Monday, July 20, 2020

கொஞ்சம் சிறுசா - சிறுகதை

(சொல்வனம் இதழில் வெளிவந்த கதை)

பிளந்து (திறந்து என எழுதலாம்தான், ஆனால் அது பழுவேட்டையருக்கு உகந்தது அன்று) கிடந்த பொலான்யோவின் 2666  நாவலை மூடி வைத்துவிட்டு, ஜன்னல் வழியாக இருளில் ஆளரவமற்ற தெருவில் வழிந்த பொன்னிற விளக்கொளியை வெறித்தார் பழுவேட்டையர். ஏற்கெனவே வாசித்து முடித்திருந்த Savage Detectives நாவலை இடக்கையிலும்,  கைக்குள் வசப்படாத 2666 நாவலை வலது அக்குளிலும்  பிடித்துக்கொண்டு குறுக்க நெடுக்க நடந்தார். 

இங்கே ஒரு சிறிய பின்கதைs சுருக்கம். ஆர்சிம்பால்டி, அவன்தான் 2666-ன் நாயகன் (நாவலில் நாயகன் என ஒருவனைs சொல்ல முடியுமா எனத் தெரியவில்லை, ஆனால் குறைந்தபட்சம் கடைசிப் பகுதியின் நாயகன், நாவலின் பகுதிகளை இணைக்கும் கண்ணி என வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்)  சாமரைக் கொன்றுவிட்டான். இப்போது என்ன செய்வது? ஆர்சிம்பால்டி பெரிய எழுத்தாளானாக்கும். கிட்டத்தட்ட நொபேல் பரிசு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுபவன். ஆனால், இது அவன் எழுத்து வாழ்க்கைக்கு முன் நிகழும் சம்பவம். அவனிடம், தாம் எப்படி படிப்படியாக ஐநூறு யூதர்களைக் கொன்றுவிட்டு எவருக்கும் தெரியக்கூடாது என முகாமில் பதுங்கிக் கிடக்கிறேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தவனை, அறசீற்றம் கொண்டு யாருக்கும் தெரியாமல் சுருக்கிட்டு கொன்றுவிடுகிறான் ஆர்சிம்பால்டி. 

பழுவேட்டையருக்கு உள்ளம் பொங்கியது. அடுத்தடுத்து வெறிகொண்டவர் போல் Savage Detectives வாசித்து முடித்து, 2666-ம் வாசித்துக்கொண்டிருந்தார். “எம்புட்டு பெரிய வீரன்டா.. நீ எழுத்தாளன் டா..” என்று  வாய்விட்டுக் கூறினார். நெஞ்சு விம்மி அடைத்தது. 

இப்போது பெரும் விசனம் உண்டானது, ஆவேசமாக, கழுவும் தொட்டிக்கு மேல் தொங்கி கொண்டிருந்த சிறிய சவரக் கண்ணாடியில் குனிந்து முகம் நோக்கினார், அது தன் இயல்பின்படி எப்போதும் போல் தாடையை மட்டும் காட்டியது. இன்னும் குனிந்து நகர்ந்து  முழு முகமும் தெரிந்த பிறகு, “பேப்பயலே, நீ எவனையாவது கொன்னுருக்கியாடா? நீயெல்லாம் என்ன மசுத்துக்கு எழுத்தாளன்னு பினாத்திக்கிட்டு கெடக்க?” என உக்கிரமாகக் கண்ணாடியை நோக்கிக் கேட்பதற்குமுன், சாயமடித்த தலையில் சாயம்படாமல் நீட்டிக்கொண்டிருந்த நரைமுடியை மயிர்க் கூட்டத்திற்குள் புதைத்துவிட்டு, நின்று நிதானமாக ஆக்ரோஷப்பட்டார். (விமர்சகன் குறிப்பு – இங்கே நரைமுடி என்பது பழுவேட்டையரின் வயதிற்கான குறியீடு. இத்தனை ஆண்டுகளாக உருப்படியாக எதையும் எய்யவில்லை என்பதை நினைவுருத்தும் படிமம்.)  தாம் யாரையும் கொலை செய்ததில்லை எனும் உண்மை நன்மதியப் பகலவனாக அவரை வாட்டியது. சரி கொல்லவேண்டும் எனும் எண்ணம் எவர் மீதெல்லாம் வந்திருக்கிறது என யோசித்துக் கண் மூடியபோது முகங்களின் குவியலுக்குள் முகம் புதைந்தது. சமகால, முன்னோடிகள், பின்னோடிகள், விமர்சகர்கள், கடன்காரர்கள், மளிகைக் கடைக்காரர், கணக்கு வாத்தியார் எனப் பல பரிச்சயமான முகங்களுடன், புதுமைப்பித்தன், பாரதி, காஃப்கா என என்றோ உடல் துறந்த  எழுத்தாளர்களின் முகமெல்லாம் தென்பட்டது. அலைவுகளின் ஊடாகத் தனக்கு நன்கு பரிச்சயமான ஒரு முகம் துலங்கியது. அது தன்னுடைய முகம்தான் எனப் பிடிபட்டதும்  சட்டெனச் சுதாரித்துக் கண்ணைத் திறந்துகொண்டார். ஆனால், ஏன் பத்தாவது பரிட்சை முடித்தபோது, வகிடெடுத்துத் தலைசீவிய பால்வடியும் பாலகனாகத் தம் முகம் தோன்றியது என்பதில் அவருக்கு ஒரு குழப்பம் வந்தது. எனினும் இப்போது அதற்குரிய நேரமில்லை என்பதால் ஆக்ரோஷ மனநிலைக்கு மீண்டார்.  

சுமந்திருந்த புத்தகங்களைக் கீழே போட்டுவிட்டுத் தளர்ந்து அமர்ந்தார். நிஜத்தில், தாம் எவரையும் கொல்லவில்லை என்றால்  தமது கதைகளில் இப்படி யாரை எல்லாம் அறச்சீற்றம் கொண்டு போட்டுத் தள்ளியிருக்கிறோம் என யோசிக்கத் தொடங்கினார். “புருஷங்காரன்கூட வாழப் பிடிக்காம கற்பகம் அவளா தூக்குப் போட்டுச் செத்துப்போனா”, “குடிகார முத்து வண்டில விழுந்து செத்தான்.” “தாயம்மா கெளவி வயசாகி மண்டையப் போட்டா”, “மணி கூட ரோட்டுல அனாமத்தா அடிபட்டு செத்துக் கிடந்துச்சு.” இன்னும் சில கதை மாந்தர்களின் மரணங்கள் நிழலாடின. தற்சாவு, விபத்து, மூப்பு அவ்வளவுதான். ஆத்திரத்தில், 2666 புத்தகத்தின்மீது ஓங்கி ஒரு குத்துக் குத்தினார். வலித்தது. உதறினார். சட்டென மீண்டும் கண்ணாடியை நோக்கி,  “கேனப்பயலே.. ஒரு ஆளக் கதையிலகூட கொல்ல வக்கு இல்லை.. சோறத் திங்கிறியா, பீ திங்கிறியாடா?” என்று காறி உமிழ்ந்தார். உமிழ்ந்த பிறகு யோசித்தார், இப்போது இங்கு இந்த நாடகத்தைக் காண்பதற்குக்கூட எவரும் இல்லாத நிலையில் இவையெல்லாம் வீண்தானா? குறைந்தபட்சம் கிடாரம் வரும்வரை காத்திருந்திருக்கலாம்.  ஆனாலும், ஆங்காரம் அடங்கவில்லை. ஆத்திரத்தில் புத்தக அலமாரியில் கிடக்கும் தாம் எழுதிய புத்தகங்களைக் கீழே தள்ளினார். எரித்துவிடலாமா? என்றொரு யோசனை எழுந்தது. ஆனால் இப்போதெல்லாம் எழுத்தாளர் பிரதி ஐந்துதான் கொடுக்கிறார்கள் என்பது உரைத்ததும், இந்தத் திட்டத்தைக் கைவிட்டார். 

கிடாரத்தின் சைக்கிள் ஓசையைக் கேட்டதும், உடல் மேலும் முறுக்கேறியது. பத்துக்குப் பத்தடி அறையில், இரண்டு எட்டு வைத்தால் சுவரில் முட்டிக்கொண்டு திரும்ப வேண்டியது மேலும் ஆத்திரத்தை அளித்தது. தான் இந்தச் சுவருக்குள், இந்த உடலுக்குள், இந்தக் காலத்திற்குள், இந்த வெளிக்குள் சிக்கியிருப்பதை முதன்முறையாகப் பழுவேட்டையர் உணர்ந்தார். மண்டியிட்டு ஓவெனக் கதறி அழுதார். (மனதிற்குள் மட்டும்.) கிடாரம் அவருடைய அமைதியின்மையைப் பார்த்துக் குழம்பினான். நெருங்கிப் பேச வாயெடுக்கும்போது பழுவேட்டையர் இன்னும் வேகமாக நடந்தார். இரண்டு மூன்று முறை குரலைச் செருமிக் காட்டினான். பழுவேட்டையர் நடை தளரவில்லை. ஆவேசம் கூடிக்கொண்டே போனது. “அண்ணே உங்களுக்கு விருது அறிவிச்சுருக்காக,” எனக் கத்க்ச் சொன்னான். சட்டென நின்று உடல் இறுக்கம் தளர்ந்து தழைந்து, “எவ்வளவு?” என்றார். “யாரு.. எங்கன்னு கேக்க மாட்டீகளா? எவ்வளவுன்னு கேக்குறீக?” என்றான் கிடாரம். “சரி யாரு, எங்க, எவ்வளவு?” 

”ரொம்ப கோவமா அங்கையும் இங்கயும் நடந்தியே அதான் சும்மா  சொல்லிப் பாத்தேன்” என்றான் நிதானமாக. 

ஜன்னல் மேடையில் வைத்திருந்த சுருட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். 

“என்னண்ணே  விஷயம்? இம்புட்டு டென்ஷனா இருக்கிக.”

வானத்தைப் பார்த்துப் புகைத்த பழுவேட்டையர் சட்டெனத் திரும்பி, “நாமெல்லாம் சுத்த ஃபெக்குடா,” என்றார். “நெசத்துல நமக்கு என்ன வீரம் இருக்கு, நியாயம், நீதி நேர்மை, அறம் ஒரு இழவும் இல்லடா, வெறும் அட்டக்கத்தி.”

“அண்ணே ராத்திரி என்ன படம் பாத்த.. இல்ல எதுவாச்சும் கத படிச்சியா? சும்மா  விடு,  இதெல்லாம் மாசமாசம் வாறதுதானே.”

காற்று இறங்குவதை உணர்ந்தார் பழுவேட்டையர். மௌனம் ஒரு பனிப் பாறையாக அவர்களை இறுக்கியது. (பழுவேட்டையர் சென்னையைத் தாண்டியது இல்லை என்றாலும், பனிப் பாறையைப் பார்த்தது இல்லை என்றாலும்கூட, சம்பிரதாயத்தை மதித்து எழுதப்பட்டது.) “இது அது இல்லடா.. இட்ன்ஹா தடம் நெசமாலுமே குடையுது.. ஒரு இடத்துல தங்க முடியல..  இந்த ஆர்சிம்பால்டி பய புள்ளையப் பாரு கொண்டே போட்டான்…”

பழுவேட்டையரின் மாமா முனியாண்டிதான் கொலைக் கேசுக்காகச் சிறையில் இருப்பவர். ஆனால், ஆர்சிம்பால்டி என்பது நம்ம பக்கத்துப் பேரில்லையே, இது ஏதோ புத்தகக் கோளாறாத்தான் இருக்கும் என யோசித்தான் கிடாரம். யாரு கண்டா, தன்னுடன் ஹாக்கி விளையாடிய சிநேகிதனின் பெயர் கரிபால்டி பழனி. அந்த மாதிரி எதாவது பெயராக இருக்குமோ என எண்ணி எதையும் கேட்காமல் விட்டான். 

“உனக்கு நான் சொல்லுறது விளங்காது. அத விடு, உன்னாண்ட  கேக்குறேன், நீ சொல்லு, உனக்குச் சரின்னு பட்டதுக்காக எவனையாவது கொன்னுருக்கியா? உசுரக் கொடுத்துப் போராடி இருக்கியா? இந்த அர்டுரோ பய எதிர்மற விமர்சனம் வரப்போவுதுன்னு தெரிஞ்சதும் விமர்சகன் கூட கத்தியத் தூக்கிட்டு ஒண்டிக்கு ஒண்டி நிக்கிறான். நாம என்னடா செஞ்சிருக்கோம், அவனுக சொல்லுறத கேட்டுகிட்டு பல்ல காமிச்சிகிட்டு கிடக்கோம்”

“உனக்கே தெரியும், நா ரொம்பக் கோவக்காரன், பொருள் எடுத்தா ரத்தம் பாக்காம உள்ர வெக்கிறது இல்ல, தாயிலி வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு, சோலிய முடிச்சுபிடுவோம், இதெல்லாம் என்ன எளவுக்குன்னுதான்  விமர்சனம் வாசிக்கிறது இல்ல, பய புள்ளைங்க பயந்துட்டு நம்மளப் பத்தி எதுவும் எழுதுறதும் இல்லன்னு வையி.. நாம படிக்காததுனாலதானே பல பேரு உசுரோடையே திரியுறாய்ங்க” என்று நிதானமாகச் சொன்னான். 

கிடாரம் சிரிக்கிறானா என அவனுடைய முகத்தை நோக்கினார் பழுவேட்டையர். ஆனால் அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லை.  எரிச்சலடைந்த பழுவேட்டையர் சட்டென உரத்த குரலில் “எப்பப் பாரு உனக்கு விளையாட்டு, நான் இங்கே தவிச்சுகிட்டுக் கிடக்கேன்.. இப்புடி பூரா பயலுவளும் மொண்ணை ஆயிட்டா என்னடா ஆவுறது .. என்னமாவது செய்யணும்டா.”

பழுவேட்டையர் தலைகுனிந்து தரையை நோக்கிக் கொண்டிருந்தார். கிடாரத்திடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை. சில வினாடிகளுக்குப் பிறகு சீறும் ஒலி மட்டும் கேட்டது. தலை தூக்கிப் பார்த்தார். கிடாரத்தின் உடல் நடுங்கி மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. சந்நதம் கொண்டவன் போலிருந்தவனைக் கண்டபோது பழுவேட்டையருக்க்ச் சிலிர்த்தது. நடுங்கும் குரலில்.  

 “மொண்ண பயன்னு சொல்லிபுட்ட இல்ல.. என்னைய மொண்ண பயன்னு சொல்லிட்ட.. சரி விடு.. செஞ்சிரலாம்ண்ணே,  என்ன செய்யோனும் சொல்லு.. யாரச் செய்யணும் சொல்லு.”

“அறத்துக்காக என்னமாவது செய்யணும்டா… அநீதிய அழிக்கனும். அக்கிரமத்த அடக்கணும்.”

“சிஎம்மப் போட்ருவமா ?”

பழுவேட்டையருக்குக் குப்பென வியர்த்தது. 

“கிடாரம்..அவர எதுக்குடா போடணும்,”என நிதானமாக அவனுடைய தோளைத் தொட்டார்.

கையைத் தள்ளிவிட்டவன், விருட்டென நிமிர்ந்தான். ஆவிப் பிரவேசம்  நிகழ்ந்ததுபோல் செந்தமிழில் ஆவேசமாகப் பேசத் தொடங்கினான், “இந்த சமூகம் ஆபாசமானது. சுயநலமானது. கயமை நிறைந்தது. இந்த மக்கள் இழிவானவர்கள். அன்பு எனும் பாவனையைப் போர்த்தி ஏமாற்றித் திரிபவர்கள். கருணையற்றவர்கள். சுரனையற்றவர்கள். தன்மானமற்றவர்கள். அண்டிப் பிழைப்பவர்கள். அழித்து வாழ்பவர்கள். உண்டு பெருக்கிக் கழித்து என வேறு எந்த நோக்கமும் இல்லாதவர்கள். தூய்மையானது என எதையும் விட்டு வைக்காதவர்கள். எல்லாவற்றையும் களங்கப்படுத்தும் அற்பர்கள். வாழத் தகுதியற்றவர்கள். அசிங்கம் பிடித்தவர்கள். கீழ்மை நிறைந்தவர்கள். இவர்கள் இருந்தென்ன வாழ்ந்தென்ன. அழித்து ஒழிப்போம். கொல்வோம்.” கிடாரம் கண்கள் சிவந்து கலங்கியிருந்தன. அவனுடைய ஆவேசப் பிரகடனம் கேட்ட பழுவேட்டையருக்குக் கண்ணீர் வழிந்தது. அவருடைய  வீடிருக்கும் சாலையில் கடப்பவர்கள் ஒரு நிமிடம் சண்டையை வேடிக்கை பார்க்கும் ஆர்வத்தில் அவர்களைச் சூழ்ந்தார்கள். 

“என்னடா சியேம்மு பியேம்முன்னுட்டு.. ரோட்டுல கத்தாதடா,” பழுவேட்டையர் குரல் தழைந்தது. 

“இந்த கேடுகெட்ட சமூகத்துக்குப் பிரதிநிதி யாரு? சொல்லு.. சமூகத்த உலுக்கனும்னா பெருசா இப்புடி எதுனா செய்யணும். எங்கனயாச்சும் உனக்குத் தெரிஞ்ச இடத்துல சாரிச்சு எனக்கொரு வெடிகுண்டு மட்டும் வாங்கிகொடு.. நா கட்டிக்கிட்டு மனித வெடிகுண்டா வெடிச்சுச் சிதறுறேன்.. எனக்காண்டி இத மட்டும் செய்.”

பழுவேட்டையர் அவனை வீட்டுக்குள் பிடித்து இழுத்தார். ஆனால் அவனுக்கு அசுர பலம் வந்துவிட்டது.  

“இப்ப நீ வர்றியா இல்லியா.. இல்லைனாலும் பரவால்ல, நா ஒன்டியாளாப் போறேன்.. நம்ம இலச்சியத்த நிறைவேத்துவேன்.. உன் ஆசீர்வாதம் மட்டும் போதும்,”  என விடுவிடுவெனத் திரும்பினான்.

என்ன சொல்வதெனத் தெரியாமல் பின்னாடியே வந்தவர், அவன் கையைப் பிடித்து நிறுத்தினார். கிசுகிசுப்பான குரலில், 

“செய்வோம்டா… மொதல்ல உள்றவா… ப்ளான் செய்வோம்,” எனச் சொன்னதும் உடன் வந்தான். அவனை அமரச் சொல்லி அறையில் இருந்த ஒரேயொரு மேசைக் காற்றாடியை இயக்கி, அதை அவனை நோக்கித் திருப்பி வைத்துவிட்டுக் கதவை உட்பக்கமாகத் தாழிட்டார். ஜன்னலை அடைத்தார். 

சற்று நிதானம் அடைந்ததும், மெதுவாக அவனிடம் பேசினார். “கிடாரம், எடுத்த எடுப்புல சிஎம்முனா என்ன அர்த்தம்? அம்புட்டு பெருசா எல்லாம் யோசிக்கக்கூடாது. கொஞ்சம் சிறுசா செய்வம்.” 

வெடுக்கெனத் திரும்பி அவரிடம், “அப்ப எம்பி ஓகேவா?” என்றான்.

பழுவேட்டையருக்கு வயிறு கலங்கியது.  “அவருக்கும் நமக்கும் தாவா ஒன்னுமில்லையேடா?”

“எப்புடியும் என்னமாவது அநியாயம் செஞ்சிருப்பாரு.. போட்ருவம்,” என்றான் தீர்மானமாக. 

“அதுக்கில்லடா..,” என மென்று விழுங்கிய பழுவேட்டையர் முகத்தில் சங்கடம் அப்பட்டமாகக் குடிகொண்டது.  

“சரி வேணா விடு, நீங்கல்லாம் ஒரு சாதிகாரவுக அதான..”

“அதெல்லாம் ஒன்னுமில்லடா.. எடுத்த உடனே பெருசா எதுவும் வேணாம்டா.. கொஞ்சம் சிறுசா எதுனாச்சும் செய்வம்.”

“அப்ப கலெக்டர செஞ்சிருவமா?”

“பெண் பாவம் பொல்லாதுடா.”

“அப்ப எம்எல்எ? இதுக்கு நீ ஒத்துக்குவ. உனக்கு அவனப் பிடிக்காது. போட்ருவமா?” எனப் பெருமிதம் பொங்கச் சொன்னான். 

