நண்பர்களிடம் தொடர்ந்து சந்தா குறித்து வலியுறுத்திதான் வருகிறோம். ஒவ்வொரு மாதமும் சந்தாதாரர்களை அதிகரித்துக் கொண்டே சென்றால் மட்டுமே இதழை எந்த நெருக்கடிகளுமின்றி கொண்டு வர இயலும். எனவே இயன்ற வாசகர்கள் தயவுசெய்து சந்தா செலுத்தி உதவவும். மாதம் தவறாமல் இதழ் உங்கள் வீடு வந்து சேரும் 💚

என்றென்றும் அன்புடன் 
புரவி 💜
வாசகசாலை 🖤

தொடர்புக்கு : 

கார்த்திகேயன் - 9942633833
அருண் - 9790443979

புரவி இதழ் வேண்டுபவர்கள் தொடர்புகொள்ளவும். 

----

எழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் அவர்களின் முதல் சிறுகதைத் தொகுப்பான, ’அம்புப் படுக்கை’ மற்றும் முதல் நாவலான, ’நீலகண்டம்’ நாவலை மையப்படுத்தி இந்நேர்க்காணல் செய்யப்பட்டுள்ளது. எழுத்தாளர் என்பதையும் தாண்டி இவர்  மொழிபெயர்ப்பாளர், ’பதாகை’ இணைய இதழின் ஆசிரியர், காந்தியவாதி எனப் பன்முக ஆளுமை கொண்டவர். ஒரு எழுத்தாளரை எழுதச் செய்யும் விசைகள், எழுத்தின் ஆழத்தில் நின்றிருக்கும் கேள்விகள் மற்றும் அவரது அன்றாடம் இம்மூன்றையும் பற்றிய மிக அடிப்படையான கேள்விகள் முக்கியமானவை. அவற்றை இந்நேர்காணலில் முயன்றிருக்கிறோம். அலைநீரில் விழுந்த ஆலிழையின் தத்தளிப்புகளைக் கொண்ட மனித மனத்தின் ஆழத்தை இயக்கும் அகவிசைகளைத் தொடர்ந்து எழுதி வருகிறார் சுனில் கிருஷ்ணன்.
மருத்துவரான அவர் இத்தகைய நெருக்கடியானதொரு காலகட்டத்திலும் நமக்காக பொழுதொதுக்கியமைக்கு முதலில் அன்பும் நன்றியும்.

1.உங்களது அன்றாட நாளில் வாசிப்பு மற்றும் எழுத்திற்கான நேரத்தை எப்படி அடைகிறீர்கள்?

நான் ஒரு தொழில்முறை ஆயுர்வேத மருத்துவர். எங்களிடம் வருபவர்கள் பெரும்பாலும்  நாட்பட்ட நோய்களைச் சுமப்பவர்கள்தான். ஆகவே ஒப்பு நோக்கில் நவீன மருத்துவர் போல் உயிர்காக்கும் உடனடிப் பரபரப்பு ஏதுமற்ற நிதானமான வாழ்க்கை முறைதான். மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கும் அடுத்த நோயாளிக்கும் இடையில் உள்ள நேரத்தில்  கூட  வாசிப்பேன்‌. கணினி திறந்தே இருக்கும். எழுதவும் செய்வேன். இப்போது கைப்பேசியில் எழுதப் பழகிவிட்டதால் இன்னும் கூடுதல் வசதியை உணர்கிறேன். எழுதவும் வாசிக்கவும் அறுபடாத நேரம் கிடைப்பது பெரும் சவால். எனினும் அதை குறையாக நான் உணர்வதில்லை. 
கடந்த ஆண்டு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையை வீட்டுக்கே மாற்றிவிட்டோம்.  கொரோனா இரண்டாம் அலை மரபு மருத்துவமுறைகளை அவசர நிலைகளை எதிர்கொள்ளும் நிலைக்கு  உள்ளாக்கியது. கடந்த ஒன்றரை மாதம் முழு நேர ஆயுர்வேத மருத்துவராக வாசிக்கவோ எழுதவோ நேரமின்றி, நவீன மருத்துவரின் பரபரப்புடன்  கடந்தேன். ஐந்து வயது மகன் இப்போது பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்பதால் அவனையும் இரண்டு வயது மகளையும் நாள் முழுக்க நானும் மனைவியும் அம்மாவும் மாறி மாறிப் பார்த்துக்கொள்கிறோம். இணைய வகுப்புகளில் அவனுடன் அமர வேண்டியுள்ளது. உண்மையில் இந்த கொரோனா காலகட்டத்தில் வாசிக்கவும் எழுதவும் எனக்கான நேரத்தை மீட்பது முன்பை விடவும் சவாலாகத்தான் உள்ளது. ஆனால் குழந்தைகளுடன் விளையாடித் திளைப்பதிலும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் எழுத்து அளவிற்கே படைப்பூக்க மனநிலையை தக்கவைத்து கொள்ள முடியும் என்பதைக் கண்டுகொண்டேன். கொரோனா காலத்திற்கு முன்பிருந்த எழுத்து, வாசிப்பு அன்றாடத்தை இன்னும் நான் மீட்டுவிடவில்லை. இப்போதைக்கு கிடைக்கும் நேரத்தை கவனச்சிதைவின்றி வாசிக்கவும் எழுதவும் பயன்படுத்த முயல்கிறேன். 


