Thursday, June 8, 2017

ஆகஸ்ட் 15 - குமரி எஸ்.நீலகண்டன்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

மனிதனுக்கு தன் வாழ்வின் கதையை மீள மீள சொல்வதில் ஒரு இனம்புரியாத ஆனந்தம் இருக்கும் போலிருக்கிறது. தான் பெற்ற வெற்றிகள், அம்முயற்சிகளில் தாம் பெற்ற தோல்விகள், நினைவெச்சமாக உலர்ந்த வடுக்கள், வலி கொடுக்கும் ஆறாத காயங்கள். உலகில் பிறந்து மரிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்த உலகத்திற்கு விட்டுச் செல்ல ஏதோ ஒரு வாழ்க்கை செய்தி இருக்கத்தான் செய்கிறது. வரலாற்று நிகழ்வுகளுடன் தனி மனித சரிதைகளை சேர்ந்து வாசிப்பது அபாரமான அனுபவம். ஒற்றை நிகழ்வின் கணக்கற்ற பரிமாணங்களை அவை நமக்குக் காட்டக்கூடும். காந்தியின் செயலராக பணிபுரிந்த கல்யாணம் அவர்களின் வாழ்வைப் பேசும் இந்த நாவலை வாசித்தவுடன் வரலாற்றின் மாற்று பரிமாணங்கள், சாத்தியகூறுகள் குறித்த சிந்தனைகள் தொற்றிக்கொண்டன.நாவலாசிரியர் குமரி எஸ்.நீலகண்டன் சென்னை வானொலி நிலையத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்து வருபவர். அவர் எழுதிய ;ஒரு ராஜகுமாரனின் கதை' எனும்  கவிதை (இந்த நாவலின் ஒரு பகுதியாக வருவது) 'காந்தி இன்று' தளத்தில் ஏற்கனவே பிரசுரம் ஆகியிருக்கிறது. 490 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் இதுவரை நாம் அறிந்திடாத பல வரலாற்று நிகழ்வுகளை நமக்கு சொல்லி செல்கிறார். அத்துடன் நில்லாமல் பிற்சேர்க்கை பகுதியிலும் நாவலின் பகுதியாகவும் காந்தியுடன் கல்யாணம் மற்றும் பிரபலங்கள் இருக்கும் அறிய புகைப்படங்கள், காந்தி கைப்பட திருத்திய கடித குறிப்புகள் , வெளிவராத கடிதங்கள, வெவ்வேறு முறையில் காந்தியை விளித்து எழுதப்பட்ட தபால் அட்டைகள், நாளேட்டு செய்தி பிரதிகள் என பல அரிய ஆவணங்களையும் தொகுத்துள்ளார்.


காந்தியின் தனி செயலராக அவருடைய இறுதி காலத்தில் பணியாற்றியவர் கல்யாணம் எனும் தமிழர். இந்த ஒற்றை வரி தகவலை தாண்டி நமக்கு அவரை பற்றி ஆழமான தகவல்கள் எதுவும் தெரியாது. அறியப்படாத அந்த ஆளுமையை மையமாக கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது.  

நீலகண்டன் கல்யாணத்துடன் தொடர்ந்து உரையாடி, அவருடைய உரையாடல்களை பதிவு செய்து, பதிவு செய்தவைகளை கல்யாணமே சரிபார்த்து, அதன்பின்னரே அச்சுக்கு வந்ததாக அறிகிறேன். கல்யாணம் ஆகஸ்ட் பதினைந்தில் (1922) பிறந்தவர், இந்தியா ஒரு தேசமாக பிறந்ததும் ஆகஸ்ட் பதினைந்தில்தான். நாவலின் மற்றொரு பாத்திரமான பதின்மூன்று வயது சத்யா எனும் பெண்குழந்தையும் ஆகஸ்ட் பதினைந்து (2000) அன்று பிறந்தவள்தான். ஒட்டுமொத்தமாக இரண்டு தலைமுறைகளின் கதையையும் அதன் வழியாக இந்தியாவின் கதையையும் சொல்லும் முயற்சியே இந்த நாவல் என்று சொல்லலாம்.

