Wednesday, March 18, 2020

சுனில் கிருஷ்ணனின் இயல்வாகை: அறிந்த உண்மையிலிருந்து விடுதலை- அ. ராமசாமி



(அ. ராமசாமி அண்மையில் வல்லினம் இதழில் வெளிவந்த இயல்வாகை கதை குறித்து ஒரு கட்டுரை எழுதி உள்ளார். நன்றி. கட்டுரை தொடக்கமே ஜெயமோகனை ஆசானாக கருதும் சிஷ்யர்கள் என இருக்கிறது. மேற்கு கிழக்கு எதிர்வுகளை உருவாக்கி, அதிலிருந்து கிழக்கின், இந்தியத்தன்மையின் மேன்மையை நிருவவதாக சொல்லி செல்கிறார்.  மேலும் இறுதியில் இத்தகைய கதைகள் இந்திய தன்மையின் படிநிலைகள் ஒடுக்குமுறைகள் சார்ந்து எதையும் சொல்வதில்லை எனவும் எழுதுகிறார். இந்த ஒரு கதையைக்கொண்டு இப்படியான முடிவுகளுக்கு வர முடியுமா எனத்தெரியவில்லை. ஏனெனில் இந்த மேற்கு கிழக்கு பகுப்பாக்கம் ஒரு காலனிய காலக்கட்டத்து கதையாடல். அதிகாரத்தை நிலை நிறுத்தவும் அதை எதிர்க்கவும் கைக்கொள்ளப்பட்டவை. அவை நிதர்சனம் அல்ல. எனினும் இவற்றுக்கு அப்பால் விரிவாக எழுதியதால் முக்கியத்துவம் பெறுகிறது. இது என்னுடைய விமர்சன முறைமை இல்லை என்றாலும் ஒரு முக்கியமான பார்வை என்பதால் பதிவு செய்கிறேன்..)



ஜெயமோகனை ஆசானாகக் கருதும் சிஷ்யர்களின் கதைகளால் நிரம்பியிருக்கிறது ம.நவீனின் வல்லினம்.     மார்ச்,1,2020 இதழில் சுனில் கிருஷ்ணன் எழுதியுள்ள கதைத் தலைப்பு : இயல் வாகை.
சுனில் கிருஷ்ணனின் கதையைப் பற்றிப் பேசுவதற்கு முன் சில குறிப்புகள்:
இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும்.  மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்று.  மற்ற இரண்டு அடிப்படை வண்ணங்கள் பச்சை, நீலம்.  
இயல்வாகை ஒரு மரத்தின் பெயர். அதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் மின்னலாக தோற்றம் தரும். மஞ்சள் அடிப்படை வண்ணங்களில் ஒன்றல்ல. அடிப்படை வண்ணங்கள் சிவப்பு, பச்சை, நீலம். ஆகியனவே. இம்மூன்று வண்ணங்களிலிருந்து சேர்த்தும் பிரித்தும் ஏழு வண்ணங்களை உருவாக்கலாம். மஞ்சளை அடிப்படை வண்ணமாகக் கொண்டு சொல்லாடல் செய்யும் கலைத்துறையும் உண்டு. ஏழு வண்ணங்களின் சேர்க்கைக்கு நிறமாலை என்று பெயர். இயற்கை உருவாக்கிக் காட்டும் நிறமாலையின் பெயர் வானவில்
நிறமாலையின் /வானவில்லின் எழு வண்ணங்களில் கறுப்பும் வெள்ளையும் இல்லை. அடிப்படையில் அவ்விரண்டும் வண்ணங்களே அல்ல. ஏழு வண்ணங்களையும் ஒன்றாகக் கலக்கினால் கிடைப்பது கறுப்பு. அனைத்தும் கலந்த கலவையே கறுப்பு.  எல்லா வண்ணங்களையும் தனித்தனியாகப் பிரித்து விட்டால் மிஞ்சுவது ஒன்றுமில்லை. அதுதான் வெண்மை.சுனில் கிருஷ்ணன் இந்தக் கதைக்கு இயல்வாகை என்னும் தலைப்பு வைத்ததின் மூலம் தமிழ் இலக்கியவியல் சொல்லும் குறிப்புப்பொருள் என்னும் கலைச்சொல் வழியாகக் கதையை வாசிக்கத் தூண்டியுள்ளார்.


உலகம் என்பது இயற்கைப் பொருட்களால் ஆனது மட்டுமல்ல; செயற்கைப் பொருட்களாலும் ஆனது. இயற்கைப்பொருட்கள் – கருப்பொருட்கள் வாழ்க்கையை வண்ணமாக்குபவை என்று தமிழ் அழகியல் சொல்கிறது.  எவையெல்லாம் இலக்கியப் பிரதியின் பின்னணியாக – கருப்பொருட்களாக அமையக்கூடியன எனப் பேசும்போது  தெய்வம், உணவு, விலங்கு, தாவரங்கள், பறவைகள், பேச்சுமொழி, தொழில், இசைக்கருவிகள்,  முதலான எட்டையும் பட்டியலிட்டுள்ளது தொல்காப்பியம்  
  தெய்வம் உணாவே மாமரம் புட்பறை 
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப’ 
(-தொல். அகத்திணையியல் : 30).
 ********************************************************
மனிதச் சிந்தனை இரண்டு வகைப்பட்டது. நிகழ்வுகளையும் அதனை நிகழ்த்துபவர்களையும் எதிரெதிராக நிறுத்திப் பார்ப்பது ஒருவகையான சிந்தனை முறை. நல்லது – கெட்டது எனப் பொருள்களையும் வினைகளையும் பார்ப்பதற்குக் காரணம் மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் கணிப்பதே. இன்னொரு வகைச் சிந்தனை முறை இந்த இந்த உலகத்தை – உலகத்தின் இருப்பை – அதில் உலவும் மனிதர்களை வண்ணங்களின் அடுக்குகளாகப் பார்ப்பது. உலகத்துப் பொருட்கள் எவையுமே கறுப்பு – வெள்ளையாக இல்லை. அவற்றின் கூடுதல் குறைவுகளான நிறமாலை வண்ணங்களில் ஒன்றாகவே இருக்கின்றன. அதே போல மனிதர்களும் முழுவதும் நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் இருப்பதில்லை. நல்லதின் அல்லது கெட்டதின் அளவு நிலையில் கூடுதல் குறைவுகளோடுதான் இருக்கிறார்கள். அப்படி மனிதர்கள் இருப்பதற்கு அவர்கள் காரணமல்ல; அவர்களை இயக்கும் கர்த்தாவின் தூண்டுதலால் மேற்கொள்ளப்படும் வினைகளே காரணங்கள் எனப் பார்ப்பது இன்னொரு பார்வை  
இவ்விருவகைப் பார்வையில் முதலாவது பார்வை அல்லது சிந்தன முறை மேற்கத்தியச் சிந்தனையாக அறியப்படுகிறது. இரண்டாவது பார்வை கீழ்த்திசைப் பார்வையாக- குறிப்பாக இந்தியச்சிந்தனை முறையாக நம்பப்படுகிறது.  இலக்கியப்பனுவல்கள் ஆக்கத்தைப் பேசும் மேற்கத்திய இலக்கியவியல் கூட நாயகத்தனம் – வில்லத்தனம் என்ற இரண்டின் அசைவுகளாகவே உருவாவதாக முன்வைக்கிறது. ஆனால் கீழ்த்திசைக் கலையியல் – குறிப்பாக இந்திய இலக்கியவியல் அவ்வாறு முன்வைக்காமல் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்ட பாத்திரங்களால் ஆனதே இலக்கியங்கள் எனப் பேசுகின்றன. எனவே கீழைத்தேயக் கலையியல், மேற்கத்தியக் கலையியலைக் காட்டிலும் மேலானது என்பது இந்திய ஞானத்தை முன்மொழிபவர்களின் வாதம்.
இந்தியத் தத்துவ ஞான மரபின் மேன்மையை முன்மொழிபவர்கள், இந்திய தத்துவம், இந்திய வாழ்வியல், இந்திய அறிவு, இந்தியக் கல்வி, இந்திய சிந்தனை முறை, அதன் வழியாக உருவாகும் இந்தியர்களை - மேற்கத்தியர்களின் சிந்தனைமுறைகளோடு நேர்நிறுத்தி விவாதித்து, இந்திய வாழ்வியலும், இந்தியம் மனமுமே நமக்கானது; மேற்கத்திய வாழ்வியலும் மனமும் நமக்கானதல்ல என்பதை முன்வைக்கிறார்கள். இதனை உள்ளடக்கமாகக் கொண்டு எழுதுபவராக நம் காலத்தில் முன் நிற்பவர் ஜெயமோகன். ஜெயமோகனுக்குப் பல முன்னோடிகள் உண்டு. க.நா.சுப்பிரமண்யம் முக்கியமான முன்னோடி.
ஜெயமோகனை முன்னோடியாக -ஆசானாக நினைக்கும் பல இளையதலைமுறை எழுத்தாளர்களை இப்போது அடையாளம் காட்ட முடியும். அவர்களுள் ஒருவராக இருப்பவர் சுனில் கிருஷ்ணன். வல்லினத்தில் வந்துள்ள ஜெயமோகனின் சர்வ ஃபூதேஷுவும், அதன் முன் காட்சியாகிய/கதையாகிய யாதேவியும் இந்த விவாதத்தை முன்வைத்துள்ள கதைகளே. அதே வல்லினத்தில் வந்துள்ள சுனில் கிருஷ்ணனின் இயல்வாகைக் கதை அந்த விவாதத்தை வேறுவிதமாக முன்வைத்துள்ளது.
சுனில் கிருஷ்ணனின் கதையில் மேற்கு – கிழக்கு என்ற இரட்டை எதிர்வுச் சொல்லாடலில் வைக்கப்படும் துறையாக இருப்பது மருத்துவத்துறை. அக்கதைக்குள் இரண்டு மருத்துவர்கள் இடம்பெறுகிறார்கள் ஒருவர் கதையின் மையப்பாத்திரமாக இருக்கும் சத்தியன். இன்னொருவர் சாமிக்கண்ணு. இவ்விருவரில் சாமிக்கண்ணு வயதில் மூத்தவர்; சத்தியன் இளையவர். இருவரின் மருத்துவ முறைகளில் – நோயாளிகளை அணுகும் முறையில் இருக்கும் வேறுபாடுகளைப் பேசும் சுனில் கிருஷ்ணனின் கதைப்பகுதியை அப்படியே தருகிறேன்:
தினமும் மைதானத்தில் நடை பயிலும் டாக்டர். சாமிக்கண்ணு கல்லூரி சாலையில் சத்தியன் நடப்பதை பார்த்ததும், “சத்தியா வாய்யா கிரவுண்டுல நடக்கலாம்” என பிடித்து இழுத்து வந்தார். வயது எழுபதுக்கு மேலிருக்கும்.  “நம்ம பயலுவ எவனும் வரல, அதான் உன்ன பாத்ததும் சரி சேந்து நடக்கலாமேன்னு உள்ள கூப்புட்டேன்” என கைகுலுக்கினார். சாமிக்கண்ணுவின் மருத்துவமனைக்குச் சிலமுறை ஐ.எம்.எ கூட்டங்களுக்கு சென்றிருக்கிறார். எப்போதும் கூட்டம் அலைமோதும். பழைய பாணியிலான மருத்துவர் என சத்தியனுக்கு அவரைப்பற்றி ஓர் எண்ணம் உண்டு. பரிசோதனைகளை விடவும் நோயை நோயாளியிடமிருந்து அறிந்துகொள்ளவேண்டும் எனும் வினோத நம்பிக்கை உடையவர். மைதானத்து விளிம்புகளில் வான் நோக்கி நிமிர்ந்திருந்த இயல்வாகை மரங்களைச் சுற்றி விரவிக் கிடந்த அதன் மஞ்சள் பூக்கள் திடலின் செம்மண் பரப்பில் தனித்தீவுகளை போல் காட்சியளித்தன. சாமிக்கண்ணு அவற்றை நிதானமாக பார்த்தார். பிறகு இருவரும் நடக்கத் தொடங்கினர். பொதுவான மருத்துவ சங்கதிகள்தான் பேச்சு. ஐ.எம்.எ தேர்தல், ஆசுபத்திரி சூறையாடப்படுவது, மருத்துவமனை மரணங்கள அதன் பொருட்டு நிகழும் பேரங்கள் என சாமிக்கண்ணு பேசுவதை வெறுமே உம் கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார் சத்தியன். “ஜூன்ல ரிட்டையர் ஆனதும் நம்ம ஹாஸ்பிட்டல் வந்துருய்யா” என்றார். “உங்களுக்குத்தான் ஸ்கேன் எழுதவே பிடிக்காதே சார்” என்றார் சத்தியன் சிரித்துக்கொண்டே. “எனக்கு பிடிக்கலைன்ன என்ன? இப்ப மகன் தானே முழுசா பாக்குறான், அவன் பாணியே வேற, யாரும் நாளைக்கு கேஸ் கொடுத்துற கூடாது. நாம பத்திரமா இருக்கணும்னு சொல்றான்.” என சொன்னபோது அவருக்கு மூச்சு வாங்கியது. ஆமா நீ ஏன் ரேடியாலஜி எடுத்த? நல்ல கூருள்ள பயலாத்தான இருக்க.” என்று அவரை சீண்டினார் சாமிக்கண்ணு. நமுட்டுச் சிரிப்புடன் “பொய் சொல்ல வேணாம், முகதாட்சண்யம் பாக்க வேணாம், அனாவசியமா பேச வேணாம், நடிப்புகளை சகிச்சுக்க வேணாம், உங்களுக்குள்ள என்ன இருக்குன்னு உங்களுக்கே சொல்வேன். எல்லாத்துக்கும் மேல என் உலகத்தில் ரெண்டே ரெண்டு நிறம் மட்டும்தான். கறுப்பு இல்லைனா வெள்ளை. மத்தது எல்லாமே இந்த ரெண்டுக்கும் நடக்குற வெளையாட்டுதான். இந்த அறிவு எவ்வளவு ஆசுவாசத்த கொடுக்குது.” என்றார். “சர்தான்யா, நீங்க என்னத்தையாவது கண்டுபிடிச்சு வாரவன பயமுறுத்தி விடுறீகளே” எனச் சொல்லி சிரித்தார்.