பழுவேட்டையர் விழித்தார். மாட்டிக்கொண்டதாகப் புலப்பட்டது. 

“மொதமொத செய்றோம்,  இம்புட்டு பெருசா வேணாம்டா.. இன்னும்  கொஞ்சம் சிறுசாப் பாப்போம்டா.”

கிடாரம் சோர்வடையத் தொடங்கினான். அவன் முகத்தில் சலிப்பு குடிகொள்ளத் தொடங்கியது. பழுவேட்டையர் நிம்மதி அடையத் தொடங்கினார். 

கிடாரம், “அப்ப நீயே சொல்லு ?” என்றான். 

“இப்பிடிக்கா.. இலக்கிய உலகத்துல உலாத்துரவனுகளச் செய்வோம். என்ன சொல்லுற?”

“சூப்பர் அண்ணே.”

“இந்த செயமோகன், சாரு, ராமகிருஷ்ணன்..”

“அவிங்கள விடு.. கொஞ்சம் சிறுசா யோசிப்பம்.”

கிடாரம் குழம்பத் தொடங்கினான். “நீயே சொல்லு.”

பழுவேட்டையருக்கு உற்சாகமாக இருந்தது. 

“இந்த அர்டுரோ வழியில செய்வோங்குறேன். கெத்தா திரியுறாய்ங்க பாரு இந்த விமர்சகர்கள்.. அவிங்கள பாப்பம்.. என்ன சரிதான?”

“அப்ப யாரையோ மனசுல நெனைச்சுட்ட.. மொதவே சொல்லித் தொலைச்சிருக்கலாம்ல?”

“இந்தா வாரேன்,” எனப் பழுவேட்டையர் எழுந்து, அலமாரியின் தூசி அடுக்குகளில் இருந்து ஒரு மஞ்சள் நிறக் கோப்பை எடுத்தார். அதில் இரண்டு ஆண்டுகளுக்குமுன் பழுவேட்டையர் நாவலுக்குத் தின சங்கு சனிக்கிழமை இலக்கிய இணைப்பில் வந்திருந்த பெட்டி விமர்சனத்தைக் கத்தரித்து ஒரு பிளாஸ்டிக் தாளில்  வைக்கப்பட்டிருந்தது. அதை எடுத்து ஊதி, தட்டிக் கிடாரத்திடம் நீட்டினார். 

எழுத்தாளர் பழுவேட்டையரின் புதிய நாவல் காலங்களில், அவள் வசந்தம், மல்லிகா எனும் பெண்மணியின் வாழ்க்கைச் சித்திரத்தைச் சிறு நகரப் பின்புலத்தில் வைத்துப் பேசுகிறது. மல்லிகா, கணவன் கார்மேகத்தைக் கைவிட்டுக் கல்யாண சுந்தரத்தைக் கைப்பிடித்துக் கடைசியில் இறந்து போவதை உருக்கமாகச் சித்திரித்திருக்கிறார் ஆசிரியர். மல்லிகா, கார்மேகத்தைத் தலைமுழுகும் சித்திரம் வைகாசியில் நடப்பதாக எழுதி இருக்கிறார். அப்போது காவேரியில் நீர் இருந்திருக்காது எனும் தர்க்கப் பிழை மட்டுமே எனக்கு உறுத்தலாக இருந்தது. மற்றபடி இது ஒரு நல்ல நாவல். – லேனா 

“மொத்தமா நூறு வார்த்த விமர்சனம், அதுல இருபது வார்த்த தலை குளிச்சதப் பத்தி, எவனாவது வாங்குவானா? அடிச்ச புத்தகம் எல்லாம் அப்புடியே கெடக்கு. அத்தோட மொத்தக் கதையையும் ரெண்டு வரில சொல்லித் தொலஞ்சிட்டான்.. இவன எழுதச்சொல்லி எவனாவது கேட்டாய்ங்களா.. ரெண்டு வருஷமா இவன நானும் சாரிசுகிட்டே இருக்கேன், ஒரு தாக்கலும் இல்ல,” தழுதழுத்தார் பழுவேட்டையர். 

“கவலைப்படாத அண்ணே… இந்த லேனா யாரா இருந்தாலும், எங்க இருந்தாலும்.. எப்புடி இருந்தாலும்.. சரி..  தூக்குவோம்,” எனச் சூளுரைத்தான் கிடாரம்.


.2
லேனா என்கிற லெட்சுமணன் அதற்கு முன்பும், பின்பும் என எங்கும் எந்த விமர்சனமும் எழுதியதாகத் தெரியவில்லை. பத்திரிகை அலுவலகத்திலேயே எவருடைய புனைப்பெயராகவோ இருக்குமோ என யோசித்தார்கள். விடாமல் துப்பறிந்து, லேனா என்கிற லெட்சுமணனுடைய விமர்சனக் கடிதம் வந்த மின்-அஞ்சலைக் கவிஞரான பத்திரிக்கை ஊழியரிடமிருந்து, “அண்ணே நன்றிக் கடிதம் எழுதோணும்ன்னு சொன்னார்,” எனக் கேட்டுப் பெற்றான். அதற்கொரு மின்-அஞ்சல் அனுப்பினான். ஆனால், பதில் ஏதும் வரவில்லை. ஃபோன் கடை செல்வம், வீட்டு விலாசத்தை இணையத்தில் நோண்டி எடுத்துக் கொடுத்தான். “இந்த லேனா பய கடியாவட்டிக் காரன்தான். பேருக்கே சந்தேகப்பட்டேன்.  நம்ம ஏரியா தாண்ணே.. பிடிச்சுடோம்ல,” எனப் பெருமை பொங்கச் சொன்னான். “ஒரே நாள்.. போறோம் தூக்குறோம்.. அம்புட்டுதான் ப்ளான்,” என அவனே முடிவு செய்து, அந்த ஞாயிற்றுக் கிழமைக்கு  நாள் குறித்தார்கள். “நம்ம ராதிகா சலூன் மெய்யப்பன்  அண்ணனூட்டு.. ஆட்டையப் போட்டேன்,” என இரண்டு சவரக் கத்திகக்ச் சனிக் கிழமை மாலையே கொண்டுவந்தான் கிடாரம். 

இருவருமாகப் பழுவேட்டையரின் டிவிஎஸ்ஸில் புறப்பட்டார்கள். கிடாரம் வண்டியை முறுக்கினான். ஸ்ரீராம் நகர் கேட்டைத் தாண்டியதும் பழுவேட்டையர் மெதுவாக அவனிடம், “இங்கேர்ரா இப்ப கொல்லவெல்லாம் வேண்டாம்.. கேட்டுக்க, கொஞ்சம் சிறுசா செய்வோம், சும்மா மொவத்துல, கையில, காலுல அப்புடியிப்புடி கீறி மட்டும் விடுவம்,” என்றார். கிடாரம் எதுவும் சொல்லாமல் வண்டி ஓட்டுவதிலேயே குறியாக இருந்தான்.  கொத்தமங்கலத்தைத் தாண்டியவுடன் இன்னும் சன்னமான குரலில்,  “இப்ப கீறக்கூட வேண்டாம்டா.. சும்மா மிரட்டிவிட்டு வந்துருவோம், நாலு சாமான் செட்டத் தூக்கிப் போட்டு உருட்டிவிட்ருவோம்… பயபுள்ள ஆஃப் ஆயிருவான்.. சரியா,” என்றார். இதற்கும் அவன் எதுவுமே சொல்லவில்லை. அது பழுவேட்டையரைக் கலங்கடித்தது. கடியாபட்டியில் நுழைந்ததும் லேசாகப் படபடக்கத் தொடங்கியது. “கிடாரம், இன்னிக்கு உள்ற போவ வேணாம், என்னமோ சகுனம் சரியில்ல, வண்டியக் கெளப்பும்போது பூனை குறுக்க ஓடிருச்சு… ஆளு யாரு, எப்புடின்னு நோட்டம் மட்டும் விடுவம்,” என்றார். கிடாரம் வழக்கம்போல் மௌனம் பேணினான்.

விசாரித்துத் தெருவுக்குள் நுழைந்தார்கள். “நான் இங்கனயே நின்னுக்குறேன்…. ஆத்திரத்துல குத்திகித்தி புட்டேன்னா வையி, நீ போய்ப் பாத்துட்டு வா,” என்றார். புளிய மர நிழலில் வண்டியை நிறுத்திக்கொண்டு பீடியைப் பற்ற வைத்துக்கொண்டார். சுற்றிலும் நோட்டம் பார்த்தார். உச்சி வெயில். காகங்கள் கரைந்து கொண்டிருந்தன. தெருவின் மறுமுனை வெகு தூரத்தில் இருந்தது. ஆனால், ஏழெட்டு வீடுகள்தான் இருக்கும். கிடாரம் இறங்கி அடையாளம் சொல்லப்பட்ட மூன்றாவது வீட்டை நோக்கிச் சென்றான். பழுவேட்டையர் படபடப்புடன் அவனைப் பார்த்துக்கொண்டே நின்றார். வீட்டின் அருகே சென்றவன் இவரை திரும்பி நோக்கினான். சட்டென வீட்டிற்குள் நுழைந்தான். போகாதே போகாதே என இங்கிருந்து கையசைத்தார்.

பழுவேட்டையருக்குத் தலை கிறுகிறுத்தது. டிவியெஸ்சைத் திருப்பி, ஏறி அமர்ந்து தயார் நிலையில் நின்றார். இரண்டு நிமிடங்களில் கிடாரத்தின் குரல் உரக்க ஒலித்தது. “அண்ணே இங்கன வா,” என வாயிலில் நின்று கையசைத்துக் கூவினான். “போதும்டா நீ இங்க வா,” எனச் சைகையில்  பதில் சொன்னார். ஆனால் அவன் அதைப் பொருட்படுத்துவதாக இல்லை. “அண்ணே உடனே வா,” எனக் கத்தினான். அப்போது உள்ளிருந்து வேட்டியை மடித்துக் கட்டிய வேறொருவர் எட்டிப்பார்த்தார். பின்னர் அவரும், “இங்க வாங்கண்ணே,” என்று அழைத்தார். வண்டியை உருட்டிக்கொண்டு வேறு வழியின்றி வீட்டை நெருங்கி வந்தார். கிடாரமும் அவரும் உள்ளே சென்றார்கள். இப்போதுகூட சிக்கல் இல்லை தப்பித்து ஓடிவிடலாம். கிடாரம் எப்படியும் வந்துவிடுவான் எனத் தோன்றியது. வண்டியைத் திருப்பலாம் என யத்தனிப்பதற்குள் உள்ளே சென்றவர் வெளியே வந்து அவருக்காகக் காத்து நின்றார். “சீக்கிரம் வாங்கண்ணே,” என்று கையசைத்தார்.

வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு உள்ளே வந்தார். கனமான இரும்புக் கிராதிக் கதவில் மயில் தோகை விரித்து நின்றது. வீட்டு முகப்பில் சுதைச் சிற்பமாகக் கண்ணன் புல்லாங்குழல் வாசித்துக் கொண்டிருந்தான். “அப்பச்சி இப்பத்தான் வந்தாக,” என்று அவனை உள்ளே அழைத்துச் சென்றார். பெரிய தூண்கள் உள்ள திண்ணையில் கிடாரம் அமர்ந்திருந்தான். கண்ணால் அவனிடம் பேச முற்பட்டார் ஆனால், அவன் கவனிக்கவில்லை. முற்றம் உள்ள இரண்டாம் கட்டிற்குள் மூவரும் நுழைந்தார்கள். அங்கு இரண்டு அலமாரி நிறையப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. முற்றத்தில் வெயில் இடப்பக்கமாகச் சாய்ந்திருந்தது. கருங்கல் தரையில் மிளகாய் காய வைத்திருந்தார்கள். நான்கு  மூலைகளிலும், மழை நீரைப் பிடிக்கக் காது வைத்த குண்டான்கள் இருந்தன. மரப் படிகள் கொண்ட மாடிக்குச் சென்றார்கள். திறந்து கிடந்த மூன்றாவது அறைக்குள் நுழைந்தார்கள். “இதத்தான் அண்ணே இறக்கணும்.” என்று ஒரு பிரம்மாண்ட பழைய பர்மா தேக்குக் கட்டிலைக் காண்பித்தார். “ஆளுக வரல, எதேச்சையா நீங்க வந்தீக, படியில கொண்டார முடியாது, கயிறக் கட்டி முத்தத்துல இறக்கிருவோம், கொஞ்சம் ஒத்தாச செய்ங்க,” என்றார்.

பழுவேட்டையர் குழப்பத்துடன் கிடாரத்தைப் பார்த்தார். கிடாரம் கட்டிலைப் பிணைக்கத் தொடங்கியிருந்தான். இரண்டு பக்கமும் கட்டி மெதுவாகத் தூக்கி மூவருமாக அதைக் கீழே இறக்கினார்கள். பழுவேட்டையருக்கு மூச்சு வாங்கி நெஞ்சு அடைப்பதுபோல் இருந்தது. கீழே இறங்கிய மூவரும்  கட்டிலைத் தூக்கிக்கொண்டு பின்கட்டிற்குச் சென்றார்கள். வீடு ஆளரவமற்றுத் துப்புரவாக இருந்தது. மூன்றாம் கட்டில், சாய்வு நாற்காலியில் நெஞ்சு வரை ஏற்றிக்கட்டிய வேட்டியுடன் நரைத்த மார்முடியுடன், வழுக்கைத் தலைத் தாத்தா ஒருவர் சாய்ந்திருந்தார். பழைய கால மர நாற்காலியின் கைப்பிடிக்குக் கீழே மூத்திரப்பை கிடந்தது. வாய் பிளந்து உறங்கி கொண்டிருந்த அவரைக் காணும்போது இறந்து கொண்டிருக்கிறார் எனத் தோன்றியது. அவரருகே அமர்ந்திருந்த கெச்சலான முதிர்ந்த ஆச்சி, ஓர் அறையைத் திறந்துவிட்டார். சற்று மெனக்கெட்டு கட்டிலை உள்ளே கொண்டு  சென்றார்கள். பின்னர் தயாராக இருந்த நீர் மெத்தையை அதன்மீது கிடத்திக் கிழவக்ச் சுமந்து சென்று, அதில் சாய்வாகக் கிடத்தினார்கள்.

கிழவரைத் தொட்டுத் தூக்கும்போது கண்ணை வெறித்துப் பார்த்தார். அவருடைய வெறிப்பு பழுவேடையரைச் சற்று நிலைகுலையச் செய்தது. “பாத்து ண்ணே,” என்று கிடாரம் கூவி எடையை வாங்கிக்கொண்டு விழாமல் பார்த்துக்கொண்டான்.  பின்கட்டு முற்றத்தில் மூச்சிரைக்க மூவரும் அமர்ந்தார்கள்.  “வேல கெடக்கு நன்றிண்ணே,” எனச் சொல்லிவிட்டுப் பழுவேட்டையரை உள்ளே அழைத்தவர் கிளம்பிச் சென்றார். ஆச்சி ரவிக்கைக்குள் கைவிட்டு எடுத்த மணிபர்சில் இருந்து இரண்டு இருபது ரூபாய் நோட்டுக்களை நீட்டினார், “சமயத்துல உதவியா வந்தீக தம்பிகளா.” “இருக்கட்டும் ஆச்சி, அய்யாவுக்கு என்ன ஆச்சு?”  

“அதாச்சுப்பா ரெண்டு வருஷம் .. அய்யா வயசு காலத்திலேந்து பொஸ்தவமும் கையுமாவே திரிவாரு, இப்பிடித்தான் எவனோ ஒரு கேடுகெட்ட பயலோட பொஸ்தவத்தப் படிச்சு அதப்பத்தி பத்திரிகைக்கு எழுதிப் போட்டாரு.. அதுவும் இவரா செய்யல, எம்புட்டு வருஷம்தான் படிச்சுகிட்டே இருப்ப, அப்பப்ப எதாவது எழுதுன்னு இவரோட சிநேகிதர் உசுப்பேத்தி விட்டார்.. தின சங்குல அவருக்குத் தெரிஞ்ச ஆளு இருக்காங்க, நான் சொல்லுறேன்னு ஒத்துக்க வைச்சார்.. அம்புட்டுத்தான்… மக்ஞா நாள் காலேல சோத்தாங் கையும் காலும் விழுந்து போச்சு, பாக்காத வைத்தியமில்ல, அடையாறுல மவன் வீட்டுல இருந்துட்டு இன்னிக்கிதான் வாரோம். சாவுற காலத்துல சொந்த வீட்டுல இருப்போம்னுதான்” என்றார் பெருமூச்சுடன். 

பழுவேட்டையருக்கு வியர்வையில் உடல் குளிர்ந்தது. “காப்பித் தண்ணி கொடுக்கலாம்னா பால்கூட இல்ல தம்பி. இனிமேதான் வாங்கியாரனும்,” என்றார். “தம்பிய ஒத்தாசைக்கு வெச்சுக்குங்க, இந்தா வாரேன்” எனச் சொல்லிவிட்டு எழுந்துபோன பழுவேட்டையர் சற்று நேரத்திற்கு எல்லாம் ஒரு பால் பாக்கெட், ஹார்லிக்ஸ் டப்பா, ரெண்டு சாத்துக்குடி , ரெண்டு ஆப்பிள் என ஒரு பையில் வாங்கிகொண்டு, ஆச்சியுடன் கிழவர் இருந்த அறைக்குள் சென்றார். வாய் பிளந்து மீண்டும் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தார் கிழவர். காலடியில் நின்று, “எதுவும் தப்புத்தண்டா செஞ்சிருந்தா மன்னிச்சுக்குங்க,” எனச் சன்னமாக முனகினார் பழுவேட்டையர். சட்டெனக் கண் விழித்தவரின் முகத்தில் குழப்பமா, குரோதமா என விளங்கிக்கொள்ள முடியாத உணர்வு. மீண்டும் கண்ணை மூடி வாயைப் பிளந்து உறக்கத்தைத் தொடர்ந்தார். “டவுனுக்குப் போவணும், இன்னொரு நாள் வாரோம்,” என ஆச்சியிடம் அவசரம் அவசரமாக விடைபெற்று வெளியேறியபோது முழுவதுமாக இருட்டியிருந்தது. கோட்டையூர் வரும்வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. “எவனோ ஒருத்தன் நாவலுக்குள்ள சூனியம் வெச்சிருக்கான், எம்புட்டு பவரு பாத்தியா,” என்றான் கிடாரம். பழுவேட்டையர் வண்டியைத் தாமரைக் குளத்திற்கு அருகே நிறுத்தி, ஆல மரத்தின் அடியில் அமர்ந்து, வேட்டி மடிப்புக்குள் இருந்து ஒரு சுருட்டை எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு குளத்தில் தாவிக்கொண்டிருந்த தவளைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது கிடாரம், “எது எப்புடியோ, நெனைச்ச காரியத்த முடிச்சோம், லேனாவத் தூக்குனோமா இல்லியா?” என்றான்.

மானுடத்தை துப்பறிபவன்

(சொல்வனம் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரை)
ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வாசித்தது. பெரு நாவல்களை இடைநிறுத்தாது வாசிக்கும்போது சில மாற்றங்கள் ஏற்படுவதைக் கவனித்திருக்கிறேன். நம் அத்தனை அன்றாடச் செயல்களுக்கும் பின்னணி இசையாக, நாவல் அறுபடாமல் ஓடிக்கொண்டிருக்கும். புலன்கள் விழித்துக்கொண்டு துல்லியமாகும். நிகழ்வுகளை, அனுபவங்களை நாவலுடன் பொருத்திப் பார்க்க மனம் துடிக்கும். இப்போது நாவலைவிட, நாவல் வாசித்த காலகட்டம், அப்போது கண்ட சில காட்சிகள் துல்லியமாக நினைவில் இருக்கின்றன. அப்போது புதுகோட்டைக்குப் பேருந்தில் தினமும் சென்றுவரும் சூழல். போவதற்கும், வருவதற்குமான பயண காலம் தலா ஒரு மணி நேரம். ஆயிரம் பக்க நாவலை ஏறத்தாழ இப்படி இரண்டு மணிநேர பயணங்களின் ஊடாகக் கிட்டத்தட்ட ஒரு மாதம் வாசித்தேன். இப்போது நாவலை நினைவுகூரும்போது, அத்துடன் இணைந்து இந்த தினசரிப் பயணக் காட்சிகளும் நினைவுக்கு வருகிறது. 

