Wednesday, June 21, 2017

சென்னைக்கு வந்தேன் - பழ.அதியமான்

(ஆம்னிபஸ் தளத்தில் வெளியான கட்டுரை)

'சென்னையினுடான உறவு ஆணின் முறையற்ற பெண் தொடர்பு போல. பிடிக்கும், ஆனால் வெளியே சொல்ல முடியாது’. எழுத்தாளார் கு.அழகிரிசாமியின் சத்தியவாக்கு இது என பழ.அதியமான்,.தான் தொகுத்த சென்னைக்கு வந்தேன் எனும் நூலின் முன்னுரையில் பதிவு செய்கிறார்  

சென்னை என்றில்லை உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான பெருநகரங்களுக்கும் இது பொருந்தக்கூடும்.


காலச்சுவடு வெளியீடாக வந்துள்ள இந்த தொகுப்பு நூலில் மொத்தம் பதினைந்து கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. சி.சு.செல்லப்பா, வல்லிக்கண்ணன், கே.ராமநாதன், கு.அழகிரிசாமி, சாமி சிதம்பரனார், அசோகன், க.நா.சு, ந.சிதம்பர சுப்பிரமணியம், ஜெயகாந்தன், எம்.வி.வெங்கட்ராம் ஆகியவர்கள் சரஸ்வதி இதழுக்காக 1958-59 ஆண்டுகளில் பட்டின பிரவேசம் பகுதியில் எழுதிய கட்டுரைகள், இவற்றுடன் சின்ன அண்ணாமலை, கொத்தமங்கலம் சுப்பு, உ.வெ.சா, சுந்தர ராமசாமி, மற்றும் புதுமைபித்தனின் தனிக் கட்டுரைகளையும் இணைத்து தொகுப்பாக்கியுள்ளார் பழ.அதியமான்.

இந்தக் கட்டுரைகளை வாசிக்கும்போது வந்து விழும் பொதுச் சித்திரம் என்னவென்றால் நமது இலக்கிய முன்னோடிகளில் பலரும்  தங்கள் வசதியான வாழ்க்கையை (அல்லது நிம்மதியான வாழ்க்கையை) கைவிட்டு மகத்தான இலக்கிய ஆக்கங்களைப் படைக்கும் கனவுகளோடு இந்த பெரு நகரத்தில் காலடி வைத்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களை உதாசீனப்படுத்தி அவமானங்களுக்கும்  புறக்கணிப்புகளுக்கும் பழக்கப்படுத்திய பின்னர் அள்ளி அரவணைத்துக் கொள்கிறது சென்னை. பட்டணத்து  வாழ்க்கையைப்   பற்றி விசனப்பட்டுக்கொண்டே இருந்தாலும் இவர்கள் பெரும்பாலும்  நகரங்களை விட்டுத் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்லவில்லை. 

பெரும்பாலான கட்டுரைகள் இலக்கிய ஆளுமைகளின் படைப்புலக உறவு வட்டத்துக்குள் சுருங்கிவிடுகின்றன. அவர்கள் சந்தித்த இலக்கிய ஆளுமைகள், இலக்கிய நண்பர்கள், கொண்ட இலக்கிய பிணக்குகள், ‘இலக்கிய போலிகள்’, பெரிய மனிதர்களின் சின்னதனங்கள்’ என்றே பெரும்பாலான கட்டுரைகள் விரிகின்றன. ‘இலக்கியத்திற்காக வீட்டை விட்டு வெளியேறக்கூடிய தெம்பு இருந்தால்தான் ஒருவன் இலக்கிய உலகத்திலே முன்னேற முடியும்’ என்று ஒரு கட்டுரையில் ராமநாதன் சொன்னதாக வரும் மேற்கோள்தான் இவர்களின் ஆதார நம்பிக்கையாக இவர்களை இயக்கியதோ எனும் எண்ணம் எழுகிறது. வளர்ச்சிக்கான வாய்ப்பை எண்ணி மகிழும் அதே தருணம் கிராமத்து வாழ்விற்கான ஏக்கமும் தொனிக்கிறது. பொதுவாகச் சொன்னால்,கிராமத்து மனிதர்களின் நகரத்து வாழ்க்கை பற்றிய பதிவுகள் என்றும் இக்கட்டுரைகளை வகுக்கலாம். 

ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு ரகம் என்றாலும் என்னைக் கவர்ந்த கட்டுரைகள் என்று எம்.வி.வெங்கட்ராம், சாமி சிதம்பரனார் மற்றும் ஜெயகாந்தன் எழுதிய கட்டுரைகளைச் சொல்லலாம். சென்னைக்கும் தான் சொந்த ஊருக்குமான ஊசலாட்டமாக விரிகிறது சாமி சிதம்பரனாரின் அனுபவம். ஒவ்வொரு தொழிலாக தொடங்கி கைவிட்டுவிட்டு எழுதுவதற்காக சென்னைக்கு வருகிறார் சாமி சிதம்பரனார், பின்னர் கொஞ்சம் தெளிந்தவுடன் மீண்டும் ஊருக்கு போய் தொழில் தொடங்குகிறார். தான் உண்மையில் ஒரு எழுத்தாளன் தானா என்பது தெரியவில்லை ஆனால் பல வருடங்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன் என்கிறார் அவர். கையில் தான் மொழிபெயர்த்த மூன்று நான்கு பிரதிகளுடன் சென்னையை வந்தடைகிறார் எம்.வி.வெங்கட்ராம். சில வருத்தங்கள் துரோகங்கள் என அவருடைய வாழ்க்கை பாதை சுழிந்து தன்னை பிற எழுத்தாளர்கள் சமானமாக கருத வேண்டும் என தீவிரத்துடன் உழைத்து அந்த நிலையை எட்ட முயல்கிறார் அவர். எழுதுவதற்காக தான் சென்னைக்கு வரவில்லை ஏனெனில் தான் ஒரு பிறவி எழுத்தாளன் என்று தனக்கே உரிய பாணியில் அறிவிக்கிறார் ஜெயகாந்தன்.

சி.சு.செல்லப்பாவின் கட்டுரையில் அப்போதே வ.ராவிற்கும் கல்கிக்கும் நடந்த பாரதி மகாகவியா எனும் விவாதத்தின்போது வராவிற்கு ஆதரவாக புதுமைபித்தன் ராமையா உட்பட பலரும் பகலிரவு பாராமல் எழுதிக் குவித்ததை பற்றி சொல்கிறார். மணிக்கொடி அலுவலக அரட்டைகளுக்கு இடைஞ்சலாக அருகாமையில் இருந்த வங்காளிகளின் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. எத்தனையோ முறை சொல்லியும் அவர்கள் தங்கள் உற்சாகத்தைக் கைவிடுவதாக இல்லை. ஒருநாள் ராமையாவும் ஆர்யாவும் தகரத்தையும் கோலையும் வைத்துக்கொண்டு வெளுத்து வாங்கி, அந்தச் சுற்று வட்டாரத்தையே பீதிக்குள்ளாக்கி அவர்களை வாயடைக்க வைத்த வேடிக்கையான நிகழ்வை நினைவு கூர்கிறார் செல்லப்பா.

ஒவ்வொருவரும் சென்னையைத் தேடிக் கண்டடையும் கதை சுவாரசியமானது. திருநெல்வேலியில் சர்க்கார் குமாஸ்தாவாக காலம் கழித்த வல்லிக்கண்ணன் தன் வேலையைத் துறந்து சென்னைக்கு வருகிறார். அதுவும் எப்படி! சென்னைக்கு வரும் முனைப்பில் மதுரை வரை மூன்று நாட்கள் நடந்தே வருகிறார் அவர். கிடைத்த சப் ரெஜிஸ்த்திரார் ஆபீஸ் குமாஸ்தா வேலையையும் விட்டுவிட்டு இடைசேவல் எனும் குக்கிராமத்திலிருந்து சென்னைக்கு வருகிறார் அழகிரிசாமி. வெகுகாலம்வரை எழுதுவதற்கு காசு கொடுப்பார்கள் என்பதே தெரியாத ‘அசடாக’ எழுதி கொண்டிருந்திருக்கிறார் சாமி சிதம்பரனார். இலக்கியம் படைக்க தகப்பனாருடன் கோபித்துக் கொண்டாக வேண்டும் எனும் இலக்கிய மரபை கஷ்டப்பட்டு கட்டிக் காப்பாற்ற முயன்று கடைசியில் அப்பாவின் ஆசிகளைப் பெற்றுக்கொண்டு ஒரேயொரு டைப்ரைட்டருடன் சென்னைக்கு வரும் க.நா.சு, அந்த டைப்ரைட்டரையும் ஹோட்டல் வாடகைக்கு ஈடுசெய்யப் பறிகொடுத்து விடுகிறார். திருட்டு ரயிலில் ஏறி சென்னையை வந்தடைந்த ஜெயகாந்தன் விளையாட்டாகத் திருடத் தொடங்கி செருப்பு திருடி மாட்டிக்கொண்டு வெட்கி ஊர் திரும்பி, வாழவேண்டும் எனும் வெறியுடன் மீண்டும் சென்னையை வந்தடைகிறார். ஆதீனத்தின் கோரிக்கைக்கு இணங்கி மத்தியார்ச்சுன மான்மியம் எனும் தல புராண நூலை அச்சிட சென்னைக்கு வருகிறார் உ.வே.சா. இப்படி ஒவ்வொருவரும் சென்னை வர ஒவ்வொரு கதை.