மருத்துவரின் மனப்பாங்கைப் பேசும் கதையின் இந்தப் பகுதி. மனப்பாங்கை உருவாக்குவதில் மேற்கத்தியக் கல்விக்குப் பங்கிருக்கிறது எனச் சொல்கிறது. அதிலும் குறிப்பாக எல்லாவற்றையும் சரியாகக் கணக்கெடுத்துக் குறித்துக்காட்டிப் பொறுப்பை அறிவியலின் மீது சுமத்திவிட்டுத் தப்பிக்கும் நோக்கம் கொண்டது  ரேடியாலஜி போன்ற நவீன மருத்துவ முறைகளும் கருவிகளும் என்பதைக் குற்றம் சுமத்தும் கோணத்திலேயே சாமிக்கண்ணுவின் வழியாக முன் வைக்கிறது.  
சாமிக்கண்ணுவும் சத்தியனும் அடிக்கடி சந்திக்கும் நேரம் காலை நடை – வாக்கிங் நேரம். சாமிக்கண்ணு நடக்கும் மைதானப்பகுதியில் இயல்வாகை மரங்கள் உண்டு. சத்தியன் மைதானத்தின் விளிம்பில் நடப்பவர். அவர் வழக்கமாக நடக்கும் பாதையில் இயல்வாகை மரங்கள் இருந்ததில்லை. நோயாளிகளின் நோயை அவர்களிடமிருந்தே அறிந்துகொண்டு மருத்துவம் பார்க்கும் முறையை விரும்பும் சாமிக்கண்ணுவும் சத்தியனும் சந்திக்கும் இந்தக் காட்சி சுனில் கிருஷ்ணன் கதையில் ஒரு உள்ளுறையாக மட்டுமே – கருப்பொருளை ஒட்டிவரும் உள்ளுறையாக மட்டுமே அமைந்துள்ளது. உண்மையில் கதையின் முதன்மையான நிகழ்வுகள் இதிலிருந்து விலகியிருக்கின்றன.

திருமணமாகாமல் தனியாக வாழும் மருத்துவர் சத்தியனின் உறவுக்காரப் பையன் ராஜசேகருக்குப் பெண் பார்ப்பதும், நிச்சயம் செய்யப் போவதும் அப்போது அந்தப் பெண் தொடர்பாகத் தனக்குத் தெரிந்த உண்மை ஒன்றைச் சொல்வதா? மறைப்பதா? என்பதில் ஏற்படும் குழப்பங்களே கதை நிகழ்வுகள்.  தொடர்ந்து தனது உறவுக்காரப் பையனுக்கு நிச்சயம் செய்ய இருக்கும் அல்லி – ஏற்கெனவே கருவுற்றவள் என்பதும் அக்கருவைக் கலைப்பதற்காகச் சத்தியனின் மருத்துவமனைக்கு வந்தவள் என்பது தெரிந்தபோதும் அதைச் சொல்லாமல் தவிர்த்துவிடுகிறார். அப்படித் தவிர்த்துவிடக் காரணமாக இருப்பதன் பின்னணியில் தனது உறவுப் பையனுக்குப் பெண் கிடைக்காமல் போன காரணம் இருக்கிறது.

தான் தாய் மாமன் போல இருந்து பொறுப்போடு பெண் பார்த்துத் திருமணம் செய்துவைக்க நினைத்துப் பார்த்த பெண்கள் எல்லாம் அவனைப் பிடிக்கவில்லை என்று சொல்லி விலகிப்போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. இவரால் வேலை வாங்கித் தரப்பட்டு சிங்கப்பூரில் இருக்கும் அவனோடு போக விரும்பாமலும் சிலர் தவிர்த்திருக்கின்றனர். பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்வதற்கு முன் ராஜசேகரோடு பேசிப் பழகிப் பார்த்த பெண்களும் அவனை நிராகரித்திருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் இவள் தான் – ஏற்கெனவே கருவுற்று, அதனைக் கலைக்க வந்த அல்லிதான் அவனை மணக்கச் சம்மதிக்கிறாள்.  மாப்பிள்ளைக்கு அல்லியின் குடும்பப்பபின்னணியையும் அவளையும் பிடித்திருக்கிறது. ஆனால் மருத்துவர் சத்தியன் மனதில் மட்டும் அவள் கருவுற்று அதனைக் கலைத்தவள் என்ற உண்மை போட்டு வதைக்கிறது. அதைச் சொல்லித் திருமணத்தை நிறுத்திவிடலாம். ஆனால் அவர் சொல்லப்போகும் உண்மைக்கு தக்க ஆதாரம் எதுவும் இல்லை. ஆதாரமாக இருப்பன அவரது நினைவாற்றலும், வேலைத்தளத்தில் அவர் பின்பற்றும் நடைமுறைகளும் மட்டுமே. 

ஒவ்வொரு நாளும் வேலை முடிந்து போகும்போது அன்றாட வேலைகளைத் தினசரி நாட்குறிப்பு எழுதுவதுபோல, மனதிற்குள் நினைத்துக் கொள்வது அவரது வழக்கம். அதன் மூலம் எல்லாவற்றையும் அவரது மனதில் பதிய வைத்துக்கொள்பவர். அந்த நோயாளி பின்னர் வரும்போது – மாதக்கணக்கில், ஆண்டுக்கணக்கில் தள்ளி வந்தாலும் நினைவிலிருந்தே எல்லாவற்றையும் சொல்லிவிடக்கூடிய ஆற்றல் அவருக்கு உண்டு. அந்த ஆற்றலைத் தருவது ஒவ்வொன்றையும் தன் மனத்தில் பதிவுசெய்து வைத்திருப்பதுதான் என நம்புகிறார். அது ஒருவிதத்தில் மேற்கத்தியப் பகுப்பாய்வு முறை.    தனது கற்றல் உத்தி மூலம் உருவான திறன் எனவும் நம்புகிறார் சத்தியன். அந்தத் திறன்தான் – ஞாபகப் பதிவுதான் அல்லி, ஏற்கெனவே கருவுற்றவள்; அந்தக் கருவை ஒருமுறை கலைத்துக் கொண்டவள் என்கிறது. அந்தக் கருவுக்குக் காரணம் யார்? ஏற்கெனவே திருமணம் ஆனவளா? அல்லது திருமணம் செய்யாமலேயே கருவுற்றவளா? என அவளைப் பற்றிய முடிவுகள் ஓடிக்கொண்டே இருக்கிறது. அந்த ஓட்டம் அல்லியைப் பற்றிய கறுப்புநிறப் பதிவுகள். ஆனால் அல்லி ஏற்கெனவே கருவுற்றுக் கலைத்துக் கொண்டவளாகவோ, அதற்காக அவர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்குச் சென்றவளாகவோ காட்டிக்கொள்ளவில்லை.   தன்னைச் சந்தித்ததை மறைக்கிறாளா? இப்படிப்பட்ட பெண்ணைத் தனது பொறுப்பிலிருக்கும் – தன்னைத் தாய் மாமனாக நினைக்கும் ராஜசேகருக்குத் திருமணம் செய்யலாமா? என்ற தவிப்பும் இருக்கிறது. ஆனால் அந்தத் தவிப்பால் திருமணத்தை நிறுத்திவிட்டால் இன்னொரு பெண் கிடைக்காமல் அவனது திருமணம் மேலும் தள்ளிப்போகக் காரணமாகிவிடக் கூடாது என்ற குழப்பமும் இருக்கிறது. அவரது குழப்பநிலையை சுனில் கிருஷ்ணன் இப்படி எழுதுகிறார்:

தனக்கு தெரிந்ததை மகனுடைய இடத்தில் இருப்பவனுக்கு, அதுவும் அவனுடைய வாழ்க்கை தொடர்பானதை சொல்லவேண்டுமா இல்லையா? மருத்துவனாக அறிந்து கொண்ட ரகசியத்தை தனிப்பட்ட வகையில் பயன்படுத்துவது சரியா? சேகர் தன் சொந்த மகனாக இருந்திருந்தால் இந்தத் திருமணத்தை நடத்த அனுமதித்திருப்பேனா? சொன்னாலும் சேகருக்கு இதை ஏற்கும் பக்குவம் இருக்குமா? எல்லாவற்றுக்கும் மேலாக இந்தத் தேவையற்ற சுமையை தான் சுமக்கத்தான் வேண்டுமா? இரண்டாக கிழிபட்டு மாறி மாறி தனக்குள் தர்க்கித்து ஓய்ந்து போனார். கவனப்பிழைகள் நினைவுப்பிழைகள் அவரிடமும் மலிந்தன.
குழப்பப் பின்னணியில் மேலும் சிக்கலுக்குள் நுழையாமல் – பெரிதும் ஆர்வமும் ஈடுபாடு காட்டாமல் திருமணத்திற்குச் சம்மதித்துவிட்டு விலகி நிற்கிறார் சத்தியன். நிச்சயதார்த்தத்திற்குப் பின் அல்லியின் வீட்டார் வந்து அழைப்பிதழ் வைக்கும்போது அவரது தெளிவான முடிவு வெளிப்படுகிறது:
தேங்காய் பூ பழத்தை தட்டில் வைத்து அழைப்பிதழை அவருக்கு அளித்தார்கள். “தகப்பன் இல்லாத புள்ள, செய்முறையில கொத்தம் கொற இருந்தா பொறுத்துக்கிடணும். நீங்கதான் நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்” என அல்லியின் அம்மா கைக்கூப்பி தழுதழுத்தார். “சித்தப்பா மொற உனக்கு, விழுந்து கும்புடுக்கம்மா” என்றதும் அல்லியும் வணங்கி நிமிர்ந்தாள். கிளம்புவதற்கு முன் “எங்கிட்டு பாத்தாலும் வெத்து வெள்ளச்சுவரா இருக்கே உங்களுக்கு போர் அடிக்காதா” எனக் குறும்பு மின்னும் கண்களுடன் சத்தியனிடம் கேட்டாள். அவளுடைய குரலை அதுவரை கேட்டிராத சத்தியன் சில நொடிகள் திகைத்து நின்றார். அவரையும் மீறி புன்னகை அரும்பியது அவளும் புன்னகைத்தாள். அவர்கள் புறப்பட்டுச் சென்ற பிறகும் கூட தன்னிச்சையாக முகத்தில் புன்னகை உறைந்திருந்தது அவருக்கே விநோதமாக இருந்தது.
என்று எழுதிவிட்டுக் கதைத் தலைப்பாக இருக்கும் இயல்வாகையைப் பொருத்திக் காட்டும் விதமாகச் சில வாக்கியங்களை எழுதிக்கதையை முடித்துள்ளார் சுனில் கிருஷ்ணன்.
நெஞ்சை கவ்வியிருந்த இறுக்கம் முழுக்க கரைந்திருந்தது. நாற்காலியில் தன்னைப் புதைத்துக்கொண்டபோது எடையற்று மிதப்பதாக தோன்றியது. புன்னகை சூடிய முகத்துடன் நாற்காலியில் சாய்ந்து கண் மூடியபோது இயல்வாகையின் பொன் மஞ்சள் பூக்கள் நினைவில் எழுந்தன. நாளை முதல் மைதானத்தில் அவருடன் சேர்ந்து நடக்கலாம் என முடிவு செய்திருப்பதை சாமிக்கண்ணுவிடம் சொல்லவேண்டும் என எண்ணிக்கொண்டார்.
எனச் சுனில் கிருஷ்ணன் முடிக்கும் வரிகளில் – இயல் வாகை என்னும் கதைத் தலைப்புப் பொருத்தத்தோடு அவரது நிலைப்பாட்டின் சார்பும் வெளிப்படுகிறது.
மருத்துவத்தில் சோதனைகளின் அடிப்படையில்  கிடைக்கும் அறிகுறிகளைக் கொண்டு மருந்துகளைப் பரிந்துரை செய்யும் தனது முறைக்குப் பதிலாக நோயாளியின் அனுபவ நிலையிலிருந்து நோயின் தன்மையை அறிந்து மருத்துவம் பார்க்கும் சாமிக்கண்ணுவின் முறைமையே ஏற்கத்தக்கது என அவர் மாறிவிட்டார் என்பதைச் சொல்லவே, இயல்வாகை மரத்தடியில் மஞ்சள் பூக்களின் தகதகப்போடு நடக்கலாம் என முடிவெடுத்தாக முடிக்கிறார். இயல்வாகையும் மஞ்சள் நிறமும் சாமிக்கண்ணுவின் தேர்வுகள். அதனை நோக்கி நகர்வதின் மூலம் தன்னிடமிருந்த கறுப்பு – வெள்ளைப் பார்வையைக் கைவிடப்போகிறார் சத்தியன் என்பது சுனில் கிருஷ்ணன் தரும் குறிப்பு.   
தலைப்பாக இருக்கும் கருப்பொருளைக் குறிப்புப்பொருளாக – உள்ளுறையாக   மாற்றிய நிலையில் சுனில் கிருஷ்ணனின் இயல்வாகைக் கதைத் தமிழ் இலக்கியவியல் பிரதியாக நிற்கிறது என்பதைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும். அதே நேரத்தில்  இந்திய ஞானம், இந்திய வாழ்வியல், இந்திய மனித மனம் என்பதை மேன்மையானதாக முன்வைக்கும் எழுத்துகள், மேற்கத்திய வாழ்வியல் முன்வைக்கும் சமுதாய நடைமுறைகளைக் கணக்கில் கொள்வதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டியதுள்ளது. மேற்கத்திய வாழ்வியலின் பின்னணியாக இருக்கும் சமூகக் கட்டமைப்பில் இருக்கும் இரட்டையில் இருப்பவன்- இல்லாதவன் அல்லது ஆதிக்கவாதி – அடக்கப்படுபவன் என்ற இரட்டை நிலையில் இடம் மாறும் வாய்ப்புகள் உண்டு. பொருளியல் அடையாளம் வழியாக உருவாகும் இவ்விரட்டை, இன்னொரு பொருளியல் நிலையில் – மாற்றத்தில் இங்கிருந்து அங்கும், அங்கிருந்து இங்கும் மாறிவிடும் வாய்ப்புகளைக் கொண்டது. ஆனால் அவர்கள் கொண்டாடும் கீழ்த்திசைச் சமூகங்களின் அமைப்பில் இருக்கும் வேறுபாடுகள் இன்னொருவகை வாழ்வியலுக்குள் மனிதர்களை நகரவிடாமல் தடுக்கும் கட்டுதிட்டான கோடுகளை-சாதியப் படிநிலைகளைக் கொண்டது. இதனை உள்ளடக்கமாக்கி இவர்கள்   இலக்கியப் பிரதிகளை உருவாக்குவதில்லை. அப்படி நிலைகளை இலக்கியப்பிரதிகளுக்கான -கச்சாப் பொருளாக - உரிப்பொருளாகக் கூட நினைப்பதே இல்லை என்பதும் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாக உள்ளது

