சொல்வனம் இணைய இதழில் வெளியான கட்டுரை
மீட்பரற்ற நாயொன்று அத்துவான வெளியில் வெறும் குரைப்பொலியாய்க் கரைந்தது – விடுதலை.

எழுத்தாளர் சித்ரனை வினோத் கண்ணாவாக எனக்கு அறிமுகம். புதுக்கோட்டையைச் சேர்ந்தவர். பக்கத்து ஊர்காரர்கள் என்பதால் இயல்பாகவே கல்லூரியில் எங்களுக்குள் அணுக்கம். நான் ஆயுர்வேதமும் அவர் சித்த மருத்துவமும் ஒரே கல்லூரி வளாகத்தில் ஒரே காலகட்டத்தில் கற்றோம். ஜோனாத்தன் லிவிங்ஸ்டன் தி சீ கல், அல்கெமிஸ்ட் என திரிந்துக்கொண்டிருந்தவனுக்கு “விஷ்ணுபுரம் படி” என ஜெயமோகனை அறிமுகப்படுத்திய நண்பர் வினோத். பயிற்சி மருத்துவர்களாக இரவு பணி (பணி என ஏதுமிருக்காது, மருத்துவமனையில் உறங்கி எழ வேண்டும்) எங்களுக்கு ஒன்றாக போடப்பட்டபோது இலக்கிய – அரசியல் உரையாடல்கள் நெடுநேரம் நிகழும். ஈழப்போர் உச்சத்திலிருந்த காலம். வாசிப்பின் தொடக்க நிலைகளில் இருப்பவனின் அதீத தன்னம்பிக்கைக்கும் மொண்ணைத்தனங்களுக்கும் சலிக்காமல் பதில் சொல்வார். நியாயப்படி எனக்கு முன்பே எழுத்தாளராக அறிமுகமாகியிருக்க வேண்டும். போலன்யோவின் ‘டான்ஸ் கார்ட்’ கதையை கல்குதிரை இதழில் மொழிபெயர்த்ததன் வழியாக அறிமுகம் ஆனார். தற்போது அறநிலைத்துறையில் பணியாற்றி வருகிறார். திருச்சியிலும் புதுக்கோட்டையிலும் மாறி மாறி வசித்துவருகிறார். மனைவி சாலினியும் தீவிர இலக்கிய வாசகர், மொழிபெயர்ப்பாளர், வேளாண்துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். முதல் தொகுப்பு ‘கனாத்திறமுரைத்த காதைகள்’ 2018 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியானது. க.சீ. சிவகுமார் நினைவு பரிசு மற்றும் த.மு.எ.க.ச வின் சிறந்த சிறுகதை தொகுப்புக்கான விருதுகளை பெற்றது. இரண்டாவது தொகுப்பு ‘பொற்பனையான்’ 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் வெளியாகி பரவலாக கவனம் பெற்று வருகிறது.