தமிழ் இலக்கிய உலகில், பொலான்யோவைக் ‘கல்குதிரை’ இதழில் அறிமுகம் செய்துவைத்த சித்திரன் வழியாகவே எனக்கும் பொலான்யோ பரிச்சயம் ஆனார். பின்னர் ஓர் ஊட்டி சந்திப்பின் மாலை நடையின்போது ஜெயமோகனும் இந்நாவல் குறித்துப் பேசினார். 2666 வாசித்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அவருடைய மற்றொரு பெருநாவலான ‘சாவேஜ் டிடெக்டிவ்ஸ்’-ஐ இச்சிறப்பிதழின் பொருட்டு வாசித்து முடித்தேன். வாசித்து முடித்தவுடன் பொலான்யோவின் நேர்காணல்கள் கொண்ட தொகுப்பான ‘ரொபெர்த்தோ பொலான்யோ: த லாஸ்ட் இண்டெர்வ்யூ அன்ட் அதர் கான்வெர்ஸேஷன்ஸ்’ எனும் சிறு நூலையும் வாசித்து முடித்தேன். இக்கட்டுரை அந்த மூன்று நூல்களையும் அடிப்படையாகக் கொண்டது.

பொலான்யோவின் சாவேஜ் டிடெக்டிவ்ஸ் சற்றே சுயசரிதைத் தன்மையுடையது எனக் கூறலாம். பொலான்யோவும், அவருடைய நண்பரான மரியோ சாண்டியாகோவும் சேர்ந்து ‘இன்ஃப்ரா ரியலிஸ்ட்’ என்றொரு கவிதை இயக்கத்தை இளமையில் நடத்தினார்கள். இருவரும் 1977-ஆம் ஆண்டு ஐரோப்பாவிற்குச் செல்கிறார்கள். சாவேஜ் டிடெக்டிவ்ஸ் மொத்தம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அர்டுரோ பெலனோ மற்றும் உலிசஸ் லிமா எனும் இரு கவிகளின் வாழ்வைப் பின்தொடர்கிறது. பெலனோவும் லிமாவும் இணைந்து ‘விஸரல் ரியலிஸம்’ என்றொரு கவிதை இயக்கத்தைத் தொடங்குகிறார்கள். சாண்டியாகோ 1998-ஆம் ஆண்டு விபத்தில் மரணமடைகிறார். அதற்கு முன் அவருக்கு எழுதிய கடிதத்தில் பொலான்யோ, தனது நாவலில் உலிசஸ் லீமா எனும் பாத்திரம் சாண்டியாகோவின் வார்ப்பில் உருவானது என அவருக்கு எழுதுகிறார். முதல் பகுதி முழுவதும் இக்கவிதை இயக்கத்தின் செயல்பாடுகளை, நட்புகளை, அதன் பகுதியாகச் செயல்பட்ட கவிஞர்களின் வாழ்வைச் சொல்கிறது. மூன்றாம் பகுதி முதல் பகுதியின் நேர்த் தொடர்ச்சி. கார்சியா மாதேரொ எனும் இளம் கவி விஸரல் ரியலிஸ்ட் ஆகப் புதிதாக இணைந்துகொள்பவன். அவனுடைய குரலில் இவ்விரு பகுதிகளும் சொல்லப்படுகிறது. இரண்டாம் பகுதி முழுவதும் பல்வேறு நபர்கள் வழியாக நாவல் பயணிக்கிறது. கதை மாந்தர்கள் தத்தமது வாழ்க்கைக் கதைகளைக் கூறுகிறார்கள். தங்கள் வாழ்வினில் அர்டுரோவும் லீமாவும் நுழைந்து வெளியேறும் சித்திரத்தை அளிக்கிறார்கள். 70-களின் மத்தியில் தொடங்கித் 90-களின் மத்திவரை,  இரு இளம் லத்தீன் அமெரிக்கக் கவிகளை, நாவலின் இப்பகுதி தொடர்கிறது. இவர்கள் இருவரைத் தவிர அதே கவிதை இயக்கத்தைச் சேர்ந்த வேறு கவிகளின் வாழ்க்கையையும் பின்தொடர்வதன் வழியாக அந்தக் கவிதை இயக்கத்தின், எழுச்சியையும் வீழ்ச்சியையும் பேசுகிறது எனச் சொல்லலாம். மறுபக்கம், அர்டுரோவும் லீமாவும், தாங்கள் முன்னோடியாகக் கருதும் செஸாரீயா தினாஹேரோ (லத்தீன் அமெரிக்கப் பெயர்கள், அவற்றின் உச்சரிப்புகளை அறிவது ஒரு பெரும் வேலைதான்) எனும் அடையாளமற்றுப் போன ஒரு முன்னோடி எழுத்தாளரை மிகக் குறைவான குறிப்புகளில் வழியாகத் தேடுவதும் ஒரு சரடாக வருகிறது. மூன்றாம் பகுதி சொனோரா பாலைவனங்களில் நிகழ்கிறது. செசாரியாவின் தேடல் மற்றும் மெக்சிகோ சிட்டியிலிருந்து தப்பிய இவர்களைத் துரத்துவது என இரு சரடுகளும் பிணைந்து நாவல் முடிவுக்கு வருகிறது. ஒரு துப்பறியும் கதைக்கான விறுவிறுப்புக் கொண்ட சிறிய பகுதி. பொலான்யோ, நேர்காணலில் தானொரு எழுத்தாளனாக இல்லையென்றால், கொலைக் குற்றங்களைத் துப்பறிபவனாக ஆகவே விரும்பியிருப்பேன் எனக் குறிப்பிடுகிறார். 2666 நாவலிலும் ஒரு துப்பறியும் தன்மை உண்டு. ஒரு பக்கம் ஆர்சிம்பால்டி எனும் எழுத்தாளரை விமர்சகர்கள் கண்டுபிடிக்க முயல்வார்கள். மறுபக்கம் தொடர் கொலைகள் செய்த குற்றவாளியைத் துப்பறிய முயல்வார்கள்.  

முதல் பகுதி முழுக்க, எழுபதுகளின் மெக்ஸிக இலக்கிய உலகம் துலங்கி வருகிறது. இலக்கியக் கூட்டங்கள், கவிதை வாசிப்புகள், கலகங்கள், கட்டற்ற பாலியல் களியாட்டுகள், வன்முறைகள் என விரிகிறது. தமிழ்ச் சிற்றிதழ்ச் சூழலுடன் சில சரடுகளைப் பொருத்திப் பார்க்க முடியும் எனத் தோன்றியது. பெற்றோர்களற்ற, சட்டக் கல்லூரி மாணவனான, கார்சியா மாதேரோதான் கதை சொல்லி. கவிதைக் கருத்தரங்கில் ஏற்பட்ட இப்படியான ஒரு கலகத்தில்தான் நாவலின் நாயகர்களான அர்டுரோ மற்றும் லீமாவை அறிந்து கொள்கிறான். அந்த முதல் சந்திப்பே அவனுடைய ஒழுங்கைக் குலைத்து விடுகிறது. கல்லூரிக்குச் செல்லாமல் ஒவ்வொரு நாளும் அவர்களைத் தேடி அலைகிறான். இளம் கவிஞர்களாக பொலான்யோவும், நண்பர்களும் கவிதை வாசிப்பு அரங்குகளுக்குள் புகுந்து இடைமறித்துத் தங்களது கவிதைகளை வாசித்துக் கலகம் ஏற்படுத்துவது இன்ஃப்ரா ரியலிஸ்ட்களின் வாடிக்கை. நேர்காணல் தொகுப்பில் பொலான்யோவை நேர்காணல் செய்யும் கார்மன் பூயோசா, தமது முதல் கவிதை வாசிப்பின்போது அக்கூட்டத்தில் இன்ஃப்ரா ரியலிஸ்ட்-கள் புகுந்து கலகம் செய்துவிடக்கூடாது என அஞ்சி நடுங்கியபடியே கவிதை வாசித்ததை நினைவுகூர்கிறார். முதல் பகுதி முழுவதும் மரியா/ ஆன்ஹெலிகா ஃபான்ட் சகோதரிகளின் குடும்பத்தை மையமிட்டு நாவல் நகர்கிறது. அவர்களுடைய தந்தை கிம் ஒரு கட்டிட வடிவமைப்பாளர். விஸெரல் ரியலிஸ்ட்-களின் இதழை வடிவமைத்துக் கொடுப்பவர். மாதேரோ ஒவ்வொரு விஸெரல் ரியலிஸ்ட் ஆகச் சந்திக்கச் சந்திக்க, அவர்களை அறிமுகம் செய்தபடி வருகிறான். லீமாவும் அர்டுரோவும் போதை மருந்துகளை விற்றுப் பணம் சேர்க்கிறார்கள். மெக்ஸிகோ சிட்டியின் கலை ஆளுமைகள் அனைவரையும் அப்படித்தான் சென்று அடைகிறார்கள். அந்தப் பணத்தில் ஐரோப்பாவைச் சுற்றி வரவேண்டும் எனக் கனவு காண்கிறார்கள். மரியாவின் தோழி லூபெ ஒரு பாலியல் தொழிலாளி. அவளுடைய தரகன் ஆல்பெர்டோ ஒரு முரடன். தனது குறியை அளக்க நீளமான கத்தியை வைத்திருப்பவன். அவனிடமிருந்து அவளை மீட்க முயன்று, கிம் ஃபாண்டின் இம்பாலா காரில் சொனோராவிற்குத் தப்புவதுடன் முதல் பகுதி நிறைவுறுகிறது.      

இந்தப் பகுதியைப் புரிந்துகொள்ள பொலான்யோவின் நேர்காணலில் உள்ள இந்த மேற்கோள் உதவக்கூடும். “நான் ஒரு கவிஞனைப்போல் வாழவே விரும்பினேன், இன்று கவிஞனைப்போல் வாழ்வது என்றால் என்ன என்பதை என்னால் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் போகலாம். எப்படியாயினும் எனது அடிப்படை ஆர்வம் என்பது ஒரு கவிஞனைப்போல் வாழ்வது என்பதில்தான். என்னை பொருத்தவரை, கவிஞனாக இருப்பது என்றால், புரட்சியாளனாக இருப்பது, எல்லா விதமான பண்பாட்டு வெளிப்பாடுகளுக்கும், எல்லா விதமான பாலியல் வெளிப்பாடுகளுக்கும் முழுமையாகத் தன்னைத் திறந்து வைப்பது, இறுதியாக லாகிரி வஸ்துகளின் எல்லா அனுபவங்களுக்கும் தயாராக இருப்பது…. கலையில் புரட்சியை ஏற்படுத்தி வாழ்க்கையை மாற்றி அன்பை மறுகண்டுபிடிப்பு செய்வது என்பது ராம்போவின் (Rimbaud) லட்சியம். சாரத்தில், வாழ்க்கையையே ஒரு கலைப் படைப்பாக ஆக்குவது.” பொலான்யோவிற்கு ராம்போவின் இந்த லட்சியத்தின்மீது பெரும் ஈர்ப்பு இருந்தது. “இந்த லட்சியம் அதன் அத்தனை மிகைகளுக்கு அப்பாலும், பலரை அழித்துச் செறித்த பின்னரும்கூட ஈர்ப்புடையதாகவே இருந்திருக்கிறது,” என எழுதுகிறார்.  

 பொலான்யோ தன்னை இந்த அலையிலிருந்து ‘தப்பிப் பிழைத்தவன்’ என்றே கருதுகிறார். மேலும்,  ‘இந்த லட்சியம் நம்பமுடியாத அளவிற்குக் கற்பனாவாதத் தன்மை கொண்டது, புரட்சிகரமானது, இந்த லட்சியத்தை அடைய முடியாமல் தோற்ற பல கலைஞர்களின் குழுக்களை, கலைஞர்களின் தலைமுறையைப் பார்த்திருக்கிறது. எனினும்கூட மேற்கில் கலையைப் பார்க்கும் பார்வையை வடிவமைத்ததற்கு இந்த லட்சியத்திற்கு நாம் கடன்பட்டிருக்கிறோம்,’ எனச் சொல்கிறார். இந்நாவலின் முதல் பகுதியில் பொலான்யோ காட்டும் சித்திரம் இதுவே. கவிதை எழுதுவதற்கும், கவிஞனாக வாழ்வதற்கும் இடையிலான இடைவெளி நாவலில் துலங்குகிறது. கவிஞனின் கட்டற்ற வாழ்க்கை முறை மீதிருக்கும் வசீகரம், கவிதை எழுதுவதில் எல்லோருக்கும் இருப்பதில்லை. 

இரண்டாவது பகுதி, அர்டுரோ மற்றும் லீமாவின் இருபது ஆண்டுக் கால வாழ்க்கையின் குறுக்குவெட்டுச் சித்திரம் எனக் கூறலாம். நாற்பது கதைசொல்லிகள் வழியாக அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை நாவல் பின்தொடர்கிறது. முதல் பகுதிகளில் அறிமுகமாகும் விஸெரல் ரியலிஸ்ட்-கள் பலருடைய வாழ்க்கைக் கதைகள் இப்பகுதியில் பதிவாகிறது. பலகுரல் தன்மை எனும் வடிவம் மிகச் சிறப்பாக வெளிப்பட்ட நாவல் என நிச்சயம் சொல்லலாம். மூத்த தலைமுறை எழுத்தாளராக இருந்து எழுத்தைக் கைவிட்டவர் தொடங்கிப் பதிப்பாளர், எதிர் முகாமின் கவிஞர், விமர்சகர், இலக்கியப் பரிச்சயம் ஏதுமற்ற பெண் பாடி பில்டர், அர்டுரோ மற்றும் லீமாவின் காதலிகள், தனது சாதாரணத்துவத்தை உணரும் இலக்கியப் போலிகள், ஓவியன், புகைப்படக் கலைஞன், ஆக்டாவியோ பாசின் செயலர்  என பிரமிக்கத்தக்க வகைமாதிரிகளைச் சேர்ந்த கதைசொல்லிகள். மெக்ஸிகோ, நிகராகுவா, சிலே, அமேரிக்கா, இத்தாலி, ஃபிரான்ஸ், ஸ்பெயின், இஸ்ரேல் மற்றும் ஆப்பிரிக்கா என வெவ்வேறு நிலப்பரப்புகளில் கதை நிகழ்கிறது. இதற்கு முன் இப்படியான பலகுரல் தன்மை வெளிப்பட்ட ஆக்கம் என்றால், ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் எழுதிய ‘செகண்ட் ஹாண்ட் டைம்’ நூலைச் சொல்லலாம். அது நூற்றுக்கணக்கான சோவியத் ரஷ்யர்களின் வாழ்வை ஆவணப்படுத்தியது. அவை அசல் கதைகள். காலத்தால் பிந்தியதும்கூட. ஆனால், இவை புனைவுகள். லிமா மற்றும் அர்டுரோவை நிராகரிக்கும், உள்ளூரக் கொண்டாடும், புரிந்துகொள்ள இயலாமல் தவிக்கும், கசப்பான நினைவுகளைச் சுமந்து அலையும் எனப் பல்வேறு தரப்புகள் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றன. தங்களைப் பாதுகாப்பாக வைத்துகொள்ள முனையும் கவிஞர்களைக் கேலி செய்கிறது, விமர்சிக்கிறது. “அவர்கள் வணிகர்களைப்போல அல்லது கேங்க்ஸ்டர்கள்போல நடந்துகொள்கிறார்கள். மேலும் அவர்கள் எதையும் துறப்பதில்லை அல்லது எதை எளிதாகத் துறக்க இயலுமோ அதை மட்டுமே துறக்கிறார்கள். எதிரிகளை உருவாக்கிக்கொள்ளக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள் அல்லது பலவீனமானவர்களில் இருந்து தங்கள் எதிரியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்,” என இளம் தலைமுறை எழுத்தாளர்கள்மீது நாவலுக்குள் ஒரு கதைசொல்லி விமர்சனத்தை முன்வைக்கிறார். ஸ்பெயினில் ஒரு முகாமிடத்திற்குக் காவலனாக அர்டுரோ இருக்கும்போது, அங்கிருக்கும் ஆழமான கிணற்றுக்குள் சிக்கும் குழந்தையை மீட்கிறான். இதைப் பார்க்கும் ஓர் உயர் வர்க்க ஸ்பானிய வழக்கறிஞரின் பார்வையில் சொல்லப்படும் பகுதி, நாவலின் மிகச் சிறந்த பகுதிகளில் ஒன்று. பிலத்திற்குள் சாத்தான் வாழ்கிறது என்றொரு நம்பிக்கை. அதன் உறுமலை வெளியே கேட்க முடியும். காட்சிப்பூர்வமான சித்திரிப்பு. அர்டுரோவை அவர் பணியமர்த்திக் கொள்கிறார். அவருக்கென ஓர் இலக்கிய இதழும் உண்டு. அதில் பெரும் புகழ்பெற்றவர்கள் எழுதுவார்கள். அர்டுரோ தன்னுடைய மகளுடன் உறவில் இருப்பதை அறிந்துகொள்கிறார். தன்னையே அவர் பிரம்மாண்டமாகக் கற்பனை செய்துகொள்கிறார். அப்படியே அர்டுரோவையும் மகளையும் எதிர்கொள்கிறார். அர்டுரோவின் தன்னம்பிக்கையை உடைத்துவிட முடியும் எனத் தமது ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பத்தைக் கொண்டு கற்பனை செய்கிறார். ஆனால், அர்டுரோவின் ஏதோ ஒன்று அவருடைய விஸ்வரூபத்தை கவிழ்த்துச் சிறுத்துப் போகச் செய்கிறது. அவருடைய மகள் அவனைவிட்டு விலகுகிறாள். எனினும் தன்னுடைய சாதாரணத்துவத்தை உணர்ந்து அழிவின் பாதையில் பயணிப்பதை உணர்கிறார். அர்டுரோ மற்றும் லீமாவின் இலக்கியப் பாணியை விமர்சிக்கும் குரல்கூட உள்ளேயே ஒலிக்கிறது. சற்றே பெரிய மேற்கோள், ஆனால் பொருத்தம் கருதி மொழியாக்கம் செய்கிறேன். ‘’இப்போது ஒரு நம்பிக்கை இழந்த வாசகரை எடுத்துக்கொள்வோம், நம்பிக்கை இழக்கச் செய்யும் இலக்கிய வகைக்கு அவன் தானே வாசகராக இருக்க முடியும். நாம் என்ன காண்கிறோம்? முதலில்: வாசகர் பதின்ம வயதுடையவன் அல்லது முதிர்ச்சியற்ற பெரியவன், பாதுகாப்பற்றவன், பதட்டமானவன். வெர்தரை (கூடாவின் (Goethe) த ஸாரோஸ் ஆஃப் யங் வெர்தர்) வாசித்ததும் தற்கொலை செய்துகொள்ளும் முழு முட்டாள் அவன். இரண்டாவதாக, அவன் குறுகிய எல்லையுடைய வாசகன். ஏன் எல்லையுடையவன்? அது எளிதானது; நம்பிக்கையை இழக்கச் செய்யும் இலக்கிய வகைமையை மட்டுமே அவனால் வாசிக்க முடியும் அல்லது நம்பிக்கை இழந்தவர்களுக்கு உரிய புத்தகங்களை மட்டுமே வாசிக்க முடியும், எப்படியும் இரண்டுமே ஒன்றுதான். தொலைந்த நேரத்தைத் தேடி (இன் ஸர்ச் ஆஃப் லாஸ்ட் டைம்) அல்லது மாய மலை (மாஜிக் மௌண்டென்) அல்லது போரும் அமைதியும் அல்லது லெ மிஸராப்ல – இந்த எதையும் அவனால் முழுவதுமாக வாசிக்க முடியாது… ஒருவன் தன்னுடைய முழு வாழ்க்கையையும் நம்பிக்கை இன்மையுடன் வாழ்ந்துவிட முடியாது. இறுதியில் உடல் ஒத்துழைக்காது, கலகம் செய்யும். நம்பிக்கை இழந்த வாசகன் இறுதியில் புத்தகங்களை விட்டு விலகிவிடுவான். நம்பிக்கை இழந்தவனாக மட்டுமே நீடிப்பான். அல்லது அவன் குணமடைந்து விடக்கூடும். அப்போது அவன் அலட்டல் இல்லாத, அமைதியான வாசகர்களுக்கு எழுதப்பட்டதை நோக்கித் திரும்பக்கூடும்.” அர்டுரோ கலகம் எல்லாம் வடிந்து, குடியையும் பெண்களையும் தவிர்க்கத் தொடங்குகிறான். கணையத்திலும் கல்லீரலிலும் அவனுக்குச் சிக்கல்கள் பெருகத் தொடங்கி அடிக்கடி மருத்துவமனைகளுக்குச் செல்லத் தொடங்குகிறான். கிட்டத்தட்ட சாவதற்காக ஆப்பிரிக்காவிற்குள், ஆனால் எப்படியோ வாழும் இச்சையை வளர்த்துக்கொண்டு, வாழ்கிறான். பொலான்யோ இறுதிக் காலத்தில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருந்தவர். ஆனால் அதற்குள்ளாகவே மரணித்துவிட்டார். பொலான்யோவிற்கு எழுத்தாளரின் மரணமின்மையின்மீது பெரும் நம்பிக்கை உண்டு. இந்த நாவலில் வரும் ஒரு வரி, “ஆனால், கவலைகொள்ள வேண்டாம், கவிஞன் இறப்பதில்லை, அவன் எல்லாவற்றையும் இழக்கக்கூடும், ஆனால் இறப்பதில்லை.” இது பொலான்யோவிற்கும் பொருந்தும்.  