Tuesday, March 17, 2020

WRITER PAZHUVETTAIYER FATHERS A CHILD- Naroba

(this is the english translation of the story from tamuse. its a pretty good translation, as i read now. thanks to tamuse.https://tamuse.wordpress.com/2017/05/04/pazhuvettaiyer-2/)
Writer Pazhuvettaiyer has fathered a child- indeed, it happened yesterday. Extremely fair complexioned, the child had the looks of a king, they said. In a city hospital, in the dead of night, as rain was pouring down, it seems the child cleaved the belly of his mother and with a loud cry leapt forth into the world. Both the mother and child are said to be fine.
Kidaram Kondan, poetic virtuoso, climbed up and down the stairs of many a shop, anxiously jangling his pockets as he searched long and hard for something he could gift the child. “Fuck, ” he sighed, “Commodities. Mere commodities.” And then he remembered the English language copy of ‘War and Peace’ that he had pilfered from the local library at Arumbalam. Having arrived at a decision, he wrapped the book in the covers of Pothys Store and with a majestic gait, went to see the child. A classic child born to a writer of classics deserves nothing less than a classical work of a classic author bestowed as a gift by a classic poet, he asserted to himself.
Pazhuvettaiyer removed his thick spectacles, laughed aloud, and embraced the poet, greeting him, “hey, Kidaram!”. His smile revealed an upper tooth broken into half in a joust of poetry the previous week. He informed Kidaram that his wife had been shifted from the labour ward just then. As the child had neonatal jaundice, he was in a separate room under a lamp irradiated with bright light. “Go and see him there,” he told the poet.
Inside the glass room where a sign warned, “Hush! Silence!”, a lean and wiry nurse with a slight smile playing on her lips was busy peering into her mobile phone. There might have been four or five children in that room. From a corner of the room, lying soaked in a flood of bright light, little Pazhuvettaiyer closed the copy of Dostoevsky’s ‘Crime and Punishment’ and asked, ‘Jesus… Tolstoy. Not again!!! Uncle… don’t you have anything by D.H Lawrence?’
(edited by Kalathugal)

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது

(நண்பர் நட்பாஸ் முன்பு குறுங்கதைகளுக்காக ஒரு தளம் நடத்தும் முயற்சியில் ஈடுபட்டார். ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்து இருமொழியாக வெளியிடுவது அதன் நோக்கம். அதற்காக எழுதிய குறுங்கதை. பிறகு அந்த இணையதளம் செயல்படவில்லை. இதன் ஆங்கில மொழியாக்கத்தை அடுத்த சுட்டியில் அளிக்கிறேன்.)

எழுத்தாளர் பழுவேட்டையருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. ஆம். நேற்றுதான். செக்கச் செவலென்று, ராசா மாதிரி இருக்கிறானாம். பட்டணத்து ஆசுபத்திரியில், அத்துவான ராத்திரியில், ‘சோ’ வென மழை கொட்டிக்கொண்டிருந்தபோது, அடி வயிற்றைப் பிளந்து கொண்டு, அழுகுரல் எழுப்பியபடி, வெளியே குதித்தானாம். தாயும் சேயும் நலமாம்.
வித்தகக் கவி கிடாரம் கொண்டான் கடை கடையாக ஏறி இறங்கினான், குழந்தைக்கு ஏதாவது வாங்கிச் செல்லலாமே என்று. பையைத் தடவிக்கொண்டே. “ த்தா.. பொருட்கள்..வெறும் பொருட்கள்.” என சலித்துகொண்டான்..

அப்போதுதான் அரும்பலம் கிளைநூலகத்தில் ஆட்டய போட்ட ‘போரும் அமைதியும்’ ஆங்கிலப் பிரதி நினைவுக்கு வந்தது. ஒரு முடிவோடு, புத்தகத்தை போத்தீஸ் கவரில் சுற்றிக்கொண்டு குழந்தையைப் பார்க்க சென்றான், மிடுக்காக. செவ்வியல் எழுத்தாளருக்குப் பிறந்த செவ்வியல் குழந்தைக்குச் செவ்வியல் எழுத்தாளன் எழுதிய செவ்வியல் ஆக்கத்தை பரிசளிப்பதே செவ்வியல் கவிஞனாய் தான் செய்ய வேண்டியது என உறுதி செய்து கொண்டான்.

பழுவேட்டையர் தடித்த கறுப்பு கண்ணாடியைக் கழட்டிவிட்டு, ‘எலேய் கிடாரம்,’ என சிரித்தபடி தழுவிக் கொண்டார். போனவார கவிதை குஸ்தியில் ஒரு மேற்பல் பாதியாக உடைந்திருந்தது புலப்பட்டது.

இப்போதுதான் மனைவியை பிரசவ வார்டிலிருந்து அறைக்கு மாற்றியதாகச் சொன்னார். குழந்தைக்கு, பிறந்ததிலிருந்து மஞ்சக் காமாலை, ஆகவே ஒரு பெரிய விளக்கடியில் தனியறையில் வைத்திருக்கிறார்கள் “போய்ப் பார்த்துவிட்டு வா” என்றார்.

‘உஸ்ஸ் அமைதி’ என்று ஒட்டப்பட்டிருந்த கண்ணாடி அறைக்குள் ஒரேயொரு ஒடிசலான செவிலி கைபேசியில் எதையோ பார்த்து மென்நகை புரிந்து கொண்டிருந்தாள். நான்கைந்து குழந்தைகள் உள்ளே இருந்திருக்கலாம். அப்போது அறை மூலையிலிருந்து, மிகப் பிரகாசமான ஒளி வெள்ளத்தில் ‘’கர்த்தாவே… திரும்பவும் தால்ஸ்தாயா? மாமா… உங்களிடம் டி.எச். லாரன்ஸ் புத்தகம் ஏதும் இல்லையா?’ குட்டி பழுவேட்டையன், தன் கையில் இருந்த தாஸ்தாவெஸ்கியின் ‘குற்றமும் தண்டனையையும்’ஐ மூடிவைத்துவிட்டு கேட்டான்.


Monday, March 16, 2020

நீலகண்டம்- கே.ஜெ. அசோக் குமார் - வளரும் விஷம்

(எழுத்தாளர் கே.ஜெ. அசோக் குமார் அவருடைய தளத்தில் நீலகண்டம் குறித்து எழுதியிருக்கும் கட்டுரை. நன்றி) 


நவீன வாழ்க்கை களமான அடுக்கக வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ஆட்டிச குழந்தையை வளர்ப்பது என்பது மிக சிக்கலான வாழ்க்கைமுறையை இன்று பெற்றோர்களுக்கு அளித்துள்ளது. கூட்டு குடும்பமாக வசிப்பவர்களுக்கு பிறக்கும் ஆட்டிச குழந்தைகள் ஒரளவிற்கு பெரிய சிக்கல்கள் இல்லாமல் வாழ்க்கை நகர்ந்துவிடுகிறது. குழந்தைகளிடையே இருக்கும் ஏற்றதாழ்வுகள் பெரிதாக்கப்படாமல் இருப்பதால் நமக்கு பிரச்சனைகள் எதுவும் கண்களுக்கு தெரிவதில்லை.


அடுக்கக வீடுகளில் வசிக்கும் குழந்தைகள் தனிமையில் வசிக்கிறது. அதுவும் ஆட்டிச குழந்தைகள் ஏற்கனவே தனிமை விரும்பிகள், அப்படியே அக்குழந்தைகளை விட்டுவிட்டால், மேலும் தனிமைபட்டு சமூக தொடர்ப்பு இல்லாமலாக அதன் குறைபாடு அதிகரிக்கும். ஆகவேதான் நவீன வாழ்க்கை ஆட்டிச குழந்தைகளின் வளர்ச்சியை சிக்கலாக்குகிறது.

நீலகண்டம் நாவல் ஆட்டிச குழந்தை வளர்ப்பின் பிரச்சனைகளையும், ஆட்டிச குழந்தை தன்னை வெளிப்படுத்துவதில் இருக்கும் சிக்கல்கலைப் பற்றி கொஞ்சம் பேசுகிறது. கலப்பு திருமணம், குழந்தையின்மை, தத்து எடுத்தல், பல்வேறு சிக்கல்களோடு ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகளின் வளர்ப்பை பற்றியும் நீலகண்டம் நாவல் சுற்றி வருகிறது.

தத்து எடுக்கப்படும் குழந்தை ஆட்டிச குறைபாடுடன் இருப்பதை கண்டறிவதும், பிறகு அவர்களுக்கு பிறக்கும் குழந்தையுடன் ஒப்பீட்டு எப்படி இருவரையும் வளர்ப்பது என்று குழப்பத்தில் ஆழ்வதுமாக நகர்கிறது வாழ்க்கை. ஆட்டிசம் என்பது ஒவ்வொரு குழந்தையும் ஒருமாதிரி, அவர்கள் வளரும் சூழலுக்கு ஏற்ப அவர்களின் வளர்ச்சி இருப்பதால் அதை எளிதாக கண்டுக் கொள்ள முடிவதில் சிக்கலும் இருக்கிறது.

ந. பிச்சமுத்து எழுதிய மாங்காதலை சிறுகதை தமிழில் வந்திருக்கும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பற்றியது. நாவல்களாக எதுவும் இதுவரை வராத நிலையில் சுனில் கிருஷ்ணன் எழுதியிருக்கும் நீலகண்டம் முக்கியமானதாக ஆகிறது. ஆட்டிச குறைப்பாடுள்ள குழந்தைகள் மனவளர்ச்சி குறைந்தவர்களிலிருந்து சற்று மேம்பட்டவர்கள், அவர்களை வளர்ப்பது கேஸ்-டு-கேஸ் என்பதால் அக்குழந்தையின் பெற்றோர்களே ஆசிரியர்களாக இருக்க வேண்டியிருக்கும். பொதுஇடங்களில் ஆட்டிச குழந்தையை அழைத்துச் செல்வதில் இருக்கும் சிக்கலே பெற்றோர்களுக்கு முதன்மையான பிரச்சனை. அதுவே இந்நாவலில் பேசப்பட்டும் இருக்கிறது. கூடவே ஆட்டிச குழந்தையின் எண்ண ஓட்டங்களை வேதாளம் சொல்லும் கதைகளின் வழியே சொல்கிறார் ஆசிரியர்.

****

உள்ளடக்கத்தை மீறும் வடிவசிக்கல்கள் நாவலை வாசகர்களிடமிருந்து தனிமைபடுத்தி விடுகின்றன. தேவையற்ற வடிவ சோதனைகள் உள்ளடக்கத்தை மறைத்துவிடுகின்றன. கலப்பு திருமணம், 




குழந்தையின்மை, தத்து எடுத்தல், என்று பலமுனைகளில் இருந்து பயணித்து மையமான ஆட்டிச குழந்தை வளர்ப்பு என்கிற சிக்கலை பேசவருகிறது. இப்படி சிதறலாக இருப்பது நாவலுக்கு அவசியமானதுதான். ஆனால் மையத்தைவிட மற்றசிக்கல்களை அதிகம் பேசுவதனால் வாசகனால் 'தொடர்பில்' இருக்கமுடியாமல் அலைவதும் நடக்கிறது.

ஏனெனில் ஆட்டிச குழந்தை வளர்ப்பில் மற்ற சிக்கல்கள் ஒரு பிரச்சனையே அல்ல என்பதுதான். ஆட்டிச குழந்தையின் சமூக பிரச்சனைப் பற்றி இதில் பேசப்படவில்லை. பள்ளியில் சேர்க்கப்படுவதிலிருந்து இக்குழந்தையின் சமூக தொடர்பின்மைவரை எழும் பிரச்சனைகள் முழுமையாக அலச வேண்டியவைகள். சாதாரண குழந்தையின் பள்ளிவாழ்க்கை இன்று பெற்றோர்களுக்கு பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியிருக்கிறது. குழந்தைகளை படிக்க வைப்பது போருக்கு தயாரிப்பது போன்ற நிலையில் இருப்பது குறித்தே இன்று நிறைய பேசவேண்டியிருக்கிறது. ஆட்டிச குழந்தையின் நிகழ்கால, வளர்ச்சியும் அவர்களின் எதிர்கால இடம் குறித்த பதபதைப்புகளும் பெற்றோர்களுக்கு இருக்கிறதை அலச வேண்டியிருக்கிறது.

