Tuesday, June 27, 2017

உணவே மருந்து - டாக்டர்.எல்.மகாதேவன்

(ஆம்னிபஸ் பதிவு)

ஆயுர்வேத மாணவனாக அன்றுதான் நான் என் முதல் கருத்தரங்கில் அமர்கிறேன், ஆக்ஸிஜென், கார்பன் ஹைட்ரஜன் என்று அதுவரை அறிந்தவர்கள் வெளியேறி வாயு, அக்னி, கபம்  என  புதிய குணச்சித்திரங்கள் அறிமுகமான தருணம். குழப்பங்களும் கேள்விகளும் நிறைந்த வேறோர் உலகத்தில் திசை தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தேன். பொறியியல் படித்திருக்க வேண்டும் , நாம் தவறான முடிவை எடுத்துவிட்டோமோ என்று குழம்பித் திரிந்த நாட்கள் அதைத் தொடர்ந்தன (இன்றும் அவ்வப்போது அந்த எண்ணம் குறுக்கிடுகின்றது என்பது வேறு விஷயம்). மீண்டும் மீண்டும், அடுத்தடுத்து, மேடையேறி புத்தகங்களில் உள்ளதை ஆசைதீர வாந்தியெடுத்த பேச்சாளர்களை பார்த்தபோது கிட்டத்தட்ட என் சந்தேகம் உறுதி செய்யப்பட்டது, இது நம் வாழ்விற்கு பயனளிக்கப் போவதில்லை, ஆயுர்வேத கல்லூரி செத்த கல்லூரிதான், நான் வாசிப்பது அறிவியல் பாடம் அல்ல இன்றைக்குப் பயன்படாத வரலாறுதான் என்று நினைத்துக் கொண்டேன். 
அந்த நேரத்தில் அரங்கத்தில் ஒரே பரபரப்பு, முழுக்கை சட்டைபோட்ட சிவந்த  மனிதர் ஒருவர் மேடைக்கு வந்தார். மற்றொரு அறுவை என்று எண்ணியிருந்த தருணத்தில், "ஆயுர்வேத சூத்திரங்களை மனனம் செய்து என்னுடைய நினைவுத்திறனை காண்பிக்க நான் வரவில்லை, ஆயுர்வேத சூத்திரங்கள் மருத்துவனுக்கு எங்கெங்கு உதவுகின்றன என்று என் அனுபவத்தில் கண்டுகொண்டதை உங்களுடன் பகிரவே நான் வந்திருக்கேன்," என்றார் அவர். சோம்பிக் கூனிய அரங்கமே நிமிர்ந்து அமர்ந்தது, அடுத்த நாற்பத்தைந்து நிமிடங்கள் அவராற்றிய உரை என் வாழ்வையே மாற்றியது என கூறலாம். ஆயுர்வேதத்தின் மீது நம்பிக்கை பிறந்தது, 

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீண்டுக்கொண்டிருக்கும் மனிதகுலத்தின் நோய்களுக்கு எதிரான யுத்தத்தில் நானும் ஒரு கண்ணி என உணர்ந்தேன், இனி இதை ஒருபடி முன் கொண்டுசெல்ல வேண்டும், அதுவே என் கடமை. ஆயுர்வேதத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளைச் செய்து அதற்காக நோபல் பரிசு பெறும் போது என்ன உரையாற்ற வேண்டும்  என்றெல்லாம்  கனவு காணத் தொடங்கினேன்.  கனவுகளுக்கு ஒன்றும் குறைவில்லை. அன்று உரையாற்றியவர்தான் தெரிசனம்கோப்பு டாக்டர்.எல்.மகாதேவன். இன்றளவும் ஆயுர்வேதத்தைப் பொருத்தவரை அவரே என்னுடைய மானசீக குருவாக இருக்கிறார். அவர் எழுதிய நூல் தான் உணவே மருந்து.

“எனது பேற்றை வியக்காமல் என் செய? பேறு மாத்திரமன்றி நன்றிக் கடனும் ஆகும், அவரது நூலுக்கு இன்று நான் முன்னுரை எழுதுவது. யோசித்துப் பார்க்கையில், சமூகத்தின் சொறி சிரங்குக்கு அல்லது இளைப்புக்கு நானும் இன்று இலக்கியம் என்றொரு எண்ணெய் தயாரித்துக்கொண்டிருக்கிறேன் போலும். ஆனால் நோய் குணமாகியதா, குணமாகுமா என்பது வேறு கேள்வி!” என்று இந்த நூலிற்கான முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாஞ்சில் நாடன்.

