![]() |
| A Church at NewYork |
நியூயார்க் ஸ்கூல் ஆஃப் மெடிசினில் ஏப்ரல் 3, 4 தேதிகளில் நிகழ்ந்த வாழும் தமிழ் இலக்கியத் திருவிழாவின் கதையை எங்கிருந்து தொடங்குவது? உடலும் மனமும் அமெரிக்க நேர இயைவிலிருந்து விடுபடவில்லை. அநேக தருணங்கள் மனத் திரையில் ஒடியபடி உள்ளன. எத்தனை முகங்கள், எத்தனை இடங்கள்! சரியாக சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவிற்கு விசா பெற தூதரகத்திற்கு சென்றதிலிருந்து இந்த கதையை தொடங்க வேண்டும். ஜனவரி 8 ஆம் தேதி எனக்கும் சாம்ராஜுக்கும் திருச்செந்தாழைக்கும் விசா நேர்காணல். சாம் எங்களுக்கு அரைமணிநேரம் முன்னரே சென்று விட்டார். நானும் செந்தாழையும் பையை லாக்கரில் வைத்துவிட்டு தூதரகம் சென்றோம். புத்தகங்கள், அழைப்பு கடிதம் , வங்கி விவரங்கள், ஆவணங்கள் என என்னென்ன கொண்டு வரவேண்டும் என ஒரு பட்டியலை மகேஷ்வரி முன்னரே அளித்திருந்தார். நான் ஒரே ஒரு கோப்பை தூக்கிக்கொண்டு வந்தால் செந்தாழை ஒரு பெரிய பை நிறைய தாள்களோடு வந்தார். மூன்று மாத வங்கி வரவு செலவு கணக்கு மட்டும் முன்னூறு பக்கமிருக்கும். செந்தாழை தமிழில் நேர்காணல் கோரியிருந்தார் அவரை காத்திருக்கச் சொன்னார்கள். எதற்காக போகிறீர்கள், எங்கு தங்குவீர்கள், எத்தனை நாட்கள், யார் செலவு செய்கிறார்கள், நீங்கள் மருத்துவரா, என்னென்ன எழுதியிருக்கிறீர்கள், செலவை யார் ஏற்கிறார்கள் போன்ற கேள்விகளை கேட்டார்கள். நற்பயணம் வாய்க்கட்டும் எனும் வாழ்த்தோடு ஐந்து நிமிடத்தில் நேர்காணல் நிறைவடைந்தது.