ஏகப்பட்ட நாவல்கள் ஆங்கிலத்தில் ஆட்டிச குறித்து வெளியாகியுள்ளன. தமிழில் புனைவாக விவாதிக்கும் மனநிலையோடு வந்திருக்கும் ஒரே நாவல் நீலகண்டம் தான். அவ்வகையில் இந்நாவல் பாராட்டுதல்களை பெறுகிறது.

Sunday, March 15, 2020

கரோனா காலத்தில் ஜோர்பா

கசன்சாகிசின் 'ஜோர்பா எனும் கிரேக்கனை' மொழியாக்கம் செய்வது என் கனவு. ஆறு அத்தியாயங்கள் வரை செய்யவும் செய்திருக்கிறேன்.  எப்போதாவது செய்து முடிக்க வேண்டும். அதனுடைய சில பகுதிகளை மீண்டும் மீண்டும் நினைவு கொள்வேன். அப்படி எனக்கு பிடித்த பகுதிகளில் ஒன்று ஜோர்பாவின் இரண்டாம் அத்தியாயத்தில் வரும் இப்பகுதி. ஏனோ இந்த பத்தியை இப்போது வாசிக்கும்போது மிகுந்த ஆறுதலாக உணர்ந்தேன். அந்த ஆறுதலும் அமைதியும் எல்லோருக்கும் கிடைக்கட்டும். 

--
நான் எனது அறைக்குச் சென்று ஒரு புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டேன். புத்தர் பற்றிய சிந்தனைகள் ஓடிக்கொண்டிருந்தன. புத்தருக்கும் ஆட்டிடையனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை மீண்டும் வாசித்தேன். இந்த ஒரு உரையாடல் அமைதியை பற்றியும் பாதுகாப்பை பற்றியும் பல வருடங்களாக என்னுள் தீரா வினாக்களை எழுப்பியவண்ணம் இருக்கிறது. 

ஆட்டிடையன் - எனது உணவு தயாராகிவிட்டது, நான் எனது ஆடுகளிடமிருந்து பால் கறந்துவிட்டேன், எனது குடிசையின் கதவு தாழிடப்பட்டுள்ளது, உள்ளே தணல் எரிகிறது, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- எனக்கு உணவும் தேவையில்லை பாலும் தேவையில்லை. இந்த காற்றே எனது புகலிடம், தணல் அணைந்துவிட்டது. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

ஆட்டிடையன்- என்னிடம் எருதுகள் உண்டு, மாடுகள் உண்டு, என்னிடம் என் தந்தை எனக்களித்த வயல்வெளிகள் உண்டு, எனது மாடுகளைச் சினையாக்கும் காளையும் உண்டு, ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- என்னிடம் மாடுகளும் இல்லை, காளைகளும் இல்லை, எருதுகளும் இல்லை, வயல்வெளிகளும் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை. ஆகவே எனக்கு எந்த அச்சமும் இல்லை. ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

ஆட்டிடையன்- எனக்கு நான் சொல்வதை கேட்கும், நம்பிக்கையான மனைவி இருக்கிறாள். எத்தனையோ ஆண்டுகளாக அவள் என் மனைவியாக இருக்கிறாள். இரவுகளில் அவளுடன் களியாடும்போது நான் மகிழ்வாக இருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

புத்தர்- நான் சொல்வதை கேட்கும் சுதந்திரமான ஆன்மா என்னிடம் இருக்கிறது. நான் பலவருடங்களாக அதைப் பயிற்றுவித்திருக்கிறேன் என்னுடனே விளையாட அதற்கு கற்று கொடுத்திருக்கிறேன். ஒ வானமே உன் விருப்பப்படி மழை பொழியலாம்!

   

இவ்விரு குரல்கள் என்னுள் மாறி மாறி ஒலித்துக்கொண்டே இருந்தன, தூக்கம் ஆட்கொண்டது. காற்று மீண்டும் பலமாக வீசத்தொடங்கியது. அலைகள் பக்கவாட்டுச் சாளரங்களின் கனத்த கண்ணாடிகளை அறைந்து மோதின. நான் விழிப்பிற்கும் உறக்கத்திற்கும் இடையில் ஊசலாடும் புகை போல் மிதந்தேன்.

கொடூரமான புயல் வீசியது, வயல்வெளிகள் நீரில் மூழ்கின, எருமைகள், மாடுகள், காளைகள் என எல்லாவற்றையும் நீர் விழுங்கி கொண்டது. குடிசையின் மேற்கூரை பிய்த்துக் கொண்டு போனது, தீ அணைந்தது, அந்தப்பெண் கதறினாள், மயங்கி மண்ணில் விழுந்து மரித்தாள், ஆட்டிடையன் தன் புலம்பல்களைத் தொடங்கினான். அவன் சொல்வது என் காதில் விழவில்லை ஆனால் அவன் உரக்க அழுது கொண்டிருந்தான், உறக்கத்திற்குள் மூழ்கி கொண்டிருந்தேன், ஆழ்கடலுக்குள் தப்பித்துச் செல்லும் மீனைப்போல் மூழ்கி கொண்டிருந்தேன். 

Tuesday, March 10, 2020

இருபதாண்டு கால தமிழ் நாவல்கள்- அந்திமழை கட்டுரை


|(மார்ச் மாத அந்திமழை இதழில் இருபதாண்டு கால தமிழ் நாவல்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். நியாயப்படி இது நண்பர் ஜா. ராஜகோபாலன் எழுதியிருக்க வேண்டியது. கடைசி நேரத்தில் என்பக்கம் திருப்பிவிட்டுவிட்டார். ஒருமாத காலம் அவகாசம் கேட்டேன். அதுவும் சாத்தியமில்லை, இது ஒரு தொடர் கட்டுரை என சொல்லிவிட்டார். ஜனவரி மாத சிறுகதை குறித்தான கட்டுரையில் 'அம்புப் படுக்கை' இடம் பெற்றாலும் கூட அது சரியான அல்லது முழுமையான கட்டுரையாக உருக்கொள்ளவில்லை. என்னால் எதற்கும் சட்டென மறுப்பு சொல்ல முடிவதில்லை. ஆகவே இந்த பரிசோதனை முயற்சியை ஒப்புக்கொண்டு இரண்டு நாட்களில் எழுதி முடித்தேன். எழுதி ஓரளவு பரந்துபட்ட வகையில் எல்லா முக்கிய எழுத்தாளர்களையும் உள்ளடக்கிய ஒரு வடிவத்தில் கட்டுரை உருக்கொண்டது என எண்ணியிருந்தேன். எழுதி அனுப்பிய பிறகு தான் சில குறிப்பிடத்தக்க விடுபடல்கள் உள்ளதை கவனித்தேன். யூமா வாசுகியின் ரத்த உறவுகள், ஃபிரான்சிஸ் கிருபாவின் 'கன்னி' கலாப்ரியாவின் 'வேணல்'  அழகிய பெரியவனின் படைப்புகள் போன்றவை முக்கிய விடுபடல்கள். இவைத்தவிர அபிலாஷின் 'கால்கள்' தவசியின் 'சேவற்கட்டு'  போன்ற பல நாவல்கள் விடுபட்டிருக்க கூடும். ஈழத்தில் 'தேவகாந்தன்' சிங்கப்பூரில் 'சித்துராஜ் போன்ராஜின் நாவல்களும் நழுவிவிட்டன. இத்தகைய முயற்சி ஆபத்தானது. சிக்கலை தருவிப்பது. முழு இது பட்டியல் அல்ல என சொல்லிக்கொண்டாலும் கூட பட்டியல்தன்மை கொண்டது என நம்பப்படுகிறது. நிச்சயம் சிலருக்காவது வருத்தத்தை தருவிப்பது. கொஞ்சம் தவறினாலும் வெறும் பட்டியலாக சுருங்கிவிடும் ஆபத்து கொண்டது. எனினும் இதை ஒரு தொடக்க வரையறையாக கொள்ளலாம். இப்படி வேறு சில எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இருபது ஆண்டுகால நாவல்கள் குறித்து எழுதும்போது இயல்பாக இந்த விடுபடல்கள் நிறைவுறும்)
--

நவீனத் தமிழ் இலக்கியத்தின் இரு தொடக்கப் புள்ளிகள் என கவிதைக்கு பாரதியையும் புனைவுக்கு புதுமைபித்தனையும் அடையாளம் காட்டுவது வழக்கம். பாரதியில் தொடங்கிய கவிமரபு பல பெரும் கவிகளை உருவாக்கி இன்றுவரை வளமாக பெருகி வருகிறது. புதுமைப்பித்தனின் வெளிப்பாட்டு வடிவம் சிறுகதையாகவே இருந்தது. தொடக்கத்திலிருந்தே சிறுகதையில் பல மேதைகள் உருவாகி அந்த தளத்தை செறிவாக்கினார்கள். இன்று தமிழில் புதிதாக சிறுகதை எழுதவரும் எழுத்தாளருக்கு மூதாதையின் பளுவை கடந்து புதிதாக எழுத வேண்டிய நிர்பந்தம் உள்ளது ஒருவகையில் வரம் இன்னொரு வகையில் சவால். முன்னோடிகள் உருவாக்கியளித்த இவ்விரு வெளிப்பாட்டு வடிவங்களும் இன்றுவரை தழைத்து வளர்வதை உணர முடிகிறது. இந்த கட்டுரை கடந்த இருபது ஆண்டுகால தமிழ் நாவல் இலக்கியத்தின் செல்திசையை பற்றியதே அன்றி சிறந்த நாவல்களுக்கான பட்டியல் அல்ல. இதுவும் கூட பக்க வரையறைக்கும் ஞாபக வரையறைக்கும் உட்பட்டு செய்யப்படும் ஒரு முயற்சி மட்டுமே. ஏனெனில் இத்தகைய பேசுபொருள் ஒரு முனைவர் பட்ட ஆய்வு அளவிற்கு விரித்து எழுதப்படவேண்டியது. வரலாறு சார்ந்த ஒரு கோணத்துக்கு முக்கியத்துவம் அளித்து நாவல்களில் ஏற்பட்டுள்ள பரிணாமத்தை அடையாளம் காண முயல்கிறது.

புதுமைபித்தனின் காலத்தில் மலையாளத்தில் தகழி சிவசங்கரம் பிள்ளை செம்மீன், தோட்டியின் மகன் போன்ற ஆக்கங்களை உருவாக்கிவிட்டார். தமிழில் பரப்பிலக்கிய தளத்தில் கல்கியின் பொன்னியின் செல்வன்  மற்றும் சிவகாமியின் சபதம் தமிழ் நாவலின் அடையாளமாக நிலைபெற்றிருந்த போது கன்னடத்தில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் ‘சிக்கவீர ராஜேந்திரனை எழுதிவிட்டார். மண்ணும் மனிதர்களும், சோமன துடி போன்ற பெரும் ஆக்கங்கள் உருவாகிவிட்டன. இந்தியில் கோதான் வெளிவந்தது.  வங்காளத்தில் விபூதி பூஷன் பந்தோபத்யாயா, தாரா சங்கர் பானர்ஜி, அதீன் பந்தோபத்யாயா என பலரும் அபாரமான உயரங்களை நாவலில் அடைந்துவிட்டார்கள்.

பிற மொழிகளை ஒப்பிடும்போது தமிழில் நாவல் மரபு சற்று வேறுபட்ட தொடக்கத்தையே கொண்டிருந்தது.  க.நா.சுவின் ‘பொய்த்தேவு’ லாசராவின் ‘அபிதா’, தி.ஜாவின் ‘மோக முள்’ ஆகியவை நம் தொடக்க கால நாவல்கள். கல்கி, சாண்டில்யன் போன்றோர் வரலாற்று புனைவுகள் வழியாக வெகு மக்கள் ஏற்பை பெற்றவர்கள் ஆனார்கள். ஆகவே நவீன இலக்கியம் அவற்றை நிராகரித்து தனது இருப்பை தக்கவைத்துக்கொள்ள தனிமனித சுயத்தை அதிகமும் பேசு பொருளாக்கிக் கொண்டது.  ‘கரைந்த நிழல்கள்’ ‘கிருஷ்ணப் பருந்து’ ‘பள்ளிகொண்டபுரம்’ என பல தமிழ் நவீன செவ்வியல் நாவல்கள் எல்லாம் இவ்வகையின் நீட்சியே. வரலாற்று, பண்பாட்டு தடயங்கள் மிக சன்னமாகவே இவற்றில் வெளிப்பட்டன. தொடக்ககால நாவல்கள் அதிகமும் அகத்தையே பேசின. புறத்தை பேசிய மார்க்சிய பின்புல நாவல்கள் அதீதமாக அப்பக்கம் சாய்ந்தன. இப்போது நோக்குகையில் ஜெயகாந்தன் இதை ஓரளவு சமன்படுத்த முயன்றார் என அடையாளப்படுத்த முடிகிறது. அகத்திணையின் கூர்மையும் சமூக பிரக்ஞையின் விழிப்புணர்வும் கொண்ட எழுத்து. ஆனால் தீவிர நவீன இலக்கியம் அவரை பெரிதாக கவனிக்கவில்லை என்றே தோன்றுகிறது. இந்நிலையில்  இன்று தமிழின் முக்கியமான நாவலாக கொண்டாடப்படும் ப. சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, கடலுக்கு அப்பால் ஆகியவை அவர் அதை எழுதிய காலத்தில் கவனிக்கப்படடவில்லை. இன்றைய தமிழ் நாவல் தாமதமாக என்றாலும் கூட, சிங்காரத்தை தன் முன்னோடியாக கண்டுகொள்கிறது என சொல்லலாம்.