பஞ்சமகாபூதங்களின் சேர்க்கையில் உருவானதால்தான் பிரபஞ்சம் என அழைக்கிறோம். இந்த பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அம்சமும் பஞ்ச மகாபூதங்களின் வேறுபட்ட விகிதாசாரக் கூட்டினால் உருவானது என்று நம்புகிறது ஆயுர்வேதம். உட்கொள்ளும் உணவும் ஐம்பெரும் பூதங்களே, அதை உட்கொள்ளும் மனிதனும் ஐம்பெரும் பூதங்களால் ஆனவன்தான். மனிதனை இயக்கும் முக்குற்றங்கள் என அழைக்கப்படும் வாத, பித்த, கபமும் ஐம்பெரும் பூதங்களால் ஆனதே. உட்கொள்ளும் உணவு அக்னியால் செரிக்கப்பட்டு உடலில் அந்தந்த பரமாணுக்கள் அந்தந்த பூதங்களை போஷிக்கின்றன. உடலின் முக்குற்றங்களாகிய வாத பித்த கபமும், மனதின் முக்குற்றங்களாகிய சத்வ ரஜோ தமசும் வெகு நுட்பமான உறவுகளைக் கொண்டிருப்பதால், உண்ணும் உணவு மன செயல்பாடுகளையும் கணிசமாக பாதிக்கும் என்று சொல்கிறது ஆயுர்வேதம். ஆயுர்வேதத்தில் விவரிக்கப்படும் மன நோய்களுக்கும்கூட உணவு காரணிகளை பட்டியலிடுகின்றன மூல நூல்கள்.

டாக்டர்.எல்.மகாதேவன் 

இந்த நூலின் முதல் அறுபது பக்கங்கள் தேர்ந்த ஆய்வுக்கட்டுரையின் நேர்த்தியுடன் தொகுக்கப்பட்டுள்ளன. ஆயுர்வேத நூல்களிலும், தொன்மையான இந்திய நூல்களிலும் உள்ள பல குறிப்புகளைத் தொகுத்துள்ளார் நூலாசிரியர். இரண்டாம் பகுதி முழுவதும் கஞ்சி, பொடி வகைகள், சூப் வகைகள், சாத வகைகள், களி வகைகள், ரசம், கூட்டு, குழம்பு, பச்சடி என பதினேழு வகை உணவுகளில்  பல ஆரோக்கியமான உணவுக் குறிப்புகளையும், செய்முறைகளையும்  தொகுத்துள்ளார். ஆயுர்வேத நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுக் குறிப்புகள்  மட்டுமின்றி, மரபாக தமிழகத்திலும் கேரளத்திலும் புழக்கத்தில் உள்ள  மருத்துவ குணம் நிறைந்த தாவர வகைகளைக்கொண்டு புதிதுபுதிதாக பல குறிப்புகளையும் அளிக்கிறார் மகாதேவன் (இவை எதையும் இதுவரை நான் முயன்றதில்லை ). 

உதாரணமாக, வழமையான ரசப்பொடியுடன் சிறிது நெய்யும் கடுகு தாளித்த வாதநாராயண இலைகளையும் சேர்த்து ரசம் வைத்தால் கைகால் வலி, இடுப்பு-முதுகு வலி, வாதக் கோளாறுகள் மட்டுப்படும் என்கிறார். எள்ளுப் புண்ணாக்கு நீரிழவு நோய்க்கு பயன்படும் என்கிறார். நிலக்கடலையை 'ஏழைகளின் பாதாம்' (poorman's almond) என்று அழைக்கிறார்கள் நவீன ஊட்டசத்து நிபுணர்கள், வெல்லத்துடன் சேர்த்து கடலையை உண்ணும போது புரதம், இரும்புசத்து, என அனேக சத்துக்கள் கிடைக்கும் என்கிறார்கள். எள்ளு உருண்டையும், கடலை உருண்டையும்  நம் கைக்கெட்டும் தொலைவில் உள்ள ஆரோக்கியமான அதேவேளை ருசியான பண்டங்கள். இந்த நூலின் மிக முக்கியமான அம்சம் என நான் கருதுவது, பெரும்பாலும், இந்த நூலில்  குறிப்பிடப்படும்   உணவுப் பண்டங்கள் அனைத்துமே நம் அருகாமையில், எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ குணம் நிறைந்த தாவரங்களைக் கொண்டு செய்யப்படுவதுதான். ஆகவே செலவும் குறைவு , ஆரோக்கியமும் உறுதி.