“என் வாழ்நாளில் அன்றுதான் நம் செருப்பை கழற்றிப்போட மற்றொருவனுக்கு காசு தர வேண்டிய நிலை உருவாகி இருப்பதைத் தெரிந்துகொண்டேன். முதலாளித்துவச் சமுதாயம் இப்படித்தான் இருக்கும் என்றும் கம்யுநிசச் சமுதாயத்தில் இலவசமாக செருப்பை போட்டுவிட்டுப் போக முடியும் என்றும் நினைத்தேன்.” என்று பதினேழு வயதில் சென்னைக்கு வந்த தன் அனுபவத்தை எழுதுகிறார் சுந்தர ராமசாமி..           

'சிகரெட்டு துண்டுகள் சூழ அதன் மத்தியில் படுக்கை விரித்து மணிக்கொடி அலுவலகத்தில்  படுத்திருக்கும் திருவாளர் விருதாசலம்தான் தமிழின் தலை சிறந்த சிறுகதை ஆசிரியன் புதுமைபித்தன்,; என்று விரியும்  சி.சு செல்லப்பாவின் அறிமுக விவரிப்பு  ஒரு காட்சியாக மனத்திரையில் ஓடிக்கொண்டே இருக்குமளவுக்குத் துல்லியமாகப் புதுமைபித்தனைச் சொற்களில் படம் பிடித்துவிடுகிறது.. உலகப்போர் சமயத்தில் சென்னைக்கு வந்த அசோகனின் எழுத்து சிப்பாய்களும் விலைமாதர்களும் நிறைந்த அன்றைய சென்னையை விவரிக்கிறது. ரயில்வண்டிகளும் ட்ராம் வண்டிகளும் ஓடிக்கொண்டிருந்த 1930-40 களின் சென்னையைப் பற்றி வாசிக்கும் போது நான் கண்ட, நான் வாழ்ந்த சென்னையை ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

லாரியில் தண்ணீர் பிடிக்க குடங்களுடன் முண்டியடிக்கும், காலி மனைகளில் எல்லாம் பிளாஸ்டிக் குப்பையை கொட்டி தன் வீட்டை சுத்தமாக வைத்திருக்கும், முகமறியாத பண்பலை குரல்கள் வீட்டுக்கு வீடு ஒலிக்கும் , முகமெல்லாம் கரிபூசிவிடும் வாகனங்கள் நிறைந்த இந்த சென்னை மாநகரத்தில் ஐந்தாண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். அங்கு வாழ்ந்த காலத்தில் சென்னையையும் அதன் அழுக்கையும் ஒழுங்கற்ற அதன் மக்களையும் கரித்துக் கொட்டாத நாளே இல்லை. அழுக்குகளும், குப்பைகளும், மீறல்களும் மட்டுமல்ல சென்னை. மாறாக அவையனைத்தையும் தன்னிடத்தில் கொண்ட ஒரு குட்டி பிரபஞ்சம். அதன் அத்தனை அபத்தங்களையும் மீறி சென்னை இன்று எனக்கு அழகாகத் தெரிகிறது. தன்னை நோக்கி ஓடிவரும் அத்தனை அபலைகளையும் பெருங்கருணையுடன் அரவணைத்துக்கொள்ளும் தாய் அவள். நாகரீகமற்ற முரட்டு தாயாக இருந்தாலும், அசிங்கமாக இருந்தாலும்  அவள் கருணையுள்ளம் கொண்ட தாய்.