தாய் தந்தையரிடையே மன முறிவு ஏற்பட்டதால் மத்திய மந்திரியான மாமாவின் வீட்டில் வளர்கிறாள் சத்யா. மாமாவின் வீட்டைப் பராமரிக்கும் தாமரை அக்காவின் உதவியுடன் வலைப்பூ ஒன்றை தொடங்கி எழுதத் தொடங்குகிறாள். அதை வாசிக்க நேரிடும் காந்தியின் செயலர் கல்யாணம் தன் வாழ்வனுபவங்களையும் வலைப்பூ தொடங்கி எழுதத் தொடங்குகிறார். சமகால நிகழ்வுகளின் மீதான விமர்சனமாக புனைந்து  நெய்யப்பட்ட சத்யாவின் வலைப்பூவும் கடந்த கால வரலாற்று நிகழ்வுகளையும் வாழ்வனுபவங்களையும்  பேசும் கல்யாணத்தின் வலைப்பூவும் பின்னி முயங்கி இந்த நாவலுக்கு வடிவமளிக்கின்றன. வலைப்பூ வழியாக கதை சொல்லல் தமிழக புனைவுலகில் இதுவே முதல் முறை என்று எண்ணுகிறேன். பின்னூட்டங்களைக் கொண்டு அந்த பத்தி எதை சுட்ட வருகிறதோ அதைக் கோடிட்டுக் காண்பித்து விடுகிறார். பின்னூட்ட பெயர்களில்கூட தமிழ் வலைப்பூக்களில் நாமறிந்த சில பதிவர்களின் பெயர்களையே பயன்படுத்தியிருப்பது நாவலுக்கு அதிக நம்பகத்தன்மை அளிக்கிறது. ஒரு வலைப்பூவின் இடுகையின் எதிர்வினையாக மற்றொரு வலைப்பூவின் இடுகை அமைந்துள்ளது. பெரும்பாலும் சத்யாவின் சம கால யதார்த்தம் பற்றிய இடுகைகளை வாசித்து தன்னுடைய நினைவுகளை மீட்டு கல்யாணம் எழுதிச் செல்வதாக கொள்ளலாம். சில நேரங்களில் நேர்மாறாகவும் அமைக்கப்பட்டுள்ளது.   

நாவல் முழுவதும் இரண்டு குரல்கள்தான் ஒலிக்கின்றன. அவ்விரண்டு குரல்களுக்கும் இடையிலான வேறுபாட்டை ஓரளவு மொழியில் சாத்தியமாக்கியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பதின்மூன்று வயது சத்யாவின் எழுத்து வழியாகவே அவளைப் பேணும் தாமரை, மந்திரி மாமா, சத்யாவின் தாய் தந்தை, மாமா மகன் சுரேஷ் போன்றவர்களின் சித்திரம் உயிர் பெருகிறது. கால கிரமம் என்றில்லாமல் கிழித்து அடுக்கப்பட்ட டைரி பக்கங்கள் போல் கல்யாணத்தின் வாழ்க்கையை சொல்கிறது அவருடைய வலைப்பூ. காந்தி, நேரு, படேல், ஜின்னா, பிர்லா, மவுண்ட்பேட்டன், ராஜாஜி, சி.வி ராமன் என அவர் நெருங்கி அறிந்த பல வரலாற்று ஆளுமைகள் உயிர்பெற்று உலவுவது மட்டுமல்ல அவருடைய மனைவி மக்கள் அவரை ஏமாற்றிய பொறியாளர் , கட்டட ஒப்பந்தகாரர், ஆங்கில பத்திரிக்கையாளர் என சாமானியர்களாலும் போக்கிரிகளாலும் அவருடைய நினைவுகள்  நிரம்பி வழிகின்றன. 