பொலான்யோவின் மொழி தீவிரமானது, அலங்காரம் ஏதுமற்றது. துளைக்கும் மொழி எனச் சொல்லலாம். அதிகமும் நீண்ட தன்னுரையாடல் தன்மை கொண்டது. அவசியமான இடங்களில் புறக்காட்சிகளை மிகத் துல்லியமாகச் சித்திரிப்பது. பொலான்யோ அவருடைய நாவல்களுக்காக இன்று அறியப்பட்டாலும்கூட, தம்மை ஒரு கவிஞன் என்றே அதிகமும் உணர்ந்தார். “இல்லை ஆமதியோ, ஒரு கவிதைக்கு ஏதவாது பொருள்  இருந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை, அது கவிதையாக இருந்தால் மட்டும் போதும்,” என நாவலுக்குள் அர்டுரோ சொல்கிறான். சில இடங்களைத் தனித்து நினைவுகூர முடிந்து. ஓரிடத்தில், “நாங்கள் அனைவரும் ஒன்றாக வெளியேறினோம், இரும்புக் கையின் விரல்களைப்போலக் கும்பலாக,” என எழுதுகிறார், மற்றோர் இடத்தில், “சாலையில் நீளமான ட்ரக்குகளைக் காணும்போது அவை எரிந்த கரங்கள் போல் உள்ளன,” என எழுதுகிறார்.    

பொலான்யோவின் நாவல்களில் ஒரு தொடர்ச்சி உண்டு. உதாரணமாக, சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில், “ஃபிரெஞ்சு நாவலாசிரியார் ஜே.எம்.ஜி. ஆர்சிம்போல்டி மெக்ஸிகோ வருகிறார்,” என ஒருவரிக் குறிப்பு காணக் கிடைக்கிறது. ஆர்சிம்போல்டி ஜெர்மானிய எழுத்தாளராக 2666 நாவலில் வருகிறார். செசாரியாவுடனான உரையாடல் நினைவுபடுத்தும்போது, 2600களில் ஏதோ ஒன்று நிகழப்போகிறது எனக் கூறி வெடி சிரிப்புச் சிரிக்கிறார். பொற்குழல் கொண்டவரும், ராஸ்புடீன் ஜாடையிலும் இருக்கும் ஹான்ஸ் எனும் நெடிய ஜெர்மானியன் பற்றிய ஒருவரிச் சித்திரிப்பு இந்நாவலில் உண்டு. ஹான்ஸ்தான், 2666 குற்றம் சுமத்தப்படும் ஜெர்மானியன். 2666 பற்றிய குறிப்பு முதலில் ஆமுலெட் நாவலில் வந்ததாகத் தெரிகிறது. ஆர்டுரோ, எர்னஸ்டோ போன்ற கதை மாந்தர்கள் வேறு நாவல்களிலும் வருகிறார்கள்.   

நேர்காணல் நூலில், 2666 நாவலின் குற்றங்கள் சார்ந்த பகுதி எழுதப்பட்டதன் பின்புலத்தை விளக்கியுள்ளார்கள். ஹுவாரெஸ் மாகாணத்தில் 1996-97 காலத்தில் நிகழ்ந்த தொடர் மரணங்கள், அதை கொன்சாலெஸ் ரோத்ரிகெஸ் எனும் எழுத்தாளர் /பத்திரிகையாளர் வெளிச்சமிடுகிறார். அதைத் தொடர்ந்து அப்துல் லத்தீப் ஷெரிஃப் எனும் அரேபியனைக் கைது செய்கிறார்கள். ஆனால் அவனுடைய கைதுக்குப் பிறகும் குற்றங்கள் தொடர்கின்றன. சிறை வளாகத்தில் லத்தீப் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தனது தரப்பைக் கூறுகிறான். இப்பகுதி முழுக்கவே பொலான்யோவின் நாவலில் வருகிறது. லத்தீப் எனும் அரேபியன், நாவலில் ஜெர்மானியனாக உருமாறுகிறான். 2666 நாவலின் குற்றங்களைப் பற்றிய பகுதியை வாசிக்கும்போது கடும் அமைதியின்மையை உணர்ந்தேன். மூன்று முறை நிறுத்திவிடலாம் என முடிவு செய்து, நிறுத்த முடியாமல் தொடர்ந்தேன். 1993-97 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த 112 பெண்களின் மரணத்தைப் பிரேதப் பரிசோதனை அறிக்கையின் மொழியில் சொல்கிறார். பொலான்யோவின் நாவல்கள், எழுத்தாளர்கள் அடக்குமுறை அரசாங்கத்தை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதையே மீள மீளப் பேசுகிறது. “ஒரு வகையில் எல்லா இலக்கியங்களுமே அரசியல்தான்,” என வாதிடுகிறார். சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலுக்காக விருது பெற்றபோது, “ஏதோ ஒரு வகையில் தாம் எழுதுவது எல்லாமே மோசமான லத்தீன் அமெரிக்கப் போர்களில் மரித்துப்போன இளைஞர்களுக்கு எழுதப்படும் காதல் கடிதம் அல்லது விடைபெறும் கடிதம்தான்,” எனக் கூறுகிறார். சாவேஜ் டிடெக்டிவ்ஸ், மற்றும் 2666 என்ற இரண்டு நாவல்களில் நிகழும் மரணங்களை, எழுத்தாளர் எழுப்பும் நினைவுச் சின்னம் என்றே வகுத்துக்கொள்ள முடியும். 

பொலான்யோவை நமக்கு ஏன் பிடிக்கிறது? 2666-ம் சரி, சாவேஜ் டிடெக்டிவ்ஸ்-ம் சரி, ஒரு வித இலக்கிய லட்சியவாதத்தை முன்வைக்கின்றன. நிச்சயமாகப் பொலான்யோவின் படைப்புகள் சாரத்தில் கற்பனாவாதத் தன்மை கொண்டவை. பொலான்யோ நேர்காணலில் சொல்கிறார், “ஒரு பொது விதியாக, மனிதர்கள் பெரும் நினைவுச் சின்னங்களை நகலெடுப்பார்கள் அல்லது நிராகரிப்பார்கள். ஆனால், சிறிய, கண்ணுக்கே தென்படாத பொக்கிஷங்களைக் கவனிப்பதில்லை.” பொலான்யோ, இப்படியான சிறிய, கண்ணுக்குத் தெரியாத பொக்கிஷங்களை நினைவில் நிறுத்தவே முயல்கிறார். இதே அளவுகோளின்படிதான் அவர் மார்க்கெஸ், ஃபுயெண்டஸ், நெரூதா, ஆக்டேவியோ பாஸ், இசபெல் அயென்டே (இவரை முற்றிலும் நிராகரிக்கிறார். பொலான்யோவிற்குத் தன்வரலாற்றுக் கதைகளின்மீது பெரிய மதிப்பில்லை. பெண் எழுத்துக்கள் பற்றி Savage Detectives நாவலில் இப்படி ஒரு வரியை அதன் ஒரு கதாபாத்திரம் கூறுகிறது – “ஒரு கல்லை நகர்த்துங்கள், அங்கே தன்னுடைய சிறிய வாழ்வைப் பற்றி எழுதும் ஒரு பெண்ணைக் காணமுடியும்” – பொலான்யோ பெண் எழுத்துக்கள்மீது வைத்த விமர்சனமாக இதைக் காண முடியாது. விரிந்த தளங்களுக்குச் செல்லாமல் குறுகிய வட்டத்திற்குள் உழல்வதையே அவர் விமர்சிக்கிறார்.) எனப் பலரையும் விமர்சன ரீதியாக அணுகுகிறார். லத்தீன் அமெரிக்க எழுத்தின் ‘வெடிப்பு’ நிகழ்ந்த அறுபதுகளின் காலகட்டத்தில் சிலரும், அதற்குப் பின்பு மார்க்கெஸ் போன்ற எழுத்தாளர்களை நகலெடுக்கும், அவருக்குப் பிந்தைய தலைமுறை எழுத்தாளர்களும் சர்வாதிகாரிகள், விபசாரிகள், ஆவிகள் என லத்தீன் அமெரிக்கா சார்ந்து ஒரே விதமான வார்ப்புகளை உலகிற்கு விற்கிறார்கள் என பொலான்யோ கருதினார். 

எழுத்தாளர்கள், அதிகாரத்துடன் எவ்வகையிலும் சமரசம் செய்துவிடக்கூடாது. நிகனோர் பார்ராவைத்தான் சிறந்த கவி என பொலான்யோ கருதுகிறார். அதேபோல், கொர்தசாரும் அவருடைய ஆதர்ச படைப்பாளிகளில் ஒருவர். உலகியல் நோக்கில் தோல்வியடைந்த, புகழ்பெறாத எழுத்தாளர்களே பொலான்யோவின் நாயகர்கள். லஷ்ஷெஸ் ஸ்கின் கொல்லப்படுகிறான். எர்னஸ்டோ மூளை பாதிப்படைந்து மரிக்கிறான். அர்டுரோவும் லீமாவும் உலகத்தைப் புரட்டிப்போடும் மூர்க்கத்துடனும், வேகத்துடனும் மெக்ஸிகோ இலக்கியச் சூழலிற்குள் நுழைகிறார்கள். சாத்தியமான கலகங்களை நிகழ்த்துகிறார்கள். “எழுதுதல் என்பதைக் காத்திருத்தல் எனும் சொல்லிற்கான எதிர்ப்பதமாகக் காண்கிறேன்,” என எழுதுகிறார். பொலான்யோவின் நாயகர்கள் எதற்கும் காத்திருப்பதில்லை. எழுதியும், மூர்க்கமாக முட்டிமோதியும் முன்னகர்பவர்கள்.  ஆனால், வற்றிக் காய்ந்து மறைந்த நீரோடைபோல மெல்லிய தடமாகவே சிலரின் நினைவு அடுக்குகளில் மட்டும் எஞ்சுகிறார்கள். எழுத்தாளர் எவ்விதத்திலும் முக்கியமல்லர், எழுத்து மட்டுமே முக்கியம். எழுதுவதை எவரும் வாசிக்கவேண்டும் என்பதுகூட முக்கியமில்லை. சமரசமின்றி ஓயாமல் எழுதியும், வாசித்தும் வாழ்க்கையைக் கடக்க வேண்டும். எழுத்து வாழ்க்கையின் பித்துநிலையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டும். நாவலில், டான் கிரிஸ்போ எனும் பாத்திரம்  “இலக்கியத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால், வாழ்க்கையைப் போலவே இறுதியில் மனிதர்கள் இதிலும் போலியாகிவிடுவார்கள் என்பதே,” என்றொரு அவதானிப்பைச் சொல்லும். பொலான்யோ இதை நன்கு உணர்ந்தவர். இந்த மொண்ணைத்தனத்திற்கு எதிரான ஒரு போராட்டம்தான் அவருடைய எழுத்து. இந்நாவலில் ஒரு கட்டத்தில் அர்டுரோதான் சிறந்த விமர்சகன் என்று நம்பும் ஒருவன், தன்னுடைய படைப்பை எதிர்மறையாக விமர்சித்து நிராகரிக்கப் போகிறான் என முன்னுணர்கிறான். அவன் விமர்சனமே எழுதாத சூழலில், அவனுடன் நேர் சண்டைக்கு அழைப்பு விடுக்கிறான். இருவரும் நெடுநேரம் கத்தி வீசுகிறார்கள். விமர்சனத்தை ஏற்க முடியாமை என்பதன்று இதன் பொருள். அர்டுரோ தாமும் சாதாரணத்துவத்திற்குள் விழுந்துவிட்டதாக உணரும் முதல் நொடியில் ஏற்படும் விழிப்பு இத்தகைய அறைக்கூவலுக்குக் காரணமாகிறது. சமரசமற்றுத், தாம் நம்பியதற்காக வாழவேண்டும். உயிரைக் கொடுப்பதானாலும் சரி, உயிரை எடுப்பதானாலும் சரி. 2666 நாவலின் நாயகன் பென்னோ வான் ஆர்ச்சிம்போல்டியை எவரும் சந்தித்ததில்லை. விமர்சகர்கள் அவரைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். ஆர்ச்சிம்போல்டி இரண்டாம் உலகப் போரில் ஜெர்மானிய ராணுவ வீரராக இருந்தவர். யூதர்களை வதை முகாம்களில் கொன்ற தன்னுடைய சக சிறைவாசியை, அவருடைய ரகசியம் வெளிப்பட்டதும் கொல்கிறார்.  சாவேஜ் டிடெக்டிவ்ஸ் நாவலில் அர்டுரோவும் லிமாவும் தேடி அலையும் முன்னோடி செசாரியோ எழுதிய கவிதைகள் எதுவுமே கிடைக்கவில்லை. அவரைத் தேடி இறுதியில் வயதான குண்டுப் பெண்ணாகக் கண்டடையும்போது, கறுப்பு அட்டைபோட்ட கவிதைப் புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்தன. லூபெ எனும் முன்னாள் பாலியல் தொழிலாளியை, அவளுடைய தரகரிடமிருந்து மீட்கும் போராட்டத்தில் செசாரியா மரணமடைகிறார். அர்டுரோவும் லீமாவும் ஊர் ஊராக அலைகிறார்கள். வெவ்வேறு வாழ்க்கையை வாழ்கிறார்கள். ஆனால், எழுத்தும் வாசிப்பும் மட்டும் நிற்கவில்லை.

பொலான்யோ, ஒரு கட்டுரையில் நவீன இலக்கியம் ஹெர்மன் மெல்வில்லின், மொபி டிக் அல்லது மார்க் டுவைனின், ஹக்குல்பெரி ஃபின் என இரண்டில் ஒன்றையே மூலமாகக் கொண்டிருக்க முடியும் என எழுதுகிறார். 2666-இல் மோபி டிக்கின் தாக்கத்தை உணர முடியும் என்றால், சாவேஜ் டிடெக்டிவ்ஸில் ஹக்குல் பெரி ஃபின்னின் தாக்கத்தை உணரமுடியும் என விமர்சகர்கள் சொல்கிறார்கள். 2666-ம் சரி, Savage Detectives-ம் சரி, அடிப்படையில் ஒரு நாயக சாகசக் கதைத் தன்மை கொண்டவை என்பதே அவற்றின் மீதான ஈர்ப்பிற்கு முக்கியக் காரணம். அந்த நாயகர்களின் சாகசத்திற்குப் பின்னால் ஒரு கபடமற்ற தன்மை பொதிந்திருப்பதைக் காண முடியும். கலைக்குத் தம்மை ஒப்புக் கொடுத்தல் என்பது ஒவ்வொரு எழுத்தாளரின் கனவு. பொலான்யோவின் எழுத்துகள், உலகியல் சுழலில் சிக்கிச் சமரசங்கள் வழியாகச் சாம்பல் மூடிச் செத்துக்கொண்டிருக்கும் அந்த கங்கை ஊதிப் பெருக்கித் தழலாக்குகிறது. இதுவே, பொலான்யோவை எழுத்தாளர்களுடைய எழுத்தாளராக ஆக்குகிறது.     

பசித்த மானுடம்- கரிச்சான் குஞ்சு - வாசிப்பு

நெடுநாட்களாக வாசிக்க வேண்டும் என வைத்திருந்த நாவல்களில் ஒன்று. சில ஆண்டுகளுக்கு முன் கரிச்சான் குஞ்சு அவர்களின் புகைப்படத்தை போட்டு அவர் எழுதிய இந்நாவல் குறித்து அ. மார்க்ஸ் ஒரு பதிவு எழுதியிருந்தார். புறத் தோற்றத்தில் ஆச்சாரமாக தென்படும் ஒருவர் இத்தனை துணிவுடன் இந்நாவலை எழுதி இருக்கிறார்  என்பதாக செல்லும் குறிப்பு. அப்போதிருந்தே வாசித்து பார்க்க வேண்டும் என முடிவு செய்திருந்தேன். இன்று ஆடி அம்மாவாசை. நாவலில் ஆடி அம்மாவாசை முக்கியமான கட்டமாக வருகிறது என்பது ஒரு தற்செயலான தொடர்பு. 

கணேசன், கிட்டா என இருவரின் வாழ்க்கை கதையை சொல்கிறது. சிறுவயதிலேயே தாய் தந்தை இல்லாமல் அனாதையாக வளரும் கணேசன் சத்திரத்தில் வளர்கிறான். பிறகு அவனை ஒரு பள்ளி வாத்தியார் வேறொரு ஊருக்கு அழைத்து சென்று வளர்க்கிறார். அதே ஊரை சேர்ந்த கிட்டா கணேசன் மீது எப்போதும் பொறாமை கொள்பவன். உலகியல் வெற்றிகளை நாடி செல்பவன். விலகிய இருவரும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் நாவல் நிறைவுறுகிறது. கணேசனின் பசி உடல் சார்ந்தது. கிட்டாவின் பசி பொருள் மற்றும் அதிகாரம் சார்ந்தது.  கணேசன் உடற்பசியை கடந்து வேதாந்த ஒருமையை அடைகிறான். ஒருவகையில் அவனுடைய தொழுநோய் அதற்கு காரணமாகிறது. கிட்டாவால் அவனுடைய பசியிலிருந்து மீள முடியவில்லை. 