2.எழுதும்போது நீங்கள் சந்திக்கும் சவால்கள் என்ன? உதாரணமாக ஒருகருவை கதையாகாமல் செய்பவைகளை எப்படி சமாளிக்கிறீர்கள்?  மனநிலை,காரணமில்லாது இடையில் தடைபடுதல், எழுதும்பொழுதே கருவிற்கு எதிர்த் திசையில் கதை சென்றுவிடுதல், தமிழ் வழியில் கல்லாத நிலையில் சிந்தனையில் ஓடும் மொழியை எப்படி கையாள்கிறீர்கள்?


ஒரு கதை என்னுள்ளிருந்து தன்னையே உந்தித் தள்ளிக்கொண்டு வரவேண்டும் எனக் காத்திருப்பதே என் வழக்கம். என் அனுபவத்தில் எழுதத் தொடங்கி மூன்று நாட்களுக்குள் ஒரு கதையின் முதல் வரைவு வந்துவிடவில்லை என்றால் கதை இன்னும் முதிரவில்லை என்றே பொருள். அந்தக் கதையை எப்படியாவது முடித்தாக வேண்டும் என முயலும்போதெல்லாம்  நிறைவற்ற அனுபவமே எஞ்சும். தொடர் அமர்வுகளில் தடைபடாத ஓட்டத்துடன் முடிக்கும் கதைகளே சிறந்த கதைகளாக வந்துள்ளன என்பது என் அனுபவம். 'இந்திரமதம்', 'களி' போன்ற கதைகளை அடுத்தடுத்த நாட்களில் எழுதினேன். 'ஆரோகணம்' கதையை எழுதி கைவிட்டு பின்பு ஒரு வருடங்கழித்து சட்டென ஒரே அமர்வில் எழுதி முடித்தேன். கதைகள் முதிர்ந்து உருவம்பெறக் காத்திருப்பதே எழுத்தின் பெரும் சவால். இதழ்கள் கேட்கும்போது கதை அளிக்க இயலாமல் ஆகலாம். அல்லது ஒப்புக்கொண்டதற்காக முழுவதும் உருகொள்ளாத கதையை அளிக்க வேண்டி இருக்கலாம். ஒரு கதையைக் கைவிடவும் ஒத்திவைக்கவும் மனத்திண்மை வேண்டும். அது எல்லா சமயங்களிலும் வாய்ப்பதில்லை. அதே சமயம் பிரசுர நிர்பந்தம் இல்லையென்றால் கதையோ கட்டுரையோ தன்னிச்சையாக எழுத அமர்வதில்லை என்பது மற்றொரு சிக்கல். எவ்வித புறத்தூண்டலும் அழுத்தமும் இல்லாமல் தன்னிச்சையாக தொடர்ந்து எழுதும் நிலையை அடைய வேண்டும் என்பதே லட்சியம். ஒரு கேள்வி அல்லது ஒரு படிமம் இவையிரண்டில் ஏதோ ஒன்றுதான் என்னை கதை எழுதத் தூண்டுபவை. அவற்றைத் தொடர்ந்து செல்பவன் என்பதினால் கதையாகாமல் போகும் சிக்கலில்லை. அதேபோல் இவற்றை மட்டுமே கருத்தில் கொள்வதால் கதை ஒரு தொலைதூரத்துப் புள்ளியாகவே துலங்கும்.