கல்யாணம் எனும் மனிதரின் நேர்மையான வாழ்க்கை பதிவே இந்த நாவலின் மிகப்பெரிய பலம். அவரது தனி வாழ்வு, காந்தியை பற்றிய நினைவுகள்  மற்றும் பொது நிகழ்வுகளை பற்றிய அவரது நினைவுகள் என அவருடைய நினைவலைகளை மூன்றாக வகுக்கலாம், தன்னுடைய திருமண வாழ்வு, தன் பிள்ளைகளை பற்றிய நினைவுகள், தன் வாழ்வில் சந்தித்த ஏற்றங்கள் ஏமாற்றங்கள் என பலவற்றையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக கல்யாணம் தன்னுடைய மனைவி சரஸ்வதியை பற்றி விவரிக்கும் அத்தியாயம் நாவலின் சிறந்த பகுதிகளில் ஒன்று. தன்னளவில் ஒரு சிறுகதையை போல் கச்சிதமாக எழுதப்பட்ட பகுதி. சிறுநீரக செயலிழப்பு காரணமாக உடல்நலம் குன்றி அவதிப்பட்ட சூழலில் பதினெட்டு வயது கூட நிரம்பாத அவரது மூத்த மகள் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்து, பின்னர் ஒருவருடம் காத்திருந்து தானம் அளித்து உயிரை மேலும் ஐந்த வருடம் நீட்டிக்க செய்தது நெகிழ்ச்சியான சம்பவம். அதேபோல் நாவலின் இறுதியில் தன் மரணத்தை தானே கண்டுணரும் கனவை விவரிக்கும் பகுதியும் சிறப்பாக வந்திருக்கிறது.

அடிப்படையில் கல்யாணம் ஒரு செயல்வீரர். எழுதுவதிலெல்லாம் ஆர்வம் இல்லை, அந்த நேரத்தில்கூட தோட்டத்தில் நான்கு கன்றுகளை நட்டு வளர்க்கலாம் என்பதே அவருடைய சித்தாந்தம். தோட்டத்து செடிகளுக்கு மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நீரூற்றாமல் இருந்தால் அவை வாடிவிடும் எனும் காரணத்திற்காக வெளியூரில் நடைபெற்ற மூத்தமகளின் திருமணத்திற்கே செல்லவில்லை என்பதை வாசிக்கும்போது காந்தியின் சில மிகை நடத்தைகள் (eccentricities) அவருடன் வாழ்ந்தவர்களுக்கும் ஒட்டிக்கொண்டுவிடும் என தோன்றியது. அல்லது அத்தகைய மனப்போக்கு கொண்டவர்கள் தான் காந்தியுடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்களோ என்னவோ?  

கல்யாணத்திடம் எவ்வித ஒளிவு மறைவும் இல்லை. தன் வாழ்வில் ஒருமுறை மட்டும் தான் சொல்ல நேர்ந்த பொய்யையும் பகிர்கிறார். நீதிமன்றத்திலுள்ள கழிவறையை உபயோகிப்பதற்காகச் சொன்ன அற்ப பொய்தான் எனினும் அதுவும் கூட அவர் மனதை அத்தனை ஆண்டுகளாக உறுத்தியிருக்கிறது என்பதே அவரது நேர்மையின் சான்று. அவர் அடைந்த உயரங்களை மட்டும் அவர் பேசவில்லை, அவருடைய வருத்தங்களையும் ஏமாற்றங்களையும் கூட நம்முடன் பகிர்கிறார். ஒப்பந்தத்தின்படி சரிவர வீடு கட்டித்தராத பொறியாளர் மீது விடாது மீண்டும் மீண்டும் வெவ்வேறு நீதிமன்றங்களின் படியேறி வழக்கு தொடர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நீதிமன்றமும் சிலகாலம் வழக்கை விசாரித்துவிட்டு, இது தங்கள் விசாரணைக்கு உட்பட்டதல்ல என கூறி வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறது.  அத்தனை இழுத்தடிப்புகளுக்குப் பின்னரும் அவர் தனது வைராக்கியத்தை கைவிட்டுவிடவில்லை. நீதி அமைப்புகளின் மீது அவர் நம்பிக்கை இழக்கவில்லை (வாசிக்கும் நாம் இழக்கக்கூடும்). 