நாவல் அடிப்படையில் ஒரு வேதாந்த தரிசனத்தை முன்வைக்கிறது. உடற்பசி உன்னதமாகி ஆன்ம பசியாக, அறிதலின் வேட்கையாக பரிணாமம் கொள்கிறது. மிக நல்லதொரு வாழ்க்கையில் இருக்கும் கணேசன் சிங்கம் ரவுத்தின் கண்களில் பட்டுவிடுகிறான். தொடர்ச்சியான அலைகழிப்புகள் நிறைந்த பயணம் அவனுடையது. எனக்கு தெரிந்தவரை ஆண் தற்பால் உறவு குறித்து ஒரு சித்திரத்தை அளிக்கும் முதல் நவீன தமிழ் நாவல் இதுவாகவே இருக்கும். கணேசனுக்கு எல்லாமே நம்பமுடியாத விரைவில் சட்டென நிகழ்கிறது. ஆங்கிலத்தில் roller coaster ride வாழ்க்கை என சொல்லும் பதம் அவனுக்கு பொருந்தும். சத்திரத்தில் ஊழியம் செய்து கொண்டிருப்பவன் தோப்பூர் வாத்தியாரிடம் சென்று சேர்வது ஒரு தடாலடி முடிவு. அங்கிருந்து சாலையில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிங்கம் ரவுத்தின் வீட்டிற்குள் நுழைந்து அவருடைய உறவில் தன்னை இழப்பதும் ஒரு நொடிப்பொழுதில் நிகழ்ந்து விடுகிறது. அங்கிருந்து வெளியேறுபவன் ஒரு முடிவுடன் ஜவுளி கடைக்காரரிடம் செல்கிறான். பின்னர் ஒரு அரசியல் கலவரத்தில் பயந்து திறந்திருந்த வீட்டிற்குள் நுழையும் கணேசன் அங்கு வசிக்கும் சுந்தரியுடன் பத்தாண்டுகள் குடும்பம் நடத்தி அவள் மரணிக்கும் வரை அவளுடனேயே வாழ்கிறான். அவளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவருடன் உறவு ஏற்படுகிறது. தொழு நோய் கண்டு அவனை இரவோடு இரவாக வெளியேற்றுகிறாள். ஒரு ஆடி அம்மாவாசையில் பக்கத்தில் பிச்சை எடுக்கும் கோதையுடன் உறவேற்பட்டு அவளுடனேயே வசிக்க தொடங்குகிறான். நாவலில் தொடக்கத்திலேயே கணேசனின் இயல்பு துலங்கி வருகிறது. அவன் எந்த ஒரு அனுபவத்தையும் விலக்க கூடாது எனும் முடிவுடன் வாழ்வில் எல்லாவற்றையும் எதிர்கொண்டு கடக்கும் திண்மையுடன் இருக்கிறான். ஆகவே அவனுடைய வாழ்க்கையின் அத்தனை கணநேர முடிவுகளும் புரிந்துகொள்ள / ஏற்றுக்கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது. அப்படி தூசியை தட்டி விடுவது போல் ஒன்றிலிருந்து ஒன்றை கடப்பவனுக்கே சமாதி நிலை வாய்க்கிறது. பெறும் தோறும் துறப்பவன் என கணேசனை சொல்லலாம். கிட்டா இதற்கு நேர்மாறாக பெரும் தோறும் குவிப்பவனாக இருக்கிறான். அவனுடைய வாழ்க்கையும் அலைக்கழிப்புகள் நிறைந்தது தான். வண்டியோட்டியாக கும்பகோணம், மன்னார்குடி, மதுரை, காரைக்குடி என அலைந்து திருச்சியில் மருந்து கடைக்கு வருகிறான். பெரும் தொழில் அதிபனாக ஆகிறான். அவனுடைய சாமர்த்தியம் குறைந்த அண்ணனின் புதையல் அவனுக்கு உதவுகிறது. அவனுடைய சொந்த மகனே அவனை வெறுத்து அடிக்கும் சூழலுக்கு உள்ளாகிறான். அவனால் எதையும் எவரையும் துறக்க இயலவில்லை.  கிட்டாவின் பாத்திரம் எனக்கு ஏதோ ஒருவகையில் பொய் தேவு சோமு முதலியை நினைவுக்கு கொணர்ந்தது. உலகியலில் இருந்து ஆன்மிகத்திற்கு சென்று கனியும் சித்திரம் பொய் தேவில் உண்டு. இரண்டு நாவல்களுமே சாரமாக மனிதனின் உலகியல் வெறியை, அவனுடைய ஆன்மீக சுயத்தை மறந்த நிலையை நோக்கி விமர்சனங்களை எழுப்புகிறது. ஆகவே இன்று வாசிக்கும் போதும் நமக்கான எச்சரிக்கையாகவும் காலப்பொருத்தம் உள்ளதாகவும் திகழ்கிறது.   

பசித்த மானுடம் நாவல் வாசித்து முடித்ததும் தோன்றிய முதல் உணர்வு 'பசித்த பிராமணம்' என இந்நாவலுக்கு அவர் பெயர் வைத்திருக்கலாம் என்பதுதான். நாவல் முழுக்க பிராமணர் உலகத்தில் நிகழ்வது. பிராமணர் அல்லாத பாத்திரங்கள் ஒன்றிரண்டு என்றாலும் அவை மிகவும் சாமானியமான வார்ப்புகள். மேலும் மற்றொரு தளத்தில் இந்நாவல் பிராமண சமூகத்தின் மீது தீவிர விமர்சனத்தை வைக்கிறது. வேத வாழ்க்கையை கைவிட்டு வேறு தொழில்களுக்கு பிராமணர்கள் சென்றதைத்தான் நாவல் விமர்சிக்கிறது. சில இடங்களை சுட்ட முடியும். கிட்டா கும்பகோணத்தில் கார் பழக செல்லும்போது அவருக்கு கற்றுகொடுப்பதாக இருந்த நபர் தான் எப்படி பிராமணரால் ஏமாற்றப்பட்டேன் என சொல்கிறார். மேலும் பிராமணர்கள் எப்போது சாப்பாட்டுக்கடை தொடங்கினார்களோ அப்போதே அழிவுகாலம் தொடங்கிவிட்டது என அவருடைய தந்தை சொன்னதாக சொல்லப்படுகிறது. கிட்டாவின் மூத்த மகன் தெளிவு இல்லாதவன் இறுதியாக அவன் பட்டை தரித்து சந்தியா வந்தனமும் பரிசெஷனமும் செய்வது மகத்தான விஷயமாக பார்க்கப்படுகிறது. வைணவ கைங்கரியத்தை முன்னெடுத்து  தொழிலை கைவிடும் சீமா அய்யங்கார் பாத்திரமும் இதையே சொல்கிறது. கணேசனை வளர்க்கும் வாத்தியார்கூட பிராமண சமூகம் லட்சியத்தை விட்டுவிட்டு சடங்குகளில் உழல்வதாக ஒரு விமர்சனத்தை வைக்கிறார்.  இதற்கு மாறான வேறொரு பார்வையை கணேசன் பாத்திரம் வழியாக சுட்டுகிறார். ஆடம்பரமாக ஊர்கூடி அவனுக்கு பூணூல் அணிவிக்கிறது. ஆனால் அவன் அதை துறந்தே வாழ்கிறான். சுந்தரியின் நிர்பந்தத்தின் பேரில் அதை அணிந்து கொள்கிறான். அம்மா பிராமணர் ஆனால் தந்தை வேறு சாதி என்றாலும் பிராமண அடையாளத்தை வலியுறுத்தும் சுந்தரியின் பாத்திரம் ஒரு துல்லியமான அவதானிப்பு. சத்திரத்து மாமி, மாச்சி, அம்மு, சாமா, சந்துரு ஐயர், சீனி அய்யங்கார், ராசு அய்யர், செட்டியார், மாத்தூர் அசடு (அப்படித்தான் நாவல் சொல்கிறது), கோதை எனும் கண் தெரியாத பிச்சைக்காரி, பெரியசாமி என பல சிறு சிறு கதை மாந்தர்களும் தனித்துவத்துடன் துலங்கி வருகிறார்கள். கணேசனை குருவாக கருதி அவரிடம் வேதாந்த விசாரத்தில் ஈடுபடும் போலீஸ்காரர் பசுபதி ஜெயகாந்தனின் சிறுகதை மாந்தரை நினைவு படுத்தினார். அசட்டு குரு  ஆர்வமுள்ள ஞானம் கொண்ட சீடன். உண்மையில் சீடனே குருவுக்கு போதிக்கிறான். கணேசனின் சமாதி நிலை பற்றிய சித்திரம் நாவலின் அபாரமான பகுதிகளில் ஒன்று. 

தற்பால் உறவு சார்ந்த பகுதிகள் இன்று நமக்கு எவ்வித பெரிய தொந்தரவையும் அளிக்கவில்லை. ஆனால் நாவல் வெளியான காலத்தில் பெரும் அலையை கிளப்பி இருக்கலாம். ஒருமாதிரி சீரற்ற வேகம் கூடிய கதையாடல் கொண்டதாக நாவல் உள்ளது. அழகியல் ரீதியாக நாவலை விமர்சனத்திற்கு உட்படுத்தலாம் தான். நாவல் எனும் மேற்கத்திய இலக்கியத்தில் உதித்த வடிவத்தை இந்திய இலக்கியம் குறிப்பாக தமிழ் இலக்கியம் எப்படி தனக்கானதாக தகவமைத்து கொள்கிறது என கவனிப்பது மிக சுவாரசியமாகவும், நாம் கற்றுக்கொள்ளகூடியதாகவும் இருக்கும். மேலும் நாவல் சித்தரிக்கும் காலகட்டம், வாழ்கை முறை, நிலப்பரப்புகள் மனதில் ஊறி பெருகுகிறது. நிகர் வாழ்வு அனுபவத்தை அளிப்பதாகவும் இருக்கிறது. 


நண்பர் ஒருவரிடம் இந்நாவல் குறித்து பேசிக்கொண்டிருந்தேன். அவர் மன்னார்குடியை பூர்வீகமாக கொண்டவர். இந்த கதை மாந்தர்களில் சிலர் நிஜமானவர் என சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு நிமிடம் ஒரு சிறு துணுக்குறல் ஏற்பட்டது. எந்த நம்பிக்கையில் கரிச்சான் குஞ்சு இந்த நாவலை எழுதி இருப்பார்? நிச்சயமாக தன்னுடைய சொந்த ஊரில் தான் வாசிக்க படமாட்டோம் எனும் சுதந்திர உணர்வு அவரை துணிவுடன் எழுத வைத்திருக்க வேண்டும். எழுத்தாளர் தன் வாழ்நாளில் படிக்கப்பட வேண்டும் எனும் விழைவை அழித்துக்கொண்டு எழுதினால் தீவிரமான சுதந்திரமான படைப்புகளை அளிக்க முடியுமா? இவை இன்றைய சமூக ஊடக காலத்தில் சாத்தியமா?  என சில கேள்விகள் மனதில் உதித்தன. தீர்மானமான பதில்கள் ஏதுமில்லை. .  
  

Thursday, July 16, 2020

முடிவிலாது தொடரும் கார்வை- வெண் முரசு நிறைவு

வெண் முரசு இன்றுடன் நிறைவுற்றது. ஏழாண்டுகள் ஒரு படைப்புடன் பின்னி பிணைந்து கடந்திருக்கிறோம். நாவலின் இறுதியில் வெண் முரசு பெயர் காரணம் சொல்லப்படுகிறது. இப்போதைக்கு முரசறைபவன்  நிறுத்தி விட்டான் அதன் கார்வை அதை வாசித்தவர்களுக்குள் விதிர்த்தபடி இருக்கும். மீண்டும் மீண்டும் என இனி வருங்காலங்களில் பல்கி பெருகி செவி நிறைத்து அகம் நிறைக்கும். அளவிலும் தரத்திலும் ஒரு பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. வணங்குகிறேன்  

வெண் முரசை பற்றி எவர் எழுதினாலும் அதன் அளவை பற்றி பெரு வியப்புடன் இன்றி குறிப்பிட முடியாது. 1932 அத்தியாயங்கள் கொண்ட 26 நாவல்கள், 25000 த்திற்கு அதிகமான பக்கங்கள். இவை நமக்கு பெரும் மலைப்பை அன்றி வேறு எதையும் தராது.  ஒரு நாளைக்கு ஆறு அத்தியாயங்கள், அதாவது சுமார் அறுபது பக்கங்கள் வாசித்தால் ஒரு வருடத்தில் இந்த நாவல் வரிசையை முடிக்க முடியலாம். இந்த மலைப்பின் மறுபுறம் எழுத்தை எழுதிய அளவை கொண்டு மதிப்பிடக் கூடாது. அதன் தரத்தை கொண்டு தான் மதிப்பிட வேண்டும் என்றொரு வாதம் முன்வைக்கப்படுகிறது. சரியான ஏற்புடைய வாதம் தான். 

வெண் முரசு ஒரே நேரத்தில் நவீன இலக்கிய பிரதியாகவும் காப்பியமாகவும் உருக்கொள்கிறது என்பதே இதை அணுகுவதில் விமர்சிப்பதில் நமக்கு  சவாலை அளிக்கிறது. காப்பியம் போல் இதை அணுக்க நூலாக, ஏறத்தாழ ஒரு பக்தி நூலாக வாசிக்கக்கூடிய ஒரு பரப்பு உருவாகி உள்ளது. அங்கே எந்தவகையான விமர்சனங்களும் செல்லுய்படியாகாது. நானும் வெண் முரசை அப்படியே வாசித்து வருகிறேன்.   ஆனால் நவீன இலக்கியப்பிரதியாக  வெண் முரசு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட படைப்பு அல்ல. சில பிசிறுகளை, தர்க்கப் பிழைகளை,, ஒர்மையின்மைகளை சுட்டிக்காட்ட புளங்காகிதம் அடையலாம். பெரும்பாலும் விமர்சனம் எனும் பேரில் இவையே நிகழ்கின்றன. இந்த கதைப்பெருக்கில் இவற்றுக்கு எவ்வித பொருளும் இல்லை. அடுத்த சுற்றில் நவீன இலக்கிய பிரதியாக இதை அணுகி வாசிக்க முயல வேண்டும் என்பதே திட்டம்.

மற்றொரு வகையான விமர்சனம் என்பது மூலநூல் வாதம் சார்ந்தது. மூல நூலில் இல்லாதவற்றை எழுதுகிறார் என திரும்ப திரும்ப சுட்டிக்காட்டப்படுகிறது. இவ்விமர்சனமும் பொருட்படுத்தத்தக்கதல்ல. நவீன இலக்கிய தளத்தில் நின்று இதற்கு பதில் அளிக்கலாம் என்றால், ஊகப் புனைவு  போன்றவையெல்லாம் புழங்கும் சூழலில் துரியோதனன் வென்றதாக கூட ஒருவர் தலைகீழாக மாற்றி எழுத முடியும். மகாபாரதம் என தலைப்பிடாமல் தனித்த ஆக்கமாக முன்வைத்தால் போதும். மரபான தளத்தில் நின்று இதற்கு மற்றொரு வகையில் பதில் அளிக்கலாம். .மகாபாரதம் என்பதே  பல கதைசொல்லிகளின், பல்வேறு நிலப்பரப்புகளில் தொல்கதைகளின் தொகுப்பு. மதுரையில் ஒருவர் எதற்காக அர்ஜுனனுக்கும் அல்லிக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்? துரியன் மரணத்தை கூத்தாக இங்கு எதற்காக நிகழ்த்த வேண்டும்? கர்ணனுக்கு பொன்னுருவி என ஒருத்தியை ஏன் மணமுடித்து வைக்க வேண்டும்? காளிதாசனின் சாகுந்தலை எல்லாம் மூல நூலுக்கு உட்பட்ட பிரதியா? மீளுருவாக்கம் என்பது எப்போதும் நிகழ்த்துக்கொண்டே இருப்பது. நவீன இலக்கியம் என கொண்டாலும் கூட பருவம், இரண்டாம் இடம், நித்ய கன்னி, யயாதி என இவையாவும்பாத்திர வார்ப்புகளில் கணிசமாக மாற்றங்களை செய்துள்ளன. இதிகாசங்கள் ஒரு மிக நீண்ட ரயிலை போல்.. காலந்தோறும் அதில் சில பெட்டிகள் இணைக்கப்பட்டபடி உள்ளன. இவற்றை அனுமதித்து செறித்து உருமாறி வளர்வதே இந்திய இதிகாசங்கள் சாமானிய மக்களுடன் கொண்டிருக்கும் தொடர்புக்கான சான்று. இங்கே எப்படி சார் ஜடாயு கிடந்திருக்க முடியும், வால்மீகி அப்படி சொல்லலையே  என திருப்புல்லாணியில் ஒருவர் கேட்டால் அவருக்கு என்ன பதில் அளித்து விட முடியும்? மகாபாரதத்தை ஒற்றை மூல நூலாக ஐந்தாவது வேதமாக காண்பதற்கு இடமுள்ளது போலவே பெருகி ஓடும் நதிபரப்பாக கான்பதற்குமிடமுண்டு. 

அடுத்த விமர்சனம் என்பது சமகாலத்தை விட்டுவிட்டு ஜெயமோகன் என்றோ எழுதப்பட்ட ஒரு கதையை எதற்காக வீணாக மீள எழுதுகிறார்? பல இலக்கியவாதிகளும் இந்த விமர்சனத்தை உண்மையான அக்கறையின் பேரில் எழுப்பி இருக்கிறார்கள்.  ஜெயமோகன் தற்காலத்தை எழுதக்கூடாது என சொல்கிறார் என திரும்பத்திரும்ப சொல்லப்படுகிறது. வெண் முரசின் தொடர் வாசகராக ஒன்றை சொல்ல முடியும். ஜெயலலிதா மறைவு தொடங்கி பெரும்பாலான சமகால நிகழ்வுகள் வெண் முரசில் பேசப்பட்டுள்ளன.இலக்கியத்தை பற்றி ஒரு அபார வரி உண்டு. சொன்னவர் ஹெரால்ட் ப்ளூமாக இருக்க வேண்டும். In literature what is present need not be contemporary. ஜெயமோகன் இன்றைய நிகழ்வுகளை எழுதுவதில்லை, ஆனால் அதிலிருந்து ஒரு சாரமான கேள்வியை எடுத்துக்கொண்டு அவற்றை புனைவுகளில் விசாரணைக்கு உட்படுத்துகிறார். நிகழ்வுகள் செய்தி வெள்ளத்தில் அடித்து செல்லப்படும். எழுத்தாளர் இந்த நிகழ்வுகளுக்கு எதிர்வினையாக உடனடியாக ஒரு தரப்பை எடுத்துக்கொண்டு எழுதுவதைத்தான் அவர் விமர்சிக்கிறார். செய்திகள் நாளுக்கு நாள் மாறுபடும். ஒரு அன்றாட செய்தியிலிருந்து அதன் அடியாழத்தை தொட முடிகிறதா? அதை எக்காலத்திற்கும் உரிய கேள்வியாக மாற்ற முடிகிறதா? அல்லது குறைந்தபட்சம் இந்த தலைமுறையின், இந்த காலக்கட்டத்தின் கேள்வியாக மாற்ற முடிகிறதா என்பதே கேள்வி. வெண் முரசை முழுவதுமாக வாசித்த ஒருவர் அதில் எத்தனை சமகால விஷயங்கள் வேறு வேறு கோணங்களில் பிரதிபலித்துள்ளன என்பதை அறிய முடியும். இவையாவும் எடுத்துக்கொண்ட கதை களத்திற்கு பொருத்தமாகவும் கையாளப்பட்டுள்ளன. 

அடுத்ததாக இந்நாவலின் வடிவம் சார்ந்து, அமிஷ் நாவல்களை போல இவை மிகை புனைவு, கடந்த கால பெருமையை பேசுபவை என ஒரு விமர்சனம் கூறப்பட்டது. வெண் முரசின் முக்கியமான அம்சங்களில் ஒன்று அது ஒரே சமயத்தில் குழந்தை கதையாகவும் மெய்ஞான கதையாகவும் பரிணாமம் கொள்வது தான். நாவலில் அபாரமான மிகு புனைவு பகுதிகள் உண்டு. சட்டென ஷண்முகவேல் வரைந்த கார்கோடகன் ஓவியம் மனதில் எழுகிறது. ஆனால் இதே நாவல் வரிசையில் தான் இமைக்கணம், சொல்வளர்காடு போன்ற மிக கனமான நாவல்களும் உள்ளன. முழுக்க முழுக்க செவ்வியல் தமிழில் கவிதைக்கு வெகு அருகே உள்ள மொழியில் எழுதப்பட்ட நீலத்திற்கு முன்னர் உள்ள நாவல்களில் ஒன்றான மழைப்பாடல் முழுக்க முழுக்க யதார்த்த தளத்தில் ஒரு தால்ஸ்தாய் நாவலின் தன்மையை கொண்டிருக்கிறது. 

இவையெல்லாம் போக இந்துத்துவத்திற்கு ஆதரவான எழுத்து என இடதுசாரிகளும் பெரியாரியர்களும் கருதி வாசிப்பை புறக்கணிக்க வலியுறுத்தினர். தொன்மம் என பழமையை மீட்டுருவாக்க மனுநீதியை நிலைநாட்ட வந்த நூல் என கருதினர். இதற்கு என்னிடம் இருக்கும் பதில் முழு நாவலையும் வாசித்து நீங்கள் முடிவிற்கு வாருங்கள். பாரதத்தில் இல்லாத அளவிற்கு வெண் முரசில் தமிழ் அடையாளங்கள் வருவதால் இது தமிழ் தேசியத்திற்கு எதிரான பிரதி என்றொரு விமர்சனமும் உண்டு. இந்த விமர்சனத்திற்கும் வாசித்து ஒரு முடிவிற்கு வாருங்கள் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும். இந்துத்துவர்கள் மூல நூல் பிறழ்வு, வியாசர் மாதிரியான ரிஷியுடன் மானுட பிறவியான ஜெயமோகன் தன்னை இணை வைக்கலாமா? என வேறு வகையான விமர்சனங்கள். அவர்களிடம் இந்தவகையான அரசியல் காரணிகளை தாண்டி வாசிக்கும் திண்மை இருந்தால் முயன்று பாருங்கள் என்று மட்டுமே சொல்ல முடியும். இத்தனை பிரம்மாண்டமான பிரதியை நமக்குகந்த அரசியலை கொண்டு புறக்கணிப்பது ஆக எளிய வழி. சரியாக சொல்வதானால் சோம்பேறித்தனமான வழி.  