‌ பெரும் திட்டமிடல் என ஏதுமில்லை. எழுதி முடித்த பின்னர் சில புள்ளிகளை செறிவாக்குவதுண்டு. திறந்ததன்மையுடன் கதைகளை எழுத அமர்வது சில கூடுதல் வாய்ப்புகளை அளிப்பதாகவே உணர்கிறேன். மிக முக்கியமான சிக்கல் என்பது கதை எழுதப் போதுமான மன அமைப்பை அடைவதுதான்‌. மொழியாக்கம், விமர்சனக் கட்டுரைகள் எனத் தொடர்ந்து இயங்குவதில் உள்ள சிக்கல் பெரும்பாலும் நம் வாசிப்பு நம் தேர்வாக இருக்காது என்பதே. நம் நேரம் நம் கையில் இல்லாத உணர்வை அது அளிக்கும். கூட்டங்களில் பேசுவதும் மிகுந்த உழைப்பைக் கோருவது. மனம் அடுத்தடுத்து ஏதோ ஒன்றில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தால் அங்கே கதை வந்தமர முடியாது. மனதை ஒழித்து ஓரளவாவது காலியாக்க வேண்டும்.  என்னால் அத்தனை எளிதில் எதற்கும் மறுப்பு சொல்ல முடியாது என்பது மற்றுமொரு பலவீனம். இவற்றுக்கு இடையே ஒரு சமநிலையைக் கொணர முயற்சிக்கிறேன். 
 தமிழை ஒரு மொழியாக பள்ளியில் கற்கவில்லை என்பது எனக்கு எழுத எப்போதும் தடையாக இருந்ததில்லை. ஏனெனில் என் எழுத்து முழுக்க நவீன தமிழ் இலக்கிய வாசிப்பினால் உருவானது. சில எழுத்துப் பிழைகள் வருவதுண்டு. அவை பிரசுரமாவதற்கு முன்னர் பெரும்பாலும் நண்பர்களின் உதவியால் களையப்பட்டுவிடும். ஆனால் பொருள் பிழையோ வாக்கிய அமைப்பில் பிழையோ அரிதினும் அரிது. கதைகள், கட்டுரைகள் எழுதும் முன்னரே மொழியாக்கங்கள் செய்ததினால் அடைந்த தேர்ச்சி என சொல்லலாம். ஆனால் வாசகராக எனக்கு இது ஒரு எல்லையை அளிக்கிறது. மரபிலக்கியங்களை முழு ஈடுபாட்டுடன் வாசித்துப் பொருள்கொள்ள முடிவதில்லை. எனினும் அதையும் கடந்துதான் ஆக வேண்டும். நாஞ்சில் நாடனின், 'பாடுக பாட்டே', 'கம்பனின் அம்பறாத்தூணி', ஜெயமோகனின் 'சங்கச் சித்திரங்கள்' போன்ற நூல்கள் என்னைப் போன்றவர்களுக்கு மரபிலக்கியத்தின் ருசியை அறிமுகம் செய்கின்றன. 