கிருபானந்த வாரியாரிடம் நெருக்கமாக இருந்தார் என்பதால் நம்பி வீடுகட்ட முன்பணம் அளித்த நபர் அவரை ஏமாற்றிவிடுகிறார். காந்தியுடன் தொடர்புடைய அரிய பொருட்கள் சிலவற்றை கண்காட்சிக்கு வைக்கிறார். அவருடன் நெருங்கி பழகிய ஆங்கில பத்திரிக்கையாளர் ஒருவர அவற்றை திருடி கள்ள சந்தையில் விற்றுவிடுகிறார். தொண்டு அமைப்புக்கு இலவசமாக வழங்கிய காந்தியின் ஆவணங்களை அவர்கள் வெளிநாட்டிற்கு விற்க முயல, அதை இவரே முன்னின்று செய்ததாக அவதூறு செய்தி வெளியானது. ஐம்பது வருடங்களுக்கு முன்னர் வாங்கிய இரண்டாயிரம் ரூபாய் கடனை அடைக்க ஆயிரம் ரூபாய் தருகிறார் ஒரு நண்பர். 
இந்திய விடுதலை, பிரிவினை, காந்தியின் மரணம் என வரலாற்றின் மிக முக்கியமான காலகட்டங்களில் வரலாற்று நாயகர்களின் அண்மையில் காலம் கழித்தவர் கல்யாணம். அந்த தருணங்களின் நேரடி சாட்சியும் கூட. அவ்வகையில் அவருடைய கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. படேல்- நேரு மோதல்கள். பிர்லா – நேரு பிணக்கம், பிர்லா – படேல் இணக்கம், கான் அப்துல் கஃபார் கானின் வருத்தம் என அன்றைய சூடான அரசியல் செய்திகளை பற்றிய தன்னுடைய நினைவுகளை நம்முடன் பகிர்கிறார். கல்யாணம் வழியாக நாவலாசிரியர் கூறும் சில தகவல்கள் அதிர்ச்சி ஏற்படுத்த கூடும். பிரிவினையின்போது படேலிடம் வந்து சில இந்துக்கள் தங்கள் உடமைகள் சில முஸ்லீம்களால் சூறையாடப்பட்டன என்று முறையிடும்போது படேல் பதிலுக்கு “நீங்கள் மட்டும் ஏன் சும்மா இருந்தீர்கள்?” எனும் ரீதியில் எழுப்பும் பதில் கேள்வி காந்தியின் செவிகளை அடைந்ததை அடுத்து அவர் பெரும் வேதனை அடைந்தார் என்கிறார் கல்யாணம். மற்றொரு தருணத்தில் பாகிஸ்தானுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கொடுக்கக்கூடாது என அமைச்சரவை முடிவு செய்தபோது காந்தி பிடிவாதமாக வலியுறுத்தி அந்த பணத்தை கொடுக்கக் செய்தார். அப்போது கோபத்துடன் கூட்டத்தை விட்டு வெளியே வந்த படேல் “கிழவன்..முட்டாள்” என்று உணர்ச்சி மிகுதியில் கொட்டிய சொற்களை பதிவு செய்கிறார் கல்யாணம். 

எப்போதுமே சொல்லப்படும் வாதம் ஒன்றுண்டு, நேருவைக் காட்டிலும் படேல் பிரதமராக இருந்திருந்தால் இந்தியா சுபிட்சமாக இருந்திருக்கும் என்று. இந்த சில நிகழ்வுகளை வாசிக்கையில் காந்தியின் தேர்வு சரிதான் என்று தோன்றியது. காந்திக்கு அணுக்கமாக இருந்தவர்கள்கூட அவரையும் அவரது கொள்கைகளையும் சரிவர உள்வாங்கவில்லை என்பது தெளிவாகிறது. மக்களைச் சென்றடைய காங்கிரசுக்கு ஒரு முகம் தேவைப்பட்டது. அவ்வளவுதான். 