 இந்த ஏழு ஆண்டுகளில் அந்தந்த ஆண்டு சிறந்த நாவல்களின் பட்டியல்களில் நான் உட்பட வெண் முரசு வாசகர்கள் பலரும் பட்டியலில் வெண் முரசை தவிர்த்துவிட்டே பிற ஆக்கங்கள் குறித்து பேசுகிறோம். அசவுகரியமாக இருந்தாலும் கூட நேர்மையாக இன்று தமிழின் முதல் பத்து சிறந்த நாவல்கள் என ஒரு பட்டியல் இட்டால் அதில் பத்து இடங்களும் ஜெயமோகனுக்கே செல்லும், பெரும்பாலானவை வெண் முரசு நாவல்களாகவே இருக்கும். இதை அதிக பிரசங்கித்தனமாகவோ, உணர்ச்சிவசப்பட்டோ கூறவில்லை. 

ஒரு நல்ல படைப்பென்றால் அது என் கனவிற்குள் ஊடுருவ வேண்டும் என்பது எனக்கிருக்கும் ஒரு எதிர்பார்ப்பு. இந்த ஏழு வருடங்களில் வெண் முரசு பலமுறை என் கனவுகளுள் புழங்கியுள்ளது. வெண் முரசின் பல்வேறு கதை மாந்தர்களுடன் என்னை வெவ்வேறு தருணங்களில் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன். இலக்கியம் வாசிப்பதும் எழுதுவதும் தன்னை அறிதலின் ஒரு பகுதி என நம்புகிறேன். முன்னர் விஷ்ணுபுரமும் இப்போது வெண் முரசும் எனக்கு என்னை காட்டித்தந்தன.  

வெண் முரசை ஒருவர் ஏன் வாசிக்க வேண்டும்?

நிகர் வாழ்வு- முதன்மையாக புனைவு என்பது நிகர் வாழ்வு வாழ செய்வது. குமரி நிலம் தொட்டு கங்கைக்கரை வடகிழக்கு, இமையமலை, குஜராத், காந்தாரம் என விரிந்த நிலக்காட்சிகளை வாழ்வனுபவங்களை அளிக்கிறது. ஒரு வாழ்வை கண்ணுக்கு முன் நிகழ்த்தி காட்டுகிறது. அதில் நம்மையும் ஒரு பகுதியாக ஆக்குகிறது. 

மொழி- புதிய சொற்கள், சொல் இணைவுகள், வழக்கொழிந்த சொற்களின் மீள் பயன்பாடு. வெண் முரசு தமிழுக்கு அளித்த சொற்கொடை அளப்பறியாதது, நவீன இலக்கியத்தில் இதுவரை இல்லாதது. நண்பர்களின் ஒரு கணக்குப்படி 38.5 லட்சம் சொற்கள் வெண் முரசில் உள்ளன என்கிறார்கள். 

கதை மாந்தர்கள்- கதை என்பது என்னவும் செய்யலாம் முதன்மையாக அது சில கதை மாந்தர்களை நமக்கு அறிமுகம் செய்து நம்முள் வளர்த்து எடுக்கிறது. வெண் முரசின் கதை மாந்தர்கள் தனித்துவமானவர்கள். துரியோதனனும் திருதராஷ்டிரனும் சிறுமை அண்டாதவர்களாக நாவல் முழுவதும் திகழ்கிறார்கள். துரியனுக்காக கண்ணீர் சிந்திய நண்பர்கள் பலர் உண்டு. நேர்மறை எதிர்மறை என பாத்திரங்கள் துருவ நிலையில் நிற்பதில்லை. நாமறிந்த பாரத கதை மாந்தர்களை தவிர்த்து சில வரிகளில் வந்து செல்லும் கதை மாந்தர்கள் வெண் முரசில் பேருரு கொள்கிறார்கள். விசித்திரவீரியன், அவனுடைய அமைச்சர், பூரிசிரவஸ் , ஜராசந்தன், சாத்யகி ஆகியோர் அபாரமான கதை மாந்தர்களாக உருவாகி வருகிறார்கள். இவைத்தவிர வெண் முரசின் தனித்துவம் என்பது அதில் வரும் சிறிய  கதை மாந்தர்கள். முக்கியமான பங்களிப்புகளை ஆற்றி தனித்தன்மையுடன் திகழ்கிறார்கள். சட்டென நிருத்தன், பிரலம்பன், மாருதன், மாலினி, மாயை போன்றவர்கள் நினைவுக்கு வருகிறார்கள். கதை மாந்தர்களின் வரைபடம் முதல் நாவல் துவங்கி இறுதி வரை மிகவும் துல்லியமாக உருக்கொள்வதை காண முடியும். 

எழுத்தாளராக என்னுள் சில படிமங்கள் வளர்ந்து கொண்டே செல்லும். நீவி நீவி அதன் அர்த்தங்களை விரித்துக்கொண்டே செல்லலாம். அத்தகைய ஒரு பெரும் படிமத் தொகையை வெண் முரசு உருவாக்கி அளிக்கிறது. சித்ராங்கதன் காணும் குளம், துரோணரின் கையில் இருக்கும் தர்ப்பை, ரக்த பீஜன், சித்ரகர்ணி,  அர்ஜுனனின் காண்டீபம், கர்ணனின் கவச குண்டலங்கள் என சிலவற்றை உடனடியாக கூற முடிகிறது. 

நாவலின் மெய்யியல் தளம். இந்திய மெய்யியலின் பல்வேறு தரப்புகளை மிக விரிவாக அறிமுகம் செய்கிறது. இவற்றை பற்றி தனியே எழுத வேண்டும்.

எழுத்தாளாராக நாவலின் கற்பனை சாத்தியங்கள் மற்றும் உத்திகளை கவனித்தேன். கனிகர் போன்ற ஒரு பாத்திரத்தை முழுவதுமாக உருவாக்கி மொத்த தீமையின் பிரதிநிதியாக இளைய யாதவருக்கு எதிராக நிற்க வைப்பதும், பாஞ்சாலியின் அவை சபதத்தை மாயை எனும் அவளுடைய அணுக்க சேடியின் வழியாக நிகழ வைப்பதும் அபாரமான இடங்கள். இவை சட்டென நினைவுக்கு வருகின்றன. தர்க்க மனம் குழம்பும் பித்து நிலையின் விளிம்பு புலப்படும் அத்தியாயங்கள் உண்டு. எல்லாவற்றையும் தலைகீழாக்கி அபத்தமாக பகடி செய்யும் சூதர் கதைகளும் உண்டு. 

வரலாறு மற்றும் தகவல்களை பயன்படுத்தும் விதம்- வெண் முரசுக்குள் யுங், ஃபிராய்டு,கிராம்ஷி, லாரி பேக்கர், காந்தி, ஜாரெட் டயமண்டு, கால் சாகன் என எல்லோரும் உண்டு என சொன்னால் நம்புவதற்கு சிரமமாக இருக்கலாம். இத்தனை நூற்றாண்டு கால வரலாறு மற்றும் அறிதலை கொண்டு ஒரு தொல்கதையை மீளுருவாக்கம் செய்யும் போது எவற்றை எல்லாம் எந்தெந்த கோணங்களில் பயன்படுத்தியுள்ளார் என ஆராய்வது எழுத்தாளராக மிக முக்கியம் என எண்ணுகிறேன். ஜெயமோகன் இதுவரை வாசித்த, கற்ற அத்தனை நூல்களின் பிரதிபலிப்பும் வெண் முரசில் நிகழ்ந்துள்ளது. 

இன்னும் யோசிக்க யோசிக்க பல காரணங்கள் மனதில் ஊறியபடி இருக்கின்றன. நவீன இலக்கியவாதிகள், நவீன இலக்கிய வாசகர்கள் தவிர்க்க கூடாத பிரதி என வெண் முரசை சொல்வேன். ஆரம்ப மனவிலக்கத்தையும் முன்முடிவுகளையும் கடந்தால் நவீன இலக்கிய எழுத்தாளர்களுக்கு வெண் முரசு ஒரு பெரும் ஊக்க சுரங்கம். வெண் முரசு இல்லையென்றால் ஆரோகணம் மாதிரியான ஒரு கதையையோ நீலகண்டம் மாதிரியான ஒரு கதை வடிவத்தையோ என்னால் தேர்ந்திருக்க முடியுமா என தெரியவில்லை. 

எனக்கு வாசிப்பில் விடுபட்ட நாவல்கள் என ஒரு ஐந்து நாவல்கள் உள்ளன அவற்றையும் வாசித்து முடித்துவிட்டு ஒரே மூச்சாக முழு நாவல்களையும் ஒரு முறை மீள் வாசிக்க வேண்டும் என விரும்புகிறேன். வேன்முரசை வாசிப்பதற்கான ஒரு துணை நூலை நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்க திட்டமிட்டுள்ளோம். 

கண்ணுக்கு முன் ஒரு பெரும் சாதனை நிகழ்ந்துள்ளது. இதை எப்படி வகுக்க போகிறோம்? எப்படி புரிந்து கொள்ள போகிறோம்? இனிதான் வெண் முரசின் தாக்கத்தை நாம் தமிழ் இலக்கியத்தில் உணர போகிறோம்.  







Tuesday, July 14, 2020

ஆல்ஃபா ஆண்- ஒரு விவாதம்

வைரமுத்து விவகாரம் தொட்டு நண்பர்களுடன் விவாதித்தபோது இந்த ஆல்ஃபா ஆண் எனும் கருத்தாக்கம் சுட்டிக்காட்டப்பட்டது. இன்றைய பதிவில் ஜெயும் அதை சுட்டிக்காட்டியுள்ளார். ஆசிரியருடன் உடன்பட்டும் முரண்பட்டும் கற்கப்படுவதே கல்வி. எனது முந்தைய கட்டுரையில் வைரமுத்துவை கலைஞன் என கொனாடடுவதில் எந்த சிக்கலும் இல்லை ஆனால் அதற்கு முன் பொதுவெளியில் பகிரங்கமாக கண்டிக்கப்பட வேண்டும் என்றும் சிற்றிதழ் பின்புல நண்பர்கள் இதை எழுதியதுமே சீற்றத்திற்கு காரணம் என எழுதி இருந்தேன். ஜெயும் இதே கருத்துக்களை இன்று வலியுறுத்தியுள்ளார்.  வைரமுத்தின் திரையிசை பாடல் பங்களிப்பை பற்றி அவர் எழுதியுள்ளார். மெட்டு மீதிருக்கும் ஈடுபாடு/ கவனம் அளவிற்கு  எனக்கு பாடல் வரிகள் மீது பெரிய கவனம் இருந்ததில்லை.  ஆகவே இதில் அவருடைய பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என ஜெயும் பிற நண்பர்களும் சொல்வதை ஏற்கிறேன்.

இப்போது இந்த ஆல்ஃபா ஆண் கருத்தாக்கத்திற்கு வருவோம். இந்த ஆல்ஃபா ஆண் கருத்தாக்கத்தில் அவருடன் முரண்படுகிறேன்.இது மிருக கூட்டங்களில் இருந்து அனுமாணிக்கப்பட்டு மனிதர்களுக்கு பொருத்திப் பார்க்கப் படுகிறது. மானுடம் இவ்வகையான சில இயல்புகளை கடந்து பரிணாமம் கொண்டிருக்கிறது. ஒரு ஆல்ஃபா தனது எல்லையின் மீது மிகுந்த அதிகாரம் கொண்டதாக இருக்கும், அதன் முடிவே இறுதியானதாகவும் இருக்கும். இன்னொரு ஆல்ஃபாவிடம் தோற்கும் வரை தன்னை இழக்காது. ஆல்ஃபாவை சுற்றி இயல்பாகவே அந்த கூட்டத்தின் பெண் விலங்குகள் கூடும். இயற்கை தேர்வு முறை இனத்தை காக்க ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு. 

இதை அப்படியே மனிதர்களுக்கு பொருத்தி பார்க்க முடியுமா? மிருகங்களில் ஆல்ஃபாத்தனம் என்பது சந்ததி உற்பத்தி திறன் சார்ந்ததாக இருக்கிறது. பரிணாமம் அடைய அடைய இது வேறாக மாறுகிறது. உதாரணமாக குரங்குகளில் உடல்வலுவை காட்டிலும் சமூக இணக்கத்தை உருவாக்கும் சிமப்ன்சீக்கள் ஆல்பா ஆகின்றன என்கிறது ஆய்வுகள். இப்போது மனிதர்கள் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்து பல்லாயிரம் ஆண்டுகளாக பண்பாட்டு சமூக கட்டமைப்புகளை உருவாக்கி வளர்த்தெடுத்து உருமாறி வரும்போது ஆலஃபாவின் வரையறைகள் முற்றிலும் மாறுகின்றன. திருமணம் போன்ற அமைப்புகளை உருவாக்கியதன் வழியாக பாலியல் என்பது இயற்கை தேர்வு என்பதிலிருந்து ஒரு சமத்துவ வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள மனித இனம் முயன்றுவருகிறது. ஆகவே இன்று ஒரு ஆல்ஃபா (அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில்)  பாலியல் திறமையால் உருவாவதில்லை. மேலும் வரலாற்றின் நம் காலத்தில் செல்வாக்கு செலுத்திய ஆண் ஆளுமைகளை கணக்கில் கொண்டால் அவர்கள் எதிர்பாளினத்தவரை விட சக பாளினத்தவரையே அதிகமும் ஈர்த்துள்ளனர். அல்லது சமமாக ஈர்த்துள்ளனர் அல்லது இந்த ஈர்ப்பிற்கும் தாக்கத்திற்கும் பாலினம் ஒரு முக்கிய பேசுபொருளாக இருக்கவே இல்லை. சிறந்த உதாரணம் என காந்தி, விவேகானந்தர், ஐன்ஸ்தீன் என பலரையும் சொல்லலாம். 

ஜெ முன்னர் முதல் ஆற்றல் என்றொரு கட்டுரை எழுதி இருப்பார். அனைத்து உயிர்களையும் இயக்கும் அடிப்படை விசை, மூலாதார சக்தி காமம் என்பதாக அது முன்வைக்கும். அந்த ஆற்றலை எவ்வாறு மேல்நிலையாக்கம் செய்கிறோம் என்பதே மனித குலத்தின் சவால். பெரும் சமூக மாற்றங்களும், இசையும் கதையும், ஓவியமும் அறிவியல் கண்டுபிடிப்புகளும் அந்த ஆற்றலில் இருந்தே ஊற்றெடுக்கிறது. இந்த ஆற்றல் ஊற்றேடுப்பவர்களை நாம் ஆல்ஃபாக்கள் என கொள்ள முடியுமா? இவை இரண்டையும் இணைக்க முடியுமா?. மிருகங்களில் பாலியல் தான் தீர்மானிக்கும் ஆற்றலாக இருக்கிறது, மனிதர்களில் அந்த ஆற்றலை எந்த அளவிற்கு மேல்நிலையாக்கம் செய்ய முடிகிறது என்பதே அளவுகோளாக இருக்கிறது.  ஜெ விதி சமைப்பவர்கள் என்றொரு கட்டுரையும் எழுதி இருக்கிறார். இந்த ஆற்றல் கொண்டவர்கள் முட்டி மோதி பாதையை உருவாக்குகிறார்கள். இவர்களே விதி சமைப்பவர்கள். விதி சமைப்பவர்கள் ஆல்ஃபாக்கள் அல்ல. அவர்கள் ஆல்ஃபாக்கள் போல குறுகிய எல்லைகள் கொண்டவர்கள் அல்ல. தனது territorial எல்லைகளை கடந்தவர்கள். 

அடுத்து ஆல்ஃபா கருத்தாக்கத்தின் மிக முக்கியமான சிக்கல். பாலியல் சுரண்டல் சார்ந்து பேசும்போது இது ஒரு காரணியாக சுட்டப்படுவது பாலியல் சுரண்டலுக்கான கருத்தியல் தளத்தை அமைத்து கொடுப்பதாக தோன்றுகிறது. ஆல்ஃபா கருத்தாக்கத்தை புனைவு உண்மையாக, புனைவிற்குள் மனிதர்களை அவர்களுடைய விழைவுகளை பரீசீலிக்க ஒரு கருவியாக பயன்படுத்துவதில் எந்த தடையும் இல்லை. ஆனால் அதற்கு வெளியே இதை ஆய்வு உண்மையாகவோ அனுபவ உண்மையாகவோ சொல்வது இதற்கொரு கருத்தியல் தளத்தை ஏற்படுத்தி கொடுப்பது தான். ஆல்ஃபாக்களை விட்டுவிடலாம். இந்த மீ டூ குற்றசாட்டு மிக அதிகமாக சுட்டப்படுவது கல்லூரி பேராசிரியர்கள் மீது தான். குறிப்பாக ஆய்வு மாணவர்கள் மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைகள். மற்றொரு பக்கம் உயர் அதிகாரிகள். இவற்றை நிகழ்த்துபவர் ஆல்ஃபா அல்ல. மாறாக ஒரு பூச்சி. வெளிச்சம் கண்டால் பயந்து ஓடிவிடும் சந்தர்ப்பவாதி. தனது குறுகிய அதிகார வட்டத்திற்குள் அமர்ந்துகொண்டு அதை தவறாக பயன்படுத்தும் ஒரு நபர் மட்டுமே. நாம் திருமண அமைப்பு போன்றே அதிகார அமைப்பையும் மக்கள்மயப்படுத்தி  இயற்கை தேர்வை பைபாஸ் செய்திருக்கிறோம். ஒரு பல்கலைகழகத்தின் உயர் பதவிக்கு வர ஆல்ஃபாவாக இருக்க வேண்டிய எந்த தேவையும் இல்லை. உயர் பதவியில் இருக்கும் நபரை சுற்றி ஒரு காக்கா கூட்டம் இருக்கவே செய்யும். இவர்கள் செய்வது அதிகார துஷ்பிரயோகம் மட்டுமே. மிக முக்கியமாக இந்த அதிகாரத்தைக் கொண்டு தங்களை அவர்கள் ஆல்ஃபாக்களாக கற்பனை செய்துகொண்டு அதற்குரிய நியாயத்தை கண்டுபிடித்து கொள்வார்கள் என்பதே. வைரமுத்து ஒரு ஆல்ஃபாவா என கேட்டால், தருண் விஜய் போன்ற ஒருவரிடம் குழையும், நிமிர்வற்ற ஒருவர் எப்படி ஆல்ஃபாவாக இருக்க முடியும்? இத்தனை துல்லியமாக அரசியல் சரிநிளைகளை பேணும் திறன் ஆல்ஃபாவிற்கு உண்டா? அப்படியானால் அவருடைய தளத்தில் மட்டுமே அவர் ஆல்ஃபா, ஒரு ஆல்ஃபா தன்னைவிட சக்தி வாய்ந்த ஆல்ஃபாவை எதிர்கொள்ளும்போது தன்னை ஆல்ஃபாவாக முன்வைக்காது என்றொரு வாதம் வைக்கப்பட்டது. இதன்படி அவரவர் குடும்பத்தில் இருக்கும் ஆண்கள் எல்லாம் ஆல்ஃபாக்கள் ஆகிறார்கள். வலுத்தவர் வரும்போது சமரசம் செய்து கொள்வதும் இளைத்தவர் வரும்போது எகிறி அடிப்பதும் எப்படி ஆல்ஃபா இயல்பாக இருக்க முடியும. இது பொது மானுட இயல்பு தானே. மத்ஸ்ய நியாயம் என சொல்வார்கள்- சின்ன மீனை பெரிய மீன் விழுங்குவது, அதைவிட பெரிய மீன் அதை விழுங்கும். இதை தனித்தன்மையுடன் சுட்டுவதற்கு என்ன பொருள் இருக்கிறது? அப்படியென்றால் ஆல்ஃபா என்பது சந்தர்ப்பமும் வாய்ப்பும் அமைந்தால் எவரும் ஆகக்கூடிய ஒன்றாக சுருங்கி விடுகிறதே. ஹிட்லர் கூட ஒரு போலி ஆல்ஃபா என்றொரு சந்தேகம் எனக்குண்டு. அதிகாரத்தை பற்றிய கடும் பாதுகாப்பின்மையை உணர்பவர்கள் பேரழிவை உருவாக்குபவர்கள். 