தமிழ் நாவல்களின் முனைப்பான காலம் எண்பதுகளின் பிற்பகுதியிலிருந்து தொடங்குகிறது என தோராயமாக சொல்லலாம். தொன்னூறுகளில் அது வேகம் கொள்கிறது, இரண்டாயிரங்களில் உச்சம் கொள்கிறது என்றே சொல்ல வேண்டும். கடந்த இருபது ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்டுள்ள நாவல்களில் முக்கியமானவை பலவும் தொண்ணூறுகளில் உருவாகி வந்த எழுத்து தலைமுறையால் உருவாக்கப்பட்வை தான். இக்காலகட்டத்தில் நாவல் குறித்தான உரையாடலை வடிவமைத்த ஆற்றல்கள் என சிலவற்றை சுட்டிக் காட்டலாம். பின் நவீனத்துவம் மற்றும் கோட்பாட்டு சொல்லாடல்கள், தலித் இயக்கம், லத்தீன் அமெரிக்க இலக்கிய மொழியாக்கங்கள் என இவை மூன்றும் தமிழ் இலக்கிய மரபுடன் மோதி பல புதிய வெளிப்பாட்டு முறைகளை உருவாக்குகின்றன. நாவல் என்பது தத்துவத்தின் கலைவடிவம் எனும் வாதம் பேசப்படுகிறது. நாவல் தனிமனிதரின் அலைக்கழிப்புகளை மன அவசங்களை சொல்வதோடு நிற்க வேண்டியதில்லை எனும் நிலைக்கு விவாதம் வளர்கிறது. வரலாற்றுடன் அவருக்கிருக்கும் ஊடுபாவு என்ன என்பதே கேள்வியாகிறது.

 கடந்த இருபது ஆண்டுகளில் தமிழ் இலக்கியத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு சில காரணிகளை அடையாளப்படுத்தலாம்.  உலகமயமாக்கம், இணைய வசதி, கணினி தட்டச்சு ஆகிய மூன்றும்  மிக முக்கியமான தாக்கங்களை செலுத்தின. குறிப்பாக இரண்டாயிரங்களில் ஆழி சூழ் உலகு, கொற்றவை, மணல் கடிகை என கணிசமான பெருநாவல்கள் வரத் தொடங்கியதற்கு கணினி தட்டச்சு ஒரு காரணி என தோன்றுகிறது. உலகமயமாக்கம் மற்றும் இணையம் பல உலக எழுத்தாளர்களை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறது. புத்தகங்களை எளிதாக பெற வழிவகை செய்கிறது. 



இந்திய செவ்வியல் மரபைப் பற்றி சொல்லப்படும் மிக முக்கியமான குற்றச்சாட்டே அது வரலாற்று நீக்கம் செய்கிறது என்பதைத்தான். அரிதாகவே படைப்பை உருவாக்கியவர் பற்றி அறிகிறோம், படைப்பில் வரலாற்று தகவல்களை பொருத்தங்களை தேடுவது இன்னும் சிரமம். ஒரு குறிப்பிட்ட அரசு, குறிப்பிட்ட காலம் என்பதற்கான தடையங்களை அழிப்பதன் வழியாக காலாதீத தன்மையை அடைவதே அவற்றின் நோக்கமாக இருந்தன. நவீனத் தமிழ் இலக்கியமும் வரலாற்று நீக்கத்தை ஒரு எதிர்வினையாக கைக்கொண்டது. தொன்னுருகளின் உரையாடல் பிரதிக்குள் இருக்கும் மனிதனை வரலாற்று மனிதனாக, சமூக மனிதனாக உருவகிக்கத் தொடங்கியது. இந்த மிக முக்கியமான மாற்றம் தான் இன்றைய நாவலுக்கு முன்னோடியாக சிங்காரத்தை கொண்டாட வைத்தது.

வரலாறை எழுதுதல், நுண் வரலாறை எழுதுதல், மாற்று வரலாறை அல்லது இணை வரலாறை எழுதுதல், வரலாற்றை திருகுதல் என தமிழ் இலக்கியம் நான்குவிதமான உரையாடலை வரலாற்றுடன் நிகழ்த்த தொடங்கியது.

பிரபஞ்சனின் வானம் வசப்படும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பை அடிப்படையாக கொண்டு எழுதப்பட நாவல். வரலாற்று நாவலின் தொடக்கப்புள்ளி. தொண்ணூறுகளில் தான் சி.சு செல்லப்பா தனது வாழ்வின் இறுதி காலத்தில் ‘சுதந்திர தாகம்; நாவலை எழுதுகிறார். சு. வெங்கடேசனின் ‘காவல் கோட்டம்’ நாயக்கர் கால வரலாறை புனைவாக ஆக்கிய மிக முக்கியமான முயற்சி. அ.வெண்ணிலா, மு. ராஜேந்திரன் ஆகியோர் இத்தளத்தில் சில ஆக்கங்களை எழுதி வருகிறார்கள். சரவண கார்த்திகேயனின் ‘ஆப்பிளுக்கு முன்’ காந்தியின் பாலியல் சோதனையை பின்புலமாக கொண்டது. கடந்த ஆண்டு மிகவும் கவனிக்கப்பட்ட நாவல்களில் ஒன்றான சுளுந்தீயையும் இப்படி வகைப்படுத்தலாம். வரலாற்று நாவல்களின் சவால் என்பது தகவல்களையும் புனைவுகளையும் எந்த விகிதத்தில் கலந்து சமநிலையை அடைகிறோம் என்பதில் உள்ளது. தகவல் குவியலாக ஆக்காமல் படைப்பூக்கத்துடன் வரலாற்றை கையாள்வதில் உள்ளது. பூமணியின் 'அஞ்ஞாடி' இவ்வகையில் மிக முக்கியமான முயற்சி. ஜெயமோகனின் 'வெள்ளை யானையும்' வரலாற்று புனைவாக கவனப்படுத்த வேண்டிய முக்கிய முயற்சி. 

வரலாற்று கதை மாந்தர்களை தவிர்த்து வாழ்க்கைமுறை ஆவணம் என சொல்லத்தக்க மானுடவியல் நோக்கில் முக்கியமான முதல் முயற்சிகள் பலவும் இந்த இருபது ஆண்டுகளில் நிகழ்ந்தன. கி.ராவின் கோபல்ல நாவல் தொடர்களை ஒரு இனக்குழு வரலாறாக கொள்ள முடியும். அதுவே இவ்வகை நாவல்களின் முன்னோடி.  தொண்ணூறுகளில் வெளிவந்த இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ இவ்வகை எழுத்துக்களின் நவீன கால முக்கிய மைல்கல் முயற்சி அவருடைய ‘செடல்’ குறிப்பிட்ட ஒரு வகையான ஆட்டக்காரர்களின் வாழ்வை சொல்கிறது. ஜோ டி குரூசின் ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ ஆகியவை பரதவர்களின் வாழ்வை சொல்பவை. கிறிஸ்தோபர் ஆண்டனியின் ‘துறைவன்’ முக்குவர் எனும் குறிப்பிட்ட மீனவக் குழுவை பற்றி பேசுகிறது. எஸ்.செந்தில்குமாரின் ‘காலகண்டம்’ பொற்கொல்லர் சமூகத்தின் சித்திரத்தை அளிப்பது. அவருடைய அண்மைய நாவலான ‘கழுதைபாதை’ போடி குரங்கணி பகுதியில் கழுதை மேய்ப்பவர்கள் மற்றும் முதுவான்குடி எனும் பழங்குடி மக்கள் பற்றிய முதல் சித்திரத்தை அளிக்கிறது. ச.பாலமுருகனின் ‘சோளகர் தொட்டி’, பழங்குடி வாழ்வை ஆவணப்படுத்துகிறது. லக்ஷ்மி சரவணகுமாரின் 'கானகன்' பளியர் வாழ்வை பேசியது. ஏக்நாத்தின் ‘கிடை காடு’ , ‘ஆங்காரம்’ போன்றவை மேய்ச்சல் தொழிலை பற்றிய நுண்மைகளை பேசுபவை. நக்கீரனின் 'காடோடி' காட்டை நுண்மையாக எழுத்தாக்கியது.  வேல ராமமூர்த்தி, சி.எம். முத்து போன்றோரை இவ்வகை எழுத்தாளர்கள் என புரிந்து கொள்ளலாம்‌.

வரலாற்று நாவல்களின் சட்டகங்கள் சற்றே இறுக்கமானவை. அத்தோடு ஒப்பிட நுண் வரலாற்று நாவல் எழுதுவது சற்றே சுலபம். வரலாற்று நாவல்கள் வரலாற்று பாத்திரங்களை, வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டவை. நுண் வரலாற்று நாவல்கள் வரலாற்று நிகழ்வுகளை சாமானியர்களின் தளத்திலிருந்து அனுகுபவை. இத்தளத்திலே பல நாவல்கள்; ததமிழில் எழுதப்பட்டுள்ளன. பி.ஏ. கிருஷ்ணனின் ‘புலி நகக் கொன்றை’ ஒரு வம்சத்தின் கதையை சொல்கிறது. மேற்சொன்ன நுண்வரலாற்று தன்மையை பயன்படுத்தி எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று. ஒரு தீப்பெட்டியில் வரையப்பட்ட ஓவியத்தின் வழியாக திராவிட அரசியலின் சமூக பரிணாமத்தை தமிழ்மகனின் வெட்டுப்புலி சொல்ல முயல்கிறது. இப்படி ஏதேனும் ஒரு பொருளின் வரலாறை எழுதத் தொடங்கி ஒரு காலகட்டத்தின் வரலாறை நாவலாக நம்மால் எழுதிவிட முடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒரு நகரத்தின் பரிணாமத்தை பாத்திரங்களின் ஊடாக சொல்லும் எம்.கோபாலகிருஷ்ணனின் ‘மணல் கடிகை, கண்மணி குணசேகரனின் ‘வந்தாரங்குடி’ தமிழ் பிரபாவின் 'பேட்டை'  போன்றவைகளும் நுண் வரலாற்று சித்திரத்தையே அளிக்கின்றன. சு.வேணுகோபாலின் 'நிலம் எனும் நல்லாள்' கிராமம் நீங்கி நகருக்கு இடம்பெயரும் வேளாண் குடியின் வாழ்வை சொல்கிறது. சோ. தர்மனின் 'சூல்' நீர்நிலை சார்ந்து சீரழிவின் வரலாறை பதிவு செய்கிறது. பெருமாள் முருகனின் மாதொருபாகன் தனி மனிதர்களின் வாழ்வை சமூக பண்பாட்டு தளத்தில் அனுகுகிறது. கடுமையாக எதிர்க்கபட்டு தமிழகத்திற்கு வெளியே மிக பரவலாக அறியப்பட்ட முதல் தமிழ் நாவல் எனும் இடத்தை அடைந்தது. தமிழ் எழுத்தின் சர்வதேச முகமாக இந்த ஆண்டுகளில் பெருமாள் முருகன் அறியப்படுகிறார். 

 ‘போர் எனும் வரலாற்று நிகழ்வை பின்புலமாக கொண்டு பல்வேறு ஈழ நாவல்கள் இந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்துள்ளன. ஷோபா சக்தியின் ‘ம்’ ‘கொரில்லா’ ‘பாக்ஸ் கதைகள்’ அண்மையில் வெளிவந்திருக்கும் ‘இச்சா’ வரை அனைத்துமே முக்கியமான நாவல்கள். குணா கவியழகனின், தமிழ்நதியின் நாவல்களும் இதே பின்புலத்தை பேசுபவை. சயந்தனின் ‘ஆறா வடு’ மற்றும் ‘ஆதிரை’ ஈழ பின்புலத்தில் எழுதப்பட்ட மிக முக்கியமான நாவல்கள். கடந்த ஆண்டு வெளிவந்த ம.நவீனின் ‘பேய்ச்சி’ மலேசிய தமிழர் வாழ்வை பற்றிய நுண் வரலாற்று சித்திரத்தை அளிக்கும் முக்கிய நாவல். சீ.முத்துசாமியின் ‘மண்புழுக்கள்’ மற்றும் ‘மலைக்காடு’ ஆகியவையும் இந்த இருபது ஆண்டுகளுக்குள் வெளிவந்த முக்கிய மலேசிய நாவல்கள்.   

.   வெவ்வேறு தொழில் சார்ந்தும் நுண் வரலாற்று நாவல்கள் எழுதப்படலாம். சுப்ரபாரதி மணியன் நெசவு சாயப்பட்டறை சார்ந்து பல ஆக்கங்களை எழுதி வருகிறார். கணினி மற்றும் தகவல் தொடர்புத்துறை சார்ந்தும் சில நாவல்கள் தமிழில் எழுதப்பட்டுள்ளன. இரா.முருகன், செல்லமுத்து குப்புசாமி, வினாயகமுருகன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். கார்த்திக் பாலசுப்பிரமணியத்தின் ‘நட்சத்திரவாசிகளை’ குறிப்பிடத்தக்க முயற்சியாக சொல்லமுடியும்.