காந்தியின் சத்திய வேட்கை மற்றும் நேர்மையை பற்றி நாம் அனைவரும் அறிவோம். அவருடன் வாழ்ந்த, அவர் பெயரைச் சொல்லி வாழும் மனிதர்கள் அனைவரும் அப்படியிருக்க வேண்டும் என்பது மடமைதான். ‘ மிகவும் ஆச்சரியப்படத்தக்க அளவில் காந்தியின் கீழ் வேலை பார்த்த ஒரு சிலரிடமும் கூட கோள், பொறாமை, பின் வேலைகள் போன்ற துர்குணங்கள் இருந்தன’ என்று எழுதுகிறார். காந்தியின் செயலராக இருந்த பியாரிலால் ஒருமுறை வாகனத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு பழியைக் கல்யாணத்தின் மீது சுமத்தியதை பற்றிய தன் நினைவுகளை கல்யாணம் எழுதுகிறார். நிறுவப்பட்ட உண்மைகளுக்கு எதிரான சில செய்திகளையும் அவர் அளிக்கிறார். காந்தி மரண தருவாயின் போது ஹே ராம் என உச்சரித்துக்கொண்டு இறக்கவில்லை என ஆணித்தரமாக வாதிடுகிறார். அப்படி அவர் மரணிக்க விரும்பினார் என்பது உண்மை, ஆனால் அது நடக்கவில்லை. அப்படி நிறுவப்படுவது உண்மையின் திருவுருவாக வாழ்ந்து மறைந்த காந்தியின் நினைவுகளுக்குச் செய்யப்படும் இழுக்கு அல்லவா?காந்தி அளவிற்கு சமகால வரலாற்றை ஆவணப்படுத்தியவர்கள் எவரும் இல்லை என தோன்றியது. ஆசிரமவாசிகள் தினமும் அன்றைய நிகழ்வுகளை நாட்குறிப்பில் எழுத வேண்டும். காந்தி அவைகளை திருத்திக் கொடுப்பார். காந்தியின் இறுதி ஆண்டுகளில் அவருடைய அணுக்கத்தில் காலம் கழித்தவர் எனும் கோணத்தில், காந்தி செய்த பரிந்துரை, ஆசிரம வாழ்க்கையில் இருந்த அரசியல், காந்தியுடன் அவர் சென்ற ரயில் பயணங்கள், சின்ன சின்ன அன்றாட நிகழ்வுகள், காந்தி சுடப்பட்ட நாள் அன்று நடந்த நிகழ்வுகள் என காந்தியை பற்றிய கல்யாணத்தின் நினைவுகள் மிக முக்கியமானவை. காந்தியின் பிம்பத்தை ஊதிபெருக்கவில்லை. நிகழ்வுகளை அப்படியே தன் நினைவுகளில் இருந்து மீட்டு பதிகிறார். காந்தியின் தவறுகள் பலவீனங்கள் என எதையும் பூசி மெழுகவில்லை. அவர் மீது இவருக்கிருந்த வருத்தங்களையும் பதிவு செய்கிறார். இவை அனைத்தையும் தாண்டி அவரின் மகத்துவத்தையும் அங்கீகரித்து ஏற்கிறார். திறந்த மனதுடன் வாசிக்கும் வாசகன் காந்தியை மேலும் நெருக்கமாக உணரக்கூடும். 