ஒட்டுமொத்தமாக, இந்த ஆல்ஃபா கருத்தாக்கத்தை, அதன் வரையறைகள் குழப்பமானவை, ஒருவேளை அது நிதர்சனமாகவும் கூட இருக்கலாம், எனக்கு இது சார்ந்து இன்னும் துல்லியமான புரிதல் ஏற்படவில்லை,  ஆனால் மீ டூ போன்ற சிக்கலுக்கு விவாதத்திற்கு எடுத்து கொள்வது சரியானதல்ல என்றே எண்ணுகிறேன்.  

Sunday, July 12, 2020

கலையும் அறமும்



சிங்கப்பூர் - மலேசிய இலக்கிய சூழலில் சிற்றிதழ் மரபு என்பது இல்லை (அல்லது வலுவாக இல்லை). அங்கே நாளிதழ்களே எல்லாவகையான தமிழ் எழுத்திற்கும் பிரதிநிதியாகிறது. இது அங்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது. சாம்ராஜின் ஒரு கவிதை தமிழ் முரசில் வெளியானபோது அங்கே பலரும் அதிர்ச்சி அடைந்து கடுமையாக விமர்சித்தார்கள். நவீனின் பேய்ச்சி நாவலில் ஆபாச வார்த்தைகள் உள்ளன என முழு பக்க கட்டுரை மலேசிய நாளிதழில் வெளியாகி நாவல் தடை செய்யப்படும் அளவிற்கு சென்றது. சாம்ராஜின் கவிதை இங்கு தினமலரில் வந்தால் கூட இப்படி விமர்சிக்கப்பட்டிருக்கவே வாய்ப்பு அதிகம். தமிழகத்திலும் சிற்றிதழ் மரபு தேய்ந்து வருகிறது. இது சிற்றிதழ் மரபில் பாலாறும் தேனாறும் ஓடியது என சுட்டுவதற்கு அல்ல. இப்போது சிற்றிதழ் தரப்பிலிருந்து மைய ஊடக பெயர்ச்சி நிகழும்போது மைய ஊடகத்திற்குரிய சமரச போக்கை எழுத்தாளர்கள் கடைபிடிக்க வேண்டி இருப்பது புரிந்துகொள்ள கூடியதே.  அதேசமயம் சிற்றிதழின் விழுமியங்களை நாளிதழில் இவர்களின் இடபெயர்வு கொண்டுவரும் என எதிர்பார்ப்பதும் சரியானதே. 

நேற்று கவிஞர் வைரமுத்துவை வாழ்த்தி ஒருபக்க சிறப்பிதழை தமிழ் இந்து கொண்டு வந்திருந்தது. அதை எழுதியவர்கள் எனது மதிப்பிற்குரிய கவிஞர்கள், நண்பர்கள். இது சார்ந்து தமிழ் இந்து திசை நாளிதழ் மீதும் கட்டுரையாளர்கள் மீதும் கடும் விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன. இந்த விமர்சனங்களில் நியாயம் இருப்பதாகவே உணர்கிறேன். இத்தகைய ஒரு சிறப்பிதழ் தினமலர் அல்லது தினத்தந்தியில் வந்திருந்தால் இத்தனை வருத்தத்தை எனக்கு ஏற்படுத்தி இருக்காது. சிற்றிதழ் அல்லது தீவிர இலக்கிய பரப்பிலிருந்து மைய ஊடகத்திற்கு சென்றவர்கள், தமிழின் தீவிர இலக்கியத்திற்கு (முன் தினமணி மட்டுமே கொஞ்சம் கவனம் அளித்த வந்த நிலையில்), சிறந்த தளங்களை ஏற்படுத்தி கொடுத்தவர்கள் எனும் வகையில் தமிழ் இந்து திசை மீது கூடுதல் எதிர்பார்ப்பும், அது நிறைவேறாத போது கூடுதல் விமர்சனமும் எழுவது இயல்பே. தமிழ் இந்து திசையின் நடுப்பக்கத்தில் செய்தியாக இல்லாமல் வலுவாக தமிழ் அறிவுஜீவிகள் வைரமுத்துவை கண்டித்து மீடூ விவகாரத்தில் முன்னர் எதுவும் எழுதியதாக நினைவில் இல்லை. சொல்லப்போனால் ஒருவித இறுகிய அமைதியுடன் அதை கடந்து சென்றார்கள். மீடூ ஒரு சாதிய விவகாரமாக, அல்லது பெண்களின் உள் விவகாரமாக மட்டும் சுருங்கி மறைந்தது. எந்த மைய ஊடகமும் கண்டித்து நடுப்பக்கத்தில் தலையங்கம் எழுதியதாக நினைவில்லை. எந்த தொலைக்காட்சி விவாதத்திலும் இது பெரிய அளவு விவாதிக்கப்பட்டதாகவும் நினைவில் இல்லை. இவையெல்லாம் நிகழ்ந்து இருந்து, அதன் பிறகு அவர் ஒரு முக்கிய கலைஞர் என கொண்டாடப்பட்டிருந்தால் (அவரை கலைஞர் என ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்பது வேறு விஷயம், குறைந்தபட்சம் சில நல்ல தமிழ் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார் என ஒப்புக்கொள்வேன்) கூட அதை ஒருவிதமாக புரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் இவை எதுவும் நிகழவில்லை. அப்போது எழுதாத நீ இப்போது எழுதுகிறாயே என கேட்கும் whattabouttery அல்ல இது. 

கலைஞனும் கலையும் வேறு. கலைஞன் மண்ணில் உழல்பவன், அவனுடைய பிழைகளுக்கு அவன் உருவாக்கிய கலையை புறக்கணிக்க வேண்டுமா என்றொரு விவாதம் எழுகிறது. கலை என்பதொரு கொடை. பெரும்பாலும் அது அவன் வழியாக திகழ்கிறது. கலைஞன் ஒரு ஊடகமாகவே அதிகமும் திகழ்கிறான் என்பதே எனது புரிதல். பல சமயங்களில் கலை வெளிப்படாத தருணங்களில் சுயநலமும் கீழ்மையும் கொந்தளிக்கும் சாமானிய மனிதனாக கலைஞன் இருக்கிறான். ஆகவே கலையையும் கலைஞனையும் தனித்து நோக்க வேண்டும் எனும் பார்வை ஏற்புடையதுதான். ஆனால் அவன் வழியாக வெளிப்படும் கலை அவனை இம்மியளவு கூட அசைக்கவில்லை என்றால், அவனை எவ்விதத்திலும் மேம்படுத்தவில்லை என்றால் அந்த கலை எத்தகையது? ஒசாமா பின்லேடனை ஒரு மாபெரும் அறிவுஜீவியென, அவருடைய அறிவையும், நுண்ணுணர்வையும், நாம் புகழலாம். ஆனால் அந்த அறிவும் நுண்ணுணர்வும் எதற்காக பயன்படுகிறது? பேரழிவை உருவாக்க, அதிகாரத்தை கைப்பற்ற,. அவருடைய அறிவை விதந்தோதலாம் ஆனால் ஒட்டுமொத்தத்தில் அவரை நிராகரித்தே முன்நகர முடியும். கலைக்கும் அதையே சொல்வேன். இந்த உன்னத சாதனத்தை வைத்துக்கொண்டு சுரண்டி, அதிகாரத்தை அடைவான் எனில அது ஏற்புடையது அல்ல. இந்த கவிதையும் கதையும் எல்லாம் எதற்காக? அரசியலிற்கும், அதிகாரத்திற்கும், காமத்திற்கும் தானா? இந்த இலக்குகளை அடையும் தந்திரமாக கலை பயன்படுத்தப்படுகிறதா என்பதே கேள்வி. குறைந்தபட்சம் வைரமுத்துவிற்கு, தன்னுடைய செயலிற்கு பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கோரும் மனத்திண்மை இருந்தால், செயலுக்கு பொறுப்பேற்று கொண்டால் (சேத்தன் பகத் கூட தன்னளவில் ஒரு மன்னிப்பை கோரினார்) அதன் பின் அவருடைய கலை பெறுமதியை பற்றி பேசலாம். ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை. நேர்மாறாக அதிகாரத்தையும் பலத்தையும் பயன்படுத்தி பசப்பவும் ம்ழுப்பவுமே முயற்சிகள் நிகழ்கின்றன என ஐயம் எழுகிறது. கலைஞனின் கீழ்மையோ, ஒழுக்கமின்மையோ, போதாமைகளோ ஒரு பொருட்டு அல்ல. ஆனால் அவனுடைய நேர்மையின்மையை அப்படி விட்டுவிட முடியாது. அந்தரங்க நேர்மையற்ற கலைக்கான ஊடகமாக கலைஞன் திகழும்போது அவன் வழியாக வெளிப்படும் கலையும் குறைபட்டதாகவே இருக்கும். 

Thursday, July 9, 2020

யாரும் யாருடனும் இல்லை- உமா மகேஸ்வரி - நாவல் குறிப்பு

லாவண்யா சுந்தர்ராஜன் உமா மகேஸ்வரிக்கு சிற்றில் சார்பாக ஒருநாள் அரங்கு ஏற்பாடு செய்யவேண்டும் என ஒருமுறை சொல்லியிருந்தார். அவருடைய மரப்பாச்சி சிறுகதையை எங்கள் கூடுகையில் (தற்செயலாக எங்கள் இலக்கிய அமைப்பின் பேரும் மரப்பாச்சி தான்) விவாதித்திருந்தோம். தமிழினி வெளியீடாக வெளிவந்த இந்நாவலை வாசித்து முடித்தேன்.

நாவலின் களம் ஒரேயொரு வீடு. அந்த வீட்டிற்குள் வசிக்கும் மனிதர்களின் கதையை சொல்லி செல்கிறது. சிறிய கிராமத்தில் சகல வசதிகள் கொண்ட மாடி வீட்டை பொன்னையா எழுப்புவதும், அதன் பெருமிதத்தையும் முதல் சில அத்தியாங்களில் சொல்லும் நாவல் இறுதியில் அவ்வீட்டு சுவர்களுக்குள்ளாக எல்லை வகுத்து கொண்டு சுருங்கி விடுவதுடன் முடிகிறது. தமிழ் பல்ப் நாவல்கள் பலவும் கூட்டுக் குடும்பத்தின் சிதைவை சித்தரித்துள்ளது. பொது புத்தியில் கூட்டு குடும்பம் மீது நமக்கு ரொமாண்டிக் சாய்வுகள் உண்டு. ஆனால் நமக்கு ரொமாண்டிக் சாய்வுகள் உள்ள பிறவற்றை போலவே இதையும் நடைமுறை படுத்த மாட்டோம். அவ்வப்போது குற்ற உணர்விற்கும் கழிவிரக்கத்திற்கும் உகந்த கருவியாகி விடும். பலப் நாவல்கள், திரைப்படங்கள் என அவற்றின் நோக்கம் கூட்டுக்குடும்பத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாகவும், அதை நினைவேக்கத்துடன் போற்றுவதாகவுமே இருக்கும். அதன் உள்ளார்ந்த அதிகார உரசல்களை பேசுவதில்லை. மறுபக்கம் பிரசார எழுத்துக்கள் குடும்ப அமைப்பை வன்முறையின் ஊற்றுக்கண் என சித்தரித்து தனி மனிதனின் எல்லாவித சிக்கல்களுக்கும் குடும்ப அமைப்பின் மீது பழிபோடும். இவையிரண்டும் எழுதுவதற்கு சுலபமான கதைகள் தான். ஏனெனில் இவை ஒற்றைப்படையான அறுதி முடிவுகளை கொண்டிருப்பவை. கதையை இந்த முன்முடிவை உறுதிப்படுத்த பயன்படுத்துபவை. உமா மகேஸ்வரி இவ்விரண்டு எல்லைகளுக்கும் போகாமல், மிக இயல்பாக ஒரு கூட்டு குடும்பத்தின் சிதைவை, அதன் சிக்கல்களை, உள்ளார்ந்த வன்முறைகளை, சுரண்டல்களை மெல்ல மெல்ல கண்முன் நிகழ்த்தி காட்டுகிறார். இதை சமன்படுத்தும் நோக்கு குழந்தைகள் குடும்ப அமைப்பினுள் வளர்வதின் ஊடாக அடையும் நட்பு, அன்பு பாதுகாப்பு போன்றவையும் சித்தரிக்கப்படுகிறது. இந்த சமநிலையே இந்நாவலை முக்கியமானதாக ஆக்குகிறது.

நாவலின் மிகப்பெரிய பலம் அதன் மொழி. உமா மகேஸ்வரி கவிஞரும் கூட. குடும்ப அமைப்பின் உள்ளார்ந்த வன்முறையை வேறு வகையில் பேசும் யூமா வாசுகியின் ரத்த உறவுகள் வாசிக்கும் போது மனம் தொந்திரவுக்கு உள்ளாகும். இந்நாவலில் அவ்வகையிலான தொந்திரவு எதுவும் நமக்கு ஏற்படுவதில்லை. சிறு சிறு துண்டங்களாக நிகழ்வுகளையும் மன ஓட்டங்களையும் சொல்லி செல்கிறது. இரண்டு நாவல்களிலும் சிறார் பகுதிகள் முக்கியமானவை. ரத்த உறவுகளின் சிறார் பகுதி கனவுத்தன்மை கொண்டது. இந்நாவலில் நினைவேக்கத்தன்மை கொண்டது என கூறலாம். உயிர்ப்புடன் திகழ்வது.

நாவல் படர்கையில் சொல்லப்பட்டாலும் கூட அதிகமும் அணு எனும் சிறுமியின் கண்ணோட்டத்திலேயே விரிகிறது. அன்னம்மா மட்டுமே முழுக்க நேர்மறை சித்தரிப்பு கொண்டவர் என சொல்லிவிட முடியும். ராஜேஸ்வரி, தனமணி, வினோதினி, விஜயா, வாணி, குணா, கோபால், பொன்னையா, சுப்பக்கா என பிற அனைத்து பாத்திரங்களும் நேர்மறை எதிர்மறை இயல்புகளின் வெவ்வேறு கலவையில் உருவாகி உள்ளார்கள். குடும்ப தலைவர் பொன்னையா தனக்கென பெரும் வணிக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கொள்கிறார். ஏழு பிள்ளைகளுக்கு தந்தையாகியும் பெண் தொடர்புகள் உடையவராக குடும்பத்திலிருந்து விலகியவராக வருகிறார். அவருடைய மகன்களில் குனாவைத்தவிர வேறு எவரும் பெரிய ஆளுமையாக உருவாகி வரவில்லை நாவலில். எல்லோரும் சிடுசிடுக்கும் சாமானிய ஆண்களாகவே வருகிறார்கள். நகையை அடமானம் வைக்கும் குடிகார கணவன், காசு கேட்டு மனைவியை தாய் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் மருமகன், வணிகத்திலே கவனம் கொண்டிருக்கும் மகன்கள் என ஆண் பாத்திரங்கள் எல்லாம் தட்டையான வார்ப்புகள். பொன்னையாவின் கடைசி மகனான குணா மட்டுமே இதற்கு விதிவிலக்கு. தொடக்கத்தில் அவனுடைய சித்தரிப்பும் கூட அறிந்த வார்ப்புருவை சேர்ந்ததாகவே இருந்தது. விநோதினியுடனான உறவின் வழியாக அவனுடைய பாத்திரம் சிடுக்கு நிறைந்ததாக துலக்கம் பெறுகிறது. ஆண் பாத்திரங்களை ஒப்பிடும்போது நாவலின் பெண் பாத்திரங்கள் சிடுக்கானவர்கள். உடற்குறை கொண்ட  சுப்பக்கா வன்புணர்வுக்கு உள்ளாகி தன்னை மாய்த்து கொள்கிறாள். மூத்த மருமகள் கடும் உழைப்பாளி, அதேநேரம் பிள்ளைகளிடம் வித்தியாசம் காணும் நுட்பமான இடம் நாவலில் பதிவாகிறது. தங்கையின் வயிற்றில் வளரும் கர்பத்தை கலைக்க உதவுகிறாள் ஆனால் அதன் பின் அவளை மன்னிக்கவே இல்லை. இளம் வயதில் திருமணம் முடித்து வரும் வினோதினி நாவலின் அபாரமாக உருவாகி வந்த பாத்திரம். எப்போதும் குடித்து வரும் கணவன், துளிர்விடும் புதிய உறவு, அதனால் ஏற்படும் சிக்கல்கள், உறவில் குற்ற உணர்வு இல்லாமை, உண்டான கருவை கலைத்த பிறகு அது தலைதூக்குவது, சிக்கும்போது அவனையே காரணமாக காட்டிக்கொடுத்து தப்பிக்க முயல்வது, பதின்ம வயது பெண் வழியாக தன்னுடைய வேட்கையை தீர்த்துக்கொள்ள முயல்வது, இறுதியாக சொத்தை பிரிக்க கோருவது என முழு பரிணாமமும் வெளிப்படும் பாத்திரம். படிப்பு நிறுத்தப்பட்டு திருமண உறவுக்குள் நுழையும் வாணியின் பாத்திரமும் ஓரளவு முழுமையாக துலங்கி வருகிறது. பதின்மத்திற்கே உரிய தயக்கங்கள், மயக்கங்கள், சிக்கல்கள் கள்ளத்தனங்கள் (குறிப்பாக பிள்ளைகளுடன் தனியாக விளையாடும் ஒரு சித்திரம் உண்டு. அத்தனை எளிதாக எவரும் துணிந்து எழுதி விட முடியாத பகுதி) என எல்லாமும் உண்டு. 

நாவலுடைய களம் நான்கு சுவற்றுக்குள் நிகழ்கிறது என்பதால் சற்றே நமக்கு மூச்சு திணறுகிறது. எனினும் கதை மாந்தர்கள் உணரும் அத்திணறலை வாசகராக நாமும் உணர வேண்டும் என்பதை நாவலாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்றே எண்ணுகிறேன். ஒரு குடும்பம் என்றால் நாம் எவற்றை எல்லாம் யோசிப்போம்? திருமணம், மரணம், தற்கொலை, உறவு சிக்கல், குடிகார கணவன், விட்டேந்தி கணவன், வேட்கை கொண்ட மனைவி, வெள்ளந்தி பிள்ளைகள் என இவையாவும் பிரதிநிதப்படுத்தபடுகிறது. இந்த தன்மையே இதன் பலமும் பலவீனமும் கூட. பள்ளிக்கு அழைத்து செல்லும் குதிரை வண்டி தாத்தாவை நிறுத்தி விட்டு வேன் வந்ததும் அவரை காண தேடிப்போவது, பொன்னையா இறந்ததும் முகம் காண வரும் பாருவை குடும்பம் அவமதித்து அனுப்புவது என தேய்வழக்கான சம்பவங்கள் நாவலை கீழே இழுக்கின்றன. வினோதினி - குணா உறவு நாவலின் உச்சம் நோக்கி போகும் பகுதி. ஆனால் அதற்கு பின் நாவலில் அதுவரை கட்டமைத்தவை எல்லாம் உருமாற போதிய அவகாசம் இல்லாமல்  அவசர கதியில் முடிவதாக தோன்றுகிறது.  

நாவலின் கதை போக்குடன் நாமறிந்த மனிதர்கலின் நிழல்கள் பிணைந்து கொள்கிறது. பொன்னையாவையும், அன்னம்மாவையும் விஜயாவையும், செல்வத்தையும் நாம் நம் சுற்றங்களில் அறிந்திருக்கிறோம். அவர்களை நம்மால் புரிந்துகொள்ள முடியும். 'யாரும் யாருடனும் இல்லை' என்பது உண்மையில் ஒரு கூர்மையான வாக்கியம், உறவுகளை உற்று நோக்கி அதன் ஆடல்களை பரிசீலனை செய்து எழுத்தாளர் வந்தடையும் ஒரு வாக்கியம். எல்லோரும் எல்லோருடனும் இருப்பதாக பொய் தோற்றம் காட்டிக்கொண்டிருக்கிறோம், ஆனால் அதை மறுத்து இவ்வாக்கியத்தை சொல்கிறார். மறுபக்கம் இந்த வாக்கியத்தில் வருத்தமும் ஏக்கமும் கூட தொனிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் பார்வையிலிருந்து. ஒரு நவீனத்துவ மனநிலையில் நின்று 'யாரும் யாருடனும் இல்லை' என கறாராக எவ்வித உணர்வு பிணைப்பும் இன்றி கண்டடைந்ததை சொல்லும் தொனி, இது நவீன மனிதன் என்பவன் தனி மனிதனாக மட்டுமே இருக்க முடியும் என காம்யு போன்றவர்கள் வழியாக ஒலிக்கும் குரல், இலக்கியத்திற்கு உகந்ததும், இசைவானதும் கூட, உடனே எதிர் தரப்பாக உள்ளிருந்து ஒரு மரபான மனதின் ஏக்கமாகவும் வருத்தமாகவும் இரட்டை குரலில் தொனிக்கிறது. இந்த துல்லியமின்மை, இந்த ஊசலாட்டம் இதை தனித்துவமான நாவலாக்குகிறது.  