பெண் எழுத்துக்கள் கூர்மையான தன்னிலையில் வாழ்வனுபவ வெளியிலிருத்து உருவாகுபவை. தனித்த பேசுபொருள் மற்றும் கூறுமுறை காரணமாக தனித்தன்மையை அடைபவை.  சிவகாமியின் 'ஆனந்தாயி' உமாமகேஷ்வரியின் 'யாரும் யாருடனும் இல்லை' பாமாவின் 'கருக்கு' சல்மாவின் 'இரண்டாம் ஜாமங்களின் கதை' போன்றவை இந்த காலகட்டத்தில் வெளியான குறிப்பிடத்தக்க பெண் எழுத்துக்கள். இஸ்லாமிய வாழ்வை எழுதிய முன்னோடி என தோப்பில் முகமதுமீரானை சொல்லலாம். கீரனூர் ஜாகிர் ராஜாவின் துருக்கி தொப்பி புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்களுடன் ஒப்பிடத்தக்க முக்கியமான ஆக்கம். அர்ஷியா, மீரான் மைதீனின் ஆக்கங்களும் இவ்வரிசையில் வருபவை‌ 

இணை வரலாறு அல்லது மாற்று வரலாறை எழுதுவதில் ஜெயமோகனின் விஷ்ணுபுரம் மற்றும் பின் தொடரும் நிழலின் குரல் ஆகியவை முக்கிய முன்னோடி ஆக்கங்கள். பெருங்கதையாடல் வடிவத்தை கைக்கொள்ள முயல்கின்றன. வெவ்வேறு மெய்யியல் தரப்புகளின் மோதலை உருவாக்குகிறார். அரவிந்தின் 'சீர்மை' சிறிய அளவில் என்றாலும் தத்துவ மோதல்களை வரலாற்று ஆளுமையின் பின்புலத்தில் நகர்த்துகிறது. மாற்று வரலாறு எழுத்துக்கள் நாட்டாரியல் மற்றும் தொன்மங்களை மீளுருவாக்கம் செய்தன. ஜெயமோகனின் ‘கொற்றவை’ மற்றும்  இப்போது எழுதிக்கொண்டிருக்கும் ‘வெண் முரசு’ தொடர் நாவல்கள் இவ்வகையை சேர்ந்தவை. பல தொகுதிகள், பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் நீளும் ஒரு அரிய முயற்சி. நவீன கால அறிதல்களை கொண்டு பாரதத்தை மீளுருவாக்கம் செய்கிறார். ஃபிராய்டு, யுங், கிராம்ஷி என பலருடைய அறிதல்கள் பாரத கதையாடலோடு இணைகிறது. முருகவேளின் ‘மிளிர் கல்’ கண்ணகியை நவீன தளத்தில் மீளுருவாக்கம் செய்ய முயல்கிறது. கோணங்கியின் நாவல்களையும் இவ்வரிசையிலேயே ஒருவர் வைக்கக்கூடும். பூமணியின் ‘கொம்மை’ மகாபாரதத்தை நாட்டாரியல் தளத்தில் மறு உருவாக்கம் செய்கிறது. எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவம் பின் நவீனத்துவ பாணியில் பாரதத்தை சொல்கிறது. நெடுங்குருதி யாமம் இடக்கை சஞ்சாரம் என அவருடைய நாவல்கள் முக்கியமானவை. வரலாற்று இடைவெளிகளை பேசுபவை. 

வரலாறை திருகுதல் ஒரு வகையில் மாற்று அல்லது இணை வரலாறை உருவாக்கும் முயற்சி மற்றொரு வகையில் வரலாற்றை நிராகரித்தல்‌. பா‌ வெங்கடேசனின் நாவல்களை முந்தைய பகுப்பிலும் யுவன் சந்திரசேகரின் நாவல்களை பிந்தைய பகுப்பிலும் வைக்கலாம். வரலாறை திருகி அதன் அபத்தத்தை சுட்டி அதை நிராகரிக்கும் ஆக்கம் தேவிபாரதியின் நட்ராஜ் மகராஜ். இரா. முருகனின் 'அரசூர் வம்ச' தொடர் நாவல்கள் அடிப்படையில் ஒரு வம்சகதைதான். ஆனால் அதன் சொல்முறை காரணமாக வரலாறை திருகி அதை குறியீடுகளாக ஆக்கிக் கொள்கிறது. சாருவின் ஜீரோ டிகிரி சிதறல் வடிவத்தின் முன்னோடி முயற்சி. அவருடைய ராசலீலா எக்சைல் ஆகிய நாவல்கள் இந்த ஆண்டுகளில் வெளியாயின.

தேவி பாரதியின் 'நிழலின் தனிமை' தனிமனிதனை மையமாக கொண்ட நாவல். ஆனால் அந்த நாவல் கொண்டாடப்பட்டது‌‌. அது எழுப்பிய ஆழ்ந்த கேள்விகள் மற்றும் இறுதியில் சென்றடையும் வெறுமை அதை முக்கிய நாவலாக்கியது. லக்ஷ்மி சரவணகுமாரின் 'உப்பு நாய்கள்' வரலாறு தனிமனிதன் இடையீட்டில் நிகழும் நாவல். ஒரு வகையில் சுரேஷ் பிரதீப்பின் 'ஒளிர் நிழல் குணா எனும் ஒரு தனி மனிதனின் கதைதான் ஆனால் குறிப்பிட்ட வரலாற்று தருணத்துக்கு எதிர்வினையாற்றுவது. சுனில் கிருஷ்ணனின் ' நீலகண்டமும்' வரலாற்று காலத்திற்கான தனி மனிதனின் எதிர்வினை என்றே வகைப்படுத்த முடியும்‌. இவை வரலாற்று நிகழ்வு என இல்லாமல் வரலாற்று போக்கின் மீதான எதிர்வினை என சொல்லலாம்.

 நாவல்களில் எப்போதும் பேருரு கொள்வது காலம் தான். யதார்த்தவாத செவ்வியல் நாவல்கள் எதை எடுத்துக்கொண்டாலும்  ஒருவகையில் நாம் மீண்டும் மீண்டும் சென்று மோதுவது காலத்தின் பேருரு தோற்றத்தில் தான். அது தால்ஸ்தாயின் போரும் வாழ்வுமாக  இருந்தாலும் சரி பைரப்பாவின் குடும்பம் சிதைகிறது என்றாலும் சரி. தமிழ் நாவல்களின் கூறுமுறை பேசு பொருள் என்னவாக இருந்தாலும் அவை இந்த இலக்கை நெருங்குவதை பொருத்தே அதை மதிப்பிடுவது வழக்கமாகிவிட்டது. 

ஒட்டுமொத்தமாக தமிழ்  இலக்கியத்தில் கடந்த இருபது ஆண்டுகளில் நாவல்களில் பெரும் பாய்ச்சல் நிகழ்ந்து வருவதை உணர முடிகிறது. வருங்காலத்திலும் தமிழ் நாவல்கள் தொடர்ந்து சரியான திசையில் புதிய சவால்களை கண்டடைந்தபடி முன்நகரும் எனும் நம்பிக்கை இருக்கிறது.  தற்கால தமிழ் நாவலில் உள்ள கதாபாத்திரம் பண்பாட்டு தொடர்ச்சியோ வரலாற்று பிரக்ஞையோ அற்றவர் அல்ல.  அவர்கள் சூழலின் காலத்தின் பிரதிநிதிகள். தற்கால தமிழ் நாவலின் சவால் என்பது தரவுகளை எந்த அளவில் புனைவாக்குவது என்பதே. கடந்த முப்பது ஆண்டுகளாக அது எதிர்கொண்டுவரும் சவால் என்பது அகத்துக்கும் புறத்துக்கும் இடையிலான சமநிலையை அடைய முற்படுவதுதான். 

Tuesday, March 3, 2020

நீலகண்டம் - தொண்டையில் சிக்கிய அன்பெனும் நீல முள்- ரமேஷ் கல்யாண்


(ரமேஷ் கல்யாண் ஒரு வகையில் இலக்கிய உலகில் well wisher என சொல்லத்தக்க எழுத்தாள நண்பர். அம்புப்படுக்கை அங்கீகாரம் பெறும் முன்னரே அது குறித்து முக்கியமான வாசிப்பை பகிர்ந்திருந்தார். நாவல் குறித்த அவரது வாசிப்பு நிறைவை அளிக்கிறது. நன்றி)

Image result for நீலகண்டம்



இதுவரை பல சிறுகதைகளை கச்சிதமாக எழுதியவரும் யுவ புரஸ்கார் பெற்றவருமான எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணனின் முதல் நாவல் நீலகண்டம். யாவரும் பதிப்பகம். எழுத்தாளர்  மட்டுமின்றி மேலை இலக்கியங்கள் உட்பட்ட  படைப்புகளின் ஆழ்ந்த வாசகரும், படைப்புகளை விமர்சகத்தன்மையோடு எழுதியும் பேசியும் வருபவர்.

ஆட்டிசம் குறைபாடுள்ள ஒரு குழந்தையின் வளர்ப்பு பற்றிய நாவல் என்று ஒரு வரியில் சுருக்க முடியாமல் அப்படியான குழந்தையின் பெற்றோரியம், குழந்தையின்மை பற்றிய மனச்சிக்கல்கள், அதை எதிர்கொள்ளும்போது அவை மேலும் சிக்கலாதல், அதனால் உருவாகும் இடைவெளி, அவற்றை நிரப்ப குடும்பம் எனும் அமைப்புக்கு உட்பட்ட தம்பதிகள் செய்துகொள்ளும் சமரசங்கள், விட்டுக்கொடுத்தல், அல்லது வெடித்தல், அப்படியான குழந்தைகளின் உலகம் மற்றும் நிலைமை, தத்து எடுப்பதற்கான மன நிலை, தத்து எடுக்க செல்லும்போது  அங்கு நிலவும் வணிக, சட்ட, மருத்துவமனை  சூழல்கள் , அப்போது உருவாகும் நிலைகொள்ளாமை, காதல் திருமணத்தால் விலகிப்போன குடும்ப உறவுகள் நெருங்க முயலும் நிர்பந்தங்கள், அவற்றை ஏற்கும்போது உணரப்படும் மனநிலைகள், என பல்வேறு சிடுக்குகள் உள்ளே நுழைந்து பயணிக்கிறது இந்த நாவல். ஆட்டிசம் குழந்தை வளர்ப்பு பற்றிய முதல்வகை நாவல் என்பதாலும், அந்த குறைபாடு பற்றிய நாவலாக கருணை நரம்புகளை சீண்டும் நாவலாக விரியாமல், அதை எதிர்கொள்ளும் பெற்றோரியம் பற்றி பேசுவதாலும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய நாவலாகிறது. சுவாரசியமான நாவலாக அல்ல.

நாவலில் பல இடங்களில் சமூக  நிதர்சனம் என்பதை தயக்கமில்லாமல் தொட்டுக்காட்டியபடியே நாவல் நகர்கிறது. உதாரணமாக  - ஆட்டிசம் உள்ள தனது குழந்தையை செந்தில் ரம்யா தம்பதிகள் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது என்பது பெரிய சோதனைக்காலம். சாதாரண பள்ளிகளில் சேர்த்தால், உணர்ச்சி கொந்தளிப்பும், பேசி புரியவைக்க முடியாத அல்லது நமது மொழியை புரிந்துகொள்ள முடியாத அந்த சிறு குழந்தை முரண்டு செய்தோ அல்லது மயக்கமுற்றோ விழுந்தால் அது அங்கிருக்கும் பிற சாதாரண குழந்தைகளை பாதிக்கும் என்கிறது பள்ளி நிர்வாகம். ஆனால் அந்த குழதையை புரிந்துகொண்டு அனுசரிக்க வேண்டும் என்று பெற்றவர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதே சமயம் அந்த குழந்தையை ஸ்பெஷல் குழந்தைகள் படிக்கும் வேறு பள்ளியில் சேர்க்கலாம் என்றால் அங்கே மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இருப்பார்கள் என்பதால் அது தனது குழந்தையை பாதிக்கும் என்று இந்த பெற்றோர் அஞ்சுகிறார்கள். இந்த இரண்டு அச்சத்தில் எதை சரி என்று நியாயப்படுத்த முடியும் ? இந்த குரலை செந்திலின் நண்பனின் குரல் மூலம் நாவல் ஒலிக்கிறது. இப்படியாக சில முக்கியமான இடங்கள் நாவலில் உள்ளது.

இதைவிட முக்கியமாக,  குறைப்பிரசவத்தில் ஆண் குகுழந்தையை இழந்தபின், உடல் நிலை கருதி அந்த குழந்தை தத்து எடுக்கப்பட்ட குழந்தை என்பதும்,  குழந்தையாக நன்றாக இருந்த அந்த பிள்ளை வளரும்போதுதான் ஆட்டிசம் குறை இருப்பது தெரிய வருவதும், தத்து எடுத்த பிறகு அவர்களுக்கு சுயமாக ஒரு குழந்தை பிறக்கிறது என்பதும், அந்த நிலையில் அவர்களது உலகம் என்னவாக கிறுகிறுக்கிறது என்பதும் நாவலில் ஓடிக்கொண்டே இருக்கிறது.



ஆட்டிச குழந்தைகளுக்கு சிறப்பு ஆற்றல்கள் உண்டு, முழு அனுபவத்தை அடைய நமக்கு தியானம் போன்ற filter கள் உண்டு ஆனால் அவர்களுக்கு கிடையாது. மொசார்ட் போன்றவர்கள் ஆட்டிசம் இருந்தவர்கள்தான்  போன்ற தனித்தனியான உண்மைகளை வைத்துக்கொண்டு ஆட்டிசம் என்பது மேதைமையின் ஒரு கூறு என்று அந்த குழந்தையின் அம்மா நம்பத் தொடங்குகிறாள். இதெல்லாம் நாவலில் நாம் வேகமாக கடந்து போய்விடக்கூடிய மிக அருமையான இடங்கள்.



மேலும் நாவலில் நாட்டார் கதை, புராண உபகதை, வேதாளம் விக்ரமாதித்தன் கேள்வி பதில் வகை, மேஜிக்கல் ரியலிச வடிவம், நாடக வடிவம் போன்றவை ஆங்காங்கே விரவி வருகிறது  என்பது புதியதாக இருக்கிறது. இதில் சில சரியாக பொருந்தியும், சில உதிரியாகவும் நிற்கின்றன. இவற்றில் வரும் கிளைக்கதைகள் அனைத்துமே குழந்தை இன்மை அல்லது குழந்தை பெற்றோர் உறவு குறித்த அடையாளம் கொண்டதாகவே உள்ளன என்பதால் அவை நாவலோடு இணைந்து ஓடுகின்றன. சிறுத்தொடர் கதை, சுடலைமாடன் கதை, கிரேக்க துன்பியல் நாடக பாத்திரம் மெடியா, நாகம்மை கதை போன்றவை.