3. பாற்கடல் படிமத்தை இதுவரை எழுதிய உங்கள் புனைவுகளின் அடிநாதமாக எடுத்துக்கொள்ளலாமா?  பேசும்பூனை குறுநாவல் மற்றும் வாசுதேவன் சிறுகதை, நீலகண்டம் நாவல் என்று இந்த மூன்றுவடிவங்களிலும் அந்த தத்தளிப்பை விசாரிக்கிறீர்கள் என்று தோன்றுகிறது. நம்மை ஊசல் போல நிலையற்றவர்களாக காலமெல்லாம் அலைகழிக்கும் ஒன்றை எழுத்தில் காட்டிவிட எத்தனிக்கிறீர்களா? இல்லை இயல்பாகவே சகமனிதரின் இந்த தத்தளிப்புகள்தான் உங்களை எழுதவைக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பாற்கடல் எனும் படிமம் பற்றிய உங்கள் அவதானிப்பு எனக்குமே புதிதாக இருந்தது. நல்ல அவதானிப்பை, ’உம்’கொட்டி உடனடியாக ஏற்றுக்கொள்ள மனம் அவசரப்படுகிறது. அப்படி ஒரு படிமமாக எழுத்தாளரை தொகுத்துக்கொள்வது அவரை சுருக்குவதாகத் தோன்றினாலும் ஒரு நல்ல முறை என்றே தோன்றுகிறது. நாம் தொடரும் அத்தனை எழுத்தாளர்களும் இப்படி ஏதோ ஒன்றாக உருமாறித்தானே நமக்குள் அமர்ந்திருக்கிறார்கள்? பாற்கடல் பேரமைதியை உருவமாகக் கொண்டுள்ளது. ஆனால் அதற்கடியில் பேரியக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. நன்மை, தீமை எனும் இருமைக்கு அப்பால் யாவற்றையும் உள்ளடக்கியதாக உள்ளது. பேரசைவுகளின் அசைவின்மைதான் பாற்கடல். யாவற்றையும் பிறப்பித்து யாவற்றையும் அரவணைத்து அமிழ்த்திக்கொள்ளும் சலனமற்ற பாற்கடல். வாசுதேவன், பேசும் பூனை, நீலகண்டம் ஆகிய மூன்றுமே ஒரே கேள்வியின் வெவ்வேறு பரிமாணம்தான். ஆனால் அவை அடைந்த விடைகளில் இயல்பாக ஒரு பரிணாமம் உள்ளதாக உணர்கிறேன். இவை இலக்கியத்தில் புதிய கேள்விகள் அல்ல. ஆனால் கதைகள் ஆத்மார்த்தமாக அவற்றைத் தொடர்கின்றன என்றே நம்புகிறேன்.  

4.விரிவான நாவல்கள் எழுதப்படும் காலத்தில் செதுக்கி எடுக்கும் வடிவத்தை நீலகண்டத்திற்கு தேர்ந்தெடுக்க சிறப்பான காரணம் உண்டா?

நீலகண்டம் இயல்பாக பலகுரல் தன்மை கொண்ட கூறுமுறையை வெளிப்படுத்துகிறது. ஒரு  முன்வடிவம் என அசோகமித்திரனின், 'கரைந்த நிழல்கள்' மற்றும் 'ஒற்றனை' சொல்லலாம். ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைக்குரிய கூர்மை கொண்டவை. சயந்தனின், 'ஆறாவடுவும் இத்தகைய தன்மை உடைய படைப்பே. ஆனால் மேற்சொன்ன கூறுமுறையின் இறுக்கம் நீலகண்டத்தில் இருக்காது. ததும்பும் அலைபாயும் தன்மை அதற்கு உண்டு. விரிவான புற உலகைச் சித்தரிக்க வேண்டிய நாவல்கள் பெருநாவல்களாக ஆகின்றன. வெவ்வேறு காலகட்டம், தொன்மங்கள் எனப் பயணித்தாலும், 'நீலகண்டம்' அதிகமும் அக உலகையே சித்தரிக்கிறது. ஆகவே அதற்கு பெருநாவல் வடிவம் தேவைப்படவில்லை. நாவலின் வடிவத்தை நாம் சுமத்த முடியாது/ கூடாது. இயல்பாக அதன் பேசுபொருள், தன்மை சார்ந்து தேர்ந்துகொள்ள அனுமதிக்க வேண்டும். 

 5.ஹரியின் இன்ஸ்பிரேசன் என்று யாராவது உண்டா?

எழுத்தாளர் சுரேஷ் பிரதீப்பின் கதைமாந்தர்களின் சாயல் ஹரிக்கு உண்டு. சுரேஷ் என்ன நிலைப்பாடு எடுப்பார் என்பதை முன்கூட்டியே அறியும் அளவுக்கு அவருடன் தொடர் உரையாடலும் நட்பும் உண்டு. அவருடைய கருத்துலகத்துடன் எனக்கு ஏற்பும் மறுப்பும் கொண்ட உறவே இப்போது வரையில். மறுக்கும்போது கூட அதில் அசவுகரியமான உண்மை ஒன்று இருக்கும். சுரேஷின், 'பதினோரு அறைகள்' கதையில் வேர் கொண்டு ஹரியின் பாத்திரம் வளர்ந்ததை நாவல் முடித்த பின் ஒரு வாசகனாக என்னால் கவனிக்க முடிந்தது. 