இந்தத் தொகுப்பு நூலிற்கு அதியமான் எழுதிய முன்னுரை இந்த நூலின் சாரம்சத்தை புரிந்துகொள்ள உதவும். ‘தொழுதுண்டு பின்செல்லும் நகரங்கள் சிந்தனையின் முன்னோடும் பிள்ளை. கிராமம் அதற்கு உணவூட்ட உழுதுண்டு பின்நிற்கும் தாய்.’ என்று கிராமத்திற்கும் நகரத்திற்கும் உண்டான உறவைப் பேசுகிறார் அதியமான். கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம்பெயரும் மனிதனின் கனவு முழுவதையும் கிராமமே நிறைக்கிறது ஆனால் அவனுடைய யதார்த்தம் என்னவோ நகரம்தான். இன்று கிராமங்களுக்கு உற்சாகத்துடன்  திரும்பி வருபவர்கள் மூன்றே நாட்களில் அந்த உற்சாகத்தை இழந்து விடுகின்றனர். அவர்களுடைய கிராமமும் அதன் மாந்தர்களும் நினைவில் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கக்கூடிய பிம்பங்கள் என்பதே இன்றைய யதார்த்தம். 

பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள புதுமைபித்தனின் கட்டுரை ஒருவகையில் இந்த நூல் எழுப்பும் எண்ணங்களைப் பற்றிய தொடர் விவாதங்களுக்கு களம்  அமைத்துக் கொடுப்பதாக இருக்கிறது. “நாகரீகம் என்பது சமுதாயம் இற்றுப்போகாமல் எடுத்துக் கட்டிய ஞாபகச் சரடு; நினைவுப் பாதை; சமுதாயம் , எறும்புச் சாரை போல் ஊர்ந்து ஊர்ந்து பழக்கப்பட்டுப், போன பாதை” என்று எழுதுகிறார் அவர். அன்றாடம் உழைத்துக்கொண்டிருக்கும் நகர மனிதனுக்கு ‘சுடுகாட்டுக்கும் தம்முடைய மிச்ச வாழ்வுக்கும் இடையில் கிடக்கும் ரேழியாக’ கிராமம் தென்படுகிறது என்று இன்றைய நகர மனிதனுக்கும் பொருந்தக்கூடிய  கிராமத்து வாழ்வை விவரிக்கிறார். பட்டணங்கள் என்றால் சிந்தனையின் பயனால் இயற்கையின் கை பார்க்காமல் வாழ மனிதன் வகுத்துக்கொள்ளும் ஏற்பாடு என்று பட்டணத்து வாழ்க்கையை வரையறுக்கிறார்.     
    
இன்றைய காலகட்டத்தை வைத்து சிந்திக்கும்போது, மெல்ல நகரங்களும் கிராமங்களும் தொலைதொடர்பு புரட்சி  எனும் ஒற்றைக்  குடையின் கீழ் பேதங்கள் மறைந்த கரிய பெரும் நிழலாக உருமாறிக்கொண்டிருப்பதை உணர முடிகிறது. பெரும்பாலும் வாழ்வின் ஒரு பகுதியை பெருநகரங்களில் கழித்தவர்கள் அத்தனை எளிதில் அவர்களாகவே இடம்பெயர மாட்டார்கள். அப்படியே மாறினாலும் அதைக் காட்டிலும் பிரம்மாண்ட நகரங்களே அவர்களது கனவாக இருக்கின்றன. நகரத்து மனிதன் நெரிசலில் தன் துக்கங்களைப் புதைத்துக் கொள்ளப் பழகுகிறான். பெருநகரங்கள் ஜெயமோகன் கதைகளில் வரும் யட்சிகளை போல், அத்தனை எளிதில் நம்மை விட்டுவிடாது.

வல்லிக்கண்ணன் சொல்வதுபோல் ‘சென்னையில் கிட்டும் அனுபவம் சென்னையில் மட்டுமே கிட்டும்’. நகரவாசிகளும், நகரத்தில் வசித்தவர்களும் தவறவிடக்கூடாத புத்தகம் இது.


சென்னைக்கு வந்தேன்
தொகுப்பாசிரியர்- பழ.அதியமான்
காலச்சுவடு வெளியீடு
தமிழ், கட்டுரைகள்
விலை-ரூ.95

No comments:

Post a Comment