Thursday, July 2, 2020

மரம் - ஜீ. முருகன் - வாசிப்பு குறிப்பு

ஜீ. முருகனின் 'கண்ணாடி' தொகுப்பில் சில கதைகள் வாசித்திருக்கிறேன். பெரிதாக ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவருடைய 'மரம்' நாவல் வாசித்து முடித்தேன். நாவலின் களம் சிவகிரியாக உருமாற்றம் அடைந்துள்ள திருவண்ணாமலை. அங்கு பல வருடங்களாக தொடர்ந்து சென்று வருபவன் என்பதால் அவர் காட்டக்கூடிய சில இடங்களை என்னால் கண்டுகொள்ள முடிந்தது. கிரி, அவனுடைய அம்மா கவிஞர் சந்திரா, அவருடைய கணவர் கண்ணன், மகள் திவ்யா என ஒரு குடும்பம். இந்த குடும்பத்துடன் தொடர்புடைய கிரியின் நண்பன் ரவி, ரவியின் நண்பனாக வந்து சேரும் சிவன் எனும் ஓவியன், அவனை ரவிக்கு அறிமுகம் செய்த இடதுசாரி இயக்க தோழர் பாலு. ரவியின் வீட்டில் கீழ் பகுதியில் வசிக்கும் தேவகி. இவர்களெல்லோரும் சுற்றிவரும் மையமான கோபாலர் எனும் மறைந்துபோன துறவி. 

கோபாலர் மரத்தில் ஐக்கியமாகிவிட்டார் என ஒரு மரத்தை சுற்றி ஆசிரமத்தை கட்டி எழுப்புகிறார்கள அவருடைய சீடர்கள். கோபாலர் ஒரு சாயலில் யோகி ராம் சுரத் குமார் மாதிரியும் இன்னொரு சாயலில் ரமணரையும் நினைவுபடுத்துகிறார். மனிதன் ஒரு மரம் போல வாழ்ந்து தழைத்து பெருகி மட்கி உரமாக மறைய வேண்டும் என்பதே அவருடைய போதனை. நாவல் இந்த லட்சியத்தையே முன்வைக்கிறது. இதை அடையமுடியாத தவிப்பை பதிவாக்கி, எது இதற்கு தடையாகிறது என கேட்கிறது. இங்கு தான் ஓவியர் சிவனும் அவன் வரையும் குரங்குகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. சிவன் ஒரு கலைஞன். குற்ற உணர்விலிருந்து விடுபட்ட, மிகக் குறைந்த தேவைகள் உடைய கலை மீது பெரும் நாட்டம்கொண்ட நாடோடி கலைஞன். அவன் குரங்குகளை விதம் விதமாக வரைகிறான். தூய ஆதி மனிதனை உருவாக்கிவிட முடியுமா எனும் வேட்கை கொண்டவன். குரங்கு மனிதமனத்தின் பகுத்தறிவற்ற (irrational) பகுதிக்கு குறியீடாகிறது. சிவன் குரங்குகளுடன் நெருங்கி பழகுகிறான் அவற்றுடன அவனால் உரையாட முடிகிறது. கலைஞன் என்பவனே தனக்குள் இருக்கும் குரங்குடன் உரையாட முடிந்த, பேண முடிந்தவன் தான் என தோன்றியது. சிவன் ஒரு லட்சியவாத கலையாளுமை. கோபாலருடன் அவன் மானசீகமாக உரையாடுகிறான். தன்னுடைய இலக்கு கோபாலருடைய அதே இலக்குதான் ஆனால் தான் அதை அடைவதற்கு கலையை சாதனமாக கைகொண்டவன்.  

நாவலின் பிற பாத்திரங்கள் கொந்தளிக்கும் அமைதியின்மையில் உழல்பவர்கள். உள்ளடங்கிய இயல்புடையவனான கிரி சமூக மாற்றங்களுக்காக சிலருடன் இணைந்து பணியாற்ற சென்று ஏமாறுகிறான். தாயின் மறுபக்கத்தை கண்டு உழல்கிறான். நண்பனின் துரோகத்தை காண்கிறான், புத்தக கடைக்காரன் வழியாக காவலர்களிடம் சிக்கி கொள்கிறான். வெறுப்பு ஏமாற்றம் என தற்கொலையில் சென்று முடிகிறது அவனுடைய பாதை. மரணத்திற்கு பின் அவனுடைய மறுபக்கத்தை தங்கை அவனுடைய கணினியை ஆராய்ந்து அறிந்து அதிர்ச்சி அடைகிறாள்.  ரவி நண்பனின் தாயுடனும், கீழ் வீட்டு தேவகியுடனும் உறவில் இருக்கிறான் ஆனால் கடும் நிறைவின்மையை  உணர்கிறான். சந்திராவின் அலைகழிப்புகள் அவளை துன்புறுத்துகின்றன. கண்ணனுக்கு சிவனின் ஓவியத்தில் இருக்கும் குரங்கு பெண் தன்னுடைய மனைவி என்பது உறைக்கும்போது பெரும் அதிர்ச்சி. அதை ஏற்க முடியாமல் தவிக்கிறான். ரயில் நிலையத்தில் அவன் தன்னை பரிசீலனை செய்து மீள்கிறான். இவர்கள் எல்லோருடைய சிக்கலும் இவர்கள் ஒழுக்கம் எனும் ஈர கம்பளியை போர்த்தியவர்கள் என்பதுதான்..அதை துறக்க முடியாமல் சுமந்து அலைபவர்கள். அவர்களால சிவனாகவோ கோபாலராகவோ ஆகமுடியாது  என்பதால் அவர்களுக்கு மீட்சியில்லை. 

நாவலின் சிக்கல் என்பது இவையாவும் அறிவார்ந்த வகையில் மட்டுமே வெளிப்படுகிறது. கதை மாந்தர்களின் கொந்தளிப்பை நமது நாடியில் உணர முடியவில்லை. ஒருவித விலக்கத்துடனேயே உணர்கிறோம். ஆகவே  ஒருவித இயல்பற்ற தன்மை குடிகொண்டுவிடுகிறது. மற்றுமொரு முக்கிய சிக்கல் நாவலின் மொழி மிகவும் அசுவாரசியமற்று தட்டையாகவே நகர்கிறது. சில பிரமாதமான இடங்கள் கூட சோகையான மொழியால் எவ்வித தாக்கமும் இன்றி நம்மால் கடந்துவிட முடிகிறது. 

கிரியின் காமக்கதைகள் அவனுக்குள் இருந்த இன்செஸ்ட் விழைவை பேசுகிறது. அதை தங்கை குறுகுறுப்புடன் வாசிக்கிறாள். கிரியின் உள்வெளிக்கும் புற நடத்தைக்கும் இடையிலான முரண் அவளை தொந்திரவிற்கு உள்ளாக்குகிறது. மனிதனின் ஆழ்மனத்தின் மூடியை திறந்து நோக்குவது கழிவு தொட்டியை திறப்பது போலத்தான். அங்கே எல்லாமும் நாறி கிடக்கும். மனிதனால் ஏன் குரங்கை போல் இருக்க முடியவில்லை? தளைகள் இன்றி வாழ முடியவில்லை? எல்லாவற்றையும் ஆழ்மனத்தில் அதக்கி வைத்து உயிரை விடுகிறான்? ஒருவித ஃபிராய்டிய நோக்கில் உருவாக்கப்பட்ட பாத்திரம் தான் கிரி. கோபாலர் அவர் ஐக்கியமானதாக சொல்லப்பட்ட்ட மரத்தில் தூக்கிட்டு இறந்தார் என ஒரு நம்பிக்கையை கிரி முன்வைக்கிறான். கார்ல் யுங் மனிதனின் நிழலை பற்றி சொல்கிறார். நிழல் அவனுடைய ஆழ்மனம். நிழல் மனிதனை விழுங்கும்போது அவன் அழிந்துவிடுவான். கோபாலரும் கிரியும் ஒளியாக தென்பட்டவர்கள். எத்தனைக்கு எத்தனை ஒளி மின்னுகிறதோ அத்தனைக்கு அத்தனை அதன் நிழலும் அடர்ந்து கறுத்திருக்கும். நாவலின் உச்சங்களில் ஒன்று என்பது குரங்கு கூட்டத்தின் மரணத்தை சொல்லும் அத்தியாயம். குறியீட்டு ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் முருகனின் மொழியின் காரணமாக நம்மை அந்த மரணங்கள் நிலைகுலைய செய்யவில்லை. மேலும் கதை மாந்தர்களில் சிவன், ரவி கிரி ஆகியோருக்கு இருக்கும் நம்பகத்தன்மை சந்திரா, தேவகி, திவ்யாவிற்கு கைகூடவில்லை என தோன்றியது.  

உருவகங்கள் வழியாக அறிவார்ந்த தளத்தில் நிகழும் நாவல். சிவகிரி புனிதங்களும் கசடுகளும் ஒருங்கே இருக்கும் நகரமாக நாவலின் கதை மாந்தர்களின் அகத்திற்குரிய புறமாக துலங்கி வருகிறது. அறிவார்ந்த நாவலின் சிக்கல் என்பதே வாசக மனதுடன் தொடர்புறுத்தி கொண்டு அவனுடைய உணர்வு தளத்தில் வேர்பிடித்து வளராமல் போய்விடக்கூடும் என்பதே. இதுவே இந்நாவலின் சிக்கலும் கூட. நாவலின் நோக்கத்திற்காகவும் பேச முயன்ற விஷயத்திற்காக வாசிக்க வேண்டிய நாவலாக 'மரம்' உள்ளது. 

மரம் 
ஜீ. முருகன் 
யாவரும் வெளியீடு    

Sunday, June 28, 2020

சொல்வனம் ரொபர்டோ போலான்யோ இதழுக்கு வாழ்த்து

தமிழ் இணைய இதழ்களில் சொல்வனம் நெடிய பாரம்பரியம் கொண்டது. ஒரு இணைய இதழ் 225 இதழ்களாக தொடர்ந்து நடத்தி வருவது சாதாரணம் அல்ல. இடைக்காலத்தில் சுணக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று தமிழில் முனைப்புடன் இருக்கும் ஆகப்பழமையான இணைய இதழ் என சொல்வனத்தையே சொல்ல முடியும். சொல்வனத்திற்கு சமூக ஊடகத்தில் பெரிய இருப்பு இல்லை என்பதே இன்றைய நிதர்சனம். பதாகைக்கும் இந்த சிக்கல் உண்டு. இன்று இணைய இதழுக்கு சமூக ஊடக இருப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஆகிவிட்டது. தமிழினி, கனலி, வல்லினம், யாவரும், உயிர்மை,  வாசகசாலை என சொல்வனத்திற்கு வெகுகாலம் பின்னர் உருவாகி வந்த எல்லா இதழ்களுக்கும் ஃபேஸ்புக்கில் / சமூக ஊடகத்தில் வலுவான தளம் உள்ளது. எழுத்தாளர்களும் இயல்பாக அவற்றை நாடி செல்வார்கள். இப்போது இணைய இதழ்கள் உருமாற்றம் அடைய துவங்கியுள்ளன. இணைய இதழ் என்பது சிற்றிதழுக்கு நெருக்கமானவை தான். ஒரு மனிதர் அல்லது ஒரு சிறிய குழுவின் தனிப்பட்ட ஊக்கத்தினால் மட்டுமே இயங்குவது. சொல்வனத்தில் ரவிசங்கர் மற்றும் வெகு சில நண்பர்கள் முழு தீவிரத்துடன் இதை நடத்தி வருகிறார்கள். சொல்வனம் தன்னை மறுகண்டுபிடிப்பு செய்துகொள்கிறது.எனது அம்புப்படுக்கை தொகுப்பின் கதைகள் முழுக்க சொல்வனம், பதாகை இதழ்களில் வெளிவந்தவை. இப்போது நான் அவற்றில் அதிகம் எழுதவில்லை என்றாலும் கூட இவ்விதழ்களில் உருவாகி வந்தவன் என்றே என்னை எண்ணிக் கொள்வேன். 

நேற்று சொல்வனம் 225 ஆவது இதழ் ரொபர்டோ போலன்யோ சிறப்பிதழாக வெளிவந்திருக்கிறது. முப்பதிற்கும் மேற்பட்ட கட்டுரையுடன். லத்தீன் அமெரிக்காவில் கூட இத்தனை கட்டுரைகளுடன் அவருக்கு ஒரு சிறப்பிதழ் வந்திருக்குமா என தெரியவில்லை. கல்குதிரை சில ஆண்டுகளுக்கு முன் மார்க்குவஸ் சிறப்பிதழ் வெளியிட்டு அதை அவருக்கே அனுப்பிவைத்ததாக சொல்வார்கள். சொல்வனம் முன்னர் அசோகமித்திரன், தி.ஜானகிராமன், அ. முத்துலிங்கம் ஆகியோருக்கு சிறப்பிதழ்கள் கொண்டுவந்ததை என்னால் நினைவுகூர முடிகிறது. ஆனால் அவற்றில் கூட இந்த எண்ணிக்கையிலான கட்டுரைகள் இருந்ததாக எனக்கு நினைவில்லை. 

நண்பர் நம்பி சிறப்பு ஆசிரியராக இருந்து இந்த முன்னெடுப்பை செய்திருக்கிறார். நம்பியின் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. தமிழில் பல முக்கியமான அயல் எழுத்தாளார்களை அறிமுகம் செய்தவர். நானறிந்தவரையில் நம்பி, கணேஷ்ராம், சித்துராஜ் பொன்ராஜ், ரா.கிரிதரன், வாசுதேவன், வே.நி.சூர்யா ஆகியோர் பரவலாக வேற்று மொழி இலக்கியவாதிகளை இங்கு அறிமுகம் செய்து வருகிறார்கள்.

கல்குதிரையில் டேன்ஸ் கார்ட் கதையை மொழியாக்கம் செய்ததன் வழியாக தமிழுக்கு போலன்யோவை முதன்முறையாக கொண்டு வந்த நண்பன் சித்திரனின் கட்டுரையும் இடம்பெற்றுள்ளது. கவிஞர் சமயவேல், அம்பை, சித்துராஜ், சுரேஷ் பிரதீப், ரா.கிரிதரன், நம்பி, வேணு தயாநிதி, கோகுல் பிரசாத்  என மதிப்பு வைத்திருக்கும் பலரும் பங்களிப்பு ஆற்றியுள்ளார்கள். 

போலன்யோ சிறப்பிதழில் என் பங்களிப்பாக ஒரு கட்டுரையும், நரோபா எழுதிய ஒரு கதையும் இடம்பெற்றிருக்கிறது. தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியையும் நிறைவையும் உணர்கிறேன். இலக்கிய லட்சியவாதம்  என்பதைத்தவிர இம்மாதிரியான இதழ்களை தொடர்ந்து நடத்திவர வேறு எதுவும் காரணம் இருக்கப்போவதில்லை. அது அளிக்கும் போதை, சிறிய அங்கீகாரம், மென்மேலும் இயங்க செய்யும் விசையாகும். நம்பிக்கும், சொல்வனம் நண்பர்களுக்கும் இந்த இதழுக்காக மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பதாகை எழுத்தாளர் சிறப்பிதழ்களை தூசு தட்டும் எண்ணத்தை, ஊக்கத்தை அளிக்கிறது. 

மானுடத்தை துப்பறிபவன் |(நான் எழுதிய கட்டுரை)

கொஞ்சம் சிறுசா  (நரோபாவைன் பழுவேட்டையர் கதை போலன்யோவின் தாக்கத்தில்)

கீழே சொல்வனம் ஆசிரியர் ரவிசங்கர் அவர்களின் கடிதம் 

அன்புடையீர்,
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட ஒரு இதழ். இதழை சிறப்புப் பதிப்பாசிரியராக நம்பி கிருஷ்ணன் அவர்களை அழைத்து வழி நடத்தச் சொன்னோம். நிறைய கதைகளும், கட்டுரைகளும் கொண்ட கனமான ஒரு இதழாக இது அமைந்திருக்கிறது.
இந்த இதழ் கிட்டும் வலை முகவரி: https://solvanam.com/

இந்த இதழில் படிக்கக் கிட்டுவனவற்றின் பட்டியல் கீழே:
Especially on the Bolano Special… - சிறப்புப் பதிப்பாசிரியர்
நகரத்தில் இப்போதும் இரவு – சித்துராஜ் பொன்ராஜ்
என்ரீகே லின்னுடன் ஒரு சந்திப்பு – ரொபெர்டோ பொலான்யோ (தமிழாக்கம்: அம்பை)

பொலான்யோவின் ‘2666’, அல்லது சீரணிக்க முடியாததைச் சீரணித்தல்  - நம்பி

தாவீதுகளின் சங்கீதம்பொலான்யோவின் ‘டிஸ்டன்ட் ஸ்டார் – கோகுல் பிரசாத்

மானுடத்தைத் துப்பறிபவன் – சுனில் கிருஷ்ணன்

2666 – ஒரு நூற்றாண்டை விசாரித்தல் – சுரேஷ் பிரதீப்

நெடுங்காலமாகத் தொடரும் அரண் – ராபர்டோ பொலான்யோவின் Amulet

ரா. கிரிதரன்

தோல்வியுற்ற கவிஞர்களின் நாவல் - சித்ரன்

உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – – ராபர்டோ பொலோன்யோவின் கவிதைகள் - வேணுகோபால் தயாநிதி

கவிதைக்களத்தில் விளையாட்டாக -ஹூஸ்டன் சிவா

ரொபெர்டோ பொலான்யோவின் ஆறு கவிதைகள் -வேணுகோபால் தயாநிதி

மர்மமான அந்தச் சிலெ நாட்டான் – வெண்டி லெஸ்ஸர் (தமிழாக்கம்: மைத்ரேயன்)

ரொபெர்டோ பொலான்யோ : ஒரு படிப்புத் திட்டம் – பானுமதி ந.

(தமிழாக்கம்: மைத்ரேயன்)
கொஞ்சம் சிறுசா – நரோபா- சிறுகதை
சென்சினி – ரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: எம்.நரேந்திரன்)
ஜெயில் பறவைகள்  - ரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)
கிளாராரொபெர்டொ பொலான்யோ- (தமிழாக்கம்: சிஜோ அட்லாண்டா)
வில்லியம் பர்ன்ஸ் -ரொபெர்டோ பொலான்யோ (தமிழாக்கம் : ஆகாசஜன்)
துப்பறிவாளர்கள் – முத்து காளிமுத்து
தோயும் மது நீ எனக்குத் தும்பியடி நானுனக்கு -பாஸ்டன் பாலா                                                       ரொபெர்டொ பொலான்யோவின் “மெஸ்யூ பான்” நாவலின் இரு பகுதிகள் – (தமிழாக்கம்: ஆகாசஜன்)

ரொபெர்டொ பொலான்யோ – 2666: மேடை நாடகம் – பதிப்புக் குழு


தவிர: காணொளி – பொலான்யோவின் ஒரு பேட்டி.

இதழைப் படித்தபின், உங்கள் கருத்துகளை அந்தந்த படைப்புகளின் கீழே எழுத வசதி செய்யப்பட்டிருக்கிறது. அதல்லாமல், மின்னஞ்சல் வழி தெரிவிக்க முகவரி: solvanam.editor@gmail.com
உங்கள் படைப்புகளை அனுப்பவும் அதே முகவரிதான். படைப்புகள் வோர்ட் அல்லது சமமான மென்பொருளில் வடிவமைக்கப்பட்டு docx போன்ற கோப்பாக அனுப்பப்பட வேண்டும். பிடிஎஃப் கோப்புகளை அனுப்பலாகாது.
உங்கள் வரவை எதிர்பார்க்கும்
சொல்வனம் படைப்புக் குழு