6. ‘வரு’ என்ற குழந்தையின் மனப்போக்கை எழுதுவதற்கு உங்கள் கல்வியும் தொழிலும் உதவினவா? அல்லது அது போன்ற குழந்தைகளுடன் பழகியிருந்தீர்களா? உங்கள் அனுமானமா? இந்த சவாலை எப்படி எதிர்கொண்டீர்கள்?

கல்வியும் தொழிலும் நிச்சயம் உதவின. அவர்களுடைய உடல்மொழியை பொதுவான நடத்தைகளை அறிவதற்கு நேரடி அனுபவம் உதவின.  குறைபாட்டின் மருத்துவப் பின்புலத்தைப் புரிந்துகொள்ள மருத்துவ அறிவு  உதவியது. ஆனால் அவர்களின் அக உலகை சித்தரிப்பதுதான் பெரும் சவால். ஆட்டிச நிலையிலிருந்த நவோகி ஹிகாஷிடா எனும் பதின்ம வயது ஜப்பானிய சிறுவன் எழுதிய, 'நான் ஏன் குதிக்கிறேன்?( The reason i jump)' ஆட்டிச நிலையினுள் இருந்து வந்த மிக‌ முக்கியமான குரல். அந்த நூலும் டெம்பிள் கிராண்டின் நூல்களும் அவர்களின் அக உலகை எனக்கு ஓரளவு பரிச்சயப்படுத்தின. நீலகண்டம் ஆட்டிசம் பற்றிய நாவலில்லை. அதை பின்புலத்தில் நிறுத்தி வாழ்வின் பயன்மதிப்பு என்ன எனும் ஆதாரக் கேள்வியை விசாரணை செய்கிறது. அறிந்ததைக் கொண்டு அறியாததை  கற்பனையில் உருவாக்கி, அதன் வழி புதிய அறிதலை உருவாக்குவதுதானே எழுத்தின் பயன்மதிப்பு. 

7.நீலகண்டம் நாவலில் உங்களை மீறி எழுந்த இடங்களாக நீங்கள் உணர்ந்தவற்றுள் முக்கியமான ஒன்றை கூறமுடியுமா? 

பல இடங்களைச் சொல்லலாம். சுடலை மாடன் மெடீயா அபத்த நாடகம் திட்டமிடப்படாத அத்தியாயம். பச்சைப்பாவடையில் செந்திலை சிறுமி துரத்திவரும் இடம், அமுத பர்வம், நஞ்சு பர்வம், சீராளன் கதை,  உச்சமாக ஒன்று மற்றொன்றாக மாறும் பாற்கடல் கடையும் சித்தரிப்பு. ஆழ்ந்த பிலத்துக்குள் இறங்கி தனது விடுதலையை செந்தில் கண்டடையுமிடம். செந்தில் ரம்யா உறவுச் சிக்கல்களும் சிறார் பகுதிகளும் மட்டுமே ஓரளவு என் திட்டத்திற்குட்பட்டது என சொல்லலாம். 

8.’கூண்டு’ போன்ற உருவகக்கதைகளை எழுதுவதற்கு உங்களை தூண்டுவது எது?


முன்னரே சொன்னது போல, எனக்கு ஒரு கதை கேள்வியாகவோ அல்லது படிமமாகவோதான் முதலில் உருக்கொள்ளும். காளிங்க நர்த்தனம், ஆரோகனம் போன்றவை கனவுக் காட்சிகள். அவற்றைப் பொருள்படுத்திக்கொள்ள அக்காட்சிகளைச் சுற்றி கதை உருவானது‌. விஷக்கிணறு, கூண்டு போன்றவை உருவகக் கதைகள். நீலகண்டமும் கூட அப்படித்தான். ஒரு ஆற்றல்மிக்க படிமத்தின் மீட்டல். அல்லது ஒரு படிமத்தை மீட்டி மீட்டி அதன் ஆற்றலைப் பெருக்குவது. கூண்டு பண மதிப்பு நீக்கத்திற்கு எதிர்வினையாக உருவான கதை என சொன்னால் நம்புவதற்கு சிரமமாகக் கூட இருக்கலாம். கூண்டு எனும் உருவகம் வழியாக பண மதிப்பு நீக்கம் எனும் தற்கால நிகழ்வின் ஆதார சிக்கலை/ மனப்போக்கை காலமின்மைக்கு கொண்டு செல்ல முடிகிறது. பண மதிப்பு நீக்கத்தை அதன் துயரங்களை ஆவணப்படுத்தும் கதைகள் வேண்டியதில்லையா என்றால் அவற்றை செய்திக் கட்டுரைகளே செய்துவிடுமே... நேரடி அரசியல் கதைகள் எழுதப்படுவதிலோ விவாதிக்கப்படுவதிலோ எந்தத் தவறும் இல்லை. என்னளவில் எழுத்து காலமின்மையை தீண்டும் முயற்சி. ஒரு நிகழ்வின் தீவிரம் வடிந்த பிறகும் முக்கியமானதாக உள்ளதா என்பதே கேள்வி. கூண்டு கொரோனாவிற்கும் பொருந்தும். நாளை வேறொன்றுக்கும் பொருந்தும். நூறாண்டுகளுக்குப் பின் வேறொன்றுக்கு பொருந்தக்கூடும். உருவகக் கதைகளின் பலம் அதுவே. கூண்டு ஒரு குழந்தைக் கதை அல்லது தேவதைக் கதை போல் சொல்லப்படத்தக்கதும் கூட. 