நாவலில் சொல்லப்பட்ட உபகதையின் பாத்திரம் வந்து நாவல் பாத்திரத்தை சந்திப்பது போன்ற உத்தியும் நன்றாக வந்திருக்கிறது. (திலீப் குமார் தனது ரமாவும் உமாவும் நாவலில் இப்படி ஒரு உத்தியை பயன்படுத்தி இருப்பார் என்று நினைவு). சிறுத்தொண்டர் கதையில் சொல்லப்பட்ட சீராளன், நாவல் பாத்திரம் செந்திலிடம், காவியுடை உடுத்திய முதியவனாக (ஏனோ திருவருட்ச்செல்வர் சிவாஜி மேக்கப் நினைவுக்கு வருகிறது ) வந்து வரலாற்றில் நீங்காத இடம் பிடித்த தன் பெயர் குறித்த அதிருப்தியை சொல்வதும், மரணம் இல்லாத தனது வாழ்வு பெரும் துன்பம் என்பதும், "எனக்கு காலமின்மையும் வேண்டாம்; மரணமின்மையும் வேண்டாம்' என்ற இடம்  நமக்குள்  கேள்விகளை எழுப்புகிறது. முதுமையை தானே விரும்பி கேட்டதாக சொல்லும் சீராளன் , தனது தலையை அரிந்து, அமுது படைத்த அப்பா தான் உயிர்த்தெழுந்து வந்த பிறகு கண்ட அப்பாவும் வெவ்வேறாக தான் உணர்வதை சொல்லும் இடம் அருமை. இப்படியான இடங்களை நிதானித்து பிறகு நாவலை தொடர்ந்தால்தான் நாவலை சரியாக வாசித்துக்கொள்ள முடியும் என்று தோன்றுகிறது.  நாவல் முடிந்த பிறகு, சீராளனும், ஆட்டிச குழந்தை 'வரு'வும் தராசின் இரு தட்டுகளில் இருப்பதாக  வைத்து நாம் யோசிக்கவைக்கிறது.



நிஜவாழ்வில் இருந்த வான்மதி அருண்மொழி நாவலில் ஒரு வந்துபோகும் பாத்திரமாக இணைத்திருப்பது நாவலுக்கு பெரிதாக பலம் எதையும் சேர்ப்பதில்லை. அதன் இடம் இன்னும் சற்று விரிவு பட்டிருந்தால் ஒருவேளை சிறப்பாக அமைந்திருக்கக்கூடும். அதேபோல கரையான்களால் ஒரு மிகப்பெரிய வீடு அரிக்கப்பட்டு சிதிலமுறுவதை மிக அழகாக ஒரு அத்தியாயம் பேசுகிறது.  கரையான் மண்ணுக்குள் ஓடும் நெருப்பு என்று ஒரு அருமையான வரி வருகிறது. அந்த வீட்டை விட்டு செந்தில் போனபின் மறுபடி வந்து பார்க்கும்போது அங்கு இருக்கும் பெண் "நீங்க போனப்பறம் கரையான் வருவதே இல்லை' என்று சொல்கிறாள். இவ்வளவு கனமாக உருவான அந்த பகுதி நாவலோடு சரியாக பொருந்தி வரவில்லை. (காச்சர் கோச்சர் நாவலில் விவேக் ஷான்பாக்க்கும், ஒரு சிறுகதையில் சுரேஷ் வெங்கடாத்ரியும் எறும்புகள் பற்றி இதைப்போல எழுதி இருப்பார்கள்.) இப்படியான பகுதியை  கையாளும் விதம் பற்றி படைப்பாளிக்கு கருத்து சொல்லுதல் வாசக வன்முறை என்றாலும், கரையானுக்கும் காலத்துக்கும் ஒரு தொடர்பு உண்டாக்கி, இதை மிகச்சிறந்த ஒரு உபகாரணமாக அல்லது உபாயமாக செதுக்கி புகுத்தி இருந்தால் இது நாவலின் சிறந்த பகுதியின் ஒன்றாக ஆகி இருக்கும் என்றே தோன்றுகிறது.



தகவல் தொழில்நுட்ப துறை மனிதர்களை ஒரு பெரிய மண்புழு போல தின்று தள்ளுகிறது. ரம்யா தனது பணியில் இருக்கும் இறுக்கம் காரணமாக இடையிடையே எதையாவது தின்பண்டம் கொறிக்கிறாள். கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் சமயங்கள் குறைவு. ஒரு சமயத்தில் அவள் உடல் பருமன் அதிகரிக்கிறது. பிற்பாடு குழந்தை  பேறின்மைக்கு அதுவும் ஒரு உப காரணமாக  அமைகிறது.  குழந்தைப்பேற்றுக்கான மருத்துவம், இந்தந்த  நாட்களில் உறவு கொள்ளவேண்டும் என்று சொல்லி உணர்ச்சியை   இயந்திர தன்மை கொள்ள வைக்கிறது. (திட்டமிட்ட கால அட்டவணை கலவையிலிருந்து காமத்தை வெளியே தள்ளியது என்று ஒரு அழகான வரி வருகிறது.) அதுவே பிறகு ஒரு ஆயாசமாக மாறுகிறது. இதற்காக இருவரும் மேற்கொள்ளும் மருத்துவ சிகிச்சை, அது தரும் அசௌகரியங்கள் என்று பலவும் நாவலில் வெவ்வேறு புள்ளிகளில் விரிகின்றன. தனது பெற்றோர்கள் வீட்டுக்கு வரும்போது தத்து எடுக்கப்பட்ட ஆட்டிசம் உள்ள  முதல் குழந்தை வரு மறைத்து வைக்கப்படுகிறாள்.  பிறகு சப்தம் போடும்போது உள்ளே சென்று பார்க்கும்போது அது படுக்கையில் மலம் கழித்து அலங்கோலம் ஆக்கி வைத்திருப்பபது கண்டு 'எல்லார் முன்னாடியும் மானத்தை வாங்குது' என்று கடிந்து கொண்டு மூர்க்கமாக நடக்கிறாள் தாய் ரம்யா.  ஆனால் நிதர்சனத்தில் இங்கே யாரையுமே குற்றம் சொல்ல முடியாமல் இருக்கிறது என்பதும், தன் மேல் கவனம் விழுவதற்காக அந்த குழந்தை அப்படி செய்திருக்கும் வாய்ப்பே அதிகம் என்பதும் நாவலின் சன்னமான புள்ளிகள். இவற்றை சற்று ஊன்றி கவனித்து கடக்கும்போதுதான் நாவலின் அடர்த்தியை நாம் உணரமுடியும். ஆனால் இவையெல்லாம் மிக வேகமாக, சிறுகதைத்தன்மையோடு சுருக்கமாக கடந்து போய்விடுகிறது. இவை நாவலுக்குரிய சுதந்திரத்துடன் விரிந்து கொடுக்கலாம்.



எவ்வளவு படித்த சமூகமாக மாறினாலும், பெண்ணுக்கு குறை எனும்போது இல்லாத அழுத்தம், சீற்றம்,  ஆணுக்கு குறை எனும்போது அவனுக்குள் உருவாவதையும்,  விந்தணுவை கொடையாக பெற்று குழந்தை பெறுவதை ஏற்றுக்கொள்வது தம்பதிகளுக்கு பெரிய சவாலாகவே இருப்பதையம்  சூட்சுமமாக சொல்லி போகிறது நாவல்.



காதல் திருமணம் செய்துகொண்டதால் பெண்ணோடு உறவை முறித்துக்கொண்டு விட்ட  பெண்ணின் பெற்றோருக்கு சுகவீனங்கள் உண்டாகின்றன. ஆனால் மகளோடு சேர விரும்புவதில்லை. மகளுக்கும் குழந்தை இன்மை, தத்து எடுத்த குழந்தை  ஆட்டிசம் நோயில் இருப்பது, நிம்மதி இன்மை, வேலைப்பளு என்று நசுக்கும்போது, அவரவர் அகத்தின் வீரியத்தால் நெருங்கும் சந்தர்ப்பங்கள் வாய்த்தாலும் நெருங்குவதில்லை. பின்னொரு சமயம் அவர்கள் மகளோடு இணையும்போது, கணவன் தான் விலக்கப்படுவதாக உணரும் இடம் நிதர்சனமான ஒன்று.



ஆட்டிச குழந்தை வரு வின்  உலகம் மற்றும் சிக்கல்கள் பற்றி நீல யானைப் பொம்மை நீதிமன்றத்தில் பேசுவதாக அமைந்த சிறு அத்தியாயம் நாவலின் முக்கியமான ஒன்று.  குழந்தையின் நிலைமை குறித்து சொல்லமால் நாவல் முழுமை பெறாது. அதைப் பற்றி விளக்கினால் நாவல் ஒரு விளக்கப்பட தன்மையை உண்டாக்கிவிடும். இங்கே யானை பொம்மையின் மூலமாக அவற்றைப் பேசவைத்த இந்த உத்தியில் சுநீல் நல்ல நாவலாசிரியராகிறார்.



நாவலில் நம்மைத் தைக்கின்ற இடங்களில் இரண்டைச் சொல்லலாம் என்றால் - ஆட்டிச தத்து எடுத்து வளரும் குழந்தை வரு பற்றி தந்தை செந்தில் தனது அலுவலக சகா முரளியிடம் "வேற எல்லாத்தையும் விட்டு விடலாம் ..இப்ப வரைக்கும் அவ நன்றி விசுவாசத்தோடயே இருக்கா ..அதை என்னால தாங்கிக்கவே முடியலைடை டா " என்கிறான்.



மற்றொரு இடத்தில் குழந்தையை தத்து எடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்யும்போது பிள்ளை கூட்டல் எனும் முறைப்படி நன்றாக வளர்ந்த பின் ஒரு குழந்தையை தத்து எடுத்தால் எதையும் மறைக்க வேண்டிய அவசியம் இருக்காது. சொத்து பிரச்சனைகள் வராது என்பதால் பிள்ளை கூட்டலாம் என்று கணவன் சொல்லும்போது மனைவி ரம்யா "குழந்தையை வள்ளக்கறதுல இருக்கற சந்தோஷத்துக்குத்தான் நான் தத்தே எடுக்கணும்னு சொல்றேன். நீ என்னடான்னா இருபத்தைந்து வருடம் அப்புறம்ன்னு பேசுறே " என்கிறாள். தத்து குழந்தை ஒரு ஆணுக்கு என்னவாகவும் பெண்ணுக்கு என்னவாகவும் தெரிகிறது என்பதை சொல்லும் இடம்



இறுதியாக வரு வை அழைத்துக்கொண்டு செந்திலும் ரம்யாவும்  குடும்ப சுற்றுலாவுக்கு மகாபலிபுரம் செல்வதும், வண்டியில் இருந்த குழந்தை வரு காணாமல் போவதும் ஒரு திருப்பத்தை உருவாக்குகிறது. தேடிக்கொண்டே இருக்கிறார்கள். வேறொரு தளத்தில் வரு காகம், மீன், அரசமரம், சூரியன், ரயில் என்று ஒவொருவரோடும் போய்க்கொண்டே இருக்கிறாள். குழந்தை காணாமல் போனாள் என்று பதட்டமாக தேடிக்கொண்டு இருக்கும் செந்திலுக்கு  அதே சமயம் 'இனி ஆன்சைட்ட்டுக்கு வெளிநாடு போகலாம் " என்றும் 'ரம்யாவுக்கு நிம்மதியாக இருக்கும் " என்றெல்லாமும் தோன்றுகிறது. பிரச்சனைகளில் ஆழத்தில் அமுக்கப்பட்டு திணறும்போடு மனிதன் கருணையற்றவனாகி விடுகிறான். (இந்த இடத்தில் புனலும் மணலும் நாவலில் ஆற்றின் ஆழத்தில் தனது காலைப் பற்றிக்கொண்டு மேலே வந்துவிட துடிக்கும் கோரமான முக அமைப்பு கொண்ட  மகளை உதறிவிட்டு மேலே வரும் தந்தையின் பிம்பம் நம் கண்முன் தோன்றும் சாத்தியம் உண்டு.)



வேதாளம் விக்ரமனிடம் நீலகண்டன் கதையை சொல்கிறது. தேவரும் அசுரரும் மந்தர மலையை மத்தாகவும் வாசுகி பாம்பை கயிறாகவும் கொண்டு கடைகிறார்கள். தலை வால் என இடம் மாறி நின்றும் கடைகிறார்கள். தாம் அசுரர் தேவர் என்பதை மறந்து கடைகிறார்கள். கடையும் பகுதியை மிக வித்யாசமாக எழுதுகிறார் சுனீல். நாவலின் இந்த பகுதி நிதானமாக நாவலை தலைப்புக்கு கொண்டு சேர்க்கிறது. ஈசன் தன் பிரியர்களின் பொருட்டாக நீளத்தை விழுங்க உமையவள் தொண்டையில் நிறுத்த அதையே ஆசீர்வதிக்கிறார். அமுது நஞ்சாக மாறும் தருணம் ஒவ்வொருவருக்கும் நிகழ்கிறது. அதை அன்பின் முள்ளாக தொண்டையில் தேக்கியவர்களாலேயே நிகழ்கிறது இவ்வுலகு என்கிறது வேதாளம்.



செந்தில் ரம்யாவுடன் வேதாளமும் விக்ரமனும்   கூட சேர்ந்து குழந்தை வரு வை பலகாலமாக தேடுகிறார்கள். எப்போதுமே கிளிப்பச்சை நிறைத்து கவுனோடுதான் வெளியே வரவேண்டும் என்று அடம் பிடிக்கும் வரு எப்போதும் அதையே அணிகிறாள். தொலைந்து போன அவளை அந்த நிறம் கொண்டே நமது மனமும் தேட ஆரம்பிக்கிறது.