உடலுள் இருக்கும் இறைவனின் வடிவான அக்னிக்கு ஆஹுதியாகக் கொடுக்கப்படுவதே உணவு. இந்த உடல் அன்னத்தினாலானது. ஆயுர்வேதத்தில் உணவு உட்கொள்ளும் விதிமுறைகள் விரிவாகப் பேசப்பட்டுள்ளன. முன்னர் உண்ட உணவு செரித்த பின்னர்தான் அடுத்து உண்ண வேண்டும், பசியில்லாமல் உண்ணக்கூடாது, இரைப்பையை நான்கு பாகங்களாக பிரித்தால், அதில் இரண்டு பாகத்திற்கு திட உணவுகளையும், ஒரு பங்கிற்கு திரவ உணவுகளையும் உட்கொண்டு மற்றொரு பங்கை காலியாக விடவேண்டும். அதிவேகமாகவோ, அதிமந்தமாகவோ உட்கொள்ளக்கூடாது. முதலில் இனிப்பு பண்டங்களும், பின்னர் மற்ற சுவை உணவுகளையும் உண்ண வேண்டும், இறுதியாகவே கசப்பான உணவை உட்கொள்ள வேண்டும் என்கிறது ஆயுர்வேதம். நம் பாரம்பரிய உணவு முறையில் உண்ணும்போது, தொடக்கத்தில் இனிப்பான உணவுகளை உண்பதால் வாத தோஷம் சமனடைகிறது, அடுத்ததாக புளிப்பு சுவையை அடிநாதமாக கொண்ட சாம்பார் ரசம் போன்ற உணவுவகைகள் அக்னியை தூண்டி பித்தத்தை முறைபடுத்துகின்றன, இறுதியாக கபத்தை சமன் செய்ய மோர் உதவும். 

மருதம், நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை என ஐவகை நிலங்களில் புழங்கிய உணவுமுறை பற்றிய குறிப்புகளும் உண்டு. ஆயுர்வேதம் உணவின் குணாம்சங்களை ஆறு சுவைகளைக் கொண்டே வரையறுக்கிறது, ஒவ்வொரு சுவையின் தன்மையும் அதை உட்கொள்வதால் ஏற்படும் மாற்றமும் விரிவாக அலசப்பட்டுள்ளன. வெவ்வேறு காய்கனிகள், தானியங்கள், மற்றும் உணவு வகைகளின் இயல்புகளையும் அது உடலில் ஏற்படுத்தும் விளைவுகளையும் ஆயுர்வேத மூல நூல்கள் விளக்குகின்றன, அவையும் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. பின்னிணைப்பாக பண்டையகாலத்தில் பயன்படுத்தப்பட்ட சமையல் உபகரணங்களின் படமும் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

கிருஷ்ண தேவ ராயர் காலத்து கல்வெட்டுகளில் அதிரசம் (அதீத இனிப்பு சுவை உடையது என்று பொருள்) பற்றிய குறிப்புகள் உள்ளன. வடமொழியில் இறைவனுக்கு பண்டைய  படைக்கப் படும் உத்காரிகை எனும் பண்டத்தை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன அதுவே இன்று தோசை என அழைக்கப்படுகிறது. இட்டு அவி எனும் சொல் மருவி இட்லி வந்தது என ஆங்காங்கு சில சுவாரசியமான வரலாற்று தகவல்களையும் நமக்கு சொல்லிச் செல்கிறது இந்நூல்.

இன்று உலகெங்கும் அதிவேகமாக வளர்ந்து வரும் தொழில்துறைகளில் ஒன்று ஆரோக்கிய பராமரிப்பு துறை (wellness industry), சந்தையில் அநியாய விலையில் குவியும் விதவிதமான விளைவுகளைக் கோரும் பன்னாட்டு ஊட்டசத்து மாத்திரைகளும் பானங்களும் விற்றுத் தீர்வதைப் பார்க்கும்போது சற்று பயமாகத்தான் இருக்கிறது. அடிப்படையில் நம் ஒழுங்கீனமான உணவு வழக்கங்களை முறைப்படுத்தாமல் மருந்துகளாக வாங்கி அடுக்குவதில் என்ன பயன்?

முன்னுரையில் நாஞ்சில்நாடன் எழுதுகிறார், “உணவைக் கலோரியாக மட்டும் கருதாமல், வயிற்றுப் பையைக் குலுக்கி நிறைப்பதாக மட்டும் கருதாமல், தீட்டி வைத்திருக்கும் நாவுக்குத் தீனியாக மட்டும் நினைக்காமல் அதையோர் மருந்தாகக் கொண்டால் நோயற்ற வாழ்வை நாம் வாழலாம்.” இந்த செய்தியை இந்த நூல் நமக்கு கச்சிதமாக உணர்த்துகிறது.


உணவே மருந்து
டாக்டர்.எல்.மகாதேவன்
காலச்சுவடு வெளியீடு

2 comments:

  1. தங்கள் பதிவுக்கு மிக்க நன்றி . அருமையோ அருமை...

    ReplyDelete
  2. மிகவும் அருமை

    ReplyDelete