 காந்தி – ஹரிலால், காந்தி – கஸ்தூர்பா உறவு ஆகியவைகளை பேசும் அத்தியாயங்கள் உணர்ச்சிபூர்வமானவை. நிமோனியா காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த கஸ்தூர்பாவை ஒருவேளை காந்தி தனது அலோபதி மருந்து பயன்படுத்த மாட்டேன் எனும் வைராகியத்தை தளர்த்தி இருந்தால் பென்சிலின் பயன்படுத்தி உயிர்பிழைக்க வைத்திருக்க முடியும் என எழுதுகிறார். 


காந்தியின் மனம் பிரிவினையை எப்படி எதிர்கொண்டது? இந்தியா – பாகிஸ்தான் என இரு தேசங்களிலும் இரு தேசத்து கொடிகளையும் பறக்க விட வேண்டும் என காந்தி விரும்பினார் என்கிறார் கல்யாணம். ஒரே தேசமாக இந்தியா இருந்திட எத்தகைய சமரசங்களுக்கும் அவர் தன்னை திறந்து தயாராகவே வைத்திருந்தார். சுதந்திரத்திற்கு பின்பான பிரிவினையின் காலகட்டத்தில் காந்திக்கு பல சாமானிய மக்களும் கடிதங்கள் எழுதி இருக்கிறார்கள். அவைகளில் சில இப்புத்தகத்தில் வெளியாகி இருக்கின்றன. அமைச்சர்களின் கேளிக்கை, ஆடம்பரங்களை விமர்சித்தும் பிரிவினையில் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்து மீண்டு வர உதவுமாறு கோரியும் வெவ்வேறு தொனிகளில் எழுதப்பட்டுள்ள அக்கடிதங்களை வாசிக்கும் போது மனம் வேதனை அடைகிறது. 

கரைக்காமல் பத்திரப்படுத்தி வைத்திருந்த காந்தியின் அஸ்தியை பல ஆண்டுகளுக்கு பின்னர் அன்றைய குடும்ப சிக்கல்களுக்கு அதுதான் காரணமோ என்று எண்ணி கரைக்கிறார், அப்படியும் மனமில்லாமல் கொஞ்சம் அஸ்தியை பத்திரப்படுத்தி வைத்துள்ளதாக கல்யாணம் எழுதுகிறார். காந்தியின் நினைவாக எஞ்சி இருப்பது அது மட்டும்தான் போலும்.  


அசல் வரலாறும் புனைவும் முயங்கி உருவாகியுள்ள இந்த நாவலின் முக்கியமான பலவீனம், இதன் புனைவு பகுதி வரலாற்று பகுதிக்கு ஈடுகொடுக்கும் விதமாக காத்திரமாக அமையவில்லை என்பதாக எனக்கு தோன்றியது. கல்யாணம் அவர்களின் வாழ்க்கை வரலாறு தெளிவாக தெரிந்த படியால் அதற்கு ஏற்ப சத்யாவின் இடுகைகளை அமைத்தாக வேண்டிய நிர்பந்தம் நாவலாசிரியருக்கு இருப்பதால் அது சில இடங்களில் துருத்திக்கொண்டு மிகையாக தெரிகிறது. நிகழ் கால அரசியல் – சமூக நிகழ்வுகளின் விமர்சனம் மூலமாக காந்திய காலத்து மகத்துவங்களை அடர்த்தியாக காட்ட முயன்றுள்ளார். ஒரு உத்தியாக இதைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றாலும், பல நேரங்களில் தொடர் வாசிப்புக்கு அப்பகுதிகள் தடையாக இருக்கின்றன. 

நாளேடுகளிலும் இணைய விவாதங்களிலும் பொதுவாக சமகாலத்தை பற்றி  பொதிந்துள்ள அதே நம்பிக்கையின்மையின் குரல் (அவை நிதர்சனமாகவே இருப்பினும் கூட) . சிற்சில அபாரமான அத்தியாங்களை தவிர்த்து புதிய கோணங்களில் இக்கால பிரச்சனைகளை அணுகி இருக்கலாமே எனும் எண்ணம் மேலிட்டது.. கல்யாணம் அவர்களின் தன் வரலாறாகவே இந்த நூல் வந்திருந்தால் இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கும்.  இன்னமும்கூட கல்யாணத்தின் வாழ்க்கை விரிவாக ஆவணப்படுத்தப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவே எண்ணுகிறேன்.  