9.உங்கள் புனைவுகளில் பெரும்பாலும் குற்றவுணர்வின் முள் உறுத்திக்கொண்டிருக்கிறது? அது அன்பிலிருந்து எழுந்து வரும் கூர்மழுங்காத முனையாக இருப்பதால் அதை எதிர்கொள்ளும் கதாபாத்திரங்கள் பின்வாங்கவோ கடக்கவோ இயலாமல் அங்கேயே நின்று தகிக்கிறார்கள். ‘அன்பின் குற்றவுணர்வு அறத்தைக் காக்கும் கருவி’ என்று நீங்கள் நினைப்பதாகத் தோன்றுகிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


குற்றவுணர்வே இன்னும் நீதியின் சாட்சியாக நீடிக்கிறது‌. அறத்தைக் காக்கிறது‌. குற்றவுணர்வு குற்றத்தை நியாயப்படுத்தவும் செய்கிறது. அதை இயல்பாக்கம் செய்யவும் முயல்கிறது. ஆகவே அதை முழுக்க நம்பமுடியுமா எனத் தெரியவில்லை‌. குற்றவுணர்வின் முள் என சொல்ல முடியுமா என யோசிக்கிறேன். தங்களைப் பற்றி கொண்டிருந்த பிம்பங்கள் நொறுங்குவதை பதைப்புடன் கண்ணுறுகிறார்கள், அவர்களைப் பற்றிய ஏமாற்றங்கள், அவர்களுக்கு அவர்களே செய்துகொண்ட துரோகங்கள் அவர்களை வதைக்கின்றன என சொல்லிக்கொள்ளலாம்.  பொறுப்பிலிருந்து வழுவுகிறார்கள். தங்கள் கையறு நிலையையும் சிறுமையையும் எண்ணிக் குமைகிறார்கள். இது ஒரு ஆன்மீகமான சிக்கல். இதை காந்தியிடமிருந்து நான் பெற்றுக்கொண்டிருக்கக் கூடும். லட்சிய சுயம் எனும் கற்பிதத்தைத் தொட முயன்று புனிதமான தோல்வியை மீண்டும் மீண்டும் தழுவி தன்னைத் தூய்மை செய்து கொள்பவர். அது குற்றவுணர்விலிருந்து வேறுபட்ட வேறொன்று எனத் தோன்றுகிறது. 


10.’காளிங்க நர்த்தனம்’ எனக்கு அந்த மாபெரும் யோகியைக் காட்டியது. அதுதான் நம் மரபு சொல்லும் பெருநிலை என்று நினைக்கிறீர்களா?


பெருநிலை எதுவெனத் தீர்மானமாக சொல்லும் அளவிற்கு அறிதல்  எனக்கில்லை. இங்கே எத்தனை மனிதர்கள் உள்ளனரோ அத்தனை மார்க்கங்களும் இலக்குகளும் உண்டு. எனினும் எனது நம்பிக்கையையும் புரிதலையும் இன்றைய நிலையிலிருந்தபடி சொல்லலாம். பெருநிலை என்பது களிப்பெரும் நடனமாகத்தான் இருக்க முடியும் என நம்புகிறேன்‌. மவுனத்தில் ஆழ்ந்து தன்னைக் கரைத்துகொள்வதுதான் வாழ்வின் நோக்கம் என்றால் எதற்கு பிறந்து உழன்று மரிக்க வேண்டும் எனும் கேள்வியை அரவிந்தர் எழுப்புகிறார். எனக்கது சரியான கேள்வியாகவே படுகிறது‌. விண்ணின் நடனத்தை மண்ணில் நிகழ்த்த வேண்டியல்லவா பிறக்கிறோம்.