அமுதும் நஞ்சும் ஒருங்கே பிறக்கும் பாற்கடல்தான் குடும்பம் எனும் லாசராவை தவிர்க்க முடியாமல் நாம் இங்கே  நினைவு கூறுகிறோம். ஆனால் இங்கு அமுதே நஞ்சாக மாறுவது என்பது புதிய பரிணாமம் கொள்கிறது.  தொண்டையில் நீலமாக நிற்பது நஞ்சு அல்ல. நஞ்சாக மாறிப்போன அமுது என்கிறது நாவல். இப்படியான இக்கட்டான இறுதி புள்ளிகளை நோக்கி நெருக்கும் சமயத்தில் ஏதோ ஒன்றை செய்வதன் மூலம் வாழ்க்கையில்  ஒவ்வொருவரும் நீலகண்டர் ஆகிறார்கள்.



இறுதி அத்தியாயம் இந்த நாவல் முனைவர் பட்டம் பெற்று பேராசிரியராக இருக்கும் வர்ஷினி செந்தில் (ஆட்டிச குழந்தை வரு தான்) என்பவள் எழுதியது என்கிறது. தந்தை செந்தில் ஒரு புத்தகம் எழுதுகிறார். சகோதரன் சாகர் விஞ்ஞானியாகி ஆட்டிச குழந்தைகள் பிறரோடு தொடர்பு கொள்ளும்படி ஒரு மின்னணு சாதனத்தை வடிவமைக்கிறான். இந்த நாவலே அப்படியான வர்ஷி ஆட்டிபேட் என்ற சாதனத்தால் எழுதப்பட்டதே என்கிறது இறுதி அத்தியாயம்.



வரு வை அனைவரும் ஒரு புறம் தேடிக்கொண்டிருக்க அவள் மற்றொரு புறம் விளையாட்டாகவே நகர்ந்து கொண்டிருப்பதும், வேதாளம் முதல் மனிதன் வரை அவளை தேடிக்கொண்டிருப்பதாக இருக்கும் இடத்தில்   நாவல் தனது முகட்டினை தொடுகிறது. ஆட்டிச குழந்தைகள் நிலை அவர்கள் பெற்றோர் நிலை தவிப்பும், மேன்மையும் கீழ்மையும் கூடியதாகவே இருப்பதாக சொல்கிறது. அதன் பிறகு வரும் அத்தியாயம் சட்டென  ஒரு சம்பிரதாயமான நேர்மறையான முடிவை நோக்கி நாவலை தள்ளிக் கொண்டு நிறுத்துகிறது. கடைசி அத்தியாயத்தை நாம் பொருட்படுத்திக்கொள்ள வேண்டும் என்றால், சிறுமி வரு காணாமல் போவதிலிருந்து, அவள் ஒரு முனைவராகி இந்த நாவலை எழுதுவது வரையிலான பகுதி மிக நீண்ட இடைவெளியாக,  எழுதப்பட்டிருக்கும் நாவலின் அம்சத்துக்கு இணையாக வேறெங்கோ நடக்கிறது. அதனால் அது நாவலுக்குள் மறைமுகமாக கூட நுழைய இடமில்லாமல் போகிறது.



குழந்தைகள் உற்பத்தி முனையம் எனும் அத்தியாயம் குழந்தைகளை நமது தேவைக்கு தகுந்தபடி உருவாக்கிக் கொள்ள முடியும் எனும் அறிவியல் வாணிகத்தைப் பற்றி கிழித்து தொங்கவிடுகிறது.



நாவலில் பல அழகான இடங்கள் ஒரு சிறுகதையின் அவசரத்தோடு வேகமாக நகர்கிறது அல்லது அப்படி தோன்றுகிறது. கரையான் குறித்த அத்தியாயம், திருவண்ணாமலை நண்பன் அவன் அப்பா பற்றிய இடங்கள், அண்ணாமலை கதை போன்ற  சில நல்ல அம்சங்கள் தம்மளவில் சிறப்பாகவும் நாவலோடு இணைய முடியாமல் தொக்கியும் நிற்கின்றன. அதே சமயம் பச்சை பாவாடை சிறுமி நாகம்மை கதை ஜோசியர் சொல்லும் குறிப்புக்கு சரியாக பொருந்தி வருகிறது.



வழக்கமான சமூக வரம்புகளை உதறி, சில்லி பவர் ஜேம்ஸ் என்று கோபிக்கும் நவீன மனம் கொண்ட முரளி பாத்திரம் ஆதவனை நினைவு படுத்துகிறது. செயற்கை கரு தரிப்பு பற்றி சொல்லும்போது நக்கலான கிண்டலோடு சொல்லும் டாக்டரை அப்படியே' மல்லாக்க தள்ளி நெஞ்சில் குத்தவேண்டும் போல இருந்தது' எனும்போது சற்று சுஜாதாவையும் நினைவு கூறவைக்கிறது. ஒன்பது மாத கருவை ஒன்பது மாத சிசு என்று ஒரு வரி போன்ற மிகச்சில தவிர்த்து நாவலில் மிளிரும் வரிகள் பல உண்டு.

·         ஒரு சின்ன சட்டகத்தில் மூடிவிலீயை அதைத்து விடுகிறார்கள்

·         சலிப்படைந்தவனின் காலம் அவன் முன் ஊர்ந்து செல்கிறது

·         சாபங்களில் கல்லாக ஆகும் புராண மாந்தர்கள் போல் அவர்களும் மெல்ல மெல்ல கல்லாவார்கள் (தசை சிதைவு நோய் பற்றி ) 

·         வன்மம் அளிக்கும் நிறைவை அன்பு அள்ளிப்பதில்லையோ

·         பேரன்பில் ஒரு துளி நஞ்சு விழும்போது அதுவே பெருநஞ்சு

·         நீலகண்டர்களால்தான் இந்த உலகம் நிகழ்கிறது

நாவலைப் படிக்கையில் முக்கியமான ஒரு சந்தேகம் வருகிறது. சரியாக பேச்சு வராத நாகம்மை சிறுமி கிணற்றுக்குள் குதிக்கிறாள் அல்லது விழுந்துவிடுகிறாள். (இந்த நாகம்மை கதை நிகழ்ச்சியாக ஒரு முறையும் அமானுஷ்ய கதையாக ஒரு முறையும் சொல்லப்படுகிறது). வரு சிறுமியும் பிரச்சனை முற்றும்போது பேருந்தில் இருந்து காணாமல் போகிறாள். நாகம்மைக்கும் சகோதரன் உண்டு. வரு வுக்கும் உண்டு. இந்த ஒப்பீட்டில்  நாகம்மையும் வரு வும் ஏறக்குறைய ஒரே நிறை. சிக்கல் முற்றும்போது அவர்கள் நிலைமை நாவலில் தீர்மான முடிவுகளை நோக்கி செல்லாமல் மறைந்து போயோ மறைந்து கொண்டோ தப்பித்துக்கொள்கின்றனவா ?



ஆனால் இவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்து, நடப்புலகில், ஆட்டிச குழந்தையை பெற்ற பெற்றோர்கள் - அதுவும் நன்றாக இருக்கிறது என்று எண்ணி  தத்து எடுத்து பிறகு ஆட்டிசம் இருப்பதை  அறிவதும், அதற்கு பிறகு தங்களுக்காக தம் ரத்தத்தில் ஒரு குழந்தை பிறப்பதும் அப்போது அவர்கள் தங்களுக்குள்ளும், குடும்பத்துக்குள்ளும் உருவான உறவுகளில் ஏற்படும் அதிர்வுகளும், அதன் கடைசல்களில் தவிப்பதுமான பின்னணியில் - விலகி நின்று சொல்லப்பட்டிருக்கும் நாவல் அதனளவில் முக்கியமான ஒன்று. உணர்ச்சிகரமான நாடகீயமான இடங்கள்  உருவாகிவிடுவதை திட்டமிட்டு தவிர்த்து நாவலை சொல்ல முயலும்போது நாம் அதற்கான இடத்தில் வைத்து இந்த நாவலை வாசிக்கவேண்டும்தான்.









Sunday, March 1, 2020

காந்தி ஒரு பதவன்- அன்புள்ள புல்புல் குறித்து போஜே போஜன்

ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த குறிப்பு. 
அன்புள்ள புல்புல் -  கட்டுரை தொகுப்பு - யாவரும் பதிப்பகம் - முதல்  பதிப்பு - ஜூலை 2018 - பக்கங்கள் -196

காந்தி ஒரு பதவன்

முதலில் இந்த கட்டுரை தொகுப்பை எழுதிய தோழர் சுனில் கிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி கரணம் இதில் அவர் காந்தி சொல்லிய விதம் எனக்கு சற்று புதுமையாக இருந்தது காரணம் காந்தியை ஒரு புனிதராகவோ ( அவர்  கொள்கைகளை தவிர்த்து ) அல்லது  துரோகியாகவோ  சித்தரிக்கும்  மனப்பான்மை தான் நமக்கு இருகிறது தவிர ஏன் அவர் ஒரு சக மனிதராக ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம் என்று கேள்வி இந்த புத்தகம் மூலம் யோசிக்கமுடிகிறது. காரணம் my life is my message என்று சொன்னவர் சொன்னது மட்டும் இல்லாமல்  தனது வாழ்க்கையை ஒரு சோதனை களமாக  தான் பார்க்கிறார் அதில் வெற்றி பெற்றாலும் இல்லை தோல்வி அடைந்தாலும் அதை ஒரு பாடமாக எடுத்து கொண்டு அடுத்த கட்டம் நோக்கி செல்கிறார் . ரெண்டாவது ஒரு பத்து ஆண்டுக்கு  முன்பு கல்லுரி படிக்கும் காலகட்டத்தில் அதுவும் Facebook அப்போது அறிமுகம் ஆன காலத்தில் காந்தி மீது வந்த விமர்சனங்கள் அதிகம் அதில்  உண்மை தன்மை என்ன என்பது கூட தெரியாமல் அவரை வெறுத்து ஒதுக்க ஆரம்பித்த காலம் அந்த நேரத்தில் தான் ஆசிரியர் அவர்களும் காந்தியை பற்றி படித்து தெரிந்து   கொண்டு எழுத ஆரம்பித்து இருக்கிறார் அதுவும் இந்த புத்தகம் பிடிக்க ஒரு காரணம் .

புத்தகம் பற்றி :
                       இந்த கட்டுரை தொகுதி மொத்தம் 18 தலைப்புகள் உள்ளது முதல் இரண்டு தலைப்பு என்பது காந்தி அவர்களின் கல்வி பற்றிய பார்வை காந்தி எந்த மாதிரியான கல்வியை வலியுறுத்தியுள்ளார் அதன் காரணம் பற்றியும் சொல்லி உள்ளார்.

                      2) அடுத்த இரண்டும் காந்தியின் மதம் சம்பந்தமான பார்வையை முன்வைக்கிறது குறிப்பாக ராமராஜ்ஜியம் என்றால் என்ன அவர் ஹிந்து மத பற்று மட்டும் தான் உள்ளவரா என்பது போன்ற செய்திகள் இந்த 
கட்டுரை வழி தெரிந்து கொள்ள முடிகிறது.

                     3) அடுத்த ஐந்து  கட்டுரை சர்வாதிகாரம் , அஹிம்சை , மற்றும் காந்தி முன்பு நடந்த ஒத்துழையாமை போராட்டம் குறித்த தகவல்கள் உள்ளன.

                     4)  அடுத்த 10 வது கட்டுரை comrade காந்தி எனப்து காந்தியும் கம்யூனிசம் சிந்தனை குறித்த தகவல்கள் தான் உண்மையில் காந்தியின் நோக்கமும் கம்யூனிசம நோக்கமும் சற்று ஒரே மாதிரி தெரிந்தாலும் இரண்டும் வேறு வேறு தன்மை உள்ளது தான் என்பதை இந்த கட்டுரை சொல்கிறது 

                   5) அடுத்த  நான்கு கட்டுரை காந்தியின் வெற்றி , செயல்பாடு , விமர்சனம் ஆகிவற்றை சொல்வது குறிப்பாக காந்தியும் பகத்தும் என்று கட்டுரை  காந்தி, பகத் சிங்க்கு  உதவவில்லை என்ற கருத்து இருக்கிறது அதை பற்றி செய்திகள் இதில் வருகிறது . 

                 6) அது போல  காந்தியும் 55 கோடி கட்டுரையும் ஒரு விமர்சன பார்வை தான் அதில் எந்த அளவு உண்மை என்பது இந்த கட்டுரை சொல்லி உள்ளது 

                  7) கடைசியாக  அன்புள்ள புல்புல் இதில் காந்தியின் நகைச்சுவை பற்றி சொல்லி இருக்கிறார்கள் குறிப்பாக அவர் புல்புல் என்று யாரை சொல்லி இருக்கிறார் அது போல தன்னை அவர் எப்படி சுயபகடி செய்து கொண்டார் என்ற தகவல்கள் இதில் உள்ளது.

                 கடைசி இரண்டு வின்சென்ட் ஷீன் , மற்றும் தரம்பாள் ஆகிய வரலாற்று ஆசிரியர்கள் காந்தி பற்றி சொல்லியதை இங்கு கட்டுரையாக சொல்லி உள்ளார்.

இந்த கட்டுரை தொகுப்பை பொறுத்த வரை ஒரு ஒரு  மனிதருக்கும் ஒரு பார்வை இருக்கும் காந்தியை பற்றி அதனால் என்னுடைய பார்வையை மற்றவர் மீது திணிக்க முடியாது . ஆனால்  என்னை பொறுத்த வரை காந்தி ஒரு பதவர்  (வழிகாட்டி ) தான் . காரணம்  அவர் தன் வாழ்க்கையை சோதனை கலமாக பயன்படுத்தி இருக்கிறார் என்பது அவரை படிக்கும் போது தெரிகிறது.