சத்யாவை பொருத்தவரை சிறுமிக்கு உரிய வெகுளித்தனம் ஆங்காங்கு தென்படுகிறது. சமகால அரசியல்வாதியின் வார்ப்பாக உருவாக்கப்பட்டுள்ள மந்திரி கந்தன் பாத்திரம், நாம் ஊடகங்களின் வழி அறிந்த கறைபடிந்த அரசியல்வாதிகள் பலரை நினைவுபடுத்தக்கூடும். பதிமூன்று வயது சிறுமிக்கு இத்தகைய உலக பிரக்ஞையும் பக்குவமும்  சாத்தியமா எனும் கேள்வி எழவே செய்கிறது. எனினும் சாத்தியமில்லை என்று புறந்தள்ளிவிட முடியாத உயரத்தையும் இன்றைய இளையதலைமுறையில் சிலர் அடைந்திருக்கிறார்கள் என்பதையும் கணக்கில் கொள்ளத்தான் வேண்டும்.   

“என்னைச் சந்திக்கும் பல நண்பர்களும் அடிக்கடி கேட்கும் கேள்வி. நீங்கள் காந்தியோடு இவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறீர்கள், ஏன் இன்னமும் நீங்கள் காந்தியைப் பற்றியும் உங்களைப் பற்றியும் புத்தகம் ஏதும் எழுதவில்லை என்று. எதார்த்தத்தில் பார்த்தால் காந்தியின் கொள்கைகளை புதைத்து விட்டு காந்தியைப் பற்றி ஏராளமான புத்தகங்கள் பலரும் எழுதி இருக்கிறார்கள். அவர்களெல்லாம் காந்தியைப் பற்றி புகழ்ந்து சொன்னாலும் சொல்லாவிட்டாலும் காந்தி மகாத்மாதான். நான் செயல்படும் மனிதன். காந்தியின் கொள்கைப்படி சேவை செய்வதிலேயே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவிற்கு கிடைத்த சுதந்திரமானது காந்தியை கொல்வதற்கும் அவரது கொள்கைகளை புதைப்பதற்குமான எந்த கட்டுப்பாடுகளுமில்லாத சுதந்திரமாக ஆகிவிட்டது. காந்தியை கோட்சே ஒருமுறைதான் கொன்றான். காந்தியின் பெயரை சொல்லிக்கொண்டு காந்தியின் கொள்கைகளை பலரும் கொலை செய்துகொண்டே இருக்கிறார்கள். கொலை செய்யப்பட்ட காந்தியின் உடலை எரித்தபோது காந்தியின் கொள்கைகளையும் அத்தோடு எரித்துவிட்டார்கள்,” என்று ஒலிக்கிறது கல்யாணத்தின் குரல். 

இப்படிப்பட்ட வாழ்க்கைப் பார்வை கொண்டவர் ஒருகாலும் தன் வரலாறு எதையும் எழுதி ஆவணப்படுத்த முயன்றிருக்க மாட்டார். அவ்வகையில் கல்யாணம் எனும் ஒரு  மனிதரின் நினைவுப் பேழையை திறந்து, நிகழ்வுகளை சேகரித்து  அதை ஆவணப்படுத்தும் வரலாற்று பணியை செவ்வனே செய்திருக்கிறது குமார் எஸ். நீலகண்டனின் இந்த ஆகஸ்ட் 15. 


ஆகஸ்ட் 15
குமரி. எஸ்.நீலகண்டன் (அவரது வலைப்பூ)
நாவல் 
புத்தகம் கிடைக்குமிடம் – 
204/432 D7, parson guruprasad resedential complex 
TTK road, alwarpet, chennai- 18
ph- 9444628536

No comments:

Post a Comment