11.வருங்கால எழுத்துமுயற்சிகள் பற்றி…

இந்த ஆண்டு இரு அபுனைவு நூல்கள் வெளிவர உள்ளன. ஆயுர்வேத மருத்துவர் டாக்டர். எல். மகாதேவனின் நீண்ட நேர்காணல் ஒரு தனி நூலாக காலச்சுவடு வெளியீடாக வரவுள்ளது. காந்தி பற்றி ஒரு சிறிய சுவாரசியமான அறிமுக நூலை தொகுத்துள்ளேன். விரைவில் வெளிவரக்கூடும். தடைப்பட்டிருந்த உரையுடன் கூடிய சத்திய சோதனை திருத்தப்பட்ட செம்பதிப்பின் மொழியாக்கத்தைத் தொடர்கிறேன். இந்தாண்டுக்குள் அதுவும் வெளிவரும். மிக முக்கியமான நூலாக இருக்கும். மொழியாக்கங்களை இத்துடன் நிறுத்திகொள்வதாக உள்ளேன். ஒரு புதிய நாவலைத் தொடங்கியிருக்கிறேன். சற்றே சிறிய நாவல் 150-200 பக்கங்கள் வரக்கூடும். அரவிந்தரைப் பற்றி ஒரு புனைவெழுத வாசித்துக்கொண்டிருக்கிறேன். பெரு நாவல்களுக்கான திட்டங்கள் சில உண்டு. விமர்சனக் கட்டுரைகளையும் ஆயுர்வேதக் கட்டுரைகளையும் தொகுத்து நூலாக்கலாம் எனும் எண்ணமும் உள்ளது. பழுவேட்டையர் கதைகள் ஓரளவு சேர்ந்தால் அவற்றையும் ஒரு தொகுப்பாகக் கொண்டு வரும் எண்ணம் உண்டு. பார்ப்போம். வேறு சில முக்கியமான தொகை நூல்களுக்கான பணியிலும் ஈடுபட்டுள்ளேன் அவை வெளிவரும்போது பார்க்கலாம். 

12.வளரிளம்பருவத்தில் உங்களை பாதித்து உங்கள் மனப்போக்கை மாற்றிய அல்லது வடிவமைத்துக்கொள்ள உதவிய ஆளுமைகள் என்று யாராவது இருக்கிறார்களா?

 வளரிளம்பருவத்தில்  பொதுவாக வீடு பள்ளி புற உலகம் என மூன்று தளங்களில் தாக்கம் ஏற்படும்‌. வீட்டைப் பொறுத்தவரை அம்மா சின்ன வயதிலிருந்தே தனி ஒரு பெண்ணாக பல்வேறு சிக்கல்களைக் கடந்து என்னை வளர்த்தார்.  பள்ளியைப் பொறுத்தவரை கணக்கு ஆசிரியர் பழனிக்குமார் உயிரியல் ஆசிரியர் மணிமொழி ஆகியோரை  சொல்லலாம். ஒருவர் கண்டிப்புக்கு பெயர் போனவர், மற்றவர் அன்புக்குரியவர். பனிரெண்டாம் வகுப்பில் நிகழ்ந்த நண்பனின் தற்கொலை ஒரு பெரும் தொந்தரவாக மனதை ஆக்கிரமித்தது. புற உலகில் அன்று பொதுவாக எல்லோருக்கும் இருந்த நாயகர்களே எனக்கும். சினிமாவில் ரஜினி, கிரிக்கெட்டில் அணில் கும்ப்ளே, மல்யுத்தத்தில் அண்டர்டேகர் என ஒரு விநோதமான கலவை. ஹாரி பாட்டரில் வரும் ஆல்பஸ் டம்பிள்டோர், பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன், குறிஞ்சி மலர் அரவிந்தன் என சாகச புனைவு பாத்திரங்கள் மீது நாட்டம்.‌ என்னை அவர்களாக கற்பனை செய்துகொண்டு விதவிதமான பகற்கனவுகளில் உலகைக் காத்திருக்கிறேன். வளரிளம்பருவத்தில் தாக்கம் செலுத்திய இரண்டு நூல்களை சொல்லலாம் என்றால் ரிச்சர்ட் பாக்கின், ’ஜோனாதோன் லிவிங்ஸ்டன் தி சீ கல்’ மற்றும் பாலோ கொய்லோவின் ’ரசவாதி’. பதின்மத்தில் ஆளுமை உருவாக்கத்தில் பெரும் சலனங்களை ஏற்படுத்தியவை. கனவுகளை அளித்தவை. பனிரெண்டாம் வகுப்பு முடித்த பிறகு அடுத்தடுத்து இவ்விரு நூல்களை வாசித்தேன். 

13.சமகால சிறுகதையின் சாதக அம்சங்களாக நீங்கள் காண்பவை…

சிறுகதையின் களமும் பேசுபொருளும் வெகுவாகப் பரந்து விரிகிறது. பத்தாண்டுகளுக்கு முன் மொத்த தமிழ் இலக்கியத்திலும் எழுதப்பட்டிருந்த அறிவியல் புனைவுகளின் எண்ணிக்கையை விட அதிகமான கதைகள் சமீப ஆண்டுகளில் எழுதப்பட்டுள்ளன. டிஸ்டோபிய கதைகள், வரவாற்றுப் புனைவுகள் போன்றவற்றுக்கும் இது பொருந்தும்.  ஜப்பான், ஐரோப்பா, இங்கிலாந்து, அமெரிக்கா, வளைகுடா, சிங்கப்பூர், மலேசியா என தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் வெளியே பல புதிய களங்களில் கதையெழுதுகிறார்கள். இயல்பாக இந்த வாழ்க்கை பல புதிய சிக்கல்களைக் கொண்டுவருகின்றது. இந்த சாத்தியங்கள் முந்தைய காலத்து தமிழ் சிறுகதைகளில் இருந்து சமகாலக் கதைகள் அடைந்த பரிணாமத்தை அடையாளம் காட்டுகின்றன. 

14.பெயராய் மனதில் விழுந்த காந்தி உங்களில் ஆளுமையாய் மாறிய, ’கண்டடைதல்’ கணத்தை புறவயமாகக் கூற முடியுமா?

காந்தி மீது விருப்பு வெறுப்பற்ற ஒரு விலக்கமே எல்லோரையும் போல் எனக்கும் இருந்தது. ஜெயமோகனின், 'இன்றைய காந்தி' முதன்முறையாக ஒரு உடைப்பை நிகழ்த்தி அவரைப் பற்றிய பார்வையை மாற்றியது. தொடர் வாசிப்பு வழியாக காந்தியை உட்செரித்து எனக்குள் ஒரு பகுதியாக்கிக்கொண்டேன். ஆஷிஷ் நந்தி இவ்வகையான அகவயப்படுத்துல் பற்றிக் குறிப்பிடுகிறார். நம் ஒவ்வொருவருக்குள்ளும் காந்தியும் கோட்சேயும் உள்ளார்கள். காந்தி என்பது ஒரு மனிதர், வரலாற்று ஆளுமை என்பதைக் கடந்து அது ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உள்ள ஒரு சாத்தியம், ஒரு நிலை என்கிறார் நந்தி. இது எனக்கு பெரும் திறப்பை அளித்தது. காந்தியை அகவயப்படுத்திக்கொள்வது எவ்வகையிலும் நிம்மதியான முரண்களற்ற வாழ்வைத் தராது. நம் மீதே எப்போதும் ஐயங்களை எழுப்பிக்கொண்டிருக்கும்‌. துணிவுள்ளவர்களுக்கு சவாலான வாழ்க்கையை அளிக்கும். வசதி வட்டத்தை உடைத்துக்கொண்டு அசவுகரியத்திற்கு இழுத்துச் செல்லும். அந்த வாழ்க்கையே அதற்கான பலனும் கூட. வெற்றி தோல்விகள் என வகுக்க முடியாது. தொடர் போராட்டங்களின் ஊடாகப் பயணிக்கிறது வாழ்க்கை.